சகவருடத்திலிருந்து துவங்கினால், ஒரு எழுநூறு வருடங்களுக்குமேல் சென்றிருக்கும். தகனத்திலிருந்து பார்த்தால், தகனத்துக்கு ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் செல்லவேண்டும்.
நண்ணற்கு அரிய அரண் கொண்டு, பகைவர்களோடு முரளும் மண்ணைக் கடக்கம் என்று சோழ அரசர்கள் குறிப்பிடும் நகரத்தில் ஒரு கணிகையின் வீடு.
வாசனைத் திரவியங்களின் மெல்லிய நறுமணம் அவனை எழுப்பியது. பிரகாசமான சூரியக் கதிர்கள், மூடிய சாளரத் திரைச்சீலைகள் வழியாகத் தப்பித்து வெளியேறி, அறையை ஒளிரச் செய்து கொண்டிருந்தன. எங்கிருந்து வாசனை வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கச் சுற்றுமமுற்றும் பார்த்தவனுடைய கண்கள், அப்போதுதான் குளித்துவிட்டுத் துடைத்துக்கொண்டு வந்திருந்தவளைப் பார்த்தன. ஒன்றிரண்டு நீர்த்திவலைகள் கேசத்திலும், வயிறு மடிப்பிலும் ஒளிந்து கொண்டிருந்தன. வலக்கையில் மதுரைப் பருத்தித் துணிப்பந்து ஒன்றால், தன்னுடைய இடப்புறக் கக்கத்தை அவள் துடைத்தபோது, அசைந்த மார்பகத்தை, அவன் மயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்திருந்தும் முகத்தில் வெட்கமே காட்டாமல், அவனைப் பார்த்து, “இன்று அரண்மனைக்குப் போக வேண்டாமா? நேரமாகி விட்டதே” என்றாள்.
ஸ்புரிதவர்ஷன் உடனே பதில் சொல்லவில்லை. அவள் மீண்டும், "முதல் ஜாமம் முடியப் போகிறது" என்றாள். அவள் சொல்லி முடிப்பதற்குள், வெளியே மணிக்கூண்டில் இருந்து ஒருமணி அடித்தது. ஓர் எக்காளமும் உடனே ஒலித்தது. அதன் அதிர்வு ஓய்வதற்குள், அவளுடைய பணிப்பெண் ஒருத்தி விடுவிடென்று உள்ளே நுழைந்தாள். அவள் கையில் வெற்றுப் பாத்திரம் ஒன்றும், நீருள்ள குவளையும் இருந்தது. உள்ளே நுழைந்தவள், அங்கே அலங்காரமாக நின்றுகொண்டிருந்த ஒரு பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த நீர்க் காலமானியின் மேலடுக்கில், தான் கொண்டுவந்த குவளையிலிருந்து நீரை ஊற்றினாள். மேற்கோடுவரை சரியாக இருக்கிறதா என்று பார்த்தவள், அந்தக் காலமானியின் கீழே, நீர் நிரம்பி இருந்த பாத்திரத்தை எடுத்துவிட்டு, வெற்றுப் பாத்திரத்தை வைத்தாள். சொட்டு சொட்டாக நீர், அடுத்தஜாமத்தின் முதல் ஹோரையைக் கணக்கிடத் தோதுவாக அடிப்பாத்திரத்தில் நிரம்பத் தொடங்கியது. கருமமே கண்ணாகப் பணியை முடித்துவிட்டுத் திரும்பினவளே ஆனாலும், அவள் கண்கள் படுக்கையில் கிடந்தவனின் நக்னத்தைக் குறிப்பெடுக்க மறக்கவில்லை.
“என்னை ஏன் அவசரப்படுத்துகிறாய்? வேறு எவனாவது வரப் போகிறானா?"
துடைத்துக் கொண்டிருந்தவள், கல்லால் அடிக்கப்பட்ட நாகத்தைப் போலத் தலையைச் சட்டென்று தூக்கி அவனைப் பார்த்தாள். விழியோரம் எட்டிப்பார்த்த நீர்த்துளி, குளியலால் வந்த துளியன்று என்று தெரிந்துகொண்டான். ‘சே, எல்லா ஆண்களும் ஏன் இப்படிப் பிறவி எடுத்திருக்கிறார்கள்!’ என்று தன்னை இகழ்கின்றனவோ அவள் விழிகள்? இவனுக்காகவா இந்த ஸ்ருங்காரத்தைக் காட்டினோம் என்ற சுயவிரக்கம் தோன்ற, விருட்டென்று அறையை விட்டு அகன்றாள். அழுவாள் என்று தோன்றியது. தான் கேட்ட கேள்வியில் என்ன தவறு?
இதே கேள்வியை இவளுடைய தமக்கையிடமும் பல வருடங்களுக்கு முன்னால் கேட்டது நினைவுக்கு வந்தது. அட! என்ன ஆச்சரியம்! அன்றும் இன்று போலவே சிவமாறன் சிறையிலிருந்து நிவிர்த்தி ஆகப் போகும் தினம். ஒரு வியத்தியாசம், அவனோடு தானும் நிவிர்த்தி பெற்ற நாள்!
கோவிந்தராஜா முடிசூட்டிக் கொண்ட சமயம். சுக்கில பட்சம் தொடங்கியதிலிருந்தே மயூரகண்டி திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. அதில் ஒரு நாட்டிய உத்சவத்தில்தான் இவளுடைய தமக்கையைச் சந்தித்தான். பார்த்தமாத்திரத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, படுக்கைவரை சென்று, பட்சம் முழுதும் இரவுகள் அவளோடுதான் கழிந்தன. இந்த இடத்தை விடச் சற்று சிறிய இல்லம். ஆடம்பரமும் குறைவு. அந்தப் பௌர்ணமியன்று, தனக்கு விடிவு தர, ராஜா அரச சபைக்குத் தன்னை அழைத்திருந்தார். இதே போலப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தபோது, அவள் அவசரப்படுத்த, இதே கேள்வியைத்தான் கேட்டான். இவள் தமக்கை நிபுணி. ஆண்களின் மனப்பாங்கின் நுணுக்கமெல்லாம் அறிந்தவள். “யாரும் வருவதாக இல்லை. அப்படி வருவதாக இருந்தாலும், அதைச் சொல்லிக்கொண்டிருப்பேனா, ஸாமந்தரே?” அவள் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரித்தது நினைவுக்கு வந்தது. அவள் கேட்கும்போதும் ஸாமந்தராகத் தான் இல்லைதான். ஆனால், அவள் வாய்வார்த்தை அன்று அரச சபையில் பலித்தது. அன்றுதான் அவனை ஸாமந்தராகக் கோவிந்தன் நியமித்தான். அவள் இல்லை, இன்று. இவளைக் கோடிகாட்டி விட்டுப் போய்விட்டாள். இந்தப் பெண்ணோ ஏனோ இப்படி கிடைக்கிலாதது என்னிடமிருந்து கிட்டுமென்று கனவு கண்டுகொண்டிருக்கிறாள்.
என்ன நடக்கக் கூடும், எது சாத்தியம் என்று கணிப்பதில், பலருக்குச் சிக்கல்தான் போலிருக்கிறது. இதுதான் விழுமியது என்று ஏதோ ஒரு கனவுநிலையை மனத்தில் உருவகித்துவிட்டு அதை மெய்ப்படுத்துவதற்காக முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். இதோ, இந்தச் சிவமாறன், அன்றே கிடைத்த ஸ்வதந்திரத்தை நிதரிசனமாக அணுகியிருந்தால், இப்படி இருபது வருடங்கள் சிறையில் கிடந்து அவதிப்பட்டிருப்பானா? நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் தன்னுடைய வீரத்தையும், தன்னுடைய படைபலத்தையும் உயர்த்திக் கணித்துவிட்டுத் தன் சுயப்பெற்றியே பெரிது என்று மிண்டான். பலன்? இன்று ஒடிந்து போயிருக்கிறான். முந்தையதினம் விஜயாதித்தியனும், தானும் சிறைக்குப் போய்ச் சிவமாறனுக்கு எடுத்துச் சொல்லியதெல்லாம் நினைவுக்கு வந்தது. தம்பி விஜயாதித்தியன் விவேகி. இப்படியொரு தம்பியாகத்தான் துருவராஜா இருப்பார் என்று தந்தை எதிர்பார்த்திருந்து ஏமாறினாரோ?
“அண்ணா, உம் காலில் விழுந்து கேட்கிறேன். இந்த நிவர்த்தியை ஒப்புக்கொள்ளும். எவ்வளவு நாள் இன்னும் சிறையில் இருந்து வாடுவீர்? தந்தையும், சாளுக்கிய அரசர்களுக்குக் கட்டுப்பட்டுத்தானே இருந்தார்? விஜயாதித்திய மஹாராஜா போன்ற அரசருக்குக் கீழ்ப்பணிந்தவர், கீர்த்திவர்மனையும் பணியவில்லையா? கிருஷ்ணராஜாவிடம் தோற்றபிறகு, இராட்டிரக்கூடத்துக்கும் கொற்றவள்ளை கொடுக்கவில்லையா? நந்திவர்ம பல்லவனுக்கும் சிரம் தாழ்த்தினாரே, இவையெல்லாம் காலத்தின் விளையாட்டல்லவா? எந்த அரசன், சரித்திரத்தின் சக்கரத்தில் எப்போதும் உச்சத்திலேயே இருந்திருக்கிறான்? இந்த உச்சத்தில் இருக்கும் பெருமைக்காக மரிப்பது ஒரு வழியா? பல சாத்திரங்களும் அறிந்த பண்டிதர் நீர். பணிசுதமத சித்தாந்தத்தை அப்பியசித்தவர். சற்று யோசித்துப் பாரும். வாழ்க்கையையே சிறையில் கழிப்பது கொடுமை அல்லவா?
“நான் ஒன்று சொல்கிறேன், சினப்படாமல் கேளும். கோவிந்தராஜா பழைய விஷயங்களை மறந்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறார். ஸ்தம்பன் போனதிலிருந்தே, அவருக்கு உங்கள் நினைவுதான் தோன்றிக் கொண்டிருக்கிறது. சங்கரகணனை அவர் கிஞ்சித்தும் பொருட்படுத்துவதில்லை.”
“சங்கரகணன் இல்லாவிட்டால் என்ன, ஒரு சாகிராஜா இருக்கிறானே? கங்கமண்டலத்தின் ஆதிராஜா அவனாக இருக்கும்போது, நமக்கென்ன மதிப்பு இருக்கப்போகிறது?”
“இல்லை. நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். இந்தப் பத்துப் பதினைந்து வருடங்களில், கங்கம் மரியாதையோடுதான் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆதிராஜா இல்லாமல், மொத்த மண்டலத்தையும் நமக்குக் கொடுத்துவிட முடியுமா? அப்படி யார்தான் செய்வார்கள்? சாகிராஜா என்னை இகழ்ச்சியோடு ஒரு சொல் இயம்பியதில்லை. நம் வழிபாட்டிலோ, நம் தினசரி வாழ்விலோ குறுக்கிடுவதில்லை. குடிகளுக்கு வேண்டியதை நம்மால் நினைத்தபடிச் செய்ய முடிகிறது. மாமடி ஸிம்ஹபோத்தரும் இறுதிக்காலத்தில், கோவிந்தரின் புகழ் பாடிக்கொண்டுதான் மறைந்தார். சாருபொன்னேரன் அடங்கித்தான் கிடக்கிறான். மாரசிம்ஹனும் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறான். அவனாலும் நினைத்த கொடைகள் தரமுடிகிறது, தேவையான குடியிறை விதிக்க முடிகிறது. பசதிகள் நிர்மாணிக்க முடிகிறது. அவனும் வருகிறேன் என்றுதான் சொன்னான், நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன். எதிரிக்கு விலை போய்விட்டேன் என்று நினைக்கவேண்டா. நிலைமையை எண்ணிப் பாரும். தயைசெய்து, சிறைவீட்டுக்குச் செவிசாயும்” – விஜயாதித்தியன் தமையன் சிவமாறனிடம் நேற்று மன்றாடியது நினைவிலேயே இருந்தது.
அந்தச் சாளரமே இல்லாத இருட்டறையில், துர்நாற்றம் வீசும் இடத்தில், வைக்கோல் படுக்கைக்கு அருகே கழுத்திலும், கையிலும், காலிலும் தளையோடு பிணைப்புண்டு, இளைத்துப் பலவீனமாக நின்றிருந்த தமையனைப் பார்த்து இறைஞ்சிய விஜயாதித்தியன் குரல் உடைந்திருந்தது. எங்கிருந்தோ கசிந்த நீரால் பைது படர்ந்த கற்றரையில், பெருக்கிப் பலநாள் ஆனதால் படிந்த தூசு கலந்து செதும்பு பூசியிருக்க, அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், மேனியில் அச்செய்யல்படக் கீழே விழுந்து தமையனை நமஸ்கரித்துவிட்டு எழுந்து, கைகூப்பி அவன் நின்ற கோலம் .. உடம்பு சிலிர்த்தது ஸ்புரிதவர்ஷனுக்கு. இப்படி ஒரு இளையவனா? தம்பி என்றால் இப்படியும் இருப்பார்களா?
தான் ஸாமந்தனான அன்று, தானும் இப்படித்தான், கோவிந்தராஜன் முன்னால் கைகூப்பி நின்றது நினைவுக்கு வந்தது. சிற்றப்பா அரசரான பிறகு, முற்றிலும் என்னை ஒதுக்கி அல்லவா வைத்திருந்தார்? ஐந்து வயது பாலகன் எனக்கு என்ன பெரிய ராஜாங்கம் தெரிந்திருக்கும்? எல்லாமே கிடுகிடுவென்றல்லவோ நிகழ்ந்துவிட்டது. அந்தப்புரத்தில் பதுக்கி வைத்தார்கள். அந்தப் பகல் முழுதும் வெளியே ஒரே இரைச்சல், ஆவேசக் கூச்சல், திமுதிமுவென்று ஆட்கள் ஓடுவதும், பதுங்குவதுமான காலடி ஓசைகள், களாங், களாங் என்று ஆயுதங்கள் மோதும் சத்தம், குதிரைகள் நிகீ நிகீயெனும் கனைப்புக்கள் .. மாலை சில படைவீரர்கள் வந்து, பதுங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்கள். சேடிகளும், தந்தைக்கு அணுக்கமான பெண்களும் சுற்றி வளைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள். ‘தாயில்லாத பிள்ளை’ என்று சுட்டிக்காட்டிச் சிலர் பேசியது இன்னும் நினைவுக்கு இருக்கிறது. தந்தையைச் சிற்றப்பாவும், கோவிந்தனும் சேர்ந்து கொன்றுவிட்டார்கள் என்றார்கள். அதற்குப்பிறகு, அடுத்த ஒரு வாரத்தில், அதமகேது ஆசிரமத்துக்குக் கூட்டிச் சென்று விட்டார். குழப்பத்திலேயே இளங்கால் துறக்க வேண்டியதாயிற்று. சிற்றப்பா இருந்தவரை, அவரைப் பார்க்கவே அனுமதி கிடைத்ததில்லை. தந்தையோடு சேர்ந்து தான் செய்த ஊறுக்கு, உய்தி அடையும் முயற்சியோ என்னவோ, கோவிந்தன், அரசுரிமை பெற்றதும் நிலைமையை மாற்ற முனைந்தான். அவன் செய்த முதல் காரியம் என்னைப் போன்றவர்களை மீண்டும் ராஜாங்கத்தில் அங்கமாக்கியதுதான். இலாட்டலூரத்தின் விஷயாதிபதியாக அவன் என்னை ஆக்கியிருக்காவிட்டால், நிலைமை என்னவாயிருக்கும்? ஏதாவது சொல்லிச் சிறைப்படுத்தியிருப்பார்களோ? தந்தையின் பேரில் ஏற்பட்ட வெறுப்பின் அனலில், என் வாழ்வே கருகி இருந்திருக்குமோ?
விஷயாதிபதியாக ஆனதும் கூட, அதமகேது பின்புலத்தில் விடாது செய்த அருமுயற்சியால்தானே. அன்றைக்கும் சிவமாறன் அரச சபையில் நிறுத்தப்பட்டிருந்தான். தந்தையை அரச சிம்மாசனத்தில் பார்த்தே வளர்ந்த கண்ணுக்கு, இன்னொருவர்தான் ராஜா என்ற உண்மை புரியவே நாளாயிற்று. அதைவிடக் கொடுமை, வளர்ந்தபிறகு, தான் அமர வேண்டிய ஆசனத்தில், கோவிந்தனைப் பார்ப்பதும், அவனுடைய ஆதரவுக்காகச் சேவகன் போலக் கைகூப்பி நிற்பதும். சாதாரண வலியா இது?. அன்று அனுபவித்த வலி, நாளுக்கு நாள், உயிரைத் தின்கிறதே! இதோ இப்போதும் வலிக்கிறது. வலியின் வேகத்தில் முகம் சுளித்தான். மூச்சு வாங்கியது. இந்த வலியை, வலிமையாக மாற்ற எவ்வளவு பயிற்சி கொடுத்தார் அதமகேது! அவரைத்தான் எத்தனை முறை கோபித்துக் கொண்டிருக்கிறேன்! விளங்காத வயது. ஆனால், அவர் விடவில்லை. அவரைப் போன்றவர் கிடைத்தது, பாக்கியம். அந்தச் சார்பு இல்லாததால்தான், சிவமாறனுக்கு அந்த வலியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், உள்ளும் புறமும் சிதறிப்போய், வாழ்வையையே தொலைத்துவிட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடைக்கிறான்.
ஒரே நாளில் ஒன்றாகச் சிறையிலிருந்து விடுபட்டவன், நிஜத்தைப் புரிந்துகொள்ளாமல் அடம் செய்து தனித்துவத்தை நிறுவிக்கொள்ள முயன்றதன் பயன், இதோ, இன்னோர் இருபதாண்டு சிறை. இவன் புதல்வன் மாரசிம்ஹனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? அவன் எப்படி சுதாரித்துக் கொண்டுவிட்டான்! ஆனால், அவன் தம்பி பிருதிவிபதி, கையாலாகாத கோபத்தை வைத்துக் கொண்டு தவிக்கிறான். இந்த விவேகம் வழியும் விஜயாதித்தியன், அவனுடைய மகன் ராஜமல்லனுக்கு அதே விவேகம் வாய்த்திருக்கிறதா என்ன?
தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை இதெல்லாம் வீண் சொற்கள் போல இருக்கிறது. இன்று மீண்டும் அதே கதை, மறுபடியும் சிவமாறனுக்கு விடுதலை தரப் போகிறான் கோவிந்தராஜன். சிவமாறன் என்ன செய்வான்? மீண்டும் திமிறுவானா? தன்னம்பிக்கை தன்னம்பிக்கை என்கிறார்கள். அது அதிகமாகி விட்டால், நிஜத்தைத் திரையிட்டு மறைத்துவிடுகிறதே. அடங்கத் தெரியாதவன் ஆதிக்கம் செய்யக் கற்றுக் கொள்வதில்லை.
“நீராட்டத்துக்கு எல்லாம் சித்தம் ஐயா!”
பணிப்பெண்ணின் குரல் அவன் சிந்தையோட்டத்தை நிறுத்தியது. அவன் எழுந்தான். நேற்றருந்திய மதுவின் வீரியம் இன்னும் போகவில்லையோ. கால் தள்ளாடியது. அதை எதிர்பார்த்தவள் போல, அந்தப் பணிப்பெண் உடனே ஓடிவந்து, அவனைத் தாங்கிக் கொண்டாள். மென்மையான அவளுடைய கரம் அவன் இடுப்பைப் பற்ற, அவளுடைய வெறிதான தோளில் கையை வைத்துச் சுதாரித்துக்கொண்டான்.
‘வல்லீ!’ அவள் கூவினாள். இன்னொரு பணிப்பெண்ணும் ஓடிவந்து, இடப்புறம் தாங்கிக் கொண்டாள். இருவரின் தோள்களிலும் கையை வைத்துக்கொண்டே அடிஎடுத்தவனின் அரையாடை நழுவி கால்களில் விழ, அதை மிதித்துக் கொண்டே வெற்றுடம்புடன் நடக்கத் தொடங்கினான்.
“பாக்ஷகா என்ன செய்கிறாள்?”
பணிப்பெண்களிடம் பதிலில்லை.
“அழுது கொண்டிருக்கிறாளா?”
ஒருத்தி மட்டும், அவன் கண்ணைப் பார்த்து, ஆமாம் என்பதுபோலத் தலையசைத்தாள். கண்கொட்டிக் கொண்டே அவள் ஆமாம் என்றது, அழகாக இருந்தது. அவளை அழுத்திப் பிடித்துத் தன்னோடு அணைத்துக்கொண்டு நீராட்டறை நோக்கி நடந்தான்.
குளித்துவிட்டு, உணவருந்திவிட்டு, அவன் அரண்மனைக்குள் நுழைவதற்கும் அரையாம மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவனைப் பார்த்ததும், கட்டியங்காரன் அவன் வருகையை அறிவித்தான். உடனே, ஒரு சேவகன் ஓடி வந்து, அவனை அழைத்துக்கொண்டு போய், அன்று அவனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அவனை அமரச் செய்தான். மூலையில் சிவமாறன் நின்றிருந்தான். கழுத்தில் தளை இல்லை. நேற்றைக்குப் பார்த்த, இழிவான தோற்றம் இல்லை. அலங்கரித்து, அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஒப்புக்கொண்டுவிட்டான் போலிருக்கிறது. வாயிலில் பெருத்த ஆரவாரம் கேட்டது. கோவிந்தராஜன் வந்துவிட்டான்! அரசர் வந்து அரியணையில் அமர்ந்ததும், ஆரவாரம் அடங்கிச் சபை அமைதியானது.
கோவிந்தர் பேசினார். - “சிவமாறா! உன்மேல் எனக்கு வன்மம் கிடையாது. இராட்டிரக்கூடத்துக்கும் கிடையாது. இரட்டபாடி, ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு கங்கத்தோடு போர் தொடுக்கவில்லை. பாட்டனார் கிருஷ்ணராஜா, கீர்த்திவர்மனை எதிர்த்துச் சண்டையிட்டாரே தவிர, ஸ்ரீபுருஷரை எதிர்த்து அல்ல. குந்தளத்தை ஆக்கிரமிக்க எண்ணி, ஸ்ரீபுருஷர் செய்த வினைகள், கிருஷ்ணராஜாவைப் போர் புரிய நிர்ப்பந்தித்தன. வென்றபிறகும், உன் தந்தையிடமே கங்கமண்டலத்தை ஒப்படைத்ததும், பல்லவமல்லரோடு சேர்ந்து பெரியப்பா உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்ததுமே இதற்குச் சான்று.
“சகோதரச் சண்டையில், நீ தெரிந்தெடுத்த பக்கம் பிறழ்ந்ததால், அதன் விளைவை நீ அனுபவிக்க வேண்டியதாயிற்று. இது துரதிர்ஷ்டம்தான். தந்தைக்கு உன்மேல் நம்பிக்கை என்னவோ தோன்றவில்லை. ஆனால், எனக்கு, நீ பெரியப்பாவுக்குக் காட்டிய அவலம்பம், உன்மீது மதிப்பை ஏற்படுத்தியது. சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்பட்டபோதும், நீ பட்சம் மாறவில்லை. தந்தையை மீறி, நான் எதுவும் செய்யமுடியாததால், அவர் இருக்கும்வரை நீ சிறையில் இருக்கவேண்டியதாயிற்று. இந்தத் தவறைச் சரிசெய்யத்தான், அரியணை ஏற்றதும் உன்னை நான் முதலில் விடுவித்தேன். ஆனால், நீ என் பெருந்தன்மையை உதாசீனப்படுத்திவிட்டாய். அதனால், வீணாக இத்தனை வருடங்களைச் சிறையில் கழிக்கவேண்டியதாயிற்று. இன்று மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். என்ன சொல்கிறாய்?”
நன்றாகத்தான் பேசுகிறான். இருந்தாலும், இளக்காரம் மனத்தில் ஊற, ஒரு கணம் அறிவு கோவிந்தர் மீது உருவாக்கிக் கொடுத்த மதிப்பை, வெறுப்போடு துடைத்து எறிந்தான், ஸ்புரிதவர்ஷன்.
“மஹாராஜா பிரபூதவர்ஷர் வாழி! இன்று நான் வணங்கும் கடவுளர்களின் மீது அறுதியிட்டுச் செப்புகிறேன். இரட்டபாடிக்குச் சிவமாறன் எதிரியல்லன். இதே போலத் தங்கள் உணர்வு வருங்காலத்திலும் இருக்குமேயானால், இரட்டபாடிக்கு அடங்கிய நாடாகக் கங்கம் இருக்கும், இரட்டபாடிக்கு வரும் ஆபத்தைக் கங்கத்துக்கு வரும் ஆபத்தாகக் கருதி அதை நிவர்த்திக்க என் உயிரையும் தரச் சித்தமாக இருக்கிறேன்.” என்று சிவமாறன் வாளை உயர்த்தினான். சபை ஹாஹாகாரம் செய்து ஆமோதித்தது. அவன் சொன்னதைக் கேட்ட, அரசர் நெகிழ்ந்தார். அரியணையில் இருந்து இறங்கிவந்து, சிவமாறனைத் தழுவிக்கொண்டார். விஜயாதித்தியன் கண் கலங்குவதைக் கவனித்தான் ஸ்புரிதன். என்ன விடம்பனம்! மனத்தில் தோன்றிய குரோதத்தை, முகத்தில் காட்டாமல் மறைத்துக்கொண்டான்.
“இரட்டபாடிக்கு உன்னிடமிருந்து ஒரே உதவிதான் எதிர்பார்க்கிறேன். வேங்கி விஜயாதித்தியனைக் கட்டுக்குள் வைக்கவேண்டியது உன் பொறுப்பு. கங்கத்துக்கு வெளியில் இருந்து எதிரிகள் வாரார். அப்படி வந்தால், அவர்களைத் தன்னுடைய எதிரிகளாக நினைத்து, இராட்டிரக்கூடம் அவர்களை ஒழிக்கும். உன்னுடைய சேனைக்கு ஒரே எதிரி வேங்கி. அதனுடைய நிழல் மான்யகேடத்தின் மீது விழாமல் பார்த்துக்கொள். விஜயாதித்தியனும் என்னைக் குலவைரியாகத்தான் பார்க்கிறான். வேங்கி மண்ணின் இளவரசி, இந்த மண்ணுக்கு ராஜமாதா என்ற உண்மை அவனுக்கு உறைக்கவே இல்லை. பலமுறை அவனுடைய தமக்கையாரும் நானும் எடுத்துச் சொல்லியும், தன்னுடைய தம்பி மீது இருக்கும் கோபத்தை என் மீது வடிக்கப் பார்க்கிறான். நான் நினைத்திருந்தால், அவனை ஒட்டு மொத்தமாக நசித்திருக்க முடியும். எப்படிச் செய்வேன்? அதனால்தான், நான் அவனைப் போரில் சந்திக்க விரும்பவில்ல. நேருக்கு நேர் வந்தால், என்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள முடியாது. நீ புரிந்துகொண்டது போல, என்றாவது, அவனுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அதுவரையில், அவனைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்வாயாக!
“நீ ஸ்வதந்திர அரசனாக, நினைத்த தானங்களையும், வரிகளையும் விதித்து, நாட்டைப் பரிபாலனம் செய்துகொள். வருடத்திறையைக் கோசமந்திரி, இராஜமுத்திரையோடு எழுதித்தருவார். நல்லது நடக்கட்டும்.”
என்று சொல்லிவிட்டு அரியணையை நோக்கி நடந்தார் கோவிந்தராஜா. அதற்குப்பிறகு, வேறு பல ராஜாங்கக் காரியங்கள் ஒவ்வொன்றாக சபையோரின் முன் வைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் விசாரித்துத் தீர்மானங்கள் சொல்லி முடித்துவைப்பதற்குள், உச்சிவேளை ஆகிவிட்டது. அரண்மனையிலேயே உணவு அருந்திவிட்டு, வேறு காரியஸ்தர்களைப் பார்த்துப் பேசிவிட்டு, பாக்ஷகாவின் இல்லத்துக்குத் திரும்பி வரும்போது, இரவாகிவிட்டது, ஸ்புரிதனுக்கு. வைகறையில் புறப்படவேண்டும். குதிரையை ஆயத்தமாக வைப்பதற்கும், வழிச்செலவுக் கையுண்டிக்கும் பணிப்பெண்களை ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தான்.
அடுத்தநாள், கொன்வேளையில் பீமரதி பாயும் மலைநோக்கிப் புறப்பட்டான். மனிதர்களின் மனத்தையும், அரவின் சாரியையும் போலத்தான் பீமாதேவி ஓடிக் கொண்டிருந்தாள். ஒரு நேர்கோட்டில் செல்வது அவளுடைய இயல்பிலேயே கிடையாது. எல்லாமே வளைவு, நெளிவுகள்தான். வேகம், பாய்ச்சல்தான். வழியில், மீண்டும் மீண்டும் குறுக்கிடும் அவளைப் பலவாறு கடக்க வேண்டிவரும். கடப்பதும் அவ்வளவு எளிதன்று. அடையடையாய்ப் பாசி படர்ந்த பாறைகள், யானையின் முதுகுகள் போல, நீர் மட்டத்துக்குள் காலை வாரிவிடுவதற்குச் சித்தமாகக் கரந்துகொண்டிருப்பவை. எச்சரிக்கையுடன் தாண்டிப் புரவியையும் வழிநடத்திக்கொண்டு அதமகேது ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்வதற்குள், உச்சி வேளை தாண்டிவிடும் என்று எதிர்பார்த்தான்.
அடர்ந்த காட்டுவழி இல்லை என்றாலும் அமானுஷ்யமான காடு. பெரிய பெரிய பாறைகள், அங்கங்கே சூரிய ஒளியே படாத இடுக்குக்களோடு காட்சியளித்தன. வேனிலிலும் காயாத ஓர் பைது பரவிக் கிடந்ததால், எல்லா உயிரிகளுக்கும் அவ்விடங்கள் ஒரு புகலிடமாக இருந்தன. பகலிலும் ஓர் கனத்த நிழற்போர்வை, அங்கே அப்பியிருந்ததால், சூரியன் மறைய ஒரு யாமம் இருக்கும்போதே, அங்கே இரவுப்பொழுது தொடங்கிவிடும். தனியாக யாரும் மூன்றாம் யாமத்துக்கு மேல் அங்கே இருப்பதில்லை. அடவிவாழ் மனிதர்கள், இரவு வேட்டைக்காக வருவார்கள். அதுவும் கூட்டத்தோடு. அவர்களின் வலசைகளுக்கும், அவற்றின் சுற்றுப்புற ஏந்தல்களுக்கும் பாந்தல்களுக்கும் இரண்டு மூன்று மயானங்கள் அங்கே இருந்தன. அவற்றிற்கு, அழக்குடம், விறகு எடுத்துக்கொண்டு போகிறவர்கள், சாப்பறையாடிகள், சகடை ஊதுகிறவர்கள், பிணந்தூக்கிகள், இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறவர்கள் என்று இதைப் போல நடமாட்டம் இருக்குமே தவிர, யாத்திரிகள் பிரயாணம் செய்யும் வழிகள் அல்ல அவை.
இன்றும், ஏதோ ஓர் இறுதித் திருநடை. பெண்ணின் இடையைச் சுற்றியிருக்கும் கச்சையைப்போல், மலைப்பாறைகளில் இருந்து அகலாமல், அதை இறுக்கிக்கொண்டு துவண்டுகொண்டிருந்த பாதையில், அவன் ஒரு திருப்பத்தில் திரும்பியதும், சட்டென்று அந்தக் கூட்டம் முன்னால் சென்று கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டுப் புரவியை நிறுத்தினான்.
“ராம நாமமே உலகில் சத்தியம்
சத்தியம் பேசுக, முக்தி நிச்சயம்”
“ராம நாம ஹி சத்தியம்
சத்தியம் வதது, முக்தி தத்க்ஷணம்”
ஸம்ஸ்க்ருதத்திலும், தங்கள் மொழியிலும் விடாமல் சொல்லிக்கொண்டே யாரையோ இறுதிப் பயணமாகத் தூக்கிக்கொண்டு போனார்கள்.
அவர்களைத் தாண்டாமல் முன்னே போகமுடியாது. பெரிய வழியும் இல்லை. தாங்கள் வழி தருவதற்காக நின்றவனைப் பார்த்த தூக்கிகள், ஓர் மலை இடுக்கு வந்ததும், மலைக்கல்லோடு தங்கள் சரீரத்தையும் கால்கழி கட்டிலையும் ஒடுக்கிக்கொள்ள, தலைகுனிந்து அவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்தபடி மெல்ல அவர்களைத் தாண்டினான். சற்றுத் தூரம் சென்றதும், புரவியை முடுக்கினான்.
“ராம நாமமே உலகில் சத்தியம்
சத்தியம் பேசுக, முக்தி நிச்சயம்”
பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவர்களின் கோஷம், மெல்லக் காற்றில் கரைந்து போனது. எதிர்பார்த்தபடியே, ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது, சூரியன் உச்சியைத் தாண்டி விட்டிருந்தான். முகமெங்கும் பிணமெரித்த கருமடலையைப் பூசிக்கொண்டு, வெளியே பத்மாசனத்தில் அமர்ந்திருந்த அதமகேதுவை ஸாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். அவன் எழுந்து நின்றதும், உள்ளிருந்து ஒருவன் ஒரு குவளையில் நீர் எடுத்துக்கொண்டு வந்தான்.
“நீர் பருகுகிறீர்களா, மஹாப்பிரபு?”
“தா செருவெட்டி, நீ நலமா” என்று அவனை விசாரித்தபடியே அவன் தந்த நீரைப் பருகினான்.
“இன்று தகனம் இருக்கிறது போலிருக்கிறதே?”
“இந்த மயானத்தில் இல்லை பிரபு, மைத்துனனுடைய மயானம். அதோ, கீழே புகைகிறது பாருங்கள், அதற்குப் பக்கத்தில் உள்ள பூழையைத் தாண்டி இருக்கும் ஏந்தலில் வாழ்ந்த ஒரு குடியானவர்.”
“புத்தடலை ஆச்சரியருக்குக் கிடைக்குமா?”
“ஆமாம். இரவு எரிந்துவிடும். காலையில் அவர்களுக்கு, ஜலத்தில் கரைக்கத் தந்தது போக, இங்குத்தான் வந்து தருவான்.”
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அமர்ந்திருந்த அதமகேது காளாமுகர், செருவெட்டியைப் புறப்படு என்று தலையை அசைத்துக் கட்டளையிட்டார். அவரை வணங்கிவிட்டு, “பிரபு, இன்று இரவு இந்தக் குறட்டில்தானே இங்கப் போகிறீர்கள்? இரவு உணவுடன் வருகிறேன்” என்று ஸ்புரிதனிடம் சொல்லிவிட்டு அகன்றான், செருவெட்டி.
அவன் செவிமடுக்காத் தொலைவு சென்றதும், அதமகேது கேட்டார், “அரசவையில் என்ன நடந்தது? அதற்கு முன்பு இதைச்சொல். கங்கன் விஜயாதித்தியனுடன் நீ ஏன் சிவமாறனைப் பார்க்கப் போனாய்? கோவிந்தன் உன்னை ஆழம் பார்க்கிறானா?”.
“நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் பூஜ்யஸ்ரீ! அச்சமும் பட்டேன். ஆனால், சற்று விசாரித்தபோது அதெல்லாம் காரணமில்லை என்று தெரிந்தது. கடக்கத்து மஹாஸாமந்தர்களைக் கங்கத்திலிருந்து வந்த பரிவாரங்களைச் சந்திக்க விடக்கூடாது என்பது கோவிந்தனின் கட்டளையாம். அதனால், வெளியூர் ஆளான என்னை, அவர்களோடு இருத்தியிருக்கிறான். அவர்களைக் கோட்டை வாயிலில் வரவேற்றதிலிருந்து, தங்கும் வசதிகளைக் கண்காணிப்பது, இரவு விருந்து மற்றும் கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, விஜயாதித்தியனைச் சிவமாறனைச் சந்திக்கச் சிறைக்கு அழைத்துச் சென்று, திருப்பி அழைத்துக் கொண்டு வருவது மற்றும் அடுத்த நாள் அரசவைக்கு அழைத்துச் செல்வது வரை என் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.”
“நல்லது. கவனமாக இரு. கோவிந்தனை இலகுவாக எடுத்துக் கொள்ளாதே! அவனுக்கு ஆதிசேடன் போல ஆயிரம் செவி. சரி, சபையில் என்ன நடந்தது, சொல்”
சொன்னான்.
“ம்ம்.. சிவமாறனே மாறிவிட்டானா? எல்லாம் காலத்தின் கோலம். இருக்கட்டும். சத்தியவாக்கிய ராஜமல்லனை வழிக்குக் கொண்டுவந்து விடலாம். ஆக்கிரமிப்பு எண்ணம் இல்லையென்றால், அந்தத் தந்திதுர்க்கன் செய்தது என்னவாம்? சாளுக்கிய உப்பைத் தின்று, கீர்த்திவர்மனைத் தந்திரத்தால் தோற்கடிக்கவில்லை? அந்தக் கிருஷ்ணன்? சேனையோடு வளைத்துச் சூழ்ந்து கொண்டு, கீர்த்தி வர்மனையும் அவனுடைய குமாரர்களை எல்லாம் கொலை செய்யவில்லை? அப்போது என்ன எண்ணம் இருந்ததாம்? இந்த இரட்ட வமிசம், இந்தப் பூமியில் முளைத்த விஷமரம். எரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. சங்கரகணனை வைத்துச் சாகிராஜனின் குடும்பத்தையும் சேர்த்துத் தொலைத்துவிடுகிறேன்.” குரலில் வன்மம் தெறித்தது.
“இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் பொறு. கரந்துறை கோளின் காலம் வந்துவிட்டது. சாதாரண வால்வெள்ளி அன்று இது. பைசாசத் தூமகேது. இரண்டு கொம்புகளுடன், காண்பவரைக் குலைநடுங்க வைக்கும் கலியின் தூது. விக்கிரமாதித்திய மஹாராஜா நலிவுற்றபோதுதானே, சாளுக்கிய வம்சத்தின் முடிவு தொடங்கியது? அப்போது, இளவரசர் கீர்த்திவர்மர், காஞ்சிக்குப் படையெடுத்துச் சென்றிருந்தார். கூதிரின் நிர்மலமான இரவுவிசும்பில், வடக்கே மெல்லியதாகத் தோன்றிய தூமகேது இது. நாளடைவில் அச்சத்தை ஊட்டும்படி ஒளிர்ந்து, தென்திசைப் பக்கம் விழுந்து மறைந்து போனது. அந்தத் தந்திதுர்க்கத் துரோகியின் எழுச்சியைத்தான் அது குறிக்கிறது என்று தெரியாமல் போனதே! காலச் சக்கரம் ஒரு சுழற்சி சுழன்று விட்டது, ஸ்புரிதா! இப்போது மீண்டும் தூமகேது வரும்! இரட்டபாடி, தீயுண்டு எரிபடப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அந்தத் தீயாடியை இத்தனை நாட்களாக, நான் நேம நிட்டையோடு வழிபட்டது வீண் போகப்போவதில்லை. தூமகேது தோன்றுங்காலம் வந்ததும், சென்றமுறை எப்படி மஹாராஜாவின் உடல் நலிந்ததோ, அப்படியே கோவிந்தராஜனும் நலிவான். எல்லாக் குறிகளும் அதைத்தான் உணர்த்துகின்றன. அவன் நோய்வாய்ப்பட்டவுடனேயே, இரட்டவம்சத்தின் அந்திமக் காரியங்களுக்கு ஜயகண்டை ஒலிக்கத் துவங்கிவிடும் என்பதை நினைவு வைத்துக் கொள்! விரைவிலேயே அந்த விஷச்செடியின் வித்து, ஸர்வனோடு நாசமாகி விடும். மீண்டும் சாளுக்கியம் மலரும். இரட்டபாடி வமிசம், இந்தக் குந்தளத்தைப் பீடித்த துர்ச்சொப்பனமாகத் தொலைந்துவிடும்.
“காலையிலேயே புறப்பட்டு வந்திருக்கிறாய். பயணக் களைப்பு இருக்கும். உண்டி வரும்வரைச் . சற்று ஓய்வெடு. இரவு மயான பூஜை இருப்பதால், இரவு அர்த்த யாமம்வரை கண்விழிக்க வேண்டியிருக்கும். மயானத்திலோ, காலையிலோ பேச அவகாசமும் வாய்ப்பும் கிட்டாது. இப்போதே விடை பெற்றுக்கொள். இனி அடிக்கடி, இந்தப்பக்கம் வராதே. நான் சொல்லி அனுப்புகிறேன். உன்னைத் தொடர்பு கொள்வது எப்படி என்பதைப் பற்றி மட்டும், உன்னுடைய மண்ணைக் கடக்கத்துப் பிரியைகள் கூட்டத்துக்குச் சொல்லி விட்டுப்போ. மங்களம் உண்டாகட்டும்”
தானும் இராட்டிரக்கூடத் தருவில் கிளைத்த உலவைதான் என்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. சிறுவயதில் இருந்தே, தன்னுடைய வமிசம் சாளுக்கியந்தான், இரட்டபாடி என்பது தந்திதுர்க்கன் என்ற ஒரு காலப்பிறழ்வால் குந்தளதேசத்தைக் குலைக்க நடப்பட்ட களை, அதைப் பிடுங்கி எறிவதுதான் தன்னுடைய வாழ்க்கையின் பொருள் என்று போதிக்கப்பட்டு வளர்ந்தவன். தன்னுடைய தந்தை ஒருவர்தான், இதைப் புரிந்துகொண்டு, இரட்டபாடியைக் கலைத்துவிட முயன்றார், ஆனால், சிற்றப்பாவின் சதியால், ஒழிக்கப்பட்டார் என்று நம்புபவன். இராட்டிரக்கூடன் என்ற போர்வையில் உலவும் சாளுக்கிய உழுவையாதலால், தன்னைப் போன்றே நினைப்புடையவர்களை இனங்கண்டு, ஓர் எதிர்ப்புக் குழுவை உருவாக்கி வைத்திருப்பவன்.
சாளுக்கிய அரசர்களின் குலகுரு வழியில் வந்த அதமகேது, மீண்டும் சாளுக்கிய வம்சத்தை நிறுவுவதே தம் மோட்சத்துக்கான பாதை என்று எண்ணித் தன் வாழ்வை அதற்காகவே அர்ப்பணித்தவர். அவர்தான் அவனை வளர்த்தவர் வேறு ஆதலால், அவர் காட்டிய வழியில் செல்வதைத் தவிர வேறொன்றை அறியாதவன்.
“பெரும்ம் பொழிவு, பெரும்ம் பொழிவு!” – கத்திய சாதகக்குயில், ஆரோஹணமாக, ஸ்ருதியை உயர்த்திக்கொண்டே போனது. அதமகேது முகத்தில் மலர்ந்தார். “நல்ல சகுனம்” என்றார். மழைநீரை மட்டும் உண்டு வாழும் சாதகத்தை யார் பார்த்தார்களோ என்னவோ, அவரைப் பொறுத்தவரை, அவருக்கு இதுதான் சாதகப்பறவை. “பெரும்ம் அழிவு, பெரும்ம் அழிவு” என்று அது சொல்வதாகத்தான் அவர் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு முறை அது கத்தும்போதும், “ஒழிந்தது இரட்டம்” என்று ஒருமுறை சொல்லிக்கொள்வார்.
அதனுடைய குரலையே கேட்டுக்கொண்டு, அவனுடைய பதிலுக்கோ, அவன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போவதற்கோ காத்திராமல், கண்களை மூடிக்கொண்டு நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார். அவனும், அவர் உத்தரவிட்டபடி, குறட்டில் காலை நீட்டிக்கொண்டு படுத்தான். அன்று இரவு, அச்சம் தரும் அந்த காளாமுகப் பூஜையில் கலந்துகொண்டு, திரும்பிவந்து உறங்கப் போவதற்கு வெகுநேரமாகி விட்டது. காலையில், சூரியன் எழுந்ததும், இரண்டாம் யாமம் தொடங்கியபின்தான் புறப்பட்டான்.
No comments:
Post a Comment