அன்று அக்கிரஹாரத்தில், ஓர் அமங்கலம் நடந்ததால், பாடசாலையை வெள்ளென மூடிவிட்டார்கள். சீக்கிரமே சத்திரத்துக்கு வந்துவிட்டான். கூடவே குக்கேஸ்வரரும் வந்திருந்தார். குக்கேஸ்வரரும் விநயனும் நுழைந்தபோது, கூடத்தில் சில யாத்திரிகள் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த சில திங்கள்களில் வேங்கியில் நடைபெறப்போகும்
கஜவையாளிக்கு, எண்பெருங்காடுகளில்
ஒன்றான ஆங்கிரேயத்தில் இருந்து குஞ்சரங்கள் கொண்டு வந்திருந்த யானை வணிகர்கள்
அவர்கள். இங்கிருந்து தாஷார்ணகக் காடுகளுக்குப் போகும் வழியில் வையாளியையும்
பார்த்துவிட்டுப் போகலாம் என்பதற்காகச் சத்திரத்தில் தங்கியிருந்தார்கள். விறுவிறுப்பான விளையாட்டு. ராஜா விழுந்ததும், ‘நன்றாக விளையாடினீர்கள்’ என்று அவர்களைப்
பாராட்டிய விநயன் அவர்களிடம், ஒரு கேள்வி கேட்டான்:
“இந்தச் சதுரங்கப் பலகையின் கீழ்ப்பாதியை மறைத்துக் கொள்ளுங்கள். இப்போது வரிசைக்கு எட்டாக, நான்கு வரிசைகளில் முப்பத்தி இரண்டு கட்டங்கள் இருக்கின்றன இல்லையா?”
விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஏதோ பிசி வரப்போகிறது என்ற சுவாரசியம் பொங்க, “ஆமாம்” என்றார்கள்.
“இப்போது குதிரையை முதல் கட்டத்தில் வையுங்கள்.”
வைத்தார்கள்.
“இப்போது குதிரையை நகர்த்திக் கொண்டே முப்பத்து இரண்டு கட்டங்களுக்கும் போக முடியுமா? ஒரு முறை போன கட்டத்துக்கு இரண்டாம் முறை போகக் கூடாது. முப்பத்து இரண்டு நகர்த்தல்களில், அரைப் பலகையின் எல்லாக் கட்டங்களையும் தொட்டுவிட்டு வரவேண்டும்.”
கூடியிருந்தவர்கள் முனைப்பாக முனைந்தவர்கள். ஒவ்வொருவரும் இப்படிப் போ, அப்படிப் போ, இது சரியில்லை, வந்த கட்டத்தைத் தொட்டு விடும் என்றெல்லாம் கூச்சல் இட்டுக் கொண்டு முயன்றார்கள். ஒருவன் காய்ந்த பனை ஓலையைக் கிழித்துக் கொண்டு வந்து, குதிரை தொட்ட கட்டங்களில் வைத்து அடையாளம் செய்தான். மிகவும் மெனக்கெட்டு முயன்று, தோற்றுப் போனவர்கள், “எங்களால் முடியவில்லை. விடை நீங்களே சொல்லுங்கள் “ என்று கேட்க, விநயன் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான்.
“இந்த
ஸ்லோகத்தில், நான்கடிகள், அடிக்கு எட்டு எழுத்துக்கள். ஒவ்வொரு எழுத்தையும்,
சதுரங்கத்தின் ஒவ்வொரு கட்டத்தின் வைத்தால் இப்படி இருக்கும்” என்று படம் வரைந்து
காண்பித்தான்.
श |
झ |
न्ना |
ग |
भ |
ट्टा |
य |
|
ते |
ध |
खे |
व |
ञ |
रा |
घ |
बे |
षा |
जा |
था |
ढे |
प |
च |
म्मे |
ठे |
दा |
णा |
सा |
छ |
ल |
डो |
फ |
ङ |
“ஸம்ஸ்க்ருதத்தில்,
வரும் வர்ண எழுத்துக்களின் வரிசைக் கிரமமாக, இந்தக் கட்டங்களில் எங்கெங்கு
வருகிறதோ, அங்கெல்லாம் குதிரையை நகர்த்துங்கள்.
‘கே’வுக்குப் பிறகு ‘கே²’,
பிறகு, ‘க³’, பிறகு ‘க⁴’,
பிறகு ‘ங’ இதைப் போல. இப்படி நகர்த்திக் கொண்டே வந்தால், ‘ஸா’ வில் வந்து
முடியும்.
கே ஶ ஜ² ந்நா க³ ப⁴ ட்டா ய
தே த⁴ கே² வ ஞ ரா க⁴ பே³
ஷா ஜா தா²டே⁴ ப ச ம்மே டே²
தா³ ணா ஸா ச² ல டோ³ ப² ங ||
இதை மனப்பாடம் செய்து கொண்டால் போதும்.”
எல்லோரும் “கே ஶ ஜ² ந்நா க³ ப⁴ ட்டா ய, தே த⁴ கே² வ ஞ ரா க⁴ பே³” என்றும் ‘தானதன்னா தனன்னான, தானனான தனானனா’ என்றும் சிறுபிள்ளைகள் போலச் சொல்லிப் பார்த்துக்கொண்டே விநயனிடம், “வாரண சாத்திரம் அறிந்த எங்களை, வாஜி வழிக்குத் திருப்பி விட்டுவிட்டீர்களே” என்று கூறிச் சிரித்தார்கள்.
“இந்த ஸ்லோகத்தின் பொருள் என்ன?” – என்று ஒரு வணிகர் கேட்டார்.
“ஒரு பொருளும் கிடையாது. ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு மனன வாய்பாடு. அவ்வளவுதான். சொல்வதற்கு எளிதாகவும், யாப்புப் படி வருவதற்காகவும் நெடிலையும், குறிலையும் உயிரெழுத்துக்களை வைத்து அமைத்து இருக்கிறார்கள்”
ஓ! சுவாரஸ்யமான பாடல். இது மஹாவீராசார்யருடையதா?” என்று கேட்டார் குக்கேஸ்வரர்.
“அன்று அன்று. அவரைப் பார்க்க வந்த ஒருவர் சொன்னது.”
“நீங்கள் சொன்ன புதிரைத் தமிழில் பொருளோடு எழுத முடியுமா என்று பார்க்கிறேன்” என்றார். சொன்னது போலவே, அடுத்த நாள், ஒரு பாடலை எழுதிக் கொண்டு வந்து விட்டார்.
“விநயரே! இந்தப்
பாடலைப் பாருங்கள்:
யானலமு வாதமிறு
தாங்கவரு மாலவா!
தாமதமா வயமேறி
வாககன மயவீரா
இது விடைப்பாடல். பொருள் உள்ள பாடல். பொருளைப் பிறகு சொல்கிறேன். தமிழ் யாப்பில் நான்கு சீர் கொண்ட குறள் வெண் செந்துறை என்பார்கள். நாம், எளிமைக்காக, இதை நான்கடிப் பாடலாக வைத்துக் கொள்வோம். அடிக்கு எட்டெழுத்து. இந்தப் பாடலில் உள்ள எழுத்துக்களையே மாற்றி அமைத்து, இன்னொரு பாடல் செய்வோம்”
“அதாவது, இருக்கும் எந்த எழுத்தையும் விலக்காமல், எந்த எழுத்தையும் புதிதாகக் கொண்டு வராமல்?”
“ஆம். அதே
முப்பத்திரண்டு எழுத்துக்களை
வைத்து. இதைப் போல
யாயதா மால றிகக
வாத னமங்கமுமே
வீறுதா மாவ தவாவ
மலரா மினருயவா
இதுவும் குறள் வெண் செந்துறை. இதற்கும் பொருள் உண்டு. இதைக் கோசப் பாடல் என்போம். கோசம் என்றால் பொருளைப் பொதிந்து வைக்கும் இடம்.”
“அடடாடா! பாடலுக்குள் பொதிந்து கிடக்கும் இன்னொரு பாடல். இரண்டுக்கும் வேறு வேறு பொருள்! அற்புதம் ஐயா!”
“இப்போது, விடைப்பாடலை எடுத்துக்கொண்டு, அதனுடைய முதலெழுத்தில் துவங்கி, ஒவ்வொரு எழுத்தையும், கோசப் பாடலில் தேடுவோம். கோசப் பாடலின் எத்தனையாவது எழுத்தாக அது வருகிறது என்று பார்த்து, அத்தனையாவது கட்டத்துக்குக் குதிரையை நகர்த்தலாம்.
“விடைப்பாடலின் முதல் எழுத்து யா. கோசப்பாடலின் முதலெழுத்தாக இருக்கிறது. குதிரை முதல் கட்டம். விடைப்பாடலின் இரண்டாம் எழுத்து 'ன'. இது கோசப்பாடலின், இரண்டாம் அடி, மூன்றாம் எழுத்து. குதிரையை இரண்டாம் வரிசையில், மூன்றாம் கட்டத்துக்கு நகர்த்துங்கள்.
“மூன்றாம் எழுத்து 'ல'. இது கோசப்பாடலின் முதலடி, ஐந்தாம் எழுத்து. குதிரை முதல் வரிசை, ஐந்தாம் கட்டத்துக்குப் போகும். நான்காம் எழுத்து 'மு'. இது கோசப்பாடலின் இரண்டாம் அடி, ஏழாம் எழுத்து. குதிரையை இரண்டாம் வரிசை, ஏழாம் கட்டத்துக்கு நகர்த்துங்கள்.
“ஐந்தாம் எழுத்து 'வா'. இது கோசப்பாடலில் மூன்று இடத்தில் வருகிறது. இரண்டாம் அடியின் முதலில். ஆனால் அங்கு குதிரை போகாது. அடுத்து மூன்றாம் அடியில் ஏழாம் எழுத்து. அங்கும் குதிரை போகாது. அடுத்ததாக, ஈற்றடியில், எட்டாம் எழுத்து. அங்குக் குதிரை போகும். அங்கு நகர்த்துங்கள்.
“இப்படி, நகர்த்திக் கொண்டே போனால், முப்பத்து இரண்டு கட்டங்களுக்கும் போய் விடலாம். சரி பார்ப்பதற்காக, இறுதி இரு கட்டங்களுக்குச் செல்வதை விளக்குகிறேன்.
“விடைப்பாடலின் முப்பத்து ஒன்றாம் எழுத்து 'வீ'. இது கோசப்பாடலின் மூன்றாம் அடி, முதல் எழுத்து. இங்கு குதிரை தன்னுடைய 31 வது நகர்த்தலில் வந்து சேர்ந்திருக்கும். விடைப்பாடலில் எஞ்சி இருக்கும் எழுத்து 'ரா'. இது, கோசப்பாடலின் ஈற்றடி, மூன்றாம் எழுத்து. இங்கே வந்து குதிரை முற்றுப்பெறும்.”
“அகோ! அகோ! அற்புதம்” கரக்கம்பம் செய்தான் விநயாதி சர்மன்.
“அசத்தி விட்டீர்கள் ஐயா. இப்படியே போனால், முழுச் சதுரங்கப் பலகையையும் சுற்றி வந்து விடலாம். ஸம்ஸ்க்ருதம் போலவே”
“ஆம். அதையும் சரி பாருங்களேன்” என்று குக்கேஸ்வரர் தொடர்ந்தார். “இப்போது குதிரை நான்காம் வரிசை, மூன்றாம் கட்டத்தில்தானே இருக்கிறது. இங்கிருந்து, ஐந்தாம் வரிசை, முதல் கட்டத்துக்குப் போய் விடலாம்.” என்று நகர்த்திக் காண்பித்தார். “இந்தக் கட்டம், கீழ் அரைச் சதுரங்கப் பலகையின் முதல் கட்டம் அல்லவா? இங்கிருந்து, மேலே சொன்ன படியே சென்றால், கீழ் முப்பத்திரண்டு கட்டங்களுக்கும் சென்று விடலாம்.”
“அபாரம்! அபாரம்! ஸம்ஸ்க்ருதத்தைப் போல வளங்கள் நிறைந்த மொழி தமிழ் என்பதை நிரூபிக்கிறீர். நீறிய என் அறிவுக்கனலி உங்களின் கேண்மையால் ஞெலியப்போகிறது. நன்றியுடையேன்” என்று கரம் கூப்பினான்.
“நான் சொல்லவேண்டியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள்” என்று சொல்லிச் சிரித்தார். “இன்னொரு விஷயம். அந்த கஜச் சாத்துவர்கள் ஆங்கிரேயத்தில் இருந்து வருகிறோம் என்றார்களே, அந்த எண்பெருங்காடுகளின் பெயர்களையும் நினைவுபடுத்திப் பார்த்தேன். ஐந்துதான் நினைவுக்கு வந்தது. பிராச்சியம், வேதிகாரூஷகம், காலிங்ககம், தாஷார்ணகம், உமக்கு எட்டும் தெரியுமா?”
“அபராந்தம், பாஞ்சநதம், ஸௌராஷ்ட்ரம்” என்றான் விநயன்.
“ஆ! நடக்கும் நிகண்டு நீர்!” என்று அவர் விடைபெற்றுப் போனார். இதையெல்லாம் அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த தேவநாதய்யா, “ஸ்வாமிந்! நீர் எல்லாம் மனிதப் பிறவியே அல்லீர்! எப்படி இந்த இட்டிய சரீரத்தில் இவ்வளவு விஷயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறீர்!” என்று வியந்தார்.
“இதோ, இனிமேல் நீங்களும் நினைவு வைத்துக்கொண்டு விடுவீர்கள்” சிரித்தான் விநயன்.
“பரிஹாஸம் செய்யாதீர்! தாஷார்ணகம் மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ரீபர்வதத்துக்கருகில் உள்ள காடுதானே? ஒருமுறை எனக்கு அந்த எட்டையும் சொல்லிவிடுங்கள்.” கைகூப்பினார்.
“அவசியம். ஸ்ரீபர்வதம் மட்டுமன்று, சேரநாட்டுத் தேவகிரி மற்றும் மலயத்தைச் சுற்றியுள்ள காடுகளையும் சேர்த்துத்தான் தாஷார்ணகம். அங்குவரை இதனுடைய தொடர்ச்சி செல்கிறது. கங்கை ஸாகரத்தில் கலக்கிறதல்லவா, அங்கிருந்து தொடங்கி, இமயம் மற்றும் பிரயாகை ஊடே மேற்கு நோக்கி வந்தால் லோஹித ஸாகரம் வரையில் பழம்பெருங்காடு. இது பிராச்சியம். பிரயாகைக்குத் தெற்கே சித்திரக்கூடத்தில் இருந்து தொடங்கி, கிழக்குமுகமாக, விந்தியாசலம் வழியாகக் கீழிறங்கிக் கடல் வரை பரவி, கேடகம், கலிங்கம் உள்பட, நமக்கு வடக்கே இருக்கும் அந்தப் பிறைபோன்ற பெரிய காடுதான் காலிங்ககம். தட்சிணக் கோசலத்தில், ரேவா உதிக்கும் அமரகண்டக பீடத்தில் இருந்து மேற்கே திரிபுரி வரை உள்ள காடு, வேதிகாரூஷகம். அதற்குக் கிழக்கில் கௌடபங்காளத்திலும், இன்னும் கிழக்கில் ஸ்ரீக்ஷேத்திரத்திலும், வியாபித்திருப்பதுதான் இந்த வணிகர்களுடைய ஆங்கிரேயவனம். மான்யகேடத்துக்கு மேற்கே ஸஹ்ய மலையிலிருந்து தொடங்கிப் பிருகுகச்சா வரை இருப்பது அபராந்தம். துவாரவதியில் இருந்து அவந்திவரை விரவி இருப்பது சௌராஷ்டிரவனம். சித்திரக்கூடத்துக்கு மேற்கே காலாஞ்சரத்தில் இருந்து குருக்ஷேத்திரம் மற்றும் அன்ஹிலாவாடியையும் மருநிலத்தையும் உள்ளடக்கிக்கொண்டு, ஸிந்து ஸாகரம் வரை பரவியிருப்பது பாஞ்சநதம். விளங்கியதா?”
தேவநாதய்யா தலையாட்டுவதற்குள் “அபாரம்! துல்லியமாக விளக்கினீர்கள்” என்று சொல்லியபடியே வந்தார், விஷ்வாதித்திய தேவர் என்ற வணிகர். “இவையெல்லாமும் இபங்கள் அலைகின்ற ஆரண்யங்களும் கூட. காலிங்ககத்திலும், வேதிகாரூஷகத்திலும், தாஷார்ணகத்திலும் உத்தம வாரணங்கள் கிடைக்கின்றன. பிராச்சியத்தில் நாங்கள் இப்போதெல்லாம் அதிகம் பிடிப்பதில்லை. எங்கள் பகுதியில் ஸ்ரீக்ஷேத்திரத்தில் மத்தியம மதங்கங்கள் கிடைக்கின்றன. இந்தமுறை பத்து மிருகங்கள் அங்கிருந்துதான் அரசருக்காகக் கொண்டுவந்தோம். வேங்கிப்பற்று அத்திக்கூடத்தில்தான் இருக்கின்றன” என்றார்.
“வேங்கிப்பற்றா? அங்கேதானே உம்மை வரும் அஷ்டமி, நவமி விடுமுறையின் போது வல்லபஸ்வாமி அழைத்துப் போவதாக இருக்கிறார்?” என்று வினவினார் தேவநாதய்யா.
“ஆமாம்” என்றான் விநயன்.
“ஓ! வேங்கிப்பற்றுக்குச் செல்கிறீர்களா? இரமணீயமான இடம். ஆனால், அங்கே கட்டுப்பாடுகள் அதிகமாயிற்றே? யாரந்த வல்லப ஸ்வாமி?”
“நையோகிக வல்லப பிரதாபவர்த்தன ஸ்வாமி. அவருக்கு இவர் மிகவும் ஆப்தர்” பெருமையோடு சொன்னார் தேவநாதய்யா.
“பிரதாபவர்த்தனருக்குத் தேவரீர் ஆப்தரா? பெரிய இடம்” கை கூப்பினார் விஷ்வாதித்திய தேவர். “அரசர், இளவரசர், மஹாராணி, ராஜமாதா, சேனாபதி எல்லோரிடமும் செல்வாக்கு உடையவர். அவர் ஒன்று சொல்லிவிட்டால் அது நடக்கும். அவருக்கு ஆப்தராக இருந்தும் ஏன் இப்படிச் சத்திரத்தில் தங்கி இருக்கிறீர்கள்?”
“ஏன்? இங்கு என்ன குறை?” விநயன் குரலொலி, கடுமையைத் தெரித்தது.
“அது சரிதானே, இங்கு என்ன குறை? வெறுமெனே கேட்டேன்” தான் எல்லை மீறிப் பேசி விட்டோம் என்பதை அவர் புரிந்து கொண்டார். “உங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி” கையைக் கூப்பிவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.
“நன்றாக வைத்தீர் குட்டு” பெருமிதம் தேவநாதய்யாவின்
குரலில். “யானையை விற்பவர் அல்லவா? இப்படித்தான் போட்டு வாங்கி ஏதாவது
குழப்பிவிட்டு யானையைத் தலையில் கட்டி விற்று விடுவார் போலிருக்கிறது”.
No comments:
Post a Comment