Friday, 20 September 2024

05. பிரபூத வர்ஷன்

 அடுத்தநாள் காலையில், விநயன் சத்திரத்தில் இருந்த சதுரங்கப் பலகையை எடுத்துவைத்துக் கொண்டு, கூடத்தில் தானே விளையாடிக் கொண்டிருக்கும்போது, வாசலில் யாரோ வந்திருக்கும் அரவம் கேட்டது. ஒரு தேர்ப்பாகன் வந்தான்.

“விநயாதிசர்மன் தாங்கள்தானா? காலை உணவருந்தி விட்டீர்கள் என்றால், உங்களை அழைத்துக் கொண்டு வரச்சொல்லிப் பிரதாப வர்த்தனரின் உத்தரவு. மதியம் உணவு இங்கே வேண்டாமென்று சொல்லி விட்டு வரச்சொன்னார்”

”நான் சித்தம்தான். இப்போதே கிளம்பலாமா?”

“அப்படியே” என்று வணங்கினான் பாகன். பாதி விளையாடிய சதுரங்கத்தை அப்படியே ஒருபுறமாக வைத்துவிட்டுத் தேவநாதய்யாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். வெளியே ஒரு பாண்டில் நின்றுகொண்டு இருந்தது. ஒரே புரவி. இரண்டு சக்கரங்கள். உட்கார இடம் கிடையாது. நின்று கொண்டே இருவர் போகலாம். முன்னால் கூவிரத்தில் மட்டும் சற்று வேலைப்பாடு. மற்றபடி, அலங்காரம் இல்லாமல் சிறு போக்குவரத்துக்கான தேர். மேலே ஏறிக் கூவிரத்தைப் பற்றி நின்று கொண்டதும், பாகன் மத்திகையால் புரவியை அறாவ, பாண்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பெருவீதி வழியே விரைந்தது.

ஊருக்குச் சற்று ஒதுக்குப்புறமான ஓர் உத்தியானம். அழகான மரங்கள், ஏராளமான பறவைகள். ஒரு பக்கத்தில், ஓடையில் மெல்லிய சத்தத்தோடு நீர் ஓடிக் கொண்டிருந்தது. ஓடையைத் தாண்ட ஒரு சிறு பாலம். அந்தப் பக்கத்தில், வேலிக்கருகே, பெரிய பெரிய பள்ளங்கள் வெட்டிக் கொண்டிருந்தார்கள். கீழே இருந்து வெட்டிய மண்ணை பள்ளத்தில் ஓரமாக அமைத்திருந்த படிக்கட்டு வழியே, வெளியே கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தார்கள். மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பிரதாபர், இவனைப் பார்த்ததும் சிரித்தபடியே, வா வா என்றார்.

இருவரும், சிறு பாலத்துக்கருக்கே இருந்த ஒரு கல் மேடையில் அமர்ந்து கொண்டார்கள். கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு குடிலில் இருந்து, ஒருவன், ஒரு மரத்தட்டில், பழங்களை நறுக்கிக் கொண்டுவந்து வைத்தான். கூடவே, ஒரு பெரிய குவளையில் கருப்பஞ்சாறு. இரண்டு ஓலைச் சடகங்கள்.

நான் ஸ்ரீமந்தபசதியில் இருந்து உன் அன்னை நலம் குறித்து செய்தி சேகரிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பொதுவாக, மடத்தில் உள்ள அஜ்ஜிகளைப் பற்றி வெளியாருக்குச் செய்தி கூறமாட்டார்கள். அதுவும், தனயன் விசாரிக்கிறான் என்றால் நிலவரம் வெளிவருவது அறவே கடினம். அவள் நலமா என்று தெரிந்தால் போதும் என்று சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்.”

விநயனுக்குக் கண்கள் கலங்கின. கை கூப்பினான். “நான் அவளைப் பற்றி நலம் விசாரிப்பது தவறுதான். பற்றறுத்த பிறகு, சுற்றம் விசாரிப்பதால் ஒரு பயனும் இல்லை. திடீரென்று பிரிய நேரிட்டதால், சற்று வெற்றிடம் உள்ளுக்குள். அதை நிரப்ப முடியுமா என்ற பிரயாசைதான். உங்களுக்கு எப்படி மாறு செய்யப்போகிறேன்?”

“ஊருக்கு நல்லது செய். கல்விக்கண்ணைத் திறந்துவை. அதுபோதும். இசை கற்றுத் தரும் ஆசிரியராகப் பாடசாலையில் பணிபுரிய, உன் பெயரைப் பிரஸ்தாபித்திருக்கிறேன். நல்லது நடக்கட்டும்.”

எழுந்து நின்று கைகூப்பியவன் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான்.

“க்ஷேமமாக இரு”

“கடக்கத்தின் நிலைமை இன்று எப்படி இருக்கிறது?” என்று கேட்டபடியே மீண்டும் கன்மேடையில் அமர்ந்தான்.

“சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அடிமட்ட வாழ்வு இயல்பாகிக் கொண்டுவருகிறது என்கிறார்கள். கோவிந்தருடைய காலம் என்னவோ மீண்டும் திரும்பாது. அது போனது போனதுதான்.”

பிரதாபர் குரலில் வேதனை தெரிந்தது. வேங்கி நாட்டுக்காரர். இப்படி இராட்டிரக்கூட அரசருக்காக உருகுகிறாரே? நாம் இருக்கும்போது, இப்படி மண்ணைக் கடக்கத்தோடு உணர்வால் இழைந்திருந்தோமா?

“இரண்டு நாட்களாக வேங்கியின் அரியணை பேதகத்தைப் பற்றியே சிந்தை விசனித்துக் கொண்டிருந்தது. எத்தனை வருடங்கள் நரேந்திரராஜா நாடிழந்து அலைந்து திரிந்து கொண்டிருந்தார்?”

“பஃது வருடங்கள் இருக்கும்”

“பீமராஜா சாதுரியமாகத்தான் செயல்பட்டிருக்கிறார். ராஜாங்க அனுபவம் இல்லாத சிறியேன் நான். எனக்குப் பட்டதைச் சொல்கிறேன். சுயகௌரவம் என்பது நமது மனம் நமக்குள் ஏற்படுத்தும் ஒரு பிம்பம் தவிர வேறில்லை என்று படுகிறது. அதைப் பொருட்படுத்தினால், அது பெரிது. இல்லையென்றால் சிறிது. தம்மை விட வலிமையான ஒரு சக்திக்கு, அடங்கிப்போவது என்பது எல்லோருமே செய்வதுதானே? பீமராஜாவை ஒரு பணியாள் போலக் கோவிந்தர் நடத்தினார் என்று மற்றவர்கள் வேதனைப் படலாம். பீமருக்கு, அப்படி அடங்கி நடந்தது, எவ்வளவு உபயோகமாக இருந்தது? எல்லாரும் யாரோ ஒருவருக்குப் பணியாளாக எப்போதாவது இருந்திருப்பார்கள். நமக்குப் பணியாளாக மற்றவர்கள் பணி செய்யவில்லையா, என்ன? பீமர் மட்டுமா கோவிந்தருக்குப் பணிசெய்தார்? மற்ற அரசர்களும் அன்றோ அவரைத் தலைவணங்கினார்? எல்லோரும் கூலிவாங்கிக் கொண்டு பெருக்கினார்கள் என்றால், இவர் கூலி வாங்காமல் பெருக்கினார் அவ்வளவுதானே?”

“மிக விழுமிய நிலையில் இருந்து சிந்தித்துப் பார்த்தால், நீ சொல்வதில் பொருள் இல்லாமல் இல்லை. சுயகௌரவம் என்பது நமக்குள் நாம் ஏத்திக் கொள்ளும் பிம்பம்தான். சிலமுறை, அது மற்றவர்களின் ஏளனத்தாலும் நமக்கு, புகட்டப்பட்டு விடுகிறது. அப்போதுதான், அதை ஜீரணிக்கும் சக்தியை நாம் இழந்து சுயபரிதாபத்தால் நைகிறோம். இதெல்லாம் அதிகாரம், அடிபணிதல் என்ற இரண்டு எதிரெதிர் படிமங்களில் நம் சிந்தை புகுந்து புறப்படுவதால் ஏற்படும் விளைவுகள். தனத்தின் உபயோகத்தையும், அதன் மேலுள்ள பிடிப்பால் ஏற்படும் அழிவையும் பற்றி நிறைய அலசும் நாம், அதிகாரத்தின் பாதிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள முயல்வதில்லை. மற்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வு, மனிதர்களுக்கு, அதிலும் அரசப் பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு இரத்தத்தில் ஊறிய ஒன்று. அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் பீமராஜாவை, அடுத்த நாட்டின் அரசரைத் துணைக்கு அழைக்கவைத்தது. இதைத் துருவராஜாவின் தமையர் பெரிய கோவிந்தரும் செய்தார். கோவிந்தராஜாவின் தமையர் ஸ்தம்பரும் செய்தார். இந்தச் செயல்கள், இராட்டிரக்கூடப் பேரரசின் வளர்ச்சியை முளையிலேயே கிள்ளிவிட்டு, அதை வளராவிடாமல் நசிக்கச் செய்திருக்கும். ஆனால், அதன் பாக்கியம், அதிகாரத்தின் இயல்பை நன்கு புரிந்து கொண்டவர்களும், அதன் பிரபாவத்தின் மயக்கத்தில் சிக்காதவர்களுமான துருவராஜா மற்றும் கோவிந்தராஜா போன்றவர்கள் அந்தச் சமயத்தில் உயிர்த்திருந்ததால், இராஜ்ஜியத்தைத் தறி கெட்டுப் போய்விடாமல், தடுத்து நிறுத்திவிட்டார்கள்.”

“எனக்கு அந்த வரலாற்றையும் சொல்லுங்கள். வலிமை மிக்க இராட்டிரக்கூடம் எப்படி, இந்தப் பெரிய ஆளுமைகளால் சகோதரச் சண்டைகளின் தாக்கத்தில் இருந்து தப்பியது என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. நான் இதுவரை, துருவராஜாவும், கோவிந்தராஜாவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயேதான் முனைப்புக் கொண்டிருந்தார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டுமன்று. நான் சுற்றிய எல்லா தேசத்திலும் மக்கள், அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.”

“நீ சுற்றிக்கொண்டிருந்த தேசங்கள், இவர்களால் இருவரால் ஆட்டங்கண்டவை. அதனால், அப்படி ஓர் எண்ணம் அங்கே நிலவலாம். ஆனால், அந்தத் தேசங்களை இவர்கள் ஏன் அசைக்க முனைந்தார்கள் என்று தெரிந்துகொள்வது, சிந்தையை விசாலமாக்கும். நீ பண்டிதன். அதனால், சித்தாந்தங்களை அறிந்து கொள்வதிலும், அவற்றை அலசுவதிலும் உனக்கு இயல்பாகவே ஆர்வம் இருப்பதை உணர்கிறேன். உன்னோடு இவற்றை விவாதிப்பது, எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

“கடக்கத்தில், கோவிந்தராஜேஸ்வரம் என்று சிவபெருமான் கோவில் இருக்கிறது அல்லவா? அதன் முன்னால் இரண்டு தூண்களை எழுப்பி, அவற்றின்மீது சிலைகளை நிறுவியிருப்பார்கள். பார்த்திருக்கிறாயா?”

ஆம். பார்த்திருக்கிறேன். கீழே இலங்கேஸ்வரன் ஈஸ்வரனை வணங்குகிறான் என்று எழுதி வைத்திருக்கும். இராவணனை இங்கு ஏன் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைப்பேன். கலவரத்தில், அந்தத் தூண்களை இடித்துத் தரை மட்டமாக்கி விட்டார்கள்.”

ஆமாம். கோவிந்தராஜா மீது உள்ள கோபத்தில், அவரோடு சம்பந்தப்பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கத் தலைப்பட்டு விட்டார்கள். கையாலாகாத்தனத்தினால் அடங்கி இருந்ததால், உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபம்இவர் திரமிளத்தை வென்று திரும்பித் துங்காதீரத்தில் தங்கியிருந்தபோது, கடலுக்கு அப்பால் உள்ள இலங்கைத் தீவின் அரசனும், அமாத்தியனும் நேரே வந்து சமர்ப்பித்த சிலைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட சிலைகள் அவை. இத்தனைக்கும் இவரிடம் கப்பல் படையே கிடையாது. இருந்தாலும், அவனுக்குப் பயம். அவன் கொண்டுவந்து கொடுத்தது, அவன்வணங்கும் பிரபுவின் பிரதிமைகள். தங்கத்தில். அவற்றைக் காஞ்சியில் சிவாலயத்தின் எதிரே வெற்றித் தூண்கள் போல நிறுவிட்டார்.” சிரித்தார் பிரதாபர்.

“அவன் மட்டுமா அஞ்சினான்? இவர் பெயரைக் கேட்டாலே எல்லா அரசர்களும் கலங்கினார்கள். வலியவை என்று இதுகாறும் பெயர்பெற்றிருந்த பெரும்படைகளை வைத்திருந்த பேரரசர்களும், இளவயதுக்காரரான இவரால் சோளப் பயிர்களைப் போல, பிடுங்கப் பட்டார்கள். இவரிடம் தோல்வியுற்ற விரக்தியில் மகத அரசனும், கலிங்கனும் மொத்த மன உறுதியையும் இழந்து வடக்கிருந்து உயிர் துறந்தார்கள் என்றால் பார்த்துக்கொள். மாளவராஜன்? வலிமையான அரசன். நல்ல நிர்வாகி. இவர் காலில் விழுந்து வணங்குவதுதான் தனது செழிப்பைக் காக்க ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்ட விவேகி. தூரத்திலிருந்தே கை கூப்பிவிட்டான். சிறிய சக்திதான் தன்னிடம் இருக்கிறது என்று தெரிந்தபிறகு, எந்த அறிவாளி, ஒரு சக்தி வாய்ந்த வல்லமையுடன் போட்டியிடுவான்? விவேகத்தின் முதன்மைப் படி, தன்னுடைய மற்றும் தன் வைரியின் வலிமையின் வேறுபாட்டையும், மேன்மையையும் அறிவதுதான்.

“இவருடைய மனத்தில், தங்களுக்கு எதிராக எந்த விரோதமும் முளைத்து விடக்கூடாதே என்று எல்லா அரசர்களும், அவரை மகிழ்ச்சியோடு வைத்திருக்க முயன்றார்கள். அப்படிப்பட்ட பராக்கிரமமுடையவர் தனக்கு அரியணை வழங்கப்பட்டபோது, வேண்டாம் என்று மறுத்தார்.”

“ஓ! இவ்வளவு வல்லமை இருந்தும், அதை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பையே வேண்டாம் என்று விட்டாரா? ஏன் மறுத்தார்?”

“ஒருவிதத்தில் பார்த்தால், இவர் அப்படியே, நரேந்திரருக்கு எதிர்மறை. தந்தை தந்த போதும் வேண்டாம் என்றவர். துருவராஜா, அடுத்த அரசராக ஆவதற்கு உரிய எல்லாத் தகுதிகளும் இவரிடம்தான் இருக்கின்றன என்று முடிவுசெய்து, தானாகவே முன்வந்து ‘உன்னை அரியணை ஏற்றுகிறேன்’ என்ற போது. ‘வேண்டாம். நீங்கள் இவ்வாறு சொன்னதே போதும், நீங்களே அரசராக இருங்கள். அதுதான் பொருத்தம். உங்களுக்குக் கீழே இருப்பதையே விரும்புகிறேன்’ என்றவர். இத்தனைக்கும், அவர் துருவருக்கு மூன்றாவது பிள்ளைதான். அவருக்கு அரியணைக்கான வாய்ப்பு, முதலாண் வழியில் வரவே வராது!

“விவரமாகச் சொல்லுங்கள்!”

“கோவிந்தராஜனுக்கு முன்னால் பிறந்தவர்கள் இருவர். கற்கராஜர், அடுத்து ஸ்தம்பர். இந்தக் கற்கராஜர் பெயரைத்தான் இலாடாதிபதிக்கு, அவருடைய தந்தை இந்திரராஜா வைத்தது. துருவராஜருக்கும், அவருடைய தமையர் பெரிய கோவிந்தருக்கும் அதிகார மோதல் நிகழ்ந்தபோது, தந்தைக்காகச் சண்டையிட்டதில் காயம்பட்ட கற்கராஜன், தந்தைக்கு முன்னமே உயிரிழந்தார். ஸ்தம்பரும், கோவிந்தராஜாவும் கூடப் பெரியப்பாவுக்கு எதிராகத் தந்தை சார்பில் சண்டையிட்டர்கள்தாம். தமையனிடமிருந்து சண்டையிட்டுத்தான் அதிகாரத்தைப் பறித்தார் துருவ தாரவர்ஷர். பறித்தவர் தக்கவும் வைத்துக் கொண்டார். இன்னொரு அதிகார இழுமுறி இது.

“அரசியல் குரூரமானதுதான் இல்லையா?”

“உடனேயே அப்படி முடிவுக்கு வந்துவிடாதே. அதிகாரம் என்னவோ பறிக்கப் பட்டதுதான். ஆனால், ஏன் அப்படிப் பறித்தார் என்ற காரணம்தான் நம்மைப் போன்றவர்களுக்கு அந்தப் பறிமுதலை நியாயப் படுத்த வழி செய்கிறது. அது இன்னொரு பெரிய கதை. பிறகு சொல்கிறேன்” – சிரித்தார் பிரதாப வர்த்தனர்.

“அடடா, ஏற்கனவே வேங்கி நாட்டு இளவரசி, இராட்டிரக் கூடத்துக்கு எப்படி இராஜமாதாவாக ஆனார் என்ற கதை எச்சம் இருக்கிறது. இப்போது துருவராஜா, ஏன் தமையன் பெரிய கோவிந்தரிடமிருந்து அரியணையைப் பறித்தார் என்ற கதையும் சேர்ந்துவிட்டது. கதைக்குள் கதை, விஷ்ணுசர்மனின் பஞ்சதந்திரம் போல் அல்லவோ இருக்கிறது?”

“நினைவு வைத்துக்கொண்டு கேள். சொல்கிறேன்”

“நிச்சயம் கேட்பேன். ஸ்தம்பரை ஏன் துருவராஜா ஒதுக்கினார்?”

“தாம் நிலை நிறுத்திப் பெருக்கிய சாம்ராஜ்ஜியத்தை தனக்குப் பிறகு ஆளச் சரியானவரை நியமிக்க வேண்டும் என்ற கவலை, துருவருடைய ரணகள ஸமர்த்த சிந்தைக்கு இருந்தது. சூரத்தனம், அவருடைய எல்லாப் புதல்வர்களுக்கும் இருந்தாலும், நிர்வாகத் திறமையும் வேண்டுமல்லவா? வெறும் சூரத்தனம் மட்டும் இருந்தால், கங்க மண்டல அரசர் சிவமாறருக்கு ஏற்பட்டதைப் போலத்தான் ஆகும்.

“இரட்டபாடி, அப்போதுதான் பிறந்து வளர்ந்து கொண்டிருந்த சாம்ராஜ்ஜியம். இரண்டாமவரான ரணவலோக ஸ்தம்பருக்குக் கங்க மண்டலத்தின் கண்காணிப்பாளராக நிர்வாகம் செய்திருக்கும் அனுபவம் இருந்தாலும், இராட்டிரக்கூடத்தைச் சுற்றி முளைத்திருந்த பல அபாயங்கள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த சாம்ராஜ்ஜியப் பாரத்தையும் சுமக்கும் திறமை அவருக்கில்லை என்று துருவராஜா அபிப்பிராயப் பட்டார். தன்னோடு, தனக்குச் சரிசமமாக வாளெடுத்து, அபார போர்த்திறமையைக் காட்டிவந்த கோவிந்தராஜாதான் இதற்குத் தக்கவர் என்று அவருக்குப் பட்டது. அவருக்கு நிர்வாகத் திறமை இருக்கிறதா என்று பரிசோதிக்க, அவர் கையில் கொங்கணத்தைக் கொடுத்து நிர்வாகம் செய்யச் சொன்னார். பிறகு இலாடத்தை மேற்பார்வையிடச் சொன்னார். இலாடம் அப்போது ஒரு சிக்கலான நிலைமையில் இருந்தது. இலாடத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த பிரதிஹாரர்களை சமீபத்தில்தான் துருவர் கன்யாகுப்ஜத்தில் பெருத்த தோல்வியுறச் செய்திருந்தார். இரண்டு பிராந்தியங்களையும், கோவிந்தராஜா நிர்வாகம் செய்த விதத்தைப் பார்த்துத் தன்னுடைய முடிவு சரி என்று மகிழ்ந்து, அடுத்த அரசன் இவரே என்று யுவராஜப் பட்டம் அளித்துப் பாரம்பரியமான காந்திகை என்னும் மார்புப் பதக்கத்தையும் அணிவித்தார்.

“தந்திதுர்க்கரைப் போல அகலக்கால் வைத்துவிடாமல், எல்லை விரிவாக்கத்தில் ஈடுபடாமல், செல்வத்தையும் படைகளையும் மட்டும் விருத்தி செய்வதில் முனைப்புக் காட்டி, மிகக் கவனத்தோடு சாம்ராஜ்ஜியத்தை ஸ்திரமாக்கி வைத்திருந்த துருவருக்கு, மூத்தவன் இருக்க, இளையவருக்கு யுவராஜப் பட்டாபிடேகம் செய்து வைத்தால், எங்கே தனக்குப் பிறகு கோவிந்தராஜருடைய தோள்கள், அரியணைப் போட்டிக்குள் சிக்கிப் பங்கப்பட்டு விடுமோ, என்று கவலை எழுந்தது.”

“எனக்குத் தசரதர் இராமபிரானிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

‘இராமா! இன்றிலிருந்து உன்னை, உன்னுடைய நலத்தை இதயத்தில் பேணுகிறவர்கள், நாலாபக்கங்களிலிருந்தும் பாதுகாக்கட்டும். பட்டாபிடேகம் போன்ற நல்வினைகளைச் செயப்புகும்போது, பல தடைகள் நேர வாய்ப்புண்டு. பரதன் நகரத்தை விட்டு வெளியே சென்று தங்கியிருக்கிறான். அவன் திரும்பி வருவதற்குள் உன் முடிசூட்டு விழாவை நடத்திவிட நினைக்கிறேன்.’ என்கிறார்.


“ஸுஹ்ருத³ஶ்சாப்ரமத்தாஸ்த்வாம் ரக்ஷந்த்வத்³ய ஸமந்தத |

வந்தி ப³ஹுவிக்னானி கார்யாண்யேவம் விதானி ஹி ||

 

விப்ரோஷிதஶ்ச பரதோ யாவதே³வ புராதி³த |

தாவதே³வாபிஷேகஸ்தே ப்ராப்தகாலோ மதோ மம ||

 

“மிகச்சரியாக மேற்கோளை எடுத்துக்காட்டினாய். அதே நிலைதான் துருவருக்கு இருந்தது. முதலாண் அரசுரிமையுடைய ஸ்தம்பனோடு முரண்பாடு வந்தால், சாம்ராஜ்ஜியம். சகோதர சண்டையில் சிதறிவிடும் என்ற அச்சத்தால், அரியணையை விட்டுத் தான் இறங்கிக் கொள்ள முடிவு செய்தார். தான் இருக்கும்போதே அதிகார மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டால், அதனால் எழக் கூடிய இன்னல்களைத் தானிருக்கும்போதே தீர்த்துவிட வாய்ப்புக் கிட்டும், தன்னுடைய காலம் முடிவதற்குள் நிலைமை சீரடைந்துவிடும் என்று யோசித்ததால் கோவிந்தரை அழைத்து, ‘நீ அரச பதவியை ஏற்றுக்கொள், நான் விலகுகிறேன்’ என்றார்.

“யாராக இருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டிருக்க மாட்டார்கள். ஆனால், கோவிந்தராஜா அப்படிச் செய்யவில்லை. தந்தையின் பலத்தில், அரியணை ஏறுவதை அவர் விரும்பவில்லை. ‘உங்களுடைய கருணையால், நான்தான் உங்களுக்குப் பிறகு அரியணை ஏறவேண்டும் என்று அறிவித்து, எனக்கு யுவராஜ பட்டாபிடேகமும் செய்துவிட்டீர்கள். நீங்கள் எனக்குக் கொடுத்த இந்த குடும்பப் பதக்கத்தை நீங்கள் இட்ட கட்டளையாகவே நான் அணிந்திருக்கிறேன். இதைவிடப் பெரிய பரிசு எனக்கு வேறு என்ன இருக்கமுடியும்? எதற்காக என்னை நியமித்தீர்கள் என்று அறிந்துகொண்டிருக்கிறேன். அதற்குப் பங்கமேற்படும் நிலை ஏற்பட்டால், நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.

“அடடா! அதாவது, துருவருக்குப் பிறகு, தான் அரியணை ஏறுவதை ஒருவேளை ஸ்தம்பராஜா தடுத்தால், கவலைப் படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாரோ? அந்த மாதிரி சொன்னார் என்றால், எந்த அளவுக்கு அவருக்குத் தன் வலிமை மேல் நம்பிக்கை இருந்திருக்கும்!”

“ஆமாம். தன்னுடைய ரியணை ஏற்றம் சமயம் வரும்போது நிச்சயம் நிகழத்தான் போகிறது. ஏனென்றால், இவர்தான் யுவராஜா. அந்தச் சமயத்தில், ஸ்தம்பனுக்கு ஆட்சியைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வலிமை இருந்தால் பெற்றுக் கொள்ளட்டும். அப்படிப் பெற்றுக் கொண்டுவிட்டால், அதை ஒப்புக் கொண்டுவிட்டு விலகிப் போய்விடுமோம். இப்போதே அதைத் தக்கவைத்துக்கொள்ளத் தந்தையின் துணையை ஏன் நாடவேண்டும் என்பது அவருடைய நினைப்பாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை, அதிகாரம் என்பது அதைக் காப்பாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவனிடம், மேட்டில் இருந்து பள்ளத்தில் போய்த் தங்கும் நீரோட்டம் போலத் தானாகக் குவிய வேண்டும். முட்டுக் கொடுத்தும் தொடுப்புக் கட்டியும் வெளியில் இருந்து மற்றவரால் நிறுத்தப் படக்கூடாது. அப்படி நிறுத்தப்படுவது மெய்யான அதிகாரம் அன்று, என்பார். இதை அவரே என்னிடம் சொல்ல, நான் கேட்டிருக்கிறேன்” என்றார் பிரதாப வர்த்தனர்.

வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த விநயனின் வாய் இன்னும் அதிகமாகப் பிளந்தது. சட்டென்று எழுந்து நின்றான். அவரை நமஸ்கரித்தான்.

“ஐயா! தாங்கள் யார்? .... ஒரு நாட்டுக்கு அரசரைப் போலப் பேசுகிறீர்கள். இந்த நாட்டு மன்னர் உங்களுடன் ஆலோசிக்கிறார்.  " நாக்குக் குழறியது அவனுக்கு. எவருமே எதிரில் நிற்கக் கூட அஞ்சும் பிரபூத வர்ஷர், தங்களிடம் பேசி இருக்கிறாரா? அதுவும், இப்படி நெருங்கியிருப்பவர்களுக்கும் கேட்கக் கிடைக்காத ராஜாங்க விஷயங்களின் அடித்தளத்தில் ஓடும் தனிப்பட்ட உணர்வுகளையும், காரணங்களையும் உங்களிடம் நேரில் சொல்லிப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால், நீங்கள் எவ்வளவு பெரியவராக இருக்கவேண்டும். இப்படி ஒரு தகுதியும் இல்லாத என்னைச் சமமாக உட்கார வைத்து, இதையெல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். எனக்கு எதுவும் ஓடவில்லை. ஒரே படபடப்பாக இருக்கிறது. நான் ஏதாவது துடுக்காகப் பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்றான். அவன் உடல் நடுங்கியது. முகம் வெளிறிப் போயிற்று.

கண்களை மூடிக்கொண்டான். திறந்தான். ‘இறைவா!’ என்றான். பிரதாபருடைய காலில் மறுபடியும் மறுபடியும் விழுந்து வணங்கினான்.

புன்முறுவலுடன், அவனையே பார்த்துக் கொண்டு அவன் நடுக்கம் அடங்குவதற்காகக் காத்திருந்தார் பெரியவர். உபவனத்தில் இருந்த தடாகத்தில், சிறு சிறு அலைகள், வட்டம் வட்டமாக உருவாகிக் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. இதுவரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளைக் கொக்கு, சுவாதீனமாகப் பறந்து வந்து, தடாகத்தின் கரையில் அமர்ந்து, இப்படியும் அப்படியுமாகக் கழுத்தை அசைத்துக் கொண்டது. தொட்டாலே உடைந்தபோகும் உருகி உறைந்த மெல்லிய மெழுகுக் குச்சியைப் போல இருந்த கால்களால் மெல்ல நடந்துவந்து, அவர்கள் அருகில் அச்சப்படாமல் வந்து நின்று கொண்டது.

“மேலே தெரிந்து கொள்ள வேண்டுமா? போதுமா?” என்றார் குறும்புடன். மறுபடியும் எழுந்து நின்று கை கூப்பினான். “சொல்லுங்கள் ஐயா. இவையெல்லாம் பொக்கிஷங்கள். கேட்க எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. இவற்றை வேண்டாமென்று சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றான்.

“உட்கார்ந்துகொள். நான் உட்கார்ந்திருக்கும் போது, நீ நின்றால், உன்னை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே பேசவேண்டும். எனக்குக் கழுத்து வலிக்கும்” பிரசன்னமாகச் சிரித்தார், சட்டென்று விநயன் கீழே அவர் காலடியில் உட்கார்ந்தான்.

“எனக்கு அதிகாரத்தைப் பற்றி ஒன்று தோன்றுகிறது. சொல்லட்டுமா,  ஐயா?”

“சொல் சொல். நீ உலகை எப்படிப் பார்க்கிறாய் என்பதும் மிக முக்கியமானது ஆயிற்றே? எனக்காக இல்லையென்றாலும், உனக்காக அதை நீயே சொல்லிப் பார்த்து, உன் செவியாலேயே நீ அதைக் கேட்க வேண்டும். அப்போதுதான் நம்மால், நம்முடைய மனம் உருவாக்கும் எல்லா இழைகளையும் அரலை தீர உருவித் திம்மை திறப்பிக்க முடியும். சொல் சொல்” என்று தூண்டினார்.

“அதிகாரக் குவியம் பற்றிக் கோவிந்தர் சொன்னதைக் கூறினீர்கள். அதிகாரம் எப்படிப் பிறக்கிறது என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒரு கிராமத்தில் ஒரு மல்லன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனைவிட வலிமையானவர்கள் அங்கே யாருமே இல்லையென்றால், மொத்தக் கிராமமும் அவனுக்கு அடிபணிந்து விடுகிறது. இங்கே வலிமைதான் அதிகாரத்தை உற்பத்தி செய்கிறது. மல்லனிடம் குவிந்து விட்ட இந்த அதிகாரம், அதே கிராமத்தில் இன்னொரு மல்லன் முளைத்து வந்தால், தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த இரு மல்லர்களும் சமபலத்துடன் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கிடையே சமாதானம் ஏற்பட்டால், இவ்வதிகாரம் இரண்டு பேர் நடுவே பரஸ்பரம் பகிரப்பட்டுவிடும். அவர்கள் முரண்டால் துவந்தத்தால் யாருக்கு என்று புனர்நிர்மாணம் செய்யப்படும். அந்தச் சண்டையில் இரண்டு மல்லர்களும் வலுவிழந்து போனால், மொத்த அதிகாரமும் யாருக்குமின்றி சிதறிவிடுகிறது. பிறகு கிராமம் இரு மல்லர்களுக்கு மட்டுமன்றி எவருக்கும் கட்டுப்படுவதில்லை. கிராம ஜனங்கள் ஒவ்வொருவரும் தத்தம் மனம் போன போக்கில் நடந்துகொள்ளத் துவங்கிவிடுவார்கள். அந்தக் கிராமம், சமுதாயம் என்ற அமைப்பை இழந்து கூட்டம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. இதைத்தான் நீங்கள் அதிகாரம், அடிபணிதல் என்பவை இரண்டு எதிரெதிர் படிமங்கள் என்றீர்களோ? ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று பிறப்பதில்லை. சரிதானா ஐயா?”

“சரியாகச் சொன்னாய். ஒருவனிடம் இன்று அதிகாரம் இருக்கிறது என்றால், அந்த அதிகாரம் அவனுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும்? அடிபணியச் சித்தமாக இருப்பவனிடமிருந்துதான் இவனுக்கு மாற்றப்பட்டிருக்கும், இல்லையா? இந்த மாற்றம், மற்றவனால் மனமுவந்து வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது அவனிடமிருந்து பறிக்கப் பட்டதாக இருக்கலாம். அப்படி ஒரு மாற்றம் நிகழந்தபின்னால், அந்தக் கிராமத்தில் இருப்பவர்கள், இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், இந்த அதிகாரத்தை நான் மதிக்கமாட்டேன் என்று சொல்ல முடியுமா? அந்தப் புதுத் தலைமையை நிராகரித்துவிட்டு, வாழ்ந்து விடத்தான் முடியுமா? நமக்குப் பிடிக்கவில்லையென்றால், அந்த அதிகாரத்தை எதிர்ப்பதுதான் ஒரே வழி.”

எதிர்க்க முடியவில்லை என்றால், அடங்கிப்போவதை விட வேறு வழியில்லை என்கிறீர்களா?”

“ஆமாம். அதிகாரத்தின் பண்பு இது. இந்தத் தன்மையால்தான் அதிகாரம் நீண்ட நாள் நிலைப்பதும் இல்லை. இதையறிந்து கொள்பவன் விவேகி.”

“அப்படியென்றால், அதிகாரம் என்றாலே அது பறிக்கப்படுவதுதான் என்று ஆகிவிடுமே, ஐயா? ஏனென்றால், யார் அதிகாரத்தைத் தானம் செய்யப் போகிறார்கள்? பறிப்பதற்கு நியாயம் எப்படிக் கற்பிப்பது?”

“வாஸ்தவமான கேள்விதான். ஏன் பறிக்க வேண்டும் அல்லது எப்போது நாம் பறித்ததை நியாயமான செயலாகக் கருதலாம் என்ற கேள்விகளுக்குச் சமுதாயத்தில் அவ்வளவு எளிதில் விடை கண்டுவிட முடியாது. உதாரணத்துக்கு, முதலாண்வழிப்படிதான் அதிகார மாற்றம் நிகழவேண்டுமா என்று நாம் கேள்வி கேட்கலாம். விவாதிக்கலாம். நரேந்திரரும், பீமரும், விஷ்ணுவர்த்தனரும் விவாதித்தார்கள். ஆனால், அவர்களால், கருத்தொருமிக்க முடியவில்லை நரேந்திரருக்கு ஒன்று நியாயமென்றால், பீமருக்கு மற்றொன்று. நியாயாதிபதியாக விஷ்ணுவர்த்தனர். ஆனால், அவருடைய சொல்லை நரேந்திரர் நிராகரித்துவிட்டார். வேறுவழியின்றி, அதிகாரம் நரேந்திரருக்கு மாற்றப்பட்டது. ஆனால், நீ சொன்னதுபோல, பீமராஜா ஒரு சாதுரியமான காரியம் செய்தார். இன்னும் வலிமையான கோவிந்தரை வரவழைத்தார். நரேந்திரருக்கு அதிகாரம் இழக்க வேண்டி வந்தது. அதை மீண்டும் அடைய, எத்துணை கஷ்டங்கள்! கோவிந்தராஜா இறக்கும்வரை காத்திருக்க வேண்டிவந்தது.

“துருவருக்கும் அவருடைய தமையனாருக்கும் இப்படியேதான் பேதகம் இருந்தது. அது இன்னும் சிக்கலான விஷயம். அதைத் துருவர் நிவர்த்தித்த பாங்கு, அவர் எப்படிப்பட்ட பேரரசர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியது. நேரம் கிடைக்கும்போது, அதைப் பற்றியும் சொல்கிறேன். எது நியாயம் என்ற விடையை, அதிகாரத்தை இழந்தவர்களும், அவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்தவர்களும் தங்கள் தங்கள் மனநிலைக்கு ஏற்ப உருவாக்கி, அதில் நியாயம் காண முயல்கிறார்கள். மற்றவர்களையும் அந்த நியாயத்தை ஸ்வீகரிக்க நிர்ப்பந்திக்கிறார்கள். இதைத்தான் நாம் வழக்கத்தில் காண்கிறோம். அதிகாரம் மட்டுமன்று, தனமும் அப்படித்தான். தரித்திரர்கள், தனவந்தர்களை எப்போதும் அசூயையுடன்தானே பார்க்கிறார்கள்? இந்தப் பேதத்தைப் பொறுக்க முடியாதவர்கள் என்ன செய்கிறார்கள்? தங்களை உபயோகப் படுத்திக் கொண்டுதான் அந்தச் செல்வங்களை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்று சினப்பட்டு, அதைப் பறிக்க முயல்கிறார்கள் சிலர். அது முடியாத போது, தம் வலிமையின்மையைக் குறித்துக் கோபப்பட்டுக் கொண்டு வெதும்புகிறார்கள். இன்னொரு வலிமையிருப்பவனைத் தூண்டிவிட்டுச் சண்டை மூட்டி வைக்க முயல்கிறார்கள் சிலர். சிலரோ, முற்பிறப்பில் செய்தவினையின் பலன் இது என்று நம்பி தம் மனத்தைச் சாந்தப் படுத்திக் கொண்டுவிடுகிறார்கள். இந்த எதிர்வினைகள் அவரவர்கள் தாமாகவோ அல்லது அனுபவத்தினாலோ என்ன இயல்பை இதுகாறும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்களோ அதைப் பொறுத்தவை அல்லவா?”

“அதிகார ஏற்றத்தாழ்வுகளும், செல்வத்தின் ஏற்றத்தாழ்வுகளும் வாழ்க்கையில் இயல்புதான் என்கிறீர்களா?”

“வேறென்ன? எல்லோரும் ஒரே போலவா இருக்கிறோம்? பிறப்பிலேயே பிரிவு என்பது ஏற்பட்டே விடுகிறது. இல்லையென்று வெகுளலாம். ஆனால், மெய் அதுதான். இந்த ஏற்றத் தாழ்வுகளால்தான் திருடர்களும் தனவந்தர்களும், ஆளுகிறவர்களும், ஆளப்படுகிறவர்களும் உருவாகுகிறார்கள். தனத்தைப் போன்றே அதிகாரமும் தன்னை வளர்த்துப் போஷிக்க வலிமை உள்ளவனிடமே போய்ச் சேருகிறது. அமோகவர்ஷரிடம், அதிகாரம் இருந்தும், அவருக்கு அதைப் போஷிக்கும் வலிமையில்லாததால் பறிபோனது. கற்கர் துணையாக இருக்கும்போது அவரிடம் தங்கியது. அகன்றதும், விலகியது. இதில் விந்தை என்னவென்றால், அவருடைய அதிகாரத்தைப் பறிக்க நினைத்தவர்களிலும் எந்த ஒருவருக்கும் அதைப் பாதுகாக்கும் வலிமை இருக்கவில்லை. நரேந்திரருக்கு இருந்தது. ஆனால், அவர் தன்னுடைய அதிகாரத்தை வேங்கியில்தான் நிலைநாட்ட வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால், கோவிந்தரால் வலிமையிழந்து திரிந்த கூட்டமோ, மஹாராஜா இறந்ததும், பழிதீர்த்துக் கொண்டு, தம்முடைய இயலாமையின் கோபத்தை நீர்த்துக் கொள்ள முயன்றதே தவிர, அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில், மண்ணைக் கடக்கத்தை விரும்பவில்லை. வலிமையிழந்து கிடக்கும் சிங்கத்தைத் தாக்கும் நரிக்கூட்டம் போலக் கூட்டமாகத் திரண்டு, இரட்டத்தைத் தாக்கினாலும், சிங்கத்தைக் கொன்றபிறகு அந்த நரிக்கூட்டம் என்ன செய்யுமோ, அதைத்தான் செய்தது. அன்றைய வயிற்றுப்பாட்டுக்குக் கிடைத்தது என்ற சந்தோஷத்தில் கொள்ளையடித்தது. நரிகளால் காட்டை ஆளமுடியுமா என்ன?

“நரிக்கூட்டத்துக்குத் தலைமை கிடையாது, விநயா! தலைமை என்பதில்தான் அதிகாரம் குவிய முடியும். அது அதிகாரத்தைத் தன்னுள் குவித்துக் கொள்வதால்தான் தலைமையாகவும் ஆகிறது. அப்படிக் குவித்து வைத்திருப்பதால்தான், அந்தத் தலைமை தாக்கவும் படுகிறது. தாக்குபவன், ஒருவனாகவே இருந்து, அதைக் காக்கும் வல்லமையும் கொண்டிருந்தால், அதிகாரம் அவனிடம் சென்று பரிமளிக்கிறது. அதிகாரத்தை வீழ்த்தும் வல்லமை கொண்ட ஒருவனுக்கு, அதைக் காக்கும் வல்லமை இல்லை என்றால், அதிகாரம் அவன் கையிலிருந்து சிதறி விடுகிறது. சிதறிய அதிகாரம், சமுதாயத்தில் எந்த ஒரு நிலையான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதுவரை பொதிந்து வைத்திருந்த கோபத்துக்கு வேண்டுமானால், அந்தச் சிதறல் சொற்ப நாளைக்கு ஒரு வடிகாலைத் தரலாம். வீழ்த்திச் சிதறடித்தவர்களுக்கு, நாம் சாதித்துவிட்டோம் என்ற திருப்தியைத் தரலாம். ஒரு குறுகிய கால மன அமைதியையும் கூடத் தரலாம். ஆனால், சீக்கிரமே அது, அதிக வல்லமை உடைய ஒருவனிடம் மீண்டும் குவியத் துவங்கும். நீ சொன்ன மல்லர்களின் கதை போலத்தான் ஆகும். சிதறியே இருப்பது, அதிகாரத்தின் அடிப்படை இயல்பு அன்று. பிறகென்ன? மறுபடியும் பழைய கதைதான்.

“கோவிந்தராஜா, வேங்கியைத் தாக்கியதை எடுத்துக்கொள். அவர் அதிகார மயக்கத்தில் இருந்தாரா? இல்லை. பீமர் அவரை வந்து அணுகும் வரை, அவருக்கு இன்னார்தான் வரவேண்டும் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கவில்லை. தமையரும் இளையரும் எதிரெதிர் அணியாகி விட்டபின், இவர்கள் இருவரில், அதிகாரத்துக்குப் பாத்திரமானவர் யார் என்பதை எவர் முடிவு செய்வது? தந்தை விஷ்ணுவர்த்தனருடைய விருப்பமோ  அரசைத் தனயர்கள் இருவருக்கும் பிரித்துத் தருவதில்தான் இருந்தது. தன் விருப்பத்தை நிறைவேற்றும் ஆற்றல் அவருக்கு இருந்திருக்கவில்லை கோவிந்தருடைய துணை மட்டும் பீமருக்குக் கிடைக்காது போயிருந்தால், நரேந்திரர் தன்னுடைய அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பார்/ ஆனால், கோவிந்தரின் நுழைவு, அவரை அதிகாரத்தைக் காக்கும் திராணியற்றுப் போகவைத்து விட்டது. இளையவரை எடுத்துக்கொள். அவருக்கு அந்த அதிகாரம், கோவிந்தரால் கிடைத்தும் விட்டது. ஆனாலும் அது மற்றவர்களால் வழங்கப்பட்டதாக இருந்ததால், அதனுடைய பெருத்த பயனைத் துய்க்க முடியாமற்போனது. துய்க்க முடியாத அதிகாரத்தைப் பெற்று என்ன பயன்?

“செல்வமும், அதிகாரமும் ஒரு சமுதாயத்தை நிர்வகிக்கும் இரண்டு காவல் நாய்கள். கட்டுப்படுத்தத் தெரிந்தவனிடம் அவை விசுவாசம் காட்டும். கூடவே இருந்து அவனுக்குத் துணையும் செய்யும். பலவீனமான யஜமானன் என்றால், அவனையே கடித்துக் குதறி விடும்.”

கையாலாகாத்தனத்தினால் அடங்கி இருந்ததால், உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபம், கோவிந்தருடைய மறைவுக்குப்பின் வெடித்தது என்றீர்கள். அமோகவர்ஷருக்கு அவருடைய தந்தையின் அசாத்திய வலிமையே எதிரிகளை உற்பத்தி செய்துவிட்டதோ?”

“வேறென்ன? ஒரு பெருத்த ஆள்மையின் சந்ததியாகப் பிறப்பது வரம் என்பார்கள். ஆனால், பெரும்பாலும், அது ஒரு சாபமாகி விடுகிறது. சந்ததியைத் தன்னுடைய சுபாவத்துக்கேற்ப வளரவிடாமல், ஒரு நிர்ப்பந்தத்தைத் திணித்துவிடுகிறது. அமோகவர்ஷர் சிறுவர். அதனால், கோவிந்தர் மறைவு என்ற புயலில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டார். கற்கராஜாவுக்கு அந்த நிலைமை ஏற்படவில்லையே? கோவிந்தரையே எடுத்துக்கொள். துருவராஜா போன்றவரைப் பின்தொடர்வது என்பது சாதாரணமானதா? செய்தார். துருவராஜாவை விட ஒருபடி மேலே போய்ச் செய்தார். சிறுபிராயத்தவராகவே செய்தார். விக்கிரமாதித்தியர் செய்ததைக் கீர்த்திவர்மரால் செய்ய முடிந்ததா? இல்லை. சாளுக்கியச் சாம்ராஜ்ஜியமே அவருடைய ஆட்சிக் காலத்தில், சிதறுண்டது. சிலரால், அந்த வரத்தைப் பரிபாலிக்க முடிகிறது. சிலர் அதன் கனத்தைச் சுமக்க இயலாமல் திக்கறுந்து விடுகிறார்கள்.

“துருவராஜாவின் நிர்வாகத்தை வெகு அருகில் இருந்து பார்த்தவன் நான். வீரமும் விவேகமும், தொலைநோக்கும், நிதானமும் சேர்ந்த மஹாராஜர் அவர். அப்படிப்பட்டவருக்குப் பணிபுரியக் கிடைத்தது என் பாக்கியம். பிரபூதவர்ஷர் அரியணை வேண்டாமென்றதும், அப்போதைக்கு, அவருடைய மறுப்பை ஏற்று, அரசராகத் தொடர்ந்தாலும், துருவர், விஷயத்தைக் காலத்தின் போக்கில் விட விரும்பவில்லை. இளையவரான கோவிந்தரை யுவராஜாவாகப் பட்டாபிடேகம் செய்துவைத்ததில் இருந்தே, சுணக்கத்தோடு உலவிவந்த ஸ்தம்பனை அழைத்துப் பேசினார். ஏன் கோவிந்தரைத் தான் அரசராக நியமிக்க விரும்புகிறேன் என்று மறுபடியும் விளக்கிச்சொன்னார். இதுதான் தன் விருப்பம் என்றார். உலகமே பயப்படும் அரசர், தன்னுடைய தந்தை – அவர் விருப்பத்தை இப்படி வலுவாகவும் நேரடியாகவும் தெரிவித்த பிறகு, ஸ்தம்பராஜாவால் என்னதான் செய்ய முடியும்? ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி ல்லை அவருக்கு.

“ஷன்னவதி ஸஹஸ்ரம், கங்கமண்டலம் தொண்ணூற்றாறாயிரம் முழுவதும் அப்போது துருவராஜா கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதனுடைய அரசர் சிவமாறர், துருவராஜாவால் காற்சங்கிலியால் கட்டி இழுத்து வரப்பட்டு ஏலபுரிச் சிறையில் கடுங்காவலுடன் அடைக்கப் பட்டிருந்தார். கங்கமண்டலத்தைச் சிவமாறரின் தம்பி, விஜயாதித்தியன் இராட்டிரக்கூடத்துக்குக் கட்டுப்பட்ட அரசனாக ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

“ஸ்தம்பனுக்குக் கங்கவாடியைக் கொடுத்துவிட்டு, ‘நீ கங்கமண்டலத்தை ஆதிராஜனாக மேற்பார்வை செய்துவா. கோவிந்தன் உனக்குத் துணையாக இருப்பான். ஸர்வ ராஜ்ஜியம் கோவிந்தராஜாவின் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்’ என்று கூறிவிட்டார்.

“அதனால், அவர் இறந்தபிறகு, கோவிந்தராஜாவால் எந்த உள்நாட்டுச் சச்சரவும் இல்லாமல், அரியணை ஏற முடிந்தது. இந்த மாதிரி, ஒரு சுமுகமான ஆட்சிப் பரிமாற்றம் வேங்கி மண்டலத்துக்கு வாய்க்கவில்லை. சகோதரர்களுக்கு இடையே சண்டை வரும் என்று உபசுருதி உள்மனத்துக்குக் கேட்டும், விஷ்ணுவர்த்தனரால் சண்டையைத் தடுக்க முடியவில்லை. துருவரால், ஸ்தம்பரைத் தெருட்டமுடிந்தது போல விஷ்ணுவர்த்தரரால் நரேந்திரரைத் தெருட்ட முடியாததுதான் அதற்குக் காரணம். நரேந்திரர், இளையருக்கு விட்டுக் கொடுக்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். தமக்கை வந்து சொல்லியும் கேட்கவில்லை. இப்படி நம் அரசரைப் பற்றியே குறை சொல்கிறேன் என்று பார்க்கிறாயா?” – அந்தக் குறும்பு, மறுபடியும் அவர் கண்களில் வந்து உட்கார்ந்து கொண்டது.

“இல்லை இல்லை ஐயா. நீங்கள் சொல்வது ஆதங்கத்தோடு என்று புரிகிறது. நீங்கள் இராட்டிரக்கூடத்தோடு உணர்வால் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களைப்போல எனக்கு இராட்டிரக்கூடத்தோடு ஒன்றுதல் இருக்கிறதா என்று நான் என்னையே இப்போதெல்லாம் கேட்டுப் பார்த்துக்கொள்கிறேன். இல்லையென்றுதான் என் மனம் உத்தரம் தருகிறது. உங்களுக்கு எப்படி, இந்த மாதிரி ஒரு பிணைப்பு ஏற்பட்டது என்று தெரிந்துகொள்ள ஆசை. என்றாவது, சொல்ல முடியுமானால், சொல்லுங்கள். அதேசமயத்தில், உங்களுக்கு வேங்கிமண்டலம் மீதும் ஈர்ப்பு இருப்பதைக் காண்கிறேன். வேங்கியும், இரட்டமும் ஒரே குடையின் கீழ் நிர்வகிக்கப்பட்டால், உங்களை விட மகிழ்ச்சியானவர் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

“உங்களோடு பேசப்பேச, எனக்கு நாடு என்பது என்ன என்பதைப் பற்றியெல்லாம் மிகவும் யோசனை தோன்ற ஆரம்பித்திருக்கிறது, ஐயா. நாடு என்னும் உறவு, வெறும் மண்ணை மட்டும் பொறுத்திருக்காமல், பூபதி, என்று அழைக்கப்படும் அந்த நிலத்தை ஆளும் அரசனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்று எனக்குத் தோன்றத் தொடங்கியிருக்கிறது. பூவுக்குப் பதி என்று அதனாலேதான் அரசனைக் குறிப்பிடுகிறோமோ? சொந்த மண், பிறந்தமண் என்ற உணர்வு நமக்கெல்லாம் இருந்தாலும், அந்த நிலத்தோடு நமக்கு உள்ள தொடர்பு என்பது, நாம் அங்கு வளர்ந்த விதத்தையும், இப்போது அங்கிருக்கும் அரசியல் சூழ்நிலையையும், இயற்கைக் கொடைகளையும் பொறுத்ததுதானே தவிர, பிறப்பு என்ற ஒரு காரணத்தால் மட்டுமே ஏற்படுவது அன்று என்று படுகிறது. என்னையே உதாரணமாக எடுத்துக் கொண்டு நான் யோசிக்கும்போது, எந்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பலமுறை யோசித்துப் பார்க்கிறேன். எனக்குச் சரியான விடை கிடைப்பதில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, சாளுக்கிய அரசர்களின் ஆட்சிக்குக் கீழே என் பிறந்தமண்ணான மண்ணைக்கடக்கம் இருந்தபோது, அங்கிருந்தவர்கள், அதைத் தம் நாடாகக் கருதி, சாளுக்கிய வமிசத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள். இரட்டபாடி ஏற்பட்டுவிட்ட பிறகு, அதே மக்கள், இராட்டிரக்கூட அரசர்களுக்கு விசுவாசமானவர்களாக மாறிவிட்டார்கள். சாளுக்கிய விசுவாசம் இராஜத்துரோகம் ஆகிவிட்டது.

“அரியணையில் இருப்பவர் யாரோடெல்லாம் பகைமை பாராட்டுகிறாரோ, அவர்கள் எல்லோரும், அந்த அரியணையின் அதிகாரத்துக்கு உட்பட்ட குடிகளுக்கும் பகைவராகி விடுகிறார்கள். அப்படிப் பகைமை பாராட்டியவர்களோடு, அதே அரசர் பிற்காலத்தில் மணவினைகள் மூலமோ, கச்சங்கள் மூலமோ சுமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு பகைமை பாராட்டுவதை நிறுத்தி விட்டால், இதுவரை பகையாக இருந்த எதிரிகள், குடிகளுக்கும் நண்பர்களாகி விடுகிறார்கள். அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி. குடிமக்களுக்கு என்று தனிப்பட்ட நிலைப்பாடு ஏது?

“என் தாய்க்கும் திரமிளமா, வேங்கி மண்டலமா எது தன்னுடைய தாய்நாடு என்று எப்போதும் குழப்பம் உண்டு. என் தந்தை, இந்த மண்ணோடு தொடர்பைத் துண்டித்துக்கொண்டு கடக்கத்துக்கு வந்து குடியேறி விட்டதும் குந்தளத்தையே தன்னுடைய தேசமாகக் கொண்டு விட்டார். இராட்டிரக்கூட அரசுக்காகத் தான் பணிபுரிந்தார். அந்தக் கலவரம் ஏற்படும்வரை, எனக்கு மான்யகேடம்தான் சொந்த மண்ணாக இருந்தது. இரட்டபாடிதான் என் நாடு. இரட்ட வமிசத்தர்கள்தாம் என் அரசர்கள். அதைத்தவிர வேறு நாட்டை நான் யோசித்துப் பார்த்தது கூட கிடையாது. ஆனால், அந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு என் அடித்தளமே மாறிவிட்டது. ஒரே நாட்டில் பல காலம் இருந்தவர்கள், திடீரென ஒருவருக்கு ஒருவர் எதிரியாகி விட்டார்கள். யார் எதற்காகப் போரிடுகிறார்கள் என்றே புரியவில்லை. இறந்த அரசனுக்காக உயிர் துறப்பது நாட்டுப் பற்றா, அவருடைய இளம் வயது இளவரசனுக்காகப் போரிடுவது நாட்டுப் பற்றா, வெளி தேசத்தில் இருந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் அதே அரச குடும்பத்தைச் சேர்ந்த சந்ததி ஒருவருக்காகப் பணி புரிவது நாட்டுப் பற்றா? என்ற குழப்பம். அவரவர்கள், அவரவர் தரப்பில் நியாயம் கற்பித்துக் கொண்டு அதற்கேற்ப விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தார்கள். பெண்களின் மீது அவ்வளவு அட்டூழியங்கள் நடந்த. இன்னாருடைய மனைவி, இவருடைய மகள், அவருடைய அன்னை என்றெல்லாம் நாகரிகப் பண்பாடு நசிந்துபோய், வன்மமும், குரோதமும், காமமும் கவிந்து கிடந்தன.

“பல வருடங்கள் பல தேசங்களில் அலைந்தபிறகு, இந்தச் சிலகாலமாகத் தான் நான் அமைதியோடு இருக்கிறேன். உங்கள் கருணையால், இங்கேயே ங்கிவிடும் வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. அப்படி நான் இங்கேயே தங்கிவிட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில், மான்யகேடம் இந்தப் பூமியை எதிர்த்துப் படையெடுத்து வந்தால், நான் எந்த நாட்டின் சார்பாகப் படைக்கலனை எடுத்துப் போராட வேண்டும்?

“நாட்டுப்பற்று என்பது, நாட்டின் அரசர் தர்மவானாகவும், மக்கள் காருண்யம் மிக்கவர்களாகவும் இருந்து, நாட்டில் ஏமாற்று, புரட்டுக்கள் இல்லாத சூழ்நிலையும், பொது உபயோகங்களுக்கு ஊறு ஏற்படுத்தாத பொதுஜன மனப்பான்மையும், வழி பிறழ்ந்தவர்களைத் தண்டிக்கும் செங்கோலும் இருக்கும் பட்சத்தில், தானாகவே பிரஜைகள் மனத்தில் உருவாகும் வாழ்வோடு இயைந்த ஒரு உணர்வு, அல்லவா? திணிக்கப்படுவதன்றே நாட்டுப்பற்று?”

“நன்றாக அலசிப் பார்த்திருக்கிறாய், விநயா. பண்டிதனாகப் பேசுகிறாய். நீ சொன்னதுதான் சமுதாயம் என்ற ஒன்றைக் கட்டமைக்கும் அஸ்திவாரம். நிலத்தில் உழுது பயிரிட்டுப் பயிர்களை விளைவித்துத் தனக்கும், தன் குடும்பத்தினர்க்கும் பசிபோக்குவதுதான் குடிகளின் தலையாய நோக்கம். இந்த நிலம் எங்கிருக்கிறதோ, அது தாய்நாடு. நிலமில்லாமல் பணிசெய்து, கூலிவாங்கி, உடல்பிழைப்பவனுக்கு, வேலை கிடைக்கும் மண்ணெல்லாம் தன்னாடுதான். அவனுக்குத்தான் குழப்பமெல்லாம். சரி, கதைக்கு வருவோம். துருவர் இறந்த இரண்டு ஆண்டுகள் அமைதியைக் காத்த ஸ்தம்பராஜா, மனம் பிறழ்ந்தார். கோவிந்தரை எதிர்த்து அணி சேர்க்கத் தொடங்கினார். துருவர் எதைத் தடுக்க நினைத்தாரோ, அது நடந்தே விட்டது.”

“சிவசிவா! யார் அவருடைய மனத்தைக் கலைத்தது?”

“அவரேதான் கலைத்துக்கொண்டார் என்று சொல்லவேண்டும். கங்கர்களுடைய தூண்டுதல் கொஞ்சம் இருந்திருக்கலாம். கோவிந்தராஜா, தான் அரசேற்றதும், தந்தையோடு முரண்பட்டு அவரால் விலக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை மன்னித்து இணைத்துக்கொண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.”

“ஓ! துவக்கத்திலேயே சுமுகமாகச் செல்வோம் என்று நினைத்தாரோ? அவர் அரியணை ஏறும்போது என்ன அகவையிருக்கும் அவருக்கு?

உன்னைவிட ஆறேழு வயது அதிகம் இருந்திருக்கலாம்.”

“மிக இளம்பிராயத்தர்! எத்துணை பொறுப்பு!”

“ஆமாம்! துருவருக்குப் பிறகு, அவர் முதன்முறையாக சபையைக் கூட்டியபோது, நானும் சபையில் இருந்தேன். சபையில் பெருத்த அநுபவசாலிகள், மஹாவீரர்கள், பண்டிதர்கள் இருந்தார்கள். அன்று அவர் நடந்துகொள்ளும் விதத்தை வைத்துத்தான் நாடு அவருக்குப்பின் போகுமா, முரண்டு பிடிக்குமா என்பது தெரியவரும் என்பதால், எல்லோரும் புதிய அரசர், எப்படிச் சபையை நடத்தப்போகிறார், என்ன சொல்லுவார் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஸ்தம்பருக்குத்தான் அரியணை தந்திருக்கவேண்டும், கோவிந்தருக்குத் தந்தது தவறு என்று அபிப்பிராயப் பட்ட ஒரு சிலருக்குக் கோவிந்தரின் செயலில் குற்றம் இருக்காதா, இருந்தால், அதைப் பெரிதுபடுத்தி விடலாமே என்ற கனவும் இருந்தது.

“அவர் பெருத்த சரீரம் கொண்டவரல்லர். நெடிதுயர்ந்த உருவமும் கிடையாது. மத்திய தர ஆகிருதி. ஆனால், கேட்பவர்கள் அலட்சியப்படுத்த முடியாத குரலுடையவர். ஒவ்வொரு சொல்லும், இராமபாணம் போலக் குறியைத் தொடாமல் போகாது. ஏதோ, இவர்தான் எப்போதும் அரசராக அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்தி வந்திருக்கிறார் என்பது போல எல்லோருக்கு முன்பும், ஒரு புலி நடப்பது போல நடந்துவந்து, படியேறி அரியணையில் வெகு சுபாவமாக அமர்ந்தார். அவர் பேசி முடித்ததும், அவையோர்கள் எல்லோரும் எழுந்து நின்றுகொண்டு ஜயகோஷம் இட்டார்கள். துருவராஜா முழுமையாகச் செய்யாமல் விட்டுப்போனவற்றை இவர் முழுமை பெறச் செய்துவிடுவார் என்று நம்பிக்கை எல்லோருக்கும் ஏகமனதாய்த் தோன்றிவிட்டது. அது உண்மை என்பதற்கு, அடுத்த இருபது வருடங்களில் இராட்டிரக்கூடம் அடைந்த உன்னதமே சாட்சி.

“அன்று அவர் விடுவித்தவர்களில், பெரிய கோவிந்தரின் புதல்வன், குலச்சுத்தம் இல்லாத ஸ்புரிதவர்ஷனும் ஒருவன். அவனைத் துருவராஜா ஒதுக்கியே வைத்திருந்தார். இன்னொருவர் கங்கவாடி அரசர் சிவமாறர். பெரிய கோவிந்தரும், பல்லவ நந்திவர்மரும் ஒன்று சேர்ந்து, அவருக்குக் கங்கமண்டல அரசின் முடியை அணிவித்தார்கள். பெரிய கோவிந்தருக்குத் துணை போனதால்தான் துருவரால் சிறைப்படுத்தப் பட்டார். பஃது வருடங்களுக்கு மேலே சிறையில் இருந்த அவரை விடுவித்தபோது, கோவிந்தர் சொன்னது, சபையே ஹாஹாகாரம் போடவைத்தது. அவர் அன்று சொன்னார்:

“’அறம், பொருள், இன்பம் என்ற மூன்று வகைப்பட வாழும் வாழ்வில் நம்பிக்கையுடையவன் நான். தந்தையின் காலத்தில், நிலை தாழ்ந்த உங்களுடைய நிலைமையை மீட்டுக் கொடுக்கிறேன். கடல், தன்னுடைய வயிற்றில் எரியும் நெருப்பைப் பொறுக்கவில்லையா? சிறகோடு பறந்து எல்லோருக்கும் தொல்லை கொடுத்துத் திரிந்த பர்வதங்களுக்கு அதே கடல் அடைக்கலம் கொடுக்கவில்லையா? என்னை விட வயதில் பெரியவர்களான நீங்கள், எனக்குத் தந்தையைப் போன்றவர்களே. இந்தப் பூமியைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தொடருங்கள்.” என்று சொல்லி ஒவ்வொருவரின் மதிப்பையும் மீட்டுக் கொடுத்தார்.

“ஆனாலும், இவர் மட்டும் சமாதானமாகப் போக நினைத்துவிட்டால் போதுமா? இளையவன்தானே என்ற மனப்பான்மையில், சிலர். கிளர்ச்சி செய்யப் புகுந்தனர். ஆட்சி உரிமை உனக்குத்தான் வரவேண்டுமென்று ஸ்தம்பனையும் சிலரையும் தூண்டினர். பெரிய வீரரான சிவமாறர், பழையதை மறக்கச் சித்தமாக இல்லை. பெரும் கர்வமுடையவர். விடுதலையாகிக் கங்கமண்டலம் வந்ததும், தம்பி விஜயாதித்தியனிடம் இருந்து, அரசைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, தன்னை ஸ்வதந்திர அரசராகப் பிரகடனப் படுத்திக்கொண்டார், தனக்குத் தானே பெரிய பட்டப் பெயர்களையும் சூடிக் கொண்டார்.”

நான் கங்கமண்டலத்தில் சுற்றிக் கொண்டிருந்தபோது, சிவமாறரைப் பற்றி எல்லோரும் புகழ்படப் பேசியதைக் கேட்டேன். பண்டிதராஜா என்றுதான் குறிப்பிட்டார்கள்.”

ஆமாம். மஹா பண்டிதர். வீரமும் பாண்டித்தியமும் ஒருங்கே அமையப் பெற்ற அசாதாரணமான அரசர். தர்க்கம், நியாயம், சித்தாந்தம், இலக்கணம் என்று பல துறைகளில் தேர்ச்சி உடையவர். பயம் என்பதை அறியாத, ஆக்ரோஷமான சுதந்திரப் போக்குடைய வீரர். எளிதில் சினத்தின் வசப்படுபவராக இருந்ததால், பானுகோபர் என்பார்கள் அவரை. அவர் போர்புரியும் முறையைப் பார்த்தவர்கள், குருதியும் நிணமும் ஒழுகவைத்து, எதிரிகளை ஒரு கணத்தில், யமன் வாய்க்குள் தள்ளிவிடும் பராக்கிரமர் என்று சொல்வதுண்டு. தந்தை ஸ்ரீபுருஷருக்கு ஒரு படி அதிகமாகவே யானைகளின் இயல்புகளைப் பெரிதும் அறிந்தவர்.”

“பசதியில், கஜாஷ்டகம் என்ற ஒரு நூலைப் பார்த்திருக்கிறேன். அதை சிவமாறமதம் என்று சொன்னார் ஒரு துறவி. அதைக் கற்றுக்கொடுத்தால், பேசத்தெரியாத ஊமை கூட, யானைகளோடு பேசுவதில் நிபுணன் ஆகிவிடுவான் என்பார். அந்தச் சிவமாறர் இவர்தானா?

“இவரேதான். யானைகளின் பராமரிப்பு மற்றும் அவற்றைப் போருக்கும், மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்தும் வழிகளைப் பற்றி அவர் செய்த ஆய்வைக் கன்னட மொழிச் செய்யுள்களாக எழுதிய படைப்பு அது. அசுவசாத்திரத்திலும் தனுர்வேதத்திலும் நிபுணர். பிராகிருதம், சமஸ்க்ருதம் மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை உடையவர். தீவிர சமணராக இருந்தபோதிலும், அந்தணர்கள் நடத்தும் கோவில்களுக்கும், அமைப்புக்களுக்கும் மத வேறுபாடின்றி உதவி செய்தவர்.

என்னவோ, துரதிர்ஷ்ட வசமாக அவருக்கும் இராட்டிரக்கூடத்தின் இரண்டு வல்லமை பெற்ற அரசர்களுக்கும் முற்றிலும் ஒத்துப் போகவில்லை. வாழ்க்கையின் பாதிக்காலம் சிறையில் கழிக்க நேர்ந்தது. தான் நல்கிய விடுதலையை அவமதித்துச் சிவமாறர் முரண்பட்டது கோவிந்தருக்குப் பெருத்த கோபத்தை உருவாக்கியது. தன்னை எதிர்க்க நினைத்தவர்களுக்கு அவரை ஒரு உதாரணமாக ஆக்க விரும்பினார். அவரைத் திமிர் பிடித்தவன், நன்றி மறந்தவன் என்பார். அரசராக ஆனபிறகு, கோவிந்தராஜா செய்த முதல் போர், கங்கத்தோடுதான்.

“அஸகாய சூரர்தான். இருந்தாலும், கோவிந்தருக்கு எதிராகத் தன் வலிமையை அதிகமாக மதிப்பிட்டுவிட்டார். கங்கத்தைத் தாக்கிய கோவிந்தராஜாவின் படைகளில், விஷ்ணுவர்த்தனரின் சேனைகளும், ஹைஹையர்களின் சேனைகளும் பங்கேற்றன.”

“வேங்கியோடு சுமுகமான உறவு நிலவியது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதனால், வேங்கிப்படை பங்குகொண்டதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவ்வளவு வடக்கில் இருந்து, ஹைஹையர்களை ஏன் ஈடுபடுத்தினார்?”

“பிரதிஹாரர்கள் வடக்கில், வலுவாகலாம் என்று தோன்றிக் கொண்டிருந்தது அவருக்கு. துருவரிடம் தோற்றதற்கு வஞ்சம் தீர்க்க, இராட்டிரக்கூடத்தின் மீது அவர்கள் படையெடுத்து வந்தால், முதலடி ஹைஹையர்கள் மீதுதான் இருக்க வாய்ப்பிருந்தது. அதனால், ஒரு பெரும்போரின் அனுபவம் அவர்களுக்கு இருக்கவேண்டும் என்று எண்ணினார். அப்படி ஓர் அனுபவத்துக்கு, ஆவேசமான கங்கப்படையை எதிர்ப்பதைவிட வேறென்ன உசிதவழி?

“சிவமாறரை உயிருடன் பிடிக்கவேண்டும் என்ற உத்தரவுடன் சண்டையிட்ட இரட்டசேனை, அப்படியே நடத்தியும் காட்டியது. சங்கிலியைக் காலில் கட்டிச் சிவமாறரை கோவிந்தர்முன் அழைத்து வந்தார்கள். தன்னால் தளையின் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டவன் முரண்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியில், சுருங்கிய கோவிந்தரின் புருவம், இன்னும் பெரிதாகச் சுளித்து முகத்தைச் சிடுசிடுப்பதற்குள், சிவமாறன் கட்டப்பட்டான் என்று புலவர்கள் பாடினார்கள். கோபத்திலிருந்த கோவிந்தர், கங்க இளவரசர்கள் பலரைச் சங்கிலியால் பிணைத்துக் கொன்றார். சிவமாறரை மட்டும் கழுத்திலும் சங்கிலியைக் கட்டச் சொல்லி, தலைநகரின் வீதிகளில் பலரும் பார்க்க நடத்திக் கொண்டுவந்தார். பிறகு சிறையிலும் அடைத்தார்.”

“சோகமான சரித்திரம். சிறையிலிருந்து வெளிவந்து, சிறைக்கே மீண்டும் சென்றுவிட்டார்.”

“ஆமாம். வீரம் வெறும் வாளைச் சுழற்றுவதன்று, விநயா! எதிரியின் வலிமையைச் சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்வதும் வீரம்தான். சிவமாறன் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்த மற்ற எதிர்ப்புக்கள், சூட்டின் உருகிய வெண்ணையாக நீர்த்துப் போயின. கங்கத்துக்கு இணக்கமாக இருந்த நொளம்ப அரசன் சாரு பொன்னேரன், கோவிந்தருக்கு அடிபணிந்தான். மஹாராஜாவும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய, வாளைச் சுழற்றுபவர் அல்லர். மணவினை மூலமாகவும் சில அரசர்களைத் தனக்கு இணக்கமாக்கினார். இளையவர் இந்திரராஜாவின் புதல்வி ரத்னவல்லியைப் பாண அரசர் வித்தியாதரருக்கு மணம் முடித்துக் கொடுத்து பல்லவர்களுக்கு இணக்கமாக இருந்த பாணர்களை, தன் பக்கம் கொண்டுவந்தார். ஸ்தம்பருக்குத் துணையாக நிற்க எவரும் துணியவில்லை. நிலைமையைப் புரிந்துகொண்ட ஸ்தம்பராஜா, தம்பியின் அரசுரிமையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். போரின்றிச் சகோதரச் சண்டையை முடித்தார் கோவிந்தர்” முறுவலித்தார் பிரதாப வர்த்தனர்.

“அசாத்தியமான அரசர்! பிறகு ஸ்தம்பராஜாவுக்கு என்ன செய்தார்?”

“ஸ்தம்பரின் எதிர்ப்பை அவர் பெரிதுபடுத்தவில்லை. தந்தை செய்துவைத்த பங்கீட்டுப்படியே, மீண்டும் அவரைக் கங்கமண்டலத்தின் ஆதிராஜாவாக நியமித்தார். வேங்கியில் நடந்ததையும், மயூரகண்டியில் நடந்ததையும் ஒப்பிட்டுப்பார். எது ராஜாங்க சாதுர்யம்?”

“இவ்வளவு சிறிய வயதில், இப்படி ஒரு விசேஷமான ராஜாங்கத் திறமை! தன்னுடைய வலிமைமேல் எந்த அளவுக்கு அவருக்கு அபார நம்பிக்கை இருந்திருந்தால், இப்படி எதிர்த்த சகோதரனை மன்னித்து ஏற்றுக்கொண்டு, பொறுப்பையும் மீண்டும் திருப்பித் தந்திருப்பார்? அதேசமயம், சிவமாறரை நடத்தியவிதமோ வேறு! ஒருவரை எடுத்துக்காட்டாகத் தேர்ந்தெடுத்துத் தண்டித்து, உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டார், பிறகு இவரை யாரும் எதிர்க்கவில்லையா?”

“கூட்டணி சேர்ந்து யாரும் எதிர்க்கத் துணியவில்லை. எதிர்ப்புக் கனன்று கொண்டுதான் இருந்தது. ஆனால், அடுத்த பஃது வருடங்களில், அத்தனை எதிர்ப்பையும் அணைத்தார். பட்டியல் வைத்துக்கொண்டு, ஒவ்வொருவராகத் தோற்கடித்து, அவர்கள் சின்னங்களை எல்லாம் கவர்ந்தார். எல்லோரும் இவருக்குத் திறை சமர்ப்பித்துத் தாள் பணிந்து, தத்தம் நாட்டையும் செல்வத்தையும் காப்பாற்றிக்கொண்டனர்.”

“எந்தெந்த நாடுகள்?”

“கன்யாகுப்ஜத்தின் மீது படையெடுத்து, பிரதிஹாரன் நாகபடனை ஓட ஓட விரட்டி, குர்ஜரர்களுடைய பலகத்தைக் கைப்பற்றினார். ஒரு விதானத்தின் கீழே ஒரு காப்பவன் நிற்பது போன்ற சின்னம் அவர்களுடையது. நீ பார்த்திருக்க மாட்டாய். கங்கர்களிடமிருந்து குஞ்சரம், வேங்கி, வேமுலவாடா மற்றும் மௌரியர்களிடமிருந்து சாளுக்கிய வராகம், பாண்டியர்களிடமிருந்து மீன், சோழர்களிடமிருந்து புலி, கேரளர்களிடமிருந்து வில், பல்லவர்களிடமிருந்து ரிஷபம், கோசலம், விந்தியம் மற்றும் மாளவத்திலிருந்தும் ரிஷபம், வங்காளத் தர்மபாலனிடமிருந்து தாரை மாதாவின் திருவுருவம், சிங்கள அரசன் அனுப்பிய பதுமையைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். இதைத்தவிர, பனவாசி கட்டியரன், ஆளுப சித்திரவாஹனன் இவர்கள் இருவரும் ஸ்தம்பனுக்குத் துணை நின்றவர்கள். அவர்களும் அடங்கிப் போனார்கள். இப்படி, நான்கு திக்கிலும், இரு ஸாகரங்களுக்கு இடையே, கங்கையிலிருந்து காவிரி வரை கோவிந்தருக்கு எதிர்ப்பென்பதே இல்லாமற்போனது.”

“இவ்வளவு பெரிய பேரரசர் என்பதே தெரியாமல், நான் பாட்டுக்கு மண்ணைக்கடக்கத்தில் வளைய வந்திருக்கிறேன்!” சிரித்தான் விநயாதி சர்மன்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...