Friday, 20 September 2024

08. அகாலவர்ஷன்

 அன்று பிதிர்திதியாதலால், பாடசாலை இல்லை. சூர்யோதயம் ஆனதும், ஆற்றங்கரைக்குப் போய்ப் பிதிர்க் கடன்கள் செய்துவிட்டுச் சத்திரத்துக்கு, விநயன் திரும்பி வந்தபோது, பிரதாபர் அனுப்பிய வண்டி அவனுக்காகக் காத்திருந்தது. இரு குதிரை பூட்டிய வண்டி. அவனை ஏற்றிக்கொண்டதும், ஊரிலிருந்து விலகி உத்தராபதத்துக்கும், கோதாவரிப் பெரும்பட்டணத்துக்கும் போகும் பெருவழியில் ஏறித் தெற்கு முகமாகக் கிருஷ்ணை நதியை நோக்கி விரைந்தது.

வழியில் ஒரு வளைவில் சென்று கொண்டிருக்கும்போது, இடப்பக்கத்தில் ஒரு பெரிய திடலில் நிறைய புரவிகளைக் கண்டான் விநயன். நூறு குதிரைகளுக்கு மேல் இருக்கும். சில மேய்ந்து கொண்டிருந்தன. சிலவற்றைப் பயிற்சியாளர்கள் விரட்டிக் கொண்டிருந்தார்கள். கனைத்துக்கொண்டும், குதித்துக் கொண்டும் அழகழகான புரவிகள். அவற்றைப் பார்த்தபடியே போய்க் கொண்டிருக்கும்போது பக்கத்தில் திடீரென்று மூன்று புரவிகள் வந்தணைந்தன. நடுவில் வீற்றிருந்தவன் செலுத்தியது காம்போஜக் குதிரை என்று பளிச்சென்று தெரிந்தது. நீண்ட கழுத்தும், அகன்ற பின்புறமும் கொண்டு ஏறக்குறைய ஒரு தண்ட உயரத்துக்கு இருந்தது. தேர்ப்பாகன் இரதத்தின் வேகத்தைக் குறைத்தான். ஒரு கையால் குதிரைகளின்  கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மறுகையால் உடைவாளைப் பற்றினான். அவன் கை போகுமிடத்தைக் கவனித்த புரவிக்காரன், தன் வலக்கையை உயர்த்திக்கொண்டு, சொன்னான், "இது வழிப்பறியன்று. மனங்கிளர்வுறாதீர்! நீர் வல்லப ஸ்வாமியின் பாகனன்றோ? இந்த புரவிப்பணைக்கு ஸ்வாமி நான்."

நிம்மதியடைந்த தேர்ப்பாகன், தேரை நிறுத்தினான். அசுவக்காரன் வணக்கம் தெரிவித்தான்.

"அதிர்ச்சி கொடுத்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். நீங்கள் புரவிகளைக் கைகாட்டிப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றேன். புரவி மாறுவதில் நாட்டம் உண்டோ? காம்போஜம், யவனம், பாஹ்லீகம், வனாயுஜம், டோக்கரகம், பாரசீகம் போன்ற பல இடங்களிலிருந்து தருவிக்கப்பட்ட புரவிகள் இவை. மாத்திரைக்குப் பதினாறு முழம் போகும் புரவிகள், போர்ப்புரவிகள், வாகன வாஜிகள், பாரக்குதிரைகள் எல்லாவகைகளும் என்னிடம் இருக்கின்றன. நல்ல மாற்றுக்குச் செய்து தருகிறேன். வந்து பார்க்கிறீர்களா?"

"இல்லை இல்லை. இப்போது எண்ணமில்லை. நாங்கள் வேறு ஓர் அவசியப் பணியாகச் சென்று கொண்டிருக்கிறோம்"

"ஓ! பாதகமில்லை. நான் வருகிற கஜவையாளி வரை இங்குத்தான் இருப்பேன். வாஜி வையாளி ஒன்றையும் அந்தச் சமயத்தில் நடத்துவதற்காக அரசர் சமூகத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குத்தான், அதோ பாருங்கள், பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பல ஸாமந்தர்களின் புரவி வீரர்கள் பயிற்சிக்கு வருகிறார்கள். நீங்களும் வல்லப ஸ்வாமிக்கு என் கோரிக்கையை நினைவு படுத்துங்கள். அவரிடமும் விண்ணப்பித்திருக்கிறேன். தேவரீரை மீண்டும் சந்திக்கும் பாக்கியம் எனக்கு ஏற்படட்டும், வாழி வேங்கி!" என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றான்.

"இப்படியெல்லாம் புரவி வணிகம் செய்வார்களா என்ன? ஒருக்கணம், அஞ்சி விட்டேன்." சிரித்தான் விநயன்.

"நானும்தான்" என்றான் தேர்ப்பாகன். "வல்லப ஸ்வாமியின் கொடியைப் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறார். என்னையும் எங்கோ பார்த்திருக்கிறார். அவருக்கு வாஜி வையாளியை நடத்துவதில் தீவிரம். அது நடந்தால், அவருடைய புரவிகளுக்கும் களரியில் ஒரு காட்சிப் பிரமாணம் கிடைத்து, நல்ல மாற்றுக்கு அசுவங்கள் நொடுக்கமுடியும்."

“மாத்திரைக்குப் பதினாறு முழமா? அப்பா! என்ன வேகம்! நிஜமாகப் போகுமா?”

“காம்போஜ உத்தமப் புரவிகள் போகும் ஐயா”

விநயன் வலப்பக்கம் வையாளி விநோதத்துக்காகப் பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தான். பெரிய திடல். நானூறு சதுர முழம் இருக்கும். சுற்றிலும் மூங்கில் கழிகளை மூன்று சுற்றுக்களாகக் கட்டி, ஒரு தண்ட உயரத்துக்குப் பரிக்கிரியை செய்திருந்தார்கள். திடலின் எதிர்த்த இரு பக்கங்களில், நான்கு தண்ட அகலத்துக்கு இரண்டு தோரண வாயில்கள் எழுப்பியிருந்தார்கள். இரண்டு வாயில்களுக்கும் இடையே மூன்று தண்டம் தூரம் இருக்கும். பதினாறு புரவிவீரர்கள், கையில் ஆளுயரக் கோல் வைத்திருந்தார்கள். எட்டு வீரர்கள் சிவப்பு மேலங்கியும், எட்டு வீரர்கள் நீல மேலங்கியும் அணிந்ததில் இருந்து, அவர்கள் எதிரெதிர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது. கைக்கோலின் முனையில், கொக்கி போல ஐந்து அங்குலத்துக்குக் கட்டை அடித்திருந்தார்கள்.

இரு அணி வீரர்களும், கைக்கோல் கொக்கியால் ஒரு பந்தைத் தூக்கித் தூக்கி அடித்துக்கொண்டிருந்தார்கள்.

"இதென்ன ஆட்டம்? அது என்ன பந்து? துணிப்பந்து போல இல்லையே?" தேர்ப்பாகனிடம் வினவினான் விநயன்.

"அது தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட மர உருண்டை ஐயா. மேலே தோலால் சுற்றியிருக்கிறார்கள். இரண்டு அணிகள். அந்தப் பந்தைக் கை படாமல், கொக்கியால் எடுத்து வீசி, இரண்டு தோரணத்துக்கு வெளியேயும் வீச வேண்டும். தோரண வாயில் வழியாகத்தான் பந்து வெளியே வீசப்படவேண்டும். இரண்டு வழியாகவும் முதலில் வீசும் அணி வென்றது."

"ஓ! நீல அணி தெற்கு வாயில், சிவப்பு அணி வடக்கு வாயிலா?"

"ஆமாம். அங்கே பாருங்கள், சிவப்பு அணியின் இரண்டு வீரர்கள் தெற்கில் நின்று கொண்டு நீல அணி, சொந்தத் தோரணத்தின் வழியாக வீசாமல் தடுக்கிறார்கள்."

"ஆமாம். ஆனால், வீசியது தன்னுடைய அணியாக இருந்தால், அவர்களே அதை வாங்கித் தெற்கில் வீசுகிறார்களே! அப்படியென்றால், யார் வீசியது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது."

"ஆமாம். அதில்தான் சுவாரசியம். குனிந்து எப்படிக் கீழே கிடக்கும் பந்தை அங்கே ஒருவன் எடுக்கிறான் பாருங்கள். அபாரத் திறமை. சொன்னபடியெல்லாம் கேட்கிறது அவன் புரவி. காலால் தட்டித் தட்டியே எப்படிக் குதிரையை வழிநடத்துகிறான் பாருங்கள்"

தேர்ப்பாகன் கண்கள் மின்னுவதைப் பார்த்தான் விநயன்.

"நீ பேசுவதைப் பார்த்தால், முன்னம் விளையாடியிருக்கிறாய் போலிருக்கிறதே?"

"ஆமாம். எல்லாப் படைவீரர்களும் இதில் பயிற்சி எடுப்பார்கள்"

"நீ படையில் இருந்தாயா?"

"ஆமாம் ஐயா. சண்டையெல்லாம் முடிவுக்கு வந்தபின், வேறு வேலை கிடைக்கவில்லை. போரில் இடுப்பு எலும்பு முறிந்ததால், பெரிய பணிகளெல்லாம் செய்யமுடியாது. வருவாய் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் வல்லப ஸ்வாமி கருணை கொண்டு இந்தப் பணியில் அமர்த்தியிருக்கிறார்."

"தயாசீலர் அவர்"


பேசிக்கொண்டே இருக்கும்போது, கிருஷ்ணை நதி கண்ணுக்குத் தெரிந்தது. நதியின் இந்தக் கரையில் ஒரு பெரிய சுங்கச்சாவடி. ஆற்றைக் கடந்துவந்த பார வண்டிகளும், ஆற்றைக் கடக்கப்போகும் வண்டிகளும் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுக் குழுமியிருந்தன. பெரிதாக அமைக்கப்பட்டிருந்த திடலில், வண்டிகளில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடுகளும், குதிரைகளும், யானைகளும் இளைப்பாறிக்கொண்டிருந்தன. ஆற்றில் இருந்து ஜலயந்திரம் இறைத்துக் கொண்டிருந்த நீரில் வண்டியோட்டிகளும், பாரந்தூக்கிகளும், பயணம் செய்து வந்தவர்களும் குளித்துக் கொண்டிருந்தார்கள். நிறைய உணவுவிடுதிகள், மதுபானக்கடைகள், பழக்கடைகள் ஆங்காங்கே முளைத்திருந்தன. எல்லாவற்றிலும் சந்தடி அதிகமாக இருந்தது.

 

"இரவில் ஆட்டம் பாட்டங்களுக்கும் குறைவிருக்காது" என்றான் சாரதி.

புன்னகைத்தான் விநயன். "ஆமாம். வணிகர்களும், வண்டியோட்டிகளும் புழங்கும் முக்கியமான போக்குவரத்துச் சந்தி அல்லவா? இந்த உலகமே வேறு. அங்கே நிறைய குடில்கள் இருக்கின்றனவே, அவையெல்லாம் என்ன?"

"சில சமயங்களில் பரிசோதனை முடிய, நாட்களாகி விடும். தங்குவதற்காக, ஊர்மக்கள் கட்டித் தினவாரத்துக்கு விட்டுப் பொருள் ஈட்டுகிறார்கள். இவற்றை விட்டால், தங்க வேறு இடம் கிடையாது."

சுங்கச் சாவடியில் தீர்வை கட்டுவதற்காகப் பல பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கெல்லாம் மரக்கட்டைகளைக் கட்டி, ஒன்றிலிருந்து மற்றவற்றுக்குச் செல்ல முடியாதபடி, எல்லை எழுப்பியிருந்தார்கள். அவற்றுள் அதிகாரிகள் நுழைவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்து, அதில் வண்டியைச் செலுத்திக்கொண்டு, சாவடியின் ஒரு கட்டிடத்தின் முன்வந்து நின்றான் சாரதி. வண்டியைப் பார்த்ததும் அருகே ஒரு படைவீரன் வந்து, 'என்ன விஷயம்' என்றான்.

"வல்லப ஸ்வாமி வரச்சொல்லியிருக்கிறார்"

"தேவரீர் திருநாமம்?" என்று விநயனைப் பார்த்துக் கேட்டான்.

"விநயாதி சர்மன்"

 

உடனே தலைவணங்கிய படைவீரன், "வாருங்கள், தாங்கள் வந்ததும் அழைத்துக்கொண்டு வரும்படி உத்தரவாகி இருக்கிறது" என்று விநயனுக்கு வண்டியிலிருந்து இறங்க உதவியவன், சாரதியைப் பார்த்து, "சாரதி, வண்டியை அந்த மரத்தடியில் கட்டு. புரவிகளை அவிழ்த்துக் கொண்டுபோய்,  எதிரிலிருக்கும் மந்துரையில் விடு. இந்த முத்திரையைக் காட்டினால். பணையில் கொள்ளும், புல்லும், நீரும் தானமாகக் கிடைக்கும். உனக்கு உண்டி, அந்தத் தூண் தெரிகிறது பார், அதற்குப் புறத்தில் உள்ள அடிசிற்பள்ளியில் இதே முத்திரையைக் காட்டினால் கிட்டும்" என்றான்.

"வாருங்கள் ஐயா" என்று விநயனைக் கட்டடத்துள் அழைத்துச்சென்றான். ஏகப்பட்ட படைவீரர்கள் வாளுடன் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். மரச்சட்டங்களால் ஆன நிறைய கூண்டுகள். ஒவ்வொன்றிலும் ஒரு காரியஸ்தர் உள்ளே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு, கூண்டுக்கு வெளியே இருந்த வணிகரிடம், கொண்டு வந்த பொருள், எடுத்துக்கொண்டு வந்த வண்டியின் விவரம், இழுத்த விலங்குகள் என்ன என்றெல்லாம் கேட்டுத் தீர்வையைத் தீர்மானித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். தீர்வையைக் கொடுத்ததும், ஓர் ஓலையில், விவரங்களை எழுதி, முத்திரை பொறித்து, மாதத்தையும் திதியையும் எழுதிக் கையில் கொடுத்தார். கைச்சுமை, தலைச்சுமை, முதுகுச்சுமை, ஒற்றைமாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி, காளைமாட்டு வண்டி, யானை வண்டி என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு தீர்வை. உப்பு, துணிகள், பருத்தி, தாது, அரிசி, யவை, பச்சை எள், காயவைத்த எள், எண்ணெய், நெய் என்று பொருளுக்கேற்ப வேறு வேறு தீர்வைகள்.

இவற்றையெல்லாம் பார்த்தபடியே உள்ளே சென்ற விநயனை வரவேற்றார் பிரதாபர்.

“வா வா விநயா! நலம்தானே? கிணறு வெட்ட ஏதோ கணக்கெல்லாம் போட்டுக் கொடுத்தாய் போலிருக்கிறதே? தேவநாதய்யா சொல்லிச் சொல்லி மாய்ந்து கொண்டார். வேலை மும்முரமாக நடக்கிறது என்று நேற்று வந்து சொல்லி விட்டுப் போனார். நல்ல விஷயம்.” என்று வரவேற்றார்.

“அட! அதற்குள் செய்தி வந்துவிட்டதா? ஒன்றும் பெரிய விஷயமில்லை. சிறுதச்சனே வேறுவழியும் கண்டுபிடித்திருப்பான். பொறுப்புக்குப் பயந்துவிட்டான். நான் இருந்ததால், பிழை ஏற்பட்டால், பளுவைச் சுமத்த என்னுடைய தலை கிடைத்தது அவனுக்கு. தைரியமும் வந்தது.” சிரித்தான் விநயன்.

இருவரும் பேசிக்கொண்டே ஓர் ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்து நூறடியில் கிருஷ்ணை பிரவகித்துக் கொண்டிருந்தாள். நிறைய மரங்கள். மரத்தடியில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

“நமக்குத்தான் அன்னம் தயாராகிறது. பெரிய விருந்தில்லை. புளிபெய்த காரெள் நெய்யில் காயுடன் வதக்கிய அடிசில். ஈற்றில் தயிரன்னம். போதுமில்லையா?”

“யதேட்டம். இப்படிச் சோலையில் அமர்ந்துகொண்டு, நதியைப் பார்த்தபடி, உங்களிடம் சரித்திரம் கற்றுக்கொண்டே அன்னம் புசிப்பது எவ்வளவு கொடுப்பினை”

கதையை எங்கு விட்டோம்?”

“உறவிலேயே கிளைத்த சத்துரு கற்கனைப் பற்றிச் சொல்கிறேன் என்றீர்கள்.”

“ஆம். இவனை அகற்றத்தான், கிருஷ்ணராஜாவுக்கு அரியணை ஏறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது இவன் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், இராட்டிரக்கூட சாம்ராஜ்ஜியம் இப்படித் தக்கணம் முழுதும் வியாபித்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். இரட்டப்பரம்பரையே தடம் மாறியிருக்கும். இவன் தந்திதுர்க்கரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கோவிந்தராஜனின் வம்சாவளி வழியிலேயே வந்தவன். நாகசாரிகாவின் ஆட்சியைத் தன் ஒன்றுவிட்ட சகோதரன் கோவிந்தராஜரிடம் தந்திதுர்க்கராஜா ஒப்படைத்தார் என்றும், அவந்தியை இவர்தான் கட்டுக்குள் வைத்திருந்தார் என்றும் சொன்னேன் அல்லவா? இந்தக் கோவிந்தராஜா, நாகபடனின் உறவுப் பரம்பரையில் வந்த ஸ்ரீநாகவர்மனின் மகளை மணம் செய்திருந்தார். இவர்களுக்குப் பிறந்தவன்தான் இந்தக் கற்கராஜா.

“தந்தைக்குப் பிறகு நாகசாரிகாவின் ஆட்சி இவன் கைக்குத்தான் வந்தது. திறமையான அரசன். நல்ல நிர்வாகி. வீரனும் கூட. வடக்கில் இருந்த இலாடமும், பிருகுகச்சாவும் தந்திதுர்க்கரின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவி, நாகபடனுக்குக் கீழ்ப்பட்டு விட்டிருந்தாலும், நாகசாரிகா கற்கனுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நாந்திபுரிக்குப் பிறகு, அப்படியே நர்மதை ஓரமாகவே, உஜ்ஜைனிக்கு நாகபடன் முன்னேறிவிட்டதால், நாகசாரிகாவை அப்போது அவன் தாக்கியிருக்கவில்லை. அவனுக்கு அப்போது உஜ்ஜைனிதான் முக்கிய நோக்கமாக இருந்தது. நாகசாரிகாவுக்கு வேறு திட்டம் வைத்திருந்தான் அவன்.

அரியணை ஏறியதும், கற்கனுக்குச் சாம்ராஜ்ஜியக் கனவு தோன்றத் துவங்கியது. தந்திதுர்க்ரின் படையெடுப்புக்களில் நேரடியாகப் பங்கேற்றவன் அல்லவா? கிருஷ்ணராஜாவின் தலைமையை நேரடியாகப் பார்த்தவனும் கூட. இராட்டிரக் கூடத்தையும் தன்னால் நன்றாக ஆட்சி புரியமுடியும் என்று நினைத்தான். தந்திதுர்க்ருக்குப் பிறகு, தனக்குத்தான் ஏலபுரி அரியணை என்ற முடிவுடன் தந்திதுர்க்கரின் அந்திமக் கிரியைக்கு ஏலபுரிக்கு வந்தவன் தன் படையோடு வந்தான். தன்னை அரசனாகவே பாவித்து நடந்து கொண்டான். அமைச்சர்களின் குழுவைக் கூட்டித் தன்னைப் பட்டம் சூட்டச் சொல்லி உத்தரவிட்டான். ஏலபுரி குழப்பத்தில் ஆழ்ந்தது. அவனைத் தவிர, அரியணைக்கு வேறு போட்டியும் இல்லை. அவனுடைய நிர்வாகத் திறமையும், வீரமும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

“சாளுக்கியர்களின் ஆட்சி இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத சமயம் அது. கீர்த்திவர்மர் பீமநதிக்குத் தெற்கில் கர்நாடக மன்னராக ஆண்டுகொண்டு இருந்தார். தந்திதுர்க்கரின் மறைவு, அவருக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்ததால், தான் இழந்த பகுதிகளை மீட்கத் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி எல்லோருக்கும் கிடைத்தது.

“புதிதாகக் கிளைத்த அரசுக்கு நெருக்கடியான நேரம்தான். அரசருடன் கூடவே இருந்து, அவருடைய எல்லாப் படையெடுப்புக்களிலும் கலந்து கொண்டு, புதிய அரசின் கட்டமைப்புக்கு எல்லா உதவியும் செய்து கொண்டிருந்த கிருஷ்ணராஜா, தந்திதுர்க்கரின் மறைவுக்குப் பிறகு எம்மாதிரி அந்தஸ்தில் இருந்தார்?”

தந்திதுர்க்கர் இறந்ததும், மீண்டும் பின்புலத்துக்குச் சென்றுவிட்டார் கிருஷ்ணராஜா. தந்திதுர்க்கராஜா இருந்தபோது, கிருஷ்ணராஜாதான் அடுத்து வரவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். அதைக் கிருஷ்ணராஜாவுக்கும் சொல்லியிருந்தார். ஆனால், இது மற்றவர்களுக்குத் தெரியாது. இதைப் போய்ச் சொல்லிக்கொண்டு, அரியணையில் தாம் அமரவேண்டும் என்றெல்லாம் கிருஷ்ணராஜாவுக்கு ஈர்ப்பு இல்லை. அவரைப் பொறுத்தவரை, தமையன் இந்திரனுக்கு உதவியாக இருந்தோம். அவனுக்குப் பிறகு, ஆட்சி உரிமை பெற்ற அவனுடைய புதல்வனுக்குத் துணை நின்றோம். இப்போது அவனும் இல்லை. அடுத்து யார் வேண்டுமானாலும் வரட்டும். நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம் என்ற ரீதியில்தான் அவருடைய எண்ணம் இருந்தது. அவரை வலுக்கட்டாயம் செய்யும் அளவுக்கு ஓர் ஆள்மையும் அப்போது இல்லை. தலைநகருக்கு வந்து, தன்னுடைய எண்ணத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய கற்கனுக்குத் தன்னை அரசனாக ஏற்பதற்குப் பெரிய எதிர்ப்பு எதுவும் ஏலபுரியில் இல்லையென்பது தெரிந்தது. கிருஷ்ணாராஜாவை இவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நடப்பதை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

“அரியணை ஏற்பாடுகள் நடந்து முடிந்ததும், சீக்கிரமே அரசனாக வரப்போகும் திருப்தியுடன் கற்கன் நாகசாரிகாவுக்குத் திரும்பினான். அவனுடைய இராணுவச் சிந்தை சற்று வித்தியாசமாக வேலை செய்தது. தான் ஏலபுரியில் இப்போதே அரசனாக ஆகிவிட்டால், இரண்டு போர்கள் நிச்சயம் என்று நினைத்தான். ஒன்று கீர்த்திவர்மர். அவருடைய தலைமையில், சாளுக்கியப் படைகள் சீக்கிரமே ஏலபுரியைத் தாக்க வரும் என்பது நிச்சயம். அப்படி வந்தால், எடுத்த எடுப்பிலேயே தான் ஏலபுரியின் அரியணையில் இருந்துகொண்டு, அவரைச் சந்திக்க அவன் விருப்பப்படவில்லை. குர்ஜரப் படையெடுப்பிலிருந்து களைத்துப் போய்த் திரும்பி வந்திருந்த இராட்டிரக்கூடப் படைகளை வைத்துக்கொண்டு அந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாது என்ற உண்மை புரிந்திருந்தது அவனுக்கு. ஒருவேளை அப்படி நடக்காமல், சாளுக்கியப் படைகளைத் தான் தோற்கடித்து விட்டாலும், அடுத்து நாகபடனின் படையெடுப்பு நடக்கும். அடுத்தடுத்து இரண்டு போர்கள் என்றால், அதில் தான் வெற்றி பெறும் வாய்ப்பு அறவே கிடையாது. அத்தோடு தன் சாம்ராஜ்ஜியக் கனவு முற்றுப்பெற்று விடும் என்று நினைத்தான். ஒருவேளை கீர்த்திவர்மரிடம் தான் தோற்றுவிட்டாலும், தன் கனவு மடிக்கப்படும். பிறகு நாகசாரிகாவையும் இழக்க நேரிடும் என்று கணக்கிட்டான்.”

“இந்த இரண்டில் எது நிகழ்ந்தாலும், ஏலபுரி அரியணை வாசம் அவருக்கு நிலைக்காது என்று நினைத்தாரா? முதலில் நிகழப்போவது சாளுக்கியத் தாக்குதல் என்றும் அவருக்குப் புரிந்திருக்கும்”

“ஆம். நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?”

“நான் அரியணை ஏற அவசரப்பட மாட்டேன். யார் வேண்டுமானாலும் ஏலபுரியை ஆளட்டும். சாளுக்கியர் ஏலபுரியைத் தாக்கப் போவது என்னவோ நிச்சயம். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, யாருக்கு வெற்றி கிடைத்து ஏலபுரி அரியணையில் அமர்ந்திருந்தாலும் போர்புரிந்து களைத்திருப்பார்கள். அதன்பிறகு, நான் ஏலபுரியைத் தாக்கினேன் என்றால், எளிதில் ஏலபுரி என் வசமாகிவிடும். அதற்குப் பிறகு, பிரதிஹாரர்களின் படையெடுப்பு நடந்தாலும், என்னுடைய சேனை புத்துணர்வோடு இருக்கும். இராட்டிரக்கூடப்படைகளோடு, சாளுக்கிய சேனையில் எஞ்சியிருக்கும் படைபலமும் என்னுடைய படைபலத்தை உயர்த்தும் வாய்ப்புண்டு. நான் சற்றுக் காலூன்றிக் கொண்டபிறகு, நாகபடனாக எதிர்க்கவில்லை என்றாலும், நான் உஜ்ஜைனியைத் தகுந்த சமயம் பார்த்துத் தாக்குவேன். ஆனால், இது ஒரு விமார்க்கம்.”

“எப்படி?”

“இந்த வழியை நான் எப்போது தேர்ந்தெடுப்பேன்? ஏலபுரியை ஓர் அந்நியப் பிரதேசமாகவும், இராட்டிரக் கூடத்தின் மேல் எனக்குப் பிணைப்பு எதுவும் இல்லை என்றிருந்தால்தானே? சுயநலம்தான் இதில் முன்னுக்கு வருகிறது. இரட்டபாடி ன்னுடைய நாடு என்று நான் நினைத்திருந்தால், ‘ஐயோ! சாளுக்கிய சேனை வருகிறதே, தலைமையில்லாத ஏலபுரி அந்தச் சேனையை எப்படி எதிர்கொள்ளும் என்ற கவலைதான் எனக்கு முதலில் தோன்றியிருக்கும். எதிரிகள் வருவதற்குள் எப்படியாவது நான் அரியணை ஏறிவிட வேண்டும். ஏறி, இப்போதிருந்தே சாளுக்கியப் படைகளை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றுதான் மனம் பதைபதைத்திருக்கும். ஆனால், அப்படியெல்லாம் தோன்றாமல், நான் ஏலபுரி அரியணையில் அமர்வதற்கு நிதானத்தைக் காட்டினேன் என்றால், எனக்கு நாகசாரிகாவின் மீது இருக்கும் ஈடுபாடு, இரட்டத்தின் மீது இல்லை, ஏலபுரியை நான் ஓர் சாம்ராஜ்ஜிய எல்லை விரிவாக்கமாகத்தான் எண்ணியிருக்கிறேன் என்றுதான் பொருள்.

“குறிக்கொண்டு கூட்டினாய், நீ! கற்கனின் தாமதத்தை, விமார்க்கம் என்று கிருஷ்ணராஜாவும் உணர்ந்தார். கற்கராஜன் இன்னொரு செயலும் செய்தான். நாகபடன் நாகசாரிகாவுக்கு ஒரு திட்டம் வைத்திருந்தான் என்று சொன்னேன் அல்லவா? அது கற்கனைத் தனக்கு இணக்கமான அரசனாக வைத்துக் கொள்வதுதான். தூரத்து உறவு வேறு. கற்கனின் அரசு தனக்கு இணங்கிய அரசாக ஆகிவிட்டால், மொத்தப் பாரத வர்ஷத்தையும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்று நினைத்தான்.”

“நாகபடன்தான் சீக்கிரமே இறந்துவிட்டான் அல்லவா?”

“இது தந்திதுர்க்கர் இறந்ததும் எழுந்த நிலைமை. அப்போது நாகபடன் உயிரோடுதானே இருந்தான்! அவனுக்கு ஆயுள் குறைவு என்று அவனுக்குத் தெரியாதே!” சிரித்தார் பிரதாபர். “நாகபடன் கற்கராஜனுக்கு நட்பென்னும் தாளைக் கொளுவினான். பிரதிஹாரர்களின் துணை தனக்கிருந்தால், மொத்தத் தக்கணத்தையும் தான் கைப்பற்றி விடலாம் என்று கற்கனுக்கும் தோன்றியது.”

“ஐயோ! இது சாதுரியமான எண்ணம்தான். ஆனால், நாடு, மக்கள் என்னும் உணர்வை மதிக்காத நெறி பிறழ்ந்த வழி.”

“அப்படி எப்படிக் கூறமுடியும்? நீ இரட்டத்தின் குடிமகனாகச் சிந்திக்கிறாய். அவன், நீயே சொன்னதுபோல, தன்னை நாகசாரிகாவின் அரசனாகக் கருதிக் கொண்டு யோசித்திருக்கிறான் என்று கொள்ளலாம் அல்லவா? எது எப்படியோ, கற்கன், நாகபடனுடன் இணக்கம் கொள்ளத் தீர்மானித்துத் தக்கணச் சாம்ராஜ்ஜியாதிபதி ஆகும் எண்ணத்துடன், படைகளைத் தன் தலைமைக்குக் கீழே திரட்டினான். அந்த முயற்சிக்கு, அவனுடைய தாய்வழிப் பாட்டனார் நாகவர்மனும், தந்திதுர்க்கரால் தோற்கடிக்கப்பட்டவர்களும் துணை புரிந்தனர். எதிரியின் எதிரி, னக்கு நண்பன் என்ற நிலைதான். கற்கன் தன்னை மன்னனாக மனத்தில் வரித்துக் கொண்டு, தனக்குப் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டான். ஒரு புதிய பரம்பரையைத் தனக்கென்று குறிப்பிடத் துவங்கினான். நான் சாஸனத்தைப் பார்த்ததில்லை, ஆனால் கேள்விப் பட்டிருக்கிறேன். அவனுடைய சாஸனங்களில் தந்திதுர்க்கரையே அடியோடு அகற்றிவிட்டுத் தன் தந்தை, தன் பாட்டனார் என்று குறிப்பிடத் துவங்கினானாம்.”

“ஓ! தந்திதுர்க்கர் எப்படித் தன் பரம்பரையைக் குறிப்பிடுவார்?”

“தந்திவர்மனில் இருந்து துவங்குவார். தந்திவர்மருக்கு முன்னாலும் அரசர்கள் இருந்தாலும், தந்திவர்மனிடமிருந்து நீ கணக்கு வைத்துக்கொண்டு வா. தந்திவர்மருக்கு இந்திரப் பிரச்சகராஜா என்று ஒரு மகன், அவருக்குக் கோவிந்தன் என்று ஒரு மகன். இருவரும் அடுத்தடுத்து ஆண்டார்கள். இந்தக் கோவிந்தர் சிவபெருமானைத் தவிர வேறு கடவுளை வணங்காத தீவிரமான சிவ பக்தர். இவருக்குப் பிறகு அரசுரிமை இவருடைய மகன் கற்கராஜாவுக்குக் கிடைத்தது. கற்கராஜா தீவிர விஷ்ணு பக்தர். கற்கராஜாவுடைய நான்கு மகன்கள் இந்திரராஜா, துருவராஜா, கிருஷ்ணராஜா நன்னராஜா. மூத்தவர் இந்திரராஜா. இந்த இந்திரராஜாவின் புதல்வர்தான், தந்திதுர்க்கர். சரியா?

“விஷ்ணுபக்தர் கற்கராஜா, இந்திரராஜா, இவர்கள் எல்லோரும் அரியாசனத்தில் அரசராக அமர்ந்து கோலோச்சியவர்கள். அவர்களுடைய வழியில் அரசராக வந்து, நாகசாரிகாவை வெற்றி கொண்டு, தனக்கு அடங்கிய நாடாக ஆக்கியது தந்திதுர்க்கர். தான் ஏலபுரிக்கு வந்தபிறகு, தனக்குப் போரில் உதவிய கோவிந்தரை, அதாவது சிற்றப்பா துருவராஜாவின் புதல்வரை, நாகசாரிகாவின் முதல் இரட்ட வமிச அரசராக நியமிக்கிறார்.  இந்தக் கதையெல்லாம் உனக்குச் சொல்லியிருக்கிறேன். இந்தக் கோவிந்தரின் மகன்தான் கிளர்ச்சி செய்த கற்கன். புரிந்ததா? இப்படி வமிசம் இருந்தால், கற்கனின் வமிசாவளி எப்படி எழுதப்படவேண்டும்?”

“விஷ்ணு பக்தர் கற்கராஜா வரை ஒரே போலத்தான். பிறகு, இந்திரராஜாவைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, அவருடைய புதல்வர் என்று தந்திதுர்க்கரைக் குறிப்பிட வேண்டும். பிறகு, அவருடைய சிற்றப்பர் துருவரின் புதல்வர் என்று தந்தை கோவிந்தரைக் குறிப்பிடவேண்டும். அதற்குப்  பிறகு தன்பெயர்.”

“சரியாகச் சொன்னாய். நாகசாரிகா, இரட்டத்துக்கு அடங்கிய சிற்றரசாக இருந்தால், இதுதான் வழக்கம். இவன் எப்படி எழுதுவான் தெரியுமா? உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்:

“தன் பரம்பரையை வைஷ்ணவ பக்தர் கற்கராஜாவிடம் இருந்துதான் தொடங்குவான். அவருக்கு முன்னால் வந்தவர்களைப் பற்றிக் குறிப்புக் கிடையாது. முப்பாட்டனாரைத் ‘தாமரை போன்ற ராஷ்டிரகூட குடும்பத்திற்குச் சூரியன் போன்றவர்” என்று சொல்லிவிட்டு, இந்திரராஜாவையோ, தந்திதுர்க்கரையோ குறிப்பிடாமல், கற்கருக்குப் பிறகு பாட்டனார் துருவரையும், தந்தை கோவிந்தரையும் மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் அப்படிப்பட்ட கோவிந்தருக்கு மகன் என்று தன்னை அழைத்துக் கொள்வான். இதில், தாய் நாகவர்மரின் மகள் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டாம்.

“இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போலத் தன்னை, ‘ஸமாதிகத பஞ்சமஹாசப்த பரம பட்டாரக மகாராஜாதிராஜா பரமேஸ்வரன்’ என்று வேறு அழைத்துக் கொள்ளத் துவங்கினான்.”

“ஹா ஹா” சிரித்தான் விநயன். ‘பஞ்ச மஹா சப்த’ என்று அழைத்துக் கொண்டு, ‘பரம பட்டாரக மகாராஜாதிராஜா’ என்று வேறு கூறிக் கொண்டாரா? தன்னைத் தனித்துவம் பெற்ற அரசனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. தன்னை நாகசாரிகாவோடுதான் இணைத்துப் பார்த்திருக்கிறார்.

“ஏற்கனவே, இராட்டிரக்கூடத்தின் நலத்தை யோசிக்காமல், தன்னைப் பற்றி மட்டும் யோசித்தவன், இராட்டிரக்கூடப் பரம்பரையையே குறிப்பிடத் தயக்கம் காட்டுவது, கிருஷ்ணராஜாவை வேதனைக்குள் ஆழ்த்தியது. பிரதிஹாரர்களுடன் கூட்டுச் சேர்வதற்கும் தயங்கவில்லை என்ற விஷயம் தெரிந்ததும், அவருடைய பொறுமை முடிவுக்கு வந்தது. தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தார். தனக்கு விசுவாசமான படைத்தளபதிகளை ஒருங்கு சேர்த்தார்.

மேதபாடகத்தின் தலைநகர் சித்தூர் கோட்டையைக் கைப்பற்றிய விநயாதித்திய யுத்தமல்லர் என்ன ஆனார்? தந்திதுர்க்கருடனேயே திரும்பி விட்டாரா?”

“இல்லை. தந்திதுர்க்கர் தனகாவையும், மேதந்தகபுரத்தையும் வெற்றி கொண்டபிறகு, யுத்தமல்லருக்கே சித்தூரை வழங்கிவிட்டு, அவரையே அரசராக ஆக்கிவிட்டுத் தான் மட்டும்தான் திரும்பினார். யுத்தமல்லர் கூட வரவில்லை. ஆனால், தந்திதுர்க்கரின் மறைவு, நாகபடனின் எழுச்சி இவை இரண்டும் யுத்தமல்லரைத் தனிப்படுத்தி விட்டது. சுற்றிலும் எதிரிகள் வலுவடைந்து கொண்டு இருக்கிறார்கள். தெற்கில் ஏலபுரி எங்கேயோ இருக்கிறது. அவந்தி கை நழுவிப் போகலாம் என்ற தருணம். இலாடம், பிருகுகச்சா இரண்டும் எதிரிகள் கையில் விழுந்துவிட்டால், இவருடைய நிலை அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கிக்கொண்டது போலத்தான். அதனால், நாகபடன் எழுச்சி துவங்கியபோதே, சித்தூரையும் சாபாதலக்ஷத்தையும் விட்டுப் படைகளோடு வெளியேறி விட்டார். ஏலபுரியில் கிருஷ்ணராஜா நடத்திய இராணுவ ஆலோசனையில் இவரும் இருந்தார். இந்த இரகசியச் சந்திப்பில், கிருஷ்ணராஜா நிலைமையை விளக்க விளக்கத் தளபதிகள் அதிர்ந்தனர். தந்திதுர்க்கருக்காக உயிரையும் கொடுத்து யுத்தம் செய்த மஹாவீரர்கள் இவர்கள். தம்முடைய குருதியும், நிணமும் சிந்தி உருவாக்கிய இரட்ட அரசு, இப்படிச் சிசுவாகவே மரிப்பதா? பிராணத் தியாகமும் செய்வோம், கிருஷ்ணராஜாவுக்குத் துணை நிற்போம் என்று சூளுரைத்துச் சத்தியம் செய்தார்கள்.

“அடுத்துக் கிருஷ்ணராஜா அமைச்சர்கள், நிலப்பிரபுக்கள், குருமார்கள், படைத்தளபதிகள், முக்கிய வணிகப் பிரமுகர்கள், நியாயாதிபதிகள், விஷயாதிபதிகள், மஹாஸாமந்தர்கள் எல்லோரையும் ஆலோசனைக்கு அழைத்தார். தலைமையே இல்லாத ஏலபுரிதான் என்றாலும், கிருஷ்ணராஜாவுடைய கீர்த்தியும் பிரதிபையும் பெரிது. ஆழ்ந்த அனுபவம் உடையவர். விவேகி. மூத்தவர். தந்திதுர்க்க மஹாராஜாவின் வலக்கரமாகத் திகழ்ந்தவர். அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் வந்தார்கள். இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், பகிரங்கமாகத் தான் நினைத்தைப் பகன்றுவிட்டு, அவர்களுடைய அபிப்பிராயத்தை வெளிப்படையாகச் சொல்லும்படி கேட்டார்.

“இராட்டிரக்கூடர்களுக்கே உரித்தான அவைப்பண்பு இது. தந்திதுர்க்கர் செய்தாரா என்று தெரியாது. ஆனால், துருவராஜாவும் கோவிந்தராஜாவும் இதை மனப்பூர்வமாக அனுஷ்டித்ததை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இம்மாதிரி அவையைக் கூட்டி, முக்கிய முடிவு எடுக்கும்போது, அவையில் இருப்பவர்களுக்குத் தாம் நினைத்தைப் பேசும் முழு உரிமை உண்டு. விவாதங்கள் தைரியமாகச் செய்யலாம். பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்புவார்கள்‌. அதற்கு விடை கூறிய பிறகே முடிவெடுக்க முடியும். ‘நான் யார் என்பதை மறந்துவிட்டீர்களா? எனக்கு, இப்படித்தான் செய்ய வேண்டும். ஏனென்று கேட்க நீங்கள் யார்’ என்பது போன்ற அதிகார யானைத்தனம் உள்ள வாக்கியங்கள் அவையில் அறவே சொல்லப்படமாட்டா. அரசரும் கூறமாட்டார். எடுத்த முடிவில், மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு, ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று விரிவாக விளக்கம் அளிக்கப்படும். எல்லோரும் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அரசரே இதைக் கண்டிப்பாகப் பின்பற்றுவார். குறைவறக் கூடியிருந்து வினாபோக்கி எடுத்த முடிவு என்று எழுதிக் குறித்துக் கையொப்பமிடுவார் அரசர்.

“நீ முன்பு ஒருமுறை இராட்டிரக்கூட அரசர்கள் வியத்தியாசமானவர்கள் என்று அழகாகச் ஸங்கிரகமாகச் சொன்னாய். அதேதான் இங்கும். எதிரி என்று முடிவு செய்து, வாளெடுத்து விட்டால் எதிரே இருப்பது யார் என்ற நிலை மறந்து போரிடுவார்கள். ஆனால், அவைக்கண் வைக்கப்படும் வேறுபட்ட கருத்துக்களுக்கிடையே ஏற்படும் விவாதம் என்று வந்துவிட்டால், சான்றாண்மையோடு நடந்துகொள்வார்கள். அந்தப் பண்புடன்தான் இந்த விவாதமும் நடந்தது. கிருஷ்ணராஜா சொன்னதைக் கேட்டு எல்லோரும் ஒட்டு மொத்தமாக, அவருடைய எண்ணத்தைப் பிரதிபலித்தார்கள். அரசராக அவரை, அரியணையில் அமரச் சொன்னார்கள். நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து, உடனேயே அவருக்கு முடியும் சூட்டினார்கள். ஏலபுரி தன்னுடைய இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிப்புடன் ஒரு புதுக்கோலம் பூண்டது. எல்லாமே கிடுகிடுவென்று சில நாட்களில் நடந்து முடிந்துவிட்டன.”

“யார் அடுத்த தலைமை என்பதில் இருந்த குழப்பத்துக்குக் கற்கரே மறைமுகமாக வழியும் காட்டி விட்டாரோ?”

“சில சமயம் அப்படி நடந்து விடுகின்றன அல்லவா?. பெரும் சிக்கலாகத் தோன்றிய விஷயம், ஒற்றை இழையை இழுத்ததும், அடுத்த கணம் அவிழ்ந்து ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது. கிருஷ்ணராஜாவின் அடுத்த நடவடிக்கைக்கு மூன்று மார்க்கங்கள் இருந்தன. என்ன என்ன, சொல், உன் ராஜநீதி நிபுணத்தையும் பரீட்சித்துப் பார்ப்போம்” – பிரதாபர் விநயாதி சர்மனைத் தூண்டினார்.

விருட்டென்று விடையளித்தான், “இப்போது அவருக்கு மூன்று எதிரிகள். ஒன்று எழுச்சியுற்றுக் கொண்டிருக்கும் கீர்த்திவர்மர். இரண்டாவது கற்கன். மூன்றாவது நாகபடன். அவர் முதலில் செய்யவேண்டியது, கற்கனைச் செயலிழக்கச் செய்வதுதான்.”

“ஏன்? விளக்கம் கொடு.

நாகபடனுக்குத் தக்கணம் இப்போது முக்கியமானதாக இல்லை. இருந்திருந்தால், அவன் கற்கனின் துணையை நாடியிருக்க மாட்டான். அதனால் இப்போதைக்கு அவனால் ஏலபுரிக்குப் போர் அபாயம் இல்லை. அவன் கவனம் வேறு எங்கேயோ இருந்திருக்க வேண்டும். கீர்த்திவர்மர் ஏற்கனவே தோல்வியைச் சந்தித்தவர். கிருஷ்ணராஜா போன்றவர் தலைமை தாங்கும் ஏலபுரி வேறு. அவசரப்பட்டுக் கால் வைக்கமாட்டார். தான் வெற்றி பெறுவது நிச்சயம் என்று தெரிந்தபிறகே நகர்வார். அதனால், அவராலும் போர் அபாயம் உடனடியாக இல்லை. இந்தக் கற்கன் அபாயம்தான் உடனடி அபாயம். அதை முதலில் அகற்ற வேண்டும். அவனை வைத்துக்கொண்டு மற்ற எதிரிகளை எதிர்ப்பதும் சிலாக்கியமன்று. உள்வைரி அவன். அவனை வீழ்த்திவிட்டால், மற்ற இரண்டு எதிரிகளும் கூடத் தத்தம் தாக்குதலைத் தள்ளிப் போடலாம்.”

“மிகச்சரி. நீ சாத்திரப் பண்டிதன் மட்டுமல்லை. சமர்ப் பண்டிதன் கூட. சுபதுங்கர் அகாலவர்ஷர் கிருஷ்ணராஜா, நீ சொன்னபடித்தான் செய்தார். அரியணை ஏறியதும் அவர் செய்த முதல் காரியம் இவனை அடக்கியதுதான். இதற்குப் பிறகு, கீர்த்திவர்மரைக் கவனித்தார்.

இருவருக்கும் எதிராக நடந்த போர்களில் பெரிய கோவிந்தர் முக்கியமான பங்கு வகித்தார். அவருக்கு அப்போது முப்பது வயதிருக்கலாம். என்னை விடப் பத்துப் பன்னிரண்டு வயது பெரியவர். படையைத் தனியாகத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அளவுக்கு ஆற்றல் அபரிமிதமாகப் பெற்றவர். கற்கன் இந்தப் படையெடுப்பைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதலில், கோவிந்தரின் தலைமையில் ஒரு படை நாகசாரிகாவை நோக்கிப் புறப்பட்டது. கோவிந்தருடைய முதல் படையெடுப்பு இது. முதலில் அனுப்பப்பட்ட கோவிந்தர் படை, கற்கனின் தலைமையில் அணி திரண்ட சேனைகளைச் சிதறடித்தது. நாகசாரிகா, மிக எளிதில் கோவிந்தரின் கட்டுப்பாட்டில் வந்தது.

“கிருஷ்ணராஜா, இளையவர் துருவராஜாவை ஏலபுரியில் இருந்து நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தனயனைப் பின்தொடர்ந்தார். கற்கன் தப்பியோடிவிட்டிருந்தான். அவனைத் தேடிச்சென்று கொன்றார். நாகசாரிகாவிலேயே சிறிது காலம் தங்கியிருந்து, கற்கன் ஆண்ட பகுதிகளைச் சாம்ராஜ்ஜியத்தோடு எதிர்ப்பில்லாமல் இணைத்தது மட்டுமின்றி, முறையான நிர்வாகத்துக்கும் மிகச் சாதுரியமான ஏற்பாடுகள் செய்து, குடிமக்களின் விசுவாசத்தைப் பெற்றார், நாகபடனின் மீது கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்தார். கற்கன் அழிந்த செய்தி, குர்ஜரத்தில் பரவியது. ஏலபுரியின் எழுச்சி, கிருஷ்ணராஜாவின் அனுபவத் தலைமை இவற்றால் பிரதிஹாரர்கள் சற்று எச்சரிக்கையோடு நடந்துகொண்டார்கள். அப்போதைக்கு வடக்கிலிருந்த அபாயம் சற்றே தணிந்தது.

நாகசாரிகாவைக் கைப்பற்றியதோடு, ஏலபுரிக்குத் திரும்பிவிட்டார். தான் ஏலபுரியில் அதிகநாட்கள் இல்லாமல் இருப்பது, கீர்த்திவர்மனுக்கு ஆர்வத்தைத் தூண்டும் என்று எண்ணியதால், வெகு விரைவில் கற்கன் எதிர்ப்பை அறுத்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டார். அவருடைய எண்ணமெல்லாம் அடுத்த அபாயமான சாளுக்கியம்தான். தந்திதுர்க்கருடைய சாம்ராஜ்ஜியக் கனவே தன் செயல்முறையாக இதுவரை இருந்து பழக்கப்பட்ட அவருக்கு, இப்போது தனக்கென்றும் ஒரு கனவு பிறந்தது. வடக்குத்தான் தந்திதுர்க்கருக்குப் பிரதான நோக்கமாக இருந்தது. கிருஷ்ணராஜாவின் பார்வையோ தக்கணத்துப் பக்கம். விரைவில் தக்கணத்தை இராட்டிரக்கூடத்தோடு இணைக்க வேண்டுமென்று கனவு கண்டார். அதற்கு, வேங்கி, மொத்தக் கர்ணாடம், காஞ்சி, கங்கம் இவற்றை வழிக்குக் கொண்டு வரவேண்டும். அவருடைய அடுத்த செயல்கள் எல்லாம் இக்கனவை நனவாக்குவதை நோக்கி வடிவு கொண்டன.

“கற்கனைக் கொன்றதும், துருவராஜா – கோவிந்தராஜா – கற்கராஜா – என்று கற்கன் தொடங்கிய வம்சாவளி அப்படியே அவனோடேயே பூண்டற்றுப் போயிற்று. இப்படி இராட்டிரக்கூடப் பேரரசுக்கு ஒரு பெரிய சத்துருவாக ஆகியிருக்க வேண்டியவனை முளையிலேயே கிள்ளி விட்டார் கிருஷ்ணராஜா”.

“கற்கன் வீழ்ந்தபிறகு, நாகசாரிகாவை யார் நிர்வாகம் செய்தார்கள்? ஏலபுரிதான் தலைநகராக இருந்ததா?”

“ஏலபுரி ஒரு ஸன்னிவேசமாகத்தான் இருந்தது. தந்திதுர்க்கர் இராணுவத் தலைமையகமாகப் பயன்படுத்தி வந்த நகரம், கிருஷ்ணராஜா காலத்தில், சற்றே விரிவடைந்தது. விரிவடைந்தாலும் ஒரு தலைநகரம் என்ற அளவுக்கு  ஆகவில்லை. மயூரகண்டி எப்படித் துருவராஜா காலத்தில் செயல்பட்டதோ, அப்படித்தான் ஏலபுரியும் இவர் காலத்தில் இருந்தது.

³க்ஷிணஸ்ய ஸமுத்³ரஸ்ய ஸமாஸாத்³ய உத்தராம் தி³ஶம், ஸந்நிவேஶம் தத சக்ரு" என்று வால்மீகி குறிப்பிடுவார். அதைப்போல, இவர் உத்தரஸ்ய ஶைலஸ்ய ஸந்நிவேஶம் உருவாக்கினாரோ?

அவன் கிஷ்கிந்தா காண்டத்திலிருந்து சட்டென்று மேற்கோள் காட்டியதை இரசித்தார் பிரதாபர். “ஆமாம். ஒரு தத்காலிகமாக ஏற்படுத்திய அமைப்பு, பல்லாண்டுகள் நீடித்துவிட்டது. கற்கனை வீழ்த்தியதும், அவன் தாய், நாகவர்மனின் மகள், ராஜமாதா துர்லபாதேவியை மதிப்புக் குறையாமல் நடத்திய கிருஷ்ணராஜர் வேறு சில ஏற்பாடுகளையும் செய்தார். தன் தோளோடு தோள் சேர்ந்து போர்புரிந்தவன், தன்னுடைய தமையன் மகன் கோவிந்தராஜா. அவனுடைய மகனைத் தான் கொல்லவேண்டி வந்ததே, அரியணைக் கிளர்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயமும் வந்ததே என்று அவர் மிகவும் வேதனைப் பட்டார்.

யோ வம்ஶ்யம் உந்மூல்ய விமார்க³பாஜம் ராஜ்யம் ஸ்வயம் கோ³த்ரஹிதாய சக்ரே’ என்றுதான் தன்னுடைய இந்தத் தர்மசங்கடத்தை அவர் வர்ணிப்பாராம். இதைக் கோவிந்தராஜாவும், இந்திரராஜாவின் புதல்வர் சுவர்ணவர்ஷர் கற்கரும் அடிக்கடி சிலாகித்துச் சொல்லுவதுண்டு. அவர்கள் இன்னொன்றையும் அடிக்கடி சொல்வார்கள். ‘வீரத்தால் ஒரு நாட்டின் படைகளைத் தோற்கடிக்க முடியுமே தவிர, மக்களை வெல்ல ராஜாங்க நிபுணத்துவம் தேவை’.

“இதைச் செயல்படுத்திக் காட்டினார் கிருஷ்ணராஜா. கற்கனின் பாட்டனாரான துருவராஜாவுக்கு இன்னொரு ராணி உண்டு. அவர்களுக்குப் பிறந்தவர் தந்திவர்மன். நாகசாரிகாவுக்குத் தன்னுடைய இளைய புதல்வர் துருவராஜாவை ஆதிராஜனாக ஆக்கி, நிர்வாகத்தை ராஜகுமாரன் தந்திவர்மனிடம் ஒப்படைத்தார்.

“பிறகு சில மாதங்களிலேயே கீர்த்திவர்மரைச் சந்திக்கப் பீமநதி நோக்கிப் படையெடுத்துச் செல்ல ஆயத்தங்களைத் துவக்கினார். பெரும்படை சென்றது. கீர்த்திவர்மரும் அவருடைய புதல்வர்களும் ஒட்டு மொத்தமாகக் கொல்லப்பட்டனர். இதை விரிவாகப் பின்னர்ப் பல்லவர்களைப் பற்றிச் சொல்லும்போது சொல்கிறேன். இப்படித் தான் இரட்டபாடிக் குழந்தை பிறந்தது. மெல்லத் தவழவும் துவங்கியது. பிரதிஹாரர்களின் எழுச்சியும், இரட்டபாடியின் எழுச்சியும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் நடந்தன. கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஸ்தாபகர்களின் மரணமும் நிகழ்ந்தன.

“கங்கமும் காஞ்சியும் பிரதிஹாரர்களைப் போல, இரட்டபாடியின்  இளமைப்பருவத்துடன் தொடர்புடையன என்றீர்கள். அகாலவர்ஷர் கிருஷ்ணராஜாவின் உறவு வேங்கி மண்டலத்துடன் எப்படி இருந்தது? பிணக்கு அப்போதே தொடங்கிவிட்டதா?”

“ஆமாம். வாதாபி வீழ்ந்ததுமே இந்தப் பிணக்குத் துவங்கிவிட்டது. அதற்கு மூலகாரணம், வேங்கிமண்டல அரசர்கள், சாளுக்கியப் பரம்பரையினராக இருப்பதுதான். நானும் அந்த வமிசத்தைச் சேர்ந்தவனே. சாளுக்கியருக்கு முன்பாக, வேங்கிமண்டலம், காஞ்சிப் பல்லவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. சாளுக்கியப் பேரரசை விரிவு படுத்திய சத்தியாஸ்ரய புலிகேசி மஹாராஜாதான் வேங்கியைப் பல்லவர்களிடமிருந்து, தன்னுடைய இளைய சகோதரர் விஷ்ணுவர்த்தனரோடு சேர்ந்து கைப்பற்றினார். இதைக் கைப்பற்ற உதவிய தம்பியையே இதன் அரியணையில் வேங்கிமண்டலத்தின் முதல் சாளுக்கிய அரசராக அமர்த்தினார். அப்படி நிர்மாணமானதில் இருந்து, வேங்கி, உணர்விலும், உறவிலும் வாதாபி அரசுக்குக் கட்டுப்பட்ட குடும்பக் குறுநில அரசாகவே இருந்தது. கிருஷ்ணராஜா, கீர்த்திவர்மரை வென்று, வாதாபி சாளுக்கியப் பேரரசுக்கு முடிவு கட்டியதும், வேங்கி, இராட்டிரக் கூடத்துக்கும் அடங்கிய சிற்றரசாகத் தொடர வேண்டும் என்று விரும்பினார். ஆனால், மூலப் பரம்பரையிலிருந்து துண்டிக்கப்பட்ட வேங்கி, சுதந்தரமாக இருக்க முடிவு செய்தது. இதில் தொடங்கியது, இரண்டு நாட்டுக்கிடையேயும் பகை.”

“உறவால் கிளைத்த பிணைப்பு, ஒறுத்தவர்பால் ஏற்படுமா? வாதாபி சாளுக்கியர், இராட்டிரக்கூடர் என்ற இரண்டு எதிரிப் பிரிவுகள், வேங்கிச் சாளுக்கியர், இராட்டிரக்கூடர் என்று மாற்றமடைந்து விட்டதோ? ஆனால், பிரதிஹாரர்களுக்கும், இராட்டிரக் கூடர்களுக்கும் இப்போது கிளைத்திருக்கும் பகையைப் போன்றதன்று இது, இல்லையா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போடும் சண்டை போலத்தான் இருக்கிறது. அடிவேரில் கிளைத்த வன்மம் இங்கே காணக்கிடைக்கவில்லை.”

“நன்றாகச் சொன்னாய். தந்திதுர்க்கரின் அன்னை சாளுக்கிய மாதரசிதானே! என்னையே எடுத்துக்கொள். இயற்பகை இருந்திருந்தால், இப்படி என்னால் இரண்டு அரசுகளின் அந்தரங்க விஷயங்கள் வரை அறிந்துகொள்ள வழி கிடைத்திருக்குமா? இரண்டு பரம்பரைகளுமே திருமணவினையாலும் பிணைப்புண்டவர்கள். எனக்கு இரண்டு இடத்திலும் மதிப்பு உண்டு. இரண்டு இடங்களிலுமே எவரும் என்னை எதிரியாகக் கருதியதில்லை. பின்னால் என்ன ஆகுமோ தெரியாது. ஆனால், இன்றுவரை இராட்டிரக்கூட அரியணையை அலங்கரித்தவர்கள் யாரும் வீணான, வெற்றுப் பகை பாராட்டும் அரசர்களாக இருந்தது இல்லை. அடிப்படையில் இரு பரம்பரைகளுமே விவேகம் உள்ள பரம்பரைகள்.

“வேங்கி தன்னுடைய வழிக்கு வரும் என்று சில வருடகாலம், கிருஷ்ணராஜா, காத்திருக்கவும் செய்தார். ஆனால், வேங்கி சுதந்திரப் பறவையாகத்தான் இருக்க விரும்பியது. அரசர் விஜயாதித்திய நரேந்திர மிருகராஜாவின் பாட்டனார் பெரிய விஜயாதித்தர்தான் அப்போது ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு ஒருவேளை, வாதாபி அரசு விழுந்துபட்ட நிலையில், தாம் ஒரு புது சாளுக்கியப் பேரரசைக் கிழக்கில் உருவாக்கலாம் என்ற கனவு இருந்ததோ என்னவோ? இரட்டர்களின் ஆள்மையை ஏற்க அவர் விரும்பவில்லை.

“பொறுமையிழந்தார் கிருஷ்ணராஜர். இராட்டிரக்கூடத் தலைமையை வேங்கி ஒப்புக்கொள்ளாத வரை, அவருடைய தக்கண சாம்ராஜ்ஜியக் கனவு எப்படி நிறைவேறும்? வேங்கிக்குப் பாடம் புகட்டும் எண்ணத்துடன், யுவராஜா பெரிய கோவிந்தர் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். எனக்குச் சின்ன வயது அப்போது. ஏழெட்டு வயதிருக்கும். இலேசாக நினைவிருக்கிறது. நகரமே போர்க்கோலம் பூண்டுவிட்டிருந்தது. விடலையர்கள் எல்லோருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டது. கொல்லர்கள் இடைவிடாது வேலை செய்துகொண்டு ஆயுதங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இடங்கள் சித்தம் செய்யப்பட்டன. யார் யார் எங்குப் பதுங்கவேண்டும் என்று சொல்லித் தரப்பட்டது.

“இங்கே மூசி நதி இருக்கிறதல்லவா? அது கிருஷ்ணையோடு சேரும் இடத்தில், வடபுறம் பெரிய சமவெளி உண்டு. வேங்கிபுரத்தில் இருந்து, அந்தச் சங்கமம் ஒரு பத்துப் பன்னிரண்டு காத தூரம் இருக்கும். இரட்டர்களின் சேனை அதுவரை வந்துவிட்டிருந்தது. அவர்களின் புகழ்பெற்ற புரவிப்படை குழுமி, ஒரு பாசறையையும் அமைத்துக் கொண்டது. புரவிகளைத் தவிர விற்படையும் யானைப்படைகளும் பின்னாலேயே வருவதாகச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. செய்தியைக் கொண்டு வந்த ஒற்றர்கள், கோவிந்தராஜரின் சேனை நாளைக்கு இரண்டு காதம் கடந்து வந்திருக்கிறது என்றார்கள். கிருஷ்ணையைக் கடக்காமல் வடகரையைப் பிடித்துக் கொண்டே வந்து, மேற்கிலிருந்து வேங்கிபுரத்தைத்  தாக்கப்போகிறது என்றும், படையின் பலத்தைக் கணக்கிட்டால், வேங்கி நாசமடைவது திண்ணம் என்று எச்சரித்தார்கள். ஒரு வாரத்திற்குள் வேங்கியின் வாயிலைத் தட்டும் என்று கணக்கிட்டார்கள்.

“பீதி எல்லோரையும் பற்றிக் கொண்டது. போர் அவசியம்தானா என்ற எண்ணம் எல்லோருடைய மனத்திலும் எழுந்தது. கிருஷ்ணராஜா கொடுங்கோலர் அல்லர் என்று எல்லோருக்கும் தெரியும். கைப்பற்றிய நாட்டை, அந்தந்த அரசர்களிடமே ஒப்படைத்து விடுவார் என்று எதிர்பார்க்க வரலாறும் சான்றாக இருந்தது. கப்பம் கட்டும் பட்சத்தில், நம்மை ஆளும் அரசு, வாதாபி அரசாக இருந்தால் என்ன? இரட்ட அரசாக இருந்தால் என்ன? என்ற கேள்வி மலைபோல எதிரே நின்றது. அத்துணை வல்லமை பெற்ற சாளுக்கிய சாம்ராஜ்ஜியமே இன்று இராட்டிரக்கூட அரசர்களின் வல்லமையை எதிர்கொள்ளும் திராணி இல்லாமல், அடியோடு ஒழிந்துபோய் விட்டது என்றால், வேங்கியின் தனித்துவத்தை எப்படி நம்மால் நிலை நிறுத்தமுடியும்? வேங்கியின் தனித்துவம் என்றாலும் அது என்ன? வாதாபி அரசின் கீழே செயல்படும் சிற்றரசாக இருந்தபோது அதனுடைய தனித்துவம் என்னவாக இருந்தது? இப்போது இரட்டர்களின் ஆட்சியை ஒப்புக்கொண்டால் எந்தத் தனித்துவத்துக்குப் பங்கம் ஏற்படும்? என்றெல்லாம் பிரமுகர்களாலும், வணிகர்களாலும் மற்றவர்களாலும் பலமாக விவாதிக்கப் பட்டது.

“ராஜா பெரிய விஜயாதித்தர் எல்லோருடனும் கலந்து ஆலோசனை செய்தார். இதற்குள் கோவிந்தராஜரிடம் இருந்து, ‘சரணடையுங்கள், அழிவில் இருந்து தப்பிக்கலாம். பெண்களும் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள். இராட்டிரக் கூடத்துக்கு அடங்கிய சிற்றரசாகத் தொடரலாம்’ என்று எச்சரிக்கை வந்தது. அதுதான் வேங்கி எதிர்ப்பு என்ற மயிற்பீலி வண்டியில், ஏற்றப்பட்ட கடைசி இறகு. வேங்கி சரணடையச் சித்தமாகியது. இராட்டிரக் கூடத்துக்கு அடங்கிய சிற்றரசாக ஆக ஒப்புக்கொண்டது.

“அதற்குப்பிறகு, இராட்டிரக் கூடத்திலிருந்து எந்த இன்னலும் இல்லை. இயல்பு வாழ்க்கை இங்கே திரும்பியது. இராட்டிரக்கூடர்களின் சேனை அடிக்கடி வந்து போகும். அவ்வளவுதான். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, விஜயாதித்தியர் மறைந்தார். நரேந்திர மிருகராஜரின் தந்தை விஷ்ணுவர்த்தனர் அரியணை ஏறினார். அந்தச் சமயத்தில்தான், பெரிய கோவிந்தரின் லிகிதம், விஷ்ணுவர்த்தனருடைய உதவி கேட்டு வந்தது. அந்த லிகிதத்தில், தனக்கு உதவினால், வேங்கிக்குச் சுதந்திரம் தருகிறேன் என்று வாக்களித்திருந்தார் பெரிய கோவிந்தர்.

“அந்த இலிகிதத்தால், பத்து வருட காலத்துக்குப் பிறகு, மீண்டும் கீழைச் சாளுக்கியப் பேரரசுக் கனவு உயிர்பெற்றது. துருவராஜரை இங்கு யாருக்கும் தெரியாது. அவர் மஹாவீரரான தமையனாருக்குக் கீழே ஒரு சிற்றரசை நிர்வகிக்கும் தம்பியாகத்தான் வேங்கிக்கு அறிமுகமாகி இருந்தார். அதுவும், இராஜ்ஜியத்தின் வடமேற்கு மூலையில் ஒரு மலைப் பகுதியின் சிற்றரசர். திறை இழித்துதலும், தளையற்ற ஆட்சியும் கோவிந்தராஜர் தருகிறேன் என்று சொன்னால் வேங்கிக்குக் கசக்குமா? கோவிந்தரின் இன்பவழிப் போக்கும் வேங்கிக்குத் தெரிந்திருந்தது. அதிகம் பரிச்சயமில்லாத துருவராஜர் போன்ற ஒழுங்குக்காகப் போர்புரியும் நிர்வாகியை விட, வேங்கியின் எதிர்காலத்திற்கு ஜனரஞ்சக வழிகளை உடைய கோவிந்தராஜாதான் சிறந்த துணை என்று நினைத்தாரோ என்னவோ, விஷ்ணுவர்தனராஜா, துருவருக்கு எதிரணியாக நின்று கோவிந்தருக்கு உதவ முடிவு செய்தார். இப்படி வேங்கி, துருவருக்கு ஒரு சத்துருவாக வடிவெடுத்தது.

“சரி வா. பேசியது போதும். உணவுக்கு முன்னர் சற்றுச் சுற்றிப் பார்த்து விட்டு வருவோம்.” என்று எழுந்தார்.

“இதென்ன புதிய கட்டிடம்? எதற்காகக் கட்டப் படுகிறது?”

“சுங்கச்சாவடியைப் பெரிதாக்குவதற்காக. கோதாவரிக் கழிமுகத்தில் இருக்கும் பெரிய பட்டணத் துறைமுகத்துக்குப் போகாமல், சில நாவாய்கள், இங்கே கிருஷ்ணைக்குத் தென்புறம் வந்து நங்கூரமிட்டுப் பொருள்களைக் கள்ளத்தனமாக இரவோடு இரவாக இறக்கிவிட்டுப் போய்விடுகின்றன. எவை வருகின்றன, யாரை இறக்கிவிடுகிறார்கள் என்று தெரிவதில்லை. வந்தவை, உள்நாட்டுப் பண்டங்களோடு கலந்துவிடுகின்றன. என்ன வந்தாலும், வேங்கிபுரத்துக்கு உள்ளே நுழைய கிருஷ்ணையைத் தாண்டத்தானே வேண்டும்? அதனால், இங்கே பரிசோதனையை அதிகரிக்கத் திட்டமிடுகிறோம். அதற்காகத்தான் சோதனைச் சாவடி விரிவாக்கப்படுகிறது. இங்கே ஒரு நௌகாத்தியக்கரையும் நியமிக்க எண்ணம்.”

கடல் தாண்டிய வணிகத்தைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டான் விநயன். இறக்குமதியின் அவசியத்தைப் பற்றியும், அவற்றால் உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஏற்படக்கூடிய வசதிகளையும், கஷ்டங்களையும், அவை எப்படிக் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பது பற்றியும் விவரித்துச் சொன்னார் பிரதாபர்.

“இறக்குமதியைச் சரிபார்ப்பது மிக அவசியம். எல்லா வணிகர்களும் தங்கள் பொருட்களை சுங்கச்சாவடியின் கொடிக்கு அருகில் வைத்து, அவற்றின் அளவையும் எண்ணிக்கையையும் அறிவித்த பிறகுதான், அவற்றை விற்கலாம், அதிக விலை வைத்தால், நாட்டின் செல்வம் வெளிநாடுகளுக்குப் போய்விடும் அல்லவா? அதனால், நடப்பு விலையை விட எவ்வளவு அதிகமோ, அது அரசுக் கருவூலத்துக்குத் தீர்வையாகக் கைப்பற்றப்படும். விலையுயர்ந்த பொருட்களைச் சாதாரணப் பொருட்களோடு மறைத்து விற்பதோ, ஏற்றுமதியாகும் பொருட்களின் விலையைக் குறைத்து விற்பதோ கண்டுபிடிக்கப்பட்டால், ஏமாற்றிய தீர்வையைப் போல எட்டு மடங்கு தீர்வை அபராதம். அத்தியக்கர் பொருட்களைத் தவறாக ஆய்வு செய்தாலோ, அவரிடம் புள்ளிவிவரங்கள் சரிவர இல்லையென்றாலோ, விடுபட்ட தீர்வையைப் போல மூன்று மடங்கு தண்டம் தரவேண்டும். நேர்மை தவறியிருந்தால், சிறைத்தண்டனையும் உண்டு.”

பேசிக்கொண்டே அன்னக்கூடத்துக்கு வந்தார்கள். உணவுண்டபிறகு, விநயனை சாரதி மீண்டும் சத்திரத்துக்குக் கொண்டுவந்து விட்டான்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...