(மேலே தொடரும் முன்பு, ஒரு சிற்றவலோகனம். அமோகவர்ஷனின் அலமரலில் ஆரம்பித்த இப்படைப்பு. அவனிடமிருந்து விலகி, அவனுடைய பாட்டனாரின் ஒன்றுவிட்ட சகோதரன் இரட்ட ஸாம்ராஜ்ஜியத்தைத் தாபித்ததில் இருந்து, இரட்டர்களின் வரலாற்றைச் சொல்லி வருகிறது. சிலருக்கு இப்புதினத்தின் நாயகன் யார்? என்ற கேள்வி அவ்வப்போது எழலாம். அவன் அமோகவர்ஷன் என்று முதலிரண்டு அத்தியாயங்களைப் படித்ததும் கிளைத்த கருத்து, மேலே செல்லச்செல்ல, விநயாதி சர்மனோ அல்லது பிரதாபரோ என்ற சங்கைக்கு உட்பட்டிருக்கலாம். ஆனால், ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் செய்திச் சிதறல்களின் ஊடே நோக்கினால், நிருபமதுங்க தாரவர்ஷன்தான் அவன் என்பது சிலருக்குத் திட்பத்துடன் தளிந்திருந்திருக்கும். இந்தக் கருத்தை, அவனைப் பற்றி அதிகம் பேசப் போகும் இந்த இறுதிப் பகுதி உறுதிப் படுத்தும் என்று நம்புகிறேன்.
இன்னொரு விஷயம். ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பே, மஹாவீராசார்யர் என்பவரால் கணிதத்துக்கென்றே முதன்முதலில், எழுதப்பட்ட கணிதசார சங்கிரகத்தில் இருந்து Truth Table -ஐப் பற்றிய அறிமுகமும், nCr = n!/{(n-r)!r!} என்ற சூத்திரத்தின் அடிப்படையும், Factorial என்ற சித்தாந்தமும், ax + c = by, என்ற நேர்கோட்டுத் தனிச்சமன்பாட்டுக்கு, மிகக் குறைந்த மதிப்புள்ள விடையைக் கண்டுபிடிக்கும் வழியும், கதையின் ஊடே விநயாதிசர்மன் கூறும் கணிதக் கோட்பாடுகள் வாயிலாக வாசகர்களுக்குப் படிக்கக் கிட்டியிருக்கும். இவற்றைக் கதையோடு இணைத்திருப்பது, புதினங்கள், புதினங்கள் அல்லாதவை என்ற பாகுபாட்டுடன் மட்டுமே இலக்கியப் படைப்புக்களைப் படித்துப் பழகியவர்களுக்கு, அவசியமில்லாத இடைச்செருகலாகத் தோன்றி இருக்கலாம். அதேபோல, இப்போதிருக்கும் கர்நாடக ஸங்கீதம் அப்போதில்லை என்பதாலும், மேளகர்த்தா என்னும் அமைப்பு இன்னும் உருவாகாத காலமானதினாலும், ஸங்கீதத்தைப் பற்றிய குறிப்புக்களும் சற்று அந்நியமாகப் பட்டிருக்கலாம்.
ஆனால், இவையெல்லாம் உசவியும், உத்தேசித்தும் கதையோடு பின்னப்பட்டவை. இப்படைப்பு, சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினமாகவோ அல்லது
சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையாகவோ இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்டு, நம்முடைய நெடிய கடந்தகால வரலாற்றின் ஒரு பகுதியை நமக்கு
அறிமுகப் படுத்தி, அதைப்பற்றிய சிந்தனையையும்
நமக்குள்ளே தூண்டிவிடும் கற்பனை மேவிய ஓர் உருவாக்கம் என்று முன்னுரையில் சொல்லியிருந்தேன்.
இத்தனை பக்கங்கள் தாண்டி வந்து,
இந்தக் குறிப்பை நீங்கள் படித்துக்கொண்டிருப்பதால், மேலோட்டமான வாசிப்பின் அயர்ச்சியை கடந்தவரான உங்களுக்கு
நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரிந்திருக்கும். இந்தப் புரிதலுடன் இனி மேலே தொடர்வோம்.)
சில நாட்களுக்குப் பிறகு, பிரதாப வர்த்தனர் அழைப்பு அனுப்பினதும் போய்ப் பார்த்தான்.
“வா வா சதகுடி தீபப் பிரகாசகா!” என்று வரவேற்றார்.
“ஐயா!” என்று தர்மசங்கடத்தோடு கரம் குவித்தான்.
“உண்மைதானே! நல்ல பெயர் சூட்டினான் அந்தத் தலையாரி. நியாயாதிபதி உன்னை மிகவும் மெச்சினார்”
“அவரைப் பார்த்துப் பேசினீர்களா? அவருடைய தீர்ப்பை நிறைவேற்றுவது இத்தனை சிக்கலாக இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்,”
“ஆமாம். தான் ஏதோ, ஒரு சந்நிதிக்கு ஐந்தாறு விளக்குக்கள் என்றால், ஐந்து சந்நிதிகளுக்கு இருவாரங்களுக்கு ஒரு முன்னூறு நானூறு உழக்கெண்ணெய் தேவைப்படும், நூறு குடிகள், குடிக்கு இரண்டு மூன்று உழக்குக்கள் தரவேண்டி இருக்கலாம் என்று நினைத்துவிட்டதாகச் சொன்னார். பாவம் கிராமம்”
“ஆமாம். ஆனால், ஒருவிதத்தில் தண்டனை சிக்கலாகப் போனது சரிதான். இனி, இன்னொரு ஊரார் இப்படிக் கோவில்களை இருளில் மூழ்கடிக்க மாட்டார்கள்.”
“கிராமத்தினர் மீண்டும் போய்ப் பார்த்திருக்கிறார்கள். நியாயாதிபதி தீர்ப்பை மாற்றமாட்டேன் என்று சொல்லி விட்டார்.”
“ஹா ஹா ஹா! கொடுக்கும் எண்ணெயை வாங்கிச் சேர்ப்பதில் சிக்கல் ஒரு பக்கம், அந்தப் பதினான்கு தீபமும் எரிந்தால், அந்த இடம் எப்படி இருக்கும் பாருங்கள். வெப்பம் அதிகமாக இருக்கும்.”
“பல சந்நிதிகள் பெரியவைதான். மஹாதேவரும் மாதவரும் தாங்குவார்கள். பெரிய பிராகாரங்கள். நான் தரிசித்திருக்கிறேன். சில சந்நிதிகள் சிறியவை. நீ சொல்வதுபோல வெப்பித்தணியும். கிராமம் கொஞ்சநாள் அவதிப்படட்டும் என்று விட்டுவிட்டார். சிலநாள் போனபின், தீர்ப்பை மாற்றிவிடுவார் என்று படுகிறது.” என்ற பிரதாப வர்த்தனர், “சரி, நாம் கதைக்கு வருவோம். இரட்டபாடியின் ஸ்தாபனத்தையும், அதையெப்படி அகாலவர்ஷர் கிருஷ்ணராஜா ஸ்திரப்படுத்தினார் என்பதையும், பெரிய கோவிந்தர் அரசாண்டபோது, சுற்றி நிலவிய சூழ்நிலையையும், அப்படிப்பட்டச் சூழ்நிலையில், துருவரை அரியணைக்கு வரவிடாமல் தடுக்கப் பெரிய கோவிந்தர் அழைத்த அரசர்களைப் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொண்டு விட்டாய். இன்று இந்த எதிர்ப்பை எப்படி நிருபமதுங்க தாரவர்ஷர் முறியடித்து ஆட்சியைக் கைப்பற்றினார் என்று சொல்கிறேன்.” எனத் துவங்கினார்.
“துருவராஜாவின் அரியணை ஏறிய கதையைப் பிரபூதவர்ஷ ஜகத்துங்கர் கோவிந்தராஜாதான்
எங்களுக்குச் சொன்னார்.” என்று பிரதாபர், கோவிந்தராஜா கூறத் தான் கேட்டவற்றை
விவரித்துச் சொல்ல முற்பட்டார். விநயாதிசர்மனுக்கு, அந்தக் கீர்த்திநாராயணரே
நேரில் பேசுவது போலத் தோன்றியது.
****************************
“இராட்டிரக்கூடத்தின் பிறப்பால், சோபையை இழந்த சத்துருக்கள், தத்தம் பெருமையை மீட்டெடுக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பள்ளிப் பருவத்தில் இருந்த இரட்டக்குழந்தையை வலுப்படுத்தாமல், வளர்ச்சி குன்றச் செய்து, தம்பியின் பேரில் ஏற்பட்ட விரோதத்துக்காகச் சத்துருக்களுக்கே நாட்டைத் தத்தம் செய்யத் துணிந்துவிட்டார் என் பெரியதந்தை.
“கற்கனுக்கும், எனக்கும், இளையவன் இந்திரனுக்கும் அவரைப் போரில் சந்திக்க வேண்டியதுதான் சரியான வழி என்று தோன்றிவிட்டது. ஸ்தம்பன் மட்டும் மீண்டும் பேசி, அவருடைய கோபத்தைத் தணிக்கப் பார்க்கலாம் என்றான். அவனுடைய வாள்வீச்சும், போர்த்திறனும், நிர்வாகமும் எங்களுடைய திறலுக்கு எவ்விதத்திலும் குறைந்ததன்று. இரணவலோகன் என்ற பெயருக்குப் பொருத்தமானவன்தான் அவன் என்றாலும் எப்போதும் ஒரு தயக்கம் அவனிடம் குடிகொண்டு இருக்கும். அமருக்குப் பிடித்துத் தள்ள வேண்டும் அவனை. எதிரி என்று நாம் ஒருவனை வரையறுத்துவிட்டபின், அவனை எதிர்க்கத் தயக்கம் காட்டலாமோ? எதிரி வளர்வதற்கு வாய்ப்பும் நேரமும் கொடாமல், நாற்றைப் பிடுங்குவதைப் போலப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். இல்லையென்றால், அது ஆபத்தைத்தான் கொண்டு வந்து சேர்க்கும்.
“எங்களுடைய அருப்பத்தாலும், தந்தைக்கே ஏற்பட்டு விட்ட மனமாற்றத்தாலும், பெரிய தந்தையை எதிர்ப்பது என்று முடிவாகி விட்டது. ஆனால், பெரும் அதிகாரத்துடன், ஆட்சி புரியும் அரசரை, வடக்கு, கிழக்கு, தெற்கு என்று முத்திக்கிலும் இருக்கும் அவந்தியும், காஞ்சியும், கங்கமும், மற்றும் வேங்கியும் துணை புரியச் சித்தமாக இருக்கும் அரசரை, எப்படி எதிர்த்து வீழ்த்துவது? யார்யார் நமக்குத் துணை செய்வார்கள், யார்யாரை எல்லாம் நம்பலாம் என்று ஆராய்ந்தோம். யாரிடம் பிரஸ்தாபித்தால், துணை வருவார்கள், யார் மேலோட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு, எங்கள் ஆயத்தங்களை எல்லாம் அரசரிடம் அம்பலப் படுத்திவிடுவார்கள் என்று தந்தை கணித்தார். எதைச் செய்தாலும் அத்தியந்த இரகசியமாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களோடு மட்டும் செய்யவேண்டிய கட்டாயம்.
“சாளுக்கியர் மற்றும் பாண்டியனின் தொல்லை இல்லாமல் இருந்த சில வருடங்களில், பல்லவமல்லன் பெரும்வலிமை பெற்றுவிட்டிருந்தான். கிருஷ்ண மஹாராஜாவோடு சேர்ந்து கொண்டு பிரசித்தி படைத்த கங்கத்தின் யானைகளைப் பல்லவக் குஞ்சரப்படை பொருத விதத்தைக் கண்டவர்களுக்குத் தெரியும், காஞ்சிப் படையின் வலிமை எப்படிப்பட்டதென்று. தக்கணத்தில் இராட்டிரக்கூடத்துக்குப் பிறகு, அவன்தான் பெரிய ராஜன். சிறுவயதிலேயே கடினமான சூழ்நிலையில் அரியணை ஏறியவனுக்கு, அரியணையில் வீற்றிருக்கும் தமையனைத் தம்பி எதிர்த்து நிற்பதை உண்டறுக்க முடியவில்லை. தந்தையோடு பழகியவனில்லை ஆதலால், அவர் செயல் ராஜத்துரோகம் என்று அவன் தீர்மானித்து விட்டிருந்தான். தந்தை, தனக்கு நெருங்கிய தளபதி புருஷோத்தமனைத் தூதனுப்பி, தான் செய்வது ராஜத்துரோகமன்று என்றும், நாட்டுக்காகவும், நாட்டில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் விருப்பப்படியும்தான் தான் எதிர்க்கிறேன் என்று விஷயத்தை வெளிப்படையாகத் தெளிவு படுத்தியிருந்தும், செவிசாய்க்க மறுத்துவிட்டான்.
“உறவினன் வேறு அல்லனா? கொல்லவேண்டிய எதிரியா, தோற்கடிக்க வேண்டிய எதிரியா என்பதில் பெருங்குழப்பம் எங்களுக்கு. எதிரிதான் என்று முடிவு கட்டிவிட்டால், பாதகம் இல்லை. இப்படி நட்பில் இருக்கும் உறவுக்கார எதிரியை எதிர்ப்பது, முள்ளில் விழுந்த ஈர வேட்டியை எடுப்பது போல அல்லவா? இருந்தாலும், அப்போதைக்குக் காஞ்சி எங்களை எதிர்ப்பான் என்பது ஊர்ஜிதம் ஆகிவிட்டதால், எதிரியாகத்தான் கணக்கிட்டோம். பாணர்களும், நொளம்பர்களும் அவனுக்குத் துணை இருப்பார்கள், என்பதும் தெரிந்து விட்டது. இவர்கள் மூவரும் சேர்ந்து கொண்டால், கிழக்குத் திக்கில் இருந்து வரும் படைகள், இரட்டத்தை மாம்பழக் கதுப்பைத் துண்டாடுவது போல, கிழக்கு மேற்கில், கிடைக்கோட்டாக வகுந்து விடும் அபாயம் இருந்தது.
“வேங்கி, வடகிழக்கில், இடக்கரத்தை வெட்டியெடுக்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. பலத்தோடு நர்மதையைத் தாண்டி, பிரதிஹாரன் மாளவத்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டால், சாம்ராச்சியத்தின் தலை போய்விடும். கால் பகுதியில் கேட்கவே வேண்டாம். கங்கவாடியின் அரசன், மாவீரன் ஸ்ரீபுருஷனுக்கு வயதாகிவிட்டாலும், அதை அப்போது ஆண்டு கொண்டிருந்த அவனுடைய மகன் சிவமாறன் தந்தையை விட மிக்க ஆவேசமான வீரன். எப்படிப்பட்ட போருக்குப் பிறகு, கங்கம் அடங்கியது! சாளுக்கிய அரசு இருந்தவரை, காஞ்சிக்கும் கங்கத்துக்கும் கனிவில்லாமல் வேரூன்றிக் கிடந்த காழ்ப்பு வேறு அப்போது மறைந்து சிவமாறனுக்கும் பல்லவனுக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டுவிட்டிருந்தது. சாளுக்கியப் படைகளோடு சேர்ந்து, கங்கப் படைகள், காஞ்சியைத் துவம்சம் செய்ததையும், ஸ்ரீபுருஷனின் படைகளோடு சேர்ந்து கொண்டு, பாண்டியன் தன் நாட்டைக் கவர்ந்து, தன்னைச் சிறையில் அடைத்து வாடவிட்டதையும், பித்தன் போலத் தலைமறைவாக்கித் திரிய விட்டதையும், பல்லவமல்லன் மறந்து விட்டிருந்தான்! இந்த இணக்கத்துக்குக் கிருஷ்ண மஹாராஜாதான் காரணமாக இருந்தாலும், அதற்கான நன்றிக் கடனைப் பல்லவனும், கங்கனும் பெரிய தந்தைக்குத்தான் செலுத்தச் சித்தமாக இருந்தார்களே தவிர, எங்களுக்கு இல்லை. நாங்கள் தோற்கடிப்பட்டுவிட்டால், அவர்களுடைய கை ஓங்கி, வருங்காலத்தில் கோவிந்தருக்குப் பிறகு, இராட்டிரக்கூடத்தையே இவர்கள் தமக்குள் பங்கு பிரித்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிளைத்திருந்தது. கோவிந்தராஜாவும் அப்படித்தானே ஆசை காட்டியிருந்தார்!
“மேற்குப் பகுதியில், தென்கொங்கணராஜன் ஜாலபுல்லன் ஸ்ரீஷைலஹாரன் மட்டுமே நட்புக்கு எஞ்சினான். ஆனால், ஆளுபராஜனின் எதிர்ப்பு, அவனை, எங்களுக்குத் துணையாக வரவிடாமல் தடுத்துவிடும் வாய்ப்பு இருந்தது. முத்திக்கிலும் வரும் சைனியங்கள் ஒன்று சேர்ந்தால், மேலைக் கடல்தான் எங்களுக்கு யமலோகத்தைக் காண்பிக்கும் துவாரமாகி நின்றது.
“இதனால், எதைச் செய்தாலும், அதை விரைவாகச் செயல்படுத்த வேண்டும், வலிமையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் தந்தை. நாள் கடத்தினால், இரட்டம் பொசுங்கிவிடும் என்ற நிலைமை எங்களுக்கு நிதரிசனம் ஆக ஆகப் பெரியதந்தையின் மீது கோபம் கோபமாக வந்தது. எப்படி ஓர் அரசன், இம்மாதிரித் திட்டத்தை யோசிக்க முடியும்? இதில் யாருக்கு நன்மை? தனிப்பட்ட அகங்காரம் நாட்டையே அல்லவா படுகுழிக்குள் தள்ளக் காரணமாகி வளர்ந்து நின்றது.
“நினைத்து நினைத்து அலமர்ந்த தந்தையின் மனம் நாளடைவில் வைரமாக இறுகியது. ராஜத்துரோகமாவது, பாபமாவது. சகோதரப் பாசமாவது. இரட்டபாடியை மீட்டெடுத்துத் தனித்து நிற்கச் செய்வதுதான் கடமை என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தார். அதிகார ஆசையினாலோ, மண்ணாசையினாலோ இல்லை.
“அத்யந்த விஷயாஸக்தம் ப்ரஜாத்³ரவ்யாபஹாரகம் |
பி⁴ன்ன மந்த்ரி ப³லம் ராஜா பீட³யேத்பரிவேஷ்டயன் ||
“எந்த அரசன், சிற்றின்பவிஷயத்தில் மூழ்கிக் கிடக்கிறானோ, யார் குடிகளின் செல்வத்தை அபகரிக்க முனைகிறானோ, யாருக்கு அமைச்சர்களின் ஆதரவு இல்லையோ, அவன் நாற்புறமும் சூழப்பட்டுத் தாக்கப்பட வேண்டியவனாகிறான். இது கலகமில்லை. விக்ரஹம் என்னும் போர்தான். இப்போரில் வெற்றி நிச்சயமில்லை. வாய்ப்பும் குறைவு. தோற்றால், அந்தத் தோல்வி எங்களை மட்டுமன்று, எங்கள் சந்ததிக்கே குந்தகம் விளைவிக்கும் என்று தந்தை அஞ்சினாலும், நாங்கள் எல்லோரும், ‘எங்களைப் பற்றி விசனம் கொள்ளாதீர்கள். இதைச் செய்யவேண்டியது நம் கடமை. செய்யுங்கள்’ என்று உறுதி கொடுத்ததால், உத்வேகத்துடன் அமருக்கான திட்டங்களைத் தீட்டத் துவங்கினார். முதற்படியாகப் படைபலத்தையும், அவை வரக்கூடிய வழியையும் கணிக்க முற்பட்டோம்.
“படையின் ஆற்றல் வெற்றியை நிர்ணயிப்பதில், முக்கியப் பங்கை வகித்தாலும், போரில் இறங்குமுன், எதிரிப் படைகளின் அளவையும், எண்ணிக்கையையும் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். பல லட்சம் பெரிதான சேனை இருந்தால், இது தேவையில்லைதான். கல்லையும் மண்ணையும், மரத்தையும் மேட்டையும், குழியையும் கோட்டையையும் அரித்துக் கொண்டு செல்லும் கோதாவரி வெள்ளம் போல, எதிர்ப்புக்களை ஒரேயடியாக அரித்து, அடித்துக்கொண்டு சென்று விடலாம். ஆனால், உயிர்களும், விலங்குகளும், தானியங்களும், தனங்களும் அன்றோ கூடவே அழிபட்டு விடும்? எதிரியுடைய நிலையை அறிந்துகொண்டு செயல்பட்டால், குறைந்த படையை வைத்துக் கொண்டிருந்தாலும், குறைவான சேதத்துடன், வெற்றியடையலாம்.
“பகையின் படையளவை எப்படி அறிவது? இதற்கு ஒற்றர்கள் தேவை என்பீர்கள். அது சரிதான். ஆனால், ஒற்றர்களை எப்படி எதிரியின் நாட்டில் ஊடுருவ வைப்பது? ஒரே திக்கில் இருக்கும் ஓரெதிரி நிலைமை அன்றே இது? அப்படி ஊடுருவ வைத்தாலும், அவர்களிடம் இருந்து இந்தச் செய்தியை எப்படிப் பெறுவது? ஒற்று செய்தல், ஓர் அசாதாரணமான கலை. இதில் எந்த அரசன் நிபுணத்துவம் பெறுகிறானோ, அவன் தனக்கு அதிகச் சேதமின்றி வெற்றியை ஈட்டுவான். அரச பலம் இருந்தால் இதை நடைமுறைப்படுத்துவது எளிது. ஆளும் அரசருக்கு எதிராக நாங்கள் அணிவகுக்கும்போது இதையெப்படி இரகசியமாகச் செய்வது? ஓர் இடத்தில் கசிந்தாலும் போதும். எல்லாமே சர்வ நாசமாகிவிடும்.
“இதைத்தான் தந்திதுர்க்க மஹாராஜா செய்தார். அதன் விளைவாக, ஒரு சேதமும் இல்லாமல், கீர்த்திவர்மனைத் தெற்கும் ஓச்சி, இந்த ஸாம்ராஜ்ஜியத்தையே ஸ்தாபித்தார். பாட்டனார் கிருஷ்ணராஜாவும் இதில் சமர்த்தர். ஆனால், துருவமஹாராஜாவோ, அவர்கள் இருவரையும் விட, அதி நிபுணர். வெள்ளொளிப் பிராயம் வரை, வெளியுலகத்துக்கும், மற்ற அசர்களுக்கும் அவ்வளவாக அறிமுகப்படாதவராக அவர் இருந்திருந்தாலும், அவர் போது வாளாய்க் கழிந்திருக்கவில்லை. அமர்ந்த இடத்தில், அவருக்கு விஷயம், கன்யாகுப்ஜத்திலிருந்தும் காஞ்சியிலிருந்தும், வலபியிலிருந்தும், வேங்கியிலிருந்தும் கசியும். அப்படியோர் ஒற்றர் வலைப் பின்னலை நிர்மாணித்திருந்தார். அரசரைத் தாண்டி, அவரிடம் தனிப்பட்ட முறையில் விசுவாசமானவர்களை வைத்து அவர் பின்னி வைத்திருந்த வலை அது.
“அவர் அடிக்கடி எனக்குச் சொல்வது இதுதான். ‘சிலந்திவலை பார்த்திருக்கிறாயா கோவிந்தா? இழைஇழையாய்ப் பின்னிவிட்டு, எங்கேயோ தனியாக அமர்ந்திருக்கும். எல்லாத் திக்கின் இழைகளிலும், அதனுடைய ஸ்பர்சம் உண்டு. எந்தத் திக்கில், எந்தக் கணுவில், எப்படிப்பட்ட பூச்சி சிக்கி இருக்கிறது என்று சரியாக அந்த இழை அதிர்வைப் பிடித்து, அதை உணர்ந்து விடும். சில சமயம் இழையை அறுத்துத் துளை செய்து பூச்சி தப்பிவிடும். அதையும் உணர்ந்து கொண்டு, உடனேயே அந்தத் துளையைச் செப்பனிட்டும் விடும். வலையின் பணி, பூச்சியைச் சிக்கவைப்பது மட்டுமன்று. பூச்சி சிக்கியிருக்கிறது என்பதைச் சிலந்திக்குத் தெரிவிப்பதும்தான். தினமும் அது வலையைப் புதுப்பிக்கும். இரவெல்லாம் பணிசெய்து வலையைப் பின்னிக் கொண்டும் செப்பனிட்டுக் கொண்டுமிருக்கும். இப்படி அது ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பதெல்லாம் சிக்கிய இரையின் தன்மையையும், வலையிருக்கும் நிலையையும் குறைந்த நேரத்தில், உணர்வதற்குத்தான்.
“’அரசனுடைய முதல்பணி இந்த ஒற்றர் வலையை, ஆதிசேடன் எடுக்கும் படத்தைப் போல, எதிரிகள் நாட்டின் மீது கவிப்பதுதான். எதிரி மீது மட்டுமன்று. நட்பு நாடுகள் மீதும், மற்றும் தன் நாட்டின் மீதும் கூட. அரசனின் அரியணை, ஒருவந்தமான இடம், கோவிந்தா! அவனுக்குப் பல கைகள் இருக்கலாம். ஆனால், எந்தக் கை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தெரியாமற் போய்விட்டால், அவன் கார்த்தவீரியார்ச்சுனனே ஆனாலும், முடமே’.
“பாட்டனார் உருவாக்கி வைத்திருந்த இந்த வலையைத் தந்தை, தான் நிர்வாகப் பொறுப்பில் இருந்த சிறுகாலத்தில், இன்னும் வலிமையாக்கி விரிவாக்கி வைத்திருந்தார். கபட மாணாக்கராகவும், பரதேசியாகவும், படிவராகவும், இல்லறத்தாராகவும், பரத்தையராகவும், வணிகராகவும், குடியானவராகவும், பணியாளராகவும் சரணர்களாகவும், நிலையர்களாகவும் அவருடைய ஒற்றர்கள் எல்லா நாட்டிலும் இருந்தார்கள். யார் ஒற்றர்கள், அவர்கள் எப்படித் தொடர்பு கொள்வார்கள், அவர்களை நியமிப்பது யார், கண்காணிப்பது யார் இவையெல்லாம் அவருக்கு மட்டும்தான் தெரியும். எங்களுக்குக் கூடத் தெரியாது.
“இந்தப் பலத்தால்தான், அவருக்குத் தன் தமையன் அனுப்பிய லிகிதங்களைப் பற்றி உடனேயே தெரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் முன்கூட்டியே ஆயத்தமாக இருக்கவும் முடிந்தது. இந்த முன்னவகாசம் மட்டும் கிடைத்திருக்கவில்லை என்றால், இன்று இந்தப் பூமி இரட்டர்களுடைய பூமியாக இருந்திருக்காது. புதியதாக உருவான இந்த அரசப் பரம்பரை, மூன்று அரசர்களோடு, முடிவுக்கு வந்து, பூண்டற்றுப் போயிருக்கும்.
“எதிரியின் வலிமை தெரிய வந்தபிறகு, படைபலம், பயிற்சி, விசுவாசம், போர் செய்வதற்கான காரணம் என்ற நான்கும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. படை பலமென்பது வெறும் வீரர்கள் மட்டுமன்றே? படைக்கலங்களும், விலங்குகளும், பாகரும், மருத்துவரும், கட்டமைக்கும் தச்சரும், பாகசாலையரும், பணியாளர்கள் போன்றோரும் அன்றோ அதில் அடங்குவர்?
“இராட்டிரக்கூடப் படைகளின் பயிற்சியைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். பயிற்சியில்லாத நாளை இங்கே நான் அனுமதித்ததில்லை. நானும் பயிற்சி செய்யாமல் இருந்ததில்லை. இன்றும் இப்படி உடல் தளர்ந்திருக்கும் நிலையிலும், பயிற்சி செய்யாமல் என்நாள் கழிவதில்லை.
“விசுவாசம் என்பது படைகளுக்கும், மக்களுக்கும் அரசனின் நடத்தையால் உருவாகுவது. பயத்தால் ஏற்படுத்தப்படுவதன்று. ஒற்றர்கள் வழியாக வரும் செய்திகள் மட்டும், இதை அரசனுக்கு உணர்த்தி விடமுடியாது. ஏனென்றால், ஒற்றர்களுக்குள்ளும், ஒளிவு இருக்கலாம்; வஞ்சகர்கள் இருக்கலாம்; அல்லது திறப்படாத தவறான புரிதல் இருக்கலாம்; அதை மட்டும் நம்பி, தனக்கு மக்கள் விசுவாசமாகத்தான் இருக்கிறார்கள் என்று முடிவு கட்டிவிடுவது பேதைமை. எதிர்ப்புச்சொல் சொல்பவர்கள் எல்லாம் தமக்கு விரோதிகள் அல்லர் என்று அரசன் உணர்ந்திருக்க வேண்டும். இந்த விசுவாசம் என்னும் நீரோட்டம், அரசன் தன்னுடைய உள்ளுணர்வால் உணர வேண்டிய விஷயம், அரசன் செய்யும் மாபெரும் தவறு என்ன என்பதை, என் பெரியதந்தை செய்ததை வைத்தே தெரிந்துகொள்ளலாம். நான் என்ன சொல்கிறேன் என்பது உனக்குப் புரிகிறதா, சர்வா? தான் விசுவாசத்தை இழந்து விட்டிருக்கிறோம் என்று கூடப் புரியாமல் இருந்தார் அவர். ஓர் அரசனுக்கு இந்த அவலம் தேவைதானா?
“இந்த அரசனுக்காக நாம் ஏன் நம்முயிரை இழக்கவேண்டும் என்ற வினா படைவீரர்கள் சிந்தையில் உதித்ததுமே, அந்த அரசன் விசுவாசம் இழக்கிறான். அப்படி விசுவாசம் இழந்த அரசனுக்காகப் போர் புரிபவர்கள், உத்வேகத்தை இழக்கிறார்கள். போர் என்பது உயிரோடு விளையாடுவதுதான் என்றாலும் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று போர் புரிவது, பெரிய வெற்றியைத் தரா. உயிர் போனாலும் பரவாயில்லை, இந்த விளைவு ஏற்பட வேண்டும் என்று எந்தப் போர்வீரன், தான், தன்னுயிர் என்ற வரம்பைத் தாண்டிப் போர் புரிகிறானோ, அவன், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் போர் செய்யும் ஐந்து வீரர்களுக்குச் சமமாகிறான்.
“சத்துருக்களின் படைபலத்தை விட, எங்கள் படைபலம் மிகக் குறைவுதான். ஆனால், பயிற்சி, விசுவாசம், போர் புரிவதற்கான காரணம் என்ற மற்ற மூன்றிலும், எங்கள் பலம் மிகப் பெரியது என்று ஒற்றர்கள் செய்தி மூலம் தெரிந்து கொண்டோம். படைபலத்தின் குறைவை எப்படி ஈடு செய்வது? அதற்கு போர் யுக்தியும், திட்டத்தை நிறைவேற்றும் திறனும் தேவை. எங்களுக்கென்று சில அனுகூலங்களும் இல்லாமல் இல்லை.
“இதோ இருக்கிறானே, மானவலோக விஜயாதித்தியன்! இவன் பெரிய கோவிந்தரால் போஷித்து வளர்க்கப்பட்டவன். நிர்வாகத்தில் ஒரு முக்கியப் பொறுப்பை வகித்துக் கொண்டிருந்தவன். அவர் வேங்கியின் மீது படையெடுத்துச் சென்றபோது, தன்னோடு கூடவே அழைத்துச் செல்லப் பட்டவன். அப்போது இவனுக்குச் சிறு வயதே ஆகியிருந்தாலும், அந்தப் போரில் இவன் காட்டிய வீரம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதானே? இவன் மட்டுமன்று. இவனைப்போல, மனிதர்களின் திறமையையும் வீரத்தையும் எடைபோட்டு, நிறைய படையாள்வார்களை வளர்த்தவர் அவர். இன்று நம்முடைய படைவீரர்களின் பயிற்சி முறையை எல்லாம் ஒருமுகப்படுத்தி, நிர்மாணித்தவர் அவர்தான். துவக்கத்தில், அவர் எனக்கு ஓர் உதாரண புருஷராகத்தான் இருந்தார். அப்படிப் பார்த்தவாறுதானே நானும் வளர்ந்தேன். வீரமும், சூக்ஷுமமும், வாக்குச் சாதுரியமும் நிரம்பப் பெற்றவர். சிறுபிராயத்திலேயே தந்திதுர்க்க மஹாராஜா, நந்திவர்மனுக்குப் பிரஸ்தாபித்த திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு காஞ்சிக்குச் சென்று, அவனுடன் பேசி, அவனை நமக்கு அனுகூலமான முடிவை எடுக்கவைத்தவர்.
“அவரால் வளர்ந்தவர்கள் எல்லாம் அவருக்கு எதிராகக் களத்தில் இறங்க எப்படி மனம் கொள்வார்கள்? தயங்கத்தானே செய்வார்கள்? ஆனால், நாங்கள் செய்த அதிர்ஷ்டம், நல்லது எது, கெட்டது எது என்று பிரித்துப் பார்க்கும் வல்லமை படைத்த இவனைப்போன்ற விவேகிகளும் படைத்தளபதிகளாக இருந்ததுதான். நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்ப்பதை ஒரு வீரனுக்கு எந்தக் காலத்திலும் யாரும் போதிப்பதில்லை. போதிப்பதும் தவறு. படையைப் பலவீனமாக்கும் நோய் அல்லவோ அது? கொடுக்கப்பட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதுதான் வீரனுக்கு அழகு. ஏன், எதற்கு என்ற வினாக்கள் அவன் சிந்தையில் எழுந்தால், அவை எழும் அந்தக் கணநேரத்திலேயே கட்டுக்கோப்புக்கள் சிதைந்து, எல்லாமே பாழாகிவிடும். ஆணை, சிந்தைக்குப் பொருந்தாமல் இருந்தால் கூட, அந்தப் பொருந்தாமையைப் புறந்தள்ளி விட்டுக் கொடுக்கப்பட்ட ஆணையை உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றுவதுதான் ஒரு போர்வீரனுக்கு இயல்பான குறிக்கோளாக இருக்கும். அப்படித்தான் அவன் வளர்க்கப்படுகிறான்.
“நாங்களும் அப்படி வளர்ந்தவர்கள்தான். மானவலோகனும் அப்படித்தான். கோவிந்தராஜாவே தெய்வம் என்ற அளவுக்கு அவர் சொல் கேட்டு வளர்ந்தவன். அவர் எண்ணத்துக்கு மாறாக ஒரு செயலும் செய்தறிந்திலன். ஆனால், தர்மம் என்று ஒன்று இருக்கிறதே? தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு, இது அனுபவத்தால்தான் ஏற்பட வேண்டும். தர்மத்துக்குச் சங்கடம் வரும்போது, சரியான பாதையைத் தீர்மானிப்பவர்கள் ஒரு சிலரே. பார்த்தனுக்கு ஏற்படாத தர்ம சங்கடமா? எங்கள் அதிர்ஷ்டம், தந்தைக்கு நேர்ந்த தர்ம சங்கடத்தை இவன் முழுதும் உணர்ந்து கொண்டவனானான். இவனைப்போல் இன்னும் சில தார்மீகத் தளபதிகள் எங்களுக்குக் கிடைத்தார்கள்.
“தகரபுரியில் இருந்து தேவகிரி செல்லும் பாதை, எவ்வளவு முக்கியமானது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். நாகசாரிகாவும், தகரபுரியும், ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் போல இணைந்து, தேவகிரி என்ற உச்சியைத் தாங்க, தேவகிரியானது ஈட்டியின் முனையாகி ஏலபுரியைச் சுட்டும். இந்தத் திரிகூடகத்தின் மூன்று முனைகளும் பண்ணுற்று எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது, எங்களுக்கு ஒரு பலத்தைக் கொடுத்தது. நாசிகாவில் இருந்து, தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம்.
“உஜ்ஜைனி என்ன செய்யும் என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது. கோவிந்தரை விமார்க்கமாகத் தூண்டியதே பிரதிஹாரன்தானே. மறைமுக எதிரி அவன். ஆனால், சரித்திரத்தின் ஏடுகள், எங்களுக்குச் சாதகமாக இருந்தன. அவந்தியிலிருந்து படையெடுத்து வந்து தக்கணத்தை வெற்றி கொண்டவர்கள் யார்? நர்மதை அன்னையை அப்படி எளிதாகத் தாண்டிவிட முடியுமா? சகோதர-சகோதரிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைப் பழிதீர்த்துக்கொள்ள ஆவேசமாக உஜ்ஜைனி வரை வந்து, அதைக் கைப்பற்றிய மாவீரர் ஹர்ஷவர்த்தனரால் நர்மதையைக் கடக்க இயலவில்லை. சாளுக்கிய புலிகேசியால் தடுக்கப்பட்டார். ஒன்றிரண்டு இடங்களிலே மட்டும்தான் நர்மதை தன்னைக் கடக்க வழிதருகிறாள். அங்கு மட்டும்தான் அது சாத்தியம். வியாபார நிமித்தமாக வரும் வணிகக் கூட்டங்கள் அப்படிப்பட்ட இடங்களின் வழியாகத்தான் இங்கு வந்து போகின்றன. நர்மதைக் கடக்கத்தின் அருகே, நர்மதையைத் தாண்டி, சாத்பூர மலைகளின் குறுக்காக வந்து, தாபியைக் தாண்டித் தெற்கில் விதர்ப்பத்தைக் கடந்து வந்தால், ஏலபுரிக்குள் வடக்கிலிருந்து நுழைந்து விடலாம். அல்லது மேற்காகப் போய், மலைகள் துவங்குவதற்கு முன், கடக்க நினைத்தால், நாகசாரிகாவிற்கு அருகே வந்துதான், கிழக்கில் கடக்க வேண்டும். அப்படிச் செல்ல பிரதிஹாரன் முடிவு செய்தால், நாகசாரிகாவின் தாக்குதலை முறியடிக்க வேண்டும். தாபியைக் கடந்து, சப்தமலைகளின் வடக்குச் சரிவு ஓரமாகவே வர வேண்டும். நேரமும் சக்தியும் விரயமாகும் சுவடு இது. அப்படியாவது வந்து, நம்முடன் நேரிடையாகப் போரில் ஈடுபட மாளவ மன்னனுக்கு அப்போது எந்த நிர்ப்பந்தமும் இல்லை. தனக்கு எந்த விரயமுமில்லாமல், கோவிந்தரை முன்னிறுத்தி இராட்டிரக்கூடத்தை உட்சண்டையில் சிக்கவைத்து வலுவிழக்க வைப்பதுதானே அவன் திட்டம்? அதற்குப் பிறகு, இரட்டபாடி, அவனுக்குத் தருவில் இருந்து பறித்த தெங்கம்பழம். அவன் நினைத்தபோது, வெட்டிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தவன்.
“இதனால், ஒருவேளை அவன் வரத் தீர்மானித்தால், நர்மதைக் கடக்கத்தின் வழியாகத்தான் வருவான் என்று எங்களுக்குத் தோன்றியது. அந்த வழியில், இடைப்பட்ட வறண்ட விதர்ப்பத்தை நமக்கு ஒரு பாதுகாப்புப் பிரதேசமாக அமைத்து விட்டால், உஜ்ஜைனிப் படைகளைத் தாமதப் படுத்தலாம், சற்றுக் கவனத்துடன் செயல் பட்டால், முறியடிக்கவும் செய்யலாம் என்று எண்ணினோம். தேவகிரியில் நன்குக் காலூன்றி இருந்த சங்கரகணராஜாவின் தலைமையில், என் தமையன் கற்கனும், இளைய தம்பி இந்திரனும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அரசியல் சாணக்கியம் மிகுந்த பிரதிஹாரன் தேவசக்தியோடு என்ன என்ன இராணுவ இரகசியங்களைக் கோவிந்தர் பகிர்ந்து கொண்டிருக்கிறாரோ என்ற ஐயப்பாடு இருந்ததால், அவரோடு எப்போதும் கூடவே இருக்கும் மாளவத்தின் ஒற்றர்களுக்குத் தெரியாமல் காரியம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். சேவுணர்களின் முதல் சைனியம் அப்படித்தான் உருவாக்கப்பட்டது.
“மாளவத்தின் தாக்குதலைத் தடுக்க, வேறு இரண்டு இடங்களில் இருந்தும் உதவி கிடைத்தது. தஹல மண்டலத்தை ஆண்ட காலச்சூரி சங்கரகணனை உங்களுக்குத் தெரியும். இலாடத்தைச் சாளுக்கியர்களிடம் இழந்தபின்னர், இவர்கள் மஹிஷ்மதியிலிருந்து தலைநகரைத் திரிபுரி விஷயத்துக்கு மாற்றிக் கொண்டதையும் அறிவீர்கள். தந்திதுர்க்கரின் படையின் வலிமையைக் கண்டவர்கள் இவர்கள். எப்போதும் ஒரு வலிமையான தக்கண அரசுடன் கேண்மை பாராட்டி வந்தவர்கள், சாளுக்கியம் வீழ்த்தப்பட்டு, இராட்டிரக்கூடம் எழுச்சியுற்றதும், நமக்கு நட்பு நாடாக மாறினார்கள். ஆனால், காலச்சூரி அரசன் சங்கரகணன், பிரதிஹாரர்களுடன் நெருக்கமாக இருக்கும் கோவிந்தராஜரின் அணுகுமுறையைக் கவனித்துவிட்டு அஞ்சினான். தந்தை, எதிர்த்து நிற்கிறார் என்று தெரிந்ததும், தானாகவே, முன்வந்து உதவி செய்கிறேன் என்றான்.
“ஸ்ரீவர்த்தனபுரத்தை ஆண்டுவரும் ஜயவர்த்தனனும், உதவிக்கு வந்தான். விந்தியமலையைக் கடப்பவர்கள் அவனுக்குத் தெரியாமல் நகர முடியுமா? சேவுணதேசத்தின் வழியாக, அவந்திப் படைகள் வடக்கிலிருந்து இறங்கினால், கிழக்கிலிருந்து இருவரையும் தாக்கச் சொன்னோம். இருவருடைய ஒப்புதல்களும் வந்தன. இப்படி, வடக்கிலிருந்து வரும் அபாயத்துக்கு அரண் அமைந்தது.
“நாகபடனின் மேதந்தகபுரி, அவனுக்குக் இணங்கிய சிற்றரசர்களான சாஹமானர்களின் தலைநகரான சாகாம்பரி, மற்றும் அதற்கு வடக்கிலிருந்த காட்டுப் பிரதேசமான சபாதலட்சம் மற்றும் சித்தூர்க் கோட்டையைத் தந்திதுர்க்க மஹாராஜா கைப்பற்றியது இங்கே மூத்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவற்றைச் சாதித்த விநயாதித்த யுத்தமல்லர்தான் கோவிந்தரின் மூசிப் படையெடுப்புக்குப் பிறகு, கிருஷ்ணராஜாவால், போதனத்துக்கு அனுப்பப்பட்டு, கோதாவரிக் கரையில் வேமுலவாடா=வைத் தாபித்தவர். வேங்கியைக் கண்காணிக்க வேண்டி இருந்ததால், நம்பிக்கையான ஒருவர் கிழக்கில் இருந்தால் நல்லது என்று எண்ணித்தான் பாட்டனார், இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். இங்கிருக்கும் சிலருக்கு இதெல்லாம் தெரியும். எல்லோருக்கும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் விவரமாகச் சொல்கிறேன். நான் அடிக்கடி சொல்வது போல, அரியணை ஓர் ஒருவந்தமான இடம். தனிமையின் சல்லாபம் ஒன்றுதான் அரியணைக்கு அத்யந்தமான பொழுது. அதில் அமர்ந்தபின்னால், புதிதாகக் கற்பதென்பது மிகக்கடினம். அங்குச் செய்திகளின் வரத்துக்குக் குறைவிருக்காது. ஆனால், உண்மை எது, பொய்ம்மை எது என்றே தரம் பிரிக்க முடியாது போய்விடும்.
“சிம்மாசனத்தின் தனிமையில் எந்தச் செய்தியை நம்புவது, எதை நிராகரிப்பது என்று தவிக்கும்போது, முன்னை நடந்த சரித்திரத்தின் அறிவும், கிடைத்த செய்தியின் தரம் பார்க்கும் திறமையும் மட்டுமே மூடுபனி வழியாக வழியைக் கண்டுபிடிக்க நமக்கு உதவ வல்ல ஆயுதங்கள். வாளும், வில்லும், ஈட்டியும், வகுக்காது வழியை. சுவர்ணவர்ஷா! நான் சொல்வது சரிதானே?
“வாழ்க்கையின் வழி கவைக்கும்போது, சரியான தடமெது என்று சிலசமயம் இனம்பிரிக்க முடியாமல் குழம்பும்போது, எனக்கு, உன் தந்தை இந்திரன் கூடவே நிழல்போல இருக்கும் கொடுப்பினை இருந்தது. ஆலோசிக்க அவன் இருந்தது எனக்குப் பெரிய பலம். சர்வனுக்கு, நீ இருக்கிறாய் என்பது எனக்குத் தெம்பையும் திட்பத்தையும் தருகிறது.
“யுத்த மல்லருக்குப் பிறகு, அரிகேசரி வேமுலவாடாவின் அரியணையில் அமர்ந்தார். எனக்குப் பத்துப் பன்னிரண்டு வயது பெரியவர். இப்போதிருக்கிறானே நரசிம்ஹன், அவனுக்குத் தந்தை. பெயருக்குத் தகுந்தாற்போல பெருங்கேசரி. என் வீரத்தின் மேலே எனக்குப் பெரிய மமதை உண்டு. நான் அச்சப்படும் வீரர் ஒருவர் உண்டு என்றால், அது அரிகேசரிதான். வீரமும் விவேகமும், புலமையும் சேர்ந்த சிங்கம் அவர். பயிற்சியின்போது, அவர் சண்டையிடும் விதத்தைப் பார்த்து வியந்து கொண்டு நிற்பேன். ஒருவரைப் பார்த்ததும் அவருடைய கண்கள் கைந்நொடிப் பொழுதில், அந்த ஆளின் சரீரத்தை எலும்பு தனி, சதை தனியாகக் கச்சிதமாக் கணக்கிட்டு விடும். கத்தியை அவர் சுழற்றும் போது, கையோடு, அவருடைய தொடையும், முதுகுப்புறத் தசைகளும் சேர்ந்து சுழலும். அதனால், அவருடைய வீச்சு மின்னலைப் போல வரும், எதிரியின் உடலை வகுந்து, சதைகளிலும் எலும்புகளிலும் சிக்கிக்கொள்ளாமல் அதே வேகத்தில் வெளி வந்துவிடும்.
“அவர், வேங்கியை முன்னேறவிடாமல் நான் கவனித்துக் கொள்கிறேன் என்றார். தனியொருவராக, வேங்கிப் படைகளைச் சமாளிக்கும் வல்லமை கொண்டவர் அவர் ஆதலால், பூர்வதிசைப் பயம் எங்களுக்குப் பூரணமாகப் புய்ந்து போய்விட்டது.
“தக்ஷிணத் திசையில் இருந்த சிவமாறனுக்கு இராட்டிரக் கூடத்தின் மேலிருந்த பகை மறைந்து, இப்போது நிருபமதுங்க மஹாராஜாவின் மீதான தனிப்பட்ட போராக உருவெடுத்திருந்தது. கங்கம் நிரந்தரச் சுதந்திர நாடாக ஆவதற்குக் கோவிந்தராஜருக்குத்தானே அவன் உதவ வேண்டும்? அதனால், அவன்தான் முதலில் எதிர்த்து வருவான் என்று நினைத்தோம். நினைத்தது போலவே, கங்கப் படைகள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாகவும், அவைதாம் முதலில் வரும் படைகளாக இருக்கும் என்றும், அவை விரைவிலும் வரும் என்று ஒற்றர்களின் செய்தியும் வந்து, இந்த நினைப்பை ஊர்ஜிதம் செய்தது. கங்கத்தைச் சமாளிக்கும் பொறுப்பு ஸ்தம்பனுக்குத் தரப்பட்டது.
“ஷைலஹாரன் ஜாலபுல்லனும் அவன் மகன் தர்மனும், ஆளுபராசனைத் தடுத்து நிறுத்த ஓர் அபாயமான திட்டத்தைச் சித்தமாக்கிக் கொண்டு எங்களுக்குப் பலம் கொடுத்தார்கள்.
“காஞ்சிப் பல்லவன், தானே தலைமை தாங்கிப் படையெடுத்து வரமாட்டான் என்று ஊகித்தோம். வல்லமை படைத்த உதயசந்திரன் இறந்து விட்டிருந்தான். அவனைப்போலவே வீரனான, அவனுடைய மகன் அவனிசந்திரனின் தலைமையிலோ அல்லது மகாவலி பாணராயன் அல்லது நொளம்பன் சிம்ஹபோத்தப் பல்லவதியரையன் இப்படி யாராவது ஒருவன் தலைமையிலோதான் பல்லவப் படைவரும் வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. அப்படிப் படை அனுப்பப்பட்டால், அது ஒன்று ஸ்ரீசைலம் வழி அல்லது வேங்கி வழியாக வரக்கூடும். கங்கநாட்டின் வழியாக வருவது வீண். சிவமாறன்தான் இருக்கிறானே? தேவையில்லாத விரயம்.
“பல்லவம் வேங்கி வழியாக வர முடிவு செய்தால், அரிகேசரியின் நிலைமை திண்டாட்டமாகி விடும். அவரால், பல்லவத்தின் வேகத்தைத் தனியொருவராக எதிர்கொள்ள முடியாது. ஆனால், வேங்கிக்குப் பல்லவ நாட்டின் உதயசந்திரனிடம் ஏற்பட்ட இழிவு இன்னும் பசுமையாக இருப்பதாக ஒற்றர்கள் தெரிவித்தார்கள். பல்லவமும் வேங்கியைக் கிள்ளுக்கீரையாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தது. அதனால், வேங்கி கோவிந்தருக்குத் துணை செய்ய ஆயத்தமாக இருந்தாலும், பல்லவர்களின் படையைத் தன் நிலத்தின் வழியாக வர அனுமதிக்காது என்று ஊகித்தோம். பல்லவர்களுக்குப் போயர்களின் துணை வேறு இருந்ததால், இதைச் சாக்காக வைத்து, வேங்கியை அவர்கள் கைப்பற்றவும் செய்யலாம். போரென்று வந்துவிட்டால், பிறகு அந்த உத்வேகத்தில் கதியைத் திருப்புவது எளிதன்று அல்லவா? வேங்கியே பின்னர் இராமல் போய்விடலாம். அதனால், பல்லவன் வேங்கி வழியாக வந்தால், வேங்கி எதிர்க்கும். பல்லவப் படைகளுக்கும், சாளுக்கியப் படைகளுக்கும் நிச்சயம் போர் ஏற்படும். தன்னைத் தற்காத்துக்கொள்வதன் கட்டாயத்தில் இறங்கிவிடும் வேங்கியின் துணை கோவிந்தராஜாவுக்குக் கிடைக்காது பல்லவப்படைகளாலும் உடனே வந்து சேரமுடியாது.
“ஸ்ரீசைலம் வழி மிக எளிது. ரேணாடு பல்லவத்துக்கு இணக்கமான தேசம். அதுவழியாகத்தான் பல்லவப்படைகள் வரும் என்று எதிர்பார்த்தோம். நந்திவர்மன் கடுமையான போர்களைக் கண்டவன். அவன் படைகள் பகைமை என்னும் நெருப்பில் விழுந்து, புடம் போடப்பட்டவை. அவனை எதிர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அந்தப் போர், வெஞ்சமராகத்தான் இருக்கும். சிறு பெண்ணாக இருக்கும்போதே, ராஜாங்க நலனுக்காகப் பல்லவ அரசனைக் கரம்பிடித்துப் பழகாத பிராந்தியத்தைப் புகுந்த வீடாக ஏற்றுக் கொண்டவள் என் தமக்கை. பல்லவனை அழித்து, அவளைக் கைம்பெண்ணாக ஆக்கும் அளவுக்குப் போர் புரியத் தந்தைக்குக் கரங்கள் எப்படி எழும்? அந்தத் தர்மசங்கடம் அவருக்கு ஏற்பட்டு விடாமல் இருக்கவேண்டுமானால், பல்லவப் படைகள் வருவதற்குள் எங்களுடைய போர் முடிந்து விடவேண்டும் என்று தீர்மானித்தோம்.
“யார் யார் என்ன செய்ய வேண்டும், எத்தனை சமுக்கள், எத்தனை குன்மங்கள், எத்தனை பத்திகள், யார் யார் தலைமையில் ஆயத்தமாக வேண்டும், எந்தக்கட்டம் நினைத்தபடி செயல்படவில்லையென்றாலும், அதற்கு மாற்று யோசனை என்ன, அதை யார் செயல் படுத்துவார்கள் என்பனவெல்லாம் துல்லியமாக வகுக்கப்பட்டன. அப்போதுதான், எல்லாப் படைகளின் பரிமாணத்தைப் பற்றியும் செய்திகள் வந்து சேர்ந்தன. தந்தை, மனமுடைந்து போனார். கங்கத்தின் படையை எதிர்ப்பதிலேயே எங்களுடைய ஆற்றல் எல்லாம் விரயமாகி விடும் என்று தெளிவாகிப் போனது. அதற்குப்பிறகு, பல்லவனோ, பிரதிஹாரனோ, ஏன் சாளுக்கியனே வந்தாலும் கூட, அவர்களை எதிர்க்க எங்களுக்கு எதுவுமே மிஞ்சியிருக்காது என்றறிந்ததும், பெரிய அளவில் நடத்தப்பட வேண்டிய போர் அன்று இது என்பதைப் புரிந்து கொண்டார் தந்தை. எங்களையெல்லாம் அழைத்து விவரத்தைச் சொன்னார். புதிய திட்டம் தீட்டினார். அரிகேசரியின் வாள் போல, எதிரியைச் சேதப்படுத்தி விட்டு, விரைவாக வெளியே வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்தார். ஒரு வாரம் நீடித்தால் கூட, எங்களுக்குத் தோல்விதான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
“கோவிந்தரை வீழ்த்திவிட்டு விரைவில் அரியணையைக் கைப்பற்றி விட்டால், பிறகு மொத்த இராட்டிரக்கூடச் சேனையும் தன்னுடைய தலைமையை ஒப்புக் கொண்டுவிடும் என்று கணித்தார் தந்தை. இந்த நம்பிக்கைதான் எங்களுடைய பிரதானப் பிடிப்பு. இதைப் பரிபூரணமாக எங்களை நம்பவைத்தார். படைக்கலங்களை இரகசியமாக உருவாக்கத் தொடங்கினோம். கொல்லன் உலைகள், கொங்கணத்தின் தாதுக்கள் நிறைந்த அடர்ந்த மலைச் சரிவுகளில், புல்லசக்தியின் மேற்பார்வையில் இயங்கின. அங்கே சுரங்கங்கள் வெளியாருக்குத் தெரியாமல் தோண்டப்பட்டு, வெட்டி எடுக்கப்பட்ட தாதுக்கள் அங்கேயே ஆயுதங்களாக மாற்றப்பட்டு, சிறு சிறு சுமைகளாக இரகசியமாக அனுப்பப்பட்டன.
“இவ்வளவு ஏற்பாடுகளும் செய்த பிறகு, கடைசியாக ஒரு முறை கோவிந்தரோடு பேசிப்பார்க்கிறேன் என்றார் தந்தை. இதைப் பேசுவதற்காகத் தந்தையோடு குழுவாகச் செல்வதற்குக்கூட எவருக்கும் தைரியம் வரவில்லை. கோவிந்தரின் நடவடிக்கை நல்லதன்று, அறத்துக்குப் புறம்பு என்றெல்லாம் சொன்னவர்கள், திரைமறைவிலேயேதான் இருந்தார்கள். பகிரங்கமாக வெளிப்பட எல்லோருக்கும் அச்சம். ஒருவேளை, தந்தை இம்முயற்சியில் தோல்வியுற்று விட்டால், தத்தம் கதி அதோகதிதான் என்ற பயம்.
“சுக வாழ்க்கைதானே உங்களுக்கு வேண்டும்? அதற்குப் பொருள் தேவை. பாதுகாப்பு தேவை. இரண்டுக்கும் ஏற்பாடு செய்கிறேன். அரியணையை விட்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள்’ என்று பெரிய தந்தையிடம் இறைஞ்சினார் தந்தை. கோவிந்தமஹாராஜா மறுத்துவிட்டார். சண்டையில் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.
“இவ்வளவு விஷயங்கள் நடந்தபிறகு, எதிர் எதிர் அணியாக நிலைமை உறைந்தபிறகு, ஏற்பாடுகளை இரகசியமாக வைத்துக் கொள்வது மிகக் கடினம். நிறைய மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டு உருவாக்கப்படும் திட்டங்கள், துணியின் இழைகளிடையே இருக்கும் சட்டங்கள் வழியாக எப்படி நம் கண்ணுக்குத் தெரியாமல் நீர்க்கசிவு பரவுமோ அதைப்போலப் பட்டென்று பகிரங்கமாகி விடும். அதனால், அதிகக் காலம் தாழ்த்தாமல், அடுத்த நாளே தாக்க முடிவு செய்தார் தந்தை. இரண்டு எதிரெதிர் கருத்துக் கொண்ட இருவருக்கிடையே நடக்கும் பரஸ்பர துவந்த யுத்தமாகவே இந்த எதிர்ப்பைக் கருதத் துவங்கிவிட்டார். முன்னர்ச் செய்த முன்னேற்பாடுகள் எல்லாம், நாங்கள் எதிர்பார்க்காத நிலைமை ஏதாவது எழுந்தால், அதைச் சமாளிக்கச் செய்துகொண்டவை என்று ஆகி விட்டது. தந்தையின் குதிரைப்படை, ‘தோ³ரஸ்ய அஸ்வியம்’ என்று குவலயம் புகழ்ந்து பேசும் படைதான். ஆனாலும், அவர் கற்றதும், பயின்றதும் கோவிந்தரோடு. கோவிந்தரின் குதிரைப்போர்த் திறமையைப் பற்றி நான் நிறைய முறை சொல்லி இருக்கிறேன். அவருடைய புரவி, ஒரு நொடி இங்கிருக்கும், அடுத்த நொடி அங்கிருக்கும். நான்கு கால்களால் நர்த்தனம் ஆடும். அவரா, புரவியா யார் சண்டை இடுவது என்று கணிக்க முடியாது. அவருடைய புரவி, ஒரு தேருக்குச் சமம். அவ்வளவு ஆயுதங்களைத் தாங்கி இருக்கும்.
“நான் ஏற்கனவே சொன்னதுபோல், படைபலம் எங்கள்பால்
குறைந்திருந்தாலும் நோக்கமும், காரணமும் மிக்க வலுவோடு இருந்தன. குதிரை
வீரர்களும், வில்லாளிகளும், காலாட்படைகளும் மட்டும் கொண்ட அணிகளை உருவாக்கினோம்.
பரஸ்பர அனுரக்தா யே யோதா⁴ ஶார்ங்க³ த⁴னுர்த⁴ரா:
யுத்³த⁴ஜ்ஞாஸ்துரகா³ருடா⁴ஸ்தே ஜயந்தி ரணே ரிபுன்
என்று சொல்வதைப் போல, இந்தச் சண்டைக்கு, களிற்றுத் தானையரையும், இரதிகர்களையும் ஈடுபடுத்தவில்லை. கோவிந்தரின் இருப்பிடத்தைக் காலையில், உதய வேளையில் தாக்கினோம். மாலைக்குள் முதல் அரணை முறியடித்தோம். பெருத்த சேதம் இரு தரப்பிலும் இல்லை. அவர் சேனை போரிட்டதைப் பார்க்கும்போது, குழப்பத்தில் அவர்கள் இருப்பதாகத் தோன்றியது. அன்று முழுவதும், தமையனார் தம்பியை எதிர்க்க வரவில்லை.
“அன்று நடந்த சண்டை திருப்தியைத் தந்தாலும், எதிர்பார்க்காதபடி, ஒரு பெரிய பிரதிஹார சேனை, வடபுறமாக வந்து, கற்கனையும், இந்திரனையும் தாக்கியது. மலைச்சரிவுகளில் பதுங்கி இருந்த சேனை அது. எங்கள் இராணுவத் திட்டத்தைப் பற்றிய விஷயம் கசிந்து, எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கவேண்டும். அல்லது பொதுவான பாதுகாப்புக்காக அங்கே ஸ்திதமாக இருந்த சேனையாகவும் இருந்திருக்கலாம். ஒற்றர்கள் இதுவரை அளித்துவந்த செய்திகளில், இந்தச் சேனையைப் பற்றி எந்தச் சேதியும் இல்லை. எறிவ கொண்ட ஏறாளரும், இரதங்களும், கஜங்களும் கொண்ட பெரும்படை. நூறு குமுதங்கள் இருக்கும். இந்திரன் என்னைவிடச் சிறியவன். பாலகன். அவனைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில், கற்கனால் வீராவேசமாகச் சண்டையிட முடியவில்லை. இது நாங்கள் செய்த தவறு. கற்கனுக்குத் துணையாக, ஒரு முதிர்ந்த தளபதியையும் சேர்த்திருக்க வேண்டும். சங்கரகணராஜா, சேவுணர்களின் சேனையோடு நர்மதைக் கடக்கத்தின் காப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்திரனின் வீரத்துக்குக் குறைவில்லை. அவன் தம்மை ஒருவர் வந்து காக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டா களத்தில் இறங்கினான்? இல்லை இல்லை. அவன் வெகு தைரியசாலி. ஆனால், கற்கனுடைய மனது கேட்கவில்லை. பாதுகாப்பும், தாக்குதலும் ஒரே சமயத்தில் ஒரு வீரனால் எப்படி மேற்கொள்ள முடியும்?. ஒன்றின் அணுகுமுறை, மற்றதை வர்ச்சியமாக்கி விடும்தானே? அப்படித்தான் நடந்தது.
“இந்த முரண்பட்ட அணுகுமுறையால் படையின் சில செயல்பாடுகள் பலவீனமடைந்தன. இறுதியில், கற்கன்தான் வென்றான். ஆனால், சேதம் எங்கள் தரப்பில் சற்று அதிகம். ஒரு சமயத்தில், இந்திரனைக் குறிவைத்து மேட்டிலிருந்து வீசப்பட்ட சல்லியங்களைக் கற்கன் தடுக்க இடைபுகுந்த வேளையில், மருங்கில் வெட்டுப்பட்டான். மேலும் அடிபடுவதற்குள் அவனை அகற்றி விட்டார்கள். அவன் அடிபட்டதைப் பார்த்து, வீறு கொண்டு எழுச்சியுற்ற சேனைவீரர்கள், ஆவேசமாகப் போர் செய்து, எதிரிப் படைகளைச் சிதறடித்து விட்டார்கள்.
“செய்தியைக் கேட்ட தந்தை, பெருந்துயரம் அடைந்தார். ‘என்னால் என் மகனுக்கு இந்த நிலை வந்ததே, நான் அவனைக் காப்பாற்றச் சண்டையிட வேண்டும், என்னைக் காப்பாற்ற அவன் சண்டையிடுவதா’ என்று மறுகிப் போனார். போரை நிறுத்திவிடலாமா என்று கூட யோசித்தார். நான்தான், அவரைத் தேற்றினேன். ‘இந்தச் சமயத்தில் பின்வாங்கினால், பிறகு நம் குடும்பத்தில் எவரையும் காக்க முடியாது. நாளை, பொழுது விடிவதற்குள், இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவோம்’ என்ற என் உறுதியைப் பார்த்துத் தந்தை தெளிந்தார் என்றே சொல்லலாம். இதுவரை, அவருடைய உள்ளத்துக்குள்ளே, ஒளிந்து கொண்டிருந்த இரத்த பாசம், அப்போது சுவடு இல்லாமல் வற்றிப் போனது என்று எனக்குத் தோன்றியது.
“அடுத்த நாள், சூரியன் பின்புறம் உதிக்க, வராஹ
வியூகமாகத் துவங்கினோம். நான் வலப்பக்கத்தை நிர்வகித்தேன். தந்தை இடப்பக்கம்
இருந்தார். பிரத்தியாலீட நிலையில் அம்பு எய்யப் பெண்ணம்பு வில்லாளிகள்
பக்கவாட்டிலும், ஆலீட நிலை ஆணம்பு எறிவர் முன்னிலையில் இருக்க வைத்தோம்.
“தூ³ர பாதோ யுவத்யா ச புருஷோ பே⁴த³யேத்³ த்³ருட³ம் - அல்லவா?
“இரண்டு நாழிகைக்குள்ளாக, எதிரிகளின் முதல் இரண்டு அணிகள் சிதறின. திடீரென எதிரே சின்னமூதிகளுடைய குரல் ஓங்கியது. கோவிந்தருடைய புரவி தென்பட்டது. எங்களுக்கான காலம் வந்தது என்று தெரிந்து கொண்டோம். அடுத்த இரண்டு மூன்று முகூர்த்தங்கள் கழிந்தது, வருடங்கள் கழிந்தாற் போலத் தோன்றியது, எனக்கு. ஒவ்வொரு அசைவும், வாள் வீச்சும், புரவிகளின் காலடியும் என் கண்களுக்குத் தப்பவில்லை. என் வாழ்வில் நடந்த முக்கியமான திருப்பம் அது. கோவிந்தர் என்ற பெரிய தந்தை மறைந்தார். அரசர் என்ற பிம்பம் மறைந்தது. எதிரி மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டார். அவர் வீழ்ச்சி. இல்லையேல், எங்கள் வீழ்ச்சி. இரண்டில் ஒன்று மட்டுமே சாத்தியம். வேறு எண்ணங்களுக்கு அங்கே இடமில்லாமல் போனது.
“அவரை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன். பலஹீனமாக இருப்பது போலத் தென்பட்டார். தளர்ந்திருந்தார். தந்தையை விட வயதில் மூத்தவர்தான். வயதுக்குக் குறைவில்லை. ஆனால், வயதைவிட, மனப்பலஹீனம் அவரிடமிருந்து வெளிப்பட்டது போல உணர்ந்தேன். நான் தோத்திரம் செய்துவந்த அவனி புகழும் அரசர் கோவிந்தராஜர் அவர் அல்லர். ஆசை என்னும் காற்றில் அடிக்கப்பட்டு ஆடிக்கொண்டிருக்கும் ஆலமரம். விழுதுகள் தரை தொடாததால், வலிமை குன்றிய மரம். அவருடைய வாள் வீச்சுக்களில் பழைய வல்லமை இல்லை. அவருடைய வீச்சுக்களைக் கவனித்துக் கொண்டே எந்தக் கணம் அவர் விலா பாதுகாப்பற்றதாகப் போகும் என்று கவனித்துக் கொண்டே அவர் எதிரே வந்தேன். அதற்குள், தந்தையும் இடப்பக்கமாக முன்னேறி வந்திருந்தார்.
“எங்கள் இருவரையும் ஒரு சேரப் பார்த்து ஒரு கணம் அவருடைய கண்களில் ஓர் அதிர்ச்சி, கணநேர மின்னலாய் வெட்டி மறைந்தது. ஆனால், அந்த அதிர்ச்சி மறையுமுன்னே, அதிலிருந்து அவர் சுதாரித்துக் கொள்வதற்குள், தந்தையின் இடக்கைப் புறமாகச் சுழன்று இறங்கிய வாள், கோவிந்தரின் தோளை வெட்டியது. அதனால் அவர் அசைந்த அசைப்பில், குதிரை சற்றுத் தடுமாறியது. ஒரு காலை உயர்த்தி, அது தன்னைச் சமாளிக்க முயலும்போது, நான் ஓர் ஈட்டியை எறிந்து, அதன் காலை உடைத்தேன். தான் வெட்டுப்பட்டதும் அடுத்த வீச்சை எதிர்பார்த்து அதைத் தடுக்கும் முனைப்பில் இருந்தவர், கால் மடங்கிய குதிரையால் நிலை தடுமாறினார். வீச்சு வெற்றாகப் போயிற்று. அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அடுத்த சுழற்சியில் தந்தையின் வாள், தான் முன்னம் துணித்த தோளின் அருகிலேயே, கோவிந்தரின் விலாப்புறத்தையும் வகுந்தது.
“கோவிந்தர் கீழே விழுந்தார். எங்கள் சேனை, புதிய
பலத்துடன் தாக்க, ஒரு நாழிகையில் எல்லாமே முடிந்து விட்டது. ஏலபுரியில் இராட்டிரக்
கூடத்தின் ஆட்சியின் சுவடியில், புதிய ஓலைகள் சேர்க்கப்பட்டன”
சொல்லிக்கொண்டே வந்த பிரதாபர் பேசுவதை நிறுத்தினார். அமைதி படர்ந்தது அங்கே. தூரத்தே ஒரு நாகணவாய்ப் புள், புதிது புதிதாகச் சத்தமிட்டது. ஒரே பறவை இப்படிப் பலவிதமாகக் கத்துகிறதே? எதற்கு? அரசப் பொறுப்பில் இருக்கும் புள்ளா அது? இப்படிப் பலவிதமாகக் கத்தித் துன்பத்தை வெளிப்படுத்திக் கொள்கிறதா? இல்லை, மானுடம் மட்டுந்தான் இப்படி எல்லாம் நடந்து கொண்டு தன்னை வருத்திக் கொள்கிறதா? இந்தக் காரியங்களால் யாருக்கு என்ன பயன்? இப்படி, மானுடத்தின் மனத்தைத் தூண்டுவது யார்? விதியா? எமனா? சஞ்சித கருமங்களா? இயற்கையா? சர்மனின் மூளைச் சக்கரங்கள் பல திக்குக்களிலும் சுழலும் ஓசையைத் தான் கேட்டுவிட்டாற்போல, பிரதாப வர்த்தனர் அவனைப் பார்த்தார். ‘என்ன யோசிக்கிறாய்’ என்று கேட்காமல் கேட்டன அவர் கண்கள்.
“இதெல்லாம் அவசியம்தானா என்று தோன்றுகிறது” என்றான் விநயன்.
“துருவர் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்? வினைகள் அவருடைய கட்டுப்பாட்டிலா இருந்தன? வெள்ளத்தின் போக்கில் அடித்துக் கொண்டு போவது போலத்தானே இது. ஓடும் வெள்ளநீரின் வேகத்தையும் ஆழத்தையும் கட்டுப்படுத்துவது பெரிய கோவிந்தர் கையில்தானே இருந்தது?”
“அது என்னவோ சரிதான். பொம்மலாட்டத்துக்கு யந்திரி கோவிந்தர்தான். அவரிடம்தான் கயிறு இருந்தது. துருவராஜா பாவைதான். கயிற்றுக்கு ஏற்ப ஆடுவது மட்டும்தான் அவரால் செய்ய முடிந்தது.”
“அரியணையின் அதிகாரம் ஆட்களை மாற்றிவிடும் அதிசய யந்திரம், விநயா! அது இருபுறமும் சீவப்பட்ட வாள். ஏந்தியவருக்கு, ஒரு மமதையையும், இறைமையையும் ஊட்டி விடுகிறது. இடிப்பவர் இல்லாத நிலை ஏற்படும்போது, தறிகெடலை வளர்த்து விடுகிறது. பிறகு, வீழ்ச்சிதான். இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால், தாம் மட்டும் விழுந்து உருளாமல், தம்மைச் சேர்ந்திருப்பவர்களையும் சேர்த்து உருட்டி விட்டுவிடும்.
“கோவிந்தராஜா சொல்லுவார், ‘அரியணை அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள, எதிரியோடு சேர்ந்து கொண்டு, தம் குடியில் பிறந்தவருக்கே எதிராகச் செல்லும் அரசனைப் பெற்ற குடிகள் துரதிர்ஷ்டம் செய்தவர்களே. கற்கனும், பெரிய கோவிந்தரும் இந்தப் பாதையில் செல்ல முடிவு செய்தது, இராட்டிரக்கூட வம்சாவளிக்குப் பெரிய அபகீர்த்தி. எனக்கு எதிராகவும் இதேபோன்று ஒரு நிலைமை ஏற்பட்டதே? நினைக்கவே வேதனை தரும் அந்த நிலைமையை மிகக் கவனத்துடன், மனத்தில் வெறுப்பு இல்லாமல், ஒரு வைராக்கியத்துடன்தான் நான் எதிர்கொண்டேன். அரியணைச் சுகத்துக்காக ஒருபோதும் இந்த வழியில் செல்ல எனக்கு எண்ணங்கள் தோன்றாமல் செய்ததற்காக அந்தப் பிறைசூடிக்குத் தலைவணங்குகிறேன். இப்படிப்பட்ட அறமற்ற செயல்கள் என் வாழ்வில் எப்போதுமே பங்கேற்காததால், வைவஸ்வத ராஜா வரும்போது, நான் தலை குனிய வேண்டியிருக்காது. என் அந்திமத்தில் இது எனக்குக் கர்வமே.’”
“அசாதாரணமான அரசர் அவர்! பெரிய கோவிந்தர் இறந்து பட்டாரா?”
“அது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி யாரும் பேசக் கேட்டதில்லை நான். அந்த இடத்தில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அது. ஆனால், அதற்குப் பிறகு, கோவிந்தரை யாரும் பார்த்ததில்லை. அன்று மாலையே, மொத்த ஏலபுரியும் துருவராஜாவால் கைப்பற்றப் பட்டது. இருப்பிடத்தை ஆக்கிரமித்திருந்த அந்நிய சக்திகள் அனைவரும் கொல்லப் பட்டார்கள். கோவிந்தராஜரின் அந்தப்புரம் வெறிதாக்கப் பட்டது. அவருக்கு மனைவியர் பலர். ஆனால், பட்டத்து ராணி என்று யாரும் இல்லை. அரசுரிமைப் பட்டத்துக்குத் தகுந்த பிள்ளைகள் கிடையா. சுகவாழ்வின் குறிகள் அழிக்கப்பட்டன. ஏற்கனவே மொத்த நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தவர் அல்லரோ? தந்தை உடனேயே பொறுப்பின் கடிவாளத்தைப் பிடித்துவிட்டார். ஆண்ட தலைமை விழுந்து, அவ்விடத்தில் இன்னொரு தலைமை ஏறியமர்ந்தது தெரியாமல், அரசு கை மாறியது. அன்றே செய்திகளோடு தூதுவர்கள் விரைந்தார்கள். மகாஸாமந்தர்கள், பிரபுக்கள், அமைச்சர்கள் கூடிய சபை அடுத்த நாளே கூடியது. கோவிந்தரை எதிர்க்கப் பயந்து, மதில் மேல் அமர்ந்திருந்தவர்கள் துருவராஜருக்குப் பக்கபலமாக அணிவகுத்தனர். பொதுஜன அபிப்பிராயம், கோவிந்தரின் பக்கம் எள்ளளவும் இல்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது. கோவிந்தராஜா எப்படி உண்மையைப் புரிந்து கொள்ளாமல், மாயப் பிம்பத்தை நிஜமென்று நம்பி இருந்தார் என்பது ஒரு பெருவியப்பே. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நேரக்கூடாத நிலை இது.”
“துருவராஜாவின் கணிப்பு சதப்பிரதிசதம் மெய்ப்பட்டு விட்டதே! உதவ வந்துகொண்டிருந்த சத்துருக்கள் என்ன ஆனார்கள்?”
“கோவிந்தர் வீழ்ந்தார், துருவராஜா அரியணை ஏறினார், மொத்த சைனியமும் துருவராஜாவினுடைய கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்ற செய்தி தீயாகப் பரவியது. இனி எந்த அரசன் படையெடுத்து வருவான்? நெருப்புப் பற்றுவதற்கு முன்பே அணைத்துவிட்டார் துருவராஜா. அரச பதவி தனக்கு வரும் என்று கனவிலும் நினைக்காமல் இரண்டாம் பட்சத் துணை அதிகாரத்தோடேயே வாழ்வைக் கழித்தவருக்கு, வயதான காலத்தில் அரசுரிமை. அரச வமிசமும் புதிய கிளை வழியே படரத் தொடங்கியது.”
“விந்தைதான். அரசைத் தந்திதுர்க்கர் ஸ்தாபனம் செய்தார். அவருடைய வம்சம் அவரோடு முற்றுப் பெற்றுவிட்டது, முதலாண் வழித்தடம் மாறி, அவருடைய சிற்றப்பருக்குக் கிளைத்தது. அவருடைய வழியிலும் முதல் மகனோடேயே நின்று, இளைய சகோதரருக்கு வழிமாறிப் புதுக்கிளையை ஸ்தாபனம் செய்தது. அந்தச் சகோதரருக்கும் மூத்த ஆண்மகன் வழியே சந்ததி நிர்மாணம் ஆகவில்லை அல்லவா? துருவராஜாவின் கிளை, முதன்மகன் கற்கனையும், அடுத்த உரிமை பெற்ற ஸ்தம்பனையும் தாண்டி, ஜகத்துங்கர் கோவிந்தராஜாவின் வழியாகக் கசிந்தது.”
“ஆம். மீண்டும் முதலாண்வழி தடம் மாறிய கதைதான்.”
“விதியின் விளையாட்டு விந்தைதான். துருவராஜாவுக்கு, இந்தச் சத்துருக்களால் பிறகு தொல்லையே எழவில்லையா?”
“அது ஒரு நீளமான கதை. துருவராஜா அடுத்துச் செய்த செய்கைகள்தாம் இராட்டிரக் கூடத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன. தன் தமையனையே தான் எதிர்க்கவேண்டிய சூழ்நிலை வரும் என்று அவர் நினைத்தும் பார்த்ததில்லை. தந்தை கிருஷ்ணராஜாவின் ஆளுகையின் போதும், அதற்குப் பிறகும், நான்கைந்து பஃது அகவை வரை, தமையன் பெரிய கோவிந்தருக்குக் கீழ்ப்படிந்து, அரசின் வடவெல்லைப்புறத்தில், நாசிகா, மற்றும் மாளவத்தின் கண்காணிப்பாளராக இருந்து கொண்டு, பக்க வாத்தியக்காரராகவே இசைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர், பிணக்கென்று ஒன்று ஏற்படும்வரைத் தமையனை ஒருபோதும் எதிர்த்து நடக்காதவர், தமையனின் நம்பிக்கைக்கு ஒரு காலத்தில் முழுப்பாத்திரராக இருந்தவர், இராச்சியத்துக்கே பங்கம் ஏற்படும் நிலை எழுந்தபோது, எல்லாப் பிரமுகர்களும் கட்டாயப் படுத்த, அவசியத்தை உணர்ந்து, வேறு வழியின்றி அரியணையில் அமர்ந்தார்.
“அப்படிப் பின்புலத்திலேயே காலம் கழித்தவர், அரியணையில் அமர்ந்ததும் காட்டிய திறமை பிரமிக்க வைக்கும் ஒன்று. பத்துப் பதினைந்து வருடங்களில், ஒரு சாம்ராச்சியத்திற்கே அடிகோலி விட்டார். அவை எல்லாவற்றிலும் பிரபூதவர்ஷருடைய பங்கு நிறைய இருந்தது. தந்தையும் தனயனும், அடுத்த முப்பது வருடங்களில் பாரத வர்ஷத்தின் வரலாற்றில் பெரிய இடத்தைப் பிடித்தார்கள். தக்கணம் தன் வலிமையைக் காட்டிய காலம் அது. உயர்ச்சியைத் தொட்ட எதுவும், தாழ்குதலும் இயற்கை அல்லவா? மலையுச்சியை அடைந்துவிட்டால், அடுத்துக் கீழேதானே இறங்கவேண்டும்? அப்படித்தான் நாம் அதன் தாழ்ச்சியையும் இப்போது காண்கிறோம். நீ அதன் விளைவுகளால் தான் பிறந்த மண்ணில் இருந்து ஓடிவந்து இப்படி நாடோடி போல வாழ்ந்து வருகிறாய், இல்லையா? ஓர் இராச்சியத்தின் மன்னர்களின் நல்ல காலமும் கெட்ட காலமும், அவர்களுடைய போக்கும் முடிவுகளும் குடிகளையும் பற்றும் என்பதை நீ நிஜ வாழ்வில் தெரிந்து கொண்டிருக்கிறாய்.
“நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், பெரிய கோவிந்தரைத் தாக்கும் திட்டங்களை எல்லாம், துருவராஜா, தான் முன்பு நிர்வகித்துவந்த மயூரகண்டியில்தான் வடிவமைத்தார் என்று. மலைப்பிரதேசம் அது. இயற்கையிலே நல்ல அரண். அவருக்குத் தெரிந்த பிராந்தியம் வேறு. ஆதலால், அதுவே அவருடைய காலத்தில் தலைநகர் ஸ்தானத்தில் இருந்துவிட்டது. அவருக்குப் பிறகு அரியணை ஏறிய கோவிந்தருக்கும் அதுதான் நிர்வாக க்ஷேத்ரம். அங்கிருந்துதான் அவருடைய சாஸனங்களும் வெளியிடப்பட்டன.
“அரியணையில் அமரவேண்டிய கட்டாயத்தைத் தனக்கு ஏற்படுத்திய காரணத்தைத் துருவராஜா எப்போதும் நினைவில் வைத்திருந்தார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில், அது போன்ற காரணங்கள் எழாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார். அது மட்டுமன்று, தனக்கு உதவியவர்களையும் அவர் மறக்கவில்லை. தனக்கு எதிராகக் கொடி பிடித்தவர்களையும் மறக்கவில்லை. அவருடைய ஆட்சியின் சாராம்சத்தை, அவருடைய சிற்றப்பாவின் புதல்வர் சங்கரகணராஜா மிக அழகாகத் தன் சாஸனத்தில் கூறுவது வழக்கம். அவருடைய எல்லாச் சாஸனங்களிலும் வமிசாவழியைக் குறிப்பிடும்போது, பெரிய கோவிந்தரைக் குறிப்பிட்டுவிட்டு, உடனேயே, அடுத்த வரியில் இந்த வரிகள் இருக்கும்.
“’தன்னை ஆண்ட அரசனாலேயே கைவிடப்பட்டும், துண்டாடப்பட்டும் நிர்க்கதியாக விடப்பட்ட ராஜலக்ஷ்மியானவள், அப்படிக் கைவிடப்பட்டதன் விளைவாக எங்கே இராஜ்ஜியத்திலேயே இல்லாமல் வெளியே போய்விடப் போகிறாளே என்பதற்காக, அந்தக் கோவிந்தராஜாவுடைய இளையர் நிருபமராஜா, இராஜ்ஜியத்தையும், அதன் நிர்வாகம் சார்ந்த மற்ற விஷயங்களையும், குரு பக்தியோடு நடத்திச் சென்றார்’.”
“எவ்வளவு அழகான வரிகள்!”
“ஆம். இராட்டிரக் கூட அரசர்களுக்குக் கவி உணர்ச்சி அதிகம். தந்திதுர்க்கரில் இருந்து தொடங்கி, இன்றுவரை பார்த்தாயானால், இது புலப்படும். மல்லுக்கு நின்று வெட்டி வீழ்த்தும் வமிசம்தான். ஆனால், மொழி உணர்ச்சி மிக அதிகம். இதை, வேங்கி இராச்சிய மெய்கீர்த்தியிலும் கொண்டு வரவேண்டும் என்று எனக்கு ஆசை. நரேந்திரரும் சரி, அவருடைய இடத்தில் அமர்ந்து, ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் கலி விஷ்ணுவர்த்தனரும் சரி, உயர்ந்த மன்னர்கள். அவர்களுடைய புகழ் பேசப்பட வேண்டும். இதுவரை, தான் எந்தக் கொடை கொடுத்தாலும் விஷ்ணுவர்த்தனர் தந்தையுடைய பேரில்தான் செய்துவருகிறார். தான் இருப்பதே தெரியாமல் ஆட்சியை நடத்தும் உத்தம அரசர் அவர்.”
“ஆம், சந்தேகமில்லை. ஸ்வர்க்கம் போல அன்றோ, இங்கே சூழ்நிலை இருக்கிறது! நான் கண்டிப்பாக எழுதுகிறேன். இதுவரை வழக்கில் இல்லாத யாப்பில் செய்யுளைப் படைக்கிறேன்.“
“ஆஹா! மிக நல்லது. ததாஸ்து! இப்படி குருதிக்கறை படிந்த கரத்தோடு செங்கோலைத் தாங்கிய துருவமஹாராஜா, குடிகள் தன்னை வெறுக்காமல் இருக்கப் பல வினைகள் செய்தார். அவர் அடிக்கடி சொல்வார், ‘ஓர் அரசன், தர்மத்தில் இருந்து பிறழலாம். அல்லது, அவனுடைய நடவடிக்கைகள் நமக்கு ஏற்புடையனவாக இல்லாமல் போகலாம். அப்படிப்பட்டவனை, நாம் எதிர்க்க முடிவு செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவன் நாட்டின் மேல் படையெடுத்து, அவனைச் சிறை பிடிக்கிறோம் அல்லது கொல்கிறோம். இப்போது அவனுடைய நாடு நமக்குக் கட்டுப்பட்டதாக ஆகி விடுகிறது.
“‘அந்த நாட்டின் நில எல்லைகளை நாம் வெற்றி கொண்டாலும், அந்நாட்டில் வசிக்கும் மக்களின் மனவெல்லைகளை வெற்றி கொண்டால்தான் அது முழு வெற்றி. அடங்காத காட்டுக் குதிரையை மடக்கி அதன் மீது ஏறிவிடலாம். ஆனால், குதிரை நம்மை ஏற்றுக் கொள்ளாதவரை, நம் நிலை, ஆட்டங்கண்டுதான் இருக்கும். நம்மால் வழிக்குக் கொண்டு வரமுடியாத குதிரையின் மேல், நாம் அமர்ந்து கொள்வதால் மட்டும் என்ன பயன் ஏற்படப் போகிறது? நாம் நினைத்த இடத்துக்கு அது போகப்போவதில்லை. நம் முழு முயற்சியும் அதிலிருந்து கீழே விழுந்து விடாமல் இருப்பதற்கே செலவாகி விடும் நிலையில், அதை எப்படிச் செலுத்தி நாம் பயணம் செய்யப் போகிறோம்?
“‘நாடும் அப்படித்தான். தமக்கு மிகவும் அனுகூலமாகச் செயல்படுகிறார் என்று தாம் கருதும் அரசனை வதம் செய்தவரைக் குடிமக்கள் ஏற்றுக் கொள்வது மிகக்கடினம். அவர்களுடைய மனத்தின் அடித்தளத்தில் தோன்றும் அச்சமும், அருவெறுப்பும், தம்முடைய அரசனை வீழ்த்தியவரை என்றும் கறுவோடும், கயக்கோடும்தான் பார்க்கத் தூண்டும்’ என்பார்.”
“சத்தியமான வார்த்தைகள். கடுமையான போருக்குப் பிறகு, கங்க மண்டலத்தின் ஸ்ரீபுருஷனை வீழ்த்திய கிருஷ்ணராஜாவைக் கங்கமண்டலம், எப்படிப் பார்த்தது என்று நீங்களும் சொல்லியிருக்கிறீர்களே. சித்திரமாயனைப் பல்லவத் தளபதி உதயசந்திரன் கொன்றபோதும் இந்த நிலைமைதான் அல்லவா? தானே சிறைப்பட்டு அன்றோ, பல்லவமல்லன் அந்த விரோத உணர்வை நீர்த்துப் போகச் செய்தான்?”
“சரியாகச் சொன்னாய். கற்கனைப் போன்ற அரசனை இழந்ததும், நாகசாரிகாவும் அப்படிப்பட்ட எண்ணங்களால் பீடிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிருஷ்ணராஜா பெரிய ராஜதந்திரி. நிர்வாகத்தில் சிம்மம். நாட்டைக் கைப்பற்றியவுடன் ராஜமாதா கற்கனின் தாய், துர்லபதேவியைச் சந்தித்துத் தான் ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டி நேர்ந்தது என்று விளக்கி, அவரை இராட்டிரக்கூடத்தின் ஆட்சிக்கு இணக்கமுடையவராக ஆக்கினார். அவரைச் சமாதானப்படுத்தியபின், குடிமக்களே உணராத வகையில், இயல்பாக, வெகுக்குறைந்த காலத்தில் அவர்களுடைய மனத்தையும் மாற்றி வெற்றி கொண்டார். நாகசாரிகாவையும் நன்கு புஷ்டிப்படுத்தினார். இதன் விளைவாகத்தான் பிரதிஹாரன், இரட்டர்களிடம் தானிழந்த உஜ்ஜைனியை மீண்டும் கவர்ந்து கொண்டுவிட்டாலும், அத்தோடு அவனுடைய வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது.”
“மற்ற சத்துருக்களால் என்ன விளைவு ஏற்பட்டது? நீளமான கதை என்றீர்கள். முடிந்தால் சொல்லுங்கள். கேட்க ஆவலாக இருக்கிறேன்”
“இராட்டிரக்கூட அரசராக முடி சூட்டிக் கொண்டு, மயூரகண்டியில் உறுதியாகக் கால் ஊன்றிக் கொண்டதும், தனக்கு எதிராகக் கொடி தூக்கியவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார், கலிவல்லபர் துருவராஜா. அவர்களுக்குத் தான் யார் என்பது புரியாததால்தான், ஒழுக்கமற்றவராகவும், தான் ஆட்சி செய்த மண்ணுக்கு நேர்மையாக இல்லாதவராகவும் இருந்தும், தமையன் கோவிந்தராஜாவுக்கு, அவர்கள் துணை போனார்கள் என்று எண்ணினார். இந்தக் கருத்தை மாற்றித் தான் யார் என்பதைக் காட்டவேண்டும் என்ற உத்வேகம் அவருக்கு ஏற்பட்டது. அதன் வீரியத்தைத் தாங்காமல், அந்த நாடுகள் ஆடிப்போயின.
“முதலில், கங்கவாடியின் மேல்தான் அவருடைய கவனம் சென்றது. சுபதுங்கர் கிருஷ்ணராஜா, இராட்டிரகூடச் சாம்ராஜ்ஜியத்தோடு கங்கத்தை இணைக்காமல், ஸ்ரீபுருஷன் தலைமையிலேயே ஆளவிட்டதைப் பிழை என்று கருதிய துருவராஜா, அதைச் சரிசெய்ய முனைந்தார். ஏற்கனவே, மார்தட்டிக்கொண்டு, அமருக்காக மதமும் மதியும் வீங்கிய நிலையில் இருந்த கங்கப்படைகளை, ஒரேயடியாக நசுக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு தாக்குதலை மிக நேர்த்தியாகத் திட்டமிட்டார்.
“முதலில், இராட்டிரக்கூடப் படைகள், சிவமாறரின் படைகளை எதிர்த்து, அவ்வளவாக முன்னேற முடியவில்லை. சிவமாறனின் ஆக்ரோஷம், அவனுடைய படைகளின் எதிர்ப்பில் தெரிந்தது. ஏற்கனவே, தந்தையோடு சேர்ந்து, கங்கப் படைகளை எதிர்த்துப் போரிட்டவர்தானே துருவர்? அந்த அனுபவம் இருந்ததால், முதலில், வேகமாகக் களத்தில் இறங்கிச் சக்தியை விரயம் செய்யாமல், எதிரியைக் களைக்க வைத்து ஒரு பொய்யான வெற்றிப் பிம்பத்தை சிவமாறனுக்கு உருவாக்கினார். அதை மெய்யென்று சிவமாறர் தரப்பினர் நம்ப ஆரம்பித்ததும், ஸ்தம்பராஜாவோடு தானே தலைமை வகித்துச் சமுக்களின் பெரும் எண்ணிக்கையோடு, இரட்டபாடியின் முழுத்திறனும் பொங்கி வழிய, மிகுந்த ஆவேசத்துடன் கங்கவாடி மீது, இடியென இறங்கித் தாக்கினார். கோவிந்தரும் இந்திரரும் பின்னால், அடுத்த நிலைக்கான தாக்குதலுக்காக அணிசென்றார்கள்.
“அடிக்கடி சமு, குன்மம் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் என்ன?”
“ஒரு சமு என்பது, ஒன்பதுக்கு ஒன்பதாக அணிவகுக்கப்பட்ட ஒன்பது யானைப்படைகளும், ஒன்பதுக்கு ஒன்பதாக அணிவகுக்கப்பட்ட ஒன்பது தேர்ப்படைகளும், அதைப்போல மும்மடங்கு குதிரைப்படைகளும், ஐம்மடங்கு காற்படைகளும் சேர்ந்தது. மொத்தம் ஏழாயிரமும், முந்நூறில், பத்துக் குறைவான உறுப்புக்கள் கொண்டது ஒரு சமு.”
“ஓ! அவ்வளவு பெரியதா? அப்படியென்றால், எழுநூற்று இருபத்து ஒன்பது பங்க்திகள், ஒரு சமு ஆகுமா?”
“கணக்குச் சரிதான். ஒரு சேனாமுகத்தில் மூன்று பங்க்தி. மூன்று சேனாமுகம் ஒரு குன்மம். மூன்று குன்மம் ஒரு கணம். மூன்று கணம் ஒரு வாஹினி. மூன்று வாஹினி ஒரு பிரத்தனம். மூன்று பிரத்தனம் ஒரு சமு. ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு கணக்கு வழக்கத்தில் இருக்கிறது. இங்கே இதை வைத்துத்தான் கணக்கிடுவது வழக்கம். ஆனாலும் கணக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துவதில்லை. நானும் பழக்கத்தில் சமு என்று சொல்கிறேனே தவிர, அத்தனை தேர்கள் இப்போதெல்லாம் பயன்படுத்தப்படுவதில்லை. புரவிகளும், காலாட்களும் முறையே மூன்றும் ஐந்தும் ஒரு குஞ்சரத்துக்கு. அந்தக் கணக்கு இன்னும் வழக்கில் இருக்கிறது. ஆட்கள் கணக்குப்படி பார்த்தால், குஞ்சரத்தின் மீது இருவர், மூன்று புரவிகளுக்கு மூவர், ஐந்து காலாட்கள் என்று பஃது பேர் ஒரு பங்க்தியில் பொதுவாக இருப்பார்கள். இந்த மொத்தப் பங்க்திக்கும் பொறுப்பு வகிப்பவன் ஒரு பதிகன். தசாதிபதி என்று சொல்வார்கள். பஃதுப் பதிகர்களுக்கு ஒரு சேனாபதி பொறுப்பு. சேனாதிபதியை, சதாதிபதி என்றழைக்கும் வழக்கமும் உண்டு. பஃது சேனாபதிகளுக்கு, ஒரு நாயகன் பொறுப்பு. கொஞ்சம் குழப்பமானதுதான். அமருக்கும், பூமிக்கும் ஏற்றாற்போல அவ்வப்போது படைகள் கோக்கப்படும். சிற்றமர்களுக்குப் பஃதின் மடங்கில் படையைக் கோப்பார்கள். துருவராஜாவுடைய படையில், யானைகளை விடப் புரவிகள் அதிகமாக இருக்கும். வில்லாளிகளின் எண்ணிக்கையும், மற்ற சேனைகளை விட அதிகம். கங்கப் படையில், இரு புரவிகளுக்கு ஒரு குஞ்சரம் இருக்கும். அவர்கள் குஞ்சரத்தையே, குதிரை மாதிரிதான் செலுத்துவார்கள்.”
“ஆமாம் ஐயா! மான்யகேடத்தில் இருந்து நான் தப்பித்து ஓடும்போது வழியில் ஒரு யானைப் படையைப் பார்த்தேன். புகழ்பெற்ற கங்கப் படைகள் என்றார்கள். ஒரு மிகப் பெரிய சாம்பல் யானையின் மீது ஒருவர் சம்பிரமமாக அமர்ந்திருந்தார். அவர் ஒருவரே பாகன். அவரே வீரர். பிரதிமானம் அலங்கரிக்கப்பட்டிருந்த அவ்வத்தியின் எருத்தத்தில், அச்சுறு கொழுந்தொடர் போலக் கட்டப்பட்டிருந்த கச்சத்தைப் பிடித்தவாறு படைக்கு முன்னே சென்றுகொண்டிருந்தார். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் யானை வளைந்து நெளிந்து ஒரு பாம்பைப் போலப் புழுதி கிளப்பிக்கொண்டு சென்று கொண்டிருந்ததது. பின்னாலேயே பல யானைகள் அதற்கு இணையாக தொம் தொம் என்று கால்களைப் பூமியில் மிதித்து சாரை சாரையாகச் சென்று கொண்டிருந்தன. ஆவேசமான படைகள். கண்டு மிரண்டு போய், ஒரு குன்றின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பயமுறுத்தும் வீரம் சொரிந்த காட்சி! இப்படையை எதிர்க்கும் எந்த எதிரியின் படையும் தூள் தூள்தான் என்று நினைத்தேன். அவை கொளனூர் சிற்றராசர் ஆதோரய்யாவை எதிர்க்கப் போய்க்கொண்டிருந்ததாக, அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.”
“ஓ! அந்தச் சண்டையில்தான் சிவமாறர் கொல்லப்பட்டார். அதைப் பின்னர்ச் சொல்கிறேன். துருவராஜா முன்னால் செல்ல, முதுகுந்தூர் அருகே கோவிந்தராஜா, பெரிய படையோடு இளையர் இந்திரராஜாவோடு முகாமிட்டிருந்தார். முதலில் பெற்ற வெற்றிகளின் மிதப்பில் இருந்த கங்கமண்டலம், திடீரென்று பெய்த பேய்மழை போல வர்ஷித்த இராட்டிரக்கூடப் படைகளைச் சமாளிக்க முடியாமல் திணறியது. பீமகோபன், பானுகோபன் என்றெல்லாம் புகழ்பெற்றிருந்த கங்கஅரசர்கள், துருவராஜாவுடைய துனியையும், துடிப்பையும் தாங்க முடியாமல் துவண்டார்கள். தாரவர்ஷர் என்றால் தாவரங்களையும் விலங்குகளையும் உயிர்களையும் காக்கும் மழை போன்றவர் என்று நினைத்திருந்தவர்கள், இவர் போர்க்களத்தில் வர்ஷித்து எதிர்த்தவர்களின் உயிரைக் குடிக்கும் அம்பு மழை என்பதை உணர்ந்தார்கள்.
“கோவிந்தர் சொல்லுவார், ‘தந்தையார், கிருஷ்ணமஹாராஜாவுடன் சேர்ந்து போர் புரிந்திருக்கிறார், மாவீரர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அவருடைய அமர்க்களத் திறலை, நான் அதுவரையில் நேரில் கண்டிற்றிலேன். அப்போதுதான் முதன்முதலில் நேரில் காணும் சந்தர்ப்பம் பெற்றேன். இளங்காலர் அல்லர் அவர். என்னைப்போல இருமடங்கு மூத்த அகவையர். ஆனால், நான் கண்டது யம தாண்டவம். உட்புகுந்து சுழல்காற்று வீசிவிட்டுச் சென்ற அடவி போல, அவருடைய படைகள், வழியெல்லாம், கங்கர்களுக்கு விளைவித்த நாசம் சொல்லிமுடியாது. நாங்கள் சில நாட்கள் இடைவெளியில், அவருடைய படைகளின் பின் சென்றோம். சில சமயங்களில் அவருடைய படைகளுக்குச் சமீபமாகச் சென்று விடுவோம். அப்போதெல்லாம், தந்தையாருடைய பிரத்தியேக யுத்த பேரிகையிலிருந்து எழும் உரும் உரும் என்ற உறுமல், தூரத்தேயிருந்து எங்களுக்குச் செவிகளில் கேட்கும். அவருடைய வாள்வீச்சில் அங்கம் சிதைந்தும், சிரமிழந்தும் கீழே விழுந்து கிடந்த கங்கவீரர்களின் உடல்களில் இருந்து கொப்பளித்து ஒழுகும் வெதுவெதுப்பான குருதிப்பானத்தை, வயிறு முட்டக் குடித்து மரணதேவதைதான் தேக்கெறிகிறதோ என்று கேட்பவர்கள் எல்லோரையும் அஞ்சிக் குலைநடுங்கும் அளவுக்கு அந்தப் பேரிகைகள் சப்தமிடும்.’ என்பார்”.
“இன்னொன்றும் சொல்வார் - ‘பாட்டனார், கிருஷ்ணராஜா கங்கத்தை ஒடுக்கினார்தான், ஆனால், அது பெருத்த சேதத்துக்குப்பின் அடைந்த வெற்றி. அவர் எதிர்த்ததும் ஸ்ரீபுருஷரைப் போன்ற அனுபவசாலியை. துருவராஜா எதிர்த்தது இளமையின் வேகத்தில் இருந்த சிவமாறரை. கோபாவேசப்பட்டுச் சிவமாறருக்குப் பாடம் கற்பிக்கும் விதமாக, அவர் கங்கத்தைத் தாக்கிய விதத்தைப் பார்த்துத் தக்கணமே அதிர்ந்தது. பிறரால் ஒருபோதும் வெல்லப்படாத, நிலமகளின் முகமெங்கும் முழுப்பலத்துடன் ஓடி, அவளை மூச்சுத் திணற அடித்தவனும், இணையற்ற அகந்தையால் நிரம்பியவனும் ஆன கங்கன், அவரால் சிறைபிடிக்கப்பட்டதைக் கண்ட கலிபுருஷன், தான் எங்கே உடலோடேயே தண்டிக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில், கண்காணாமல் தப்பி ஓடினானாம். – இப்படி அவர் வர்ணிப்பதை நேரில் கேட்டவன் நான்”, பிரதாபரின் குரலில் உணர்ச்சி செறிந்திருந்தது.
“பரமேஸ்வரா!! கேட்கவே பயங்கரமாக இருக்கிறதே! உங்கள் வழியாகக் கேட்கும்போதே எனக்கு இப்படி மயிர்க்கூச்செறிகிறதே, நேரில் கேட்ட உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்!”
“துருவருடைய குதிரைப்படைகளின் தாக்குதலில், கங்கத்தின் வலிமையான யானைப் படைகள், துவம்சம் ஆயின. தந்தையர்கள் கிருஷ்ணராஜாவும் ஸ்ரீபுருஷரும் எப்படிக் கடுமையாகச் சண்டை புரிந்தார்களோ, அப்படியேதான் அவர்களுடைய புதல்வர்களும் அமர் செய்தார்கள். ஆனால், ஒரு வியத்தியாசம், கிருஷ்ணராஜா பலவருடங்களாகப் போரிட்டுப் பணிய வைத்த கங்கத்தை, ஒரு திங்களுக்குள் தன் காலடியில் கிடாத்தினார். கிருஷ்ணராஜா காலத்தில் நடந்த யுத்தம் போல இல்லாமல், இராட்டிரக்கூடம் குறைந்த சேதத்துடன் வெற்றி பெற்றது.
“துருவ நிருபம தாரவர்ஷரால், அறுநூறு எழுநூறு வருடங்களாகப் பேணப்பட்டு வந்த கங்கத்தின் இறையாண்மை தவிடு பொடியாகியது. இதற்கு முன் ஒருபோதும் கங்கமண்டலம் இம்மாதிரித் தோல்வியைச் சந்தித்ததும் இல்லை, இப்படிக் கைப்பற்றப்பட்டுச் சிற்றரசானதும் இல்லை. நான் முன்னமே சொன்னதுபோல, அகாலவர்ஷர், ஸ்ரீபுருஷரை ஆட்சியில் தொடரச் சொன்னதுபோல, துருவராஜர் சிவமாறருக்கு இடம் கொடுக்கவில்லை. சிவமாறரைச் சுதந்திரமாக விட்டால், வாளாவிருக்க மாட்டார் என்பதால், மூப்படைந்த கொங்கணிவர்மர் ஸ்ரீபுருஷர் கண் முன்னால், அவருடைய புதல்வரின் கால்களைச் சங்கிலியால் பிணைத்தார். சங்கிலியோடு பகிரங்கமாக மக்கள் பார்க்க, மயூரகண்டிக்கு அழைத்துவந்து, சிறையில் அடைத்தார். துருவராஜாவின் அந்திமக் காலம்வரை சிவமாறர், இராட்டிரக் கூடச் சிறையில்தான் இருந்தார்.
“கங்கக் குடிமக்கள், தங்கள் அரசன் சங்கிலியால் பிணைக்கப்பட்டுச் சிறைபிடித்துச் செல்லப்படுவதைக் காணும் அவமானத்தை அனுபவித்தனர். பண்டிதர்களான அரசர்களால் ஆளப்பட்டு வந்த கங்கம், ஒழுக்கமற்ற ஓர் அரசனுக்குப் பரிந்து போனதால்தான், அவனோடு போட்டியிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட அவனுடைய இளைய சகோதரனுடைய வெறுப்பைச் சம்பாதித்தது, தன்னுடைய தனித்துவத்தையும் இழந்தது, என்று பலரையும் சொல்லவைத்தார் துருவர்.”
“கங்கம் முழுவதும் சிவமாறர் தலைமையில்தான் இருந்ததா? நான் அந்தப் பிராந்தியத்தில் சுற்றிக் கொண்டிருந்தபோது, நொளம்பவாடிப் பகுதியில் இருந்த மக்களுக்குச் சிவமாறர் மீது ஒருமித்த அன்பு இல்லாதது போலத் தோன்றியது எனக்கு.”
“துருவராஜாவிடம் கங்கமண்டலம் தோற்கும் வரை, எல்லாக்கங்கமும் சிவமாறரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சிவமாறரை எதிர்த்த துர்க்கமாறன்தான் நிர்மூலம் செய்யப்பட்டுவிட்டாரே. ஆனால், இப்போதிருக்கும் கங்கம் இரண்டுபட்டுக் கிடக்கிறது.”
“சகோதரச் சண்டையாலா?”
“ஆம். ஸ்ரீபுருஷருக்குப் பல மனைவிகள். பல மகன்கள் என்று சொல்லியிருக்கிறேன். விநாயகிநிம்மடி என்றவர் மூலம் பிறந்தவர்கள்தாம் சிவமாறர் மற்றும் துர்க்கமாறர். மற்றொரு பட்டத்து ராணியான விஜயமஹாதேவியின் மகன் விஜயாதித்தியன். கங்கத்துக்கும் கிருஷ்ணராஜாவுக்கும் நடந்த போரில், பெரும்வீரத்தைக் காட்டியிருந்த சீயவல்லவராசன், ஏற்கனவே இறந்து விட்டிருந்தான்..
“ஸ்ரீபுருஷர் மஹாராஜாவாக இருந்தபோது, நிர்வாகத்தைத் தன்னுடைய குமாரர்களுக்குப் பிரித்துக் கொடுத்திருந்தார். சிவமாறர் கடம்பூர், குனிகல் உள்ளடக்கிய மேற்குப் புறத்தையும், விஜயாதித்தியன், கெரகோடு, அசந்தி போன்ற மத்தியப் பகுதிகளையும், துர்க்கமாறன் குவலாலபுரம் முந்நூறு, கங்கம் ஆறாயிரம் மற்றும் பெலாத்தூர் அடங்கிய கிழக்குப் பகுதியையும் நிர்வகித்து வந்தார்கள்.“
“விஜயாதித்தியருக்கும், சிவமாறருக்கும் முரண்பாடு எதுவும் வரவில்லையா?”
“இல்லை. அவர்கள் இராம-பரதர்கள். ஆனால், அவர்களுடைய அடுத்த தலைமுறையினருக்கு இடையில் அந்த இணக்கம் நசித்தது. அதைப் பிறகு சொல்கிறேன்.”
“நீங்கள் சொன்ன ஒரு விஷயம் என்னைச் சிந்திக்க வைக்கிறது, ஐயா! தந்தை கிருஷ்ணராஜா, தந்தை ஸ்ரீபுருஷரைப் பொருதார். அவருக்குத் துணை நின்றது மகன் பெரிய கோவிந்தர். இங்கே மகன் துருவராஜா, மகன் சிவமாறனைப் பொருதார். துருவருக்குப் பக்கபலமாக நின்றதும், அவருடைய மகன் கோவிந்தர். பிறவிச் சக்கரம் சுழன்று சுழன்று வரும் என்று பெரியோர்கள் சொல்வது இதுதானோ? சிவமாறருக்குத்தான் பாவம் யாரும் துணை இல்லை.”
“ஆமாம். அவருடைய மகன் மாரசிம்ஹன் சிறுவன். ஆனால், தம்பி விஜயாதித்தியன் துணை நின்றானே. சரித்திரச் சுழற்சி என்றாய். அரசர்களின் வாழ்க்கையில் வேறென்ன? பாட்டனார் பெயர் தரிப்பது, அரியணை ஏறுவது, உரிமைக்குப் போராடுவது, பழி துடைக்க முயல்வது, செல்வத்தையும், மண்ணையும் விரிவாக்குவது, போகங்களைத் துய்ப்பது, காலத்தை வென்ற பெருமையை நிலைநிறுத்தத் துடிப்பது .. இவ்வளவுதானே?”
“அப்படிப் பார்த்தால், குடிமக்களுடைய வாழ்க்கையிலும் வேறென்ன பொருள் இருக்கிறது ஐயா? வயிற்றின் தேவைக்காகப் போராடுவது, எதிர்கால வாய்ப்புக்காகப் பொருள் சேர்ப்பது, அதைக் கள்வர்கள் கைப்பற்றாமல் பாதுகாப்பது, தனியாகவே இருந்துவிடாமல், துணை தேடுவது, சரீர சுகங்களை நிறைவேற்றக் கனவு காண்பது, இவையெல்லாம் நிறைவேறி விட்டால், சமுதாயத்தில், தன்னை மதிக்கவேண்டும் என்று பாடுபடுவது அவ்வளவுதானே?”
“இந்த இலக்கியவாதிகளும், விஞ்சைவாதிகளும் உருகி உருகி உருவாக்குவதெல்லாம் வீண் என்கிறாயோ?”
“வீண் என்று சொல்ல வரவில்லை, என்னைப் பொறுத்தவரை, இவை எல்லாமே, நாம் வாழும் பொழுதை, நமக்குப் பொருளுடையதாக ஆக்கிக் கொள்ளும் துடிப்புத்தான். இல்லையா? இதில், தராதரம் என்பது எங்கே இருக்கிறது? கோவிந்தரைப் போல சாம்ராச்சியத்தை உருவாக்கும் வாழ்வோ, மஹாவீர ஆச்சார்யரைப் போலக் கணித சாத்திரத்தைச் சிந்தித்துச் சிந்தித்து எழுதிவைக்கும் வாழ்வோ, அடுத்தவேளை உணவுக்காக, வரகுப்பயிர்களை உருவாக்கித் தருவதிலேயே செலவழிந்து போகும் வாழ்வோ, உருக்காலையில் உழைத்து ஓடாகிப் போகும் வாழ்வோ, எல்லாமே ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டு பிரிவுகளை மட்டும் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். என் வாழ்வை நடத்திக் கொள்ளும் அதிகாரம், என் கையில் இருக்கிறதா, மற்றவர்களுடைய கையில் இருக்கிறதா என்னும் உசாவலுக்குக் கிடைக்கும் உத்தரத்தை வைத்து வேண்டுமானால் தரம் பிரித்துக் கொள்ளலாம்”
“பெரிய கோவிந்தரின் வாழ்வு யார் கையில் இருந்தது என்று நினைக்கிறாய்? எல்லாப் போகங்களும் இருந்த வாழ்வு. அதிகாரமும் கையில் இருந்தது. அது பொருளுடைய வாழ்வுதானா?”
“இதைத் தீர்மானிக்கவேண்டியது அவர்தான், இல்லையா ஐயா? அவர் போகத்தில் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், மனநிறைவோடுதான் தாம் இருக்கிறோம் என்று உண்மையாகவே உணர்ந்திருந்தால், அது பொருளுடைய வாழ்வுதான். ஐம்பது வயதுவரை, துருவரிடம் இருந்த வாழ்வு, இராச்சிய பாரத்தின் கட்டாயத்தால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது. ஒரு கடமை குறுக்கே நுழைந்து விட்டது. அந்தக் கடமையை அவர் நிறைவேற்றும்போது, கருத்தும், உடலும், உணர்வும் அதில் ஈடுபடுத்திச் செய்தாரேயானால், அவருடைய வாழ்வும் பொருளுடையதே. அந்தக் கடமை போலியானதா, வலுக்கட்டாயமாகப் புகுத்தப்பட்டதா, இதுதான் உயர்ந்த கடமை என்று போதிக்கப்பட்டு நாம் ஏற்றுக்கொண்டதா என்றெல்லாம் ஆறவமர அவரவர்கள் யோசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டியதுதான். என் வாழ்வு உயர்ந்தது, உன் தேடல் தாழ்ந்தது என்ற பேதம், போலியான பிம்பம் என்று எனக்குத் தோன்றுகிறது.
“சமுதாயப் பார்வை, ஒரு வரையறுக்கப்பட்ட பட்டியலால் நிர்ணயிக்கப்படுகிறதோ என்றுகூட எனக்குப் பல சமயங்களில் தோன்றுவதுண்டு. இந்தப் பட்டியலும் எல்லாக் காலத்திலும், எல்லாச் சமுதாயத்திலும், எல்லாத் தேயங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரே இடத்திலும், காலப் போக்கால் இது மாற்றமும் அடைகிறது.”
“சுவாரசியமாக இருக்கிறதே, நீ சொல்வது. புரிகிறாற்போல இருக்கிறது,
புரட்சிகரமாகவும் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விளக்கு பார்ப்போம்.”
No comments:
Post a Comment