“வா குக்கேஸ்வரா, விநயா! இவன் கோலாகலன். பாஷா ஞானம் உடையவன். நல்ல உலோகத் தச்சன். நீ அரசருடைய புகழ்க்கூற்று எழுதியிருக்கிறேன் என்றாய் அல்லவா? இவனும் விளங்கிக் கொள்ளட்டும். செதுக்குவதற்கு எளிதாக இருக்கும். அதற்குத்தான் வரச்சொன்னேன். பொருள் தெரியாமல், லிபியும் தெரியாமல் வடிவத்தை மட்டும் பார்த்துச் செதுக்கும் வழக்கை நிறுத்தவேண்டும்.”
கோலாகலன் இருவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டான். கலி விட்டு என்று ஜனங்களால்
அழைக்கப்பட்டு வந்த இளவரசர் கலிவிஷ்ணுவர்த்தனர் மீது தான் எழுதிய மெய்கீர்த்தியை
விநயன் சொன்னான்.
அரிந்ருப வாஜிவாரணபதா³தி மஹாப்⁴ரவிராம மாருத:
பரகரி ஸுஸ்தி²தாஸி ப⁴ருசி ப்ரவிநாஶன பா⁴னுஸன்னிப⁴:|
கு³ருதர தீ³னபா⁴க³வத மானவ மானித கல்பபாத³ப:
வரகரிக³ல்ல தே³வ ஸமநாயக வேங்கி³ புவி ப்ரஹாஸதே ||
“ஓஹோஹோ!” என்று சிலாகித்த பிரதாபர், “இரு, பொருளைச் சரியாகப் புரிந்துகொண்டேனா என்று பார்க்கிறேன். எதிரி அரசர்களின் குதிரை, யானை மற்றும் காலாட்படைகளைப் பெரிய மேகங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போலச் சிதறடிப்பவன், பகை யானையின் மேல் நிலைகொண்டு, நட்சத்திரங்களைப் போல மின்னும் கூரிய வாட்களை ஒளியிழக்கச் செய்யும் சூரியனைப் போன்றவன்; சிரேட்டமும் எளிமையும் கூடியவர்களாக விளங்கும் இறையடியார்களைக் கௌரவிப்பதில் கல்பவிருட்சத்தின் அடிமரம் போன்றவன்; கரிகாலதேவன் போன்ற அரசர்களுக்குச் சமமான நாயகன், வேங்கி மண்ணில் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டிருப்பவன். பொருள் சரியா?” என்றார்.
“மிகச்சரி ஐயா!”
“இது என்ன சந்தஸ்? இதுவரை இந்த ஓசையைக் கேட்டதில்லை நான். ஸரஸி போல இருக்கிறதோ?”
“சம்பகா, சம்பகமாலா என்று சொல்வார்கள் ஐயா! 21 அக்ஷரங்கள், நான்கு பாதங்கள். முதலில் நகணம், ஜகணம், பகணம் என்று மூன்று, பிறகு மூன்று ஜகணம். இறுதியில் ஒரு ரகணம் என்று ஏழு மூவக்ஷரத் தொகுதிகள்.”
“ஐயா! குறுக்கிடுவதற்கு மன்னிக்கவேண்டும். இந்த நகணம், நகணம், ஜகணம் என்றால் என்ன? செதுக்குவதற்குக் கொடுக்கப்படும் செய்யுள்களில் அடிக்கடி இவற்றைப் பற்றிப் பேசுவதைக் கேள்விப்படுகிறேன். இதுவரை யாரும் விளக்கமாகச் சொன்னதில்லை”
“அது ஒன்றுமில்லை கோலாகலா!” என்று குக்கேஸ்வரர் அவனுக்கு விளக்க முன்வந்தார். “குறில் நெடில் என்று இருக்கின்றன அல்லவா? இவற்றில் மூன்றைச் சேர்த்து உருவாக்குவது கணம். மூன்று அட்சரத் தொகுதி என்று வைத்துக் கொள்ளேன். மூன்றும் குறில்களாக இருக்கலாம், மூன்றும் நெடில்களாக இருக்கலாம். இரண்டும் கலந்தும் வரலாம். மொத்தம் எட்டு விதமாக இவை வரும். நகணம் என்றால் மூன்றும் குறில்கள், ஜகணம் என்றால் முதலில் குறில், இரண்டாவது நெடில், இறுதி அட்சரம் குறில். இப்போது முதல் வரியை எடுத்துக்கொள். மூன்று மூன்று அட்சரங்களாகப் பிரித்துக் கொண்டே வா. எங்கே சொல் பார்க்கலாம்?”
“அரிந்ரு பவாஜி வாரண பதா³தி மஹாப்⁴ர விராம மாருத:”
“சாது! 21 எழுத்துக்கள் ஏழு தொகுதிகளாகப் பிரிகின்றனவா?”
“ஆம் ஐயா! முதலில் மூன்று குறில்கள், அது நகணமா?”
“கற்பூரம் நீ! அடுத்தது?
“பவாஜி – ஒரு குறில் ஒரு நெடில் ஒரு குறில் – ஜகணம், சரிதானா?”
“சரிதான். அடுத்து ஒரு நெடில் இரண்டு குறில்கள். இது பகணம்.”
“ஆஹா! ருசியாக இருக்கிறதே இந்த விளையாட்டு, அடுத்து மூன்றும் ஜகணங்கள் இல்லையா?
“ஆமாம். இறுதியில் இருப்பது நெடில் குறில் நெடில். விஸர்க்கத்தை நெடிலாகக் கொள்ள வேண்டும். இது ரகணம்.”
“ஓ! இதைத்தான் விநயசர்மர் ‘நகணம், ஜகணம், பகணம் என்று மூன்று, பிறகு மூன்று ஜகணம். இறுதியில் ஒரு ரகணம் என்று ஏழு மூவக்ஷரத் தொகுதிகள்’ என்றாரோ?. இத்தனை நாள் இத்தோடு மல்லுக்கட்டி நின்றேன் ஐயா, ஒரு கணத்தில் புரிய வைத்துவிட்டீர்கள்!” கையெடுத்துக் கும்பிட்டான் கோலாகலன்
“உமக்குப் புரியவைப்பது எங்கள் கடமை கோலாகலரே! பட்டயத்தில் செதுக்குபவர்களுக்குப் பல மொழி அறிவும் யாப்பும் மிக அவசியம். வேற்று மொழி மட்டும் பேசும் தச்சர்கள் செதுக்கிய சாசனங்களைப் புரிந்துகொள்ள இயலாமல் எவ்வளவு திண்டாடுகிறோம்.” என்றார் குக்கேஸ்வரர்.
“விநயரே! இதில் அடிகள் தோறும் முதலிரண்டு எழுத்துக்களும் குறில்கள். ஒரே மாத்திரை அளவுகள், இரண்டாவது அட்சரம் ஒரே எழுத்தின் குறில் வகை. இதைத்தான் எதுகை என்பார்கள் தமிழ் மொழியில். அதனால், அமைப்பும் தமிழ் விருத்தம் போலவே இருக்கிறது. தெரிந்துதான் யாத்தீரோ?” என்று கேட்டார் குக்கேஸ்வரர்.
“ஆமாம். ஸம்ஸ்கிருதத்தில் துவி அட்சர பிராசம் என்பார்களே, அதேதான்.”
“இனிமையான ஓசை! இன்னொரு முறை பாடலைச் சொல்லுங்கள், எழுதிப் பார்த்துக் கொள்கிறேன்”.
விநயனும் சொன்னான்.
எழுதிப் பார்த்ததை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்தததும், “பொருள்படச்
சொற்களைப் பிரிக்காமல், இந்த ஸ்லோகத்தை இப்படிப் பிரித்துச்
சொல்கிறேன். ஓசையை மட்டும் கேளுங்கள்” என்று படித்துக் காண்பித்தார் குக்கேஸ்வரர்.
“அரிந்ருப – வாஜி – வாரணப - தா³திம - ஹாப்⁴ர - விராம - மாருத:
பரகரி – ஸுஸ்தி² – தாஸிப⁴ரு – சிப்ரவி – நாஶன – பா⁴னு – ஸன்னிப⁴:|
கு³ருதர – தீ³ன – பா⁴க³வத – மானவ – மானித – கல்ப – பாத³ப:
வரகரி – க³ல்ல – தே³வஸம – நாயக – வேங்கி³பு – விப்ர – ஹாஸதே ||”
“ஆஹா! இப்படிப் பிரித்தால், கேட்க இனிமையாக இருக்கிறதே. கலகல – கால – காலகல – காலல – காலல – கால – காலல” என்று சொல்லிப்பார்த்து இரசித்தார் பிரதாபவர்த்தனர். விநயனும், கோலாகாலனும் அந்த இலயத்தால் தூண்டப்பட்டுத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டார்கள்.
“இதே ஓசையை வைத்துத் தமிழில் ஒரு விருத்தம் செய்யட்டுமா?”
“தாராளமாகச் செய்
குக்கேஸ்வரா! அப்படிச் செய்தால்தான் பழமையான இந்த இருமொழிகளுக்கிடையே அவையவற்றிற்கு
என்றிருக்கும் யாப்பில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளமுடியும்” –
ஊக்குவித்தார் பிரதாபர்.
“கருவிளந் தேமா கூவிளங்காய் முன்னிரு கூவிளம் தேமா கூவிளம்
வருகுமிச் சந்தங் கேட்பதற்கு வாய்ப்பெனக் கின்றுநீர் தந்து
சாற்றினீர்’
கருநிறப் பேரைச் சூடுநதி காவளஞ் சேர்நல வேங்கி மண்டலம்
தருமெதிர் காலத் திற்றெலுங்கின் யாப்பிதை யாக்கிட ஆசை கொண்டனம்!”
என்று சொன்னார் குக்கேஸ்வரர்
“அபாரம்! அபாரம்!” கைதட்டினான் விநயன்.
“அப்படியே ஸம்ஸ்க்ருத சந்தஸ்ஸின் ஓசையைத் தமிழ்ப் பாடலிலும் பிடித்துக் கொண்டு வந்து விட்டீரே! வாய்பாட்டையும் பாட்டிலேயே கொண்டு வந்து விட்டீர். குன்றெயில் செழியனும், வெண்ணெல் கிழாரும் கேட்டால் பெருமுவகை கொள்வார்கள்.”
“குக்கேஸ்வரா, நீ வாழ்த்தியது பலிக்கட்டும். வருங்காலத்தில், தெலுங்குக் காப்பியங்கள், இந்தச் சம்பகமாலாவை நிறையப் பயன்படுத்தட்டும். இதற்கு என்ன பெயர் தமிழில்?”
“அன்று பேசினோம் அல்லவா, ஐயா, ஸம்ஸ்க்ருதத்தில் இருப்பதைப் போலத் தமிழில் சந்தஸ்ஸுகளுக்குத் தனித்தனிப் பெயர் கிடையாது. பாட்டை உதாரணமாகக் காண்பித்து ஓசையை அறிய வேண்டியதுதான்.”
“கேட்க ஒன்றுபோலவே இருக்கிறது. இந்தத் தேமா கருவிளம் இதெல்லாம் என்ன?” என்று கேட்டான் கொல்லன்.
“கோலாகலா! சம்ஸ்கிருதத்தில், எழுத்துக்களால் ஆன கணங்கள் என்ற தொகுதிகளைப் பற்றிச் சொன்னேன் அல்லவா, அதே போலத் தமிழிலும் உண்டு. அதைச் சீர்கள் என்பார்கள். வியத்தியாசம் என்னவென்றால் சீரென்பது அசைகளால் ஆன ஒரு தொகுதி. ஸம்ஸ்கிருதத்தைப் போல எழுத்துக்களால் ஆனதன்று. ஒரு சீரில், ஒன்றிலிருந்து மூன்று அசைகள் வரை இருக்கலாம்.”
“ஓ! அசை என்றால்?”
“ஒரு குறில், ஒரு நெடில், இரு குறில்கள், ஒரு குறில் ஒரு நெடில் என்ற நான்கும் ஒற்றோடு சேரந்தோ சேராமலோ வருவது அசை”
“ஓ! க, கா, கதி, மிடா, கல், கால், கதிர், கிடாய் – இவைதான் அசைகளா?”
“சாது! சாது! கோலாகலா! நீ பெரிய ஆள்!” எல்லோரும் பாராட்டக் கோலாகலன் வெட்கினான். “இவ்வளவு எளிதாக இருக்கிறது, இது என்ன பிரமாதம், ஐயா! வெற்றுக்குப் புகழ்கிறீர்கள். இந்த எட்டு அசைகளுக்கும் ஏதாவது பெயர் உண்டா?”
“முதல் இரண்டும் நேரசை, அடுத்த இரண்டும் நிரையசை. இதை நினைவு வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்தத் தேமா, கருவிளம் எல்லாம். தேமா இரண்டு நெடில்கள், அதாவது இரண்டு நேரசைகள். கருவிளம் இரண்டு குறில் இணைகள், அதாவது இரண்டு நிரையசைகள்.”
“கேட்பதற்கு என்ற சொல்லில் ஒரு நேர், ஒரு நிரை, ஒரு நேர் – மூவசைச் சீரா? அதனால்தான் கூ-விளங்-காய் என்றாரோ விநயர் பாட்டில்?”
“கலக்குகிறாய் கோலாகலா! அவ்வளவுதான் விருத்த யாப்பு. இனி நீ பாட்டெழுதலாம்.” சிரித்தார்கள் எல்லோரும்.
“கிட்டத்தட்ட இதே போல ஒரு பாடலைச் சொல்கிறேன் கேளுங்கள். அடி இறுதியில் மட்டும் சிறு மாற்றம். இது காழிப்பிள்ளையார் எழுதியது” என்று பாடலைச் சொன்னார் குக்கேஸ்வரர்.
“ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கும் பல ஓசைகளை இந்தப் பாலத்துறவி பயன்படுத்தியிருக்கிறாரோ? பலசமயங்களின் நீங்கள் இருவரும் அவருடைய பாடல்களை எடுத்துக்காட்டிப் புரிய வைக்கிறீர்கள்.”
“அன்னையின்
அமுதப்பால் உண்டவராயிற்றே ஐயா!” தெற்குத் திக்கை நோக்கிக் கும்பிட்டார்
குக்கேஸ்வரர். “அவர் பாடலைக் கேளுங்கள்:
“பலபல வேட மாகுபர னாரிபா கன்பசு
வேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெ ருக்குமுடி மேலணிந் தென்னுள மேபு
குந்த அதனால்
மலர்மிசை யோனு
மாலுமறை யோடுதே வர்வரு
கால மான பலவும்
அலைகடல் மேரு நல்லஅவை நல்லநல் ல-வடி
யார வர்க்கு மிகவே.”
“ஆச்சரியமாக இருக்கிறது. இதற்குப் பெயர் வைத்தால்தானே, ஓசையை மனத்தில் வைத்துக் கொள்ள முடியும்? ஏன் பெயர் வைக்காமல் விட்டு விட்டார்கள்?”
“இராகத்துக்கு ஒரு பெயர் தேவை என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்து, அவரவர்கள் ஒரு பெயர் வைத்து வருகிறார்கள். அதைப்போல வருங்காலத்தில் தமிழ்ப் பாக்களுக்கும் நடக்கலாம். நடக்கவேண்டும்” என்றான் விநயன்.
“ஆமாம். தமிழில், இதுவரை நீள நெடுவரிகள் கொண்ட செய்யுள்களைத்தான் எழுதி வந்தார்கள். திருமங்கையார் போன்ற சில வைணவப் புலவர்களும், காழிப்பிள்ளை போன்ற சைவப் புலவர்களும் வந்த பிறகுதான் நிறைய விருத்தங்கள் கேட்கக் கிடைக்கின்றன. விருத்தப்பா என்பது இப்போதுதான் மெல்ல மெல்லப் பிரபலமாகி வருகிறது.
“மிக நன்றாக இருக்கிறது விநயா! கோலாகலா, இதைச் செதுக்க ஏற்பாடு செய். அரசரிடம் போய்க் காட்டலாம்.”
“சரி ஐயா, நாளையும் நாளை மறுநாளும் அஷ்டமி, நவமி. தசமியில் துவங்குகிறேன். செய்து முடித்ததும் வந்து காண்பிக்கிறேன் ஐயா, இன்று நிறைய கற்றுக் கொண்டேன், உத்தரவு கொடுங்கள்” என்று கோலாகலன் விடைபெற்றுக் கொண்டான். குக்கேஸ்வரரும் பணி இருக்கிறது என்று அவனுடனே புறப்பட்டுச் சென்றுவிட்டார். பிரதாபரும், விநயனும் பேசிக்கொண்டே சிற்றாற்றங்கரைப் பக்கம் நடந்தார்கள்.
(ஆசிரியர் குறிப்பு: குணக விஜயாதித்யனின் சாத்தலூரு சாசனத்தில் உள்ள ஸ்லோகம் இது. சாசனத்தின் மொழி சமஸ்கிருதம் - பகுதி உரைநடை மற்றும் ஒரு பகுதி செய்யுள். உள்ள செய்யுள்களில், இந்தச் செய்யுளில் சம்பகா சந்தஸ் கையாளப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. மானியம் வழங்கியவரின் தந்தையான கலிவிட்டுவை (கலி விஷ்ணுவர்தனர்) விவரிக்கும் கவிஞர், அடிஎதுகையைப் பயன்படுத்தியுள்ளார் அடிதோறும் த்வி-அக்ஷர-ப்ராஸத்தைப் பயன்படுத்தும் ஆந்திரச் செய்யுள் மரபின் முதல் விதை இந்தக் காலத்தில் விதைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது தமிழின் தாக்கமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அதனால்தான், இந்த இணைப்பை ஒரு சுவாரஸ்யமான கதையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, விநயாதி சர்மன் கதாபாத்திரத்தைத் தமிழ்ப் பின்னணியுடன் உருவாக்கினேன்.
மேற்குறிப்பு: இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தெலுங்கு கவிஞரும் ஆந்திர மகாபாரதத்தின் ஆசிரியருமான நன்னய்யா பட்டாரகா, (வில்லிபாரதத்தைப் போல, மகாபாரதத்தின் தெலுங்கு மறுவாசிப்பு) சம்பகாவை பெரிதும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. நன்னையா தெலுங்கு மொழியின் முதல் கவிஞராகக் (ஆதிகவி) கருதப்படுபவர்.
கல்வெட்டின் ஈற்றடியை மட்டும் நான் கதைக்காக மாற்றியிருக்கிறேன்.
கலிவிட்டுவைத்தான் இதுவும் குறிக்கிறது. ஆனால், நிகழ்காலத்தில் குறிக்கிறது. குணக
விஜயாதித்தியனின் ஸ்லோகம், கலிவிஷ்ணு அமரலோகத்தில் ஆனந்தமாக இருக்கிறான்
என்கிறது.)
“எங்கு விட்டேன்?”
“பிரதிஹாரர்களைப் பற்றிச் சொல்கிறேன் என்றீர்கள் ஐயா”
“ஆங்! ஆமாம், ஆமாம். தேவசக்தி என்ற தேவராஜனின் தூண்டுதலால்தானோ அல்லது வேறு எதனாலோ தூண்டப்பட்டுத் தன்னுடைய சித்தத்தைக் கலைத்துக்கொண்ட பெரிய கோவிந்தரால் ஏற்பட்ட உலைவைத் துருவராஜா ஒருவழியாக முடிவுக்குக் கொண்டுவந்து விட்டிருந்தாலும், கோவிந்தருக்குத் துணை நின்றதற்கான விலையை மாளவத்தைக் கொடுக்கவைக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். பரதவர்ஷத்தின் ராஜாங்கப் பரிமாணத்தையே மாற்றியமைத்த இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற, அவருக்குப் பெரிய திட்டம் தீட்ட வேண்டியிருந்தது. தீட்டினார். நிறைவேற்றவும் செய்தார். இதற்கான வழிமுறைகளை அவர் ஆலோசிக்கும்போதும், அப்படி ஆலோசித்தவற்றைச் செயல்படுத்தும்போதும், அவற்றையெல்லாம் அருகிலிருந்து காணும் அனுபவம் வாய்த்தது, இளம்பிராயத்தில், எனக்குக் கிடைத்த பெரும் சீமத்து. என்ன திட்டம், எப்படிச் செயலாற்றப்பட்டது என்பதையெல்லாம் நீ தெரிந்து கொள்வதற்குமுன், அப்போது உத்தராபதத்தின் ராஜாங்க விவரத்தைச் சொல்கிறேன்.
“வடக்கே, இரண்டு முக்கியமான அரசுகள் கோலோச்சி வந்தன. ஒன்று பிரசித்தி பெற்ற கன்யாகுப்ஜம். இந்திராயுதனால் ஆளப்பட்டு வந்தது. இன்னொன்று கௌடதேசம். தர்மபாலனால் ஆளப்பட்டு வந்தது.”
“அப்படியென்றால், ஐம்பது வருடங்களுக்கு முன்னால், அந்தச் சமயத்தில், பாரதவர்ஷத்தில் நான்கே நான்கு முக்கியமான அரசர்கள்தான் இருந்தார்கள் என்று சொல்லலாமா? வடக்கே இந்திராயுதன், கிழக்கே தர்மபாலர், மேற்கே வத்ஸராஜன், தெற்கே துருவமஹாராஜா.”
“ஆமாம். அப்படித்தானே கவிகளும் பாடிவருகிறார்கள்?”
“நீங்கள் கவிகள் பாடியிருக்கிறார்கள் என்று சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. ஜீனசேனர், ஹரிவம்ஸ புராணத்தில் சொல்லியிருக்கிறார் அல்லவா?”
“ஆமாம், பண்டிதா, ஆமாம்” சிரித்தார் பிரதாபர். “உன் சிறு தலையில் எத்தனை விஷயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறாய் நீ! பூர்வாம் ஶ்ரீமத்³ அவந்தி பூ⁴ப்⁴ருதி ந்ருபே வத்ஸாதி³ராஜே பராம் ஸௌராணாம் அதி⁴மண்ட³லாம் ஜயயுதே வீரே வராஹே வதி – அதைத்தானே சொல்கிறாய்? ஆமாம். ஆனால், அவர் வர்த்தமானபுரத்தை வைத்துத் திக்குகளைச் சொல்லியிருக்கிறாரா, வேறு ஏதாவது ஊரை வைத்துச் சொல்லியிருக்கிறாரா என்று இங்கே சில பண்டிதர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை விரிந்த கிழக்கை வைத்துப் பார்க்கிறேன். கௌடதேசம் வரைதான் சொல்லியிருக்கிறார். தெற்கில் வல்லபராஜா. மேற்கில் சாளுக்கிய வராஹம். கிழக்கில் அவந்தி அரசன் வத்ஸராஜா. வடக்கில் இந்திராயுதன்.”
“அவர் தர்மபாலரைக் குறிப்பிடவில்லை என்பதால், கௌடதேசம் வத்ஸராஜாவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டிருந்ததா?”
“ஆமாம்.”
“இந்திராயுதராஜா யார்?”
“இந்திராயுதன், பண்டியின் வமிசத்தில் வந்தவன். நீ பண்டியைக் குறித்துக்
கேள்விப் பட்டிருக்கிறாயா?”
“சரித்திர ரீதியாகத் தெரியாது. பாணபட்டரின் ஹர்ஷசரிதத்தை நான் அப்பியசித்து வந்தபோது, ஹர்ஷமஹாராஜாவுடைய சசிவராக இருந்த ஒரு பண்டியைப் பற்றிய வர்ணனையைப் படித்திருக்கிறேன். அந்தப் பண்டியைப் பற்றியா சொல்கிறீர்கள்?”
“அதே பண்டிதான். ஹர்ஷவர்த்தனரின் தாய் யசோவதியின் சகோதரனுடைய குமாரர். ஹர்ஷவர்த்தனரின் காலம் முடிவடைந்ததும், கன்யாகுப்ஜத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் சிதறின. கன்யாகுப்ஜம், மற்றும் தென்மேற்கில், ராஜபுதனம், மாளவம், குர்ஜரம் ஆகிய பிராந்தியங்களில் பண்டியின் வழித்தோன்றல்கள் பலர் சிறுச்சிறு நாடுகளை ஆண்டுவந்தார்கள். இந்தச் சமயத்தில்தான் மிலேச்சர்களின் படையெடுப்பும் நிகழ்ந்தது. அதைப்பற்றியும், அப்போது எப்படி நாகபடன் அவர்களை முன்னேறாமல் செய்தான் என்பதைப் பற்றியும் நீ நான் சொல்லக் கேட்டிருக்கிறாய். தந்திதுர்க்க மஹாராஜா மறைந்ததும், கிருஷ்ணராஜா, தன்னுடைய அரியணைக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தவிர்ப்பதில் இறங்கிவிட்டதால், தனக்கடங்கியிருந்த உஜ்ஜைனியைப் பிரதிஹாரர்களுக்கு விட்டுக் கொடுக்கவேண்டியதாயிற்று என்பதையும் நினைவு வைத்துக் கொண்டிருப்பாய்.
“துருவராஜா கங்கத்தையும், வேங்கியையும், காஞ்சியையும் தனக்கு இணக்கமாக ஆக்கிக்கொள்ள நான்கைந்து வருடங்கள் ஆயின. இந்தச் சமயத்தில், தேவசக்தி இறந்து, அவனுடைய குமாரன் வத்ஸராஜன் உஜ்ஜைனியின் அரியணையில் ஏறியிருந்தான். நாகபடனைப் போலவே தேவராஜனும் பிரதிஹார சாம்ராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தவன்தான். ஆனால், நாகபடன் எல்லைகளை விரிவாக்கி இணைத்துக் கூட்டி உருவாக்கிய அரசு, நாகபடன் கண் முன்னாலேயே தந்திதுர்க்கரால் சிதறடிக்கப்பட்டது அல்லவா? இப்படிச் சிதறியதை, அவருடைய மறைவுக்குப் பிறகு, நாகபடனே தான் இறப்பதற்கு முன்னால் கொஞ்சம் சேர்த்துக் கட்டிவைத்தாலும், முழு அளவில், அவற்றை மறுபடியும் ஒருங்கிணைத்தவன் தேவராஜன்தான் என்று சொல்லியிருக்கிறேன். இந்த ஒருங்கிணைப்பிலேயே தேவராஜனின் வாழ்நாள் கழிந்துவிட்டது. அடுத்தவந்த வத்ஸராஜன், இருகடல்களுக்கும் இடையே தன்னுடைய ஸாம்ராஜ்ஜியம்தான் பிரகாசிக்க வேண்டும் என்ற கனவோடுதான் அரியணையே ஏறியதால், அரியணையில் அமர்ந்தும் அமராத கையாகத் துவக்கத்திலேயே கன்யாகுப்ஜத்தைக் குறிவைத்தான்.”
“தக்கணத்தைக் கைப்பற்றாமல், இருகடல் இடையே வியாபிக்கும் கனவு நிறைவேறாதே?”
“அதனால்தான், அவனுடைய தந்தை தேவராஜன், பெரிய கோவிந்தரோடு இணக்கத்தை விரும்பினான்.”
“எப்படித் தேவராஜா பெரிய கோவிந்தரின் மனத்தைக் கலைத்தார்?”
“எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. துருவருக்கும் தெரியாது. நிலைமை முற்றிப் போனதும்தான் அவருக்கும் தெரியவந்தது. ஒற்றர்கள் மூலமாகவும், நடவடிக்கைகள் மூலமாகவும், கோவிந்தரின் இருப்பிடத்தில் அடிக்கடி வந்துபோகும் பிரதிஹாரக் கூட்டங்களின் மூலமாகவும்தான் இது அரைபுரையாக அனுமிக்கப்பட்டிருந்தது. பலர் சொன்னதிலிருந்து என்னுடைய ஊகம் என்னவென்றால், உத்தராபதத்தைக் கைப்பற்றத் தேவராஜன் விரும்பினான். மிலேச்சர்கள் வந்துபோனதும், நிறைய துருக்கியர்களும், வேறுசில இனத்தவர்களும் குர்ஜரம், லாடம், பிருகுகச்சா மற்றும் விதர்ப்பத்தில் காணக்கிடைத்தார்கள். அந்த நாகரிகமும் பண்பாடும் கோவிந்தருக்குப் பிடித்துப்போக, பாரதவர்ஷத்துக்கு உரித்தான மறையவர்கள் காட்டும் வழிகள், சாத்திரம், விதிகள் போன்றவை மீது அவருக்கு ஈடுபாடு குறைந்துபோனது. அவருக்குப் பச்சிமத்தின் மீது ஒரு கண். இதை எப்படியோ தேவராஜன் அறிந்துகொண்டிருக்கவேண்டும். இல்லை, இந்த எண்ணத்தை அவன்தான் அவருக்குள் விதைத்தோ, தூண்டியோ விட்டிருக்கவேண்டும். அவனுடைய புதல்வன், யுவராஜா வத்ஸராஜா, கோவிந்தருடைய பிராயத்தினன் ஆனதால், இருவரும் இன்னும் ஒத்துப் போயினர். கோவிந்தரைப் போகவாழ்க்கையில் அதீதமாக ஈடுபடவைத்தது இந்தக் கேண்மைதான் என்றும் சொல்கிறார்கள். இவர்களுடைய நெருக்கத்தால்தான், கோவிந்தர், தக்கணத்து அரசுகளுக்குத் தன்னிச்சையான செயல்பாட்டைத் தந்து, அவற்றைத் தனக்கு இணக்கமானவர்களாக ஆக்கிவிட்டுத் தான் துருஷ்கம், சிந்துராஷ்ட்ரம், காம்போஜம், காந்தாரம் போன்ற நாடுகளடங்கிய பச்சிமத்தை ஆண்டுகொண்டு, உத்தராபதத்தைப் பிரதிஹாரர்கள் ஆண்டுகொள்வதற்கு ஸஹாயம் செய்ய நினைத்தார் என்று தோன்றுகிறது. இந்தத் திட்டத்தில், இராட்டிரக்கூடம் எப்படிப் போனால் என்ன என்ற சாயை தோன்றுகிறதல்லவா?”
“இதைக் குறை சொல்ல முடியாது. ஆனால், அவருக்குத் தக்கணத்து அரசர்கள், அப்போது இணக்கமானவர்களாக ஆக வாய்ப்பு இருந்திருக்கலாம்தான். ஆனால், வருங்காலத்தில், நிலைமை மாறினால்?”
“வருங்காலம், தன்னுடைய சந்ததி இதைப்பற்றி எல்லாம் அவர் சிந்தித்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. தன்னுடைய வாழ்வு மிலேச்ச அரசர்களைப் போலப் போகத்தில் கழிகிறதா, அதுபோதும் என்று தோன்றியிருந்திருக்கும்.”
“இதற்கு யாரும் இசைய மாட்டார்களே? நாடு என்பது ஓர் அரசன் தன்னிச்சையாகச் செயல்படுவதல்லவே?”
“அப்படி உனக்குத் தோன்றுகிறது. அவர் அப்படி நினைத்திருக்கவில்லை என்றால்? இந்தச் சித்தாந்த முரண்பாட்டால்தானே சிக்கல் ஏற்பட்டது? பெரிய கோவிந்தரின் இழப்பு, பிரதிஹாரர்களுக்குப் பெரிய பின்னடைவு. இருந்தாலும், இந்தப் பின்னடைவை அப்போதைக்குப் புறந்தள்ளிவிட்டு, வத்ஸராஜன் கன்யாகுப்ஜத்தைத் தாக்க முனைப்புக்கள் செய்யத் தொடங்கினான். நர்மதைக்கு வடக்கில் உள்ள அரசர்களுக்கு உஜ்ஜைனியும், கன்யாகுப்ஜமும், தக்கண அரசர்களுக்குக் காஞ்சியைப்போல. அவற்றை ஆள்வதுதான் பெரும்நிலை, பெற்றி, பெருமிதம் எல்லாமும். உஜ்ஜைனியைக் கைப்பற்றியாகி விட்டது. கன்யாகுப்ஜத்தைத் தாக்கினான். அவனுக்குச் சிற்றரசனாக இருந்த, சாகம்பரியை ஆண்டுவந்த துர்லபராஜன் என்ற சஹமான ராஜன், இந்தப் படையெடுப்பில் பெருத்த உதவி செய்தான்.
“கன்யாகுப்ஜத்தை ஆண்டுவந்த இந்திராயுதன் வத்ஸராஜனின் பெரும் யானைப்படைகளையும், புரவிப்படைகளையும் எதிர்கொள்ள முடியாமல் திணறினான். ஸாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதற்காக ஸாமராஜ்ஜியத்தை நிறுவினான் என்று கவிகள் பாடும் அளவுக்கு, வத்ஸராஜனுக்கு இந்த வெற்றி அமைந்தது.”
“ஆஹா! ஸாமம் என்றால் யானை. யானைகளின் ராஜ்ஜியம்!”
“வத்ஸராஜனிடம் தோற்ற இந்திரராஜன், அவந்திப் பிரதிஹார ஸாம்ராஜ்ஜியத்துக்கு அடங்கிய ஓர் சிற்றரசனாகக் கன்யாகுப்ஜத்தின் ஆட்சியைத் தொடர்ந்தான். அவனைக் கண்காணிக்கவும், கன்யாகுப்ஜத்தின் பாதுகாப்புக்காகவும் அங்கேயே ஒரு பெரிய சேனையை நிறுவி வைத்து விட்டு, வத்ஸராஜன் உஜ்ஜைனிக்குத் திரும்பினான். எங்கிருந்தோ வந்த வத்ஸராஜன், கங்கை யமுனை இடைத்துறை நாட்டின் மாணிக்கமாக விளங்கிய கன்யாகுப்ஜத்தைக் கவர்ந்துகொண்டு போனது அருகிலேயே அரசு புரிந்துவந்த பால வமிசத்துத் தர்மபாலருக்கு வயிறழற்றியது. பால வமிசத்தைப் பற்றித் தெரியுமா?”
“அதிகம் தெரியாது. ஒரு சுவாரசியமான கதை தெரியும். கோபாலர் நிறுவிய அரசுதானே?”
‘அந்த அரசுதான். என்ன கதை? நாகராணியின் கதையா?”
“ஆமாம் ஆமாம். அது நிஜமா?”
“அப்படித்தான் சொல்கிறார்கள். சமீபத்தில்தானே நடந்திருக்கிறது? மெய்யாகவும் இருக்கலாம். நான் அங்குச் சென்றபோது, நேரடியாகவே கேள்விப்பட்டேன். எல்லோரும் சொன்னார்கள்.”
“நீங்கள் கௌடதேசத்துக்குச் சென்றிருக்கிறீர்களா?”
“ஆம். சென்றதைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். ஷஷாங்கனின் ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, கௌடத்திலும் அதை அடுத்த வங்கத்திலும் அராஜகம் தாண்டவமாடியது என்னவோ உண்மைதான். உயிருக்கும் உடைமைக்கும், உறவுக்கும் மதிப்பில்லாமல் இருந்த காலம். பெரிய மீன் சிறிய மீன்களைத் தின்றது. திமி பெரிய மீனைத் தின்றது. திமிங்கிலம் திமியை விழுங்கியது. திமிங்கிலகிலமோ திமிங்கிலத்தையே விழுங்கியது.”
“மத்ஸ்ய நீதி!. உடல் வலிமை உள்ளவன் வைத்ததுதான் நியாயம், நீதி எல்லாம்.”
“அந்த நிலைமைதான். வலுவான தலைமை இல்லாததால், சிற்றரசர்களுக்கு இடையே போராட்டம் இருந்தது. வெட்டு, குத்து, அபகரிப்பு. பாவம், கூட்டம் கூட்டமாகக் குடிகள் இங்கேயும் அங்கேயுமாகப் பாதுகாப்பைத் தேடி உயிரையும், உறவுகளையும், உடைமைகளையும் காத்துக்கொள்ள அலைந்து கொண்டிருந்தார்கள். இந்நிலைமையை மாற்ற, ஊர்ப் பிரமுகர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஏட்சியுடைய ராஜாங்கம் என்று ஒன்று வேண்டுமே, அதற்காக ஓர் அரசனைத் தேடிக் கண்டுபிடித்துச் சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். அவன் முந்தைய விதவை ராணியையே மணந்து கொண்டான். முதல் நாள் அரசனாக இருந்து, கடமையெல்லாம் ஆற்றினான். அப்பாடா! விடிவு காலம் வந்தது என்று, ஊரே கொண்டாட்டத்தில் இருந்தது. ஆனால், அடுத்தநாள் காலையில், அரசன், படுக்கையிலே விஷம் பரவி இறந்து கிடந்தான். இதைத்தான் எல்லோரும் எனக்குச் சொன்னார்கள். அவர்கள் சொல்லும் விதத்தைப் பார்த்தால், உண்மையாகத்தான் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
“திடுக்கிட்ட மக்கள், நாடு முழுவதும் பூஜை நடத்தினார்கள். குருமார்களைக் கலந்தாலோசித்தார்கள். பலநாட்கள் தேடி, ராஜ லக்ஷணம் கொண்ட இன்னொருவனைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கவில்லை. இரண்டாமவனும் முந்தைய அரசனைப்போலவே, ஒரு நாள் ராஜாதான். அடுத்த நாள் காலையில் படுக்கையில் விஷம் பரவி மரணம். இப்போது எல்லோருக்கும் பீதி ஏற்பட்டது. பலருக்கு ராணி மீது சந்தேகம் எழுந்தாலும், எப்படி நிரூபணம் செய்வது என்று தெரியாமல், இன்னொரு அரசனைத் தேடினார்கள். அதே கதை தொடர்ந்ததும், ராணிதான் தீது என்று ஊர்ஜிதம் செய்தார்கள். பலநாட்களுக்குப் பிறகுதான் முடிவுக்கும் வந்தார்கள், அவள் மனித ரூபத்தில் வந்திருக்கும் ஒரு நாகம் என்று. அவளை அரண்மனையை விட்டு விரட்டவும் யாருக்கும் ஒல்லவில்லை. வேறு யாரும் அரசனாக ஆகவும் விரும்பவில்லை. அந்தச் சமயத்தில், தைரியமாக ஒப்புக்கொண்டு அரசனாக ஆனவன்தான் கோபாலன். கோபாலன் நேரடியாகக் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, பயந்துபோன சிற்றரசர்களும், ஊர்ப் பிரபுக்களும் அலசித் தேடிக் கண்டுபிடித்து, நிர்ப்பந்தித்துப் பொருள் பதவி புகழ் பொறுப்பு என்றெல்லாம் பேசி, அரசனாக ஆக்கிய இளைஞன் அவன். அடுத்தநாள் காலையை, எல்லோரும் பயத்துடன் எதிர்நோக்கி இருக்க, உயிரோடு உப்பரிகையில் வந்து நின்றான். ராணியைக் காணவில்லை. அன்றைக்குப்பிறகு அவள் இருக்குமிடமும் தெரியவில்லை. கொன்றுவிட்டான் என்றார்கள். ஓடிவிட்டாள் என்றார்கள்.”
“அடேயப்பா! அடிவயிற்றை உறைய வைக்கிறதே!”
“நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன?”
“அதென்னவோ வாஸ்தவம்தான். பதிவிளக்கு பேசும் என்கிறார்கள். பேசுவதைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள். நான் அந்தக் காளாமுகியுடன் மயானங்களைச் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஜாலவித்தைக் காரர்கள் ஐங்கோலத் தைலம் இறக்க வருவதைப் பார்த்திருக்கிறேன். இருப்பை மற்றும் வேப்ப வித்து, ஓமம் கடுகு கருஞ்சீரகம் என்ற ஐங்கோலத்தை மருத்துவர்கள் வியாதியை நீக்கப் பயன்படுத்துவார்கள் என்றால், இவர்கள் வசியம் செய்யும் தைலம் இறக்கப் பெருமுனைப்புக் காட்டுவார்கள். கன்னிப்பெண்கள் பிரேதத்தை எரிக்காமல் புதைத்துவிட்டார்கள் என்ற செய்தி தெரிந்துவிட்டால் அவ்வளவுதான் யார் முதலில் பிரேதத்தை எடுத்து எலும்புகளைச் சேகரிப்பது என்பதில் அப்படிப்போட்டி. அதை யார் கண்ணிலும் படாமல் பொறுக்கவேண்டும் என்று வேறு விதி. அவற்றைப் பொறுக்கிச் சுத்தம் செய்து, எதையெதையோ சேர்த்துப் பாண்டத்தில் மூடித் திரவமாக்கி. .. அப்பப்பா! அதைச் செய்யும் முயற்சியில் போட்டிவந்துவிட்டால், கொலை செய்யக் கூடத் தயங்கமாட்டார்கள்.”
“அப்படி முயல்கிறார்கள் என்றால், அதன் உபயோகத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தமாகிறது? புரியாததைப் பார்த்துவிட்டால், குடிகளுக்குப் பயம் உருவாகிவிடுகிறது. கோபாலன் உயிரோடு இருந்ததைப் பார்த்ததுமே, மக்களுக்கு அவன்மீது பெரிய மரியாதையும் அச்சமும் ஏற்பட்டது. தெய்வ அருள் பெற்றவன் என்று நம்பினார்கள். அவனுடைய வாக்கைத் தலைமேல் தாங்கி, அந்த இளைஞன் என்ன சொன்னாலும் செய்தார்கள். சண்டைகளும், கலகங்களும் நின்றன. நாட்டை விட்டும், வீட்டை விட்டும் வெளியேறிப் புறங்களில் அலைந்து திரிந்தவர்கள் குடும்பத்தோடு இல்லம் திரும்ப. காட்டுத்தனம் கட்டுக்கடங்கி, நாடு ஸஹஜ நிலைக்குத் திரும்பியது. அந்தக் கோபாலனுக்குப் பிறகு அரசரானவர்தான், அவருடைய புதல்வர் தர்மபாலர். இப்போது ஆள்கிறாரே, தேவபாலர், அவருடைய தந்தை.
“அவர் இந்திராயுதனை எதிர்க்க எண்ணினார். ஒரு படையையும் அனுப்பினார். ஆனால், இந்திராயுதன் மற்றும் வத்ஸராஜன் படைகளின் வீரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். வத்ஸராஜன் இல்லாததால், இந்திராயுதன் ஒருவன்தானே என்று எண்ணித் தாக்கியவருக்குப் பெரும்தோல்வி. தர்மபாலருடைய படைகள் சிதறிப்போய்க் கௌடதேசத்துக்குப் பின்வாங்கின. தூரத்தில் இருந்துகொண்டு, தாக்குவதால் பயனில்லை என்று உணர்ந்துகொண்ட தர்மபாலர், கன்யாகுப்ஜத்திலேயே தனக்கு அனுகூலமாக எவராவது உண்டா என்று தேடினார். பண்டி வமிசத்திலேயே பிறந்த, சக்ராயுதன் என்பவனைக் கண்டுபிடித்தார். அவன் இந்திராயுதனுக்குத் தாயாதி. தானும் அரசராக வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தவன், எப்படித் தன் கனவை நனவாக்குவது என்று உபாயத்தைத் தேடிக் கொண்டிருந்தான். இவர்கள் இருவருக்கும் குறிக்கோள்கள் ஒத்துப்போக, அவனுடைய தலைமையில், எதிர்ப்பு அணியை உருவாக்கிய தர்மபாலர். தானே தலைமை தாங்கிப் படையெடுத்துச் செல்லத் தீர்மானித்தார்.
“விஷயத்தை ஒற்றர்கள் மூலம் அறிந்துகொண்ட வத்ஸராஜன், தன்னுடைய நெடுநாளைய கனவு பலிதமாகப்
போகிறது என்று மகிழ்ச்சி கொண்டான். கௌடத்தைக் கைப்பற்ற உசிதமான சமயத்துக்காகக்
காத்திருந்தவனுக்கு, இப்போது, கட்டாயமே ஏற்பட்டு விட்டது. இதுதான் சரியான வாய்ப்பு
என்று தீர்மானித்துத் துர்லபனுடைய துணையோடு, தானே தலைமை தாங்கிக் கௌட தேசத்தைத்
தீர்த்துக் கட்ட ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினான். வாய்ப்பு, வத்ஸராஜனுக்கு
மட்டுமன்று, துருவராஜருக்கும் கிடைத்தது”. பிரதாபர்
சொல்லிக்கொண்டே போனார்.
**********************************************************
சில படைவீரர்கள் யானைகள் மேலும், சிலர் புரவிகளின் மேலும் எக்கி எக்கி நின்றிருந்தார்கள். ஒரு சிலரோ இன்னொரு படைவீரனின் தோள் மேலேயே நின்று கொண்டிருந்தார்கள். பலர், சற்று மேடான இடமாகத் தேர்ந்தெடுத்து நின்றிருந்தார்கள். எல்லாப் படைவீரர்களின் கண்களும் மேற்றிசையையே நோக்கிக் கொண்டிருந்தன. யார் முதலில் கண்டதாகச் சொல்லப் போகிறார்கள் என்ற போட்டிக்கை எல்லோருடைய முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. மழை இன்னும் தூறிக்கொண்டுதான் இருந்தது. நேற்று இரவு பிடித்த மழை, காலையில் வெளுத்து வாங்கிவிட்டது. மதியத்துக்கு மேல்தான் சற்று வான் நீலம் கண்ணுக்குத் தென்பட்டு எல்லோருக்கும் இன்று தரிசனம் ஆகிவிடும் என்ற ஒரு நம்பிக்கையைத் தந்தது. ஆனால், சற்று முன்பாக மீண்டும் கருமேகங்கள். செக்கரெல்லாம் செலவழித்து விட்ட சூரியன் நன்றாகவே அடியாலத்தில் அமரத் துவங்கி விட்டான். இன்று காணாவிட்டால், அதற்குப் பரிகாரம் என்ன என்று ராஜ பண்டிதர்கள் ஏற்கனவே யோசித்துச் சொல்லியிருந்தாலும், தரிசிப்பது ஒரு நல்ல சகுனத்தைக் கொடுக்குமே என்ற எதிர்பார்ப்பு எல்லோருடைய ஆர்வத்தையும் உயிர்த்து வைத்திருந்தது.
திடீரென்று ஒரு சலசலப்பு. மேட்டிலிருந்த ஒரு வீரன் கை உயர்ந்திருந்தது. எல்லோருடைய கண்பார்வையும் அங்கே சென்றது. அவனருகே புரவி மீது நின்றிருந்த ஒருவனும் கையை உயர்த்தித் திக்கைச் சுட்டினான். சட்சட்டென்று பல கைகள் உயர்ந்தன. பார்த்தவர்கள், பார்க்காதவர்களுக்குச் சரியான இடத்தைக் காட்டினார்கள். அப்படியும் பார்க்காதவர்கள், சீக்கிரம் பார்த்துவிடவேண்டுமே என்ற பதைப்புடன் பார்க்க, திடும் திடும் திடும் என்று முழவுகள் ஒலித்தன, எக்காளம் கூவியது. யானைகள், பாகர்களால் தூண்டப்பட்டுப் பிளிறின. “மஹாராஜா, மஹாராஜா.. “ என்ற குரல் ஆங்காங்கே எழ, வானை நோக்கியவர்கள், திரும்பிக்கொண்டு, அருகிலிருந்த மாளிகையின் மாடத்தை நோக்கினார்கள். அங்கே, துருவராஜா நின்று கொண்டிருந்தார். ஒரு க்ஷணம்தான். கையை உயர்த்திக் காட்டிவிட்டு, உள்ளே போய்விட்டார். அவரும் பார்த்துவிட்டார் என்றதும், முழவுகளைத் தாங்கியிருந்தவர்கள், இதுவரை ஒலித்துக் கொண்டிருந்த நடையை மாற்றிச் செய்தியைப் பறையறிவிக்கத் தொடங்கினர். சகுனம் பார்த்தாயிற்று. இனிப் படையெடுப்பு நிச்சயம்தான் என்ற உணர்வு மேலிட, அங்கே கூடியிருந்தவர்களும், படைவீரர்களும் கலையத் துவங்கினார்கள். இவையெல்லாவற்றுடன் எனக்கென்ன சம்பந்தம் என்பதுபோலே, பெண்ணின் காதில் அணியும் பொன்வளையத்தின் அடிப்புறம் போல மின்னிக்கொண்டிருந்த மூன்றாம்பிறைச் சந்திரன், ஓடிக் குவிந்து கொண்டிருந்த கருமேகக் கூட்டத்துக்குள் தன்னைத் தொலைத்துவிட்டு ஒரேயடியாக மறைந்து போனான்.
அடுத்தநாளும் வானம் வெளுக்கவில்லை. சூரியன் மேகங்களைத் துரத்தும் சக்தியை இழந்து காணப்பட்டான். அவன் இருக்கும் இடமே தெரியாமல், கருமை மூடியிருந்தது. ஊருக்கு வெளியே, இருபது குரோச தூரத்தில், ஓர் அடர்ந்த சோலைக்குப் பின்னால் இருந்த பெரிய வெட்ட வெளியில், நிறைய பாதுகாப்பு வீரர்கள், குழு குழுவாக நடமாடிக் கொண்ட வண்ணம் இருந்தார்கள். அந்த வெளிக்கு நடுவே மூங்கில்களால் ஆன சில தடுப்புக்கள். ஒவ்வொரு தடுப்புக்குள்ளும் பத்துப் பதினைந்து பேர்கள் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அத்தியந்த ரகசியச் செய்தியோடு திரும்பியுள்ள ஒற்றர்கள். அரசருக்குத்தான் அவர்கள் அவற்றை நேரடியாகத் தெரிவிப்பார்கள் என்பதால், அவர்கள் எல்லோருமே துருவராஜாவின் வருகைக்குக் காத்திருந்தார்கள்.
இரகசியச் செய்தியை யார் அனுப்பினார்கள், அது எப்படி அனுப்பப்பட்டுள்ளது என்பனவற்றின் அடிப்படையில், அந்த ஒற்றர் குழுக்கள் அணிவகுக்கப் பட்டிருந்தனர். ஒவ்வொரு குழுவில் இருந்தவர்களும், தங்களுடைய தலைமை ஒற்றன் அனுப்பியுள்ள செய்தியைப் பகுதிப் பகுதியாகத் தத்தம் தலைகளில் தாங்கியிருந்தவர்கள். எளிதில் அழியாத மையால் பொறிக்கப்பட்டிருந்த அந்தப் பகுதிச் செய்திகளைப் படிக்க, அவர்களின் தலையை மொட்டையடிக்க வேண்டும். அரசர் முன்னால்தான் அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுத் தலைச்செய்தி, அவர் கண்களால் முதலில் படிக்கப்படும். மொட்டையடிப்பதற்கு முன்னம், அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள், பயண நாட்கள் என்ன, அத்தனை நாட்களில் அவர்கள் தலையில் இருக்கும் கேச வளர்ச்சி இயல்பானதுதானா என்றெல்லாம் அரச வைத்தியர்கள் பரீட்சித்துப் பார்த்து விட்டுத்தான் அவர்களை ஒன்று சேர்த்திருந்தார்கள். செய்தியின் எல்லாப்பகுதிகளும் வந்துவிட்டதா, என்று அறிய, ஒவ்வொரு ஒற்றனும் தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ள பிரத்தியேகச் சொல்லை உச்சரிப்பான். அது அவனுடைய தலையில் எழுதப்பட்டிருக்கும் செய்தியின் ஒரு பகுதியாகச் சேர்ந்திருக்கும். எது அடையாளச் சொல், எது செய்தி, இரண்டும் எப்படிச் சேர்ந்திருக்கும் என்பதெல்லாம் அரசருக்கு மட்டும்தான் தெரியும். தலைமை ஒற்றர்களை எதிரிப் பிராந்தியங்களுக்கு அனுப்புவதற்கு முன்னால், அவர்களிடம் பிரத்தியேகமாக அவர் பகிர்ந்து கொண்டிருந்த ஸ்லோகங்கள் அவை. ஒவ்வொரு பிராந்தியத்துக்கான தலைமை ஒற்றன், தன்னுடைய பிராந்தியத்துக்குப் போய்ச் சேர்ந்து, அங்கிருந்து செய்திகளை அனுப்பும்போது, இந்த ஸ்லோகத்தை அடிப்படையாக வைத்துத்தான் செய்திகளை ஒற்றர்கள் தலைமீது பொறிப்பான். ஒவ்வொருவனுடைய தலைச்செய்தியையும், அந்த ஒற்றன் சொல்லும் குறியீட்டுச் சொல்லையும் வைத்து, அவனுடைய தலையில் செய்தியோடு செய்தியாக எழுதப்பட்டிருக்கும் ஸ்லோகத்தின் சொல்லை எல்லாம் சேர்த்துப் படித்துப் பார்த்து மொத்த ஸ்லோகமும் வந்துவிட்டது என்றால், எல்லா ஒற்றர்களும் வந்துவிட்டார்கள் என்றும், ஸ்லோகத்தை வைத்துச் செய்தியை எப்படி இணைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அரசர் தெரிந்துகொண்டுவிடுவார். இது துருவராஜா நிர்மாணித்த, பல ஒற்றுச் செய்தி பரிமாற்ற முறைகளில் ஒன்று.
சீக்கிரமே துருவராஜா வந்து சேர்ந்தார். அவர் வந்து அமர்ந்ததும், அமாத்தியர் மட்டும் அருகே இருக்க, மற்ற எல்லோரும் அவரிடமிருந்து தள்ளி நின்று கொண்டனர். நாவிதர்கள் ஒவ்வொரு ஒற்றனுக்கும் மொட்டை அடித்ததும், மொட்டை அடிக்கப்பட்ட ஒற்றர்கள், அங்கே கொட்டிக்கொண்டிருந்த தண்ணீரில் குளித்துவிட்டு, அவருடைய காலடியில் தம்முடைய தலையைச் சமர்ப்பித்துக்கொண்டார்கள். எல்லாச் செய்திகளையும் முகத்தில் எந்தவிதச் சலனத்தையும் காட்டாமல் கேட்டும் படித்தும் தெரிந்துகொண்டார். செய்தி விளங்கவில்லை என்றால், ஒற்றர்களின் வரிசையை மாற்றி வரச்சொன்னார். அவர் செய்தியின் முழு வடிவம் தெரிந்து கொண்டதும், அமாத்தியரிடம் சொல்ல, அவர் உடனே கையில் உள்ள ஓலையில் செய்தியைப் பதிந்து கொண்டார். உடனேயே, முண்டனம் செய்துகொண்ட ஒற்றர்களுக்கு, மஹாராஜா முன்னிலையிலேயே, அவர்கள் தலைச் செய்தியை மற்றவர்கள் படித்து விடக் கூடாது என்பதற்காகக் கருவண்ணச் சித்திரங்கள் வரையப்பட்டு, செய்தி வண்ணத்தால் சிதைக்கப்பட்டது. விஷயத்தின் பரிமாணத்தைப் பொறுத்து, ஒற்றர்களைத் தனிப்படுத்தி வைக்க ஆணை பிறப்பித்தவர், அவர்களுக்கு வெகுமதிகளைத் தன் கைப்பட அளித்துப் பாராட்டிவிட்டு, அவர்கள் ஓய்வெடுக்க எல்லாவசதிகளையும் தரச்சொல்லி உத்தரவிட்டார். உடனே மந்திராலோசனைக் கூட்டத்தைக் கூட்டும்படி அமாத்தியருக்கு உத்தரவிட்டபின் அவ்விடத்தை விட்டுப் பரிவாரத்துடன் அகன்றார்.
கங்கப் போர் முடிந்தவுடனேயே, போர்க்கோலம் பூணத்தொடங்கிய இரட்டபாடி, காஞ்சி சென்று திரும்பியதும் யுத்த ஆயத்தங்களை அதிகரித்திருந்தது. வீரர்கள் மட்டுமன்றி, திறமை வாய்ந்த தச்சர்கள், கொல்லர்கள், திக்கறிஞர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பரிசாரகர்கள், கணிகையர்கள், என்று பலதரப்பட்ட வினைஞர்களும், கலைஞர்களும் அடையாளம் காணப்பட்டுக் குழுக்களாகத் திரட்டப் பட்டார்கள். மாந்தர்களையும் மாக்களையும் தவிர, நீண்டகாலப் போருக்குத் தேவையான தானியங்கள், படைக்கலங்கள், உலோகத் தாதுக்கள், கூடவே கொண்டுபோக இலகுவான உருக்குலைகள், மரத்தண்டுகள், ஔஷதங்கள், புரவிகள், யானைகள், பாரவண்டிகள், அவற்றை இழுக்கும் காளைகள், என்று பலதரப்பட்ட பொருள்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. படையோடு எடுத்துக்கொண்டு போவதற்காக, அரவை யந்திரங்கள், உழலைகள், செக்குக்கள், பரிப்பாண்டில்கள், வாரண வரண்டகங்கள், கைக்கேடயங்கள், விற்கள், கதைகள், ரதங்கள் போன்றவற்றை ஏராளமான தச்சர்கள், முனைப்புடன் உருவாக்கி வந்தார்கள்.
அம்புகள், ஆவங்கள், சாபங்கள், கதைகள், வாட்கள், எறிகள், எறிமுனைகள், தகர்கோளங்கள், தண்டங்கள் என்று படைக்கலங்களின் வகைக்கேற்ப, அவற்றைச் செய்ய, உருக்காலைகளும், கொல்லர் களரிகளும், பட்டடைகளும், அடைகல், சம்மட்டி, அரம், தவறை, திரிவை என்று பல எந்திரங்களோடும், பணிமுட்டுக்களோடும் நிறுவப்பட்டன. அம்புகளுக்கு என்றே அமைக்கப்பட்ட தனி இடங்களில், இரண்டு முதல் மூன்று முழம் வரை நீளம் உள்ள அம்புகள், ஒன்றரை சுண்டுவிரல் பருமன், சுண்டுவிரல் பருமன், அஞ்சலி என்ற குவித்த கரங்களுக்கிடையே ஏற்படும் குழிவுப் பருமன்களில் வகை வகையாகச் செய்யப்பட்டன. அம்பின் நுனிகள் செய்யும் பட்டடைகளில், துளைத்து ஊடுருவும் ஆராமுகம் என்ற குத்தூசி நுனிகள், எதிரிகளின் கை மற்றும் அம்புகளை வெட்டும் சிரைகத்தி போன்ற க்ஷுருப்ர முனைகள், பொதுவான குறிகளோடு எய்ய மாட்டுவால் நுனிகளை ஒக்கும் கோபுச்ச முனைகள், எதிரியின் தலை, கழுத்து மற்றும் வில்லை முறிக்கும் பிறை நுனிகள், கவசங்களையும் களிறுகளையும் துளைக்கும் சூசி நுனிகள், விஷம் தடவிய நுனிகள் என்று பல வகைகள் உருவாக்கப்பட்டன.
கதைகள் உருவாக்கும் சாலைகளில், மரங்களால் ஆன முசலங்கள், ஐம்பது அங்குல நீளக் கைப்பிடியோடு அறுகோண, எண்கோண வடிவுடைய தலைகள், மற்றும் நூறுமுட்களைக் கொண்ட தலைகளுள்ள இருப்புக் கதைகள் போன்றவை உருவாக்கப்பட, கரத்தை விட்டகல்வதால், முக்தங்கள் என்றழைக்கப்படும் தோமரங்கள், குந்தங்கள், குடாரங்கள், சூலங்கள், வடிசங்கள் போன்ற எறிகலங்களும், கரத்தை விட்டகலாததால், அமுக்தங்கள் எனப்படும் கத்தி வகைகளும் தனிப்பட்டடைகளில் உருவெடுத்தன. வாட்கள், ஏந்துபவர்களுடைய தனித்துவத்தைப் பிரகடனம் செய்யும் அணிகலன்கள் ஆனதால், வாளிகளுடைய விருப்பங்கள் கேட்கப்பட்டு, அவரவர்களுடைய பயிற்சிக்கும் பழக்கத்துக்கும் ஏற்ப, காட்டெருமைகளின் கொம்புகள், யானைத்தந்தங்கள், மூங்கில் வேர்கள், மரத்துண்டுகள் என்று வகை வகையான பிடிகளோடும், பலவித கனங்களில், நுனி, ஓரம், அடி இவற்றின் வேறுபட்ட வடிவங்களோடும், அரையில், உறையற்றுச் செருகும் அரைமுழக் கத்திகளில் இருந்து, ஐம்பது அங்குலம் நீளம் வரை அமுக்தங்கள் ஆயத்தமாயின. ஆயுதங்கள் மற்றுமன்றி, தற்காப்புக் கவசங்களும், மர்மஸ்தான மறைப்புக்களும், வீரர்களுக்கும் விலங்குகளுக்கும் சித்தமாயின.
வடிவமைத்தவற்றின் உற்பத்தியையும், உற்பத்தி செய்யப்பட்டவற்றின் சேகரிப்பையும், சேகரித்தவற்றை அவ்வப்போது அகலறைக்கும், களஞ்சியங்களுக்கும் அனுப்புவதையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு, மண்டலவாரியாகப் பிரித்தளிக்கப்பட்டது. ஆந்திர மண்டலம், இலாட மண்டலம், கங்கமண்டலம் என்ற மூன்று மண்டலங்களில் அரசர் ஸ்தானத்தின் இருந்த விஷ்ணுவர்த்தனர், இந்திரராஜா மற்றும் ஸ்தம்பராஜா ஆகியோர் முறையே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். வேமுலவாடா மற்றும் பனவாசி ஆகிய குறுதேசங்கள் முறையே அரிகேசரி மற்றும் ஆதூரனின் பொறுப்பில் விடப்பட்டன. ரேணாடு, ஆளுபம், பொத்தப்பி, நொளம்பவாடி, நாசிகா, விதர்ப்பம் என்ற பெரிய பிராந்தியங்களிலும் அப்படியே. மற்ற இடங்களில் அந்தந்த ராஷ்ட்ரபதிகள், விஷயபதிகள், போகபதிகள் மற்றும் கிராமகூடர்கள் என்று எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் பணிகள் பகுக்கப்பட்டுப் பட்டியல்கள் அளிக்கப்பட்டன.
தானிய மந்திரி, பல இடங்களுக்குப் பிரதியட்சமாகச் சென்று பதினெண் கூலங்களின் விளைச்சலையும் பெருக்கப் புதுப்புது இடங்களை அடையாளம் கண்டார். பதினாறு துரோணம் வரை மழை பெய்யும் இடங்கள் புன்செய்யாகவும், இருபத்து நான்கு துரோணம் மற்றும் அதற்கு அதிகமாக மழை பெய்யும் இடங்கள் நன்செய்யாகவும் வகைப்படுத்தப்பட்டன. இடையில் இருப்பவனவற்றை அங்கிருக்கும் விளைச்சல் நிலங்களையும், பயிர் வளரும் தன்மையையும் பொறுத்துத் தரம் பிரித்தார்கள். பரவக்காட்டுப் புன்செய், பள்ளக்காட்டுப் புன்செய், பரவிப்புன்செய் என்று புன்செய்நிலங்களும் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் எங்கெல்லாம் இயலுமோ, அங்கெல்லாம் ஜலயந்திரங்கள், கால்வாய்கள் போன்றவற்றை நிறுவி, நீர் வசதியை ஏற்படுத்தி, நன்செய்யாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள். நன்செய்யாக இருந்தால், ஒரு போகம் விளைந்த இடத்தில், இரண்டு போகம் விளைவிக்க முயற்சி செய்யப் பட்டது.
மாஸேஷு த்ரிஷு வா
தானி சதுர்மாஸேSத²வா ஸ்த²லே
கானிசித் பஞ்ச மாஸேஷு
ஷண்மாஸேஷ்விஹ கானி ச
ஸப்த மாஸேஷ்வஷ்ட மாஸேஷ்வதி⁴க க்ரமத: க்வசித்
என்ற சொல்லுக்கேற்ப, அறுபது நாட்கள் பயிரான ஷஷ்டிகா சாலியைத் தவிர, மூன்று மாதங்களில் முற்றும் வகைகளில் இருந்து ஏழு அல்லது அதற்குக் மேம்பட்ட காலத்தில் முற்றும் வகை வரை, நல்ல விதை-தானியங்கள், ராஜாங்க ஊழியர்களால் பல இடங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்டுப் பிரிக்கப்பட்டு வேளாண்மை செய்பவர்களுக்குத் தரப்பட்டன. வேலிக்குப் போகத்துக்கு இருநூறு முதல் இருநூற்றைம்பது பெரிய கலம் நெல் விளைச்சலைச் சேமிக்கப் பல இடங்களில் பெரிய குரம்பைகளும் குதிர்களும், மரத்தாலும், மண்ணாலும் நிறுவப்பட்டன. யாரும் நன்செய் தானியங்களை ஒரு வருடத்துக்கு மேலும், புன்செய் பயிர்களின் விளைச்சலை இரு வருடத்துக்கு மேலும் சேமித்துவைக்கக் கூடாது என்று உத்தரவாகியது. உபரி கூலங்களைத் தேவகுலங்களுக்குக் கொடுத்தது போக, எஞ்சியதைச் செவியடியிலியே அளந்து அரசு கட்டிவைத்துள்ள குதிர்களிலும் குரம்பைகளிலும் சேர்ப்பதற்காகக் கொடுத்துவிடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டது. கலங்கள் பத்துக்குக் கழஞ்சு பொன்னோ, பதினைந்து கழஞ்சு வெள்ளியோ மாறு கொடுக்கப்பட்டுப் புக்திகளில் சேகரிக்கப்பட்ட தானியங்கள் வண்டி வண்டியாகக் கொணரப்பட்டு, பெரும்புகல்களிலும், மாமஞ்சிகையிலும் குவிக்கப்பட்டன. நெல்லோடு, மாற்றுக் கூலங்களாக யவமும், கோதுமையும் சேகரிக்கப்பட்டன. இவற்றின் விளைநிலங்கள் மத்திய தேசத்திலும் வட குந்தளத்திலும் அதிகமாக இருந்ததால், அவற்றுக்கான களஞ்சியங்கள் கரஹாடகம், புணகம், கர்ணபுரி, மகிஷம், நாசிகா போன்ற பிராந்தியங்களில் அமைக்கப்பட்டு நிரப்பப்பட்டன.
கூலவாணிகர்கள் தானியங்களைப் பதுக்கி விலையேற்றாமல் இருக்கவும், கட்டளைகள் பரிபாலிக்கப் படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், மூலியாதிகாரி தலைமையில் கிராம மஹாத்தரர்கள், விஷய மஹாத்தரர்கள், புக்திபதிகள், யுக்தர்கள், நியுக்தர்கள் போன்றோர் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். அடிக்கடி கூட்டங்கள் கூட்டப்பட்டுச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டு, உடனுக்குடன் தீர்க்கப்பட்டன.
இவையனைத்தும் நடந்தாலும், இவற்றின் நோக்கம் தக்ஷிணத்தைக் கட்டுப்படுத்தத்தான் என்று பரவலாக செய்தியும் பரப்பப்பட்டது. அதற்காகவே காஞ்சியின் படையெடுப்பும் பெரிய அளவில் நடத்தப்பட்டிருந்ததால், பிரதிஹாரர்கள் இவை தங்களை அடக்கவைக்கும் முயற்சி என்று பெரிதாக ஊகிக்கவில்லை. அப்படி இராட்டிரக்கூடம் வந்தாலும், அதை எதிர்க்கும் ஆற்றல் தம்மிடம் இருந்தது என்று அவர்கள் பலமாக நம்பியதால், இந்த ஏற்பாடுகளைப் பற்றி அவ்வப்போது ஒற்றர்கள் செய்தி கொண்டுவந்ததையும் வத்ஸராஜன் பொருட்படுத்தவில்லை. அவனுடைய கவனம் முழுதும் கன்யாகுப்ஜத்தின் மீது இருந்தது. யுத்தம் வரலாம், அதற்காகத் துருவராஜா முன்னெச்செரிக்கையாக ஏற்பாடுகள் செய்கிறார் என்றே நாட்டு மக்களும் நம்பினார்கள்.
இந்த நிலைமையில்தான், சந்திரதரிசனத்துக்குப் பிறகு, மந்திராலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. துருவராஜா கூட்டத்தில் பேசினார்.
“வெகு நாட்களாக நாம் காத்துக் கொண்டிருந்த சமயம் வந்துவிட்டது. நீங்கள் எல்லோரும், உங்களுக்கென்று தரப்பட்ட பணியைச் செவ்வனே செய்து வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு பணியும் ஒரு பெரிய சித்திரத்தின் சிறு பகுதிதான் என்பதை அறிவீர்கள். முழுச்சித்திரம் என்னவென்று அதைத் தீட்டிய ஓவியன் எனக்குத்தான் தெரியும். இப்போது உங்கள் எல்லோருக்குமே அந்தச் சித்திரம் என்னவென்று தெரிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது. நாம் உஜ்ஜைனிமீது படையெடுக்கப்போகிறோம். வரும் பௌர்ணமி அன்று புறப்படுகிறோம்.”
அவர் சொல்லி முடித்ததும், கூடியிருந்தவர்கள் ஆரவாரமாகக் கூவினார்கள்.
“இரட்டராஜ்யம் வாழி! கலிவல்லபர் வாழி!” என்ற கோஷத்தால் அங்கணம் அதிர்ந்தது.
“இன்றைய தினத்தில், தக்கணத்தில் இரட்டர்களுக்கு எதிரிகள் இல்லை. இரட்ட வமிசத்துப் பெண்ணின் உதரத்தில் முகிழ்த்த சுளுக்கிய வம்சம், இன்று கீர்த்திவர்மனோடு, குந்தளத்தில் குன்றிவிட்டதைப் பார்க்கிறேன். அந்தச் சுளுக்கிய வமிசத் துவக்கத்தில், ஜயசிம்ஹ சுளுக்கி, நம் மூதாதையர் கிருஷ்ணராஜாவின் குமாரர் இந்திரராஜரைத் தோற்கடித்துத்தானே வல்லபராஜ இராச்சியத்தை நிறுவினான்? மறுபடியும் இரட்டம் பதினொரு தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்திருக்கிறது. வெறும் எண்ணூறு இபங்கள் கொண்ட படையுடன் போரிட்டார் இந்திரராஜா. இன்று ஐம்பதாயிரம் அத்திகள், நம் சார்பில், அமருக்குச் சித்தமாக இருக்கின்றன. வாரணப்போரின் வல்லமை கொண்ட, கங்கமும், காஞ்சியுமே இன்று நம் ஆற்றலின் முன்னே நிற்கத் துணியாமல் அடங்கிவிட்டன. இந்த வலிய இருப்பு மரத்துக்கான வித்தைத் தந்திதுர்க்க மஹாராஜா விதைக்க, தந்தையார் கிருஷ்ணராஜா அதை மரமாக வளர்த்துத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
“கடந்த சில மாதங்களாகவே, உணவு இருப்பை விரிவாக்கப் பல முயற்சிகள் எடுத்துவருவதைப் பார்த்திருப்பீர்கள்.
பூ⁴பாலைரத²வா ரக்ஷ்யம் காலே தே³யம் ப்ரகீர்திதம்
பீ³ஜாராஶி: பரஶ்ரேய: க்ருஷேஸ்து ப்ரத²ம் த⁴னம்
என்று பொதுவாகவே அரசனுடைய கடமை, சரியான விதைகளைச் சரியான நேரத்தில், உழவர்களுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்பார்கள். போர்க்காலம் என்றால் கேட்கவே வேண்டாம். தங்கச் சம்பகம், கிருஷ்ண, மற்றும் ரக்தச் சம்பகம், கலமம், ஷஷ்டிகம் என்று விதவிதமான நெல்மணிளும், பல்வகை யவமணிகளும் விளைவிக்கப்பட்டுச் சேகரிக்கப்பட்டுள்ளன
“க்³ரமாணாம் சதுர்லக்ஷம் ச ரடராஜ்ய ப்ரகீர்திதம்” என்று நான்கு லக்ஷம் கிராமங்கள் கொண்டதாகப் புகழ்பெற்ற நம் ரட்டபாடி, இன்று ஏழு லக்ஷம் கிராமங்கள் கொண்டதாக வளர்ந்து இருக்கிறது.
மண்டலங்களும், விஷயங்களும், புக்திகளும் தண்டல் செய்த இறைப்பணத்தால் கோசத்திலும் வேண்டிய தனம் சேர்ந்துள்ளது. ஆயுதங்கள் இருப்பும், படைகளின் திறனும் நல்ல நிலையில் இருக்கின்றன. இதனால், உஜ்ஜைனியை மீட்டெடுப்பது நமக்குச் சாத்தியமே. உஜ்ஜைனியை நாம் மீட்டெடுத்து விட்டோமேயானால், வல்லபராஜ்யம் என்றாலே இரட்டர்களின் ராஜ்ஜியம்தான் என்று உலகம் இனிச் சொல்லத் தொடங்கும்.
உஜ்ஜைனியை நாம் மீண்டும் மீட்டெடுத்தவுடன், வல்லபராஜ்யம் என்றால், இனி இரட்டர்களின் ராஜ்ஜியம்தான் என்று உலகம் சொல்லத் தொடங்கும். இங்கு வலிமையோடு வளர்ந்து வரும் இரட்டபாடியைக் கடிகாலத்தில், உத்தராபதத்திலும் உயர்த்துவோம்.
“ஒற்றர்கள் நல்ல செய்தி கொண்டுவந்திருக்கிறார்கள். வத்ஸராஜன், இந்திராயுதனைத் தாக்கக் கன்யாகுப்ஜத்துக்கு, மகன் இளவரசன் ஆமராஜனுடன் புறப்பட்டுவிட்டான். துர்லபனும் அவனோடு சேர்ந்துகொள்வது நிச்சயம். உஜ்ஜைனியைக் காக்கப் போவது பௌகனும், குஹிலராஜனும்தான். அவர்கள் பெரிய வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இரட்டப்படைகளுக்கு, அவர்களைத் தோற்கடிப்பது அசாத்தியமன்று. நாளை முதலடி எடுத்து வைக்கிறோம். தயக்கம் என்பது இருக்கக்கூடாது. உஜ்ஜைனியை எவ்வளவு விரைவில் வீழ்த்தமுடியுமோ, அவ்வளவு விரைவில் வீழத்திவிடவேண்டும். வத்ஸராஜன் படை, நாம் தாக்குவது அறிந்து திரும்பிவருமுன் உஜ்ஜைனியைக் கைப்பற்றிவிட வேண்டும்.
“யுத்தத்துக்கு நாம் சித்தமா? நாம் இன்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, இது. நீங்கள் எல்லோரும் ஒவ்வொருவராக எழுந்து நின்று, அவரவர்கள் இதுவரை ஏற்றுக்கொண்டு நிர்வகித்து முடித்த வினைகள் எவை, இனிச் செய்யவேண்டிய இரண உக்திகளும், பொறுப்புக்களும் எவை என்று எனக்கு விவரித்துக் கூறுங்கள். எல்லோருடைய வினைகளும் ஒரே போக்கில்தான் சஞ்சரிக்கின்றனவா என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும். இந்தப் பகிர்வால், மற்றவர்களுக்கும் தம்முடைய பங்கு, பிறருடைய பணியோடு எவ்வாறு இணைந்திருக்கிறது என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்ப ஆயத்தங்கள் செய்ய ஏதுவாக இருக்கும். அமாத்தியரே! எல்லோரும் சொல்வதை ஒன்று விடாமல் குறிப்பெடுத்துக் கொண்டே வாருங்கள். பிறகு, ஒருங்கு கூட்டிப் படை நிலவரம், உணவுக்கான ஆயத்தங்கள், வழிகள், மழை மற்றும் ஆற்று நீர் வரத்து, நிதி நிலைமை, விலங்குகளின் உடல்நிலை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை போன்றவற்றை அறிந்து கொள்வோம்” என்றார்.
அன்று மந்திராலோசனை வெகு நேரம் நீடித்தது. எல்லோருடைய கூற்றும் கிளவியும் முற்றுப்பெற்றதும், அவற்றின் அடிப்படையில் புதிய பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டுப் பகிர்ந்தளிக்கப்பட்டன. கஜாதிகாரி, அஸ்வாதிகாரி, ரதாதிகாரி, சாபாதிகாரி, சஸ்திராதிகாரி என்று சேனையின் அங்கங்களுக்குத் தனித்தனி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். படையின் அளவையும் படைவீரர்களின் ஆயத்தத்தன்மையையும் கண்காணிக்க யோத்தாதிகாரி, பலாதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர். உயிர்ச்சேதம், இறந்தவர்களுக்குக் காரியங்கள் போன்றவை பிராணாதிகாரி மற்றும் கர்மாதிகாரிகளின் பொறுப்பில் விடப்பட்டன. நிருத்தாதிகாரி, வாத்யாதிகாரி, கேயாதிகாரி, காமாதிகாரிகளுக்கு, வீரர்களின் களிப்புக் குறையாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப் பட்டது. வடித்திறக்கும் பானத்துக்கென்றே தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். விளக்குக்களுக்குத் தீபாதிகாரிகளும், கடவுளர் வழிபாட்டை அமைத்துக் கொடுப்பதற்குத் தேவாதிகாரிகளும், எண்ணெய்க்குத் தைலாதிகாரியும் உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
படைகள் குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தோயாதிகாரி மற்றும் ஸ்நானாதிகாரிகளிடமும், தங்குவதற்கான குடிசைகள் மற்றும் குடில்களை அமைப்பது பர்ணாதிகாரியின் பொறுப்பிலும், படுக்கைகள் சயனாதிகாரியின் பொறுப்பிலும், உடைகளும் கவசங்களும் வத்திராதிகாரி மற்றும் பூட்சியதிகாரிகளின் பொறுப்பிலும் விடப்பட்டன. இவைதவிர, கோட்டைக்குத் துர்க்காதிகாரி, காவலுக்கு துவாராதிகாரி, கால்நடைகள், பால் முதலியவற்றுக்கு கீராதிகாரி, புல்லாதிகாரி, விலங்காதிகாரி, மற்றும் பறவைகளுக்குப் பட்சியதிகாரிகள் என்று பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டன. அதிகாரிகளை மேற்பார்வையிட மேலதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டார்கள்.
காயசிகிச்சை, உடற்பாகங்களைத் தைக்கும் சாலியதந்திரம் என்னும் வல்லிய அறுவை சிகிச்சை, சாளக்கியதந்திரம் என்னும் தோளுக்கு மேலே உள்ள பாகங்களுக்குள் சலாகையை நுழைத்துச் செய்யும் மென்னறுவை சிகிக்சை, ராட்சஸ வைத்தியம், ரஸாயனசிகிச்சை, சுக்கில சிகிச்சை, குழந்தை சிகிச்சை என்று அஷ்டாங்கங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள், மூலிகை நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய பல குழுக்களை அமைக்க ஔடதாதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டது. இப்படிப் பல பரிமாணங்களில், நிர்வாகத்தின் தேர்ந்த செயல்பாடுகளுக்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவையெல்லாம் முடிந்ததும், துருவராஜா பேசினார்:
“எல்லோருக்கும் செய்யவேண்டுவன சங்கையறத் தெளிந்திருக்கும் என்று நம்புகிறேன். அமாத்தியரே! இந்தத் திசை சஞ்சிகையைப் போலப் பிரதிகள் எடுத்துத் தானைத் தலைவர்களுக்கு ஈவித்து விடுங்கள். எல்லோரும் அவரவர்கள் குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நாளை சூரியாஸ்தமனத்துக்கு முன்னால் புறப்படச் சித்தமாகுங்கள். திரும்பி வருவதற்குப் பல திங்கள்கள் ஆகலாம். யாருடைய குடும்பங்கள் கூடவே வரலாம் என்பதை அமாத்தியர் குழு, ஏற்கனவே நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. அதன்படி நடக்கட்டும். மஹாராணியும் வரப்போகிறாள் என்பது நினைவிருக்கட்டும். நான் முன்னமே சொன்னதுபோல், ஸ்தம்பன் தக்ஷிணத்தைக் கங்கவாடியில் இருந்துகொண்டு கவனித்துக் கொள்வான். மயூரகண்டியின் நிர்வாகம், கற்கனிடமும், சங்கரகணனிடமும் இருக்கும். கோவிந்தா! இந்திரா! நீங்கள் இருவரும் சித்தமாவதோடு நின்றுவிடாமல், எல்லா இடத்துக்கும் சென்று, ஆயத்தத்தைக் கண்காணியுங்கள். அரிகேசரி, எனக்கு உதவியாக இருப்பான்.” என்று மஹாராஜா, அரிகேசரியைப் பார்த்தார்.
“என்ன அரிகேசரி? என்ன கேட்கவேண்டும் என்று நினைக்கிறாய்” முகக்குறிப்பைச் சரியாகக் கணித்துவிட்டார் என்பதைப் புரிந்துகொண்ட அரிகேசரி எழுந்து நின்று பேசினார்.
“வாழி கலி வல்லப மஹாராஜா! எனக்கு ஓர் ஐயம் சற்று நாட்களாகவே இருக்கிறது. இன்னும் சிலருக்கும் இருக்கலாம். சமூஹத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டால், தெளிவு பிறக்கும் என்று தோன்றுகிறது. சொல்ல அனுமதி தரவேண்டுமாய்ப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.”
“ஆஹா! அவசியம்!” என்று சைகை செய்தார் நிருபதுங்கர்.
“மஹாராஜா! தந்திதுர்க்க மஹாராஜாவோடும், அகாலவர்ஷர் கிருஷ்ணராஜாவோடும் சேர்ந்து போரிட்டவர் தாங்கள். இதே உஜ்ஜைனியை இரட்டப்படைகள் முன்பு கைப்பற்றியபோது, அப்படையில் ஓரங்கமாக இருந்திருக்கிறீர்கள். அதில் நீங்கள் காட்டிய வீரத்தைப் பற்றி என் தந்தை நிறைய பேசியிருக்கிறார். அப்போது நம் படைபலமும் மிகச் சிறியது. இன்று போல, கடல் தானை இல்லை.”
“உன் தந்தை அசாத்தியமான வீரர், அரிகேசரி! நான் அரசகுமரன் என்பதால், என்னைப் பற்றி உன்னிடம் உயர்வாகப் பேசியிருக்கிறார் போலிருக்கிறது. அவர் தான் காட்டிய வீரத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறாரா? அஸஹாயர் துணைவேண்டாப் பெருவீரர். தமையனார்கள் இரண்டு கோவிந்தர்களும், தந்திதுர்க்கரோடு மேற்குப் புறம் போக, தனகா வழியாகச் சென்று சித்தூரைக் கைப்பற்றிய உன் தந்தையின் படைகளுக்கு உதவியாக நான்தான் சென்றிருந்தேன். அந்தப் போரை அவர் நடத்திய விதத்தைப் பற்றி இன்று நினைத்துப் பார்த்தாலும் எனக்கு மயிர்க்கூச்செறியும். இப்போது நமக்கிருக்கும் தனமும், சௌகரியமும், படைத்திறலும், அன்று இல்லைதான். கடுமையான மணல் நிறைந்த சுரப்பகுதிகள். யானைகள் வெகு குறைவு. இருந்தவற்றிற்கும், உணவு மற்றும் நீர் வசதிகளின் இருப்பு நாட்கணக்கில்தான் இருக்கும். அங்கங்குக் கிடைப்பதை வைத்துக்கொண்டு நகர்ந்தோம். உன் வீரம் அவரிடமிருந்து வந்திருக்கிறது என்பதில் ஐயமே இல்லை” பெருமிதப்பட்டார் துருவர்.
“மஹாராஜாவின் கருணைக்குப் பாத்திரமானதை நினைத்துச் சந்தோஷிக்கிறேன். என் ஐயத்துக்கு காரணமும் அதுதான். இப்படிக் குறைந்த பலத்தை வைத்துக்கொண்டு, கடின வெற்றியினைச் சாதித்திருக்கிறோம். இப்போது நாம் குறிவைப்பதும் உஜ்ஜைனிதான். ஸ்ரீமாலாவோ, மேதந்தகபுரமோ இல்லை. உஜ்ஜைனியை ஏற்கனவே வெற்றி பெற்ற அனுபவமும் இருக்கிறது. வழிகளும் பழக்கப்பட்டவை. வத்ஸராஜனும் இல்லை. அப்படியிருக்க, எதற்கு இவ்வளவு பெரிய படை? இத்தனை ஏற்பாடுகள்? முந்தைய யுத்தத்தைக் காட்டிலும், இந்த முறை அதிகக் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்கள் பொறுமையோடு யோசித்து யோசித்துத் திட்டமிடுவதைப் பார்க்கும்போது, கிருஷ்ணராஜாவே மீண்டும் பிறந்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவர் எச்சரிக்கை செய்தும், கேளாமல் வேகத்தில் தந்திதுர்க்கமஹாராஜா முன்னேறியதால்தான் அவரைச் சீக்கிரமே இழக்கவேண்டி வந்தது என்று தந்தையார் சொல்லுவார். அது மீண்டும் நிகழக் கூடாது என்றுதான் இப்படி நிதானமாகவும் பெருமளவிலும் உக்திகள் வகுக்கிறீர்களோ?”
தங்கள் மனத்தில் இருப்பதை அரிகேசரி கேட்டு விட்டார் என்பதற்கு அடையாளமாக, பலர் தலையை மேலும் கீழும் ஆட்டி, அவருடைய வினாவை அங்கீகரித்தார்கள். துருவராஜா முகத்தில் புன்னகை தோன்றியது.
“உங்கள் முகங்களை நோக்கும்போது பலருக்கு இந்த ஐயம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். விளக்கி விடுகிறேன். உஜ்ஜைனியைக் கைப்பற்றிய பின்னர்க் கூறலாம் என்று சற்று இரகசியமாக வைத்திருந்தேன். சொல்லும் வேளை வந்துவிட்டது போலும். நம்முடைய குறிக்கோள் வெறும் உஜ்ஜைனி மட்டுமன்று. அரிகேசரி சொன்னதைப்போல, வத்ஸராஜப் பிரதிஹாரன் இல்லாத நேரம். அவன் இருந்தாலும், இந்தப் படை உஜ்ஜைனியை வென்று கைப்பற்றிவிடும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. எட்டு லக்ஷம் வீரர்கள் கொண்ட படையை எதிர்ப்பது யாருக்கும் எளிதன்று. உஜ்ஜைனியோடு நம் பிரயாணம் முடியப்போவதில்லை. தந்திதுர்க்கரால் கைப்பற்றப்பட்டு, விரைவிலேயே நம்மால் இழக்கப்பட்ட பகுதிகளை மீட்கத்தான் இத்தனை திட்டமோ என்று கூடச் சிலர் நினைத்திருக்கலாம். நாம் சாபாதலக்ஷத்தையோ, சிந்துராஷ்ட்ரத்தையோ தாக்கப்போவதில்லை. நாம் குறிக்கொள்வது ..” என்று சற்று நிறுத்தியவர், “கன்யாகுப்ஜம்!” என்று மென்மையாக உச்சரித்தார்.
அந்த மென்மையில் தென்பட்ட உறுதியும், தீர்மானமும், அங்கிருந்தவர்களை அதிரவைத்தன. பலருடைய வாய்கள் பிளந்தன. அரிகேசரியோ, இரையைக் கண்ணுற்ற சிங்கம், தன் நாவால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு, எப்படிக் கண்களில் ஒளிவீச அந்த இரையை நோக்குமோ, அப்படி மனத்தாலே, கன்யாகுப்ஜத்தை நினைத்துக்கொண்டு ஆனந்தமாக அரசரைப் பார்த்தார். இதுவரைத் தக்கணத்து அரசர்கள், கனவிலும் நினைத்துப் பாராத இலக்கு. இளவரசர்கள் கோவிந்தனும், இந்திரனும், அவையினர் உணர்ச்சிப்படுவதை முகங்களில் ஆச்சரியம் ததும்பக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
“வத்ஸராஜன் இந்த வையத்தில் இருக்கும் இடம் இல்லாமல் ஓட வேண்டும். அவன் தோற்கத்தான் போகிறான். ஆனால், தோல்வி மகளின் துன்பமான ஆலிங்கனத்தை அவன் துய்க்கும் நேரத்தில், பெருயுத்தம் செய்தோம், எதிரிகளுக்குப் பெருத்த சேதம் விளைவித்து நசுக்கினோம் என்ற பெருமித உணர்வு அவனுக்குக் கிஞ்சித்தும் ஏற்படக் கூடாது. நம்முடைய சேதம் குறையவேண்டும். அவன் நம்மை எதிர்க்கத் திராணி இல்லாமல் ஓடவேண்டும். இராட்டிரக்கூடர்களை எதிர்க்கும் எண்ணமே இனி ஒருவருக்குத் தோன்றக் கூடாது. கஜங்களை எப்படிக் கைப்பற்றுகிறோம்? பந்தங்களை எரித்துக்கொண்டு, பறைகளை அடித்து ஆரவாரம் செய்துகொண்டு, மூன்று திக்குக்களிலிருந்தும் விரட்டுகிறோம். குழிவெட்டிவைத்த திக்குத்தான், குஞ்சரத்துக்கு ஒரே வழி. நாம் செய்யும் ஆரவாரத்துக்கு அஞ்சி, அது குழியை நோக்கி ஓடுகிறது. அவ்வளவு பெரிய விலங்கு. நம்மைத் திரும்பி எதிர்ப்பதில்லை. தப்பிக்கவேண்டும் என்பதுதான் அதற்குத் தோன்றும் ஒரே மனோபாவம். நம்மைச் சேதப்படுத்தாமல், அதுவாகப் போய்க் குழியில் விழுந்து விடுகிறது. அப்படிச் செய்யாமல், நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற மிதப்பில், நாம் நான்காவது திக்கிலிருந்தும் தாக்கினால் என்ன ஆகும்?”
“வேறு வழியில்லாததால், அது மிரண்டுபோய், திரும்பித் தாக்கும். எந்தத் திக்கில் தாக்கும் என்றே கணிக்க முடியாது. அதன் போக்கை நம்மால் வழிநடத்த முடியாததால், நமக்குச் சேதம் அதிகமாகும்.” என்றான் கோவிந்தன்.
“அதேதான். வத்ஸராஜா என்ற வாரணத்துக்கு வழி ஒன்றை மட்டும் வைத்துக் கொடுத்து, அதைப் பயம்பில் தள்ளுவோம். ஆனால், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இப்போது, நம் கவனம், உஜ்ஜைனி மட்டும்தான். கன்யாகுப்ஜக் குறிக்கோளை இரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். இது முடியும்வரை, நம் படை, மயூரகண்டிக்குத் திரும்பப் போவதில்லை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
“அரிகேசரி, திருப்தியாகி விட்டதா? உன் படையை, வடபுறமாக விதர்ப்பத்துக்கும், வேங்கிப் படைகளைத்
திரிபுரி நோக்கியும் முன்னமேயே நாம் அனுப்பச் சொன்னது இதனால்தான். நீ உடனே
புறப்பட்டாக வேண்டும். குதிரையை விரட்டிக் கொண்டுபோய், உன் படையுடன் சேர்ந்துகொள்.
பட்டாரியிலிருந்து ஜெஜ்ஜடாவுக்கும் செய்தி போயிருக்கும். அவனும் வேத்திராவதி ஜாமினி
சங்கமத்தை நோக்கிப் புறப்பட்டிருப்பான். இருவரும் சீக்கிரமே ஒன்று சேர்ந்துகொண்டு, எனக்காகக்
காத்திருங்கள். என்னிடமிருந்து செய்தி வருகிற வரை, வேத்திராவதியைக் கடந்து மேற்கே
வரவேண்டாம். கிழக்கிலேயே இருங்கள். மாஹி, மஹாநதி மற்றும் நர்மதையின் கரைகளை உலகோர்
அதிர்ந்து பார்க்க, உடைத்தவர் தந்திதுர்க்கமஹாராஜா. அவருடைய யானைகள் அவற்றில்
குளித்தன. மஹீ மஹாநதீ³ ரேவா ஓதோ⁴பி⁴த்த விதா³ரணம் லோகா விலோகயந்தி உச்சை: க்ருதம் யஜ்ஜய குஞ்ஜரை: என்றல்லவா அவருடைய
மெய்கீர்த்தி பாடுகிறது. நாம் யமுனையையும் கங்கையையும் நம்முடைய நீராட்டுப் படித்துறைகளாக
ஆக்காமல் திரும்போம்.”
************* ***************** *********************
“என் தந்தை சோமயாதித்தரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். கூட்டம் முடிந்தும், நேராக இல்லத்துக்கு வந்தவருடைய முகத்தில் அன்று தென்பட்ட துடிப்பையும், பரபரப்பையும், உலைப்பாட்டையும், உள்ளத்தெழுச்சியையும் இன்றும் நான் மறக்கவில்லை. சீல மஹாராணியும் யுத்தமுனைக்குப் போகப்போகிறாள் என்று தீர்மானமாகி விட்டதால், நாங்கள் போவதும் உறுதியாகி விட்டது. கூட்டத்தில் நடந்ததை எல்லாம் தந்தையார்தான் சொன்னார். ஒருமுறை மட்டுமா சொன்னார்?” சிரித்தார் பிரதாபர்.
“புறப்படும் வரை சொல்லிக்கொண்டிருந்தார். தந்திதுர்க்க மஹாராஜாவின் உஜ்ஜைனிப் படையெடுப்பு முதலான போர்கள், கிருஷ்ணராஜாவின் இலாடப் போர், சந்திரபாகா நதிக்கரைப் போர் மற்றும் கங்கப் போர் இவைதாம் இராட்டிரக்கூடப் படைகள் போரிட்ட பெரிய சண்டைகள். கங்கையையே இரத்தத்தால் நிரப்பக்கூடிய அளவுக்கு இருக்கக் கூடிய இப்போரின் பரிமாணத்தைப் பலர் தம்வாழ்நாளில் கண்டிருந்திருப்பது அரிது. ஓரிரண்டு வருடங்களாக நடந்துவந்த இத்தனை ஆயத்தங்களும் எதற்கு என்றும் அதீதம் என்றும் வினவியவர்கள், இதுவரை நாம் செய்த இத்தனை ஆயத்தங்கள் போதுமா என்ற கேள்வியைக் கேட்கத் தொடங்கினார்கள்.”
“நீங்கள் கலந்துகொண்ட முதல் போரே, சரித்திரத்தை மாற்றியமைத்து விட்டது! தர்மபாலரின் படையெடுப்பு என்ன ஆனது?”
“அது இன்னும் நிகழ்ந்திருக்கவில்லை. தர்மபாலருடைய படைகள் கங்கையை நோக்கிப் வந்து கொண்டிருந்த சமயம் அது. அவை கங்கைக் கரையைத் தொடுவதற்காகச் சக்கராயுதன் தன் படைகளுடன் இடைத்துறையில் காத்துக்கொண்டிருந்தான். தர்மபாலர் வருவதை அறிந்துதான் வத்ஸராஜன் உஜ்ஜைனியை விட்டு நகர்ந்தான்.”
“ஒருவிதத்தில் பார்த்தால், அவந்தியை அடிபணியவைக்கும் துருவருடைய கனவுக்குத் தர்மபாலர் உதவியிருக்கிறாரோ?”
“மாறாக, தர்மபாலருக்குத் துருவராஜா உதவினார் என்றுதான் சொல்லவேண்டும். கன்யாகுப்ஜத்தை வெற்றி கொண்டுவிட்டு, வத்ஸராஜன் உஜ்ஜைனிக்குத் திரும்பி வந்த சமயத்தில் இருந்தே, துருவராஜா, இதற்கு எதிர்த்தாக்குதலைத் தர்மபாலர் நடத்துவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்படிக் கௌடப்படைகள், கன்யாகுப்ஜத்தைத் தாக்க வரும் பட்சத்தில், எப்படி வத்ஸராஜனால் உஜ்ஜைனியிலேயே இருந்துகொண்டு, ஒன்றுமே செய்யாமல் வாளாவிருக்க முடியும்? எப்படியும் வடக்கே போவான் என்றும் அவர் கணித்திருந்தார். அப்படியே நிகழ்ந்தது.”
“ஓ! சாதுர்யம்! கிழக்கிலிருந்து தர்மபாலர் வந்து கொண்டிருக்கிறார். தெற்கிலிருந்து வத்ஸராஜன் போய்க்கொண்டிருக்கிறார். மேற்கிலிருந்து துர்லபராஜன் படைகளா? இப்படிக் கன்யாகுப்ஜம் மும்முனைப் படைகளைச் சந்ததிக்கச் சித்தமாக இருக்கும்போது, வத்ஸராஜாவின் தலைநகரைப் பிடிக்க நீங்கள் புறப்பட்டீர்கள்! அடடா! உத்தராபதமே குலுங்கியிருக்குமே.”
“குலுங்க வைப்பதற்குத்தானே இத்தனை முன்னேற்பாடும்? நான்கு லக்ஷத்துக்கும் அதிகமாகப் பெரும்படைகள் உஜ்ஜைனி நோக்கிப் புறப்பட்டன. வேங்கியில் இருந்தும், வேமுலவாடாவில் இருந்தும் இரண்டு லக்ஷம் படைகள், உஜ்ஜைனிக்கு வராமல், வத்ஸராஜனை எதிர்கொள்ள வடக்கே ஏற்கனவே பயணித்துக் கொண்டிருந்தன என்று அன்றுதான் எங்களுக்குத் தெரிந்தது. பிருகுகச்சாவிலும், நாகசாரிகாவிலும், ஒவ்வொரு லக்ஷம் படைகள் பின்னால் வந்து சேர்ந்து கொள்வதற்காக ஆயத்த நிலையில் இருந்தன. இவையும் உஜ்ஜைனிக்கு வரப்போவதில்லை, வத்ஸராஜனுக்குச் சகாயம் செய்யக் குர்ஜரப் படைகள் ஒருவேளை மயூரகண்டியை இலக்குவைத்து வந்தால், அவற்றைத் தடுப்பதற்காகத்தான் ஆயத்தம் செய்யப் பட்டிருந்தன என்பதையும் பின்னரே அறிந்துகொண்டோம். முக்கியப் படைகள் நான்கு லக்ஷமும் நர்மதையைத் தாண்டியதும், இரண்டாகப் பிரிந்தன. ஒரு பிரிவு, பௌத்தர்கள் குகைகள் வழியாக உஜ்ஜைனிக்குத் தென்மேற்கிலிருந்து சென்றது. மறுபிரிவு, விதர்ப்பம் வழியாக நேர்வடக்கில் செலவாகியது. கிழக்கில் பட்டரியில் இருந்து ஜெஜ்ஜடா ஒரு லக்ஷம் சேனையோடு வந்து அரிகேசரியுடன் சேர்ந்து கொண்டார்.”
“ஜெஜ்ஜடாவா? இது யார்?”
“இதைத் துருவராஜா யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவே வைத்திருந்தார். இந்த ஜெஜ்ஜடா யாரென்று பின்னால் சொல்கிறேன். வெள்ளம் போலப் பாய்ந்த இராட்டிரக்கூடப் படைகளின் முன்னால் தாக்குப் பிடிக்கமுடியாமல் ஒரு வாரத்தில் உஜ்ஜைனி சுருண்டு போனது. கிடுகிடுவென்று, ஏற்கனவே சித்தம் செய்து வைத்திருந்த திட்டப்படி, நிர்வாகமும், கருவூலமும், படைகளும் வெகு துரிதமாகக் கைப்பற்றப்பட்டன. அதிகச் சேதாரம் இல்லாமல், அவந்தி அடக்கப்பட்டது. குர்ஜரத்தில் நிலைபெற்று இருந்துவந்த, பிரதானமும் வலிமையும் கொண்ட பிரதிஹாரப் படைகள் எல்லாம், ஏற்கனவே கன்யாகுப்ஜத்துக்குப் பிரயாணப் பட்டிருந்ததால், அங்கிருந்து உஜ்ஜைனியின் உதவிக்கு யாரும் வரவில்லை.”
“இந்தப்போரை மிக வியத்தியாசமாக அணுகியிருக்கிறார் அல்லவா ஐயா? பொதுவாகப் படையெடுப்பு என்றால், ஒரு எதிரிநாடு இருக்கும். அது ஓர் கோட்டையால் காக்கப்பட்டிருக்கும். இரண்டு படைகளுக்கிடையை கோட்டையைச் சுற்றிப் போர் நடக்கும். அல்லது கோட்டையை விட்டு இருநாடுகளும் ஒன்றையொன்று சமவெளியில் சந்தித்துப் போர் புரியலாம். இல்லையென்றால், முதல் கட்ட வெற்றிக்குப்பின் தோற்றோடும் எதிரியைத் துரத்திச் செய்யும் போராக இருக்கும். தானே இயங்கும் ஸ்வகம சேனையாக இருக்கட்டும் அல்லது குதிரை, குஞ்சரம், தேர் போன்றவற்றை வைத்து நடத்தப்படும் அன்யகம சேனையாக இருக்கட்டும், இந்தக் குறிக்கோளுடன்தான், படைகளும் முன்பின்னேயோ, பக்கவாட்டிலோ சென்று நிலைகொண்ட எதிரியைச் சூழ முயலும்.
“இங்கே, துருவராஜா உஜ்ஜைனியைக் குறிவைத்துச் சென்றாலும், அவருடைய முக்கியக் குறி, இன்னொரு போருக்குச் சென்று கொண்டிருக்கும் அரசன். அதுவும், அவன் திரும்பி வந்து விடக்கூடாது என்பதற்காக, அவனைப் போகவிட்டுச் சில நாள் பிரயாண இடைவெளி விட்டுத்தான் புறப்படுகிறார். முதலில், வத்ஸராஜன் அகன்று சென்ற இடத்தை அவர் வெல்லவேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது. அதை வென்றுவிட்டு, உடனேயே தொடர்ந்து படையுடன் போய் வத்ஸராஜன் கன்யாகுப்ஜத்துக்குப் போவதற்குள் அவனை வழிமறித்து விடவேண்டும்.
“வத்ஸராஜன், கன்யாகுப்ஜத்தை அடைந்த பிறகு, இவர் போய்ச் சேர்ந்தால், யார் எதிரி, யாரோடு சண்டையிட வேண்டும், எப்படி வியூகம் அமைக்கவேண்டும் என்பது எல்லாம் குழப்பமாக ஆகிவிடும். துர்லபன் படை, தர்மபாலர் படை, வத்ஸராஜன் படை, சக்கராயுதன் படை என்று பல சேனைகள். பெரிய பெரிய சேனைகள். அவர்கள் எல்லோருக்கும் இவர் எதிரி. இவருக்கோ குறி வத்ஸராஜன். எப்படி யுத்தம் திரும்பும் என்று தெரியாது. எப்படி இந்தச் சிக்கலான திட்டத்தை இவர் யோசித்தாரோ?” வியந்தான் விநயாதி சர்மன்.
“என்னைவிட யுத்த நுணுக்கத்தை அற்புதமாக யோசிக்கிறாய். கிட்டத்தட்ட உன் வயதுதான் எனக்கு, அப்போது. ஆனால், இவை எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இப்போது அந்தப் போரை நினைத்துப் பார்த்தால், பிரமிப்பாக இருக்கிறது. துருவராஜா மிகத்துல்லியமாக எல்லாப் போக்கையும் திட்டமிட்டிருந்தார். ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் படைகள் இருந்திருந்தால் கால, பொருள், விலங்கு மற்றும் ஆள் விரயத்தைக் கணக்கிட்டு, எப்படி அதை நிறைவு செய்வது என்று வினையாற்றி விடலாம். பல பிரிவுகளாகப் படைகளைப் பிரித்திருந்தது பெரிய சிக்கலான விஷயம். ஆனாலும், அவருடைய மனத்தில், எல்லாமே கற்பாறையில் செதுக்கிய அக்ஷரங்களாக உருவெடுத்திருந்தன. குழப்பமே இல்லாமல், அந்தந்த சமயத்தில் முடிவுகள் அவருடைய பாசறையிலிருந்து வந்து கொண்டிருந்தன. ராணியோடு கூடவே நான் பயணித்திருந்ததால் அவரை நித்தமும் காணும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அவர் குழம்பியோ, கவலைப்பட்டோ நின்றதை நான் கண்டதே கிடையாது. எண்ணெய் இடப்பட்ட இராக்ஷஸக் கிடந்துருளை போலச் சத்தமில்லாமல் அவருடைய இரணவாழி உருண்டு கொண்டிருந்தது.
“துருவராஜா மற்றும் கோவிந்தராஜாவின் சேனைகளின் இன்னொரு சிறப்பு, அவை, அவசர அவசரமாக அங்கிருந்தும் இங்கிருந்தும் படைவீரர்களைப் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ கூட்டிக்கொண்டு வந்து, குழுவாகச் சேர்த்துப் படைக்கலங்களைக் கையில் கொடுத்துப் போய்ச் சண்டையிடுங்கள் என்று அனுப்பி வைக்கப்பட்ட படைகள் அல்ல. ராஜாங்கத்தால், கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப் பட்டவரின் திறலுக்குப் பொருத்தமான படைக்கலங்களைத் தரிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு, நிறைய பயிற்சியும் தரப்பட்டு, போஷித்துக் கவனமாகக் கருத்துடன் வளர்க்கப்பட்டவை. வேங்கியிடமிருந்தும், கங்கத்திடமிருந்தும் சில படைப்பிரிவுகள் தருவிக்கப்பட்டிருந்தாலும், அவை இராட்டிரக் கூடத்தின் அதிகாரிக்குக் கீழ்ப்பணிந்து போர் புரியப் பழக்கப்படுத்தப் பட்டவை.”
“உதயசந்திரன் படைகள் போல அல்ல என்கிறீர்கள். நந்திவர்மருக்கு இராட்டிரக்கூடத்தைப் போலச் சைனியத்தை வளர்க்க நேரம் கிட்டியிருக்கவில்லை. சாளுக்கியப் படைகள் எப்படி இருந்தன, ஐயா? எனக்குப் படைகளின் விதத்தை வகைப்படுத்தும் இரண்டு ஸ்லோகங்கள் நினைவுக்கு வருகின்றன.
“மௌல ஸாத்³யஸ்க பே⁴தா³ப⁴யாம் ஸாராஸாரம்புன: த்³விதா⁴
அஶிக்ஷிதம் ஶிக்ஷிதம் ச கு³ல்மீபூ⁴தம் அகு³ல்மகம்
“படைகளை, மூலப்படைகள், துரிதப்படைகள் என்றோ ஸாரமான படைகள், அஸாரமான படைகள் என்றோ இரு வகைப்படுத்தலாம். பயிற்சி பெற்றன, பயிற்சி இல்லாதன என்றும் ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டன, கட்டுப்படாதன என்றும் இருவகைப் படுத்தலாம்.
“த³த்தாஸ்த்ராதி³ ஸ்வஶஸ்த்ரா அஸ்த்ர ஸ்வவாஹி த³த்த வாஹனம்
ஸௌஜன்யாத் ஸாத⁴கம் மைத்ரம் ஸ்வீயம் ப்⁴ருத்ய அப்ரபாலிதம்
“சில படைகளை நம் படைகளோடு சேர்க்கும்போது, படைக்கலங்களை நாம் தரவேண்டும் அல்லது அவர்களே கொண்டுவருவார்கள், சிலவற்றுக்கு வாகனங்களை நாம் தரவேண்டும், சில படைகள் தாங்களே வாகனங்களைக் கொண்டுவருவார்கள், சில நம்மால் வழி நடத்தப்படவேண்டும், சில படைகளுக்கு, என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். தங்களை வழிநடத்திக்கொள்வார்கள்.”
“அபாரம்! அதேதான்! இரணசாத்திரம், நிருபமர் கையில் ஒரு விளையாட்டுப் பொருளைப் போல தவழ்ந்து கிடந்தது. சாளுக்கியப் படைகள், திட்டமிட்டு உருவாக்கப்பட்டவைதாம். ஆனால், எல்லா நாட்டுச் சைனியங்களும் அப்படிக் கிடையா. உதாரணமாக, அவர்களோடேயே கூட இருந்து பல போர்களில் பங்கெடுத்துக் கொண்டு சண்டையிட்டவர்களாக இருந்தாலும், கங்கப் படைகள் ஸ்வதந்திரமானவை. தம்முடைய ஆயுதங்களைத் தாமே கொண்டுவருவார்கள். தனிப்பயிற்சி உடையவர்கள். பாணர்கள் வேறுவகை. ஆவேசப் போர் புரிபவர்கள். சாத்திரப்படி உருக்காலைகள் எல்லாம் வைத்துச் சத்திரங்களை உருவாக்குபவர்கள் அல்லர். அடிப்படையான கைப்படைக் கருவி இருந்தால் போதும், தடாதடியாக உள்ளே நுழைந்து புறப்பட்டு விடுவார்கள். அச்சம் என்ன என்பதை அறியாதவர்கள். வேங்கிப் படைகளும் அமராபரணர்கள் அல்லர். ஆனால், அரிகேசரி, ஒரு அதி தீவிரமான பண்டனப் பண்டிதர். வகையாகத் திட்டமிட்டுப் பயிற்சி செய்து, படைகளை உருவாக்குபவர். தந்திதுர்க்கர், ஆரம்ப காலத்தில், கிடைத்த படைகளையும், காட்டு வாசிகளையும் வைத்துத்தான் இராச்சியத்தை நிறுவினார். கிருஷ்ணராஜா காலத்தில்தான், இராட்டிரக்கூடச் சைனியம் என்ற ஒன்றே உண்டாயிற்று. அதனால்தான், அவருக்குக் கங்கமண்டலத்தைக் கைப்பற்றவும் பல வருடங்களாயிற்று. ராஹப்பனோடும், கற்கனோடும், கீர்த்திவர்மரோடும் சண்டைகள் இட்டு இட்டுத்தான், இராட்டிரக்கூட வீரர்கள் இரணசூரர்கள் ஆனார்கள். இப்படிச் சிறுகச் சிறுகச் சேர்த்த படை, துருவராஜா அரசேற்ற நான்கைந்து வருடங்களில், தனுமணிகளும், தாடிமணிகளும் ஏந்தி துல்லியப்போர் நிகழ்த்தி, நூழில் தலைக்கொள்ளும் செருநர்ச் செம்மல்களால் நிறைந்து போனது.
“தனுமணியும், தாடிமணியும் எப்போது தருவார்கள்?”
“நூறு வீரர்களைத் தனு மூலமாகக் கொன்றால் அரசரே தனுவில் மணியைக் கோத்துவிடுவார். வாளால் சாய்த்தால், தாடியில் மணி செறிப்பார். அப்படிப்பட்ட வீரர்களைக் கொண்டு நடத்திய போர் அது. வீரர்களை எப்போதும் உற்சாகத்துடனும், புத்துணர்வோடும் வைத்திருந்தார். அடிபட்ட வீரர்கள், உடனுக்குடன் அகற்றப்பட்டார்கள். அவர்கள் இடத்தில், புற்றில் இருந்து வரும் ஈயல் போல, வருவதே தெரியாமல் புதுவீரர்கள் வந்து சேர்ந்து கொள்ள, சைனியம் எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. உஜ்ஜைனி போரில் பங்கு கொண்டதால், போர்க் களைப்பு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், படைகளைத் தனித்தனி பிரிவுகளாகப் பிரித்ததும்கூட. அரிகேசரி தலைமையில் வேமுலவாடாவிலிருந்து சென்ற சேனையும், வேங்கியிலிருந்து தக்ஷிணகோஸலம் வழியாகச் சென்ற சேனையும், பட்டரியில் ஜெஜ்ஜடா தலைமையில் இருந்த சேனையோடு சேர்ந்துகொண்டன. வத்ஸராஜன் எங்கிருக்கிறான் என்ற செய்தியை, ஒற்றர்கள் துருவருக்கும், இவர்கள் இருவருக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
“உஜ்ஜைனி முழுவதையும் கைப்பற்ற ஒருவாரம் பிடித்தாலும், முக்கியப் போர் மூன்று நாட்களில் முடிந்துவிட்டது. உஜ்ஜைனியின் கோட்டை விழுந்ததும், பிருகுகச்சாவில் இருந்துவந்த படை, உஜ்ஜைனியை வழிக்குக் கொண்டுவருவதில் ஈடுபட, எங்கள் மூலப்படையும், தென்மேற்குப் பிரிவுப் படையும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, உடனேயே வத்ஸராஜனைப் பின்பற்றப் புறப்பட்டு விட்டன. காயமடைந்தவர்கள் மட்டும் உஜ்ஜைனியிலே தங்கிவிட்டார்கள்.
“உஜ்ஜைனியை விட்டுப் புறப்பட்ட சேனை, இருபிரிவாகப் பிரிந்து, ஒன்று வத்ஸராஜனின் படைகள் போன வழியில் போயிற்று. அதற்கு இளவரசர் கோவிந்தராஜா தலைமை வகித்தார். எங்களுடைய பிரிவு, யவனப் பாகவதன் கட்டிய ஸ்தம்பம் இருக்கும் மலைகள் வழியாக, வேத்திராவதியின் மேற்குக் கரையோரமாகச் சென்றது. எங்களுக்குக் கிழக்கில், வேத்திராவதிக்கு அக்கரை, ஜாமினி நதிக்கு மேற்கே இடைப்பட்ட இடையாற்றுப் பகுதியில் அரிகேசரி மற்றும் ஜெஜ்ஜடாவுடைய படைகள் எங்களுக்கு ஓரிரண்டு நாள் பயணத்தில், முந்திச் சென்று கொண்டிருந்தன.
“வேத்திராவதிக்கு இருபுறமும் இரட்டச்சேனைகளா!”
“ஆமாம். கிட்டத்தட்ட ஏழு லக்ஷம் வீரர்கள் கொண்ட படைகள், வத்ஸராஜனின் பின்னால். வத்ஸராஜன் யமுனையைத் தாண்டுவதற்காக, அதன் தெற்குப்புறம் பாசறை அடித்துத் தங்கியிருக்கிறான் என்ற செய்தி வந்தது. சீக்கிரமே வத்ஸராஜனின் படைகளை எட்டிவிட்டோம். சிலநாள் பயணத்தூரத்தில் இருந்தான். அதற்குச் சில நாட்களுக்கு முன்பே சங்கமத்துக்கு அருகே வந்து சேர்ந்துவிட்டு, இளைப்பாறிக் கொண்டு காத்திருந்த அரிகேசரியின் சேனைகளையும், ஜெஜ்ஜடாவின் சேனைகளையும், பிரதிஹாரர்களைத் தாக்கச் சொல்லிச் செய்தி அனுப்பினார் துருவராஜா. அவருடைய செய்தி கிடைத்ததும், இரண்டு சேனைகளும் பல பகுதிகளாகப் பிரிந்து, வேத்திராவதியைப் பல இடங்களில் தாண்டிப் பிரதிஹாரப் படைகளை நோக்கி முன்னேறின. ஜெஜ்ஜடா, ஜாமினி சங்கமமாகும் இடத்துக்கு அப்பால், வேத்திராவதியை வடபுறமாகக் கடந்தார். அரிகேசரி, சங்கமத்துக்கு முன்னாலேயே மேற்குப்புறமாகக் கடந்தார். முதலில் எதிரிகளைத் தாக்கியது அரிகேசரிதான். நதியைக் கடந்து வந்ததும், உத்தரதிசையில் சென்று, குளத்தில் இறங்கிய யானையின் அபரத்தைப் பற்றும் நக்கரத்தைப் போல, வத்ஸராஜனுடைய சேனையைப் பற்றினார். வத்ஸராஜனுடைய சேனை, பாம்பின் தலைபோல, வடபகுதியில்தான் பெருத்திருந்தது. அஃது இயல்பு கூட அல்லவா? முன்னேறும் சேனையின், முதல் அரைப்பகுதியில்தான், எப்போதும் பெரும் திறல் அடைத்துக் கிடக்கும். அவனும், அவனுடைய முக்கிய இரணநாயகர்களும் அங்குத்தான் இருந்தார்கள். யானைகள், புரவிகள், அம்பும் கல்லும் வீசும் பொறிகள் எல்லாமே யமுனையை நோக்கியவாறு வடபுறம் திரும்பியிருந்தன.
“பின்னால் வந்து தாக்கிய இராட்டிரக்கூடப் படைகளை எதிர்கொள்ள, வத்ஸராஜனுக்குப் பெருஞ்சிக்கல் ஏற்பட்டுச் சுதாரித்துக்கொள்ளக் காலம் பிடித்தது. அரிகேசரி நடத்திய வெறித்தாக்குதலால் நிலைகுலைந்த படைகளை நிலைப்படுத்தி, வத்ஸராஜன், சிரமப்பட்டுத் தன்சேனையைத் தெற்குப் புறம் திருப்பினான். ஆனால், அடுத்து கிழக்கு, வடகிழக்கிலிருந்து வந்த ஜெஜ்ஜடாவின் சேனை, அரிகேசரியை எதிர்கொள்வதற்காகத் தென்புறம் திரும்பிய பிரதிஹாரப் படைகளைப் பின்புறமாகத் தாக்கத் தொடங்கியது. எந்தப்பக்கம், எவ்வளவு வலிமை தரவேண்டும் என்று வத்ஸராஜனுக்குக் கணிக்கச் சில நாட்கள் ஆயின. அதற்குள், துருவராஜா தலைமையில் அருவிபோல விழுந்த எங்கள் படைநீர்ப் பெருக்கால், வத்ஸராஜன் படைகள், பழனத்தில் மஞ்ஞை உகுத்த பீலியாகச் சிதறிப்போயின. பாதி வெற்றி, இந்த உத்தியாலேயே, எங்களுக்குக் கிடைத்துவிட்டது.
“அங்கே, யமுனைக்கு வடக்கே துர்லபனும் இந்திராயுதனும் வெற்றிகரமாகத் தர்மபாலரின் சேனையைப் பின்னுக்குத் தள்ளியிருந்தார்கள். நாங்கள் மட்டும் வந்திராவிட்டால், வத்ஸராஜன் யமுனையைத் தாண்டி, அவர்களோடு சேர்ந்திருப்பான். பிறகு மூவருமாகத் தர்மபாலரை விரட்டிக் கௌடதேசத்தையும், வங்கத்தையும் கைப்பற்றியிருப்பார்கள். உத்தராபதத்தில், பிரதிஹாரர்களின் ஆட்சி ஸ்திரமடைந்திருக்கும். ஆனால், துருவராஜா, அந்தக் கனவை குழிதோண்டிப்புதைத்தார்.”
“நீங்கள் போர்க்களத்துக்குப் போயிருந்தீர்களா?”
“இல்லை, நான் பாசறைச் சேவைப்படையில் இருந்தேன். அடிபட்ட வீரர்களுக்கு வரிவசிதமும், சிச்சுருடையும் செய்வதற்குக் குழுக்கள் அமைத்திருந்தார்கள். மஹாராணி சீலாதேவியும் அதில் முனைப்போடு ஈடுபட்டிருந்தார். எல்லாப் பணிப்பெண்களும், தாதிகளும் வீரர்களுக்கு அப்படிச் சேவகம் செய்தார்கள். அடிபட்டுக் காயங்களுடன் கொண்டுவரப்பட்ட வீரர்கள் சொல்லும் விவரங்களில் இருந்துதான், போர்க்களத்தில் என்ன என்ன நடக்கின்றன, யார் யார் எப்படிப் போர்செய்தார்கள் என்று நாங்கள் எல்லோரும் தெரிந்துகொண்டோம்.”
“வேதனைக்குக் குறைவிருக்காது என்றாலும், அற்புதமான அனுபவம் உங்களுக்கு அல்லவா? அதுவும், அத்துணை இளவயதில்?”
“ஆம். என் நோக்கை மாற்றிய பருவம் அது. கால்கள் உடைந்து தொங்கியும், தண்டுவடம் பிளந்த முதுகோடும், அம்பு துளைத்த கண்ணோடும், செவிமடல் கிழிந்து செவித்துளை தெரிய உடைபட்ட கன்னத்தோடும் எத்தனை உடல் சிதைவுகளுடன் வீரர்கள் வந்தார்கள்! குடல் சரிந்துபோய், அதைச் சிலர் கையால் பிடித்தவண்ணம் கொண்டுவரப்பட்டார்கள், சிலருடைய மார்புக் கவசம் யானையால் மிதிக்கப்பட்டுப் பொடியாக நொறுங்கிப்போய் விலாஎலும்புகளில் தைத்திருந்தது, அப்பப்பா! நிணத்தையும் குருதியையும் வழித்துப் போட்டால்தான் சரீரத்தில் என்ன காயம் என்றே பார்க்கமுடியும். உயிரிழந்தவர்களின் உடல்கள் தனியாக ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு, சாத்திர உக்தமாக உத்தரக் கிரியைகள் செய்யப்பட்டன. இறந்தவர்கள் யார் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, இழவோலைகள் உடனுக்குடன் எழுதப்பட்டன. இதற்கெல்லாம் பிராணாதிகாரிகளும், கர்மாதிகாரிகளும் இருந்தார்கள்.
“நாளுக்கு நாள், பாசறைகளும் இடம்பெயர்ந்து முன்னோக்கிப் போவதிலிருந்து, இரட்டப் படைகள் வெற்றி பெற்று வருகின்றன என்று தெரிந்து கொண்டோம். அரசர் குறித்தும், இரணநாயகர்கள் குறித்தும் தினமும் செய்தி வரும்.”
“துர்லபன், வத்ஸராஜனுடைய உதவிக்கு வரவில்லையா?”
“அவனால் முடியவில்லை. தர்மபாலரைத் துரத்திக்கொண்டு கிழக்குப் பக்கமாகச் சென்றவன், இன்னும் கிழக்கில் வங்கதேசத்தைத் தாக்கக் கங்கைக் கரையோரமாகவே சென்று விட்டிருந்தான். வங்கதேசத்தைக் கைப்பற்றியும் விட்டிருந்தான். அவனுடைய வாளின் நுனி, கங்கையும், ஸாகரமும் இணைந்த முகத்துவாரத்தில், குளித்துத் தன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டது, என்றுதான் சொல்லவேண்டும். அவனுக்குச் செய்தி அனுப்பி, அவன் திரும்பிவந்து..... ம்ஹூம் வத்ஸராஜனுக்கு அது சாத்தியப்படவில்லை. அப்படிச் செய்திவந்தாலும், எதிர்ப்பதை விட்டுவிட்டு, வத்ஸராஜனுடைய துணைக்கு வந்தால், பின்வாங்கிய எதிரிகளின் சேனை மீண்டும் கிளர்ந்தெழுந்து வந்து, இழந்த பகுதிகளைக் கைப்பற்றிவிடுமே? அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அசச் சார்த்தூல விளையாட்டில், சிக்கிய புலி போலத்தான் இருந்தது அவன் நிலைமை. ஆனால், நாங்கள் ஆடுகள் அல்லவே? துருவராஜா, வத்ஸராஜனை நேரடியாகத் தேடிப்பிடித்துத் தாக்கினார். இருவரும் நேருக்கு நேர் போரிட்டார்கள். அவருடைய தாக்குதலின் வலிமையைத் தாளாமல் ஓடினான் வத்ஸராஜன் என்றார்கள். அவனுடன் அவனுடைய படைகளும் பின்வாங்கின. இன்னொரு படைப்பிரிவு துர்லபனைத் தேடிச் சென்று அவன் படைகளை நிர்மூலமாக்கின.
கோவிந்தராஜரையும், ஜெஜ்ஜடாவையும் வத்ஸராஜனைத் துரத்திப் பிடித்துக் கொல்லச் சொல்லிவிட்டுத் துருவராஜா, யமுனையைக் கடந்தார். அங்குப் படைகளெல்லாம் சற்றே இளைப்பாறிக் கொண்டன. ஓரெதிர்ப்பும் எங்களுக்கில்லை. படைவீரர்களும், சேவகர்களும், பெண்டிர்களும் யமுனை நதியில் ஆசை தீர நீராடி மகிழ்ந்தனர். இமயத்தில் இருந்து பாறைகளை உருட்டிக் கொண்டுவந்தாளோ இந்தக் காளிந்திப் பெண் என்று கேட்கும்படி, மொத்த யானைகளும், ஆற்றிலே கல்லுருண்டைகளாக ஆனந்தமாக அமிழ்ந்து கிடந்தன. மறக்க முடியாத காட்சி அது. அரசர் உட்பட, பெரும்பாலோர்கள் யமுனையை முதன்முறையாகத் தரிசிப்பவர்கள். நாங்கள் யாத்திரிகள் அல்லோம், இந்த இடம், எங்களுக்குச் சொந்தமானது, எங்கள் பூமி என்ற உணர்வு எல்லோருக்கும் உத்ஸாகத்தையும் குதுஹலத்தையும் ஊட்ட, விளையாட்டும் வேடிக்கைகளும், ஆட்டமும், பாட்டும், மதுவும் மற்ற இன்பங்களும் சுற்றும் பரவின.
“நான் அடிக்கடி சொல்வது போல, பன்னூறு ஆண்டுகளாகத் தக்கணத்தில் இருந்து வந்த எந்த அரசும் சாதிக்காத செயல் இது. துருவராஜா நிகழ்த்திக் காட்டினார்.”
“வத்ஸராஜா கிடைத்தாரா?”
“இல்லை. சின்னாட்கள் கழித்துக் கோவிந்தராஜாவும், ஜெஜ்ஜடாவும் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். நாங்கள் இருந்த இடத்துக்கு மேற்கில், கருஞ்சிந்து என்று ஒரு நதி இருக்கிறதாம். அதைக் கடந்தால், பெரும் பாழ்நிலம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நதிகள் ஓடி நிலத்தை அரித்துப் பெரிய பெரிய மணற்பள்ளத்தாக்குக்களை உருவாக்கியிருக்கின்றன. மிக ஆழத்தில், சர்மான்வதியோ ஏதோ சொன்னார்கள், அப்படி ஒரு நதியும் ஓடுகிறதாம். மணற்சுவர்கள் தடுப்புத் தடுப்பாக பல ஆள் உயரத்தில், பெரும் குன்றுகளாக இருக்கும் நிலம். தேன் அடையைப் போல இராட்சத உயரத்துக்குக் கண்ணிகள். அவற்றின் இடுக்குக்களுக்குள்ளே நுழைந்துவிட்டால், திக்குத் தெரியாமல் மாட்டிக் கொண்டுவிடுவோம். வெளியே வரும் வழி தெரியாமல், அங்கேயே சுற்றி மடிய வேண்டியதுதான் என்றார்கள். வறண்ட பூமி வேறு. மரங்களும் செடிகளும் குறைவு. தண்ணீர் கிடைக்காது. சபிக்கப்பட்ட நிலம் போல இருக்கும் அந்தப் பாதை இல்லாத இடுக்குக்களுக்குள் புகுந்து விட்டானாம் வத்ஸராஜன். இவர்கள் சுற்றித் தேடியிருக்கிறார்கள். நிறைய பிரதிஹாரப் படைவீரர்களைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களைச் சிறைசெய்து அழைத்து வந்துவிட்டார்கள். வத்ஸராஜனை மட்டும் காணவில்லை. ஒரு சிறு படையைச் செய்தி சொல்வதற்கு அங்கேயே நிறுத்திவைத்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டார்கள். அவன் அங்கேயே மடிந்திருப்பது திண்ணம்.”
“அதற்குப்பிறகு, அவரைப் பற்றிச் செய்தியே இல்லையா?”
“இல்லை. போனவன் போனவன்தான். இந்த முப்பது வருடங்களில் வத்ஸராஜனைப் பற்றிக் கிஞ்சித்தும் செய்தி கிடையாது. நாகபடன் ஒருவன் மட்டுந்தான் அவ்வப்போது வத்ஸராஜன் என்று ஒருவன் ஆண்டு வந்தான் என்பதை நினைவு படுத்தி வருகிறான்.” சிரித்தார் பிரதாபர்.
“எப்படிக் கிளைத்து வந்தது பிரதிஹாரர்களுடைய மறுமலர்ச்சி! இவர் இப்படிக் கணநேரத்தில் அதற்கு ஒரு முடிவு கட்டிவிட்டாரே!”
“அந்தச் சமயத்தில், கூடவே வராஹகிராமத்திலிருந்து ஒரு ஸம்ஸ்க்ருத
பண்டிதரும் வந்திருந்தார். தேவனையபட்டர் என்று நினைக்கிறேன். அவர் சொல்லுவார், முழு ஸ்லோகம் சரியாக
நினைவில்லை.
“து³ர்மார்க³ம் மரு மத்⁴யம் ப்ரதி யோ வத்ஸராஜம் நிஷ்காஸ்ய கௌ³ட⁴ஸ்ய ஶரதி³ந்து³-பத³-த⁴வலம் சா²த்ர-த்³வயம் க்³ருஹீதவான் தத்க்ஷணாத் –
“அந்த மாதிரி ஏதோ. சொற்கள் சரியாக நினைவில்லை. நீ கணநேரம் என்றாய் அல்லவா? அவர் அதையே சொன்னார் – தத்க்ஷணாத். கவிகள் ஒன்று போலத்தான் யோசிப்பார்கள் போலிருக்கிறது” – சிரித்தார் பிரதாபர்.
“அவர் இன்னும் சொன்னது: ‘கௌடர்களின் அரசப் பாக்கியத்தை எளிதாகக் கைப்பற்றி விட்டதாகப் பெருமையடித்துக்கொண்டான் அல்லவா அந்தப் பிரதிஹாரன், அவனை அந்தக் கணத்தில், தன்னுடைய நிகரற்ற படைகளால், தடமில்லாத பாலைவனத்திற்கு விரைவாக விரட்டியடித்தார், துருவராஜா. அவர் அந்த வத்ஸராஜனிடம் இருந்து பறித்தது, இலையுதிர்கால நிலவின் கதிர்களைப் போலிருந்த கௌடர்களின் இரண்டு வெண்கொற்றக் குடைகள் மட்டுமல்ல, அவன் இதுவரை ஈட்டி வைத்திருந்த அவனுடையப் பிரத்தியேகப் புகழின் எல்லைகளையும் அன்றோ பறித்து விட்டார்?’
“இன்னொரு சந்தர்ப்பத்தில், அவர் கிருஷ்ணராஜாவைப் பற்றிச் சொல்லும்போது, ‘ஸத்யான்விதோ விபுல சக்ர விநிர்ஜித அரிசக்ரோ அபி அக்ருஷ்ணசரிதோ பு⁴வி க்ருஷ்ணராஜ:’ என்றார். எவ்வளவு அழகு இல்லை?”
“ஆஹா! அபாரம்! கடுஞ்சமர்க் களத்திடைக் கவி சௌந்தரியம்! ஆழியைக் கொண்டு எதிரிகளை வெல்லும் அந்தக் கிருஷ்ண பரமாத்மாவைப் போல சத்யத்தைத் தழுவியிருந்தாலும், நடத்தையில் அவர் கருமை படிந்தவர் அல்லர்! அழகான சிலேடைகள். சத்யபாமாவைத் தழுவியதைச் சத்தியத்தைத் தழுவினார் என்றார் பாருங்கள்! நீங்கள் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள், இராட்டிரக்கூட அரசர்கள், கவிகளை மிகவும் ஆதரித்தார்கள் என்று. இது அவர்களுடைய ஒவ்வொரு சொற்றொடரிலும் நிரூபணமாகிறது. அதென்ன இரண்டு வெண்கொற்றக்குடைகள்?
“இவை கௌடதேசத்தினுடைய முக்கியச் சின்னங்கள். சாளுக்கியர்களுக்குப் பாலித்துவசம் இல்லையா, அது போல. இவற்றை, முந்தைய போரின் போது, பறித்த வத்ஸராஜன், எப்போதும் தன் சேனைகளுக்கிடையே ஏந்திக்கொண்டு சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். அதைத் துருவர் பறித்துக் கொண்டார்.
“க³ங்கா³ யமுனயோர்மத்⁴யே ராஜ்ஞோ கௌ³ட²ஸ்ய நஶ்யத:
லக்ஷ்மிலீலாரவிந்தா³னி ஶ்வேதச்ச²த்ராணி யோSஹரத்
“என்று தேவனையபட்டர் சொல்லுவார். கங்கை யமுனை இடையாற்றில், கௌடர்களை அழித்துப் பெற்ற வெண்கொற்றக்குடைகளை அபகரித்தார் என்று.
“சிறிது நாட்களுக்குப் பிறகு, எல்லாச் சைனியங்களும் கன்யாகுப்ஜத்தை நோக்கி நகர்ந்தன. அதன் கோட்டை வெகு எளிதில் கைப்பற்றப்பட்டது. கோட்டை வீழ்ந்ததும், ஒரே நாளில், உத்தராபதத்தின் ஓங்கலாக நின்று ஒளிவீசிக்கொண்டிருந்த கன்யாகுப்ஜம், கலிவல்லபரின் கைவசமானது. அன்றே ஹர்ஷவர்த்தனர் போன்றவர்கள் அமர்ந்து ஆட்சி செய்த, அந்தப் புகழ்பெற்ற அரியாசனத்தில் துருவராஜா அமர்ந்தார். அந்தக் காட்சியை என்றும் என் கண்களும் நெஞ்சமும் மறக்கா.
“தேவனைய பட்டருக்குப் போட்டியாகக் கவி பாடுபவர் சாகிராஜர். அவர் வர்ணித்ததைச் சொல்கிறேன் கேள். ‘ராஜலக்ஷ்மி நடைபயிலும் இரத்தின விரிப்பைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்த, விசாலமும் அகலமும் கொண்ட துருவராஜாவின் இமயமார்பில், அதை அரவணைக்கும் அழகிய பெண்களின் செழிந்துயர்ந்த மார்புடன் கொண்ட தொடர்பின் பரவசத்தால் அம்மார்பில் பரவியிருந்த உரோமங்கள், அவருடைய வாள்வீச்சால், மத்தகம் பிளக்கப்பட்ட பகைவர்களுடைய கதழ்ந்த யானைகளின் முகபடாத்திலிருந்து விழுந்த முத்துக்களாலும், அந்த முரட்டு யானைகள் தும்பிக்கைகளால் அடித்த அடிகளாலும், அவற்றின் தந்தத்தின் கூரிய முனைகளாலும் தாக்கப்பட்டு வலிமையாக வளர்ந்தன.’ எப்படி வர்ணனை பார்த்தாயா?”
“சாகிராஜரா? கங்கமண்டலத்தின் ஆதிராஜரா? இவ்வளவு அற்புதமாக வர்ணித்திருக்கிறாரே” – ஆச்சரியப்பட்டான் விநயன்.
“இன்னும் கேள். ‘தன்னுடைய தோள்களைச் சுற்றி வீசப்பட்ட உயர்ந்த மற்றும் அகன்ற சாமரங்களால், திமில் திமிர்ந்தமர்ந்திருந்த திரிபுராந்தகனின் வலிய விடையைப் போலத் தோற்றமளித்தவருடைய வெண்கொற்றக் குடைகள், திக்கெங்கும் விரிந்து பரந்திருக்க, அதனால், வெண்ணிற நுரை உருண்டு திரண்டு திசைகளையெல்லாம் மூடிவிட்டது போலத் தோன்றியது’.
“’தனது வலிமைமிக்க எதிரிகளை அழித்து முழு பூமியையும் வென்ற துருவராஜா, பகையரக்கன் பலியை வெல்ல உலகம் முழுவதும் காலடி எடுத்து வைத்த புண்டரிகாக்ஷனைப் போல் காட்சியளித்தார். அந்தப் பலி எப்படிப் பகவானின் திருவடிச் சுமையைத் தாங்கினானோ, அப்படி ஏராளமான ராஜ்யங்களைத் தன் கீழ்அடக்கிய மொத்த இராட்டிரக்கூட இராஜ்ஜியத்தின் பெரும் சுமையை அவர் தாங்கினார்.
“’கருமுகில் இடியன்ன ஒலிக்கும் அவருடைய போர் முரசங்களான படகம் மற்றும் இடக்கையின் உறுமலால், நெஞ்சங்கள் துளைக்கப்பட்ட அவருடைய எதிரிகள், குறிக்கோள்களை இழந்து, அவருடைய ராஜ்யலக்ஷ்மிக்கு ஒரு விளையாட்டுக் கருவிகளாக மாறிப்போனார்கள். அவருடைய அரச சின்னங்கள் உயர்த்திப் பிடிக்கப்பட்டு அசையும்போது, எதிரிகளின் நெஞ்சுறுதியும் அசைந்துபோனது. அவருடைய புரவிகளின் குளம்புகளால் எழும் தூசிப் புயலின் சுழற்சி, அப்பகைவர்களையும் தன்னோடு சுழலோடு சுழலாகச் சுழற்றிக்கொள்ள, அவருடைய யானைகளுடைய கன்னங்களில் இருந்து வடியும் மதநீர், அவரை வெல்லவேண்டும் என்று வந்த அந்நிய அரசர்களுடைய ஆவேசத்தைத் தணித்துக் குளிரவைத்துவிட்டது.”
“அடேயப்பா!”
“இவை அத்தனையும் வெறும் வர்ணனைகள் அல்ல. நாங்கள் நேராக அனுபவித்த உணர்வு. தக்ஷிணத்தில் இருந்து ஒருவர், தம்முடைய புஜபலத்தாலும், புந்தித் திறலாலும், அந்தப் பிரக்கியாதி பெற்ற அரியணையில் அமர்ந்திருக்கிறார் என்று நினைத்து நினைத்து, எங்கள் நெஞ்சங்கள் மகிழ்ச்சியில் வெடித்துவிடும் நிலையில் இருந்தன.”
“எவருக்கும் எளிதில் கிடைக்காத பேறு. நடந்து இத்தனை வருடங்கள் ஆகின்றன. அதைக் கேட்கும் எனக்கே இப்படிப் புல்லரிக்கிறது என்றால், நேரில் அனுபவித்த உங்களுக்கெல்லாம் அப்போது எப்படி இருந்திருக்கும்! இந்திராயுதன் என்ன ஆனான்?”
“கோவிந்தராஜரும் அரிகேசரியும் துர்லபனையும் இந்திராயுதனையும் தேடிச் சென்றார்கள். சின்னாட்களிலேயே இருவரையும் எட்டிப்பிடித்துத் தோற்கடித்துச் சிறைபிடித்துக் கொண்டுவந்து, துருவரின் முன்னால் நிறுத்தினார்கள். இந்திராயுதனால் எந்த ஆபத்தும் இராது என்று கணித்த துருவராஜர், அவனைச் சகல சௌகரியங்களோடு சிறைவைத்தார். துர்லபன் கதை வேறு. அவனை விடுவித்து விட்டால், மீண்டும் எழுவான் என்று எண்ணியதால், வத்ஸராஜன் காணாமற்போன அந்தப் பாதையில்லாப் பள்ளத்தாக்குக்களிடையே கொண்டுபோய் விட்டுவரக் கட்டளையிட்டார். துர்லபனைப் பற்றிய கேள்வியும் அன்றோடு தொலைந்து போயிற்று.
“எதிர்பார்த்ததை விட இலகுவாகவே பிரதிஹாரர்களை வென்றாயிற்று. இனி அடுத்தது என்ன? உத்தராபதத்தில் எஞ்சியிருந்த ஒரே அரசு தர்மபாலரின் கௌடதேசந்தான் வத்ஸராஜனை வீழ்த்தி உற்சாகத்தோடு, தோள்கள் பரபரத்துக் கிடந்த சேனைக்கு உணவிட்டாக வேண்டுமே? கௌடதேசத்தையும் குலைத்துவிட முடிவுசெய்தார் மஹாராஜா. அதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தபோது, தர்மபாலரிடமிருந்து தூதுவன் வந்து, வலிமை கொண்ட பாலர்கள், வல்லபருக்குப் பணியச் சித்தமாக இருப்பதாகச் சொன்னான். அன்றைய நிலையில், இந்திராயுதன் மற்றும் துர்லபனின் சேனையிடமே தோற்ற பாலர்களின் படைகள், இராட்டிரக்கூடப் பாரிஜாதத்தின் முன்னால், மண்ணில் வளரும் சாதாரண மரங்கள்தானே? துருவராஜா யோசித்தார்.
“மந்திராலோசனை நடந்தது. எல்லோரும், கௌடத்தைத் தாக்குங்கள் என்றார்கள். கோவிந்தராஜா மட்டும் வேண்டாம் என்றார். ‘இராச்சிய எல்லையை விரிவாக்குவது எளிது. அதைக் காட்டிக் காப்பதற்கு, மிகுந்த பிரயாசைப்பட வேண்டும். மேற்கே யமுனையிலிருந்து, கிழக்கே வங்கம் வரை விரிந்து கிடக்கும் உத்தராபதக் குதிரையைத் தக்கணத்தில் இருந்து, கடிவாளத்தைப் பிடித்து நிர்வகிப்பது கடினம்’ என்றார். சேண், மொழி, பண்பாடு, பூமி, பொதுஜன அபிப்பிராயம் என்று பலவிதத்தில் மாறுபட்டு நிற்கும் இரு பிராந்தியங்களை, எங்கோ ஓரிடத்தில் நிலை பெற்று நிர்வகிக்கும் சிரமங்களைச் சூசித்து அட்டவணைப் படுத்தினார். அவர் சொன்னதில் இருந்த நியாயங்களை உணர்ந்த மஹாராஜா, ‘நீ உத்தராபதத்தை அரசனாக இருந்து நிர்வாகம் செய்கிறாயா?’ என்று ஜெஜ்ஜடாவைக் கேட்டார். ஜெஜ்ஜடா பரம விவேகி. தந்தையின் குணம் அப்படியே அவருக்குள் ஊறியிருந்தது. தான் விதிஷாவிலேயே இருந்துகொள்வதாகச் சொல்லிவிட்டார்.”
“இந்த ஜெஜ்ஜடாவைப் பற்றிச் சொல்கிறேன் என்றீர்களே? இவர் யார்?”
“கிருஷ்ணராஜாவின் குமாரர்.”
“என்ன???”
சிரித்தார் பிரதாபர். “தெரியும், நீ ஆச்சரியப்படுவாய் என்று. தந்திதுர்க்க மஹாராஜா, தக்ஷிணகோசலத்தை வென்று உஜ்ஜைனிக்குத் திரும்பும்போது விதிஷாவையும் வென்றார் என்று சொன்னேன் நினைவிருக்கிறதா? விதிஷாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“வணிக மார்க்கத்தின் முக்கிய சந்திப்பான வேதசா நகரைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்? அதை விதிஷா என்றும் சொல்வார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும். சிராவஸ்தியிலிருந்து பிரதிஷ்டானத்துக்குச் செல்லும் பாதையும், உஜ்ஜையிலிருந்து மகதத்துக்குச் செல்லும் பாதையும் சந்திக்கும் முக்கியத் தலம் என்பார்கள்.”
“அதேதான். வேதசா நதியும், வேத்திராவதி நதியும் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் நகரம். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஊறிப்போன இடம். அதை அப்போது காலச்சூரி வமிசத்தில் வந்த பரபாலன் என்ற அரசன் ஆண்டுவந்தான். தந்திதுர்க்கரும் கிருஷ்ணராஜாவும் உஜ்ஜைனிக்குத் திரும்பிவந்து கொண்டிருந்தபோது, வணிகச் சந்திப்பான விதிஷாவைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் எழக் கிருஷ்ணராஜா மட்டும் தனியாகப் பிரிந்து தன் படையோடு விதிஷாவைத் தாக்க வந்தார். பரபாலன், கிருஷ்ணராஜாவின் வலிமையைக் குறைத்து எடைபோட்டுவிட்டதால், எதிர்க்கத் துணிந்தான். ஊருக்கு மேற்குப்புறத்தில் உள்ள கோட்டைச் சுவர் மிகப்பெரியது. மிகுந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டது. அது நகரைக் காத்துவிடும் என்று நம்பினான். கிருஷ்ணராஜா அந்தச் சுவரை இரண்டு மூன்று நாட்களில் தவிடு பொடியாக்கிவிட, நகரைக் காக்கக் களத்தில் இறங்கிய அரசன், சண்டையில் காயப்பட்டுக் கீழே விழுந்தான். அவனுடைய இளவரசன் ஒருவன், இளைஞன் சிறுவன், சிதறி ஓடிய படைகளைத் திரட்டி, அச்சமின்றி முன்னணியில் தைரியமாக நின்றுகொண்டு கிருஷ்ணராஜாவுடன் நேருக்கு நேர் வாட்சண்டையில் ஈடுபட்டான். முதலில் அவனைப் பொருட்டாக நினைக்காதவர், வெகு சீக்கிரம் அவனுடைய வாட்சுழற்சியில் சிக்கித் தன்வாளைப் பறிகொடுத்தார். வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்த சுற்றியிருந்தவர்கள் இன்னும் வியக்க, இளவரசனின் வாள்நுனி அடுத்தகணம், அவருடைய கழுத்தை நோக்கிப் பாய்ந்தது. சீறிக்கொண்டு வந்த வாள் நுனியைத் தவிர்க்கப் பக்கவாட்டில் ஒதுங்கியவர் நிலைதடுமாறிக் கீழேயும் விழுந்தார். வாளைச் சுழற்றுவதிலேயே எதிரிகளை அஞ்சவைக்கும் பராக்கிரமம் படைத்தவர் கீழே விழுந்துகிடந்ததைப் பார்த்து, ஆஹாகாரம் மலிந்தது.
“தன் தளபதிகள் முன்னால், தரையில் விழுந்து கிடந்தவர், ஆவேசத்துடன் நகர்ந்து, பக்கத்தில் கிடந்த வாளைப் பற்றிக்கொண்டு, எழுந்துகொண்டார். இவன் அசாதாரண வீரன் என்று புரிந்துகொண்டு, தன் அனுபவத்தையும், வாள்திறமையும் முழுவீச்சில் பயன்படுத்திக் கிஞ்சித் சமயத்திலேயே, இளவரசனின் வாளைக் காற்றில் பறக்கவிட்டார். அவனைக் கீழே வீழ்த்தி, அவனுடைய நெஞ்சில் கால் வைத்துக்கொண்டு, வாளை ஓங்கியவர், தனக்குச் சமமாகப் பொருதவன் முகத்தைக் காணவேண்டும் என்ற ஆசையால், இளைஞனின் முகக்கவசத்தை நீக்கினார். அப்போதுதான், சண்டையிட்டது ஒரு பெண் என்று தெரிந்தது. விதிர்விதிர்த்துப் போனவர், தன்னுடைய வாளைத் தூக்கி எறிந்துவிட்டுக் கைகுவித்து வணங்கினாராம். சந்திரபலா என்று அவளுக்குப் பெயர். அரசனுக்குக் குமாரர்கள் இல்லை. இவள்தான் மூத்த பெண். அவளைக் கைதூக்கி எழுப்பிவிட்டவர், மீண்டும் விழுந்தார். இந்தமுறை விழுந்தது அவளுடைய விழிப்பார்வையில். கண்டதும் காதல்.”
பிரதாபர் முகத்தில் முறுவல். விநயனும் முறுவலித்தான். “என்ன ஒரு சிருங்காரக் காவியம், சமர்க்களத்தில் நிறைவேறியிருக்கிறது!”
“சண்டை முடிவுக்கு வந்தது. விஷயம் தெரிந்துகொண்ட தந்திதுர்க்கரும், தன் போக்கை விட்டுவிட்டு, விதிஷாவுக்கு வந்து சேர்ந்தார். மணமும் நடந்தது. இதைச் சொல்லிக்காட்டி, தந்திதுர்க்கர், கிருஷ்ணராஜாவை அடிக்கடி நையாண்டி செய்வார் என்று சொல்வார்கள். தந்திதுர்க்கர் மட்டும் உஜ்ஜைனிக்குத் திரும்பினார். கிருஷ்ணராஜா, அங்கேயே கொஞ்ச காலம் இருந்தார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் ஜெஜ்ஜடா. சந்திரபலாவையும், மகனையும் ஏலபுரிக்கு அழைத்தும் வந்தார். தந்திதுர்க்கர் பெரிய கோவிந்தர், துருவராஜா எல்லோரும் ஜெஜ்ஜடாவுடைய சகோதரர்கள். ஆனால், இடையில் ஒரு தலைமுறை வயது வித்தியாசம். ஜெஜ்ஜடாவுக்குக் கிட்டத்தட்ட கற்கராஜாவின் வயது. ஸ்தம்பராஜா, கோவிந்தராஜா எல்லோருக்கும் சில வருடங்கள் மூத்தவர். இவர்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் வளர்ந்தார்கள், பயின்றார்கள். விதிஷாவின் கற்கன், இன்னும் தன்னுடைய மெய்கீர்த்தியில், ‘தன்னுடைய தந்தையார், ஜெஜ்ஜடா இராட்டிரக்கூட அரசர், அவருடைய அருளால்தான் என்னுடைய குடிதழைக்கிறது. அவருடைய மூத்த சகோதரர் பெரும் யானைகளை உடைய கர்ணாடத்துச் சேனையை அழித்தவர், இலாடத்தைக் கைப்பற்றியவர், நான் நாகவலோகனுடன் சண்டையிட்டு, அவனைத் துரத்தியவன் என்றுதான் பெருமையாகக் கூறிக்கொள்வார்”
“இலாடத்தை அழித்த மூத்த சகோதரர் என்றால், தந்திதுர்க்கரா? கோவிந்தரும்தானே இலாடத்தை வென்றார்?”
“அது சரிதான். ஆனால், அவர் கர்ணாடச் சேனை எதையும் அழிக்கவில்லையே? கிருஷ்ணராஜாவுக்குப் பிறகு, கர்ணாடச் சேனை என்ற ஒன்றே கிடையாது. இராட்டிரக்கூடர்கள்தாம் அவருக்குப் பிறகு, கர்ணாடர்கள்”
“ஹாஹா. வாஸ்தவம். மேலும் சகோதரர் என்று வேறு கூறிக்கொள்கிறாரே, கோவிந்தராஜா அடுத்த தலைமுறையினர் ஆயிற்றே. நாகவலோகனைத் தூரத்தியது?”
“அது இப்போது சமீபத்தில் நடந்தகதை. பின்னர்ச் சொல்கிறேன். ஜெஜ்ஜடாவுடைய பாட்டனார் பரபாலன் இறந்ததும், கிருஷ்ணராஜா விதிஷாவுக்குச் சென்று, எல்லா ஏற்பாடுகளையும் செய்து, ஜெஜ்ஜடாவை அரியணையில் அமரவைத்தார். இராட்டிரக்கூடத்தின் மொத்தத் துணையும் விதிஷாவுக்குக் கிடைத்தது. ஜெஜ்ஜடாவுக்குக் குணாவலோகரின் குமாரத்தியையும் மணமுடித்து வைத்தார். பெரிய கோவிந்தருக்கும், துருவருக்கும் விரிசல் ஏற்றபோது, கோவிந்தர் இவருக்கும் ஓலை அனுப்பி, உதவி கோரினாலும், நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு, துருவருக்குத் துணையாக நின்ற ஒரு சிலரில் இவர் ஒருவர். அதனால், துருவராஜருக்கு இவர் மீது மிக்கவன்புண்டு. அதன் விளைவாகத்தான், உத்தராபதாதிபதியாகவே அவரை நிறுவத் தலைப்பட்டார். அவர் சரியென்று சொல்லியிருந்தால், அவருக்காகத் தர்மபாலரின் சமரசக் கோரிக்கையை நிராகரித்துக் கௌடத்தின் மீது படையெடுத்தும் சென்றிருப்பார். ஆனால், ஜெஜ்ஜடா மறுத்துவிட்டதால், கௌடர்களோடு இணக்கமாகப் போவதென்று முடிவு செய்தார்.”
“ஜெஜ்ஜடாவின் முடிவு உசிதமானதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. உத்தராபதத்தைக் காட்டிக் காப்பது, எல்லோருக்கும் அவ்வளவு எளிதன்று. கிடைக்கிறதே என்று இராச்சியத்தைப் பெரிதாக வாங்கி வைத்துக் கொள்ள முடியுமா என்ன? ஆனால், இராட்டிரக்கூடத்தின் அரியணையில் அமரக்கூடிய வாய்ப்பைப்பெற்ற வழித்தோன்றல். மறுப்பது என்பதும் அவ்வளவு எளிதன்று.”
“இது துருவராஜாவுக்கும் தெரிந்திருந்தது. அதனால், உத்தராபதத்தின் ராஜாங்கத்தில், விதிஷாவுக்கு ஒரு முக்கியப் பங்கை அளிக்க நினைத்தார். கன்யாகுப்ஜத்துக்கு அருகில் வேறு இருப்பதால், ஜெஜ்ஜடாவின் வம்சம், வருங்காலத்தில், பாதுகாப்புக்கு இராட்டிரக்கூடத்தின் துணையை நாடவேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பதற்காக, ஓர் உபாயம் செய்தார். ஜெஜ்ஜடாவுக்கு இரண்டு குழந்தைகள். இப்போது விதிஷாவை ஆண்டு கொண்டிருக்கிறாரே, கற்கராஜப் பரபாலர், அவர் ஒருவர். அப்போது அவர் சிறு குழந்தை. இரண்டாமாவர், கற்கராஜருக்குப் பலவயது மூத்தவரான ரன்னாதேவி. இப்போதைய கன்யாகுப்ஜத்து அரசர் தேவபாலரின் தாய், ராஜமாதா. ரன்னாதேவிக்கு அப்போது, மணவயது. அவரைத் தர்மபாலருக்குத் திருமணம் செய்துவைத்துப் பட்ட மகிஷி ஆக்கினார், துருவராஜா.”
“அபாரம்! மணவினையால், தம்பிக்கு ஒரு வலுவான இராச்சியத்தை நிறுவிக்கொடுத்து விட்டாரே! ஜெஜ்ஜடாவுக்குச் சகோதரர்கள் யார் யார் என்று பார்த்தால், எல்லோரும் திக்கஜங்கள்! தந்திதுர்க்கர், பெரிய கோவிந்தர், துருவராஜர், இலாடத்துக் கோவிந்தர், சங்கரகணர் அடேயப்பா!”
“ஜெஜ்ஜடாவின் புக்தியை, ஜெஜ்ஜபுக்தி என்றே சொல்வதும் உண்டு. பரந்தாமனின் பரம பாகவதர். இன்று வாதோதக பட்டணத்தில் இருக்கிறதே, சௌரியின் தசாவதார கோவில், அதற்குப் புணருத்தாரணமும், வேறு சில மூர்த்தங்களை நிறுவியதும் இவர்தான். அற்புதமான கோவில். கேள்விப்பட்டிருக்கிறாயா?”
இல்லை என்று பொருள்படத் தலையசைத்தான் விநயன்.
“தர்மபாலரைக் கன்யாகுப்ஜத்துக்கு அழைத்துப் பேசினார் துருவராஜா. தர்மபாலர் ஒப்புக்கொண்டார். மணநாள் குறிக்கப்பட்டது. முத்ககிரியில்தான் திருமணம். எல்லோரும் ஸ்ரீநகரம் வழியாகக் கொண்டாட்டத்துடன் மணமகளை அழைத்துச் சென்றோம். கங்கையில் நீராடினோம்.”
“ரன்னாதேவி உங்களுடன் போருக்கு வந்திருந்தாரா?”
”ஆமாம். விதிஷாவின் அரச குடும்பம் மொத்தமும் வந்திருந்தது. குழந்தையான கற்கப்பரபாலனும் சேர்த்துத்தான். யுத்த தர்மப் பிரகாரம்தானே எல்லாப்போர்களும் நடக்கின்றன? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பொதுவாக அபாயம் நடப்பதில்லை. ஒருவேளை அமர்க்களத்துக்கு அருகே செல்பவர்களுக்குச் சில சமயங்களில் குறிதவறும் ஆயுதங்களினாலோ, தறிகெட்டோடும் விலங்குகளினாலோ, உயிரைக் காத்துக்கொள்ளப் புறமுதுகிட்டுத் தப்பித்தோடும் படைகளினாலோ துர்ச்சம்பவங்கள் நிகழலாம். ஆனால், மிலேச்சர்கள் நடத்திய போர்களில், இந்தத் தர்மங்கள் குழிதோண்டி புதைக்கப்பட்டன. அந்த முரட்டுத்தனமான போர்கள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வருகின்றன. மான்யகேடத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ஒரு சோறு பதம்.” பிரதாபரின் குரலில் வருத்தம் தொனித்தது.
“விமரிசையாகத் திருமணம் நடந்தது. ஜலந்தரம், ஹஸ்தினாபுரம், கௌசாம்பி, கோசலம், மகதம், வங்கம், அங்கம், தஹலம், தாமிரலிப்தம் போன்ற முக்கியப் பிராந்தியங்களின் சிற்றரசர்கள் திருமண விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். பிரதிஹாரர்கள் மற்றும் பாலர்களே அடிபணிந்த துருவருடைய பாதங்களை வணங்கிச் செல்வத்தையும் திறையையும் மணப்பரிசுகளையும் வழங்கினார்கள். பரதக்கண்டம் முழுவதும் துருவராஜாவின் வலிமையைக் கண்டு அஞ்சியது.
யோஸௌ ப்ரஸாதி⁴த ஸமுன்னத ஸாரது³ர்க³மோ
க³ங்கௌ³ க⁴ஸந்ததி நிரோத⁴ விவ்ருத⁴கீர்தி
என்று ஒரு ஸ்லோகத்தில், பட்டர் அழகாகச் சிலாகிப்பார். கங்கௌ என்று இரண்டன்பால் விகுதியுள்ள சிலேடையைப் பார். துருவராஜா மட்டுந்தான் இந்த உலகத்தில் பரமேஸ்வரனைப் போல விளங்கினார். ஏனென்றால், அவரும் விருஷங்கர், சாம்பல் பிரியர். இவரும் விருஷபக் கொடியுடையர். சாம்பலாக்குபவர். அவரும் துர்க்கையை அலங்கரிப்பவர். இவரும் பகைவர்களுடைய துர்க்கத்தில் வீற்றிருப்பவர். அவரும் கங்கையைத் தடுத்தவர், இவரும் தன் படைகளால் கடந்து கங்கையைத் தடுத்தவர். ஆனால், இவர் இன்னும் பெரியவர் ஏனென்றால், இரண்டு கங்கவெற்றி உடையவர்.”
“ஓஹோஹோ! கங்கமண்டலம் ஒரு கங்கம். கங்கை நதி ஒரு கங்கம்!”
“தர்மபாலர் விரும்பியபடி, கன்யாகுப்ஜத்தில் சக்கராயுதன் அரசனாக அமர்த்தப்பட்டான்.
“தர்மபாலர் பாஞ்சலத்தைக் கௌட தேசத்தோடு இணைத்துக் கொள்ளவில்லையா?”
“சுவாரசியமான வினாவைத்தான் கேட்டிருக்கிறாய். எப்படித் துருவராஜா இரட்டபாடி எல்லையை விரிவாக்க விரும்பவில்லையோ, அதேபோலத்தான் தர்மபாலரும் இருந்தார். பிரதிஹாரனைத் தான் வெற்றி கொண்டேன் என்று அவர் பெருமையடித்துக் கொண்டதாக நான் கேள்விப் படவில்லை. கன்யாகுப்ஜத்தின் அரியணையிலும் அவர் அமரவில்லை. இந்திராயுதனையும் மற்ற அரசர்களையும் வென்றேன் என்றே சொல்லிக்கொண்டார். விவேகமுள்ள அரசர். பண்டிதரும் கூட. அவருடைய ராஜகவி இதை எப்படிக் குறிப்பாகக் காட்டியிருக்கிறார் பார். இதை அரசமண்டபத்தில் அவர் சமர்ப்பித்தபோது நானும் இருந்தேன். துருவராஜாவும் ரசித்த கவிதை இது.” என்று ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார்.
“ஜித்வேந்த்³ரரராஜ ப்ரப்⁴ருதீன் அராதீன் உபார்ஜ்ஜதா யேன மஹோத³யஶ்ரீ:| த³த்தா புன: ஸா ப³லின் ஆர்த²யித்ரே சக்ராயுத⁴: ஆனதி வாமனாய”
இரசித்துப் புன்முறுவலித்தான் விநயன்.
“மீண்டும் மஹாபலி, வாமனனுக்குக் கொடை கொடுத்தாற்போல, இந்தச் சக்ராயுதனுக்கு நிலம் வழங்கினாரோ? அற்புதம். இந்திராயுதராஜா மற்றும் அரசர்களை வென்று என்று பொதுப்படையாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.”
“ஆம். தன்னுடையா அரியணையைக் கௌடதேசத்தில் மட்டும் நிலை நிறுத்திக் கொண்டு கோலோச்சினார்.சின்னாட்களுக்குப் பிறகு, நாங்கள் மயூரகண்டிக்குத் திரும்பிச் செல்லும் சமயமும் வந்தது. விடைதருவதற்காகத் தர்மபாலர், ஸ்ரீநகரத்தில் ஓர் ஆடம்பரமான விருந்துக்கு ஏற்பாடு செய்தார். பிரமுகர்கள், கிராமஜனங்கள் என்று எல்லோரையும் அழைத்திருந்தார். நகரம் விழாக்கோலம் தரித்தது. பெருங்கூட்டம். ராமச்சந்திரமூர்த்தியின் பட்டாபிஷேகம் இப்படித்தான் நடந்திருக்கும் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். நதி இருக்கும் இடமே தெரியாமல் கங்கை நதிப்படுகையே வந்தவர்களின் தலைகளால் மூடப்பட்டுக் காணப்பட்டது. கௌட மற்றும் இராட்டிரக்கூடப் படைகளில் இருந்த வலிமைமிக்க யானைகளின் கூட்டத்தாலும், எண்ணற்ற குதிரைகளின் குளம்புகளாலும் எழுப்பப்பட்ட தூசியால், பகல் இருண்டது. எங்குப் பார்த்தாலும் தூசி. தண்ணீரை இறைத்து இறைத்து வீதிகளையும் இல்லங்களையும் நனைத்தனர். பல வடநாட்டு மன்னர்கள் தங்கள் எண்ணற்ற காலாட்படையுடன் நேரில் கலந்து கொண்டனர். விழாவில் தர்மபாலர் உத்தராபத ஸ்வாமி என்று பட்டம் சூட்டப்பட்டார். துருவராஜா, அவரை மஹாராஜாதிராஜா என்று அழைத்துப் பெருமை செய்தார். இராட்டிரக்கூடர்கள் தாங்கும் விருதுகளான பரமேஸ்வரர், பரமபட்டாரகர் என்றெல்லாம் அவருக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன. இப்படிப் பெரும் புகழோடும், புதிய உறவுகளோடும், செல்வங்களோடும் பல மாதங்களுக்குப் பின்னர் எல்லோரும் மயூரகண்டிக்குத் திரும்பி வந்தோம்.”
“எப்படிப்பட்ட பயணம்! சரித்திரத்தை மாற்றிய பயணம் அல்லவா? கேட்கக் கேட்க என்னுடைய மெய்சிலிர்க்கிறது. இதற்குப்பிறகு இராட்டிரக்கூடத்துக்குப் பரத கண்டத்திலேயே எதிரிகள் இல்லாமற்போயினர் அல்லவா?”
“ஆம். ஆனால், திரும்பிவரும்போது, துருவர் தளர்ந்துவிட்டார். வத்ஸராஜனைத் துரத்திக் கொண்டு சென்ற கொண்டிருக்கும்போது, செல்லும் வழியிலே ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. நொளம்பவாடிக்குத் தெற்கே ஒரு பிராந்தியத்தை ஆண்டுவந்த சாளுக்கிய வம்ச அரசர் பலவர்மரும் அவருடைய மருமகளின் தமையர் சாகிராஜரும் இல்லாவிட்டால், துருவராஜா வழியிலேயே இறந்திருப்பார்.”
“ஐயையோ!”
“காலம் எப்படித் தான் பிடியை இறுக்கியும் தளர்த்தியும் விளையாடுகிறது பார்! சாளுக்கிய வமிசத்தையே நிர்மூலம் செய்தவருடைய புதல்வரை, அந்தச் சாளுக்கிய வமிசத்தைச் சேர்ந்தவரே காப்பாற்ற முனைகிறார். பலவர்மர், வாதாபி சாளுக்கியர்களுக்குத் தூரத்து உறவு. கீர்த்திவர்மரை எதிர்க்கத் தந்திதுர்க்கர் முடிவு செய்ததும், அவருக்கு அணுக்கமாக நிற்போம் என்று ஒரு சிலர் ஒன்று சேர்ந்தார்கள் அல்லவா, அவர்களில் பலவர்மரும் ஒருவர். உத்தராபத உடறலில் உஞற்றோடு பங்கெடுத்துக் கொண்ட சேனைகளில், அவருடையதும் இருந்தது. அரிகேசரியையும் கோவிந்தரையும் முன்னால் அனுப்பிவிட்ட மஹாராஜா, தனக்குப் பக்கபலமாக இருத்திக்கொண்டது இந்தச் சேனையைத்தான். வழியில் பாறைகள் எண்ணற்று விரவிக் கிடந்த மிகவும் ஆழமாக ஓடிக்கொண்டிருந்த ஓரகன்ற காட்டாற்றைக் கடக்கவேண்டியிருந்தது. புதர்களும், மரங்களும், கற்களும் மண்டிக்கிடந்து, பாதையே இல்லாத வனாந்தரப் பிராந்தியம் அது. ஆற்றைக் கடக்க நேரிடும் என்று முன்பே தெரிந்திருந்ததால், முன்னேற்பாடுடன்தான் வந்திருந்தோம். ஆனாலும், ஆற்றில் நீரின் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது. காட்டாறு அல்லவா? மேலே பெய்யும் மழையின் அளவைப் பொறுத்துத் தானே நீர்வரத்து? வந்த வேகத்தில், வற்றவும் செய்யுமே? அதனால், அந்த ஆற்றின் கரையோரமாகவே பாசறை அமைத்துத் தங்கி, வெள்ளம் வடிவதற்காகக் காத்திருந்தோம்.
“ஆனால், சில நாட்கள் ஆகியும், ஆழம் பெரிதாகக் குறையவில்லை. அராளம் மற்றும் உத்தம வகை யானைகள் மட்டும் ஆற்றைக் கடந்து சென்றன. மத்தியமும் கனிஷ்டமும் திணறின. யானைகளே செல்லத் திணறினால், புரவிகளும், கால்நடைகளும் எங்கே செல்லப் போகின்றன! அதனால், அவற்றைக் கடக்க வைப்பதற்காக, மரத்தண்டுகளையும் மூங்கில்களையும் வைத்துக்கட்டி, அகன்ற புணைகளை வடிவமைத்தோம். பெரும்பாலான சேனையையும், பொருட்களையும் இப்படிப் புணைகளில் ஏற்றித்தான் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை. நன்கு நீந்தத் தெரிந்தவர்கள் மட்டும், ஆயுதங்களையும், கவசங்களையும், தோளுடைமைகளையும் புணைகளில் ஏற்றிவிட்டு, அரைத்துகிலோடு நீந்திக் கடந்தார்கள். நீர்மூழ்கி வீரர்கள், பாறைகளை அடையாளம் கண்டுகொண்டு, ஆங்காங்கே கழிகளை நட்டு ஆற்றுப்பாய்ச்சிகளை வழிநடத்தினார்கள். மஹாராஜாவும், பலவர்மரும் அடுத்தடுத்த புணைகளில் செல்ல, நாங்கள் பின்கரையில் எதிர்ப்புணைகள் வருவதற்காகக் காத்துக்கொண்டு இருந்தோம். பலவர்மரின் குமாரர் யசோவர்மர், அப்போதுதான் மணமானவர். எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார்.
“அவர்கள் கொஞ்சதூரம்தான் சென்றிருப்பார்கள். திடீரென்று ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க, பெரிய பாறைகள் நீரில் உருண்டு கொண்டு வந்தன. யானைகளை ஏற்றிக்கொண்டு போன இரண்டு மூன்று புணைகளின் மீது ஒரு பெரிய பாறை மோத, புணைகள் உடைந்து யானைகள் நீரில் விழுந்தன. அவை விழுந்த வேகத்தில், நீர் அலைச்சல் எடுக்க, அலைகளின் தாக்கத்தில், இன்னும் சில படகுகள் உடைந்தன. கரையோரத்தில் இருப்பவர்கள் கையற்று நோக்கிக் கொண்டிருக்க, எங்கும் ஒரே கூச்சல், குழப்பம். பாறைகளும் படகுகளும் ஒன்றுக்கொன்று வீழ்ந்து மோதிய வேகத்தில், வீரர்கள் மற்றும் விலங்குகளின் உடல்கள் சிதைந்தன. சுவாசத்தோடு நீர் கலந்ததால், நீந்த முடியாமல் முழுகியவர்களின் மூச்சுத்திணறிய தலைகள் அதிர்ச்சியோடு இறுதிமுறையாக நீர்மட்டத்துக்கு மேலே வெளிப்பட்டு, உதவிக்காக நீட்டிய கைகளுக்கு இடையே பயங்கரமாகத் தோற்றமளித்தன. கன்னல் கட்டிகளை உருக்கிச் சமைத்த அடிசிலில் இழை பிரிந்து தெரியும் கேசரப்பூ போல, செம்மண் கலந்த ஆற்று நீரில், காயங்களில் இருந்து பெருக்கெடுத்த குருதி, அங்காங்கு சிவப்பிழைகளாகப் படர்ந்து, ஆற்றின் மேற்பரப்பை இன்னும் சிவப்பாக மாற்றியது. யானைகளையே புரட்டிப்போடும் வெள்ளம். பாறையா, யானைகளா என்று தெரியாமல், கருப்புருண்டைகள் சூழ, நீர் சுழன்று ஓடியது. ஒரு சிலரை அரசரே நழுவாமல் பிடித்துப் படகில் ஏற்றினார். அப்படி ஏற்றிக் கொண்டிருக்கும்போது, அப்போது நீரில் மிதந்துவந்த ஒரு குஞ்சரம், அந்தப் படகில் மோத, மஹாராஜா நிலைகுலைந்து நீரில் விழுந்தார். பலவர்மரோடு அவருடைய மருமகளின் சகோதரர் சாகிராஜாவும் இருந்தார். அரசருடைய நிலைமையைப் பார்த்து இரண்டுபேரும் நீரில் குதித்து அரசரைக் காப்பாற்ற நீந்திப் போயினர். ஓர் ஹோரைக்குள்ளேயே புனல் வெள்ளம் நாங்கள் செய்திருந்த எல்லா ஏற்பாடுகளையும், திட்டங்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. வெள்ளம் மிக அதிகமாகிக் கரைகளைத் தொட்டு நுரைத்து ஓடியது. யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. பொழுது சாயச்சாய, சூரிய ஒளி மங்கி, மழைவேறு பிடித்துக்கொண்டது. பேய்மழை. அன்று இரவு முழுவதும், மஹாராஜா என்ன ஆனார், என்ற கவலையிலேயே இரவைக் கழித்தோம். ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சாகிராஜாவின் தங்கை, யசோவர்மரின் புதுமனைவி, எங்களுடன்தான் வந்திருந்தாள். சிறுபெண். சகோதரன் கண்முன்னேயே அடித்துச் செல்வதைப் பார்த்துச் சித்தம் கலங்கினாள்.
“இரவேற ஏற மழை நின்றுவிட்டது. வெள்ளமும் வடியத் தொடங்கியது. காலையில், பொழுது புலர்ந்தபோது, சுத்தமாக மழை இல்லை. வெள்ளம் வெகுவாகக் குறைந்திருந்தது. ஆனால், நாங்கள் கண்ட காட்சியின் கோரத்தைச் சொல்லி மாளாது. நிறைய உயிர்ச்சேதம். மேற்குப்புறம் முந்தைய நாள் பெய்த மழையின் விளைவு இது, இனி வெள்ளம் இராது என்று காலக்கணிதர்களும், குறிகாரர்களும் சொல்ல, குழுக்கள் குழுக்களாக எல்லோரும் ஒதுங்கிய கட்டைகள் மற்றும் பொருள்களைச் சேகரிப்பதிலும், இரு கரைகளிலும் கரை ஒதுங்கியவர்களைக் கண்டுபிடிப்பதிலும் நலிவுற்றவர்களுக்குச் சிகிச்சை செய்வதிலும் ஈடுபட்டோம். நாள் முழுதும் தேடியபிறகு, மதியத்துக்கு மேலே, எதிர்க்கரையில் அரசரையும், பலவர்மர் மற்றும் சாகிராஜரையும், ஒரு புதருக்குப் பின்னால் மயங்கிய நிலையில் கண்டுபிடித்தோம். சாகிராஜருடைய இளமையின் வலு, துருவராஜரைக ஆற்றிலிருந்து கரையின் மீது இழுத்துப்போட உதவியிருக்கிறது என்று பின்னால் தெரிந்து கொண்டோம். மூவரும் உயிர்பிழைத்திருந்தாலும், அரசருடைய சுவாச கோசத்தில் நிறைய நீர் புகுந்துவிட்டதால், அவருடைய நிலைமை மட்டும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அவரைக் கரை சேர்த்ததும், கூடக் கரையேறியவர்கள், அவருடைய மார்பில் இருந்து, அவரை இரேசிக்க வைத்து, உள்ளிருந்த நீரை வெளியேற்றியிருக்கிறார்கள். இருந்தாலும் மிகப்பலஹீனமாக இருந்தார். விஷயத்தை இரகசியமாக வைத்துக் கொண்டோம் அவருக்குச் சிகிச்சை நடந்தது, அந்தப்புரத்தில் இருந்த எங்கள் ஒரு சிலபேருக்குத்தான் உண்மை தெரியும். ஒற்றர்கள் வழியாக வத்ஸராஜனுக்கு விஷயம் கசிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் மஹாராஜா. கோவிந்தருக்கும் செய்தி அனுப்பவில்லை.”
“அடேயப்பா! ஆனால், கூட வந்த படைவீரர்களுக்குத் தெரிந்துதானே ஆகும்?”
“பலவர்மர் கிட்டத்தட்ட துருவரைப்போன்ற ஆகிருதியுடன்தான் இருப்பார். அவரை அரசவேடம் தரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, தனிப்படகில் ஏற்றிக்கொண்டு போனார்கள். முன்னால் சென்ற படையுடன் நாங்கள் சேரும்வரை, அவர்தான் அரசராக இருந்தார். இந்தச் சமயத்தில், பூரணகுணம் என்று சொல்லமுடியாது என்றாலும், மஹாராஜா போரிடும் அளவுக்குக் குணமடைந்துவிட்டார்.”
“இந்த உடலை வைத்துக்கொண்டா, வத்ஸராஜனுடன் பொருதார்?”
“ஆமாம். கிஞ்சித்தும் வெளியே தன்னுடைய நிலைமையைக் குறித்த செய்தி
கசிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். உள்ளாந்தரங்கம் உடைய, இரகசியமான தன்னுறுதி
கொண்ட மனிதர் அவர். சாகிராஜா சலகண்டத்தைப் பற்றி எழுதியிருப்பதைக் கேள்.
“யஸ்ய ஶ்ரீஶ்சபலோத³யா கு²ரதரங்கா³லீ ஸமாஸ்பா²லனாத்
நிர்பி⁴ன்ன த்³விபயானபாத்ர க³தயோ யேஸஞ்சலச்சேதஸ꞉
தஸ்மின்னேவ ஸமேத்ய ஸாரவிப⁴வம் ஸந்த்யஜ்யராஜ்யம்
ரணே ப⁴க்³னா மோஹவஶாத் ஸ்வயம் க²லு தி³ஶமந்தம் ப⁴ஜந்தேரய꞉”
“மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள்” என்று கேட்டுப் பிரதாபர் சொன்னதைக் கேட்டு இரசித்தான் விநயன். “குரா என்பது ஆற்றின் பெயரா?”
“ஆமாம்”
“நீங்கள் இந்த நிகழ்ச்சியை விவரித்திருக்கவில்லை என்றால், எதைச் சொல்லவருகிறார் இவர் என்று குழம்பிப் போயிருப்பேன். ‘ஒருமுறை, ஒரு போரில், நிருபம தாரவர்ஷருடைய அதிர்ஷ்டத் தேவதை, சஞ்சலத்துக்கு உட்பட்டிருந்த சமயத்தில், முரட்டுத்தனமான அலைகளால், யானைகளும், படகுகளும் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு அழிய, அவருடைய நெஞ்சம் கலங்கியது. அந்த நிலைமையிலும், கூட்டாகச் சேர்ந்து எதிர்த்த அவருடைய எதிரிகள், மாயையால் மதிமயங்கினவராய்த் தங்கள் இராச்சியங்களைக் கைவிட்டுவிட்டு, தம்மை எதிர்க்க அவருக்கு இடம் கொடுக்காமல், தாமாகவே தொலைதூரப் பகுதிகளுக்குத் திக்குத் தெரியாமல் ஓடி விட்டார்களா?’ என்ன இடக்குத்தனம், அவருக்கு!” சிரித்தான் விநயன். “பலவர்மரும், சாகிராஜரும் இல்லாவிட்டால், கதையே மாறியிருக்குமா?”
“இருக்கலாம். உயிரைத் திருணமாகக் கருதிச் சாகிராஜா செய்த செயலைப் பிரபூதவர்ஷர் என்றும் நினைவில் வைத்திருந்தார். அவருக்கு அரச சபையில் முக்கிய பதவிகளை அளித்துக் கௌரவித்தது மட்டுமன்றிப் பல சமயங்களில், தான் அளிக்கும் கொடைகளையும், கட்டளைகளையும் சேரவேண்டிய இடங்களில் பொறுப்பாகக் கொண்டு சேர்க்கும் தூதகராகவும், அரசருடைய பிரதிநிதியாகவும் நியமித்து வந்தார். அவருக்கு இன்னும் மிக முக்கியமான பொறுப்பை அளிக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்த மஹாராஜா, ஸ்தம்பராஜா இறந்ததும், சங்கரகணனை ஒதுக்கிவிட்டு, அவரைக் கங்கமண்டலத்தின் ஆதிராஜராகவே நியமித்து விட்டார். சங்கரகணனுக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம், வன்மமாகவும் மாறியது. அதமகேதுவும் அந்த வன்மத்தை ஒரு பழிதீர்க்கும் கருவியாகச் சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டார்.”
“சங்கரகணனை எப்படி அதமகேது பயன்படுத்திக்கொண்டார்?”
“சாகிராஜாவின் குடும்பத்தை அழிக்க மாந்திரீகமும், தாந்திரீகமும் செய்தார். இது எங்களுக்குப் பின்னர்தான் தெரியவந்தது. அந்தச் சடங்குகளுக்கு யஜமானனாக சங்கல்பம் செய்துகொண்டவன் சங்கரகணன்தான் என்று. அந்தச் சடங்கினால்தான் நடந்ததோ, என்னவோ, ஆனால், சாகிராஜருக்கு நிறைய கிரிச்சமும் கிடவாக்கிடையும் கிளைத்தது. அது, யசோவர்மனுடைய குடும்பத்தையும் பீடித்தது. குணுங்கில்லில் ஆட்சி செய்து கொண்டிருந்த யசோவர்மனின் புதல்வன், விமலாதித்தியன், கருநிறக் காகவாஹனரின் கடைக்கண் பார்வைக்கு ஆளாகி மிகுந்த சிரமத் தசையடைந்தான். நிவர்த்திக்கு அவன் தாய் அலையாத இடம் இல்லை. வணங்காத இறையில்லை, துதிக்காத குரு இல்லை. இறுதியில் அர்க்ககீர்த்தி முனியால், அவனுடைய துன்பம் விரட்டப்பட்டது.”
“அர்க்ககீர்த்தி முனிவரா? மான்யபுரிக்கு மேற்கே சிலாகிராமத்தில் ஒரு சமணக் கோவில் இருந்தது. நான் அரணியனாக அங்கே அடைக்கலம் புகுந்திருக்கிறேன். அதே பெயரில் அங்கே ஒரு பிரசித்தி பெற்ற முனிவர் இருந்தார். விஜயகீர்த்தி என்று அவருக்கு ஒரு பழுத்த குரு. அந்தக் கோவில் இருந்திராவிடில் நான் உயிர் பிழைத்திருப்பேனா என்பதே சந்தேகம்தான்.”
“அவரேதான். நந்திசங்கத்தினர். அங்கே எங்குப் போனாய்?”
“எல்லாம் மண்ணைக்கடக்கத்தில் இருந்து தப்பித்துப் போனபோதுதான். இடையில் ஒரு வணிகச் சாத்துடன் பயணம் செய்தேன். இடிகூரு விஷயத்தின் ஊடே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று கள்வர்கள் கூட்டம். வணிகர்களைச் சூழ்ந்துகொண்டு சிந்திக்காமல் எல்லோரையும் கொன்றார்கள். அப்போது கூடவந்த ஓர் அருகசரணர், அருகில் ஜலமங்கலக் கிராமத்தின் அருகே, சிலாக்கிராமத்தில் ஒரு சமணக் கோவில் இருப்பதாகக் கூறி அங்கே அழைத்துச் சென்றார்.”
“அவர்கள் யாபனீயர்கள் ஆயிற்றே? நீ பாட்டுக்கு உன் ஸ்ரீமந்த பசதி மற்றும் மல்லிநாத பசதியைப் பற்றியெல்லாம் சொன்னால் வம்பாக ஆயிருக்குமே?” குறும்பு செய்தார் பிரதாபர்.
“சரியாகக் கூறினீர்கள். அந்த அருக சரணர் முன்னாலேயே எச்சரிக்கை செய்துவிட்டார். இரண்டுக்கும் ஒத்துப் போகாது, வாயை அடக்கிக்கொள் என்றார். ஏன் என்ற கதையையும் சொன்னார்”
“கரஹாடாட்ச ராஜா பூபாலன் மற்றும் அவனுடைய ராணி நிருகுலதேவி கதையா?”
“ஆ! ஆமாம் ஐயா! வெள்ளாடை தரித்த சமணர்கள், தமது பக்தை ராணிக்காக, திகம்பர மார்க்கத்தை வழிபடும் ராஜாவின் முன்னால், வஸ்திரத்தை விடுத்துக் கமண்டலமும், மயிலிறகை மட்டும் எடுத்துக்கொண்டு அரசனுக்குத் தரிசனம் தந்தார்களாம். அவர்களுடைய மார்க்கத்தினர்தாம் இந்த யாபனீயர்கள், பார்க்கத் திகம்பர ரூபம், ஆசரணத்தில் வெண்வத்திரச் சமணர்கள் என்றார்.”
“சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அந்த வழியில் வந்த புன்னாக விருட்ச மூலகணத்தைச் சேர்ந்தவர்தான் இந்த அர்க்ககீர்த்தி முனிவர். அவரால், அதமகேதுவின் உல்லங்கனம், முடிவுக்கு வந்தது.”
“எப்போது மஹாராஜா பூரண குணமடைந்தார்?”
“பூரண குணம் அடையவே இல்லை. நடந்த சலகண்டமும், போரும், பயணமும் அவருடைய சரீரத்தை மிகவும் தளர்ந்து போகச் செய்துவிட்டது. திரும்பிவந்தவுடன், கோவிந்தராஜாவுக்கு, யுவராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். மெள்ளமெள்ள, மொத்த நிர்வாகத்தையும் கோவிந்தராஜாவிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் விலகிக்கொள்ளத் துவங்கினார். அடுத்த சில ஆண்டுகள், நிர்வாகத்தை ஸ்திரப்படுத்துவதிலும், திரட்டிய செல்வத்தைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்வதிலும், தானங்கள் அளிப்பதிலும், கல்வியைப் பெருக்குவதிலும், சமயத் தலங்கள் நிர்மாணிப்பதிலும், குடிகளுக்குச் சௌகரியங்கள் செய்து கொடுப்பதிலும் கவனத்தைச் செலுத்தினார். ஏற்கனேவே மூப்படைந்த வயதில்தான், அரசுரிமை ஏற்றவர். வடக்குக்கும் தெற்குக்குமாகப் பயணங்கள், வாழ்வா சாவா என்ற நிலைமையில் நடத்திய போர்கள், அதற்கான ஆயத்தங்கள், சலகண்டம் எல்லாம் சேர்ந்து அவரை விரைவிலே தளரச் செய்துவிட்டன.
“நான்கைந்து வருடங்களில் உயிர் துறந்தார். ஒரு சகாப்தம் தோன்றி, உயர் நிலையை எட்டிப் பத்துப் பதினைந்து வருடங்களில் முடிந்தும் விட்டது.
“துருவராஜாவின் மீது அவருக்கு அபார பக்தி செலுத்திய சாகிராஜா, மஹாராஜா
மறைந்ததும் எழுதிய ஸ்லோகம் இது.
இத³ம் கியத்³ பூ⁴தலம் அத்ர ஸம்யக் ஸ்தா²தும்
மஹத் ஸங்கடம் இதி உத³க்³ரம்
ஸ்வஸ்ய அவகாஶம் நகரோதி யஸ்ய யஶோ
தி³ஶாம் பி⁴த்தி விபே⁴த³னானி”
என்று சொன்னவர், பொருளையும் சொல்லிவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டார். “’இந்த உலகம், எத்தனை சிறியது! இங்கே வசதியாக இளைப்பாறுவதற்கு முடிகிறதா? மிகவும் அருங்கிடையாக அன்றோ உள்ளது?’ இப்படி துருவராஜா ஆதங்கப்பட, அவருடைய விசாலமான புகழ், அவர் இருந்த அறையின் சுற்றுச் சுவர்களை உடைத்துவிட்டு வெளியேறிப் பரவிவிட்டதாம்.”
“அடடா!” நெகிழ்ந்தான் விநயன்.
“எத்தனை விசாலமான பிரகிருதி அவர்! அடுத்தடுத்துத் தோன்றிய இரட்ட மழைகளில், இவர் உவமையற்றவர்தான் என்பதில் சந்தேகம் இல்லை. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், தந்திதுர்க்கர் என்ற பருவக்காற்று, மூன்று மழைமேகங்களை அடுத்தடுத்துத் தக்கணத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
“ஒன்று திடீர் மழை – அகால வர்ஷம். அதற்கு அடுத்ததாகப் பெய்த மழைதான் இந்த உவமை இல்லாத பெரும்பெருக்கு. நிருபமதார வர்ஷம். அகால வர்ஷத்தை மிஞ்சும் அளவுக்குத் துருவ நட்சத்திரம் போல, திக்கைக் காட்டித், தக்கணத்தின் மீது ஒரு செழிப்பையும் வலிமையையும் சேர்த்து போர்வை போலக் கவிந்து தாரையாகப் பொழிந்த வர்ஷம்.
“அதற்குப்பிறகு மூன்றாவதாக வந்தது பிரபூத வர்ஷம். இது, அந்தத் துருவ வர்ஷம் காட்டிய வழியிலேயே சென்று, முன்பெய்த இரண்டு மழைகளை விட, இன்னும் அபாரமாகப் பொழிந்து, தக்கணத்தை இன்னும் உயர்த்திப் பிடித்தது. பிரம்மாண்டப் பிரபூத வர்ஷம்.
“இப்படி அடுத்தடுத்து உன்னதமே ஏற்பட்டு விட்டதால், காலச் சக்கரம் பேதப்படுவது இயற்கைதானே? ஒரே கோட்டில், ஒரே கதியில் எதுதான் செல்கிறது? ஒரு திருஷ்டிப் பரிகாரம் ஏற்படுவதுதானே உலக நியதி? பாவம், அதில் சிக்கிக்கொண்டுவிட்டது அமோக வர்ஷம்”
“அமோகம் சிக்கினாலும், சுவர்ணமழையால் காப்பாற்றப்பட்டு, சீக்கிரமே சுதாரித்துக் கொண்டுவருகிறது.”
“ஆமாம், ஐயா! ஒவ்வொரு மழை வரும்போதும், அதைத் தடுக்க ஒவ்வொரு இமாலயச் சிக்கல் நெடிதுயர்ந்து நின்றிருக்கிறது. ஆனால், எப்படியோ அதைத் தாண்டிவிட்டிருக்கிறார்கள். இத்துணைக் குறைந்த காலத்தில், இத்தனை பெரிய சாதனைகள்.”
“ஆமாம். கலியின் உபத்திரவத்துக்குக் குறைவேது? கோவிந்தருடைய இருபது வருட ஆட்சியிலும் நாடகத்துக்குக் குறைவில்லை. அடிக்கடி அவற்றைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். அவருடைய ஆட்சி முடிவில்தான் எத்தனை கோரம்! தடுக்க ஆளில்லாமல் சில காலத்துக்குத் தாண்டவமாடிய அராஜகத்தின் விளைவுகளை அனுபவித்தவனாயிற்றே நீ? இதில் காலத்தின் கொடுமை என்னவென்றால், தேசம் என்ற உருவகம் ஒன்றை மதிக்காமல் செயல்பட்ட தமையனாரை அகற்றித் தர்மத்தை நிலைநாட்டியதால், வெறுப்பை விதைக்கும் கலிதேவதைக்கும் அன்புள்ள கணவனாக ஆனார் என்ற பொருள்படக் கலிவல்லபர் என்று அழைக்கப்பட்ட துருவராஜாவின் பெயரன் காலத்திலேயே, கலியின் வெறுப்புப் பார்வை இராட்டிரக்கூடத்தின் மீது விழத்தொடங்கியது. பெருமொளி வீசி, மேரு போலப் பிரகாசித்த தேசம், சட்டென்று கலியின் வன்மம் சொட்டும் கரங்களால் தழுவப்பட்டு, இருள் குழியில் வீழ்த்தப் பட்டது.”
இருவரும் சற்று மௌனமாக அமர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த சோலையில் மெல்ல வெய்யிலின் சூடு குறைந்து கொண்டிருந்தது. அத்தமனத்துக்கு இன்னும் இரண்டு ஹோரை இருக்கலாம். சிலுசிலுவென்று காற்று. தூரத்தில் இரண்டு மலைப்பூவைப்புட்கள் கூவிக்கொண்டிருந்தன.
“சில விஷயங்கள் சிறப்பாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிலேயே மனத்தைத் தொலைத்துவிடும் நமக்கு, அவற்றோடு ஓர் ஆப்தமும் தொடர்பும் ஏற்பட்டது விடுகிறது, விநயா! இந்த இணைப்பு, நாம் வாழ்வின் ஓரங்கமாக ஆகி, எப்போதும் நம்மோடு கூடவேதான் இருக்கப் போகிறது என்ற எண்ணத்தையும் அது விதைத்து விடுகிறது. எதுவும் நிரந்தரம் இல்லை என்று நமக்குத் தெரிந்தாலும், இதைப் போன்ற சில தொடர்புகள் எப்போதும் சாஸ்வதமாக இருக்கும் என்று நம்பிவிடுகிறோம். திடீரென்று ஒருநாள் அந்தத் தொடர்பு அறுந்தும் போய்விடுகிறது. துருவராஜாவின் மரணம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தைத்தான் ஏற்படுத்தியது.
“சிறுவனாக இருக்கும்போதே, பிறந்த மண்ணை விட்டுப் பகைமண்ணுக்குக் குடிபெயர்ந்தவன், அடுத்த பஃத்துப் பஃத்திரண்டு ஆண்டுகள் இளைஞனாக மாறியது அங்கேதான். என்னுடைய கல்வி, எனக்கென்று ஒரு அடையாளம், பணி எல்லாவற்றையும் இரட்டபாடிதான் எனக்கு நல்கியது. இரட்டமே என்னுடைய சொந்த தேசம், துருவராஜாதான் என்னுடைய அரசர், அவருடைய அரண்மனைதான் எனக்கும் இல்லம் என்று அந்தச் சமுதாயத்தோடேயே ஒன்றி விட்டேன். என் தந்தையோடும் தாயோடும் செல்லும்போது, பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன். எத்தனை பெரிய அரசர், எத்தனை முறை எனக்குச் சமமாக நின்றுகொண்டு என்னோடு பேசியிருக்கிறார் தெரியுமா? தன்னுடைய இளம்மனைவிக்குத் துணையாகத் தம் நாட்டை விட்டு வந்தவர்களுடைய சிறுவன், அவனுடைய வளர்ச்சிக்குப் பங்கம் வரக்கூடாது என்று அரசகுமாரர்களுக்கு ஈடாக என்னை வளர்த்தார். துருவராஜா என்று பெயரை உச்சரித்தாலே என்னுடைய தந்தை இருப்பிடத்தில் இருந்து எழுந்து நின்றுவிடுவார்.
“இடையில், என்னுடைய பாட்டனார் வேங்கியில் தேகாந்தம் அடைந்தபோது, துருவமஹாராஜா, சீலாதேவி மற்றும் பரிவாரங்கள் புடைசூழ வசந்தகால வினோதக் கிரீடைக்குச் சென்றிருந்தார். நாங்களும் பரிவாரங்கள்தானே? கூடவே சென்றிருந்தோம். நாங்கள் மயூரகண்டிக்குத் திரும்பி வந்ததும்தான் எங்களுக்குச் செய்தியைத் தெரிவித்தார்கள். அரசரே, தந்தையை அழைத்துச் செய்தியைச் சொன்னார். கிரியைகளுக்கும் ஏற்பாடு செய்தார். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எதிர்பார்த்திருந்ததால் தந்தைக்குப் பெரிய சோகம் இல்லை. அப்படிப்பட்டவர், துருவராஜா தேகாந்தம் அடைந்த அன்று தேம்பித் தேம்பி அழுதார். அவருக்கு மீண்டும் வாழ்வில் பிடிப்பு ஏற்படப் பலநாட்கள் ஆயின.”
“நீங்கள் வேங்கிக்கு வரவேயில்லையா, பிறகு?”
“பீமராஜாவுக்கும், விஜயாதித்தியருக்கும் பிணக்கு ஏற்படும்போது, மத்தியஸ்தத்துக்காகத் தந்தை அழைத்தபோது சீலமஹாதேவி வேங்கிக்கு வந்தாரல்லவா, அப்போது தந்தையார் மட்டும் கூடவே துணையாக வந்தார். அதற்குப்பிறகு இல்லை. மான்யகேடத்துக்கும் அவர் வரவில்லை. மயூரகண்டியிலேயே அவர் வாழ்நாள் முடிந்துவிட்டது.”
பிரதாபர் மௌனமாகிப் போனார். பழைய நினைவுகளில் அவர் மூழ்கிவிட்டதைப்
புரிந்துகொண்ட விநயன் அவருடைய நினைவோட்டத்தைக் கலைத்துவிடக் கூடாது என்று அமைதி
காத்தான்.
No comments:
Post a Comment