Saturday, 21 September 2024

19. ரேவாதேவி

சில நாட்களுக்குப் பிறகு, ஊர்ப்பிரமுகர் ஒருவரின் மகளுக்கு விமரிசையாகத் திருமணம் நடந்தது. ஊருக்கு வெளியில் பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு, ஊரே அங்கே கூடியிருந்தது. அங்கே திருமணத்தன்று விநயனைச் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தார் பிரதாபர். திருமணத்திற்காகப் பாடசாலையில் வகுப்புக்களையும் நிறுத்திவைத்திருந்தார்கள். திருமணத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பிருந்தே இசை நிகழ்ச்சிகளுக்கும், இரவில் ருக்மிணி கல்யாணம் கூத்துக்கும், வேறு விநோதங்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். திருமணத்தன்று அதிகாலையிலேயே குக்கேஸ்வரர் குடும்பத்துடன் சென்றுவிட்டிருந்தான் விநயன். பிரதாபர், அரசரைப் பார்க்கத் தலைநகரத்துக்குச் சென்றிருந்தவர், முஹுர்த்தத்துக்குச் சற்று முன்னர்தான் வந்து சேர்ந்தார்.

அவர் வரும்போது, மணப்பந்தலில், வடக்குத் தெற்காகக் கட்டப்பட்டிருந்த ஒரு திரையை நிறுவி, அதற்கு இருபுறமும் செந்நென்மணிகளைக் குவியலாகக் கொட்டி, அதன்மீது கிழக்குப் பார்த்தபடி மணமகனையும் மேற்குப் பார்த்தபடி மணப்பெண்ணையும் நென்மணிக் குவியலின் மீது நிற்கவைத்திருந்தார்கள். திரையால் மறைக்கப்பட்டு தத்தம் கரங்களில் சீரகம் கலந்த அரிசியை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அவர்கள் கைவிரல்களில், அவரவர்களுடைய ஸ்வஸுரர்கள் பரிசலாக அணிவித்த மோதிரங்கள், நடுவாக ஏற்றிவைத்திருந்த குடவிளக்கின் ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. முஹூர்த்த வேளை வந்ததும், திரையைப் பிடித்திருந்தவர்கள் திரையைத் தாழ்த்த, பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் வெட்கத்தோடு பார்த்தபடி மற்றவர் தலையில் தத்தம் கைகளில் வைத்திருந்த சீரக அரிசியைத் தூவ, மண்டபமே குழுமியிருந்தவர்களுடைய ஆஹாகாரத்தால் அதிர்ந்தது.

மணப்பெண்ணின் தந்தை, பெண்ணின் கையை மாப்பிள்ளையின் உள்ளங்கையில் வைத்து, நீர் வார்த்துப் பெண்ணை அவனிடம் ஒப்படைத்தார். இருவரையும் ஒன்றாக நிற்கவைத்து, ஐந்து பருத்தி நூல்களை எடுத்து, அவர்களைச் சுற்றிக் கட்டினார். பெண்ணும் மாப்பிள்ளையும் கரங்களால் நூல்கட்டுக்களைத் தீண்டாமல், தமது உடல்களை அசைத்து அசைத்து நெளிய, அவர்களைச் சுற்றி இருந்த நூல்கட்டுக்கள், தளர்ந்து அவர்களுடைய பாதங்களில் சரிந்து விழுந்தன. கூட இருந்த பெரியவர் ஒருவர், மணமக்களின் பாதங்களைச் சுற்றிக் கிடந்த ஐந்நூல்களையும் எடுத்துத் திரித்து, அவற்றில் இரக்கையைச் சேர்த்து, இரண்டு காப்புக் கயிறுகளாக ஆக்கி, மணமகனின் வலக்கையில் ஒன்றையும், மணமகளின் இடக்கையில் ஒன்றையும் கட்டி ஆசீர்வதித்தார்.

ஹோமகுண்டத்தில் அக்கினியை வளர்த்து, மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு மறையவர்கள் அமர்ந்திருக்க, தன்னுடைய வலக்கரத்தின் கனிட்டையைப் பிடித்தபடி மணப்பெண் பின்வர, மும்முறை அக்கினியை வலம்வந்த மணமகன், பெண்ணின் விரலிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு தான் மட்டும் மணப்பலகையில் அமர்ந்தான். அக்கினிக்குப் பக்கத்தில், சதுரத்தின் அமைப்பில், நென்மணிகளைக் குவித்து வைத்திருந்தார்கள். நான்கு மூலைகளிலும் ஒரு குவியல். சதுரத்தின் மையத்தில் ஒரு குவியல். எல்லாக் குவியலும் சமமான அளவில் இருந்தன. இப்படி ஏழு சதுரங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. மணப்பெண் மட்டும், நலங்கிடப்பட்டு, நூபுரத்தால் அழகு செய்யப்பட்டிருந்த தன்னுடைய வலக்காலால் முப்பத்தைந்து குவியல்களையும் தொட்டுவிட்டு, மணமகன் அருகில் வந்தமர்ந்தாள்.

குழுமி இருந்தவர்கள் எல்லோரும் மணமக்கள் அருகே வந்து மலரும் மந்திராட்சதையையும் தூவி ஆசீர்வதித்தார்கள்.

 

“நீ எப்போது மணையில் உட்காரப்போகிறாய்?” என்ற குரலைக்கேட்டுத் திரும்பினான், விநயன். பிரதாபர்.

“ஸ்வதந்திரப் பதகத்தைப் பஞ்சரத்தில் ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தார் குக்கேஸ்வரர்.

“கொழுகொம்புக்கு நன்றி குக்கேஸ்வரரே” விளையாட்டாகக் கைகுவித்தான் விநயன்.

 

குரிசில் கொண்ட குடிப்பிறந்தவர்களானதனால், மணமக்களுக்குப் பரிசில்கள் குவிந்தன. பட்டாடைகள், தலையணிகள், மணிகள், அணிகலன்கள், ஆபரணங்கள், பொற்காசுகள், பாதணிகள், நூபுரங்கள், தோள்வளையங்கள், அலங்காரப் பொருட்கள், நறுமணங்கள், மஞ்சங்கள், மேற்சுற்றுக்கள்......இவை மட்டுமன்றி, நிலங்களின் சுவாதீனத்துக்குப் பட்டயங்கள், யானைகள், புரவிகள், ஆன்கள், எருமைகள், ரதங்கள் போன்றவையும் அளிக்கப்பட்டன. ஆண் சேவகர்கள், பெண் சேவகர்கள், தாசிகள், தாசர்கள் அணிவகுக்கப்பட்டுத் தத்தம் செய்யப்பட்டார்கள்.

பரிசில்கள் மணமக்களுக்கு மட்டுமன்றி, வதுவை மற்றும் வேத பாராயணங்கள் நடத்திவைத்த மறையவர்கள், பெற்றவர்கள், குடும்பங்களுக்குக் கல்வி கற்பித்தவர்கள் போன்றவர்களுக்கும் அளிக்கப்பட்டன. பரிசில்கள் அளிக்கப்பட்டபோது, அளித்த குடும்பத்தின் புகழும், அளிக்கப்பட்டவர்களின் பரம்பரையும் இசைக்கப்பட்டன. அவற்றை இசைப்பதற்கே முழவும், மிருதங்கமும், குழலும், வீணையும் கொண்ட குழுக்கள், மற்றும் இசைபாடிகள் சூழ்ந்திருந்தார்கள்.

அன்று இரவு மணமக்களை ஊர்வலம் அழைத்துப்போவதற்காகக் குஞ்சரமொன்று அழகாக அலங்கரிக்கப்பட்டு மணிகளும் முத்துக்களும் பதித்த முகபடாத்துடன் மண்டபத்தின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கும் பல்லுணவும், பொருட்களும் பரிசிலாகக் கிடைத்தன. கோவிலில் விசேஷ பூஜைக்குச் சித்தம் செய்யப்பட்டு, அங்கிருந்து அந்தணர் குழு, பிரசாதத்தைப் பரிவாரம் சகிதம் குடையோடு எழுந்தருளிக் கொண்டு வந்திருந்து, ஆசீர்வாதத்தோடு வழங்கினார்கள்.

 

“இந்த ஆரவாரம் எல்லாம் நாள் முழுக்க நீடித்து இரவு வரை செல்லும். நாங்கள் புறப்படுகிறோம். நீங்கள் உண்டுமுடித்ததும், கோலாகலனை அழைத்துக்கொண்டு நவீனக் காவணத்துக்கு வந்துவிடுகிறீர்களா? உடனே திரும்பிவிடலாம். மாதய்யாவிடம் சொல்லியிருக்கிறேன். அவன் வண்டிக்கு ஏற்பாடு செய்துதருவான்” என்று குக்கேஸ்வரரிடம் சொல்லிவிட்டுப் பிரதாபர் விநயனை அழைத்துக்கொண்டு போஜனசாலைக்குச் சென்றார்.

உணவுக்குப்பிறகு, தூரத்தில் இருந்த ஒரு சோலைக்குச் சென்று, அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த நிர்மாணப் பணிகளை மேற்பார்வையிட்டபடியே வரலாற்றைத் தொடர்ந்தார்.

வேங்கியையும், கங்கத்தையும் துருவராஜா எப்படி அடக்கினார் என்று சொன்னேன். இன்று காஞ்சியோடு ஏற்பட்ட பிணக்கைப் பற்றிச் சொல்கிறேன். மற்றவர்களைப் பகையாக எண்ணிவிடலாம். நந்திவர்மரை எந்த வகையில் சேர்ப்பது என்ற குழப்பம் துருவருக்குப் பெரிதும் இருந்தது என்று நான் சொன்னது உனக்கு நினைவில் இருக்கும். விடலைப் பருவத்தில் இருந்தே காஞ்சியில் நடந்த சம்பவங்களை எல்லாம் தமையனாரோடு இருந்து கூடவே கேட்டு வளர்ந்தவர். ஏலபுரியில் காஞ்சி ஏகதீரருக்கு எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. அப்படிக் கருதப்பட்டவர் மீது எப்படிப் படையெடுப்பது? படையெடுப்பதற்கு முன், விவேகமுள்ள புருஷோத்தமனை நேரடியாகத் துண்டகவிஷயத்துக்கு அனுப்பி எடுத்துரைக்கவும் ஏற்பாடு செய்தார் என்று சொன்னேன். ஆனால், நந்திவர்மர் அதை ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட்டார். நந்திவர்மரின் இயல்பு நன்றாகத் தெரிந்ததால்தான், இவ்வளவு குழப்பம். எதிரி என்று வகை செய்துவிட்டால், எதிர்ப்பது எளிது அல்லவா? தாக்குவதற்கும், கொல்வதற்கும் யோசிக்க வேண்டா. இதனால், தானே தலைமை நடத்திச் செல்லத் தீர்மானித்தார். ஓராயுதமும் எறியாமல், சிக்கலைப் பிரிக்க நினைத்தார்.”

“காஞ்சி மீது படையெடுக்க வேண்டிய அவசியம் என்ன? இராட்டிரக்கூட அரியணையில் என்னவோ அமர்ந்தாயிற்று. பிரதிஹாரர்களைத் தவிர மற்ற சத்துருக்களை அடக்கிவிட்டார். பெரிய கோவிந்தர் இப்போது இல்லை. நந்திவர்மர் இரட்டத்தின் மீது படையெடுக்கப் போவதில்லை. அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே”

“அதுவும் ஒரு வழிதான். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஓர் இயல்பு என்று இருக்கிறதல்லவா? ஒருவேளை, நந்திவர்மருக்கு இந்த நிலை வந்திருந்தால், அப்படிச் செய்திருப்பாராக இருக்கலாம். துருவராஜா அப்படி நினைக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, காஞ்சி ஒரு நிலையைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். தமக்கு எதிராகத் தமையனை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்த நந்திவர்மர், இப்போது தன் தலைமையை ஒப்புக் கொள்கிறாரா இல்லையா என்பதுதான் கேள்வி. தான் அரியணை ஏறியபிறகும், தன்னை ஒப்புக்கொள்ளாமல் ஒரு நாடு இருக்குமேயானால், அதை ஓர் அரசன் எப்படிப் பொறுத்துக் கொள்வான்? எங்கோ கண்காணாத இடத்தில் இருக்கும் நாடு என்றால் கவனிக்காமல் இருந்து விடலாம். எப்போதும், வணிகத் தொடர்பிலும், கலை, கலாசார விஷயங்களிலும் தொடர்பில் இருந்து வரும் காஞ்சியை, எப்படித் தன் இருப்பையே மதிக்காமல் இருந்துவிட அனுமதிக்க முடியும்?”

“நந்திவர்மர், துருவரைத் தமையனின் ஆட்சியைக் கவர்ந்துகொண்டவர் என்று நினைப்பதால், அடமாகத் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை, அல்லவா? சிக்கல்தான்”

“சிக்கல்தான். நல்ல அரசர்களுக்கும் சில சமயங்களில், முரட்டுத்தனமான பெருமை வலுப்பெற்று விடுகிறது. வேறு கோணங்களில் சிந்திக்க மறுத்து விடுகிறார்கள். படையெடுப்பது என்று தீர்மானமாகி விட்டபின், எந்த நிகழ்வுக்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று துருவராஜா, தேவைக்கு அதிகமாகவே, படைகளைத் திரட்டினார். மூன்று இலட்சம் வீரர்கள் உடைய சேனையை அணிவகுத்தார். மயூரகண்டிக்கு வேறு நாடுகளில் இருந்து வரும் அபாயம் எதுவும் இல்லாததால், காப்புப் படைகளின் அளவைக் குறைத்துக்கொண்டு, சைனியத்தின் அளவைப் பெரிதாக்கினார். அடுத்து நடத்தப்போகும் பிரதிஹாரர்கள் மீதான படையெடுப்புக்கு, இது ஒரு பலம் சேகரிப்பு முயற்சி என்ற நோக்கத்தில் செயல்பட்டார். நான் அருகிலிருந்து இந்த நிகழ்வையெல்லாம் பார்த்தவன். வேங்கியின் படைகளையே பெரிய படை என்று எண்ணியிருந்த எனக்கு, இராட்டிரக்கூடச் சேனைகளின் வகைகளும், குழுமங்களும், படைத்தளபதிகளின் இயல்புகளும், படைப்பயிற்சியும், பணிமுட்டுக்களும் பெருத்த பிரமிப்பை ஏற்படுத்தின. நான் பயிற்சி பெறும்போதும், கங்கத்தின் மீது படையெடுத்துச் சென்றபோதும் இதையெல்லாம் கவனித்திருந்தாலும், இது வேறு அளவில் இருந்தது. கங்கத்தில் இருந்து கவர்ந்த யானைகள், புரவிகள், வில்லாளிகள் என்று பெரும் எண்ணிக்கையில் சேனை உருவாகியது. வேங்கியிலிருந்தும் ஒரு பெரிய படைப்பிரிவு வந்து சேரந்தது.”

“விசித்திரமான நிலைமை, ஐயா!. இராட்டிரக்கூடத்தின் அரியணையில் அமர்ந்திருந்த வேங்கியின் மாப்பிள்ளை, காஞ்சியின் அரியணையில் அமர்ந்திருந்த இராட்டிரக்கூடத்தின் மாப்பிள்ளையோடு சண்டையிடச் செல்கிறார்”

சத்தமாகச் சிரித்தார் பிரதாபர். “ராஜாங்க நிர்ப்பந்தம் அப்பா ராஜாங்க நிர்ப்பந்தம்! இரட்டத்தின் கடல் போன்ற சேனை, இரு பகுதிகளாகப் பிரிந்து செலுத்தப் பட்டது. ஒரு பகுதி கோவிந்தராஜாவின் தலைமையில், ரேணாடு புகுந்து, பருவி விஷயம், வெங்கடகிரி, திருவிப்பிரமேடு வழியாக வடமேற்கில் இருந்து காஞ்சியை நோக்கி நகர்ந்தது. மற்றொன்று துருவராஜரின் தலைமையில், நேர் தெற்கில் இறங்கிக் கங்கமண்டலத்தைத் தொட்டுக் கிழக்கில், குவலாலபுரம் வழியாக மேற்கில் இருந்து காஞ்சியை நோக்கிச் சென்றது. வழியில், பாணர்கள் மட்டுமே, இரட்டர்களின் படையைச் சற்றே அசைக்க முயன்றார்கள். ஆனால், மலையில் இருந்து உருண்டு வரும் பாறை, சரிவில் செல்லச் செல்லத் துரிதமான கதியடைந்து உருள்வது போல, முன்னேற முன்னேற வேகம் பிடித்துப் பாய்ந்த துருவரின் படைபலத்தின் வீச்சில், பாணர் படை, துவம்சம் ஆயிற்று.

“கடிகாசலத்துக்கு அருகே, இரண்டு பிரிவுகளும் ஒன்றாகச் சேர்ந்தன. அங்கே, கொற்றலையாற்றுக் கரையில், முகாமிட்டுத் தங்கினார் துருவராஜா. இவ்வளவு பெரிய படைப்பிரிவுகள் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் வரமுடியுமா? படைகள் வரும் செய்தி, துண்டகவிஷயம் முழுதும் பரவியிருந்தது. ‘பெரிய படை வருகிறது’ என்று செவிவழிச் செய்தியாக மட்டும் கேட்டிருந்தவர்கள், பெரிய படை என்றால் என்ன என்பதை நேரில் கண்டவர்கள் அனுப்பிய செய்தியைப் படித்துக் கலங்கிப் போனார்கள். சில நாட்கள் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, துருவராஜா, ஒரு மூத்த தூதனை அனுப்பினார். அவனிடம் சொல்லியனுப்பிய செய்தி, இவ்வளவுதான்: “கிழக்கே சுறவு மலிந்த கடல். மற்ற முத்திக்குக்களிலும் என் சேனைக் கடல். எதில் மூழ்குவது என்று பல்லவமல்லா! முடிவு செய்து கொள்!”

“மென்மையான சொற்கள். ஆனால், என்ன ஓர் அச்சுறுத்தல்! துருவரின் படைகளைத் தடுத்து நிறுத்தும் சக்தி, பல்லவ அரசருக்கு இருந்ததா? மேற்கு, தெற்கு, வடக்கு மூன்று திக்குக்களிலிருந்தும் இராட்டிரக்கூடப் படைகள் நெருக்கினால், நந்திவர்மருக்குக் கடலில் மூழ்குவதைத் தவிர, வேறு வழியில்லை. துருவராஜாவின் இராணுவத் திறல், கோவிந்தராஜருடையதை விட, எதிரிகளைக் குலைநடுங்க வைக்கும் இயல்புடையது என்று நன்றாகத் தெரிகிறது. நீங்கள் இவ்வளவு விரிவாகச் சொன்னபிறகுதான், அவர் எப்படி இராட்டிரக்கூடத்தைத் தலைநிமிர்த்து வைத்திருக்கிறார் என்று புரிகிறது. எங்குத்தான் இத்தனை வீராவேசத்தையும் ஒளித்து வைத்திருந்தாரோ! விஷ்ணுவர்த்தன ராஜாவும் வேங்கியும் பாக்கியசாலிகள் என்றுதான் சொல்லவேண்டும். அரிகேசரியோடு தாக்குதல் முடிந்துவிட்டது.”

“ஆம். துருவராஜா அசாதாரணமான அரசர் என்பது கங்கவாடியின் நிலைமைக்குப் பிறகே, எல்லோருக்கும் புரிந்துவிட்டது. அவர் பல்லவமல்லருக்குச் செய்தி அனுப்பிய அடுத்த நாள், அவரைச் சந்திக்க ஒரு தூதுவன் வந்தான். அவரை மட்டும் தனியாகப் பார்க்க வேண்டும் என்றான். அனுமதித்தார். அரச சபையில் எல்லோர் முன்னாலும் தைரியமாக நின்று கொண்டு, தான் கொண்டுவந்த செய்தியை, அரசரிடம் செவிகளுக்கு மட்டும்தான் சொல்வேன் என்றிருக்கிறான். எல்லோரும் சிரித்தார்களாம். இது காஞ்சி அரசியாரின் ஆணை என்று சொல்லியிருக்கிறான். ஆச்சரியமடைந்த துருவராஜா அவனைத் தனியே அழைத்துப் பேசியிருக்கிறார். அவரிடம் ஏதோ ரகசியத்தைச் சொன்னவன், அவரிடம் ஓர் ஓலையைத் தர, அவர் அதை வாங்கி, அருகில் இருந்த கோவிந்தராஜரிடம் கொடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கச் சொல்லிவிட்டுத் தூதனைப் பாதுகாப்பாக வெளியில் அழைத்துக் கொண்டுவிடச் சொன்னார். இந்த நிகழ்ச்சியை, துருவ மஹாராஜாவின் அந்திமக் காலத்தில், கோவிந்தராஜரே ஒருநாள் சீல மகாராணிக்குச் சொன்னார். சொல்லும்போது, நானும் கூட இருந்தேன்.” என்று பிரதாபர் கூறிக்கொண்டு போனார்.

 

* * * * * * * *

 

அன்று மாலை, இராட்டிரகூடப் பாசறை திமிலோகப் பட்டது. ‘அரசரும், இளவரசர் கோவிந்தரும் எங்கே, எங்கே’ என்று அனைவரும் கேட்டுக் கொண்டனர். ஏதோ ஓர் ஆலோசனைக்காக, அரசரைத் தேடிவந்த பஞ்சமஹா ஸப்தமுடைய தளபதி ஒருவர், அரசரைக் காணாமல், பலரையும் விசாரிக்க, அவர்கள் இளவரசரைக் கேட்கலாம் என்று போனார்கள். கோவிந்தனும் இல்லையென்றவுடன் எல்லோரும் இளவரசரையும் தேடத் தொடங்கினார்கள். எங்குத் தேடியும் இருவரையும் பாசறையில் காணவில்லை. அந்த ஆரவாரத்தைக் கேட்டுத் தன் படைவீட்டில் இருந்து வெளியே வந்த சங்கரகணன், இருவரும் மாறுவேட நகர்ப்பயணம் சென்றிருக்கிறார்கள் என்று சொன்னதும்தான், நிலைமை அமைதியடைந்தது. இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, தந்தையும், மகனும் இன்னும் இரண்டு வீரர்களுடன், வணிகர்கள் போல வேடமிட்டவர்களாய், பல்லவமல்லன் கட்டிய பரமேஸ்வர விஷ்ணுகிருஹத்தில், ஸ்வாமியைத் தரிசனம் செய்து விட்டுப் பிரகாரத்தில் நின்று கொண்டு, சுவரில் கட்டம் கட்டமாகச் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களைப் பார்த்தவாறு நடந்துகொண்டிருந்தனர்.

“இது பல்லவராஜாவுடைய முன்னோர்களின் வாழ்க்கைச் சரித்திரம்.” பின்னால், அவர்களுக்குத் தரிசனம் செய்துவைத்த மாதவ சர்ம பட்டரின் குரல் கேட்டது. துருவராஜா திரும்பிப்பார்த்தார்.

“வாருங்கள் வாருங்கள், பட்டரே! தாங்களே வந்தது நல்லதாயிற்று. சேவார்த்திகள் யாரும் சந்நிதியில் இல்லையா?”

“என் மைத்துனன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான். இந்தச் சண்டைச் சூழல் இருக்கும் சமயத்தில், கோவிலுக்கு யார் இரவில் வரப்போகிறார்கள்!”

“இது அரசரின் பரம்பரை வரலாறா? நான் ஏதோ புராணக் கதை என்று நினைத்துக்கொண்டு அது என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்றார் துருவராஜா.

“உங்கள் இருவரையும் பார்த்தால், வேறு தேசத்தவர் போல இருக்கிறது.”

“ஆமாம். நாங்கள் வைதர்ப்ப வணிகர்கள். புஷ்பராகம் மற்றும் பவள வணிகர்கள். ஒரு வாரமாகக் கடிகாசலத்தில் தங்கியிருந்தோம். இவன் என் மகன். அதோ அங்கே நிற்கிறார்களே, அவர்கள் இருவரும் எங்கள் பணியாட்கள்.”

“கடிகாசலமா? அங்கேதான் கடல் போல, இரட்டர்களின் சேனை, பாடி இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்?”

“ஆம்.”

“சேனையோடு விதர்ப்பத்தில் இருந்து வந்தீர்களா?”

“எங்களைப் பார்த்தால், சேனையோடு பயணிப்பவர்கள் போலவா தெரிகிறது?”

“இல்லை இல்லை. சேனையும் அங்கிருந்துதான் வந்திருக்கிறது என்றார்கள். அதனால் கேட்டேன்.”

“நாங்கள் எப்போதோ, விதர்ப்பத்தில் இருந்து கிளம்பிவிட்டோம். வணிகத்துக்காகக் குந்தல தேசம் போயிருந்தோம். அங்கிருந்து கங்கவாடி வழியாக இங்கே வந்திருக்கிறோம்.”

“கங்கவாடி வழியிலும் சேனை வந்திருப்பதாகப் பேசிக் கொள்கிறார்களே?” பட்டர் விடுவதாக இல்லை.

“அதையேன் கேட்கிறீர்கள்? குந்தலத்தில் இருந்து தலைக்காடு வந்தோம். சேனை வருகிறது என்றார்கள். கிளம்பிவிட்டோம். இங்கே கடிகைக்கு வந்தால், அங்கேயும் வந்து தொலைந்திருக்கிறது. அடுத்துக் காஞ்சிக்குள்தான் வரும் போலிருக்கிறது. நாங்கள் புறப்பட்ட நேரமே சரியில்லை”. நொந்துகொண்டார் துருவராஜா.

“சில சமயம் அப்படித்தான் ஆகிவிடுகிறது. சண்டை எல்லாம் ஓய்ந்துவிட்டது என்று நினைத்தோம். இந்த இரட்டபாடி ராஜாவுக்கு என்ன ஆயிற்றோ? சண்டைக்கு இழுக்கிறார். ராஜாங்க விஷயங்கள் நமக்கு எதற்கு? எல்லாம் இந்த வைகுண்டநாதன் பார்த்துக்கொள்வான்.”

“சரியாகச் சொன்னீர்கள். இது என்ன கதை?”

“உங்களுக்குக் காஞ்சியின் சரித்திரம் ஏதாவது தெரியுமா?”

“அதிகமாகத் தெரியாது. ஓரளவுக்குத் தெரியும். நீங்கள் சொல்லுங்களேன்”

“இப்போதைய ராஜாவுக்கு முந்தைய அரசர் பரமேஸ்வர வர்மர். அவருடைய பட்டாபிஷேகத்தைச் சொல்கிறது இந்தச் சிற்பம். இதோ பாருங்கள், மறையவர்கள் அவரைச் சுற்றிலும். இவர் கைகூப்பி, ராஜாவை விண்ணப்பித்துக் கொள்கிறார்.”

“இதே போலப் பட்டாபிஷேகம் செய்வதாய், இன்னும் சில சிற்பங்களைப் பார்த்தேனே.”

“ஆமாம், அவருக்குப் பாட்டனார் பெரிய பரமேஸ்வர மஹாராஜா, அவருடைய தகப்பனார் ராஜசிம்ம மஹாராஜா, அவருக்கு மூதாதையர், இவர்களுடைய பட்டாபிஷேகத்தையும், நந்திவர்ம மஹாராஜா செதுக்கி வைத்திருக்கிறார்.”

“நிறைய கட்டங்கள் இன்னும் வெற்றிடமாகவே இருக்கின்றனவே”

“நிகழாததை எப்படிச் செதுக்க முடியும்? இடம் விட்டு வைத்திருக்கிறார்கள்” இதெல்லாம் ஒரு கேள்வியா என்பது போலப் பார்த்தார் பட்டர்.

“கோபித்துக் கொள்ளாதீர்கள், பட்டரே! இங்கே பரமேஸ்வர ராஜாவின் பட்டாபிஷேகத்துக்குப் பக்கத்தில், ஒரு வெற்றிடம் இருக்கிறது. ஆனால், அதற்கு மேலும், வலப்பக்கத்திலும் அடுத்துச் செதுக்கியிருக்கிறார்களே, அதனால் கேட்டேன்.”

“ஓ! இந்த வெறுமையைப் பற்றிக் கேட்கிறீர்களா? இந்தச் சமயத்தில், காஞ்சியில் அரசரே இல்லை. அதை எப்படிக் காட்டுவது அதில் என்ன செதுக்குவது என்று மஹாராஜா இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். ஸ்தபதி சொன்னார். அந்த வெறும் கட்டத்துக்கு மேலே வரிசையாகச் செல்வது, காஞ்சியில் இருந்து ஹிரண்யவர்ம மஹாராஜாவை, அரியணை ஏற்றுக் கொள்ள வாருங்கள் என்று கேட்கப் போன குழு.”

“ஓ! இவர்கள்தான் மூலப்பிரகிருதிகளும், கடிகையார்களுமா? இது என்ன ஓர் கோவிலைப் போல இருக்கிறதே. எங்கோ பார்த்தாற்போல இருக்கிறது”

“இல்லாமல் எப்படி இருக்கும்! இந்தப் பரமேஸ்வர விண்ணகரம்தான். வெளியில் இருந்து பார்த்தால், இந்த ரூபத்தில்தான் விமானம் தெரியும்”

“ஆஹா! என்ன ஒரு கட்டமைப்பு! இது யார்? இரண்டு பேர்கள், ஒருவனைக் கொல்கிறார்களே?”

“சித்திரமாயனை, உதயசந்திரராஜா கொல்கிறார். இந்தச் சதுரத்தில், சின்னச் சின்னதாகத் தடுப்புக்கோடுகள் இருக்கின்றன பாருங்கள், ஒவ்வொன்றும் ஒரு காட்சி. அதோ, அந்தக் குதிரையில் போவது, அவர்தான்.”

“உதயசந்திரராஜாவா? அவர் அரசருக்குத் தளபதியாக இருந்தவர்தானே?”

“மஹாராஜாவுக்குத் தளபதி, எங்கள் எல்லோருக்கும் ராஜா. நான் உதயசந்திரமங்கலத்தைச் சேர்ந்தவன்தான். மேலடையாற்று விஷயம். எங்கள் ராஜா சொல்லி, மஹாராஜா எங்களைப் போன்ற 108 அந்தணர்களுக்கு, ஜல யந்திரம் சகிதம் எங்கள் கிராமத்தையே, வேறு சில வேண்டப்படாத மாற்றார்களிடம் இருந்து பிடுங்கி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். என்னுடைய பெயரும் சாசனத்தில் இருக்கிறது” பெருமிதமாகச் சொன்னார் மாதவ சர்ம பட்டர். “நான் பகவத் கைங்கரியமாக, இக்கோவில் பணியைச் சிரமேற்கொண்டு செய்து வருகிறேன்.”

இங்கே என்ன எழுதியிருக்கிறது?”

“’இவ்வகையே பிரம்மா ஆதியாக வாராநின்ற பல்லவ வம்சத்துள் பரமேஸ்வர போத்தரையர் ஸ்வர்கஸ்தர் ஆவது’” – விளக்கினார் பட்டர். “கிரந்தம் படிப்பீர்களா?” என்று கேட்டார்.

“ஏதோ சில எழுத்துக்கள் தெரியும். இந்த எழுத்துக்கள் கொஞ்சம் வியத்தியாசமாக இருக்கின்றன”

“ஆமாம். ராஜசிம்ம ராஜா காலத்தில் கொஞ்சம் மாற்றினார்கள். இப்போது இன்னும் கொஞ்சம் மாறி இருக்கிறது. இன்னும் எல்லோருக்கும் பழக்கத்தில் வரவில்லை. ஸம்ஸ்கிருதத்தை எழுதும்போது, ஸம்யுக்த அக்ஷரங்களை, அவரவர்கள் இஷ்டப்படி கொஞ்சம் மாற்றி மாற்றி எழுதிக்கொள்கிறார்கள்.”

“இதென்ன சிற்பம்? அரசரும் அரசியும் வீற்றிருக்க யாரைத் தூளியில் சுற்றிக் கொண்டுவருகிறார்கள்?”

“சிவசூடாமணி ராஜசிம்ஹ மஹாராஜாவும், லோகமாதேவி மஹாராணியும்தான். அவர்களுக்கு முன்னால், இளவரசர் மஹேந்திரவர்மரைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள், பாருங்கள். சாளுக்கிய விக்கிரமாதித்தியரை எதிர்த்துச் சென்று, உயிர்க் காயம்பட்டு வீரமரணம் அடைந்தார் அல்லவா? அந்த நிகழ்ச்சிதான். அதோ பாருங்கள், அந்தணர்கள் இளவரசரின் சத்கதிக்காக மந்திரங்கள் ஓதுகிறார்கள்” சொல்லும்போதே பட்டரின் குரல் உடைந்தது.

“இதற்குப்பிறகு, மஹாராஜா மஹாராஜாவாகவே இல்லை. மஹாராணியும் மிகவும் நிலைகுலைந்து விட்டார்கள். புலிகேசியோடு ஏற்பட்ட விரோதம், காஞ்சியையே நலித்துவிட்டது. ஒருவழியாக அந்த இரட்டராஜா, புலிகேசி பரம்பரையை ஒழித்துவிட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டார் என்று பார்த்தால், இதோ, இரட்டசேனை, எங்களையே இம்சை செய்ய வந்திருக்கிறது.”

துருவர் இன்னும் சில சிற்பங்களைப் பற்றிக் கேட்க, அவற்றை விளக்கிய பட்டர், அவற்றைத் தவிர முற்றும் முடிந்தவை, அரைகுறையாகச் செதுக்கப்பட்டவை என்று இன்னும் இருந்த ஏராளமான சிற்பங்களைச் சிரத்தையோடு விளக்க, ஆர்வத்துடன் கேட்டார் துருவராஜா. பிறகு, மடியில் இருந்து ஒரு கழஞ்சு பொன்னை எடுத்துப் பட்டர் கையில் கொடுத்தார்.

“மிக அழகாக எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னீர்கள். அவகாசம் எடுத்துக்கொண்டு மீண்டும் வருகிறேன்.” என்றார்.

“கழஞ்சு பொன்னா? இதெல்லாம் எதற்கு? எனக்கு வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” கையை நீட்டித் திருப்பிக் கொடுத்தார்.

“பொன்னை மறுக்கிறீர்களே? இங்கே இந்த நாணகம் பெயராதா?”

“அபசாரம்! இரட்டபாடிப் பொன்பணம் பெயராமற் போகுமா? அதுவும் காஞ்சியில்? இது மிக அதிகம். நீங்கள் மஹா செல்வவந்தர் என்று தெரிந்துகொண்டேன். ராஜகுலத்துக்கு அணுக்கமானவர் என்று வேறு தோன்றுகிறது. ஏதாவது பிழையாகப் பேசியிருந்தால் க்ஷமிக்க!” என்று கை கூப்பினார்.

“பட்டரே! உங்கள் திறமை, ஞானம், கைங்கர்யப் பாங்கு, காரிய சிரத்தை இவற்றின் மேலுள்ள அபிமானத்தில் கொடுக்கிறார். தட்டுச் சொல்லாது பெற்றுக் கொள்ளுங்கள்” கோவிந்தராஜன் வலியுறுத்த, பட்டர், தயக்கத்தோடு கையை இழுத்துக் கொண்டார். கழஞ்சுப் பொன்னைப் பார்த்தபடியே,

“இது என் குடும்பத்துக்கு ஒரு வருடம் அன்னம் சாய்க்கும்” என்றார்.

“ஒரு வருடத்துக்கா? அதீதமாகச் சொல்கிறீரே? இதற்கு எத்தனை கலம் நெல் கிடைக்கும்?”

“பத்து கலம் செந்நெல்லே வாங்கலாம். அறுவடை சமயத்தில், வரத்து அதிகமாக இருக்கும்போது, பன்னிரண்டு கலம் கூடக் கிடைக்கும்” கை கூப்பினார்.

“காலை வேளையில் வாருங்கள், பெருமாள் அவதாரங்களை எல்லாம் பார்க்கலாம்” என்று விடை கொடுத்தார் பட்டர்.

கோவிலை விட்டு வெளியே வந்த துருவராஜர் ஏதும் பேசவில்லை. “அரண்மனைக்குப் போவோம்’ என்று சொல்லிவிட்டுப் பணியாட்களை வழி காட்டச் சொல்லிவிட்டுக் குதிரையில் ஏறினார். கோவிந்தனும் ஏதும் பேசாமல், அவரைப் பின் தொடர்ந்தான்.

 

இருள் கவிந்துவிட்டிருந்தது. வழியில் தெருக்களில், நடமாட்டம் எதுவும் இல்லை. சில இல்லங்களில் மட்டும், வெளி மாடத்தில் சில தீபங்கள் மலையேறத் துடித்துக் கொண்டிருந்ன. அவ்வப்போது, தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு சில வீரர்கள் குதிரைகளை விரட்டிக்கொண்டு போனார்கள்.

‘களாங்’, ‘களாங்’ என்று இரும்புச் சக்கரங்கள் ஸப்திக்க நாற்புறமும் திரைச்சீலையால் இழுத்துக் கட்டப்பட்ட ஒரு பெரிய பார வண்டியை ஒரு யானை, தரை அதிர இழுத்துக் கொண்டுபோனது. போர்க்கருவிகள் என்று தெள்ளென எல்லோருக்கும் தோன்ற, நகரம் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள்.

அரண்மனைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த படைவீரர்களிடம் தூதுவன் கொடுத்திருந்த ஓலையைத் தந்து, ‘மஹாராணியைப் பார்க்கவேண்டும்’ என்றான் கோவிந்தன். இலச்சினை பொறிக்கப்பட்ட ஓலையைப் பார்த்தவன், மரியாதையாக வணங்கினான். பின்னால் திரும்பி ஏதோ சத்தமிட்டான். திடுதிடுவென இரண்டு வீரர்கள் ஓடிவந்து, துருவராஜாவை இறங்குவதற்குக் கால் தாங்கினார்கள். கோவிந்தனும் பணியாட்களும் அதற்குள்ளே குதிரையில் இருந்து குதித்தார்கள். ஓலையைப் பார்த்த வீரன், கூடவே வந்திருந்த பணியாட்களைச் சுட்டிக் காட்டி, அவர்கள் நுழைய அனுமதி இல்லை என்றான். சரி என்று தலையசைத்த துருவர், அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, முன்னால் காத்துக் கொண்டிருந்த இரண்டு வீரர்களைப் பின்தொடர்ந்தார். கோவிந்தராஜன், இரண்டு குதிரைகளையும் பணியாட்களிடம் ஒப்படைத்துவிட்டுப் பின்னால் வந்தான். ரேவாதேவி கொடுத்திருந்த ஓலையைத் திருப்பி வாங்கிக்கொள்ள கை நீட்டிய கோவிந்தராஜனிடம், வீரன் பணிவாகச் சொன்னான், ‘இது ஒருபயன் ஓலை. நீங்கள் மஹாராணியைப் பார்த்துவிட்டு வரும்போது, வேறு வெளிச்செல் விடை வாங்கிக்கொண்டு வந்துவிடுங்கள். இல்லாவிட்டால், புறநகர் வேலியைத் தாண்டமுடியாது; என்று சொல்லிவிட்டு, ஓலையை அங்கிருந்த விளக்கில் காட்டி எரித்தான்.

“நீங்கள் வருவீர்கள் என்றுதான் மஹாராணியார் என்னை வாயிலிலேயே காத்திருக்கச் சொல்லியிருந்தார். உள்ளே சென்று அமருங்கள். நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்” என்று சொல்லிப் பெரிய தாழ்வாரம் உள்ள ஒரு கூடத்தில் அமர்த்திவிட்டுப் போனான் ஒரு வீரன். மற்றவன், அங்கேயே நின்றுகொண்டான். சற்று நேரத்தில், சலசலப்புக் கேட்க, உள்ளிருந்து, திரையை விலக்கி ஒரு வீரன் பிடித்துக்கொள்ள, பணிப்பெண்கள் இரண்டுபேர் பின்தொடர, ரேவா மஹாராணி கூடத்துள் நுழைந்தாள். துருவரும் கோவிந்தரும் எழுந்து நின்றார்கள். துருவர் கைகூப்பிக் கொண்டே, கோவிந்தனைக் கண்சாடை காட்ட, கோவிந்தன் ரேவாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

“நீண்ட ஆயுளைப் பெறுவாய்” என்று வாழ்த்திய ராணி, “ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று கூறியபடியே துருவராஜா காலில் விழுந்தாள். திடுக்கிட்டுப் போன துருவர், சுதாரித்துக்கொண்டு, “நீண்ட சுமங்கலியாக இரு, தாயே” என்று ஒரு க்ஷணம் கண்கள் கலங்க, மனம் நெகிழ்ந்து வாழ்த்தினார். யாரோ ஒருவர் என்று நினைத்தோம், மஹாராணியே காலில் விழுகிறாரே என்ற அதிர்ச்சி, சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் முகத்தில் பட்டுத் தெறித்து, எல்லோரையும் பற்றிக் கொண்டது. அத்தனை பேரும், முகம் தரையில் பதிய, உடல் நீட்டி வணங்கினார்கள். கையை உயர்த்தி, எல்லோரையும் ஆசீர்வதித்த துருவரை, “வாருங்கள் உள்ளே போய்ப் பேசலாம்” என்று அழைத்துக்கொண்டு போனாள், பல்லவப் பட்டமஹிஷி ரேவாதேவி. உள்ளே இருந்த அனைவரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, மூவரும் அமர்ந்தார்கள்.


“இவன்தான் கோவிந்தனா? உன்னைப் பற்றி நிறைய கேள்விப்படுகிறேன். சிறு வயதிலியே மஹாவீரன் என்கிறார்கள். நீ பிறப்பதற்கு முன்பே, நான் இங்கே வந்துவிட்டேன். கற்கன் அப்போது குழந்தை. எப்படி இருக்கிறான்?”

“நன்றாக இருக்கிறான் மஹாராணி. இன்னொரு தமையனும் இருக்கிறான்.”

“கம்பராசன்தானே? இங்கே பக்கத்தில் கங்கவாடியைக் கவனித்துக் கொள்கிறான், அல்லனா?”

“ஆமாம் மஹாராணி”

“நீங்கள் நலமாக இருக்கிறீர்களா, சிற்றப்பா? சீலாமஹாராணிக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவியுங்கள். என் அன்னையைத்தான், இறுதிக்கு முன்னர் ஒருமுறை பார்க்க இயலாமல் போய்விட்டது.”

“உன்னை எப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருந்தார். உன்னைப் பற்றிய பேச்சு எப்படியாவது வந்துவிடும். கிருஷ்ணராஜாவுக்கும், உன்னைப் பற்றிய நினைவு உண்டு. அவர் மறைந்தபோதும், உன் நலத்தை நாங்கள் எப்போதும் மறக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுத்தான் சென்றார். அவர் கன்யாதானம் செய்துகொடுத்த புத்திரி அல்லளோ நீ?”

மெல்லியதாக முறுவல் செய்தாள் ராணி. “அதெல்லாம் எப்போதோ போனஜென்மத்தில் நடந்ததுபோல இருக்கிறது. சூழ்நிலை எப்படியெல்லாம் மாறிக்கொண்டு வருகிறது!” உயிர்த்தெறிந்தாள் பல்லவ மஹிஷி.

“சிற்றப்பா கோவிந்தராஜரைப் பற்றிப் புருஷோத்தமர் சொன்னார். கேட்கக் கஷ்டமாக இருந்தது. இப்படியெல்லாம் கூட நடக்கலாம் என்று தோன்றியதே இல்லை. இவருக்குக் கோவிந்தர் மீது தனிப் பிரீதி உண்டு. முதன்முதலில், இவரைச் சந்திக்கத் தந்தி மஹாராஜா அவரை அனுப்பினார் அல்லவா? அப்போதே இவருக்கு அவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. உங்களை அணுக்கமாக ஏற்றுக் கொள்ள, இந்தப் பிரீதிதான் தடுக்கிறது.”

“எப்போது வருவார்?”

“வரும் நேரம்தான். கோவிலுக்குப் போயிருக்கிறார்.”

“வைகுண்டநாதர் கோவிலுக்கா?”

“இல்லை, முக்தேஸ்வரத்துக்கு. வைகுந்தவாசரைக் காலையில் தரிசித்து விடுவார். அதற்குப் பிறகுதான், எந்தப் பணியும்.”

“கோவிலைப் பார்த்தேன். அற்புதமாக உருவாகியிருக்கிறது”

“ஓ! தரிசனம் செய்துவிட்டீர்களா? பல்லவ வமிசத்தின் வரலாற்றுக் கோசமாக வடிவெடுத்து வருகிறது”

“இவர் பழைய வரலாற்றையெல்லாம் எப்படி அமைக்கிறார்? பல தலைமுறைகள் முன்பே புலம் பெயர்ந்தவர்தானே?”

“இப்படி ஒன்று அமைக்கவேண்டும் என்று மகேந்திரவர்மருக்குத் தோன்றியதாம். அவர் ஒன்றிரண்டு செதுக்கியும் வைத்திருந்தார். ராஜசிம்மர், கைலாசநாதர் கட்டி முடித்ததும், இந்தப் பணியை எடுக்கவேண்டும் என்று முனைந்தாராம். அப்போதுதான், யுவராஜா கொல்லப்பட்டார். கண்முன்னால், தூளியில் சுற்றப்பட்டுக் கொண்டுவந்த புத்திரனைப் பார்த்தபின், அவர் பழைய நிலைக்குத் திரும்பவே இல்லை, மனத்தளவில் ஒடுங்கிப்போய்விட்டார் என்கிறார்கள். அந்தச் சிற்பங்கள் சிற்பக் கூடத்திலேயே இருந்தன. இவர், அதை வெளியெடுத்து, இன்னும் சிற்பங்கள் அமைத்து, விருத்தி செய்து விட்டார். நிகழ்ச்சி நடக்க நடக்க, ஓவியர்களைக் கொண்டு சித்திரம் எழுதுவித்து, ஸ்தபதிகளைச் செதுக்கச் சொல்கிறார்.”

அந்தச் சமயத்தில், வெளியே கட்டியக்குரல் கேட்டது.

“வந்துவிட்டார். வாருங்கள் போய்ப்பார்ப்போம்.” என்று எழுந்தாள் ரேவாதேவி. துருவரும், கோவிந்தனும் எழுந்துகொண்டனர். அப்போது, திரைச்சீலை ஒதுங்க, “யாரோ முக்கியமானவர்கள் வரவேண்டும் என்றாயே ரேவா, வந்து விட்டார்களா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் பல்லவமன்னர், க்ஷத்ரியமல்லர், நந்தி விக்கிரமவர்மர்.

அவர் வந்ததும் மெல்லச் சொல்லிச் சந்திக்க ஏற்பாடு செய்யலாம் என்றிருந்தவளுக்கு, இப்படித் திடுமென மஹாராஜாவின் எதிர்பார்க்காத பிரேவேசத்தால், ஒரு கணம் திடுக்கிட்ட ரேவாதேவி உடனே, “மஹாராஜா வாழி! நான் ஏதாவது அபராதம் செய்திருந்தால், அபலையை மன்னித்துவிடுங்கள். எந்தத் தண்டனைக்கும் சித்தமாக இருக்கிறேன்” என்று காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.

சற்றே பின்வாங்கிய நந்திவர்மர், “என்ன அபராதம் செய்துவிட்டாய், நான் மன்னிப்பதற்கு? இவர்கள் யார்?” என்றார்.

“இவர்.. .. .. .. இவர்.. .. “ நாக்குச் சிக்கிக்கொண்டது ரேவாவுக்கு. தடுமாறினாள். முன்னாலேயே என்ன சொல்லவேண்டும் என்று நூறு முறை யோசித்து வைத்துக்கொண்டு சித்தமாக இருந்தவள், நேருக்கு நேராகச் சொல்வதின் பிரமாண்டம் அறிவுக்கு உறைக்க ஸ்தம்பித்துப் போனாள்.

அவள் நடுங்குவதைக் கண்ட துருவர், தானே முன்வந்து “நான் இவளுடைய தந்தைக்குச் சிற்றப்பா மகன். நிருபம தாரவர்ஷன் என்பது என்னுடைய பெயர். இவன் என்னுடைய புத்திரன், ஜகத்துங்க பிரபூதவர்ஷன். மஹாராஜா நந்திவர்ம பல்லவருக்கு எங்கள் இருவரின் நமஸ்காரங்கள்” என்று கை கூப்பினார்.

காதில் தான் கேட்டது என்ன என்று புரிந்துகொள்ளச் சில கணங்கள் பிடித்தன நந்திவர்மருக்கு. அப்படியே உறைந்து போனார். ஒரு நிமிடம் கூடமே ஸ்தம்பித்தது.

“என்ன .. .. .. .. .. என்......ன............”

அவருடைய முகத்தில், பயம், கோபம், குழப்பம் எல்லாம் மாறி மாறி மின்னலடித்தன. அவரால், கட்டுக்குள் அடக்கமுடியாத அதிர்ச்சி. என்ன செய்வதன்றே அவருக்குத் தோன்றவில்லை. என்ன செய்துவிட்டாள் இவள், என்ற எண்ணம் தலைதூக்க, நந்திவர்மரின் ஆற்றாமையால் விளைந்த சினம் முழுதும் ரேவாவை நோக்கிப் பாய்ந்தது. ரேவா, இடைவிடாத மழையில் நனைந்துகொண்டு, நடுங்கிய குருவிக்குஞ்சு போல நடுநடுங்கிக் கொண்டிருந்தாள்.

“ஒரு நாட்டின் மஹாராஜாவைக் காஞ்சி வரவேற்கும் முறை இதுதானா? அமர்வதற்குப் பலகை கூட தாராதோ, பல்லவ வமிச விருந்தோம்பல்?” என்று துருவர் இடைபுகுந்து, சினவெள்ளத்துக்கு அணை செய்தார்.

சுதரித்துக்கொண்ட நந்திவர்மர், “மன்னிக்க வேண்டும். விருந்தா, வைரியா என்று இனம் காணமுடியாததால் வந்த குழப்பம். வகை தெரியாத வம்சமன்று, பல்லவம். அமருங்கள்.” என்று இருக்கையைக் காட்டினார். “இன்னும் மூழ்கிப் போகவில்லை, இங்கு வந்தாரை வரவேற்கும் பண்பு” என்று கையையும் கூப்பினார்.

தான் மூழ்குவதைப் பற்றி அனுப்பிய செய்தியைத்தான் குறிப்பிடுகிறார் என்பதை உணர்ந்து கொண்ட துருவர், புன்முறுவலோடு அமர்ந்தார். “நீங்களும் அமருங்கள். நான் வைரியாக வந்திருந்தால், வந்திருக்கும் முறையே வேறாக இருந்திருக்கும். இப்படி வணிக வேடத்திலா வருவேன்? இன்று காஞ்சியின் கேளிராகத்தான் வந்திருக்கிறேன்.”

துருவராஜாவின் பேச்சில் இருந்த தொனியும், “நீயும் அமர்ந்துகொள் ரேவா” என்ற ரேவாவிடம் அவர் சொன்னபோது அவர் குரலில் இருந்த பாசமும் கூடத்தில் நிலவியிருந்த வெப்பத்தை வெகுவாகக் குறைத்தது.

“உங்களுக்குத் தெரியாமல் என்னை ரேவா வரவழைத்தது, தவறுதான். அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு எதிர்பார்க்காத சந்திப்பை, அதுவும் தற்போதைய சூழலில், என் மேல் திணித்திருந்தால், நானும் கோபப்பட்டிருப்பேன். இன்னும் அதிகமாகவே. அவள் உங்கள் மீது கொண்ட பக்தியும், இந்தக் காஞ்சி நகர் மீது அவள் கொண்ட பாசமும்தான் அவளை இப்படிச் செய்ய வைத்ததைத் தாங்கள் உணராதவர் அல்லீர். உங்களையும் என்னையும் நேருக்கு நேர் சந்திக்கவைக்க வேறு வழி அவளுக்குத் தோன்றவில்லை. கிருஷ்ணராஜா காலத்தில் இருந்தே, நம் இருவரிடையே செய்திப் பரிமாற்றங்கள் நடந்திருந்தாலும், நேருக்கு நேர், என்னுடைய ஆட்சியில் நான் இப்போதுதான் உங்களைச் சந்திக்கிறேன்.

“இணக்கமான சூழ்நிலையில் சந்தித்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். இப்படி எதிர் புதிரான நிலை ஏற்படக்கூடாது என்று எவ்வளவோ முயன்றேன். ஆனால், நீங்கள் அந்த முயற்சிகளையெல்லாம் நிராகரித்து விட்டீர்கள். குறையாகச் சொல்லவில்லை. உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து, உங்கள் மனத்துக்குப் பட்டதை, நீங்கள் செய்தீர்கள். அந்த எண்ணத்தை மாற்றுவதற்கு, எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, நானே படைக்குத் தலைமை தாங்கிவந்து, ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். வேறு யாரை வேண்டுமானாலும் தலைமையாக நியமித்து அனுப்பியிருக்கலாம். ஆனால், காஞ்சியைத் தலைகுனிய வைப்பது என் நோக்கமல்லவே!

“காஞ்சி இராட்டிரக்கூடத்துக்கு உறவு நாடு. தந்திதுர்க மஹாராஜா அப்படித்தான் நினைத்து, இந்த உறவை ஏற்படுத்தினார். அதன் உண்மையைப் புரிந்துகொண்டு, என் தந்தை அதைப் பலப்படுத்தினார். அவர்களை விடவா எனக்கு அதிகம் தெரிந்துவிடப் போகிறது? அவர்கள் நினைத்து உருவாக்கியதை, என்னால் முடிந்தவரை காப்பாற்றுவதுதான் என்னுடைய நோக்கம்.

“உங்களுக்கு, என் சேனைக்கடலா, சுறவு சுற்றும் அலைகடலா என்று கேட்டபோது, இனிமேல் உங்களை இணக்கமாகச் சந்திக்கும் வாய்ப்பே கிடைக்காது என்றுதான் நினைத்தேன். அதனால்தான், அம்மாதிரி மிரட்டல் தொனி கலவிய சொற்களையும் பிரயோகித்திருந்தேன். மன்னிக்கவேண்டும். ரேவா எங்களைத் தெரிந்துகொண்டவள். சிறுவயதிலேயே, ராஜாங்க முதிர்ச்சி அடைந்துவிட்டவள். அவள் துணிந்து எடுத்த முடிவால், எனக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிட்டியது. முதன்முறையாக, உங்களைச் சந்தித்துவிட்டு வந்தபிறகு, தந்திதுர்க மஹாராஜா, என் தந்தையாரிடம் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்து கொண்டதில் இருந்தே, உங்களை நேரில் பார்க்கவேண்டும் என்ற அவா தோன்றிவிட்டது. இப்போதுதான் அது ஸாபல்யமாயிற்று. அப்போது இராட்டிரக்கூடம் என்ற ஓர் அரசே கிடையாது. அதை ஸ்தாபிக்க வேண்டும் என்ற விதையை விதைத்தது நீங்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

சந்தித்த விதம்தான் அதிர்ச்சி என்றால், துருவர் பேசியவிதமும், பேச்சில் இருந்த பொருளும் நந்திவர்மருக்கு இன்னும் அதிர்ச்சி தந்தன என்பது அவருடைய பிரமிப்பிலிருந்தே தெரிந்தது. “நான் இராட்டிரக்கூட ஸ்தாபனத்துக்கு வித்திட்டேனா, தெரியாது” என்று தலையசைத்தார்.

“உங்கள் தந்தை இயலாமையால் மறுத்துவிட, உங்கள் தமையன்மார்களும் புதியதின் நிலையற்ற தன்மைக்கு அஞ்சி மறுக்க, அந்தப் பன்னிரண்டு வயதில், நீங்கள் ஏன் இந்த முடிவு எடுத்தீர்கள் என்பதைத் தந்திதுர்கருக்கு விளக்கினீர்களே, அதுதான், அவரைத் தனக்கென்று ஒரு சாம்ராச்சியத்தை நிறுவத்தூண்டியது. அதற்கப்புறம் உங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், அதை நீங்கள் சந்தித்தவிதம் எல்லாமும் எங்கள் எல்லோருக்கும் தெரியும். தெரியப்படுத்தினார்கள் எங்கள் மூப்பர்கள். அப்படி உங்களை மதிப்போடு உயரத்து வைத்திருக்கும் இராட்டிரக்கூட அரசை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

“இரட்டபாடி, செல்வத்திலும், சக்தியிலும் துண்டகவிஷயத்தை விடப் பன்மடங்கு பெரிய மண்டலம். இது நான் பெரியவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகக் கூறவில்லை. இதை எதிர்ப்பதால், வரும் சேதம் காஞ்சிக்கு மிக அதிகமாக இருக்கும் என்பதற்காகக் கூறுகிறேன். இதில் இரண்டு கருத்துக்கள் கிடையா. உங்களுக்கும் இந்த உண்மை தெரியும். பண்பட்ட மக்கள் இருக்கும் நாடு, உங்களுடையது. எனக்கெல்லாம் ஒரு தலைநகர் கூடக் கிடையாது. ஆனால், காஞ்சி அப்படியல்லவே? பல நூறு வருடங்களாகச் சிறப்புடன் விளங்கும் இடம். காடவ வம்சம், இதைத் தம் தலைநகராக ஆக்கிக்கொண்டு, இன்னும் இதைச் சிறப்பாக வளர்த்திருக்கிறது.

“கல்வி விளக்கைத் தூக்கிப் பிடித்து நின்றுகொண்டு, குவலயத்தின் அஞ்ஞாமை இருளைத் துரத்திக் கொண்டிருக்கும் இடம் காஞ்சி. கோவில்களால் நிறைந்து, சமயபேதங்களைத் தாண்டிப் பக்தியைப் பரப்பிக்கொண்டு வரும் இடம். உஜ்ஜைனி, ஸ்ரீமாலா, நாலந்தா போன்று தனக்கென்று ஓரிடத்தை ஸ்தாபனம் செய்துகொண்டுள்ள இதற்கு ஏற்படக் கூடிய சேதத்தை யோசித்துப் பார்த்தீர்களா? இந்த முப்பது வருடங்களாகத்தான் ஓரளவுக்கு அமைதியையும், வளத்தையும் பார்த்துவருகிறது. அப்படி அமைதி நிலவுவதற்குக் காரணமும் நீங்கள்தான். உங்கள் தன்னலமற்ற அவதியையும் தியாகத்தையும் கொடுத்து வளர்த்தபிறகு, மீண்டும் ஏன் இடர்க்குழியில் தள்ளவேண்டும்? உங்களுக்கு இராட்டிரக்கூடத்தின் மீது என்ன பகை? அதைத் தெரிந்துகொள்வதுதான் என்னுடைய நோக்கம்.” என்றார் துருவர்.

பணிவான சொற்கள். ஆனால், அவற்றின் பின்னே தென்பட்ட உறுதி! வலிமை என்னும் இரும்பு, பணிவு என்னும் பஞ்சு வைத்துத் தைத்த போர்வையைச் சுற்றிக்கொண்டு வந்து மெத்து மெத்தென்று உரசியதைப்போல. நந்திவர்மன் முகத்தில் சலனம் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னார்:

“இந்த உலகமே எதிர்க்க அஞ்சும் இரட்டபாடியின் மஹாராஜா இப்படி வணிகரைப் போல வேடமிட்டுக் கொண்டுவந்து, யாரை எதிர்க்கப் படையெடுத்து வந்தீர்களோ, அவருடைய அரண்மனைக்கே நிராயுதபாணியாக வந்து பேசிக்கொண்டிருப்பதில் இருந்தே, காஞ்சியின் பேரில் உங்களுக்கு துவேடம் இல்லையென்று புரிகிறது. காஞ்சிக்கும் இராட்டிரக்கூடத்தின் பேரில் துவேடமன்று. நாடற்றுக் குடும்பமற்று, நான் முன்பின் அறிந்திராத மண்ணுக்காக அங்கும் இங்கும் நாடோடி போலத் திரிந்து கொண்டிருக்கும் காலத்தில், அந்த வைரமேகம், என் நிலைமையைப் புரிந்துகொண்டு, கார்மேகம் போலப் பொழிந்ததால்தான், இந்தப் பூமி இன்று வறண்டு போகாமல் செழிக்கிறது. அதை என்றும் நினைவில் வைத்திருப்பதால்தான், எங்கள் புத்திரனையும் வைரமேகா! தந்தீ! என்று வாயார அழைக்கிறோம். உங்கள் தந்தை அகாலவர்ஷர் எனக்கு மாமடி போலத்தான். தமையன் மகன் கொடுத்த வாக்கைச் சிரமேற்கொண்டு, ரேவாவுக்குத் தந்தை போல விளங்கி, இங்கே வந்து எனக்குக் கன்யாதானம் செய்துகொடுத்துக் கடமையாற்றினார். முன்பின் ராஜ்யபாரம் செய்து அறியாத நான், அவர் இங்கு வந்திருந்தபோது, அவரிடம் கற்றுக்கொண்டது நிறைய. கங்கத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட அசாத்திய கோபத்துக்கு ஒரு காரணம், இங்கே காஞ்சி விஷயத்தில், கங்கம் நடந்துகொண்ட விதத்தைக் கேட்டு விளைந்ததுதான். அப்படிக் காஞ்சிமீது பாசம் காட்டியவர்.

“அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜன் எனக்கு ஒரு சகோதரன் போல. அவனுடைய பெயரைத் தாங்கி நிற்கும் இந்த இளைஞன், அதேபோல வீரனாகவும், சொல்வன்மையும், நிர்வாகத் திறமையும் பெற்று விளங்கட்டும். கோவிந்தராஜனை இழந்ததால் இராட்டிரக்கூடத்துக்கு ஏற்பட்ட வெறுமையை நிரப்பட்டும்” என்றார்.

எதைக் குறிப்பிட்டு நந்திவர்மர் இப்படிச் சொல்கிறார் என்று புரிந்தது துருவருக்கு. இவ்வளவு தவறாகப் புரிந்துகொண்டவரின் எண்ணத்தின் அடிப்படையை எப்படி மாற்றுவது, எங்கிருந்து துவங்குவது, ஒரு சில மணிநேரச் சந்திப்பில் இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியுமா? முடியவில்லை என்றால் என்ன செய்வது? காஞ்சிப்போர்தான் ஒரே வழியா என்றெல்லாம் யோசனை அலைமோத, மௌனமானார். ரேவாவின் கண்களில் எதையாவது சொல்லி, இவர் கருத்தை மாற்றிவிடுங்களேன் என்ற இறைஞ்சல் தெரிந்தது.

“கோவிந்தராஜரைப் போல எனக்கு ஆக வேண்டாம்” என்றான் கோவிந்தராஜன். திகைத்துப் போனார் நந்திவர்மர். இந்தப் பிரதியுத்தரத்தை எதிர்பார்க்கவில்லை அவர்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தார்.

“அவர் என்ன செய்துவிட்டார் என்று அவரைப்போல என்னை ஆக வாழ்த்துகிறீர்கள்? அவரை இழந்து என் தேசம் இழந்ததெல்லாம் குடிமக்கள் மேல் அலட்சியம், சுயமதிப்பு, ராஜாவின் சுயநலம், வீம்பு இவைதான். இவை போய்த்தொலையட்டுமே”

“நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால், அவருடைய குணநலங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு இப்படித் தாழ்த்திப் பேசுவது இயல்புதான்.”

“நமக்கு ஒருவரைப் பிடித்துவிட்டதென்றால், அவருடைய கீழ்மையைச் சுத்தமாக ஒதுக்கிவிட்டுப் புகழ்ந்து தள்ளுவதும் இயல்புதானோ, மஹாராஜா?” கோவிந்தனின் குரலில் சூடு தெறித்தது.

நந்திவர்மர் தன்னை அடக்கிக்கொள்வது அவர் மூச்சிலிருந்து தெரிந்தது.

“எது கீழ்மை? ஏற்கனவே நிர்வாக அம்சங்கள் நிறைந்து, அதிகார ஒழுக்குக்குப் பழகிப்போன இந்தக் காஞ்சியைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் எனக்குத் திக்குமுக்காடிப் போய்விட்டது. அப்போதுதான் பிறந்த இராச்சியத்தை, அதுவும் இரண்டு தலைமுறைகளாகவே ஆளப் பட்டிருந்த நாட்டைக் கட்டமைப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா?”

“இளைஞன் என்றாலே உலக விஷயங்களைக் கூர்ந்து கவனிக்காத பருவம் என்று எல்லோரையும் போலப் பொதுப்படையாக மேலோட்டமாக யோசித்து முடிவு கட்டிவிடாதீர்கள், மஹாராஜா. உங்களுடைய இளம்வயதையும் எண்ணிப் பாருங்கள். தந்திதுர்க ராஜா, சாதித்தது இளம்வயதில்தானே. எனக்கும் அந்தச் சிரமம் தெரியும். அதைப் புரிந்துகொண்டுதான் பேசுகிறேன்.”

நந்திவர்மர் தன்னைச் சுதாரித்துக் கொண்டார்.

“உன்னைக் குறைத்து மதிப்பிடவில்லை, இளைஞனே! நான் அறிந்த விஷயங்களை வைத்துக் கூறுகிறேன். கோவிந்தராஜாவை நேரில் பார்த்துப் பேசியவன் நான் என்பதை மறந்துவிடாதே”

“ஒரே ஒரு சந்திப்பில், அதுவும், ராஜாங்கச் சாணக்கியத்தில் தேர்ந்த இரண்டு அரசர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அவர்களுடைய ஆணை மற்றும் வழிகாட்டல்படி அவர் நடந்துகொண்ட விதத்தை வைத்துப் பேசுகிறீர்களே, மஹாராஜா? கூடவே இருந்தவர்களுக்குத் தெரியாத குணமா?”

“அதை வைத்து மட்டும் சொல்லவில்லை. ஓர் அரசனுக்கு விஷயங்கள் கசியாது என்று நினைக்கிறாயா?”

“கசிவதெல்லாம் உண்மை என்று நினைக்கிறீர்களா? உங்களை இப்படி மறுத்துப் பேசுவது, எனக்கே இவ்வளவு கஷ்டத்தைத் தருகிறது என்றால், ஒற்றர்கள், தாம் கருதுவது, அரசனுடைய கருத்தில் இருந்து மாறுபட்டால், தைரியமாக மாற்றுக் கருத்தைச் சொல்லி விடுவார்கள் என்பது நிஜத்தில் சாத்தியமா மஹாராஜா? உங்களுக்கு ஏற்கனவே கோவிந்தராஜாவைப் பற்றி ஓர் அபிப்பிராயம் ஏற்பட்டு விட்டது. அது முதலில் சரியாகவும் இருந்திருக்கலாம். ஆனால், நிலைமை மாறிவிட்டபின், அதை யாரும் உங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. கழுதையைக் குதிரை என்று சொல்லியே உங்களுக்கு விற்று விட்டார்கள். இப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும்”

நந்திவர்மரின் முகம் மாறிவிட்டது.

“காஞ்சியின் ஒற்றர்களை மிகவும் அவமதிக்கிறாய் கோவிந்தா. மயூரகண்டியின் நிர்வாகம், அதன் ஒழுங்கு, சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தியவிதம், ராஷ்ட்ரம், விஷயம், புக்திகள் போன்ற பிரிவுகளின் செயல்பாட்டைக் கண்காணித்த பாங்கு, வரி விதிப்பும், அதை வாங்கிய விதமும், பொதுஜன வசதிகளை நிர்மாணித்து, அதைப் பராமரித்தது இவையெல்லாம் தானாக நடந்திருக்கிறதா, அல்லது இவையெல்லாம் நடக்கவே இல்லையா?”

“அரசே! நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தது. நடந்துகொண்டும் இருக்கிறது, இன்னும் சிறப்பாக. ஆனால், அவற்றை எல்லாம் கோவிந்தராஜா செய்யவில்லை. என்ன பயிர்கள் விளைகின்றன, எங்கு விளைகின்றன, கொள்முதல் யார் செய்கிறார்கள், எவ்வளவு தானியம் அரசக் கருவூலங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது, ஒரு சராசரி குடும்பத்துக்கு எவ்வளவு தானியம் தேவை, தினஊழியம் எவ்வளவு, பஞ்சம் ஏற்பட்டால், எத்தனை நாளைக்கு இருப்பு வரும், வணிகர்கள் தைரியத்தோடு பயணிக்கிறார்களா, தீர்வையை ஒழுங்காகச் செலுத்துகிறார்களா, நாட்டில் என்ன தாதுச் சுரங்கங்கள் இருக்கின்றன, எத்தனை உலைகள் இருக்கின்றன, எவ்வளவு படைக்கலங்கள் ஒரு திங்களில் உருவாக்கப்படும், பாடசாலைகளில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா, கோவில்களில் காலப் பூஜைகள் சரிவர நடக்கின்றனவா, இரவில் எந்தெந்த வீதிகளில் காவல் தேவை, நியாயாதிபதிகள் சாஸ்திரப்படி நீதி வழங்குகிறார்களா .. இதெல்லாம் அவருக்குத் தெரியும் என்றா நினைக்கிறீர்கள்? அவருக்கு அடிசிற்கும், பருப்புக்கும் வேறுபாடு தெரியாது.

“அவருக்குக் குதிரை ஏறத் தெரியும், வீராவேசமாக அச்சமின்றி வாள் சுழற்றத் தெரியும், வாக்கு வன்மை உண்டு, படையைத் தலைமை ஏற்று நடத்தத்தெரியும். தினசரி நிர்வாகத்துக்கும், அவருக்கும் மிகத்தூரம். தான் அரியணை ஏறியதும், படைகளின் பொறுப்பை மட்டும் தாம் வைத்துக்கொண்டு, மற்ற எல்லா நிர்வாகத்தையும் வேறொருவருக்கு அளித்துவிட்டார். நாட்கள் செல்லச்செல்ல, படைகள் மற்றும் பசுக்கள் பரிபாலனத்தையும், அந்த வேறொருவர் பொறுப்புக்கே ஒப்படைத்துவிட்டார். உங்களுக்கு இராட்டிரக்கூடம் நிர்வாகத் திறமையில் சிறந்து விளங்குகிறது என்ற செய்தியைச் சொன்னவர்கள் சரியாகத்தான் ஒற்றறிந்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால், யார் செய்தது என்று நீங்கள் நினைக்க விரும்பினீர்களோ அவர்தான் செய்தது என்று சொல்லி விட்டிருக்கிறார்கள் அல்லது அவர்கள் சொன்னதைக் கவனிக்காமல், நீங்களே கோவிந்தராஜாதான் இவற்றையெல்லாம் செய்து வருகிறார் என்று கற்பனை செய்துகொண்டிருக்கவேண்டும். இப்போதே பழைய ஒற்றர்கள் யாராவது இருந்தால் சொல்லி அனுப்புங்கள். என் முன்னால் வந்து சொல்லட்டும்” – கொதித்தான் ஜகத்துங்கன் கோவிந்தன்.

“அப்படி யார் இந்தப் பொறுப்பையெல்லாம் வகித்தது? வேறு யாரும் இராட்டிரக்கூடத்தில் அப்படி ஒரு தலைமை இருந்ததாகத் தெரியவில்லையே”

“அதுதானே இந்த உலகத்தில் நாம் காணும் பெரிய புதிர்! பணிசெய்பவர் பகிரங்கப்படுத்திக் கொள்வதில்லை. பகட்டோடு பவனி வருபவர்கள் பணிசெய்வதில்லை.

கு³ணகலஶை ஸ்னாதானாம்

வினய விலேபன விலிப்த கா³த்ராணாம்

வித்³யா விபூஷிதானாம்

கிமலங்காரை குலீனானாம்

என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?”

“நான் தமிழில் இதே கருத்துள்ள ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன்.” இதுவரை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்த ரேவாதேவி பேச, நந்திவர்மர் அது என்ன பாடல் என்பது போலப் புருவத்தை உயர்த்தினார்.

ஆலம் குணக்குட மாடி அடக்கத்தின்

மேலைப் பொடிபூசி மின்னு மறிவணிகம்

நாளுந் தரிக்கின்ற நல்வழி யர்க்குவேறு

கோலமும் கொள்பயனென் கொல்.

“எனக்குத் தமிழ் அதிகம் தெரியாது, மஹாராணி. கிருபை செய்து விளக்கமும் சொல்லுங்களேன்?” என்று கேட்டுக் கொண்டான் கோவிந்தன்.

குணமென்னும் குடத்து நீரில் குளித்து, அடக்கமெனப்படும் நறுமணப்பொடிகளை பூசிக்கொண்டு, பிரகாசிக்கின்ற அணிகலன்களாக அறிவை அணிந்த நல்வழியில் வந்தவர்கட்கு, வேறு ஒப்பனைகளைச் செய்துகொள்வதால் வரும் பயன்தான் என்ன?

“ஆஹா, நான் சொன்ன அதே பொருள்தான். ஒரு சிலரைப் பார்த்ததும், இவருக்கு நாம் மரியாதை செய்யவேண்டும் என்று தோன்றும் எனக்கு, ஒரு சிலரைப் பார்த்ததும், கவனமாக இருக்கவேண்டும் என்றும் தோன்றிவிடுகிறது. இது எதனால் என்று நான் என்னையே பலமுறை கேட்டுக் கொள்வதுண்டு. சிலகாலம் அவர்களோடு பழகிய பின்னர், முதன்முதலில் தோன்றும் இந்த மதிப்பு மாறுவதையும் கண்டிருக்கிறேன். நான் உடனேயே ஒருவரை மதிப்பிடுவதில்லை என்றெல்லாம் கூறி நான் என்னை ஏமாற்றிக் கொள்வதில்லை. என்னுடைய ஒவ்வொரு தவறான கணிப்பையும், நான் மறப்பதும் இல்லை. பெரும்பாலும், முதன்மதிப்பு தவறுவதை நான் ஆராய்ந்து பார்த்ததில், மனத்தில் தோன்றும் இந்த முதல் மதிப்பீட்டுக்குப் பின்னால் ஒரு தெளிவற்ற, அடைப்படை வலுவாக இல்லாத சிந்தையின் விளையாட்டு இருப்பதாக எனக்குப் படுகிறது. என் சிந்தை, கண நேரத்தில், அறிவினால் அலசுவதற்கு முன்னாலேயே ஒரு மதிப்பீட்டை என் உணர்வில் உருவாக்கி விடுகிறது. அறிவினால் வரும் செய்தி, பொதுவாக, இப்படி ஏற்கனவே நம் மனத்தில் நாம் உருவாக்கி விட்ட பிம்பத்தை உறுதிப்படுத்தவே பயன்படுகிறது. அதை மாற்றி அமைப்பதில்லை. மஹாராஜா, சிறுவன் ஏதோ பேசுகிறான் என்று மதிப்பிட்டு விடாதீர்கள். உங்களுக்குத் தெரியாத விஷயத்தை நான் சொல்ல முயலவில்லை. நான் உளறவில்லை என்று உங்களுக்குக் காட்டிககொள்கிறேன்” என்று மெல்ல முறுவலித்தான் கோவிந்தன். ரேவாதேவி சற்று வாய்விட்டே சிரித்துவிட்டாள். துடுக்காகப் பேசுகிறான் என்று தன்னைப் பல்லவமல்லர் எடைபோடுவதை உணர்ந்த கோவிந்தன், அவர் சற்று இரசிக்கவும் செய்கிறார் என்பதையும் கணித்தான்.

“நான் ஏற்கனவே, உருவாக்கி வைத்துக் கொண்டுவிட்ட பிம்பத்தை, உண்மைகளை வைத்து அலசி உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்கிறாயா? யார் இப்படி நிழலில் இருந்தபடி, தன்னை மறைத்துக்கொண்டு இரட்ட அரசைப் பரிபாலித்தது?” என்று குரலில் கடுமை குறையாமல் கேட்டார், காஞ்சிராஜா.

“இதோ, கண் முன்னாலே, வாய்மூடி, முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல், எதுவும் பேசாமல், நான் குதிப்பதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அமைதியாய் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாரே, இவர்தான். இராட்டிரக் கூடத்தில், எந்தப் பிரமுகரைக் கேட்டாலும் இதை உறுதிப்படுத்துவார்.”

நந்திவர்மரை இந்தத் திடீர் அஸ்திரம் சற்று அசைத்தது என்பது, அங்கிருக்கும் எல்லோருக்கும் புரிந்தது. தன்னுடைய புத்திரன் பேசும் விதத்தைக் கேட்டுத் துருவராஜா மனத்துக்குள் புளகாங்கிதம் அடைந்தாலும், கண்களில் அதைச் சற்றும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார்.

“இது எனக்குத் தெரியாத விஷயம். இதுவரை யாரும் இவரைப் பற்றிச் சொன்னதில்லை எனக்கு. இதுதான் உண்மையென்றால், நான் இருட்டில்தான் இருந்திருக்கிறேன் என்று தெரிகிறது. சரி. இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறோம், இதையும் நான் தெளிவுபடுத்திக் கொண்டுவிடுகிறேன். என் மனத்தில் இருக்கும் உறுத்தல் குறையும். அரசர்கள் சிற்றின்பத்தின் தூண்டுதலில் தம்மை இழப்பது இயல்பு. எல்லாப் போகப்பொருள்களும் குறைவின்றி கிடைக்கும் அதிகாரம் கையில் இருப்பதால், வரம்பு மீறிய அரசர்கள் சரித்திரத்தில் குறைவின்றிக் கிடைக்கிறார்கள். அதனால், சுற்றியிருப்பவர்கள், சதி செய்து, அரியணையைப் பறித்துக் கொள்வது தர்மமா? இல்லை அப்படியெல்லாம் நடக்கவில்லை, ஒற்றர்கள் தவறாகச் செய்தி கூறிவிட்டார்கள் என்று சொல்லப்போகிறாயா? உன் பெரியதந்தை தானே கைப்பட எழுதி அனுப்பிய ஓலையில், ‘நெருங்கிய சுற்றத்தார்களே என்னுடைய தம்பியை முன்னுக்கு நிறுத்தி, எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இங்கு யாரையும் நம்பமுடியவில்லை. என் அரியணையே என்னிடம் இருந்து பறிக்கப்படும் அபாயம் தினமும் வளர்ந்து வருகிறது.’ என்று எழுதியிருந்தார். அவர் பயந்தது போலவே நடந்துவிட்டதல்லவா?”. குரலில் சற்றுக் கோபமும் தொனித்தது.

இரட்டபாடி மீது துண்டகவிஷயத்துக்கு எந்த விஷயத்தில் பெருத்த கருத்து வேறுபாடு இருந்ததோ, அது இறுதியில் வெளிப்படையாக தலை காண்பித்து விட்டது. கேள்வி துருவராஜாவுக்குத்தான் ஆனாலும், நந்திவர்மர் நேராக அவரைப் பார்த்துக் கேட்காமல், கோவிந்தனோடு பேசிக்கொண்டே இருந்து, அவனிடமே பிரஸ்தாபித்து விட்டார். விளக்கத்தைத் தாம்தான் தரவேண்டும் என்று நினைத்துத் துருவர் பேச வாயெடுப்பதற்குள், கோவிந்தன் பேசிவிட்டான்.

“நீங்கள் எப்போது இதைக் கேட்கப் போகிறீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன், மஹாராஜா. இன்று மாலை இங்கு வருவதற்கு முன்னால், நானும் தந்தையும் நீங்கள் ஸ்தாபித்து வரும், பரமேஸ்வர விஷ்ணுக்ருஹத்துக்குப் போயிருந்தோம். அற்புதமான கோவில். அங்கேயிருக்கும் மாதவ சர்ம பட்டர், திவ்வியமாகத் தரிசனம் செய்துவைத்தார். எந்தக் கோவிலிலும் இராத, வரலாற்றுச் சிற்பங்களையும் காண்பித்து விளக்கினார். பல்லவ வமிசச் சரித்திர நிகழ்வுகளை அழகாக வடிவமைவித்து வருகிறீர்கள். அதில் சில சிற்பங்களில், உதயசந்திரன் என்னும் தளபதி பல்லவ நாட்டுக்காக ஆற்றிய பணிகளை விவரித்திருக்கிறீர்கள். அவற்றில் ஒன்றில், அவனும், அவனுடைய படைவீரன் ஒருவனும், ஒருவரைக் கொல்கிறார்கள். படைவீரன் கழுத்தைப் பிடித்துக்கொள்ள, உதயசந்திரன் தன் வாளை விலா எலும்புகளுக்கு இடையே நுழைக்கிறான். தத்ரூபமான சிற்பம். அப்படிக் கொல்லப்பட்டவன் சித்திரமாயன் என்றார் பட்டர். தங்களுக்கு முன்னம் ஆண்ட, பரமேஸ்வரவர்மனின் புதல்வன் என்றும், அரியணை ஏற உரிமை படைத்தவன் என்றும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது எனக்கு”

“இது நடந்த நிகழ்வு. இதில் என்ன ஆச்சரியம் உனக்கு?” கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் இவன் எதற்குச் சுற்றி வளைக்கிறான்?

சித்திரமாயன், பரமேஸ்வரமஹாராஜாவின் நேரடிப் புதல்வன். அடுத்து, அரியணைக்கு வரக் காத்துக் கொண்டிருந்தவன். அரியணையில் அமர்த்தப்பட்டும் விட்டவன். தாங்களோ, பல்லவ வம்சத்தில் வந்தவரே ஆனாலும், ஆறு தலைமுறைக்கு முன்பே, வேறிடம் புலம் பெயர்ந்த குடியில் வந்தவர். வம்சத்தில் வந்தாலும், சகோதரன் வழி வந்தவர். அப்படி இருக்கும்போது, சித்திரமாயனை அகற்றிய நிகழ்ச்சியை ஏன் இப்படிப் பெருமையாகச் சித்தரித்திருக்கிறீர்கள்? வெளிப்படையாகப் பேசுகிறோம் என்று மஹாராஜாவே சொன்னீர்கள். அதனால் இதைக் கேட்டேன், தவறாகப் பட்டால், உத்தரம் தர வேண்டாம்.”

மற்றவர்கள் தன்னைக் கேள்வி கேட்டுப் பழக்கப்படாத பல்லவமல்லர் சற்றுத் தடுமாறித்தான் போனார். அதிகச் சுதந்திரம் கொடுத்துவிட்டோமோ என்று ஒருகணம் யோசித்தார். கேட்பவன் சிறுவனே ஆனாலும், ஒரு பேரரசனின் புத்திரன். கேட்டதில் ஓர் உண்மையும் இருந்தது. உள் நோக்கமும் இல்லை. தம் மனத்தை உறுத்திவந்த ஒரு விஷயம், இந்த உரையாடல்களால் ஒரு தெளிவைக் காணலாம் என்று பட்டது.

“கோவிந்தா, என்னிடம் யாரும் இம்மாதிரி வினாக்கள் எழுப்பியதில்லை. உண்மை எது என்று அறியவேண்டும் என்ற உள்மனத்து உந்துதலால், எழும் சினத்தை அடக்கிக் கொண்டு உத்தரம் தருகிறேன். கவனமாகக் கேள். சித்திரமாயன் அரியணை ஏற உரிமை பெற்றவன்தான். ஆனால், அவன் ஏறு வேண்டாம் என்று மூலப்பிரகிருதிகளும், கற்ற அறிஞர் பெருமக்களும், அமாத்தியர்களும் சேர்ந்து முடிவெடுத்தார்கள். குடிகளும் இம்முடிவை எதிரொலித்தார்கள்.”

“அப்படியென்றால், அரியணையில் உரிமையோடு அமர்ந்திருக்கும் அரசன், நிராகரிக்கப்பட வேண்டும் என்று பெருமக்களும், பொதுமக்களும் முடிவு செய்துவிட்டால் அரியணையில் இருந்து அகற்றப்பட வேண்டியவன்தான் என்கிறீர்கள், இல்லையா?”

“கச்சி மக்கள், அவன் அயல் நாட்டுக்கு இதமானவனாக ஆகலாம் என்று நினைத்ததாலும், வமிசச் சுத்தம் இல்லாததாலும், அவனை ஏற்கவில்லை. அவர்கள் முடிவெடுத்தபோது, நான் இந்தப் பகுதிக்கே அறிமுகம் ஆகாதவன். அதற்கெல்லாம் நான் எப்படிப் பொறுப்பு ஏற்க முடியும்?” ஏகதீரர் குரலில் உரப்பொலித்தது.

மன்னிக்க வேண்டும் மஹாராஜா, அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். பன்னிரண்டு வயதுப் பாலகனாக, நீங்கள் காஞ்சிக்கு வரும்போதே, சித்திரமாயனுக்கு மாற்றாகத்தான் கொண்டுவரப்பட்டீர்கள். அதனால், அவன் வைரியாகத்தான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டான். தாங்கள் சிந்தித்து எடுத்த முடிவு அன்று அது. அதற்கேற்றாற்போல அடுத்தடுத்து நிகழ்வுகளும் நடந்தன. விக்கிரமாதித்தியராஜா படையெடுத்து வந்தார், அரியணை இழந்து தலைமறைவானீர்கள். பாண்டியராஜனால் சித்திரமாயன் அரியணையும் ஏறினான். உதயாசந்திரனால் வழிமறிக்கப் பட்டுக் கொல்லவும் பட்டான் அல்லவா? அதன் பிறகுதானே, காஞ்சிக்கு ஒரு விடிவு காலம் பிறந்தது?”

கோவிந்தன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தது பல்லவமல்லருக்கு. எனக்கு என்றும் பழியையும் வலியையும் தரும் நிகழ்வுதானே அது. உதயசந்திரன் சித்திரமாயனைக் கொன்று விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், அதிர்ந்து போனோமே. உதயசந்திரனைக் கோபித்துக் கொள்ளவும் முடியவில்லை. மனத்துக்கு ஆறுதல் தரும்படியான ஒரு காரணத்தைத் தேடித் தேடிக் கற்பிக்க முனைந்தோமே, அந்த உளைச்சல் பொறுக்க முடியாமல்தான், தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும், வெளியே வந்து, அமர் செய்து, சிறைப்பட்டோம். அதற்குப்பிறகுதான் மனமும் சாந்தியடைந்தது.

“அது தவறான செயல்தான். நாடு அந்நியர்களால் ஆளப்படுகிறதே என்பதைப் பொறுக்காத ஒரு தளபதி, உணர்ச்சி வயப்பட்டுச் செய்த செயல் அது.” 

பல்லவமல்லர் பொறுமை இழந்துகொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. இனி தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்த கோவிந்தன், அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தான்.

“கங்கச் சிம்மாசனத்துக்கு உரிமையுடைய துர்க்கமாறனைச் சிவமாறனுக்காக அகற்றும்படி நொளம்பனைக் கேட்டுக் கொண்டது, மஹாராஜா?”

நந்திவர்மரின் முகம் இறுகியது. எப்போது எரிமலை வெடிக்கப்போகிறதோ என்ற அச்சத்துடன் ரேவா அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


உள்ளாந்தரத்தைத் துளைத்து விட்டோம் என்று உணர்ந்த கோவிந்தன் கரம் குவித்தான். “தங்களை வணங்கிக் கூறுகிறேன் மஹாராஜா. ராஜாங்கத்தில் சில விழுமிய நோக்கங்களுக்காக, இப்படிச் சில தர்ம சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதை நான் வெளிப்படையாகச் சொன்னதற்குக் காரணம், இந்த அற நிர்ப்பந்தங்கள், மற்றவர்களுக்கும் ஏற்படலாம் என்பதைக் காட்டத்தான். அரியணையில் அமர்ந்துள்ள அரசன், எப்போது அந்நிய நாட்டு அரசர்களின் துணையை ஆதாரமாகக் கொண்டு, தனக்கு ஆட்சி உரிமையுடைய நாட்டுக்கென இருக்கும் ஸ்வதந்தரத்தைப் பற்றிச் சிந்தியாமல், அந்நாட்டில் வசிக்கும் மக்களை அலட்சியப்படுத்தி விட்டு, எதிரிகளுக்குத் தாரை வார்த்துக்கொடுக்க முனைகிறானோ, அவன் அகற்றப் படவேண்டியவன்தானே? அகற்ற என்றால், கொல்லவும் படவேண்டியவன், இல்லையா மஹாராஜா? இரட்டத்துக்கு அந்த நிலைமைதான் ஏற்பட்டது.

“அடுத்து ஆளப்போகும் மன்னனுடைய இடத்தில், தூர உறவில், தொலை நாட்டில் இருந்தாலும், ஆளும் திறமை இன்னும் வராத சிறுவனே ஆனாலும், அவனை நியமிப்பது அறவழி என்றுதானே காஞ்சிப் பெருமக்கள் முடிவு செய்தார்கள். அதுதானே ராஜதர்மம் என்று கருதப்பட்டது?”

கோவிந்தராஜன் அடுத்துச் சொல்வதற்கு முன், பல்லவமல்லர் ஏதேனும் சொல்ல வருகிறாரா என்று சற்றுக் காத்திருந்தான். ஆனால், அவர் அசையக்கூட இல்லை. அங்கே நிலவிய மௌனம் வெடிமருந்துக் கலவையைக் காற்றில் அணு அணுவாகப் பூசியதுபோல கனத்துக் கொண்டே வந்தது. எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றலாம் என்ற நிலைமை எல்லோருக்கும் தெரிந்தது. இன்னும் அதிக நேரம் மௌனம் நீடித்தால், இதுவரை தனக்குக் கிடைத்திருந்த சுதந்திரம் எந்த நேரமும் பறிக்கப்பட்டு விடலாம் என்று அஞ்சிக் கோவிந்தன் விடைக்குக் காத்திருக்காமல் தானே தொடர்ந்தான்.

“இராட்டிரக் கூடமும் இந்த நிலைமையைத்தான் சந்தித்தது மஹாராஜா. சித்திரமாயன் ஒருவேளை செய்யலாம் என்று பெருமக்கள் எண்ணியதைக் கோவிந்தராஜர் செய்தே விட்டார். உபய குலப் பரிசுத்தர்தான் வேண்டுமென்று உங்களைத் தேர்ந்தெடுத்ததைப் போலத்தான் மஹாஸாமந்தர்களும், பண்டிதர்களும், படைத்தளபதிகளும் தந்தையை வேண்டி வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். எத்தனை முறை, இவர் மறுத்தார் என்று உங்களுக்குத் தெரியாது. பல திங்கள்கள், இவர் சரியாக உறங்கியதில்லை. தமையன் சொல்லே பெரிது என்று பரதன் போல, தன்னை அணுவளவும் பிரதானமாக்கிக் கொள்ளாமல் நாட்டை நிர்வகித்தவர் இவர். இவருடைய பொறுமையும் எல்லை மீறியபோதுதான், இவர் லக்ஷ்மணரேகையைக் கடந்தார். அவரை அப்படிக் கடக்க வைத்தது, கோவிந்தராஜர் எதிரிகளோடு சேர்ந்துகொண்ட செயல்தான்.”

“யார் எதிரி, நானா?”

இதுவரை வாளாவிருந்த துருவராஜா, இதுதான் சரியான சமயம் என்று பேச்சில் இணைந்தார்.

“நீங்கள் எதிரி இல்லை, பல்லவவர்மரே, உங்களை இரட்டத்தின் நண்பனாகத்தான் தமையன் உதவிக்கு அழைத்தான். ஆனால், உங்களை மட்டும் அவன் அழைக்கவில்லை. கங்கத்தையும் அழைத்தான். வேங்கிக்கும் ஓலை அனுப்பினான். இவர்களை  நண்பர்களாக அழைக்காமல், இராட்டிரக்கூட இணைப்பில் இருந்து விடுவிப்பதாக ஆசை காட்டினான். எவ்வளவு சிரமத்துக்குப் பிறகு கங்கம் அடங்கியது? அதை விடுவித்தால், என்ன ஆகும்? இதையெல்லாம் விட, அவன் செய்த இன்னொரு துரதிர்ஷ்டமான செயல், பிரதிஹாரர்களை, இரட்டபாடி இராச்சியத்துக்குள் வரவிடச் சித்தமானதுதான். வத்ஸராஜன், விந்தியாசலத்தைத் தாண்டித் தெற்கில் வருவதற்கு ஒரு நல்ல வேளையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது, தமையன் அவனோடு சம்பந்தம் செய்துகொண்டு, இரட்டபாடியைப் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து விட்டிருந்தான். இது என்னை எதிர்ப்பதற்காக அவன் செய்ததன்று. அவன் இதைச் செய்யத் துணிந்ததால்தான், நான் அவனை எதிர்த்தேன். ஜகத்துங்கன் சுட்டிக் காட்டியபடி, நீங்கள் என் நிலைமையில் இருந்திருந்தால், நான் செய்ததைத்தான் செய்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.”

துருவர் தொடர்ந்தார். “பழைய கதையை இனிப் பேசப்போவதில்லை, நந்திவர்மரே. இவ்வளவு தூரம் நான் உங்களைச் சந்தித்து நேருக்கு நேர் பேச முயன்றதற்குக் காரணம், தந்திதுர்க்க மஹாராஜா உங்கள் மேல் வைத்திருந்த மதிப்பும், என தந்தையின் அணுகுமுறையை நான் தொடர நினைத்ததும், ரேவாவும்தான். என்னால் முடிந்ததை முயன்று பார்த்துவிட்டேன். இத்துடன் என் முயற்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன். நீங்கள் ஒரு நாட்டுக்கு அரசர். உங்களுக்கு என்று வழிமுறையும், நியாய தர்மக் கணக்குக்களும் உண்டு. அதை மாற்ற எனக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களுக்கு மட்டும் அறச் சங்கடங்கள் ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கும் அவை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று சொல்லுவதற்குத்தான் இத்தனைப் பிரயத்தனமும். சிந்தித்து முடிவு செய்யுங்கள். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் புறப்படுகிறோம். விடை தாருங்கள்.” என்று எழுந்தார்.

“ஆங்..  ஒரு விஷயம். என்னுடைய படைபலம், வீரர்கள் மட்டும் இரண்டரை லக்ஷம். இவர்களுக்கு அனுசரணை செய்ய, மருத்துவர்களும், தச்சர்களும், பரிசாரகர்களும், விலங்குகளைப் பரமாரிப்பவர்களும் ஒரு நாற்பதாயிரம் பேர்கள் இருக்கிறார்கள். இரண்டரை லக்ஷத்தில், நாற்பதாயிரம் புரவிகள், முப்பதாயிரம் யானைகள். பத்தாயிரம் தேர்களை விரைவில் நிர்மாணிக்க வகை செய்யும் அளவுக்குத் தேர்க்கால்களும், சட்டங்களும், செய்யத் திறலுடைய தச்சர்களும் உண்டு. வில்லாளிகள் முப்பதாயிரம். நடக்கும் வாளிகள் மற்றவர்கள்.

உங்களுடைய படைபலம் ஒரு லக்ஷத்துக்கு ஒரு பத்தாயிரம் மேல். அவசியம் ஏற்பட்டால், நாட்டிலிருந்து, பயிற்சி பெறாத இளம் வயதினர்கள், தோள்வலி உள்ளவர்கள் என்று ஒரு இருபதாயிரம் பேரை நீங்கள் தேற்றிச் சண்டையில் ஈடுபடுத்தலாம். முப்பதாயிரம் யானைகள் வைத்திருக்கிறீர்கள். புரவிகள் பத்தாயிரத்துக்கு மேல் இரா. வில்லாளிகள் குறைவு. வாள்வீரர்கள் அதிகம். ஆயுதச் சேமிப்பு, ஒரு திங்களுக்கு மேல் இல்லை. உலையில் இரும்புத் தாது, ஒன்றரை திங்களுக்கு மேல் வராது. ஆந்திரத்தில் இருந்து வரவேண்டிய தாதுக்களை நான் தடுத்து நிறுத்திவிட்டேன். இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு செய்யுங்கள்” என்றவர் ரேவாவைப் பார்த்து, “நீ துணிவுள்ளவள் அம்மா, நர்மதை மாதா என்று ஊர் உன்னைப் புகழ்கிறதை என் காதால் கேட்டேன். சரி எது என்பதைத் துணிவுடன் செய்யும் நீ, இந்தக் காஞ்சிக்குக் கிடைத்த வரம். நல்லது நடக்கட்டும். வா கோவிந்தா, நம் கடமை முடிந்தது. இனி அந்த வைகுண்டநாதன் வகுத்த வழி.” என்று சொல்லி நடக்கத் தொடங்கினார்.

தன்னுடைய சைனியத்தின் அளவை இப்படிப் பிட்டுப் பிட்டு வைக்கிறாரே என்று திகைத்துக் கிடந்த பல்லவமல்லர், சுதாரித்துக் கொள்ள நேரம் பிடித்தது.

“ஒரு கணம் பொறுங்கள். நகர்ப்புற எல்லை வரை விட்டுவிட்டு வர ஏற்பாடு செய்கிறேன்” என்று ரேவாதேவிதான் இயல்புக்கு முதலில் வந்தாள். “யாரங்கே?” என்று அழைத்து, காஞ்சி அரசக் கொடி ஏந்திய இரண்டு குதிரை வீரர்களைக் கூடவே அனுப்பிவைத்தாள். அவள் ஏற்பாடு செய்வதைத் தடுக்காமல் மௌனமாகப் பார்த்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தபடியே உறைந்துபோய் நின்றிருந்தார் பல்லவமல்லர்.


துருவரும் கோவிந்தரும் பாசறைக்குத் திரும்பிவிட்டார்கள். அங்கே யாருக்கும் எந்த விஷயமும் தெரியாது. நந்திவர்மன் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்தே அடுத்த நடவடிக்கை என்பதால், ஒரு நாள் பொறுக்க முடிவு செய்தார் துருவர். அடுத்த நாள் பொழுது விடிந்து ஒரு யாமம் ஆயிருக்கும். தூரத்தே புழுதி மேகம் தெரிந்தது. ஆரவாரம் கேட்டது. பாசறையில் பரபரப்பு. காஞ்சிப் படைகள், காஞ்சிப் படைகள் என்று கூக்குரல் ஒலித்தது. துருவரிடம் பதைபதைக்க ஓடி வந்து சொன்னார்கள். அவர், ஓர் உணர்ச்சியும் காட்டாமல், கையை மட்டும் அசைத்துப் பொறுத்திருங்கள் என்றார். புழுதி நெருங்கி வர வர, தொம் தொம் என்று யானைகள் நிலம் அதிர ஓடி வரும் சத்தம் கேட்டது. மறுபடியும் துருவராஜரிடம் ஓடிப் போய்ச் சொன்னார்கள். அவர் அசையவில்லை. அமைதி என்று சைகையாலே சொன்னார். எல்லோருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. ஏன் இப்படி அமைதியின் வடிவமாக அமர்ந்திருக்கிறார் என்று நொந்து போனார்கள், படைவீரர்களும் தளபதிகளும்.

புழுதியின் ஊடே சில புரவி வீரர்கள் தெரிந்தார்கள். ரிஷபத்வஜம் எல்லோர் கையிலும் பறந்து கொண்டிருந்தது. பின்னால், குன்றுகள் அணி வகுத்தது போல, அழகாக முகபடாம் தரித்துக் கொண்டு வந்த யானைகள், முன்னால் வந்த புரவி வீரன், கையை உயர்த்த, நடப்பதை நிறுத்திவிட்டு ஒரே இடத்தில் நின்றன. புரவி வீரன் உயர்த்திய கையால் வேறு ஒரு செய்கை செய்தான். அதைப் பார்த்து, எல்லா யானைப் பாகன்களும், யானையின் மேற்கட்டியிருந்த கழுத்துக் கயிற்றை அசைத்து, ஏதோ தத்தம் யானைகளிடம் சொன்னார்கள். உடனே அத்தனை யானைகளும், முன்னங்காலை மண்டியிட்டுத் தலையைக் குனிந்து கொண்டன. அடுத்த நொடி, புரவி வீரர்களின் தலைவன் போலிருந்தவன், தன்னுடைய குதிரையை விரட்டிக்கொண்டு, பாசறை முகப்பில் வந்து நின்றான். அவனோடு இரண்டு புரவி வீரர்கள், கையில் பல்லவக் கொடியை ஏந்திச் சில அடிகள் பின்னால் முக்கோணம் போல நின்றனர். முக்கோணத்தின் முகப்பில் இருந்த வீரன் கத்தினான்:

 

“புவனாதிபதி, சஸ்திர வித்தைகளில் சிரேட்டர், பகைவர்களின் கூற்றுவர், பெண்களுக்கு மன்மதர், படைகளால் பராஜயம் அடையாதவர், நற்குணங்கள் நிறைந்தவர், அடியவர்களின் அடைக்கலம், சன்மார்க்கமுடையவர்களுக்குக் கல்ப விருட்சம், ஏகதீரர், நயதீரர், ஸ்ரீதரர், க்ஷத்ரியதரர் ஸ்ரீ ஸ்ரீ நந்திவர்ம பல்லவமல்ல விஜயவிக்ரம பூபதியின் புதல்வர், இளவரசர் வைரமேகர் தந்திவர்ம பல்லவராஜா பெருமானடிகள்” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தியவன் தொடர்ந்தான், “இராட்டிரக்கூடத்துக்கு அதிபதி, உலகம் போற்றும் நிருபம தாரவர்ஷ, துருவ மஹாராஜா சமூகத்திற்கு, சர்வ இலக்ஷணம் பொருந்திய, போரில் பகைவர்களுக்கு அஞ்சாத, மதம் பெருகும் மத்தகம் உடைய இரண்டாயிரம் யானைகளை, அந்தக் கருணைக் கடல், பரம வைஷ்ணவ பக்தர் நந்திவர்ம பல்லவ மஹாராஜாவின் நட்பின் பரிசாக, அன்னாரின் ஆணைப்படி சமர்ப்பிக்க வந்திருக்கிறார்! சுபம் அஸ்து!”

இராட்டிரக்கூடப் பாசறையெங்கும் ஆஹாகாரம் வெடித்து எழுந்தது. போரில்லை என்ற நிம்மதியும், போர்புரிய வாய்ப்பில்லையே என்ற ஏமாற்றமும் வீரர்களில் நெஞ்சங்களில் ஊடே, மாறி மாறித் தென்றலாகவும் அனல் காற்றாகவும் வருடி வீசியது.

 

* * * * * * * *

 

“ஆச்சரியமான நிகழ்ச்சி. இப்படியெல்லாம் கூட இரண்டு அரசர்கள் சந்தித்துக் கொள்வார்களா!” கண்கள் விரிந்தான் விநயன்.

“சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டினால், ஆச்சரியத்துக்குக் குறைவே இருக்காது, விநயா”

“வாளை எடுத்துச் சுழற்றிக் கண்மண் தெரியாமல், ஆவேசத்துடன் அச்சமகற்றி, எதிரிகளின் சாரணி ஊடே புகுவதுதான் வீரம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சாமோபாயம் என்ற உத்தியின் வலிமையை இந்த அரசர்கள் நன்றாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்! அதுவும் கோவிந்தராஜர் ஆணித்தரமாக ஒன்றொன்றாக எடுத்துக்காட்டிப் பேசி, நந்திவர்மர் இதுவரை உண்மையென்று எண்ணிவந்ததைப் புரட்டிப் போட்டுவிட்டார். அன்று இரவு நந்திவர்மர் கண்டிப்பாக உறங்கியிருக்க மாட்டார். ஓர் அரசனுக்கு ஏற்பட்ட ஒருதலையான தவறான புரிதல், எப்படி இரு நாடுகளின் இடையே பகையை வளர்த்து விடுகிறது!

“துருவருக்கு அசாத்தியப் பொறுமை. அதிகமாகப் பேசாமல், கங்கத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது, பல்லவ ராஜாவைப் பெரிதும் அசைத்திருக்கும். கங்கம் ஒரு முக்கியக் குறியீடு. எவ்வளவு சேதத்துக்குப் பிறகு, கிருஷ்ணாராஜா கங்கத்தை அடிபணியச் செய்தார்! இதுவரை எவரும் செய்யாத செயல். எந்தக் கங்கத்தின் வீழ்ச்சி, காஞ்சியை எளிதாக மூச்சுவிட வைத்ததோ, அந்தக் கங்கத்தையே சுதந்திரமாக்க நினைத்தார் கோவிந்தராஜா என்பதைப் பட்டும் படாமல் சொன்னார் பாருங்கள். விஷயத்தின் தீவிரம் அப்போதுதான் நந்திவர்மருக்குப் புரிந்திருக்கும்.”

“ஆம். கருத்து வேற்றுமையைப் பேசித் தீர்த்துக்கொண்டதால், பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டது. ஆனால், கோவிந்தராஜா, ‘தான் பேசுவதைக் கேட்டு, எந்த நிமிஷத்தில் பல்லவமல்லருக்குச் சினம் தலைக்கேறி விடுமோ என்று பயந்து கொண்டே பேசினேன்’ என்றார். துருவர், இந்த வெற்றியைப் பெரிதாகக் கொண்டாடிப் பெருமிதப்படவில்லை. வெகு இயல்பாக எடுத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரை, இது செய்யவேண்டிய காரியம். செய்தாயிற்று. ‘மதம் பெருக வந்து மண்டியிட்ட பல்லவ யானைகளில் பெருகிய மதநீரைச் சுண்டிக் கூடப் பார்க்கவில்லை, துருவராஜா’ என்பார் கோவிந்தராஜா. அடுத்தநாள், துருவராஜாவுக்கும், இளவரசர் ஜகத்துங்கருக்கும், சங்கரகணருக்கும் மற்ற படைத்தலைவர்களுக்கும் காஞ்சியில் பெரிய ராஜவிருந்து நடந்தது. அதற்குப்பிறகு, சேனை, பல்லவர்கள் பரிசாகக் கொடுத்த யானைகளுடன் மயூர கண்டிக்குத் திரும்பியது.”

“போரின்றி வெற்றி கிடைத்திருந்தாலும், எவ்வளவு சரீர, பொருள் மற்றும் நேர விரயம் இல்லையா? இவ்வளவு பெரிய படையை, இத்தனை தூரம் நடத்தி அழைத்து வரவேண்டியிருந்தது என்றால்.. விலங்குகளுக்கு உண்டி கொடுத்தே மாளாதே”

“நீ ஒரு கோணத்தில் பார்க்கிறாய். துருவர் பார்த்தவிதம் வேறு. அவர் தன்னுடைய படை வலிமையைத் தக்கணத்தில் பறைசாற்ற விரும்பினார். வலிமையைத் தெரிந்து கொண்டால், எதிரி, தாக்குவதற்கு முன் சற்று யோசிப்பான் அல்லவா?”

“யார் அந்த எதிரி? வேங்கி கட்டுக்குள். கங்கம் இனி எழுந்திருக்கவே முடியாது. பல்லவம் எதிர்ப்பைக் கைவிட்டு விட்டுச் சுமுகமாகப் போய்விட்டது. நொளம்பர்கள் ஒரு பெரிய சக்தி கிடையாது. கொங்கணம் ஏற்கனவே இராட்டிரக்கூடத்துக்கு நட்பு. ரேணாடு இராட்டிரக்கூடத்துக்கு அடங்கிய சிற்றரசு. வேறு யார் தக்கண எதிரி?”

“நந்திவர்மப் பல்லவருக்கு யார் எதிரி?”

“ஓ! பாண்டிய அரசரா? அவர்கள் பல்லவத்தை வேண்டுமானால் எதிர்க்கலாம், இராட்டிரக்கூடத்தை எதிர்ப்போம் என்று கனவிலும் நினைக்கமாட்டார்கள்.”

“அப்படித்தான் நடந்ததும் கூட. துருவராஜாவின் முக்கிய நோக்கம் முழுத்திரமிளத்தை ஆக்கிரமிப்பது அன்று. தன்னை ஒப்புக்கொள்ளாதவர்களைப் பணிய வைப்பதுதான். அவ்வளவு பெரிய சேனையோடு வந்ததால்தான், பல்லவமல்லரும் தயங்கினார். தான் இரட்டர்களை வென்று விடக் கூடும் என்று அவர் மனத்தில் தோன்றியிருந்தால், இப்படிப் பின்வாங்கியிருக்க மாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. விவேகத்துடன் விளக்கமாக விஷயத்தைச் சொன்ன பிறகும், தாக்கித் தோல்வியுறுவேன் என்று பல்லவர் மூர்க்கத்தனம் காட்டமாட்டார் என்று நினைத்தார். அதற்கு இந்தப் பெரிய சேனை உதவியது.

“கங்கமண்டலம் இராட்டிரக்கூடத்துக்கு ஒரு பெரிய முள்ளாக இருந்ததால், அதை முதலில் களைந்தார். அவருடைய பிரதான எதிரி, பிரதிஹாரர்கள்தாம். இதுவரை எந்தத் தக்கண அரசரும் செய்யாததைச் செய்ய எண்ணினார். தேவசக்தி மற்றும் வத்ஸராஜ பிரதிஹாரர்கள், கோவிந்தரோடு இணைந்து சூழ்ச்சி செய்யாமல் இருந்திருந்தால், ஒருவேளை, துருவர் வட பாரதத்தை எண்ணிப் பார்த்திருக்கவே மாட்டாரோ என்னவோ? இனி அவருடைய வடபாரதப் படையெடுப்பைப் பற்றிப் பேசுவோம்” என்று பிரதாபர்  சொல்லிக்கொண்டிருக்கும்போது, குக்கேஸ்வரர் வந்துசேர்ந்தார். கூடவே ஓர் இளைஞனையும் அழைத்துக்கொண்டு வந்தார். 

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...