Friday, 20 September 2024

11. துண்டீரபுரத்தின் தொல்லியல் துவேடம்

அன்று பாடசாலையில்லை. ஆனாலும், குக்கேஸ்வரரும் விநயனும் கோவிலுக்குப் போய்விட்டுப் பாடசாலை பண்டாரத்தை ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். பண்டாரத்தில், சில தமிழ்ப் பாசுரங்கள் எழுதப்பட்டு இருந்த ஓலைகள் கிடைத்தன. வேறெவையோ ஓலைச்சுவடிகளோடு கலந்து கோக்கப் பட்டிருந்தன. இருவரும் அவற்றையெல்லாம் பலப்பல சுவடிகளில் இருந்து பிரித்தெடுத்து, வகைப்படுத்திப் புதுச்சுவடியாகக் கட்டினார்கள். யாரெழுதிய பாடல்கள் என்று தெரியவில்லை. ஒரு பாடலைப் படித்துவிட்டுக் குக்கேஸ்வரர் உற்சாகத்தால் கத்தினார், “விநயரே! கண்டுபிடித்து விட்டேன்! இவை திருமங்கை ஆழ்வார் எழுதியவை. இங்கே பாருங்கள். அஹோபிலத்தைப் பாடிப் பாடியிருக்கிறார்.” என்று அந்தப் பாடலைப் படித்தார்.

 

எவ்வம்  வெவ்வேல்  பொன்பெயரோன் ஏதலின் இன்னுயிரை

வவ்வி, ஆகம்   வள்ளுகிரால்   வகிர்ந்தவம்  மானதிடம்,

கவ்வு   நாயும்   கழுகுமுச்சி  போதொடு  கால்சுழன்று,

தெய்வ   மல்லால்    செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றம்மே.

 

“எப்படி எழுதியிருக்கிறார் பார்த்தீர்களா? அங்கு எளிதாகப் போய்விட்டு வந்துவிட முடியுமா, என்ன? அப்படியே அனுபவத்தைப் பிட்டு வைத்திருக்கிறார்.” 

“ஆமாம்! கவ்வு நாயும், கழுகும், உச்சிப் போதில் கால் சுழன்று, தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாத இடம்! அஹோபிலத்தை அழகாகத் தமிழ்ப் படுத்தியிருக்கிறார்” ரசித்தான் விநயன்.

“எல்லாப் பாடல்களும் சுவடியில் இல்லை”

“திருமங்கை ஆழ்வார் என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?”

“இதோ கச்சி அஷ்டபுஜப் பெருமானைப் பற்றிச் சில பாடல்கள் இருக்கின்றன பாருங்கள். இவை எனக்கு மனப்பாடமாகத் தெரியும். கச்சியில் அந்தக் கோவிலில் இவற்றைச் சொல்லாமல் பெருமானுக்குப் பூசைகள் செய்வதில்லை.”

 

“மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்

.. நீள்முடி மாலைவை யிரமேகன்,

தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி

.. அட்டபு யக்கரத் தாதிதன்னை,

கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்

.. காமரு சீர்க்கலி  கன்றி,குன்றா

இன்னிசை யால்சொன செஞ்சொல்மாலை

.. யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.”

 

“தொண்டையர்கோன் என்றால் பல்லவமல்லரா? வைரமேகன்? இரட்டபாடி மஹாராஜா?”

“ஆமாம். அந்தக் கோவிலில் தந்திதுர்க்க மஹாராஜாவுக்குப் பெருத்த மரியாதை உண்டு. அஷ்டபுஜப் பெருமாள் அவருக்குத் தோன்றி வழிகாட்டினாராம். அப்புறம்தான் அவர் இரட்ட ஸாம்ராஜ்ஜியத்தையே ஸ்தாபித்தார் என்பார்கள் அங்கே.”

ஓ!” பிரதாபரிடம் இதுபற்றிக் கேட்கவேண்டும் என்று மனத்துக்குள் குறியிட்டுக் கொண்டான். அப்போது, சத்திரத்து முத்தன் ஓர் ஆளை அழைத்து வந்தான். பிரதாபர் அனுப்பிய ஆள், ஓர் ஒற்றைப் புரவிச் சகடத்தோடு வந்திருந்தான்.

“ஐயா, சற்றுத் தொலைவில் உள்ள ஒரு குறும்பில், ஜலயந்திரம் அமைக்கும் பணியை மேற்பார்வையிடச் சென்றிருக்கிறார், அங்கேயே உங்களை அழைத்து வரச்சொல்லியிருக்கிறார், மதிய உணவுக்குச் சேர்ந்து உண்ணலாமாம்.” என்றான். “போய் வாருங்கள்” என்றார் குக்கேஸ்வரரும். முத்தனிடம் விநயன், தேவநாதய்யாவிடம் உணவுக்கு வரவில்லை என்று சொல்லிவிடக் கூறிவிட்டுச் சகடத்தில் ஏறி நின்றுகொண்டான். புரவி ஊரைத் தாண்டி ஓடியது.


நவகண்டம்

ஊர் எல்லையை எல்லாம் தாண்டி, ஒரு சரிவில் இறங்கியதும் சகடப் பாதை முடிந்துவிட்டது. ஆனால், புரவிகளும் வண்டிகளும் நிறைய போய்ப்போய் ஒருமாதிரியான தடம் உருவாகி இருந்தது. போகப்போக, அந்தத் தடமும் இல்லை. வழி பழகாதவர்களுக்கு எத்திக்கில் செல்வது என்றே தெரியாது. கண்ணுக்கு எட்டிய தூரம் கரம்பை நிலம். சின்னதும் பெரியதுமாக ஏராளமான கற்கள். யாரோ ஓர் இராட்சதனுடைய குழந்தை அங்கிருந்த ஒரு மலையை உடைத்துப் பாறைகளையெல்லாம் வைத்து உருட்டி விளையாடிவிட்டு அப்படியே விட்டுவிட்டுச் சென்றது போல சிறிய பெரிய பாறைகள் விரவிக் கிடந்தன. இலாகவமாக ஓட்டினான் சாரதி. கடமென்று ஒரேயடியாகவும் கூறமுடியாத அளவுக்குப் பசுமையும் ஆங்காங்கே பளபளத்தது. பனைகளும், புளியமும் திரிகையும், குமிழமும் புதர்களும் நிறைய விளைந்திருந்தன. தூரத்தே யாரோ குழுவாக நிசாளம் வாசித்துக் கொண்டிருந்தது கேட்டது. அந்த ஒலி, வரவர அதிகமாகிக் கொண்டே போயிற்று.

“இங்கே எயினர் குடியொன்றில், இன்று ஒருவன் நவகண்டம் தருகிறான். அதனுடைய திருவிழா ஒலிதான் அது. வேண்டுமானால், வேறு வழியாகப் போய்விடலாமா?”

நவகண்டமா! கேள்விதான் பட்டிருக்கிறான் இதுநாள்வரை. பார்க்கவேண்டும் என்று தோன்றியது. “இல்லை, இல்லை, நேரமாகாது என்றால், பார்த்துவிட்டே போகலாமா? ஐயா காத்திருப்பாரா? நேரமிருக்கிறதா?”

“இருக்கிறது இருக்கிறது. உச்சி வேளை உணவுக்குத்தான் உங்களை அழைத்துக்கொண்டு வரச் சொல்லியிருக்கிறார். அதற்குள் போய்விடலாம்.”

திருவிழா நடைபெறும் இடத்துக்காகக் கடத்தை விட்டுப் பாதையில் ஏறியது வண்டி. ஒரு திருப்பத்தில் திரும்பியதும், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் குழுக்குழுவாகத் திருவிழா நடக்கும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். குதிரையின் குளம்படி கேட்டு வழிவிட்டு ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்தான் விநயன். எல்லோரும் திருமணத்துக்குப் போவதைப் போலப் புது வத்திரம் தரித்திருந்தார்கள், பலருடைய தலைகளில் வெய்யிலில் பிரகாசித்துக் கொண்டிருந்த புதுத் தட்டுக்கள். எல்லாவற்றிலும் நைவேத்தியப் பொருட்கள்.

“நவகண்டத்துக்குத் திருமண விழாவுக்குச் செல்வது போலச் செல்கிறார்களே?”

“அதைவிட அதிகப்படி என்றே சொல்லலாம். இதற்குப் போகாதவர்களே இருக்க முடியாது. இந்தப் பாந்தலில் ஐம்பது அறுபது பேர்கள்தான் இருப்பார்கள். எல்லாருமே உறவினர்கள். கோவில் இங்குத்தான் இருக்கிறது. இந்தக் கூட்டம் எல்லாம் அக்கம் பக்கத்துக் குப்பம் கூடு, பேடு பட்டிகளில் இருந்து.”


சற்றுத்தொலைவில், யாரோ சிலர், ஐந்தாறு பேர்கள், மாலையோடு பல வண்ண உடைகளில் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“யார் அவர்கள்?” கேட்டதுமே கேட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. நிஜமாந்தர்கள் உயரத்தில், மெய்போலவே வடிவமைக்கப்பட்ட சப்த மாதாக்களுடைய சிலைகள். பிரம்மி, வாராஹி, வைஷ்ணவி, மாஹேஸ்வரி, கௌமாரி, இந்திரி, சாமுண்டி – என்று எழுவரும் ஸ்வாதீனமாக வீற்றிருந்தார்கள். ஒரு வளைவு திரும்பியதும், கோவில் கண்ணுக்குப் புலப்பட்டது. ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். பறைகள், சிறு பேரிகள், ஊதுகாளம், இரலை போன்றவற்றை வாசித்துக்கொண்டு இரண்டு மூன்று குழுக்கள். ஊம்ஊம் என முழவு ஒலிக்க, அதனுடைய இலயத்துக்கு ஏற்பக் கலீன்கலீன் என ஒரு மருளாடி ஆடிக் கொண்டிருந்தான். அந்த ஆட்டத்தையும், தாளக்கட்டையும் உன்னிப்பாகக் கேட்ட விநயனுடைய மனது, வியாளக்கிராகியின் ஊதிலியையே பார்த்து மயங்கிக் கிடக்கும் உரகத்தைப்போல வேறு ஒரு சிந்தனையும் இல்லாமல் மருண்டது.

அந்த மக்கள் திரளுக்கு நடுவே, அந்தத் துர்க்கை இரண்டு ஆள் உயரத்துக்கு நின்றிருந்தாள். சுதை கொண்டு எழுப்பட்டு வண்ணப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வடிவம். உடலெங்கும் கருநீலம், கழுத்தில் மட்டும் கருப்பு வண்ணம், கண்களைச் சுற்றித் தீற்றியிருந்த வெண்மை, இரத்தச்சிவப்பு உதடு, வெளியே நீட்டியிருந்த வெள்ளைக் கோரைப்பல், ஒட்டியிருந்த தாடை, வாராத கேசம், நெற்றியில் தீப்பிழம்பு, மதர்த்த முலைகள், அவற்றின் மத்தியப் பகுதிகளை மட்டும் மூடியிருந்த அரவக் கச்சை, கபாலப் புரிநூல், உப்பிய வயிறு, சிறு புலித்தோல் இடையரை, மல்லர்கள்தொடை, சிறுபாம்பு நூபுரம், அகன்ற பாதங்கள், நான்கு கைகள், வலக்கையில் உயர்த்திய வெட்டுவாள், இடக்கையில் குருதி சொட்டும் ஓர் அரிந்த தலை, மற்றொரு இடக்கையில் அந்தக் குருதியை நிரப்பிக்கொள்ளும் கலம், மற்றொரு வலக்கையில் உயர்த்திய சூலம், ஒரு முட்டியை உயர்த்திக் கொண்டு, ஒரு குதிர் அளவுக்குப் பிரம்மாண்டமாக அவள் நின்றிருந்த கோலம் விநயனுக்குத் தண்டுவடத்தில் சிலீர் என்று அச்சத்தை நுழைத்தது.

நின்றிருந்த துர்க்கையைச் சுற்றித் தரையில், வந்தவர்கள் நைவேத்தியமாகக் கொண்டுவந்த தாலங்களும், குடங்களும், கலங்களும் வரிசை வரிசையாக, அரைவட்டங்களாக வைக்கப்பட்டு வந்தன. அவற்றில்தான் எத்தனை பொருள்கள்!

மெல்லப்படுபவை, புசிக்கப்படுபவை, நக்கப்படுபவை, பருகப்படுபவை, உறிஞ்சப்படுபவை என்று அவரவர்கள் இல்லத்தில் நியமத்தோடு சமைக்கப்பட்ட ஐந்துவிதமான பண்டங்கள்; எலுமிச்சை, விளா, திராட்சை, கிரமுகம், உருசகம், இலுப்பை, நெல்லி, ஈச்சம், வாழை போன்றவற்றின் கனிகள், ஈரி நீக்கிய குடக்கனிச் சுளைகள், தேவிக்குப் பிரியமான பனம்பழம், கேசரிப்பழம், மாம்பழம் முதலியன, குமுதம், தாமரை போன்ற மலர்கள், பாலில் சமைத்த பரமான்னம், கள், கல்கண்டு, தேன் இவற்றைக் கலந்துவைத்த அன்னங்கள், மாவில் செய்து சுட்ட அடைகள், யவைப் பொங்கல், மோதகம், நெற்பொரி, நெய்யும் சர்க்கரையும் சேர்த்துச் சமைத்த சாதம் போன்ற உணவுகள்; பசு, எருமை, ஆடு, கோணாய், மான் இவற்றின் கறந்த பால்வகைகள் என்று விரவிக்கிடந்தன.

இவை தவிர, மணிகள், அலங்காரப் பொருட்கள், தங்கக் குன்றிமணிகள், பாசி, குங்குமம், மஞ்சள், அணிகயிறுகள், வளையல்கள் என்று நேர்த்திப் பொருள்களும் குவிந்து கிடந்தன.

அப்போது, திடீரென்று பறைகள் பலமாகச் சப்திக்க, காளங்கள் மேல் ஸ்தாயியில் ஆவேசமாகக் குரலெழுப்பின. இங்கிருக்கும் பறையொலியோடு ஒன்றும்படி முழவடித்துக் கொண்டே ஒரு சிறு கூட்டம் பக்கவாட்டில் வந்து கொண்டிருந்தது. அதை வரவேற்கிறார்கள் என்று புரிந்துகொண்டான். எழுந்த திடீர் ஓசையால் குதிரை மிரளவே, சாரதி, விநயனைக் கீழே இறங்கச் சொல்லிவிட்டுப் புரவியைச் சகடத்திலிருந்து அவிழ்க்காமல், பக்கத்திலிருந்த ஒரு குமிழ் மரத்தில் வண்டியோடு கட்டிவிட்டு வந்தான். கூடியிருந்த ஜனத்திரளுக்குள் சலசலப்பு அடங்கி, எல்லோருடைய பார்வையும் வந்த கூட்டத்தின் மீதும், அதன் நடுநாயகமாக நடந்து வந்தவன் மீதும் படிந்தது. அவனைச் சுற்றிப் பெண்கள் ஆடிக்கொண்டே வந்தார்கள். சிவப்பு அரை வேட்டியைக் கீழ்ப்பாய்ச்சிக் கட்டியிருந்தவனுடைய தோளில் மஞ்சளும் சிவப்பும் கலந்து தொடுத்த மாலைகள். முகமும், மார்பும், கால்களும் சந்தனத்தாலும் மஞ்சளாலும் அப்பப்பட்டுக் கிடந்தன. அவன் கையில் ஒரு சிறு கத்தி, அதன் அயில்முனை சுடர்விட்டுக் கொண்டிருந்தது.


“அவன்தான் நவகண்ட நாயகன்” என்றான் சாரதி.

“அவனா! இளம்வயது போலிருக்கிறதே?

“வரும் சங்கராந்திக்கு ஐம்பதுக்குக் குறையாது. மருளாடியின் மைத்துனன்”

“எதற்காக நவகண்டம் செய்து கொள்கிறான்?”

“இந்தப் பாந்தலில் சில நாட்களுக்கு முன்னர் மஹாமாரி வந்திருந்தாள். குழந்தைகள் உட்பட, முப்பது நாற்பது பேர் மீது அவள் பார்வை பட்டுவிட்டது. இரண்டு மூன்று பேரைத் தன்னோடு அழைத்துக்கொண்டும் விட்டாள். சிலருடைய கண்களையும் கூட. இந்தப் பாந்தலுக்கு வருவதற்கே அஞ்சி, யாரும் கோவிலுக்குக் கூட வராமல் இருந்தார்கள். அவளுடைய கோவிலுக்கே வரமுடியாமல் போயிருக்கும்போது எப்படித்தான், அவளை விலகிக் கொள்ளச் சொல்லி வேண்டிக் கொள்வது? அப்போதுதான், அவளிடம் நேர்த்திக்கடனாக நவகண்டத்துக்கு இவன் வேண்டிக் கொள்ளக் காளியும் அவனுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்த்தாள். மாரியை விலக்கிக் கொண்டாள். அந்த வேண்டுதலைத்தான் இப்போது நிறைவேற்றுகிறான்.”


நவகண்ட நாயகனை, மருளாடி, காளிக்கு முன்னிருந்த பலிபீடத்தில், காளியைப் பார்த்தவாறு அமர்த்தித் திருஷ்டி கழித்ததும், இரண்டு மூன்று பேர், பலிபீடத்தைச் சுற்றிப் புத்தம்புது வெண்ணிற நடைபாவாடையை விரித்தார்கள். ஒருவன் அவன் காலுக்குக் கீழே சிறுபீடத்தை வைத்து, அவனுடைய இரு பாதங்களையும் கையால் ஏந்தி, அந்தப் பீடத்தின் மீது மரியாதையோடு வைத்தான். பிறகு, மருளாடி மந்திர உச்சாரம் செய்து வைத்திருந்த புனிதநீர்க் கரகத்தை எடுத்துச் சிரத்திற்கு அபிஷேகம் செய்யத் தொடங்கியதும், ஜனத்திரள் கை கூப்பியபடிச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்ட காளியின் பெயர்களை, வரிசைக்கிரமமாக பயபக்தியோடு கூவத்தொடங்கியது.

கூட்டத்தின் காளி நாமாவளி, இசைக்கருவிகளின் ஒலி, மணிகளின் ஓசை இவற்றிலெல்லாம் தன் சிந்தையைச் சிதறவிடாமல், மருளாடி, காளியைப் பார்த்து மந்திர உச்சாரங்களைக் கூற ஆரம்பித்தான்.


யஸ்யா உதே³தி ச ஜக³த்ப்ரதானாக்²யம் ஜக³த்பரம்

யஸ்யாஸ்த் அம்ஶபூதாம் த்வாம் ஸ்தௌமி நித்³ராம் ஸனாதனீம்

 

இலகுவான ஸம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட மந்திரங்கள். ஆனால், மருளாடியின் கணீர்க்குரலில், பெரிய பரிமாணம் கொண்டு, தப்பையும் தாரையையும் மீறிக்கொண்டு ஒலித்து, கேட்பவரின் சித்தத்தையும் உணர்வையும் முழுவதுமாக ஆகர்ஷித்தன. கூட்டத்தின் பார்வை முழுதும் சடங்கைக் கவனித்துக் கொண்டிருக்க, இளநீர், கள், தேன், பால் என்று ஒவ்வொன்றின் திருமுழுக்கு நவகண்ட நாயகனுக்கு நடந்தது.

 

த்வம் சிதி: பரமானந்தா³ பரமாத்ம ஸ்வரூபிணீ

ஶக்திஸ்தவம் ஸர்வ பூதானாம் த்வம் ஸர்வேஷாம் ச பாவனீ

 

உடலில் வழிந்த அபிஷேக நீர்ப்பெருக்கு, அவனுடைய மெய்யில் வழிந்தோடிப் பாதங்களை அலம்பிப் பீடத்தின் நான்கு தாரை முகங்கள் வழியே, கீழே விரித்திருந்த நடைபாவாடை மீது பரவியது. வெளீரென்றிருந்த வெள்ளைத் துணி, மஞ்சளில் முழுகியது.

அபிடேகம் வார்த்து முடிந்த வெற்று அபிடேகக் குடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மருளாடி சமிக்ஞை கொடுத்தான். எட்டுப் பேர், வாயகன்ற எட்டுக் கலங்களை ஏந்திக்கொண்டு வரிசையாக நின்றார்கள்.

 

த்வம் ஸாவித்ரீ ஜக³த்³தாத்ரீ, த்வம் ஸந்த்யா, த்வம் ரதிர்த்ருதி:

த்வம் ஹி ஜ்யோதி: ஸ்வரூபிணீ, ஸம்ஸாரஸ்ய ப்ரகாஶினீ

 

உறுமியின் ஓசை ஓங்கிக் கேட்டது. பலிபீடத்தில் அமர்ந்தபடியே கீழே குனிந்த நவகண்ட நாயகன் தன்னுடைய வலக்காலில், கணுக்காலுக்கு மேலே, ஆடுசதையில் ஒரு விள்ளல் சதையைக் கத்தியால் நிமிண்டி எடுத்துக் கலத்தில் எறிந்தான். அதே வேகத்தில், இடக்காலிலும் ஒரு விள்ளல். இரண்டாம் கலமேந்தியவன் ஓடோடி வந்து அதைத் தரையில் விழுந்துவிடாமல் கலத்தில் வாங்கிக்கொண்டான். மருளாடியின் உச்சாரம் துவளாமல், தன்னுடைய ஸ்தாயியை விட்டு விலகாமல், ஒரே சீராகப் பிழையறாது, தயங்காது ஒலித்துக் கொண்டு இருந்தது.

 

த்வம் மேதா, த்வம் மஹாமாயா, த்வம் ஸ்வதா பித்ரு மோதி³னீ

த்வம் ஸ்வாஹா, த்வம் நமஸ்கார-வஷட்காரௌ ததா² ஸம்ருதி:

 

பிறகு, இரண்டு தொடையிலும் ஒவ்வொரு விள்ளல். தன்னைத் தானே வெட்டிக்கொண்டிருந்தவனின் முகத்தில், ஒரு சுருக்கமில்லை, வலி தாங்காச் சுணக்கமில்லை. நான்கு கண்டங்கள் பூர்த்தியாயின. வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து உதிரப் போக்கு நிற்காமல் கீழே வழிந்து, மஞ்சள் படிந்திருந்த நடைபாவாடையை இரத்தவழறாக்கிற்று.

அடுத்து நாபியில், மாம்பழக் கதுப்பை வகிர்வது போல, ஒரு வெட்டு. அந்த வெட்டில் கத்தியில் ஒட்டிய காற்பலம் சதை, வயிற்றில் குழியை ஏற்படுத்த, அதிலிருந்து வழும்பு வழிந்தது. ஆறாவதாக மார்பக மத்தியில். மார்பை வெட்டும்போது, முகம் போன போக்கு, சரீரம், வலியைத் தாங்கும் திறனை இழந்து வருகிறது என்று காட்டியது. சட்டென்று இடப்புஜத்தில் ஒரு வெட்டு. உடனே இடக்கை மாற்றிக்கொண்டு, வலப்புஜத்தில் ஒரு வெட்டு. எட்டு வெட்டுக்களிலும், வகுபட்ட எட்டுக் கண்டங்களையும், தத்தம் கலங்களில் ஏந்திய எட்டுப்பேரும், கலங்களைத் தரையில் வைக்காமல், கரங்களிலேயே வைத்துக்கொண்டு நின்றனர்.

 

த்வம் ஏவ லஜ்ஜா, த்வம் ஶாந்திஸ்த்வம் காந்திர்ஜக³தீ³ஶ்வரீ

மஹாமாயா த்வம் ச ஸ்வாஹா ஸ்வதா ச பித்ருதே³வதா

 

இடக்கையில் பிடித்திருந்த இரத்தம் சொட்டும் கத்தியைக் கீழே போட்டுவிட்டு, அக்கையைப் பின்புறமாகத் தலைக்குக் கொண்டுபோனான். பிடிக்கத் தோதாக, அவனுடைய தலையில் இருந்த கேசத்தை சடாபாரமாக்கிக் கேசக் கற்றையை கையில் திணித்த மருளாடி, அவனுடைய வலக்கையில் ஒரு வெட்டுவாளைப் பிடித்துக்கொள்ளக் கொடுத்தான். வெட்டுவாளைக் கையில் உறுதியாகப் பற்றிக்கொண்டவன், கையை உயர்த்திப் பின்தலைப் புறமாகக் கொண்டு போனான்.

பலிபீடத்தில் இருந்தவனின் இடக்கையில், அவனுடைய கேசம், வலக்கையில் ஓங்கி உயர்ந்த வெட்டுவாள். தன்னுடைய சிரத்தையே ஒன்பதாவது கண்டம் செய்துகொள்ளப் போகிறான் என்று உணர்ந்த விநயனுக்கு, உடல் நடுங்கியது. என்ன மாதிரி பக்தி இது!

 

தத்த கிடத தகிட தகிட, தத்த கிடத தகிட தகிட, தகதகதக தத்த கிடத,

தத்த கிடத தகிட தகிட, தத்த கிடத தகிட தகிட, தகதகதக தத்த கிடத,

 

தாரைகள் இப்போது வெறித்தனத்தோடு திரிசர இலயத்தில் ஒலித்தன. இரத்தப் போக்கினால், அவன் கைக்கு வலுவில்லாமல் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த மருளாடி, ஒருவேளை அவனுடைய கை, வாளின் சுமையைத் தாங்காமல் விழுந்தால், பிடித்துக்கொள்ள ஆயத்தமாகத் தன்னுடைய கையை, அவனுடைய ஓங்கிய கரத்தின் கீழே வைத்துக்கொண்டு, வாய் காளியைத் தோத்திரம் செய்வதை நிறுத்தாமல், ‘சீக்கிரம் ஆகட்டும்’ என்று தலையை மட்டும் அசைத்தான்.

நவகண்டத்தானின் தலை சற்றுக் குனிந்தது. ஓங்கிய கையைச் சொடேல் என்று ஒரே வீச்சில் கீழே தாழ்த்தித் தன்னுடைய பின்னங்கழுத்தை வேகமாகத் தானே வெட்டிக்கொண்டான். அயின்மை அதிகமாக இருக்கும்படிக் கூர் தீட்டப்பட்ட வாள். வெண்ணெயை வெட்டுவது போலக் கண்ணிமைக்கும் நேரத்தில், முக்கால் கழுத்தை வெட்டிக்கொண்டு, கழுத்தில் புதைந்துகொண்டது. தலை உடம்பிலிருந்து, துணிக்கப்பட்டுக் கீழே தொங்கியவாறு ஊசலாடியது. வெட்டுப்பட்ட நாளங்கள் சிவிறியாக மாறிக் குருதியை எக்கின. கொப்பளித்த குருதி, தலை முழுவதையும் நனைத்துக் கீழே கொட்டியது. அவனுடைய கால்களும் கைகளும் துடித்தன. பீடத்திலிருந்து சரீரம் கீழே விழாமல், சுற்றி இருந்தவர்கள் பிடித்துக்கொள்ள, அவன் உடலில் இருந்து உயிர் பிரிந்தது. ஆனாலும், உடல் இன்னும் சமநிலைக்கு வரவில்லை. தலையும் முழுவதுமாக உடலில் இருந்து வேறாகாமல், ஆடிக்கொண்டிருந்தது. மருளாடி, உயர்ந்த குரலில் காளியின் பெயர் சொல்லியபடியே, வாளைப் பற்றியிருந்த நவகண்டத்தானின் கையைக் கீழ்நோக்கி அழுத்தினான். அந்த வேகத்தில், தலை முழுதும் துண்டிக்கப்பட்டுக் கீழே விழ, அதை ஒருவன் சித்தமாக நீட்டியிருந்த கலத்தில் ஏந்திக் கொண்டு மெல்லக் கீழே வைத்தான். அங்கிருந்த எல்லோருமே காளியின் பிரசன்னத்தை நேரடியாக உணர்ந்தவர்களைப் போலக் காளியின் பெயரை ஆவேசமாகக் கூவினார்கள்.

இரத்தம் படிந்த கையோடு, மருளாடி மற்றவர்களின் துணையோடு சீவபலி கொடுத்தவனின் உயிரிழந்த உடலைப் பீடத்திலிருந்து கீழே இறக்கிப் படுக்க வைத்துவிட்டு, துண்டிக்கப்பட்டுக் கலத்தில் வைக்கப்பட்டிருந்த சிரத்தை, இருகைகளால் ஏந்திக்கொண்டு, அங்கே நட்டு வைத்திருந்த கம்பத்தின் நுனியில், வாய் வழியாகக் குத்தி ஏற்றி வைத்தான்.

தன்குடியின் நலத்துக்காகத் தானே நேர்ந்துகொண்டு, தன்னுடைய உடலையும் அந்த நேர்த்திக் கடனுக்காகத் தானே வெட்டிக்கொண்டு உயிர்த்தியாகம் செய்தவனை வாய்பிளந்து ஸ்தம்பித்தவாறு பார்த்துக் கொண்டிருந்த விநயனை சாரதியின் குரல் நடப்புக்கு மீட்டுவந்தது.


“ஐயா, புறப்படலாமா? சடங்குகள் இன்னும் இருக்கின்றன. பாதியில் நீங்குவது சிரமமாகிவிடும். தாமதித்தால், சமயத்துக்குப் போய்ச் சேரமுடியாது.”

வழியெல்லாம் நவகண்டச் சடங்குதான் விநயனின் மனத்தை முழுதும் ஆக்கிரமித்திருந்தது. என்ன ஒரு நம்பிக்கை, விசுவாசம்! அறிவுக்கும் தருக்கத்துக்கும் அகப்படாத உறுதிப்பாடு. தானே தன்னுடைய கழுத்தை வெட்டிக்கொண்டு பிராணத்தியாகம் செய்வதற்கு எத்துணை மனவுறுதி வேண்டும்! அதுவும் சுயநலத்துக்காக அன்றிப் பொதுநலத்துக்காக! நினைக்க நினைக்க, இது தனக்குச் சாத்தியப் படுமா என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.

“உடலை என்ன செய்வார்கள்?”

“பின்னால், ஒரு திடல் இருக்கிறது. அங்கே புதைத்துவிடுவார்கள். பிறகு ஒரு கல்லில், அவருடைய வரலாற்றையும், காரணத்தையும் செதுக்கி நடுகல் நாட்டுவார்கள்.”

“தலை?”

“அந்தக் கம்பத்திலேயே, கழுகு, கூகை, காக்கை போன்ற காளிக்குப் பிரியமான நிணமுண்ணிப் பறவைகளுக்குப் படையலாக இருக்கும். காலப்போக்கில், சதைகள் காய்ந்து, பிடிப்பின்றித் தானே காற்றில் விழும். அதுவரை அதைத் தொடாமல், கம்பத்தடிக்குத் தினம் பூசைகள் நடக்கும். கீழே உருண்ட கபாலத்தை, காளி மார்பில் பார்த்தீர்களே சில கபாலங்களைக் கோத்த மாலை? அதில் கோத்துவிடுவார்கள்.”

“அவையெல்லாம் நிஜக் கபாலங்களா? நான் சுதையால் செய்தவை என்று நினைத்தேன்”

“சிரக்கமலங்கள் அர்ப்பணித்தவர்களுடைய கபாலங்கள். இவருடைய பாட்டனாரும் சிரக்கமலம் தானமளித்தவர்தான். பீமசாளுக்கியர் வெல்வதற்காக நேர்ந்துகொண்டு, இளையவர் அரியணை அமர்ந்ததும் ஆத்மபலி தந்தார். அவருடையதும் அந்த மாலையில் இருக்கிறது. நவகண்டத்தின் போது, காளியைப் பிரார்த்தித்துக் கொண்டீர்களா? அந்தச் சமயத்தில் எதைக் கேட்டாலும் அவள் கொடுப்பாள்.”

இல்லை என்று தலையசைத்தான் விநயன்.

அரிய வாய்ப்பைத் தவறவிட்டு விட்டீர்களே என்பதுபோல விநயனைப் பார்த்தான் சாரதி. “நான் பிரார்த்தித்துக் கொண்டேன். நீங்கள் தாமசிக்கச் சொன்னதால், எனக்குப் பாக்கியம் கிடைத்தது.”

“இவ்வளவு ஸம்ஸ்க்ருதம் எயினர்களுக்குப் பழக்கம் இருக்கிறதா?”

“எல்லோருக்கும் தெரியாது. மூன்று நாள் பயணத்தில், சமரகண்டிகையில், ஒரு காளாமுக மடம் இருக்கிறது. அவர்கள் ஒரு சாக்த பாடசாலையையும் போஷித்து வருகிறார்கள். இங்கிருக்கும் பட்டி, பாந்தல்களில் இருந்து, ஊரே சிலரை அனுப்பிக் காளி பூஜாவிதிகளைக் கற்றுவர உதவி செய்யும். அதுவும் இந்த மருளாடியின் குடும்பம் முழுவதுமே பரம்பரை பரம்பரையாகக் காளி உபாசனை செய்து வருகின்ற குடும்பம். உறவுகளில், இருபது முப்பது பேராவது ஸம்ஸ்க்ருதத்தில் பூசை செய்யத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். தேருந்தியைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். சரிவு வருகிறது.”

சாரதி சொல்லி முடிப்பதற்குள், சகடம் ‘ஜிவ்’வென்று சரிவில் இறங்கியது.

“அதோ, ஓர் ஏற்றம் வருகிறது பாருங்கள், அதில் ஏறி, அந்தக் குன்றைச் சுற்றிப் போனால், நாம் சேரவேண்டிய பட்டி வந்துவிடும். ஊருக்கு வெளியே ஒரு கரப்பு நீருறவி இருக்கிறது. அங்கே நீராடிவிட்டுப் போய்விடலாம்.”

நீராடிவிட்டு, ஈரத் துணியை உலர்த்தித் தரித்துக்கொண்டு போவதற்குள் உச்சி வெயில் ஓங்கத் துவங்கிவிட்டது. போய்ச் சிறிது நேரத்துக்குப் பிறகுதான் பிரதாபர் வந்தார்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...