ஸப்தமியும் வந்தது. பேசிக்கொண்டே போவதற்காக பிரதாபர், புரவிக்கு மாற்றாக, இரதம் ஏற்பாடு செய்திருந்தார். அவர் சொல்லியிருந்தபடி இரண்டு தினங்களுக்கு மாற்றுத் துணிகளை எடுத்துக்கொண்டு, மத்தியான போஜனம் முடித்துவிட்டு, இரதத்துக்காகக் காத்திருந்தான், விநயன். இரதம் வந்ததும், அவனை ஏற்றிவிட்டு, வழிக்குப் பானமும், பழங்களும் தேவநாதய்யா தன்கைப்பட, இரதத்தில் வைத்துவிட்டு வாயிலில் நின்று வேங்கிப்பற்றுக்கு வழியனுப்பி வைத்தார்.
வழியில், பிரதாபர் ஏறிக்கொண்டார். இரட்டபாடி ஸ்தாபனத்தைப் பற்றிச் சொல்லத் துவங்கினார்.
“பெரிய கோவிந்தர், துருவரை எதிர்க்கத் துணைதேடி நட்புக்கரம் நீட்டிய நான்கு தேசங்களில், வேங்கியைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். மற்றவை பிரதிஹாரர்களின் மாளவம், கங்கம் மற்றும் காஞ்சி. இந்த மூன்றுடன், இரட்டத்துக்கு இருந்த உறவு, இரட்டத்தின் ஸ்தாபனத்துடனும், அதனுடைய பாலப்பருவத்துடனும் பின்னிப் பிணைந்திருப்பதால், இரட்டம் எப்படி ஸ்தாபிக்கப்பட்டது மற்றும் எப்படி அதன் பிள்ளைப்பருவம் இருந்தது என்பதைப் பற்றிச் சொல்கிறேன். சொல்கிறேன். பிணக்கின் அடிவேர்களைப் புரிந்து கொள்வாய். சாளுக்கியப் பேரரசர் விக்கிரமாதித்தியர் இறந்தபிறகு, அரியணை ஏறிய அவருடைய புதல்வர் கீர்த்திவர்மரைத் தோற்கடித்துத்தான் தந்திதுர்க்கர் இரட்டபாடியை ஸ்தாபித்தார் என்பது உனக்குத் தெரியும். அதற்குமுன்வரை, அவர் அசலபுரத்தைச் சுற்றி இருந்த பகுதிகளைச் சாளுக்கியப் பேரரசுக்கு அடங்கியவராக ஆண்டுவந்த ஒரு சிற்றரசர். எப்படி அவருக்குத் தானே ஓர் அரசை ஸ்தாபனம் செய்யும் எண்ணம் வந்தது என்பதைப் பல்லவர்களைப் பற்றிச் சொல்லும்போது சொல்கிறேன். இப்போதைக்கு, ஸ்தாபன எண்ணம் வந்தபிறகு என்ன செய்தார் என்று கேள்.
“முதலில், தான் ஆண்டுவந்த பகுதியைச் சாளுக்கியக் கட்டுப்பாட்டில் இருந்து துண்டித்துக் கொண்டார். அவருடைய தலைமையில் போர் புரிந்து அனுபவம் பெற்றவர்களில் பலர், கீர்த்திவர்மரை விட, அவருடைய தலைமைக்குக் கீழே ஒன்று திரளச் சித்தமாக இருந்தார்கள். இப்படி அவர்களுக்கு ஓரெண்ணம் வரக்காரணம், கீர்த்திவர்மரின் அவசியமற்ற காஞ்சிப் படையெடுப்புத்தான். அதுபற்றியும் சமயம் வரும்போது சொல்கிறேன். இப்படித் தனக்குக் கீழே ஒன்று சேர விரும்பிய மஹாசாமந்தர்களுக்குள், தேர்ந்தெடுத்த சிலரைக் கொண்டு ஒரு படையையும் உருவாக்கினார். இதையெல்லாம் செயல்படுத்துவதில், கிருஷ்ணராஜாவும் அவருக்குத் துணை.”
“கிருஷ்ணராஜாவும் ஒரு சிற்றரசராக இருந்தாரா?”
“அல்லர். தலைமைக்கான எல்லாக் குணங்களும் அமையப் பெற்றிருந்தும், பின்புலத்தில் இருப்பதை ஒரு குறையாக நினைக்காத வியத்தியாசமான மனிதர். அவரிடம் இருந்துதான், புதல்வர் துருவராஜாவும், பௌத்திரர் கோவிந்தரும் பற்றற்ற தலைமைக் குணத்தைப் பெற்றிருக்கவேண்டும். கிருஷ்ணராஜா, அரசராக இருந்த தன்னுடைய தமையனார் இந்திரராஜாவுக்கும் உற்ற துணையாக இருந்தவர். இந்த இந்திரராஜாவின் புதல்வர்தான் தந்திதுர்க்கர். தந்தைக்குப்பிறகு, தனயன்தான் அரியணை ஏறுவார் என்று தெரிந்தும். தனக்காகவோ, தன்னுடைய இரண்டு மஹாவீரப் புதல்வர்களுக்காகவோ, ஓர் தனியாட்சியை அமைக்கவேண்டும் என்ற ஆசையால் அலைக்கழியாதவர், கிருஷ்ணமஹாராஜா. திடீரென்று இந்திரராஜா இறந்துபோக, தந்திதுர்க்கருக்கு இளம்வயதிலேயே, அரியணை ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் கிருஷ்ணராஜா. அவரைப் புரிந்து கொள்ளாத சில மூடர்கள், தந்திதுர்க்கரை அவர் ஒதுக்கிவிட்டு அரியணையைக் கைப்பற்றி விடுவார் என்று அவரைக் குறைத்து எடையிட்டார்கள். இன்னும் சிலர், தந்திதுர்க்கர் சீக்கிரமே இறந்ததால், அவருடைய மரணத்துக்கே கிருஷ்ணராஜாதான் காரணம் என்று சொல்லிக்கொண்டும் திரிந்தார்கள்.
“இஃது அப்பட்டமான அலர். தந்திதுர்க்கரின் சாம்ராஜ்ஜியக் கனவின் மேலும், அவருடைய விவேகத்தின் மீதும், வீரத்தின் மீதும், கிருஷ்ணராஜாவுக்கு அபாரமான மதிப்பு இருந்தது. இராட்டிரக்கூட வம்சத் தாமரையை மலர வைக்க வந்த சூரியன் என்றுதான் தந்திதுர்க்கரைக் கிருஷ்ணராஜா புகழ்வாராம். தந்திதுர்க்கருக்கும் சிற்றப்பர் மீது அபரிமிதமான பக்தி. கிருஷ்ணராஜா, அரச பதவியில் இருந்து எவ்வளவுதான் ஒதுங்கி இருந்தாலும், அந்தப் பரமேஸ்வரன் கணக்கு வேறு விதமாக இருந்தது. சந்ததி இல்லாமல் தந்திதுர்க்கர் இறக்க, வேறு வழியின்றி கிருஷ்ணராஜாவுக்கு அரியணையில் அமரவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இப்படிக் கிருஷ்ணராஜா அமர்ந்ததால், அரசுரிமைத் தடமும், இராட்டிரக்கூடம் ஸ்தாபனம் ஆனவுடனேயே வழி மாறிவிட்டது. இஃது இறைவனின் விளையாட்டன்றி வேறென்ன? இதைப்பற்றியும் பின்னர் விரிவாகச் சொல்கிறேன்”
“விந்தையான விஷயம்தான். தந்திதுர்க்கர் எப்படிப்பட்டவர்?”
“தந்தை இந்திரராஜா இறந்ததும், சிறு வயதிலேயே சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் குறுநில மன்னராக ஆன அவருக்கு, அதீதமான அமர்க்கள நிபுணத்துவம் இயற்கையிலேயே வாய்த்திருந்தது. அவருடைய அன்னை பவகணா ஒரு வீராங்கனை. வீரத்தைப் புகட்டிப் புகட்டி வளர்த்தார் என்று ராஜமாதா சீல மகாராணியே சொல்லி இருக்கிறார். தந்திதுர்க்கருக்குத் தன் அன்னை மீது மிகுந்த பக்தி. தன் ஆதிக்கத்தில் இருந்த நான்கு இலக்ஷம் கிராமங்களிலும், தன்னுடைய அன்னை கையால், கொடைகள் அளிக்க ஏற்பாடு செய்தவர். ஒவ்வொரு கிராமத்திலும்! நினைத்துப்பார்! ராஜமாதா பவகணாவின் கருணைப் பார்வை படாத கிராமமே கிடையாது. அப்படி ஒரு ஸ்தானத்தை அவருக்கு அளித்திருந்தார்.”
“போற்றுதற்குரிய பண்புதான். இந்த இராட்டிரக்கூடப் பேரரசே ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கிறது”
“எதனால் அப்படிச் சொல்கிறாய்?”
“பாருங்களேன். தக்கணத்தையே கோலோச்சி வந்தது சாளுக்கிய சாம்ராஜ்ஜியம். அதற்கு அடங்கிய ஒரு குறுநில வமிசத்தில் தோன்றிய ஒருவர், திடீரென்று சாம்ராஜ்ஜியக் கனவு காண்கிறார். தன்னைச் சாளுக்கியப் பேரரசிடம் இருந்து துண்டித்துக்கொண்டு, தன் ஆள்மைக்குக் கீழிருந்த பிராந்தியத்தைப் பெரிதாக்கி, அதன்மூலம் ஒரு படையை உருவாக்கி, அதை வைத்துக் கொண்டு, சாம்ராஜ்ஜிய மன்னனையே தோற்கடிக்கிறார். அவருக்குப் பக்கபலம், தானே அரியணையில் அமரக்கூடிய அளவுக்குத் தகுதி வாய்ந்த ஒரு மூத்த உறவினர். ஸ்தாபனம் செய்தவர் சந்ததி இல்லாமல் இறக்க, ஆட்சியுரிமை உடனேயே தடம் மாறி, வேண்டாம் என்று பின்புலத்தில் இருந்த அந்த மூத்தவருக்கே அரியணை ஏறவேண்டி வருகிறது. அவருக்குப் பிறகு, மீண்டும் ஒரு தடம் மாற்றம். அவருடைய இரண்டாம் மகனும் தந்தையைப் போலவே அரியணை ஆசை இல்லாமல் இருந்தும், கட்டாயத்தின் பேரில், அரியணையில் அமர்கிறார்.
“இப்படிக் கால நிர்ப்பந்தத்தினால், அரியணையில் அமர்ந்தவர்கள், ஏனோ தானோ என்ற அரசர்களாக இருக்காமல், ஆற்றிய சாதனைகள்தாம் எத்துணை அத்புதமானவை! ஒருவர் மானுடர்களால் இப்படியும் வடிக்க முடியுமா என்ற அளவுக்குப் புகழப்படும் கோவிலைப் பூமிப்பாறையில் அகழ்ந்து வடிவமைக்கிறார். ஒருவர், எதிர்ப்புக்களுக்கிடையில் வேண்டா வெறுப்பாக அரியணையில் அமர்ந்து முக்கியமான எதிரிகளை எல்லாம் குறைந்த காலத்தில் வீழ்த்தித் தக்கணத்தில் ஒரு பெரிய பேரரசுக்கு வழி வகுக்கிறார். அவருடைய மகன் அதற்கு ஒரு படிமேலே. அரியணையைத் தந்தை தந்தாலும் ‘அதெல்லாம் வேண்டாம். நீங்கள் சொல்லிவிட்டீர்களே, அது போதாதா?’ என்கிறார். இப்படியெல்லாம் விட்டேற்றிகள் போல நடந்துகொண்டாலும், போரென்று வந்துவிட்டால், ஓடியொளிவதில்லை. ஆவேசமாகப் போர் புரிகிறார்கள். ஒருபக்கம், உறவுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள். மறுபக்கம் பிறழ்ந்த உறவுகளை வெட்டிச் சாய்க்கவும் துணிகிறார்கள். இதெல்லாம் நாம் தினசரி வழக்கில் சாதாரணமாகக் காணும் இயல்புகளா என்ன? ஓர் அரிய சகாப்தத்தின் நிகழ்வை அல்லவா நேரிடையாகக் காணும் பேற்றைப் பெற்றிருக்கிறோம்?”
“அழகாகச் சொன்னாய். இவர்களால் கர்ணாடமும், மத்திய தேசமும், குந்தளமும், கொங்கணமும், கொங்கும், அந்திரமும், திரமிளமும் பரஸ்பரப் பரிவருத்தனைப் பாதையில் பயணித்தன. தக்கணச் சமுதாயத்தின் அடிப்பற்றுக் கோடே ஒரு புதிய பரிணாமம் எடுத்தது. இராசகீயம் என்பது, சமுதாய வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பதால், எந்த ஒரு சமுதாயத்தாலும் ராஜாங்கத்தை விட்டு ஒதுங்கி இருக்க முடிவதில்லை. அதில் ஈடுபடாமல் இருந்தாலும், அது நம்மைப் பீடிப்பதை நம்மால் தடுக்க முடியாது. நிதர்சனம் அப்படி இருக்கும்போது, நல்ல வழியில் ஒரு இராஜாங்கத்தின் தாக்கம் ஏற்படுமேயானால், அந்தச் சமுதாயம் கொடுத்து வைத்த சமுதாயம். இரட்டபாடி, அப்படிப்பட்ட அதிர்ஷ்டமடைந்த சமுதாயம்.”
“தந்திதுர்க்கரின் அன்னையைப் பற்றிச் சொன்னீர்கள். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?”
“அவர் ஒரு சாளுக்கிய இளவரசி” – சிரித்தார் பிரதாபர்.
வியப்பின் எல்லைக்குப் போனான் விநயாதி சர்மன். “என்ன சொல்கிறீர்கள்! சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தியவரின் அன்னை ஒரு சாளுக்கிய இளவரசியா? இது எப்படி நடந்தது?”
“இராக்ஷஸ விவாஹத்தில் எதுதான் நடக்காது?”.
விநயாதி சர்மனின் சுவாரசியம் பெருகியது. “இராக்ஷஸ விவாஹமா?”
“தந்திதுர்க்கரின் தந்தை இந்திரராஜா, அசகாய சூரர். அச்சமற்றவர். எதிர்ப்பைச் சற்றும் இலட்சியம் செய்யாமல் துவம்சம் செய்யும் ஒற்றைக் கொம்பர். மனத்தில் நினைத்ததை நடத்தியே தீருவார், கோவிந்தர் சொன்னது நினைவுக்கு வருகிறதா?”
“கையில் வாள் ஏறிவிட்டால், எத்தனை பேர் எதிரில் வந்தாலும், இவர்கள் இத்தனை பேர்கள் இருக்கிறார்களே, நான் ஒருவன்தானே என்றெல்லாம் யோசிக்கமாட்டேன் என்று சொல்வார் என்றீர்கள்.”
“அவருடைய பெரிய பாட்டனாரும் அப்படித்தான். இல்லையென்றால், சாளுக்கிய வமிசத்தைச் சேர்ந்த அரசன் ஒருவன், தன்னுடைய பெண்ணுக்காக ஏற்பாடு செய்திருந்த ஸ்வயம்வரத்துக்குப் போய், மணப்பெண்ணையே அபகரிப்பாரா?”
“ஹர ஹரா!”
“வாதாபியின் சாளுக்கியப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசாக நாசிகாவையும் வடகொங்கணத்தையும் ஆண்டு வந்த குர்ஜர சாளுக்கிய மன்னர், ஜயாஷ்ரய மங்களராசர், வலபியை ஆண்டு வந்த மைத்ரிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கேடகம், இலாடம் மற்றும் பிருகுகச்சா பகுதிகளைக் கைப்பற்றியதும், தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கேடகத்தில் தன்னுடைய மகள் பவகணாவின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். மங்களராசாவின் ராணி, சோமவம்சத்தினள். இவர்களுக்குப் பிறந்தவள்தான் பவகணா. வாளெடுத்துச் சண்டையிடும் திறல் பெற்றவள். ரூபவதி. இந்திரராஜாவின் தந்தை கற்கரும் சாளுக்கியச் சிற்றரசர். அசலபுரம் மற்றும் உம்பராவதியைச் சுற்றியிருந்த பகுதிகளையும்தான் ஆண்டு வந்தார். மங்களராசா ஆண்டது பக்கத்து இராஜ்ஜியம். மங்களராசாவும் தன்னைப் போலவே சாளுக்கியப் பேரரசின் ஒரு சிற்றரசராக இருப்பதால், கற்கர், தன்னுடைய புதல்வர் இந்திரருக்குப் பவகணாவைத் திருமணம் செய்வித்துத் தன் மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்பினார். விருப்பத்தை வெளிப்படுத்தவும் செய்தார். வீரத்தில் குறைவு கண்டாரோ, வமிசத்தில் குறைவு கண்டாரோ, தெரியாது. ஆனால், மங்களராசர், கற்கரோடு சம்பந்தம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். பவகணாவிற்கு ஏற்ற வரனைத் தேர்வு செய்ய ஒரு சுயம்வரமும் கேடகத்தில் ஏற்பாடு செய்தார்.
“கற்கர் இந்த மறுப்பைப் பெரிதாக நினைக்கவில்லை. நம் விருப்பம் என்பதால், மற்றவர்கள் அதை ஒப்புக் கொள்ளவேண்டுமா என்ன? ஆனால், இளம் வயது. துடுக்குத்தனமும், ஆவேசமும் கொண்ட இளவரசர் இந்திரரால் இந்த மறுப்பைச் சீரணிக்க இயலவில்லை. இளவரசியைக் கடத்த முடிவு செய்தார். அவருக்கு ஒத்து ஊதியவர் கிருஷ்ணராஜா” சிரித்தார் பிரதாபர். விநயாதி சர்மன் முகத்திலும் புன்முறுவல் பூத்தது.
“கேடகம், கிட்டத்தட்ட ஒரு திங்கள் பயணம். தாபி, நர்மதை மற்றும் மாஹி - மூன்று பெரிய நதிகளைக் கடக்க வேண்டும். வேற்று நாட்டுப் பகுதி. தைரியமாகப் படையுடன் போய் விடமுடியாது. வணிகச் சாத்துப் போல வேடமிட்டு, ஒரு சிறிய படையுடன் சென்றார். சுயம்வரப் பந்தலைத் தாக்கினார். யாரும் எதிர்பார்க்கவில்லை. பந்தலில் குழுமியிருந்த இளவரசர்கள் சுதாரித்துத் தடுக்க முயன்றனர். இந்திர-கிருஷ்ணர்களின் ஆற்றலுக்கு முன், அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பவகணாவைப் பலவந்தமாக அபகரித்துக் கொண்டு, நாட்டுக்குக் கொண்டு வந்து விட்டனர். உடனேயே திருமணமும் நடந்து முடிந்து விட்டது.
“மங்களராசா கொதித்தார். திருமணம் நடந்து விட்ட பிறகு, அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. முட்செடி மேல் விழுந்த ஈர ஒற்றை வேட்டியைக் கிழியாமல் எப்படி எடுப்பது? விஷயம் அறிந்த வாதாபியின் அதிபதி விஜயாதித்யர், இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தினார். பவகணாவும் நடந்ததை ஏற்றுக் கொண்டாள். அவளாலும் என்ன செய்ய முடியும்? இந்திரராஜா அவளுக்குப் பெருமதிப்பையும் மரியாதையையும் தந்தார். அவருடைய மூன்று தம்பிகளும் அவளைத் தாய் ஸ்தானத்தில் உயர்த்திவைத்து நடந்து கொண்டனர். பவகணாவுக்கும் இந்திரராஜாவுக்கும் பிறந்த தந்திதுர்க்கர், தக்கணத்தின் வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டார்.”
“பரமேஸ்வரா! ஆகூழ்! எல்லாம் நன்றாக நடந்து விட்டது. என்னால் இந்த அபகரிப்பு செய்யும் இராக்ஷஸ விவாஹத்தை ருசிக்க முடியவில்லை. அந்தப் பெண் எவ்வளவு துடித்திருப்பாள்? கண் முன்னாலேயே, தன்னை மணக்க வந்திருந்தவர்களும், தன்னைக் காக்கப் போராடிய தன் உறவினர்களும், படை வீரர்களும் வெட்டி மல்லாத்தப் படுவதை எப்படிச் சகித்திருக்க முடியும்? இதில், தூக்கப்பட்டுத் தொலைதூரத்தில் இருக்கும் நாட்டுக்குக் கடத்தப் படுவது வேறு” – வேதனையுடன் தலையாட்டினான் விநயன்.
“வீரம்தான் வேண்டிய குணம் என்று பெற்றவர் கருதினால், வேறு எப்படி நடக்க முடியும்?”
“பெண்ணின் விருப்பம் என்று ஒன்று இல்லையா?”
“பெண்ணுக்கு என்று என்ன விருப்பம் இருக்கப்போகிறது? அவளை இழிவாக நடத்தாமல், அவளுக்குப் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் நல்கினால் போதாதா?”
“பெற்றோருக்குப் பெண்ணும் ஆணும் குழந்தைகள்தாமே? ஆண் குழந்தைக்கு அளிக்கப்படும் சுதந்திரமும், உரிமையும் பெண்ணுக்கு அளிக்கப்படுகிறதா என்ன?”
“ஆணின் கதை வேறு. பெண்ணைப் பொறுத்தவரையில்
உபபோ⁴க³காதராணாம் புருஷாணாம் அர்த²ஸஞ்சயபராணாம்|
கன்யாரத்னமிவ க்³ருஹே திஷ்ட²ந்த்யர்தா²꞉ பரஸ்யார்தே² ||
என்று கேட்டதில்லையா நீ?”
“இந்த
ஸ்லோகத்தைக் கேட்டதில்லை. ஆனால், இதே கருத்தைத் திரமிளப் பாடலொன்று
குறிப்பிடுகிறது.
“செல்வம் பிறர்ப்படூஉம்
துவ்வாயின்; இல்லம்
பிறர்க்கென்றே
பேணிய பெண்.”
என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?”
“அதே கருத்துத்தான். பெண்மகளைப் பேணுவது பிறருக்காகத் தான்.”
“அதில் அபிப்பிராய பேதமில்லை எனக்கு. அவளுடைய விருப்பம் என்று ஒன்று இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன். இராஜாங்கக் காரணங்களுக்காக மணம் செய்து வைப்பது, கடத்துவது போன்றவை இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது.”
“ராஜமாதா சீல மஹாதேவியையே எடுத்துக்கொள். சிறு வயதில், நாட்டின் நலனுக்காக மணவினையில் புகுத்தப் பட்டவர். தந்திதுர்க்கரின் மகள் ரேவா மஹாதேவியும் வயதில் மிக மூத்தவரை, அரசாங்கக் கட்டாயத்துக்காக மணம் செய்து கொண்டவர். இவை எல்லாம் மாறுவது கடினம். மிகவும் வேதனைப் பட்டுக் கொள்ளாதே” – சிரித்தார் பிரதாபர்.
“ஹா ஹா! நான் ஒருவன் கவலைப் பட்டு என்ன ஆகி விடப் போகிறது! ஆனால், ஒன்று மட்டும் நான் நிச்சயித்துக் கொண்டுள்ளேன். என்னை விரும்பும் பெண்ணைத்தான் நான் மணம் புரிந்து கொள்ளப் போகிறேன்”
“கவலைப் படாதே! நான் ஏற்பாடு செய்கிறேன். அப்படியே ஆகக் கடவது!”
விநயனின் முகத்தில் வெட்கம் படர்வதைக் கண்டு இரசித்தார்.
“அதுசரி, உன் சௌகரியத்தைப் பற்றிக் கேட்கவே மறந்து போகிறேன். உனக்குச் சத்திரத்தில் எல்லாம் வசதியாக இருக்கின்றனவா? பாடசாலையில் சூழ்நிலை எப்படி இருக்கிறது?”
“எனக்கு என்ன குறை, ஐயா! என்ன பாக்கியம் செய்திருக்கிறேனோ தெரியவில்லை. தேவநாதையா எனக்கு, அவருடைய குடும்பத்தில் ஒருவரைப் போல உபசாரம் செய்கிறார். எல்லாம் மிகச் சௌகரியமாக இருக்கின்றன. பாடசாலை அத்தியக்கர் மிக மதிப்போடு நடத்துகிறார். மாணாக்கர்களும் பெற்றோர்களும் இன்னும் இசையை ஒரு கலையாக மதிப்பதில்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டப் பிரயாசைப் பட்டுக்கொண்டிருக்கிறேன்”
“அரிய சேவையில் ஈடுபட்டிருக்கிறாய். இசையறிவு இல்லாத கல்வி, உப்பில்லாத பண்டம். நீ சத்திரத்தில் தினமும் உண்ண வேண்டியிருக்கிறதே என்று மனத்தைக் குழப்பிக்கொள்ளாதே. அடுத்த வேளைக்கு உணவு எங்கிருந்து வரப்போகிறது என்ற கவலை உன்னைப் போன்றவர்களுக்கு இருக்கவே கூடாது. அரசருடைய குறிக்கோளும் அதுதான். உன்னைப் போன்ற பண்டிதனுக்கு உணவிடாமல், இப்படி அறச்சாலைகள் அமைத்து என்ன பயன்? இந்த ஊர் உனக்கு நன்றி சொல்லவேண்டும். குக்கேஸ்வரனுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் நீ ஏற்கனவே உதவிக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே?”
“குக்கேஸ்வர தீட்சிதர், மிகப் புத்திசாலி. அவருடைய நட்பு கிடைத்தது, என் அதிர்ஷ்டம். நானும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். நான் சங்கீத நிபுணன் அல்லன். இதைத் தாங்கள் என்றும் மனத்தில் வைத்துக் கொள்ளவேண்டுமாய்ப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்”
“உன் திறமை யதேட்டம். நாம் கதையைத் தொடருவோம். எங்கு விட்டேன்?”
“இந்திரராஜாவின் இராக்ஷஸ விவாகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்”
“ஆங்! இந்த இராக்ஷஸ விவாகத்தால் ஏற்பட்ட விரிசல் சீக்கிரமே சரியாகி, ஜயாஷ்ரய மங்களராசருக்குப் பிறகு அரியணை ஏறிய, அவனி ஜனாஷ்ரய புலிகேசிக்கும், இந்திரராஜாவுக்கும் சுமுகமான நிலை நிலவியது. தெருவே பற்றி எரியும் நிலை வந்துவிட்டால், இல்லத்தில் இருப்பவர்களுக்கு இடையே உள்ள சிறு மனஸ்தாபங்கள் மறைந்து போகும் அல்லவா? அதைப்போன்ற நிலைமை இருவருக்கும் வந்து, அதனால், பழைய பிணக்குக்கள் மறைந்து, இருவரும் ஒரே அணியில் போரிடும் கட்டாயம் ஏற்பட்டது. வடமேற்கில் இருந்து, மிலேச்சர்கள் படையெடுத்து வந்து, ஒவ்வொரு நாடாகத் தாக்கினார்கள். அதுவரை பாரதவர்ஷத்தில் பொதுவாகப் படைவீரர்களுக்கிடையே மட்டும்தான் சண்டைகள் நடந்துவந்தன. நிராயுதபாணிகள் தாக்கப்படுவதில்லை, இந்த நிலைமை மாறி, போர்களில் பொதுஜனங்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் எரிக்கப்பட்டன. குர்ஜரர்களின் முக்கியத் தலைநகரான ஸ்ரீமாலா பெருத்த நாசத்தைச் சந்தித்தது.
“மருநிலத்தை ஆண்ட பட்டிகள், சித்தூரை ஆண்ட மௌரியர்கள், மேதந்தகரத்துக் குஹிலர்கள், சுராஷ்ட்ரத்துக்கு வடமேற்கில் இருந்த கச்சேலர்கள், ஸைந்தவர்கள், சுராஷ்ட்ர மைத்திரிகர்கள் இப்படிப் பலரும் தத்தம் நிலங்களைக் காக்கத் திராணி அற்றுப் போனார்கள். பல இடங்கள் நாசமாயின. குர்ஜரத்தைத் தாண்டி, இலாடத்திலும், நாந்திபுரியிலும் மிலேச்சர்களின் ஆதிக்கம் பரவியது. செல்வச் செழிப்புள்ள உஜ்ஜைனி மேல் அவர்கள் நடத்திய முதல் தாக்குதலில், அதனுடைய புகழ்பெற்ற பாதுகாப்பு அரண்கள் உடைக்கப்பட்டன. உஜ்ஜைனியின் பெருவாரியான செல்வங்களை மிலேச்சர்கள் கவர்ந்து செல்ல, நகரம் பலவீனமடைந்தது. இன்னொரு தாக்குதலை எதிர்கொள்ளத் திராணி இல்லாத நிலையில் தலைநகரம் இருக்க, செல்வங்களைக் கவர்ந்து சென்ற மிலேச்சப்படைகள், இன்னும் அதிகப் பலத்துடன் திரும்பி வந்து நாட்டையும் கைப்பற்றலாம் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்ததால், அவந்தியே பீதியில் உறைந்து கிடந்தது.
“அந்தச் சமயத்தில்தான், இந்திரராஜாவும், அவனி ஜனாஷ்ராயரும் ஒன்று சேர்ந்தார்கள். தாபிக்குக் கீழே இருந்து, இந்திரராஜாவின் படையும், நாந்திபுரிச் சேனையும் ஒன்று சேர்ந்து மிலேச்சர் படைகளைத் தெற்கிலும், கிழக்கிலும் முன்னேறாமல் தடுத்தன. பல ஆண்டுகள் நடந்த இந்தச் சண்டைகளில், இந்திரராஜா இறந்ததால்தான், சிறு வயதிலேயே, ஆட்சிப் பொறுப்பை ஏற்க, வேண்டிய கட்டாயம் தந்திதுர்க்கருக்கு ஏற்பட்டது.
“சிறிய தந்தைகளான துருவர், கிருஷ்ணராஜா, நன்னராஜா மூவரும் உறுதுணையாக இருக்க, ராஜமாதா பவகணா நெறிப்படுத்த, இளம்வயது தந்திதுர்க்கர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் அரியணை ஏறியபோது, மிலேச்சர்களின் அபாயம் குறையத் துவங்கியிருந்தாலும், முற்றிலும் போகவில்லை.”
“அவனி ஜனாஷ்ரய புலிகேசியும், இந்திரராஜாவும்தான் இந்த அபாயத்தைக் குறைத்தவர்களா?”
“இல்லை, இவர்கள் செய்தது, மிலேச்சர்களைத் தக்கணத்துக்கு முன்னேறாமல் தடுத்தது மட்டுமே. ஏற்கனவே ஊடுருவியிருந்த மிலேச்சர்களைப் பலவீனமாக ஆக்கியது நாகபடன். புதிய மிலேச்சப் படைகளை, ஏற்கனவே ஆதிக்கம் செய்துவந்த மிலேச்சப் படைகளோடு இணையாமல் தடுத்தது அவன்தான். குர்ஜரப் பிரதிஹார வம்சத்தில் வந்த நாகபடனுடைய முந்தைய சந்ததியர் யாரும் அரசராகக் கோலோச்சி இருந்ததில்லை. மிலேச்சர்களின் அபாயத்தில் இருந்து தடுப்பதற்காகக் காலமே அவனை அனுப்பியது போல திடீரென்று முளைத்து வந்தான். சதுர்புஜதாரி ஸ்ரீமந்நாராயணன் நான்கு ஆயுதங்களை ஏந்திப் பகைவர்களை அழிக்க அவதரித்தது போல வந்தான் என்று கவிகள் பாடும் அளவுக்கு, அவனுடைய வீரம் இருந்தது. அவனுடைய தலைமையில், மற்றப் பிரதிஹார வம்சங்கள் அணி திரண்டார்கள். பெருத்த சேதத்திற்குப் பிறகு, வடமேற்கில் இருந்து, புதிய மிலேச்சப் படைகள் வருவது நின்று போயிற்று. ஏற்கனவே இங்கே இருந்த படைகள் தனிப்பட்டுப் போக, ஆங்காங்கே கிளம்பிய எழுச்சிகளால் அவை நிர்மூலம் செய்யப் பட்டன. இந்த எழுச்சிகளில் அவனி ஜனாஷ்ரய புலிகேசிக்கு மிகப்பெரிய பங்கு இருந்தது. தந்திதுர்க்கருக்கும் இல்லாமல் இல்லை. இவர்கள் இருவரால்தான், உஜ்ஜைனி மீது படையெடுப்பு நடக்கவில்லை. தாபிக்குக் தெற்கே மிலேச்சர்கள் போகாமல் தடுக்கப் பட்டதும் இவர்களால்தான். அதனால்தான், சாளுக்கியப் பேரரசு, மிலேச்சர்களின் எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாமல் தப்பியது.
“சாளுக்கியப் பேரரசர் விக்கிரமாதித்திய ராஜா, மிகவும் மகிழ்ந்து போய், இருவரையும் கௌரவித்தார். புலிகேசி என்று இதுவரையிலும் அழைக்கப்பட்டு வந்தவர், அவனி ஜனாஷ்ரயர் ஆனது இதற்குப் பிறகுதான். இதைத் தவிரச் சாளுக்கிய குல அலங்காரர், பிருத்திவிவல்லபர், அநிவர்த்திக நிவர்த்தியித்ரி என்றும் பெயர்கள் சூட்டப் பட்டார்.”
“அநிவர்த்திக நிவர்த்தியித்ரி – என்ன அழகான பட்டப் பெயர். ‘தீராவினை தீர்த்தான்’” வியந்தான் விநயன்.
“ஆம். விக்கிரமாதித்தரின் காவ்ய ரஸனையைப் பற்றிக் கேட்க வேண்டுமா?”
“தந்திதுர்க்கருக்கும் கௌரவம் கிட்டியதா?”
“கிட்டாமல் என்ன? அவரையும் பிருத்திவி வல்லபர் என்றும் கட்கவலோகர் என்று பாராட்டினார், சாளுக்கியப் பேரரசர். அப்போதிலிருந்து, ஸமாதிகத பஞ்ச மஹாசப்தர், ஸாமந்தாதிபதி என்று தந்தை இந்திரராஜாவின் விருதுகளின் பெயரால் மட்டும் அழைக்கப்பட்ட தந்திதுர்க்கர், பிருத்திவிவல்லபர் மற்றும் கட்கவலோகர் என்று அழைக்கப்படலானர். இதற்குப் பிறகு, இராட்டிரக் கூட அரசர்கள் எல்லோரும், தம்மை ஏதாவது ஓர் அவலோகர் என்று அழைத்துக்கொள்வதைப் பெருமையாகக் கருதிக் கொள்ளத் தொடங்கினார்கள்.”
“அப்படியென்றால், சாளுக்கிய சாம்ரச்சியத்தின் வட எல்லைகள், தந்திதுர்க்கர், அவனி ஜனாஷ்ரயார் என்று அடுத்தடுத்த அடுக்குக்களால் நிர்ணயிக்கப் பட்டிருந்தனவோ?”
“ஆம். மிலேச்ச அபாயம் முற்றிலும் நீங்கிய நிலைதான். ஆனால், மீண்டும் தலை தூக்கிய உட்சண்டைகளால், இந்த எல்லைகள் சீக்கிரமே மாறின. அடுத்த சில வருடங்களில், பிரதிஹாரர்களுக்குள்ளேயே போட்டிகள் நிகழ்ந்தன.”
“மனித சுபாவம் எவ்வளவு விசித்திரமானது. வெளியில் இருந்து அபாயம் வரும்போது, பரஸ்பர பிணக்குக்களை நம்மால் தள்ளி வைத்துவிட்டு, வந்த அபாயத்தை ஒற்றுமையாகச் சந்திக்க முடிகிறது. அபாயமற்ற அமைதியான சூழ்நிலை நிலவும்போது, ஏன் இதை மறந்து, சிறு சிறு குறைகளைப் பெரிதாக்கி, வாழ்க்கையைக் கசப்பாக்கிக் கொள்கிறோம்?”
“இடர்கள் இல்லாமல் வாழ்ந்தால், நமக்கு ருசிப்பதில்லை என்று நினைக்கிறேன். அச்சமும், ஸ்திரமின்மையும் கொண்டு வரும் ஒற்றுமையை விஸ்ராந்தியும், சுகமும் ஏனோ கொண்டுவரத் தவறி விடுகின்றன. மிலேச்சர்கள் விட்டுப் போன இடங்கள், தலைமையின்றிக் கிடப்பதைக் கண்டு, நாகபடன், அவற்றை மெல்ல மெல்லத் தன் தலைமைக்குக் கீழே கொண்டுவந்து ஒரு இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கத் துவங்கினான். பல்லாண்டுகளாக ஆட்சிப் பொறுப்புக்குப் பழக்கப்பட்ட பிரதிஹாரர்களின் பழைய வம்சம், நாகபடனின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சியது. ஹரிச்சந்திரர் என்பவர் ஸ்தாபனம் செய்த வம்சாவளி இது. இந்த வமிசத்தில் வந்தவன்தான், ஸ்ரீமாலாவையும் மேதந்தகபுரத்தையும் மிலேச்சர்களிடம் இருந்து காக்கத் தவறிய அரசன், சந்துகன்.
“சந்துகனுக்குப் பிறகு வந்த அவனுடைய மகன் சீலூகன், தம் வம்சம் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கி, நாகபடன் முயற்சிக்குக் குறுக்கே நின்றான். இவர்கள் இரண்டு பேர்களுக்கிடையே நடந்த இழுபறியால், ராஜபுதனப் பிராந்தியங்கள் அமைதியிழந்து நிலைகொள்ள முடியாமல் தவித்தன. மிலேச்சப் படைகளைப் பொருது பெற்ற வெற்றியால், நாகபடனின் தன்னம்பிக்கையும், அவனுடைய படையின் சாகசமும் அபரிமிதமாக இருந்ததால், சீலூகனால் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. சீலூகன் சுதாரித்துக் கொள்ளுவதற்கு நேரம் கொடாமல், மிக விரைவில், நாகபடன் ராஜபுதனம் மற்றும் குர்ஜரதேசத்தின் பல பகுதிகளைத் தன்னுடைய ஆளுகைக்குக் கீழே கொண்டு வந்து விட்டான். இலாடமும், நாந்திபுரியும் கூட நாகபடனின் ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசுகளாக மாறின. நாகசாரிகாவும், உஜ்ஜைனியும் சீக்கிரமே அவன் வசமாகலாம் என்ற நிலைமை இருந்தது.
No comments:
Post a Comment