Friday, 20 September 2024

12. இரணரஸிகன்

 “சரி. எங்கேயோ போய்விட்டோம். பாண்டியன் கதைக்கு வருவோம். அந்தப் பாலத் துறவியால் சைவ சமயத்திற்கு ஈர்க்கப்பட்ட இரணதீரரின் தந்தை, நிறைய சமயப் பணியில் ஈடுபடத் துவங்கினார். பெரிய வீரர். நிறைய போர்கள் புரிந்து வெற்றிகளைக் குவித்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலே ஆட்சி புரிந்தவர். ஆனால், தடுத்தாட்கொள்ளப்பட்டவுடன், தன்னுடைய கண்ணோட்டத்தையே மாற்றிக் கொண்டு விட்டார். நரசிம்மவர்மப் பல்லவரும் கிட்டத்தட்ட அவர் போலத்தானாம். வீரர்தான். ஆனால், சண்டை புரிவதைவிடக் கலை வளர்ப்பிலும், கோவில் கட்டுவதிலும் ஆர்வம் அதிகமுள்ளவர் என்றார்கள். இருப்பினும், வாதாபி அவரை வாளாவிருக்க விடவில்லை.“  சிரித்தார் பிரதாபர். 

“விஜயாதித்தியராலா, விக்கிரமாதித்தியராலா?”

“விக்கிரமாதித்தியரால்தான். விஜயாதித்திய மஹாராஜா அமைதி விரும்பி. அவருடைய தந்தை விநயாதித்தியர் காலத்தில், நாட்டில் இருந்த அமைதியின்மை இவர் காலத்தில் அகற்றப்பட்டது. விநயாதித்தியர். நல்ல அரசர்தான். ஆனாலும், மக்கள் மனநிம்மதியோடு இல்லை என்று என் தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவருடைய பாட்டனார் சொல்வாராம், விநயாதித்தியர் காலத்தில், விஜயாதித்தியரையே எதிரிகள் கடத்திக்கொண்டு போனதெல்லாம் நிகழ்ந்ததாம். விநயாதித்தியர் இறந்ததும், எப்படியோ தப்பி வந்துதான் அரியணையில் ஏறினார் என்பார்.”

“கடவுளே! யார் கடத்தியது?”

“அது தெரியவில்லை. உத்தராபதத்தில் யாரோ ஓர் அரசனாம். தன்னுடைய பாட்டானாருக்கு, இந்த ராஜாங்க விஷயத்தில் எல்லாம் ஈடுபாடு இல்லாததால், அதிகம் தெரியாது என்று தந்தை சொல்வார். தந்தைக்கு ஆர்வம் உண்டு. அது அப்படியே எனக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. தான் கடத்தப்பட்டு, அவதிப்பட்டதால்தானோ என்னவோ, விஜயாதித்தியர் நாட்டு நிர்வாகத்தில் அதிகக் கவனம் செலுத்தினார். செல்வாக்கும், ஆர்வமும், விவேகமும் கொண்டவர். மற்ற எல்லா வாதாபி அரசர்களை விடவும், நீண்ட காலம் ஆட்சி புரிந்தார். பண்டிதர்களுக்கு உதவினார். கோவில் கட்டளைகள் ஏற்படுத்தினார். தாய் விநயாவதிக்காக மும்மூர்த்திகளுக்கும் கோவில் கட்டினார். தங்கை கணவன் ஆளுபராஜன் சமணன். அவனுக்காகச் சமணமடமும் ஏற்பட உதவினார்.

“வடக்கே ஏலபுரியில் இருந்து, தெற்கே காவேரி வரி, மேற்கே கொங்கணத்தில் இருந்து, கிழக்கே வேங்கி வரை மக்களுக்கு நிறைய பணிகள் செய்தார். மஹாஜனங்களும், ராஜாங்கக் காரியஸ்தர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரிவான விதிகளை ஆசார வியவஸ்தை என்று பட்டியல் வெளியிட்டு, அதற்கு எல்லோரும் ஒப்புதல் உறுதி அளிக்கவேண்டும் என்று கட்டாயம் செய்தார். இப்படி மறத்தில் மனம் செலுத்தாமல், அறத்தில் ஆர்வம் கொண்டு நடந்ததால், காஞ்சியும் அவர் அரசாண்ட காலத்தில் சற்று நிதானித்துக் கொண்டது. சாளுக்கியத் தரப்பில் இருந்து எந்தத் தொந்தரவும் கிளைக்காமல் ராஜசிம்ஹருக்கும் தனக்கு விருப்பமான வினைகளில் ஈடுபடமுடிந்தது. விஜயாதித்தியருக்கும் இசை, கலை, கல்விகளில் அதிக ஆர்வம். அந்த ஆர்வம், அவரை ஓர் ஆடலரசியிடம் தன்னுடைய மனத்தைப் பறிகொடுக்கவும் வைத்து. வெளிப்படையாக அவளைத் தன்னுடைய பிராண வல்லபை என்று அழைக்கும் அளவுக்கும் கொண்டுபோயிற்று என்றால் பார்த்துக்கொள்ளேன்!”

“ஆஹா! அதற்குத் துணிவு வேண்டும்! பாராட்டப்பட வேண்டியவர்தான். அவள் பெயரென்ன?”

“பெயர் தெரிந்து என்ன செய்யப்போகிறாய்?”

“அரசரையை மயக்கியவள் எந்த நாமமுடையாள் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஓர் ஆர்வம்” சிரித்தான் விநயன்.

“வீணா பொட்டி. திருப்தி ஆயிற்றா? மேலே தொடரலாமா?” என்று குறும்பாகக் கேட்டவர் அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்தார், “விஜயாதித்தியர் என்னதான் அமைதியை விரும்பினாலும், விக்கிரமாதித்தியர் யுவராஜாவாகப் பட்டம் சூட்டிக் கொண்டபின் நிலைமை மாறிப்போயிற்று. மஹாராஜாவால், படைகளுக்குத் தளபதியாக இருந்த இளவரசரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. யுவராஜாவாகவே இருக்கும்போதே அவர், தந்தையின் பேரில், பல போர்கள் செய்தார். கொடைகளும் தந்தை பெயரில் நிறைய கொடுத்தார். கிட்டத்தட்ட அவர்தான் அரசரைப் போல இருந்தார் என்று வைத்துக் கொள்ளேன். ஒருமுறை இராஜ்ஜியத்தின் வடக்கே கரஹாடநகரத்துக்குப் படையெடுத்துப் போய், அங்கு வெற்றி பெற்றுத் திரும்பியதும், காஞ்சி பூதம் அவர் எண்ணத்தில் விரைவாக விஸ்வரூபம் எடுத்தது. காஞ்சியைத் தான் வெற்றி கொண்டுவிடமுடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றதும் காஞ்சியின் மீது படையெடுக்க ஆயத்தங்கள் செய்தார். இந்த விவரம் காஞ்சி அரசர் ராஜசிம்ம பல்லவருக்குக் கசிந்தது. அவர் மூலம் பாண்டியர் கோச்சடையர் இரணதீரருக்கும் தெரிந்தது.”

“அவர் மூலமாகவா? பாண்டியர்கள் பல்லவர்களின் வைரிகள் அல்லரோ?”

“ஹா ஹா. இப்போது அப்படித்தான் ஆகிவிட்டது. ஆனால், அப்போது, நல்ல இணக்கம் இருந்த காலம். அந்த இணக்கமும் இரண்டு சிவபக்தர்களால்தான் ஏற்பட்டது. முன்பு, ரக்தபுரியையும் வாதாபியையும் அழித்த, பல்லவப்படையின் ஒரு தளபதி பிற்காலத்தில் ஒரு பெரிய சிவபக்தராக ஆனாராம். இரணதீரப் பாண்டியரின் தந்தை, அரிகேசரியை மாற்றிய பாலத்துறவியும், இந்தத் தளபதியும் பரஸ்பரம் தெரிந்தவர்கள். ஒருவர் பால் ஒருவர் மரியாதை கொண்டவர்கள். அப்படி இருக்கும்போது, இவர்களை வழிகாட்டிகளாகக் கொண்ட சிவச்சூளாமணி ராஜசிம்ஹருக்கும், அரிகேசரிக்கும் இடையில் இணக்கம் ஏற்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது? இந்த இணக்கம் மணவினையிலும் முடிந்தது. ராஜசிம்ஹருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி லோகமஹாதேவிக்குப் பிறந்தவர்கள் மூன்றுபேர்கள். இரு புதல்வர்கள், ஒரு புதல்வி. புதல்வி புவனபாலினியை, இரணதீரப் பாண்டியராஜா மணம் செய்துகொண்டார். அவருக்கும், ராஜசிம்ஹருக்கும் மற்றும் ராஜசிம்ஹரின் புதல்வர்களான மகேந்திரனுக்கும் பரமேஸ்வரனுக்கும் இடையே நல்ல பிணைப்பு இருந்தது.

“போரை ரஸனையோடு அனுபவிக்கும், இரணரஸிகர் விக்கிரமாதித்தியரின் காஞ்சிப் போர் ஏற்பாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டதும், இரணதீரரும், ராஜசிம்ஹரும் ஆலோசனை சூழ்ந்தார்கள். போரையும் விலக்கவேண்டும், விக்கிரமாதித்தியரையும் அச்சுறுத்த வேண்டும். அவரை அச்சுறுத்திவிட்டால், அவர் படையை வாதாபியை விட்டு வெளியேறாமல் செய்யலாம் என்று நினைத்து, ஒரு போர்த்திட்டம் வகுத்தார்கள். அவர்களுக்கு அனுகூலமாக ஒரு விஷயம் நடந்தது. பொம்பூச்சபுரம் கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“ஓ! கதம்பமண்டலத்தில்தானே? மேலைக்கடற்கரையில், கொங்கணத்துக்குத் தெற்கே, பேர்குஞ்சி?”

“பரவாயில்லையே! எப்போது போயிருக்கிறாய்?”

“மண்ணைக்கடக்கத்தை விட்டு ஓடினேனே, அப்போதுதான். பாடுஅழியாநாடு என்று ஒரு பிராந்தியம் அங்கே இருக்கிறது. மலைநாட்டுக்கருகே. ரம்மியமான இடம். கலவரத்தால் அதிகம் பாதிக்கப்படாத இடம். அங்கே மஹாவல்லி என்ற இடத்தில் கொஞ்ச நாள் தங்கியிருந்திருக்கிறேன்.

“அதேதான். கதம்பமண்டலத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ராஜாங்க வட்டாரங்களில் அவற்றை பனவாசி ஈராயிரம், ஆளுபக்கேடம் ஆறாயிரம் என்பார்கள். அதன் தலைநகர் உதயாவரம். மங்கலபுரத்துக்கு வடக்கில் இருக்கிறது. இந்த உதயாவரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தவர் ஆளுபராஜர் சித்ரவாஹனர். விஜயாதித்தியருடைய சகோதரி குங்குமதேவியின் கணவர். விஜயாதித்தியருக்கு அடங்கிய சிற்றரசராக இந்தப் பகுதிகளை ஆண்டுவந்த போதிலும், சாளுக்கிய அரசர், இவரைக் குறுநில மன்னராகக் கருதியதில்லை. மிக மரியாதையோடு நடத்திவந்தார். சகோதரியைப் பார்ப்பதற்குப் போகிறாரோ இல்லையோ, சித்ரவாஹனரைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி பனவாசிக்குப் பயணப்படுவார் என்று சொல்வார்கள். அங்கே வரும்போதெல்லாம் சமணத்தளிகளுக்கு நிறைய உதவிகள் செய்வார்.”

“சித்ரவாஹனராஜா சமணரா?”

“இல்லை. தந்தையைப் போலவே சைவர்தான். ஆனால், குங்குமதேவிக்குச் சமண சமயத்தில் ஈடுபாடு இருந்தது என்று சொல்வார்கள். புரிகரையில் இருக்கிறதே அந்தப் பெரிய பசதி, அது விஜயாத்தியர் கொடுத்த கொடைதான். சித்ரவாஹன ஆளுபராஜா, சாளுக்கிய இராஜ்ஜியத்தின் அபிவிருத்திக்குக் காரியம் செய்யும் அரசர் என்றே பாராட்டப்பட்டவர், அப்படிப் பாராட்டுவதற்கு முகாந்திரம் இந்தச் சமயத்தில்தான் பிறந்தது.

“ஆளுபக்கேடத்துக்குத் தெற்கில் ஏற்கனவே, விழிஞமும், வேள் நாடும், ஏழில்மலையும் பாண்டியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவற்றைத் தங்கும் பாசறைகளாக ஆக்கிக்கொண்டு, அவை நல்கிய அஸ்திவாரத்தின் துணையில் அந்தப் பிராந்தியங்களில் இருந்து மங்கலபுரத்தின் மீது படையெடுக்கத் திட்டமிட்டார் இரணதீரர். வலிமையான பாண்டியப்படை புறப்பட்டது. இரணதீரரே களத்தில் இறங்கினார். வாதாபியில், யுவராஜா விக்கரமாதித்தியரின் கண்ணோட்டம் கிழக்குப் புறம் நோக்கியவாறு காஞ்சியின் மீது இருக்க, மேற்குப்பக்கத்தில், மங்கலபுரம் இரணதீரரின் தலைமையில் பாண்டியரால் வீழ்த்தப்பட்டது. ஆளுவக் கேடத்தில் இருந்தாலும், மங்கலபுரத்தைப் பாதுகாத்து வந்தவரெல்லாம் சாளுக்கிய வீரர்கள்தாம்.

“மஹாரதர்களை எறிந்தழித்து, மங்கலபுரமென்னும் மாநகருள் நுழைந்தார் என்று பாடப்பட்டார், பாண்டிய வேந்தர். ஆளுவம் அடக்கப்பட்டது, உதயாவரம் பாண்டியரால் கைப்பற்றப் பட்டது, அடுத்து வாதாபியைத் தாக்க வரலாம் செய்தி பரவியது. பரவ வைத்தார் இரணதீரர்.” பிரதாபர் முகத்தில் புன்முறுவல். பாண்டியர்களின் இந்தத் திட்டம் அவருக்குப் பிடித்தவொன்று என்று முகத்தில் தெரிந்தது.

“விக்கிரமாதித்தியர் கலவரமுற்றார். இப்போது, வாதாபியை விட்டகன்று காஞ்சிக்குப் படையோடு சென்றால், வாதாபி பாதுகாப்பாற்றதாகிவிடும் என்று பயந்தார். காஞ்சிப் படையெடுப்பை உடனேயே கைவிட்டுவிட்டு, வாதாபியைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடத் துவங்கினார். இந்தக் கட்டாயத்தை ஏற்படுத்தியவர் இரணதீரர். அவர் திட்டமிட்டபடியே நடந்தது. அவருக்கு வாதாபி குறியேயில்லை.”

“அடடடா! என்ன ஓர் திட்டம்! இப்போது வாதாபியில் விக்கிரமாதித்தியர் நிலை, கோவிலில், ஒரு கையில் அன்னப்பிரசாதம். இன்னொரு கையில் அரை நழுவுகின்ற துகில், என்று சிக்கிக்கொண்ட பெண்ணைப் போலல்லவோ ஆகிவிட்டது? காஞ்சியை நோக்கிப்போனால், பாண்டியப் படைகள் உள்ளே நுழையும். பாண்டியப் படைகளை நோக்கிப் போனால், இராஜசிம்மரின் காஞ்சிப் படைகள் வாளாவிருக்கா. வாதாபியை விட்டு வெளியேற முடியாதபடி, இருதலையிலும் கொள்ளி.”

“அதேதான், பல்லவரும், பாண்டியரும் நினைத்திருந்தால் வாதாபியை நசுக்கியிருக்கலாம். இருவரும் செய்யவில்லை. மங்கலபுரப் போருக்குப் பிறகு, இரணதீரரை மதுர கருநாடகர் என்றே எல்லோரும் புகழத் தொடங்கினார்கள். இதற்குமுன் அவருக்கு எந்தப் பெயர் பிடித்ததோ தெரியாது, ஆனால் மங்கலபுரத்து மலைதலுக்குப் பிறகு, இரணரஸிகரை இம்சைக்குள்ளாக்கியவர் என்ற புகழ் பரவ, இரணதீரர் என்றே அவர் தம்மைக் கூறிக்கொள்ள விருப்பப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். இரணதீரர் அப்போது பிறந்த பெயர்தானாம். இவர் தந்தைக்கு இரணோதயர், இரணாந்தகர் என்ற விருதுகள் எல்லாம் இருந்தாலும், அது கட்டியங்கூறுவதில் மட்டுமே வழக்கில் இருந்தன. இவருக்கோ ஜடில இரணதீரர் என்றே ஆகிவிட்டது.”

“எவ்வளவு காலம் விக்கிரமாதித்தியர் வாதாபியிலேயே அதுக்கப்பட்டார்?”

“விஜயாதித்தியர் சரீர வலுவோடு அரசாண்டவரை இந்த நிலைமைதான். மங்கலபுரச் சிக்கலுக்குப் பிறகு, விஜயாதித்தியர், யுவராஜாவுக்குத் தானளித்திருந்த சுதந்திரத்தையும் மட்டுப்படுத்தினார். என்னதான் இருந்தாலும், விக்கிரமாதித்தியர் யுவராஜா மட்டும்தானே? போரை விரும்பாத தந்தை கோலோச்சும்போது, அவரை மீறி எப்படி வலுச்சண்டைக்குப் போக முடியும்? அதற்குப்பிறகு, யுவராஜாவின் நேரமெல்லாம், இரணரஸிகபுரம் என்று ஒரு புதிய நகரை நிர்மாணிப்பதில் கழிந்தது. பல்லவர் அரசர் நரசிம்ஹவர்மரின் நல்லகாலம், அவர் ஆட்சிக் காலமானது, விஜயாதித்தியரின் ஆட்சியோடும், இரணதீரரின் ஆட்சியோடும் ஒன்றிப்போனதால், நிம்மதியாகக் கலையையும் வளர்க்க முடிந்தது, ராஜஸிம்ஹ பல்லவேஸ்வரக் கிருஹம் மாதிரி ஒரு கற்றளியையும் நிர்மாணிக்க முடிந்தது.”

“மங்கலபுரத்தவர் கதி என்னவாயிற்று?”

“இரணதீரர் வாதாபியைக் கைப்பற்றும் எண்ணத்தோடு இல்லாமல் இருந்தாலும், சாளுக்கியர்களுக்கு அது தெரியாதவாறு சாணக்கியமாகச் செயல்பட்டதால், எப்படியாவது பாண்டியப் படைகளை வாதாபியை நோக்கி முன்னேறாதவாறு செய்து மங்கலபுரத்திலேயே தங்க வைத்துவிட வேண்டும் என்று சித்திரவாஹனர் மிகவும் பிரயத்தனப்பட்டார். இரணதீரருடைய தலைமையை முழுதும் ஏற்றுக்கொண்டு அவரை ஆனந்தமாக இருக்கவைத்தார். தன்பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்தார். அந்த சந்ததியில் வந்தவன்தான் இப்போதைய ஆளுபேந்திரன் பிருதிவிஸாகரன்.”

“வேறு ஏதோ பெயரையன்றோ நான் கேள்விப்பட்டேன்.. “ விநயன் யோசித்தான்.

“உதயாதித்திய உத்தம பாண்டியன்?” என்று எடுத்துக் கொடுத்தார் பிரதாபர்.

“ஆங்.. ! அதேதான்! ராஜாங்கக் குடுமிகளில் எல்லாம், இரண்டு மீன்களையும் பொறித்திருப்பார்கள். இங்கே எப்படிப் பாண்டியர்கள் வந்தார்கள் என்று, எனக்கும் மிக ஆச்சரியமாக இருந்தது. இப்போதுதான் காரணம் தெரிகிறது.”

“உஸ் ..ராஜாங்க விஷயம்! “ உதட்டில் கைவைத்துச் சிரித்தார் பிரதாபர். “அவனுடைய மகன், யுவராஜா மாரம்மா இருக்கிறானே, அவனுக்கும் அபிஷேகப்பெயர் விஜயாதித்திய உத்தம பாண்டியன் என்று கேள்விப்பட்டேன்.

“இப்படிச் சில காலத்துக்குப் பாண்டியனுடைய அழுத்தத்தால், வாதாபிக்கு வெளியே படையெடுக்க முடியாமல் வாளாவிருந்த விக்கிரமாதித்தியருக்கு வெகு சீக்கிரமே வாதாபித் தளையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வாய்ப்பு வந்தது. அவருக்கு வலு சேர்க்க வந்து சேர்ந்தார் ஸ்ரீபுருஷர். நவகாமருக்குப் பிறகு, கங்கமண்டலம் ஷன்னவதி ஸஹஸ்ரம், ஸ்ரீபுருஷருடைய முழுக்கட்டுப்பாட்டில் வந்ததும், தினவுகொண்டு துடித்துக் கொண்டிருந்த சாளுக்கியத் தோள்கள், திமிரத் தொடங்கின. அவற்றிற்கு அனுகூலம் தரும் வகையில், விஜயாதித்தியர், ராஜசிம்ஹர், இரணதீரர் எல்லோருடைய அரசாட்சியின் அந்திமக்காலங்களும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தொடங்கின. ஸ்ரீபுருஷர் கங்கத்தின் அரியணையில் அமர்ந்ததும், விக்கிரமாதித்தியர் காஞ்சிக்கு அழுத்தத்தைக் கொடுக்கத் துவங்கினார். விஜயாதித்தியர்தான் இன்னும் அரசர். ஆனால், இப்போது அவருடைய அமைதிப் போக்கைக் கேட்கும் நிலையில் விக்கிரமாதித்தியர் இல்லை. இரணதீரர் மற்றும் இராஜசிம்ஹரின் பிடி தளர்ந்தநிலையில், ஸ்ரீபுருஷரின் ஆவேசமான படை துணை நிற்க, இதுதான் தக்க சமயம் என்று எண்ணிக் காஞ்சி மீது படையெடுக்க ஆயத்தங்கள் செய்யத் துவங்கினார். அப்போது, பல்லவ யுவராஜாவாக இருந்தது, நரசிம்ஹரின் முதல் மகன் மகேந்திரன். நரசிம்ஹரும் தளர்ந்த நிலையில் இருந்தார்.

“சாளுக்கியருடைய அழுத்தம் பெரியதாக வளர்ந்துவிடும் முன்னரே, அதைத் தடுக்கவேண்டுமென்று யுவராஜா மஹேந்திரன் முயன்று அந்த முயற்சியில் மரித்தான். அந்த மரணம் ராஜசிம்ஹரை வெகுவாகப் பாதித்து விட்டது என்றார்கள். ஏற்கனவே, இளையமகன் பரமேஸ்வரன் அரச குடும்பத்தில் இல்லாத பெண்ணை மணந்ததால், சித்தம் கலங்கியவள் அவன் தாய். பிரம்மராக்ஷஸன் பிடித்திருக்கிறான் என்று சமணத் துறவிகளால் சிகிச்சை தரப்பட்டு ஓரளவுக்கு நலமாகி இருந்தவள், மூத்தவன் மரணத்தால் இன்னும் பலஹீனமடைந்தாளாம். ராஜசிம்ஹேஸ்வர கிருஹத்தில், மூத்தவன் பெயரால், மஹேந்திரேஸ்வரம் என்று ஒரு சிவபெருமான் கோவிலை எழுப்பி, புரச்சேற்றின் ஈரத்தைக் காய வைத்தவன் இருக்கும் இடம் என்று இருபொருள்படச் செதுக்கியிருக்கிறார்கள் என்றான் ஒரு வணிகன்.”

“ஓ! புரம் என்றால் திரிபுரம். காய்வது என்றால் சினந்து எரித்தது. இங்கே இரணரஸிகபுரம்? புரச்சேற்றின் ஈர நிலை என்றால், புதிய கட்டுமானம் செய்விக்கப்பட்ட இரணரஸிகபுரம்! இராட்டிரக் கூடர்களுக்கு இணையாக இருக்கிறதே பல்லவர்களுடைய கவித்துவம்! அதுசரி, மத்தவிலாஸப் பரிஹாஸம் படைத்த மஹேந்திரராஜா வம்சமாயிற்றே. கங்கத்தில் நான் சந்தித்த ஒரு சிலர், கவி பாசரே மஹேந்திரராஜாதான் என்று சாதித்தார்கள்.”

“ஹாஹா. ஆமாம். தெரியாதவர்கள் அப்படிச் சொல்ல முகாந்திரமுண்டு. இது மஹேந்திரர் பரிஹசத்தோடு உருவாக்கிய குழப்பம் என்றார்கள் கச்சி வணிகர்கள். சில நாடகங்களை பாசர் என்ற புனைபெயரில் அவர் எழுதியிருப்பதால், இரு பாசரும் ஒன்று என்று சிலர் நினைத்துக் கொண்டுவிடுகிறார்கள் என்றார்கள். புத்திர சோகத்தால் தளர்ந்த ராஜசிம்ஹர் சிறிது காலத்திலேயே மறைந்தார். பிறகு அரியணை ஏறிய இளையவன் பரமேஸ்வரன் இரண்டு மூன்று வருடங்கள்தான் தாக்குப் பிடித்தான். இம்முறை பெரிய படையுடன் வந்து தாக்கிய விக்கிரமர், காஞ்சியைத் துவம்சம் செய்தார். கங்கப் படைகள், ஸ்ரீபுருஷரின் குடும்பத்தைச் சேர்ந்த துர்விநீத எறெயப்ப கங்கன் என்பவன் தலைமையில் சாளுக்கியப் படைகளுக்குத் துணை நின்றன. காஞ்சி நிலைகுலுங்கியது. பலத்த தோல்வியுற்றது. நகரைச் சூறையாடி, நிறைய செல்வங்களைக் கவர்ந்து கொண்டு, பெருந்திறையோடு வாதாபிக்குத் திரும்பினார் விக்கிரமாதித்தியர். என்னைப் பொறுத்தவரையில், அவர் தலைமையில் நடந்த மூன்று தாக்குதல்களில், முதலான தாக்குதல் இது, முதன்மையான தாக்குதலும் இதுதான்.”

“அவர் மூன்று முறை காஞ்சியின் மீது படையெடுத்தாரா? ஆங்! ஐயா! இப்போது நினைவுக்கு வருகிறது. வாதாபியில் ஒரு கோவிலில், அக்கிரப் பட்டமகிஷி, தன் நாதர் காஞ்சியை மும்முறை வென்றதைக் குறித்துக் கொண்டாடும் ஒரு சாசனத்தைப் பார்த்தேன்.”

“லோகேஸ்வரப் பெருமான் கோவிலில் பார்த்திருப்பாய். மஹாராணி விரும்பிக் கட்டிய கோவில் அது. ஒருமுறை யுவராஜாவாகவும், ஒருமுறை அரசராகவும், ஒருமுறை ஆட்சியின் அந்திமக்காலத்தில், புதல்வரின் தலைமையிலும் மும்முறை வாதாபியின் படையெடுப்புக்கள் நிகழ்ந்தன. நான் சொன்னதுபோல, யுவராஜாவாக இருக்கும்போது நடந்ததுதான், என்னுடைய கருத்தில் காஞ்சிக்குப் பெரும் அழிவை ஏற்படுத்திய படையெடுப்பு.

“உள்சளக் கிராமத்தின் வழியாக, தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறிய பெருமிதத்துடன் திரும்பினார், விக்கிரமாதித்தியர். இதை நிறைவேற்றியதில், கங்கத்தின் பணி மிக முக்கியமானது. கங்கம் துணை சேர்கிறவரையில், இது நிகழக் கூடவில்லை.

“தன்னுடைய ஆட்சியில், காஞ்சிக்கு இப்படி ஓர் அவமானம் நேர்ந்ததே என்று பரமேஸ்வரன் கொட்படைந்து மனங்கொந்தளித்தான். அபிமன்யு வதமானதற்கு, ஜயத்ரதன்தான் காரணம் என்று அர்ஜுனன் வெகுண்டது போல, அவனுடைய கோபம் எல்லாம் கங்கத்தின் மீது திரும்பியது. ஸ்ரீபுருஷரை மிகக் குறைவாக மதிப்பிட்டான். முட்டாள்தனமாக முடிவெடுத்து, தோல்வியுற்ற படைகளுக்குச் சுதாரித்துக் கொள்ள நேரம் கொடுக்காமல், வெற்றுப் பெருமைக்காகக் கங்கத்தின் மீது படையெடுத்தான். கங்கத் தளபதியையே காஞ்சியால் எதிர்கொள்ள முடியாதபோது, ஸ்ரீபுருஷரின் ஆவேசத்தைச் சகித்துக் கொள்ள முடியுமா? காஞ்சிப் படைகள் சின்னாபின்னமாக்கப் பட்டன. போரில் ஸ்ரீபுருஷரால் கொல்லப்பட்டான். காஞ்சி மணியைச் சூடினேன், காஞ்சியின் கொற்றக் குடையைக் கவர்ந்தேன், பெருமானடி இனிக் காடுவெட்டி அன்று, நான் அல்லனோ? என்று உவகித்தார் ஸ்ரீபுருஷர்.”

“ஓ! அப்போதிருந்துதான், கங்க அரசர்கள் தம்மைப் பெருமானடி என்று அழைத்துக் கொள்ளத் துவங்கினார்களோ?”

“ஆமாம். காஞ்சியின் கட்டுக் கோப்பு நிலை குலைந்தது. கங்கத்தின் ஒரு படை, யானைகள் சகிதம், ஜெயபல்லவதியரையன் தலைமையில் காஞ்சியில் தங்கி ஸ்திரம் கொண்டது. ஜெயபல்லவதியரையன் நொளம்பப் பரம்பரையில் வந்தவன். ஸ்ரீபுருஷருடைய பாட்டனார் நவகாம சிவமாறர் காலத்திருந்தே அவனும், அவனுடைய தம்பியான விருத்த பல்லவதியரையனும் கங்கத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.”

“அப்படியென்றால், காஞ்சி முழுவதுமாகக் கங்கர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்கிறீர்கள்?”

“ஆமாம்.”

“பாண்டியர்கள் ஏன் உதவிக்கு வரவில்லை?”

“இந்தச் சமயத்தில் இரணதீரர் மறைந்து விட்டிருந்தார். அரியணையில் அப்போதுதான் ஏறிய மாறவர்மர், அரசுக் கடிவாளத்தைக் கையில் வலுவாக்கிக் கொள்வதில் முனைந்திருந்ததால், காஞ்சியின் உதவிக்கு வரமுடியவில்லை. விக்கிரமாதித்தியர் இந்தச் சமயத்தைத் தேர்ந்தெடுத்திருந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.”

“துரதிர்ஷ்டம்தான்.”

"அடுத்து அரியணை ஏறவேண்டியவன் பரமேஸ்வர பல்லவனின் புதல்வன் சித்திரமாயன். ஆனால், ரங்கபதாகையார், முற்றிலும் அரசப் பரம்பரைக் குருதி ஓடும் ஒருவர்தான் அரியணை ஏறவேண்டும் என்று வெளித்தேயத்தில் இருந்து நாகுத்தலை பாலகன் நந்திவர்மரை அழைத்துவந்தார். அந்தக் கதையைப் பின்னர் விவரமாகச் சொல்கிறேன். பல்லவப் பரம்பரையில் பிறந்து, எங்கோ ஓரிடத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஹிரண்யவர்மரைப் பற்றிக் கேள்விப்பட்டு, இரகசியமாகக் குழுவைக் கூட்டி, பயணத்துக்கு ஏற்பாடு செய்து, ஓலை எழுதி, ராஜ இலச்சினைகளோடு, ராஜசிம்மர் அணிந்திருந்த மகுடத்தையும் கையில் கொடுத்தனுப்பிக் காஞ்சியின் அரசராக ஆகும்படி கோரிக்கை விடுத்தார். இந்த ஏற்பாடுகளை எல்லாம் அதிரஹஸ்யமாகச் செய்தார். காஞ்சியில் நிலை பெற்றிருந்த பல்லவதியரையனுக்கு, இவை எதுவும் தெரியாது. கண்ணும் காதும் வைத்தது போல இந்த வேலை நடந்தது.

“காஞ்சியைக் கண்காணிப்பில் வைத்திருந்த பல்லவதியரையனுடைய கவனமெல்லாம் தெற்கில் பாண்டியன் படைகள் வந்துவிடுமா, அப்படி வந்துவிட்டால், அதை எவ்வாறு எதிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் இருந்தது. திடீரென்று, காஞ்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேறு ஓர் இளவரசன், காஞ்சி நகரத்தின் வடவெல்லையில் வந்திருக்கிறான் என்ற செய்தி தெரிந்ததும், அவன் மஹாபலத்துடன், யானைகளை ஏற்றிக்கொண்டு போய் வழியிலேயே மறித்தான். இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள், மூலப்பிரகிருதி ரங்கபதாகையாரின் தமையனார் மஹாவீரம் பொருந்திய ஷைலேந்திரர் தலைமையில் அணிசேர்ந்த வீரர்கள். ஊருக்குள், அவர்களுக்கு உதவ, இரண்டாவது அணிவேறு காடக முத்தரையர் தலைமையில் பதுங்கி இருந்தது.

“பாலகர் நந்திவர்மரை எதிர்க்க ஆவேசமாக வந்த பல்லவதியரையன் வெட்டிக் கொல்லப்பட்டான். சிறுவர் நந்திவர்மர் மேளதாளத்துடன் ஊருக்குள் கொண்டு வரப்பட்டு, மகுடாபிடேகம் செய்விக்கப் பட்டார். பல்லவமல்லன் என்ற குலப்பெயரையும், பரமேஸ்வரன் என்ற ஜாதகப் பெயரையும் தாங்கியிருந்த அவர், நந்திவர்மப் போத்தரையர் ஆனது அப்போதுதான். அவர் அரியணையில் அமர்ந்ததும், மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை என்றார்கள் அந்த வணிகர்கள்”

“சித்திரமாயன் என்ன ஆனான்?”

“சித்திரமாயன் நல்ல குணம் படைத்தவன்தான். இருந்தாலும் அவனுக்குப் பொதுஜன ஆதரவு இல்லை. என்றார்கள். நந்திவர்மரின் ஆதரவாளர்களுக்கு லோகமாதேவியின் மீதோ, சித்திரமாயனின் மீதோ க்ஷாத்திரம் எதுவும் இல்லை. சித்திரமாயன் அரியணை ஏறக்கூடாது, அவ்வளவுதான் அவர்களுடைய நோக்கம். ரங்கபதாகையின் ஆட்கள் தாய்க்கும் தனயனுக்கும் எந்த ஆபத்தையும் விளைவிக்கவில்லை. சித்திரமாயனுக்கு நிலைமை புரிந்துவிட, அவனும் ஒதுங்கிப் போய்விட்டான். இருபட்சங்களின் கருத்தொன்றாமையால் கிளைத்த சிக்கல் இது.

“பாண்டியராஜா குறுக்கிடவில்லையா?”

“தாய் புவனபாலினி மற்றும் ஆயாய் லோகமாதேவியிடமிருந்து காஞ்சி விஷயத்தில் குறுக்கிட மாறவர்மருக்கு விண்ணப்பம் வந்தது. ஆனால், அவர் சற்றுப் பொறுமை காத்தார். மஹாராணி ரங்கபதாகையார், தன்னுடைய புத்திக் கூர்மையால், இந்த அரியணை மாற்றத்தை மக்கட்புரட்சியாக மாற்றிவிட்டிருந்ததால், மக்களிடையே சித்திரமாயன் அரியணை ஏறுவதற்கு இருந்த ஆழமான எதிர்ப்பை அவர் அறிந்திருந்தார். ஆண்வழி பெண்வழி இரண்டிலும் அரச ரத்தம் ஓடும் ஒருவனைக் கொண்டு வந்த முயற்சியாகத்தான் ஜனங்கள் இந்த மாற்றத்தைப் பார்த்தனர்.

“ஜனங்களின் ஏகோபித்த விருப்பமாக இருக்கும் பட்சத்தில், இதைப் பாண்டியம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? பாண்டியர்கள் காஞ்சிக்கு ஹிதமானவர்கள் என்றால், மக்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் சென்று குடிகளின் விருப்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசனை எப்படி நீக்க முடியும்? வந்தவனும் சிறுவன். அவனை எல்லோரும் வரவேற்கிறார்கள். அவனுடைய வருகையால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் எழுச்சியில், ஊரைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் எதிரி கங்கர்களின் படையும் துரத்தப்படுகிறது. இதில் காஞ்சியின் இதத்துக்கு என்ன வில்லங்கம் ஏற்பட்டு விட்டது?

“மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக முரட்டுத்தனமாக ஏதாவது செய்தால், காஞ்சியின் மொத்தப் பொறுப்பும் பாண்டியரின் தலையில் ஏறிவிடும் வாய்ப்பும் இருந்தது. தானே அரியணைக்கு இப்போதுதான் வந்திருக்கிறார். தன்னாட்சியை நிலை நிறுத்துவதில் ஈடுபட்டிருந்த இந்த வேளையில், மற்றொரு நாட்டுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் சற்றுத் தயக்கம் காட்டினார் மாறவர்மர்.”

“பல்லவதியரையர் கொல்லப்பட்டதால், கங்கர் கோபம் அடையவில்லையா?”

“ரங்கபதாகையார், இப்படி ஒரு சூழ்ச்சி வகுப்பார் என்று ஸ்ரீபுருஷருக்குத் தோன்றியிருக்கவில்லை. அதிர்ச்சியடைந்தார். ஆனால், இங்குத்தான் பாண்டியராஜாவின் பார்வை காஞ்சியைக் காத்தது. பல்லவமல்லரின் அரியணை ஏற்றத்திற்கு எதிராக, மாறவர்மர், காஞ்சி விஷயத்தில் குறுக்கிடாமல் மௌனமாக இருந்தாலும், கங்கம் காஞ்சி மீது படையெடுத்து வந்தால், அதே மௌனம் காக்க மாட்டார் என்று ஸ்ரீபுருஷருக்குத் தெரியும். அதனால், அவரும் பொறுத்தார்.”

“பரமேஸ்வரன் மட்டும் பாண்டியர் மாறவர்மர் அரிகேசரி வலுவடையும் வரைப் பொறுத்திருந்து, சற்று நிதானித்துச் செயல்பட்டிருந்தால், காஞ்சிக்குள் கங்கம் புகுந்திருக்காது, அல்லவா? சாளுக்கியப் படைகள் காஞ்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டுப் போயிருக்கின்றன. மறு தாக்குதல் நிகழ்த்துமுன்பு சிறிது காலம் பொறுமை காத்திருந்திருக்கலாம்.”

“என்ன செய்வது? இளமையின் வேகம். இழந்த கௌரவத்தை ஈடுசெய்ய வேண்டும் என்ற துடிப்பானது, இருபக்கமும் பட்டை தீட்டப்பட்ட கத்தி. எப்படி வேண்டுமானாலும் வெட்டும்.”

“எவ்வளவு வருடம் இந்த நிலைமை நீடித்தது?

“இரண்டு மூன்று வருடங்கள் இருக்கலாம்”

“ஓ! சிறுவர் அரசருக்கு மேற்கைத் தெற்கு கண்காணிப்பதால், மேற்கிலிருந்து உடனடியாகப் பயமில்லை. தெற்கு, தானாக எதுவும் செய்யாது. காலமே அவருக்கு உதவி செய்ய இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதோ? சிறுவர் நந்திவர்மர் எப்படி ஆண்டார்?”

“அவர் இயல்பிலேயே திறமைசாலிதான் அல்லரோ? அவருக்கு முதுகண்ணாக, ரங்கபதாகையாரின் தமையனார் வழிகாட்டினார். அக்ஷிஸ்வாமி என்றுதான் அவர் அழைக்கப்பட்டார். ஒருவாறு காஞ்சி, மறங்கிய மயக்கத்தில் இருந்து விடுபட்டுத் தெளிவு பெறத் தொடங்கியது. விக்கிரமாதித்தியர் அரசராக அரியணை ஏறும்வரை இந்நிலை நீடித்தது.

“ஆனால், நிலைமை அவர் பட்டத்துக்கு வந்தவுடனே மாறியது. காஞ்சியைத் தாக்க அவர் ஏற்பாடுகள் செய்யத் தொடங்க, மீண்டும் காஞ்சியின் அமைதிக் குலைவுக்குக் காரணம் பிறந்தது. சாளுக்கிய மெய்கீர்த்திகளில் ‘துரிதமாகக் காஞ்சியை அடக்கப் புறப்பட்டார்’ என்று பெருமை அடித்துக்கொள்ள ஏதுவாக, அடுத்தவருடமே, விக்கிரமாதித்திய சாளுக்கிய சத்யாஸ்ரயர், ஒரு பெரிய படையுடன் புறப்பட்டார்.

“காஞ்சியைக் கண்காணித்துக் கொண்டிருந்த மாறவர்மர் அரிகேசரி ராஜஸிம்ஹப் பாண்டியருக்கு ஒற்றர்களின் வழியாக இந்தச் செய்தி கிடைத்தது. மீனக்கொடியர் வெகுண்டார். வெளியிருந்து வந்த சிறுவர் நந்திவர்மரைப் பொறுத்தவருக்கு, விக்கிரமாதித்தியரைப் பொறுக்கும் எண்ணமில்லை. சித்திரமாயன் அரியணையில் இல்லாமல் இருக்கலாம். அதற்காகத் தன்னுடைய முற்றவையின் நாட்டை பிறத்தியாருக்கு விட்டுக் கொடுத்துவிட முடியுமா? தன்னுடைய குடும்பத்தினரைத் தானொறுக்கலாம். அயல் தேயத்து அரசனை ஒறுக்கவிடலாமா? தந்தை இரணதீரரால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சாளுக்கியம் மீண்டும் அண்டை வாயில் வரை வரவிடக்கூடாது என்று தீர்மானித்தார். காஞ்சிக்குத் துணை போக முடிவு செய்தார்.

“வல்லிய பாண்டியர் எதிர்த்து வருகிறார் என்றதும், விக்கிரமாதித்தியர் தயங்கினார். உபரியாகப் பாண்டியருக்குப் பொத்தப்பி சோழன் வஜ்ரகண்டனின் துணைவேறு சேர்ந்து கொண்டது. சாளுக்கிய ஆலோசகர்கள் எல்லோரும், அரசர் செவிக்கு இனிமையானதையே பேசி, ‘தயங்காதீர்கள், பாண்டியனுக்கும் சேர்த்துப் பாடம் புகட்டுங்கள்’ என்றார்கள். ஆனால், ஸ்ரீபுருஷர் புத்திசாலி. பாண்டியப் படைகளை எதிர்க்க முடியாது என்று அவருக்குத் தெரியும். அவர் இடையில் புகுந்து, சமரசம் செய்துவைத்தார்.

நந்திவர்மனை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அவனுடைய செல்வங்களைப் பறித்துக் கொள்ளலாம். கொல்லலாம், சிறைப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் காஞ்சியின் கட்டுமானங்களை அழிக்கக் கூடாது என்றும், தீவைத்துக் கொளுத்துவது, குடிமக்களைச் சூறையாடுவது போன்ற செயல்கள் தவிர்க்கப்படவேண்டும் என்றும் சித்திரமாயனை அரசனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உடன்பாடாயிற்று. பாண்டியர் ஒரே கல்லில் இரண்டு கனிகளுக்குக் குறிவைத்தார். பாண்டியத் தலையீடு இல்லாமல், சாளுக்கியரை வைத்தே நந்திவர்மரை நாட்டைவிட்டு அகற்றிவிடலாம். அம்மான்சேயையும் அரியணையில் அமர்த்திவிடலாம். விக்கிரமாதித்தியருக்கு, இதில் விருப்பமில்லைதான். ஆனால், அமர்க்களத்துக்கு ஆயத்தமாகி, ஆகத்தைத் தட்டிக்கொண்டு ஆர்ப்பரித்து நின்ற படைவீரர்களை எப்படி வெற்றாகத் திருப்பி அழைத்துக் கொள்வது? அதனால், காஞ்சியை நோக்கிப் புறப்பட்டார். அவருடன் ஸ்ரீபுருஷர் உடன்வரவில்லை. கங்கத்தின் ஒரு சிறு படையை மட்டும் ஒப்புக்கு அனுப்பி வைத்தார்.”

“அப்படியென்றால், கங்கச் சாளுக்கியப் பிணைப்பு, விக்கிரமாதித்தியருடைய இந்தப் போர்முடிவால் பலவீனமானதோ?”

“அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. விக்கிரமாதித்தியர் யுவராஜாவாக இருந்தபோது அவருடைய காஞ்சிப் படையெடுப்பில் ஸ்ரீபுருஷர் காண்பித்த வேகம் இதில் இல்லை. இது நடக்கும்போது அதைப் பார்த்த பலரை நான் பலவருடங்களுக்குப் பிறகு சந்தித்துப் பேசும்போது, எல்லோரும் அரசரின் மனத்தை ஆக்கிரமித்திருந்த காஞ்சிப் பூதம், சாளுக்கிய நட்பிலிருந்து கங்கத்தைச் சற்று அகன்று போகும்படி செய்துவிட்டது என்றார்கள். இதற்குப் பிறகு நடந்த இரண்டு படையெடுப்புகளின்போது, இன்னும் விலகிப் போனது கங்கம். விக்கிரமாதித்தியருக்கு மட்டும்தான் இந்தப் படையெடுப்பு வெற்றுக்கு என்று தெரியும். முன்வைத்த காலைப் பின்வைக்க முடியாமல் புறப்பட்டு வந்தார். மிக்க ஆர்வத்துடன் காஞ்சியை நோக்கித் திரண்டு வந்த வீராவேசமான சாளுக்கியப் சேனைக்குப் பெரும்வியப்பு. காஞ்சி நகரம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

“’அழிக்காமல் பிரவேசிக்கவும்’ என்று கண்டிப்பான கட்டளையிட்டிருந்தார் விக்கிரமாதித்தியர். காஞ்சி நகரம் வெறுமையாகக் காட்சி அளித்தது. ஒரு எதிர்ப்பும் இல்லை.”

“முதுகண் அக்ஷிஸ்வாமி வாளாவிருந்தாரா?”

“சாளுக்கிய சேனையின் பிரம்மாண்டத்தை ஒற்றர்கள் மூலம் அறிந்த அக்ஷி ஸ்வாமி, அச்சேனையை எதிர்க்கும் வலு தங்களுக்கு இல்லை என்று புரிந்துகொண்டு நந்திவர்மரைத் தலைமறைவாக்கி விட்டிருந்தார். எல்லோரும் நாட்டை விட்டே ஓடிவிட்டிருந்தார்கள். சாளுக்கிய சேனைகள் எதிர்பார்த்த சண்டை எதுவும் நடக்கவில்லை. எந்தச் சேதமும் செய்யவேண்டிய கட்டாயம் இல்லாமல் காஞ்சிக்குள் பிரவேசித்தார் விக்கிரமாதித்தியர். பல்லவ அரசர் அகப்படவில்லை ஆயினும், விக்கிரமாதித்தியரின் சூளுரை ஒருவாறு நிறைவேறியது.

“ஆச்சரியமான நிகழ்வுதான். பொதுவாகப் படைவீரர்கள், அந்நிய நாட்டின் மீது வெற்றி பெற்றதும், கொள்ளை அடிப்பது இயல்பான ஒன்று. உயிருக்கு ஆபத்து நேரும் தொழில் போர்வீரத் தொழில். நாட்டுப் பெருமைக்காகவே எல்லோரும் படைவீரர் ஆவதில்லை. கூலிக்காக மட்டுமன்றி, இம்மாதிரிப் பொருளீட்ட வாய்ப்புக் கிடைக்கும் என்று கருதியே சிலர் படைவீரராகச் சேர்வதும் உண்டு. அப்படியிருக்க, எப்படி வெற்றிடமாக இருந்த காஞ்சிக்குள் நுழைந்த சாளுக்கிய வீரர்கள், கையைக் கட்டிக்கொண்டு கட்டுப்பாடுடன் செல்வத்தை அபகரிக்காமல் இருந்தார்கள்?”

“என்னதான் அரசர் ஆணை என்றாலும், தேன்கூட்டை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? செய்தார்கள். சாளுக்கியப் படைகள், பாண்டியருக்குத் தந்த வாக்கு நாணயம் பிறழ்கிறதா என்று பாண்டியப் படையினர் கண்காணித்து வந்த நிலையில், இப்படித் தம் வீரர்கள் ஓடும் நதியில் கையை நனைப்பது அரசருக்குத் தெரிய வந்தவுடன், கடுவினை செய்தார். கவர்ந்த செல்வங்களை, அங்கங்கே கோவில்களில் சேர்த்துக் குவித்து அறிவிப்பும் செதுக்கிவைத்தார் என்று ஒரு வணிகர் சொன்னார். அதில் ஒருவர், கர்ணாடம் பேசுபவர். அவர் சொன்னது இன்னும் சுவாரசியமாக இருந்தது. ராஜமஹேஸ்வரம் கோவிலில் சத்யாஸ்ரயர் கல்லில் கர்ணாட மொழியில் பொறித்து வைத்திருந்த அறிவிப்பை அவர் மனனமே செய்து வைத்திருந்தார்.”

பிரதாபார் நெற்றியைத் திருத்திக்கொண்டு யோசித்து, அதை நினைவு படுத்திக்கொண்டு சொன்னார்.

“’காஞ்சியை வெற்றிபெற்றதும், பிருதிவல்லப மஹாராஜாதிராஜா பரமேஸ்வர பட்ட விக்கிரமாதித்திய சத்யாஸ்ரயர், ராஜமஹேஸ்வரருடைய செல்வத்தைக் கண்டு, மகிழ்ந்து, அதைத் தேவருக்கே கொடுத்துவிட்டார். புரைதீர்ந்த அநிவாரித புண்ணியவல்லபனால், வல்லப துர்ஜயரின் ஆணையால் எழுதப்பட்ட இந்த எழுத்துக்களையோ, இந்தத் தர்மத்தின் ஸ்திதியையோ அழிப்பவர்கள், கடிகையின் பெருமக்களைக் கொன்ற பாவத்தை அடைவார்கள்’ என்பது போல ஏதோ சொன்னார்.”

“கடிகையின் பெருமக்களா? காஞ்சியை வெறுப்பவர் காஞ்சியின் கடிகையை அத்துணை மதித்து எழுதியிருக்கிறாரே? ஒருவேளை தாம் எழுதியதை ஊர்மக்கள் அழித்துவிட்டால், தாம் இவ்வாறு திருப்பிக் கொடுத்தது யாருக்குமே தெரியாமல் போய்விட வாய்ப்புண்டு என்று கருதி, எந்த ஓம்படைக் கிளவி, ஊர் மக்களை அச்சப்பட வைக்கும் என்று யோசித்து எழுதி வைத்திருக்கிறாரோ?”

“இருக்கலாம். ஆனால், கர்ணாடத்தில் எழுதி வைத்தால் யாருக்குப் புரியும்?”

“அவர் எச்சரிக்கை செய்து எழுதி வைத்தது தம்படை வீரர்களுக்குத்தானே? அவர்களுக்குக் கர்ணாடத்தில் எழுதியிருந்தால்தானே புரியும்?”

“இருக்கலாம்.”

“அல்லது, அவசர அவசரமாக அப்போதைக்குத் தன்னிடம் இருக்கும் பணியாளரை வைத்து எழுதிவிட்டாரோ என்னவோ?”

“அவசரம் என்ன இருக்கப் போகிறது?”

“கண்காணித்துச் சுற்றிக் கொண்டிருக்கும் பாண்டியப் படைவீரர்கள், கோவிலைக் கொள்ளையடித்து விட்டார்கள் என்று கூக்குரல் இடுவதற்கு முன்னமேயே செய்துவிடவேண்டும் என்ற அவசரமாக இருக்கலாம்” சிரித்தான் விநயன்.

“பல்லவத்தைக் கதி கலங்கவைத்த சாளுக்கியப் படைகளைப் பற்றி, இவ்வளவு நையாண்டி கூடாது விநயா! சாளுக்கிய மண்ணில் நின்று கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே” பொய்யாக எச்சரித்தார் பிரதாபர்.

நகைச்சுவையையும் மீறி, சாளுக்கியப் படைகளின் அன்றைய நிலைமையின் நிதர்சனம் விநயனுக்கு உறைத்தது.

“அந்த வணிகன் உங்களுக்குச் சொன்னதைப் பார்த்தால், சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி அன்றிலிருந்து துவங்கியது என்று வைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே?

“சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி என்பதைவிட, திரமிளத்தில் காலூன்றும் முயற்சியின் முடிவு என்று கொள்ளலாம். இதற்குப் பிறகு காஞ்சி சாளுக்கியப் படைகளால் பெரிய சேதம் அடையவில்லை. காஞ்சியை நசுக்கவேண்டும் என்ற கனவும் முடிவுக்கு வந்தது.”

“இந்தப் படையெடுப்பு விக்கிரமாதித்தியர் பெயரில் நடந்த இரண்டாம் படையெடுப்பு என்றீர்கள். இதற்குப் பிறகு நடந்தது, அவர் நாட்டில் வீற்றிருக்க அவருடைய புதல்வர் தலைமையேற்று நடந்த படையெடுப்பா? அப்போது காஞ்சி பெருத்த நாசமடைந்ததா?”

“அந்தப் படையெடுப்பைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். அந்தப் படையெடுப்புத்தான் இரட்ட ஸாம்ராஜ்ஜியம் ஏற்படுவதற்கு ஓர் அனுகூலச் சூழ்நிலையை உருவாக்கியது. பல்லவ நந்திவர்மனைப் பொறுத்தவரை, இந்தப் படையெடுப்பு, அவரை அரியணைக்கு வரவழைத்தவர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவு. பல்லவ அரசச் சின்னங்களான கடுமுகவாத்தியம் என்ற ஊதுகொம்பு, ஸமுத்ரகோஷம் என்னும் பேரிகை, மண்டையோடு பொறித்த கொடி, நிறைய யானைகள், மாணிக்கக் குவியல் என்று பலவற்றைச் சாளுக்கியராஜா கவர்ந்து கொண்டார். காஞ்சிக்குக் கிழக்கில் இருந்த கடற்கரையில் ஒரு பெரிய வெற்றித் தூணையும் நிறுவினார்.”

“நந்திவர்மரை ஓடவைத்தாலும், சித்திரமாயனை அரசராக நியமிக்க ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாரே. நினைத்துப் பார்த்தால், பாண்டியராஜா சாதுரியமாகச் செயல்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. இன்னொரு சந்தேகம் ஐயா, ஒருவேளை காஞ்சியின் ராஜசிம்ஹேஸ்வரத்தைக் கண்டு மனம் மாறிக் காஞ்சியை அழிக்காதே என்றிருப்பாரோ?”

“ஹா ஹா. நல்ல கற்பனை உனக்கு. ராஜசிம்ஹேஸ்வரம் அவர் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால், யுவராஜாவாகக் காஞ்சியைத் தாக்கியபோதே இருந்ததே? ராஜா பரமேஸ்வரனை நசுக்கிக் காஞ்சியை வென்று திறை கொண்டதை அவ்வளவு பெருமையாக எழுதிவைத்துச் சந்தோஷித்திருக்கிறார். அப்போது காஞ்சியை அழிக்காமல் பிரவேசித்திருக்க வேண்டியதுதானே? அப்போது கடிகை மக்களின் மீது அன்பு தோன்றவில்லையா? அந்தப் போரின் தாக்கம் பரமேஸ்வரனின் இறப்பு வரை, கொண்டுபோய் விட்டுவிட்டதல்லவா? அது மட்டுமன்று, தான் யுவராஜாவாக நடத்திய போரையே பெருமிதமாக எழுதிக்கொண்டவர், தான் அரசராக இருந்து நடத்திய இந்தப் போரை எழுதிக் கொண்டாடியிருக்க வேண்டாமா? எனக்குத் தெரிந்தவரையில், அவர் இந்த வெற்றியைப் பகிரங்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. கீர்த்திவர்மரின் மெய்கீர்த்திகளில்தான் நான் இதைப் பற்றிய விவரங்களைக் கண்டிருக்கிறேன். எனக்கு அப்படித்தான், ரக்தபுரிவாசிகளும் சொன்னார்கள்.

“இன்னொரு விஷயமும் கூட. இந்தப் படையெடுப்பில், ஏழை எளியவர்கள், மறையவர்கள் ஆகியோர் மகிழ, நரசிம்ஹபல்லவன் கட்டுவித்த கோவிலுக்குத் தன்னுடைய தந்தை, ஸ்வர்ணங்களை வாரி வழங்கினார் என்றே கீர்த்திவர்மர் புகழ்பாடுவார். குலவைரி, இயற்கை எதிரி, பழி வாங்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவர் பேசும் பேச்சல்லவே இது? ஏதோ ஒன்று இந்தப் படையெடுப்பின் அடிப்படையை மாற்றியிருக்கிறது. வணிகன் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்று எனக்குப் படுகிறது. எது எப்படியோ, நூறு வருடங்களுக்கு முன் நடந்த கதை. உண்மை நேரில் கண்டவர்களுக்கே தெரியும்.”

“அவர் வாதாபிக்குத் திரும்பிப் போன கையுடன், பாண்டியர் மாறவர்மர் அரிகேசரி, சித்திரமாயனை அரியணையில் அமர்த்தினார். ஸ்கந்தசிஷ்யர் என்ற அபிஷேக நாமத்துடன் புதிய ஆட்சி துவங்கியது. வெளியுலகுக்கு வெற்றியுடன் திரும்பிய சாளுக்கிய அரசர், அடுத்த பத்து வருடங்களுக்கு எந்தப் பெரிய படையெடுப்பிலும் ஈடுபடவில்லை. இந்தச் சமயத்தில்தான் சாம்ராஜ்ஜியத்தின் வடக்கில் மிலேச்சர்கள் வந்து தாக்கினார்கள். அவருடைய உடனடிக் கவனம் அந்தப் படையெடுப்பை எதிர்கொள்வதில் செலவழிந்தாலும், அவர் வடபுறத்துக்குப் போர்புரியச் செல்லவில்லை. யுவராஜாவாக இருக்கும்போது இரணத்தை இரசித்துச் செய்த விக்கிரமர் வேறு, அரசராக இருந்த விக்கிரமர் வேறு. அவனி ஜனாஷ்ரயரும் தந்திதுர்க்கரும்தான், வாதாபிக்காகக் களத்தில் இறங்கிக் காரியம் ஆற்றினார்கள் என்று முன்னமேயே சொல்லியிருக்கிறேன்.

“காலப்போக்கில், தன் இறுதிக் காலம் நெருங்குவதை உணர்ந்த மஹாராஜா, தனயர் கீர்த்திவர்மரைப் பட்டத்து இளவரசராக நியமித்தார். காஞ்சி அவருடைய நினைவில் இருந்து அகலத் தொடங்கியது. ஆனால், இளவரசர் கீர்த்திவர்மர், காஞ்சியின் மீதிருந்த வெறுப்பை வளர்த்துக்கொண்டிருக்க விரும்பினார். அவர் செய்த பெருந்தவறு இது. இந்த அவசியமில்லாத முனைப்பால், சாளுக்கிய அரசின் முடிவுப் பாதை சீக்கிரமே உருவாகத் துவங்கியது.

“காஞ்சி வெறுப்பு, கீர்த்திவர்மரை ஈர்த்த காரணம், அதைக் கருவியாக வைத்துத் தந்தையின் பாதி நிறைவேறிய கனவை முழுவதும் நிறைவேற்றி, அவருடைய கருத்தில் உயர்ந்துவிட எண்ணியதாக இருக்கலாம். தானே வலிய, மஹாராஜாவிடம் போய், ‘எனக்கு அனுமதி தாருங்கள், உங்களிடம் தப்பித்துப் போன, பல்லவனை வீழ்த்திவிட்டு வருகிறேன்’ என்று விண்ணப்பித்துக் கொண்டார். ஒரு படையைத் திரட்ட முற்பட்டார்.

“நான் ஏற்கனவே சொன்னேன், கங்கம் மெல்ல மெல்லச் சாளுக்கியப் பிணைப்பில் இருந்து விலகிக்கொண்டிருந்தது என்று. இந்தமுறையும் ஸ்ரீபுருஷர் துணை போகவில்லை. கீர்த்திவர்மர், மற்றக் குறுநில மன்னர்களுக்கு ஓலை அனுப்பித் தன்னோடு படையெடுப்பில் கலந்துகொள்ளக் கட்டளையிடுமாறு தந்தையை விண்ணப்பித்துக் கொண்டார். அதன் விளைவாக, இளவரசருக்குப் பக்க பலமாக, மற்ற மஹாஸாமந்தர்களுடன் சேர்ந்துகொண்டு கூடச் சென்றவர் தந்திதுர்க்கராஜா. வாதாபி சாளுக்கிய இராஜ்ஜியத்துக்குக் கீழ்ப்படிந்து கப்பம் கட்டி வந்த, சிற்றரசர் அல்லரோ அவர்? இன்னொருவர் ஆளுவராசர். இராட்டிரக்கூடரான நன்னப்பராஜா என்ற ஒரு குறுநில மன்னர் இன்னொருவர். தந்திதுர்க்கரைப் போலவே அவரும் இங்கே சொன்னை நதியருகே, ஆதித்யவாடாவை ஆண்டு கொண்டிருந்தார். அவருடைய புதல்வர் கோவிந்தராஜாவும் தந்திதுர்க்கரும் சமவயதினர்கள். இப்படிப் பல குறுநில மன்னர்கள் தத்தம் படைகளுடன் காஞ்சிக்குப் புறப்பட்டார்கள்.

“தந்திதுர்க்கருடன் காஞ்சிக்குச் சென்ற கீர்த்திவர்மர், மீண்டும் காஞ்சியைத் தாக்கி, மூலை முடுக்கெல்லாம் பல்லவ மல்லனைத் தேடினார். இன்னும் மாணிக்கங்களையும் யானைகளையும் செல்வங்களையும் கண்டெடுக்கிறாரே தவிர, பல்லவமல்லரை எங்கும் காணவில்லை. எங்கோ தூரத்தில் உள்ள கோட்டையில் பல்லவ அரசர் மறைந்திருப்பதாக வாசிகம் கிடைத்தது. ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிவந்து, படையெடுப்புக்குப் பிரதிபலனாகத் தான் கவர்ந்து வந்த மாணிக்கங்களையும் பொக்கிஷங்களையும் யானைகளையும் மட்டும் தந்தைக்குச் சமர்ப்பித்தார்.

“இந்தப் படையெடுப்புத்தான், தந்திதுர்க்கருக்குத் தானே ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. கீர்த்திவர்மரோடு கூடவே சென்று, அவருடைய போர்த் தலைமையையும், அணுகுமுறையையும் அருகிலே இருந்து பார்த்தவருக்கு, இனி இவருக்கு அடங்கிய சிற்றரசனாகக் காலம் தள்ளுவது கடினம் என்று தோன்றியது. நந்திவர்மர் எங்கே தலைமறைவாக மறைந்திருக்கிறார் என்று குறிப்பே கிடைக்காத நிலையில், வெற்றுப் பெருமைக்காகவும், தந்தை தன்னுடைய தகைபாடவேண்டும் என்ற எண்ணத்துக்காகவும் நடந்த தேவையில்லாத படையெடுப்பு இது என்று தந்திதுர்க்கர் நம்பினார்.”

கீர்த்திவர்மர் காஞ்சியைச் சூறையாடியபோது, சித்திரமாயர் எதிர்க்கவில்லையா?”

“எதிர்த்தார். தோல்வியுற்றுத் தப்பியோடி விட்டார்.”

“ஓ! பாண்டிய மன்னர் பதிலடி கொடுக்கவில்லையா?”

“கொடுத்தாரே! வெண்பையில் சாளுக்கியப் படைகள் பாண்டியப் படைகளிடம் தோற்றன. மீண்டும் ஸ்கந்த சிஷ்யன் அரசனானான். கீர்த்திவர்மரின் காஞ்சிப் படையெடுப்பின் போது ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. சாளுக்கியர்களிடம் சிக்காமல் பலவருட காலம் தலைமறைவாக இருந்த நந்திவர்மரைத் தந்திதுர்க்கர் சந்திததார். அந்தச் சந்திப்புத்தான், தக்கணத்தின் தலைவிதியை மாற்றி எழுதி வைத்தது. ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தின் பிறப்புக்கு வித்திட்டது. இந்த வித்து, விக்கிரமாதித்யரின் மறைவினால் உடனேயே விருட்சமாக வளரத் துவங்கியது. இதற்கு அடுத்து, வெண்பையில், பாண்டியனிடம் கீர்த்திவர்மர் பெற்ற தோல்வி, தந்திதுர்க்கரின் முடிவை இன்னும் உறுதியாக்கிற்று. தந்திதுர்க்கரின், சாளுக்கிய இராஜ விசுவாசம் விக்கிரமாதித்தியரோடு மறைந்து போயிற்று. கீர்த்திவர்மர் அரியணை ஏறிய சில நாட்களிலேயே, தந்திதுர்க்கர், தம் சாம்ராஜ்ஜியக் கனவை நிறைவேற்றத் தொடங்கிவிட்டார். எப்படி இந்தக் கனவை நிறைவேற்றினார் என்று ஏற்கனவே விரிவாகச் சொல்லி இருக்கிறேன். கனவு பிறந்த கதையை திரும்பிப் போகும்போது சொல்கிறேன். அதோ, அங்கே பார்! அதுதான் சிதிலமான இலவந்திகை." என்று கையைக் காட்டினார் பிரதாபர். தூரத்தில், சக்கரம் உடைந்து, நீர்க்குவளைகள் துண்டாகிச் சிதறிக்கிடந்த ஜலயந்திரத்தைப் பார்த்தான் விநயன்.

“ஆயப்பா, நிறுத்து.” என்று சொல்லிவிட்டு இறங்கினார். விநயனும் இறங்கினான்.

"பலநாட்களாகப் பயன்படுத்தப்படவில்லையா? எங்கிருந்து நீரைச் சேந்தும்? கிணறு எதையும் காணவில்லையே?"

"கிணறு இல்லை. கீழே கால்வாயிலிருந்து நீர் இறைக்கவேண்டும். வேங்கிச் சண்டைகளில் சேதாரமுற்ற பிறகு அப்படியே கிடக்கிறது. இந்தப் பிராந்தியமே மேடு பள்ளமாக இருக்கின்ற பிராந்தியம். நீ வரும்போது பார்த்திருப்பாயே? ஆற்றிலிருந்து வேண்டிய நீர் பாய்கிறது. ஆனால், அதை மேட்டிலிருக்கும் பட்டிகளுக்கும் பாந்தல்களுக்கும் ஏற்றுவதற்கு இதைப்போல யந்திரங்கள் ஏதாவது அமைத்தால்தான் உண்டு. இது சிறிது. இதைப்போல இன்னும் பெரியனவாய் அமைக்க முடியுமா என்று பார்க்கிறேன்."

"இந்தப் பகுதிகளில் எல்லாம் எயினர்கள் அதிகமோ? இவர்கள் பீமராஜாவுக்குத் துணையாகப் போரிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்"

"ஆமாம். இளையவருக்காக உயிரையும் கொடுத்தார்கள். ஒருவிதத்தில், அதனாலேயே, போர் முடிந்ததும், நரேந்திரருக்காகச் சண்டையிட்டவர்களால், கவனிக்கப் படாமல் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டார்கள். மஹாராஜாவுக்கு இது தெரிந்ததும், இப்படி இருக்கக்கூடாது, இவர்களுக்கும் நல்லது செய்யவேண்டும் என்று கண்டிப்பான கட்டளை இட்டு, பிரிவினை எண்ணத்தை  மாற்றப் பிரயாசைப்பட்டு வருகிறார். இவர்களுக்கு அருநீருக்கும், செந்நீருக்கும் துரவும், தூம்பும், தூரியும் ஏற்படுத்துவது முதல் பணியாக இருக்கிறது. கீழே பார், அந்தப் பள்ளத்தில் பெரிய வாய்க்கால் போகிறது, ஆற்றிலிருந்து வரும் நீர் அது. அதிலிருந்து நீரை இருபடிகளாக இந்த உயரத்துக்கு ஏற்றவேண்டும்" என்று காண்பித்தார்.

"செக்குச் சக்கரம் சுற்றிக் குவளைகள் வழியாக நீர் ஏற்றப்போகிறீர்களா?"


"ஆமாம். ஓர் இலவந்திகையை எட்டுத் தண்டத்துக்கு நீரை உயர்த்திக் கொட்ட வைக்கலாம். இரண்டிருந்தால், பதினாறு தண்ட உயரத்துக்கு நீரை ஏற்றிக் கால்வாயில் சரித்துவிடலாம். பல பாந்தல்களுக்கு நீர் கிடைத்துவிடும்."

"சரிவிலே அனுப்ப வேண்டியிருந்தால் நிறைய நீரைச் சேந்த வேண்டியிருக்குமே? பெரிய சக்கரமாக வைக்கவேண்டி இருக்கும்"

"இதைவிடப் பெரியதுதான். நான்கு மாடுகள் இழுத்தால், நாழிகைக்கு அறுபது கலம் நீர் கிடைக்கும்." பேசிக்கொண்டே இருக்கும்போது அங்கே பணி செய்துகொண்டிருந்த தச்சர்களும் வேலையாட்களும் இவர்களைத் தூரத்திலிருந்து  பார்த்துவிட்டு ஓடி வந்தார்கள். ஒரு முகூர்த்தம் போல அங்கே பிரதாபர் பணியாட்களோடும் தச்சனோடும் வேலையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.


எப்படி நெடுகச் சுற்றும் சக்கரத்துக்கு இடையில், அச்சுக்கு மேற்பாதியில் தொட்டியை அமைக்க வேண்டும், எந்த இடைவெளியில் சக்கரத்தில் சிறு பாண்டங்களை வைக்கவேண்டும். என்ன அகலத்துக்கு பாண்டத்தின் வாயிருந்தால், தொட்டியைத் தாண்டுவதற்குள், மொத்தத் தண்ணீரையும் தொட்டியில் கொட்டவைத்து விடலாம், சக்கரத்தை நீரின் எடையோடு சுற்றுவதற்கு, எத்தனை காளைகள் தேவைப்படும், நாள் முழுவதும் சுற்றுவதற்கு வேண்டிய பணியாளர்கள் எத்தனை வேண்டும், மாடுகளைப் பராமரிக்கவும், இளைப்பாறச் செய்யவும் தொழுவமும், பணியாளர்களின் குடும்பத்துக்குக் குடில்களும் கட்டுவது, என்ன சரிவில் வாய்க்கால்கள் வெட்ட வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான், விநயன். மஹாவீராசார்யர் சொன்னது நினைவுக்கு வந்தது.

 

த்³வீப ஸாக³ர ஶைலானாம் ஸங்க்²யா வ்யாஸ பரிக்ஷிப:

வநவ்யந்தர ஜ்யோதிர்லோக கல்பாதி வாஸீனாம்

 

ப்ராணினாம் தத்ர ஸம்ஸ்தா²னமாயுரஷ்டகு³ணா த³ய:

யாத்ராத்³யா ஸ்ஸாம்ஹிதாத்³யாஶ்ச ஸர்வே தே க³ணிதாஶ்ரயா:

 

தீவோ, திரமோ, திரைகடலோ இவற்றின் பொருண்மையையும், அளவையும் அறிவதற்கும், அங்கே வாழும் ஜீவராசிகளின் கூட்டம், அவை தங்குமிடங்களின் அளவு, அவற்றின் ஆயுள், அவற்றின் போக்கு, அவற்றோடு வாழ்வது இவற்றை அறிவதற்கும் கணிதமே ஆதாரம்.

திரும்பிவரும்போது, மீண்டும் பிரதாபர் கதையைத் தொடர்ந்தார்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...