Saturday, 21 September 2024

17-02. முராரிகிருஹம்


அன்று அதிகாலையில் மழை பெய்திருந்ததால், சுற்றுப்புறமே குளிர்ந்திருந்தது. நீர் வசதியில்லாத இல்லங்களைச் சேர்ந்த பெண்கள், வெளிப்புறமிருந்த ஊருணியில் இருந்து, நீர் சுமந்துகொண்டு வந்து கொண்டிருந்தார்கள். சில குடியானவர்கள் மட்டும் ஏரைச் சுமந்தவாறு உழுவதற்காக வயலுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். சத்திரம் இருக்கும் வீதியில், பொதுவாக, அதிக ஆள் நடமாட்டம் இராது. மேலண்டை வீதிதான், தேரும், வண்டிகளும், புரவிகளும் செல்லும் முக்கிய வழியாக இருந்ததால், அதில்தான் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

கோவிலில் அப்போதுதான் உத்சவம் நடந்து முடிந்திருந்தது. விடாயாற்றிக்காலம். நிறைய மாணாக்கர்கள் கோவில் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்ததால், இன்னும் வகுப்புக்கள் துவங்கியிருக்கவில்லை. இன்று என்ன செய்யலாம் என்று விநயன் யோசித்துக் கொண்டிருக்கும்போது, குக்கேஸ்வரர் அனுப்பிய ஓராள் வந்து, ‘தட்சிண வணிக ஒதுக்கத்தில், ஒரு மனையில் ராஜகம்பம் நடுகிறார்கள், அங்கே வல்லப ஸ்வாமி வரச்சொல்லியிருக்கிறார், குக்கேஸ்வரர் இன்னும் ஒரு முகூர்த்தத்தில் வந்து அழைத்துக் கொண்டு போகிறாராம். மதிய உணவுக்கு அங்கேயே ஏற்பாடாகி இருக்கிறது என்று சொல்லச் சொன்னார்’ என்றான்.

தேவநாதய்யாவிடம் விஷயத்தைச் சொல்லி மதியம் உணவு வேண்டாம் என்றான்.

 

“தட்சிண ஒதுக்கத்திலா? அங்கே அந்தத் திரமிளச் சாத்துவனார் இல்லமா?’

“எனக்குத் தெரியாதே. உங்களுக்குத் தெரிந்தவரா?”

“ஆமாம் ஆமாம். தெரிந்தவர்தான். அடிக்கடி ஒரு குழுவாக வருவார். ஸ்வாமிக்கு மிகவும் நட்பானவர்கள், அவருடைய குழுவில் நான்கைந்து பேர்கள் உண்டு. இங்கே கூட ஒரு சமயம் வந்து தங்கியிருக்கிறார்கள். வணிகர்கள்தாம். ஆனால், மெத்தப் படித்தவர்கள். அவர்கள் பெயர் எல்லாம் வாயிலேயே நுழையாது எனக்கு. அடிக்கடி வருவதால், தலைமைச் சாத்து, இங்கேயே ஓர் இருப்பிடம் கட்டிவிடலாம் என்று தீர்மானித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவருக்கு இங்கேயே ஒரு குடும்பமும் உண்டு. போன ஆவணியில்தான் மண்ணெல்லாம் நிரப்பிப் பண்படுத்தி, அஷ்டமூலைக் குழிவெட்டி, நெய்மரம் வைத்துச் சடங்குகள் எல்லாம் செய்தார்கள். இப்போது கால்களும் எழுப்பியாயிற்று. நவக்குழி, பெருமரம் நடுவிழா இன்று. அதற்காக அவர்கள் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். சிதம்பரச் சேணியர் இல்லத்துக்குப் பின்புறம்.”

“ஓ! அதுவா? புதிதாக வேம்பு நட்ட இடம்?”

“அதேதான். பெரிய இடம். கொம்மூரு கண்டிகை சுவாஸ்திய ஆளுடையார் கோவிந்தராஜுகாருவிடமிருந்து நிலத்தை வாங்கியிருக்கிறார்கள்.”

 

சில தமிழ் வணிகர்களைப் பற்றிப் பிரதாபவர்த்தனர் சொல்லியிருந்தது விநயனுக்கு நினைவு வந்தது. இவர்களாகத்தான் இருக்குமோ? அதற்காகத்தான் வரசொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. அவனுக்கும் அவர்களைச் சந்திக்க ஆவலாக இருந்ததால், குக்கேஸ்வரருக்காக ஆர்வமுடன் காத்திருந்தான். குக்கேஸ்வரர் சீக்கிரமே வந்துவிட்டார். இருவரும் நடந்து, அங்கே போனபோது, ராஜகம்பத்தைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தார்கள். நல்ல உயரமான மரம்.

ஏற்கனவே வந்திருந்த பிரதாபவர்த்தனர் இவர்களைப் பார்த்துவிட்டுக் கையை அசைத்து அருகே அழைக்க, அவர் அருகில் போய் இருவரும் நின்றுகொண்டு, கம்பம் எழுப்புவதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். கம்பத்தைச் சுற்றி நான்கைந்து பேர், ஒன்றாக நின்றுகொண்டு இருக்க, அவர்களில் ஒருவர் மட்டும் விசேஷமாக அலங்கரித்துக் கொண்டவராய், ஓர் இளம்பெண்ணின் கரத்தைப் பற்றிக்கொண்டு சடங்கில் பிரதானமாகக் கலந்துகொண்டார். அவர்தான் தலைமைச் சாத்தாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அவர்தான் வேளாளமுடி வெண்ணெல் கிழார். கையைப் பிடித்திருப்பவள் இங்கே அவர் சம்பந்தம் வைத்துக் கொண்டவள். காஞ்சி அருகில், படுவூர் கோட்டம், திருவேளாளமுடி, வேளசிகரத்தில்தான் அவருக்கு நிலபுலங்கள் குடும்பங்கள், சுற்றம் எல்லாம் இருப்பது.” விநயன் கேட்பதற்கு முன்னேயே அதை யூகித்துப் பதில் சொன்னார் குக்கேஸ்வரர்.

ஆச்சரியமாக அவரைப் பார்த்தான். வாயில் நுழையாத பெயர் என்று தேவநாதய்யா சொன்னது நினைவுக்கு வந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான்.

 

“என்ன சிரிக்கிறீர்? இதெல்லாம் ஸஹஜம்தானே?”

“ஐயையோ, நான் அதை நினைத்துச் சிரிக்கவில்லை. வேறு ஏதோ நினைவு. உங்களுக்குச் சாத்துவனாரை நன்றாகத் தெரியுமா? மற்றவர்கள் யார் யார்?”

‘இரண்டு மூன்றுமுறை அவர்கள் இங்கே வந்திருந்தபோது நிறைய நேரம் அவர்களோடு செலவழித்திருக்கிறேன். நானும் காஞ்சியில் இருந்தவன்தானே? அங்கிருந்து வருபவர்களிடம் ஒரு பற்று. மேலும், எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் அவருக்கும் நண்பர்கள். கூடவிருப்பது மேலடையாற்று இளந்தச்சன், கீழ்நை பல்லவதியரையன், குன்றெயில் செழியன், வேளாளமுடியையே சேர்ந்த லோஹிதகிரீசன், வெல்லாத்தூர்ச் சாத்துவன். இவர்கள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் வருவார்கள். குன்றெயில் செழியன் தமிழ்ப்புலி. இளந்தச்சன் கல் மற்றும் மரக்கட்டுமானத்தில் நிபுணன். வெண்ணெல் கிழார், கிட்டத்தட்ட நம் வல்லப ஸ்வாமியைப் போல. பெரும் அனுபவஸ்தர். பல விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உண்டு. இவர்களோடு நேரம் செலவழிப்பது, உங்களோடு நேரம் செலவழிப்பதைப் போல.” சிரித்தார் குக்கேஸ்வரர்.

“சிவ சிவா!” வெட்கத்தால் வாய்மூடிக் கொண்டான் விநயன்

“இது முன்கூடம்தான். பின்னால் செங்கல் வைத்து, அளிந்தம் உள்ள இரு மாடத்தோடு ஒரு மாளிகை எழுப்பப் போகிறார்கள்.”

“துவிசால மாளிகையா?”

“ஆமாம். தெற்கிலும் மேற்கிலும் மட்டும் அறைகள் உள்ள சித்தார்த்த கிருகம்.”

 

சடங்குகள் முடிவுக்கு வந்திருந்தன. நடத்திவைத்த அந்தணர், இறுதியாக மந்திரங்களைச் சொல்லி முடித்தார். எல்லோரும் வாழ்த்தி மங்கல அச்சுதம் சொரிந்து ஆசீர்வதித்தார்கள். விநயனும் தன் பங்குக்கு, லக்ஷ்மி ஆஹ்வான மந்திரத்தைச் சொல்லி வாழ்த்தினான்.

 

"ஓ வலிமை கொண்ட கிருஹலக்ஷ்மியே! நீண்டு வளர்ந்து இருக்கும் இந்தக் கம்பத்தின் உச்சியை உன்னுடைய வாசஸ்தலமாக எப்போதும் இருத்திக்கொள். இல்லத்துக்கு இடர் நினைக்கும் இகலரை ஏப்பாடு தூரத்திலேயே நிறுத்தி, இம்மனையைக் காத்து வருவாயாக! இவ்வில்லத்தின் சுவர்களுக்கு நீ அரணாக இருந்துகொண்டு, என்றுமுன்னைப் பணிந்தேத்தும் இந்த இல்லத்தோரையும் அவருடைய சந்ததியினரையும், அரவணைத்துக் கொள்வாயாக! உன்னுடைய அருளால், ஆரோக்கியமும், ஐஸ்வரியமும், ஆனந்தமும் எப்போதும் இங்கே நிலைத்திருக்கட்டும்!"

 

ஸம்ஸ்க்ருதச் சொற்களை அவன் உச்சரிக்க, எல்லோருடைய கவனமும் அந்தக் கணீரென்ற குரலால் ஈர்க்கப்பட்டு, அவனிருந்த பக்கம் திரும்பியது. அவனைத் தெரிந்தவர்கள் அடையாளம் கண்டுகொண்டு கைகூப்பி வணங்கினார்கள். சடங்கை நடத்திவைத்த பெரியவர், “ததாஸ்து! ததாஸ்து!” என்று ஆசீர்வதித்தார். வெண்ணெல் கிழார் நெகிழ்ந்துபோய், இல்லத்தாளோடு விநயனின் காலில் விழுந்தார். பதறிப்போன விநயன், கையைக் கூப்பிக்கொண்டு கைலாசநாதரின் நாமத்தைச் சொல்லிக் கண்மூடிக்கொண்டான்.


“உங்கள் வரவால், இம்மனை பாக்கியம் பெற்றது, விநயாதிசர்மரே!” முன்னமே பரிச்சயமானவர் போல நடந்துகொண்டார் வெண்ணெல் கிழார். சடங்குகளும் அறிமுகங்களும் முடிந்தபின், அனைவரும் விருந்துண்ணச் சென்றார்கள். அருகிலிருந்த ஒரு வெற்று நிலத்தில், பெரிய பந்தலிட்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்தவர்களை வெகுமதியோடு விடையனுப்பிய பிறகு, வெண்ணெல் கிழார், தம்முடைய சாத்துவர் குழுவுடன் தான் தங்கியிருந்த இல்லத்துக்கு பிரதாபருடன், விநயனையும், குக்கேஸ்வரரையும் அழைத்துக்கொண்டு போனார். சிரம பரிகாரம் செய்துகொண்டு, எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

பேச்சு, அன்று காஞ்சியில் நிலவிவரும் சூழ்நிலையையும் தொட்டது. தந்திவர்மர் காஞ்சியை விட்டுச் சென்றவர்தான். இன்னும் திரும்பவில்லை என்றும், ஸ்ரீகண்டனின் ஆட்சிதான் நடக்கிறது என்று தெரியவந்தது. புது ஆட்சியாக இருந்தாலும், நிர்வாக இலட்சணத்துக்குக் குறைவில்லை என்று அவர்கள் சொன்னாலும் எல்லோருக்கும் பல்லவரின் ஆட்சி திரும்பாதா என்ற ஏக்கம் இருப்பதாக விநயனுக்குப் பட்டது. மகேந்திர பல்லவர் மற்றும் ராஜசிம்மருடைய கோவில் கட்டுமானத்தைப் பற்றி இளந்தச்சன் விளக்கியபோது, குக்கேஸ்வரர் ஆமோதித்துப் பேசியதைப் பார்த்து விநயனுக்கு அவர் மீது சற்றுப் பொறாமையும் தோன்ற, தான் கங்கமண்டலத்தில் சுற்றிக் கொண்டிருந்தபோது, காஞ்சிக்குச் செல்லாமல் போய்விட்டோமே என்று தன்னை நொந்துகொண்டான்.

வெண்ணெல் கிழார், மகேந்திர பல்லவரின் மொழித்திறமையைச் சிலாகித்துப் பேசும்போது, மகேந்திரபுரத்தில், அவர் எழுப்பிய முராரி கோவிலில், செதுக்கி வைத்திருக்கும் ஸ்லோகத்தைச் சொன்னார்.

 

“காஞ்சிக்கு அருகிலே பண்டிதர்கள் வாழும் ஊர் அது. சிறு கோட்டையும் உண்டு. அங்கே வைணவர்கள் அதிகம். அவர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டதால், அவர்களுக்காக அங்கிருக்கும் ஒரு பெரிய பாறையை அகழ்ந்து ஒரு கோவிலைச் செதுக்கி உருவாக்கினார்.”

“கோட்டை வாயிலுக்கு அருகில் உள்ள மகேந்திரதடாகத்தின் கரையில் இருக்கும் முராரி கிருஹத்தைத் தானே சொல்கிறீர்கள்?” என்றார் குக்கேஸ்வரர்.

“ஆமாம். சென்றிருக்கிறீர்களா?”

“பல முறை. என்னோடு படித்துவந்த ஒருவருக்குக் காவேரிப்பாக்கம்தான் சொந்த ஊர். அவரோடு சென்று தங்குவதுண்டு. அங்கிருந்து போய்விட்டு ஒருநாளில் திரும்பிவிடலாம். அங்குப் போய் அமர்ந்துகொண்டாலே, அமைதி நிரம்பிவழியும். மனத்தில் கிலேசம் ஏற்படும்போதெல்லாம் அங்குத்தான் செல்வேன்.”

“அந்த ஸ்லோகத்தைப் படித்திருக்கிறீர்களா?”

“மனப்பாடமாகவே தெரியும். ஒரு தலையகன்ற தூணில், பத்ம பதக்கத்தோடு செதுக்கியிருப்பார். அதிகம் யாரும் எழுதாத கோகிலகம் சந்தஸ்.” என்று உபரி விஷயத்தையும் சொன்னார், குக்கேஸ்வரர்.

“இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்களே! நீங்களே ஸ்லோகத்தையும் சொல்லி விடுங்களேன்” என்றார் கிழார்.

 

மஹிததமம் ஸதாம் உபமஹேந்த்³ரதடாகம் இத³ம்

ஸ்தி²ரமுரு காரிதம், கு³ணபரேன விதா³ர்ய்யஶிலாம்

ஜன நயநாபிராம, கு³ணதாம, மஹேந்த்³ரபுரே

மஹதி மஹேந்த்³ரவிஷ்ணுக்³ருஹ நாம முராரிக்³ருஹம்

 

என்றார் குக்கேஸ்வரர்.

“மகேந்திரபுர நகரத்தில், மகேந்திர தடாகக் கரையில், பாறையைத் துளைத்து, குணபரணால் ஏற்படுத்தப்பட்ட, திடமானதும் விசாலமானதுமான இந்த முராரிகிருகம், நற்குணமுடையவர்களால் போற்றப்பட்டுக் காண்பவர்களின் கண்களை மகிழ்விக்கும் அழகின் உறைவிடமாகத் திகழ்கிறது.” என்று தானே மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டு அனுபவித்த பிரதாபர், “நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கும்போது, காஞ்சிக்குச் செல்லவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது”, என்றார்.

“ஆமாம் ஐயா. இவர்களைப் பார்த்து அஸூயையும் தோன்றுகிறது.” என்றான் விநயன்.

“வாருங்களேன், எங்களோடேயே வந்துவிடுங்கள். நாங்கள் அடுத்தமுறை வரும்போது ஒன்றாக வந்துவிடலாம்” – இளந்தச்சன்.

“அதற்கெல்லாம் இப்போது கொடுத்துவைக்கவில்லை அப்பா”

“அதுசரி, கோகிலகம் சந்தஸ் என்றீர்கள். எனக்கென்னவோ நர்குடகம் போலவன்றோ தோன்றியது?” என்றான் விநயன்.

குக்கேஸ்வரர் மறுபடியும் ஒருமுறை சொல்லிப் பார்த்துவிட்டுச் சிரித்தார். “இதற்குத்தான் உம்மைப் போன்ற பண்டிதர்களோடு சங்கீதி செய்யவேண்டும் என்பது. நீர் சொல்லும்வரை எனக்கு, நர்குடகமாகவும் பிரித்துப் பார்க்கவேண்டும் என்று தோன்றவே இல்லை” என்று சொல்லிவிட்டு, ஸ்லோகத்தின் ஒவ்வொரு அடியிலும் ஏழாவது எழுத்திலும் அடியீற்றிலும் நிறுத்திப் படித்தார்.

“ஆமாம். அடிக்குப் பதினேழு எழுத்துக்கள். ஏழிலும், பதின்மூன்றிலும், பதினேழிலும் நின்றால் கோகிலகம். ஏழிலும், பதினேழிலும் நின்றால் நர்குடகம்”

“இது தமிழில் சீரில் நிற்பது போலவன்றோ இருக்கிறது?” என்றான் குன்றெயில் செழியன்.

“ஆமாம். ஆனால், ஸம்ஸ்க்ருதத்தில் இது போலக் காணக்கிடைப்பது அரிது. தமிழில் அப்படியில்லை. ஒரே பாடலை விதவிதமாகச் சீர் பிரித்துப் பலப்பல ஓசைகளை உருவாக்கலாம். என்ன, எல்லா ஓசைகளுக்கும் பெயர் வைத்திருக்கலாம். வைத்திருந்தால், சுட்டிக்காட்ட ஏதுவாக இருந்திருக்கும்.”

“சரியாகச் சொன்னீர்கள். என் கருத்தும் அதேதான். தொல்காப்பியம் ஓசையை வரையறுக்காமல், ”அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே” என்று சொல்லிவிட்டதால் பெருங்குழப்பந்தான் விளைந்திருக்கிறது. அவரவர்கள், அவரவர்களுக்கு விளங்கியபடி, இஃது இன்னோசைத்தது, இஃது அன்று கூறிவருகின்றனர். இதில் குடுமிபிடி சண்டைகளும் அன்றோ எழுகின்றன!” சிரித்தான் செழியன்.

“அவர்கள் சண்டையிட்டுவிட்டுப் போகட்டும். நாம் நமக்கு எட்டியவரையில் இவற்றை அறிந்துகொண்டு, ஓசையின் இன்பத்தைத் துய்ப்போம். நான் ஒரு பாடல் எழுதிக் காட்டுகிறேன் பாருங்கள்” என்று குக்கேஸ்வரர் கிடுகிடுவென்று ஒரு பாடலை எழுதினார். அவர் எழுதி முடிக்கும்வரை எல்லோரும் பொறுமை காத்தனர்.

“இந்தப் பாடலைப் பாருங்கள்.

 

பலவ      ரிசைவி    டாதுல     வும்பாழ்ப  ணமேசி      விறும்

தலைவ    ரெனும்அ   டாதுசெ    யும்தாவி   முறைத      வறும்

தலைம    கரின்உ    ரைதுணை  யில்தற்பெ  ருமைப      ழகும்

அலைவ   ளரோய்இ  வையெது  வும்ஆற்ற      கிலேன்அ  ருளாய்

 

“என்ன தோன்றுகிறது?”

அவர் சொல்லச்சொல்ல, ஓலையில் படித்துப் பார்த்த விநயன், “அடிக்குப் பதினேழு எழுத்துக்கள், மும்மூன்று அக்ஷரங்களாக ஐந்து கணங்கள், ஈற்றில் லகுவும், குருவும். ந ஜ ப ஜ ஜ என்ற ஐந்து கணங்களாக வருவதால், கோகிலமாக வடித்திருக்கிறீர்கள்”

“தமிழில் இது ஐந்துசீர் விருத்தம். கலித்துறை என்றும் பெயர் சொல்வார்கள் சிலர்.” என்றான் செழியன்.

“ஐந்து சீர் என்று எப்படிக் கணக்கிட்டிருக்கிறீர்கள்? அடியீற்றில் உள்ள குறிலும் நெடிலும் சேர்த்தியாகி வெறும் நிரையாக அன்றோ இருக்கிறது? தமிழில் நான்கடி விருத்தத்தில் ஓரசையாக வருவதுண்டோ?” வினவினான் விநயன்.

“வருவதில்லை. முந்தைய புளிமாவுடன் சேர்ந்து கருவிளங்காயாகிக் காய்ச்சீர் ஆக வைத்துக்கொண்டேன்.” – செழியன்

“ஓ! முதலிரண்டும் புளிமா, அடுத்து ஒரு கூவிளம், ஒரு தேமாங்காய், ஈற்றில் கருவிளங்காயோ? ஈற்றடியில் வும்ஆற்ற – வுமாற்ற என்று ஆகாதோ?” விநயன் விடவில்லை.

“சரியான வினாதான். மகர ஒற்றை விரித்து எடுத்துக்கொண்டு, வும்மாற்ற என்று கொண்டுவிடுங்கள்”

“அற்புதம். அப்படியே கோகிலத்தைத் தமிழ் விருத்தத்தில் சொல்லி விட்டீர்கள்” என்றார் வெண்ணெல் கிழார்.

“இப்போது, ஏழிலும், பதிமூன்றிலும், பதினேழிலும் நின்று படிப்போம். பொருளை மடித்து எழுதாதவரை, ஈற்றில் எப்போதும் நிற்கத்தான் செய்கிறோம். அதனால், அதை விட்டுவிடுகிறேன். ஏழிலும், பதிமூன்றிலும் நின்று சொன்னால், இது,

 

தனனனனானன        தனனன்னானன        தானனனா

தனனனனானன        தனனன்னானன        தானனனா

 

என்ற ஓசையை எழுப்புகிறது. சரிதானே?”

 

எல்லோரும் அதே ஓசையைப் பற்றிக் கொண்டு, தமக்குள் சொல்லிப்பார்த்துச் சரிபார்த்தனர்.

 

“பலவரிசைவிடா       துலவும்பாழ்பண        மேசிவிறும்

தலைவரெனும்மடா    துசெயும்தாவிமு        றைதவறும்

தலைமகரின்னுரை     துணையில்தற்பெரு      மைபழகும்

அலைவளரோயிவை   யெதுவும்மாற்றகி       லேனருளாய்”

 

“முதல் பகுதியைச் சொல்லும்போது, இப்படிப் பிரித்துச் சொன்னால் மிக இனிமையாக இருக்கிறது” என்று சொல்லிப் பின்வருமாறு சொன்னார் குக்கேஸ்வரர்.

 

பலவரி.. சைவிடா           துலவும்.. பாழ்பண           மேசிவிறும்

தலைவரெ.. னும்மடா        துசெயும்.. தாவிமு           றைதவறும்

தலைமக.. ரின்னுரை         துணையில்.. தற்பெரு        மைபழகும்

அலைவள.. ரோயிவை       யெதுவும்.. மாற்றகி          லேனருளாய்”

 

“அழகு.

லஸதரு  போக்ஷணம்  மதுர  பாஷண மோதகரம்

மதுஸம  யாகமே  ஸரஸ  கேலிபி  ருல்லஸிதம்

 

என்ற பாடல் நினைவுக்கு வருகிறது” என்றான் விநயன்

 

இதுவரை மௌனமாகக் கவனித்து வந்த வெல்லாத்தூர்ச் சாத்துவன், “மகேந்திர மஹாராஜா பாடலை இப்போது இதேபோலப் பாடிக் காட்டுகிறேன். சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா என்று சொல்லுங்கள்.

 

“மஹிதத  மம்ஸதா         முபம  ஹேந்த்³ரத      டாகமித³ம்

ஸ்தி²ரமுரு  காரிதம்,        கு³ணப  ரேனவி       தா³ர்ய்யஶிலாம்

ஜனநய  நாபிரா,            மகு³ண  தாமம        ஹேந்த்³ரபுரே

மஹதிம  ஹேந்த்³ரவிஷ்    ணுக்³ருஹ  நாமமு      ராரிக்³ருஹம்

 

“அதேதான்!” அனைவரும் ஆமோதித்தனர்.

“இப்படித்தான் சீர்களைப் பிரிப்பதால் ஓசை ஏற்படுகிறதா? வேறு மாதிரி பிரித்துக் காட்டுங்களேன்?”

“நல்ல கேள்வி. முயன்று பார்ப்போம்.” என்று செழியன் முன்வந்தான். “இப்படிக் கலிவிருத்தமாகப் பிரிப்போமா?

 

பலவரி          சைவிடாது       லவும்பாழ்பண         மேசிவிறும்

தலைவரெ       னும்மடாது      செயும்தாவிமு         றைதவறும்

தலைமக        ரின்னுரைது      ணையில்தற்பெரு       மைபழகும்

அலைவள       ரோயிவையெ    துவுமாற்றகி           லேனருளாய்”

 

“விளம் காய் கனி காய்” என்று சொல்லிப்பார்த்த வெண்ணெல் கிழார், “எனக்குக் காழிப்பிள்ளை திருமலி வெண்டுறை பெருமான் மீது பாடிய இந்தப் பதிகம் நினைவுக்கு வருகிறது. அதே ஓசை!” என்று சொல்லிப் பிரமித்தார்.

 

கரமிரு     பத்தினாலுங்     கடுவன்சின       மாயெடுத்த

சிரமொரு பத்துமுடை      அரக்கன்வலி       செற்றுகந்தான்

பரவவல்   லார்வினைகள்   அறுப்பானொரு       பாகமும்பெண்

விரவிய    வேடத்தினான்    விரும்பும்மிடம்       வெண்டுறையே.

 

“ணையில்தற்பெரு – என்பதை ஐகாரக் குறுக்கமாக்கிச் சொல்ல வேண்டும் அல்லவா? காழிப்பிள்ளை பாடலிலும் ஈற்றடியில் விரித்தல் விகாரம் ஓசையை உருவாக்க உதவி செய்கிறது. அந்தப் பாலப் பரப்பிரம்மம், மூன்றாஞ்சீரில் எப்படித் திடுமென ஒரு கனிச்சீரை அமரத்தியிருக்கிறார் பாருங்கள்! அதே பாங்கு, குக்கேஸ்வரரின் பாடலிலும் சட்டென்று வெளிப்படுகிறது. சீரை மாற்றிப் பிரித்தலில், இத்துணை பரிமாணமா? அசந்தேன்!” என்று வியந்தார் வெண்ணெல் கிழார்.

“வேறு மாதிரி பிரித்துப் புதிய ஓசை உண்டாக்கிப் பார்ப்போமா?” என்று செழியன் பிரஸ்தாபிக்க, ஆளுக்கு ஆள் விதவிதமாகக் குழந்தைகள் போலக் குக்கேஸ்வரரின் பாடலைப் பிரித்துப் பார்த்து விளையாடத் தொடங்கினார்கள். அத்தனை பிரிப்புக்கும் அவருடைய பாடல் ஈடுகொடுத்தது. ஒவ்வொருவரும் புதிது புதிதாகப் பிரிக்க, அவற்றையெல்லாம் லோஹிதகிரீசன் ஓலையில் எழுதிக்கொண்டான்.

“அடேயப்பா! ஐம்பது வகைகள் ஆகிவிட்டன!”

“ஐம்பதா? ஓரெழுத்தையும் மாற்றாமல் ஒரே பாடலை, ஐம்பது வாய்பாடுகளில் பிரிக்க முடிகிறதா? குக்கேஸ்வரரே! நீர் பெரும்புலவர்!” என்றான் செழியன்

“நானென்ன செய்தேன்! மஹேந்திரராஜா பாடலைப் படியெடுத்தேன். அந்தப் பாடலும் ஐம்பதாகப் பிரிகிறது அல்லவா!”

“இவ்வளவு தன்னடக்கம் வேண்டா குக்கேஸ்வரா! ஸம்ஸ்க்ருதத்தில் ஒற்றெழுத்துச் சிக்கல்கள் கிடையா. பல மெய்யெழுத்துக்களைக் கணத்தின் முதலில் பயன்படுத்தலாம். பல எழுத்துக்கள் நிறைய எழுத்துக்களோடு கூட்டுச் சேர்ந்து, கூட்டெழுத்தாக நிற்கக் கூடியன. தமிழ் அப்படியல்லவே! அதில் இப்படி, ஓரெழுத்தையும் மாற்றாமல், இத்தனை வகையாகப் பிரிக்கத் தோதுவான பாடல் எழுதுவது எளிதா? அதுவும், எங்களோடு பேசிக்கொண்டே எழுதிவிட்டாய்!” என்று பாராட்டினார் பிரதாபர்.

“ஆமாம் ஐயா! இது எளிதான செயல் அன்று. அதிக விருத்தங்கள் உள்ள சீவக சிந்தாமணியில் பல பாடல்கள் எனக்குப் பாடம் உண்டு. நான் பலவற்றைச் சொல்லிப்பார்த்து வருகிறேன். எனக்குத் தெரிந்தவரையில் பார்த்துவிட்டேன் , இத்தனை வகையாகப் பிரியும் பாடல்கள் எனக்கு இன்னும் தோன்றவில்லை.” என்றான் செழியன்.

“ஐம்பதுக்குக் கணக்கு என்ன?”  வினவினான் விநயன்.

“அடிக்கு நாற்சீர்கள் கொண்ட கலிவிருத்தங்கள் இருபத்திரண்டு, அடிக்கு ஐந்து சீர் கொண்ட கலித்துறைகள் இருபத்தாறு, இரண்டு அறுசீர் விருத்தங்கள்!” என்று லோஹிதகிரீசன் கணக்குச் சொன்னான்.

“அறுசீர் விருத்தமா? எங்கே சொல்லுங்கள்?” என்று கேட்டார் வெண்ணெல் கிழார்.

“ஆறு மாச்சீர்கள்” என்று சொல்லிவிட்டு லோஹிதகிரீசன் ஓலையில் இருந்து படித்தான். “இதை இப்படிப் பிரித்தது விநயாதிசர்மர்”

 

பலவ      ரிசைவி    டாது       லவும்பாழ்       பணமே   சிவிறும்

தலைவ    ரெனும     டாது       செயும்தா        விமுறை  தவறும்

தலைம    கரினு      ரைது      ணையில்தற்      பெருமை  பழகும்

அலைவ   ளரோயி   வையெ    துவுமாற்        றகிலேன்  அருளாய்

 

இரண்டுமுறை சொல்லிப்பார்த்த வெண்ணெல் கிழார், “இதுவும் காழிப்பிள்ளையாரின் ஒரு பதிகத்தில் பயின்றுள்ளதே! திருக்கடவூர் மயானத்தில், பெரியவிடையேறிய பெருமானைப் பற்றிய பாசுரம்.” என்று சொல்லி அதே சந்தத்தைச் சொல்லிக் காட்டி நெகிழ்ந்தார்.

 

“மரவம்    பொழில்சூழ்      கடவூர்     மன்னு      மயானம்   அமர்ந்த

அரவ      மசைத்த         பெருமான் அகல       மறிய      லாகப்

பரவு       முறையே        பயிலும்    பந்தன்      செஞ்சொல் மாலை

இரவும்     பகலும்          பரவி      நினைவார்       வினைக   ளிலரே.”

 

“இந்த விஷயத்தைப் பற்றிப் பேசப் பேச, எவ்வளவோ சந்தஸ்ஸுகளைச் சொல்லி பார்த்து ஓசையைக் குறித்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. மந்தாக்ராந்தாவில் அமைந்த

 

‘ஶாந்தாகாரம் புஜக³ஶயனம் பத்³மநாபம் ஸுரேஶம்

விஶ்வாதாரம் க³க³னஸத்³ருஶம் மேகவர்ண ஶுபாங்க³ம்’

 

ஸ்லோகமும் பதினேழு எழுத்துக்கள். ஆனால், இதை மா மா மா வாகப் பிரித்தால், ஏழு சீர் விருத்தமாகப் பரிணமிக்கிறது. ஒருவேளை புளிமாவுக்குப் பதில் தேமாவில் தொடங்குவதால், இரண்டு எழுத்துக்களிலேயே மாச்சீர் ஏற்பட்டு விடுகிறது போலும்”

“சுவாரசியமான எடுத்துக்காட்டு. துவக்கத்தில் தேமா வருவதால் மட்டும் இருக்காது. தேமாவே நிறைய வந்து விடுகிறது. என் பாடல் இதன்படி பிரியவில்லை பாருங்கள்! என்ன என்ன நுட்பமெல்லாம் இருக்கிறது இந்த ஓசை தத்துவத்தில்!”

 

நேரம் போனதே தெரியாமல், எல்லோரும் தங்களை மறந்து தங்களுக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் நினைவு கூர்ந்து, ஸம்ஸ்க்ருத சந்தஸ்ஸுடன் ஒப்பிட்டு ஓசையை அறிந்து கொள்வதில் ஈடுபட்டனர்.

பேச்சுவாக்கில், இளந்தச்சன் விநயனைப் பார்த்து, “நீங்கள் கணித சாஸ்திரத்தில் புலி என்று வல்லபஸ்வாமி சொன்னார். எனக்கும் கணக்கிடுவதில் ஈடுபாடு உண்டு. தொழிலுக்கும் அது அவசியமாயிற்றே. ஏதாவது பிரேளிகையோ பிசியோ சொல்லுங்களேன். என் சித்தத்தையும் கசக்கிப் பார்க்கிறேன்” என்றான்.

இவனுக்கு என்ன சொல்லலாம் என்று விநயன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, குக்கேஸ்வரர், “அந்தக் குழிக்கணக்கைச் சொல்லுங்களேன். கணக்குக்கும் கணக்கும் ஆயிற்று. தமிழும் கேட்டாற்போல இருக்கும்?” என்று ஆலோசனை சொன்னார்.

“நல்ல கணக்குத்தான். அந்தக் கணக்கை, நீங்களும் வெண்பாவில் அமைத்துக் காட்டியிருந்தீர்கள். ஆனால், எனக்கு, நீங்கள் எழுதிய வெண்பா முழுவதும் நினைவில்லையே?”

“என்னிடம் இருக்கிறது” என்று பக்கிலிருந்து ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பிரித்தார்.

“கையோடேயே எடுத்துச் சுற்றுகிறீரா? அதி உத்தமம்” என்றான் இளந்தச்சான்.

“நான் எழுதிய பாடல்களை எல்லாம் பகர்த்து, ஒரு பிரதி கையோடு வைத்திருப்பேன்.” – பாடலைத் தேடி எடுத்து விநயனிடம் தந்தார். 

“நீங்களே சொல்லுங்கள். உங்களுக்குத்தான் முழுவதும் தெரியுமே?”

“இது என் புதல்விக்குக் காரணிகள் கற்றுத்தரும்போது, இவர் உருவாக்கிய கணக்கு. அதை நான் பற்றொடை வெண்பாவாக எழுதியிருக்கிறேன். பன்னிரண்டு அடிகளுக்கு மேலிருப்பதால், கலிவெண்பா என்றே சொல்லலாம்”

“பற்றொடையே போதும். அவசியமின்றிக் குழப்பம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பார் என்னுடைய ஆசான். என் பக்கத்தில், வெண்கலிப்பா என்று இதையே கூறிக் குழப்புவார்கள் சிலர். பல்தொடை – பற்றொடை போதாதா? நீங்கள் சொல்லுங்கள்” – இளந்தச்சன் கையில் ஓர் ஓலையை எடுத்துவைத்துக்கொண்டு எழுதிக்கொள்ளச் சித்தமானான். மற்றவர்களும் பின்தொடர்ந்தார்கள்.

 

நீண்ட நெடுநிலம்; நூறு குழியுள;

தோண்டி இருந்தனர் தூரம் ஓரடி

ஈண்டே யவற்றிற் கிடைப்ப யிடைவெளி;

 

நடவு பதிக்கவே நூற்றுவர் வந்தார்

உடையர்பேர் ஓரடியர்,  ஈரடியர், மூன்றடியர்

நான்கடியர் என்பபோல் நூறடியர் மட்டிலாம்

ஆன்றவர் ஆற்று பணியோர் அதிசயம்;

ஓரடியர் வைப்பதும் ஓரடி; வைப்பதும் 

ஈரடிதாம் ஈரடியர்;  இன்னனமே மற்றாரும்;

மூன்றடியர் மூன்றில் துவங்குவார் ஆறுக்கும்

தாண்டியொன் பஃதும்பனி ரண்டும் பதினைந்தும்

மூன்றின் மடங்காய்க் குழிசெல்வார்; மற்றந்த

நான்கடியார் நான்கின் மடங்காம்; இதுபோல

நூற்றுவரும் செய்வர் கொலோஅஃது மட்டன்றி

 

அன்னார் நடவுசெய் தன்மையும் விந்தையே;

ஒன்றும் குழியினுக்குள் இல்லையென் றாலவர்

கன்றொன்று வைப்பார்; இருந்தது கன்றென்றால்

நன்றன்றே என்று களையென்று கீண்டுவார்

 

ஓரடியர் முன்வந்து நூறு குழியிலும்

சீருடன் கன்றுகள் நட்டபின் கன்றுகள்

நூறும் நளிர்ந்தன; ஈரடியர் வந்துழி

பாறின கன்று, இரண்டிலும் நான்கிலும்

பின்னர் ஆறிலும் நூறு வரையிலும்

சென்று பிடுங்கினார்; சென்றபின் வந்துற்ற

மூன்றடியர் மூன்றில் தொடங்கினார், கீண்டினார்

ஆன்றிருந்த கன்றதை; ஆறில் வெறுங்குழி

ஆதலால் நட்டார்காண்; ஒன்பதைக் கீண்டினார்

பேதுற்றாம் பன்னிரண்டு; மீதி இதுபோலே

 

ஓரடியர் தொட்டு வரிசை வரிசையாக,

பார்!அந்த நூற்றர் பணியீண்டு செய்தக்கால்

ஈற்றினில் கன்றுகள் எத்தனை உண்டாங்கே

எவ்வெக் குழியில் இருந்தன என்றெமெக்கு

நீவிர் உரைக்கின் நலம்.”

 

எல்லோரும் முதலில் கணக்கைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதால், நிசப்தம் நிலவியது. இளந்தச்சன்தான் முதலில் நிசப்தத்தை உடைத்தான்.

“அழகாக எழுதியிருக்கிறீர்கள். உடனேயே விடை கிடைக்காது போலிருக்கிறது. பின்னர் அமைதியாக முயல்கிறேன்.” என்றான்.

முதலில், நான் கணக்கைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா என்று சொல்லுங்கள் இதுவரை பேசாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கீழ்நையன் பேசினான்.

“நான் கேட்க நினைத்தேன். நீ கேட்டுவிட்டாய்” என்றார் பிரதாபர்.

“சொல்லுங்கள் கேட்போம்” என்றார் குக்கேஸ்வரர் 

“வரிசையாக நூறு குழிகள். ஒவ்வொன்றும் மற்றொன்றில் இருந்து ஒரு அடித் தூரத்தில். நடவு செய்ய நூறு பேர் வந்தார்கள். அவர்கள் பெயர்கள் ஓரடியர், ஈரடியர், மூவடியர் என்பது போல. ஓரடியர் முதல் குழியில் துவங்கி, ஒவ்வொரு குழியாகச் செல்வார். ஈரடியர் இரண்டாம் குழியில் துவங்கி, இரட்டைப் படையாகச் செல்வர். மூன்றடியர் மூன்றில் துவங்கி, மூன்றின் மடங்காக, இப்படி எல்லோரும். நூறடியர் நூறாவது குழி மட்டும். சரியா?”

“மிகச்சரி”

“அவர்கள் நடவு செய்வது வினோதமான முறை. குழி காலியாக இருந்தால், புதுக்கன்று நடுவார்கள். ஏற்கனவே இருந்தால், அது களை என்று பிடுங்கி எறிந்து விடுவார்கள். பிடுங்கிய குழியில் புதிதாக நடமாட்டார்கள். இப்படி வேலை செய்தால், முடிவில் எந்த எந்தக் குழியில் கன்றுகள் இருந்தன? “

“அழகாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள். விடை கண்டுபிடித்ததும் சொல்லி அனுப்புங்கள்.”


நேரம் போவது தெரியாமல் மீண்டும் பேச்சுத் தொடர்ந்தது. இறுதியில் பிரதாபருக்கும், விநயனுக்கும் குக்கேஸ்வரருக்கும் தமிழ் வணிகச் சாத்துவர்கள் பிரியா விடை கொடுத்து அனுப்பும்போது இரவாகி விட்டது. இரவு உணவும் அவர்கள் ஸத்ஸங்கத்திலேதான் நடந்தது. அன்று பிரதாபருக்கு இரட்ட வரலாறு தொடர வாய்ப்பே எழவில்லை. அதற்குப்பிறகு இரண்டு நாட்களுக்குப்பின் கதையைத் தொடர்ந்தார் பிரதாபர்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...