Saturday, 21 September 2024

13-01. கனமூலம்

இரண்டு நாட்களுக்கு முன்னால்தான், குக்கேஸ்வரர் விநயனிடம், “உங்களுக்கு அவரைக்காய் வறைகறி, சுக்காங்கீரை வதக்கல், புளியிட்ட குழம்பு, நறுநெய் பொரி அப்பம் உசிதமாகுமா?” என்று கேட்டுவிட்டுத் தன் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்திருந்தார். முற்பகலில், இரண்டாவது யாமபேரி முழங்குவதற்கு முன்பாக அவனை அழைத்துப்போகச் சத்திரத்துக்கும் வந்துவிட்டார். அவருடைய வீடு மிகத்தூரமில்லை. சத்திரத்தில் இருந்து. கால் சுடுவதற்குள், இருவரும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.

ஆசிரியருக்குப் பெரிய வீடாகத்தான் தந்திருந்தார்கள். பெரிதென்றால், நிலம் பெரிது. ஒரு பெரிய விசாலமான குடிசை என்று சொல்லலாம். வடக்குத் தெற்காக விரிந்த ஒரு கூடம். கிழக்குப் பார்த்த நிலைக் கதவு. ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்தது. படலுக்கு வெளியிலும், கதவுக்கு வெளியேயும் கோலங்கள். உள்ளிருக்கும் கோலத்துக்குச் செங்கரை கட்டியிருந்தது.

முன்புறம் வேப்பமரமும் சரக்கொன்றை மரமும் இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறுசிறு பூக்கள். வெளியே சிறுவீட்டில் ஒரு பசு, கன்றுக்குட்டியை நக்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தது. இடப்பக்கம், முன் முற்றத்தில் ஒரு சிறிய ஊஞ்சல். இரண்டு கற்றூண்களை நிறுத்தி, அதன்மேலே குறுக்காக, ஒரு பெருமரத்தை ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருந்தார்கள். அக்குறுக்கு மரத்தில் தென்னங்காய் நார்வடத்தைச் சுற்றிக் கீழே பலகையைத் தொங்கவிட்டிருந்தார்கள். ஊஞ்சலின் கிழக்குப் பக்கக் கயிற்றை முத்தமிட்டுக் கொண்டு படர்ந்திருந்தது ஒரு மல்லிகைக் கொடி.

வீட்டின் இரண்டு பக்கமும் மரச்சட்டச் சாளரங்கள் பொருத்தப் பட்டிருந்தன. சிறிய மேடாகத் திண்ணை போன்ற ஓரம். குத்துக்காலிட்டுத் தான் அமர முடியும். ஈரமாக இருந்தது. அப்போதுதான் சாணத்தால் மெழுகியிருப்பார்கள் என்று தோன்றியது. அதன் மீது வெள்ளை வெள்ளையாய்க் கோலக் கோடுகள், வட்டங்கள், சுழிகள்.

வாசலின் படலைத் திறக்கும் சத்தம் கேட்டு, நிலைப் படிக்கு வந்து நின்றாள் ஆசிரியரின் மனைவி. மத்திய வயது. இரண்டு மூக்குத்திகளில் ஒன்று மட்டும் சற்றுப் பிரகாசித்தது. கழுத்தில் மஞ்சள் கயிறு. கட்டம் போட்ட கருநீலப் புடைவையை, வெளியே தெரிந்த தோளைச் சுற்றிப் போர்த்திக்கொண்டே "வாருங்கள் வாருங்கள்!" என்று கண்கள் சிரிக்க வரவேற்றாள். "குனிந்து வாருங்கள், தலை இடிக்கப் போகிறது" என்று எச்சரிக்கை செய்து கொண்டே உள்ளுக்கு நகர்ந்தாள்.

முதலில் படி ஏறிய குக்கேஸ்வரர், கூடவேதான் வந்திருந்தாலும், திரும்பி முகத்தைப் பார்த்து, "வாருங்கள், எங்கள் குடில் இன்று பாக்கியம் பெற்றது" என்று வரவேற்றார். கையைக் கூப்பிய விநயன், "மாமியோடு நில்லுங்கள், நமஸ்காரம் செய்து கொள்கிறேன்' என்று இருவருக்கும் நமஸ்காரம் செய்தான்.

எழுந்து நின்றவன் கண்ணில், அந்தப் பெண் தென்பட்டாள். திருத்தமான முகம். நீளமான ஆவரணம், கழுத்து மறைக்க அணிந்திருந்தாள். மேலே ஒரு வெள்ளிச் சங்கிலி. அலையும் கொசுவத்தோடு அகன்ற பாவாடை. இறுக்கப் பின்னப்பட்ட பின்னலின் நுனி, பின்னால் இருந்து எட்டிப் பார்த்தது. மையிட்ட கண்கள். தீற்றப்பட்ட நெற்றி. அதற்கப்புறம் அந்தக் கண்கள். தான் பார்த்தவர்களை நொடிப் பொழுதில் எடை போட்டு, இவ்வளவுதான் ஐயா உன் தகுதி என்று பட்டியல் இட்டு, விலை போட்டு, ஓலையில் எழுதிக் கையில் கொடுத்துவிடத் துடிக்கும் கண்கள். தனக்கு எவ்வளவு மதிப்பு போட்டிருக்கிறது என்று அந்தக் கண்களைக் கேட்டுவிடலாமோ என்று நினைத்தான்.

"கோதை!" மாமி அதட்டியதைக் கேட்டு ஒரு நொடி தன்னைத் தான் அதட்டுகிறார்களோ என்று தடுமாறிப் போனான். "என்ன அப்படியே மரம் மாதிரி  நிற்கிறாய், நமஸ்காரம் செய்! நல்ல புத்தி வரவேண்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள்" என்றாள் மாமி. தன் காலில் வீழ்ந்து வணங்கிய பெண்ணை, "அறிவும் வளமும் பெற்று, அமோகமாய் வாழ, ஆடல் வல்லான் அருள் புரியட்டும்!" என்று ஆசீர்வதித்தான்.

"உங்களைப் பற்றி நிறையச் சொல்லுவார். உட்கார்ந்து பேசிக் கொண்டிருங்கள், நான் இலை போட ஏற்பாடு செய்கிறேன். கோதை! இரண்டு குவளையில் நீர் கொண்டு போய்க் கொடு. பின்னால் இருந்து. வாழை இலையைப் பறித்துக் கொண்டு வா, கீழே உண்ணும் இடத்தை அலம்பிக் கோலம் போட்டு, மணை போடு" என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள்.

"வாருங்கள் வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம்." என்று அழைத்துக் கொண்டு சென்றார் ஆசிரியர்.

விசாலமான வீடுதான். கூரையில் மூங்கில் குறுக்குத் துண்டுகள் கயிறுகளால் இணைக்கப்பட்டிருந்தன. இடையில் இரண்டு மூன்று மரத்தூண்கள்  மூங்கில்களைத் தாங்கிக் கொண்டிருந்தன. விசாலமான கூடத்தின் ஒரு பகுதியில், மேலே மூங்கில்களில் இருந்து, பிரம்புப் பாயைத் தரையைத் தொடும்படித் தொங்கவிட்டு, ஒரு சுவரில்லாத அறையை உருவாக்கியிருந்தார்கள். சாணத்தால் மெழுகியிருந்தது மொத்தத்தரையும்.

கூடத்தின் ஒரு பக்கமாக ஒரு மணற்குறுக்குச் சுவரை எழுப்பி அறையாகத் தடுத்திருந்தார்கள். வெள்ளை அடிக்கப்பட்டிருந்த அந்தச் சுவரில் தெற்கு நோக்கியபடி ஒரு மூங்கில் கதவு இருந்தது. அவர்களின் படுக்கையறையாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். கூடத்தின் ஒரு பக்கம், சாளரத்தின் கீழே படிக்கும் பலகை, ஒரு பாயின் மேல் வைக்கப்பட்டு இருந்தது. அருகில், இரண்டு மூன்று எழுத்தாணிகள். ஒரு திறந்த பெட்டியில், வெற்றுப் பனை ஓலைகள், எழுதச் சித்தமாக வைக்கப் பட்டு இருந்தன. சாளரத்துக்கு மேலே, கூரைக்குக் கீழே, மூன்று ஆழங்கால்கள் பதித்து, அதன் மேல், பலகை வைக்கப்பட்டு, அதில், நிறைய ஓலைச் சுவடி மூட்டைகள். அழகாகக் கட்டப்பட்டு வரிசையாக இருந்தன.

பக்கத்திலயே, கீழே ஓர் ஏணி படுக்கவைக்கப் பட்டு இருந்தது. கூடத்தின் இன்னொரு புறம், இருட்டான ஒரு அறை. உள்ளே, ஒரு சிறிய குதிர். அதைச் சுற்றி பனை ஓலைக் கூடைகள். சிறியதும், பெரியதுமான பெட்டிகள். உக்கிராண உள் என்று தெரிந்தது.

இன்னொரு பக்கம், கூரையில் இருந்து தொங்கிய உறியில் பானைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அதற்குப் பக்கத்தில், கூடத்தில் இருந்து வெளியே தோட்டத்துக்கு ஒரு வழி. அந்த வழியின் ஒரு பக்கம், கதவில்லாத ஒரு தனி நுழைவாயில் இருந்தது. அடுக்களை என்று அட்டைக் கரி அணிந்து கொண்டு, அடையாளத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது. உள்ளே, குறுக்கு நெடுக்காக அகழி அடுப்பு. அதற்கு மேலே புகை போக, பெரிய சாளரம். விஸ்தாரமான சமையலறை. நான்கைந்து பேர் உள்ளே அமர்ந்து உணவு அருந்தலாம். சமையலறையின் ஒரு பக்கம் திரைச்சீலையுடன் கூடிய சிறிய அறை, அதில் ஓர் கரி பிடித்த தவலை. சமையலைறையில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். வீட்டுப் பெண்கள் குளியலறையாகப் பயன்படுத்துவார்கள் போலிருந்தது.

தோட்டத்துக்கும் கிணற்றுக்கும் செல்லும் ஒரு கதவு இருந்தது. கதவைத் திறந்ததும் கீழே இறங்க, இரண்டு செங்கற்களை வைத்திருந்தார்கள். இறங்கியதும், வலதுபுறம் ஒரு கொட்டகை. அங்கு விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு மூன்று மூட்டைகள் கிடந்தன. பசுவுக்குத் தவிடாக இருக்கலாம். தோட்டத்தில், இரண்டு மூன்று எலுமிச்சை மரங்களும், நெடிதுயர்ந்து, பெரிய பெரிய இலைகளைப் பரப்பிக்கொண்டு ஒரு வாதுமை மரமும் இருந்தது. வாதுமை மரத்தில், ஏகப்பட்ட கிளிகள், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தன. ஒரு செம்போத்து, இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டன்று என்பது போல, கிளிகளைப் பார்த்துக்கொண்டு அமர்த்தலாக உட்கார்ந்து கொண்டு இருந்தது.

பாவாடை சரசரப்பது கேட்டுத் திரும்பினான். மீண்டும் அதே தடுமாற்றம் ஏற்படுத்தும் கண்கள். ஒரே ஒரு வளை அணிந்த கை நீட்டிய குவளையை வாங்கி, உயர்த்திக் குடித்துத் திருப்பிக் கொடுத்தான். மறுபடியும் பாவாடை சரசரத்துக் கொண்டே உள்ளே போய்விட்டது.

“வாருங்கள், சாப்பிடலாம்” மாமியின் குரல் கேட்டது. சமையலறையிலேயே இலை போட்டிருந்தார்கள். மௌனமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தாம்பூலம் தரித்துக்கொண்டு, இருவரும் கூடத்தில், ஓலைச் சுவடிகள் இருக்கும் இடத்திற்கருகே சாளரத்தின் பக்கமாக அமர்ந்தார்கள். வெளியே வெற்று இடமாக இருந்ததால், நல்ல காற்று.

பேச்சு, கச்சிப்பேட்டுக் கற்றளிகளையும் தொட்டது. விநயன் கேட்டான், “நாம் நேற்று மங்கைவேந்தன் என்ற வைணவக் கவியைப் பற்றிப் பேசினோம். என்ன விந்தை பாருங்கள், நேற்று அவருடைய அட்டபுயத்துப் பெருமான் மீதான அதே பாடலை, பிரதாபவர்த்தன ஸ்வாமியும் படித்துக் காட்டினார். நேற்றெல்லாம் அந்த மாதவன்தான் கணமுன்னால் நிற்கிறான். அட்டபுயக்கரத்துப் பெருமாளை வர்ணித்து அவர் எழுதிய வேறு பாடல்கள் ஏதாவது நினைவிருக்கிறதா?”

“ஓ! கலிகன்றி! சில பாடல்கள் மனனம் செய்து வைத்திருக்கிறேன். மூன்று நான்கு கோவில்களைப் பற்றி அவர் பாடியவற்றைச் சுவடியிலேயே எழுதி வைத்திருக்கிறேன். இருங்கள், எடுத்து வருகிறேன்” என்று உள்ளே சென்று ஒரு சுவடியை எடுத்துவந்தார் குக்கேஸ்வரர்.

“எந்தப் பாடல் வேண்டும்? அட்டபுயங்களில் ஏந்தியவற்றை வர்ணிக்கும் பாடல் கேட்கிறார்களா?”

“சொல்லுங்கள்”

 

“செம்பொனி லங்குவ லங்கை வாளி

திண்சிலை தண்டொடு சங்க மொள்வாள்,

உம்பரி ருஞ்சுட ராழி யோடு

கேடக மொண்மலர் பற்றி யெற்றே,

வெம்புசி னத்தடல் வேழம் வீழ

வெண்மருப் பொன்றுப றித்தி ருண்ட

அம்புதம் போன்றிவ ரார்கொ லென்ன

அட்டபு யக்கரத் தேனென் றாரே.

 

என்று இசையுடன் சொன்னார்.

 

“தன்னன தன்னன தன்னா தன்னா

தன்னன தன்னன தன்னா தன்னா – என்ன ஓர் அழகான ஓசை”

 

“ஆமாம். இவரே பல்லவமல்லர் கட்டிய பரமேஸ்வர விஷ்ணுகிருஹம் என்ற ஒரு கோவிலைப் பற்றி எப்படிப் பாடுகிறார் பாருங்கள். அற்புதமான கோவில் அது. நான் இரண்டு கோவில்களையும் தரிசித்திருக்கிறேன்.

 

“இலகிய நீண்முடி மாவலி தன்பெரு

வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,

சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந்

தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

உலகுடை மன்னவன் தென்னவ னைக்கனி

மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,

பலபடை சாயவென் றான்பணிந் த-பர

மேச்சுர விண்ணக ரம்-அதுவே.

 

“இது எழுசீர் விருத்தம். ஆறு விளமும் ஒரு காயுடன். இத்தலத்தின் மீது அவர் பாடிய இன்னும் இரண்டு பாடல்கள் சொல்கிறேன் பாருங்கள்.” என்று சொன்னார்.

“இவை எல்லாவற்றிலும், முதல் இரண்டு அடிகள், நாராயணனைப் பாடிவிட்டுப் பல்லவமல்லன் பாண்டியனை வென்ற இடங்களையும் சொல்கிறாரோ?”

“ஆமாம். பல்லவமல்லருக்காகவே எழுதப்பட்ட பாடல்கள் இவை. கோவிலே அவர் புதியதாகக் கட்டுவித்ததல்லவா?”

“இன்னொன்றும் எனக்குத் தோன்றுகிறது. அட்டபுயக்கரனை அவர் பாடியபோது, பல்லவமல்லர் ஆட்சியில் இல்லை. பாண்டியர்களின் கட்டுப்பாட்டில்தான் கச்சி இருந்ததாம். வல்லப ஸ்வாமி சொன்னார். அதனால், பெருமாளை மட்டும் பற்றிப் பலபாடல்கள் பாடிவிட்டு, ‘மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன், தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயக்கரத் தாதி தன்னை’ என்று வைரமேகரும், தொண்டையர் கோனும் வணங்கிய பெருமான் என்று ஈற்றுப்பாடலில் மட்டும் சொல்லியிருக்கிறார், இல்லையா?”

“ஆஹா! நீங்கள் சொன்னபிறகுதான், அப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அட்டபுயக்கரனைப் பற்றி அவர் பாடிய பாடல்களில் ஒன்றில் கூடப் பல்லவமல்லரைப் பற்றி ஒரு வரியும் இல்லை. விஷ்ணுகிருஹம் கட்டி முடித்தபோது, பாண்டியரை முற்றிலும் புறங்காட்டிவிட்டுத் துண்டீரபுரத்தை முழுவதுமாகக் கைப்பற்றியிருக்க வேண்டும். அதனால், பரமேஸ்வர விண்ணகரத்தைப் பாடும்போது ஒவ்வொரு இடமாகப் பாண்டியனை வென்றதைச் சொல்லிச் சொல்லிப் பல்லவ மல்லருக்கு ஏற்றம் செய்திருக்கிறாரோ?”

“அப்படித்தான் தோன்றுகிறது. இன்னொன்றும் கவனித்தீர்களா? அட்டபுயக்கரன் என்று பெருமாளின் பெயரைச் சொன்னவர், பரமேஸ்வர விண்ணகரத்தைப் பாடும்போது மட்டும், அந்தக் கோவிலின் மீதே பாடியிருக்கிறார்!”

அப்போது, மாமியும் கோதையும் உண்டு முடித்துவிட்டிருந்தார்கள் மாமி பாகவுள்ளைச் சுத்தம் செய்துகொண்டிருக்க, அவர்கள் அருகில் வந்து நின்றாள் கோதை.

“கோதைக்குக் கணிதத்தில் பெரிய ஆர்வம். அவளே, அதோ, அந்தச் சுவடியில் இருக்கும் சூத்திரங்களை எல்லாம் படித்துப் புரிந்து கொள்வாள். உங்கள் சதுரங்கப் புதிரைக் கூடச் சொன்னேன். ஆர்வமாகக் கேட்டு மனப்பாடம் செய்துவிட்டாள். எங்கே சொல்லு” என்றார் குக்கேஸ்வரன்.

 

யானலமு வாதமிறு

   தாங்கவரு மாலவா!

தாமதமா வயமேறி

   வாககன  மயவீரா

 

என்றாள்!

“அடடே! அட்டகாசம்! பெண் பிள்ளைக்குக் கணிதத்தில் ஆர்வமா? என் அம்மாவைப் போல ஆர்வம் இருக்கிறது. தடை போடாதீர்கள். படிக்கட்டும். சிலபேர் தடுத்துவிடுவார்கள்.” என்றான்.

தனக்குப் பரிந்து பேசுவதற்கு ஆள் கிடைத்த சந்தோஷம் கோதையின் முகத்திலே தெரிந்தது. அவள் தன் தந்தையின் காதில் வந்து ஏதோ சொன்னாள். அவர் விநயனைப் பார்த்துத் தயங்கி, ‘அதெல்லாம் வேண்டாம் கோதை, அவரை நிம்மதியாக இருக்க விடு” என்றார்.

“என்ன விஷயம்?”

“ஒன்றுமில்லை, அவளுக்கு மிக நாட்களாக ஒரு சந்தேகம். என்னையும் கேட்டாள். எனக்குத் தெரியவில்லை. உங்களைக் கேட்கச் சொல்கிறாள்”

“கேளுங்களேன்”

“வீட்டுக்கு உணவுண்ண வந்திருக்கிறார். வந்த இடத்தில், இதெல்லாம் எதற்கு? இன்னொரு நாள் கேட்டுக் கொள்ளட்டும்” என்றாள் மாமி பாகவுள்ளில் இருந்து.

“இதற்கென்று நாள் பார்க்கவேண்டுமா? கேட்கச் சொல்லுங்கள்” என்றான் விநயன்.

“நீயே சொல்லு கோதை.

விருட்டென்று முன்னே வந்து நின்று கொண்டு, மெல்லிய குரலில் சொன்னாள்:

“எனக்குக் கனமூலம் எப்படிக் கண்டு பிடிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும்”

“கனமூலமா? வர்க்க மூலம் கண்டுபிடிப்பாயா?”

“அதெல்லாம் தெரியும்” என்றாள் துடுக்காக.

“கோதை!” அதட்டினார் குக்கேஸ்வரர். அவள் முகம் உடனே மாறிவிட்டது.

“மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றாள் பொதுவாக.

“இருக்கட்டும் இருக்கட்டும். பரவாயில்லை. கற்றுத் தருகிறேன். குழிமாற்று எவ்வளவு தெரியும்?” என்றான்.

“குழிமாற்று இருபது வரை சொல்வேன். வர்க்கக் குழிமாற்றும் முப்பது வரை தெரியும். கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், அதமப் பொது மடங்கு உத்தமப் பொதுக் காரணி எல்லாம் தெரியும்”

“கெட்டி!” என்று கற்றுத்தரச் சித்தமானான் விநயன். அந்தச் சமயத்தில், உள்ளிருந்து மாமி – “சற்று இங்கே வருகிறீர்களா? இந்தப் பரண் மேலே ஏற வேண்டும்” என்று கூப்பிட, குக்கேஸ்வரர், “நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

“கனமூலம் காணும் வழி, கழுதைக்காது வகுத்தல் போலத்தான். ஒவ்வொரு எண்ணாக இறக்கிக்கொண்டு கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறை எண்ணை இறக்கும்போதும், சாதாரண வகுத்தல் போல, நமக்கு எண்கள் கிட்டும் என்ற கட்டாயமில்லை. சரியா? முதலில், ஏதோவோர் எண்ணை எடுத்துக்கொள்வோம். நீயே ஓர் எண்ணைச் சொல்லேன்.”

சட்டென்று “இருபத்தேழு கோடியே எழுபத்தொன்று இலக்ஷத்து அறுபத்தேழு ஆயிரத்து எண்ணூற்றெட்டு!” என்றாள்.

“அடேயப்பா! அவ்வளவு பெரிய எண்ணா? இருக்கட்டும். நல்லதுதான். இந்த எண்ணை இடப்பக்கத்தில் இருந்து வலமாகப் போய், மும்மூன்று எண்கள் கொண்ட தொகுதிகளாகப் பிரித்துக்கொள். முதல் தொகுதியில் இரண்டு ஏழு ஏழு, இரண்டாவதில் ஒன்று ஆறு ஏழு, மூன்றாவதில் எட்டு சூன்யம் எட்டு.

“முதல் தொகுதிக்கு ஒரு தனி வினை. அடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளுக்கு மூன்று மூன்று வினைகள். தனிவினையால் கன மூலத்தின் முதல் இலக்கம் கிட்டும். இரண்டாம் தொகுதிக்கான மூன்று வினைகளில், முதல் வினையில் இரண்டாம் இலக்கம் கிட்டும். அதேபோல, மூன்றாம் தொகுதிக்கான முதல் வினையில் மூன்றாவது இலக்கம் கிட்டிவிடும். இதுதான் சூட்சுமம். புரிந்ததா?

புரிந்தது என்று தலையை ஆட்டினாள்.

“இந்த மூவினைகளுக்கும் ஒரு பெயர் வைத்துக்கொள்வோம். பாஜ்யம், சோத்யம், கனம் என்பார் என் ஆசார்யர். நாம் பகுத்தல், கழித்தல், மும்மித்தல் என்று வைத்துக் கொள்வோம். முதலில் தனி வினையைச் சொல்கிறேன் இது, ஒரு ஊகத்தில் செய்யவேண்டியது. கொடுத்த எண், ஆறு இலக்கங்களுக்கு மேலிருந்தால், அதனுடைய கனமூலத்தில் மூன்று இலக்கம் இருக்கும். இது இயல்பு. தெரியுமா?

“ஆமாம்.”

“முதல் தொகுதி எண்களை ஒரே எண்ணாகப் பார்த்து, அதன் கன மூலம், ஒன்றில் இருந்து, ஒன்பதுக்குள் எதுவாக இருக்கும் என்று ஊகித்துக் கொள்ள வேண்டும். நீ இந்தப் பலகையில், ஏற்கனவே பட்டியல் செய்து வைத்திருக்கிறாய். இதை மனனம் செய்து கொள்ள வேண்டும்.”

எனக்கு மனப்பாடமாகத் தெரியும்”

“எங்கே சொல் பார்க்கலாம்”

ஒன்று, எட்டு, இருபத்தேழு, ஆறுபத்தும் நான்கும், நூற்றுக்கு மேல் இருபத்தைந்து, இருநூறும் ஒரு பதினாறும்” – இது ஆறுவரை.

“மிகச்சரி”

ஒரு விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். இந்தக் கனம் ஓர் அதிசயமான விஷயமாக இருக்கிறது. முதலில் மெள்ளத் துவங்கும். எண்கள் சற்றுப் பெரிதானதும், தறிகெட்டு ஓடுகின்றன. இங்கே பாருங்களேன், ஆறு வரை, இருநூற்றுக்கு அருகிலேதான் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அடுத்த மூன்று எண்களில் தாவி, மொத்த மூன்று இலக்க எண்களையும் தாண்டி விட்டு, ஸஹஸ்ரத்துக்கு அருகில் சென்று விடுகிறது. அதனால்தான் பெரிய எண்ணா யோசித்து வைத்திருந்தேன்.”

“நன்றாகக் கவனித்து இருக்கிறாய். இரண்டு இலக்க எண்ணின் கனம், கிட்டத்தட்ட பத்து இலக்ஷத்தைத் தொட்டுவிடும். மூன்று இலக்கத்துக்குக் கிட்டத்தட்ட நூறு கோடியைத் தொட்டுவிடும். நூறு கோடியை விடப் பெரிய எண்ணை நாம் எங்கே நிஜ வாழ்வில் பயன்படுத்தப் போகிறோம்!”

ஆமாம்! நான் எவ்வளவு பெரிதாக யோசித்து வைத்தாலும் அதின் கனமூலம், மூன்று இலக்கத்தைத் தாண்டவில்லை எனக்கு

“ஆறுவரை கனம் சொன்னாய். ஆறுக்கு மேல் கனங்கள் என்ன?”

“ஏழின் கனம் முந்நூற்று நாற்பத்து மூன்று. எட்டுக்கு ஐநூற்றுப் பன்னிரண்டு. எட்டு வரை, ஆயிரத்தில் பாதிதான் ஆகி இருக்கிறது. அப்புறம், எழுநூற்று இருபத்து ஒன்பது, உடனே அடுத்தது ஆயிரம்!”

விநயன் புன்முறுவல் செய்தான்.

“இப்போது, முதல் தொகுதியில் உள்ள எண்ணுக்குக் கனமூலத்தை ஊகிக்க வேண்டும், இல்லையா?” என்றாள் கோதை.

“ஆமாம். இருநூற்று எழுபத்தேழு -க்கு கனமூலம் என்னவாக இருக்கும்?”

“ஆறின் கனம் இருநூற்றுப் பதினாறு, ஏழின் கனம் முந்நூற்று நாற்பத்து மூன்று. கன மூலத்தின் முதல் இலக்கம் ஆறாகத்தான் இருக்கவேண்டும்.”

நன்று! முதல் கட்டத்தைத் தாண்டிவிட்டாய். இனி இரண்டாம் தொகுதியின் மூவினைகளைப் பார்ப்போம். முதல்வினையின் பெயர் என்னவென்று சொன்னேன்?”

“பகுத்தல்.”

நன்று. இப்போது எதைப் பகுக்கவேண்டும் என்று பார்ப்போம். கண்டுபிடித்த இலக்கத்தின் கனத்தை, முதல் தொகுதி எண்ணிலிருந்து கழி.”

இருநூற்று எழுபத்தேழில் இருந்து, இருநூற்றுப் பதினாறைக் கழிக்கவேண்டும் இல்லையா? அறுபத்தொன்று.”

“இதற்குப்பின்னால், இரண்டாம் தொகுதியின் முதலெண்ணை இறக்கிச் சேர்த்துக்கொள்.”

அறுநூற்றுப் பதின் ஒன்று.

“இதை, வகுக்க வேண்டும். வகுத்தால் வரும் ஈவுதான் இரண்டாம் இலக்கம்.”

“எதால் வகுக்க வேண்டும்?”

“கிடைத்த இலக்கத்தின் வர்க்கத்தின் மும்மடங்கு”

“கிடைத்திருப்பது ஆறு. ஆறின் வர்க்கம் முப்பத்தாறு. அதன் மும்மடங்கு நூற்றியெட்டு. அறுநூற்றுப் பதின் ஒன்றை நூற்றியெட்டால் வகுத்தால், ஈவு ஐந்து. ஐந்து முறை நூற்றியெட்டு, ஐநூற்று நாற்பது. ஐநூற்று நாற்பத்தை அறுநூற்றுப் பதின் ஒன்றில் இருந்து கழிக்க வேண்டுமா?”

“ஆமாம். எழுபதும் ஒன்றும். இதற்குப் பின்னால், அடுத்த எண்ணை இறக்கிக்கொள்.”

“எளிதாக இருக்கிறது. அடுத்த எண் ஆறு. இப்போது கையில் எழுநூறும் பதினாறும்.”

“எளிதுதான். இந்த இடத்தில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. சில முறை, வந்த ஈவை விட, ஒன்று குறைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அது இப்போது வேண்டாம். குழம்பி விடும். அப்படி ஓர் எண் வரும்போது சொல்கிறேன். இதுவரை கிடைத்த இலக்கங்கள் ஆறு மற்றும் ஐந்து. இப்போது முதல்வினையான பகுத்தல் முடிந்துவிட்டது. இரண்டாம் வினை என்ன?”

“கழித்தல்”

“ம். முதலில் கிடைத்தது, அடுத்ததாகக் கிடைத்ததின் வர்க்கம். இவை இரண்டையும் பெருக்கி, அதன் மும்மடங்கை கண்டு பிடி.”

“ஆறு. அடுத்துக் கிடைத்த ஐந்தின் வர்க்கம் இருபத்தைந்து. இரண்டையும் பெருக்கினால் நூற்றைம்பது. அதன் மும்மடங்கு நானூற்று ஐம்பது. இதால், கையில் இருப்பதை வகுக்க வேண்டுமா?”

“அவசரப்படுகிறாயே. நானூற்று ஐம்பது சரி. ஆனால், என்ன வினை செய்யவேண்டும் இப்போது?”

“ஓ! புத்திமட்டு. கழித்தல். எழுநூற்றுப் பதினாறில் இருந்து நானூற்று ஐம்பதைக் கழித்தால், இருநூறு மற்றும் அறுபத்தாறு.”

நன்று. இரண்டாம் வினையில் நமக்கு எதுவும் விடை கிடைக்காது. அடுத்த பகுத்தலின் போதுதான், நமக்கு மூன்றாம் எண் கிடைக்கும். புரிந்ததா?”

ஆர்வமாகத் தலையாட்டினாள் “எனக்கு ஒன்று தோன்றுகிறது. சொல்லவா?”

“சொல்லேன்”

“இந்த இரண்டு எண்களை வைத்துக்கொண்டே மூலத்தை ஊகித்து விடலாம் அல்லவா?

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. புத்திசாலிப் பெண்தான். அவள் வாயாலேயே சொல்ல வைக்கலாம் என்று நினைத்து, “எப்படி” என்றான்?

“ஈற்று இலக்கத்தில் இருக்கும் எண்ணை வைத்து. ஈற்றில் ஒன்று இருந்தால், மூலத்திலும் ஈறு ஒன்று. ஈற்றில் இரண்டு இருந்தால், மூலத்தின் ஈறு எட்டு. மூன்றுக்கு மூலம் ஏழு. நான்குக்கும், ஐந்துக்கும் ஆறுக்கும் மூலத்திலும் நான்கும் ஐந்தும் ஆறும்தான் இருக்கும். ஏழுக்கு மூலம் மூன்று, எட்டுக்கு இரண்டு. ஒன்பதுக்கு ஒன்பதுதான். நாம் எடுத்துக்கொண்டதின் ஈற்றிலக்கத்தில் எட்டு இருக்கிறது. அப்படியென்றால் இரண்டு தான் மூலத்தின் ஈறு. ஏற்கனவே ஆறும் ஐந்தும் கண்டுபிடித்துவிட்டோம். கன மூலம் அறுநூற்று ஐம்பத்திரண்டு. சரியா?”

முகத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்கப் புதையல் கண்டு பிடித்ததைப் போலக் கண்கள் விரிய விநயனையே பார்த்தாள். ‘பாராட்டுங்கள் பாராட்டுங்கள் என்று கேட்பதைப் போல அவள் இதழ்கள் துடித்தன.

அவனுக்கு ஏனோ சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிரித்ததும் அவள் வதனம் சுணங்கிவிட்டது. “தப்பா?” என்றாள் தீனக்குரலில்.

“இல்லை இல்லை. அற்புதம். கணக்கில் இவ்வளவு புலியாக இருக்கிறாயே!”

அவள் நம்பவில்லை. “விளையாடாதீர்கள். நான் யோசித்தது சரிதானே?”

“விளையாடவில்லை. மெய்யாகத்தான் சொல்கிறேன். தீக்ஷணப் புத்தி உனக்கு. சரியாகத்தான் யோசித்திருக்கிறாய். கொடுக்கப்பட்டது முழு கனமாக இருக்கும் பட்சத்தில், நீ சொல்வதுபோல, வெகு சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம். மொத்த வழியையும் தெரிந்து கொள்வது, முழுமையான அறிவைக் கொடுக்கும்”

“புரிகிறது. நீங்கள் மேலே சொல்லித் தாருங்கள். இப்போது கையில் இருநூறு மற்றும் அறுபத்தாறு இருக்கிறது. ஆறு ஐந்து என்று இரண்டு இலக்கங்களைக் கண்டு பிடித்து இருக்கிறோம். அடுத்துக் கீழே இறக்க வேண்டிய இலக்கம், ஏழு. அதையும் சேர்த்தால், கை எண் இரண்டாயிரத்து அறுநூற்று அறுபத்தேழு”

“உத்தமம். அடுத்த செயல் என்ன?”

“கனம்.”

“ம். இறுதியாகக் கண்டுபிடித்ததின் கனத்தை, கை எண்ணிலிருந்து கழி.”

“ஓ! இறுதியாகக் கண்டுபிடித்தது, ஐந்து. ஐந்தின் கனம் நூற்று இருபத்தைந்து. இரண்டாயிரத்து அறுநூற்று அறுபத்தேழிலிருந்து நூற்று இருபத்தைந்தைக் கழிக்க, இரண்டாயிரத்து ஐநூற்று நாற்பத்திரண்டு.”

“இத்தோடு இரண்டாம் தொகுதியின் மூவினைகளும் முடிந்த. இனி, மூன்றாம் தொகுதியை எடுத்துக் கொள்ளவேண்டும். இது எளிது. இரண்டாம் தொகுதியைப் போலத்தான். முதலில் பகுத்தல், பிறகு கழித்தல், இறுதியாக மும்மித்தல். இதில் ஒரு முக்கியமன விஷயம் என்னவென்றால், இது வரை கண்டுபிடித்த இரண்டு எண்களையும் சேர்த்து, ஒரே எண்ணாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஆறு ஐந்து. இவை இரண்டையும் சேர்த்தபடி வைத்து, அறுபத்தைந்து என்று வைத்துக்கொண்டுதான் அடுத்த செயல்களைச் செய்ய வேண்டும் புரிந்ததா?”

அவள் கண்ணைக் கொட்டிக்கொண்டு தலையாட்டினாள்.

“சரி. பகுத்தல் செய். பார்க்கலாம்”

கரத்தில் இருக்கும் எண் இரண்டாயிரத்து ஐநூற்று நாற்பத்திரண்டு. மேலிருந்து அடுத்த எண்ணை இறக்கிக் கொள்ள வேண்டும். அடுத்த எண் எட்டு. கை எண் இருபத்தைந்தாயிரத்து நானூற்று இருபத்தெட்டாக ஆகிவிடும். கண்டுபிடித்த எண் அறுபத்தைந்தின் வர்க்கத்தை மூன்றால் பெருக்கிக் கொண்டு அதால் கை எண்ணை வகுக்க வேண்டும். சரியா?”

“அபாரம். சிக்கென்று பிடித்துக் கொண்டாய்.”

வெட்கப்பட்டுச் சிரித்தாள். அறுபத்தைந்தின் வர்க்கம் .. ம் .. நான்காயிரத்து இருநூற்று இருபத்தைந்து. அதை மூன்றால் பெருக்க எழுபத்தைந்து, மூவிரண்டு ஆறு, மூன்று நான்கு பன்னிரண்டு. பன்னிரண்டு ஆறு” என்று முணுமுணுத்துக்கொண்டே அவள் மனக்கணக்காகக் குணகாரம் செய்வதை இரசித்துப் பார்த்து கொண்டிருந்தான்.

“போட்டாயிற்றா?”

“ம்” வேகமாகத் தலையாட்டிக்கொண்டே “பன்னிரண்டாயிரத்து ஆறுநூற்று எழுபத்தைந்து” என்றாள்.

செவ்வி! இந்த எண்ணால், இருபத்தைந்தாயிரத்து நானூற்று இருபத்தெட்டை வகு.”

“இதை மனக்கணக்காகப் போட முடியாதே” என்று முதலில் தயங்கினவள், இரண்டும் ஐந்து இலக்கம், முதல் இரண்டு இலக்கம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு என்ற உண்மை உறைக்கச், சட்டென்று முகம் பிரகாசமாகி, ‘அடே, இரண்டு!” என்று கூவினாள். “இப்போது நமக்கு மூலத்தின் மூன்று இலக்கங்களும் கிடைத்துவிட்டன. ஆறு ஐந்து இரண்டு தான் கனமூலத்தில் உள்ள எண்கள். இரண்டு முறை பன்னிரண்டாயிரத்து ஆறுநூற்று எழுபத்தைந்து இருபத்தைந்தாயிரத்து முந்நூற்று ஐம்பது. இருபத்தைந்தாயிரத்து நானூற்று இருபத்தெட்டிலிருந்து இதைக்கழிக்க, கரத்தில் எழுபத்தெட்டு தங்கும்.”

“உத்தமம். இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது. எஞ்சிய இரண்டு செயல்களையும் செய்து விடுவோம். அடுத்த வினை, கழித்தல்.” என்று வழிப்படுத்தினான் விநயன்.

“மேலே இருந்து சூனியத்தை இறக்கிக்கொண்டேன். கை எண் எழுநூற்று எண்பதாக ஆகிவிட்டது. இரண்டாம் தொகுதியில், கழித்தல் வினையில் கண்டுபிடித்ததைப் போல, இரண்டாவதாகக் கிடைத்ததையும், கடைசியாகக் கண்டுபிடித்ததின் வர்க்கத்தையும் பெருக்கி, அதன் மும்மடங்கைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் சொன்னதுபோல, முதல் மூலத்தையும், இரண்டாம் மூலத்தையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, அறுபத்தைந்து, இந்த அறுபத்தைந்தை, இப்போது கண்டுபிடித்த எண், அதாவது இரண்டின் வர்க்கத்தால் பெருக்கிக் கொண்டேன். இருநூற்று அறுபது. அதன் மூன்று மடங்கு, எழுநூற்று எண்பது. இதுதான் கையில் இருக்கும் என்னும் கழித்தால் சூனியம்! பிறகென்ன செய்வது? எல்லாம் முடிந்துவிட்டதே?

இதுவரை அழகாகச் செய்தாய். சூனியம்தான். ஆனாலும் இன்னொரு எண் மீதம் இருக்கிறதே? அதை இறக்கிக்கொள்”

“எட்டு. இறக்கிக்கொண்டேன். ஆங்! விளங்கிவிட்டது. மூன்றாவது வினை மும்மித்தல். அதாவது கனம். றுதியாகக் கிடைத்த எண்ணின் கனம். கடைசியாகக் கிடைத்த எண் இரண்டு. அதன் கனம் எட்டு! எட்டை, எட்டில் இருந்து கழித்தால், சூனியம்! ஆஹா! நீங்கள் கொடுத்த எண் முழு கனம்.” உணர்ச்சியை அடக்க மாட்டாமல் எழுந்து குதித்தாள்.

அவள் செய்த கூச்சலைக் கேட்டு, உள்கட்டில் வேலையாக இருந்த, அவள் அன்னையும், மேலே பரணில் எதையோ வைத்துக் கொண்டிருந்த குக்கேஸ்வரரும், “என்ன இப்படிக் குதிக்கிறாள்” என்று கேட்டுக் கொண்டே வந்தனர்.

“அம்மா! அப்பா! நான் கன மூலம் கண்டு பிடிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். அப்பா, எனக்கு ஏதாவது ஒரு எண்ணைக் கொடுங்கள். நான் கனமூலத்தைக் கண்டுபிடித்துக் காட்டுகிறேன்” என்று குதித்தாள்.

“இனி இவளைக் கையில் பிடிக்க முடியாது.” என்று சிரித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டாள் கோதையின் அம்மா.

அன்று இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுச் சத்திரத்துக்குத் திரும்பி வந்தான் விநயன். கோதையின் கண்கள், அவனுடைய பின்னாலேயே மிதந்து வருகிறதைப் போல உணர்ந்தான்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...