ஒரு பத்து வருடங்கள் கழிந்திருக்கும். வேங்கிமண்டலத்தின் கோநகருக்கு அருகே இருந்த ஒரு கிராமம். வழிப்போக்கர்கள் தங்கும் ஒரு உறைவிடம். அதில் ஓர் அறையில், வடக்கில் இருந்து வேகமாக வீசிய குளிர்ந்த காற்று, சாளரத்தின் திரையை ஒதுக்கிவிட்டு, உள்ளே அத்துமீறிப் புகுந்து, உறக்கம் எப்போதோ கலைந்து போயிருந்தவனைப் படுக்கையை விட்டு எழுப்ப, அவனும் எழுந்து, சாளரத்தின் அருகே வந்து நின்றான். நின்றவாறே, வெளியே கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தான்.
வெளியே உலகம், வெண்சாம்பல் மழையில் நனைந்ததைப்போல, நட்சத்திரங்களின் வெண் ஒளியில் மூழ்கி இருந்தது. சாம்பல் குவியலின் ஊடே ஒளிரும் சிற்சில நெருப்புத் துண்டங்களைப் போலவே, அங்கொன்றும் இங்கொன்றும் ஆகச் சில விளக்குக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன,
விடிந்து விட்டதா என்ன என்று கேட்டுக்கொண்டவனுக்கு விடையாக, வலியன் ஒன்று குரல் கொடுத்தது. கீழே விரிக்கப்பட்ட பிரம்புப் பாய்மீது முடிந்தவரை சப்தம் எழுப்பாமல் நடந்துபோய், மூலையில் அணைந்திருந்த தூக்குவிளக்கை எடுத்துக் கொண்டுவந்து, சாளரச் சட்டத்தின் மீது வைத்துவிட்டு, எரிந்து கரியாகி விட்டிருந்த திரியின் நுனியைக் கிள்ளி எறிந்தான். தூலிகையை இன்னும் மேலே இழுத்துக் குவித்து, எரிவதற்கு வாகாக உயர்த்தி வைத்தவன், எரியாத பகுதிமேல் ஊறியிருந்த எண்ணெயில், இரு விரல்களை நனைத்து, நுனியில் தடவினான். பக்கத்தில் வைத்திருந்த ஓர் அகலை எடுத்துக்கொண்டு அறையின் கோடிக்குப் போய், இரவு முழுக்க இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருந்த விடிவிளக்கில் பற்றவைத்து, காற்றில் தீபம் அணையாமல் கையை மறைத்தபடியே கொண்டுவந்து, தூக்கு விளக்கை ஏற்றினான். சட்டென்று அறை பிரகாசமாகி, சாளரத்தின் வெளியே தெரிந்து கொண்டிருந்த உலகத்தை இருட்டாக்கியது.
‘உள்விளக்கு எரிந்தால், புறவிளக்கு, போய்விடுமா’ என்று அவன் சிந்தை கேட்க, அவனுக்குச் சிரிப்பு வந்தது.
இந்த அரவத்தையெல்லாம் பொருட்படுத்தாமல், இழுத்துப் போர்த்திக்கொண்டு, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துப் பொறாமையும் எழுந்தது. பாதி ராத்திரியில், வந்து, தூக்கத்தைக் கலைத்ததற்காக மன்னிப்புக் கேட்டவர்கள்.
தலைக்குப் பக்கத்தில் வைத்திருந்த மூட்டையில் இருந்து, ஒரு வேட்டியையும் துண்டையும், சுண்ணகக் குற்றியையும் செம்பையும் எடுத்துக்கொண்டு, தூக்குவிளக்கைக் கையில் பிடித்துக்கொண்டு உறையுள்ளின் வாயிலைக் கடந்தான். பிரம்புப் பாய் விரிக்கப்பட்டிருந்த தரைக்குப் பழக்கமாகி விட்டிருந்த காலை, கருங்கல் தரைச் சில்லிப்பு சிலீர் என்று தாக்கியது.
படியிறங்கிச் சென்று, தோட்டத்தின் வெளிப் படலைத் திறந்து நடந்தான். இருள் இன்னும் பிரியவில்லை. தூரத்தில், உழவர்கள் யாரோ ஏற்றப் பாட்டு பாடிக்கொண்டிருந்தார்கள். மெல்லியதாக அந்த இசையைக் கேட்டபடி சில அடிகள் நடந்ததும், அலை அலையாக வாய்க்காலில் நீர் போவது கேட்டது. பெரிய வாய்க்கால் போலத் தோன்றியது. ஏற்றம் பெரிதாகத்தான் இருக்கவேண்டும். தூக்கு விளக்கை வாய்க்கால் கரைமீது வைத்தான். விளக்கு வெளிச்சத்தில் அவகாஹன ஸ்நானம் செய்யும் ஆழத்தில், நீர் சென்று கொண்டிருந்தது தெரிந்தது. முதலில் தாக்கிய குளிரைப் பல்லைக் கடித்துச் சகித்துக் கொண்டு குடைந்தான். சரீரம் அந்தச் சிலுசிலுப்புக்குப் பழக்கப்படுத்திக் கொண்டதும், சுகமாக இருந்தது.
குளித்துவிட்டுத் திருநீற்றைப் பூசிக்கொண்டு, கிணற்றடிக்கு வந்தான். பெரிய கிணறு. நான்கைந்து மரச் சகடைகளோடு கூடிய கிணறு. கிணற்றைச் சுற்றி, இலிங்கவட்டம் வைத்திருந்தார்கள். சமீபத்தில்தான் தோண்டியிருக்க வேண்டும். முன்னதாகக் குளித்துவிட்டிருந்த ஒருவர், வேட்டியை உதறிப் பஞ்சகச்சமாக அணிய முற்பட்டிருந்தார். ஒரு சிலர் தோண்டியில் இறைத்த நீரைத் தலையில் ஊற்றிக் கொண்டே, கிருஷ்ணரையும், கோவிந்தனையும், ஹரனையும், மகாதேவனையும், அம்பிகையையும் ஸ்மரணம் செய்து கொண்டிருந்தார்கள்.
குளிப்பவர்களால் சிதறும் நீர் மேலே படாமல், காலியாகக் கிடந்த ஒரு சகடையை அணுகித் தாம்புக் கயிற்றில் கட்டியிருந்த குடத்தை அவிழ்த்துவிட்டுத் தன் செம்பை மாட்டி, நீர் மொள்ளச் சரசரவென்று கயிற்றைக் கிணற்றுக்குள் விட்டான். சாய்ந்தவாறிருந்து கொஞ்சம் நீரை மீண்டும் கிணற்றிலேயே சிந்திய, செம்பை இலாகவமாக எடுத்துக் கயிற்றில் இருந்து விடுவித்துச் சந்தியா வந்தனம் செய்யக் கிழக்குப் பக்கமாக ஒதுங்கினான்.
ஜபத்தை முடித்துவிட்டு, ‘அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய பிரஷ்ன மஹாமந்த்ரஸ்ய’ என்று ருத்திரத்தை அவன் வாய் சொல்லத் துவங்கும்போது, இருள் ஓடி விட்டிருந்தது.
வாய், தன்பாட்டுக்கு, மந்திரத்தை முணுமுணுக்க, உறையுள்ளுக்கு வந்தவன், கையில் இருந்ததை எல்லாம் பத்திரப்படுத்திவிட்டு, தோய்த்த ஈரத்துணிகளை முற்றத்தில் இருந்த இரண்டு மரங்களுக்கிடையில் கட்டிவிட்டு வாயிலை நோக்கி நகர்ந்தான். வேலிக்கு அருகே, பாரிஜாதப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த சத்திரத்து நிர்வாகி, வணக்கம் போக்கினார்.
“கோவிலுக்கா?”
“ஆமாம்”
“இந்தாருங்கள், இந்தப் பூக்களை எடுத்துக் கொண்டு போய்ச் சமர்ப்பியுங்கள். வெளிப்படலுக்கு வெளியே சரக்கொன்றையும் இருக்கும். சேர்த்துக் கொள்ளுங்கள்.”
“நன்றி. அப்படியே செய்துவிடுகிறேன்.”
“ஆ .. அப்புறம் .. உச்சிக்கு முன்னால் வந்துவிடுங்கள். இன்று விருந்தினர்கள் அருகல். ஒரு வரிசைதான். மாங்காய் வெல்லப் பச்சடி உண்டு” – மகிழ்ச்சியாகச் சிரித்தார்.
“ஆகட்டும்
வெளியே வந்து, இரண்டு எட்டு எடுத்து வைத்துத் திரும்பியதும், அக்ரஹார வீதி வந்தது. கண்ணுக்கு நேராக புதிதாகக் கட்டப்பட்ட அந்தப் பரமேஸ்வரன் கோவில், நரேந்திரேஸ்வர கிருஹம் என்று எழுதப்பட்ட பதாகை காற்றில் பறந்து கொண்டிருக்கக் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. ‘ஹரஹர’ என்று கைகூப்பியவன், கடவுட்பராவி கலித்திருந்த வீதி ஊடே நடந்தான்.
அகலமான தெரு. இரண்டு சிறகுள்ள தெரு. இருபக்க வீடுகளின் முன்னேயும் அடைத்து அடைத்துக் கோலம் போட்டிருந்தார்கள். இரண்டு வீடுகள் தள்ளி, ஒரு பாடசாலை. முன்னால் இருந்த புல்தரையில் மாணாக்கர்கள், கையை அசைத்து அசைத்து வேதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி இரண்டு மூன்று குடில்கள். குடில்களுக்குப் பக்கவாட்டில், நீரில் கொதிக்கவைத்துக் காயவைத்த பனை ஓலைகளை, அளவு பார்த்து இரண்டு சிறுவர்கள் வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
இண்டு இடுக்கைத் தவிர, மற்ற எல்லாவிடத்திலும் வெளிச்சம் ஈஷிக் கொண்டிருந்தது. கோவிலுக்குள் சென்றவன் கொடிக்கம்பத்தை வணங்கி விட்டுப் பரமேஸ்வரனைத் தரிசிக்கச் சென்றான். எளிமையான தோற்றத்தில் இருந்த சிவாச்சாரியார் அவனைப் பார்த்து முறுவலித்தார்.
‘வாரும்’ என்று சொல்லி தரிசனம் செய்துவித்தார். திடீரென அவனுக்குப் பாடவேண்டும் என்று தோன்றியது.
“பாடலாமா?”
“தாராளமாக. இசையும் அவனுக்கு நிவேதனப்பொருள் அல்லவா?”.
திங்களம் போதுஞ் செழும்புனலும்
...செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கண் மகிழுநள் ளாறுடைய
…நம்பெரு மானிது வென்கொல்சொலாய்
பொங்கிள மென்முலை யார்களோடும்
…புனமயி லாடநி லாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல்
…ஆலவா யின்கணே அமர்ந்தவாறே.
என்ற அறுசீர் விருத்தத்தைப் பாடினான்.
பாடிவிட்டுக் கண்ணைத் திறந்தபோது, சற்றுக் கூட்டம் கூடியிருந்தது. கோவிலில் பாடியிருக்கிறோம் என்ற நினைவு சொரேர் என்று வரத் தர்மசங்கடத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லோருடைய முகத்திலும் குழப்பம். சிவாச்சாரியார் முகத்தில் மட்டும் அந்தப் புன்னகை அதே அளவுக்கு அளவுகோலால் மாத்திரை சூர்ணம் பொடித்த அளவுக்கு இம்மி மாறாமல் இருந்தது.
திரமிளம் புழங்காத பகுதியில் பாடியிருக்கக் கூடாது என்று தன்னையே வைதுகொண்டு, நிலைப்படி முன்னால் எட்டு அங்கமும்பட விழுந்து சேவித்தான்.
‘தன்னாசியா?”
திடுக்கிட்டு எழுந்து இடப்பக்கத்தில் நின்ற பெரியவரைப் பார்த்து விழித்தான்.
“ராகம் தன்னாசிதானே என்று கேட்டேன்” என்றார் அழுத்தம் திருத்தமாக.
வியர்த்துப் போன உடம்பில், குளிர் காற்று போல வருடியது அவர் குரல்.
“ஆ .. ஆ. மாம்” திக்கியது நாக்கு.
“நன்றாகப் பாடினாய். க்ஷேமமாக இரு” என்றார் பெரியவர்.
அப்போதுதான் அவரை நன்கு பார்த்தான். நீண்ட உருவம். அடர்த்தியான வெண்மைப் புருவம், சற்று அதுங்கின நாசி. கண்ணை இடுக்கிக் கொண்டு பார்த்த பார்வையில் எடைபோடும் தூங்கலின் துல்லியம் தெரிந்தது.
கைகளைக் கூப்பிக்கொண்டு, “நமஸ்காரம். விநயாதிசர்மன். உற்புட்டூரு பூர்வீகம். கௌசிக கோத்திரம், ஆபஸ்தம்ப சூத்திரம்” என்றான். பார்த்தால் அந்தணர் மாதிரி இல்லையே. எதற்குக் கோத்திரத்தைச் சொன்னோம்.
“கிருஷ்ணைக்குத் தென்பக்கம் இருக்கின்ற உற்புட்டூரா? ஆற்றைத் தாண்டி வந்திருக்கிறாயே?
இங்கே என்ன காரியமாக வந்தாய்? என்ற தோரணை அதில் தெரிந்தது. குரலில் பரிவு இருந்தாலும், சம்பந்தம் இல்லாதவர்கள் பிராந்தியத்துக்கு வந்தால் கைகளாலேயே குண்டு கட்டாகக் கட்டித் தூக்கி நதிக்கு அப்பால் எறிந்துவிடும் வல்லமையும் அதில் பளிச்சிட்டது. படைக்கலன்களுக்குப் பரிச்சயப் பட்டவர் என்பது நிச்சயம்.
“ஆம். சொந்த ஊர் அதுதான் என்றாலும், அங்கே நான் வந்ததில்லை. பிறந்து வளர்ந்தது எல்லாம் மண்ணைக் கடக்கம். உற்புட்டூரில் என் தாயும் தந்தையும் வெகு காலமாக வசித்து வந்தார்கள்.”
“இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?”
“தந்தை இறந்துவிட்டார். தாய் அஜ்ஜியாக, சமணமடத்தில் சேர்ந்து விட்டாள்.”
அவருடைய கண்களில் கரிசனம் முகிழ்த்ததை உணர்ந்தான். அந்தக் கரிசனத்தைப் புறந்தள்ளிவிட்டு, இப்போது ஏன் இங்கு வந்திருக்கிறாய் என்ற வினாவுக்கான விடைக்கு அவர் காத்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
கேடகராஜாவைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிடலாமா? இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. யாரிடமாவது சொல்லித்தானே ஆகவேண்டும்? ஏதாவது வில்லங்கம் விளைந்து விட்டால்?
அவருடைய அடுத்த வினா, அவனைச் சங்கடத்தில் இருந்து மீட்டது.
“மண்ணைக் கடக்கத்தில் இருந்து வருகிறேன் என்கிறாய். இப்போது பாடிய பாடல் த்ரமிளம் அல்லவா?”
“அது த்ரமிளம்தான். ஞானசம்பந்தர் என்று அழைக்கப்படும் பெருமான் பாடியது. என் தாயிடம் கற்றுக் கொண்டேன்”
“.... .... ....”
இன்னும் விடை வேண்டியிருந்தது அவருக்கு.
“அம்மாவுக்குத் த்ரமிளத்தில் ஆர்வம் இருந்தது. பவநாசி செருவு பக்கத்தில் அவளுடைய சொந்த ஊர். என் தாய்வழிப் பாட்டனார் த்ரமிளம் பேசுபவர்.”
“உறவினர்கள் யாரும் இல்லையா?”
“கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. நான் ஒரு மகன்தான். என் தந்தையைப் போலவே சைவனாகத்தான் வளர்ந்திருக்கிறேன். அன்னைக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.”
அவருடைய முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தவனுக்குத் தன்னுடைய கதையில் அவருக்குச் சுவாரசியம் ஏற்படுவதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
“மண்ணைக் கடக்கத்தில் எங்கே இருந்தீர்கள்?”
“கமலாநதிக்குத் தென்புறம்.”
“அங்கே ஒரு சமண விஹாரம் இருக்கிறதல்லவா?”
“அதேதான். மஹாஸ்ரீமந்த பசதி. அதில்தான் அன்னை துறவறம் நோல்வது. அதை ஒட்டினால் போல, கேசரவாடி கிராமம்.”
“கேசரவாடியா? ம்ம்.... அங்கே இந்தப்பக்கத்தில் இருந்து போன அந்தணர் ஒருவர் வசித்து வந்தாரே. கணிதத்தில் புதிர்கள் எல்லாம் போடுவார். தாமோதர சர்மா. அவரைத் தெரியுமா உனக்கு?”
“அவர் என் தந்தையார் தான்”
அவர் கண்கள் இப்போது அதிகமாகப் பிரகாசித்தன. பவநாசி செருவு என்றானே?
“திரிலோசனி
பிள்ளையா நீ? அடடே.. “
அவன் வியப்பினால் தலையை ஆட்டக்கூட மறந்து போனான்.
“திரிலோசனையா சமண ஆரியாங்கனையாக ஆனது? தந்தையின் வழியையே பின்பற்றிவிட்டாளா?”
இவருக்கு எப்படிப் பாட்டனார் சமணர் ஆனது தெரியும்?
“நீங்களும் உற்புட்டூரா?”
“இல்லை”
தன்னைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ளாதவரை, அவரிடமிருந்து விஷயம் பெயராது என்று புரிந்தது.
“உன் தந்தைக்கு என்ன ஆயிற்று?”
“கலவரத்தின் போது, வெறித்தனமாக வந்த ஒரு சிலரை எதிர்த்து உயிரிழந்தார்.”
சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கின. முகம் இறுகிய பெரியவர், விண்ணின் வெற்றிடத்தை வெறுமையோடு பார்த்தார். ‘க்ரீட்’ என்று கத்திக்கொண்டே ஒரு கருடன் உறுதியாகச் சிறகுகளை அடித்துக்கொண்டே மேலே பறக்க, அதன் வெண்மைக்கழுத்து சூரிய ஒளி பட்டு ஜாஜ்வல்யமாக ஒளிர்ந்தது. அதன் பின்னேயே இன்னொரு கருடன். கோவிலுக்கு வந்திருந்த சேவார்த்திகள் எல்லாம் அண்ணாந்து பார்த்து, ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். பெரியவரும் போட்டுக் கொண்டார். அவன் கைகூப்பி வணங்கினான்.
“என்ன நடந்தது? விவரமாகச் சொல்”
“அன்று தந்தையார், தான் அத்யாபகராக மிகவும் மதிக்கும் ஒரு சமண ஆருகதரோடும் அவருடைய மற்ற சிட்டர்களோடும் வந்துகொண்டிருந்தார்.”
“யார் ஆருகதர்? மஹாவீராசார்யரா?”
இவருக்குத் தெரியாததே இருக்காதோ? ‘ஆமாம்’ என்று தலையாட்டினான்.
“கூட்டம் அவரையா தாக்க வந்தது?”
“இல்லை. சித்தாபுரம் விஷயாதிபதியின் உறவினரை. மஹாவீர ஆசார்யர் அன்று வழக்கம்போல, ஆற்றில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். தந்தை எப்போதும் காலையில் ஒரு முகூர்த்தம் ஆசார்யரிடம் பாடம் கேட்பது வழக்கம். குளிக்கும்போதும், ஆசார்யர் பாடம் எடுப்பது உண்டு. இவர்கள் வரும் வழியில் சித்தாபூர் விஷயாதிபதியின் உறவினர் ஒருவர் பல்லக்கில் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது, வடக்குக் கரையில் இருந்து ஆயுதங்களோடு ஒரு நான்கைந்து பேர்கள், புரவிகளில் கமலாநதியைக் கடந்து வந்து தெற்குக் கரையேறினவர்கள், கோஷமிட்டுக் கொண்டேவந்து, விஷயாதிபதியின் உறவினரைத் தாக்கியிருக்கிறார்கள். சுற்றும் முற்றும் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. தாக்குபவர்களைக் கண்டு பயந்து, பல்லக்குத் தூக்கிகள் நால்வரும், பல்லக்கை அப்படியே தரையில் வைத்துவிட்டு, ஓடிப் போய்விட்டார்கள். அவரோடு கூட இருந்த இரண்டு காவலாளிகள் தாக்கியவர்களில் ஒருவனை வெட்டி வீழ்த்தினார்கள். அதற்குள், உறவினர் வெட்டப்பட்டுவிட்டார்.
“நிலைமையைப் புரிந்துகொண்டு முதலில் உதவிக்குச் சென்றவர் தந்தை. அவர் ஓடிப்போய் கையில் வைத்திருந்த கழியால் ஒரு புரவிக்காரனை அடித்திருக்கிறார். அப்போது, இன்னொருவன் அவர் கழுத்தை வெட்டிவிட்டான். கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. மற்றவர்கள் சுதாரித்துக்கொண்டு உதவி செய்ய ஒன்று சேர்கிறார்கள் என்று தெரிந்ததும், வெட்டுப்பட்டுக் கிடந்தவனை அங்கேயே விட்டுவிட்டு, மற்றக் கொலையாளிகள் ஓடித் தப்பித்து விட்டார்கள். உறவினர், தந்தை, தாக்கவந்தவன் - மூவரின் உயிரும் ஸ்தலத்திலேயே போய்விட்டது. ஆசார்யரின் சீடர்களும் இன்னும் சிலரும் உடலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். நான் அப்போது வீட்டிலே இல்லை. காட்டுக்குள் மரம் வெட்டிக் கொண்டு வரச் சென்றிருந்தேன். என்னைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் விஷயத்தைச் சொல்லி, நான் வந்து பார்ப்பதற்குள் நண்பகலாகி விட்டது. அன்று அஸ்தமனத்துக்குள் ஆற்றங்கரையிலேயே எல்லாக் காரியங்களும் நடந்து முடிந்து விட்டன. ஒரு கணத்தில், எங்கள் வாழ்க்கையே தடம் புரண்டு விட்டது.”
அவன் சட்டென்று அமைதியானான். கோவிலில் இருந்த மரத்தில் இருந்து ஒரு பறவை சடசடவென்று பறக்க, இரண்டு மூன்று மஞ்சள் நிறக் கொன்றைப் பூக்கள், மரத்தோடு தம் சம்பந்தத்தை முறித்துக் கொண்டு கீழே தரையில் வந்து விழுந்தன. கனத்த மவுனம், இரண்டு நெஞ்சங்களின் இண்டு இடுக்குக்களில் எல்லாம் புகுந்து, மும்முரமாகத் தன்னை அப்பிக்கொள்வதில் ஈடுபட்டது.
இரண்டுபேரில் யாராவது அமைதியைக் கலைத்தால் தாழ்வில்லை என்று அவனுக்குத் தோன்றியது. அவருக்கும் தோன்றியிருக்க வேண்டும்.
“திரிலோசனி ஏன் மடத்தில் சேர்ந்தாள்?”
“பிரபூதவர்ஷ மஹாராஜா இறந்த பிறகு, வாழ்க்கை எல்லோருக்குமே மிகவும் கடினமாக ஆகிவிட்டது.”
“கற்கராஜாதான் நிலைமையை, உடனே சீர் செய்துவிட்டாரே?”
“வாஸ்தவம்தான். முதலில் அப்படித்தான் இருந்தது. மஹாராஜா இறந்ததும், என்ன ஆகுமோ என்று எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த பீதியை முற்றிலும் நிவர்த்தி செய்து விட்டிருந்தார் கற்கராஜா. எந்த வியத்தியாசமும் தோன்றாமல், எல்லாமே முதல் இரண்டு வருடங்களுக்கு முன்னையைப் போலவே இயல்பாக நடந்தன. அவர் இலாடத்துக்குத் திரும்பிச் சென்றபிறகுதான் இந்தக் அலவலையும், ஆகுலமும். அப்போதுதான் தந்தை உயிரிழந்ததும். ஆற்றங்கரைக்கு அந்தப்பக்கம் கடக்க மாநகருக்குள்ளே நிலைமை இன்னும் மோசம். நிறைய குடும்பங்கள் கடக்கத்தை விட்டுப் போய்விட்டார்கள். தந்தை இருந்தவரை, நாங்கள் ஏதோ ஸமாளித்துக் கொண்டு, காலம் தள்ளிக் கொண்டிருந்தோம். அவர் நகரத்துக்குப் பணிக்காகத் தினமும் போய்விட்டுத் திரும்புவரை கிலேசம்தான். இன்று என்ன நிகழுமோ என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தது. யாருமே வீதியை விட்டு வெளியே வரமாட்டார்கள். அக்கம் பக்கத்தில் பேசக்கூட எல்லோரும் பயந்தார்கள். தினமும் யாரோ ஒருவருடைய வீடும், பொருட்களும் சூறையாடப்பட்ட கதை செவியில் விழும். விளக்கேற்றக் கூட அஞ்சினோம். ஏன்தான் சூரியன் மறைகிறானோ என்று இருக்கும். கூட்டமாகத்தான் வெளியே வருவோம்.
“நிலைமை விரைவில் சரியாகி விடும் என்று நம்பிக்கையை வைத்துக் கொண்டுதான் இருந்தோம். ஆனால், தினமும் அந்த நம்பிக்கை பலவீனமாகிக் கொண்டே வந்தது. அம்மா மட்டும் தைரியத்தை விடாமல் இருந்தாள். ஆனால், தந்தை இறந்ததும் அவளுக்கு எல்லாமே வெறுத்துவிட்டது. வீட்டிலும் நெல் இருப்புத் தீர்ந்து கொண்டே வந்தது. விளக்கெரிக்கக் கூட எண்ணெய் இல்லாமல் போய் விட்டது. தந்தை இறப்பதற்குச் சில மாதங்கள் முந்தியே, கொத்தளத்தல் நின்று விட்டது.”
“கோட்டைச் சிறுமுற்றத்து ஔடதாலயத்தில்தானே பணி செய்துவந்தார்?”
தலையாட்டினான். இவருக்கு இதுவும் தெரியுமா என்று நினைத்தவன் அடுத்து “அவரை அந்தப் பணியில் அமர்த்தினவனே நான்தான்” என்று அவர் சொன்னதைக் கேட்டதும் விக்கித்துப் போனான்.
“நீங்களா!” கையைக் குவித்து வணங்கினான் ஒருமுறை.
“மேலே சொல்”
“கற்கராஜா சுவர்ணவர்ஷருக்குப் பயந்து பணிசெய்து வந்த அதிகாரிகள் அவர் புறப்பட்டுப் போனதும் அராஜகம் செய்யத் துவங்கினார்கள். தந்தை இறப்பதற்கு ஒரு மாதம் முன்னால், ஔடத பண்டாரத்து வைத்தியரைச் சிலர் இரவோடு இரவோடு தூக்கிச் சென்றுவிட்டார்கள். யாருக்கோ இரகசிய வைத்தியம் பார்க்கவேண்டும் என்பதற்காக என்ற பேச்சு அடிபட்டது. அவர் போன இடமே தெரியவில்லை. அவர் இல்லாமல் போகவே, தந்தையும் வேறு சிலரும் அங்கேயே தங்கி இருந்து, தம்மால் முடிந்த சேவைகளைச் செய்துவந்தார்கள். ஔடதக் குப்பிகள் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. கட்டுப்போடுவதற்குக் கொதிக்க வைத்துக் காயவைக்கப்பட்டச் சுத்தமான துணிகள் இல்லை. தினமும், பண்டாரத்தின் முன்னால் பெரிய வரிசை. இரத்தக் காயத்துடன் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய பிணியாளர்கள். பலாத்காரத்துக்குள்ளான பெண்கள், அடிபட்ட குழந்தைகள்.. “
அவன் உடல் நடுங்கியது. பெரியவர் முகத்தில் இறுக்கம். காலை விறைத்துத் தரையை அழுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
“கட்டெல்லாம் போட, நானும் உதவி செய்துவந்தேன். ஒரு நாள், ஒரு மஹாஸாமந்தரின் படைவீரர்கள், பண்டாரத்தில் சிகிச்சை செய்துகொண்டவர்களைக் கத்தி முனையில் மிரட்டி, பாதுகாத்து வைத்திருந்த மருந்துகளையும், வட்டிகைகளையும் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள். நாங்கள் எல்லோரும் அன்றோடு பண்டாரத்தையே மூடிவிட்டு வெளியே வந்துவிட்டோம். அன்று இரவே, யாரோ உள்ளே புகுந்து பண்டாரத்தையும் கொளுத்திவிட்டார்கள். உள்ளே இருந்த பல சுவடிகளும், பிணியாளர்கள் பற்றிய குறிப்புக்களும் எரிந்து விட்டன.
“பிறகு ஒரு மாத காலம், வேறு வேலை எதுவும் கிடைக்காமல் வீட்டில்தான் தந்தை அடைந்து கிடந்தார். அவர் மட்டுமன்று. தெருவே வீடே கதியென்றுதான் அடைந்து கிடைந்தது. கட்டளை இருக்கும் தினங்களில், சமணப் பசதியில் அன்னதானம் செய்வார்கள். அப்போது உணவு கிடைக்கும். கட்டளை இல்லாத நாட்களில், தோட்டத்தில் இருக்கும் கீரை, காய்கறிகள், பழங்கள் இவைதான் உணவு.
“தந்தை இறந்து ஒரு மாதத்திலேயே அம்மா பித்துப் பிடித்தவள் போல ஆகிவிட்டாள். என்னை வெளியூர் சென்றுவிடு என்று தினமும் ஆவேசமாக வற்புறுத்துவாள். அவளை விட்டுவிட்டு எப்படிப் போவது என்று நான் வாளா இருந்தேன். ஒரு நாள், நான் உண்பதற்கு வானம் பார்த்த பயிர் ஏதாவது கிடக்குமா என்று தேடிக் காட்டுப் பக்கம் அலைந்து கொண்டிருக்கும்போது, காளி மாதிரி வந்தாள். என்னைத் தரதர என்று பிடித்திழுத்து வீட்டுக்கு அழைத்து வந்தாள். “ராஜாவே ஓடிவிட்டாரடா, ஓடிவிட்டார். நீ ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்? உன் தயவு எனக்கு வேண்டாம். நீ உடனே இங்கிருந்து கிளம்பு. உன்னை இனி நான் இங்கே பார்க்கக்கூடாது, சத்தியம் செய், சத்தியம் செய்” என்று கத்தினாள்.
“வீதியில் எல்லாருடைய வீட்டிலும் அன்று இதே கதைதான். ஸர்வ அமோகவர்ஷ ராஜாவை யாரோ, கொலை செய்ய முயன்றதாகவும், அவருடைய மெய்காப்பாளர்கள் அவரைப் பாதுகாப்பாக ஓர் இரகசிய இடத்துக்குக் கொண்டு போய் விட்டதாகவும் பேச்சு. சிலர், ராஜா இறந்துவிட்டார் என்றார்கள். கமலாவின் வடக்குக் கரையில் வண்டிகளும் ஆட்களும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்ததைக் கிராமத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. கிராமத்தில், வண்டி வைத்திருந்தவர்கள் எல்லாம் மாடுகளைப் பூட்டிப் பிரயாணத்துக்குச் சித்தமாகி விட்டார்கள்.
“ஆனால், யாருக்கும் எங்கே போகவேண்டும் என்ற இலக்கு இல்லை. கடக்கத்தை விட்டு ஓட வேண்டும் என்ற மனோபாவம் மட்டுந்தான். திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்து, தான் பசதியில் சேர்ந்துவிட்டேன் என்றாள் அம்மா. இரண்டு குடிசைகள் தள்ளிப் போரிலே மகனைப் பறிகொடுத்த ஒருத்தி, தன் மணாட்டுப்பெண்ணுடன் வசித்து வந்தாள். அவளும், அன்னையைப் போல இன்னும் சிலரும், எஞ்சி இருந்த தம் உடைமைகளை எல்லாம் பசதிக்குக் கொடுத்துவிட்டு, அங்கேயே வைராக்ய வாழ்வு வாழச் சித்தம் கொண்டு விட்டனர்.
“கோட்டைக்குள் நுழைய அனுமதி வழங்கும் குடிமக்கள் உரிமைப் பட்டயம் தந்தையுடையது வீட்டில் இருந்தது. அதை என் கையில் கொடுத்து நான்தான் தாமோதர சர்மாவின் மகன் என்று கிராமகூடத்தார் கைக்காப்பிட்ட ஓலையை என்னிடம் பத்திரமாக வைத்துக்கொள் என்று கொடுத்துவிட்டு, என்னை வெளியேற்றி விட்டாள். நான் அவளை இறுதியாகப் பார்த்தது அன்றுதான். அன்னை இன்று இருக்கிறாளா இல்லையா என்றே எனக்குத் தெரியாது. அப்போது அவள், பட்டகாலர் என்பவரின் புத்திரர் பாண்டுரங்கர் என்று ஒருவர். இங்கே ராஜ சேனையில் கேடகராஜாவாக ஊழியம் செய்கிறாராம், அவருக்கு ஓர் ஓலை எழுதிக் கொடுத்தாள்”
பட்டகாலரின் புத்திரர்
சேனாபதி பாண்டுரங்கரா? யார் இவன்?
“இதெல்லாம் நடந்து எவ்வளவு நாள் ஆகியிருக்கும்?”
“தச சம்வத்சரம் ஆகி இருக்கும்.”
“இத்தனை நாள் கழித்து இப்போதுதான் அந்தக் கேடகராஜாவைச் சந்திக்கவேண்டும் என்று தோன்றியதா உனக்கு?”
“ஓலையைக் கொடுத்தபோது, உடனே போகவேண்டாம் என்று எச்சரிக்கை செய்துதான் கொடுத்தாள். நிலவரம் சற்றுத் தணியட்டும். வேறு வழி உனக்குக் கிடைக்கவில்லையென்றால், இதை இறுதி அஸ்திரமாகப் பயன்படுத்திக்கொள் என்றாள். இதுவரை பல இடங்களிலும் தேசாந்தரி போலச் சுற்றிக் கொண்டிருந்தேன். களைத்துவிட்டேன்.
ஈடெதிர் வாய்மனை
ஏதிலரில் ஊழியம்
வீடயல் கைநனைத்து
வீணரொடு வாழ்தலும்
நாடயல் போதல் நியமத்தான்
வல்விரைவில்
ஆடவர்வாழ் வஃகலுமா மாறு.
என்பார்கள். சொந்தமென்று ஓரிடத்தில் நிலைபெற்றிருக்க வேண்டுமென்று மனம் தோன்றுகிறது. அதனால்தான், வழி விசாரித்துக் கொண்டு இங்கே வந்தேன். உங்களுக்குக் கேடகராஜா என்று யாரையாவது தெரியுமா?”
அவனையே சில கணங்கள் கூர்ந்து பார்த்தார் பெரியவர். “வழியிலெல்லாம் அவருக்கு ஓர் திருமுகம் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வழி கேட்டாயோ?”
“இல்லை இல்லை” அவசரமாக மறுத்தான். “சூழல் இருக்கும் நிலையில், யார் வைரி, யார் கேளிர் என்றே தெரியவில்லையே. வாயைத் திறப்பேனா? தந்தைக்குப் பணி அமர்த்திக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களிடமும் திருமுக விஷயத்தைச் சொல்லாவிட்டால், எப்படித்தான் அவரைக் கண்டுபிடிப்பேன், நான்? திருமுகம் இருக்கிறது என்று நான் சொன்ன முதல் ஆள் தாங்கள்தான்.”
இப்போதாவது கேடகராஜாவைத் தெரியும் என்பார் என்று பார்த்தால், அமர்த்தலாகவே இருக்கிறாரே நான் சொல்வது எல்லாம் இவருக்கு முன்னமேயே தெரியுமோ, ஒருவேளை, என்னைச் சரிபார்க்கிறாரோ? சொன்னதையெல்லாம் சலனமே காட்டாமல் கேட்டுக் கொண்டிருந்த பெரியவருடைய முகத்தில், விநயன், ஏதாவது குறிப்பிருக்கிறதா என்று தேடினான். கோவிலில் அடுத்த பூஜைக்கு மணி அடித்தார்கள். டம்டம் என்று முரசு கொட்டியபடி சந்நிதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு வாத்தியக் காரன், வாசித்துக்கொண்டே நடக்கத் தொடங்கினான். கையில் மணியை ஆட்டியபடியே ஒரு சிறுவன் நிலையைத் தாண்டி வர, அவன் பின்னே கிடுகிடு வென்று ஒரு சிவாசாரியார் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்த துணி மூடிய பிரஸாதத் தட்டைத் தாங்கிக் கொண்டு சந்நிதியை விட்டு வெளியே வந்தார்.
“எப்போது வேங்கிக்கு வந்தாய்? எங்கு விராமம்?”
“நேற்றைக்கு. விஜயாதித்திய பட்டாரக வழிப்போக்கர் விடுதி”
“வசதிகள் நன்றாக இருக்கின்றனவா? அன்ன வசதிக்கு ஏதாவது குறையுண்டா?”
“குறையா? நித்தியப்படி ஜீவனமே இழுபறியாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இது தேவலோகம். இப்படியும் ஒரு பிரதேசம் உண்டா? ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், வெட்டுவதும், பொருளைப் பிடுங்குவதுமாக, விலங்குகள் போலவும் நர மாமிசம் தின்னும் காட்டு வாசிகள் போலவும் இருக்கும் தேசங்களைக் கண்டு பழகிப் போன எனக்கு, இப்படியும் ஒரு பிராந்தியம் இருக்கிறது என்று நம்ப முடியவில்லை. கோவிந்த மஹாராஜா ஆளும்போது நாடு சமுதாய உணர்வோடுதான் இருந்தது என்றாலும், இங்கிருக்கும் நிலைமை என்னால் எண்ணிப் பார்த்திருக்கக் கூட முடியாத ஒன்று.
“என்ன அமைதி! கடவுட்பக்தி!. செழிப்பு!. மற்றவருக்குத் தீங்கு விளைவிக்காத பாங்கு!. வேங்கி நாடு புண்ணியம் செய்த நாடு. கற்கராஜாவின் இலாடமும், கேடகமும் இப்படித்தான் இருக்கும் என்று அங்குச் சென்றவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அங்குப் போய்விடலாமா என்று கூடப் பலமுறை தோன்றி இருக்கிறது. தாய் ஏன் கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்திக்கொள் என்று சொன்னாளோ? ஐந்தாறு வருடம் முன்னாலேயே வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது”
பெரியவர் சிரித்தார்.
“ஐந்தாறு வருடம் முன்னால் வந்திருந்தால், இப்படி இருந்திருக்காது. சண்டைதான் இங்கேயும் பார்த்திருப்பாய்.”
“ஓ!” அவர் சொன்னதை நம்பமுடியாமல் பார்த்தான்.
“ஐயா, எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?”
தலையசைத்தார்.
“போன வாரம் கொம்ட்டூருவில் தங்கி இருந்தேன். அங்கும் இதேபோல ஒரு சத்திரம். இதே போல ஒரு சிவாலயம். ஸ்வாமி பேரும் நரேந்திரேஸ்வரர் தான். அதற்கு முன் தங்கியிருந்த ஊரிலும் இதே போல அக்ரஹாரம். அன்னதானம் இடும் சத்திரம். நரேந்திரேஸ்வர ஸ்வாமி சந்நிதானம். இப்படி நான் போன எல்லா ஊர்களிலும் ஒரே போல பெயருடைய மூர்த்திகள். இதுவரை நான் பார்த்த தேசங்களில் இதுபோலக் கண்டதில்லை. இது என்ன விசேஷம்?”
பெரியவர் புன்முறுவல் பூத்தார். முகத்தில் முன்னிருந்த இறுக்கம் மறைந்து விட்டிருந்தது.
அவர் விடை சொல்வதற்குள், ஆலயத்தின் நிலைப்படியில் ஆரவாரம் கேட்டது. செந்நிறப் பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு கணைகள் பக்கவாட்டில் தெரிய ஒரு அட்டச்சிவிகை, தாங்கிகளின் தோள்களில் இருந்து வெண்மைக் குரண்டம் மிதந்து வந்து தரையில் இறங்குவதைப் போல இறங்கியது. அது தரையைத் தொடுவதற்கு முன்னால் பொருத்தமாக ஆயக்கால்களை தாங்கிகள் கணைகளின் கீழே வைத்தார்கள். வைத்துவிட்டுச் சிவிகையின் திரை திறக்கக் கையைக் கட்டிக் காத்திருந்தார்கள்.
திரை விலகியதும், உள்ளே அமர்ந்தவரின் கையசைவு தெரிந்தது. ஒரு பல்லக்குத் தூக்கி, சிவிகையின் உள்ளிருந்து பூங்கரை நீலம் பூண்டிருந்த தவிசை இறக்கிக் கால் வைக்கக் தோதாகக் கீழே வைத்தான்.
பொன்கரையிட்ட நுண்துகில் அசைய, உள்ளே இருந்தவர் கீழே இறங்கினார். இறங்கிக் கோபுர வாசலில், ஸ்வாமி இருக்கும் திக்கைப் பார்த்துக் கை கூப்பினார். குனிந்து நிலைப்படியைத் தொட்டு வணங்கிவிட்டுக் கோவிலுக்குள் நுழைந்து சந்நிதியை நோக்கி நடந்தார். பின்னாடியே நான்கு பேர் அவரை அரைவட்டமாகத் தொடர்ந்தார்கள். நிலைப்படிக்கு அருகே நின்று கொண்டிருந்தவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர் நடக்க நடக்க, அவருடைய ஆகிருதி பார்வையில் படப்பட, ஆலயப் பிராகாரத்தில் இருந்த அத்தனை பேரும், உடனே தரையில் விழுந்து வணங்கினார்கள். பெரியவரும் மேல் உத்தரீயத்தை எடுத்து இடுப்பில் அணிந்துகொண்டு ஸாஷ்டாங்கமாக விழுந்தார்.
விநயாதிசர்மனும் பணிந்தான். புயற்காற்றில், கிளைகள் எல்லாம் கழிந்து கீழே நீண்டு கிடக்க, தனித்து நிற்கும் ஒற்றைப் பனைமரம் போல் ஒளிர்ந்தார் வந்தவர். சந்நிதிதிக்கு உள்ளே, ஸ்வாமிக்கு நாமாவளி சொல்வது பிராகாரமெங்கும் எதிரொலித்தது.
ஓம் கிரீசாய நம
ஓம் அனகாய நம
ஓம் புஜங்க பூஷணாய நம
ஓம் பார்காய நம
பெரியவரைப் பார்த்துவிட்டார் போலும். அவர் முன்னே வந்து நின்றார். அவர் கண்ணசைக்கப் பாதுகாவலாளி கீழே கிடக்கும் பெரியவரிடம் “எழுந்திருக்க உத்தரவு’ என்றான்.
“பிரதாபவர்த்தனரே! இப்படிக் கீழேயே கிடந்தால் நான் பேசுவது எப்படி உம் செவியில் கேட்கும்?” சிரித்தார். பெரியவர் சிரித்தபடி எழுந்திருந்தார். கையைக் கூப்பினார்.
“பூபதிக்கு நமஸ்காரம்” தலை குனிந்தார். வந்தவர் காவலாளியைப் பார்த்துத் தலை அசைக்க, அவன் அவருக்குப் முதுகுப் பக்கமாகப் போய் நின்று “எல்லாரும் எழுந்திருக்க உத்தரவு” என்று உரத்துச் சொன்னான். சத்தம் போடாமல், ஒவ்வொருவராக எல்லோரும் மெல்ல எழுந்து நின்று கொண்டார்கள்.
“எப்படி இருக்கிறீர்கள்?”
“நிருபேந்திர கிருபை இருக்கும்போது எங்களுக்கு என்ன குறை?”
“நாளைக்கு அரண்மனைக்கு வாருங்கள். சில விஷயங்கள் ஆலோசிக்க வேண்டும்”
பிரதாப வர்த்தனரின் விடைக்குக் காத்திராமல், சந்நிதிக்குப் போய்விட்டார்.
“யார் இவர்?” என்று கேட்டான் விநயாதிசர்மன்.
“இதோ நிற்கிறாயே, இந்த மண்ணுக்கு அரசர் இவர்தான். நரேந்திர மிருகராஜர். இப்போது அத்தியாவசிய நடவடிக்கைகளை மட்டும் செய்துகொண்டு, மற்ற ராஜ்யபார நிர்வாக விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டுவருகிறார். பொதுவிஷயங்களை எல்லாம் பட்டத்து இளவரசர் கலி விஷ்ணுவர்த்தனர்தான் கவனித்து வருகிறார்.”
“இவ்வளவு எளிமையாகவும் அமைதியாகவும் இருக்கிறாரே. இப்படிப்பட்ட அரசர்கள் எல்லா நாட்டிலும் இருக்கக் கூடாதா?”
இதுவரை தூண் போல நின்றுகொண்டு, முகத்தில் சலனமே காட்டாமல் பேசிக் கொண்டிருந்தவரா இவர் என்று வியக்கும்படி, துவளும் கொடி போல உடல் நெளியச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். குபுக் குபுக்கென்று கட்டுக்கடங்காத சிரிப்பு. பக்கத்தில் இருப்பவரைப் பாய்ந்து தொற்றிக்கொள்ளும் சிரிப்பு. அரசருக்குக் கேட்டுவிடப் போகிறதே என்று அவர் அடக்கி அடக்கிச் சிரிப்பதைப் பார்த்து இவனுக்கும் சிரிப்பு வந்தது. அவனும் என்னவென்று புரியாமல் சிரித்துவைத்தான்.
சிரிப்பு அடங்கவில்லை அவருக்கு. எதற்கு இப்படிச் சிரிக்கிறார்?
“இதோ நிற்கிறாயே, இந்த மண், இது இரத்தம் நதியாகப் பிரவகித்த போரைப் பார்த்த மண். இந்தக் கோவில் அவர் கட்டியதுதான். கோவிலின் ஸ்வாமி, அவர் பெயரால் நாமகாரணம் பெற்றவர். போன வாரம் தங்கினாயே, அந்த நரேந்திரேஸ்வரமும் இவர் கட்டியதுதான். கொம்ட்டூரும் கூட. இந்த மூன்று இடங்களிலும் கடுமையான சண்டை நடந்திருக்கிறது. ஏகப்பட்ட உயிர்ச்சேதம். மகன்கள், கணவர்கள், காதலர்கள், சகோதரர்கள், தந்தைகள் என்று பலர் பிராணனை விட்ட இடங்கள் இவை. இன்று அமைதியின் உருவமாகத் திகழ்கின்றன”
“ஐயோ! எப்போது நடந்தன இவை?”
“கடக்கத்தில், வாழ்வே திசை திரும்பிவிட்டது என்றாயே, அதே சமயத்தில்தான். அப்படித் திசை திருப்பியதற்குக் காரணமும் இவர்தான்.”
சட்டென்று குரலைத் தாழ்த்திக்கொண்டார்
“அமோகவர்ஷர் மான்ய கடக்கத்தை விட்டு ஓடினார் என்று சொன்னாய் அல்லவா? அவரை அப்படி ஓடவைத்ததில், அமைதியின் உருவென்றாயே, இவருடைய பங்கும் இருந்தது.”
வாயடைத்துப் போயிற்று விநயாதிசர்மனுக்கு.
“எப்படி.. இது.. .. “ திணறினான்.
“ஒரு சண்டை, இரண்டு சண்டை இல்லை. நூற்றியெட்டு சண்டைகள் நடத்தியிருக்கிறார். இவர் கையைப் பார்த்தாயா? இரண்டு மூன்று பெரிய வடுக்கள் இருக்கும். ஒருமுறை பாதிவரை கையெலும்பு முறிந்து போய்விட்டிருந்தது இவருக்கு. மேல் உத்தரீயத்தை விலக்கினால் தெரியும், எவ்வளவு புண்களை இவருடைய தேகம் தாங்கியிருக்கிறது என்று. மஹாவீரர். பயமறியாதவர். பன்னிரண்டு வருட காலம் சண்டையே மூச்சாக இருந்தவர்.
“அவர் கையால் மரித்தவர்கள் ஏராளம். யமதூதர்களுக்கு இடையறாது வேலை கொடுத்தவர். நாடு இன்றி, வீடு இன்றிக் காட்டிலும் வனாந்தரங்களிலும், மலைக் கதுக்குக்களிலும் சிறு வயதுக் குழந்தையையும் மனைவியையும் எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக இன்று இந்த இடம், நாளை வேறு இடம் என்று மறைவிடம் மறைவிடமாகப் பித்தன் போல அலைந்தவர்.”
“ஹரஹர! இப்படிப் பட்டவருக்கு அப்படி ஒரு நிலைமையா? யார் அந்த எதிரி?”
“எல்லாம் உன் மண்ணைக் கடக்கத்து ராஜாதான்”
“அமோகவர்ஷரா? அவர் சிறுவர் ஆயிற்றே. அவருடைய உயிரைக் காத்துக்கொள்ளவே அவருக்குச் சரியாக இருந்திருக்கும்போது அவர் எங்கே இன்னொருவரைத் தாக்கப் போகிறார்?”
“அவருடைய தந்தை”
“பிரபூதவர்ஷ கோவிந்த மகாராஜாவா?” அவர் பெயரை உச்சரிக்கவே நடுங்கினான்.
பிரதாபருடைய குரலும் தாழ்ந்தே இருந்தது.
“அந்தப் பெயரைப் பிறர் காதுபட உச்சரிக்காதே. சில வருடங்களுக்கு முந்தைய நிலைமையாக இருந்தால், அதைச் சொன்னதற்காகவே, இந்நேரம் உன் தலையை உருள வைத்திருப்பார்கள்.”
“இவரை ஏன் அவர் எதிர்த்தார்? இவர் என்ன செய்தார்?”
“இவர் பட்டத்துக்கு வந்தார். அதுதான் இவர் செய்த தவறு. சரி சரி, இந்த ராஜாங்க விஷயத்தையெல்லாம் இப்படிக் கோவிலில் நின்றபடி பேசிக்கொண்டிருக்க முடியாது. வா, சத்திரத்துக்குப் போவோம். அங்கு எனக்கும் ஒரு வேலை ஆக வேண்டி இருக்கிறது”.
பிரதாபர் நடக்கத் தொடங்கினார். வெயில் நன்றாக மேலே ஏறிவிட்டிருந்தது. கற்பாறைத் துண்டுகளால் ஆன தரை, இரவு நேரக் குளிர்ச்சியை எல்லாம் விட்டுவிட்டுச் சூரிய ஒளியை மனமுவந்து விருந்தோம்பத் தொடங்கிவிட்டிருந்தது. சூரியனும் வருடுவதற்கு ஆள் கிடைத்ததே என்று ஆழ்ந்து தரையைத் தழுவிக் கொண்டிருந்தான்.
அக்ரஹாரம், காலையில் விநயன் வரும்போது காண்பித்த அரவங்களைத் தொலைத்துவிட்டு அமைதியில் மூழ்கிக் கிடந்தது. பனை ஓலைச் சிறுவர்கள் இன்னும் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். ஆசிரியரைக் காணவில்லை. மாணாக்கச் சிறுவர்கள், சிரத்தையாக, ஓலைச் சுவடிகளில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்கள்.
“கொஞ்சம் இப்படிப் போகலாம் வா” என்று வலப்பக்கமிருக்கும் சிறு தெருவில் புகுந்தார்.
கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு பெரிய திடல். திடலின் ஓரங்களில், நிறைய வண்டிகள் நிறுத்தப் பட்டு, அங்கிருந்த மரங்களில் அடியில், குடும்பங்கள் கூடி இருந்தன. வண்டியில் வந்தவர்கள் போலும். இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். திடலை ஒட்டி இருவரும் நடந்தார்கள். திடலுக்கு அந்தப் பக்கம் நிறைய மாடுகளும் குதிரைகளும். திடலை ஒட்டினாற்போலே, நிறைய குழுதாழிகள். நீர் நிறைந்து இருந்தது. இல்லாத சிலவற்றில், இரண்டுபேர் மரவாளியில் நீர் தூக்கி வந்து நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
பிரதாபரைக் கண்டதும் ஒருவன் ஓடிவந்தான். கீழே விழுந்து கும்பிட்டான்.
“ஏனடா, ஏற்றத்தண்ணீரில் ஏதாவது இக்கட்டா?
“ஆம் ஐயா, வரும் கால்வாயில் அடைப்பு இருப்பதால், நீர் திரும்பிவிடுகிறது. ஏற்றந்தலையும் சற்றுக் கீழே போய்விட்டது. கவலைச் சாலைத் தூக்கிக் கட்டவேண்டும்”
“சரி, நான் சத்திரத்தில்தான் இருப்பேன். தச்சனை, என்னை வந்து பார்க்கச் சொல். கிருஷ்ணை மாதா ஒருகல் அகலத்துக்குக் கரை புரள, நீரைக் கொண்டு வந்து கொட்டுகிறாள். ஒரு மாட்டுக்குக் கூடத் தண்ணீர் இல்லாமல் போகக்கூடாது. கவனம்”
சுற்றிச் சத்திரத்துக்கு வரும்போது, வெயில் இன்னும் ஏறி விட்டிருந்தது. எதிரே இரண்டு பேர் ஓடி வந்தார்கள். “சொல்லியிருந்தால், சிவிகையோடு வந்திருப்போமே ஐயா”
“இருக்கட்டும். நடக்கவேண்டும் என்றுதான் வந்தேன். பகல் போஜனம் சத்திரத்திலேதான். அதுவரை உங்களுக்கு வேலை இல்லை. இல்லத்துக்குப்போய் நான் அறச்சாலையில் உணவருந்தி விடுகிறேன் என்று சொல்லிவிடு. கணபாம்பா காத்துக் கொண்டிருப்பாள் பாவம். உங்கள் உணவுக்குப் பிறகு, சத்திரத்துக்கு வந்து விடுங்கள்.”
சத்திரத்தின் முன்னால், கூண்டு வைத்த ஒரு மாட்டு வண்டியில், ஒரு குடும்பம் கிளம்பிக் கொண்டிருந்தது. சத்திர நிர்வாகி வெளியில் நின்று கொண்டிருந்தார்.
“அன்னம் கழிக்காமல் போகிறார்களோ, தேவநாதய்யா? சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்லவேண்டியது தானே?”
“கேட்டுவிட்டேன் ஸ்வாமி. குழந்தைக்கு முடிக் காணிக்கை செலுத்த, கனகாபுரம் போகிறார்கள். நல்ல நேரம் போய்விடுமாம்”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த குடும்பத் தலைவர், பிரதாபரை நோக்கி வந்து கை கூப்பினார். “ஆமாம் ஸ்வாமி! மரண யோகத்துக்கு முன்னால் கிளம்பலாமே என்றுதான்”
“நல்லது. போய் வாருங்கள். இங்கே எல்லாம் வசதியாக இருந்ததா?”
“விஜயாதித்திய மாமணி ஆட்சியில் என்ன குறை, பிரபோ? ராஜா நன்றாக இருக்கவேண்டும். கிளம்ப உத்தரவு தரவேண்டும்” – என்று குனிந்து வணக்கம் சொன்னார்.
தலை அசைத்துப் பிரதாப வர்த்தனர், சத்திரத்துக்குள் அடியெடுத்து வைத்துத் திரும்பிப் பார்த்துத், “தேவநாதய்யா, இங்கே வாரும்” என்று நிர்வாகியை அழைத்தார்
“ஐங்காயம், நெல் எல்லாம் சேகரிப்பில் இருக்கிறதா?”
“இருக்கிறது நையோகிக வல்லபரே. இரண்டு சங்கராந்திகளுக்குக் கவலை இல்லை. சிறு மிளகும், சீரகமும் தான் இருப்புக் குறைவு. வரத்து இல்லை என்கிறார்கள் செட்டிப் பட்டண ஸ்வாமிமார்கள்”
“ஆம். போயர்களின் இம்சை தாங்கமுடியவில்லை. கொங்கு நாட்டுக் கொள்முதலிலோ, கங்கவாடி வழியிலோ வாதை இல்லை. குவலாலபுரத்தைத் தாண்டினால் நம் அண்டை நாட்டு இந்த வழிப்பறி போயர் வேடர்கள் தம்மை என்னவோ பல்லவ சாம்ராஜ்ஜியாதிபதிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களைச் சொல்லி என்ன குற்றம்? அவர்களைத் தூண்டிவிடும் காடவச் சிங்கங்களைச் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் பல்லவ அரசனே காஞ்சியில் இருந்து ஓடிவிட்டு, அபிமானசித்திதான் ஆள்வது. ஹேமாவதி வழி சிலாக்கியம். நொளம்பவாடி வழியாக வணிகர்கள் இப்போது போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அங்கிருந்து கொள்முதல் செய்யச் சொல்லுங்கள். பிறகு நல்லமலை வழியாக வேங்கிக்கு வரட்டும்.”
“அப்படித்தான் இராசப்ப கிராமணியிடம், நகரத்தார் சொன்னார்களாம். ஆனால், ஒரு சின்னத் தொந்தரவும் இருக்கிறதாம். நல்லமலைக்கு முன்னால், ஆனந்தபுரக் காட்டுவழியில் கொள்ளையும் புலி பயமும் இருக்கிறதால், ஒரு பத்துப்பேர் காவல் வந்தால், நல்லது என்று அபிப்பிராயப் படுகிறார்களாம். வெறுமெனவே இல்லாமல், அசி வேதனம் தருவதற்கும் உடன்படுகிறார்களாம்.”
“நல்லது. நான் கேடகராஜனிடம் பேசுகிறேன். ஆங்.. தேவநாதய்யா, இன்று போஜனம் சாலையில்தான். இவனோடுதான் உண்ணப்போகிறேன்.”
“ஐயா! இன்று பெரிய அளவில் அன்னம் அடவில்லை. விருந்தினர் அருகலினால். வயிறு வாழுமா?”
“அலம். அலம். பரிசாரகர் படைப்பதைப் புசிப்போம். அன்னம் உண்ட பிறகு, அந்தத் தட்டத்தில் சிரம பரிகாரம் செய்ய ஏற்பாடு செய்யும். வா விநயா, ஆராமத்தில் அந்த மரத்தடியில் அமர்வோம்.”
கேடகராஜனா? இவருக்குத் தெரிந்திருக்கிறது, அவரை.
அவரோடு பேசி ஏற்பாடு செய்கிறேன் என்கிறாரே? அரசரோடு வேறு சம்பந்தம் இருக்கிறது.
யார் இவர்? யாராக இருந்தாலும், தன்னுடைய நெடுங்காலக் கஷ்டத்துக்கு விடிவு
வந்துவிட்டது என்று தோன்றியது விநயனுக்கு.
No comments:
Post a Comment