வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. கூடத்தில் அமர்ந்துகொண்டு சத்திரத்தில் தங்கியிருந்த ஒரு யாத்திரியோடு பேசிக்கொண்டிருந்தான் விநயன். தேவநாதய்யா உள்ளே நுழைந்தார்.
“இதோ வந்துவிட்டாரே” என்றார் யாத்திரி.
“என்ன விஷயம்?”
“ஒன்றுமில்லை. இங்கே பொழுதுபோக்குக்காகப் படிப்பதற்கு ஏதாவது சுவடிகள் இருக்கிறதா என்று பேசிக்கொண்டிருந்தோம்.”
“உள்ளே பண்டாரத்தில் இருக்கின்றன. அதிகமில்லை. வருபவர்களும் கேட்கிறார்கள். நிரந்தரமாக ஒரு கோப்புமுறைக்கு ஏற்பாடு செய்தால் எல்லாரும் படிப்பார்கள்தான். செய்யப் பார்க்கிறேன். வாருங்கள், இருப்பதைக் காண்பிக்கிறேன். டேய், முத்தா, அந்தப் பந்தத்தை எடுத்துவா”
ரேழியில் நடந்து, நடையின் இறுதியில் தெற்குப் பார்த்தவாறு, திரையால் மூடப்பட்டிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். திரையை விலக்கினார். கதவு, ஒரு கொளுக்கியால் நிலையோடு மாட்டப்பட்டிருந்தது. கொளுக்கியைப் பிடித்திழுத்ததும், ‘கிளாங்’ என்று சங்கிலி அவிழ்ந்து தொங்கியது. பெரிய கதவுகள். வலுவோடு இரண்டுபேர் உள் பக்கமாகத் தள்ள, ஒரு பக்கக் கதவு திறந்தது. முத்தன் எடுத்துவந்த பந்தத்தை, உள்ளே ஒரு சுவரில் மாடப்பிடியில் செருகினார். கதவைத் திறந்ததும் பூச்சி வராமல் இருக்க உள்ளே உருட்டி விடப்பட்டிருந்த குளிகைகளின் நெடி அடித்தது. உள்ளே இரண்டு பெரிய மரப்பெட்டிகள் பூட்டப்பட்டிருந்தன. இடுப்பில் இருந்த கொத்தில் இருந்து, ஒரு குழற்றிறப்பைத் தேர்ந்தெடுத்து முத்தனிடம் கொடுத்தார்.
“பெட்டிகளைத் திற. ஒரே தாழ்க்கோல்தான் இரண்டுக்கும்”
ஓர் ஆள் எளிதாக உள்ளே இருக்கலாம், அவ்வளவு பெரிய பெட்டிகள். மூடியைத் திறக்க இரண்டுபேர் வேண்டியிருந்தது. உள்ளே நிறைய ஓலைச் சுவடிகள். பெட்டியின் இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை.
“தூக்கு விளக்கு எடுத்துவா”
துளைகளுடன் மூடப்பட்டத் தொங்கு கைவிளக்கை எடுத்துவந்து, முத்தன் மெல்லப் பெட்டிக்குள் இறக்கினான். அடிவரை இருந்த ஓலைச் சுவடிகளைத் தொடக் கையெட்டவில்லை அவனுக்கு. மேலுக்காக இருந்த ஓலைச் சுவடிகளைப் புரட்டினான்.
“பெட்டிக்குள் இருந்தால், எடுத்துப் பார்த்துத் தேடுவது கடினம். கூடத்தில் ஏதாவது மரவானம் போல அமைத்து அதில் சிலவற்றை அடுக்கி வைக்கலாம். அந்த ஏந்தானத்தில் சிலவற்றை ஏற்றிவிடுவோமே?” என்றான் விநயன்.
“இப்போதே செய்து விடலாம். அந்த இரண்டு தட்டுப் பலகைகளும்
வெறுமேதானே இருக்கின்றன. முத்தா, ஏணியை எடுத்துக்கொண்டு வா”
முத்தன் கொண்டுவந்த ஏணியில் தேவநாதய்யாவே ஏறினார். முத்தன் பெட்டிக்குள் குதித்தான். யாத்திரி, விளக்குப் பிடித்தார். இவர்கள் செய்வதைப் பார்த்து இன்னும் இரண்டு பேர் உதவிக்கு வந்தார்கள். கிடுகிடுவென்று அடுத்த ஒரு நாழிகையில், ஒரு பெட்டியில் இருந்த சுவடிகளை எல்லாம் மேலிருந்த இரண்டு தட்டுப்பலகைகளிலும் அடுக்கி வைத்தார்கள். என்னென்ன சுவடிகள் எந்தத் தட்டில் என்பதை இரண்டு மூன்று ஓலம்போழ்களில் ‘முதல் தட்டு, இடமிருந்து வலம்’ என்று தலைப்பிட்டு விநயன் எழுதிக் கொண்டுவந்தான்.
வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டம், பாதராயணரின்
பிரஹ்ம சூத்திரங்களில் சில நூறு, கௌஷிதிகி உபநிஷத், பகவத் கீதை, விஷ்ணு
ஸஹஸ்ரநாமம், பஞ்சதந்திரம், ப்ருஹத் பராசர ஹோர ஸம்ஹிதை, நாராயண சூக்தம், மஹாபாரதத்தில்
வன மற்றும் விராட பர்வம் என்று கற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்றாற்போல
சுவடிகள் இருந்தன.
“தமிழில் சில கிரந்தங்களைக் காஞ்சியில் இருந்து வரவழைக்கிறேன் என்று குக்கேஸ்வரர் சொல்லியிருக்கிறார். வள்ளுவம் என்று ஒரு நூல் இருக்கிறதாம். அதை அவரே பிரதி எடுத்துக்கொண்டு இருக்கிறார். சமணப்பள்ளியில் நிறைய நூல்கள் இருக்கின்றன. பிருகத்கதா போன்றவை அங்குக் கிடைக்கும். நான் சொன்னால், படிக்கத் தருவார்கள்” என்றார் தேவநாதய்யா.
“நான் சில நூல்கள் சொல்லுகிறேன். எங்குக் கிடைக்கும் என்றும் சொல்கிறேன். வரவழைக்கலாமா?”
“மிக உத்தமம். நையோகிக வல்லபரிடம் சொல்லுங்களேன். அவரே ஏற்பாடு செய்து விடுவார். அவர் மனது வைத்தால் முடியாதது ஒன்றுமில்லை.”
“கண்டிப்பாகச் சொல்கிறேன்” என்றன் விநயன். அப்போது, அறைக்கு வெளியே, ‘விநயாதி சர்மர் இருக்கிறாரா” என்று யாரோ கேட்கும் குரல் கேட்டு, விநயன் அறைக்கு வெளியே சென்றான்.
“உங்களுக்கு இப்போது சௌகரியம் இருக்கும் பட்சத்தில், பாடசாலை வந்து செல்ல முடியுமா என்று அத்தியக்கர் விண்ணப்பித்திருக்கிறார்” என்றான்.
“வாருங்கள் போவோம்” என்று தேவநாதய்யாவிடம் சொல்லிவிட்டு உடனே புறப்பட்டான்.
அத்தியக்கர் கிட்டத்தட்ட பிரதாபர் வயதினராக இருந்தார். “வா அப்பா, வா! உன்னைப்பற்றி வல்லப ஸ்வாமி நிறைய சொல்லியிருக்கிறார். உன்னைப் போன்றவர்கள் இந்த ஊரில் தங்கச் சித்தமானது, எங்களுக்கெல்லாம் பெருமை.” என்று வரவேற்றார்.
அவரை விழுந்து நமஸ்கரித்தவன், “பாக்கியம் எனக்குத்தான் ஸ்வாமிந். என்னையும் ஒரு பொருட்டாக இந்த ஊர் மதிப்பது, என்னுடைய பெற்றோருக்குத்தான் பெருமை.”
“நன்றாகக் கணிதம் செய்கிறாய் என்றும் சொன்னார். குக்கேஸ்வரனுக்கும் உதவுகிறாயாமே, நல்ல காரியம். பாவம் அவன். தனியாளாக இந்த ஊரில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தான். நீ வந்தது அவனுக்குப் பெரும் ஆசு. கணிதமும், இசையும் ஒருங்கே அமையப் பெறுவது பெரும் ஆச்சரியம் அப்பா! ஒன்று தருக்கம். இன்னொன்று அழகு. எத்தனை பேருக்கு இந்தப் பாக்கியம் அமைகிறது! எங்கே ஒரு பாட்டுப் பாடேன். தந்தி ஏதாவது வேண்டுமா?”
“இருக்கிறதா, ஸ்வாமிந்?”
“ஓ! நானும் கொஞ்சம் பாடுவேன். தக்கு ஸ்ருதிதான். அதோ மூலையில் சார்த்தி வைத்திருக்கிறது பார் எடுத்துக்கொள். அந்த ஆரையைப் போட்டு, அதன் மீது அந்தச் சிவப்பு விரிப்பை விரித்துக்கொள். தரை, கரடு”
ஆரையை விரித்துப் போட்டு, அமர்ந்தான். எதிரே ஓர் அழகான ஸரஸ்வதி ஓவியம். அவளுடைய காருணியமான கண்களைப் பார்த்ததுமே அவனுக்குத் தன் தாயின் நினைவு வந்து நெகிழ்ந்தான். மெல்ல ஆதார ஷட்ஜத்தை முனகிக்கொண்டே சுருதி சேர்த்தான்.
அதிகம் மெனக்கெடாமல் சட்டென்று சேர்ந்துவிட்டது. ஒரே சீராக மூச்சைக் கட்டுப்படுத்தி, மேலண்ணத்தை விரித்துச் சற்றும் அலையாமல் மத்தியம ஷட்ஜத்தில் ஓர் ஆவர்த்தனம் நின்றான். சற்று நிறுத்திவிட்டு மீண்டும் ஸ.. என்று துவங்கி, அப்படியே மந்தர பஞ்சமத்துக்கு ஒரு இழை பிறழாமல் வழுக்கினான். இதயத்தில் இருந்து கிளம்பிய ஒலி, அவனை முழுதும் ஆட்கொண்டது. அவனையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அத்தியக்கர், நிமிர்ந்து உட்கார்ந்தார்.
மந்தர காந்தாரம்.. அவனுடைய கழுத்துச் சற்றுக் கீழே குனிந்து, நாபியில் இருந்து புறப்பட்ட காற்றை, ஒரு மூங்கில் குழாயைப்போல் திரட்டிக் கொடுத்தது. மந்தர ஷட்ஜத்தைத் தொடுவானோ?
தொட்டான். அத்தியக்கருக்கு உடல் பூரித்தது. என்ன குரல் இவனுக்கு! வெறும் ஒரு ஸ்வரம், அதன் காத்திரமான கார்வை. இவ்வளவே ஸங்கீதத்துக்குப் போதும் போலிருக்கிறதே!
ஆதார ஸ்ருதிகளைத் தொட்டு, இசைச்சூழலை உருவாக்கி
விட்டபின், ஒரு கீதியைத் தொடங்கினான். தொடங்குவதற்கு முன், அத்தியக்கரிடம்,
“ரக்தகாந்தாரி ஜாதி, ஒரு தேசிய கானம், என்னுடைய குரு உருவாக்கியது. பஞ்ஜாம்ஶா ரித⁴வர்ஜயா” என்று
சொல்லிவிட்டு, ராக மூர்ச்சனையைக் காண்பித்தான்.
க ம ப நி ஸ் க்
க் ஸ் நி ப ம க
ஔடவ ஸ்வரங்கள். காந்தாரத்தில் கானம் துவங்கியது.
ஸு. ர (க ம க)
கம்பீரமாக ஸாதாரண காந்தாரத்தில் துவங்கி, மத்யமத்தைத் தொட்டுச்
சுழற்றி மீண்டும் காந்தாரத்தில் அணைந்தபோது முடிவில் ஒரு குழைவு,
முகுட (க
ம பா)-
மறுபடியும் காந்தாரத்தில்
துவங்கி மத்தியமம் வழியாகப் பஞ்சமத்தைத் தொட்டு அங்கே நின்றபோது, “என்னப்பா எப்படி
இருக்கிறாய் என்று ஒரு விசாரிப்பு’ – இறைஞ்சுபவனும், அருளுபவனும் பரஸ்பரம் பேச்சு
வார்த்தை நடத்திக் கொள்வதுபோல, குழைவும் கனமும், வேண்டுதலும் கம்பீரமும், நெளிவும்
கண்டிப்பும், மாறி மாறி மத்திமயத்திலும் காந்தாரத்திலும் ஒலிக்க, பஞ்சமம் காவல்
காத்துக்கொண்டே கவனித்துக் கொண்டிருந்தது.
க ம க - க ம பா - ம பா ----- ம க ம பா – ம க ஸா – நி ஸ
ஸு. ர - முகுட - மணி --- க³ணார்சித – சரணம் – ம்ம்
ஸு. ர - வ்ருக்ஷகுஸும - வாஸித
– முகுடம் – ம்ம்
நீண்ட மகர ஒற்றின் துவனி, வாய்மூடிய கண்டத்தில் மந்தர கைசிகி நிஷாதத்தின் அசைவோடு, ஷட்ஜத்தில் உருள, விநயனுடைய இசையைத் தான் மதிப்பிடுவதற்காகத்தான் பாடச்சொன்னோம் என்பதை, அத்தியக்கர், மறந்து போனார். இதெல்லாம் வெறும் ஸ்வர ஸாதகமன்று, கேட்பவரின் இதயத்தின் நார்களைச் சுண்டி, உலுக்கி எழுப்பிக் கவனிக்க வைத்து, அடுத்த கணம் சரீரத்தையே மறக்கவைக்கிற இசை. என்ன பாடுகிறான் என்பதெல்லாம் அறிவு சம்பந்தப்பட்ட இரண்டாம் பட்ச விஷயம் அன்றோ? இது செவியில் விழுந்து, உணர்வை அல்லவோ ஒட்டு மொத்தமாகக் கவளீகரம் செய்துவிடுகிறது! அதற்கப்புறம் அறிவாவது சிந்தையாவது? எல்லாமே நாத மயம்தான்!
விநயன் பாடி முடித்துவிட்டு அத்தியக்கரைப் பார்த்தான். அவர் கண்களில் நீர் வழியக் கைகளைக் கோத்து மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அறையின் வாயிலில், சில ஆசிரியர்கள் குழுமியிருந்தார்கள். குக்கேஸ்வரரும் இருந்தார். இவர்களெல்லாரும் எப்போது வந்தார்கள்! குக்கேஸ்வரரைப் பார்த்துப் புன்னகைத்தான். பிரமை பிடித்தவரைப் போல வெற்றுக்குக் கைகூப்பினார். எல்லோரும் நிஜத்தைத் தொலைத்து விட்டிருந்தார்கள்.
அத்தியக்கர் மெல்ல எழுந்து நின்றார். விநயனுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு, தலை குனிந்து கரம் குவித்து, அவனுடைய கரங்களைப் பிடித்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டார். “நீயெல்லாம் ஆசிரியன் அல்லன் அப்பா! அந்தக் கைசிகி நிஷாதத்தை, இரண்டு ஷட்ஜங்களிடயே அணைத்துப் பிடித்தாய் பார், தலைநிற்காத சிசுவை, அதனுடைய அன்னை பிடிப்பதைப் போலவன்றோ, பாதுகாத்துப் போஷித்தாய்! இதையெல்லாம் யாரால் கற்றுக் கொள்ள முடியும்? நீ ஒன்றுமே கற்றுத் தரவேண்டாம். இங்கே வந்து இப்படிப் பாடிக்கொண்டிரு. அது போதும். யார் செவியில் விழுகிறதோ, அவர்கள் பாக்கியவான்கள். இந்த நாத விதை, எந்த நிலத்திலாவது விழட்டும். உன்னைப்போல ஒரு மரம், ஒரு மரம் எதற்கு, ஒரு செடி முளைவிட்டாலும் இந்தப் பாடசாலை புண்ணியம் செய்தது. சுக்லபட்சத் திருதியை இன்றைக்கு. இன்றே பாடசாலையில் சேர்ந்துகொள். நாளையிலிருந்து வகுப்புக்கான வேளை எது என்று ராமசர்மனோடு பேசி முடிவு செய்துகொண்டு வகுப்பை ஆரம்பித்து விடு.” என்றார்.
அவர் முதலில் பேசுவதற்காகக் காத்திருந்த ஆசிரியர்கள், ஒவ்வொருவராக வந்து, அவனுக்கு நமஸ்காரம் தெரிவித்துவிட்டுப் போனார்கள். குக்கேஸ்வரர் உள்பட ஒரு சிலர், அவனுடைய கால்களைத் தொட்டுக் கும்பிட்டு அவனைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்கள். மத்தியான்ன உணவுக்காகச் சத்திரம் வந்தபோது, தேவநாதய்யா, “வாரும் வாரும். பாடசாலையில் எதற்கு அழைத்தார்கள்?” என்று கேட்டார்.
“இசையாசிரியராக நாளை முதல் வகுப்பெடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.”
“அதி உத்தமம். நல்ல விஷயம். வல்லப ஸ்வாமி சொல்லிவிட்ட பிறகு அதற்கு மறுபேச்சு ஏது? அவருடைய அனுக்கிரகாவலோகனம் படிந்த பாதையெல்லாம் செழிப்புத்தான்.”
அவருடைய பேச்சில் அசூயையின் வாசனை அடிக்கிறதா? மையமாகச் சிரித்து வைத்தான். அவர் அடுத்துச் சொன்ன விஷயத்தைக் கேட்டு, அசூயைக்குக் காரணம் இருக்கலாம் என்று பட்டது.
“வல்லப ஸ்வாமியிடமிருந்து செய்தி வந்தது. இன்று இரவு, உங்களிருவருக்கும், ஆற்றில் நீராழி மண்டபத்தில் போஜனத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார். அரிசி நொய்யில், சிறிது உடைத்த பருப்பு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வெந்தை வல்சியாகச் செய்து, மிதமான எண்ணெயில் வதக்கித் தாளிக்கச் சொல்லியிருக்கிறார். உமக்கு உசிதம்தானே? அஸ்தமித்து இரண்டாம் ஹோரை முடிவதற்குள், குவளையில் கற்கண்டிட்டுக் காய்ச்சிய பாலுடன் கொடுத்தனுப்புகிறேன். உம்மை அஸ்தமனத்துக்கு முன்னாலேயே வந்துவிடச் சொல்லியிருக்கிறார். வழி தெரியுமா?”
“தெரியும். ஸ்வாமி தெப்போத்ஸவம் நடக்கும் மண்டபம்தானே? நான் போய்க்கொள்கிறேன்.”
“நல்லது. சாப்பிட வாருங்கள். இலை போடச் சொல்கிறேன்”
என்று சொல்லி அழைத்துப் போனார்.
மாலையில், அஸ்தமனத்துக்கு முன்னாலேயே நீராழி மண்டபத்துக்குச் சென்று விட்டான். காலளவு நீர், இரண்டு கிளைகளாகப் பிரிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த வெய்யிலுக்குக் குளிர்ச்சியாகக் காலை நனைத்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றுவிட்டு, நீராழி மண்டபத்தின் படிக்கட்டில் அமர்ந்துகொண்டான். சற்று நேரத்தில், மேற்கில் சிவப்பேறிய விசும்பில், மூன்றாம் பிறைச்சந்திரன், கலவிக்கு அலங்கரித்துக்கொள்ளும் பெண்ணின் வெட்கமேறிய வதனத்தில் மின்னும் சுபுகம்போல பளீரிட்டான். அதைப் பார்த்து இரசித்துக்கொண்டே இருக்கும்போதே, மங்கவும் தொடங்கினான். அதே சமயத்தில், புரவியொன்றைச் செலுத்திக்கொண்டு வந்து சேர்ந்த பிரதாபர், மண்டபத்துக்கு மேற்கில் நீரில்லாமல் இருந்த திட்டில், குதிரையை நிறுத்தி இறங்கினார். மிதக்கும் தெப்பத்தை நிலைநிறுத்தும் போக்குக் கயிற்றை நுழைப்பதற்காகக் கீழ்ப்படிக்கட்டில் கல்லில் நிறைய இரும்பு வளையங்கள் அடித்திருந்தார்கள். விநயன் எழுந்துபோய் அந்த வளையங்களில் ஒன்றில், புரவியைக் கட்ட உதவிசெய்தான்.
“இன்று பாடசாலைக்குப் போயிருந்தாயா? பாடச் சொன்னாரா?” என்று கேட்டபடியே மண்டபத்தின் படிக்கட்டில் அமர்ந்தார் பிரதாபர்.
“ஆமாம் ஐயா. பாடினேன். அவருக்குப் பிடித்திருந்தது. நாளையிலிருந்து வகுப்பெடுக்கச் சொல்லியிருக்கிறார். எல்லாம் தங்களுடைய கருணை. பல வருடங்களுக்குப் பிறகு, என் வாழ்விலும் நல்லது நடக்கிறது”
“எல்லாம் இன்னும் நன்றாக நடக்கும். ஈஸ்வரார்ப்பணம்”. சில லோகாயத விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பிரதாபர் கேட்டார், “கடைசியாக என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?”
“கோவிந்தர் எப்படி அரசர்களுடைய சின்னங்களையெல்லாம் பறித்தார் என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.”
“ஆங்! ஆமாம். பாரதவர்ஷம் முழுவதும் அவருடைய அடித்தடம் பதிந்தது. அவரை எதிர்க்கக் கூடிய அரசர் ஒருவரும் இல்லை. இரட்டபாடி என்னவோ, அதே எல்லையோடு அதே இரட்டபாடியாகத்தான் இருந்தது. ஆனால், அதனுடைய செழுமையும், வீச்சும், வலிமையும், புகழும் விஸ்தாரமாக வளர்ந்தது.”
“மலையுச்சியைத் தொட்டுவிட்டால், அடுத்துக் கீழேதான் இறங்கியாக வேண்டும் என்று சொல்லுவார்கள். கோவிந்தர் காலத்தில் உச்சியைத் தொட்டு விட்டதால்தான், தரைக்கு வந்துவிட்டதோ இரட்டம்? கற்கரை அரசராக ஆக்கியிருந்தால், நிலைமை வேறுவிதமாக ஆகியிருக்கும் அல்லவா?”
“வாஸ்தவம்தான். கற்கராஜா அஸஹாய மனிதர். அவரை ஆயத்தம் செய்தது கோவிந்தராஜாதான். கற்கருக்குக் கோவிந்தராஜாதான் கடவுள், ஆசிரியர், நண்பர் எல்லாமே. கோவிந்தர் தன் தேகம் கீணம் அடையத் துவங்கியதும், இறப்பதற்கு ஓரிரண்டு வருடங்கள் முன்னமேயே கற்கரை மான்யகேடத்துக்கு வரவழைத்துவிட்டார். நிர்வாகத்தில் அவரை நிறைய ஈடுபடுத்தினார். அரசு நிர்வாகத்தில் முனைந்திருந்த அத்தனை மஹாஸாமந்தர்களையும் கற்கர் முன்னிலையில் அடிக்கடி அழைத்து, நேருக்கு நேர் சந்தித்து நிலவரத்தை அறிந்துகொள்வார். அவரையும் கற்கரையும், நானும் பிரத்தியேகமாகப் பலமுறை சந்தித்திருக்கிறேன். சபைகள் கூட்டி, ராஜாங்க நிலவரத்தை நிறைய விவாதிப்பார். அப்படிச் சபைகள் கூட்டும்போது. சில சமயங்களில், எனக்கும் அழைப்பு வரும். நான் நிறைய மந்திராலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். தேகம் சுகவீனம் அடைந்திருந்தாலும், கோவிந்தருக்கு அந்தப் புத்திக் கூர்மையும், அரசாண்மைப் பக்குவமும் கொஞ்சம் கூடக் குறையவில்லை. இறுதிவரை, இமயம் போலவே இருந்தார். அவருக்கிருந்த மனவுறுதியும், பற்றை உதறித்தள்ளும் மனப்பாங்கும், எல்லோருக்கும் எளிதில் சித்திக்காது.
“கடைசி சில திங்கள்களாகவே, அவருக்குத் தன்னுடைய இறுதி நாள் சீக்கிரம் வந்துவிடும் என்று தெரிந்துவிட்டது. ஸத்காரியங்கள் பொற்புடன் பல செய்து, தானங்களும் செய்தார். கோவில்களுக்குக் கட்டளைகள் ஏற்படுத்தினார். தனக்கு அந்தரங்கமானவர்களுக்கும், விசுவாசமானவர்களுக்கும் வாரிக் கொடுத்தார். ஸர்வராஜர் அமோகவர்ஷரைச் சிறுவனாக விட்டுவிட்டுப் போகிறோம் என்ற கவலையால், தனக்குத் தெரிந்த ராஜாங்க நுட்பத்தை எல்லாம் இளவரசருக்குப் புகட்டப் பெரும் பிரயாசை எடுத்துக் கொண்டார். கற்கருக்கும் இளவரசருக்கும் தினமும் கற்பித்தார். இந்த ஆலோசனைகள் சில சமயங்களில் இரகசியமாகவும் நடக்கும். சில சமயங்களில் பட்டத்து ராணிகள், மகள்கள், தளபதிகள், ஒன்றுவிட்ட சகோதரர்கள் எல்லோரும் சூழ்ந்திருக்க, பேரவைகளாகவும் நடக்கும். தன்னுடைய அனுபவங்களையும், பிறருக்கு அதிகம் தெரியாத வரலாற்று நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். வரலாறு தெரியாதவன் அரசுப் பதவியில் அமரக்கூடாது என்பார். ராஜாங்க நுட்பங்கள், நீதிகள், அனுபவங்கள், யுக்திகள், எச்சரிக்கைகள், மனோவிஞ்ஞானம் என்று நான் அங்குக் கற்றது மிக அதிகம்.”
“இப்போது புரிகிறது, உங்கள் உணர்வில் இராட்டிரக்கூடம் ஏன் இப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது என்று.”
பெருமிதத்தோடு புன்னகைத்தார் பிரதாபர். “இளம் வயதில் அரியணை ஏறியவர் அவர், விநயா! அதுவும் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அரியணை. ஏற்கனவே கொடி கட்டிப் பறந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் பகுதிகளைத் தந்திதுர்க்கர் என்பவர் தன்னுடைய சாதுரியத்தினால் இணைத்துத் திரட்ட, அதன் பயனாக உருவாகி, நாளடைவில், அண்டை நாடுகளோடு நடந்த பலப்பரீட்சைகளின் பயனால், கோசம் மிகுக்கப்பட்டு, அப்படிச் சேர்த்து வைத்த கோசத்தை தலைநீவியாக வைத்துத் தன்னுடைய வளப்பத்தைப் பெருக்கிக் கொண்ட நாடு. உருவாகிச் சில பஃது வருடங்களே ஆன நிலையில் நான்காம் தலைமுறையாக, இவர் அரியணை ஏறுகிறார். இடையில் ஒரு சகோதரச் சண்டை வேறு. இருபஃது ஆண்டு காலத்தில், பாரத வர்ஷத்தையே தனக்கு அடிபணிய வைக்கிறார். தோல்வியைக் காணாத மன்னர். கொடுங்கோல் அரசர் அல்லர். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் ஓர் தலைமை உடையவர்! அவரிடமிருந்து நேரில், அவர் வாய்நேர்ந்த விஷயங்களைக் கேட்பது என்பது எல்லோருக்கும் வாய்க்குமா என்ன?”
“ஆமாம் ஐயா. நான் உங்களிடம் கேட்டுத்
தெரிந்து கொள்வது போல. சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னித்து
அவற்றின் அடிப்படையை அறிந்து கொள்ள முயல்பவன்தான் அனுபவசாலி ஆகிறான். அந்தப்
பட்டறிவு ஏற்பட்ட பின்தான், நூலறிவு சாபல்யம் பெறுகிறது. அறிவின் கால் பகுதிதான் ஆசிரியரிடம் இருந்து. கால் பகுதியைக் காலம்தான் கற்றுத் தரும். என்பது சத்திய வார்த்தையன்றோ?” என்ற விநயன்,
கானமாசான்; காற்றம்மால்; காலுடன் உற்றவரால்;
காலமாசான் மீதிக்
கறிவு.
என்ற குறளைக் கூறினான்.
“இது பஞ்சதந்திர ஸ்லோகம் அல்லவோ? ஆசார்யாத் பாத³மாத³த்தே பாத³ம் ஶிஷ்ய꞉ ஸ்வமேத⁴யா | ஸப்³ரஹ்மசாரிப்⁴ய: பாத³ம் பாத³ம் காலக்ரமணே ||? இதைத் தமிழிலும் சொல்லியிருக்கிறார்களா?”
“ஸம்ஸ்க்ருதத்தை வைத்து நான் எழுதியது ஐயா. எனக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம். என் அன்னை வெகுவாகச் சிலாகித்த பாடல்”
“மிக நன்றாக எழுதியிருக்கிறாய்.” என்றவர் கதையைத் தொடர்ந்தார்.
“கோவிந்தராஜா சாதித்ததற்கெல்லாம் மூல காரணம், துருவராஜா அமைத்த அஸ்திவாரம்தான். நிருபமதாரவர்ஷரின் பாதத் தாமரைகளில் எப்போதும் அமர்ந்து தியானிக்கும் பக்தன் நான் என்பார். தந்தையிடம் அபார பக்தி அவருக்கு.
"’எந்தப் பணிக்காக துருவராஜர், என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தாரோ, அதை நிறைவேற்றி விட்டேன். எனக்கு முழுத்திருப்தி. இராட்டிரக்கூடம், இன்று பாரத வர்ஷத்தில், நட்பு அரசர்களால் புகழப்பட்டும், எதிரிகளால் அஞ்சப்பட்டும், ஒரு பேரரசாகப் பிரகாசிக்கிறது. என்னுடைய புகழ் வடக்கில் இமயத்தில் இருந்து, தெற்கில் குமரிவரை, கிழக்கு மேற்கு இரு கடல்களைத் தொட்டுப் பேசப்படுகிறது. மூன்று உலகங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இனி என்ன செய்வதற்காக நான் இந்த உலகில் தங்க வேண்டும்? ஆட்சிச் சுமையை, பேரரசின் பொறுப்பைத் தாங்க ஸர்வன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான்’ என்பார்.
“ஒருநாள், அடுத்து நின்றிருந்த, கற்கராஜரை அழைத்து, ‘சுவர்ணவர்ஷா! மாவீரனே! நீயும் எனக்கு ஒரு மகனைப் போலத்தான். என் மகனைப் போலவே எனக்கு நெருங்கினவன். எப்படி என் தம்பி இந்திரன் எனக்கு வலக்கரமாக இருந்தானோ, அப்படி உன் தம்பி ஸர்வனுக்கு நீ இருப்பாய் என்று எனக்குத் தெரியும். அதிகாரத்துக்கும், அர்த்தமில்லாத பெருமைக்கும் ஆசைப்படாதவன் நீ. ஸர்வன் பிறந்திராவிட்டால், உன்னைத்தான் இந்த அரியணையில் அமர்த்தியிருப்பேன் என்று உனக்குத் தெரியும். என்ன செய்வது? ஸ்ரீபதி, மிகத் தாமதமாகத்தான் என் கோரிக்கைக்குச் செவி சாய்த்துப் புத்திர பாக்கியத்தை அளித்தார். உத்தராபத திக்விஜயத்தை வெற்றியுடன் முடித்துவிட்டு வரும்போது, மழைக்காலம் கழிவதற்காக நான் ஸ்ரீபவனத்தில் பாசறை எடுத்துத் தங்கியிருந்த போதுதான், ஸர்வன் பிறந்தான்.
“'அதுவரை, நீதான் பட்டத்து இளவரசனாக வளர்ந்து வந்தாய். அப்படித்தான் நினைத்து, நானும், உன் தந்தையும் சகல ராஜநீதியையும், போர்க்கலைகளையும், நிர்வாக நுணுக்கங்களையும் உனக்குப் புகட்டி வளர்த்தோம். ஸர்வன் பிறந்தபிறகு, முதலாண் உரிமை என்ற தர்மம் இருக்கிறதே? அவனுக்குத்தான் உரிமை என்று நிச்சயமானதும் நீ இயல்பாக ஒதுங்கிக் கொண்டாய். ஆனால், உன் விசுவாசத்தில் ஒரு சுணக்கத்தையோ, ஏமாற்றத்தையோ காட்டியதில்லை. என் தமையனுக்கு இல்லாத விவேகம், உனக்குச் சிறு வயதிலேயே வந்துவிட்டது. உனக்காகத்தான், இலாடத்தைத் தனி அரசாக ஏற்படுத்தி, உன் தந்தையை அவன் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்த போதும், விடாப்பிடியாகச் சம்மதிக்க வைத்து, அதற்கு முதல் அரசனாக அவனை நியமித்தேன். இன்று, உன் தந்தைக்குப் பிறகு, உன் நாட்டை நீ நிர்வாகம் செய்துவரும் பாங்கு, எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. ஓர் அரசு, எப்படி இருக்கவேண்டுமோ, அதற்கு ஒரு முன்னுதாரணமாக ஆட்சி புரிந்து வருகிறாய்.
“’பாதுகாப்பு, பரிபாலனம் – இரண்டும் ஓர் அரசனுக்கு இரண்டு பக்கங்கள். உன் பாட்டனார் தாரவர்ஷரும், நானும் பாதுகாப்பு என்னும் முதல் பக்கத்தை நிர்மாணிப்பதிலேயே எங்கள் காலத்தைக் கழித்து விட்டோம். தலைநகரையும், அதற்குத் தகுந்த கோட்டையையும் இப்போதுதான் கட்டியே முடித்திருக்கிறேன். என் பாட்டனார் சுபதுங்கர் அகாலவர்ஷர் கிருஷ்ணராஜர் மட்டும் இதற்கு ஒரு விதிவிலக்கு. ஒரு புறம், சாளுக்கியக் கீர்த்திவர்மனோடும், ராஹப்பனோடும், கங்கராஜன் ஸ்ரீபுருஷனோடும் போர். மறுபுறம் ஏலபுரியில் கைலாசநாதருக்கு அப்படி ஒரு கோவில்! எப்படித்தான் அந்தக் கிருஷ்ணேஸ்வரத்தை நிர்மாணித்தாரோ? நான் புரிந்த போரெல்லாம் அவருடைய இராணுவத் திட்டங்களில் இருந்து கற்ற சிறு துளிதான். அவ்வளவு வல்லமையோடு விளங்கிய சாளுக்கியப் பேரரசுக்கு அந்திமக் கிரியைகளைச் செய்து, கீர்த்திவர்மனையும், அவனுக்குப் பிறகு யார் யாருக்கெல்லாம் அரியணை ஏற வாய்ப்பிருந்ததோ அவர்களை எல்லாம் ஒருசேரத் தோற்கடித்து வாதாபி ஆட்சியை நிர்மூலமாக்கினார். இன்று வாதாபி வெறும் வரலாறுதான்.
“’எனக்கு அந்தத் திறமையில்லை. ஆனால், நீ கொடுத்து வைத்தவன், கற்கா!. உனக்கு, ஜனபரிபாலனம், ஜனரக்ஷணம் என்னும் இரு பக்கங்களும் தூங்கலில் சமத்துலையேற்றியது போல வரங்களாகக் கிடைத்திருக்கின்றன. வரங்களே ஆனாலும், இவற்றிற்காக நீ உழைப்பதும் இந்தப் பலனில் சேர்ந்திருக்கிறது. தேவகுலம் ஒன்றுதான் நீ இன்னும் செய்யாத காரியம். சீக்கிரமே அந்த நல்வினையும் உனக்குப் பிராப்தம் ஆகட்டும். சிறு பிராந்தியம் உன்னுடையது. ஆனாலும், உன் சேனையை மீறி எந்த அரசனால் உன் நாட்டைப் பங்கப் படுத்திவிட முடியும்? அப்படி ஒரு வீரத்தை, நாடெங்கும் விதைத்திருக்கிறாய். பாதுகாப்பின் பலத்தினாலேதான் சுபிட்சமும், புதிய படைப்புக்களும் துளிர்விடுகின்றன.’ என்று பாராட்டுவார். கற்கனின் ஆட்சி இப்படி இராமராஜ்யமாக இருந்து வருகிறது என்று அன்றுதான் மான்யகேடத்தில் சகலருக்கும் தெரியவந்தது.”
“இந்தச் கற்கர் சுவர்ணராஜா ஓர் ஆச்சரியமான ராஜா அல்லரோ, ஐயா? துருவரும், கோவிந்தரும் ஓர் அபாரத் தலைமையைக் கொடுத்தார்கள் என்றால், அதிகம் பேசப்படாத இந்தக் கற்கராஜர், அவர்களுக்கு எந்தவழியிலும் குறைந்தவர் அல்லர் என்று தோன்றுகிறது. சிந்தித்துப் பார்த்தால் எத்தனை பேரிடத்தில் நாம் இந்த விவேகத்தைக் காண முடியும்? அமோகவர்ஷரை விட எத்தனை ஆண்டுகள் மூத்தவர் இவர்?”
“ஒரு பஃதுப் பன்னிரண்டு அகவை மூத்தவராக இருப்பார்.”
“ஸர்வர் பிறக்கும்வரை, தாம்தான் இந்த தேசத்தின் ஆட்சிப்பீடத்தில் அமரப்போகிறோம் என்றே வளர்ந்தவர், இல்லையா? எதிர்பாராமல், ஆட்சிப் பீடத்துக்கு உரிமையுள்ள சந்ததி உருவாகிவிடுகிறது. உடனேயே விட்டுக் கொடுத்து விடுகிறார். அதோடு நின்றிருந்தால் கூட அவ்வளவு அதிசயம் இல்லை. அப்படி வந்த சந்ததி, அவருக்கு எல்லா விதத்திலும் பலஹீனமானது. சிறுபிராயமுடையது. அவர் பார்த்து வளர்ந்து, அவருடைய துணை இல்லாமல் அரியணை அமரும் ஆற்றல் அறவே இல்லாதது. அவர் நினைத்திருந்தால், வல்லமை உடைய இராட்டிரக்கூட அரியணை அவருடைய கைக்கு எட்டும் தூரத்தில். நல்ல நிர்வாகியும் வீரரும் கூட. இருந்தும், கிஞ்சித்தும் ஆசையின்றி, இந்தப் பலஹீனமான சந்ததிக்குப் பொறுப்பு ஏற்று தான் விட்டுக் கொடுத்த அதே அரியணையில் அதை அமர்த்தப் பாடுபடுகிறார்! இதைப்போல யாராவது உண்டா? நினைக்க நினைக்க வியப்பு மேலிடுகிறது.”
“ஆமாம். இப்படிப்பட்ட அரசர்கள் அதிகம் பேசப்படுவதில்லை. பெரிய அதிபதிகளை மட்டும்தான் சரித்திரம் நினைவு வைத்துக் கொள்கிறது. ராஜாங்கம் பயிலும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சரித்திரம் கற்ருடையது. அவர் தந்தை இந்திரராஜாவின் வரலாறும் அப்படிப்பட்டதே. இராட்டிரக்கூடப் பேரரசின் அடித்தளம் இவ்விருவரின் விவேகத்தின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்திரராஜாவின் வீரமும் கோவிந்தரின் வீரத்துக்கு எந்த அளவிலும் குறைந்ததன்று. இலாடத்தை ஆண்டு வந்த குர்ஜர அரசனைக் கோவிந்தாராஜா வென்று, இந்திரராஜாவை இலாடத்துக்கு அதிபதியாக ஆக்கிய பின்னர், சில காலம் கழித்து, அந்தக் குர்ஜரன் மீண்டும் இலாடத்தைத் தாக்கினான். அப்போது, உதவிக்காகத் தமையானாரிடம் ஓடவில்லை அவர். மண்ணைக் கடக்கத்துப் படைகளின் உதவியின்றித் தன் பலத்திலேயே குர்ஜரனை எதிர்த்து நின்று வெற்றி கொண்டார்.
“நமக்கென்று ஒரு பொறுப்பு உருவாக்கப்பட்டு அது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டபின், நாமும் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டபின்னர், அப்பொறுப்பை நம்வலியை மட்டும் பயன்படுத்தி, நம்மால் நிர்வகிக்க முடியவில்லை என்றால், அந்தப் பொறுப்புக்கு நாம் எப்படித் தகுதியுடையவராக இருக்க முடியும்? ‘இளையவனின் பார்வை, மான்பார்வையைப் போல மென்மையாக இருப்பதைப் பார்த்து, அவனை எளிதில் தாக்கி வீழ்த்தி விடுவோம் என்று தலையைச் சிலுப்பிக்கொண்டு வந்த குர்ஜர அரசன், தானே மானாகி ஓட்டமெடுத்துத் தொலைதூரத்துக்குப் போய் விழுந்தான்’ என்று சொல்லிச் சிரிப்பார் கோவிந்தராஜா.
“ஒருவேளை கோவிந்தராஜாவின் மனப்போக்குத்தான் இவர்கள் இருவரிடமும் பிரதிபலித்திருக்கிறதோ என்னவோ? கோவிந்தர் போரில், தன்னைத் தாக்கவரும் எதிரிகளிடம் இரக்கம் காட்டாதவர். அவர் வாளின் கூர்மையில் தம் உடலின் நிணத்தையும், இரத்தத்தையும் வடியவிட்டு, உயிர்துறந்தவர்கள் பலர். ஆனால், அவரிடம் வாழ்க்கையை விளையாட்டுக் கூடமாகப் பார்க்கும் ஒரு குழந்தையின் உணர்வும் உண்டு.
“’போர் என்பது, ஒழுங்கின் பிரவாகம்’ என்பார். வன்முறைதான் அது. ஆனாலும், கடுமையான பயிற்சிகளால் பெறப்பட்ட ஒழுங்குகளின் பரஸ்பர மோதலே போர் என்பார். தாறுமாறாக ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடுவது போரில்லை. அது காட்டுவாசிகளின் காரியம். ஒழுங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அழகு தோன்றுகிறது. போர்க்களத்தில், உயிருக்கு அஞ்சாமல், யானைகளையும், வில்லாளிகளையும், மஹாரதர்களையும், அவர்களின் குருதியும் நிணமும் ஒழுக வெட்டும்போது, சாத்வீகர்களுக்குப் பயமும் அருவெறுப்பும் தோன்றலாம். ஆனால், போர் வீரர்களுக்கு, ஒவ்வொரு வாள் வீச்சும், வில் இழுப்பும், அம்பின் எய்தலும், புரவியின் நடையும், கஜத்தின் வீழ்வும்தான் அவர்கள் வாழ்ந்த வாழ்வின் பயன். இதுகாறும் செய்துவந்த அப்பியாசத்துக்கும், உழன்றறுத்தலுக்கும், உடலுயவலுக்கும், மற்றதன் பேணலுக்குமான செய்வினை முற்று, ஆண்டு அமர்க்களத்தில்தானே அவர்களுக்கு ஆறுகிறது? அவர்களுக்கு அழகுணர்ச்சி சேரலரைச் சேதிப்பதிலும், தன்னுயிர் மற்றும் தன்றுணை வீரரைத் தாங்குவதிலும், தேய எல்லையைப் புரப்பதிலும், போர்க்குரிய திட்டங்கள் வகுப்பதிலும், புறப்பகையைப் புறக்கிடுவித்தலிலும்தானே காணக் கிடைக்கிறது. என்ன செய்வது?
“’எல்லோருக்கும் இசையிலும், ஓவியத்திலும், கவிதை எழுதுவதிலும், ஆன்மீகத் தேடல்களிலும் திளைக்க வாய்ப்புக் கிடத்துவிடுமா? யோசித்துப் பார்த்தால், வாள் எடுப்பவனின் பாதுகாப்பில்தான், மற்ற அழகுகள் பிறக்கவும் பரிமளிக்கவும் செய்கின்றன. ஊரைத் தாக்க, எரிபந்தங்களுடன் கூட்டம் இரைச்சல் இட்டுக் கொண்டுவரும்போது, கலைப்பயிற்சி செய்துகொண்டு, அழகில் திளைக்கவா முடியும்? ஊர்க்குருவிகள் வழியில் இரைச்சல் இட்டுக்கொண்டு வழிமறித்தால், அரச அன்னம் வேண்டுமானால், வாய்மூடி மௌனியாக வேறு வழியாகப் பறக்கலாம். போர்வீரன் அப்படிச் செய்யமுடியுமா? குறைந்த நேரத்தில், அதிக வலிமையுடன் ஆயுதத்தைச் செலுத்த வாழ்நாள் எல்லாம் செலவழித்துக் கற்றுக்கொண்ட வீரன், எதிரியின் வாள்பட்டுத் தான் இறக்கும்போதிலும், நன்றாகப் போர் புரிந்தேன், என்னை வீழ்த்தியவன் என்னைவிடத் திறமையைக் காட்டினான் என்ற திருப்தியுடன்தானே மரிக்கிறான்?’ என்று வீரத்தை ஒரு கலையாக விவரிப்பார்.”
“இருந்தாலும், போர் என்பது, ஓர் அரசியல் நிர்ப்பந்தம்தான் இல்லையா?”
“அதில் ஐயமென்ன? போர் செய்வது, மனித வாழ்வின் நோக்கமில்லை என்றுதான் அடிக்கடி சொல்வார், ‘நாடு என்று சொன்னதும், அங்கே எல்லைகள் உருவாகி விடுகின்றன. எல்லைகளால்தான் ஒரு நாட்டுக்கு அடையாளம் ஏற்படுகிறது. அந்த அடையாளம் ஏற்படுத்தப்பட்ட பின்பே, அந்த எல்லைக்குள்ளே இருக்கும் பூமி மாதாவுக்கும், அதன்மேல் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. அந்த எல்லைக்குள், அவள் வழங்கும் செல்வங்களை, அங்குள்ள மக்கள் அனுபவித்து, எப்படிப்பட்ட வாழ்வை வாழத் தீர்மானிக்கிறார்களோ, அதற்கேற்ற அடையாளத்தைப் பிற நாட்டார், அந்த நாட்டுக்கு வழங்குகிறார்கள். அந்த நாட்டுக்கான அடையாளம், அங்கு வாழும் மக்களின் பொதுப்படையான இயல்பால்தான் ஏற்படுகிறது. இந்த இயல்பை, அந்நாட்டை ஆளும் அரசனும் தீர்மானிக்கிறான். வழிநடத்துகிறான்.
“’சரியாக நிர்வகிக்கப்பட்டதாலும், இயற்கையிலே அங்கு நிறைந்திருக்கும் வளங்களாலும் ஒரு நாடு செல்வச் செழிப்புள்ளதாக ஆகிவிட்டால், மற்றவர்கள் அந்தச் செல்வத்தைக் கவர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். இதனால் போர்கள் விளைகின்றன. சில அரசர்கள் போர்கள் மூலமாகத் தம் நாட்டின் எல்லைகளை விரிவாக்க எண்ணுகிறார்கள். தந்திதுர்க்கராஜா போன்றவர்கள், செல்வத்தை மட்டும் கைப்பற்றுகிறார்கள். அப்படிப் பிராந்திய விரிவாக்கம் என்று ஒன்றைச் செய்யாவிட்டாலும், அடிப்படியில், ஒரு தேசம் என்பதை உருவாக்கினால்தான் அரசு என்பது உருவாகுகிறது என்பது அடிப்படைத் தத்துவம். இராட்டிரக்கூடம் என்ற தேசம் முன்பின் இல்லாதது. தந்திதுர்க்கன் என்ற ஒரு குறுநில அரசன், தனக்கென்று சுதந்திரமாக ஒரு நிலம் வேண்டும் என்று கனவு கண்டதால் உருப்பெற்றது’ என்பார்”
“நான்கு திக்கிலும் எல்லைகளை நிர்மாணித்தபின்தான், அங்கிருக்கும் மக்களால்தான் நாடு என்ற ஒன்று பிறக்கிறது என்றால், அந்த நிலத்தை உருவாக்கிய அரசனால்தான் அந்நாட்டின் மீது மதிப்பு உருவாகுகிறதா?”.
“நான் ஏற்கனவே சொன்னதுபோல, அரசன் நடக்கத் தேர்ந்தெடுத்த பாதை, அதில் நடக்க ஆயத்தமாக இருக்கும் மக்கள் - இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்குவதுதான் அந்த மதிப்பு. அப்படி ஒரு நாட்டுக்கு மதிப்புக் கூடினால், அந்த நாட்டுக்கு அபாயமும் கூடவே உருவாவது இயற்கை. இதனால், சுபிட்சமான நாடு என்னும் அடையாளம் நிலையானதன்று. அது ஆபத்தானதும் கூட. சுபிட்சம் என்று வந்துவிட்டாலே, பாதுகாப்பு என்ற ஒன்றும் கூடவே பிறக்கிறது, என்பார்.”
“அதற்காகச் சுபிட்சத்துக்கு முயலாமலேயே இருந்து விடவும் கூடாது, இல்லையா?”
“வாஸ்தவம்தான். ‘போர் செய்யக்
கற்றுக்கொண்டு, அக்கலையை எப்படி நிஜ வாழ்க்கையில் பயன்படுத்துவது என்று சண்டையைத்
தேடிக்கொண்டு போவது வீரமன்று. அது பாதுகாப்பு உணர்வில் ஜனிக்க வேண்டும்’ என்பார். இராமாயணத்தில்,
சுதீக்ஷணர் ஆசிரமத்தில் தங்காமல், தண்டகாரண்யம் செல்வோம் என்று கிளம்பிய
இராமருக்குச் சீதை சொன்னதை ஒருமுறை மேற்கோளும் கூட காட்டினார்”
“த்வம் ஹி பா³ண த⁴னுஷ்பாணி꞉ ப்⁴ராத்ரா ஸஹ வனம் க³த꞉ |
த்³ருʼஷ்ட்வா வன சரான் ஸர்வான்
கச்சித் குர்யா꞉ ஶர வ்யயம் – இதுதானே?” என்றான் விநயன்.
“அஹோ! அஹோ! நீ பண்டிதன் என்பதை மறுபடியும் நிரூபிக்கிறாய்! அதேதான்”
“அற்புதமான ஸர்கம் அது. ஏனோ, அதிகம் பேரால் பேசப்படுவதில்லை. இது சீதோபதேசம் என்ற ஒரு தமிழ் நூலிலும் படிக்கக் கிடைத்தது. சொல்லட்டுமா?”
“சொல், சொல். எனக்கு இலக்கியத் தமிழ் அவ்வளவு பழக்கமில்லை. செய்யுளைச் சொன்ன கையோடு பொருளையும் சொல்லிவிடு”
“எளிமையான
செய்யுள்தான்.
வாளெலாம் ஏதற்கு வேதஞ்சொல் வாரிடையே
வாளியு நாணுற்ற வெவ்வில்லு மேனுடைத்தி?
காளபங் காணுறாது கைத்தோள்கள் காத்தனவோ?
வேளையும் போகுளங்கொல் வேட்டையெழு வாட்டத்தே?
சீதாதேவி கேட்கிறாள்: ‘வேதங்கள் உரைக்கும் சாதுக்களைப் பார்க்கப் போகும்போதும் இந்த வாளாயுதத்தை எல்லாம் சுமந்து கொண்டு வருவது எதற்கு? ஏன் எப்போதும், இந்த அம்புகளையும் நாணோடு கூடிய வில்லையும் தூக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்? போர் புரியாமல் வெறிதாக இருந்து, உங்கள் கைகளும் தோள்களும் காத்துப் போய் விட்டனவா? அதனால்தான், எப்போதும் எங்கே சண்டை போட வாய்ப்புக் கிடைக்கும் என்று வேட்டை எழுகின்ற இடங்களாகப் பார்த்துப் பார்த்துத் உங்களுடைய மனம் தேடிப் போய்க்கொண்டிருக்கிறதோ?”
“அபாரம். இதே கருத்தைத்தான், கோவிந்தர் அடிக்கடி வலியுறுத்துவார். ஓர் அஸஹாய சூரருக்கு, இப்படி யோசிக்கத் தோன்றுவது துர்லபம், ‘விழுமிய நோக்கம் என்ற ஒன்று இல்லாதவன் வீரனே இல்லை’ என்பார். காற்றினால், பாலைவனத்தில், எப்படி மணல் மேடுகள் உருமாறிக் கொண்டே இருக்கின்றனவோ, அதைப் போலத்தான், ஒரு சாம்ராஜ்ஜியத்தின் வளப்பமும். இந்த மாறுதல், ஒரு சாம்ராஜ்ஜியத்துக்குள்ளே மட்டும் நிகழ்வதன்று. சாம்ராஜ்ஜியங்களுக்கிடையேயும் இந்த மாறுதல்கள் நிகழ்கின்றன. வாதாபி சாம்ராஜ்ஜியம் இன்றைக்கு முடிவுக்கு வந்துவிட்டது. அதை முடித்துவிட வேண்டும் என்ற வேள்வியைத் துவக்கிவைத்த தந்திதுர்க்கருக்கு, அந்தக் கனவை விதைத்தவர், காஞ்சியின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த ஒரு விசித்திரமான அரசர். அவரைப்பற்றிப் பிறகு விளக்கமாகச் சொல்கிறேன்.
“இன்று ஒரு புதிய சாம்ராஜ்ஜியமாக உதயமாகி இருக்கும் இராட்டிரக்கூட தேயத்துக்குப் புது எல்லைகள். புதுப் பாரம்பரியம். புதிய வழக்கங்கள். புதிய விதிமுறைகள், புதிய கோட்பாடுகள், புதிய மொழிகள், புதிய பண்பாடு எல்லாம் இந்த அறுபது எழுபது வருடங்களில் ஏற்பட்டிருக்கின்றன.
“இப்படி அரியணையில் அமர்ந்தவர்களும், எல்லைகளும் மாறினால் கூட, குடிமக்கள் இங்கு முன்னமிருந்தே வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்தான். நாட்டின் சுபிட்சம் என்பது, இந்தக் குடிகளின் சுபிட்சம்தான், முன்னர் புலிகேசிகளுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் இன்று இரட்டர்களுக்கு விசுவாசமாக மாறி இருக்கிறார்கள். விசுவாசம் எல்லோரிடமும் அரியணை மாறியதும் தோன்றி விடுவதில்லை. ஆனால், விசுவாசம் இல்லாதவர்கள், நாட்டின் சமநிலையைப் பாதிக்கக் கூடியவர்கள். அதனால், ஒரு புதிய அரசன் எவ்வளவு சீக்கிரம் அவர்களை, அரியணைக்கு விசுவாசமாக மாற்றுகிறானோ, அந்த அரசன் நிலைத்து நிற்கிறான். அந்த அரசும் நிலைக்கிறது. மஹாராஜாதிராஜா தந்தி துர்க்கரும், கிருஷ்ணராஜரும் இதைச் செய்தார்கள்.”
“இவற்றையெல்லாம் அரச சபையில் கோவிந்தராஜா விளக்குவார் என்பதை அறிய வியப்பாக இருக்கிறது. அவர் ஆவேசமானவர், நேரத்தை வீணாக்காதவர் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பெயரைச் சொல்வதற்குக் கூட எல்லாரும் நடுங்குவதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். நானும் அப்படித்தான் வளர்ந்திருக்கிறேன்.”
“அது உண்மைதான். எனக்கும் அவர் முன்னே நிற்க வெகுபயம். எளிதில் பொறுமையிழந்து விடுவார். சுற்றி வளைத்துப் பேசினால் வெகுள்வார். எதுவாக இருந்தாலும், சுருங்கச் சொல்லவேண்டும். ஆனால், அந்த வேகம் எல்லாம், அவருடைய இறுதிக் காலத்தில் மாறிவிட்டது. எல்லாவற்றையும் அடுத்த சந்ததிக்குச் சொல்லிவிடவேண்டும் என்ற உந்துதல் அவருக்கு வந்திருந்தது. இரவு முழுக்க, அடுத்த நாள் என்ன சொல்லவேண்டும் என்றே யோசித்துக் கொண்டிருப்பார் என்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவது உண்டு. ஒருமுறை, முதலாண் வழிப்படும் அரசுரிமையின் இன்னல்களை விளக்கும்போது, எப்படித் துருவராஜா அரியணை ஏறினார் என்ற வரலாற்றை விளக்கமாகச் சொன்னார். பலருக்கும் தெரியாத மந்தணம் அது. அன்றும் கற்கராஜன், அமோகவர்ஷர், உள்பட எல்லோரும் கூடியிருந்தோம்….”
பிரதாபரின்
சொற்கள்,
விநயனின் கருத்தென்னும் அயத்தைக் காந்தம் போல ஈர்க்க, அவை தீட்டிய சித்திரத்தில்,
தன்னுடைய சுற்றுப்புறத்தை மறந்தான்.
No comments:
Post a Comment