Friday, 20 September 2024

07. வைரமேகன்

“இப்படி, நாகபடன், ஒவ்வொரு நாடாகத் தன் ஆதிக்கத்தைப் பரப்பியவாறு இருக்க, தந்திதுர்க்கர், தாபி நதிக்குக் கீழே தன்னுடைய நிலைமையை ஸ்திரப் படுத்திக்கொண்டார். நான் முன்பே சொன்னது போலச் சாளுக்கிய அரசின் சிற்றரசாக ஏற்கனவே அவருடைய கட்டுப்பாட்டுக்குக் கீழே இருந்த உம்பராவதி, தாபிக்குத் தெற்கில் உள்ள ஏலபுரி, நாசிக்கா, ஜலக்கிராமம், விதர்ப்பம் போன்ற பிராந்தியங்கள் அவருடைய தனிக் கட்டுப்பாட்டின் கீழே வந்தன. சாளுக்கிய அரசுக்குத் திறை செலுத்துவதை நிறுத்தினார். தன்னுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க, ஆயத்தங்கள் செய்யத் துவங்கினார்.

தேவையான பொருளும் படையும் சேர்க்கச் சுற்றி இருக்கும் வலுக்குறைந்த நாடுகளைத் தாக்க முடிவு செய்து, கிழக்கு நோக்கிச் சென்று ஸ்ரீபுரியைத்தாக்கி, அங்கு ஆண்டு கொண்டிருந்த காலச்சூரி அரசனைத் தோற்கடித்தார். பிறகு அதற்குக் கிழக்கில் உள்ள தக்ஷிணகோஸலத்தை வென்றார்., அங்கிருந்து கலிங்கத்தின் எல்லையோரமிருந்த சிறு இராஜ்ஜியங்களைத் தாக்கிப் பொருள்களையும் படைகளையும் கவர்ந்துகொண்டு திரும்பினார். திரும்பிவரும்போது, ஸ்ரீவர்த்தனத்தை ஆண்டு கொண்டிருந்த விந்தியபதி, ஜயவர்த்தனனையும், விதிஷாவையும் வென்று திரும்பினார்.

“தந்திதுர்க்கரின் இந்தப் படையெடுப்புக்களின் நோக்கம் இராஜ்ஜியத்தின் எல்லைகளைப் பெருக்குவதற்கோ, மற்ற நாடுகளின் அரியணையைப் பறிப்பதற்கோ அல்லாமல், தான் ஸ்தாபித்துக் கொண்டிருக்கும் நாட்டின் செல்வத்தையும் படைபலத்தையும் பெருக்கச் செய்வதற்காகவே இருந்ததால், இப்படையெடுப்பெல்லாம் ஒரு தண்டயாத்திரையாகத்தான் இருந்தது. வளமுள்ள ஒரு நாட்டைத் தேர்ந்தெடுப்பார்; அதன் பலவீனம், வலிமை ஆகியவற்றை ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொள்வார்; அதற்கேற்றாற்போல படைபலத்தை உருவாக்கிக் கொண்டு, போய்த் தாக்குவார்; தாக்கி எதிரியைத் தோற்கடித்து விட்டுச் செல்வங்களைக் கவர்ந்து கொள்வார். பிறகு, நாட்டை எதிரியிடமே கொடுத்துவிட்டு, அவனையே ஆண்டு கொள்ளச் சொல்லி விடுவார்.

“திறையும் படையும். - இதுதான் அவருடைய இராணுவச் சித்தாந்தம். ஆள் பலமும், ஆயுத பலமும், மிருக பலமும், அலர்மேல் அமர்ந்தாள் அளிக்கும் பொருள் பலமும், ஒருவாறாகச் சேர்ந்ததும், தன் கனவை மெய்யாக்க நடவடிக்கைகள் எடுத்தார். அவனி ஜனாஷ்ராயர் அப்போது இறந்து விட்டிருந்தார். நாகசாரிகாவைவும், நாந்திபுரத்தையும் ஆண்டு கொண்டிருந்தது ஒரு வலுவிழந்த சந்ததி. பெயர் நினைவில்லை. சாளுக்கியரின் ஆதிக்கத்துக்குக் கீழ் இருக்கும் சிற்றரசைத் தாக்குவதன் மூலம். சாளுக்கியப் புலியைச் சீண்டிப் பார்க்க நினைத்தார். சிற்றப்பர்கள் கிருஷ்ணராஜாவும், துருவராஜாவும் துணை வர, நேராகச் சென்று நாந்திபுரத்தைத் தாக்கினார். நாகசாரிகாவைத் தன்னுடைய அரசோடு இணைத்துத் தன் நேரடிப் பார்வைக்குக் கீழே கொண்டு வந்தார்.”

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தாம் காலூன்றிக் கொள்ளும்வரை, அவர் கீர்த்திவர்மர் மீது நேரடியாகப் படையெடுத்துச் செல்லவில்லை என்று தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக எலி கொறிப்பது போல, எல்லைப் பகுதி நாடுகளைத் தம் ஆளுகைக்குக் கீழே கொண்டு வந்திருக்கிறார், இல்லையா? காலூன்றிய பிறகுதான், இப்போது முதன்முறையாக, நாகசாரிகாவை சாளுக்கிய தலைமையிடமிருந்தே பறித்திருக்கிறார்?”

“ஆம். நாளும் வளர்ந்து விரிந்து வரும் அவருடைய அரசு பற்றிய செய்தி, வாதாபிக்கு எட்டாமல் இருக்குமா? எட்டியது. கீர்த்திவர்மனுக்கு, வடக்கில் வளர்ந்து வரும் அபாயம் புரிந்தது. தமக்குக் கீழே திறை செலுத்திய நாடாக இருந்தவனை, இப்படி வளர விடலாமா?


லப்³தோத³ய க²லஜன  ப்ரத²மம் ஸ்வஜனே கரோதி ஸந்தாபம்

உத்³க³ச்ச²ன் த³வத³ஹன ஜன்மபுவம் தா³ரு நிர்த³ஹதி ||

என்பார்கள்.”

அவர் சொல்லி முடித்ததும், “ஆம்” என்று ஆமோதித்தான் விநயன்.

 

“தாமுயர்பின் தம்மரைமுன் காயுங்கீழ்; தம்மீன்ற

தாருகொல் தாவம் தகித்து.

 

என்று திரமிளத்தில் சொல்வார்கள். மரத்தின் அடியில் தோன்றும் காட்டுத் தீ, தான் தோன்றிய மரத்தைத்தான் முதலில் அழிக்குமாம்” என்றான் விநயாதிசர்மன்.

“அதேதான். ஆனால், ஒரு வேறுபாடு. தந்திதுர்க்கர், கீழ்மை உடையவர் அல்லர். ஆனால், சாளுக்கிய மரத்தின் அடியில் தோன்றிய காட்டுத் தீ என்பது சரிதான்.

தந்திதுர்க்கர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உத்தரம், வாதாபியிலிருந்து கிடைத்தது. தந்திதுர்க்கருடைய வளர்ச்சியை வெறுமனே கவனித்துக் கொண்டிருந்த கீர்த்திவர்மருக்கு, இனித் தான் வாளாவிருக்க முடியாது என்று தெரிந்ததும், படையோடு, வாதாபியை விட்டு, வடக்கு நோக்கிப் புறப்பட்டார். அவருக்கு நாந்திபுரத்தை மீட்டாக வேண்டும். ஆனால், கீர்த்திவர்மருக்கு வழியிலேயே தோல்வி கிடைத்தது. கத்தியின்றி, இரத்தமின்றி, சேதமின்றி, நேர்ந்தது தெரியாமல் இரட்டபாடிக்கு இந்த வெற்றி கிடைத்தது.”

“என்ன!” விநயனுக்கு நம்ப முடியவில்லை. “போரே நடக்கவில்லையா?”

“என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஏன் யாருக்குமே தெரியாது.”

“.............................. “ பேச்சிழந்து பிரமித்துப் போனான் விநயன்.

“இந்த மோதல், எப்படி, எங்கு நடந்தது என்று எனக்கு யாரும் இதுவரை விவரமாகச் சொன்னதில்லை. இதைப்பற்றித் தெரிந்தவர்கள் யாரிடம் கேட்டாலும், அது எதற்கு உனக்கு என்பது போல ஏற இறங்கப் பார்த்துவிட்டுப் பேச்சை மாற்றிவிடுவார்கள். இந்த மோதல், வழக்கமான யுத்தம் போல நடக்காமல் ஏதோ இரகசியமாக நடந்த நிகழ்ச்சி என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

“- அக்³ருஹீத நிஷாத ஶஸ்த்ரம் அஜ்ஞாதம் யோ வல்லபாம் த³ண்ட³ பலேன ஜித்வா - ஆயுதத்தை எடுக்காமல், மூன்றாமவருக்குத் தெரியாமல் முனைப்புக் காட்டாமல், ஒரு தண்டத்தின் பலத்தால், அந்த வல்லபராஜாவை வென்றார் – என்கிறார்கள் சிலர். ஒரு சிலர் ‘த³ண்ட³ லகேன – நெற்கதிரைத் தண்டமாகக் கொண்டு என்கிறார்கள். ஒரு மஹாஸாமந்தர் சொன்னார், தந்திதுர்க்கர், தன்னுடைய புருவத்தைச் சுளிக்காமல், கூரிய ஆயுதங்களைக் கைக்கொள்ளாமல், மூன்றாம் பேருக்குத் தெரியாமல், உத்தரவுகள் பிறப்பிக்காமல், உஞற்றாமல், இருந்தாற்போலிருந்து திடீரென வல்லபனைத் தன் தாக்குதலால் வென்று, அரசர்களின் அரசன், என்ற நிலையை அடைந்தார்.கிருஷ்ணராஜாவே இப்படிச் சொல்வதை அவர் கேட்டாராம். எப்படி இருக்கிறது இது?” சிரித்தார் பிரதாபர். உனக்கு என்ன தோன்றுகிறது?” என்று விநயனைக் கேட்டுவிட்டு, அவனைக் கூர்மையாகப் பார்த்தார்.

“அடேயப்பா! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஏதோ திட்டம் வகுத்துச் சூழ்ச்சியால் வென்றிருக்கிறார் என்று படுகிறது. மஹா ரஹஸியமான ராஜாங்க விவகாரம் போலிருக்கிறது.

“அதேதான். எனக்கும் இன்றுவரை இது வியப்பாகத்தான் இருக்கிறது. சூழ்ச்சிதானோ இல்லை வேறு ஏதோ ரஹஸியமோ? கீர்த்திவர்மருடைய அந்தரங்கம் ஏதோவொன்று தந்திதுர்க்கருக்குத் தெரிந்திருக்கலாம். காஞ்சிப் படையெடுப்பு முழுவதும் கூடவே இருந்தவர் அல்லரோ? நேருக்கு நேர் நடந்த சந்திப்பில் பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு நடந்திருக்கலாம். ஏதோ நடந்திருக்கிறது. நானும் மேற்கொண்டு இதைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை. என்ன நடந்திருந்தாலும், அது தந்திதுர்க்கர் திட்டம் செய்திருந்தபடி நடந்திருக்க வேண்டும் என்பது திண்ணம்.

“ஆச்சரியமான விஷயம்தான். இது நடந்து ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆகி இருக்குமா?”

“இன்னும் பஃதோ, இரு பஃதோ கூட ஆகி இருக்கலாம். ஏன் கேட்கிறாய்?”

“இவ்வளவு சமீபத்தில் நிகழ்ந்த விஷயமே, நடப்பிலிருந்து மறைந்து விட்டதென்றால், இனி வருங்காலத்தில், எவருக்குத் தெரியப் போகிறது என்று அதிசயிக்கிறேன். வரலாறு என்பதே அவ்வளவுதானா?”

“நினைவில் இருப்பதுதான் வரலாறு. மறதி இராக்ஷஸன், மரணத்தை விடப் பெரியவன் அல்லவா? அதற்குத்தான் கல்வெட்டிலும் சாஸனத்திலும் பொறித்து வைக்கிறோம்.

“அதுவும், காலப்போக்கில் அழிந்துவிடத்தான் போகிறது. அல்லது, மாற்றியும் திரித்தும் செதுக்கப்பட்டு விடலாம்.”

“அதென்னவோ சரிதான். எதுதான் சாஸ்வதம்?”

“சில சமயம் யோசித்தால், அப்போதைக்கப்போது நாம் அனுபவிக்கும் வாழ்வு மட்டுமே நிதர்சனம், மற்றெல்லாம் மனம் தன்னுடைய அகங்காரத்துக்காகத் தூக்கி நிறுத்தி வைக்கும் பிம்பம்தான் என்று தோன்றுகிறது. ஸ்ரீமாலா எவ்வளவு உயர்ந்த கலாசாரக் களஞ்சியம்! பிரஹ்மஸ்புட சித்தாந்தத்தை எழுதிய பிரஹ்மகுப்தர், மஹாகவி மாகர் போன்றோர் பிறந்து செழித்த இடம். யாரோ எங்கிருந்தோ திடீரென்று வந்து நடத்திய தாக்குதல்களால் இப்படிப் பூரணமாகச் சிதைந்து விட்டது. எத்தனை சுவடிகள் எரிக்கப்பட்டு இருக்கும்? எத்தனை காலமாக வழிவழியாக வந்த கல்வியறிவு, அதைக் கற்று அப்பியசித்துப் பெருக்கிவந்த அந்தப் பண்டிதர்களோடேயே நாசமாகி விட்டிருக்கும்? இவ்வளவு மெனக்கெட்டு இவற்றையெல்லாம் அழித்தபிறகு, அப்படி அழித்தவர்களும் அழிந்து போய்விட்டார்கள். காலச் சக்கரம் எத்துணை கொடூரமானது! எதற்கும் மதிப்பில்லை என்றுதானே தோன்றுகிறது?”

“அதற்காக எதையும் உருவாக்காமல் பாறை போல அமர்ந்திருக்க முடியுமா, விநயா?”

“அமர்ந்திருக்க முடியாமல் போவதும் காலத்தின் விசித்திரம்தான், இல்லையா? நீங்களே பாருங்களேன். நமக்கு விஸ்ராந்தியை அனுபவிக்கத் தெரியாது; ஆனால், வேறுபாடே வாழ்வென்று வாழத்தெரியும். நிலைப்பன எவை என்று தெரியாது. ஆனால், நிலைக்காதவற்றைத் தேடித் தேடி நிறுவத் தெரியும். நிகழ்காலத்தை அனுபவிக்கத் தெரியாது. ஆனால், நடந்ததை நினைத்து மருகத் தெரியும், நடப்பனவற்றின் இன்பத்தை மதிக்கத் தெரியாது, ஆனால், வருங்காலம் இப்படி இருந்தால் என்று நினைத்துக் கனவு காணத்தெரியும். ஒருவேளை நிகழ்காலம் அமைதியாகக் கழிந்தால்கூட, ஐயோ, எதிர்காலம் இப்படி இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று அஞ்சி வருந்தத் தெரியும். பரமேஸ்வரா! உன் விளையாட்டுக்காக ஏன் ப்படி ஒரு இனத்தைப் படைத்து வைத்திருக்கிறாய்!”

வாய் விட்டுச் சிரித்தார் பிரதாபர். “நீ கவி விநயா!”

“பிறகென்ன நடந்தது, ஐயா?”

“பிறகென்ன? சாளுக்கியப் பேரரசின் வீழ்ச்சி துவங்கியது என்று வைத்துக் கொள்ளேன். இந்த வெற்றிக்குப் பின்னர், கீர்த்திவர்மர், தன் இராஜ்ஜியத்தின் வடக்குப் பகுதிகளைத் தந்திதுர்க்கரிடம் இழந்து, கர்ணாடப் பகுதிகளுக்கு மட்டுமேயான மன்னராக ஆகிப் போனார். சாளுக்கியப் பேரரசு, பீமரதிக்குக் கீழே, தன் எல்லையைக் குறுக்கிக் கொண்டு குந்தள அரசாக மாறிவிட்டது. வட பகுதியில் இராட்டிரக் கூடம் ஸ்தாபனம் ஆயிற்று. வலிமையான சாளுக்க சாம்ராஜ்ஜியம் மறைவதற்கான பாதை இடப்பட்டது.

இளம்பிராயத்தினராக இருந்தாலும், திட்டமிட்டு இராஜ்ஜியத்துக்கு ஓர் அஸ்திவாரத்தை அமைத்தார். ஸப்தாங்கம் ராஜ்யம்” என்று பழங்காலத்தில் இருந்து சொல்லிவருவதை முற்றிலும் உணர்ந்தவராக இருந்ததால், தன்னை ஓர் அங்கமாகப் பாவித்துக் கொண்டு, மற்ற ஆறு அங்கங்களை ஸ்தாபிக்க யத்தனித்தார். நீ ஸப்தாங்கங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாயே?”


“ராஜ்ஞா ஸப்தைவ ரக்ஷ்யாணி தானி சைவ நிபோ³ மே।

ஆத்மாமாத்யாஶ்ச கோஶாஶ்ச த³ண்டோ³ மித்ராணி சைவ ஹி॥

ததா² ஜனபதா³ஶ்சைவ புரம் ச குருநந்த³ன।

ஏதத் ஸப்தாத்மகம் ராஜ்யம் பரிபால்யம் ப்ரயத்னத

 

என்று பிதாமகர் பீஷ்மர், தர்மராஜாவுக்குச் சொன்னதைத்தானே சொல்கிறீர்கள், ஐயா? அதே கருத்தைத் திரமிளத்திலும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

 

“நாடரண்  தண்டம் களஞ்சியம் நட்புழை 

பீடர சுக்கிவை பேர்த்து என்றும்

 

“குடியரண் கோசம் குவவுபடை கேண்மை

உடனுழை கொண்ட தரசு” என்றும் சொல்வார்கள்.

 

அதேதான். ஸ்வாமி என்ற அரசனை விட்டுவிட்டு, ராஜ்யம் என்று ஆறங்கமாகச் சொல்லுகிறாய். பொருள் அதேதான். எல்லைகளோடு கூடிய ஒரு புதிய தேயத்தை உருவாக்க வேண்டுமென்றால், குடிகள் வேண்டும். குடிகள் இல்லாமல் நாடு ஏது? தேயத்தை ஏற்படுத்திய பின்னால், அதைக் காக்க அரண்கள் உருவாக்க வேண்டும். பிறகு, அதைக் காக்க ஆயுதங்கள் தாங்கிய படைகளை நிறுவ வேண்டும். இவற்றிற்கெல்லாம் தானியங்களும் செல்வங்களும் தேவை. இந்த நான்கு விஷயங்களுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளித்தார், தந்திதுர்க்கர்.

“பிறகு, தான் ஸ்தாபித்த பகுதிகளின் நிர்வாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். நன்னராஜாவை விதர்ப்பத்தையும், துருவரின் மகன் கோவிந்தரை நாகசாரிகா மற்றும் நாசிக்காவைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உஜ்ஜைனி மீது கவனத்தைத் திருப்பினார்.

“நாகபடனும் உஜ்ஜைனி மீது ஒரு கண் வைத்திருந்தான் என்று சொன்னேன். அந்தச் சமயத்தில், தந்திதுர்க்கருக்கு, இடுக்கண் தரும் வல்லமை படைத்தவனாக, நாகபடன் ஒருவன்தான் இருந்தான். இவர்கள் இருவருடைய வல்லமையால் உஜ்ஜைனியின் அமைதியணைக்குத்தான் உடைப்பெடுக்கத் துவங்கி விட்டிருந்தது. வடமேற்கில் இருந்து நாகபடன் பார்வை. மேற்கில் அவனுக்கு இணக்கமான அரசு. தெற்கில் இருந்து தந்திதுர்க்கரின் பார்வை. கிழக்கில் விதிஷாவிலும், தென்கிழக்கில் நாந்திபுரத்திலும் அவருக்கு இணக்கமான அரசு. உஜ்ஜைனிக்குக் கிடுக்கிப்பிடிதான். இருவரில் யாராவது ஒருவருக்கு அது கையகப்படும் நிலையில் இருந்தது.

“நாகபடன் முந்திக் கொண்டான். அவனுடைய கனவு முதலில் நனவாகியது. அவனுடைய பிராந்தியத்துக்கும், உஜ்ஜைனிக்கும் இடையே இயற்கை அரண்கள் இல்லை. எளிதாக அவனுடைய படைகள் தெற்கு, தென்கிழக்கில் நகர்ந்து, உஜ்ஜைனியைக் கைப்பற்றின. மிலேச்சர்களை வென்றதும் ஜாபாலிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு கொண்டிருந்தவன், உஜ்ஜைனியைக் கைப்பற்றியதும், தலைநகரை உஜ்ஜைனிக்கே மாற்றிக் கொண்டான்.

“இனி நேரம் கடத்தினால், உஜ்ஜைனியை எப்போதுமே கைப்பற்ற முடியாது என்று முடிவு செய்த தந்திதுர்க்கர், போரினாலும் இடமாற்றப் பிரயாணத்தாலும் நாகபடன் களைத்திருக்கும்போதே தாக்கிவிடப் போர்த் திட்டம் வகுத்தார். யானைப்படைகளும், குதிரை வீரர்களும், வில்லாளிகளும், நர்மதையைக் கடந்து சென்று உஜ்ஜைனியை முற்றுகை இட்டன. கிருஷ்ணராஜாவின் பக்கபலம் வேறு இருந்தது. உத்தர தேச அரசர்களுக்கும், தக்கண தேச அரசர்களுக்கும் முக்கிய கனவாக இருந்த உஜ்ஜைனி பிரதிஹாரர்களிடமிருந்து இரட்டர்களுக்குக் கைமாறியது. நாகபடனின் உஜ்ஜைனி வாழ்வு சில காலமே நீடித்தது. தந்திதுர்க்கரின் சேனை முன்னேறுவதைத் தடுக்க இயலாமல், நாகபடன் உஜ்ஜைனியை நிராதரவாக விட்டுவிட்டு வெளியேறினான். அவன் தப்பித்தாலும், அவனுடைய தம்பி, இராட்டிரக்கூடச் சேனையால் சிறைப்படுத்தப் பட்டான். தந்திதுர்க்கரின் சேனை ஆரவாரமாக நகருக்குள் புகுந்தது. சாளுக்கிய பேரரசால் சாதிக்கமுடியாத விஷயத்தைத் தந்திதுர்க்கர் சாதித்தார்

“சாளுக்கியர் மட்டுமென்ன? தக்கணத்தில் இருந்து எவரும் செய்ததில்லை என்றீர்கள் அல்லவா?”

“ஆம். நர்மதையைக் கடந்து, மத்திய தேசத்தைக் கைப்பற்றுவது யாருக்கும் அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை.”.

“இவர் விதர்ப்பத்தில் இருந்து தொடங்கியது அனுகூலமாக இருந்திருக்கும். எல்லோரும் பாரத கண்டத்தின் நெடுக்காகப் படையெடுப்பார்கள். இவர் குறுக்காக அல்லவோ சென்றிருக்கிறார்!”

“இருக்கலாம். மிலேச்சர்கள் விளைவித்த அழிவிலிருந்து இன்னும் அரசர்கள் மீண்டு வராத நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். மறையவர்கள் வாழும் இடம் அன்றோ உஜ்ஜைனி? அதைக் கைப்பற்றியதும், வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக எண்ணிய தந்திதுர்க்கர், மஹாதானத்துக்கு ஏற்பாடு செய்தார்.

ஹிரண்யகர்ப்பதானமா?”

“கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“ஆம்”

“என்ன கேள்விப்பட்டிருக்கிறாய்? கூறு பார்ப்போம்?”

“பிறப்பறுப்பதற்காகச் செய்யப்படும் தானம். பொதுவாக, வாழ்வில், உச்ச நிலை அடைந்தவர்கள், கடைத்தேறும் வழிக்காக முதுமையில் செய்யும் யாகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உஜ்ஜைனியை வென்றபோது தந்திதுர்க்கருக்கு என்ன வயதிருக்கும்?”



“முப்பது முப்பதைந்து இருக்கலாம்”

“அடேயப்பா! என்னைவிட அதிகம் பெரியவரல்லர். அதற்குள் இவ்வளவு சாதனையா? எப்படிப்பட்ட ஹிமாலய வெற்றி! இப்படி ஒரு பரம்பரையை, இத்தனை சிறிய வயதில் எப்படி ஸ்தாபனம் செய்தார்! அவருடைய சிந்தை, எப்படியெல்லாம் யோசித்திருக்கும்? ஒரு படைக்கலப் பிரயோகத்தில் தேர்ச்சி பெறுவதற்கே, இருபது இருபத்தைந்து வயது ஆகிவிடுகிறது. ஒரு பெரிய படையையே நிர்வகித்து, வீரர்களை ஊக்குவித்துத் திட்டம் தீட்டி, கிருஷ்ணராஜா போன்ற பெரிய வீரர்களுக்கும் தலைமை தாங்கி, .. அப்பாடி! நினைக்கவே தலையைச் சுற்றுகிறது எனக்கு”

“அதிசயப் பிறவிதான் அவர். அவருக்கு அடுத்தடுத்து வந்தவர்களும், இளைத்தவர்களா என்ன? பிரமிக்க வைக்கும் பரம்பரை.

“மெய்தான்”

சற்று நேரம் இருவருக்கும் இடையில் பேச்சு நின்றது. பிரமிப்பு, ஒரு பெரிய உருவம் எடுத்து, மேகம்போலக் கவிந்து நின்றாற்போல ஓர் உணர்வு. சற்று நேரம் அமைதியாக இருந்தனர் இருவரும். வழியில் ஒரு சிறு தடாகம் தென்பட்டதைப் பார்த்துவிட்டுப் பிரதாபர் மௌனத்தைக் கலைத்தார்.

சரி, கொஞ்சம் இளைப்பாறுவோம் என்று சொல்லிவிட்டு இரதத்தை நிறுத்தச் சொன்னார். கூடவே பயணித்துக் கொண்டிருந்த சில புரவி வீரர்களும் நின்றனர். குதிரைகளுக்கு நீர் வார்த்துவிட்டு எல்லோரும் சிறிது இளைப்பாறிய பின் புறப்பட்டனர்.

“ஹிரண்யகர்ப்ப தானத்தைப் பற்றி வேறே என்ன அறிந்திருக்கிறாய்” என்று பேச்சைத் தொடர்ந்தார் பிரதாபர்.

“ஹிரண்யகர்ப்பரான ப்ரஹ்மதேவனை ஆராதித்துச் செய்யப்படும் தானம் என்றும் துலாபுருஷ தானம் போலவே சடங்குகள் செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்காகப் பொற்குடம் ஒன்றைச் செய்து, யாகம் நடத்தும் வேதியில் வைத்து ஆவாகனம் செய்வார்களாம். இந்த ஹிரண்ய கும்பத்தையே பிரஜாபதியின் உதரமாக எண்ணி, யாகத்தைச் செய்யும் கர்த்தா ஆனவர், தன்னை ஒரு சிசு போல எண்ணிக்கொண்டு, தலை முட்டியில் படக் குனிந்து சிசு போன்ற வடிவில் அமர்ந்துகொண்டு மந்திரங்கள் சொல்லித் தன்னை அந்தக் கருப்பையிலே ஜனித்த கருவாகப் பாவித்துப் பும்ஸவனம் ஸீமந்தம் முதலிய சடங்குகளைச் செய்து, பிறகு குடத்தை அந்தணருக்குத் தானம் செய்துவிடுவாராம்.”

“சரியாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறாய். குடமும் சின்னக் குடம் பெரிய குடம் அல்ல. மகாபெரிய குடம். 72 அங்குலம் உயரமும், 24 அங்குல அகலமும் உள்ள பொற்குடம். அந்தக் கும்பத்துக்கு ஒரு தாமரை வடிவில் ஒரு மூடி. மூடியின் கனம் ஓர் அங்குலத்தை விட அதிகம் இருக்கவேண்டும். பெரும் தனவந்தர்களால் கூட, அவ்வளவு தங்கம் திரட்டுவது எளிதன்று. அந்தக் கும்பத்தில், நெய்யும் பாலும் நிறைத்து, அதைச் சுற்றி ஆயுதங்கள், ரத்தினங்கள், ஈர்குளிர், ஊசி, பொன் வடம், சூரிய மூர்த்தி உள்ள பேழை, அரையில் அணியும் துணி, தங்க முப்புரி, மற்றும் கமண்டலத்தை வைத்துச் சடங்குகள் செய்வார்கள்”

“இதைத் தந்திதுர்க்கர், உஜ்ஜைனியில் செய்தாரா? வடிவமைப்பதற்கே நாளாகி இருக்கும்”

“ஆம். அசாத்திய வெற்றி அல்லவா? அதனால், அசாத்தியத் தானம். அந்த யாகம் நடக்கும்போது, நாகபடனின் தம்பியையும், அவனுக்குத் துணையாகப் போர் செய்த அவனுடைய இரண்டு புதல்வர்களையும் யாகசாலைக்குக் காவல் வைத்தார். ப்ரதிஹாரீ க்ருதம் யேன கு³ர்ஜரேஶாதீ³ ராஜகம்

“ஆஹா! அதிலும் காவிய ரஸனையா? பிரதிஹாரர்கள், நிஜத்திலேயே பிரதிஹாரர்கள் ஆனார்களா!”

“ஆம். இராமருக்கு வாயிற்காத்த இலக்ஷ்மணனின் பரம்பரையில் வந்த வாயிற்காப்பவர்களைத் தந்திதுர்க்கர் தன்னுடைய யாகத்துக்கும் வாயிற்காக்க வைத்தார். இளமையின் துடுக்குத்தனம். தந்திதுர்க்கரால் விளைவிக்கப்பட்ட இந்த அவமானம்தான், பிரதிஹாரர்களை, இராட்டிரக்கூடத்தின் பெரிய எதிரிகளாக மாற்றியது. இந்த அவமானத்துக்கு உள்ளாகிய நாகபடனின் தம்பியின் பெயர்  வரலாற்றில் நிலைக்கவில்லை. அவனுக்குப் பிறகு, காகுத்ஸ்தன் மற்றும் தேவசக்தி - இரண்டு புதல்வர்களும் அடுத்தடுத்து அரசுரிமையை ஏற்றார்கள். அவர்களுக்கும் தந்தையின் பெயரைச் சொல்ல அவமானம்.”

“நாகபடனுக்குப் புதல்வர்கள் இல்லையா?”

“இல்லை.”

“இங்கேயும் ஓராண்வழி தடம் புரண்டதோ? ஓர் அரசனுக்கு, ஆண் குழந்தை எவ்வளவு அவசியம்! உயிரைப் பணயம் வைத்து, வாழ்நாள் முழுதும் திட்டமிட்டு, காலமும் குலப்பெயர் திகழவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு வமிசத்தை நிறுவ முற்படுகிறார்கள். ஆண் குழந்தை அற்றுப்போக, வேறு ஒரு குடும்பத்துக்கு அத்தனை ஈட்டலும் மாற்றப்பட்டு விடுகிறது.”

“அதேதான் இங்கும் நடந்தது. தந்திதுர்க்கர்தான் ஆகட்டும், அவருக்கு இணையாக அதேபோல வீரம் காட்டி ஒரு புதிய வமிசாவழியை நிர்மாணிக்க முயன்ற நாகபடன்தான் ஆகட்டும், இருவருக்கும் அவ்வளவு உழைப்பின் பலனையும், தன் உதரக் குழந்தைக்குத் தத்தம் தந்து மனம் நிறைவடையும் பேறு நிரக்கவில்லை. காகுத்ஸ்த்ன், தேவசக்தி இவர்களுக்குப் பிறகு, தேவசக்தியின் புதல்வன் வத்ஸராஜன் வந்தான். அவன் பெருமாள்மை கொண்டவன். தந்தையைப் போலவே சாணக்கியன். தன்னுடைய தந்தையும் பாட்டனும் அடைந்த சிறுமையை இவன் மறக்கவில்லை. அவன் செய்ததைப் பின்னர்ப் பார்ப்போம்.

“நாகபடன், ஜாபாலிபுரிக்குச் சென்று ஒதுங்கிவிட்டதால், சீலூகன், தெற்குக் குர்ஜரத்தையும், இலாடத்தையும் கைப்பற்றினான். இது தந்திதுர்க்கருக்குப் புதிய அபாயத்தைத் தோற்றுவித்தது. அடுத்துப் பிருகுகச்சா அவன் வசமாகிவிட்டால், இராட்டிரக்கூடத்துக்கு அவன் அண்டைநாடாகி விடுவான். பிறகு, எல்லையைத் தாண்ட எவ்வளவு நேரமாகப் போகிறது? அவனை இப்போதே தடுத்து நிறுத்தவேண்டிய அவசரத்தை உணர்ந்துகொண்டு அதற்கான வழிவகைகளை அவர் யோசித்துக் கொண்டிருந்தபோது, தேவராஜ பட்டிக்காவிடம் இருந்து அவருக்கு ஒரு தூதுவன் வந்தான்.

“மிலேச்சர்களால் வலுவிழந்த பட்டிகள் வம்சத்தில் வந்தவன் இந்தத் தேவராஜன். சீலூகனால் தோற்கடிக்கப்பட்டு, நாடிழந்த நிலையில் இருந்தான். ஒரு பக்கம் நாகபடன், இன்னொரு பக்கம் சீலூகன். இரண்டு பிரதிஹாரக் குடும்பங்கள் உருவாக்கிய போர் வெள்ளத்தால், நங்கூரமிழந்து, ஒரு கரையைத் தேடி அலைந்து கொண்டிருந்த குடிசை இவன். அவர்கள் இருவரோடும் இணக்கமாக இருக்கும் வாய்ப்பு அறவே ஏற்படப் போவதில்லை என்பதால், தந்திதுர்க்கரோடு சேருவதற்குச் சித்தமானான். சீலூகனின் படைபலம், அவனுடைய இராணுவத் தலைமை, அவன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிவாழ் மக்களின் மனநிலைமை, சேனை இரகசியங்கள் எல்லாவற்றையும் தந்திதுர்க்கரிடம் பகிர்ந்துகொண்டு, தான் அவருக்குக் கீழே ஒரு குறுநில மன்னனாக இருக்க இசைவதாகத் தெரிவித்தான்.

சீலூகனை வீழத்திவிட்டால், குர்ஜரதேசம் முழுவதும் தந்திதுர்க்கரின் வசப்படும் என்ற நிதர்சனமும் தூதுவனின் செய்தியில் உள்ளடங்கி இருந்தது, தந்திதுர்க்கருக்குப் புரியாமல் இருக்குமா? அவருக்குப் புதிய கனவு உருவாகியது. ஏற்கனவே, மத்திய தேசமும் அவந்தியும் அவர் கையில். கிழக்கிலும் கால் வைத்தாயிற்று. தக்கணத்தில் பீமநதி வரை எதிர்ப்பில்லை. பிருகுகச்சாவையும், இலாடத்தையும் பிடித்துவிட்டால், குர்ஜரத்தின் தெற்குக்கு அழுத்தம் கொடுக்கலாம். பிறகு ஜாபாலிபுரம், வடக்கில் முன்னேறினால் மாண்டவியபுரம், பிறகு பில்லமாலா என்ற ஸ்ரீமாலா. மொத்தக் குர்ஜரமும் கையில் விழுந்த கனி.

“ஆனால், கிருஷ்ணராஜா இத்தனை அகலக்கால் வைக்க ஒப்புக் கொள்ளவில்லை. பிருகுகச்சாவையும், இலாடத்தையும் மட்டும் கைப்பற்றி விட்டு, ஏலபுரிக்குத் திரும்பிவிடலாம் என்றார். கிருஷ்ணராஜா ஏன் சொல்கிறார் என்பதன் காரணம் தெளிவாகத் தெரிந்தும்கூட, வெற்றியின் வேகத்தில் இருந்த தந்திதுர்க்கர் கிருஷ்ணராஜாவின் ஆலோசனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், கிருஷ்ணராஜாவிடம், ‘நீங்கள் சொல்வதில் பொருள் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், நான் வெற்றியின் பிரவாகத்தைத் தடைசெய்ய விரும்பவில்லை. நீங்கள் வேண்டுமானால், ஏலபுரிக்குத் திரும்பிவிடுங்கள், நான் மட்டும் சென்று வடக்கை வென்று திரும்புகிறேன்’ என்று சொல்லிவிட்டார். படைச்செருக்குடன் தூரதிருஷ்டியும் கொண்டவரான கிருஷ்ணராஜாவும் அதிகம் எதிர்த்துப் பேசவில்லை. சரி என்று ஏலபுரிக்குத் திரும்பிவிட்டார். கிருஷ்ணராஜாவின் இன்மையில், தந்திதுர்க்கருக்கு வலக்கையாக இருந்தவர், விநயாதித்திய யுத்தமல்லர். விக்கிரமாதித்தியருக்குக் கீழே சாளுக்கிய தளபதியாகப் படைகளுக்குத் தலைமை தாங்கி சேனைகளை வழிநடத்திய அனுபவசாலி. தந்திதுர்க்கர், யுத்தமல்லரை வடக்கு நோக்கிப் பயணிக்கச் சொல்லிவிட்டுத் தான் பிருகுகச்சா மற்றும் இலாடம் வழியாக வந்து சேர்ந்து கொள்வதாகத் திட்டம் செய்தார்.

“யுத்தமல்லர், வழியில் சித்தூர்க் கோட்டையைக் கைப்பற்றினார். வெற்றி மேல் வெற்றிகளைச் சேர்த்துக்கொண்டு தனகாவை அடைந்தார். அதே சமயம், தந்திதுர்க்கர்  நாந்திபுரியை வெற்றி கொண்டு, நர்மதையைத் தாண்டினார். நாகசாரிகாவை ஆண்டு கொண்டிருந்த தந்திதுர்க்கரின் ஒன்று விட்ட சகோதரர் கோவிந்தர், தந்திதுர்க்கரோடு சேர்ந்துகொள்ள, இருவரும் இலாடத்தைக் கைப்பற்றினார்கள். இலாடத்தின் கடற்கரை ரூபத்தில், முதன்முதலில், இராட்டிரக் கூடத்துக்குச் சொந்தமாக ஒரு கடல்தீரம் கிடைத்தது. அங்குப் பிரதிஹார அரசன் கட்டி வைத்திருந்த அரண்மனையில் குளித்தேன் என்று தந்திதுர்க்கர் பெருமைப்படுவாராம். மஹாநதியில் ஏற்கனவே குளித்த அவருடைய யானைகள், மாஹி நதியிலும் குளித்ததைப் பெருமையாகச் சாஸனத்திலும் எழுதி வைத்தார். தேவராஜ பட்டிக்காவுக்கு ஏற்பட்ட இடரைக் களைந்தேன் என்றபொருள்பட தேவராஜனுடைய ‘வ்யாபத உத்தார்த்தும்’ என்றே அவருடைய ஏலபுரிக் கோவிலில் கல்வெட்டும் எழுதப் பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

“தனகாவும் வீழ்ந்தது. சாபாதலக்ஷமும் தந்திதுர்க்கரின் ஆளுகைக்குக் கீழே வந்தது. மேதந்தகபுரமும், ஸ்ரீமாலாவும் தோற்கடிக்கப் பட்டன. தேவராஜ பட்டிக்காவை அரியணையில் அமர்த்திவிட்டுப் பொருளோடும், புகழோடும், படையோடும் திரும்பினார். கடுமையான போர்ப்பயணம் இது. எல்லாப் போர்களும் பாலைவனப் பகுதிகளில்தான் நிகழ்ந்தன. இவற்றின் தாக்கத்தால், ஏலபுரிக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும்போதே தந்திதுர்க்கரின் உடல் பலவீனமுறத் துவங்கியது. ஏலபுரிக்கு அவர் வந்து சேர்ந்த சமயத்தில், அவருடைய வீர சரிதையின் அந்திம அத்தியாயங்கள் எழுதப்படும் நேரம் வந்துவிட்டது. வைரம் தன் திண்மையை இழக்கலாயிற்று.“

“அடடா! கிருஷ்ணராஜா நினைத்தது போலவே, அகலக் கால்தான் வைத்துவிட்டாரோ?”

“சில சமயம், எல்லா விஷயங்களும் எதிர்ப்பின்றி, நாம் நினைத்தபடி நடக்கும்போது, நாம் இப்படித்தான் எப்போதும் நடக்கும் என்று நம்பிக்கை கொண்டு விடுகிறோம். தோல்வியையே சந்திக்காதவர் தந்திதுர்க்கர். கைலாசநாதனின் கருணை அவருக்குப் பரிபூரணமாக இருந்தது. நினைத்ததைச் சாதித்தார். எப்படித் திட்டமிட்டாரோ, அப்படியே அவருக்கு நடந்து கொண்டிருந்தது. காட்டாற்று வெள்ளம் போல வந்தார். அதைப்போலவே, திடீரென்று மறைந்தும் விட்டார்.”

உஜ்ஜைனியை வெற்றி கொண்டு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்?”.

“இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும். ஓரிரண்டு வருடங்கள் மேலேயும் இருக்கலாம். அதிகக் காலம் அவர் உயிரோடு இல்லை. அவர் மறைவு ஏற்பட்டதும், குர்ஜரப் பிராந்தியங்களில் தலைமை மாற்றமும், எல்லை மாற்றமும் மறுபடியும் நிகழ்ந்தன. நல்ல சமயம் வந்ததென்று இதுவரை அடங்கியிருந்த நாகபடன் தலையெடுத்தான். சீலூகனின் ஆதிக்கத்தைத் தந்திதுர்க்கர் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திருந்ததால், நாகபடனுக்கு இன்னும் வசதியாகப் போயிற்று. எதிரிகளே இல்லாத நிலை, அவனுக்கு. சீலூகனுக்குப் பிறகு அடுத்தடுத்து வந்த அரசர்கள் எல்லாம் படைக்கலனேந்தும் பாங்கு பெற்றவர்கள் அல்லர். அவர்கள் எல்லோரும் தவமும், க்ஷேத்ராடனமும், பக்தி மார்க்கமுமே பெரிது என்ற மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தார்கள். பட்டிக்காவும் வெகுநாட்கள் நிலைக்கவில்லை. அவன் உயிரோடு இருந்திருந்தாலும், நாகபடனுடைய படைத்திறமைக்கு உத்தரம் சொல்லும் ஆற்றல் அவனுக்கு இருந்திருக்காது. குர்ஜரம் மீண்டும் நாகபடன் தலைமையிலான பிரதிஹாரர்கள் கைவசம் சென்றது.

“இலாடத்தையும் நாகபடன் மீட்டெடுத்தான். பிருகுகச்சாவையும் கைப்பற்றி, அதைச் சஹமான வமிசத்தைச் சேர்ந்த பர்த்திரிவத்தனின் அதிகாரத்துக்குக் கீழே இயங்கவிட்டான். மீண்டும் உஜ்ஜைனி கைப்பற்றப் பட்டது. முக்கியமான வைரியான தந்திதுர்க்கர் போய்விட்டதாலோ என்னவோ, நாகபடனும் சீக்கிரமே இறந்துபட்டான். நாகபடனுக்குப் பிறகு உஜ்ஜைனியின் அரியணையில் ஏறிய. கக்குகன் விசேஷமாக ஒன்றும் செய்துவிடவில்லை, கேட்பவர்களை வேடிக்கையாகப் பேசிச் சிரிக்க வைத்ததைத் தவிர.” – சிரித்தார் பிரதாபர்.

“சிரிக்க வைத்தாரா?” – கேட்டதும் விநயனின் முகத்திலும் சிரிப்பு வந்தது.

“அடிதடி, வீரம், சண்டை, போர் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தோம், இதென்ன ஒரு அரசன் சிரிக்க வைப்பதைக் குணமாகக் கொண்டிருந்தான் என்கிறாயா? அவனுடைய இயற்பெயர் காகுத்ஸ்தன். ஆனால், எல்லோரும் அவன் வேடிக்கையாகப் பேசுவதால், கக்குகன் என்றே அழைப்பார்களாம்.

“ஆ! கக்கதி என்றால் சிரிக்கிறான் என்று பொருள். அதிலிருந்து வந்த பட்டப்பெயரா? வேடிக்கையான விஷயம் ஐயா”

“அவனுக்குப் பிறகு வந்த அவனுடைய அனுஜன், தேவசக்தி. திறமைசாலி. சிறுவனாக இருக்கும்போதே, தந்திதுர்க்கர் கையால் அவமானப்பட்டவன். நாகபடன் எப்படி அவந்தியை மீட்டெடுத்து, அதற்கு ஒரு ஸ்தானத்தை உருவாக்கினானோ, அதேபோல, தேவசக்தியும், பெரியதந்தை அரைகுறையாக விட்டுச்சென்ற பணிகளை ஒருவாரியாக முடித்து வல்ல மண்டலத்தின் சிதறிய அரசுகளை ஒன்று சேர்த்து ஒரு கூட்டணிக்குள் கொண்டு வந்தான். சிறகுகள் பெற்றதால், தாறுமாறாக இஷ்டம் போலப் பறந்து திரிந்து கொண்டிருந்த மலைகளை எப்படித் தேவர்களுடைய தலைவன் இந்திரன் ஒறுத்து, ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தானோ, அதைப்போல, இந்தத் தேவராஜனும், எதிரிகள் இல்லாததால், மனம் போனபோக்கில் நிர்வாகம் செய்து கொண்டிருந்த பிரதிஹாரச் சிற்றரசர்களைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குக்குக் கொண்டுவந்தான் என்பார்கள்.

ஶ்ரீமாந் அஸ்ய அனுஜ: குலிஶ தர தே³வராஜோ யஜ்ஞே சீ²ன்னூரு பக்ஷ க்ஷிபித க³தி குலம் பூப்ருʼதம் ஸந்நியந்த:”

“அடடா! அரசர்களுக்குக் காவிய ரஸனை இருப்பதைக் காணும்போது, மனம் பெருத்த உவகை அடைகிறது, ஐயா! அரசர் பெயர், தேவராஜன், இந்திரனும் தேவராஜன்; பூ-ப்ருத என்றால் அரசன், மலை என்று இரண்டு பொருளும் உண்டு. இவர்களும் இஷ்டம்போலத் திரிகிறார்கள். புராண காலத்து மலைகளும் அப்படித்தான் திரிந்தன. இந்திரனும் வெட்டி ஒழுங்கு படுத்தினான். இவரும் கட்டுப் படுத்தி ஒழுங்கு படுத்தினார்.”

“ஆனால், தேவசக்தியின் மகன் வத்ஸராஜன் அரியணை அதிகாரத்துக்கு வந்தபிறகுதான், பிரதிஹார சாம்ராஜ்ஜியத்துக்கே ஒரு வேகம் பிறந்தது. நான் முன்பே சொன்னதுபோலத், தன் தந்தைக்கும் பாட்டனாருக்கும் நடந்த சிறுமைக்குப் பழிதீர்க்கக் காத்துக் கொண்டிருந்தான். இவன் இரட்டத்துக்கு ஒரு பெரிய சத்துரு.”

இவன் வெளித்தேசத்து வைரி. இராட்டிரக்கூடத்துக்கு உறவிலேயேயும் ஓரிகலோன் கிளைத்தான். கற்கன்.” தூரத்தே சிறு குன்றுகள் அசைவது தெரிந்தது. “ஆனை வாரிக்கு வந்துவிட்டோம்” என்றார்.

பெரிய இடம். மாலை வெயிலில் பொன்தகடு போல ஜ்வலித்துக் கொண்டிருந்த கிருஷ்ணையின் கரையிலிலேயே, சோலைகளால் சூழப்பட்டு அமைந்திருந்தது அந்த அத்திக் கூடம். தங்கும் குடிசைகள், தங்குபவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், பசுக்கள், வண்டிகள், வேலி அடித்துப் பாதுகாக்கப்பட்ட திடல்கள் என்று ஒரு கிராமம் போலவே இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்துவிட்டு, அந்த வாரியின் அத்தியக்கர் புரவியில் ஆரோகணித்து வந்தார். “வருக வருக” என்று வரவேற்றார்.


“இளவரசர் புறப்பட்டு விட்டாரா?” என்று கேட்டபடியே இரதத்தை விட்டு இறங்கினார் பிரதாபர்.

“இப்போதுதான் போகிறார். ஒரு ஹோரை ஆகி இருக்கும்.”

“நவகுஞ்சர பூஜை எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? புது யானைகளை எல்லாம் தரம் பிரித்தாகி விட்டதா?”

“உத்தம மத்தியமப் பரீட்சணம் ஆகி விட்டது. ஒன்றிரண்டுதான் ஏறக்குறைய அராளம். இந்தமுறை பார்த்துத்தான் வாங்கியிருக்கிறது.”

“நல்லதாயிற்று. அவற்றை வைத்துக்கொண்டு அப்புறம் என்ன செய்வதென்று தெரியாமல் போய்விடும். ஒரு அதி அராளம் கூட இல்லையா?”

“இல்லை. வாமனமும் குப்ஜமும் கூடக் கிடையாது. அங்கே பாருங்கள் அவை எல்லாம்தான். நான்காம் நாள் அரச பூஜை இன்று காலை முடிந்தகையோடு, அஷ்டமிக்கு முன்னால், ஸப்தமியிலேயே சிட்சையும் ஆரம்பித்தாயிற்று.” என்று கை காட்டினார்.

அங்கே எட்டு யானைகள் திட்டுக்களால் பிரிக்கப்பட்டுத் தனித்தனித் திடல்களில் நின்றுகொண்டிருந்தன. காலையில் இளவரசரால் பூஜிக்கப்பட்டதன் குறிகள் அவற்றின் நெற்றியில் விளங்கிய சந்தனத்திலும், குங்குமத்திலும், சிந்தூரத்திலும், சிதறிக் கிடந்த அறுகு அரிசியிலும் மற்றும் தூரத்தில் உடைக்கப்பட்டுக் கிடந்த தயிர்ப்பானைகளிலும் பரிமளித்தன.

புதிதாக வந்த யானைகளை நான்கு நாள் அரசர் பூஜை செய்வார் என்று கேள்விப்பட்டிருந்த விநயன், அந்தச் சடங்கில் தயிரபிஷேகமும் இருக்கிறது என்று தெரிந்துகொண்டான்.

அழகான யானைகள். ஏழு முழ உயரம், ஒன்பது முழ நீளம் மற்றும் பத்து முழப் பருமனில் ஐந்து, சற்றே சிறியதாக மூன்று. எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுபோல ஆகிருதி உடையனவாக இருந்தன. எல்லாவற்றிற்கும் முன்னங்கால்களில் ஐந்தைந்து நகங்கள், பின்னங்கால்களில் நந்நான்கு நகங்கள். சில சாம்பல் நிறத்தின, சில மழைமேக வர்ணத்தின, சில அடர் கருப்பு. ஒன்று மட்டும் செம்மை ஓடிய மேனி, கபிலநிறத் தாலவட்டத்துடன், அப்போதுதான் பற்றவைத்த நெருப்புப் போல மிளிர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு யானைக்கும் ஏழு பயிற்சியாளர்கள் கையில் அங்குசத்துடன். முன்னால் யானையைப் பார்த்தபடி மூவர், இரு பக்கங்களிலும் செவிகளுக்குக் கீழே இருவர், பின்னால் இருவர். யானையின் பின்னங்கால்களைப் போதிகையில்லாமல் வெறும் அந்தால் மட்டும் கட்டியிருந்தார்கள். கால்கள் புண்ணாகாமல் இருக்க, இருப்பு வடத்துக்கு மாறாகத் திடமான தோலந்து. புல்தின்னும் மிருகத்துக்கு அச்சம் தவிர்ப்பதற்காக இன்னொரு புல்தின்னும் நட்புப் பிராணியாக, யானைகளோடு இருந்து பழக்கப்பட்ட பெரிய பசுக்கள் இரண்டனைப் பக்கத்திற்கொன்றாகக் கட்டியிருந்தார்கள்.

“அராளம் என்றால் என்ன?”

“உயரம், நீளம் பருமனில், ஏழு, ஒன்பது, மற்றும் பத்துக்கு எதிலாவது ஒரு முழம் அதிகமாக இருந்தால் அராளம். இரண்டு அதிகமானால் அதி அராளம். ஒன்று குறைந்தால் மத்தியம். இரண்டு குறைந்தால் கனிஷ்டம். அதோ அந்த ஐந்தும் உத்தமம், அந்த மூன்றும் மத்தியமம். பின்னால் தூரத்தில் நிற்கின்றன பார் இரண்டு. அவைதான் அராளம். கனிஷ்டத்துக்குக் குறைந்தால் வாமனம், இன்னும் குறைந்தால் குப்ஜம். அராளங்களைச் சமாளிக்க முடியாது. வாமன குப்ஜங்களால் பிரயோஜனமில்லை.” விளக்கினார் பிரதாபர்.

அப்போது அத்தியத்தியக்கர், ‘இச்ச பூபா’, ‘இச்ச பூபா’ என்று தனியாக நின்றிருந்த ஒரு குஞ்சரத்தைக் கூப்பிட்டார். அது உடனே, மெல்லக் காதை ஆட்டிக்கொண்டு அவர்களை நோக்கி நகர்ந்தது. அருகே வந்ததும் ‘நுஹ்ன, என்றார். குஞ்சரம் நின்றது. “பரீஹா!” என்று கத்தியதும், அங்குலியில் இருந்து விலாழி சிதற, அந்தப் பெருமா, தன்னுடைய பூழ்க்கையை உயர்த்திப் பிளிறியது.

“உங்களை வரவேற்கிறது” என்றார் அத்தியக்கர். பிரதாபரும் விநயனும் எதிர்வணக்கம் செய்தார்கள். அத்தியக்கர் கையில் இருந்த அங்குசத்தை வாங்கிய விநயன், அந்த யானையைப் பார்த்தபடி, உடலை உறுதியாக வைத்துக்கொண்டு, “விப்பூடிஹரா, விப்பூடிஹரா!” என்று உயர்ந்த குரலில் சொன்னான். அவனை ஒருகணம் கூர்ந்து பார்த்த குஞ்சரம், உயர்த்தி வைத்திருந்த தன்னுடைய கையைக் கீழே தாழ்த்தியது.

“அட! குஞ்சர மொழி தெரியுமா உங்களுக்கு?” எல்லோருடைய வியப்பும் அந்தக் குஞ்சரம் உயரத்துக்கு உயர்ந்தது. விநயன் பெருமிதத்தோடு முறுவலித்தான். “உட்காரக் கற்றுக் கொடுத்தாயிற்றா?” என்று வினவ, “ஓ!” என்று தலையசைத்தார் அத்தியக்கர். குஞ்சரத்தின் கண்ணை நோக்கி, ‘கி’; ‘கி’ என்று பலமாக விநயன் சொன்னதும், அது மெல்லத்தன் இரு பின்னங்கால்களையும் மடித்து அமர்ந்தது.

“இதையெல்லாம் எங்கே கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டுச் சிரித்தார் பிரதாபர். அதற்குள் இருள் கவியத் துவங்கியதால், அத்தியக்கர், “நாளை மீண்டும் தொடருவோம். வாருங்கள். இப்போது குடில்களுக்குச் செல்வோம். உங்களுக்கு இளைப்பாற வசதிகள் எல்லாம் செய்திருக்கிறோம். அதையெல்லாம் காட்டுகிறேன்” என்று அழைத்துப் போனார்.

காலையில் கிருஷ்ணை நதி ஸ்நானம், நல்ல உணவு, உறக்கம், யானைகளின் பயிற்சியைப் பார்வையிடல் என்று அடுத்த இரண்டுநாட்களும் அத்தி வாரியில் அற்புதமாகக் கழிந்தன.

 


No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...