Friday, 20 September 2024

10. ஹர்ஷவல்லி

இரண்டு நாட்களுக்குப் பிறகு, காலையில் சத்திரத்தின் தோட்டத்தில் ஜபம் செய்துவிட்டு, முன் கூடத்துக்கு வந்தபோது, அங்கே பிரதாபரின் ஆள் ஒருவன் காத்துக் கொண்டிருந்தான். ‘இன்று நியாயாதிபதி இல்லத்தில் மதிய விருந்தாம். ஐயா, உங்களை உச்சிப் போதுக்கு முன்னாலேயே, அங்கே வந்துவிடச் சொன்னார். உங்களை அழைத்துப்போக வண்டி வரும். இந்த உடுப்பை அணிந்துகொண்டு வரச்சொன்னார்.’ என்று நீல வண்ணத்தில் ஒரு பட்டு உத்தரியத்தையும் தலைச்சாத்தையும் கொடுத்துவிட்டுப் போனான். 

தன்னை நியாயாதிபதி சந்திக்க விரும்புவதாகப் பிரதாபர் முன்பே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. தேவநாதய்யாவிடம் மதிய உணவு வேண்டாம், நியாயாதிபதி வீட்டு விருந்துக்குப் போகிறேன் என்றதும் அவர், “பெரிய இடத்து விருந்து விநயரே! கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் சுதந்திரமான கருத்துக்களை எல்லாம் சற்று அடக்கி வைத்துவிட்டு சாங்கோபாங்கமாக நடந்து கொள்ளுங்கள். எல்லாப் பெரிய மனிதர்களும் பிரதாபவர்த்தனர் போல இருக்க மாட்டார்கள்.” என்றார். கூப விஷயத்துக்குப் பிறகு, அவருடைய சுபாவத்தில் நிறைய மாற்றம். பிரதாபருக்கு வேண்டிய ஆள் என்று நடந்துகொண்டது மறைந்து, நிஜமான மதிப்புடன் நடந்துகொண்டார். அதனால் இது பொறாமையில் தோய்ந்த சொற்கள் அல்ல, தம்மேல் உள்ள கரிசனத்தால்தான் என்று புரிந்துகொண்டவன், ‘கவனமாக இருக்கிறேன், எச்சரிக்கைக்கு நன்றி’ என்றான்.

வண்டி வரும்போது சித்தமாக இருந்தான். நல்ல வெய்யில். நியாயாதிபதியின் மாளிகை ஊருக்கு வெளியே இருந்தது. அவர் தலைநகரத்தில்தான் வசித்து வந்தார். அங்கே, பெரிய அரண்மனையில்தான் அவருடைய சபை கூடும். ஆனாலும், குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை இங்கே ஊருக்கு வந்து, சுற்றுப் பற்றுப் பகுதிகளில் ஏற்படும் வழக்குக்களையும், மற்ற ராஜாங்க விசாரணைகளையும் செய்துவிட்டுப் போவார் என்று பிரதாபர் சொல்லியிருந்தார். வருடத்துக்கு ஒருமுறை, அவருடைய ஊருக்கு ஜாத்திரை சமயத்தில் போவாராம். திரும்பி வந்தபின், அடுத்த பத்தாம் நாள், இங்கே ஒரு விருந்து கொடுப்பது வழக்கமாம். அதற்குத்தான் விநயனை வரச் சொல்லியிருந்தார் பிரதாபர்.

மாளிகையை நெருங்கும்போதே, ஆரவாரமாக இருந்தது. உணவுக்கூடத்துக்காக, வண்ண விரிப்புக்களால் அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் தெரிந்தன. ஏற்கனவே நிறைய பேர் வந்துவிட்டிருந்தார்கள். அவர்கள் வந்த வண்டிகளும், சிவிகைகளும், புரவிகளும் பெரிய திடலில் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றைச் செலுத்தி வந்த பணியாளர்கள் கூட்டமாகக் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு கதையளந்து கொண்டிருந்தார்கள். படைக்கலன்களையும் கவசங்களையும் தாங்கிக் கொண்டு ஒரு சேனாபதி அப்போதுதான் மிடுக்கோடு வந்து சேர்ந்தார். பாதப்படி வைத்து, அவர் இறங்கியதும், அவரோடு கூடவே வந்திருந்த ஒரு வீரன், அவருடைய கவசங்களையும் உடைவாளையும் மற்ற ஆயுதங்களையும் பயபக்தியோடு வாங்கிக்கொண்டு, மாளிகையின் பணியாள் ஒருவன் வழிகாட்ட அவற்றைப் பத்திரப்படுத்தச் சென்றான். பரிவாரம் பின்தொடர அவர் ஆண்களுக்கானத் தனிவாயில் வழியாக உள்ளே சென்றார்.

மாளிகையின் இன்னொரு வாயிலில் சிவிகையில் பெண்டிரும் குழந்தைகளும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை வரவேற்க ஒரு பணிப்பெண்களின் கூட்டமே, நன்கு அலங்கரித்துக்கொண்டு வந்து உதவி செய்து கொண்டிருந்தது.

விநயாதிசர்மனை இறக்கிவிட்டுவிட்டு, வண்டியை ஓட்டிவந்தவன், “திரும்பி வரும்போது, பாதுகாவலரிடம் வீரய்யா என்று கூவச்சொல்லுங்கள் ஐயா, இங்கேதான் இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு வண்டியை நிறுத்தத் திடலை நோக்கிச் சென்றான். வாயிலில் நின்றுகொண்டிருந்த ஒரு காவலன், “தேவரீர் திருநாமம்?” என்று கேட்டான்.

 

“விநயாதி சர்மன். பிரதாபவர்த்தனர் வரச்சொல்லி இருந்தார் “

அதைக்கேட்டுக் காவலன் உத்தரம் தருமுன்பே, அங்கே நின்று கொண்டிருந்த பள்ளி அத்தியக்கர், “விநயனா? வா அப்பா வா” என்று வரவேற்று, அந்தக் காவலன் காதில் ஏதோ சொல்ல, அவன் “நல்லது ஐயா” என்று தலையாட்டினான். பிறகு விநயன் பக்கம் திரும்பி, “வாருங்கள் ஐயா, முதலில் நியாயாதிபதியைத் தரிசித்துவிடலாம்” என்று மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்றான்.

பெரிய வரவேற்புக் கூடம். மேலே அலங்காரத்துக்காகக் கட்டியிருந்த வண்ண வண்ணப் பட்டுச் சீலைகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. மூன்று நான்கு வாயில்கள், நன்றாக இழைக்கப்பட்டு, ஊடே யானைத்தந்த வேலைப்பாடுடன், இரண்டு பக்கமும் ஈட்டியுடன் நின்றிருந்த வாயிற்காப்போர்களால் காக்கப்பட்டுக் கம்பீரமாகக் காட்சி அளித்தன. பொதுவாக அரச பதவியில் இருப்பவர்களின் மாளிகை போலச் செல்வச் செழிப்போடு இல்லை. ஒருவேளை, தலைநகர மாளிகை அப்படி இருக்குமோ என்னவோ. ஆனால் நேர்த்தியாகக் கட்டப்பட்டு இருந்தது. போரினால் பீடிக்கப்பட்ட இடத்தில் இப்போதுதான் எழுப்பப்பட்ட மாளிகை போல இல்லாது, நான் எப்போதிலிருந்தோ இப்படித்தான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

ஒரு வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம், கூடவந்தவன் விநயனைப் பற்றிச் சொன்னதும், அவன் வணங்கி உள்ளே செல்ல வழிவிட்டான். வரவேற்புக் கூடத்தை விட மும்மடங்கு பெரிய கூடம். நிறைய ஆசநங்கள். நடு நாயகமாக தலையில் சிறு தலைக்கட்டு கட்டிக்கொண்டு, அதில் உச்சியணி ஆட, அங்கரக்ஷணியோடு நியாயாதிபதி அமர்ந்திருந்தார். வந்தவர்கள் முதலில் அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்துவிட்டுப் பிறகு ஏற்கனவே இருந்தவர்களோடு உறவு கலந்தார்கள். வந்தவர்களுக்குக் கட்டியம் கூற கூடவே யாரும் வரவில்லை என்றால், அங்கே இருந்த கட்டியங்காரனிடம் ஓலை தர, அவன் அதைப் பார்த்துக் கட்டியம் கூறி, வந்தவர்கள் யார் என்று நியாயாதிபதிக்கு அறிவித்தான். பெரும்பாலும், வந்தவர்களை அவருக்குத் தெரிந்தே இருந்தது. அருகில் வந்த விநயனிடம் என்ன கூறவேண்டும் என்று கட்டியங்காரன் கேட்டபோதுதான், தன்னை என்ன சொல்லி அழைத்துக்கொள்வது என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தான்.

“நான் விநயாதி சர்மன், பாடசாலையில் ஆசிரியர்

கட்டியங்காரன் ஏற இறங்கப் பார்த்தான். “பாட்டனார் மற்றும் தந்தையார் திருநாமம்?”

“பாட்டனார் துர்க்கசர்மா, தந்தையார் தாமோதர சர்மா”

“இருக்கிறார்களா?”

“இருவரும் இல்லை”

“ஊர்?”

“உற்புட்டூரு”

“குத்ரவார விஷயம் உற்புட்டூரா?”

“ஆமாம்”

 

முன்னால் நியாயாதிபதியிடம் பேசிக்கொண்டிருந்தவர் அகன்றதும், கட்டியங்காரன் கூவினான், “வாழி நியாயாதிபதி! வாழி வேங்கி! வாழி சமஸ்த புவனாஷ்ரய நரேந்திர மிருகராஜா! வாழி கலி விஷ்ணுவர்த்தன மஹாராஜா! நியாயாதிபதி சமூகத்தில், குத்ரவார விஷயம், உற்புட்டூர், ஸ்வர்கீய துர்க்கசர்மரின் பௌத்திரர், ஸ்வர்கீய தாமோதரசர்மரின் புத்திரர், கிராம பாடசாலை சங்கீத அத்யாபகர் விநயாதி சர்மர் ஆகமனம்!”

 

நியாயாதிபதியின் கவனம் விநயன் மேல் சென்றது. “வாரும்! சந்தோஷம்! நீர்தான் பிரதாபவர்த்தனர் சொன்ன அந்த சங்கீத ஆசிரியரா? இந்த ஊரில் இதுவரை வாய்ப்பாட்டுக்குப் புருஷ வித்வான் இல்லை. நீர் அந்த வெறுமையை நிரப்புகிறீர். கணித சாத்திரத்திலும் வல்லுநர் என்று கேள்விப்பட்டேன். நல்ல விஷயம். இருந்து உணவருந்திச் செல்லும். உணவுக்குப் பின், உம் பாட்டு கேட்க வேண்டும்” என்றார்.

“தங்கள் சித்தம்” என்று நகர்ந்தான். இப்போது என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி ஒரு தூணுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான். இந்தப் பிரதாபரை எங்கே காணவில்லை? என்று தேடினான். அருகே நாசியை மூழ்கடிக்கும் நறுமணம் சூழ்ந்தது.

“ஓ! நீர்தான் அந்தப் புருஷ வித்வானோ?” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். தங்கமும், மணிகளும், பவளப் பிணையலும் அணிந்துகொண்டு, செல்வச்செழிப்புடன், அங்கம் போர்த்திய முத்துத்தரியத்தை மீறி எழுச்சியுற்ற மார்பகத்தோடு, ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். மையிட்ட அவள் விழிகளின் வீச்சில் ஒரு கணம் நிலைகுலைந்தான் விநயன்.

“ஆம். தாங்கள்?”

“ஹர்ஷவல்லி. கோவில் தாசி.” என்றாள்.

“வணக்கம்” என்றவன் மேலே என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாகக் கண்ணைக் கீழ் நோக்கிக்கொண்டு நின்றான்.

“சாஹஸமாகக் கண்ணைப் பார்த்துப் பேசலாம்” சீண்டினாள். அவன் தர்மசங்கடமாக நெளிவதைப் பார்த்துச் சிரித்தவள். “உம் பாட்டைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். திரிதந்தி வேண்டுமானால் கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு, தரையெல்லாம் மென்மலர் பரப்பிய படுகைதான் என்று மற்றவர்களுக்குத் தோன்றும்படி, ஐதுபட மிதந்து சென்றாள்.

“தேவரீர் உணவருந்தச் சித்தமா?”


பக்கத்தில் ஒருவன் வந்து விநயனைக் கேட்டதும், வந்தது சுதந்திரம் என்று மகிழ்ச்சியுற்றான். சட்டென்று நினைவுக்கு வர, “மாமிச உணவு இல்லை அல்லவா?” என்றான் “இன்றைய விருந்தில், எல்லாம் சாகவர்க்கம்தான். விலக்கில்லாத பானங்களும், அடிசிலும், காய்களும் மட்டுமே பரிமாறப்படும். மறையவர்களுக்குத் தனிக்கூடம் உண்டு. வாருங்கள். நான் அழைத்துச் செல்கிறேன்” என்றவனை நிம்மதியாகப் பின்தொடர்ந்தான். புழைக்கடையில் நிறைய உணவுக்கூடங்கள். இரண்டு மூன்று கிணறுகள். வாளியைச் சேந்திக் கை கால் சுத்திக்குத் தண்ணீர் பலர் இறைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில், நிறைய மரத்துண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒருவன் அந்தத் துண்டுகளை ஓர் அடிமரத்தின் மேல் வைத்துப் பிளந்து கொண்டிருக்க, இரண்டு மூன்று பேர்கள், விறகுக் கட்டைகளைத் தூக்கிக்கொண்டு, தடுப்பால் மறைக்கப்பட்டுப் புகை எழும்பியவாறு இருந்த சமையல் கூடங்களுக்குச் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள்.

விநயனும் கை கால் சுத்தம் செய்துகொண்டு, உணவுக்கூடத்துக்குள் நுழைந்தான். நெடுக பங்க்தியாக, அமர்வதற்குச் சிறு மணைகளும், அதற்கு முன்னால் பெருமணைகளும் வைக்கப்பட்டிருந்தன. வந்தவர்கள் ஒவ்வொருவராக மணையில் அமர்ந்ததும், முன்னிருந்த பெருமணை மீது, ஒருவர் ஓலையால் பின்னப்பட்ட துவிதுவிசம சதுரஸ்ரத்தை வைத்தார். அவருக்குப் பின்னால், தலை வாழையிலையை ஒருவர் வைத்துக்கொண்டே வந்தார். ஓலைக்குவளையை இன்னொருவர் தர, நீர் வார்த்தார் ஒருவர். பங்க்தி நிரம்பியதும். “மூத்த பெருமான் யாரோ?” என்றார் ஒருவர். அவரவர்கள் தம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்துத் தம்மைவிட யார் மூத்தவர் என்று கணித்தனர். சிலர் கேட்டும் உறுதிப்படுத்திக் கொண்டனர். நாராயணசர்மர் என்பவர்தான் எல்லோரைவிடவும் மூத்தவர் என்று முடிவானதும், பங்க்தி விசாரிப்பின் தலைவர், அன்னத்தட்டோடு அவர் முன்னே வந்து நின்றார். சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு, அவருக்கு அன்னத்தைச் சாய்த்துவிட்டு, “ஆஜ்யம்” என்றார். அருகில் சித்தமாக இருந்த ஒருவர் ஒரு மண் கலயத்தைத் தர, அதிலிருந்து ஒரு மரச்சிருக்கால் உருக்கிய இழுதை வாரிச் சொரிந்தார். பெரியவர் மந்திரங்கள் சொல்லி அன்னச் சுத்தி செய்ததும், “பரிமாறலாம்” என்று தலைவர் கூவ, அந்தக் கூடமே உயிர்பெற்றது. அத்தனை பேர் ஒரு சேர உண்டாலும், ஒருவரும் பேசவில்லை. பங்க்தி விசாரிப்பவர்களுடைய குரலும், உணவுப் பொருள்களைக் கூவிக் கொண்டுவரச் சொல்கிறவர்களுடைய குரலும்தான் கேட்டது. அருமையான விருந்து என்பது, உண்பவர்களுடைய முகத்தில் வெளிப்பட்டது.


உண்டு முடித்துக் கை கால் கழுவிக்கொண்டு, தாம்பூலம் தரித்துக்கொண்டு மீண்டும் கூடத்தில் நுழைந்தவர்கள். உணவைச் சிலாகித்துப் பேசியபடியே சிரம பரிகாரம் செய்துகொண்டார்கள். ஒருவர், க்வசித்³ தாரா க்வசித்³ பி³ந்து³ என்ற பாகுபாடே இல்லை. எல்லோருடைய இலையிலும் தாரைதான்” என்று சிரித்தார். காதில் கேட்ட விநயனும், கண்ணமுது பரிமாறலைப் பற்றி ஒருமுறை குக்கேஸ்வரர் எழுதி வாசித்த வெண்பா நினைவுக்கு வரத் தனக்குள் முறுவலித்துக் கொண்டான்.

அருவியாய்க் கொட்டும்; அதிகபட்சம் சொட்டும்;

தருவி தரிசனம் மட்டும் - உருளியின்

கிண்கிணல்; கிட்டா ததூஉம்; குடிற்குடில்

கண்ணமுதின் காட்சி கவின்.

உண்ட மயக்கம் தீர, விநயனும், மற்ற சிலரைப் போல, அரைக் கண்மூடிச் சற்று அயர்ந்தான். ஒரு ஹோரை போலக் கழிந்திருக்கும். “நியாயாதிபதி வாழி! எங்களை மதித்து, இங்கு எழுந்தருளியிருந்து போஜனம் செய்து, எங்களைக் கௌரவித்தமைக்கு நியாயாதிபதி கிருதார்த்தரானார். சங்கீதகோஷ்டியும் கதாகோஷ்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போஜனம் செய்தவர்கள் விருப்பமிருப்பின் அந்தந்தக் கூடங்களுக்குச் செல்லலாம்” என்று ஒருவர் கூடத்தில் நுழைந்து கூவினார். மெல்ல மெல்ல விருந்தினர்கள் கோஷ்டி எங்கிருக்கிறது என்று கேட்டுக்கொண்டு நகர்ந்தனர்.

விநயன் எழுந்துகொள்ளும்போது, பிரதாபர் எதிர்ப்பட்டார். “போஜனம் ஆயிற்றா?” என்றார். அவரைப் பார்த்ததும் புழுக்கம் குறைந்து தென்றல் வீசியது போல இருந்தது அவனுக்கு. “ஆயிற்று. நல்ல உணவு. அங்கே யாரோ சொல்லிக்கொண்டிருந்தது போல,

 

க்வசித்³ தாரா க்வசித்³ பி³ந்து³

க்வசித்³ த³ர்வீ-ப்ரத³ர்ஶனம் .

க்வசித் கடகடா-ஶப்³த³

க்வசித் தத³பி து³ர்லபம்

இல்லை. எல்லாமே தாரைதான். நீங்கள்?”

“ஆயிற்று. ஆயிற்று. என்னோடு வா” என்று அவனை நியாயாதிபதியின் சபைக்கு அழைத்துச் சென்றார். நியாயாதிபதியும் உண்டுவிட்டு வந்திருப்பார் போலத் தோன்றியது. சற்று எளிமையான கோலத்தில் இருந்தார். தன் ஆசனத்தில் வீற்றிருக்காமல், கூடத்தில் அமர்ந்துகொண்டு அவர் தீர்த்து வைத்த ஒரு வழக்கைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்க, அவரைச் சுற்றி நின்றுகொண்டு, பலர் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.

பேசிக்கொண்டே பிரதாபரையும் விநயனையும் பார்த்துத் தலை அசைத்து, அருகே வரச் சைகை காட்டிவிட்டுத் தொடர்ந்து பேசினார்.

“உத்தரகண்டேறுவாடி விஷயத்தில் ஏதோ ஒரு கிராமத்தச்சன் அவன். அவனுக்கு உத்தரகண்டேறுவாடியில் ஒரு பெண்ணுடன் இரகசியமாகப் பழக்கம் இருந்திருக்கிறது. திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே, மனைவியைப் பற்றிக் குறைகளைச் சொல்லி, கிராமணியிடம் அவளை ஒதுக்கி வைத்துவிட விண்ணப்பித்திருக்கிறான். கிராமணி நல்லவன். அவனைக் கடுமையாகப் பேசி, விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டு, மனைவிக்கும் அறிவுரை சொல்லி இருவரையும் சேர்த்து வைத்திருக்கிறான்.

“கிராமணியை எதிர்த்துப் பேசத் துணிவில்லாததால் மனைவியை ஒப்புக்கொண்ட தச்சன், கிராமணி க்ஷேத்திராடனம் போயிருக்கும் சமயத்தில் உத்தரகண்டேறுவாடி போய் அங்கே அந்தப் பெண்ணின் பெற்றோரைப் பார்த்துப் பேசி ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறான். தனக்கு மனைவி கிராமத்தில் இருப்பதாகவும், சொன்னதைக் கேட்பதில்லை என்றும், ஊரை விட்டுத் தன்னைத் துரத்தி விட்டாள் என்றும் பொய் சொல்லி, உங்கள் பெண்ணை மணம் செய்து கொண்டு, இங்கேயே தங்கிவிடப் போவதாகவும் உறுதியளித்திருக்கிறான்.

“உத்தர கண்டேறுவாடியின் பிரமுக அத்தியட்சரிடம் போய்க் காலில் விழுந்து, என் மனைவியிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று விண்ணப்பித்திருக்கிறான். கிராமணி இல்லாவிட்டால் அவர்தானே வழக்கை விசாரிக்கவேண்டும். முன்வரலாறு தெரியாமல் அவன் சொன்ன கதையைக் கேட்டு உருகிப்போன அத்தியட்சர், சாஸ்திரப்படி, வீட்டை விட்டுத் துரத்திவிட்ட மனைவியிடம் அவனுக்குத் திரும்பிப் போகவேண்டிய அவசியம் இல்ல என்று சொல்லி, அவன் விரும்பிய பெண்ணையே அவனுக்கு மணமுடித்து வைத்துவிட்டார்.

“சரியான கயவன் அந்தத் தச்சன். வியாபார விஷயமாகப் போவதாகச் சொல்லி அவ்வப்போது தன் கிராமத்துக்கே போய் மனைவியுடனும் குடும்பம் நடத்தி வந்திருக்கிறான்.

“உத்தரகண்டேறுவாடிக்கு வந்த அவனுடைய கிராமத்தார்கள் சிலர், அவனைத் தற்செயலாகப் பார்த்துவிட, விஷயம் கிராமத்தில் கசிந்தது. அப்போது கிராமணி வந்துவிட்டிருந்தான். அவனிடம் போய், தச்சன் மனைவி முறையிட, வந்தது கோபம், கிராமணிக்கு. அடுத்தமுறை தச்சன் வந்தபோது, அவனைக் கூப்பிட்டு விசாரிக்க, அவன், தான் இப்போது மனைவிக்குப் புருஷன் இல்லை. என்று சத்தியம் செய்து, உத்தரகண்டேறுவாடி அத்தியட்சரின் இலச்சினையோடு கொண்ட தீர்ப்பைக் காண்பித்திருக்கிறான். கிராமணி, ‘முன்னாள் மனைவிக்குத் தெரியாமல் நடந்த திருமணம் இது. செல்லாது’ என்று சொல்லிவிட்டு, தச்சனின் மனைவியை ஓர் ஆள் துணையோடு உத்தரகண்டேறுவாடிக்கு ஓலையுடன் அனுப்பி, அத்தியட்சரிடம் இது பற்றிப் பிரஸ்தாபிக்கச் சொல்லி முறையிடுமாறு பணித்திருக்கிறான்.

“மனைவியின் முறையீட்டைக் கேட்டு, மனம் வருந்திய அத்தியட்சர் தன் தவற்றை உணர்ந்து, மனைவியை ஒதுக்கி வைத்ததாகத் தான் முன்னம் கூறிய தீர்ப்பு தவறென்று கூறிவிட்டு, இரண்டாவது திருமணம் செல்லாது என்று சொல்லிவிட்டார்.

“வேறு ஒருத்தியிடம் குடும்பமும் நடத்தி, தன்னை ஒதுக்கி வைக்கத் தீர்ப்பையும் கையில் வைத்துக் கொண்டு, தன்னையும் பெண்டாண்டு கொண்டிருந்த கணவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்து, அந்த மனைவி, கிராமணியிடம் ‘தன்னைக் கணவன் பலவந்தப் படுத்தி விட்டான்’ என்று முறையிட்டாள். இந்த விஷயத்தில் ஏற்கனவே இவ்வளவு குழப்பம் இருக்க மேலும் குழப்பம் நேரும் என்று கருதி, கிராமணி, அவளின் முறையீட்டை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விட்டான். தச்சனுடன்தான் அவள் வாழ வேண்டும் என்று கட்டளை இட்டு விட்டான்.

“இதை ஏற்றுக் கொள்ளாமல், மனைவி என்னிடம் வந்து முறையிட்டாள். நான் அத்தியட்சரையும், கிராமணியையும் கூப்பிட்டு விசாரித்து நடந்ததை எல்லாம் தெரிந்துகொண்டேன். மனைவியை ஒதுக்கிவைத்ததையும் இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்ததையும் அத்தியட்சரே நிராகரித்து விட்டதால், இடையில் நிகழ்ந்த முறிவு நிகழாத ஒன்றே என்று சொல்லி, கிராமணி சொன்னதும் சரிதான் என்று சொல்லிவிட்டேன். விதிப்படிதான் செய்தாய் என்று என்னுடைய உள்மனம் சொன்னாலும், அந்தப் பெண் என்னுடைய தீர்ப்பைக் கேட்டு அழுதது இன்னும் கண் முன்னாலேயே இருக்கிறது. இதில் அந்த உத்தரகண்டேறுவாடி பெண் வேறு நிர்க்கதியாகி விட்டாள்.” என்றார்.

அடாடா என்றார்கள் சிலர். உச்சுக் கொட்டினார்கள் சிலர்.

“அந்தப் பிரமுக அத்தியட்சர் தீர விசாரியாமல் திருமணம் செய்து வைத்தது தவறு. அவரும் தண்டனைக்குரியவரே” என்றார்கள் சிலர்.

“அவர் என்ன செய்ய முடியும்? தன் முன் வைக்கப்பட்ட விஷயங்களை வைத்து அவர் எடுத்த முடிவு அது. வேறு ஊருக்கு உண்மையை விசாரிக்க ஆட்களையா அனுப்பமுடியும்? அது அந்தப் பெண்ணை மணம் செய்து வைப்பதற்குமுன்பு, அவளைப் பெற்றவர்கள் செய்திருக்கவேண்டிய கடமை” என்று மறுத்தார்கள் சிலர்.

“தச்சனைத் தண்டிக்க வேண்டும்” என்றார்கள் பலர்.

“என்ன தண்டனை? பணமா? சிறையா? கசையடியா? இதனால், அந்த இரண்டு பெண்களுக்கும் என்ன நியாயம் கிடைத்துவிடும்?” என்று விவாதித்தார்கள் சிலர்.

“கிராமத்துப் பெண்ணை திருமணப் பந்தத்தில் இருந்து விடுவித்திருக்க வேண்டும்” என்று சிலர் சொல்ல, நியாயாதிபதியே அதை மறுத்தார்.

“நான் அதை யோசித்தேன். தனியாக அந்தப் பெண் அந்தக் கிராமத்தில் எப்படி வாழ்வாள்? இப்போது, அவளை மொத்தக் கிராமமும் பச்சாதாபத்துடன் பார்க்கிறது. தச்சனை எல்லோரும் கண்காணித்து வருகிறார்கள். கிராமத்தை விட்டு வெளியே போனாலே பிணை வைத்துவிட்டுத்தான் போகிறான். ஒரு கடுஞ்சொல் அவன் அவளைச் சொன்னாலும் போதும், ஊர்ப்பொது அவனைக் காய்ந்துவிடும். அந்த இன்னொரு பெண்ணுக்குத்தான் நியாயம் கிட்டாமல் போய்விட்டது. எந்தத் தவறும் செய்யாமல், அவள் பலி கொடுக்கப்பட்டு விட்டாள்” என்றவர் பிரதாபரைப் பார்த்து, “என்ன பிரதாபவர்த்தனரே! உம் சிட்டன் கணிதப் புலி ஒன்றுமே பேசவில்லையே? அவன் கருத்து என்ன?” என்று கேட்டுவிட்டு, விநயனைப் பார்த்தார்.

பிரதாபர் சிரித்துவிட்டு, விநயனைப் பார்த்து, ‘ஏதாவது கருத்தைச் சொல்லு’ என்று முகத்தாலே சைகை காட்டினார்.

நான் சிறுபிராயத்தினன். அனுபவம் அதிகம் இல்லாதவன். கேட்டதால் கருத்தைச் சொல்கிறேன். வரம்பு மீறியது போலத் தோன்றினால், பிழை பொறுக்கவும். தச்சன் செய்தது தவறு. ஆனால், அவனை எப்படித் தண்டிப்பது என்று யோசிப்பதைவிட, அவனை இப்படிச் செய்யத் தூண்டியது பாருங்கள், அந்தத் தைரியம் எழாமல் செய்யவேண்டும் என்று படுகிறது. ஆன திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்துகொள்வது, நாம் நிறைய பார்ப்பதுதான். பலதாரம் பலருக்கு இருக்கிறது. ஆனால், மனைவி மீது அபாண்டமாகப் பழி சொல்லி, கிராமணி எப்போது இல்லாமற்போவார் என்று காத்திருந்து திட்டமிட்டு மணமுறி செய்த மனோபாவம் சமுதாயத்தில் வளர்ந்திருக்கிறது என்றால், அது ஒரு கறை. மணமுறியை வாங்கிவிட்டு, கட்டிய மனைவிக்கு அதைச் சொல்லாமல் மீண்டும் குடும்பம் நடத்தியிருக்கிறான் பாருங்கள். பெண்ணை எப்படிக் கிள்ளுக்கீரையாக நினத்திருக்கிறான்!  இந்த மனோபாவம் இங்கே ஒரு பெண்ணின் வாழ்வைப் பலி வாங்கியிருக்கிறது. அது வேறு விதமாக வெளிப்பட்டு, நாசத்தை உருவாக்கலாம். ஒரு சிலருக்கே இப்படிப்பட்ட மனோபாவம் இருந்தாலும், அது வெளிப்பட வெளிப்படச் சமுதாயச் சமநிலையை பெரிதும் பாதிக்கும் என்று தோன்றுகிறது.”

நியாயாதிபதி அவனைச் சுவாரசியத்துடன் பார்த்தார்.

“கணிதப் புலி என்று கேள்விப்பட்டேன். ராஜரீக நுணுக்கத்திலும் புலி போலிருக்கிறது” என்றார்.

“எல்லாம் கணித சாத்திரத்தைக் கற்றதால் வந்த உபயோகம்தான்.”

“கணித சாத்திரம் இதைக் கூடக் கற்றுத்தருகிறதா?”

“ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லி விளக்கலாமா?”

கையை ஆகட்டும் ஆகட்டும் என்று இருமுறை அசைத்தார்.

“பெரும்பாலும், நாம் நமக்கு ஏற்படும் இன்னல்களைச் சரியாக வரையறுக்கத் தவறிவிடுகிறோம். இதுதான் இன்னல் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டால், அந்த இன்னலுக்குக் காரணம் எது என்பதும் தெரிந்துவிடும். பெரும்பாலான இன்னல்கள், நம்முடைய வளர்ப்பு என்னும் அடுப்பில் மூட்டப்பட்டு, நம் மனோபாவத்தால் சிவிறப்பட்டுப் பெரிதாகி, நம் வாழ்வையே வதக்கி விடுகிறது. பல இன்னல்களை அணைக்கக் கூடிய தீர்வுக்குடம், இன்னலைச் சரியாகப் புரிந்துகொண்டாலே பாதி நிரம்பி விடுகிறது.

“ஆனால், இது நடைமுறையில் சாத்தியப் படுவதில்லை. ஏனென்றால், நம்முடைய ஒரே மாதிரியான இன்னல் பல வடிவங்கள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு வடிவமும் இது புதிய இடுக்கண் என்று நம்மை நம்பவைப்பதால், புதுப்புதுக் கோணத்தில் அதைச் சந்திக்கப் பிரயாசைப் படுகிறோம். தளர்ந்து போகிறோம். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கும் நம்முடைய மனோபாவத்தைக் கண்டுபிடித்து, அதை நீர்த்துப் போகச் செய்துவிட்டால், வருங்காலத்தில் எழப்போகும் பல துன்பங்களை நாம் தவிர்த்துவிடலாம் அன்றோ? கணிதம் இதற்குப் பயிற்சி அளிக்கிறது என்று எனக்குப் படுகிறது. புதிது போலத் தோன்றும் பல கணக்குகளுக்கு, அடிப்படை நீரோட்டம் ஒன்றாகத்தான் இருக்கும். அதற்கு விடை கண்டுபிடித்துவிட்டால், எல்லாக் கணக்குக்களையும் போட்டுவிடலாம்.”

“ம் ம் .. நுணுக்கி ஆய்வருவதும், தருக்கிப்பதும் உதவும் என்கிறாய். ஓர் ஒப்புமை தாயேன் எங்கள் எல்லோருக்கும் புரியும்?”

“இந்தக் கணக்கைப் பாருங்கள். ஒரு கிராமத்தில், இரண்டு பாடசாலைகள் இருக்கின்றன. முதல் பாடசாலையில் நான்கு ஆசிரியர்கள். இரண்டாவதில் மூன்று. ஒவ்வொருவர் கீழேயும் பல மாணவர்கள். ஓர் ஆசிரியரின் மாணவர்கள் வேறு ஆசிரியரிடம் எதையும் கற்பதில்லை. ஒருமுறை, இரண்டு பள்ளிகளின் நிர்வாகிகள் சேர்ந்து ஒரு கூட்டுச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்கள். முதல் பள்ளி நான்கு மாணவர்களையும் இரண்டாம் பள்ளி மூன்று மாணவர்களையும் தேர்ந்தெடுத்து அந்தச் சந்திப்புக்கு அனுப்பியது. அன்று, ஏழு ஆசிரியரும் தனித்தனியே இந்தத் தேர்ந்தெடுத்த மாணவர்களைச் சந்திக்கவேண்டும் என்றும், ஏதாவது கற்றுக் கொடுத்துவிட்டு, ஒரு பிரசாதம் தரவேண்டும் என்றும் முடிவு செய்து, 49 பிரசாதப் பொட்டணங்களைக் கூடையில் வைத்திருந்தார்கள்.

“சந்திப்பு நடந்து முடிந்தது. நிர்வாகம் நினைத்தபடி நடக்கவில்லை. முதல் பள்ளி ஆசிரியர்கள். தம் பள்ளியிலேயே மற்ற ஆசிரியரிடம் கற்கும் மாணவர்களுக்குப் பிரசாதம் தர மறுத்துவிட்டார்கள். இரண்டாம் பள்ளி ஆசிரியர்கள், மற்ற பள்ளி மாணவர் எவருக்கும் பிரசாதம் அளிக்க மறுத்துவிட்டுத் தம்பள்ளியில், தம்மிடம் பயிலாமல், மற்ற ஆசிரியரிடம் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பிரசாதம் அளித்தார்கள். இப்போது, பிரசாதக் கூடையில் எத்தனை பொட்டணங்கள் எஞ்சி இருந்திருக்கும்?”

“அடடாடா! உண்ட மயக்கத்தில் மூன்றாம் யாமத்து முடிவில் இருக்கும் எங்களை இப்படி யோசிக்க வைக்கிறாயே? யாராவது பண்டிதர்கள் உண்டா, இதற்கு விடையளிக்க?” என்று சுற்றும் முற்றும் பார்த்தார், நியாயாதிபதி. சிலர் யோசித்தார்கள். சிலர், கணக்கை மட்டும் திருப்பிச் சொல்லிச் சரிபார்த்துக் கொண்டுவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்கள். கையில் எழுதுகோலும் சுவடியும் தேவை என்றனர் இரண்டு மூன்றுபேர். சில நிமிஷங்கள் கழித்து, யாரும் பதில் சொல்லாததால், “நீயே மேலே சொல்லப்பா” என்றார் நியாயாதிபதி.

“இப்போது இந்தக் கணக்கைக் கேளுங்கள். ஒரு பெண் ஐந்து ஆண்களுடன் பழகி வருகிறாள். மூன்று பேரை மட்டும் அவளுக்குப் பிடிக்கும். ஆனால், ஒவ்வொருவரிடமும் உன்னை எனக்குப் பிடிக்கும். என்பாள். அத்தோடு நில்லாமல், மற்ற ஆண்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, அவனைப் பிடிக்காது என்பாள். அவள் எத்தனை பொய்யான வசனங்களைப் பேசி இருக்கிறாள்?”

பகபகவென்று சிரித்துவிட்டார் நியாயாதிபதி. “இது நிஜ வாழ்க்கை அல்லவா? ஹர்ஷவல்லியைக் கேட்டுப் பார்க்க வேண்டும்” என்று கூறி மீண்டும் இடியெனச் சிரித்தார். சுற்றியிருந்த நிறைய பேர் சிரித்தார்கள். “இதெல்லாமும் கணித சாத்திரத்தில் வரும் என்று இன்று தெரிந்து கொண்டேன்” என்றார் பிரதாபர்.

“இந்த இரண்டு கணக்குக்களும் ஒன்றுதான் என்கிறாயா?” என்றார் ஒருவர்.

“ஆம் ஐயா. ஒரே சித்தாந்தம்தான் இவை இரண்டனுக்கும். இதற்குப் பொதுப்படையாகவே, ஒரு விதி அமைத்துவிடலாம். விரும்புகிறவர்களின் எண்ணிக்கையோடு ஒன்றைக் கூட்டி, அதை மொத்தப்பேர்களால் பெருக்கவேண்டும். பெருக்கிவந்ததில் இருந்து, விரும்புகிறவர்களின் இரண்டு மடங்கைக் கழித்துவிட வேண்டும். இதுதான் மொத்தப் பொய்கள். இரண்டடி ஸ்லோகத்தில் இந்தக் கணக்கையும் விடையையும் பாருங்கள்.

 

புருஷா: ஸேகேஷ்டகு³ணா த்³விகு³ணேஷ்டோனா பவந்த்யஸத்யானி |

புருஷக்ருதிஸ்தைரூனா ஸத்யானி பவந்தி வசனானி” என்றான்.

 

அவன் சொன்னதைக் கேட்டுச் சற்று யோசித்துவிட்டு ஒருவர் கேட்டார், “முதலடியில் மட்டும்தான் சூத்திரம் இருக்கிறது. இல்லையா? ஈற்றடியில், கழித்துவிட்டு, மெய்யான வசனங்களைக் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டாரோ?”

“ஆமாம்”

“இப்படிப் பிரித்தது சரியா என்று சொல்லுங்கள்” என்று கேட்டுவிட்டு ஒருவர் ஸ்லோகத்தைப் பிரித்துச் சொன்னார்.


“புருஷா: சா ஏக இஷ்டகு³ணா, த்³விகு³ணா இஷ்ட ஊனா பவந்தி அஸத்யானி|

புருஷ: க்ருதி தை ஊனா ஸத்யானி பவந்தி வசனானி|”

 

“மிகச்சரி. புருஷ: க்ருதி என்றால் மொத்த புருஷர்களுடைய வர்க்கம்.” என்றான் விநயன்.

“பலே பலே!” சிலாகித்தார் நியாயாதிபதி. யாராவது கணக்கைப் பிறகு போட்டு விடையை விநயனோடு, விநயசர்மாதானே உன் நாமம், சரிபார்த்துக் கொள்ளுங்கள். சரி. சரி. கணக்குக்கள் கேட்டுத் தலை சுற்றுகிறது. கொஞ்சம் சங்கீதம் கேட்போம். வாருங்கள். நீயும் வா அப்பா, உன் பாட்டையும் கேட்கவேண்டும்” என்று எழுந்தார்.

எல்லோரும் அவர் கூடவே எழுந்துகொண்டு, சங்கீதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளுக்குள் நுழையும்போது, வாத்தியகோஷ்டியினர் தம்முடைய சமர்ப்பணத்தின் முடிவில் ஒரு லயக்கோவையை மும்முறை சுழற்சி செய்து ஒரு தீர்மானத்துடன் நிறைவு செய்யும் தருவாயில் இருந்தனர்.

அந்தக் கோஷ்டியில் ததம் என்று சொல்லப்படும் நரம்புக் கருவிகளில் இரண்டு தந்திகள் உள்ள நகுல வீணையும் மூன்று தந்தி உள்ள கின்னரியும், ஏழு தந்தி உள்ள சித்ரா வீணையும் மற்றும் பரிவாதினியும், ஒன்பது தந்தி விபஞ்சியும், 21 தந்திகளைக் கொண்டதால் மூன்று ஸ்தாயிகளிலும் மீட்ட வழி தரும் மத்த கோகிலமும் இருந்தன. ஸுஷிரம் வகையைச் சேர்ந்த மூங்கிலான குழல், தாமிரத்தால் ஆன ஊமத்தை மலர் போன்ற வடிவுள்ள காஹலம் முதலிய உட்டுளைக் கருவிகள் இருந்தன. விததம் எனப்படும் முரஜம், அகமுழவு முதலிய தோற்கருவிகளும், கனம் எனப்படும் தாளக்கருவிகளும் லயத்துக்கு அடி கோலின. இந்த நான்கு வகையான இசைக்கருவிகளும்

 

ஜம்,

தஜம்,

தகஜம்,

தகதிரிதஜம்,

தகரிதி தகணக தகதரிஜம்

 

தடிமிதஜம், தகும்தரிஜம், கும்தரிஜம், குகும்தரிஜம்,

குகும்த, தகும்தகிட, தகும்ஜம் தஜம்

 

என்று ஜதிகளைக் காலப்பிரமாணத்துடன் உலவ வைத்தன. விட்டு விட்டும், பகுதி பகுதியாகவும் அந்தந்த வாத்திய வல்லுநர்கள் அந்த லயக்கோவையில் உற்சாகமாகச் சேர்ந்து, ஸ்ரோதவாஹ யதியையும், கோபுச்ச யதியையும் இம்மியும் காலம் பிசகாமல் வாசித்து முடித்ததும், கரகோஷம் அறையெங்கும் எதிரொலித்தது.

ஆரவாரம் ஒருவாறு அடங்கியதும், ஒருவர் மேடையின் அருகே சென்று,

 

“ஸோSப்யாஹத: பஞ்சவிதோ நாத³ஸ்து பரிகீர்தித:

நக²வாயுஜசர்மாணி லோஹஶாரீரஜாஸ்ததா² ||

 

என்று ஐந்து வித ஆஹத நாதங்களைச் சொல்கிறோம். நான்கைச் செவிமடுத்து ஆநந்தித்தோம். தே³ஹநாதே³ன தே யுக்தா நாதா³: பஞ்சவிதா: ஸ்ம்ருʼதா: என்று சரீரத்தால் எழுப்பும் சாரீரத்தையும் கேட்க வேண்டாமா? அந்த ஆநந்தத்தையும் தருவதற்காக ஹர்ஷவல்லியிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன்” என்றார் .


அவர் சொல்லிமுடித்ததும், ஹர்ஷவல்லி, தன்னுடைய இசைத்துணைகளோடு எழுந்து மேடைக்கு அருகில் சென்று, முன்னம் வாசித்தவர்கள் மேடையை விட்டு இறங்குவதற்காகக் காத்திருந்தாள். அவள் பேரைச் சொன்னவுடன் அங்கே எழுந்த கரகோஷத்தைவிட, அவள் மேடையின் மீது போய் அமர்ந்ததும், எழுந்த கரகோஷம் அறையின் சுவர்களைக் கிடுகிடுக்க வைத்தது. பாடுவதற்கு முன்பேயே கேட்பவர்களுக்கிடையே இவ்வளவு ஆர்வம் எழுகிறது என்றால், எவ்வளவு தரமான பாடகியாக இருப்பாள் என்று விநயன் எண்ணிக்கொண்டு, ஆர்வத்தோடு அவள் பாடுவதைக் கேட்கச் சித்தமானான். அவனுடைய எண்ணத்தை மெய்ப்பிப்பது போலவே, அவள் பாடலும் இருந்தது. தான் பாடப்போகும் பாடலில் வரும் ஸ்வரங்களின் அமைப்பைச் சற்று இராகமாகக் கோடிட்டுக் காட்டினாள். மத்ய ஸ்தாயி ஷட்ஜத்தில் இருந்து தார ஸ்தாயி வரை படிப்படியாகச் சில சஞ்சாரங்களை அவள் பாடினாள். அந்தர காந்தாரத்தின் கம்பீரத்தில் தோய்ந்து, மத்யமத்தில் அவள் நின்ற போது, எச்சு ஸ்ருதியில் உள்ள அவளுடைய குரல், எடுத்த எடுப்பில் செவிகளைக் கட்டிப்போட்டது.

அடுத்து வந்த தைவதமும், நிஷாதமும் காந்தார மத்யமத்தின் கம்பீரத்தைச் சற்று இளக்கி, இறைஞ்ச ஆரம்பித்தன. ரிஷப பஞ்சம வர்ஜியம் என்று ஆரோகணித்ததால் ஔடவம் என்பது புரிந்தது, அவரோகணத்தில், மீண்டும் பஞ்சம வர்ஜியம். ஆனால், மற்ற ஆறு ஸ்வரங்களும், அந்த இறைஞ்சலை ஒரு நிறைவோடும் நிம்மதியோடும், சுடுகின்ற அகல் விளக்கைத் தளிர்க்கரங்களில் ஏந்திய பெண்கள் ஜாக்கிரதையாக அதை எடுத்துக் கொண்டுவந்து தண்ணீரில் விடுவதைப் போல பத்திரமாக இறக்கி அம்பாளின் திருவடிகளில் சமர்ப்பித்தன.


கூலா அதி கா³மி ப- தூலா வலி ஜ்வலன - கீலா நிஜ ஸ்துதி விதௌ


என்று அவள் தொடங்கியதும், சபை ஆஹாகாரம் செய்து கிறங்கிப்போயிற்று.

 

கோலாஹல க்ஷபித - காலாமரீ குஶல  - கீலால போஷண நபா .

 

என்று கண்டத்தின் அமைப்பில், ஐந்தின் மடங்காக அவள் துரிதமாகவும் விளம்பமாகவும் பாட, அஷ்வதாடியின் சந்தம், எழுந்து நின்று, ஒரு கம்பீரமான குதிரை, நளினம் காட்டிச் சுதந்திரமாக அறையைச் சுற்றிச் சுற்றி வந்தது போல, கூடம் முழுக்கப் பரவி எல்லோரையும் ஈர்த்துக் கொண்டது.

 

ஸ்தூ²லா குசே ஜலத³ - நீலா கசே கலித - லீலா கத³ம்ப³ விபினே

ஶூலாயுத ப்ரணதி  - ஶீலா விபாது ஹ்ருதி³ - ஶைலாதி ராஜ தனயா

 

என்ற அடுத்த இரண்டு அடிகள், துவாதசப் பிராசத்தைக் காட்டி, இது அஷ்வத்தாடிதான் என்று உறுதி செய்தன.

மெய்ம்மறந்து பாடினாள். பிறருக்காக இல்லாமல், அவளுக்காகப் பாடினாள். அவளுடைய இசைத்திறமை என்ற மரத்தின் கொம்பில், அவளே பழுக்க வைத்த கனியாக அந்தப் பாடல் பெருமிதத்தோடு உலவியது. அவளுடைய ஸௌந்தர்யம், அவள் அமர்ந்து பாடிய விதம், முகபாவங்கள் இவையெல்லாம் பாடலின் தாத்பர்யத்தைச் சிதைக்காமல், கேட்பவர்களின் கவனத்தைச் சிதறடிக்காமல், பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. பாடி முடித்ததும், “ஸாது ஸாது” என்றும், “உத்தமம்”, “அமோகம்”, “ஈஸ்வர கிருபை” என்றும் குரல்கள் ஆங்காங்கே எழுந்து ஒலிக்க, கூடமே கரகோஷத்தால் அதிர்ந்தது.

கை தட்டினால், தான் கேட்ட சுகம் கலைந்துவிடுமோ என்று பயந்து, அவள் திசையில் கையை மட்டும் குவித்தான் விநயன். கையைக் குவித்துக் கொண்டே மேடையைப் பார்க்க அவன் முகத்தை நிமிர்த்தபோது, அவனை ஹர்ஷவல்லியும் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று புலப்பட்டது. அவனைத் தன் கண்களால் மேற்பூச்சுப் பூசியவாறே, அவளும் கை குவித்துப் புன்முறுவல் பூத்தாள். யாராவது இதைக் கவனிக்கிறார்களோ என்று அச்சம் மேலிடத் தன் கண்களை விடுவித்துக் கொண்டு, அக்கம்பக்கம் பார்த்துவிட்டு வெறுமையாகத் தன் முகத்தை வைத்துக்கொண்டான்.

அவள் மேடையை விட்டு இறங்குவதற்குள்ளாக, ஒருவன் மேடைக்கு முன்னால் நின்றுகொண்டு, “அடுத்ததாக, நாம் நம்மூருக்குப் புதிதாக வந்திருக்கும், வேத அத்யயன, விவித சிக்ஷா கலா பாடசாலையின் சங்கீத அத்யாபகர் விநயாதி சர்மரின் வாய்ப்பாட்டு சங்கீதம் கேட்கலாம்.” என்று பிரேரித்தான். திடும் என அறிவித்ததால், சற்று திகைத்துப் போன விநயன், சுதாரித்து எழுந்து கொண்டு, சபையைச் சுற்றிப் பார்த்துக் கூப்பிய கையோடு மேடையை நோக்கிப் போனான். என்ன பாடுவது என்று யோசித்து வைத்தது, ஹர்ஷவல்லியின் பாட்டுக்குப் பிறகு எடுபடாது என்று தோன்றியது. “தக்கு ஸ்ருதிதானே? இந்த லகு திரிதந்திக் கின்னரியை எடுத்துக் கொள்ளுங்கள். இவள் மீட்டுவாள்.” என்று சொல்லிக்கொண்டே மேடையை விட்டு இறங்கினாள் ஹர்ஷவல்லி. அவளுடைய பணிப்பெண்ணோ, மாணவியோ தெரியவில்லை, விநயனை வணங்கி விட்டு, ஒரு சிறுபெண் லகு தேசி கின்னரியை நீட்டியது.

விநயன் திரிதந்தியைத் தன் சுருதிக்கு ஏற்ப மீட்டிக்கொண்டான். அதிகம் வினை கெடுக்க வேண்டியிருக்கவில்லை. மந்தர பஞ்சமத்தைத் தன் குரலுக்கேற்ப அமைத்துக்கொண்டு விட்டு, இரண்டு ஷட்ஜங்களையும் அதற்கேற்பச் சரிசெய்தான். மூன்று தந்திகளும் இயைந்ததும், சேர்க்காத அந்தர காந்தாரம் அலை அலையாக, விட்டு விட்டுக் காற்றில் பரவியது. மெல்ல மெல்ல அதில் மூழ்கியவன், மனத்தில் பொருத்தி வைத்திருந்த ஹர்ஷவல்லியின் பாட்டை மறந்தான். சுற்றுப்புறத்தை மறந்தான். சபையில் இருப்பவர்களை மறந்தான். ஆதார ஷட்ஜமும், அதனுடைய அளவுக்கு ஒன்றேகால் மடங்கு அதிக அளவுள்ள அந்தர காந்தாரமும்தான் அவனுடைய உலகம் என்றாகியது.

பஞ்சமத்தைப் பாடிப் பார்த்தான். திரிதந்தியும் பஞ்சமத்தை எதிரொலித்தது. தைவதத்தைப் பாடினான். திரிதந்தியும் தைவதத்தைப் பேசியது. இரண்டே ஸ்வரங்களை வைத்து அமைத்த மூன்று தந்திகள், அவன் பாடிய ஸ்வரஸ்தானத்தை எல்லாம் அவனுக்கு எதிரொலித்துக் காட்டின. ஸ்ருதி நன்றாக சேர்ந்து கொண்டதே அவனுக்குப் பெருமகிழ்வாக இருந்தது. அந்தச் சிறுபெண்ணிடம் திரிதந்தியை மீட்டக் கொடுத்துவிட்டுச் சரியாக அமர்ந்து கொண்டான்.

அந்தச் சமயத்தில், அவனுக்குப் பொருத்தமாகத் தோன்றிய சம்பூர்ண ராக ஸ்வரங்களைப் பாடுவதென்று முடிவு செய்தான். ஏற்கனவே, ஒரு பாடலைக் கவனம் செய்துவைத்திருந்தது இந்தச் சமயத்தில் கை கொடுத்தது.

 

“வித்துவான்கள், விதுஷிகள், கேட்பவர்கள் அனைவருக்கும் வணக்கம். முதலில் ஒரு மார்க்க சங்கீதம் ஷட்ஜ கிராமத்தில் சிறிய கீதியாகப் பாடிவிடுகிறேன். பிறகு, தேசிய சங்கீதமாக, ஒரு பிரபந்தம் சமர்ப்பிக்கிறேன். மார்க்க சங்கீதம் பின்ன கீதியாக கிராம ராகம் பின்னகைசிகியில் கட்டப் பட்டிருக்கிறது. உத்தரமந்தர மூர்ச்சனை.” என்று சொல்லிவிட்டுப் பாடினான்.

 

இந்த்³ரநீல ஸப்ரபம்

மதா³ந்தக³ந்த வாஸிதம்

ஏகத³ந்த ஶோபிதம்

நமாமி தம் விநாயகம்

 

இசைபயின்ற எல்லோருக்கும் தெரிந்த இலக்ஷணகீதம்தான். பல வருடங்களாக உலவிக் கேட்டுப் பழக்கமான ஒன்றாக இருந்திருந்தாலும், அவன் பாடியதில் புதிய உயிர்ப்புப் பெற்றுத் திகழ்ந்தது. இந்.. த்ர என்று அவன் மூன்று மாத்திரைகள் நேரம் எடுத்துப் பாடிய அழுத்தத்திலும், மீனவர்கள் வீசிய வலை போலப் படர்ந்து பயணித்துக் குடை போலக் குவிந்த நீ..ல என்ற கமகத்திலும், அந்தப் பாட்டு, தன் பாடுபொருளான ஏகதந்த வாசியைப் போலவே, ஆணித்தரத்தோடும், அழகோடும் நடைபயின்றது.

அவன் அறிவித்திருந்தபடி சிறிய பாட்டுத்தான். பாட்டு முடிந்ததும், அங்கும் இங்கும் மெல்லியதாகக் கேட்ட ஓரிரண்டு கையொலிகளில் இருந்தும், பார்த்த சிரக்கம்பங்களில் இருந்தும் அடுத்து வரப்போகும் பாட்டுக்கு அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டான்.


“இப்போது நான் பாடப்போகும் தேஸ்ய கீதி, சம்பூர்ண ஜாதி. மந்தர பஞ்சமத்தில் இருந்து தார பஞ்சமம் வரை ஸ்வரங்கள் பேசும். ஸ்வரங்களைக் காண்பித்து விடுகிறேன். வராளி என்பார் என்னுடைய குரு. இதைப்போலத் தோன்றும் வராடி என்று ஒரு ராகம், இங்கே நடைமுறையில் இருப்பதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் முழு ஸ்வரூபமும் கேட்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. அதுதானா இது, என்று வித்துவான்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்.” என்று சொல்லிவிட்டு ஏழு ஸ்வரங்களையும் பாடிக் காட்டினான்.

 

ஆரோஹணிக்கும்போதே அவனுக்குச் சிலமுகங்கள் திரிவது கண்ணுக்குப் பட்டது. எதிர்பார்த்ததுதான். இறங்கும்போது, இன்னும் அதிக முகங்கள் திரிந்தன. கீழ் மந்தர பஞ்சமத்தைக் காட்டிவிட்டுச் சற்று நிறுத்தினான். அவன் நிறுத்துவதற்காகவே காத்திருந்த சில பேர்களில், ஒருவர் எழுந்து நின்று, “இதில் நீங்கள் கா என்று பாடினீர்கள். ஆனால் அங்கே ரிஷபம் அன்றோ ஒலித்தது?” என்றார். இன்னொருவர், “அந்த மத்தியமும் சாதாரண மத்தியமம் போல அல்லாமல், பஞ்சமத்தோடு மோதுகிறதே?” என்றார். “இது இங்குப் பாடும் வராடி போலத் தோன்றவில்லை” என்றார்.

 

அவர்களை வணங்கிவிட்டு விநயன் சொன்னான், “இவை இரண்டும் விக்ருத ஸ்வரங்கள். காந்தாரம், தன்னுடைய இரண்டு சுருதிகளிலும் இருந்து கீழ் இறங்கி, ரிஷபத்தில் போய் அமர்ந்து கொள்கிறது. ரிஷபம், காந்தாரத்துக்கு இரண்டு சுருதி இடைவெளி வேண்டும் என்பதற்காக, தன்னுடைய முதல் சுருதியில் போய் அமர்ந்து கொள்ளும். கிட்டத்தட்ட ஷட்ஜத்துக்கு ஒரு மேலுறை போல.

 

“அந்த மத்தியமம் ஒரு விக்ருதி மத்தியமம். மத்தியமக் கிராமத் தொகுப்பில், ரிஷபம் மூன்று ஸ்ருதி இடைவெளியில் வருகிறது அல்லவா? அந்த மூன்றாவது சுருதி இருக்கும் இடம், ஷட்ஜ கிராமத்தில் 16-ம் சுருதி. 17-ல் பஞ்சமத்தை அசலமாக நிறுத்திவிட்டு, இந்த 16-ம் சுருதி இடத்தில் நுழைக்கப்பட்ட ஸ்வரம் அது. பிரதிமத்தியமம் என்பார் என்னுடைய குரு. பஞ்சமத்தோடு ஒட்டி உறவாடி, அதனுடைய கீழ்த்தோல் போல உறைகிறது. பாடலில் பாடிக் காட்டுகிறேன். கேட்க விண்ணப்பிக்கிறேன்.” என்றான்.

 

கேட்பவர்களுக்குப் பாதி புரிந்தது போல இருந்தது. ஒரு வைணிகர் மட்டும் ஆர்வமாக எழுந்து நின்று, ‘நான் கூட வாசிக்கட்டுமா?’ என்றார். தாராளமாக என்று விநயன் சொன்னதும், தன் சரஸ்வதி வீணையை, அவனுடைய சுருதியோடு சேர்த்துக்கொண்டு சித்தமானார்.

 

‘த³க்ஷாராம ஸந்நிவேஶம் தா³ஸபு³த்³தி சிதா³னந்த³ம்’

 

என்று துவங்கினான். பா .. பா .. பதாபபம காக ரீ .. ஸா என்று ஸ்வரங்கள் ஏறிய த³க்ஷாராம என்ற சொல், த³ .. .. க்ஷா..  என்று விரிந்து, பறந்து வந்த கருடன் சிறகை விரித்துக் கொண்டு மெல்லக் கீழே மிதந்து இறங்கியதைப் போல ரா.. .. ஆ .. ம     என்று இறங்கி ஷட்ஜத்தில் நிறைந்து, கூடத்தை நிறைத்தது. தா.. ஆ .. ஸ.. ரிஷபம் தன் வீட்டில் விருந்துண்ண வந்த காந்தாரத்தோடு இழைந்தது.

அவன் பாடப்பாட, குரலில் இருந்த இனிமையும், ராகத்தின் ஜீவனும், மெலிதாகத் துவங்கிய தூறல், மெல்ல மெல்ல வலுப்பெற்றுத் தரையெங்கும் நனைப்பதைப் போல, கேட்பவர்களை நனைத்தது. மேலே அணுக்கமான தைவதத்தின் கவிப்பு, கீழே தொட்டுத் தொட்டு நழுவும் விக்ருத மத்தியமம். கேட்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தையும் உணர்வையும் தந்தது. பஞ்சமந்தான் இப்படி இரு வீடுகளோடு உறவாடியது என்றால், ஷட்ஜமும் மேலே படர்ந்த ரிஷபத்தோடும், கீழே தழுவிய காகலித்துவம் பெற்ற நிஷாதத்தோடும் அதே குலவல். கேள்வி எழுப்பியவரைப் பார்த்தான் விநயன். கண்ணை மூடி அவர் வேறு உலகத்தில் இருந்தார்.

வீணை வாசிப்பவர், இராக ஸ்வரூபத்தைப் புரிந்து கொண்டார் என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. மிக உற்சாகமாக, அவன் நியாசஸ்வரத்தில் நின்றபோதெல்லாம், முன்கூட்டியே அனுமானித்து, அழகாக அவன் குரலோடு இயைந்தார்.

நெளிந்து நெளிந்து சுருளும் கமகங்களும், காத்திரத்தோடு அதட்டும் ஸ்வர ஸ்தானங்களும், குழையும் காந்தாரமும், சுற்றி உலவும் ஸ்வரங்களை இழுத்துப் பிடித்து நிறுத்தும் அசல ஸ்வரங்களும், பின்புலத்தில் இருந்து கொண்டு, பிரபந்தத்தின் ஒவ்வொரு சொல்லையும் தேனில் தோய்த்துத் தோய்த்துச் சமர்ப்பித்தன. அறிவோடு ஆற்றும் வினையில், உணர்வு இருக்காது என்று யார் சொன்னார்கள்? கற்றுவிக்கும்போது கிரீடை இருக்காது என்று யார் சொன்னார்கள்? அறிவின் கவனத்துடன் ஒன்றைக் கையாளும்போது, சுயத்தை மறக்கும் நிலை வராதா என்ன? கேட்பவர்களுக்கு, இதுதான் இராகசூட்சுமம் என்பதை உணர்த்திக்கொண்டே, தான் வெகு கவனத்துடன் பாடினாலும், கேட்பவர்களைக் கணக்கு, இலயம் இதையெல்லாம் ஒரு கணம் மறக்கடித்து, அந்த மகாதேவனுடைய நாத ஸ்வரூபத்திலேயே அமிழ்த்தினான். தானும் அமிழ்ந்தான்.

 

த³க்ஷபுத்ரீ ஸமாபாக³ம் மஹாதே³வம் நமாம்யஹம்

 

நியாயாதிபதியின் பூர்வீகம் த³க்ஷாராமம்தான். அந்தக் கோவிலுக்குச் சென்று திரும்பி வந்ததற்காகத்தான் இப்போது இந்த விருந்தையே ஏற்பாடு செய்திருந்தார். தன் குலதெய்வம் பேரைக் கேட்டதும் புலகித்துப் போனார். சிறிதாக இருக்கும் கோவிலைப் பெரிதாக்க வேண்டி, அரசரை விண்ணப்பிக்கலாம் என்று இருந்தவருக்கு, இது ஒரு நல்ல சகுனம் என்று பட்டது.

 

நீலகண்ட²ம் நிராமயம் ஸமஸ்த புவநாஶ்ரயம்

 

மேல் ஸ்தாயியில் அவன் பிரபந்தத்தைத் தொடர்ந்ததும், அறையெங்கும் ஆஹாகாரம் ஒலித்தது. மஹாவீரர் நரேந்திர மிருகராஜா விஜயாதித்தியர் நிறுவிய பெரிய கோவில் ஒன்றின் மூல மூர்த்தியின் திருநாமம் ‘ஸமஸ்த புவநாஶ்ரயர்’. அதையொட்டிய சைவமடம் மிகு பிரசித்தம். அந்த இறைவனின் பெயரைக் கேட்டதுதான் ஆஹாகாரத்துக்குக் காரணம்.

அடுத்து அடுத்துச் சொற்கள், இராக பாவத்துடன் எழப் பலருக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. சித்தம் உருகி, இராகம், பிரபந்தம், ஸ்வரங்கள், இலயம் என்ற பிரிவெல்லாம் அகன்று போய், கேட்பவர்களின் மெய் கூச்செறிந்தது. இரசிகத்துவம், ரஞ்ஜகத்துவம், பாவகத்துவம் என்ற மூன்றும் இலக்ஷணத்தோடு ஒன்றிப்போய், இலக்ஷ்ய சங்கீதம் இதுதான் என்று பறை சாற்றின.

அவன் பாடி முடித்து, ஷட்ஜத்தில் நிறுத்தி, அமைதியானதும், அறையில் ஒரு சப்தமும் இல்லை. ஒரு கைத்தட்டல் இல்லை. ஒரு சிரக்கம்பம் இல்லை. ஒரு பாராட்டு இல்லை. எல்லோருடைய தொண்டையில் இருந்தும் பேச்சு மறைந்து போயிருந்தது. நிச்சலமான அந்த வேளையைப் பாராட்டு என்ற கல்லெறிந்து யாரும் குலைக்க விரும்பவில்லை. தன்னுள் எழுந்த உணர்வு அடங்கியதும், அவன் நிமிர்ந்து பார்த்தபோது, நியாயாதிபதி பரவசத்தில் இருந்தார். பிரதாபர், சுட்டுவிரலையும், கட்டைவிரலையும் இணைத்துச் சின்முத்திரை காட்டினார். தூரத்தில், ஹர்ஷவல்லி, கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

வீணை வாசித்தவர், நீட்டி அவன் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒத்திக் கொண்டார். அவனுக்கு தர்ம சங்கடமாய்ப் போயிற்று. மெல்ல எழுந்து அவன், மேடையை விட்டு இறங்கியதும், ஒருவர் கை தட்டினார். இன்னொருவர் சேர்ந்து கொண்டார். தீப்பற்றவைத்த வாணம் வெடிப்பதைப் போல அடுத்த சில கணங்களில், எல்லோரும் சேர்ந்து கொண்டனர். உணர்ச்சியின் வேகம் தாங்காமல், ஒரு சிலர் எழுந்துகொண்டார்கள். அதற்குத்தான் காத்திருந்தவர்கள் போல, சபையே எழுந்து நின்றுகொண்டது. பிரதாபரையும், நியாயாதிபதியையும் கூட எழுப்பி விட்டுவிட்டது அந்த அலை.

நியாயாதிபதி அவனருகே வந்து, “உத்தமமான பாட்டு அப்பா! பிரதாபர் நீ நன்றாகப் பாடுவாய் என்றார். இந்த அளவுக்குப் பாடுவாய் என்று நினைக்கவில்லை. ஏதோ இசையின் வகைகளைச் சற்று அறிந்திருப்பதனால், இசைஞரின் இசையை இரசித்து, மகிழ்ந்து வந்திருக்கிறேன். அப்படித்தான் உன் இசையையும் இரசிக்கத் துவங்கினேனுக்குச் சுற்றுப்புறமே கொஞ்ச நேரத்தில் மறந்துவிட்டது. நாத ஸ்வரூபம், இசை இறைமயம் என்றெல்லாம் பேசியும் கேட்டும்தான் வழக்கப்பட்ட எனக்கு, இன்று நிஜத்தில் அதெல்லாம் என்ன என்பதைக் காட்டுவித்தாய். நீ சொன்ன அந்த சங்கீத விஷயம் எல்லாம் எனக்குப் புரியவில்லை. புரிந்துகொள்ள வேண்டிய அவசியமுமில்லை என்பது அது உன் குரலில் வெளிப்பட்ட விதத்தாலும், அது நல்கிய ஈடற்ற சுகானுபவத்தாலும் தெரிந்து கொண்டேன். இன்று உன் பாட்டைக் கேட்டவர்கள் பாக்கியவான்கள். இதை அடிக்கடி கேட்கும் உன் பள்ளியின் சுவர்களும், பூமியும், மாணாக்கர்களும், சக ஆசிரியர்களும் கொடுத்து வைத்தவர்கள். க்ஷேமமாக இரு” என்றார்.

பிரதாபர் அவனை அணைத்துக் கொண்டார். “ஆநந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டாய் விநயா. நீ பாடுவதை நிறையக் கேட்டு இருக்கிறேன். ஆனால், இன்று ஏதோ ஓர் விழுமிய நிலைக்குக் கொண்டுபோய் விட்டாய். இந்த இராகத்தில் இருக்கும் அந்த விக்ருத ஸ்வரங்களில்தான், எத்துணை உயிர்ப்பு! எத்தனை சக்தி! ஒரு சாதாரண வார்த்தையைப் பட்டை தீட்டிய வைரமாக ஆக்கி விட்டன.”

எல்லோரையும் பணிந்து வணங்கியவன் அருகே, மீண்டும் நறுமணம் சூழ்ந்தது.

“இப்படி எல்லாம் ஓர் இசையை வைத்துக் கொண்டிருப்பவர் முன்னால், நானும் பாடினேன் பாரும். என் தைரியம் பெரிதுதான் இல்லையா?” என்றாள் ஹர்ஷவல்லி.

“விளையாடாதீர்கள். நீங்கள் நன்றாகப் பாடினீர்கள்.”

“அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் இசையைக் கேட்கும் வரை. நீங்கள் சொன்ன இலக்கணம் எல்லாம் கேட்டுவிட்டு, இது ஏதடா, பாடசாலைக்குச் சென்று விட்டோமோ என்று ஒரு கணம் நடுங்கியே போனேன். ஆனால், நீங்கள் பாடத் துவங்கியதும், இலக்கணம் எல்லாம் காணாமல் போயிற்று. நானும் பாடுவேன் என்று இங்கே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் இனி உங்கள் முன்னால் வாயைத் திறப்பார்களா என்ன?”

“அவர்கள் எப்படியாவது போகட்டும். நீங்கள் வாயைத் திறக்காமல் இருந்து விடாதீர்கள்” சாதாரணமாகத்தான் சொன்னான் விநயன்.

“அடடா! நான் பாடும்போது என் வாயைத்தான் பார்த்துக் கொண்டிருந்தீர்களோ? அதனால்தான் கண்களைப் பார்த்துப் பேசத் தவித்தீர்கள் போல இருக்கிறது” கண்ணை வெட்டினாள் ஹர்ஷவல்லி. அவள் அருகாமை, அவள் பேச்சில் இருக்கும் சிருங்காரம், அவள் வனப்பு, அந்த நறுமணம். .. தடுமாறினான். நல்ல வேளையாகச் சில வித்துவான்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள். “மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லிவிட்டு அவள் போனதும் அப்பாடா என்று ஆயிற்று. ஏன் போனாள் என்றும் இருந்தது.

அன்று சத்திரத்துக்கு வந்து உறங்கினவன், சந்தி நேரத்துக்குத்தான் எழுந்தான். அன்று நடந்தவை எல்லாம் மனத்தையும் உடலையும் உணர்வையும் வியாபிக்க இராத்திரி வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். ஹர்ஷவல்லியின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...