“வேங்கியைத் துருவராஜா எப்படி நடத்தினார் என்று இன்று பார்ப்போம். அதற்கு முன் என்னைப் பற்றியும் நீ தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?” என்று சிரித்தார் பிரதாபர். “முதன்முதலில் வாதாபியின் சாளுக்கிய அரசு, வேங்கியில் தன்னுடைய ஆளுமையை ஸ்தாபித்தபோது, புலிகேசி மஹாராஜாவின் இளையவர் விஷ்ணுவர்த்தன மஹாராஜாவோடு வந்து குடியேறியவர்கள் நாங்கள் என்று ஏற்கனவே, சொல்லியிருக்கிறேன். என்னுடைய தந்தை, சோமயாதித்தர், சிறந்த வாள் வீரர். அவருக்கு வாள் வீச்சில் அனுபவம் அதிகமாக அதிகமாக, அது, நல்ல வாளைச் செய்வது எப்படி என்ற ஆர்வத்தை அவருக்குள் தூண்டிவிட்டது. தானே இரும்பை உலையில் உருக்கிச் சம்மட்டியால் அடித்து ஒரு வாளைப் புதிதாக உருவாக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டார். வாளைச் செப்பனிடவும் செய்வார். அவருடைய திறமையைக் கொல்லர்களே பாராட்டுவார்கள். சில கொல்லர்கள் அவரிடம் ஆலோசனை கேட்பதும் உண்டு. மஹாராஜா ஒருநாள் தற்செயலாக, தந்தையார் பணி புரியும் இடத்துக்கு வந்தபோது, அவர் வாண்முகத்தையும், உடலத்தையும், வடிம்பையும் உருவாக்கும் விதத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு, இவரை, உருக்காலைகளுக்கு மேற்பார்வையாளராகவே ஆக்கிவிட்டார். நாளடைவில், அரசரும், அவருடைய முக்கியத்தளபதியும் சோமயாதித்தர் செய்த வாள்தான் வேண்டும் என்று கேட்டு, அவற்றைத்தான் பயன்படுத்துவார்கள். அரசருக்கு இவர்மேல் மிகுந்த அபிமானம்.”
“அப்போது அரசர் யார்?”
“விஜயாதித்தியருக்குத் தந்தை, விஷ்ணுவர்த்தனர்.”
“மூசிப்போர் நடக்கும்போது.. ?”
“அவரேதான். அரச வமிசத்திலேயே ஒரு பெண்ணையும் தந்தைக்காகத் தேடி, அவரே முன்னின்று கொண்டு மணமும் செய்வித்தார். அவர்தான் என் அன்னையார் ரேணுகாதேவி. நான் பிறந்து ஓரிரண்டு மாதங்களில், அரசருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தாள். விஜயாதித்தியருக்கு முன்பு பிறந்தவள். இவள் பிறக்கும்போது, பிரசூதியில் ஒரு சின்ன சிக்கல். அதற்காக, அரசிக்கு இரசாயனச் சிகிச்சை அளித்து வந்தார்கள். தாய்க்குச் சிகிச்சை நடப்பதால், பிறந்த குழந்தைக்குத் தாயின் முலைப்பால் ஊட்டக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதால், செவிலித்தாய் வேண்டுமென்று, முலைப்பால் பருகும் இளம்சிசுவோடு கூடிய தாய்களைத் தேடினார்கள்.”
“ஓ! தாத்திரியாக? ஆயுர்வேதத்தில், எப்படித் தாத்திரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரிவாக இலக்ஷணங்கள் தரப்பட்டிருக்கின்றன.
“தா⁴த்ரீம் ஆனய ஸமான வர்ணாம், யௌவனஸ்தா²ம், நிப்⁴ருதானாம், அனாதுராம், அவ்யங்கா³ம் அவ்யஸனாம் அவிரூபாம் அஜுகு³ப்ஸிதாம் தே³ஶே ஜாதீயாம் .. என்று பல குணங்களைப் பரீட்சிப்பார்கள்.”
“நீ பண்டிதன் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறாய். இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயே!”
“என்னைக் கலாய்ப்பதில் உங்களுக்கு அதீத ருசி”
“இல்லையப்பா, இதையெல்லாம் எப்படித் தெரிந்து கொண்டிருக்கிறாய்?”
“ஔஷதாலயத்தில்தான். இதைப்பற்றிப் பேச்சுக்கள் நடக்கும்.”
“இதற்கும் சாத்திரம் எழுதப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது. ஆனால், பரீட்சித்தார்கள் என்று மட்டும் தெரியும். என் அன்னை, எல்லாவிதத்திலும் பொருத்தமானவளாக இருந்ததால், அவளைத் தேர்ந்தெடுத்து அந்தப்புரத்துக்கே அழைத்துக்கொண்டு வரச்சொல்லி விட்டார்கள். என்னையும் அழைத்துக்கொண்டு அன்னை அரண்மனை வாசியாகிவிட்டாள். அரசியின் அருகாமையிலேயே நானும் அன்னையும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்னையின் உணவு, அவருடைய உறக்கம், அவருடைய ஆரோக்கியம் எல்லாம் கண்காணிக்கப்பட்டன. பால் பெருக்கத்துக்கு வேண்டிய சத்துக்களை எல்லாம் மருத்துவர்கள் பிரத்தியேகமாகச் செய்து அளித்தார்கள். அவரை எப்போதும் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அரசகட்டளை. என்னுடைய பங்குக்கான பாலமுதம் குறைக்கப்பட்டு, அரசகுமாரிக்குப் பெரும்பங்கு வழங்கப்பட்டது. அதை ஈடு செய்ய, எனக்குத் தனியாக ஒரு பசுவை, என் ஜீரண சக்திக்கேற்பத் தேர்ந்தெடுத்து, அதைப் போஷித்து வளர்த்தார்கள். ராஜவைத்தியர், பாலை ஆராய்ந்து, அதைத் தாய்ப்பால் போல ஆக்கச் சரியான நீர்ச்சத்து, இனிப்பு ஆகியவற்றைச் சேர்க்க ஓர் அட்டவணையே கொடுத்திருந்தார். ராஜவாழ்க்கை, என் தாய்க்கும் எனக்கும்.” சிரித்தார் பிரதாபர்.
“உங்கள் அன்னைக்குத்தான் மனம் துடித்திருக்கும்.”
“ஆஹா! உங்கள் தெளிவும் தீர்க்கமும் எங்கிருந்து வந்தது என்று இப்போது எனக்குப் புரிகிறது” கை கூப்பினான் விநயன். அவனைக் குறும்பாகப் பார்த்த பிரதாபர், “இப்போது யார் யாரைக் கலாய்க்கிறார்கள் என்று தெரியவில்லையே” என்றார்.
“நானும் அரசகுமாரியும், சகோதர சகோதரி பந்தத்துடன் வளர்ந்தோம். மஹாராணியாருக்கு என் மேல் அதிக வாஞ்சை. என்னை மகனாகவே பாவித்தார். விஜயாதித்தியர் பிறக்கும்போது, எனக்குப் பத்துப் பதினைந்து வயதிருக்கும். அதுவரையில் அரண்மனையில் ஒரு அரசகுமாரனைப் போலவே ஸ்வதந்தரமாக வாழ்ந்தேன். என் ஸ்வதந்திரம் முடிவுக்கு வந்த சமயத்தில், வேங்கியின் ஸ்வதந்தரமும் முடிவுக்கு வந்துவிட்டது”
“என்ன சொல்கிறீர்கள்? என்ன ஆயிற்று?”
“விஷ்ணுவர்த்தன ராஜா எடுத்த தவறான முடிவு, துருவ சமுத்திரத்தில் மூழ்கவைத்து விட்டது.”
“ஓ! வேங்கி, துருவருக்குச் சத்துருவானதின் பாதிப்பு இந்தச் சமயத்தில்தான் நிகழ்ந்ததா?”
“இன்பமும், துன்பமும் சேர்ந்து வந்தது வேங்கிக்கு. பெரிய கோவிந்தர், தம்பியால் வீழ்த்தப்பட்ட செய்தியைக் கேட்டதில் இருந்து, எல்லோருக்கும் மரணபயம் இருந்தது. துருவராஜா, வேங்கியைத் தாக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். கங்கத்தைத் துருவர் தாக்கிய வேகமும் பாங்கும், சிவமாறரைச் சங்கிலியால் பிணைத்து அவ்வளவு தூரம் கொண்டு சென்றார்கள் என்ற விஷயமும் எல்லோருக்கும் தெரிந்ததும் பயம் இன்னும் அதிகமாயிற்று. அரசி வேறு, கருத்தரித்து இருந்தார். சந்ததிக்கு ஆண்மகன் வேறு இல்லையே என்று பல ஆண்டுகள் காத்திருந்த பிறகு, பிறக்கப் போகும் குழந்தை. ஜோசியர்கள் எல்லோரும், குறிப்பையும், கோள்களையும் வைத்து, ஆண்மகன் என்றுதான் முடிவு கட்டியிருந்தார்கள். விஜயாதித்தியர் பிறந்தார். ஒருபக்கம் மகிழ்ச்சி. இன்னொருபக்கம் அச்சம். கொண்டாட்டங்களும், மட்டுடனேயே இருந்தன. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, ஆபத்து, அரிகேசரியின் ரூபத்தில் வந்து கதவைத் தட்டியது.”
“ஐயோ! விநயாதித்த யுத்தமல்லரின் புதல்வரான அரிகேசரியா? கோவிந்தராஜரே அஞ்சும் வீரர் என்றல்லவா சொல்லியிருக்கிறீர்கள்! அவர் இராட்டிரக் கூடத்தில் இருந்து படையெடுத்து வந்தாரா? வேமுலவாடாவில் இருந்தா?”
“மூசிப்போருக்குப் பிறகு, வேமுலவாடாதான் யுத்தமல்லரின் நாடாக இருந்தது. போதனத்தில் வலுவான படைகளோடு ஸ்திரமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். அவருடைய யானைப்படையைப் பற்றி, எல்லோரும் பிரமித்துப் பேசிக்கொள்வார்கள். கங்கநாட்டுக்கு இணையாக அவை பராமரிக்கப் பட்டன. அவற்றின் எண்ணெய்க் குளியலுக்கும், வருடாந்திர தைலத்துக்கும், எண்ணெய் மற்றும் தைலக்குளங்களே வெட்டி வைத்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளேன். யுத்தமல்லருக்குப் பிறகு, அரிகேசரியாருடைய படைபலம் பன்மடங்கு மேன்மையுடன் திகழ்ந்தது. துருவராஜா வரப்போவதில்லை. அரிகேசரிதான் தலைமை தாங்கித் தன்னுடைய படையுடன் வேங்கியைத் தாக்க வரப்போகிறார் என்ற செய்தி பரவியவுடன். ஜனங்களுக்கு மரண பீதி. ஏற்கனவே, பெரிய கோவிந்தரின் படையெடுப்பின் நினைவு எல்லோருக்கும் எழுந்தது. அப்பொழுதுதாவது ஒருவேளை வெல்லலாம் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தது. ஆனால், இப்போது, தோல்விதான் நிச்சயம் என்றெல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரிந்து விட்டது.”
பிரதாபர் சொல்லிக்கொண்டே போனார்.
***** ***** ***** ***** ***** *****
“பிரதாபா! புது உலை சித்தமாகி விட்டதா?”
“இல்லை அப்பா, துருத்திகளை இணைத்தாகி விட்டது. இன்னும் ஈரம் காயவில்லை.”
“இன்னுமா காயவில்லை?”
“போனமுறை இணைத்ததில் விரிசல் விட்டுவிட்டதல்லவா? இம்முறை புதிய மண்ணைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சன்னமான களிமண். நிறைய தண்ணீர் வாங்கிற்று. அதனால்தான் காய நேரமாகிறது.”
“ஈஸ்வரா! இந்த வேகத்தில் சென்றால், படைவீரர்களுக்கு எப்போது வாட்களை அனுப்புவது? வீரர்கள் நிராயுத பாணியாகத்தான் அரிகேசரியை எதிர்க்கவேண்டி நேரப்போகிறது! வாட்கள் எத்தனை கைவசம் இருக்கின்றன?”
“இரண்டாயிரம் வாட்களுக்கு அடித்துப் பிடி செருகிவிட்டார்கள். சாணை பிடிக்கவேண்டியதுதான். இன்று பொழுது சாய்வதற்குள், நானூற்றைச் சாணை பிடித்து வண்டியில் ஏற்றிவிடலாம்.”
“போதாது, பிரதாபா, போதாது. ஈட்டிகள் நிலைமை என்ன”
“மூன்று உலைகள், ஈட்டிகளுக்காகவே நாள் முழுக்க உருக்கிக்கொண்டு இருக்கின்றன”
“முனைகள் போதுமான அளவுக்கு இருக்கின்றனவா? கையெறியை மட்டும் வைத்துக்கொண்டு, ஒன்றும் செய்ய முடியாது” பேசிக்கொண்டே, அருகில் இருந்த உலையில் அடித்துவாரத்தில் இருந்து, காடி வழியாக நெருப்புப் பிழம்பாக வடிந்து கொண்டிருந்த இரும்புத் திரவத்தை ஒரு மரக்கரண்டியில் எடுத்துப் பார்த்தார். முகத்தில் திருப்தி தெரிந்தது.
“விடாமல் அழுத்துங்கள். காற்று குறையக்கூடாது” என்றார் பெரும் துருத்திகளை அழுத்திக்கொண்டிருந்தவர்களிடம். அவர்களுக்குத் தெரியாதா என்ன? இரவு பகலாக, ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் எல்லோரும். அவருடைய உள் மனத்து அழுத்தம், தோல்வியின் சுமை இப்படிப் பேசவைத்தது. இதுவும் எல்லோருக்கும் தெரியும். கரியின் இருப்பு வேறு குறைந்துகொண்டே வருகிறது. பத்து நாட்களுக்குத்தான் வரும். கோதாவரி ஆளியை, அரிகேசரியின் படைகள் கைப்பற்றி விட்டார்கள் என்று நேற்றுத்தான் செய்தி வந்திருந்தது. அதைக் கேட்டதிலிருந்துதான் எல்லோருக்கும் மனச்சோர்வு. குருதியை வற்றவைக்கும் சூட்டில், உடல் வருத்திக்கொண்டு இவர்கள் செய்யும் ஆயுதங்கள், எவ்வளவு காலம் எதிரியைத் தடுத்து நிறுத்திவிடும்? வெறும் படைக்கலன்களைச் செய்து செய்து அடுக்கிவைப்பதால் என்ன பயன்? போரிடுவதற்கு ஆட்கள் இருந்தால்தானே? வேங்கிப் படைகள், போர்க்களத்தில் இருக்கின்ற வரைதான், இந்த ஆயுதங்கள் செய்யும் பணிக்குப் பயன். வேங்கியின் எதிர்ப்பைக் கடந்துவிட்டால், பிறகு, இவர்கள் செய்யும் ஆயுதங்களை எல்லாம், எதிரி கைப்பற்றிக்கொண்டு தன்னுடைய ஆயுத கோசத்தில் சேர்த்துக் கொண்டுவிடுவான். எதிரிக்காகவே இவர்கள் உழைத்தது போலத்தான்.
வாயிலில் ஆரவாரம் கேட்டது. பஃதுக் குதிரைகள் அடங்கிய ஒரு சிறுபடை, ஆயுதசாலை வாயிலில் வந்து நின்றது. வாயிற்காப்பவர்களிடம், தன் பெயரைக் கேட்பதைச் செவிமடுத்த சோமயாதித்தர், கையைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தார். குதிரைப் படைத் தளபதி, அவரைப்பார்த்ததும், விறைப்பாக நின்றுகொண்டு, “அரண்மனைக்கு உங்களைக் கையோடு அழைத்துக் கொண்டுவரும்படி, அரச உத்தரவு” என்றான்.
“இப்பொழுதேவா?” ஆச்சரியமாகக் கேட்டார் சோமயாதித்தர்.
“ஆம். கையோடு. எந்த வேலை இருந்தாலும், அதை அப்படியே விட்டுவிட்டு எங்களோடு
வரும்படி உத்தரவு.”
இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை. குறைந்தபட்சம், குளித்துச் சுத்தம்
செய்துகொள்ளவாவது நேரம் கிடைக்கும். ஏதோ அசம்பாவிதம் என்றது உள்ளுணர்வு.
ஆயுதக்கூடமே ஒரு கணம் உறைந்தது. சீக்கிரம் சுதாரித்துக் கொண்டவர், பிரதாபனைக்
கூப்பிட்டார். பக்கத்தில் இருந்த ஆயுதக்கூடத் தளபதியிடமும் சொன்னார்.
“அரசர் அழைக்கிறாராம். போய்விட்டு வந்துவிடுகிறேன். இரண்டாம் மற்றும் நான்காம் உலைகளில், இரும்புக்குழம்பின் நேரம் வந்துவிடும். பதத்தைப் பார்த்து வடித்துவிடுங்கள். நேரம் கடத்தவேண்டாம். உடனேயே, சம்மட்டிக்கு அனுப்பிவிட்டு, உலையின் சாம்பலை எடுத்துவிடுங்கள். குயவர்களுக்குச் சேற்றைச் சித்தமாக வைத்திருக்கச் சொல்லியிருக்கிறேன். மேற்பூச்சு உடனடியாகச் செய்துவிட்டு, அடுத்த ஈட்டுக்கு ஏற்பாடு செய்துவிட வேண்டும்” என்றவர், பிரதாபனிடம், “அந்த வாட்கள் சாணை ..” என்று சொல்ல வாயெடுத்ததும், குதிரைப்படைத் தளபதி, இடைமறித்தான்.
“தங்கள் புதல்வரை, உடனேயே இல்லத்துக்கு அனுப்ப உத்தரவு. இந்தக் குதிரையில்
செல்லட்டும், குதிரை ஏறத் தெரிந்தவர்தானே” என்று சைகை காட்ட, வந்திருந்த
குதிரையில் இருந்து ஒருவன் இறங்கிப் பிரதாபனுக்குக் கடிவாளத்தைத் தந்தான். சோமயாதித்தருக்கும்
ஒருவன் குதிரையைத் தந்துவிட்டு, வேறொரு வீரனுடன் ஏறிக்கொண்டான். என்ன நடக்கிறது
இங்கே? நான் ஏதாவது குற்றம் செய்துவிட்டேனா? சிறைப்படுத்துகிறார்களா? தன் மகன்
தன்னைக் குழப்பத்தோடு நோக்குவது மனத்தில் உறுத்த, யோசனை செய்துகொண்டே,
வந்தவர்களுடன் சென்றார் சோமயாதித்தர்.
அரண்மனையில் நுழைவாயில் அருகே, ஏகப்பட்ட போர்வீரர்கள். இவர்கள் வருவதைப் பார்த்துத் திமுதிமுவென்று ஒரு படை சூழ்ந்துகொண்டது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்கக் கூடமுடியவில்லை. ஓர் தண்டநாயகன் மட்டும், இவரைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் தெரிவித்துவிட்டு, எல்லோரையும் ஒதுக்கிவிட்டு, உள்ளே அனுப்பினான். அப்பாடா, இவை சாளுக்கியப்படைகள்தாம். வேங்கி வீழவில்லை. சற்று நிம்மதியுடன் உள்ளே சென்றவரைக் கிடுகிடுவென்று மந்திராலோசனை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். உள்ளே போகவிட்டு, எல்லோரும் அறைக்கு வெளியிலேயே தங்கி விட்டார்கள்.
தயக்கத்தோடு உள்ளே அடியெடுத்து வைத்ததும், “சோமயாதித்தரே! வாருங்கள்
வாருங்கள்” என்று படைத்தளபதி அழைத்ததும்தான் அவருக்கு உயிர் வந்தது.
சிறைப்படுத்தப்படவில்லை. ஏதோ விஷயம் என்று நிம்மதியுடன் உள்ளே நுழைந்தார். தளர்ந்த
முகத்துடன் அரசர் தன்னைப் பார்த்துத் தலையசைப்பதைக் கண்டு விரைவில் முன்னே
சென்றார். சுற்றிலும் சில தெரிந்த முகங்கள், சில தெரியாத முகங்கள். ராஜகுருவும்,
ராஜபண்டிதரும் மஹா அமாத்தியரும் இருந்தனர். பெரிய ஆகிருதியுடன், ஒருவர்
பொற்கவசத்துடன் அரசருக்கு அடுத்ததாக அமர்ந்திருந்தார்.
“மன்னர் வாழி! அவருடைய செங்கோல் வாழி! அரசரே! இப்படி மாசு படிந்த உடையோடு, மன்னர் முன்னர் வருவதற்கு மன்னிக்கவேண்டும். உடை மாற்ற சௌகரியப் படவில்லை.” என்று சொல்லி விஷ்ணுவர்த்தனரை வணங்கினார் சோமயாதித்தர்.
“வா சோமா, நான் உனக்கு உடை மாற்றக் கூட நேரம் தரவில்லை என்பதைச் சாமர்த்தியமாகச் சொல்லிக் காட்டுகிறாய்.” மன்னர் புன்னகை செய்ய, எல்லோரும் மெல்லச் சிரித்தார்கள். அப்பாடா! நிலைமை மோசமில்லை.
“சோமா! இவரைத் தெரியுமா உனக்கு? இவர்தான் இராட்டிரக்கூட வேந்தர், பரமபட்டாரக
நிருபம கலிவல்ல மஹாராஜா துருவ தாரவர்ஷரின் பிரதிநிதி. வேமுலவாடாவின் பிரக்கியாதி
பெற்ற அரசர் சமஸ்தலோகாஷ்ரய, திருபுவனமல்லர், ஸாஹஸராமர் அரிகேசரி. நாம் வணங்கத்
தகுதியானவர்”
திடுக்கென்றது சோமயாதித்தருக்கு. வேங்கி விழுந்தேவிட்டது! இவர்தானா அந்த
அச்சத்தீயை அடிவயிற்றில் மூட்டும் அரிகேசரி! பார்த்தாலே அப்படித்தான் இருக்கிறது.
குனிந்து வணங்கினார்.
“இவர்தான் நான் சொன்ன சோமயாதித்தர். சீலையோடு இவரும் இவர் மனைவியும்தான்
வரப்போகிறார்கள். கிருபையோடு கவனித்துக் கொள்ளுங்கள்”
தலையை அசைக்காமல், மலைபோல அமர்ந்திருந்த அரிகேசரியின் வாய்மட்டும் அசைந்தது. “பட்ட மஹிஷியின் வேண்டப்பட்டவர்கள் ஆயிற்றே. அரசவிருந்தினர்கள் இவர்கள். கவலை கொள்ளவேண்டாம்.” என்றவர், சோமயாதித்தரைப் பார்த்து, “மயூரகண்டிக்கு உங்களை வரவேற்பதில் பெருமையடைகிறோம். நாளை, பிரம்மமுகூர்த்தத்தில் கிளம்பவேண்டும். இல்லத்துக்குச் சென்று, தங்களுக்குப் பிரத்தியேகமான முக்கிய வஸ்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். துணிமணிகள் போன்றவற்றை இராட்டிரக்கூடத்தில் ஏற்பாடு செய்துகொள்ளலாம்” என்று சொல்லி நட்புடன் சிரித்தார்.
பிறகு, அரசரைப் பார்த்து, “இவருக்கு விடலைப் பருவத்தில் ஒரு மகனும், வயதான தந்தையும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்களும் வருகிறார்களா?”
“இல்லை, இவர் தந்தையார், இங்கேயே இருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டார். அவரை வேங்கி, கவனித்துக்கொள்ளும். பையன் சிறுவன். தந்தையும் தாயும் இல்லாமல் இருக்கக் கூடாது. அவன் வருகிறான்.”
“நல்லது. சரி, நான் வருகிறேன். நாளை மற்ற விஷயங்களைப் பார்க்கலாம்” என்று
எழுந்துகொண்டு, அறை அதிர, நடந்து சென்றார் அரிகேசரி. கூடவே, அவருடைய பரிவாரங்களும்
செல்ல, அறையில் சில பேர் மட்டும்தான் இருந்தார்கள். சாளுக்கியப் படைத்தளபதியும்
சென்று விட்டான்.
இன்னும் குழப்பத்தில் இருந்த சோமயாதித்தரைப் பார்த்து, ராஜகுரு சொன்னார், “சோமயாதித்தரே! நம் அரசகுமாரி சீலாதேவி, இராட்டிரக்கூடத்தின் பட்ட மஹிஷியாகப் போகிறார். இன்னும் இரண்டு திங்களில் விவாஹம், மயூரகண்டியில். அரசரும், அரசியும் விவாஹத்துக்குச் சில நாட்கள் முன்னால், அங்கு வந்து சேருவார்கள். நாளை, அரசகுமாரி மணப்பெண்ணாகப் புறப்படுகிறார். அங்கு, அரசர் வரும்வரை, அரசகுமாரிக்காகத் தனி இடம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அவருக்குத் துணையாக, நீரும், உம் பாரியாளும் கூட இருந்து கவனித்துக் கொள்ளப் போகிறீர்கள். விவாஹத்துக்குப் பிறகும், உங்கள் இருவருக்கும் அங்கேயேதான் இனி வாசம். அரசகுமாரிக்குத் துணையாக. பிரதாபன் உங்களோடு வருகிறான். அவனுக்குக் கல்விக்கும், போர்ப்பயிற்சிக்கும், ஜீவனோபாயத்துக்கும் எல்லா வழிவகைகளும் செய்யப்படும். உங்கள் தந்தையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். அவருக்கும் அதுதான் விருப்பம் என்று சொல்லிவிட்டார். நல்லபடியாகப் போய்வாருங்கள். இது நம் அரசருக்காகவும், நாட்டுக்காகவும் உங்கள் குடும்பம் செய்யும் தொண்டு. வேங்கி உங்களை மறக்காது.”
தடபுடவென்று செவியில் விழுந்த செய்தி, சரிதானா என்று உள்மனம் சரிபார் சரிபார் என்றது. சரிபார்க்க ஏது நேரம்? அரசருடைய ஆணை கேட்டவுடவன் தலையாட்டி இசைவு தெரிவித்தாயிற்று. என்னது ஏது என்று ஆணையின் தாத்பரியம் மெல்ல மெல்லப் புரிபடத் துவங்கியதும், சொன்னதைச் செரித்துக்கொள், செரித்துக்கொள் என்று உள்மனம் கட்டளை இட்டது. முகத்தில் மாறுபாடு காட்டாமல் இருக்க சோமயாதித்தர் பெரிதும் முயன்றார். ஆனாலும், அவருடைய முகம் வெளிறிப் போயிற்று. திடீரென்று நாம் வளர்ந்த நாட்டைவிட்டுப் பகைவரின் நாட்டில் போய்க் குடியிருப்பதா? அவர்கள் எல்லாம் யார்? என்ன மொழி பேசுவார்கள்? என்ன பண்பாட்டைக் கடைப்பிடிப்பார்கள்? விக்கித்துப் போய் நின்றார். அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த விஷ்ணுவர்த்தனர் சொன்னார்:
“இது உனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும், சோமா. சீலாவின் நிலையையும் எண்ணிப்பார். சிறுபெண். தந்தையையும், தாயையும் விட்டகன்றுபோய், நேற்றுவரை விரோதியாக இருந்தவர்களுடைய நாட்டில், அவர்களுடைய வீட்டிலேயே வாழ்க்கைப்படப் போகிறாள். அவளுக்கு ரேணுகாவும் ஓர் அன்னையாயிற்றே. அதனால்தான், எங்கள் இருவருடைய பிரதிநிதியாக உங்களிருவரையும் கூடவே அனுப்பத் தீர்மானித்தோம். உன்னோடு உன் மகனும் இருக்கப்போகிறான். அவளுக்கு ஓர் சகோதரனாகவே வளர்ந்தவன் பிரதாபன். நீங்கள் மூவரும் ஒரே குடும்பமாக இருந்து அவளைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். காலையில் புறப்பட்டாக வேண்டும். நேரம் அதிகமில்லை. நீ உடனே புறப்படு. ரேணுகாவுக்கு விஷயம் தெரியும். அந்தப்புரத்தில்தான் இருக்கிறாள். போகும்போது பார்த்துவிட்டுப் போ. சுபம் அஸ்து” என்றார். அவருடைய குரல் உடைந்திருப்பதாகத் தோன்றியது.
என்ன சொல்லவேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒன்றும் புரியாமல் உறைந்து போயிருந்த சோமயாதித்தர், அரசரையும் சபையையும் வணங்கிவிட்டு அந்தப்புரத்தை நோக்கிப் புறப்பட்டார்.
அவர் முற்றத்தில் வருவதைப் பார்த்ததுமே ஓடி வந்த ரேணுகாவின் கண்கள்
கலங்கியிருந்தன. அவரை நமஸ்கரித்துவிட்டு அழத்தொடங்கினாள். மெல்ல அவளை அணைத்து,
அவர் அழாதே என்று சொல்ல வாயெடுப்பதற்குள், அரசி இரண்டு பணிப்பெண்கள் தொடர வருவதைக்
கண்டு, வணங்கினார். ரேணுகா அவரைவிட்டுச் சட்டென்று விலகிச் சற்றுத் தள்ளி
நின்றாள்.
“அரசர் எல்லாம் சொன்னாரா, சோமயாதித்தரே?”
“ஆம் பெருந்தேவி. அரசகுமாரி எப்படி இருக்கிறார்?”
“அழுது கொண்டிருக்கிறாள். உங்கள் இருவரின் பலத்தில்தான், நான் தைரியமாக
இருக்கிறேன். பெண்ணென்று பிறந்துவிட்டாலே இந்தநாள் வந்துதானே ஆகவேண்டும்? திருமணம்
ஆனபோது எனக்கும் இப்படித்தான் இருந்தது. என்ன, திடீரென்று எல்லாம்
நடந்துவிட்டதால், ஏற்பட்ட அதிர்ச்சி எல்லோருக்கும். எல்லாம் சரியாகிவிடும்.
நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பெரிய இடத்தில் சாம்ராஜ்ஜிய ராணியாக
வாழ்க்கைப்படப் போகிறாள். உங்களுக்கும் பிரதாபன் கூடவே இருக்கப்போகிறான்.
நல்லபடியாகச் சென்று வாருங்கள். மாதத்துக்கு மேற்பட்ட பயணம். கவனமாக இருங்கள்.
சீலாவை சரியாக உண்ணவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ரேணுகா இரவு இங்கேயே
இருக்கட்டும். நாளை மன்றத்துக்கு நேரடியாக வந்துவிடுங்கள்.”
இராணியார் திரும்பி அந்தப் புரத்துக்குச் செல்ல, ரேணுகா, கணவரைத் திரும்பித்
திரும்பிப் பார்த்துக்கொண்டே கண்களில் கண்ணீருடன் தலையை ஆட்டி விடைபெற்றுக்கொண்டு
இராணியார் பின்னாலேயே ஓடினாள். உள்ளே, விஜயாதித்தியக் குழவி வீறி அலறுவதைச்
செவிமடுத்தபடியே, அந்தப்புரத்தை விட்டு வெளிவந்து, வீட்டுக்கு விரைந்த சோமயாதித்தருக்கு,
மஹாராணியார் மனத்தைத் தேற்றிக்கொண்டு விட்டார் என்று புரிந்தது. வீட்டை
நெருங்கியதுமே, தந்தை அவரைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டுக் கிடுகிடு என்று
நடந்து அவரை நோக்கி வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வீட்டைச்
சுற்றி நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளே ஆட்கள் உடைப்பொருள்களைக்
கட்டிக் கொண்டிருந்தார்கள்.
“வா, சோமா, அரசரைப் பார்த்தாயா? நீ போய்க் குளித்து விட்டுவா. உணவு சேர்ந்து உண்ணலாம். மீண்டும் சந்திக்க எப்போது வாய்க்கப்போகிறதோ?”
“என்ன நடந்தது, அப்பா? எதனால் இந்த முடிவு? எனக்குத் தலைகால் புரியவில்லை. போர்முனையில் என்ன ஆயிற்று?”
“எல்லாம் அரிகேசரியின் வேலைதான். அவனைப் பார்த்தாயா?”
“பார்த்தேன். ராஜாவோடு கூடவேதான் இருந்தார். என்ன ஓர் ஆகிருதி! நிமிர்ந்து பார்த்துப் பேசவே அச்சமாக இருந்தது. அரசர் உள்பட எல்லோருமே ஒரு பயத்தில்தான் இருந்தார்கள். நம் படைகள் என்ன ஆயின? வெளியில் இருந்து பார்த்தால், போர் நடப்பதாகவே தெரியவில்லையே. அரிகேசரி எப்படி, எப்போது நாட்டுக்குள்ளே வந்தார்? துருவராஜாவுக்கு ஐம்பது வயது இருக்காது? அவரோடு, இந்தச் சின்னப் பெண்ணுக்குத் திருமணமா? பிரதாபன் வயதுதானே சீலாவுக்கு. இந்தக் கார்த்திகையில்தான் இவனுக்குப் பதினாறு.”
“போரில் நம் படைகள் பெருத்த தோல்வியுற்றன, பிரதாபா. உயிர்ச்சேதம் அதிகமில்லை. பெரிய உக்தியுடன், வடக்கில் இருந்தும், மேற்கில் இருந்தும் பெரும்படைகளை ஒரு நாள் தூரத்தில் நிறுத்திவிட்டான் அரிகேசரி. அதைப்போல இரண்டுமடங்கு பெரிய படை, இரண்டுநாள் தூரத்தில் தெற்கில் இருந்து வந்துவிடும் என்று ஒற்றர்கள் தெரிவித்தார்கள். கிருஷ்ணையின் இரண்டு கரையிலும் படைகள், இதுவரை காணாத அளவுக்குத் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனவாம்”
“மூசிப் போரில் வந்த படைகளை விடவா?’
“அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிறார்கள் ஒற்றர்கள்”
“ஒரு நாள் தூரத்தில் படைவரும் அளவுக்கு ஒற்றர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? ஏன் முன்னரே செய்தி வரவில்லை?”
“ஒரு திங்களாகவே நம் ஒற்றர்களிடம் பெரிதாகச் செய்திகள் வருவதில்லை. இப்போதுதான் தெரிகிறது, அவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று. இப்போதும் நமக்குத் தெரியவேண்டும் என்று அரிகேசரி நினைத்ததால்தான், செய்தியும் கசிந்திருக்கிறது.”
“இதென்ன புதிய போர்முறை! அப்படிப் பெரிய படையைத் திரட்டிக் கொண்டுவந்தவர், தாக்க வேண்டியதுதானே?”
“தாக்கக்கூடாது என்பது துருவராஜாவின் கட்டளையாம். நம் படைகளைப் பற்றி எல்லா விவரமும் அரிகேசரி சேகரித்திருக்கிறான். நம்மைப்போல மூன்று மடங்கு படைகள் திரட்டப்பட்டிருக்கின்றன. அரசரை உயிருடன் பிடித்து வருவதுதான் நோக்கம் என்கிறார்கள்.”
“மஹேஸ்வரா! சிவமாறரை அப்படித்தான் காலில் சங்கிலியைக் கட்டி இழுத்துப் போனார்கள். அப்படி என்ன க்ஷாத்திரம் வேங்கி மீது?”
“எப்போது கோவிந்தராஜாவுக்குத் துணை போவது என்ற முடிவை அரசர் எடுத்தாரோ, அப்போதே நமக்கெல்லாம் அதன் விளைவு நன்றாக முடியப் போவதில்லை என்று தோன்றியதுதானே. ஆனால், இந்த அளவுக்குத் துருவமஹாராஜா தீவிரமாக இருப்பார் என்று யாரும் கணிக்கவில்லை. அசகாயமாகத் திட்டமிடுகிறார். தனக்கு எதிராகப் போர் புரிவோம் என்று கோவிந்தராஜருக்கு வாக்களித்த நாடுகளுக்கெல்லாம் பிடித்தது சனி”
“கங்கத்தின் மீது, தானே தானையைத் தலைமை தாங்கிச் சென்றவர், நம்மையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை போலிருக்கிறது. அரிகேசரியை வைத்தே ஆட்டி வைத்து விட்டாரே”
“அரிகேசரி சாதாரணமானவன் இல்லை, நினைவில் வைத்துக்கொள். ஒருவிதத்தில் பார்த்தால், அவனை அனுப்பியதால்தான், விஷயம் சுமுகமாக இரண்டாம் பேருக்குத் தெரியாமல் முடிந்தது. துருவராஜரே தலைமை ஏற்று வந்திருந்தால், அரசருக்குப் பெருத்த அவமானம்தான் ஆகியிருக்கும். நாமெல்லாம் இருந்திருப்போமோ என்னவோ?”
“எப்படிச் சொல்கிறீர்கள்? இப்போது என்ன சுமுகமாக முடிந்திருக்கிறது? சின்னப் பெண்ணை, அவ்வளவு மூப்படைந்தவருக்கு வதுவை செய்ய நிர்ப்பந்தப்படுத்துவது அவமானகரம் இல்லையா?”
“வயதில் குறைந்த பெண்ணை மணமுடிப்பது என்பது நம் வம்சங்களில் புதியதா என்ன? பலகாலமாக இருந்து வருவதுதானே. தந்திதுர்க்க ராஜா, தானே மனமுவந்து பல்லவமல்லருக்கு மணம் முடித்தது பார் அறிந்த செய்திதானே? இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக நான் கருதவில்லை”
“வேறு எதைப் பெரிய விஷயமாகக் கருதுகிறீர்கள் அப்பா?”
“இந்தச் சாளுக்கிய, இராட்டிரக்கூடப் பகை என்பதை நாம்தான் இங்கே வேங்கியில் ஊதி ஊதிப் பெரிதாக்கி வளர்த்துக் கொண்டிருக்கிறோம், பிரதாபா. அரிகேசரி சாளுக்கியன்தானே? அவனுடைய தந்தை யுத்தமல்லன், தந்திதுர்க்க ராஜருக்குச் சேவை செய்யவில்லை? அந்தச் சேவையால்தானே, ஓர் இராச்ஜ்ஜியத்தையே தந்திதுர்க்கராஜா அவருக்கு உருவாக்கிக் கொடுத்தார்? அப்படி இராட்டிரக்கூடத்தாரோடு பகைமை பாராட்டவேண்டும் என்று எண்ணியிருந்தால், கோவிந்தருக்குத் துணை செய்கிறேன் என்று முடிவெடுப்பானேன்? தமையனோடு நட்பு செய்யலாம், தம்பியோடு பகைமையா? இது ராஜாங்கச் சாதுரியம் அன்று. என்னைப் பொறுத்தவரை, அரிகேசரிக்கும் இந்தப் பகையைப் பெரிதாக்கும் எண்ணமில்லை. அவனுக்கு, வேங்கி மண்டலமும் தன்னைப்போலவே இராட்டிரக்கூடத்தோடு நட்பு பாராட்டும் தேசமாக இருக்கவேண்டும் என்று ஆசை. வாதாபி சாளுக்கியப் பேரரசு என்ற ஓரரசு இனி இல்லை என்பதை நாம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். அது முடிந்தகதை. அப்படிப்பட்ட பெரும் அரசையே, தவிடு பொடியாக்கினார்கள் என்றால், இராட்டிரக்கூட வல்லமை பெரிதுதான் என்று ஒப்புக்கொள்வதுதானே விவேகம்? வேங்கியால் மட்டும் அதை எதிர்த்து நின்றுவிட முடியுமா? எதிர்த்து நிற்க, இது காலமுமன்று. அதற்கான தலைமையும் நமக்கில்லை. நமக்கு அடுத்த அரசன், கைக்குழந்தை. அப்படியிருந்தும் விடாப்பிடியாக எதிர்ப்பேன் என்று நின்றால், அழிவுதான் நிச்சயம். மூசிப் போரில் நாம் பணிந்து போகவில்லையா? இப்போது மட்டும் எதிர்ப்பானேன்?”
சோமயாதித்தர் தந்தையின் கோபத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். அவர் சொல்வது எல்லாம் மிகச்சரி என்று தோன்ற, தந்தையைப் பற்றிய பெருமை உள்ளத்திலே பூரித்தது.
“அரிகேசரி எப்படிச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்தான் என்கிறீர்கள்?”
“அரிகேசரிக்குத் துருவராஜா முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறாராம். என்ன வேண்டுமானாலும் முடிவு செய்யலாம். ஆனால், உயிரிழக்க வைக்கக்கூடாது. வேங்கியின் அரசர், வாழ்ந்துகொண்டே, இந்தத் தோல்வியை அனுபவிக்க வேண்டும். சிவமாறனைப் போலப் பிடித்துக் கொண்டு வா என்றுதான் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. இந்த வேங்கி மண்டலத்துக்கு இன்னொரு முறை, இராட்டிரக் கூடத்தை எதிர்த்து நிற்கத் துணிவு வரக்கூடாது. அப்படி எதிர்த்தால், என்ன நடக்கும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். அவ்வளவுதான் துருவராஜாவுக்கு வேண்டியது. அரிகேசரிக்கு வேங்கியை அவமானப்படுத்தி, இதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதை விட, அரவணைத்துக் காட்ட விருப்பம். அவர் யோசித்து நடத்திய திட்டம்தான் இந்த விவாஹம். துருவருக்குப் பட்ட மகிஷி இல்லை. வேங்கியை, அரியணை உறவு மூலமாக, எப்போதும் இராட்டிரக் கூடத்துக்கு இணக்கமாக இருக்கும்படிச் செய்துவிட்டார். பெரிய சாணக்கியத்தனமான திட்டம்.”
“ஆமாம். யாருமே கனவில் கூட யோசித்திருக்க மாட்டார்கள். பாண்டித்தியமும், சாஸ்த்ர ஞானமும், வீரமும் சேர்ந்து இருக்கும் அரசன், மிகவும் வல்லமை படைத்த எதிரி ஆவான். திட்டம் சாணக்கியத்தனமானதுதான், ஆனால், நம் அரசர் ஒப்புக் கொள்வதைப் பொறுத்துதான் நடைமுறைப் படுத்தியிருக்க முடியும். நல்லவேளை ஒப்புக்கொண்டு விட்டார்”
“அவர் தலைகால் தெரியாமல் சண்டையே வாழ்வு, சுதந்திரமே உயிர்மூச்சு என்று கத்தியைத் தூக்கிக்கொண்டு ஓடும் அரசர் அல்லரே. ஏற்கனவே, சரண் அடைந்ததால், பொருட்சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் தடுத்தவர் அல்லரோ? அரிகேசரி, அரசருக்கு வேறு வழி கொடுக்கவில்லை. நான்கு நாட்களாக அரிகேசரி, தலைநகரத்தில்தான் இருக்கிறானாம் தெரியுமா உனக்கு? எங்களுக்கே தெரியவில்லை, ஊருக்கு வெளியே, வெளி உலகத்தைப் பார்க்காமல், இரவு எது பகல் எது என்று தெரியாமல், உருக்கு ஆலையே கதி என்று கிடந்த உனக்கு எப்படித் தெரியப் போகிறது” சிரித்தார் சோமயாதித்தரின் தந்தை.
“என்ன சொல்கிறீர்கள்! வேற்று நாட்டு அரசன், நம் தலைநகரிலா? எப்படி யாருக்கும் தெரியவில்லை?”
“உயிரோடு பிடித்து வரச்சொல்லி இரட்ட ராஜா ஆணையிட்டிருந்தார் அல்லவா? அதற்கும் ஆயத்தமாகத்தான் வந்திருக்கிறான் அரிகேசரி. அவன் மட்டுமன்று. பல நாட்களாக, அவனுடைய படையினர், மாறுவேடத்தில், பல இடங்களில் ஊடுருவி இருந்தார்களாம். அரசர், இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டிராவிட்டால், அரை நாளில் அவரைச் சிறைப் பிடித்து, அந்தப்புரத்தைக் கைப்பற்றிக் குழந்தையோடு காராக்கிருகம் அடைக்கச் சித்தமாக இருந்திருக்கிறான்.”
வாயடைத்துப் போனார் சோமயாதித்தர். இதெல்லாம் ஒன்றுமே தெரியாமல் வாள் உருவாக்குவதே வாழ்க்கை என்று இருந்திருக்கிறோமே, தன்னையே நொந்துகொண்டு சிரித்தார்.
“என்ன சிரிக்கிறாய்? இதெல்லாம் தெரிந்திருக்காமல் பணியே பெரிது என்று எங்கோ அடைந்து கிடந்தோமே என்று உன்னையே நொந்து கொள்கிறாயா?”
“அப்பா! .. எப்படி இப்படிக் கணிக்கிறீர்கள்? அதேதான். வெட்கமாக இருக்கிறது”
“உன்னை ஏன் நொந்து கொள்கிறாய்? இத்தனை ஒற்றர் படை, இவ்வளவு அறிவு ஜீவிகள், அமைச்சர்கள் சுற்றிப் புடைசூழ அமர்ந்திருக்கும் அரசருக்கே தெரியவில்லை.”
“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது?”
“எனக்கு மட்டும் எப்படித் தெரிந்திருக்கப் போகிறது? அந்த அரிகேசரி, நேற்று இரவு, கணிகை வீட்டில் நடனம் பார்த்துக்கொண்டு களித்துக் கொண்டிருந்த ஸாமந்தர் ஒருவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு போய்க் காட்டில் வைத்து, இந்த விஷயத்தை எல்லாம் சொல்லியிருக்கிறான். அரசர் ஒப்புக்கொள்ளாவிட்டால், என்ன ஆகும் என்று போய்ச் சொல் என்று விடுதலை செய்ய, அவர் ஓலமிட்டுக் கொண்டே நள்ளிரவில் வந்து, அரசரை எழுப்பிச் சொல்லியிருக்கிறார். அரசர் ஒப்புதலை, இன்று காலை, உதயத்துக்கு முன்பே, கோட்டையில், இரண்டு கொடிகளை ஏற்றிச் சங்கேதம் செய்யச் சொல்லியிருக்கிறான். அரசர், செய்யவில்லை”
“ஓ! அப்புறம்?”
“ஒரு முஹுர்த்தம் கழித்துக் கோட்டை வாசலில், ஒரு குதிரை ஓடி வந்தது அதன் முதுகில் இரத்தம் சொட்டச் சொட்ட இராணுவ மந்திரியின் பிரேதம். உடல் சூடு கூடக் குறையவில்லை.”
“சிம்மநாதரா?”
“ஆம். அவருடைய கவசத்தில், ஓர் ஓலையில், ‘தாமதம் தகவன்று’ என்று ஒரு செய்தி. அடுத்த நாழிகைக்குள் கொடிகள் கோட்டைக் கம்பத்தில் ஏறிவிட்டன. உடனேயே அரிகேசரி, சிறுபடையோடு வந்து அரசரைச் சந்தித்துத் திருமணத்தை முடிவு செய்துவிட்டான்.”
“அப்படியென்றால் துருவராஜருக்கே இன்னும் விஷயம் தெரியாதா?”
“முன்னமேயே இதைப்பற்றி விவாதித்திருக்கலாம். விஷ்ணுவர்த்தன ராஜா ஒப்புக்கொண்டு விட்டார் என்ற செய்தி அவருக்கு இன்றுதான் புறப்பட்டிருக்கும்.”
“ஐயயோ! இப்படி ஒருதலைப் பட்சமாக, முடிவு எடுத்துவிட்டு, அதை நம்பி, அரசகுமாரியை அனுப்புவது சிலாக்கியமானதா? ஏன் அங்கிருந்து ஒப்புதல் வரும்வரை காத்திருக்க கூடாது?”
“அரசர் சொல்லிப் பார்த்தார். அரிகேசரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இன்று முடிவு, நாளை பயணம். இல்லாவிட்டால், போர். நேரம் கடத்தினால், மன்னர் மனம் மாறிவிடலாம் என்ற அச்சமாக இருந்திருக்கும். தனக்கு வெற்றிதான் என்பதில் அரிகேசரிக்கு ஐயம் இல்லை. சேதமின்றி, நீண்ட காலத் தீர்வுக்கு முயல்கிறான் என்று தோன்றுகிறது. அதனால்தான், நான் சொன்னேன், அரிகேசரியால்தான் விஷயம் இப்படிச் சுமுகமாக முடிவடைகிறது என்று. சரி, இதெல்லாம் இருக்கட்டும். நீ பயணத்துக்குச் சித்தமாகிக் கொள். போய்க் குளித்துவிட்டு வா.”
“இதோ போகிறேன். அதற்கு முன்னால் ஒரு விஷயம் கேட்கவேண்டும். நீங்கள் ஏன் என்னோடு வரவில்லை? நான் எப்போது திரும்புவேனோ தெரியாது. உங்களை யார் வயதான காலத்தில் பார்த்துக் கொள்வார்கள்?”
“இனிமேல், நான் ஒரு புது நாட்டுக்கு வந்து, அங்கு வசிக்க முடியும் என்று நினைக்கிறாயா? இங்கு எனக்கு எல்லோரையும் தெரியும். அரசருக்கும் நீ செய்யும் தியாகம் புரியும். நிச்சயம் மதிப்போடு என்னை நடத்துவார்கள். அதில் சந்தேகமே கொள்ளவேண்டாம். ராஜமருத்துவம் நடக்கும், கவலைப்படாதே. இரண்டு மாதப் பயணத்தையெல்லாம் தாங்கும் அளவுக்கு இந்த உடல் இல்லை.
“ஆயுதசாலையை யார் கவனித்துக் கொள்வார்கள்?”
“ஹா ஹா ஹா “ இடிச்சிரிப்பு சிரித்தார் பெரியவர். “அரிகேசரியின் படையின் அளவையும், அவர்கள் கொண்டு வந்திருக்கும் படைக்கலன்களைப் பற்றியும் எல்லோரும் பேசுவதைக் கேட்டால், நம் ஆயுத சாலையின் இருப்பெல்லாம் குழந்தை விளையாட்டுச் சாமான்கள். சீக்கிரமே உலைகளை மூடிவிடுவார்கள், பார். ஒன்று இனிமேல் அங்கே வேலையே இருக்காது, இல்லை இராட்டிரக்கூடப் படைகளுக்காகத்தான் இனி இரும்பும் தாமிரமும் அங்கே உருகும். நீ புறப்படுகிற வழியைப் பார்.”
“வழியில் ஆபத்து இருக்குமா? என்ன பேசிக்கொள்கிறார்கள்?”
“முதலில் நீங்கள் போதனம்தான் போகிறீர்கள். அங்கே அரச விருந்தினராகச் சில நாள் சிரமபரிகாரம் செய்துகொண்டு பிறகு, மயூரகண்டி நோக்கிப் பயணம். அரிகேசரி வழியில் எல்லோருக்கும் ஓலை அனுப்பிவிட்டான். இது ஓர் இரகசியப் பயணம் அல்ல. இராட்டிரக்கூட இராணியாக ஆகப் போகிறவள் செல்கிறாள் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் செல்லப்போகிறான். எதிர்க்க ஓர் ஆள் இல்லை.”
“கொள்ளையர்கள்?”
“கொள்ளையர்களா? கனவில் கூடத் தாக்க நினைக்க மாட்டார்கள். கோதவரியைக் கடந்து தண்டகாரண்யத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு, விதர்ப்பத்தின் வழியாக அப்படியே போய்விட வேண்டியதுதான். எல்லாப் பகுதிகளும் இராட்டிரக்கூடக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இராட்டிரக்கூடத்தின் வருங்கால இராணி போகிறாள் என்று அதனால்தான் பகிரங்கமாகப் பவனி. சிறப்போடு செல்வீர்கள். நான் உனக்காகப் பூஜைக்குப் பேழை ஒன்று செய்து வைத்திருக்கிறேன். குலமூர்த்தத்தை அதில் இப்போதுதான் பண்டிதர் வந்து பிரதிஷ்டை செய்துவிட்டுப் போனார்”
“குலமூர்த்தியையா எடுத்துக்கொண்டு போகச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு இங்கே வேண்டாமா?”
“இனி உன்னோடு இருப்பதுதான் சால்பு. அவரைப் பட்டினி போடாதே. பிரதாபனுக்கும் ஒரு தனிப்பேழைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நர்மதேஸ்வர லிங்கம். ராஜபண்டிதரே இன்று மாலை ஆஹ்வானம் செய்து, இரவு சந்நிதியிலேயே வைத்துவிட்டு, நாளை மீண்டும் அரசகுமாரிக்காக நடத்தும் விசேஷப் பூஜையில் வைத்து அநுஷ்டானங்களைச் செய்துவிட்டு எழுந்தருளச் செய்வார். அவனுக்கு இன்னும் நியம நிஷ்டைகள் செய்ய விரதம் செய்துவைக்கப் படவில்லை ஆதலால், நீயே அதற்கும் பூஜை செய்துகொண்டிரு. வழியில், கோதவரியில், ஒரு நல்ல முஹுர்த்தத்தில் விரதம் செய்துவை. அரண்மனைப் பண்டிதரும் கூடவே வருகிறார். அவரை வைத்தே செய்துவைத்து விடு. எல்லாம் நல்லபடியாக நடக்கும். அந்தப் பிறைசூடி பார்த்துக் கொள்வார். போ போ. நேரமாகிறது. குளித்துவிட்டு வா.”
வந்தபோது இருந்ததைவிடச் சற்றுத் தெளிந்த மனத்துடன் நீராடச் சென்றார்
சோமயாதித்தர்.
***** ***** ***** ***** ***** *****
“அந்தப் பயணம், என் வாழ்க்கையைத் தடம் புரட்டிப் போட்டு விட்டது, விநயா! இதுவரை, இவையெல்லாம் என்னுடையவை, இவற்றால்தான் நான் இதுவரை வாழ்ந்தது வரையறுக்கப்பட்டது, இனி வாழப்போவதும் வரையறுக்கப்படும் என்று எவற்றையெல்லாம் நான் என்னுடைய வாழ்க்கைக்கு முக்கியமானதாக நினைத்துக் கொண்டிருந்தேனோ, அவற்றையெல்லாம் மீண்டும் ஒருமுறை பரீட்சை செய்து பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. நான் சேமித்து வைத்திருந்த பொருட்கள், என்னுடைய மொழி, என் சுவட்டறிவு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், என்னுடைய நட்புக்கள், உறவுகள், என்னுடைய சூழல், என்னுடைய தொழில், என் கிராமம் என்பனவற்றையெல்லாம் அடியோடு விட்டுவிட்டுப் போகவேண்டிய நிலைமை. திரும்பிவருவேனா என்றே தெரியாது. வந்தாலும் எப்போது திரும்பிவருவேன், அப்போது இங்கே யார் யார் இருப்பார்கள், இந்த ஊரே இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன். எவையெவற்றை என்னுடன் எடுத்துக்கொள்ள வேண்டும், அவை நிஜத்தில் முக்கியமானவைதானா என்று முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதுவரை நான் உருவாக்கி வைத்திருந்த பல உறவுகள், உடைமைகள் அன்றைய அரைநாளில் கழன்று கொண்டன. எவையெவற்றைக் கையில் எடுத்துக் கொண்டுசெல்ல வேண்டும் என்று பார்த்தபோது, சுவடிகளும், சுத்தி செய்துகொள்ளத் தேவையான சில பொருட்கள், பூஜைப்பேழை மற்றும் மாற்று உடைகள் மட்டுமே தங்கின. நான் மறுபிறவி எடுக்கிறேன் என்று தோன்றியது.
“வழியில் போதனத்திலும், பிரதிஷ்டானத்திலும் தங்கினோம். எங்குச் சென்றாலும் வரவேற்பும் கொண்டாட்டமும்தான். மயூரகண்டிக்குப் போய்ச்சேர்ந்தபோது, வேங்கி என் மனத்தின் நினைவுக்குவியல்களில் மிகப்பின்னால் போய்விட்டிருந்தது.”
“என்ன ஓர் அற்புதமான அனுபவத்தை விவரித்திருக்கிறீர்கள்! சீலமஹாதேவியாரின் நிலை எப்படியிருந்தது?”
“மெல்ல மெல்ல நிஜத்தின் பரிணாமம் அவளையும் சூழ்ந்துகொண்டது. ஒரே முலைப்பாலுண்டு, பாலிய சிநேகிதியாகவும், சக உதரத்தினள் போலவும் வளர்ந்தவள், இன்று ஒரு பெரிய ஸாம்ராஜ்ஜியத்தின் அரசி என்ற நிலை எனக்கு உறைக்கவே நிறைய காலம் பிடித்தது. ஆனால் ஒன்று சொல்வேன், அறிவு முதிர்ச்சி என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சமயத்தில் ஏற்படுவதில்லை என்று அப்போது அறிந்துகொண்டேன். எங்கள் இருவருக்கும் ஒரே வயதுதான். ஆனால், அவள் மிகப்பெரியவள் போல மாறிவிட்டாள். அவள் யோசித்தவிதமும், மற்றவர்களின் குணங்களைக் கணித்து அவர்களோடு பழகிய விதமும், தன்னுடைய பெருமையை நிலைநாட்டிக் கொண்டவிதமும் எங்கோ இருந்தது. நான் அதே உரப்பாகவும், செவ்வையற்ற விடலையாகவுமே இருக்க, அவளோ நயப்பாடும் நாகரிகமும் ஒருங்கு திரண்ட இமயமாக மாறிக்கொண்டாள்.” பிரதாபர் அன்றைய நினைவுகளில் மூழ்கினார்.
“விவாஹத்துக்கு விஷ்ணுவர்த்தனரும் அரசியாரும் வந்துசேர்ந்தார்களா?”
“ஆம். விவாஹம் விமரிசையாக நடந்தது. அதற்குப்பிறகு, எங்களுக்கு அரண்மனைக்கு அருகிலேயே இடம் தந்தார்கள். தந்தைக்கு வாள் பயிற்சிக் கூடத்தில், ஆசிரியராக வேலை கிடைத்தது. தாய் அரசியோடு அந்தப்புரத்தில் சீலதேவியோடேயே தங்கினாள். என்னைக் கல்விக் கூடத்துக்கு அனுப்பினார்கள். மஹாஸாமந்தர்கள், விஷயாதிபதிகள், அமாத்தியர்கள் போன்றோருடைய புதல்வர்கள் படிக்கும் பாடசாலை. ஏற்கனவே, என் தந்தையிடம் கற்றுக் கொண்டது பேருதவியாக இருந்தது. இல்லாவிட்டால் என்னால் சமாளித்திருக்க முடியாது. நான் அங்குக் கற்றுக்கொண்டது மிக அதிகம். இராட்டிரக்கூடத்தின் கல்வி மற்றும் பயிற்சி முறை, மிக மேன்மையான உயரத்தில், இருந்தது. புதிதாக உருவான இராஜ்ஜியம்தான். ஆனால், கிருஷ்ணராஜாவும், தந்திதுர்க்கராஜாவும் கல்வியின் அடிப்படையை உருவாக்கியிருந்த விதத்தைக் கண்டு அரண்டுபோனேன். நான் இங்குப் பத்து வருடத்தில் கற்றதை, அங்கு மாணவர்கள் ஓரிரண்டு வருடங்களில் கற்றுக்கொண்டார்கள்.”
“நானும் பார்த்திருக்கிறேன். மன்னைக்கடக்கம் எப்போதும் அறிவுத் தேடலிலேயே இருப்பது போலத் தோன்றும். இது மயூரகண்டியில் இருந்துதான் விளைந்திருக்கிறது போலிருக்கிறது. அதனால்தான் மஹாவீராசாரியர், அகலங்கபட்டர் போன்றவர்களால் சிந்தை ஸாகரத்தில் மூழ்கி முத்தெடுக்க முடிகிறது.”
“தத்துவார்த்த ராஜவார்த்திகா எழுதியவரைச் சொல்கிறாயா? நான் அதைப்பற்றி இங்கேதான் முதன்முதலில் கேள்விப்பட்டேன்! கேள்விப்பட்டதே ஒரு சுவையான சம்பவம்.”
“எனக்கும் பஸதியில் ஒருநாள் மஹாவீராசாரியார் அதைப்பற்றி உரையாற்றினார். அப்போதுதான் கேள்விப்பட்டுக் கொஞ்சம் படித்தேன். ஐயா, இங்கே ஒரு கேள்வி எனக்கு எழுகிறது. துருவராஜா ஒரு மேரு மலையைப் போலிருந்தால், கற்கர், ஸ்தம்பர், கோவிந்தர், இந்திரர் போன்ற மஹாரதர்களும் அதைச் சுற்றி இருக்கும் வெற்புக்கள் அன்றோ? இப்படி இருக்கும் சூழ்நிலை உங்களுக்கே அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும். சீலமஹாதேவி எப்படிச் சமாளித்தார்?”
“உண்மைதான். அத்தனை பேரும் சுற்றிவரத் துருவராஜாவுடன் அவர் நடந்துவருவதைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கும். ஒரு மானைச் சுற்றிப் பலசிங்கங்கள் நடந்துவருவதைப் போல இருக்கும். வீரர்களாயினும், மிகுந்த பண்பு உடையவர்கள். கோவிந்தராஜர் அதிகம் பேசமாட்டார். முறைப்புத்தான். ஆனால், கற்கராஜரும், இந்திரராஜரும் பழகுவதற்கு எளியவர்கள். அவர்கள் எல்லாம் இப்படி இருந்ததற்குக் காரணம் மஹாராஜமாதா பவகணாதேவிதான்.”
“தந்திதுர்கருடைய அன்னையா? அவர் ஜீவித்திருந்தாரா?”
“ஆம். மிக மூப்படைந்திருந்தார். கால்வலுக்குறைந்ததால், மற்றவர் தோள் பற்றித்தான் வருவார். ஆனால், கண்ணின் தீக்ஷண்யம் சற்றும் மங்காதவர். அவரிடம் அனைவருக்கும் அபார மரியாதை. பெரிய சிவபக்தை. அந்தணர்களுக்கு அத்தியந்த மரியாதை தருபவர்.”
“நான்கு இலட்சம் கிராமங்களுக்குப் புதல்வர் வாயிலாகத் தானம் அளித்தவராயிற்றே!”
“ஆமாம். பன்மதச் சாத்திரங்களும் அறிந்தவர். அவருக்குச் சீலையைப் பார்த்ததும் மிகவும் பிடித்துப்போய்விட்டது. ஏறக்குறைய தன்னுடைய வாழ்வும் இப்படித்தானே திடுமென ஒரு நாள், பெரிய திருப்பத்துக்கு உள்ளாகியது என்று நினைத்தாரோ என்னவோ, வந்த நாள்முதல், அவர் சீலாதேவிக்கு, ஒரு மகத்தான அரணாக ஆகிவிட்டார். ஒன்றிரண்டு வருடம்தான் உயிரோடு இருந்திருப்பார். ஆனால், அதற்குள் சீலாதேவிக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தித் தந்துவிட்டார். அவருக்குப்பிறகு, அவர் ஏற்படுத்திவிட்ட வழக்கங்கள் அப்படியே தொடர்ந்துவிட்டன. அவற்றால், சீலாதேவிக்கு மிக விரைவில் தன்னுடைய நிலையை நிறுவிக்கொள்ள முடிந்தது.
“அவருக்குத் துணையாக நின்ற இன்னொருவர், கிருஷ்ணராஜாவின் மனைவி. ராஜமாதா. துருவரின் தாய். இரண்டு ஓரகத்திகளும் இருவேறு குணாதிசயங்கள் உடையவர்கள்.”
“ராஜமாதா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவரை எப்படி அழைப்பார்கள்?”
“மகிஷ்மதியைச் சேரந்தவர். புவனத்திரய போகவதி. எல்லோரும் அவரை புவனமாதா என்றுதான் அழைப்பார்கள். கணவரைப் போலவே சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். அடிக்கடி, ஏலபுரி கிருஷ்ணேஸ்வரத்துக்குச் சென்றுவிடுவார். அளந்துதான் பேசுவார். ஆனால், கனிவுடைய முகம். மெத்த ஞானம் உள்ளவர். பண்டிதை. ஒருமுறை வேங்கியின் ஒரு பண்டிதர், அவருடன் பர்த்ருஹரியின் தர்க்க விஷயங்களைப் பற்றி உரையாடும்போது, அவருடைய ஆழ்ந்த ஞானத்தைக் கண்டு வெலவெலத்துப் போய்விட்டார்.”
“அடடா! சொல்லுங்கள் சொல்லுங்கள்”
“நீ சொன்னாயே, ஆச்சார்யர் அகலங்க பட்டர்? அவர் அடிக்கடி புவனமாதாவைச் சந்தித்துப் பேசுவாராம். சமண மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கிருஷ்ணராஜாவும் சரி, ராணியும் சரி, ஒதுக்கி வைத்ததில்லை. தானங்களும் உதவிகளும் சைவமதத்தைப் போலவே சமணத்துக்கும் அளித்துவந்தனர். இராட்டிரக்கூடப் பெண்களைப் பொறுத்தவரை, அரியணையைச் சேர்ந்தே நிர்வகிப்பது வழக்கம். முடிசூட்டும்போது, இவன் அரசன், இவனுக்கு இவள் பட்டமகிஷி என்று இல்லாமல், அரசனும் அரசியும் மஹிஷ மஹிஷிகள் என்று இணையாகவே ஆஹ்வானம் செய்யப்படுவார்கள். பொதுவாக தானப் பட்டயங்கள், ராணிக்காக வழங்கப்படும்போது, அவருக்காக அரசர் வழங்கினார் என்றுதான் எழுதப்படும், இல்லையா? இராட்டிரக்கூடத்தில், அரசி, தன்னையே உரிமையுள்ளவளாகக் கருதிக்கொண்டு, தன்னுடைய பெயரிலேயே தானத்தில் கையொப்பம் இடுவாள்.
“அப்படி, பரமேஸ்வரி பரமபட்டாரிக்கா புவனத்திரய போகவதி என்றே இவர் சாஸனங்கள் எழுதப்பட்டன. சீலாதேவியும் இப்படிக் கையொப்பமிட்டுத்தான் பின்னாளில் கொடைகள் வழங்கினாள். வேங்கியில் இந்த வழக்கத்தை நீ காணமுடியாது. நிறைய சாஸனங்கள் உனக்கு இராட்டிரக்கூடத்தில் இப்படிக் காணக்கிடைக்கும்.”
“ஆஹா! பெண்களுக்கு இவ்வளவு அதிகாரமா? ஒரு விதத்தில் பார்த்தால், சீலாதேவியார் அதிர்ஷ்டம் செய்தவர்தாம்”
“ஆம், எனக்கும், நாள் செல்லச் செல்ல அதுதான் தோன்றியது. புவனமாதா, பர்த்ருஹரியைக் கரைத்துக் குடித்தவர். அகலங்க பட்டத் திகம்பரரிடம் நேரிடையாகப் பிரத்தியட்சம், பிரமாணம், மதிஞானம் பற்றிய அவருடைய விளக்கங்களைக் கற்றறிந்தவர். முன்னே சொன்னேனே, அந்த வேங்கிப் பண்டிதர் ராணியைச் சந்தித்தபோது, நானும் கூட இருந்தேன். அவரைப் பற்றி ராணியார் அறிமுகம் கேட்க, அவரும் பெருமையுடன், தான் தர்க்கம் நியாயம் படிப்பதைச் சொன்னார். அத்தோடு வாளாவிருந்திருக்கக் கூடாதா? சமணத்தில் பிரதியட்சத்தை எப்படித் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள், புலன்களால் வரும் ஞானத்தைச் சமணம் எடுத்துக் கொள்ளவில்லை என்றெல்லாம் பேசினார். பொறுமையாகக் கேட்ட ராணி, அதற்கு அகலங்கர் சமாதானம் சொல்லியிருக்கிறாரே என்று சொன்னதும், பண்டிதர் சுருதி இறங்கிவிட்டது. இவர் அகலங்க பட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஐயோ பாவம் என்று இரக்கப்பட்ட ராணி, அவருக்குப் பூர்வ மீமாம்சையின் சாராம்சமாகக் குமரில பட்டரும், பிரபாகர பட்டரும் கூறுவதை, பர்த்ருஹரி சொன்னதோடு வேறுபடுத்திக் காட்டிவிட்டுப் பிறகு அகலங்கர் மற்ற சமணத் தர்க்க நூல்களோடு எப்படி மாறுபடுகிறார் என்று விளக்கினார். சொல் அத்துவிதம் பற்றி உதாரணத்துடன் அவர் விளக்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு கூட்டமே கூடிவிட்டது. நான் மறக்க முடியாத சம்பவம் அது.” – பிரதாபர் ஆனந்தமாகச் சிரித்தார். “அந்தப் பண்டிதர், அதற்குப் பிறகு, மயூரகண்டியில் இருந்தவரை வாயையே திறக்கவில்லை. மிகவும் நொடுங்கிப் போய்விட்டார்.”
“ஆஹா! என்ன ருசிகர சம்பவம்!” விநயனும் சேர்ந்து சிரித்தான்.
“நான் அங்கே இருக்கும்போது, அடிக்கடி, பவித்தகையில் இருந்து பண்டிதர்கள் வருவார்கள். சதஸ் நடக்கும். இதெல்லாம் துருவராஜாவிடம் அனுமதி கேட்டு, அவருடைய முன்னிலையில் செய்யப்படுவதில்லை. எப்படிச் சில ஸ்ரீமந் நாராயணன் கோவில்களிலும், பரமேஸ்வரர் கோவில்களிலும் ஜகன்மாதாக்களுக்கு ஸந்நிதி தனியாக அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றனவோ, அதுபோல, இந்த நிகழ்ச்சிகள் ராஜமாதாவின் பிரத்தியேகக் கட்டளைப்படி, அவருக்காக நடக்கும். அவரவர்கள் சௌகரியப்படி ஆண்கள் வந்து கலந்து கொள்வார்கள்.”
“கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. பவித்தகை என்றீர்களே, கர்ணாபுரி விஷயத்தில் இருக்கும் தங்கிப் படிக்கும் பாடசாலையா?”
“அதேதான். பல நாடுகளில் இருந்தும் மாணாக்கர்கள் வந்து படிப்பார்கள். சுபந்து, பாணகவி போன்றோருக்குச் சமமான பண்டிதர்களைப் போஷித்த பாடசாலை அது. மலக்காபுரம், காஞ்சி, ஸ்ரீமாலா இவற்றைப் போல.”
“உங்களுடைய வாழ்வு வேங்கி மற்றும் இராட்டிரக் கூடத்தோடு, பின்னிப் பிணைந்து விட்டிருக்கிறது. அப்பப்பா! என்ன ஒரு அனுபவம்!”
“ஆம். அதனால்தான், எனக்கு இரு நாடுகளின் நிலைமையும் பற்றிச் சொல்ல முடிகிறது.
சரி, இன்று இத்தோடு போதும். மறுபடியும் நேரம் கிடைக்கும்போது சந்திப்போம். சொல்லி
அனுப்புகிறேன். போய்வா” என்று விடைகொடுத்தார் பிரதாபர்.
No comments:
Post a Comment