இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்பனை மேவிய ஓர் உருவாக்கம். மேலோட்டமாகப் படிக்கும் வாசகர்களுக்கு இப்படைப்பின் நடையும், மொழியும், பொருளும் ஓர் அயர்ச்சியையும் ஏமாற்றத்தையும் நல்க வாய்ப்பிருக்கிறது. அந்த ஏமாற்றத்தால் ஏற்படும் தயக்கத்தைக் கடந்தவர்களுக்கு, இப்படைப்பு, நம்முடைய நெடிய கடந்தகால வரலாற்றின் ஒரு பகுதியை அறிமுகப் படுத்துவதோடு நின்றுவிடாமல், அதைப்பற்றிய சிந்தனையையும் அவர்களுக்குள்ளே தூண்டிவிடும் என்பதில் எனக்குத் திலமளவும் துயக்கில்லை.
அகழ்வாராய்ச்சியிலும், தற்செயலாகவும் எத்தனையோ சாசனங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து, கோசொரி நறவம் எது, கொணர்ந்தோன் கூட்டிய நீரெது என்று பல ஆய்வாளர்கள் கடந்த நூறு இருநூறு ஆண்டுகளில் பிரித்தும், ஊகித்தும் காட்டியிருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில்தான், இன்று நாம் வரலாற்றை அறிந்துகொண்டு வருகிறோம்.
இவ்வாறு நமக்குக் கிடைக்கும் வரலாறுகள் தொடர்ச்சியானதாகவும், சம அளவுற்றனவாகவும், எல்லாக் காலத்தையும் விளக்குவனவாகவும் இல்லை. மேலும் கீழுமாக, இடமும் வலமுமாக, பெரியதும் சிறியதுமாக, அறுந்தும் இணைந்தும், பொருந்தியும் முரண்டும்தான் சான்றுகள் கிடைக்கின்றன. அவ்வாறு கிடைப்பனவற்றின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட பேரரசின், குறிப்பிட்ட சில அரசர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு பாதை இட்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அந்த யோசனையை மெய்ப்படுத்தும் முயற்சியே இது.
கிடைத்த வரலாற்றுக் கற்களை இணைத்து, பொருந்தாக் கற்களை அகற்றி, அறுபட்ட இடங்களில் என் கற்பனைச் சுண்ணாம்பை விரவிப் பூசியிருக்கிறேன். வரலாற்று நிகழ்வை, ஒரு கதைபோலச் சொன்னால், மனத்தில் பதியும் என்ற நினைப்பு இந்தப் பூச்சுக்கு வித்திட்டிருக்கிறது. வாசிக்கும் வாசகர்களுடைய சிந்தையில் இது பூச்சா, இது நிஜமாகவே நடந்ததா என்று அறியக் கூடாமல், எங்காவது ஓரிடத்திலாவது மனம் மயங்குமேயானால், என் முயற்சி வென்றது என்று திருப்தி அடைவேன்.
எந்தக் குறிப்பிட்ட பேரரசு? எந்தக் குறிப்பிட்ட அரசர்கள்?
பாரதவர்ஷத்தில் கடந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளில் பல அரசுகள் தோன்றியிருக்கின்றன. அவற்றுள் குடிமக்களின் பண்பாட்டுக்கும், வழக்காறுகளுக்கும் ஆக்கமும் உயிர்ப்பும் வழங்கி, தேச எல்லைகளை விரவிக் கடந்து வியாபித்து, பல்லரசுகளை வென்று திறை கொண்டு செழித்த முக்கியமான பேரரசுகள் எவை என்று நம்மைக் கேட்டால், மௌரிய அரசு, குப்த அரசு, புஷ்யபூதிகளுடைய அரசு, சாளுக்கிய அரசு, கௌடர்கள் மற்றும் பாலர்கள், சோழர்கள், விஜயநகர அரசு, மராட்டிய அரசு என்பவைதான் பெரும்பாலானவர்களின் மறுமொழியாக இருக்கும்.
என்ன காரணத்தினாலோ, தென்னகத்தில் இருந்து, நர்மதையைத் தாண்டிய சாதவாகனர்களும், இராட்டிரக்கூடர்களும் இந்த வரிசையில் வரத் தகுதியுடையவர்களாக இருந்தும், குறிப்பிடப்படுவதில்லை. தென்னகத்தில் இருந்து கங்கையைக் கொண்டவர்களில் சோழப் பேரரசு குறிப்பிடப்பட்டாலும், அவர்களின் பயணம், கிழக்குக் கரையோரமாகக் கங்கையின் கிழக்குப் பகுதியை வெற்றி கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, யமுனை-கங்கை இடைத்துறையைக் கைக்கொண்டு, கன்யாகுப்ஜத்தின் அரியணையில் அமர்ந்து, உஜ்ஜைனி உள்பட மாளவ மத்திய தேசத்தையும், மற்றும் குர்ஜர, இலாடத்தையும் வென்று, தக்கணத்தில் காஞ்சி வரை நிலைநின்று, ஏறக்குறைய முழு இந்தியத் துணைக்கண்டத்தில் ஆண்டுகொண்டிருந்த அனைத்து அரசர்களையும் தனக்குத் திறையளிப்பவர்களாக ஆக்கிய பேரரசு, இராட்டிரக்கூடப் பேரரசு. ஸ்தாபிக்கப்பட்ட நாற்பது வருடங்களில் இந்த நிலைமையை அது ஈட்டி விட்டது. அப்படி ஈட்டியவர்கள் ஒரு தந்தையும், அவருக்குப்பின் அரசேற்ற தநயனும். இவர்களை இந்தக் கற்பனைக் கதை மூலம் அறிமுகப்படுத்தும் முயற்சிதான் இது.
எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குந்தல தேசத்தில் கிளைத்த இப்பேரசின் காலத்தில் தக்கணம் செழிப்புடன் இருந்தது. வேளாண்மையும், காருகமும், குகரங்குடைவும் முக்கியத் தொழில்களாக இருந்தன. மலைப்பிராந்தியங்கள் மிகுந்திருந்ததால், இளமட்டங்களும், எருத்து மாடுகளும்தான் பயணங்களுக்குப் பயன்பட்டன.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பிரதிஷ்டானம், நாசிகா, மண்ணைக்கடக்கம், கரஹாடகம், சாலதோகி போன்ற இடங்கள், புண்யத்தலங்களாகவும், கற்கும் மையங்களாகவும் செயல்பட்டன. பண்டிதர்களும் மேதைகளும் வாழ்ந்த இக்காலத்தில் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும் மட்டுமன்றி, தர்க்கங்களும், அறிவியலும், கணிதமும், நுண்கலைகளும் கூட ஆராயப்பட்டு, அவையவற்றிற்கான படைப்புக்கள் உருவாயின. இசையும், நிருத்தியமும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. இரண்டு மூன்று எடுத்துக்காட்டுக்கள் தருகிறேன்.
பார்ஷ்வநாதரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் பார்ஷ்வ அப்யுதயம் என்ற நூலை எழுதிய ஜீனசேனர். நூலில் உள்ள ஒவ்வொரு பாடலையும், வரிசையை மாற்றாமல், காளிதாசன் எழுதிய மேக தூதத்தின் பாடல்களின் ஈற்றடியைக் கொண்டு முடித்திருக்கிறார்! பௌத்தரான தர்மகீர்த்தி எழுதிய நியாயபிந்து என்ற தத்துவ நூலுக்கு, மல்லவாதி என்ற சமண அறிஞர், நியாயபிந்து டீகை என்ற உரை எழுதியிருக்கிறார். கன்னட மொழியின் முதல் செய்யுளிலக்கணப் படைப்பாகக் கருதப்படும் கவிராஜமார்க்கம், இக்கதையில் வரும் அமோகவர்ஷன் என்ற அரசனால்தான் எழுதப்பட்டது. இராட்டிரக்கூடர்களுக்கு அடங்கிய சாளுக்கியர்கள் ஆண்ட வேமுலவாடா என்ற ஆந்திரப் பகுதியில்தான், கன்னடப் பெரும்புலவர் என்று கொண்டாடப்படும் பம்பா, அரிகேசரி என்னும் அரசனால் ஆதரிக்கப்பட்டு வாழ்ந்தார். வானசாஸ்திரத்தோடு மட்டும் கற்பிக்கப்பட்ட கணிதம், தனக்கென்றே மஹாவீராசார்யர் என்பவரால் எழுதப்பட்ட கணிதசார சங்கிரகம் என்ற முதல் நூலைப் பெற்றது இந்தக் காலத்தில்தான். இக் கணித நூலில் இருக்கும் சில கணிதக் கோட்பாடுகளைக் கதையினூடே காணலாம்.
இராட்டிரக்கூட அரசர்களுக்குக் காஞ்சியின் வழியாகத் தமிழகத்தோடு இறுகிய இணைப்பு இருந்ததைக் கதையின் போக்கு இணைத்திருக்கிறது. இக்கதை நடக்கும் காலத்தில், கம்பராமாயணம் உள்பட விருத்தங்களைப் பயன்படுத்திய பல படைப்புக்கள் இன்னும் நிகழ்ந்திருக்கவில்லை. திவ்வியப் பிரபந்தங்களும், தேவாரங்களும் தொகுக்கப் பட்டிருக்கவில்லை. நன்னூல், யாப்பருங்கலம், வீரசோழியம் போன்ற இலக்கணங்கள் இன்னும் எழுதப்படாத காலம். தமிழில் இன்று மிகவும் பயன்படுத்தப்படும் தயார், வாரிசு, பதில் என்ற சொல்லெல்லாம் வழக்கத்தில் ஏறியிருக்காத காலம். இந்தக் காரணங்களுக்காகத்தான், கதையின் நடையும், மொழியும் வாசகர்களுக்குச் சற்றே அந்நியமாகத் தோன்ற வாய்ப்பு இருக்கிறது மேலும், கதை நடக்கும் இடம் வேங்கியாகவும், குந்தளமாகவும் இருப்பதால், ஸம்ஸ்க்ருதச் சொற்களும் தூக்கலாகக் காணப்படும். என்னுடைய சொற்கோசமும் மிக்க ஆழமும் விரிவும் உடைத்தன்று ஆதலால், எனக்குத் தெரிந்த சொற்களை வைத்துப் படைப்பை உருவாக்க முயன்றிருக்கிறேன். இன்னொரு விஷயம். பொதுவாக, ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும்போது, நாமறியாத சொற்கள் எதிர்ப்பட்டால், அதனால் நாம் சுணங்குவதில்லை. அகராதியில் பொருளைத் தேடிப்பார்த்தோ அல்லது ஊகித்தோ புரிந்துகொண்டு, மேலே சென்றுவிடுகிறோம். நமக்குத் தெரியாதவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற புரிதல், அப்புத்தகத்தின் மதிப்பை நம்முள் உயர்த்தியும் வைத்து விடுகிறது. ஆனால், நாம் பழகாத சொற்கள் விரவிய தமிழ்ப் புத்தகத்தைக் கண்ணுற்றால், இதென்ன, சங்ககாலத் தமிழில் எழுதியிருக்கிறார்கள், என்று ஒரு தாளாமைக்கு இடங்கொடுத்து விடுகிறோம். சில நூறு சொற்களே கொண்ட நம்முடைய சொற்குவை ஆழமானதன்று என்று ஒப்புக்கொள்ளாமல், புத்தகத்தைப் புறந்தள்ளி விடுகிறோம். அப்படிப் புறத்தொதுக்குபவரை, இப்புத்தகம் மறலுவது திண்ணம்.
அமோகவர்ஷன் அரியணை ஏறும்போது, உள்நாட்டுப் புரட்சி வெடித்தது என்று சாசனங்களின் காணக்கிடைக்கிறது. கற்கன் பாதாளமல்லன் என்பவன் உதவிசெய்ய அமோகவர்ஷன் மீண்டும் ஆட்சியில் அமர்கிறான். இது வரலாறு. ஏன் என்பதற்குக் கற்பனை கலந்த காரணங்களை உருவாக்கியிருக்கிறேன். நந்திவர்மபல்லவனின் காலத்தைக் குறித்து நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. பின்னர்க் கிடைத்த சான்றுகளின் துணைக்கொண்டு, காலம் தள்ளவும் பட்டிருக்கிறது. இன்னும் சான்றுகள் கிடைத்தாலும், இவை மாறலாம். வரலாறே அப்படித்தானே எழுதப் படுகிறது? கிடைத்த சான்றுகளை வைத்து ஒருவர் ஊகிக்கிறார். அவருக்குத் தெரியாத சில சான்றுகளைக் கண்ட இன்னொருவர், இந்த ஊகத்தை மறுக்கிறார். சான்றுகள் போலியானவை, யாரோ பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இடைச்செருகல் செய்திருக்கிறார்கள், எழுத்தமைதி முரண்படுகிறது, பழைய சாசனத்தைப் புதுப்பிக்கையில் செதுக்குபவர் செய்த பிழைகள் உள்ளன, சாசனத்தில் உள்ளதை மொழிபெயர்க்கையில் தவறு செய்திருக்கிறார்கள் என்று ஒரு சிலர் மறுப்புக்கள் தெரிவிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். முரண்பட்ட கருத்துக்களை வைத்துத் தர்க்கங்களும் செய்கிறார்கள். உணர்ச்சி வசப்படுகிறார்கள். வரலாற்றை மாற்றி எழுதவேண்டும் என்று கண்டனம் செய்கிறார்கள். இவை நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால், வரலாறு என்பது முடிந்த கதையன்று. மாறிக் கொண்டேயிருக்கும், நதிப்பாதை போல என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதை ஒரு கற்பனைக் கதையாகக் கொண்டு, வரலாற்றை நமக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் எழுதப்பட்ட நூல் என்ற அளவில் பார்க்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
திவாகரத்தனயன்
1.05.24
No comments:
Post a Comment