Friday, 20 September 2024

11-01. இலட்சியமும் இலட்சணமும்

 “வா, விநயா, வந்து வெகு நேரமாயிற்றா?”

“இல்லை ஐயா, இப்போதுதான் வந்தோம்”

“ஓ! தாமதித்துப் புறப்பட்டீர்களோ?”

என்ன சொல்வது என்று விநயன் தயங்க, சாரதி குறுக்கிட்டான். “வெள்ளெனப் போகையுற்றோம் ஐயா, வழியில் பைங்குமிழ்ப் பாந்தலில் நவகண்டம். பட்டர் பார்க்கவேண்டுமென்றார்.”

“ஓ! இன்றுதானா அது? ஸர்வம் பரமேஸ்வரார்ப்பணம்” கையைக் கூப்பி ஒரு கணம் தொழுதார். சரி, மாத்தியானிகம் ஆயிற்றா? இதோ ஒரு நொடியில் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன். ஆயப்பா, இலை போடச்சொல்.” என்று உத்தரவு கொடுத்துவிட்டு விடுவிடென்று புழைக்கடைப் பக்கம் சென்றார். ஆயப்பா, “வாருங்கள் ஐயா, வஜ்ரஹஸ்தா, பின்கட்டுக்குப் போ, இடம் தெரியுமில்லையா? இலை போட்டு வைத்திருக்கிறது உனக்கு” என்று விநயனைப் பாகசாலைக்கே அழைத்துச் சென்றார்.

மௌனமாக உண்டுவிட்டுக் கரமலம்பும்போது, பிரதாபர் சொன்னார், “சிரமபரிகாரம் செய்துகொள்ள வேண்டுமா? இல்லை உடனே புறப்படலாமா? இங்கே ஓர் இலவந்திகை சிதிலமாகக் கிடக்கிறது. அதை நவகருமம் செய்யமுடியுமா என்று பார்க்கவேண்டும். பேசிக்கொண்டே போவோம்”

“புறப்படலாம் ஐயா. இளைப்பாற வேண்டிய அவசியம் இல்லை”

“நல்லது. ஆயப்பா! உருடை சித்தமா? வேறு புரவி பூட்டச்சொல். இப்போது வந்த புரவியை அவிழ்த்துக் கவணைக்கு அனுப்பிவிடு.”

“வா, விநயா, வண்டியில் அமர்ந்தபடியே பேசலாம்.” என்று ஆயப்பன் கொண்டுவந்து நிறுத்திய உருடையில் ஏறினார்.

“வேங்கிச் சாளுக்கியர்கள், பிரதிஹாரர்கள், கங்கர்கள் மூவரைப் பற்றியும் கேட்டாய். இன்று ஒரு விசித்திரமான சத்துருவைப் பற்றிச் சொல்கிறேன். மற்றை மூவரும் இரட்டபாடிக்கே எதிரிகள். பெரிய கோவிந்தரின் அணியில் சேர்ந்து, அவருக்காகத் துருவரை எதிர்த்துத் தம் நிலைமையை உயர்த்திக்கொள்ள முனைந்தவர்கள். நான்காம் எதிரியோ, துருவரை இரட்டபாடிக்கு எதிரியாக நினைத்து, அதனால் அவரை எதிர்க்கக் கோவிந்தருக்குத் துணை நிற்க முடிவு செய்தவர். இவருடையது ஒரு பெரிய வரலாறு. தந்திதுர்க்கர் இரட்டபாடியை ஸ்தாபிப்பதற்கு முன்னம் அவருடைய எதிரணியில் இருந்த, தொண்டையர்கோன் பல்லவமல்லர்தான் இவர். தந்திதுர்க்கருடைய மகள் ரேவாவை மணந்திருந்தவர். தங்கள் இருவருக்கும் பிறந்த புதல்வருக்குத் தன் மாமனார் தந்திதுர்க்கருடைய பெயரையே வைத்தவர். அப்படியிருந்தும் துருவருக்குச் சத்துருவானார்.”

“பொதுவாகத் தந்தை வழிப் பாட்டானாரின் பெயரைத்தான் நாம் தாங்குவோம். இவருடைய புதல்வருக்குத் தாய்வழிப் பாட்டானாரின் பெயரை வைத்திருக்கிறார்! அப்படியிருந்தும், மாமடியின் தாயாதியோடு பகைமையா? விசித்திரமான வைரிதான்”

“சகோதரர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டால், உறவினர்களும் இரு கக்ஷியாகப் பிரிந்து போகத்தானே வேண்டும்? குருக்ஷேத்ரத்தில், அதுதானே அர்ஜுனனுக்கு, எப்படிப் போர் புரிவது என்ற தயக்கத்தைத் தோற்றுவித்தது? இங்கே, பிரிவினைக்கான காரணத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, நந்திவர்மரின் அரசியல் சூழ்நிலையை அறிந்து கொள்ளவேண்டும். இந்த நிகழ்வுகள் எல்லாம், நான் காண நிகழ்ந்தவை அல்ல. மற்றவர் சொல்லக் கேட்டு நான் தெரிந்து கொண்டவை. நான் இதுவரை காஞ்சிக்குச் சென்றதில்லை. செல்ல வேண்டும் என்று நெடுநாளைய ஆசை. பெண்டிரின் இடைப்பிரதேசத்தை மறைக்கும் ஆடையின் பெயர் கொண்டதாலோ என்னவோ, நிலமகளின் கணவராகத் தம்மை எண்ணிக்கொள்ளும் எல்லா அரசர்களுக்கும் காஞ்சி நகரத்தின் மீது ஒரு கவர்ச்சி. இராட்டிரக்கூடர்களும், சாளுக்கியர்களும் இதைக் கைப்பற்றியதும் அதைப் பெருமையாகப் பொறித்துக் கொள்கிறார்கள். இது தந்தி துர்க்கராஜாவைக் குறிக்கும் ஒரு ஸ்லோகம். இதன் ஸ்ருங்காரத்தைப் பார்.

“போரில் நிகரற்ற இந்த அரசனுடைய கை - அதாவது வீரம், முதலில், பூமியின் மிக அழகான மருங்கை ஆக்கிரமித்துக் கொண்டது, பிறகு, தன் இச்சைப்படி, மென்மையாக மத்தியதேசத்தைக் கைப்பற்றியது. அங்கு நிலவியபின், கீழ்ப் பகுதியில் காஞ்சிப் பிரதேசத்தின் மீது தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இது எப்படி என்றால், தன்னைக் கவர்ந்த பெண்ணின் இடுப்பில் பட்ட காதலனின் கை, அவளுடைய இடுப்புப் பகுதிக்குத் தன் இஷ்டத்திற்கு ஊர்ந்து, அதை மெதுவாக அழுத்தி ஆக்கிரமித்தபின், மீண்டும் கீழே நகர்ந்து, இடைக் கச்சை, அதாவது காஞ்சி, அணியப்பட்டிருக்கும் பிரதேசத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது போல.”

தான் சொன்னதைத் தானே ரசித்துக்கொண்டு மெல்லச் சிரித்தார் பிரதாப வர்த்தனர். விநயனைக் குறும்புப் பார்வை பார்த்து, “பிரம்மச்சாரி உனக்கு ஏதாவது புரிகிறதா?” என்று கேட்டார்.

விநயாதிசர்மன் சிரித்தான். “நன்றாகப் புரிகிறது. ஆனால், நான் பிரம்மச்சாரி என்று எப்படி முடிவு கட்டினீர்கள்?”

“அடடடே! அப்படிப் போகிறதா கதை. சுவாரசியம் தட்டுகிறதே, உன் காஞ்சிப் பிரதேசக்கதை! இதைப் பின்னால் கேட்டுக் கொள்கிறேன். முதலில் துண்டகப் பிரதேசக் காஞ்சிக் கதையைப் பார்ப்போம்” என்று தொடர்ந்தார்.

“எப்படி இராட்டிரக்கூடத்தோடு பல்லவமும், பல்லவத்தோடு சாளுக்கியமும், சாளுக்கியத்தோடு கங்கமும், பின்னிப் பிணைந்திருக்கிறதோ, அப்படிப் பாண்டியமும் கூட இவை மூன்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. சோழம் பெரிதாகத் தலையெடுக்காத காலம் இது. நூறு நூற்றைம்பது வருடங்களாக ஆகியும், இன்றும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்து வருகிறது. தக்கணத்தின் தென்பகுதியில் பல்லவமும், பாண்டியமும்தான் பரஸ்பர உரசல்களுடன் இருந்து வருகின்றன. இப்போது ஸ்ரீகண்டன் காஞ்சியைக் கைப்பற்றியிருந்தாலும், அது பாண்டியரின் உதவியோடுதானே நடந்திருக்கிறது? மற்றப் பிராந்தியங்களைப் போல அல்லாமல், திரமிளத்திலிருந்து பிரத்தியேகச் செய்திகள், என் செவிகளுக்கு அதிகமாக எட்டியதில்லை. ஆதலால், அதனுடைய வரலாறு, எனக்கு அதிகம் அறியக் கிட்டியதில்லை. இரட்டபாடியின் அரண்மனையோடு சம்பந்தமிருந்ததால், எனக்குக் கிடைத்தவற்றை வைத்து ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். இந்தக் கதையெல்லாம் நான் கச்சிப்பேட்டின் வணிகர்கள் மூலம் தெரிந்து கொண்டது. கொஞ்சம் பெரிய வரலாறு. நிதானமாகச் சொல்ல வேண்டும். பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கங்க, சோழப் பிரம்மாண்ட அடுகலன் இது!

“துருவராஜா காஞ்சிக்குச் சென்று திரும்பியதும் அவரோடேயே பல வணிகச் சாத்துக்களும் வந்தன. காஞ்சிக்கும் மயூரகண்டிக்கும் இடையே உறவு சுமுகமானதும், இரண்டு அரசர்களும் வணிகத்தைப் பலப்படுத்த விரும்பியதால், பல வணிக முறிகள் எழுதப்பட்டன. மயூரகண்டி, அந்தச் சமயத்தில் காஞ்சி வணிகர்களால் நிரம்பி வழிந்தது. வந்தவர்களுக்குத் தங்கக் குடில்களும் வளாகங்களும், அங்காடிகளும் ஏற்படுத்தச் சொல்லி அரசர் ஆணையிட்டிருந்தார். எனக்கும் சில பணிகள் தரப்பட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்காக, அடிக்கடி வணிகர்களைச் சந்தித்ததுண்டு. அப்போது தெரிந்துகொண்ட விஷயங்கள்தாம் இவை. அவர்கள் இங்கேயும் வருவதுண்டு. அடுத்தமுறை அவர்கள் வரும்போது, அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

“இந்தக் கதையெல்லாம் நடந்து ஒரு நூறு வருடங்கள் ஆகி இருக்குமா?”

“இருக்கும். தந்திதுர்க்க மஹாராஜாவுக்கும், பல்லவமல்லருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். பல்லவமல்லர் இரண்டு மூன்று வயது மூத்தவராக இருக்கலாம். தன்னுடைய பன்னிரண்டு வயதிலேயே அரியணையில் அமர்த்தப்பட்டவர். இவருக்கு முன் காஞ்சியை ஆண்டு வந்த பரமேஸ்வரருடைய வம்சத்தில் வந்தவர் அல்லர். இவர் அரியணை ஏறியது, காஞ்சி மீது ஒரு கண் வைத்திருந்த பாண்டிய மன்னருக்குப் பெரிய உறுத்தலைத் தந்தது. அவரோ பரமேஸ்வரவர்மனுடைய புதல்வன் சித்திரமாயனை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த முயன்று கொண்டிருந்தார்.”

“ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது! பரமேஸ்வரவர்மருக்குப் பிறகு, அவருடைய புதல்வர் வருவதுதானே இயல்பு? அப்படி இயல்பாக நடக்க வேண்டியதையே பாண்டியமன்னர் நிறுவ முயன்றார் என்றால், அப்போது, பல்லவம் தானாக ஓர் அரசரை ஏற்படுத்திக்கொள்ளும் வலிமை இல்லாமல் இருந்ததா?”

“ஆமாம். பாண்டிய மன்னரின் முயற்சிக்குச் சாளுக்கிய மஹாராஜா விக்கிரமாதித்தியரும் துணை போனார்.”

“அவருக்குப் பல்லவர்களைத் தவிர, யார் காஞ்சியைக் கட்டுப்படுத்தினாலும் அது வரவேற்கத்தக்கதுதான், இல்லையா?”

“ஆமாம் ஆமாம். காஞ்சிக்கும் வாதாபிக்கும் இடையே இருப்பது இன்று நேற்றுப் பகையா என்ன? பரம்பரைப் பகை. பல்லவர்களைப் பிராக்கிருத எதிரி என்றுதானே சாளுக்கிய அரசர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்!”

“துண்டீரபுரத்தின் தொன்மையான இயற்கைத் துவேடமோ? பூவிக்கிரமர் காலத்திலிருந்தே இந்தப் பரஸ்பரச் சண்டைகள் நடப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். பல்லவமல்லர் அரியணை ஏறிய போது சிறுபிராயத்தர் என்கிறீர்கள். அதுவும் வம்சாவழியில் வாராதவர். அரியணை உரிமை இருக்கக் கூடிய இளவரசருடைய இடத்தில், இவர் வருகிறார் என்றால், பின்னால் ஏதோ ஒரு சக்தி, சித்திரமாயருக்கு எதிராக இயங்கியிருக்க வேண்டும், இல்லையா?”

“ஆமாம். பரமேஸ்வரரின் திடீர் மரணம், காஞ்சியைப் பெரும் அரசியல் குழப்பத்தில் தள்ளி விட்டுவிட்டது. விக்கிரமாதித்ய சத்யாஸ்ரயரும், நந்திவர்மரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் அரியணை ஏறினார்கள். தந்தையார் விஜயாதித்திய மஹாராஜா அரசாண்ட போது, தான் பட்டத்து இளவரசனாக இருந்த போதிலிருந்தே, விக்கிரமாதித்தியர் காஞ்சியைத் தாக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ராஜசிம்மவர்மேஸ்வரக் கிருஹம் என்ற கோவிலைப் பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா?”

“ஆமாம். காஞ்சியில் இருக்கும் கைலாசநாதப் பெருமானின் கோவில். அதைப் பார்த்துத்தான் ஏலபுரியில் தந்திதுர்க்கராஜா கட்டினார் என்றீர்கள். வாதாபியில் விருபாக்ஷர் கோவிலும் அதன் தூண்டுதலால் விளைந்தது என்பார்கள்.”

“ஆமாம். பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்.”

“நீங்கள் இதுவரை ஏலபுரிக்குச் சென்றதில்லையா?”

“இல்லை. வாய்ப்புக் கிட்டவில்லை. காஞ்சிக்கும் சென்றதில்லை. காஞ்சிக் கோவிலைக் கட்டியது பல்லவ அரசர் ராஜசிம்ம நரசிம்மவர்மப் பல்லவர். அவருக்கு முன்னர் அரசாண்ட பரமேஸ்வரவர்மர் காலத்திலும், வழக்கம்போல வாதாபிக்கும் காஞ்சிக்கும் உரசல்கள் நடந்தன என்று சொல்லியிருக்கிறேன். ஆனாலும், நரசிம்மவர்மர் காலத்தில், அமைதி நிலவியது. சாளுக்கியம் அடக்கியே வாசித்துக் கொண்டிருந்தது.”

“அப்போது சாளுக்கிய அரசராக யார் இருந்தார்?”

“விஜயாதித்தியர்தான். ஆனால், படைகளையெல்லாம் நிர்வகித்து வந்தவர் பட்டத்து இளவரசர் விக்கிரமாதித்தியர். இருந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்.”

“அடடே! நரசிம்மவர்மரின் படைபலத்துக்கும் வீரத்துக்கும் அஞ்சியா?”

“நரசிம்மவர்மர் வீரர்தான். ஆனால், விக்கிரமாதித்தியர் அஞ்சியது அவரிடமன்று. பாண்டியராஜா இரணதீரருக்கு அஞ்சி”

“ஓ! வரலாற்றில் திருப்பங்களுக்குக் குறைவே இல்லை போலிருக்கிறது”

“நம்முடைய வாழ்வுதானே வரலாறு! இரணதீரப் பாண்டியர் ஆண்ட மதுரையின் பின்புலத்தைக் கொஞ்சம் சொல்கிறேன். அவருடைய தந்தை பெரிய சிவபக்தர். முதலில் சமண சமயத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவருடைய பெருத்த ஆதரவில், இராஜ்ஜியத்தில் சமணமே கோலோச்சி வந்தது. அவருடைய மனைவியார் பெருத்த சிவபக்தை. அவர் ஒரு பாலத்துறவியை நாட்டுக்கு அழைத்துவந்து, அவரால் கணவரை மீண்டும் சைவ சமயத்துக்கு மாற்றினார் என்கிறார்கள்.”

“பாலத்துறவியா? பாடல்கள் எழுதுபவரா?”

“ஆமாம். லோகமாதாவால் பாலமுது ஊட்டப் பெற்றவர் என்பார்கள்.”

“ஞான சம்பந்தர்!” என்று அவர் பெயரைச் சொல்லிவிட்டு, “பரமேஸ்வரா!” என்று கைகூப்பினான் விநயன். என்னுடைய தாயார் அவருடைய பல பாடல்களைப் பாடுவார். எனக்கும் சில பாடல்களைத் தெரியும். நான் அவருடைய பாடலைப் பாடியபோதுதான், உங்களை முதன்முதலில் சந்தித்தேன்.”

“நினைவுக்கு வருகிறது. அந்த தன்னாசி ராகப் பாடல்?”

“ஆமாம். அவரைக் காழிப்பிள்ளை என்றுதான் அன்னை கூறுவார். நிறைய சந்தத்தில் விதவிதமாகப் பாடல் எழுதியிருக்கிறார். விலோமகவிகளும் எழுதியிருக்கிறார்.”

“விலோமம் என்றால், திருப்பிச் சொன்னாலும் அதே சொல்லாக வருமே, அதுபோலா?”

“ஆமாம், விகடகவி, மாறுமா என்பதைப் போல”

“சொல்லென்றால் திருப்பிச் சொல்லலாம். ஒரு பாட்டையே திருப்பிச் சொல்லும்படியா? அடடே! எங்கே ஒன்று சொல்லு பார்க்கலாம்”

 

தேனிரி வாடைய தாளடுவீ

மேனம தாருக லாவுறவே

வேறவு லாகரு தாமனமே

வீடுள தாயடை வாரினிதே”

 

“அப்பா! இந்த அளவுக்கு எனக்குத் தமிழ் பேச நாவெழாது. நீயே திருப்பிச் சொல்லிக் காட்டு”

“தேனிரி வாடைய தாளடுவீ – முதலடி, எப்படித் திரும்பி - வீடுள தாயடை வாரினிதே – என்று மாறி ஈற்றடியில் வருகிறது பாருங்கள்”

“அடேயப்பா! அற்புதம். இது அந்தப் பாலத் துறவி எழுதியதா?”

“இல்லை இல்லை. விலோம கவிதைக்கு ஓர் உதாரணத்துக்காக, நான் எழுதிய பாடலைச் சொன்னேன்”

“என்ன!!?? நீ எழுதியதா!!” வாயைப் பிளந்தார் பிரதாபவர்த்தனர்.

“மன்னிக்க வேண்டும். லோகமாதாவின் அருளைப் பெற்ற அந்த மகானைப் பற்றிப் பேசும்போது, என்னுடைய அற்பமான பாடலை நுழைத்தது பெரும்பிழை.”

“அடடடா! ஒரு பிழையும் இல்லையப்பா. ஓர் உதாரணத்துக்குத் தானே எடுத்துக் காட்டினாய்? அவர் பாடலைச் சொல்லியிருந்தாலும் எனக்கென்ன புரிந்திருக்கப் போகிறது? இதேபோல வியந்திருப்பேன். தமிழில் நல்ல பாண்டித்தியம் இருக்கிறது உனக்கு. சந்தஸ் தமிழிலும் இருக்கிறது என்று உன்னால்தான் தெரிந்து கொண்டுவருகிறேன்”

“சந்தஸ் வேறு, சந்தம் வேறு, ஐயா. தமிழில் ஸம்ஸ்க்ருதத்தைப் போல சந்தஸ்ஸுக்கு இலக்கணம் கிடையாது. சந்தத்துக்கும் கிடையாதுதான்” சிரித்தான் விநயன். “சந்தத்துக்காவது எழுதிவிடலாம். சந்தஸ் என்ற ஒன்றே கிடையாது என்னும்போது, இலக்கணம் எப்படி எழுதுவது?

“ஸம்ஸ்க்ருத சந்தஸ் சாஸ்த்ரம், அக்ஷர சந்தஸ், மாத்திரை சந்தஸ் என்று இருபிரிவுகளைக் கட்டமைத்து, அவற்றை வரையறுத்துக் காட்டுவதைப் போலத் தமிழில் சந்தம் வரையறுக்கப்படுவதில்லை. காயத்ரி சந்தஸ், அனுஷ்டுப் சந்தஸ், த்ரிஷ்டுப் சந்தஸ் என்றெல்லாம் இருக்கின்றன அல்லவா? இவற்றையெல்லாம் போல வகைப்படுத்தி, அவற்றின் யாப்பிலக்கணங்களைக் கூறியிருப்பதைப் போலத் தமிழில் கிடையாது. தமிழ்ச்சந்தம் முற்றிலும் வேறு.”

“ஓ! இதுநாள் வரை, சந்தம் என்பது சந்தஸ் என்னும் ஸம்ஸ்க்ருதச்சொல் மருவியது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். யாப்பு என்று சொன்னாயே, அதுதான் தமிழில் சந்தத்துக்குச் சமமான தமிழ்ச் சொல்லோ?”

“இல்லை இல்லை. யாப்பு என்பது வேறு. அது வெறும் சொற்களின் கட்டமைப்பு மட்டுமே.”

“புரியவில்லையே”

“இப்போது ஸம்ஸ்க்ருதத்தில் கத்யம் இருக்கிறது அல்லவா, அதைப்போல தமிழிலும் வசனம் இருக்கிறது. வார்த்திகம் என்கிறார்கள். ஆனால், வார்த்திகத்துக்கு என்று தனியே இலக்கணம் கிடையாது. இலக்கணம் எல்லாம் செய்யுள் எழுதுவதற்குத்தான் இருக்கிறது. இலக்கணத்திலேயே குறிப்பிடாத வகையிலும் செய்யுள்கள் எழுதலாம் அல்லவா?”

“அது நடக்கத்தானே வேண்டும். ஒரு அடிப்படைக் கட்டமைப்பு மொழியில் உருவாகியிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு கவிகள் விளையாடுகிறார்கள். பிறகு அவர்களில் சிரேட்டமானவர்கள் எழுதும் வகைகள், பிற்காலத்தில் இலக்கணமாக ஆகிவிடுகின்றன. இசையும் நாட்டியமும் இப்படித்தானே இலக்கணத்தைப் பெற்று வருகின்றன? அன்று பரதமுனி சொன்னதற்கும் இப்போது பழக்கத்தில் இருக்கும் சரணங்களின் வேறுபாட்டிற்கும் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை, ஹர்ஷவல்லியும் அவள் குருவும் ஒருநாள் நடைமுறையாகச் செய்து எடுத்துக்காட்டி விளக்கினார்கள். இப்போது மாறியிருப்பவனவற்றையும் கையாண்டு பின்னால், யாராவது, புது இலக்கணம் எழுதுவார்களாக இருக்கும்.”

“அதேதான் இலக்கியத்திலும் நடந்து வருகிறது. உதாரணமாகச் சொல்லவேண்டுமானால்,

 

திருநாட்டான் தூங்காது தம்மருக்காய்ப் புக்குத்

தருமாட்டான் ஒப்பிலாது நின்றான் - கருமாட்டான்

கொள்ளுங்கால் விண்ணகரன் கைத்தலம் நாமுய்ந்து

கொள்ளுங்கால் காட்டுவது காண்.

 

“இது செய்யுள் வடிவில் இருக்கிறது. தமிழில் இதை வெண்பா யாப்பு என்பார்கள். இதையே, - தம்மருக்காய்ப் புக்குத் தருமாட்டான், திருநாட்டான், தூங்காது ஒப்பிலாது நின்றான். அந்த விண்ணகரன், கருமாட்டான் நம்மைக் கொள்ளுங்கால், நாமுய்ந்து கொள்ளுகின்ற காலைத் தன்னுடைய கைத்தலத்தில் காட்டுவதைக் காண்." என்று எழுதினோமேயானால் செய்யுள், வார்த்திகமாகி விடுகிறது. கல்வெட்டில், கவிகள் இப்படித்தானே வார்த்திகத்தையும், செய்யுளையும் சேர்த்துச் சேர்த்து எழுதிவருகிறார்கள்?”.

“அதுசரிதான். தொகுபொருளாக இல்லாமல் விபக்தி விகுதிகள், அதற்கென்ன பெயர் .. ம்ம் .. “ என்று யோசித்தார் பிரதாபர்.

வேற்றுமைகள்.

“வேற்றுமைகள். பெயர்ச்சொற்கள், எழுவாய்கள், வினைமுற்றுக்கள் போன்றவை எல்லாம் முழுவதுமாக வெளிப்படையாகக் குறிக்கப்பட்டுச் சற்று விளக்கமாக எழுதப்படுவது வசனம். வசனத்தின் எல்லா வாக்கியங்களிலும் ஒலிநயம் நிலைபெற்றிருக்க வேண்டாமே. ஸம்ஸ்க்ருதத்தில் அப்படித்தானே பார்க்கிறோம்”

“அதேதான் தமிழிலும். அடிகளால் செய்யுள்கள் யாக்கப்படுகின்றன வாக்கியங்களால் வசனம் யாக்கப்படுகிறது. இவையெல்லாம் யாப்பு. இதைச் சந்தம் என்று சொல்வதில்லை.”

“அப்படியென்றால் சந்தம் எது? ஓசையா?”

“ஆமாம். ஓசைதான் சந்தம். கவிகள் பலதரப் பட்ட ஓசைகளோடு செய்யுள்கள் யாத்திருக்கிறார்கள். இந்தக் காழிப்பிள்ளையையே எடுத்துக்கொள்ளுங்களேன். என் அன்னை, எண்பத்து ஒன்பது ஓசைகள் பாடியிருக்கிறார் என்பாள். அவரைவிட அதிகமான ஓசைகளில் இதுவரை யாரும் பாடவில்லையாம். இப்படிப்பட்ட ஓசைகளை எல்லாம் நாம் பட்டியலிட்டு, அதற்குப் பெயர் வைத்துவிட்டால் படிப்பவர்களுக்கு எளிதில் புரிந்துவிடும்.”

“ஸ்வரங்களில் கூட்டமைப்பை வகைப்படுத்தி இராகம் என்று சொல்கிறார்களே, அதைப்போலச் செய்துவிட வேண்டும் என்கிறாய்?”

“ஆமாம் ஐயா. இந்த ஓசையை உருவாக்க, வாய்பாடு என்று ஒன்று இருக்கிறது. சிலர் அதைக் குழிப்பு என்றும் கூறுகிறார்கள். அது நமக்குப் பாடலில் இருக்கும் ஓசையைப் புரிந்து கொள்ளத் துணைசெய்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், சில ஓசைகள் ஒன்று போல இருக்கும். ஒத்த சந்தங்கள் என்பார்கள். சில வெளிப்படையாகவே வித்தியாசமாகத் தெரியும். சில சமயங்களில், வாய்பாட்டையும் மீறி ஓசை தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்ளும். அதனால், சொல்லிச் சொல்லிப் பார்த்துப் பழக்கத்தால்தான் ஓசையைத் தெரிந்துகொள்ள இயலும்”

“எல்லாக் கலைகளும் அப்படித்தானே? இலக்கணத்தால் ஓர் அளவுக்குத்தான், கலையை உணர்ந்து ரசிக்க உதவி செய்ய முடியும். இலக்ஷ்யம் வேறு, இலக்ஷணம் வேறு அன்றோ? சில ஸ்வரங்களை, அவற்றின் பெயரால் இன்ன இன்ன ஸ்வரங்கள் என்று நாம் அறிந்தாலும், அவை ஸங்கீதமாக வெளிப்படும்போதுதான், அவை எப்படி இடைப்பட்ட ஸ்வர இடைவெளியின் பரிணாமமாகவோ, அடுத்த ஸ்வரத்தின் மேற்பூச்சாகவோ ஒலிக்கின்றன என்று நாம் உணரமுடியும். கேட்பவர்களை விட, இசைக் கருவியை வாசிப்பவனால் அவற்றின் தன்மையை எளிதில் உணர்ந்துவிட முடிக்கிறது. அன்று நீ நியாயாதிபதியின் விருந்தில் விக்ருத ஸ்வரம் ஒன்றைப் பாடினாயே. அது நான் கேட்டுப் பழக்கமில்லாத ஸ்வரம். எப்படி அந்த ஒலித்துணுக்கை நினைவு வைத்துக் கொள்கிறாய்? ஒலி என்பது சாக்ஷாத் பிரஹ்ம ஸ்வரூபம்தான்.”

“கடினம்தான். கேட்டுக் கேட்டுச் சிந்தையைப் பழக்கிக் கொண்டுதான் நினைவுக்கு வைத்துக்கொள்ளவேண்டும். காயகபட்ட ஸ்வாமி, ஓர் அசல வீணையையும் இரண்டு மூன்று சல வீணைகளையும் வைத்துக்கொண்டு அந்த ஒலித்துணுக்கை நிறுவுவார். பாடசாலைக்காக வீணைகள் ஆயத்தம் ஆகின்றன அல்லவா? அவை எல்லாம் வரட்டும். நான் அந்த ச்யுத பஞ்சமம் எப்படி ஏற்படுகிறது என்று செய்து காட்டுகிறேன்.”

“எப்படி அந்த ஒலித் துணுக்கு உருவாகுகிறது?”

“ஆச்சரியமான விஷயம்தான் அது. உங்களுக்கு ஷட்ஜக் கிராமம் மற்றும் மத்தியமக் கிராமம் ஸ்வரங்கள் பழக்கம் உண்டு அல்லவா? ஷட்ஜக் கிராமத்தில் மந்தர நிஷாதத்துக்கும், ஷட்ஜத்துக்கும் நான்கு ஸ்ருதி இடைவெளி இருக்கிறதுதானே?”

“ஆமாம். 

சதுஷ் சதுஷ் சதுஷ் சைவ ஷட்³ஜ மத்யம பஞ்சமா .

த்³வை த்³வை நிஷாத³ கா³ந்தாரௌ த்ரிஸ்த்ரீ ருஷப தைவதோ

 என்ற ஸ்லோகம் இருக்கிறதே”

“அதேதான். இப்போது ஓர் அசல வீணையில் ஷட்ஜக் கிராமத்தை நிறுவிவிட்டு, இன்னொரு வீணையை எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டாவது வீணையில் சுருதியை மாற்றுவோம். அதனால் இது சல வீணை. இதில், தந்தியை இழுத்துப் பிடித்து, ஒலியின் நாதத்தை உயர்த்திக் கொண்டே வந்து ஆதார ஷட்ஜத்தை, அசல வீணையின் மத்தியமமாக ஆக்கி விடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது சல வீணையின் புதிய ஆதார ஷட்ஜம், அசல வீணையின் மத்தியமத்துக்குச் சமமாக அதிரும்.”

“சரி”

“இப்போது சல வீணையின் ரிஷபம் எத்தனை ஸ்ருதி தள்ளி இருக்கவேண்டும்?”

“த்ரிஸ்த்ரீ ருஷப தைவதோ – என்று ஸ்லோகம் சொல்வதால், இதன் பிரகாரம் மூன்று ஸ்ருதி தள்ளி.”

“சரிதான். இப்போது சல வீணையில் ஒலிக்கும் அந்த ரிஷபம், அசல வீணையில் ஒலிக்கு மூலத்தில் இருந்து எத்தனை ஸ்ருதி தள்ளி ஒலிக்கிறது?”

“அசல வீணையின் ஷட்ஜம், நிஷாதத்தில் இருந்து நான்கு, ரிஷபம் மூன்று, காந்தாரம் இரண்டு, மத்தியம் நான்கு – இதுவரை பஃது மூன்று. இந்தப் பஃது மூன்றில்தான் மத்தியமம் வருகிறது. இதுதான் சல வீணையின் ஆதார ஷட்ஜம். அசல வீணையில் நான்கு ஸ்ருதிகள் தள்ளிப் பஃது ஏழாகப் பஞ்சமம். சல வீணையில் ஒலிக்கும் ரிஷபம், பஃது ஆறாவது ஸ்ருதி. அசலத்தை விட ஒரு ஸ்ருதி குறைவாக ஒலிக்கும்! ஆஹா!”

இந்த ஸ்வரஸ்தானம் ஷட்ஜக் கிராமத்தில் முன்னம் இல்லாதது. பஞ்சமத்துக்குக் கீழுறையாக இருப்பதால், இதை அவர் வழுக்கிய பஞ்சமம் என்ற பொருள்பட, ச்யுத பஞ்சமம் என்று விளையாட்டாகக் குறிப்பிடுவார்” சிரித்தான் விநயன். “இதைத்தான் நியாயாதிபதி இல்லத்தில் கோடிட்டுக் காட்டினேன். பஞ்சமத்தைக் கம்பியாக நீட்டுவதைப் போல எல்லாம் ஸ்வர நீட்சி அங்கே செய்ய முடிவதில்லை. ஒரு குறிப்பால்தான் உணர்த்த முடியும். இலக்கணம் எழுதி விளக்க முடியாது. விட்டத்துக்கும் வட்டப் பரிதிக்கும் ஓர் உறவு இருக்கிறது அல்லவா? அதை எப்படி நிர்ணயம் செய்வது? இன்றுவரை தவிக்கிறார்கள் நிபுணர்கள். அதே போலத்தான்.

“இரு இரு. திடீரென்று ஓர் அம்பை எறிந்து விட்டாயே! விட்டத்தை வைத்துப் பரிதியைக் கணக்கிடுவதில் என்ன சிரமம்? விட்டம் தாங்கும் வட்டத்தின் பரிதி, விட்டத்தைப் போல மூன்று மடங்கு. இப்படித்தானே நிர்ணயம் ஆகி இருக்கிறது?”

“பொது உபயோகத்துக்குச் சரிதான். ஆனால், அது மெய்யல்லவே?”

“மெய்யில்லையா? பின் எத்தனை மடங்கு?”

“அங்குத்தான் சிக்கலே! எத்தனை மடங்கு என்று சொல்லவே முடிவதில்லை”

“இதென்ன புதுக்கதை? ஏதோ ஒரு மடங்காகத்தானே இருக்க வேண்டும்? விட்டத்தை விட வட்டப்பரிதி பெரியது. மூன்று மடங்கு இல்லையென்றால் நான்கு மடங்கு. நான்கு பெரிதென்றால் மூன்றரை. அதுவும் பெரிதென்றால் மூன்றேகால் மடங்கு. இப்படி ஏதோ விகிதாச்சாரமாக இருந்துதானே ஆகவேண்டும்? முழு எண் மடங்காக வேண்டுமானால் இல்லாமல் போய்ப் பின்னமாக இருந்துவிட்டுப் போகட்டும். கணிக்கவே முடியாமல் எப்படிச் சிக்கல் இருக்க முடியும்?”

“இயற்கை அங்கேதான் நம்மோடு விளையாடுகிறது, ஐயா. அதன் மடங்கைப் பின்னமாக எழுதவே முடியாது. ஆசாரியர் தலையைப் பிய்த்துக் கொள்வார். பெரிது பெரிதாக வட்டம் போட்டு அளந்து அளந்து குறித்துக் கொள்வார். கமலையாற்றுக்கு மேற்புறம், பசதிக்குப் பின்னால், நிறைய கரம்பை நிலங்கள் இருக்கின்றன அல்லவா? நீங்கள் பார்த்திருக்கலாம். அதையெல்லாம் சமப்படுத்தி, செக்குப் போலச் சுழல் ஆணி புதைத்து, மாடு ஓட்டிப் பெரிய பெரிய வட்டங்கள் போட்டுப் பார்த்திருக்கிறார். இதுவரை அவருக்கு விகிதமே கிட்டியதில்லை.”

“என்ன மந்திரமாக இருக்கிறதே! எவ்வளவு பெரிது என்று கூட கண்டு பிடிக்கமுடியவில்லையா?”

“மேல் எல்லையைக் கண்டு பிடித்துவிட்டார். மூன்றைவிட அதிகமாக ஒரு பாதத்துக்கு மேல் போவதில்லை. அதற்குக் கீழேதான் இருக்கிறது. மூன்றைவிட அதிகமாக அரைப்பாதமாவது மேலே போய்விடுகிறது. அதற்குக் கீழே போவதில்லை. எனக்கு முதலில் சொல்லிக் கொடுக்கும்போது அரைப்பாதமும் பாதமும்தான் கீழெல்லையும், மேலெல்லையும் என்றார். எனக்குக் கொஞ்சம் புரிந்தவுடன், மேலெல்லையை மட்டும் நூற்றுப் பதின்மூன்றில், பதினாறு பாகத்துக்குக் கீழேதான் என்று சொல்லிக் கொடுத்தார். இப்படி இயற்கை இருக்கும்போது, துல்லியமாகப் பரிச்சேதம் செய்வது எப்படி?”

“ஆச்சரியம்தான். இப்படி இருக்கிறது என்று இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன். ம் ம் ம் .. இன்ன ஓசைக்கு இதுதான் வாய்பாடு என்று தெளிவாக நிர்மாணம் செய்வது, எல்லா ஓசைகளுக்கும் இயலாது என்கிறாய். சிந்தனை செய்வதற்குத் தோதுவான விஷயம்தான். நல்ல சதஸ் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ வந்து பேசு.’

“நிச்சயமாக, ஐயா. குக்கேஸ்வரரையும் அழைக்கலாம். என்னைவிடத் தமிழில் அதிகம் விஷயம் தெரிந்தவர். நன்றாகப் பாடல் யாப்பார்.”

“ஓ! இது தெரியாதே எனக்கு? பாம்பின் கால், பாம்புதான் அறியும்.”

 இருவரும் சிரித்தார்கள்.


No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...