Friday, 20 September 2024

05-01. கிரீடசைலம்

 அப்போது, ஒரு சேவகன் தோன்றி, பிரதாபரின் உத்தரவுக்காகத் தயங்கி நிற்க, அவனைக் கவனித்த பிரதாபர், தலையசைத்து அருகில் வரச் சொன்னார்.

"ஐயா, கிரீட சைலத்துக்குப் போகலாமா?"

"விநயா, நாம் பிறகு தொடர்வோம். இப்போது உத்தியானத்தைப் பார்த்துவிட்டு வருவோம், வா" என்று எழ, விநயனும் அவரைத் தொடர்ந்தான். எல்லோரும் சற்றுத் தூரத்தில் தென்பட்ட சோலையை நோக்கிச் சென்றார்கள். செம்மண் நிலத்தில் சற்றுத்தூரம் நடக்கவேண்டி இருந்தது. சோலையில் ஆச்சா, வாகை, வேம்பு, புங்கம், மா மற்றும் நாவல் என்று பலவகையில் மரங்கள், வளர்ந்தும், செடிகளாகவும் இருந்தன. பூச்செடிகள், புதர்கள், சிறுதூறு மற்றும் அரில்கள் ஆங்காங்கே விரவியிருக்க, ஏற்கனவே இயற்கையாக வளர்ந்திருந்த இறும்பைக் கட்டமைப்புடன் நேர்த்தியாக விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். இடையே சிறு சிறு பாதைகள், கற்கள் பதிக்கப்பட்டும், பதிக்கப்படாமலும் .... ஒரு சிலவற்றில் அகல்தொடை, குறும்படிக்கால்கள். இன்னும் முழுமை பெறாத, வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உபவனம். ஒரு மேட்டுப் பகுதியில் ஏறியதும், அங்கொரு நீராளத் தடாகம். அதிலிருந்து இரண்டு மூன்று வாய்க்கால்கள் வழியாகத் தண்ணீர் கீழே வழிந்து கொண்டிருந்தது. தடாகத்துக்கு மேற்குத் திசையில், ஓசையை எழுப்பிக்கொண்டு, மேலிருந்த செய்குன்றிலிருந்து, நீர் வீழ்ந்து தடாகத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.

"மூன்றாவது தடாகத்தை நீரால் நிரப்பியாயிற்றா?" என்று கேட்டார் பிரதாபர்.

"ஆம் ஐயா. நடை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். போய்ப்பார்க்கலாமா?"

"வேண்டாம். வெகு தூரம் அது. கவி சம்மேளன அரங்கை முதலில் பார்த்து விடலாம். மேடை அமைத்தாகிவிட்டதா"

"நேற்றுத்தான் பணி முடிந்தது, இன்று அஷ்டமி வருவதற்கு முன்னே, பூஜையும் நடத்தியாயிற்று, ஐயா."


வேலைப்பாடமைந்த இரட்டையொட்டுப் புதவத்துடன் கூடிய ஒரு பெரிய அரங்கம். கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள். ஆசனங்களோடும், மேடையோடும், பெரிய சாளரங்களுடன் வண்ண வண்ண திரைச்சீலைகளோடு அழகான அரங்கம். அரசர் தனக்கு நெருங்கியவர்களோடு அமர்ந்து பார்க்க ஒரு சிறு உப்பரிகையும் இருந்தது. கல்விளக்கு, காளவிளக்கு, ஓதிமவிளக்கு, குக்குட விளக்கு, புரைவிளக்கு, பாவைவிளக்கு என்று பல சந்தர்ப்பங்களுக்குத் தக்கபடி ஏற்றுவதற்காக, வகையான விளக்குக்களை நிறுவியிருந்தார்கள்.

 

"இங்கே உன்னைப் போன்ற பண்டிதர்கள், தத்தம் படைப்புக்களை அரங்கேற்றலாம், சதசுகளுக்கும், நாட்டியங்களுக்கும் கூட ஏற்ற இடம். இதைப்போல, இன்னும் சில நகரங்களிலும் அமைக்க அரசர் ஆணையிட்டிருக்கிறார்."

"இந்த மொத்த கிரீடசைலமே ரமணீயமாக இருக்கிறது."

"அசுவதி, கார்த்திகை மாதங்களில் ஜ்யோத்சனா கிரீடைக்கான திடல்கள் ஆகட்டும், ஹேமந்த ருதுவில் க்ஷேத்ரக் கிரீடைக்கு வேண்டிய வயல்களாகட்டும், மழைக்காலத்தில் உள்ளேயே நொடிசொல்லும், பிதிரும் விளையாடுவதற்கேற்ற அறைகளாகட்டும் – ஆறு பருவங்களிலும் அரசருக்கு விநோதங்களில் ஈடுபட்டுக் களிக்க, இங்கு வசதிகள் இருக்கப் போகின்றன. அந்தச் செய்குன்று போலவே இன்னொரு செய்குன்றும், குறுங்காட்டுடன் பூதாரக் கிரீடைகளுக்காக தெற்குப்பக்கம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கவிநோதம், மல்லவிநோதம் போன்ற தனிப்போட்டிகளுடன் ஒரு சில சஸ்திரக் கிரீடைகளுக்கும், அவற்றுக்கான பயிற்சிகளுக்கும் கூடச் சிரமச்சாலைகளும், கூடங்களும், திடல்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. நிறைய சண்டைகளைப் பார்த்தாயிற்று இந்த மண். கொஞ்சம் கேளிக்கைகளையும், விநோதங்களையும் காணட்டும்," என்றவர் கூடவே வந்தவனிடம் கேட்டார்,

"சேகரா, வாட்களும் கேடயங்களும் வந்துவிட்டனவா?"

"இன்று காலை ஒரு வண்டி வந்தது, ஐயா. அடுத்த வண்டி, வரும் துவாதசி அன்று கொண்டு தருகிறார்களாம். வந்ததை அங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள்."

"யாராவது பரீட்சித்துப் பார்த்தார்களா?"

"தளபதி ஆரியமா நாளை வருகிறேன் என்று செய்தி அனுப்பியிருக்கிறார்."

வளைவாள், கிளிக்கத்தி, சூரிக்கத்தி, இருதாரைக்கத்தி, கொடுகுயம், பெருஞ்சுரிகை, குற்றுடைவாள், பட்டைநவிரம், பல்வாள் என்று பலவகையான வாள்கள், வகைவகையாகப் பிரிக்கப்பட்டு ஈரம் ஏறாமல், பட்டுப் போன்ற மென் துணியால் சுற்றப்பட்டு பிரம்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததைக் காட்டினான். ஏராளமான கேடயங்கள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன.

ஒரே ஒரு வாளைப் பெட்டியில் இருந்து சுழற்றிப் பார்த்தார் பிரதாபர். அவர் சுழற்றிய விதத்தைப் பார்த்து, இவர் அமர்க்களத்தில் பங்கேற்றவர் மட்டுமன்று, வாள் நுட்பத்திலும் கைதேர்ந்தவர் என்பதை விநயன் முடிவுகட்டியதை, அடுத்த கணம் சரி என்று நிரூபித்தார்.

"பிடியிலிருந்து நுனிவரை, உலோகச்சுமையை நன்றாக நிரவியிருக்கிறான் கொல்லன்" என்று சொல்லிக்கொண்டே, 'இது பைரவம், இது சுணகநடை, இது நூகம், இது அநூகம், இது லுலிதம் என்று பல வாள் சாரிகளைப் பெயர் சொல்லிக்கொண்டே செய்து காட்டினார். அவர் நடனம் செய்பவர் போல, வலம் மற்றும் இடக்கால்களை மாற்றி மாற்றி வைத்து, கரத்தால் வாளைத் தலைக்கு மேலே உயர்த்தியும், இடக்கை, வலக்கை மாற்றியபடி சுழன்று வீசுவதையும் பார்த்துப் பிரமித்து நின்றான் விநயன்.

"நல்ல பணி செய்திருக்கிறான் கொல்லன். சரி, கேசரா, தனுரப்பியாசத் திடலையும் பார்த்துவிடலாம். இளவரசர் வந்துவிட்டாரா?"

"வந்துவிட்டார் பிரபோ. வஜ்ரஹஸ்தருடன் பத்திரச்சேதம் பயிற்சி செய்துகொண்டிருக்கிறார்."

"பத்திரச் சேதமா? ஓர் இலையை மார்பில் அணிந்துகொண்டு நிற்பவன் மீது, இலையை மட்டும் தொள்ளும்படி, அம்பை எறிவதுதானே?"

"அடடே! அதேதான். பண்டிதர் சஸ்திர ஞானமும் உடையவராக இருக்கிறாரே? வேறென்ன என்ன தெரியும்? யமளார்ஜுன பேதிதம் கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"ஒரே தொடுப்பில் இரண்டு அம்புகளை ஏற்றி, ஒவ்வொன்றும் வேறு வேறு இலக்குகளைப் பேதிக்கும்படி எறிதல்"

"அபாரம்! மாலாவித்யாதரம்?"

"யமளார்ஜுனம் போலத்தான், ஆனால், அம்பின் நுனி எதிரும் புதிருமாக ஏற்றி எய்யும்போது, ஓர் அம்பு முன்னால் போகும், இன்னொன்று பின்னால்."

"அதிஉத்தமம், விநயா! நீ அசாதாரணமான பண்டிதன். உன்னை இங்கிருந்து போகவிடப் போவதில்லை." சிரித்தார் பிரதாபர்.


இவர்கள் பேசிக்கொண்டே, இன்னும் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பெரிய திடலை அடைந்தார்கள். அங்கே தச்சர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். உருளைகள் பொருத்தப்பட்டு அங்கும் இங்கும் நகர்த்தும் வகையில் வண்டிகள், வடிவமைக்கப்பட்டு  நிறுத்தப்பட்டு இருந்தன. சிலவற்றில் விதம் விதமான இலக்குக்களைப் பொருத்தியிருந்தார்கள்.

 

"இலக்குப் பயிற்சிக்காகவா, இவை? நீளவாட்டில் இந்தத்  திடல், நாற்பது ஐம்பது பாணப்பதங்கள் இருக்குமா"

"நல்ல கணிப்பு. ஆமாம். இளவரசர் சிறந்த தோள்வலி உடையவர் அல்லரோ? அவர் அம்பெறி தூரத்தின் நாற்பஃது மடங்கு நெடுக்கில், முப்பஃது குறுக்கில்."


திடலின் அந்தப்பக்கத்தில், தூரத்தில், தோட்டங்களுடன் சில குடில்கள் இருந்தன. அங்கே இளவரசர் விற்பயிற்சி செய்துகொண்டிருந்ததால், அம்புக்கு அஞ்சி இவர்கள் தயங்கி நிற்க, இவர்களைக் கவனித்துவிட்ட கலிவிஷ்ணு வர்த்தனர் அருகில் வரும்படி சைகை காட்டினார்.

அறிமுகங்கள் எல்லாம் முடிந்து, எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு குழந்தை தளர்நடையிட்டு வந்தது. பின்னாலேயே இளவரசருடைய இளவயது மனைவி, இரண்டு பணிப்பெண்கள் தொடர வந்தாள்.

 

"பிரதாபரா? நலமாக இருக்கிறீரா?"

"வணக்கம் சீலமாதேவி. தங்கள் கிருபை. இது விநயசர்மன். இவனுடைய தாய் தந்தையர் உற்பட்டூருவைச் சேர்ந்தவர்கள்தாம். மண்ணைக் கடக்கத்தில் வசித்து வந்தார்கள். தந்தை கலவரத்தில், ஒரு சமணத்துறவியைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழக்கத் தாய் மடத்தில் சேர்ந்து அறவியாகிவிட்டாள். சொந்தமென்று யாருமில்லாமல் இங்கே புலம் பெயர்ந்திருக்கிறான். மஹாபண்டிதன்." என்றார்.

"கலவரத்தால் கதியிழந்தவர்களில் ஒருவரா?" அரசியின் கண்களில் கரிசனம் துளிர்த்தது. "இங்கேயே நீங்கள் தங்கலாம். பிரதாபர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார். இந்த மண்ணுக்குப் பண்டிதர்கள் மகா அவசியம்."

"தங்கள் கருணைக்குப் பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன், தாயே" என்று கைகூப்பினான் விநயன்.

 

அப்போது குழந்தை அவனுடைய கொடுமடியை இழுத்தது. எல்லோரும் சிரித்தார்கள். "இப்போதே காணம் கேட்கிறார் வருங்கால அரசர்" என்ற பிரதாபர், குழந்தையின் முன்னே குனிந்து, "தேவரீர் திருநாமம் என்ன" என்று கேட்டார்.

பட்டென்று, "அஹம் பிஜ்ஜாதித்தன்" என்று சொல்லிவிட்டு ஓடியது குழந்தை. அதைத் துரத்திக்கொண்டு பணிப்பெண்கள் போக, "நான் நீராடிவிட்டு வந்துவிடுகிறேன். எல்லோரும் சேர்ந்து உணவருந்தலாம் " என்று இடைகழி வழியே பஃறகை உள்ள அக்குடிலின் புழைவாயிற்குப் பின்னமைந்திருந்த நீராட்டறை நோக்கிச் சென்றார் இளவரசர். வஜ்ரஹஸ்தரும் நீராடச் செல்ல, பிரதாபர் சீலாதேவியுடன் பேசிக்கொண்டே முன்னே சென்றார். அவர்கள் இருவரும் ஒரு தந்தையும், மகளும் போவதைப் போல, ன்னியோன்னியமாக இழைந்து பேசிக்கொண்டு போவதை வியப்புடன் பார்த்தவாறு யார் இந்தப் பிரதாபர்? என்ற கேள்வி மனத்தில் எழ, அவர்களைப் பின்தொடர்ந்தான் விநயன்.

உணவுக்குப் பிறகு, ஸஹஜமாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, இளவரசர் குடும்பத்தோடு புறப்பட்டார். புறப்படுமுன், பிரதாபரை அழைத்தார்,

“பிரதாபரே! வாளெறி கடிகை ஒன்றைப் பெருஞ்தச்சனோடு சேர்ந்து வடிவமைத்திருக்கிறேன். காழூன்று கடிகையைப் போல அல்லாது, இது உருளைகள் மீது அமைக்கப்பட்டு அங்கும் இங்கும் நகர்த்தப்படும்படி இருக்கும். பரீட்சார்த்தமாக ஒன்று செய்து கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். வரும் உவாவுக்கு முன்னால் வந்துவிடும். மேலும் கீழும், பக்கவாட்டிலும், சுழன்றும் அசையும்படி நான்கு தண்டுகள் கொண்ட பொறி. அவற்றில் வாட்களைப் பொருத்திவிட்டால், சதுர்புஜ சமர்த்தனைப் போலத் தனக்குத்தானே சிக்கிக்கொள்ளாமல் அவற்றைச் சுழற்றும். இடையிடையே குறுவாள்களையும் அவ்வப்போது எறியும். நான்கைந்து போக்குள்ள சூத்திரப் பொறி. விசை மூலம் எந்தப் போக்கு வேண்டுமோ அதை வைத்துக்கொள்ளலாம். அதை அடக்கிச் செயலிழக்கச் செய்ய குறைந்தது ஐந்தாறு வாளிகள் தேவை என்று உறுதி அளித்திருக்கிறான் தச்சன். அடக்க நான்கு வாளிகள் தேவைப்பட்டாலே, அது நம்முடைய படைக்குப் பெரும்வலியைச் சேர்க்கும்.

“நம்முடைய சிறந்த வாளிகள் பத்துப்பேரைத் தேர்ந்தெடுத்து, நான்கு நான்கு பேர்களாக அதனோடு பொருதச்சொல்லி, வரும் உவாவுக்கு இங்கே ஒரு போட்டி வைத்துப் பரிசு தரலாம் என்று இருக்கிறேன். கேளிக்கையாகவும் இருக்கும், சோதித்துப் பார்த்தது போலவும் இருக்கும். என்ன சொல்கிறீர்?

“நல்ல யோசனைதான், இளவரசே! நான்கு பேர்கள் குழுவுக்கு என்றால், எஞ்சிய இரண்டு பேர்? தனியாகப் போரிடுவார்களா?

“அன்று அன்று. நான்கு பேர்கள் என்றால், அந்தப் பத்துப் பேரிலிருந்து, குறைந்த பட்சம் ஒரு வாளியாவது புதிய நபராக இருக்கும்படி புதிது புதிதாக, நான்கு பேரைக் குழு சேர வைப்போம். என்னதான் இருந்தாலும், இது எந்திரம்தானே? ஒரு போக்கைத் தீர்மானித்துவிட்டால், அதே போலத்தான் செய்யும். என்ன செய்கிறது என்று இரண்டு மூன்று முறை அதனோடு பொருதால், அதனுடைய போக்குப் புரிந்துவிடும். அதற்கப்புறம், முன்னேற்பாடின்றிச் குழுவாகச் சேர்ந்தவர்கள், ஒன்று போலச் சிந்தித்து, சமய உசிதமாகத் தட்சணம் போரிடும் சமர்த்தராக இருக்கிறார்களா என்று பரீட்சிக்க விரும்புகிறேன். பயிற்சியாகவும் இருக்கும்.”

“ஓ! புரிந்தது. ஒரு குழுவுக்கு, அரை நாழிகை என்று வைத்துக்கொண்டால், இரண்டு யாமங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. பகற்பொழுதில், நான்காம் யாமத்தில் துவங்கி, இரவு முதல் யாமத்தில் முடித்துவிடலாம். பிறகு, பரிசில்கள், விருந்து என்று நள்ளிரவு வரை கொண்டாட்டமாக இருக்கும். ஏற்பாடு செய்துவிடுகிறேன்.”

 

இளவரசர் புறப்பட்டுப் போனதும், விநயன் சொன்னான், “இளவரசர் சொன்னபடி செய்தால், இரண்டு யாமங்களில் முடியாது. இரண்டு நாட்கள் வேண்டும். இருநூற்றுப் பத்துக் குழுக்கள் அமைக்க வேண்டும்”

“ஐயோ! என்ன சொல்கிறாய்?”

“ஆமாம் ஐயா. ஏழு வாளிகளில் இருந்து, நான்கு நான்கு பேர்களாக வைத்தால் கூட, முப்பத்தைந்து குழுக்கள் ஆகிவிடும்.”

“பதினைந்து குழுக்களுக்கு மேலே போகக்கூடாது”

“அப்படியென்றால், ஆறு வாளிகளில் இருந்து, நான்கு நான்கு பேர்களாகக் குழுக்கள் அமைத்தால், பதினைந்து குழுக்கள் அமைக்கலாம்.”

“எப்படி, எத்தனை உறழ் என்று உடனுக்குடன் எளிதாகச் சொல்கிறாய்?”

“இதற்கு ஒரு சூத்திரம் இருக்கிறது, ஐயா. ப்ரஸ்தாரயோக³ பேத³ஸ்ய ஸூத்ரம் என்பார் ஆசார்யர்.

 

ஏகாத்³யேகோத்தரத: பத³மூர்த்வார்தயத:க்ரமோத்க்ரமஶ: |

ஸ்தா²ப்ய ப்ரதிலோமக்னம்ʼ ப்ரதிலோமக்னம் பாஜிதம் ஸாரம் ||

 

என்பது ஸூத்ரம்.

“அடேயப்பா! கணித சாஸ்திரம் என்றால், கோள்கள் சஞ்சாரத்தைக் கணித்து, வாரம், திதி, கரணம், நக்ஷத்திரம், யோகம் என்று இந்தப் பஞ்ச அங்கங்களைக் கணக்கிடுவதற்குத்தான் பயன்படும் என்று நினத்தேன்.”

“தாங்கள் அப்படி நினைப்பதற்கு ஏதுவாகத்தான் இதுவரை எழுதப்பட்ட சித்தாந்தங்களும் இருக்கின்றன ஐயா. ஆசார்யர், வான சாஸ்திரத்தையே கொண்டுவராமல் முற்றிலும் கணிதத்துக்காகவே ஒரு நூலைப் படைத்துக் கொண்டிருந்தார். இப்போது முடித்துவிட்டிருக்கலாம். அதில், வாழ்வியலுக்குக் கணிதம் எவ்வளவு முக்கியமானது என்று ஒரு கணித கீதம் படைத்திருப்பார். பாடசாலைகளில் போதிக்கத் தக்க கீதம்.”

“எங்கே சொல், பார்ப்போம்?”


லௌகிகே வைதி³கே வாபி ததா² ஸாமாயிகேSபி ய:

வ்யாபாரஸ்தத்ர ஸர்வத்ர ஸங்க்²யானம் உபயுஜ்யதே

 

காமதந்த்ரேSர்த²ஶாஸ்த்ரே கா³ந்தர்வே நாடகேSபிவா

ஸூபஶாஸ்த்ரே ததா² வைத்³யே வாஸ்துவித்³யாதி³ வஸ்துஷு

 

ச²ந்தோ³Sலங்கார காவ்யேஷு தர்க, வ்யாகரணாதி³ஷு

கலாகு³ணேஷு ஸர்வேஷு ப்ரஸ்துதம் க³ணிதம் பரம் |

 

“ஆஹா, எளிமையான ஸம்ஸ்க்ருதம். ஆனால், என்ன அழகான ஸ்லோகங்கள்! லௌகீக வாழ்வாகட்டும், வைதீக வாழ்வாகட்டும், இல்லை சமுதாய வாழ்வாகட்டும், சமையலோ, பொருளாதாரமோ, காமதந்திரமோ, இசையோ, நாடகமோ, யாப்போ அலங்காரமோ, எல்லாவற்றிலும் பரமமாக வீற்றிருப்பது கணிதம்தான் என்கிறாரே! இவரோடு உனக்குப் பழகக் கிடைத்தது, பரமேஸ்வரனின் அருள்தான்.”

“ஆமாம். தந்தையால் ஏற்பட்ட பேறு இது. அவரை மீண்டும் பார்ப்பதற்காகவாவது, ஒருமுறை மான்யகேடத்துக்குப் போகவேண்டும்.”

“போவோம். பிரயாணத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன். எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. சரி, அந்த ப்ரஸ்தாரயோக³ பேத³ சூத்திரத்துக்கு வருவோம். அதன்படி, பெரிய குவையில் எத்தனை உறுப்புக்கள் உள்ளனவோ, அந்த எண்ணில் இருந்து துவங்கி, ஒன்று ஒன்றாகக் கழித்துக் கொண்டுபோய் எண்களைக் கண்டுபிடித்துப் பெருக்கி, மேல்வாய் இலக்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமா?

“ஆமாம் ஐயா. பெரிய குவையில் ஆறு வாளிகள் இருப்பதாக வைத்துக் கொண்டால், ஆறிலிருந்து துவங்கி, ஆறு, ஐந்து, நான்கு என்று மூன்று வரை போகவேண்டும்.”

“ஏன் நான்கு எண்கள்? சிறிய குவையில் நான்குதான் தேவை என்பதாலா?”

“ஆம் ஐயா. இந்த நான்கையும் பெருக்க, மேல்வாய் எண் மூன்று நூறு, ஆறு பத்து. கீழ்வாய்க்கு, ஒன்றிலிருந்து துவங்கி, அதிகரித்துக் கொண்டே நான்கு வரை போகவேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு. இதைப் பெருக்க இருபத்து நான்கு. மேல்வாயைக் கீழ்வாய்க்குப் பகுத்தால் பதினைந்து. வெகு எளிது. 

“நீ சொல்வது எளிதாக இருக்கிறது. சூத்திரத்தைக் கேட்டபோது, ஒவ்வொரு பின்னமாகக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார் என்று பட்டது.”

“ஆம் ஐயா. சூத்திரத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். ஆறுக்குக் கீழே ஒன்று, ஐந்துக்குக் கீழே இரண்டு, நான்குக்குக் கீழே மூன்று, மூன்றுக்குக் கீழே நான்கு. அதைப்போலச் செய்தால் சற்று வேலை அதிகம்.”

“பஃது வாளிகளில் இருந்து நான்கு பிரஸ்தாரம் வேண்டுமென்றால், பஃது, தொள்பஃது, எட்டு, ஏழு இவற்றின் பெருக்கல் மேல்வாய். அதே இருபஃது நான்கு கீழ்வாயா? அதனால்தான், இருநூற்றுப் பஃது என்றாயா? அபாரம்! இதை நான் இப்போது இளவரசருக்கு வேறு சொல்லிப் புரியவைக்க வேண்டும். அவரிருக்கும்போதே சொல்லியிருக்கக் கூடாதோ நீ?”

“அவ்வளவு உத்ஸாஹமாக நீங்களும் அவரும் பேசிக்கொண்டிருந்தீர்கள். நான் எப்படி ஐயா, இடையில் புகுந்து, அதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்ல முடியும்?”

“அதுசரிதான். அரச பரம்பரைகளிடம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே உத்தமம். சரி நேரமாகிறது. இருட்டாகிவிட்டால், விறகு வெட்டிகள், காட்டைக் கரிக்காகக் கொளுத்தத் துவங்கிவிடுவார்கள். பிறகு புகை மண்டலத்தில், குதிரை மிரளும். சேகரா! புறப்படுவதற்குச் சித்தம் செய்” என்று கட்டளையிட்டார் பிரதாபர்.

புகை மண்டுவதற்குள் விறகுக்கரிக் காட்டைத் தாண்டிவிட்டார்கள். விநயன் சத்திரத்தில் நுழையும்போது, இரவுண்டிக்கு இலை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...