Saturday, 21 September 2024

17-01. காமஸ்தத³க்³ரே ஸமவர்ததாதி⁴

ஐயா, என்னோடு எதுவும் கேளிக்கை செய்யவில்லையே?” சிரித்தான் விநயன். “இவையெல்லாம் நான் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பவை. கொஞ்சம் தத்துவம் சார்ந்தவை என்றே வைத்துக்கொள்ளுங்களேன். உங்களுடன்தான் தைரியமாக இவற்றைப் பேசுகிறேன். பிழை பொறுக்கவும்.”

“நான் கேளிக்கை செய்யவில்லை, விநயா. முனைப்போடுதான் கேட்கிறேன். புதுக்கருத்துக்கள் எக்காலத்திலும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. எல்லாம் கலந்ததுதான் காடு. சொல் சொல்.”

“எனக்குத் தோன்றிய இந்த எண்ணங்கள் தத்துவத் தர்க்க விவாதங்களைப் போன்று இருந்தாலும், இவை என் சரீர வாழ்வோடு உள்ள பிணைப்பில்தான் உருவாகியிருக்கின்றன. பாரதவர்ஷத்தின் தத்துவவியலும் வெறும் சிந்தனை மட்டும் அன்றே!. நாம் வாழும் வாழ்க்கையின் நோக்கத்தை, நம் சிந்தனையால் வடிவமைத்துக் கொள்ளக் கற்றுத் தரும் மரபாக அன்றோ உருவெடுத்து இருக்கிறது? அந்த மரபை, அகன்று விரிந்து, பல கிளைகளையும் விழுதுகளையும் கொண்ட ஒரு பெரும் ஆலமரம் என்று சிலர் எண்ணலாம். ஆனால், அது எனக்குப் பல விழுதுகளைக் கொண்ட, பல ஆலமரங்கள் நிறைந்த ஒரு பெருங்காடாகத் தோன்றுகிறது. அதைப் புரிந்து கொள்ளாமல், முன்னோர் மொழிந்தவை என்று நாம் எல்லாவற்றையும் அப்படியே பேசுவதும், அப்படிப் பேசுபவரைச் சிலாகிப்பதும், அவற்றிலிருந்து சற்றே மாறுபட்டு யாராவது பேசினால், அப்படிப் பேசுபவரை மூர்க்கரென்று அழைப்பதும் அந்த மரபைக் குலைக்கும் போக்கு என்று படுகிறது.

இந்தத் துறவிகளை எடுத்துக் கொள்ளுங்கள், நாம் இவர்களைத் தினசரி பார்ப்பதில்லை. அவ்வப்போது அருகாய்க் கண்ணில் படுகிறார்கள். ஊர்களின் எல்லைக்கு அப்பால், மனிதர்கள் கண்படாமல் வசிக்கிறார்கள். இவர்கள் ஒரு பக்கம். இவர்களுக்கு எதிர்மறையாக, சிலர் போகமே பெரிது என்று இந்திரிய சுகங்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களும் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். இவர்கள் இன்னொரு பக்கம். இந்த இருவகையானவர்களுக்கு இடையில்தான், நம்மைப் போன்ற பெரும்பாலானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊர்களுக்குள் துறவிகள் தென்படும்போது, எல்லோரும் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். ஆனால், ஊரிலேயே இருக்கும் சுகானுபவர்களை நாம் மதிப்பது இல்லை.”

“துறப்பது என்பது அவ்வளவு எளிய காரியமில்லையே.”

“சுகிப்பது என்பதும் அவ்வளவு எளிய காரியமா?”

“ஐம்பொறிகளும் எப்போதும் எதையாவது வேண்டும் என்று கேட்டுக் கொண்டுதான் இருக்கும். அவற்றை எல்லாம் உடனுக்குடன் பூர்த்தி செய்துகொண்டு வாழ்வது அவ்வளவு கடினமா என்ன?”

“கடினம்தான் என்பது என் கருத்து. செவிப்புலனைப் பற்றி என் கருத்தைச் சொல்கிறேன். சிலவற்றைக் கேட்டால் எனக்குச் செவியின்பம் கிட்டுகிறது. இந்த இன்பம் செவிக்கு எப்படி வருகிறது? பெருஞ்சத்தத்தைக் கேட்டால் தூக்கி வாரிப்போடும் குழந்தை, இசையறிவில்லாத அன்னை பாடினாலும், அவளுடைய தாலாட்டில் நிம்மதியாக உறங்குகிறது. இந்த வேறுபாடு, குழவியின் இசையறிவினால் இல்லையே, இனிமையாக இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாகசுரத்தைக் கேட்டாலும், சரியான தாளத்தில் கொட்டப்படும் முழவைக் கேட்டாலும் அது அழத்தான் செய்யும். இந்த வேறுபாடான பாதிக்கை அதனுடைய செவித்திரை இன்னும் முதிர்ச்சி அடையாமல், மிருதுவாக இருப்பதால்தானே? அதனால், இந்த நுகர்வறியாமை, செவிப்புலனைப் பொறுத்ததன்று. பொறியின் முதிர்ச்சியைப் பொறுத்தது. ஆனால், நம் செவிப்பொறி முதிர்ச்சியடைந்த பிறகு, நம்முடைய செவிப்புலன், அதற்கென்று பிடித்தமான ஓர் ஒலியைப் பகுத்துக் கொண்டு அதில் இன்பம் காணப் பழகிக் கொள்கிறது. அவரவர்கள் கேட்டுப் பழகிய ஒலியைப் பொறுத்து, இந்த விருப்பும் வெறுப்பும் வளர்கிறது. திடீரென்று காளையர் வீளைசெய்து, வெடிபடுத்தெதிர் வந்தால், நாமும் அதிர்வதில்லையா? ஒலியைக் கேட்டுக் கேட்டுப் பழகி, ஒரு சிலர் செவிப்புலனில் நுட்பத்தை வளர்த்துக்கொண்டு, ஒலியை வைத்துப் பல பரிமாணங்களைத் தெரிந்து கொள்கிறார்கள். இது எல்லோருக்கும் செய்யக் கூடுவதில்லை.”

“சப்தபேதிக்கள் இருக்கிறார்களே!”

“ஆம். பயிற்சியால் அந்தத் திறலை வளர்த்துக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், அடிப்படையாக ஒரு நுண்ணுணர்வு இருப்பவர்களால்தான், கடும் பயிற்சியால் இந்தத் திறனை வளர்த்துக் கொள்ள முடிகிறது.”

“அது சரிதான். அப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வும் செய்து பயிற்றுகிறார்கள்.”

“அப்படி நுண்மாண் புலத்தை வளர்த்துக்கொண்ட ஒருவர் செவியின்பத்தைப் பூர்த்தி செய்து, அதன் எல்லையைக் காண்பேன் என்று முனைப்பாக வாழ்வைக் கழிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எல்லாச் சப்தங்களும் ஒன்றுபோல அல்ல, அல்லவா? ஸ்ருதியோடிணைந்த நாதங்கள் வேறு, காட்டுக்கத்தல் வேறு. இணைந்த பல்லொலிகளைப் பகுத்து இனம் காண்பது வேறு. இப்படி ஒலிகளோடு வாழ்ந்து, அவற்றைக் கேட்டுக் கேட்டுத் தன் செவியை அவர் பழக்கிக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

“அடுத்தடுத்த ஸ்வரங்களான ஷட்ஜத்திற்கும், ரிஷபத்துக்கும் இடையே இருக்கும் நான்கு ஸ்ருதிகளான பூரண, பிரமாண, நியூன மற்றும் பிரமாணத்தைப் பிரித்துக் கேட்கும் திறனை அடைகிறார். ஆகதமும், அநாகதமும் பிரித்துப் பார்க்கும் நிலையை அடைகிறார். அது எல்லோருக்கும் வாய்க்குமா? இசை வெள்ளத்தில் மூழ்கி, இறைவனையே நாத ஸ்வரூபமாக உணர்கிறார். பொறியின் வயப்பட்டுத்தான் வாழ்கிறார். இஃது எவ்வாறு இழிந்தது?

“காட்சியின்பமும் இதைப்போலத்தானே? காட்சியின்பம் எல்லாருக்கும்தான் கிடைக்கிறது. ஒரு சிலர், அதில் மூழ்கி, இயற்கையின் வண்ணங்களைப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள். அவர்களுக்கு இந்திரதனுசின் வண்ணங்கள் மட்டுமா தெரிகின்றன? நமக்கெல்லாம் ஒரே சிவப்பு நிறமாகத் தோன்றுவதை, ஓர் ஓவியர் நூறு விதமான செம்மைகளாகப் பிரித்துக் காண்கிறார். ஒரு காட்சியைக் கண்டதும், தேர்ந்த ஓவியன், எந்த எந்த வண்ணங்களைக் குழைத்தால், நிஜம் போல வண்ணத்தைக் கொண்டுவர முடியும் என்று ஒரு கணத்தில் முடிவெடுத்து விடுகிறான். இது இழிந்த நிலையா?

“அரசருக்குப் படைக்கப்பட்ட உணவைச் சுவைத்த மாத்திரத்தில், ஒருவன் அவ்வுணவை ஆக்க என்ன என்ன பொருட்கள் இடப்பட்டிருக்கின்றன, எப்படிச் சமைக்கப்பட்டிருக்கின்றன, உண்பவர்கட்கு நலம் பயக்குமா என்றெல்லாம் சொல்லிவிடுகிறான். இந்நிலையை அடைவதற்கு, அவனுக்குச் சிரத்தையோடு செலவழிக்கப்பட்டப் பல வருட வாழ்க்கை அடிப்படையாக அமைகிறது.

“தொட்டுப் பார்த்து, வைத்தியன் சரீரத்தின் நிலையைச் சொல்லி விடுகிறான். நிணமும், குருதியும், நீரும், கழிவுகளும் இழிந்தது என்று சொன்னால், பத்து மாதங்கள் குழந்தையைச் சுமந்தவள், அதைப் பெற்றெடுக்க வைத்தியனின் உதவியைப் பெறுவதுதான் எப்படி? கிராமத்தைத் தாக்கவரும் புலியைச் சண்டையிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்றவனுடைய கை கிழிந்து தொங்கும்போது, அதைத் தைத்தோ, வெட்டியோ அவனைக் காப்பாற்றுவது எப்படி?

“இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஐம்பொறிகளைப் பயன்படுத்துவது சுகம்தான். ஆனால், அந்தச் சுகம் எப்படி இழிவு ஆகும்? அதுவும் ஒரு சிரத்தையோடு அனுசரிக்கப்பட்ட தவமே அல்லவா?”

“நான் இப்படி யோசித்துப் பார்த்ததில்லை. விழுமிய நிலையில் புலனைத் துய்ப்பதும் ஒரு தவம் என்கிறாய். சரியாகத்தான் படுகிறது. ஆனால், மதுவிலும், பெண்கள் சுகத்திலும் விழுந்து கிடந்து கடமையை மறப்பது எப்படிச் சுகமாகும்?”

மது என்பது மனித சமுதாயத்துக்கு ஒன்றும் புதிதல்லவே? ஆதி காலத்தில் இருந்து, சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும், இறைவனுக்குச் சமமாகக் கருதப்படும் இராஜாங்க விஷயங்களிலும், சம்பிரமமாக வீற்றிருக்கும் வஸ்துதானே? பழங்கள், கன்னல் கழிகள், தானிய வகைகள் போன்றவற்றின் ஊறலில் இருந்து இதைச் செய்யும் வழிமுறைகள்தான் எப்படியெல்லாம் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன சாத்திரங்களில்! மனவெழுச்சிக்கும், மனவுளைச்சலுக்கு மருந்துக்கும், மெய்வருத்தம் தீர்ப்பதற்கும், தயக்கத்தைப் போக்குவதற்கும், மயக்கத்தை ஊட்டுவதற்கும் இதைப் பயன்படுத்தாதவர்கள் சொற்பமே. தாந்திரிக வழிமுறைக்கும், சித்தாந்தச் செயல்முறைக்கும் கூட இது உபயோகப்படுகிறதா, இல்லையா?”

“இதற்கு அடிமையாகி விடுகிறார்களே”

“நல்ல விஷயங்களுக்கு நாம் அடிமை ஆவதில்லையா? நல்ல ருசி கண்டவனுக்கு, அற்பமான உணவைத் தந்தால், ஏற்பானா? சுஸ்வர சங்கீத நிபுணன் இரைச்சலைத் தாங்குவானா? எந்த விஷயத்திற்கு நாம் பழக்கமாகி விடுகிறோமோ, அந்த விஷயத்துக்கு நாம் அடிமைப் பட்டுத்தானே போகிறோம்? அதை யாரும் இழிவாகப் பார்ப்பதில்லையே. வயிற்றுக்கு எதைக் கொடுத்தால் என்ன? உயிருக்கு அது போதாதா? ருசி என்று எதற்கு ஒன்று? ருசி உயிரினத்தின் இயல்பு. ருசி என்று ஒன்று இருப்பதால்தான், உண்ணப்படும் பொருள்கள் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப் படுகின்றன. ருசியும் எல்லோருக்கும் ஒன்று போல அமைவதில்லையே. சிறு குழந்தை, தாய்ப்பாலின் தேவையில் இருந்து வெளிவரும்போது, அதனுடைய தனித்துவமாகச் சில பண்டங்கள் பிடிக்கின்றன, சில பிடிப்பதில்லை. பிடித்ததை அது தேடுகிறது. பிடிக்காததை அது விலக்குகிறது. அடிப்படைத் தேவைகளின் பூர்த்திக்காக மட்டும் அது இயங்குவதில்லை. இந்தத் தேடல்களின் விளைவால்தான், குகைகளில் வாழ்ந்த வாழ்வில் இருந்து, இப்படி மாறியிருக்கிறோம். இது இழிந்ததா?

“இயற்கையிலே சில குணங்களும், சூழ்நிலையால் சில குணங்களும், பழக்க வழக்கத்தில் சில குணங்களும் நம்முள் ஐக்கியமாகி விடுகின்றன. அவைதான், நாம் எப்படிப்பட்டவர் என்று நமக்கு ஓர் அடையாளமாக ஆகி நம்மை வரையறுக்கின்றன. இப்படி ஒரு வரையறைக்குள்ளேயே, பல காலமாய், மனித வாழ்வு, பலப்பல தேசங்களில் பிறந்து, வாழ்ந்து, இறக்கிறது. அப்படி ஏற்படும் வரையறைகளுக்குள்ளேயேதான், அது வளர்ந்து விகசிக்கவும் செய்கிறது.”

“மாது மயக்கமும் இப்படித்தானா?”

“ஒரு சில குழப்பமான வகைகளை ஒதுக்கிப் பார்த்தோமேயானால். ஆண் பெண் இரண்டே வகைதான், பிறவிகளில். இதில், ஏன் மனிதப் பிறவிகளில் மட்டும் ஆண்பால் என்னும் ஒரு பிரிவு, பெண்பால் என்னும் பிரிவை இப்படி வசை பாடுகிறது? பெண்பாலர் மேல் ஏற்படும் இந்தக் கவர்ச்சி இல்லாவிட்டால், சமுதாயம் தழைப்பதேது? தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆண், பெண்ணை போகப் பொருளாகவே பார்க்கிறான். அது பொருளுடைய குற்றமா? நீரின் பிழையா துர்மணம் ஏற்றல்?

“எல்லா உயிர்களுக்கும் தம் சந்ததிகளை தழைத்து வைத்துக் கொள்ளும் உணர்வு ஊறித்தானே இருக்கிறது. அதன் தூண்டுதலால் சில இயக்கங்கள் நடக்கின்றன. இவற்றை இழிந்தது என்று எப்படிக் கொள்வது? சில உணவுகள், அஜீரணத்தைத் தருகின்றன. சில உணவுகள், வேறொன்றோடு சேரும்போது விஷமாகின்றன. சில விஷத்தை முறிக்கவும் செய்கின்றன. நமக்கு ஒத்துக் கொள்ளும் ஓர் உணவு, மற்றவருக்குத் துன்பத்தை விளைவிக்கிறது. இது உணவுப் பொருட்களின் இயல்பு. அதைச் செரிக்கும் நம் சரீரத்தின் இயல்பு. உணவுப் பொருட்களுக்கும், அதை உண்ணும் சரீரத்துக்கும் இடையே உள்ள இந்த இணைப்பு, சில நேரங்களில் முரண்படுகிறது. அதற்காக, எல்லோரும் உணவைப் பாவமென்று பழித்து, அதைச் செரிக்கத் தவறிய இந்த உடலை இழிவு செய்து, மருந்துகளையும் விலக்கிப் பட்டினி கிடந்து, பாறையில் கிடந்து உயிரைத் துறக்கச் சித்தமாகிவிட்டோமேயானால், பிறகு இந்தச் சமுதாயத்தில் யார் எஞ்சி நிற்பார்கள்?”

“அப்படி என்றால், முன்னோர்கள் சொன்னவற்றில் தாத்பரியம் இல்லை என்கிறாயா?

இதுபற்றி நான் சொல்வதைச் சற்றுத் திறந்த மனத்துடன் கேட்க வேண்டிக் கொள்கிறேன். முன்னோர் மொழிந்த மொழியை நாம் வழுவக் கூடாது என்று பலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த முன்னோர் யார் என்ற கேள்வி என்னுள் அடிக்கடி எழும். சில விஷயங்களைக் காலமற்றது என்றும், இறைவனின் உள்ளக் கூற்றுக்கள் அவை என்றும் கொண்டு, அந்தக் கூற்றுக்களும் அன்னாரைப் போலவே அழிவற்றது என்றும் ஒரு நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டே நம் தேசத்தில் பல மரபுகள் தோன்றியிருக்கின்றன. சில மரபுகள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தும் பேசி இருக்கின்றன.

“இறைவன் என்ற ஒருவருக்குச் சரீரமாக ஆத்மாக்களும், உலகமும் இருக்கிறது என்றும், அந்த ஆத்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறான் என்றும், அதினின்று விடுபடுதலே அவன் அடைய வேண்டிய பெரும்பேறு என்றும் சிலர் கூறுகிறார்கள். அந்த இறைவனிடத்தில் சரணடைக. அப்படிச் சரண் புகுந்தால்  பிறப்பிறப்பின் பிணைப்பை அறுத்துக்கொண்டு, வேறு உலகத்திற்குச் சென்று இன்பமாக எப்போதும் வாழலாம் என்கிறார்கள் சிலர்.

“உலகமெல்லாம் பொய், நமக்குக் கயிறு பாம்பாய்த் தெரிவது போலே, இறைவனாகிய ஒரே பொருள் பலவாகத் தெரிகிறது. நாம்தான் அந்த இறைவன். ஒரு குணமும் அற்ற இறைவனாகிய நாம் பொய்யில் சிக்கிக்கொண்டு விட்டோம், அதனால் இறைத்தன்மையை உணரவில்லை. என்றைக்கு 'நாம்தான் இறைவன்', 'உலகம் பொய்' என்ற வாக்கியங்களின் பொருள் நமக்குப் புலப்படுகிறதோ, அன்று பொய் விலகி இறைவனாக என்றுமிருப்போம் என்றார் ஒருவர் சமீபத்தில். இன்னொருவர் வந்து, இறைவன் சூரியனைப் போன்றவன். அது நீரில் பிரதிபலிப்பதைப் போல ஜீவராசிகளில் தென்படுகிறான். அதனால், ஜீவராசிகள் இறைவன்தான் என்று சொல்லிவிட முடியுமா? என்று மறுக்கலாம்.

“இப்போதே சிலர், நாமும் இறைவனும் ஒன்றா? இருக்கவே இயலாது என்று சில வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, இப்பேதங்களை நன்குணர்பவன் பிறப்பறுப்பான் என்கிறார்கள். இதை மறுப்பவர்கள், இறைவன் மண்ணால் ஒரு பாண்டத்தை உருவாக்கினால் அவன் பாண்டத்தைப் படைத்தவனேயன்றி மண்ணைப் படைத்தவனில்லை என்று ஆகிவிடும். அப்படி ஆனால், இறைவன் சர்வத்தையும் படைத்தவன் அல்லன் என்று ஆகாதா என்று விவாதிக்கிறார்கள்.

“இறைவன் என்று ஒருவனைக் கொள்ளத்தான் வேண்டுமா? என்று கேட்டு, வேண்டாம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

“மீமாம்சகர் தெய்வங்கள் இல்லை என்று கூறுகிறார். ஆனால் வேதமாகிய நூலை முக்கியமாகச் சுமந்து கொண்டு, அதில் இருக்கிற வாக்கியங்களைச் சொல்லித் தீ மூட்டுக, இதுவே வாழ்வு என்கிறார்.

“சாங்கியர் ஆத்மாவும் ப்ரக்ருதியும் அழிக்க முடியாத தத்துவங்கள் என்றும், குருடன் தலையில் ஏறி முடவன் சஞ்சரிப்பது போல, சம்பந்தமில்லாத இவ்விரண்டும் கலந்து உலகமாகிய பிரயாணத்தை செய்கின்றன என்று கூறுகிறார்.

“அணுக்கள் சேர்ந்துதான் உலகம் உண்டாகிறது என்று கூறும் வைசேஷிகரும் நையாயிகரும், இறைவனை யூகித்து அறியலாம் என்கிறார்கள்.

‘உலகமே சூனியம்; ஞானமும் சூனியம். ஏதுமற்ற தன்மையே உள்ளது’ என்கிறார்கள் பவுத்தர்கள். ஜைனர்களோ, ‘ஆத்மாவானது அது இருக்கும் சரீரத்தின் அளவை ஒத்தது’ என்கிறார்கள். அவர்கள் கருத்துப்படி, யானைக்குப் பெரிய ஆத்மாவும் எறும்புக்குச் சின்ன ஆத்மாவும் இருக்கிறது என்றுதானே சொல்கிறார்கள்? உலகம் உள்ளதென்றும் வைத்துக் கொள்ளுங்கள், இல்லையென்றும் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்களே.

“சாருவாகர்களோ, எதற்காக இறைவனையோ, ஆத்மா என்ற ஒரு தத்துவத்தையோ ஏற்க வேண்டும்? நான்கு பூதங்கள் இயற்கையில் சேரும்போது ‘தான்’ என்ற உணர்வு பிறக்கிறது. அதில் சுகம் துக்கம் அடைகிறோம். ஒரு காலத்தில் இந்த உணர்வு அழிந்து, இயற்கை விஞ்சி நிற்கிறது அவ்வளவே என்கிறார்கள்.

இப்படிப் பலவேறு மரங்கள் கொண்ட பாரதம் என்னும் தத்துவக்காட்டின் சில மரங்களில் உள்ள சில இலைகள் மேற்சொன்ன இவை. இன்னும் கணக்கற்ற மரங்களும், இலைகளும் உள்ளன. இப்படியிருக்க, யாரை நாம் முன்னோராகக் கொள்ள வேண்டும்? இவர்கள் அனைவருமே முன்னோர்கள்தான் என்று கொண்டால் – அவர்கள் மொழிந்த மொழிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் ஒவ்வாமலும் இருக்கின்றனவே. அவர்களின் மொழிகளை எப்படித் தப்பாமல் கேட்பது? ஒரு ஊருக்கு வழி கேட்டால், முன்னோர்கள் ஒன்பது வழிகள் கூறியிருக்கிறார்களே!

இதில் ஏதேனும் ஒரு தத்துவத்தைச் சரி என்றே கொண்டாலும், அந்தச் சிந்தனையின் வரலாற்றுப் போக்கை ஆழமாக நோக்கினால், அது சந்தித்த மாறுதல்களையும் அதற்கும் உள்ள வேறுபாடுகளையும், சிக்கல்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இற்றைக்கு, ஆஜீவகத்தைப் பின்பற்றுபவர்களைக் காணவே முடிவதில்லை. நாளைக்குச் சமணம் மறையலாம். கௌமாரமும், சௌரமும் எங்கிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது. நாளை இவை வலுப்பெறலாம். இற்றைக்கு ஐநூறு வருடங்கள் முன்பிருந்தவர்கள் நமக்கு முன்னோர்கள் என்றால், ஐநூறு வருடங்களுக்குப் பின் வருபவர்களுக்கு, நாம் முன்னோர்களாக ஆக மாட்டோமா? அவர்கள், அவர்களுக்குப் பின்வருபவர்களுக்கு முன்னோர்கள் ஆவார்கள், இல்லையா? ஆயிரம், ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பிறகு, பிறக்கும் ஒருவன் தன்னுடைய முன்னோர்களுடைய காலம் என்று கூர்ந்து நோக்கினால், அவன் எதைக் காண்பான்? எதைத் தன்னுடைய வழிக்குக் கலங்கரை விளக்கமாகக் கொண்டு பயணிப்பான்? நானும் நீங்களும் அவனுக்கு முன்னோர்கள்தானே?

“காபாலிகர்களும் காளாமுகர்களும், லகுலீசப் பாசுபதர்களும், பைராகிகளும் பின்பற்றும் வழி, சராசரி குடும்பஸ்தனுக்கு ஜீரணிக்க முடிகிறதா? அச்சப் பட்டு விலகியன்றோ போகிறான்? அவர்களும் துறவிகள் தானே?

“சவுத்ராதிக பக்ஷம், வைபாஷிகம், மாத்யமிகம், யோகாசார பக்ஷம் என்று பலவேறாக காலப்போக்கில் பிரிந்து, தத்துவ வேறுபாடுகள் பவுத்தத்தில் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. இவை அனைத்துமே காலப்போக்கில் மாறுதல்களை மீண்டும் சந்திக்கப் போவதும் உண்டு. முறை தப்பாமல் முன்னோர் மொழியைச் சொல்வதென்றால் - இவற்றை எப்படிக் கணக்கில் கொள்வது?”

“அப்படி என்றால், நாம் என்னதான் செய்வது? மனதுக்கு வந்தபடி வாழ்வதா? சமுதாயக் கட்டமைப்பு வேண்டாமா?”

“நாம் கேட்க வேண்டிய சரியான கேள்வி இதுதான். தனி வாழ்க்கை வாழ்கிறோமா, சமுதாயக் கட்டமைப்பில் வாழ்கிறோமா? நீங்கள் உருக்காலையில் சொல்லிக் கோபப்பட்டீர்களே, அதே உணர்வுதான் இதற்கும் விடை. நான் படித்த சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

 

"பிறப்பதென் றான பின்னே பிறந்தவிவ் வாக்கைக் குரிய

சிறப்பெலாந் துய்க்கு மாற்றைச் சிறுமையென் றிகழ்வ தென்கொல்?

பிறப்புறுந் தீனக் குழவி பெற்றவள் பேணின் பிழைக்கும்

வெறுப்பினால் வீசு வோமோ, மாயையே வாழ்க்கை என்றே?"

 

"துய்ப்பது புலனா பொறியா?", 'தூண்டிலே பொறிகள்; அவற்றால்

வைத்துளே பயப்ப புலனாம்; வையமாள் விந்தை பொறிகள்

உய்த்துளே அனுப்பா நின்றும் ஒருமுகப் படாஅ மனத்தின்

பொய்ப்பது காண்பாய்; அதனால் துய்ப்பது மனமே; தெரிவை.

 

“பிருகதாரண்யகத்திலும் ஒரு ஸ்லோகம் வருகிறது. என்னைப் பலமுறை சிந்திக்க வைத்திருக்கிறது:

 

நைவேஹ கிஞ்சநாக்³ர ஆஸீத்,

ம்ருத்யுனைவேத³மாவ்ருதம் ஆஸீத்

அஶனாயயா, அஶனாயா

ஹி ம்ருத்யு தன்மனோ(அ)குருத, ஆத்மன்வீ ஸ்யாமிதி ..

 

“இதன் பொருளை ஆராய்வதற்குமுன், இருத்தல், இல்லை, என்ற இரு பகுப்புக்களைப் பற்றி நான் யோசித்து வைத்ததைச் சொல்லி விடுகிறேன்.

“ஒரு பொருள் இல்லை என்று நாம் சொன்னால், ‘இங்கு இல்லை அங்கு உள்ளது’ என்று தேசத்தையோ அதாவது இடத்தையோ, ‘இப்போது இல்லை அப்போது இருந்தது’ என்று காலத்தையோ, “இந்தப் பொருளில்லை அந்தப் பொருள்” என்று வஸ்துவையோ நாம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறோம். இந்த மூன்றில் ஒன்றை ஆதாரமாகக் கொண்டுதான் உண்டு இல்லை என்ற தீர்மானம் நம்மால் இயற்ற முடிகிறது. இருந்தது என்ற ஒரு நிலை இருந்தால்தானே, இல்லை என்ற ஒரு நிலை பிறக்கும். ஒரு விஷயம் இருப்பதே நமக்குத் தெரியவில்லை என்றால், அது இல்லாமல் போவதையும் நம்மால் தெரிந்து கொள்ளமுடியாது அல்லவா? அதனால், இருத்தல், இல்லாமை ஆகிய இரண்டுமே நாம் பரிச்சேதம் என்று சொல்கிறோமே அந்த வரம்புக்கு உட்பட்டதுதானே?

இருத்தல், இல்லாமை என்ற இந்த இரு பகுப்புக்களும் இல்லாத ஒரு நிலையில் பிரபஞ்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட யாதுமே இல்லாத பிரபஞ்சம் முழுதும் மரணத்தால் சூழப்பட்டு இருந்தது என்று கூறுகிறது, இந்த ஸ்லோகம். மரணம் என்பது யாது? மரணம் என்பது உயிர் அற்ற நிலை, சரிதானே. அப்போது எந்த உயிரும் இல்லாததால், எல்லாமே மரணத்தால் சூழப்பட்டு இருந்தன. அப்படிப்பட்ட நிலையில் அந்த உயிரற்ற நிலையான மரணம் "நான் உடலோடு கூடியவனாக ஆவேன்" என்று எண்ணியது. அந்த எண்ணமாகிய விருப்பமே உலகை உருவாக்கியது.

“ஸோ காமயத பஹுஸ்யாம் பிரஜாயேயேதி" என்றும் நாம் படிக்கிறோம். அதாவது, அப்படி எதுவுமே உருவாக்கப்படாத ஒரு சூழலில், தன்னை அறிந்துகொண்டு, தானே, தான் மட்டுமாகிப் பரம்பொருள் கிடக்கும் சமயத்தில், அதற்குள் காமம் உருவானது. எதுவுமே இன்னும் பிறக்காத ஒரு சூழ்நிலையில், என்ன மாதிரியான காமம் (ஆசை, விருப்பம்) அந்தப் பரம்பொருளுக்கு உண்டாகி இருக்கும்?

“‘நான் உலகை உருவாக்குவேன்’ என்பதா?  இல்லை. ‘நான் உலகாக ஆவேன்’ என்னும் காமம். அதாவது, ஒரு பொருள் பல பொருள்களாக விரிவடைய வேண்டும் என்ற காமம். அதனால், உலகம் உருவாவதற்கே இந்தப் பல்பொருளாக விரிவடைய வேண்டும் என்ற ஆசைதான் முன்னோடி.

“இதையேதான் நாம் இப்போது நடத்துகிற வாழ்க்கையிலும் அனுபவிக்கிறோம். இது தேவை, இது போல ஆக வேண்டும் என்பது ஆசை. அதுதான், நம்மை இயக்குகிற சக்தியாக இருக்கிறது. ஆண் பெண் என்ற இருபாலரின் சரீரங்கள் ஒன்றோடு ஒன்றை இணையும் விஷயத்தைத்தான் காமம் என்ற சொல்லுக்குப் பொருளாக, இன்று பலபேர் குறுக்கிக் கொண்டு விட்டார்கள். அந்தப் பொருளும் ஆணுக்குப் பெண்மேல் ஏற்படும் ஆசையாக, இன்னும் குறுக்கப் பட்டுவிட்டது.”

 

யோசனையில் ஆழ்ந்தவராகச் செவிமடுத்துக் கொண்டிருந்த பிரதாபர், கேட்டார்: நீ சொல்கிறபடி பார்த்தால், காமம் என்பதை ஒரு தனிப்பட்ட மனிதனின் இச்சையாகப் பார்ப்பதல்லாமல், ஒரு பிரபஞ்சவியல் கோட்பாடாகவே கருதி வந்திருக்கிறார்கள் என்கிறாயா?”

“ஆமாம். ‘காமஸ்தத³க்³ரே ஸமவர்ததாதி மனஸோ ரேத: ப்ரத²ம யதா³ஸீத்’ என்று நாஸதீய சூக்தம் சொல்லவில்லையா?”

“நீ இதுவரை சொன்னதை வைத்து, நீ என்ன சொல்ல வருகிறாய் என்று நான் சொல்கிறேன். சரியா என்று சொல். எப்படிக் காமத்தால்தான் உலக உற்பத்தி ஏற்பட்டதோ, அப்படியே மனிதனின் செயல்பாடுகளும் காமத்தால்தான் இயங்குகின்றன. காமமின்றி மனித வாழ்வில் ஒரு நகர்வும் சாத்தியமல்ல. ஒரு பொருளைப் பற்றிய அறிவு முதலில் நமக்கு ஏற்படுகிறது. அந்த பொருளை அடையவேண்டும் என்கிற அவா, அந்த அறிவோடு நாம் நம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதால் ஏற்படுகிறது என்கிறாய். அந்தக் காமமே அந்தப் பொருளை அடைய நம்மைச் செயல் புரியத் தூண்டுகிறது. அந்தத் தூண்டுதல்தான் பலவேறு காரியங்களில் நம்மை ஈடுபடுத்துகிறது. சரிதானா?”

“ஆம். அதுதான் நான் சொல்ல வந்தது. 'அறிவு - காமம் - செயல்' என்ற முப்பரிமாணத் தத்துவத்தில்தான் மனித வாழ்வு இயங்குகிறது. சில காமங்கள், ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்தபின் ஏற்படுகின்றன. சில காமங்கள், நம் பிறப்போடேயே, நரம்புகளோடும், சரீரத்தோடும் பிணைந்திருக்கின்றன. சிந்திப்பதால், வரும் ஆசைகள் அல்ல அவை. பிறந்த குழந்தை பசிக்கு அழுவது, படுத்துக்கிடக்கும் குழந்தை, சில மாதங்களுக்குப் பிறகு, குப்புறத் திரும்ப முயல்வது, கூடவே விளையாடிக்கொண்டிருந்த பெண் மேல், வயது வந்ததும், ஆணுக்கு ஏற்படும் கவர்ச்சி இப்படிப் பல.

“எல்லாக் காமங்களும் செயலில் முடிகிறதா என்று யோசித்தால், இல்லை என்பதை நாம் நம் அனுபவத்தில் கண்டிருக்கக் கூடும். ஏன் எத்தனையோ காமங்கள் நம்முள் உருவாகிச் செயலில் முடியாமல் போகின்றன என்ற கேள்வி இங்கு எழலாம். காமம் செயலைத் தூண்டும் சக்தியை உடையதாக இருக்கிறது. ஆனால், செயல் நம் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. செயல் நடக்கலாம், நடக்காது போகலாம் ஆனால், அந்த செயலைத் தூண்டும் சக்தி காமத்திடம் மட்டுமே உள்ளது. காமம் இல்லாவிட்டால், வினைகள் விளைவதில்லை”

“ம்ம்ம் .... சரி, இப்படி ஒரு வினா எழுப்புகிறேன். எத்தனை ஜன்மங்களில் செய்த பிரயத்தனத்தால் நாம் இங்கு வந்து பிறந்திருக்கிறோம்! எவ்வளவு ஜென்மங்கள் மலத்திலே கழித்தோமோ, எத்துணை ஜன்மங்கள் நீரில் கழித்தோமோ, மண்ணில் கழித்தது எவ்வளவு காலமோ, மரங்களாக எவ்வளவு ஜென்மங்கள் நின்றோமோ, அப்படியெல்லாம் இருந்த நமக்கு இப்படி ஒரு இலாபம் கிடைத்திருக்கிறது. மரித்து மரித்துப் பிறந்திருக்கிறோம் நாம். இப்படிக் கிடைத்த மானுட ஜென்மத்தைத் தவற விட்டு விடலாமா? இதில் நாம் இந்திரிய சுகத்தை விலக்கி மறுமையில் நன்மை தேடுவதன்றோ காரியமாக மேற்கொள்ள வேண்டும்? இது தான் அறிவுள்ளவர்கள், தீரர்கள் செய்யும் செயல் என்கிறார்களே?”

“இங்கே பிறவி எடுத்த எந்த உயிரியும் தமது வாழ்க்கையில் செய்தது என்ன? தம்முடைய வமிசத்தை எப்படி இந்த உலகில் நிலைபெறச்செய்வது என்பதுதானே? அந்தத் தூண்டுதலும் நம்முடைய அறிவினால் அல்லாமல், தானே இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. அப்படித் தமது வமிசத்தை நீட்சி செய்வதற்காகத்தான் இந்த உடல் சுகங்களும் அமைந்துள்ளன. இன்னொரு உயிரியோடு பிணைப்பே வேண்டாம் என்று சொல்வது, இயல்பான சுபாவத்திலிருந்து பிறழும் வழி அல்லவா? அதுமட்டுமன்றி, யாராவது, ஆண் ஒரு மாயப்பிசாசு என்று சொல்லி இருக்கிறார்களா? அது என்ன, பெண் பிறவிகளை மட்டும், இந்த உலகைச் சிக்கவைக்கும் மாயவலைகளாகப் பார்ப்பது? என்னவோ, இந்த ஆண் வர்க்கம், உயரிய சிந்தனை உடையது என்றும், அந்த உடலில் இருக்கும் ஆன்மா, சிறந்தது என்றும், அதைத் தளையிலேயே சிக்கவைத்துச் சீரழித்துப் பிறவியின் பயனை அடையாமல் இருக்கவைக்கும் அழிவுப் பொருள்தான் பெண்ணினம் என்று யார் வரையறுத்து விட்டது?

“மானுடத்தின் பாதிப் பாதி, ஆணும் பெண்ணும். இவை இணைந்து, தம் இனத்தைத் தொடரவைக்க முயல்கின்றன. கீழே விழும் குழந்தை, எழுந்து நிற்க முயல்வது, இந்தத் தற்பெருக்க மனப்பாங்கின் நீட்சியே. உடல் நோய்வாய்ப்படுங்காலை, சரீரம் தளர்ந்து, பல அங்கங்கள் பலஹீனமான நிலையில், உடலை விட்டுப் பிரிய மனம் வராமல், வாழவேண்டும் என்ற ஆசைதான் மீண்டும் படுக்கையில் இருந்து நம்மை எழுப்பி நடமாட வைக்கிறது.

“நரேந்திரர், அரியணை இழந்ததும், காடும் மலையும் அலைந்து திரிந்தார். தோல்விகள் உற்றும், அடுத்தடுத்துப் போர் புரிந்தவண்ணம் அன்றோ இருந்தார்? ஒன்றா இரண்டா, நீங்களே சொல்லி இருக்கிறீர்கள், நூற்றியெட்டுப் போர்கள் என்று! தான் மட்டும் அன்றிக் குடும்பத்தோடு அலைந்தார். சிறு குழந்தை வேறு. அவரைத் தளர்வடையாது ஊக்குவித்தது எது? இன்று அரியணை ஏறியபிறகு, இப்படித் தன் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று இருக்கத் தூண்டியதும் அவாவே அன்றோ? ஸ்வர்க்கத்தை அன்றோ இங்கே நிறுவி இருக்கிறார்? என்னைப் போன்ற, யாருமே இல்லாதவர்களைப் போஷிக்கச் சத்திரங்களையும், பக்தி வளர்க்கக் கோவில்களையும், கலை, சாத்திரங்கள் வளர்க்கப் பாடசாலைகளையும் எது அமைக்கத் தூண்டியது? முதன்முறை தோற்றதுமே, இந்த வாழ்வு அநித்தியம், பிறவி ஒரு சேறு, சரீரம் ஒரு கழிவு, பெண் ஒரு பிசாசு என்றெல்லாம் நினைத்து, தேகத்தை விடத் துணிந்தாரா?

“உலகில் பிறந்த மனிதர்கள் எல்லாம் இந்த யாக்கை நிலைக்காதது, அழியப் போவது என்று எண்ணிச் சுகங்களே வேண்டாம் என்று தியாகம் செய்யத் துவங்கினால், அப்போது வாழ்பவர்கள்தான், மனித இனத்தின் இறுதி உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களோடு, மனித இனமே அழிந்து போகும். வாழ்பவர்களும் குழந்தைகள், பெற்றவர்கள், தம்மைச் சார்ந்து நிற்பவர்கள் எல்லோரையும் விட்டு விலகிப் போய்விடுவார்கள். ஒவ்வோர் பெண்ணும் ஓர் ஆணை, அழியப்போகிறான் இவன் என்று பார்க்கத் தொடங்கி வெறுக்கத் தொடங்கி விடுவாள். அடுத்த சந்ததி தொடராது. ஆணும் இந்தப் பெண்கள் மாயப் பிசாசுகள் என்று ஓடித் துறவறம் மேற்கொள்வான். இரு பாலரும், நிஷ்டையில் அமர்ந்து இந்திரியங்களைக் கட்டுப் படுத்திக் கொள்வார்கள். அல்லது பாறையைத் தேடி ஓடிப் பிராணத்தியாகத்தில் இறங்கிவிடுவார்கள். உணவருந்தாமல் தவம் இயற்றி யாக்கையை நீப்பார்கள். பிறகு?

“ஒரு இனம், தன்னை நிலையாக்கிக்  கொள்ள முயல்வது இயற்கை. அதற்கு இந்திரிய சுகமே தூண்டுகோல். இயற்கைக்கு மாறானதைத் தன் கபாலத்தாலே கல்பித்துக்கொண்டு வாழ்க்கையையே வீணடிப்பது, ஒரு பிறழ்வே.

“இதனால்தான் சொன்னேன் - சமுதாயப் பார்வை, ஒரு வரையறுக்கப்பட்ட பட்டியலால் நிர்ணயிக்கப்படுகிறது என்று. இந்தப் பட்டியலும் எல்லாக் காலங்களிலும், எல்லாச் சமுதாயங்களிலும், எல்லாத் தேயங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒருவருடைய தனி வாழ்க்கையிலும் கூட, இது காலப் போக்கால் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.”

“அப்பாடி! பொழிந்து தள்ளிவிட்டாயே. பண்டிதன் என்பதை நிரூபித்துவிட்டாய். கல்வியோடு அனுபவமும், எண்ணத் தெளிவும் சேரும்போது, ஞானம் பிறக்கிறது. ஒருவருக்குக் கிடைக்கும் இந்த ஞானம், எல்லோருக்குமே பயன்படும் பொதுவான ஞானம் அன்று. அவரவர், தத்தம் உள்ளுணர்வால் உணர்ந்துகொண்டு, தம் வாழ்க்கைக்கு ஏற்றாற்போலே வகுத்துக் கொள்ளும் ஞானம். உனக்கு, இது இயல்பாகச் சித்தித்திருக்கிறது. நீ சொன்ன யாவும், மேம்போக்காகக் கேட்கக் கூடிய விஷயம் அன்று. என் அனுபவத்தில், நான் இவ்வளவு ஆண்டுக் காலம் ஆகியும் பெறாத சிந்தனை ஓட்டங்களை, இவ்வளவு குறைந்த வயதில் பெற்றுவிட்டாய்.

 

ந அயம் ஆத்மா ப்ரவசனேன லப்யோ

ந மேதயா ந ப³ஹுனா ஶ்ருதேன.

யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேன லப்ய:

தஸ்ய ஏஷ: ஆத்மா விவ்ருணுதே தனும் ஸ்வாம்

 

என்று முண்டகம் கூறுவதற்கு வழியை நீ உனக்குள் தாபித்துக் கொண்டிருக்கிறாய். இப்படி நிறைய கேள்விகள், எனக்குள்ளும் எழுந்திருக்கின்றன. சிலவற்றுக்கு விடைகளும் கிடைத்திருந்தாலும், பலவற்றை அவற்றுக்கான உத்தரங்களைத தேடும் அளவுக்கு எனக்குத் திறன் இல்லாததால், மேலே சிந்திக்காமல் விட்டுவிட்டேன். இன்று நீ சொன்ன கருத்துச் செறிவுகள், எனக்குப் பல உபாயங்களை அறிமுகப்படுத்தி விட்டன. இந்த வழியில் யோசித்தால், இன்னும் சில கேள்விகளுக்கு விடைகள் கிட்டும்போலத் தோன்றுகிறது.”

“ஐயா! நீங்கள் இவ்வளவு பொறுமையாகக் கேட்டதற்கு நான் பாக்கியம் செய்திருக்கிறேன். நான் பெரும்பாலும், யாரிடமும் இப்படியெல்லாம் வெளிப்படையாக, மனத்தில் தோன்றும் இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு பேசுவதில்லை. என்னவோ தெரியவில்லை. உங்களிடம் இயல்பாகப் பேச முடிகிறது. எல்லாம் அந்த பிறை சூடிய பெருமானின் அருள். எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய்விட்டோம்.”

“எங்கும் போகவில்லை. தடத்தில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வரலாற்றைக் கேட்பதன் பயன் என்ன? உலகத்தின் இயல்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் சான்று அல்லவோ இந்த வரலாறுகள்? இவை போன்ற கட்டாயங்கள் வரும்போது, இவ்வகையில் மானுடம் தன்னுடைய போக்கை, இந்தக் கால, தேச, வர்த்தமானத்தில், இன்னாரால் இப்படி நிர்மாணித்துக் கொள்கிறது, என்பதைச் சான்றோடு அல்லவா அறிந்து கொள்கிறோம்? இதைவிடப் பெரிய வாழ்க்கைக் கல்வி என்ன இருக்கமுடியும்? நன்றாகவே ஆயிற்று நாம் பேசியது. நாம் கதையைத் தொடருவோம்” என்றார் பிரதாபர்.

“சிவமாறர் ஆண்ட மொத்தக் கங்கப் பகுதியின் நிர்வாகத்தையும் துருவர் கைப்பற்றி, அவருடைய தம்பி, விஜயாதித்தியன் வசம் ஒப்படைத்தார் என்று சொன்னேன். இராமன் காட்டுக்குப் போனபோது, எப்படி அயோத்தியைப் பரதன் காத்துவந்தானோ, அப்படி விஜயாதித்தியன், சிவமாறர் வரும்வரைக் கங்கத்தைக் காத்து வந்தான் என்று சொல்வதுண்டு. இந்தச் சண்டைக்குப் பிறகு கங்கம், தன்னுடைய தனித்த இறையாண்மையை இழந்து, முழுக்க முழுக்க இராட்டிரக் கூடத்துக்கு அடிபணியும் ஒரு சிற்றரசாக ஆகிவிட்டது.

“ராஜாங்க நுணுக்கத்தில் வல்லவரான துருவராஜா, மீண்டும் கங்கம் தலையெடுத்து விடக்கூடாது என்னும் குறிக்கோளுடன் கங்க மண்டலம் தொண்ணூற்றாறாயிரத்தை இரண்டு நிர்வாகப் பிரிவுகளாகப் பிரித்தார், ஒரு பகுதியைச் சிவமாறரின் மகன் மாரசிம்ஹனின் கட்டுப்பாட்டிலும், இன்னொரு பகுதியை சிவமாறரின் தம்பி விஜயாதித்தியனுடைய நேரடிக் கட்டுப்பாட்டிலும் வைத்தார். மொத்தக் கங்கத்தையும், சிவமாறரின் பிரதிநிதியாக விஜயாதித்தியன் ஆண்டாலும், இரண்டு கங்கப் பகுதிகளையும் கண்காணித்துத் திறையும் கப்பமும் கைக்கொள்ளத் தன்னுடைய புதல்வர் கம்பராசரை மண்டல ஆள்வானாக நியமித்தார்.”

“கங்கத்தைத் தண்டிப்பதை, முதல்கட்ட நடவடிக்கையாக துருவராஜா எடுத்துக் கொண்டதைக் கவனிக்கும்போது, அவருக்குச் சிவமாறர் மீது எத்தனை கோபம் இருந்திருக்கும் என்று புரிகிறது. இந்தச் சினத்தின் தாக்கத்தைச் சிவமாறர் அனுபவிக்க நேர்ந்ததின் காரணம், ராஜாங்க நிலைமையைக் கணிப்பதில் அவர் இழைத்த பிழைதான் அல்லவா? பெரிய கோவிந்தர் உதவிக்கு அழைத்த போது, வரமாட்டேன் என்று சொல்லி இருந்தால், வரலாறே மாறி இருக்கும்.”

“சிவமாறரின் கணிப்பை அப்படி ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லிவிட முடியாது. தான் முடிசூடுவதற்கு உதவிய ஒரு பேரரசின் மஹாராஜா, தன்னிடம் உதவி கேட்கிறார். அதைச் செய்தால், கங்கத்தின் வருங்காலம் பிரகாசமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. தெரிந்த கடினமான வழியைவிடத் தெரியாத வழியில் போவதற்குத் தயக்கம் ஏற்படுமல்லவா?”

“ஆம். காலத்தின் சதுரங்க விளையாட்டுத்தான் இது. வெளிப்படையாகத் தெரிந்த பெரிய கோவிந்தரின் புகழ், அவருக்கு இணையான திறமை துருவராஜாவிடமும் இருந்தது என்னும் உண்மையை, நீறு மூடிய நெருப்பைப் போல மறைத்துவிட்டது. யாருடைய வல்லமை பெரிது என்று கணிப்பதில் ஏற்பட்ட தவறு, பெரிய இழப்பைக் கொண்டு வந்து விட்டது! பிரபலத்தையும் கீர்த்தியையும் வெளிக் காட்டாமல் இருப்பவர்கள், காலப்போக்கினைத் தடம் புரட்டி விடுகிறார்கள்! இவ்வளவு ஆற்றலை வைத்துக்கொண்டு எப்படித்தான் ஐம்பது ஆண்டுகள், துணைப்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாரோ! நினைக்க நினைக்க வியப்பில் வெடித்து விடுவேன் போல இருக்கிறது.” என்று வியந்தான் விநயன்.இப்படி இவர் கங்கத்தைத் தாக்கும்போது, சிம்ஹபோத்தன், ஆளுவராஜன், ரேணாட்டரசர், வேங்கி அரசர், இவர்களெல்லாம் கங்கத்தின் உதவிக்கு வரவில்லையா?”

“அவர்கள் எப்படி வருவார்கள்? எல்லோரும் திட்டமிட்டு இராட்டிரக்கூடத் தேயத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தவில்லையே? இராட்டிரக்கூடத்தின் உள்நாட்டு உளுக்கு. அதனுடைய பேரரசர் தனித்தனியே உதவிக்கு அழைத்தார். வருவதற்குச் சித்தமானார்கள். அப்படி அழைத்த பேரரசர் அன்று வீழ்த்தப்பட்டு விட்டார். யாரை எதிர்க்க அவர்கள் சித்தமானார்களோ, அவர் இன்று அரியணையில் இருக்கும் பேரரசர். தலைமை யார் என்பதில் உட்பிரிவும் உலைவும் இருக்கும் இரட்டத்தின் நிலை வேறு, மொத்த ஸாம்ராஜ்ஜியத்திற்கும் ஏகோபித்த மன்னராகத் துருவர் அமர்ந்து ஆள்கின்ற நிலைமை வேறு அல்லவா? எப்படி எதிர்ப்பார்கள்? அடலறாத்தானை, இரட்டத்தினுடையது. சிறிய படையை வைத்துக் கொண்டு, சாதுரியமாகத் திட்டமிட்டுத் துருவராஜா, பெரிய கோவிந்தரை வீழ்த்திய விரைவும், வேகமும், எதிர்க்கக் குடுமித்த அரசர்களின் பாதிப் பாரிப்பை நீர்த்து விட்டது. எச்சமிருந்த கடைப்பிடி, இவரே தலைமை தாங்கிக் கங்கத்தைத் தாக்கிய விதத்தைக் கண்டு ஆவியாகி இருக்கும்.”

“துருவ மஹாராஜாவுடைய அரசியல் சாணக்கியத்தைக் கண்டு வியக்கிறேன். இராட்டிரக்கூடத்தை எதிர்க்கத் திறமையுள்ள அரசுகள் மூன்றுதான், அல்லவா? அவந்தி, துண்டகம், கங்கம். அவந்தி நர்மதையைத் தாண்டி வந்து தாக்கிய வரலாறில்லை. மறைமுகத் தூண்டல்தான் அவர்களின் உத்தியாக இருந்ததால், அவர்கள் வந்து தாக்கும் வாய்ப்புக் குறைவு என்று கணித்திருக்கிறார். காஞ்சி, உறவினராகப் போய்விட்டதால், சற்றுத் தயங்கும். அப்படி யோசித்துத் தாக்க முடிவு செய்தாலும், சேய்மையால், வருவதற்கு சற்றுக் காலமும் பிடிக்கும். உடனடி அபாயம், கங்கம் ஒன்று மட்டும்தான். அதனால், ஒரேயடியாகத் தாக்கிவிட்டார். என்ன ஏது என்று சுதாரித்துக்கொள்வதற்குள் கங்கம் வீழ்ந்துவிட்டது.”

“அதேதான். தன்னை எதிர்க்க நினைத்தவர்களுக்கு என்ன ஏற்படும் என்று ஓர் உதாரணமாகக் கங்கத்தைக் காட்டினார். மேலும் இது கலஹமன்று. நாட்டு மக்களை வஞ்சித்து இந்த அரியணை மாற்றம் நடக்கவில்லை. அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஒப்புதலோடு நடந்த ராஜ்ய பரிமாற்றம் என்ற செய்தியை நிறுவ வெகுப்பிரயத்தனம் எடுத்துக்கொண்டார். அதனால், யாரும் ஒன்று சேர்ந்துகொண்டு, மயூரகண்டி நோக்கிப் படையெடுத்து வரவில்லை. சரி, நிறைய நேரம் பேசிவிட்டோம். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. கொடையாகக் கொடுத்த செந்நீர்ப் பொதுவினை குறித்துச் சில அபிப்பிராய பேதங்கள் கிளம்பி இருக்கின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டும். மீண்டும் அவகாசம் கிட்டும்போது சொல்லி அனுப்புகிறேன்.” என்று புறப்பட்டார் பிரதாபர்.

 

தாரவர்ஷர் துருவராஜர் விநயனுடைய சிந்தையை ஆக்கிரமித்திருந்தார். கோவிந்தராஜா ஓர் இமயம் என்றால், அவருடைய தந்தையார் துருவரோ மேருமலை போல பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருந்தார். முதுமை வரையிலும் தமையனாருக்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்த ஒருவர், அரியணை ஏறுவதற்கான கட்டாயம் வந்ததும், எவ்வளவு இயல்பாகவும் அந்தப் பொறுப்புக்குத் தேவையான விவேகம் மற்றும் வீரத்துடன் எழுச்சியுடன் விகசித்து விட்டார்! இந்த மாற்றத்தை நேரிடையாகப் பார்த்த எவரும் தக்கணம் இனி ஒரு பெரும் மாற்றத்தைச் சந்திக்கப்போகிறது என்று உணர்ந்து கொண்டிருப்பார்கள். கங்கம் அடங்கியது. இனி வேங்கி, காஞ்சி மற்றும் அவந்தியை எப்படி அடக்கியிருப்பார் என்று கேட்கும் ஆர்வம் அவன் சித்தமெல்லாம் நிரம்பி வழிந்தது. எப்போது மீண்டும் பிரதாபர் சொல்லியனுப்புவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...