ஒருநாள் மாலையில் பாடசாலையில் இருந்து விநயன் திரும்பி வந்தபோது, சத்திரத்தின் வாயிலில் ஒரு தேர் நின்று கொண்டிருந்தது. தேரின் புரவிகள் அவிழ்க்கப்பட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தன. கூடவே இரண்டு மூன்று தனிப்புரவிகள். வெகுதூரத்தில் இருந்து யாரோ யாத்திரிகர்கள் சத்திரத்துக்குத் தங்க வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தவாறே உள்ளே நுழைந்தான். தலைக்கட்டுக் கட்டிக்கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தவர் அவனைப் பார்த்ததும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்த தேவநாதய்யாவும் எழுந்து நின்று, “வாரும் வாரும் விநயரே! உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார். இவர் பெண்ணாடவாடி விஷயத்தில் இருக்கும் துருஜ்ஜுரு கிராமத் தலையாரி, கேசவராஜா. நியாயாதிபதி உங்களைச் சந்திக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறார். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் அவரை உபசரித்தாயிற்று. உங்களுக்கு ஏதாவது பருக பானம் கொண்டுவரச் சொல்லட்டுமா? தெங்கிளநீர் திருத்திக் கொண்டு வரச் சொல்கிறேன்.” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.
“நியாயாதிபதி சொல்லி அனுப்பி வைத்தாரா? முதலில் அமர்ந்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தானும் அமர்ந்துகொண்டான். கேசவராஜா, கையில் பட்டுத்துணியால் சுருட்டப்பட்டிருந்த ஒரு மரப்பேழையைத் திறந்து ஒரு சுவடியை எடுத்தார். சுவடியில் பத்துப் பதினைந்து ஓலைகளுக்கு மேல் இரா. ஈற்றில் இருக்கும் ஓலையைக் காட்டி, ‘நியாயகிருகத்தின் இலச்சினை இது’ என்று காட்டினார்.
“எங்கள் கிராமத்துக்குத் தண்டம் விதித்து, நியாயாதிபதி வழங்கிய தீர்ப்பு இது. இதை நிறைவேற்றத் தெரியாமல் விழிக்கிறோம். அவரிடம் மீண்டும் போய் விண்ணப்பித்ததும், ஐயா, உங்களை வந்து பார்க்கச் சொன்னார். உங்களாலும் இதை நிறைவேற்ற வழி சொல்லமுடியவில்லை என்றால், தீர்ப்பை மாற்றி எழுதி விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். தயவு செய்து எங்களை இந்த அவமானத்தில் இருந்து காக்க வேண்டும்” என்று வேண்டினார்.
“தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லையா? நான் வழி சொல்ல வேண்டுமா? எனக்கு நீதி சாஸ்திரம் எல்லாம் அவ்வளவு தெரியாதே?”
“நீங்கள் படித்துப் பாருங்களேன்.” என்று சுவடியை நீட்டினார்.
“தீர்ப்பு, தெலுங்கு மொழியில் உள்ளதே. எனக்கு தெலுங்கு வட்டெழுத்துக்கள் அதிகப் பரிச்சயமில்லை. கூட்டிப் கூட்டிப் படிக்கவேண்டும். நேரமாகும். நீங்களே சொல்லிவிடுங்கள்”
“தீரப்பைப் படிப்பதற்கு முன்பு, எங்கள் கிராமத்தைப் பற்றி அறிமுகப்படுத்தி விடுகிறேன். துருஜ்ஜூரு கிராமம். எங்களுடையது. இரட்டைக்கிராமம். பக்கத்தில் குட்டக்கிந்த என்று மலையடியில் இருக்கும் ஒரு சிறு கிராமமும் சேர்ந்தது. ஆனால், துருஜ்ஜூரு என்றால்தான் தெரியும். செழிப்பான கிராமங்கள். நல்ல நீர் வசதி. நிறைய விளைச்சல். மூன்று போகம் கூட சிலர் பயிரிடுகிறார்கள். ராஜாங்கத்திலும் பலர் பணி புரிகிறார்கள். எல்லா வருணத்தவரும் இருக்கும் கிராமம். நல்ல கிராமம்தான். நல்லது கெட்டது எல்லவற்றுக்கும் எல்லோரும் முன்வந்து சேர்ந்துதான் காரியம் செய்துகொண்டிருந்தோம். ஏதோ, கலி புருஷனுடைய பீடிப்பு. சிலகாலமாக, இரண்டு கிராமங்களும் குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன. உட்சண்டையால், பொதுக்காரியங்கள் தடைபடுகின்றன. இதில் அகப்பட்டவை, ஊரில் இருக்கும் கோவில்கள்தாம். முக்கியமான கோவில், மகாதேவர் கோவில். மூலவ மூர்த்தி மார்க்கரக்ஷகேஸ்வரர். அம்பாள் சர்வலோகாம்பிகை. இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் பிரகாரங்களோடு உண்டு. அவற்றைத் தவிர, கணபதி, பிரகார பைரவர், தக்ஷிணாமூர்த்தி சந்நிதிகளும் இருக்கின்றன. எல்லா சந்நிதிகளுக்கும் உட்பிரகாரங்கள் உண்டு. பல்லவராஜாக்கள் காலத்தில் எழுப்பப்பட்ட ஸோமாஸ்கந்த மூர்த்தி கோவில், வேணுகோபால ஸ்வாமி கோவில், சுப்ரமணியர் கோவில், ஊர் எல்லையில் எல்லையம்மனுக்குக் கோவில் என்று கோவில்கள் உண்டு.
“கோவில்களுக்குக் கட்டளை நிலங்கள் இருக்கின்றன. நித்தியப்படி கைங்கரியத்துக்கு வேண்டிய பொருள்களுக்கும் ஏற்பாடு இருக்கிறது. ஆண்டு உத்சவத்தின் போது, ஊர் கூடிச் செய்யவேண்டிய விழாக்களையெல்லாம் எப்படியோ சரிவரச் செய்து விடுகிறோம். ஆனால், தினப்படி விளக்கேற்றுவதற்குச் சண்டை. அதற்கான எண்ணெய் சேகரிப்பு, திரிகள், விளக்குப் பராமரிப்பு, இவையெல்லாம் சரியாக நடப்பதில்லை. பல நாட்கள் கோவில்கள் இருளில் மூழ்கி விடுகின்றன. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், ஒருவரும் என் சொல்லுக்கு மதிப்புத் தரவில்லை. மூலவர் சந்நிதி உள்ளிருக்கும் தூங்காவிளக்கை மட்டும் நான் என் செலவில் ஏற்றி வந்து கொண்டிருந்தேன். பட்டர் பெருமான்கள் மகாதேவர் கோவிலுக்கு மட்டும் தினமும் வருகிறார்கள். முடிந்தபோது, எண்ணெய் கொண்டு வந்து சில சந்நிதிகளில் அவர்களே தீபங்கள் ஏற்றுவதுண்டு. பூஜைகள் செய்யாமல் இறைவனைப் பட்டினி காக்க வைப்பதில்லை. ஆனால், மற்ற சந்நிதிகளில் அப்படி இல்லை. நாளும் கிழமைகளின் போது மட்டும், சில பட்டர் பெருமான்கள் கையோடு கொண்டுவந்த தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு பூஜை முடித்துவிட்டுச் சென்று விடுவார்கள்.”
“அடடா! என்ன வேதனையான நிலைமை”
“ஆம். இது எப்படியோ தருமாதிபதியுடைய செவிவரை சென்று வழக்காகப் போய்விட்டது. எங்கள் எல்லோரையும் நியாயகிருகத்துக்கு வரவழைத்துக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அப்போது இந்தத் தீர்ப்பையும் முடிவுசெய்து, இதை உடனடியாக நிறைவேற்றாவிடில், சிறைவாசம் என்று எச்சரித்திருக்கிறார். ஊர்ப் பிரமுகர்கள் எல்லோரும் அவர் முன்னிலையில் கையெழுத்து இட்டு, உறுதிப்பத்திரம் எழுதிக் கொடுத்தபிறகுதான், நாங்கள் ஊருக்கே வர முடிந்தது. ஆனால், எங்களுக்கு இந்தத் தீர்ப்பை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லை. கிருபை செய்யவேண்டும். தீர்ப்பை நிறைவேற்றத் தெரியவில்லை என்று சுற்றுப்புறக் கிராமங்களில் எல்லாம் கௌவை கூறுகிறார்கள். ஏற்கனவே நாங்கள் கோவில்களைப் பராமரித்த விதத்தால் ஆகடியம் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது இன்னும் கொண்டாட்டமாக ஆகிவிட்டது.”
அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. “அப்படியென்ன நிறைவேற்ற முடியாத தீர்ப்பு?”
“கிராமத்தில், பெருந்தனக்காரக் குடிகள் நூறு குடிகள் இருக்கிறார்கள். எனக்கும் நிலபுலங்கள் உண்டு. என்னையும் சேர்த்து, இந்த நூற்று ஒன்று, குடிகளும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கோவில்களுக்கு விளக்கேற்ற எண்ணெய் தரவேண்டுமென்று கட்டளை இட்டிருக்கிறார். எல்லோரும் எண்ணெயாகத்தான் தரவேண்டும். எண்ணெய் இல்லத்தில் இல்லையென்றால், வெளியில் மாறுவாங்கியாவது எண்ணெயாகத்தான் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக, எனக்குத் தண்டனையாக மேற்கொண்டு பதினொன்று உழக்கு எண்ணெய் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தரவேண்டும்.”
“சரி. இதிலென்ன சிக்கல்?”
“பதின்ஐந்து சந்நிதிகளிலும் ஓருழக்கு எண்ணெய் வாங்கும் ஒரு விளக்காவது தினமும் எரியவேண்டும், எத்தனை விளக்குக்கள் வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளுங்கள். ஆனால், எல்லா சந்நிதிகளிலும் அத்தனை விளக்குக்கள் சமமாக ஏற்றவேண்டும். பெரிய விளக்கு, சிறிய விளக்கு என்ற சண்டையெல்லாம் வரலாம் என்பதால், ஓருழக்கு வாங்கும் விளக்குத்தான் எங்கேயும் எரியவேண்டும் என்று சொல்லிவிட்டார். பதின்நான்கு நாட்களுக்குள் இந்த எண்ணெயைத் தீர்த்துவிட வேண்டும். பிறகு அடுத்த பதின்நான்கு நாட்களும் மறுபடிக் கூட்டுக் கொள்முதல். கொள்முதலை வைத்துக்கொள்ள இரண்டு சேகரிப்புக் கலங்களும் கட்டவேண்டும்.”
“அது சரிதானே, ஓருழக்கெண்ணெய் வாங்கும் விளக்கு, இரண்டரை முதல் மூன்று ஜாமம் எரியுமே. இரண்டு கலங்கள் கட்டுவதும் உசிதமானதுதான். அவரவர்கள் இயலும்போது எண்ணெயைச் சமர்ப்பித்துவிட்டால், தடங்கல் இன்றித் தீபங்கள் ஏற்றி வரலாம்.”
“எத்தனை விளக்குக்கள் ஏற்றுவது? அங்குத்தான் சிக்கல்”
“என்ன சிக்கல்? புரியவில்லையே?”
“ஒவ்வொரு குடியும் ஓருழக்கு தந்தார்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். என்னுடைய தண்டமும் சேர, நூற்றுப் பதின்இரண்டு உழக்கு. இந்த எண்ணெய் ஒரு விளக்கு ஏற்றக்கூடக் காணாது.”
“ஓ! எண்ணிக்கைச் சிக்கலா? கிடைக்கும் எண்ணெய்க்கு ஏற்றாற்போல விளக்குக்களை ஏற்றலாம் என்றால், மீண்டும் சண்டை ஏற்படும் என்பதற்காகத் திட்டவட்டமாக்கி விட்டார் போலிருக்கிறது. நல்ல முடிவுதான். இரண்டு, மூன்று உழக்குக்கள் வைத்துப் பார்த்தீர்களா?”
“செய்தோம். வரவில்லை.” சோகமாகச் சொன்னார் கேசவராஜா.
விநயனுக்குச் சுவாரசியம் தட்டியது. “என்ன என்ன எண்கள் எல்லாம் தெரிந்தெடுத்துப் பார்த்தீர்கள்?”
இதோ, ஊர்க் கணிதப் பாடசாலை ஆசிரியர் எழுதிக்கொடுத்து இருக்கிறார் பாருங்கள்.” என்று இன்னொரு ஓலையை எடுத்துப் படித்தார்.
“குடிக்கு இரண்டுழக்கு என்றால், இருநூறும் பதின்மூன்றும். ஒவ்வொரு சந்நிதியிலும் ஒரு விளக்கு எரித்தபிறகு, மூன்று உழக்கு எஞ்சுகிறது.”
“பதிநான்கின் மடங்கு வருகிறாற்போல செய்ய வேண்டியதுதானே?”
“ஒரு குடிக்குப் பதினான்கு உழக்கு வைத்துப் பார்த்தோம். சந்நிதிக்கு ஆறு விளக்கு எரிக்க முடிந்தது. கையில் மிஞ்சிய எண்ணெயை வைத்துக்கொண்டு பதினைந்து சந்நிதிகளிலும், இன்னொரு விளக்கு வைத்தோம். அந்த எண்ணெய் பதினொரு நாட்களுக்குத் தான் காணிற்று.
“இருபத்தெட்டு?”
“ம்ஹூம்” உதட்டைப் பிதுக்கினார் தலையாரி. “எண்ணெயை வைத்துக் கொண்டு பார்த்தால், விளக்குக்கள் சமமாக வருவதில்லை. விளக்குக்களை வைத்துக் கொண்டு பார்த்தால், குடிக்கு எத்தனை உழக்குக்குகள் என்று தீர்மானிக்க முடியவில்லை. கிருபை செய்து ஏதாவது வழி சொல்லுங்கள். நாங்கள் செய்த பாபம், இப்படி எல்லாப் பகவான்களுக்கும் கைங்கரியம் செய்ய முடியாமல் அவமானப் படுகிறோம்.”
“அப்புறம் கணித ஆசிரியர் சொன்னார், பதினைந்தும் பதினான்கும் சேர்ந்து வகுக்கும் எண்ணாகத் தேடலாம் என்று, இருநூறும் ஒரு பத்தும் என்றார். ஆனால், அதை எப்படி நூற்றியொரு குடிகளுக்கும் சமமாகப் பிரிப்பது? இதில் என்னோடு பதின்ஒன்று தண்ட உழக்குக்களை வேறு சேர்க்க வேண்டும். தலையைச் சுற்றுகிறது எங்களுக்கு. தயவுசெய்து உதவி செய்யுங்கள்” பரிதாபமாக முகத்தோடு, கையை எடுத்துக் கும்பிட்டார்.
“உங்கள் குழப்பம் புரிகிறது. சிக்கலானதுதான். நியாயாதிபதி இப்படியெல்லாம் யோசித்து இருக்கமாட்டார். அவர் உங்களுக்கு ஏற்ற தண்டனை எது, கோவிலை எப்படி ஒளிரவைப்பது என்ற வகையில் சிந்தித்திருக்கிறார். அவர் தீர்ப்பு அருமையானது.”
“ஆம். அது எங்கள் எல்லோருக்கும் புரிகிறது. ஆனால், எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லையே?”
“விளக்குப் பிரகாரம் பரிசோதித்துப் பார்த்தும் தீர்மானம் செய்ய முடியவில்லை என்கிறீர்கள்.”
“ஆமாம்.”
“ஒரு நிமிஷம் இருங்கள்.” என்றவன், ஒரு வெற்று ஓலையை எடுத்துக் கிடுகிடுவென்று கணக்குப் போட்டான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் அவன் முகத்தில் பூத்த புன்முறுவலைக் கண்டதும், “வழி கிடைத்து விட்டதா?” என்று ஆர்வமாகக் கேட்டார்.
“ஆம்.” என்றபடி ஓலையை அவரிடம் தந்தான். “ஒரு குடிக்கு, இருபத்தொன்பது உழக்குக்களை, இரு வாரங்களுக்கு ஒருமுறை தரச்சொல்லுங்கள். ஒவ்வொரு சந்நிதியிலும் பதினான்கு தீபங்கள் ஏற்றுங்கள்.”
“பதினான்கு தீபங்களா!! இத்தனை தீபங்கள் இதுவரை எரிந்ததில்லை, ஒரு சந்நிதியில்!”
“ஜாஜ்வல்யமாக இருக்கட்டுமே. பொலிசையோடு பூதேசன் பிடுங்கிவிட்டான் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.”
முதன்முறையாகக் கேசவராஜா சிரித்தார். அவருக்குப் பெரிய பாரம் இறங்கியது என்று தோன்றியது.
“இதைவிடக் குறைக்க முடியாதா?”
“முடியாது. இதற்குக் கீழே எண்ணில்லை.”
“எனக்காக ஒருமுறை சரிபார்த்துக் காட்டுங்களேன். ஊருக்குத் திரும்பிப்போன பிறகு, முடியவில்லை என்றால், எல்லோரும் ஏளனம் செய்வார்கள்.” இறைஞ்சினார், தலையாரி.
“தாராளமாக. இருபத்து ஒன்பது உழக்குக்கள், நூற்றியோர் குடிகளுக்கு. இரண்டாயிரமும் ஒன்பது நூறும் இருபத்து ஒன்பதும். உங்கள் தண்டம் பதினொன்றும் சேர்ந்து, இரண்டாயிரத்து ஒன்பது நூறும் மற்றும் நாற்பதும். சரியா?”
தலையாரி கையோலையில் கிறுக்கிப் பார்த்துச் சரிதான் என்று தலையசைத்தார்.
“இவ்வளவு எண்ணெய் இரு வாரங்களுக்கு ஒருமுறை சேகரிப்பீர்கள். இல்லையா? இதிலிருந்து தினமும் இருநூற்றுப் பத்து உழக்கு எண்ணெயை எடுத்துக்கொண்டு, அத்தனை ஓருழக்கு விளக்குக்கள் ஏற்றுங்கள். ஒவ்வொரு சந்நிதியிலும் பதினான்கு தீபங்களை வைத்து விடுங்கள். சந்நிதி, சிறியதாக இருந்தால், சந்நிதியில் சுற்று விளக்காகவும், வாயிலிலும் விளக்குக்களை ஏற்றிக் கொள்ள, நியாயாதிபதியிடமிருந்து ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள். பதினைந்து சந்நிதிகளும் ஜாஜ்வல்யமாகத் திகழும்.”
“எங்கள் சிக்கலைத் தீர்த்துவைத்தீர்கள் ஐயா! எங்கள் கிராமத்தின் நூறுகுடிகளுக்கும் ஒளி காண்பித்துச் சதகுடி தீபப் பிரகாசகர் ஆகிவிட்டீர்கள். அதற்குமுன் மீண்டும் பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்கிறேன். இருபத்தொன்பதுக்குக் குறைவாக தண்டம் இயலாதா?”
“இயலாது. நியாயாதிபதியின் எல்லா விதிகளையும் பின்பற்றக்கூடிய, மிகக் குறைந்த எண் இதுதான். குறைந்தது இருபத்து ஒன்பது உழக்குக்கள் ஒரு குடிக்குத் தரவேண்டியது அவசியம். இதற்கு அடுத்த எண், இருநூற்று முப்பதும் ஒரு ஒன்பதும்!” என்று அறுதியோடு சொன்னான் விநயன்.
“அடேயப்பா!”
“அது மட்டுமன்று, அடுத்து இன்னொரு இருநூற்றுப் பத்தைச் சேர்த்தால்தான் அடுத்த எண் கிடைக்கும்!” சிரித்தான் விநயன்.
“இதுவே போதும் ஐயா! இளிவு துடைக்க இயல்வு இயம்பினீர்! இறைக்குத் தீபம் ஏற்றும்போதெல்லாம், உங்களை நினையாமல் இருக்கிற்றிலோம், இனி.” என்று விடை பெற்றுப் போனார்.
அடுத்த சில நாட்களில், விநயனின் புகழ் ஊரெங்கும் பரவியது. “சதகுடி தீபப் பிரகாசகர்” என்றே அவன் காதுபட மக்கள் சொல்லலானார்கள்.
சிலநாட்களுக்குப் பிறகு, பாடசாலையில் மதிய வேளையில், உணவு உண்டுவிட்டுச் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது, குக்கேஸ்வரர் “சதகுடி தீபப் பிரகாசகரே! வணங்குகிறேன்” என்று சிரித்தபடியே வந்தார்.
“உங்கள் செவிக்கும் எட்டிவிட்டதா?”
“இவ்வளவு நடந்திருக்கிறது. நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?”
“இதில் சொல்ல என்ன இருக்கிறது?”
“எப்படி அந்த எண்ணைக் கண்டுபிடித்தீர்கள்? கோதை, ஒவ்வொரு எண்ணாக ஒன்றில் இருந்து பெருக்கி, வகுத்துச் சரிபார்த்து வியந்து விட்டாள். ‘விடை 29 ஆக இருக்கும் என்று உறுதியாகத் தெரிந்ததால், நான் இப்படி ஒவ்வொரு எண்ணாகச் செய்து பார்க்கிறேன். அந்தக் கிராம மக்களுக்குத் திக்குமுக்காடிப் போயிருக்கும்’ என்றாள். சரிதானே? எப்படி இப்படிக் கண்டு பிடித்தார், கேட்டு வாருங்கள் என்று பத்துமுறை சொல்லி அனுப்பி இருக்கிறாள்”
“ஹா ஹா ஹா ஒவ்வொரு எண்ணாகப் பெருக்கிப் பார்த்துவிட்டாளா? சூட்டிகையான பெண். கணித சாஸ்திரத்தில் நிஜ ஆர்வம். ஒருவிதத்தில் அதுதான் சரியான வழி. எனக்கு ஆசார்யர் எழுதிய ஸ்லோகம் நினைவுக்கு வந்ததால், எளிதாகப் போயிற்று”
“என்ன ஸ்லோகம் அது? எனக்குச் சொல்லிக்கொடுங்கள். இல்லை இல்லை. நீங்கள் எனக்குச் சொல்லி, நான் அவளுக்குப் போய்ச் சொல்லி.. அவள் ஏதாவது கேள்வி கேட்பாள். எனக்குப் பதில் சொல்லத் தெரியாமல் போகலாம். ஒன்று செய்யுங்கள். நாளை இருளுவா. பள்ளி விடுமுறைதானே. உணவுக்கு இல்லம் வந்துவிடுங்கள். எங்கள் இருவருக்கும் சேர்ந்தாற்போலச் சொல்லிக் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அவனும் காலை பித்ரு தர்ப்பணம் செய்தபின், குக்கேஸ்வரரின் இல்லத்துக்குப் போனான். எளிமையான உணவு. ஒரு வதக்குகறி. பருப்பிலாப் புளிச்சாறு. அரிசிக்கூழ் வற்றலைச் சுட்டு இட்டாள் கோதை. ததியோதனம். ஊறுகாய். ஒரு பிடி பிடித்தான்.
உண்டுவிட்டு அமர்ந்ததும், ஓலை எழுதுகோல் சகிதம் வந்து ஸ்வாதீனமாக அமர்ந்துவிட்டாள் கோதை. குக்கேஸ்வரர் வரும்வரை காத்திருந்துவிட்டு, அவர் வந்ததும் விளக்க ஆரம்பித்தான், விநயன்.
“இந்த மாதிரி கணக்குக்கு ஒரே ஒரு விடை என்பதில்லை. பல விடைகள் உண்டு. இருப்பதிலேயே அதம விடை எது என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் நிபுணத்துவம் இருக்கிறது.”
“அதமப் பொதுமடங்கு போலவா?” என்றார் குக்கேஸ்வரர்.
“ஆம். ஆச்சாரியரே உதாரணமாகச் சொன்ன கணக்கு ஒன்றைச் சொல்கிறேன். ஒரு மாந்தோப்பில், மாம்பழங்களைப் பறித்துக் குவியல் குவியலாகக் குவித்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு குவியலிலும் எத்தனை பழங்கள் என்று தெரியாது. ஆனால், எல்லாக் குவியல்களிலும் சம எண்ணிக்கையில் பழங்கள் உள்ளன. அந்த மாம்பழங்களோடு ஏழு பழங்களை உபரியாகச் சேர்த்துக்கொண்டு, மொத்தப் பழங்களையும் இருபத்து மூன்று பேருக்குச் சமமாகப் பகிர முடியுமானால், ஒரு குவியலில் எத்தனை மாம்பழங்கள் இருந்திருக்கும்?”
குக்கேஸ்வரரும் கோதையும் யோசித்தார்கள்.
“இது விளக்குக் கணக்கு போலவேதான் இருக்கிறது. ஆனால், எத்தனை குவியல்கள் என்று தெரிய வேண்டுமே” என்றாள் கோதை.
“ஆஹா! என் குற்றம்தான்.
சொல்ல மறந்து விட்டேன். அறுபத்து மூன்று குவியல்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்.
எப்படி இது விளக்குக் கணக்கைப் போலத்தான் என்கிறாய்?”
“இங்கே பாருங்களேன். நூற்றொன்று குடிகளும் உழக்கெண்ணெய் சமமான எண்ணிக்கையில் தருகிறார்கள். இவற்றோடு தலையாரியின் பதின்ஒன்று உழக்கு எண்ணெய் சேர்கிறது. இந்த எண்ணெயை வைத்து இருநூற்றுப் பத்தின் மடங்கில் விளக்குக்களை ஏற்ற வேண்டுமானால், ஒவ்வொரு குடியும் எத்தனை உழக்கு எண்ணெய் தரவேண்டும்?” என்று தந்தையை முந்திக்கொண்டு சொன்னாள் தநயை.
குக்கேஸ்வரருக்குப் பெருமிதத்தால் முகம் மலர்ந்தாலும், தனக்குப் புரியாதது போலக் கேட்டார். “இருநூற்றுப் பத்து எங்கிருந்து வந்தது?”
“பதின்ஐந்து சந்நிதிகளில், ஒரு விளக்கு வீதம், பதின்நான்கு நாட்களுக்கு ஏற்றினால் குறைந்தது இருநூற்றுப் பத்து விளக்குக்கள் வருமே” என்றாள் கோதை.
“மிகச்சரி” என்று பாராட்டிய விநயன் தொடர்ந்தான், “நினைவில் கொள்ளவேண்டியது, எல்லா விளக்குக்களும் உழக்கெண்ணெய் விளக்குக்கள். இம்மாதிரிக் கணக்கைப் போடும் வழியை, வல்லிய குட்டிகார வழி என்று ஆச்சார்யர் கூறுவார். வல்லி என்றால் கொடி. பொடிப்பது குட்டிகாரம். தமிழில் நாம் பொடிக்கும் கொடி என்று சொல்லலாம்.”
அவன் விளக்கிக்கொண்டிருப்பதைக் கேட்க, மாமியும் வந்து நின்றுகொண்டாள்.
“மாம்பழக் கணக்கை எடுத்துக்கொள்வோம். இதில் நான்கு விஷயங்கள் வருகின்றன. ஒன்று குவியல்களின் எண்ணிக்கை. இதற்குக் குவையெண் என்று பேர் வைத்துக் கொள்வோம். இது அறுபத்து மூன்று. இரண்டாவது ஒரு குவியலில் எத்தனை இருக்கிறது என்பது. இதுதான் கண்டுபிடிக்க வேண்டியது. இதைக் குவைமதிப்பு என்று கூப்பிட்டுக் கொள்வோம் மூன்றாவது அந்த ஏழு. இது உபரி எண். நான்காவது எத்தனையாகப் பகுக்கிறோம் என்பது. இருபத்து மூன்று போல. இதற்குப் பகுவெண் என்று பெயர் சூட்டுவோம்.”
“அப்படியென்றால், குவையெண் மடங்கு, குவைமதிப்புத்தான், குவித்து வைத்திருக்கும் மொத்தப் பழங்களின் எண்ணிக்கை இல்லையா?” என்று கேட்டார் குக்கேஸ்வரர்.
“உபரியைக் கணக்கில் கொள்ளாமல்” என்று எச்சரிக்கை செய்தாள் கோதை.
“ஆமாம் ஆமாம். நான் குவித்து வைத்திருப்பதை மட்டும் சொல்கிறேன்”
“கணக்கு என்ன என்பதைப் புரிந்துகொண்டாலே, நாம் அரைக்கிணறு தாண்டி விட்டோம். முதலில் மாம்பழக் கணக்கை விளக்குகிறேன். பிறகு, அதே வழியில், நீங்கள் விளக்குக் கணக்கைப் போட்டுப் பாருங்கள். மாம்பழக் கணக்கில், குவையெண், உபரி, பகுவெண் என்ன என்ன?”
“அறுபத்து மூன்று, ஏழு, இருபத்து மூன்று.”
“சரி. முதலில் குவையெண்ணைப் பகுவெண்ணால் வகுத்து மீதியைக் கண்டுபிடிப்போம். பதினேழு மீதி. இது முதல் வகுத்தல். முதல் வகுத்தலின் ஈவு நமக்குத் தேவையில்லை. நிராகரித்துவிடுவோம். இப்போது பகுவெண்ணை மீதியால் வகுத்து, ஈவையும் மீதியையும் கண்டுபிடிப்போம்.”
“ஈவு ஒன்று. மீதி ஆறு.”
“சரி. இது இரண்டாம் வகுத்தல். இந்த ஈவிலிருந்து, இனி வரப்போகிற ஈவுகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வோம். இப்போது, முதல் மீதியை இரண்டாம் மீதியால் வகுத்தால் ஈவு என்ன? மீதி என்ன?
“ஈவு இரண்டு. மீதி ஐந்து.”
“சரி. மூன்று வகுத்தல்கள் முடிந்து விட்டன.”
“முந்தைய மீதியை, அடுத்த மீதியால் வகுத்துக்கொண்டே போகவேண்டுமா?” என்று கேட்டார் குக்கேஸ்வரர்.
“ஆமாம். முதல் வகுத்தலில், பகுவெண்தான் வகு எண், இரண்டாம் வகுத்தலில், முதல் வகுத்தலின் மீதிதான் வகு எண், மூன்றாம் வகுத்தலின் வகு எண், இரண்டாம் வகுத்தலின் மீதி. விளங்கிவிட்டதா?”
இருவரும் தலையாட்டினார்கள். “உத்தமம். இனி நான்காம் வகுத்தலைச் செய்வோம். நான்காம் வகுத்தலில், ஆறு மீதியை ஐந்தால் வகுப்போம்.”
“ஈவு ஒன்று. மீதியும் ஒன்று”
“இதுவரை நான்கு வகுத்தல்கள் முடிந்துவிட்டன. ஆனால், நாம் செய்யும் வகுத்தல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்கவேண்டும். அதனால், இன்னொரு முறை வகுப்போம். வேறு கணக்கில், மீதி ஒன்று ஒற்றைப் படை வகுத்தலிலேயே வந்துவிட்டால், அத்தோடு நிறுத்திக்கொண்டு விடவேண்டும்.”
கோதை முதலில் தலையாட்டினாள். குக்கேஸ்வரர் முகத்தில் இருந்த பாவம், அந்த மாதிரியும் ஒரு கணக்கைப் போட்டுப் பார்த்தால்தான் தெளிவடைவார் என்று காட்டியது,
“இந்தக் கணக்கில், மீதி ஐந்தை மீதி ஒன்றால், வகுப்போம். சரியாக ஐந்துமுறை போனாலும், மீதி ஒன்று வருவது போல வைத்துக்கொண்டு, ஈவை நான்காக வைத்துக்கொள்வோம். புரிந்ததா?”
“புரிந்தது” என்றாள் கோதை. குக்கேஸ்வரர் இறுதியாகச் சொன்னதை மீண்டும் யோசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“சரி. இப்போது, பட்டியலிட்ட ஈவை எல்லாம் சொல், பார்ப்போம்?”
“ஒன்று, இரண்டு, ஒன்று மற்றும் நான்கு.”
“சரி. இறுதி மீதி என்ன? இறுதி வகு எண் என்ன?”
“இறுதி மீதி ஒன்று. இறுதி வகு எண்ணும் ஒன்று.”
“உத்தமம். இந்த ஈவுப்பட்டியல்தான் கொடி. இப்போது, இந்தக் கொடிக்கு வேர்களைப் போல இரண்டு எண்களைக் கண்டுபிடித்துச் சேர்க்க வேண்டும். அந்த வேர் எண்களைக் கண்டுபிடிக்க, இறுதி மீதியும், இறுதி வகு எண்ணும் தேவை. புரிந்ததா?
“அதாவது, நான் இப்போது நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது, பட்டியலும், இறுதி மீதி மற்றும் இறுதி வகு எண்ணும்தான், சரியா?”
“சரிதான். இப்போது வேர் எண்களைக் கண்டுபிடிப்போம். இவற்றைக் கண்டுபிடித்துவிட்டு, இரண்டையும் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாகப் பட்டியலின் இறுதி எண்ணான நான்குக்குப் பின்னால் சேர்க்கவேண்டும். புரிகிறதா?”
தலையாய் ஆட்டினாள் கோதை. குக்கேஸ்வரர் சித்தத்தைச் சிதற விடாமல், ஓலையில் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
“முதல் வேரை எப்படிக் கண்டுபிடிப்பது? சற்றுக் கவனமாகக் கேள். இறுதி மீதியின் எத்தனை மடங்கோடு உபரி எண்ணைக் கூட்டினால், வரும் எண்ணானது, இறுதி வகு எண்ணால் மீதியின்றி வகுபடுகிறதோ அந்த மடங்குதான் முதல் வேர்.”
“அப்பாடி! தலை சுற்றுகிறது. மீண்டும் சொல்லுங்கள்?”
“இறுதி மீதியின் ஒவ்வொரு மடங்கோடு உபரி எண்ணைக் கூட்டு. வரும் எண், இறுதி வகு எண்ணால் மீதியின்றி வகுபடுகிறதா பார்.”
“சரி. இறுதி மீதி ஒன்று. ஏழைக்கூட்டினால் எட்டு. இது, இறுதி வகுவெண் ஒன்றால் எட்டு முறை வகுபடுகிறது. அப்போது முதல்வேர் ஒன்று. சரியா?”
“சாது! இரண்டு மடங்காக வைத்துக்கொண்டு, ஒன்பதால் கூட வகுக்கலாம். ஆனால், நாம் குறைந்த மடங்கைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு மடங்கிலேயே நமக்கு வேரெண் கிடைத்து விடுவதால், வேறெண் தேடிப் போகவேண்டாம்.”
அவன் சிலேடையை இரசித்துச் சிரித்தார்கள் இருவரும்.
விநயனும் சிரித்தபடியே தொடர்ந்தான், “இந்த வேரைப் பட்டியலில் நான்குக்குக் கீழே சேர்த்துக்கொள்”
“எழுதிக் கொண்டு விட்டேன். அடுத்தது? இரண்டாம் வேரை எப்படிக் கண்டுபிடிப்பது?”
“இறுதி வகு எண்ணால் மீதியின்றி வகுத்தாய் அல்லவா? அந்த ஈவு தான், இரண்டாம் வேர். அடி வேர்”
“ஓ! எட்டா?”
“ஆமாம். இப்போது பட்டியலை நெடுக வாட்டாக மீண்டும் படி, பார்ப்போம்?”
“முதலில் ஒன்று, அதற்குக் கீழே இரண்டு, அதற்குக் கீழே ஒன்று, பிறகு நான்கு. பிறகு முதல் வேர் ஒன்று. அதற்குக் கீழே, ஈற்றாக இரண்டாம் வேர் எட்டு.”
“சாது! இப்போது கொடி சித்தமாகி விட்டது. இனி இதைப் படரச் செய்து பொடிப்போம். இந்த ஆறு எண்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் இணையைக் கண்டுபிடிக்கவேண்டும். கீழிருந்து தொடங்குவோம் வேர்களுக்கு இணை வேர்கள்தாம். எட்டுக்கு இணை எட்டு. ஒன்றுக்கு இணை ஒன்று. அவற்றிக்கு நேராக எழுதிக்கொள்.”
“எழுதிவிட்டேன்.”
“நான்குக்கு இணையை எப்படிக் கண்டுபிடிப்பது? கவனமாகக் கேள், பட்டியலில் அதற்குக் கீழுள்ள எண்ணின் இணையோடு பெருக்கி, அதற்கும் கீழே பட்டியலில் உள்ள எண்ணின் இணையோடு கூட்ட நான்குக்கு இணை கிட்டும்.
“ஓ! நான்குக் கீழெண் ஒன்று, அதன் இணை ஒன்று. நான்கு ஒன்று நான்கு. அதற்கும் கீழெண் எட்டு. அதன் இணையும் எட்டு. நான்கோடு எட்டைக் கூட்டப் பன்னிரண்டு. இதுதான் நான்குக்கு இணையா? நான்குக்கு நேரே எழுதிக் கொள்ளட்டுமா?”
“எழுதிக்கொள். இப்போது, நான்குக்கு மேலே உள்ள எண்ணான ஒன்றுக்கு இணை காண்போம்.”
“நீங்கள் சொல்லாதீர்கள். நானே செய்கிறேன். சரியா என்று மற்றும் பாருங்கள்” என்று அவசர அவசரமாக விநயனை மேலே சொல்லவிடாமல் மறித்தாள் கோதை.
“அப்படியே” என்று தாமதித்தான் விநயன்.
“ஒன்றுக்குக் கீழெண் நான்கு. அதன் இணை எண் இப்போது நாம் கண்டுபிடித்த பன்னிரண்டு. ஒன்றைப் பன்னிரண்டால் பெருக்கினேன். பன்னிரண்டு. ஒன்றுக்குக் கீழெண் ஒன்று. அதன் இணை ஒன்று. பன்னிரண்டோட ஒன்றைக் கூட்டப் பதின்மூன்று. இதுதான் ஒன்றுக்கு இணை. சரியா?”
“செவ்வி! செவ்வி! இதேபோல மற்றவற்றிற்கும் எழுது.”
“அடுத்து மேலே உள்ள எண் இரண்டு. இதற்கு இணை முப்பத்தெட்டு.”
“எப்படிச் செய்தாய், சொல்?” என்று கேட்டார் குக்கேஸ்வரர்.
“இரண்டைப் பதின்மூன்றோடு பெருக்கிப் பன்னிரண்டைக் கூட்ட வேண்டும்”
‘ஆங்! சரிதான். பலே!” என்று குக்கேஸ்வரர் தன்னுடைய ஓலையில் திருத்திக் கொண்டார். “சற்றுப் பொறு. நான் அடுத்த எண்ணுக்கு இணை கண்டு பிடிக்கிறேன். இதுதான் இணை கண்டுபிடிக்க வேண்டிய கடைசி எண். பட்டியலின் முதல் எண், ஒன்று. ”
ஆர்வத்தை அடக்கிக்கொண்டு தந்தைக்காகப் பொறுமை காத்தாள் கோதை.
“ஒன்றை முப்பத்தெட்டால் பெருக்கிப் பதின்மூன்றைக் கூட்ட, ஐம்பத்து ஒன்று.”
“உத்தமம். இந்த இணைகள் பின்னல் போலக் கொடியாகப் படர்கின்றன.”
“ஆமாம். இந்தப் பின்னல், பொடிக்கவும் செய்கிறது. இந்த ஐம்பத்து ஒன்றைப் பகு எண்ணால் வகுத்து மீதி என்ன வருகிறது பாருங்கள்?”
“ஐம்பத்தொன்றை, இருபத்து மூன்றால் வகுத்தால், மீதி ஐந்து.”
“அவ்வளவுதான்! இதுதான் ஒரு குவியலில் உள்ள மாம்பழங்கள். விடையைச் சரிபார்?”
“ஆஹா! இதோ சரிபார்க்கிறேன். அறுபத்து மூன்று ஐந்து, முந்நூற்றுப் பதினைந்து. ஏழைச் சேர்க்க, முந்நூற்று இருபத்திரண்டு. இருபத்து மூன்றால் பகுக்க, பதினான்கு. சரியாக மீதியின்றி வகுபடுகிறது! அடேயப்பா!” கண்ணைக் கொட்டிக்கொண்டு கோதை வியந்ததை இரசித்துப் பார்த்தான் விநயன்.
“இந்தப் பதினான்குக்குக் கீழே வேறு எண் கிடையாதா?” என்று கேட்டார் குககேஸ்வரர்.
“கிடையாது. இப்போது, இதே வழியில் எண்ணெய்க் கணக்கைப் போடுங்களேன்?”
போடத்தொடங்கியவள், உடனேயே சற்று நின்றாள்.
“இதில், குவையெண்ணின் குணகம், பகுவெண்ணை விடக் குறைவாக இருக்கிறதே?” அவள் கண்ணில் தெரிந்த குழப்பம், கண்களை இன்னும் அழகாக்கி, இன்னும் பார்க்கவேண்டும் போல இருந்தது. பலவந்தமாகத் தன் கவனத்தை அகற்றிக் கொண்டு சொன்னான், “நீ இந்தக் கேள்வியைக் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன். அபாரம்! இந்த மாதிரிக் கணக்கு வந்தால், கணக்கைச் சற்று மாற்றி எழுதிக்கொள்ள வேண்டும்.”
“ஆங்! புரிந்துவிட்டது. உபரி எண்ணைக் கூட்டாமல் கழிப்பது போல அமைத்துக்கொள்ளலாம் அல்லவா? இப்போது குவையெண் இருநூற்றுப் பத்து. உபரி எண் என்று இல்லாமல், நீக்கும் எண்ணாகப் பதின்ஒன்று. பகுவெண் நூற்றியொன்று.”
கைதட்டினான் விநயன். “புத்திசாலி நீ” பாராட்டால் ஏற்பட்ட இலஜ்ஜையைக் கஷ்டப்பட்டு மறைத்துக்கொண்டு கடகடவென்று ஓலையில் எழுதத் தொடங்கினாள். குக்கேஸ்வரர் தானும் ஓர் ஓலையை எடுத்துக்கொண்டு எழுதினார்.
விநயன் அவள் எழுதுவதைச் சரிபார்ப்பது போலப் பாவனை செய்துகொண்டு, அவள் வளையல் அணிந்த கரத்தின் நளினத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். நீளமான விரல்கள். திருத்தமான மணிக்கட்டு. அவ்வப்போது மணிக்கட்டில் வந்து சேர்ந்து கொள்ளும் வளையலை, இடக்கையால், தள்ளி மேலே ஏற்றிவிட்டுக் கொண்டு அவள் எழுதியது அழகாக இருந்தது.
பதினான்கை வைத்து, இருபத்தொன்பதைச் சரிபார்த்ததும், மேலே தலையைத் தூக்கி அவனைப் பார்த்துச் சிரிப்புடன் தலையாட்டினாள். தந்தை திணறிய இடங்களைச் சரிசெய்து, அவரைப் பார்த்து இன்னும் பெருமிதத்தோடு சிரித்தாள்.
“அந்த ஆசார்யர் எவ்வளவு பெரும் பண்டிதர்!” வியந்தார் குக்கேஸ்வரர்.
“நான் அவரை விட்டு நீங்கும்போது இதை விடக் கடினமான ஒரு கணக்கை, ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஒரு வர்க்கத்தின் மடங்கோடு ஒன்றைச் சேர்த்தால், அது இன்னொரு முழு எண்ணின் வர்க்கமாகுமா என்பதுதான் அந்தக் கணக்கு.”
அதற்குப்பிறகு
சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் புறப்பட்டான் விநயாதி சர்மன்.
No comments:
Post a Comment