அன்று, விநயனை இல்லத்துக்கு அழைத்திருந்தார் பிரதாபர். காலையில், இரண்டாம் யாமத்தின் யாமபேரி முழங்கியதும், ஒரு குதிரைவீரன் சத்திரத்தின் வாயிலில், கையில் இன்னொரு புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி, வந்துநின்றான்.
“தங்களுக்குப் புரவியேறத் தெரியும் என்று சொன்னார் வல்லப ஸ்வாமி. சாதுப் புரவிதான். தைரியமாக ஏறலாம்” என்று சொல்லி, வற்கத்தைத் தந்தான். வற்கத்தை வாங்கிக் கரத்தில் உறுதியாகப் பிடித்தபடி, இடக்காலைப் பக்கரையில் வைத்து ஏறி, வலக்காலைப் புரவியின் மீது தூக்கிவைத்து நன்கு அமர்ந்துகொண்டான்.
“வா, போவோம்” என்று புரவியின் வயிற்றில் மெல்ல உதைத்துக் குதிரைவீரனைப் பின் தொடர்ந்தான். பிரதாபவர்த்தனருடையது மாளிகை என்றுதான் சொல்லவேண்டும். சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சுற்றுப்புறச் சுவர்போல அமைந்திருந்தன. இரண்டாம் அடுக்கில், மரப்பலகைகளால் ஒரு சுற்றுச்சுவர் இருந்தது. உள்ளே செல்லும் இடத்தில், இரண்டு படைவீரர்கள் ஈட்டியுடன் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டியதும் பெரிய முற்றம். இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் சுற்றுப்பாதை வீட்டைச் சுற்றிப் போயக்கொண்டிருந்தது.
“பின்னால்தான், புரவிக்கொட்டில் இருக்கிறது. நீங்கள் இங்கே இறங்கிக் கொள்ளுங்கள். நான் புரவிகளைச் சேர்ப்பித்துக் கட்டிவிடுகிறேன்” என்று குதிரைவீரன் விநயனின் கையில் இருந்து குதிரைக் குசையை வாங்கிக்கொண்டான். விநயன் இறங்கியதும் இன்னொரு வீரன் அருகில் வந்து, “உள்ளே வாருங்கள், தேவியார் நீங்கள் வந்ததும் நேரே அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்” என்று உள்ளே அழைத்துப் போனான். நன்கு உயர்த்திக் கட்டிய வீடு. இரண்டு மாடங்கள் இருந்தன. பிரதம வாயிலுக்குப் போகத் தரையிலிருந்து பத்துப் பதினைந்து படிகள் ஏறவேண்டும். நீண்ட அகலமான படிகள். அடிப்பகுதியில் இருபது தண்டம் நீளத்துக்கு அகலமாகத் தொடுக்கப்பட்டிருந்த படிகள், வாயிலுக்கு வரும்போது மெல்ல மெல்லக் குறுகியிருந்தன.
வாயிலில் காவல் காத்துக் கொண்டிருந்த இரண்டு
வீரர்கள் வணங்கி வழிவிட்டார்கள். கலைப்பொருட்களும், வேலைப்பாடுள்ள விளக்குக்களும்
சீனக் கடுகங்களும், இசைக்கருவிகளும் அழகாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரிய
கூடம். நீளமான இருக்கைகளும், ஆசனங்களும் போடப்பட்டிருந்தன. கூடத்தில் அவனை
அமர்த்திவிட்டு, வீரன் அவன் வருகையை அறிவிக்க உள்ளே போனான். சற்று நேரத்தில், ஒரு
பணிப்பெண் பின் தொடர, ஒரு மாது வந்தாள். வெளுத்த முடி. தீட்சண்யமான பார்வை. நீலப்
பட்டும், மணிகளும், வைரங்களும் அந்தப் பார்வையின் ஒளிக்குப் போட்டி போட முயன்று
தோற்றுக்கொண்டிருந்தன. அவளைப் பார்த்ததும், கணபாம்பா என்று புரிந்துவிட்டது
விநயனுக்கு. எழுந்து நின்று, அவள் காலில் விழுந்து நமஸ்கரித்தான்.
“தீர்க்க ஆயுசோடு, திவ்யமாக இரப்பா. நீதான் அந்த விநயாதிசர்மனா? காதால் மட்டும் உன் பெருமையைக் கேட்டுக் கேட்டுப் பழகிப்போனவளுக்கு, ஒருவழியாக நேரிலும் தரிசனம் கிடைத்தது” என்று சிரித்தாள்.
வெட்கப்பட்டுக் கொண்டு சிரித்தான் விநயன்.
“தினமும் நீ இப்படிப் பேசினாய், நீ இதைச் செய்தாய், நீ இப்படிப் பாடினாய் என்று உன்னைப் பற்றிப் புகழாமல் இருக்கமாட்டார். நல்ல ஆள் கிடைத்தாய் ஸ்வாமிக்கு” என்றாள்.
“எல்லாம் அவருடைய கருணை”
“இங்கே திரும்பி வந்ததில் இருந்து, அவர் இவ்வளவு சௌஜன்யமாக யாரிடமும் பழகியது கிடையாது. உன்னைப் பார்த்தால், அவருக்கு மான்யகேடத்து நினைவுகள் எல்லாம் திரும்பி வருகின்றன. திரிலோசனையின் பிள்ளையாமே நீ? சொன்னார். நான் உன் அன்னையைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். புத்திசாலி அவள்.”
“வந்தவனை நிற்கவைத்தே பேசிக்கொண்டிருப்பாய் போல இருக்கிறதே. உட்காரச் சொல் அவனை” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் பிரதாபர். “எப்போது வந்தாய்?”
“இப்போதுதான் ஐயா. வந்து கொண்டே இருக்கிறேன்.”
“நல்லது. உட்கார். நீராடிவிட்டு வந்துவிடுகிறேன். அவனை, என்னுடைய அலுவற்கூடத்தில் அமர வை, கணா” என்று சொல்லி உள்ளே சென்றார்.
அன்று கங்கமண்டலத்தைப் பற்றி நிறைய சொன்னார்.
“கங்கத்துக்கும் இரட்டத்துக்கும் இடையே பகை வளர்ந்ததற்கு முக்கிய காரணம் கங்கத்துக்கும் வாதாபிக்கும் இடையே இருந்த கேண்மைதான். வாதாபி விழுந்ததும், கங்கத்துக்கு ஏற்பட்ட, தக்கணத்தைக் கட்டுப்படுத்தும் ஆசை, காஞ்சிக்கும் மதுரைக்கும் இருந்த விரோதத்தால் விசிறப்பட்டு, இராட்டிரக்கூடத்தின் அடுத்தடுத்த அரசர்களுக்கு ஒரு பெரும் தொல்லையாக மாறிற்று. இன்றுவரை, இரட்டப் பேரரசுக் குதிரைக்குக் காலில் தைத்த முள்ளாக இருக்கிறது, கங்கம்.
“மஹாவீரரான ஸ்ரீபுருஷரின் ராஜாங்கச் சாணக்கியமும், அவருடைய சந்ததியினரின் வீரமும் இராட்டிரக்கூடத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்தியே வைத்துக் கொண்டிருக்கிறது. கங்கமண்டலம், தக்கணத்தைத் திரமிளத்துடன் இணைக்கும் ஒரு தோரண வாயில் என்று நீயே உன் அனுபவத்தில் தெரிந்து கொண்டிருப்பாய். அதை எந்த அரசு கட்டுப்படுத்துகிறதோ, அது கேரளம், கொங்கு, தொண்டை மண்டலம், சோழம், பாண்டியம் என்ற தேசங்கள் எல்லாம் மத்தியத் தக்கணத்தோடு இணைகின்ற பாலத்தைக் கட்டுப்படுத்துகிறது.
“கங்கமண்டலம், வாதாபிச் சாளுக்கியர்களுக்கு நெருங்கிய நட்புப் பிராந்தியம்தான் என்றாலும், தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காத பிராந்தியம். இராட்டிரக்கூட அரசை நிராகரித்த ஸ்ரீபுருஷர், சாளுக்கியப் பேரரசு முடிவுற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்தில், கங்கமண்டலம் தொண்ணூற்று ஆறாயிரத்தை நிலைநாட்ட முயன்றார். அதற்கான தகுதியும் அவருக்கு இருந்தது. அசாத்தியமான வீரர். பீமகோபன் என்று பெயர் பெற்றவர். கடும்போருக்கு அஞ்சாதவர். ஸ்ரீராஜ்யம் என்ற புகழ்பெறும் அளவுக்கு, ஷன்னவதி ஸஹஸ்ரத்தின் நிலையை உயர்த்தியவர். பெரிய பண்டிதரும் கூட. கற்றவர்கள் வந்து கூடும் இடம் கங்கவாடி. நீயே பார்த்திருப்பாய்.
“தலைமுறை தலைமுறையாகவே சாளுக்கியர்களுக்குத் துணையாக இருந்து பல்லவர்களை எதிர்த்த பரம்பரை. பாண்டியர்களோடு பகை, பிறகு நட்பு, காடுவெட்டிகள் என்று அழைக்கப்படும் காடவர் குலத்தோடு நட்பு, பிறகு பகை, இப்படி அரசியல் காய்களை நகர்த்திய அரசு. இப்போது பெருமானடி என்று தன்னை அழைத்துக் கொள்கிறார்களே, கங்க அரசர்கள், ஒரு காடுவெட்டியைத் தோற்கடித்து ஸ்ரீபுருஷர் சேர்த்துக்கொண்ட பட்டம்தான் அது. பல்லவர்கள் இரட்டத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வேறே ஆகிவிட்டதால், கங்கத்தின் குந்தளப் பேரரசுக் கனவு, துண்டகத்துக்கும், இரட்டத்துக்கும் இடையே திண்டாடிப் போயிற்று.
“கிருஷ்ணராஜா கடுமையான சண்டைக்குப் பிறகுதான் கங்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். இரட்டபாடியின் தந்தையும் தனயனும், கங்கவாடியின் தந்தை, தனயர்களோடு பல வருடங்கள் சண்டையிட்டார்கள். சிலமுறைகள் ஸ்ரீபுருஷர் வென்றார். சிலமுறைகள் கிருஷ்ணராஜா. பெருத்த உயிர்ச்சேதம் இருதரப்பிலும் ஸ்ரீபுருஷர், தன்னுடைய தலைநகரை மங்குந்தத்தில் இருந்து மான்யபுரிக்கு மாற்ற முடிவுசெய்ததும் இந்தச் சண்டைகளின் விளைவால்தான். பெரிய யானைப்படைகள் கொண்ட நாடு கங்கம். இரட்டர்களின் வலு, துரகப்படை. கஜ துரக, நிர்ப்பந்தம்!” சிரித்தார் பிரதாபர்.
“காவியம் எழுதலாம் போலிருக்கிறதே”
“எழுது, எழுது. நீதான் பண்டிதன். ஆனால் ஒன்று. கங்க, இரட்டச் சண்டைகளில் பண்டிதர்கள், தாம் நேசித்த கங்கமண்டலத்துக்காகத் தம்முடைய கரங்களில் ஓலைச்சுவடிகளின் இடத்தில் வாட்களைத் தூக்கத் தயங்கவில்லையாம்.”
“ஓ! எனக்கு என்று வாள் சுழற்ற நேரப் போகிறதோ? கங்கமண்டலத்தில், அனாதையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் போது, நிறைய வீரக்கற்களைப் பார்த்தேன். எல்லாம் இராட்டிரக் கூடர்களோடு நடந்த போரில் உயிர் இழந்தவர்களுக்கானவை என்று சொன்னார்கள். எப்படிப்பட்ட கொடுமையை விளைவிக்கின்றன இந்தப் போர்கள்! இங்கே வாழ்வு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது? இதைவிட வாழ்வின் பொருள், வேறு என்ன இருக்க முடியும்?”
“இதை நீ, அரசர்களிடம்தான் கேட்க வேண்டும்.”
“நீங்களும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தாமே. போர்க்குணம் இல்லாமல் நீங்கள் இல்லையா?”
“நானெல்லாம் ஒரு சிறுதுளி. அன்பின் வயப்பட்டு அமைதியாக வாழும் அரசர் நரேந்திரர் இருக்கிறாரே!”
“அந்த விவேகம் வருவதற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தது!” சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான். “மன்னித்துக்கொள்ளுங்கள், வாய் தவறி வந்துவிட்டது. மன்னரை அப்படி எல்லாம் பேச நான் யார்?”
“நல்லவேளை, என்னிடம் பேசினாய். வெளியே யாராவது கேட்டிருந்தால், உன்னோடு, என்னுடைய தலையும் போயிருக்கும். உண்மைதான் ஆனாலும், இதெல்லாம், வாழ்வில் மானுடர்களால் விலக்க முடியாத, விளங்கிக்கொள்ள முடியாத கடினமான முடிச்சுக்கள். அவிழ்க்க நினைப்பவர்களுக்கு அவலத்தைத்தான் கொண்டுவரும் என்று படுகிறது. சமுதாயத்தில் இருந்துகொண்டே, அதனுடைய கொடைகளான பெருமிதம், புகழ், அதிகாரம் இவற்றைத் துய்ப்பதிலேதான் வாழ்வின் பொருள் இருக்கிறது என்று பழக்கப் பட்டவர்கள், இவற்றையெல்லாம் அதிகம் ஆராயாமல் இருப்பது, அவர்களுக்கு நல்லது. ஆராயத் தொடங்கி விட்டால், எல்லாவற்றிலும் பற்றுக் குறைந்து செயல் செய்யவேண்டும் என்ற ஆர்வம் குலைந்து போய்விடும். கிருஷ்ணராஜா கங்கத்தின் மீதடைந்த வெற்றி, பெருவிலை கொடுத்து வாங்கிய வெற்றி. அப்படியிருந்தும், அவர் நாட்டைத் தன்னோடு இணைத்துக் கொள்ளவில்லை. ஸ்ரீபுருஷரிடமே கொடுத்து ஆளச் சொல்லிவிட்டார். இது எப்படி இருக்கிறது?”
“பிறகு, எதற்காக இந்தச் சண்டை?”
“யோசித்துப் பார். எல்லாச் சண்டைகளும், எல்லைகளை விரிவாக்குவதற்கோ, அஹங்காரத்துக்கு உணவிடுவதற்கோ நடத்தப்படுவன அல்ல. நாம் ஏற்கனவே, பேசியிருக்கிறோம். ஒரு சாம்ராஜ்ஜியம் அழிந்து போய்ப் புதியதாக மற்றொன்று உதயமாகும்போது, அழிந்து போன அரசின் அதிகாரத்தில் இருந்த பூமியின் எல்லைகளோடு, உணர்வு பூர்வமாகவும், உறவு பூர்வமாகவும், பழக்க பூர்வமாகவும் பின்னிப் பிணைந்திருந்தவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறாய்? அல்லது அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய்? பழையதை மறந்துவிட்டுப் புதியதோடு உடனே உறவாடி விடுவார்களோ? அப்படி அவர்கள் செய்தாலும், அரியணையில் அமர்ந்துள்ள புதிய அதிகாரம் அவர்களை நம்பி ஏற்றுக் கொண்டுதான்விடுமா?”
“சிக்கலான நிலைதான்! உடனேயே பணிந்துவிட்டால், இவர்களுக்கு விசுவாசம் இவ்வளவுதானா என்று கேட்பார்கள். நாம் பலஹீனமானால், நம்மையும் இப்படித்தான் விட்டு விலகி, வென்ற புதியதோடு இணைந்து விடுவார்கள் என்று கருதி, இவர்களை நம்பக் கூடாது, என்று எண்ணுவார்கள்!”
“அதேதான். எப்போது, பழையதை விடவேண்டும், எப்படி விடவேண்டும், எதற்காக விட்டுவிட முடிவு செய்கிறோம் இதையெல்லாமும் புதிய அதிகாரமும், அது கூட்டிவந்த சமுதாயமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். சிலசமயம், இம்மாதிரி பிணக்குக்கள் எழும்போது, ஆவேசமாக, ஒரு பட்சத்தின் சார்பில் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அதைக் காப்பாற்ற உயிரையும் துறக்கச் சித்தமாக இருக்கிறவர்களுக்கு, உடனே மதிப்பு வழங்கப்பட்டு விடுகிறது. தியாகிகள் என்று அவர்கள் பேசப் படுவார்கள். ஆனால், இந்த மதிப்பு ஒரு மாயை. தோன்றிய சில காலத்துக்கு வீராப்புடன் பேசப்பட்டுச் சிலகாலத்துக்குப் பிறகு, இம்மதிப்பு, தன்னுடைய சோபையை இழந்துவிடுகிறது. அதற்குப் பிறகு, நீ பார்த்த வீரக்கற்களைப் போல, இது உணர்வுப் பிணைப்பு அறுபட்ட வெறும் சரித்திரம் மட்டுமே.
“தன்னுயிரை மட்டுமன்றி, குடிமக்கள் உயிரையும், படைகளின் உயிரையும் துச்சமாக மதித்துப் பொருத ஸ்ரீபுருஷரைப் பணியவைத்துப் பெருமிதம் கொண்டாலும், கிருஷ்ணராஜா, அந்தப் பிராந்தியம் ஸ்ரீபுருஷருக்காகக் காட்டிய விசுவாசத்தை மதித்தார். அந்தச் சமயத்தில், கங்கவாடியின் நிர்வாகத்தைத் தான் எடுத்துக்கொண்டால், அம்மக்களை இராட்டிரக் கூடத்துக்கு ஒத்துழைக்க வைக்க நிறைய காலத்தையும், ஆள் பலத்தையும், சக்தியையும் விரயமாக்க வேண்டியிருக்கும். பழகிய நிர்வாகத்தையே தொடரச் சொன்னால், தேசத்தில் ஊடுருவியிருக்கும் உட்கொதிப்பு மெல்லத் தணிந்தடங்கி, இணக்கம் ஏற்படும் என்று நினைத்தார். ஸ்ரீபுருஷருக்கே இராஜ்ஜியக் கட்டுப்பாட்டை அளித்துத் தமக்கு அடங்கிய சிற்றரசாகத் தொடரச் சொன்னார்.”
“இதை எல்லாப் போர்களுக்குப் பின்னாலும், நடைமுறைப் படுத்த முடியாது அல்லவா? தோல்வியடைந்த அரசனுடைய இயல்பைப் பொறுத்துத்தான் இந்த உத்தியின் வெற்றி, தோல்வி நிர்ணயமாகும் என்று எனக்குத் தோன்றுகிறது.”
“மிகச்சரி. ஸ்ரீபுருஷர் ஒரு முன்மாதிரி அரசர். பண்டிதர். சாதுரியமும், சாணக்கியமும் ஒருங்கிணைந்தவர். குடிக்கர்வம் இருப்பினும், தேசம் என்ற பரந்தவெண்ணமும் கொண்டவர். அதனால்தான், வெல்ல முடியாது என்று தெரிந்ததும், அத்தனை ஆவேசமாகச் சண்டையிட்டிருந்தாலும், தோல்வியை ஒப்புக்கொண்டார். பொதுஜன ஹிதத்தை மனத்தில் கொண்டு, சிற்றரசாகத் தன்னைக் குறுக்கிக் கொள்ளவும் சித்தமானார். இதே நடைமுறையைப் பின்பற்ற அவருடைய புதல்வருக்கு இயலவில்லை.”
“மிகவும் யோசனையைத் தூண்டும் விஷயம்தான். ஒரு தலைமை எப்படித் தோல்வியை எதிர்கொள்ளவேண்டும் என்பதற்குக் கையேடு எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. தோற்றுப்போன தலைமையின் இயல்பு, அதைத் தோற்கடித்த தலைமையின் இயல்பு, சண்டை ஏற்படுவதற்கான காரணங்கள் குடிமக்களின் அப்போதைய மனோபாவம் என்ற பல நிறங்கள் கலந்த கலவை அது.”
“நாட்டை அழித்து என்ன பயன், என்று ஸ்ரீபுருஷருக்குத் தோன்றி இருக்கலாம். கிருஷ்ணராஜா ஆட்சியில் இருந்தவரை, ஸ்ரீபுருஷரும் இருந்தார். இருவருக்கும் இடையே எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. பெரிய கோவிந்தர்தான் பட்டத்து இளவரசர். அதனால், கங்கவாடிக்கு அவருடைய அதிகாரமும் பழக்கப்பட்டதாயிற்று. சாளுக்கியப் பேரரசு சுத்தமாக நிர்மூலம் ஆகிவிட்ட நிலையில், புதிய விசுவாசங்கள் விதைக்கப்பட்டன. விசுவாசத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்? விசுவாசத்தை மாற்றிக் கொண்டவர்களை நம்பலாகுமா?”
“நம்புவது கடினம்தான். நான் தயங்குவேன்.”
“தந்திதுர்க்கர் நம்பிக்கைத் துரோகி என்று நினைக்கிறாயா? அவர் மீது நம்பிக்கை வைத்திருந்ததல்லவா, சாளுக்கிய அரசு? என்ன ஆயிற்று? நாகசாரிகாவின் கற்கன் திரியவில்லையா? பெரிய கோவிந்தர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்த அவருடைய தம்பி அவரையே எதிர்த்துப் போரிட்டு அரியணையைப் பறிக்கவில்லை?”
“அவரவர்களுக்கு அபிப்பிராய பேதம் இருந்தது”
“அப்படியென்றால், அபிப்பிராய பேதம் என்ற ஒன்று போதும், விசுவாசத்தை மாற்றிக் கொள்ளலாம் என்கிறாயா?”
“நல்ல காரணமாக இருந்தால், அப்படிச் செய்ய வேண்டியதுதான்”
“எது நல்ல காரணம் என்று யார் தீர்மானிப்பது? ஒருவேளை காரணத்தைத் தந்திதுர்க்கர் தந்திருந்தால், கீர்த்திவர்மர் அதை ஒப்புக் கொண்டு, ‘ஆமாம் ஆமாம், நீ சொல்வது சரிதான். அப்படித்தான் செய்திருக்கவேண்டும்’ என்று சொல்லித் தோளைத் தட்டிக் கொடுத்து விடுவாரா?”
சிரித்தான் விநயன். “அப்படி எப்படிச் செய்வார்? அவரைப் பொறுத்தவரை, தந்திதுர்க்கர் பிறழ்ந்தவர்தான். நீங்கள் சொல்வதும் பெரிதும் யோசிக்கத் தூண்டுகிறது. ராஜத்துரோகம் என்ற ஒன்று இல்லவே இல்லையோ?”
“துரோகத்துக்கும், விசுவாச மாறுதலுக்கும் சிறிய வித்தியாசம் இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. விசுவாச மாறுதல், ஒருமுறை பகிரங்கமாக நடந்து விடுவது. விபீஷணன் செய்தது போல. துரோகம் கூடவே இருந்து, குழி பறிக்கும். துருவராஜா செய்தது பகிரங்கமான விசுவாச மாற்றம், அல்லவா? நரேந்திரர் இப்போது செய்வதென்ன? வருடக் கணக்காகப் போர் புரிந்த எதிரிக்கு எதிராக இன்று எந்த இரகசிய நடவடிக்கையிலாவது ஈடுபட்டிருக்கிறாரா? அவருடைய ஆணையைச் சிரமேல் தாங்கிப் போரிட்டு, வேங்கிக்காக எத்தனை பேர் உயிர் துறந்திருக்கிறார்கள்! அதற்காக, அவர் தானும் போரிட்டுத் தன்னை விட வலிமையானவர்களிடம், உயிர்துறக்க வேண்டியதுதானா? உயிருக்குப் பயந்துதான் அவர் இராட்டிரக் கூடர்களோடு சமரசமாகப் போனாரா என்ன? கங்கத்துச் சிவமாறனைப் போன்ற ஒரு வீரன், பாதி வாழ்நாள் சிறையில். விடுதலை ஆனதும், எதிரியின் தரப்பில் சேர்ந்து கொண்டு, எதிரியின் கட்டளையை ஏற்றுக் கொண்டு, எதிரியின் எதிரிகளோடு சண்டை இட்டார். இது விசுவாச மாற்றம் இல்லையா?”
“ஆம்! அரசியல் கட்டாயங்களுக்காகச் சில மாறுதல்கள் நடக்கத்தான் செய்கின்றன.”
“அதேதான். இது கருப்பு, இது வெள்ளை என்று இவற்றை நாம் பிரித்து வரையறுத்துவிட முடியாது. இப்படிப்பட்ட செயல்களின் பின்னணியைப் புரிந்து கொள்வதுதான் விவேகம் என்பது. பாணர்களும் எப்போதும் ஒரே தரப்பில் இருந்ததில்லை என்றாலும், தாம் சேர்ந்த பட்சத்துக்காக, உயிர்த்தியாகம் செய்தவர்கள். அவர்களுக்காக எழுப்பப்பட்ட ஏராளமான நடுகற்களை, நீ துருமர மண்டலம், வங்கனூர், மினிக்கி, கோயத்தூர், புலிநாடு, சோரமடி பகுதிகளில் பார்க்கலாம். இங்கே உயிரிழந்தவர்கள் எல்லாரும் ஒரே ஒரு அரசின் சார்பாகவே எப்போதும் போரிட்டு உயிரிழந்தவர்கள் அல்லர். பல அரசர்களுக்காகப் பல சமயங்களில் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தவர்கள். முந்நூறு நானூறு ஆண்டுகள் ஒரு வம்சம் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, எப்படி ஒரே அரச வம்சத்துக்காகத்தான் அது எப்போதும் நிலையான விசுவாசம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்?”
“நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகிறது. சற்றே பாமரத் தனமாக யோசித்து விட்டேன்.” சிரித்தான் விநயன்.
பிரதாபரும் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார், “கங்கத்துக்கு இரண்டு கிளைகள் உண்டு தெரியுமா?”
“ஓ! தெரியாதே!”
“நாம் கங்கம் என்று பொதுவாகக் குறிப்பிடுவது, தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்ட கங்கர்களைத்தான். ஸ்ரீபுருஷருடைய கங்கம், இதுதான். கங்கவாடி தொண்ணூற்றாறாயிரம் என்று துவங்கி, இப்போது குறுகி விட்டது. கங்கவாடி ஆறாயிரம் என்று கூடச் சிலசமயம் குறிப்பிடுகிறோம். சிவமாறரின் தம்பி விஜயாதித்தியனுடைய மகன் ராஜமல்லனுக்கும், சிவமாறரின் இளையமகன் திண்டிகா பிருத்திவிபதிக்கும் இடையே, கங்கமண்டலம் இன்னும் தன்னுருவை மாற்றிக் கொள்வதும் நடக்கலாம்.
“அப்படி என்றால், கங்க வமிசம் இன்னும் இரண்டாகப் பிளவுபடப் போகிறதா?”
“பட்டாகி விட்டது. ஒரு கிளை நொளம்பரோடு இணக்கமாக இருக்கிறது. ஒரு கிளை பாணரோடு.”
“வரலாறு எத்தனை வருடங்களானாலும் திரும்பித் திரும்பி அதே போலத்தான் சுழல்கிறது. மன்னர்களே இல்லாமல் நடக்கும் காலமும் வரலாம். அது ஒன்றுதான் மாற்றமாக இருக்கப்போகிறது.”
“அப்படி இருந்தாலும், எல்லாக் குடிமக்களும் சேர்ந்தா அரியணையில் அமர முடியும்? அவர்கள் ஓர் அமைச்சுக் குழுவைத் துவங்குவார்கள். குடவோலை மூலமாகப் பொது முடிவு எடுத்து, அதை ஒருவரிடம் கொடுத்து நிறைவேற்றச் சொல்லித் தினசரி நிர்வாகம் செய்வார்கள். அடுத்த நாடு படையெடுத்து வந்தால் என்ன செய்வது? கூட்டம் கூட்டி, எல்லோரும் விவாதித்து முடிவெடுப்பதற்குள் நாடு போய்விடும். எப்படி நடந்தாலும், நிர்வாகம் என்பது ஒரு தலைமையில்தான் நடக்க முடியும். அதற்கு ஆணை, எங்கிருந்து வருகிறது என்று வேண்டுமானால் மாறலாம். சராசரி குடிமக்கள் வாழ்வில் பெரியதாக மாற்றங்கள் இருக்கப் போவதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
“ராஜாங்கத்தைப் பற்றி நிறைய பேசிவிட்டோம்”, சிரித்தார் பிரதாபவர்த்தனர். “கதையைத் தொடருவோம். கங்கத்தின் இரு கிளைகளைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன்.” என்று தொடர்ந்தார்.
“மஹாராஜா துர்விநீதனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். மஹா பண்டிதர். வீரரும் கூட. கங்க வமிசத்தில், நிறைய அரசர்கள், வீரமும், கல்வியும், ஒருங்கே பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். எல்லா மதங்களையும் அரவணைத்திருக்கிறார்கள். சிவமாறர், ஸ்ரீபுருஷர், பூவிக்கிரமர், துர்விநீதர், மாதவர் இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். மற்ற ராஜவம்சங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைரமாலைக்கு இடையே பதித்த மாணிக்கங்களாய் நிறைய பண்டிதர்கள் தோன்றி வந்திருக்கிறார்கள் ஆனால், அடுத்தடுத்துப் பாண்டித்தியமும் படைவீரமும் கொண்டவர்களாக இலங்கிய ஓர் அரசப் பரம்பரையை நான் அறிந்திருக்கவில்லை. இவர்கள் எல்லோருமே பண்டிதர்களைப் போஷிப்பவர்களாக இருந்தார்கள். அற்புதமான காவிய ரசனை உள்ளவர்கள், தாமே கவிதைகள் எழுதும் அளவுக்கு நிபுணத்துவமும், சாத்திர ஞானமும் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து தோன்றி, அரியணையில் அமர்ந்து கோலோச்சிய பெற்றியைப் பெற்றது கங்கமண்டலம். இந்த அளவுக்கு ஞானம் பிரவகித்து ஓடும் ராஜவம்சம் அரிது.”
“பெருங்கதையை ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்தவர் இந்தத் துர்விநீத மஹாராஜாதானே? அதனுடைய பைசாச மொழி மூலத்தை, மஹாஸ்ரீமந்த பஸதியில் பார்த்திருக்கிறேன். எனக்கு ஸம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்தவர், கிராதார்ஜூனீயத்துக்கு மஹாராஜா எழுதிய உரையைச் சொல்லிச் சிலாகிப்பார். துர்விநீதரைப் பற்றிப் பல சுவாரசியமான கர்ணபரம்பரைக் கதைகளை, என்னுடைய தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். மந்திர தந்திரங்களைப் போரிலே பயன்படுத்துவாராமே?”
“பிரணவ ஓம் கதைதானே? நீயும் கேட்டிருக்கிறாயா? அந்த இரகசியம் மட்டும் நமக்கெல்லாம் தெரிந்திருந்தால், போர்களை எவ்வளவு எளிதில் வென்றிருக்கலாம்!”
“இப்படியெல்லாமும் நடக்குமா? ஆவேசமாகத் தாக்க வரும் படைகளுக்கு முன்னால், பிரணவ மந்திரத்தை ஜபித்ததும், எதிரிப் படைகள் தளர்ந்து, குழப்பத்தில் சிதறி.. “
“நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், நமக்குத் தெரியாமல் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? துத்தநாகத்தில் இருந்து வெள்ளியும், தாமிரத்தில் இருந்து தங்கமும் செய்யும் ரசவாதம் கற்பனை என்றுதான் நான் நினத்திருந்தேன். இன்று அதைச் செய்கிறார்கள். நாகார்ஜுனரும், வாகபடரும் எழுதிவைத்த முறைப்படி ரசாயன தந்திரத்தையும் மற்றும் வாஜிகரணத்தையும் பயன்படுத்தி மூப்பைத் திருப்பி, இளமையை மீட்டுத் தருகிறேன் என்று வைத்தியர்கள் உறுதி கொடுக்கிறார்களே?”
“ஆமாம். வனாயுஜம் மற்றும் பாரசீகத்தில் மோமியை என்று ஓர் உத்தி செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதைப் பற்றி முதலில் கேட்டபோது, இதெல்லாம் சாத்தியம்தானா என்றுதான் தோன்றியது. அதைச் செய்யும் முறையைக் கேட்டதும், சரீரத்தைப் பிழைக்கவைப்பதற்கு இதெல்லாம் தேவையா என்றுகூட நினைத்தேன். நீங்கள் சொல்வது சரிதான். அவந்திகாசார்யரான வராஹமிஹிர மகதத்வஜர், தன்னுடைய பஞ்ச சித்தாந்தத்தில், பூமி ஒரு கோளம், ஆகாயம் ஒரு கோளம், அண்டம் ஒரு கோளம் என்று சொல்லவில்லையா? இதை ஒப்புக் கொள்ளாமல், இன்றும் சிலர் பகோளமாம், ககோளமாம் என்று ஏளனமும் செய்கிறார்கள். எது உண்மை என்று, இங்கிருக்கும் நமக்கு எப்படித் தெரியும்?”
“இந்தப் பிரக்கியாதி பெற்ற துர்விநீதருடைய காலத்தை ஒரு பொற்காலம் என்றே சொல்வார்கள். வைணவத்தில் நாட்டமுடையவர் என்றாலும் பிற சமயங்களையும் மதித்தார். குறிப்பாகச் சமணத்துக்கு நிறைய உதவிகளைச் செய்தார். அவருடைய காலத்தில், கங்கமண்டலம் கொங்குநாடு வரையிலும் பரவியிருந்தது.
“துர்விநீதருக்குக் காந்திவிநீதர் என்று அழைக்கப்படும் முஷ்கரர் மற்றும் போலவீரர் என்ற இரண்டு முக்கியப் புதல்வர்கள். துர்விநீதருக்குப் பிறகு மொக்கரர் அதுதான் முஷ்கரர் அரியணை ஏறினார். போலவீரர் ஒரு சிறு மண்டலத்தை ஆட்சி செய்துவந்தார். முஷ்கரருக்குப் பிறந்தவர் ஸ்ரீவிக்ரமர். அவர் பதினான்கு வித்யாஸ்தானங்களுக்கு அதிகதர். ஸ்ரீவிக்கிரமருக்கு இரண்டு ராணிகள். ஒரு ராணி சோழவமிச இளவரசி. மற்றொரு ராணி சிந்துராஜபுத்திரி. சோழவமிச ராணிக்குப் பிறந்தவர் பூவிக்கிரமர். சிந்துராணிக்குப் பிறந்தவர் நவகாமர். சிவமாறர் என்றும் சொல்வார்கள். நம்முடைய காலத்துச் சிவமாறருக்கு முன்னோர் இவர்.
“பூவிக்கிரமர் நெடுங்காலம் ஆட்சி செய்தார். கங்கமண்டலம், அவருடைய காலத்திலும் கொங்கு தேசம் வரை பரவியிருந்தது. அவருடைய அரண்மனை முதலில் குவலாலபுரத்தில்தான் இருந்தது. பலகாலத்துக்கு முன்னால், பருவி விஷயத்தை ஆண்டு வந்தவர்கள், காலப்போக்கில், தெற்கு நோக்கி வந்து, குவலாலபுரத்தைத் தலைநகராக்கிக் கொண்டார்கள். ரேணாட்டில் அவர்கள் முன்பு ஆண்ட ஊரை இன்றும் கங்கப் பேரூர் என்றே சொல்வதை நீ கேள்விப் பட்டிருக்கலாம். இவர்கள் ரேணாட்டை ஆண்டபோது, குவலாலபுரத்தைப் பாணர்கள் ஆண்டு வந்தார்கள். பாணர்களைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். பாணர்களைக் கட்டுப்படுத்தத்தான் பல்லவர்கள் கங்கர்களைத் தூக்கி நிறுத்தினார்கள் என்று சொல்வார்கள். ஆனால், கால ஆறு, இந்தத் தடத்தை மாற்றிவிட்டதின் விளைவு, பாணர்கள் பல்லவ நண்பர்களாகவும், கங்கர்கள் பல்லவ எதிரிகளாகவும் ஆகி விட்டார்கள்.”
“அடடா! விசித்திரம்தான்! எதுதான் நிரந்தரம்! எதிரிகளும் நிரந்தரமில்லை”
“இதில் இன்னும் விசித்திரம் என்ன என்றால், பூவிக்கிரமக் கங்கர் காலத்தில், பாணர்களின் ஒரு கிளை, கங்கர்களுக்குச் சாதகமாக மாறியதுதான்”
“ஹாஹா“
“பூவிக்கிரமர் காலத்தில், கங்கர்களுடைய அரண்மனை குவலாலபுரத்தில் இருந்து மனுகொண்டாவுக்கு மாறியது. பெரிய யானைப்படை அவரிடம் இருந்ததால், கஜபதி என்று பெயர் பெற்றவர். தாம் பெற்ற வெற்றிகளின் ஞாபகார்த்தமாகப் போர் ஆயுதங்களைத் தந்தத்தால் செய்து வைத்திருப்பாராம். பல்லவர்களுக்கு எதிராகப் புலிகேசி மஹாராஜா தொடுத்த போர்களில், பூவிக்கிரமர் சாளுக்கியர்களுக்குப் பக்கபலமாக இருந்து, பல்லவர்களைப் பெருஞ்சேதப்படுத்தினார். அந்தச் சேதத்தில் ஒன்றுதான் வேங்கி சாளுக்கியச் சிற்றரசாக ஆனதும். வேங்கிப் பிரதேசத்தைப் பல்லவர்களிடம் இருந்து பிடுங்கித்தான், புலிகேசி மஹாராஜா ஸ்தாபித்தார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
“சாளுக்கியர்களோடு கங்கர்களுக்கு இருந்துவந்த இந்த நட்பு, பல்லவர்களுக்குக் கங்கர்கள் மீது கடுப்பு வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இந்தக் கடுப்பு, இன்றும் மறையவில்லை. புலிகேசிக்குப் பிறகு வந்த விக்கிரமாதித்திய மஹாராஜா காலத்திலும் சாளுக்கியப் பல்லவர்கள் சண்டைகள் இருந்தன. அதிலும் பூவிக்கிரமர் பலமாக ஈடுபட்டார்.”
“இந்த விக்கிரமாதித்திய மஹாராஜா, கீர்த்திவர்மருக்கு என்ன உறவு?”
“கீர்த்திவர்மருடைய தந்தையான விக்கிரமாதித்தியருக்கு முப்பாட்டனார். பூவிக்கிரமப் பாலம், புலிகேசியின் காலத்தையும் இந்த விக்கிரமாதித்தியரின் காலத்தையும் இணைத்துப் பல்லவ எதிர்ப்பைத் தொடர்ச்சியாக்கியது. வாதாபியும் காஞ்சியும் மாறிமாறிப் போரிட்டன. ஒருமுறை பல்லவர்களுக்கு வெற்றி என்றால், ஒரு முறை சாளுக்கியர்களுக்கு வெற்றி. ஒரு முறை, ஒரு போரில், புலிகேசி மகாராஜாவின் கை ஓங்கியிருந்த போது, சாளுக்கியச் சேனைக்குப் பூவிக்கிரமர் துணை புரிய, அதனால் சினமடைந்த பல்லவ அரசர், கங்கவாடியின் மீது தனியாகப் படையெடுத்துச் சென்றார்.”
“ஓ! கங்கத்துக்கும் காஞ்சிக்கும் இடையே தனிப்போரா? வாதாபிக்குத் துணைபோனதற்காகத் தலவனபுரத்துக்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்ததோ?”
“இப்படிப் பூவிக்கிரமரைக் குறைத்து எடைபோட்டு விட்டாயே! பல்லவப் படைகள் சிதறடிக்கப் பட்டன. பூவிக்கிரமர்தான் வென்றார். கங்கர்களின் எல்லா மெய்கீர்த்திகளும் விளந்தையில் அடைந்த இந்த வெற்றியைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டுக் கொள்வது வழக்கமாகிப் போனது. பெரிய வெற்றி இது. காடுவெட்டியை வெற்றி கொள்வது சாதாரண விஷயமா என்ன?” என்றார் பிரதாபர்.
“ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. இந்தத் தோல்வியைப் பல்லவர்கள் எப்படி எழுதுவார்கள்? நான் இதுவரை தோல்வியைப் பேசும் மெய்கீர்த்தியைக் கண்டதில்லை”
வாய்விட்டுச் சிரித்தார் பிரதாபர். “யாராவது தோல்வியைச் சாஸனத்தில் எழுதி வைப்பார்களா என்ன? மெய்கீர்த்தி என்பது கீர்த்தி மட்டும்தான். மெய்யோடு இருந்தாலே போதாதா? தோல்வியை வேறு பறைசாற்றிக் கொள்ளவேண்டுமா? சிவமாறர், தான் சிறையில் இருந்தேன் என்று எழுதிப் பட்டயம் தருவாரா?”
விநயனும் சிரித்தான். “இந்தப் பல்லவ அரசர் யார்?”
“நரசிம்மவர்மர் என்று நினைக்கிறேன்.”
“இவர்கள் இருவருக்கும் மாறிமாறி வெற்றிகள் கிடைத்தன என்று சொன்னீர்கள். அப்படியென்றால், விக்கிரமாதித்தியர் தான் வெற்றி பெற்றேன் என்று எழுதிவைப்பார். நரசிம்மவர்மர் தான் வெற்றி பெற்றேன் என்று எழுதி வைப்பார். இதைப் பிற்காலத்தில் படிப்பவர்கள் உண்மை எது என்று புரியாமல் திண்டாடுவார்களே.”
“திண்டாடத்தான் செய்வார்கள். அதனால் என்ன? எவ்வளவு காலம் இந்தச் சாஸனங்கள் எல்லாம் நிலைபெற்று இருக்கும் என்று நீ நம்புகிறாய்? இதில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி பெற்ற நாட்டுக்குள் நுழைந்ததும், தோல்வியுற்ற அரசரின் பெருமை, புகழைப் பறைசாற்றும் பட்டயங்களையும் சின்னங்களையும் விட்டு வைப்பார்களா? புகழ் என்பதும் அழியக் கூடியதுதான். உயிரோடு இருப்பவர்களால்தான் அது நிலை நிறுத்தப்படுகிறது.”
“உண்மைதான். பேசுவதற்கு ஆள் இல்லை என்றால், புகழ் எப்படி உயிர்த்து நிற்கும்? சாஸனங்களுக்கே இந்த நிலை என்றால், சுவடிகளில் எழுதப்படும் இலக்கியங்களுக்கு என்ன நிலைமையோ? சிதைப்பதையே பணியாகக் கொண்டுள்ள இந்தக் காலமென்னும் கொடூரனைத் தாண்டி எழுத்து வடிவங்களும், மொழியும் நிற்கவேண்டுமே? பைசாச மொழியைப் பேசுகிறவர்கள் இன்று எத்தனை பேர்? அதில் எழுதப்பட்ட இலக்கியங்களும் புகழ் பேசும் கதைகளும் இன்று யாருக்குத் தெரியும்? பைசாசத்தை பூத பாஷை என்று தண்டி இலக்கணத்திலேயே சொல்லி விடுகிறார்.”
“அவ்வளவு காலம் போவானேன்? இப்போது குர்ஜரத்திலும், வலபியிலும், ராஜபுதனத்திலும் பேசப்படும் அபப்ரம்சத்தில்தான் எத்தனை வடிவங்கள்? நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். மேதந்தகபுரத்தில் இருந்தும், ஸ்ரீமாலாவில் இருந்தும், ஏன் இலாடத்தில் இருந்தும் வருபவர்கள் பலர் அபப்ரம்சம் பேசுகிறேன் என்பார்கள். ஆனால், எவ்வளவு வேறுபாடு!”
“மெய்தான். உதயோதனன் சூரி எழுதிய குவலயமாலாவைப் படிப்பதற்கே, இங்கே ஸ்ரீமந்த பஸதியில் இருப்பவர்கள் திணறுவார்கள். இத்தனைக்கும் அவர்கள் வலபி வித்யாபீடத்தில் படித்துவிட்டு வந்தவர்கள்தாம். இன்னும் போகப் போக, எப்படியெல்லாம் மொழிகள் மாறுமோ?”
“இப்படியெல்லாம் இருந்தாலும், நாம் பொருள் மற்றும் கல்வி இவை இரண்டையும் விடப் பெருமையையும் புகழையும்தான் சாஸ்வதம் என்று நம்புகிறோம். சாஸனமாகப் பெருமையை எழுதி வைத்துவிட்டுத்தான் உலகத்தை விட்டுப் போகிறோம். நரசிம்மவர்மர் என்ன எழுதிவைத்தாரோ தெரியாது, ஆனால், பூவிக்கிரமர் பெருமையைக் கங்கர்கள் எழுதிவைத்ததை நான் பார்த்திருக்கிறேன். ஸ்ரீபுருஷரின் பாட்டனார், நவகாமர் சிவமாறர் தன்னுடைய கொடைகளில், தன் தமையனார் பூவிக்கிரம ராஜாவைக் குறிப்பிடும்போது, பூவிக்ரமரால் துரத்தியடிக்கப்பட்டப் பல்லவ அரசன், மலை மீது தப்பித்து ஓடி, இலைகள் அடர்ந்த கிளைகளுக்குப் பின்னே ஒளிந்து கொண்டான் என்றும், பல்லவனின் முழு நிலப்பரப்பைக் கைப்பற்றிய பூவிக்கிரமர், பல்லவப் பெண்டிர் தங்கியிருந்த அழகிய குடியிருப்புக்களைப் பலவந்தமாகக் கவர்ந்தது மட்டுமன்றி, ஏராளமான அணிகலன்களோடு ஓர் அரச குடும்ப அணிகலனையையும் கவர்ந்தார் என்று குறிப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். உக்கிரோதயமோ என்னவோ பேர் அதற்கு.
“இதெல்லாம் நூற்றைம்பது இருநூறு வருடங்கள் முன்னால் நடந்த கதை. எப்படிக் கங்கர்கள், சாளுக்கியர்கள், வேங்கியர்கள், பல்லவர்கள், பாணர்கள் இவர்களுக்கும், இராட்டிரக்கூடத்துக்கும் இருக்கும் பிணைப்பு, தக்கணத்தைச் செதுக்கியது என்று நீ அறிந்துகொள்வதற்காகச் சற்று முன்னோக்கிப் போனேன். நூறு வருடங்கள் முன்னால் நடந்தவையே இன்று தெளிவாகத் தெரியவில்லை. மார்கழி அதிகாலையின் பனிமூட்டத்தில் மூழ்கிய தீபம் போல மங்கலாகத்தான் தெரிகிறது. நான் அரச சபையில் இருப்பவர்களோடு பழகியதாலும், போக்கும் வரத்தும் உள்ள பயணிகளோடு சந்தித்து அளவளாவும் வாய்ப்பைப் பெற்றிருந்ததாலும், மற்றைய நாட்டில் நடந்த விஷயங்களை அறிந்து, அவற்றைப் பொருத்திப் பார்த்திருக்கிறேன். அதனால், தெரிந்து கொண்டது அதிகம். ஆனால், வயதாக ஆக, இந்தச் சிந்தை விஷயங்களை நினைவு வைத்திருக்கத் தடுமாறுகிறது.
“நினைவு இருக்கும்போதே உன்னைப் போன்றவர்களுக்குச் சொல்லிவைத்தால், நீ அடுத்த சந்ததியினருக்குச் சொல்லலாம். இப்படியாவது, ஒரு முந்நூறு, நானூறு வருடங்களுக்காவது உண்மை நிலைத்து இருக்கும். இந்த உந்துதலால்தான் சொல்கிறேன். ராஜாங்க விஷயங்கள் வேறு. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருக்கமுடியாது.”
“என் பாக்கியம். இவற்றையெல்லாம் சுவடியிலும் எழுதிவைக்க முடியாது. நம்முடைய முன்னோர்கள் சரித்திரத்தை நடந்தது நடந்தபடியே ஏன் பதிவு செய்துவைத்துக் கொள்ளத் தவறி விட்டார்கள் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. வரலாற்றைப் பதிவு செய்து வைத்துக் கொள்வது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை இப்போது உணர்கிறேன்!”
“பூவிக்கிரமருக்குப் பிறகு, யார் பட்டத்துக்கு வருவார்கள் என்ற குழப்பம் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஊர்ஜிதமாகத் தெரியவில்லை. அடுத்து வந்தவர் அவருடைய தம்பி, சிஷ்டப்பிரியர் என்றழைக்கப்பட்ட நவகாமர் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு, அவருடைய தம்பியின் வம்சத்தில் வந்தவர்கள்தாம் கங்கவாடி ஷன்னவதி ஸஹஸ்ரத்தை ஆண்டார்கள். பிருதிவி கொங்கணி மஹாராஜா என்றழைக்கப்பட்ட ஸ்ரீபுருஷர் அந்தக் கிளையில் வந்தவர்தான் என்று இப்போது புரிந்து கொண்டிருப்பாய். இப்போது, இந்தக் கிளையும் இரண்டாகப் பிரிந்து விட்டது.”
“ஸ்ரீபுருஷர் பூவிக்கிரமருக்கு என்ன உறவு என்று சொன்னீர்கள்?”
“தம்பி நவகாமரின் பெயரர்”
“பூவிக்கிரமருடைய சந்ததிகள் என்ன ஆனார்கள்?”
“சிறிது காலத்துக்குப் பிறகு, அவர்களும் நந்தி மலையைச் சுற்றியிருக்கும் பகுதிகளை ஆண்டுவந்தார்கள். பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. தம்பி சிவமாறர், தமையனின் புகழ் பாடிவந்ததை முன்னமேயே சொன்னேன். அதனால், தமையருடைய வம்சத்தினரோடு சிக்கல்கள் ஏற்படவில்லை. இவருடைய பெயரர் ஸ்ரீபுருஷரும் வெறும் கத்தியைத் தூக்கும் அரசர் அல்லர். பண்டிதரும் விவேகியும் கூட. அதனால், அவருடைய காலத்திலும் இரண்டு கங்கவமிசக் கிளைகளுக்கும் இடையே பெரிய உரசல்கள் நடக்கவில்லை. ஸ்ரீபுருஷருக்குத் தெற்கில் சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்துவதில்தான் விருப்பம். வடக்கில், சாளுக்கியப் பேரரசு ஸ்தாபனம் ஆகி இருந்தது. நட்பு நாடு வேறு. அதனால், பிரதானக் கங்கர்களால், பூவிக்கிரமரின் சந்ததியினருக்கு எந்த இன்னலும் ஏற்படவில்லை. அவர்கள் தாம் பாட்டில், தம்வயின் போய்க் கொண்டிருந்தார்கள்.
“சாளுக்கியப் பேரரசு, கிருஷ்ணராஜாவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும், பூவிக்கிரமக் கங்கர்கள் இராட்டிரக் கூடத்துக்கு இணக்கமாக ஆகிவிட்டார்கள். பெரிய கங்கமே தள்ளாடும் போது, இவர்களால் என்ன செய்திருக்க முடியும்?”
“ஸ்ரீபுருஷரும் இறுதியில் இராட்டிரக் கூடத்துக்கு இணக்கமாக ஆகி விட்டாரே”
“இணக்கமாக ஆகித்தான் போனார். முதலில் எதிர்த்தார். தோற்றபிறகு, வலிமையின் வேறுபாட்டுக்குத் தலைவணங்கி விட்டார். அதுதானே விவேகம்?”
“பூவிக்கிரமக் கங்கர்கள், பவிஷ்ய வாணி எதையாவது கேட்டிருப்பார்களோ?”
“இருக்கும் இருக்கும். இரண்டு கங்கர்களும், இறுதியில் ஒரே முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் சேதமில்லாமல். இவர்கள் சேதத்துடன்” – பிரதாபரும் விநயனும் சேர்ந்து சிரித்தார்கள்.
“ஸ்ரீபுருஷருக்கும் இந்தச் சமயத்தில் வயதாகி விட்டது. மெய்யோடு சேர்த்து மனத்தின் வேகத்தையும் குறைக்கும் வலிமையுடைய மூப்பு, நம்முடைய வாழ்க்கை எதிர்பார்ப்புக்களையும் தலைகீழாக அன்றோ மாற்றிவிடுகிறது? ஸ்ரீபுருஷருக்கும் அப்படித்தான் ஆயிற்று. ஆனால், புதல்வர் சிவமாறருக்கு, அதற்கு நேர்மறையாக அதீத வேகமும், ஆவேசமும் இருந்தது. எப்போது இரட்டர்களிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்று துடித்துக் கொண்டிருந்தவரைப் பெரிய கோவிந்தர் அழைத்து, ‘என் தம்பியை எதிர்க்க எனக்கு உதவி செய். உன்னைச் சுதந்திர அரசராக முடிசூட்டுகிறேன்’ என்று சொன்னால், ‘ஆஹா என்ன வாய்ப்பு’ என்றிருக்காது?’ அதுவும் சிவமாறருக்குச் சகோதரப்போட்டி வேறு இருந்தது. பல்லவர்களைப் பற்றிச் சொல்லும்போது அதைப்பற்றி இன்னும் சொல்கிறேன். இப்படித்தான் கங்கம் ஒரு சத்துரு ஆனது, துருவராஜாவுக்கு.”
“துருவராஜாவுக்குச் சத்துரு ஆனார் என்றீர்கள். இது என்னைச் சிந்திக்க வைக்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால், பெரிய கோவிந்தரின் அரசியல் சாணக்கியம்தானே இது? இராட்டிரக்கூடம் என்ற நாட்டின் எதிரிகளாக இருந்தவர்களைத் துருவராஜர் என்ற தனிமனிதரின் எதிரிகளாக அல்லவா மாற்றிவிட்டுவிட்டார்.”
“சாணக்கியம்தான். ஆனால், நாடு என்கிற அமைப்புக்காக இல்லாமல், கோவிந்தர் என்ற தனிமனிதரின் இருப்புக்காகச் செய்த சாணக்கியம்.”
“பல சமயங்களில், எனக்கு, நாட்டையும் அரசனையும் பிரித்துப் பார்ப்பது கடினமாகத்தான் இருக்கிறது, ஐயா. பீமராஜ சாளுக்கியர் செய்ததும் தனக்காகத்தானே? கோவிந்தராஜாவின் புதல்வர் கற்கராஜா, தன்னுடைய நாட்டைப் போரிலே ஈடுபடுத்தியதும், தந்திதுர்க்கருடைய இடத்தில் தான் வரவேண்டும் என்ற கனவுக்காகத்தான். நாகபடன் மிலேச்சர்களை எதிர்ப்பதற்காக, மக்களைப் போரில் ஈடுபடுத்தியது வேண்டுமானால் நாட்டுக்காக இருக்கலாம்”
“சரி, தந்திதுர்க்கர் செய்தது?”
யோசனையில் ஆழ்ந்தான் விநயன். “குழப்பமாகத்தான் இருக்கிறது. எங்குத் தன்னலம் முடிகிறது, எங்கு ஜனநலம் துவங்குகிறது என்று தீர்மானிப்பது எப்படி?”
“சிலசமயம் சரித்திரம், பிற்காலத்தில் இந்தத் தீர்ப்பை எழுதுகிறது.”
“எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நாடு எந்தக் கட்டத்தில் இருக்கிறதோ அதைப் பொறுத்தும், இந்தப் பாகுபாடு ஒருவேளை தீர்மானிக்கப் படுகிறதோ?”
“என்னென்ன கட்டங்களுக்கூடே ஒரு நாடு சென்று கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது உனக்கு?”
“சட்டென்று யோசித்தால், மூன்று கட்டங்களுக்கூடே ஒரு நாட்டின் போக்கு இருக்கலாம் என்று படுகிறது. ஒன்று, புதியதாக உருவாக்கத்தில் இருக்கின்ற நாடு. இன்னொன்று, உருவாகி நிலைபெற்றபின், எல்லை விரிவாக்கம் அல்லது எல்லைப் பாதுகாப்பு இவற்றிற்காக அண்டை நாட்டுடன் போரிட்டுக் கொண்டிருக்கிற நாடு. மூன்றாவது தலைமை இழந்ததாலோ, உள்நாட்டுக் கிளர்ச்சிகளாலோ போருக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ள நாடு. இந்தக் கட்டங்களில், ஓர் அரசன் நாட்டு மக்களைப் போரில் ஈடுபடுத்தும்போது, எதற்காக அப்படிச் செய்கிறான் என்று அவனுடைய காரணத்தைப் பாரபட்சம் இல்லாமல் நோக்கினோமேயானால், நம்மால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியலாம். அப்படி வந்தாலும், அது நம்முடைய எண்ணத்திற்கேற்பவும், நம்முடைய சரி தவறு பட்டியல் பிரகாரம் நாமே செய்து கொள்ளும் முடிவாகத்தான் இருக்குமே தவிர, பொதுப்படையாக அறுதியிட்டுச் சொல்வது கடினம். என்ன தீர்மானத்துக்கு வந்தாலும், உரைகல், மக்கள் இந்த முடிவினால், துயருற்றார்களா, மகிழ்வுற்றார்களா அல்லது மாற்றம் ஏதுமில்லாமல் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்தார்களா என்பதுதான். இரண்டு உதாரணங்கள், எனக்குத் தோன்றுகிறது. ஒன்று கிருஷ்ணராஜா கங்கத்தில் மேல் தொடுத்த போரில் இருபட்சமும் நடந்துகொண்ட விதம், அந்தப் போரினால் விளைந்த சேதம். இவற்றைப் பார்க்கும்போது, இந்தப் போரை இந்த அளவுக்கு நடக்காமல் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இரண்டாவது உதாரணம் விஷ்ணுவர்த்தனருக்கும், பெரிய கோவிந்தருக்கும் இடையே நடக்கவிருந்த போர். வேங்கி அரசர், கோவிந்தரை எதிர்க்காமல் பணிந்தது ஜனஹிதத்துக்காக. ஒரே மாதிரியான இரு நிகழ்வுகள். இரு அரசர்கள் எடுத்த முடிவுகளும் எவ்வளவு வித்தியாசமானவை!”
“ம் .. ம் .. இவ்வளவு எளிதாக முடிவுகட்டிவிடும் விஷயம் அன்று இது. ஆனால், நீ சொல்வது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.”
“நீங்கள் சொல்லும் சரித்திரங்கள் பலவித கோணங்களில் இதைப் பார்க்க என்னைப் பக்குவப் படுத்துகின்றன. பாக்கியசாலி நான்.”
“விதண்டாவாதம் செய்யாமல், உணர்ச்சியால் கொந்தளிக்காமல் இப்படி அறிவு பூர்வமாகக் கேட்டு உள்வாங்கும் ஆள் கிடைத்திருப்பதில் எனக்கும் ஆனந்தம்தான்.”
அப்போது அறைக்கு வெளியே “வாழி வல்லப ஸ்வாமி! தேவியார் வருகிறார்! எச்சரிக்கை!” என்று காவலாளி பட்டுக்கூறினான்.
“நாவுக்குச் சுவையான உணவிடுகிறேன் என்று விருந்தாளியை வீட்டுக்கு அழைத்துவிட்டு, அவருக்கு நாவால் வெறும் சொல்லுணவு மட்டும் சாதித்தால் போதும் என்று நினைத்து விட்டீர்களா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே பிரவேசித்தார் கணபாம்பா.
“இதோ முடித்துவிட்டு நாங்களே வருவதாகத்தான் இருந்தோம். எனக்கும் அசனம் கடுகுகிறது.” என்று எழுந்தார் பிரதாபர்.
“வா அப்பா! எல்லாம் சித்தமாக இருக்கிறது. கை கால்
அலம்பிக்கொண்டு, மாத்தியானிகம் முடித்துவிட்டு வா.” என்றவர் பின்னால் நின்ற
பணியாளனிடம், “ஐயாவுடன் போய், அவருக்கு எல்லாம் காண்பித்து, பூசை முடிக்க வைத்து
அன்னக்கூடத்துக்கு அழைத்துவா. பின்கட்டில், காலையில் சந்திரமௌலீஸ்வரர் ஆராதனம்
செய்யவந்த ஸோமயாஜியும், அவருடைய சீடனும் படுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும்
உச்சிச் சடங்கு செய்ய வேண்டியிருக்கும். கூடவே அழைத்துப்போ. பரிசாரகனிடம் இலை
போடச் சொல்லிவிட்டுப்போ” என்று சொல்லிவிட்டு முன்னால் சென்றார்.
No comments:
Post a Comment