Friday, 20 September 2024

05-04. மண்ணைக் கடக்கம்

 அன்று காலையில் எழுந்ததில் இருந்தே, கோவிந்தராஜா குதூகலமாக இருந்தார். அரச வைத்தியர் ஜாரிவல்லிகை கோவாதித்திய பட்டரின் உத்தரவின்படி இப்போதெல்லாம் மங்கள இசையும் வேத கோஷமும், சூரியோதயத்திற்குப் பிறகுதான் இசைக்கப்பட்டுக் கோவிந்தராஜரை எழுப்பிவந்தன. ஆனால், இன்று, அவை பள்ளியறையில் நுழைவதற்கு முன்பே எழுந்துவிட்டிருந்தார். கண்விழித்ததும் தன்னைப் பார்க்கவந்த பட்டரிடம் உள்வலி குறைந்திருக்கிறது என்றார். கடந்த சில வாரங்களாக சரீரத்தின் உள்ளே, ஒவ்வொரு திசுக்களிலும் பொறுக்கமுடியாத வலி. ரணகளத்தில், ஈட்டியும், அம்பின் நுனியும், வாள் வெட்டும் சாதிக்க முடியாததை, இந்த மரண வலி சாதித்துவிட்டது என்று நகை செய்தவரைத் தினமும் பார்த்து வேதனையுற்ற பட்டருக்கு, இன்று வலியில்லாத நிலையில் அவரைக் காண நிம்மதியாக இருந்தது.

அருகில் இருந்த குடுவையைச் சாய்த்து, ஒரு மரக்குவளை நிறைய கஷாயத்தை அவர் தர, நடுங்கும் கரத்தில் அதை வாங்கிய கோவிந்தர் வெறும் வயிற்றில் அருந்தினார்.

 

“பிறகு வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பட்டர் வெளியே சென்றதும், வெளியே காத்திருந்த மல்லர்கள் உள்ளே நுழைந்து, அவருக்குப் தேகப்பயிற்சி தந்தார்கள். பிறகு, அவரை அமரவைத்து, நறுமணப் பொருள்களும், மருந்தும் கலந்த களிம்பால் கோவிந்தரின் சரீரமெங்கும் கைகளாலும் விரல் மூட்டுக்களாலும் அழுத்தித் தைவந்தார்கள். மல்லாந்தும், குப்புறவும் அவரைப் படுக்கவைத்து, ஆறேகால் சேர் புழுக்கிய அரிசியைப் பதினாறு சேர் நீரில் வேகவைத்துக் குழைந்த கஞ்சியில், சக்கரமர்தகம் போன்ற மூலிகைகளைக் கலந்து, உடலெங்கும் மாசு மறுக்களை நீக்கி மெழுகிட்டார்கள். பிறகு, தலையில், தகரஞாழலால் கபாலத்தை நன்றாகத் தேய்த்துக் கேசத்தையும் நீவிவிட்டார்கள்.

 

தேகத்துக்கு உயிரோட்டம் தந்துவிட்டு, மல்லர்கள் சென்றபிறகு, சில இளம்பெண்கள் அரசரை நீராட்டறைக்கு அழைத்துச் சென்று தந்தத்தால் இழைக்கப் பட்டிருந்த மரவிருக்கையில் அமரவைத்து, நலங்கிட்டார்கள். பக்கத்தில் நான்கு விளிம்புகளிலும் யாளி முகங்கள் பொறித்த வேலைப்பாடுடைய ஒரு பெரிய பித்தளைக் கங்காளத்தில், சூடான நீர் வைக்கப்பட்டிருந்தது. ஒரு தங்கச் சல்லடையை அவருடைய தலைக்கு மேலே சில பெண்கள் பிடித்துக்கொள்ள, சிலர் ஏலம், எலுமிச்சை இலை, துளசி கலக்கப் பட்டிருந்த வெந்நீரைத் தங்கப் பாத்திரத்தால் எடுத்தூற்ற, இன்னும் சில பெண்கள் அவர் உடலில் படிந்திருந்த கஞ்சியும், எண்ணெயும் போக, வாசனைப் பொடிகளால் தேய்த்துவிட்டார்கள். குளித்ததும், பல மடிப்பாக மடித்து வைக்கப்பட்டிருந்த மெல்லிய துணியால், நீரை ஒற்றி எடுத்துச் சந்தனம், மற்றும் மஞ்சளால் சித்தமாக்கப்பட்ட தைலத்தை உடலிலும், நெல்லிக்காயால் தயாரிக்கப்பட்ட சாந்தைத் தலையிலும் தடவினார்கள்.

முள்ளிலவு மரத்தின் கட்டையில் செதுக்கப்பட்டுக் கால்விரல்கள் தெரியும்படித் தோலால் கவிக்கப்பட்டிருந்த பாதக் குறடுகளை அரசருக்கு அணிவித்துச் சுகவறைக்குக் கூட்டிவந்தார்கள். அங்கே அவரை அமர வைத்துப் பாதக்குறடுகளை நீக்கினார்கள். அங்கு வைக்கப்பட்டிருந்த தணலில், சிறுகட்டிகளையும் இலைகளையும் வாட்டி அகிலும் வாசனைத் தூமங்களை எழுப்பிவிட்டு, நீங்கினார்கள். சாந்தம் பூழிலொடு பொங்குநுரை அறையில் பரவியது.  அந்தப் பெண்கள் நீங்கியதும், அடைக்காய் வாககன் உள்ளே நுழைந்தான். அவர் முன்னே, ஏற்கனவே காம்பையும் நுனியையும் கிள்ளித் தயாராக வைத்திருந்த மஞ்சள் நிறம் பூசிய, தளிர் வெற்றிலைகளில் இருந்து ஐம்பத்திரண்டை தன் அடைக்காய் பெட்டியில் இருந்து எடுத்து வரிசையாகப் பரப்பினான். பிறகு, பெட்டியில் இருந்து வைஜயந்தியில் இருந்து விசேஷமாகக் கடம்பராசன் கொடுத்தனுப்பித் தான் தலைசீவி, நிழலில் காயவைத்துப் பக்குவப்படுத்தி வைத்திருந்த ஒரு பாக்குக் கொட்டையை எடுத்தான். அதிலிருந்து கால் பாகத்தை மட்டும் மெல்லிய சுருள்களாகச் செதுக்கி எடுத்து, பரப்பி வைத்திருந்த வெற்றிலைகளின் மீது நிரவினான். அதில், முத்துச்சிப்பி, கஸ்தூரி மஞ்சள், கற்பூரம் மற்றும் வாசனைத் திரவியங்கள் கலந்த கலவையைத் தடவி, ஒரே ஒரு தாம்பூலம் சிங்கவடிவில் வடிவமைத்துத் தந்துவிட்டுச் சென்றான்.

அவர் தாம்பூலத்தை மென்று கொண்டிருக்கும்போது, இன்னும் சில பெண்கள் உள்ளே நுழைந்தார்கள். நறுமணச் சாந்தம், காஷ்மீர தேசத்துச் சந்தனம், வியர்வை மணத்தைக் கட்டுப்படுத்தும் பூச்சு, மற்றும் குளிர் காலத்துக்காகவே விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட புல்லிங்கம் என்ற தைலம் போன்றவற்றை எடுத்துக் கொண்டுவந்த அந்த அந்தப்புர மகளிர், அவற்றால் போரில் ஏற்பட்ட விழுப்புண்களால் நிறைந்திருந்த கோவிந்தரின் உடம்பைப் பூசி விட்டார்கள். அவர்கள் பூசி முடிப்பதற்கும், அவர் அணியவேண்டிய ஆடைகள் வருவதற்கும் சரியாக இருந்தது. அன்றைய திதிக்கு உகந்தது என்று அரண்மனை ஜோதிஷர் குறித்துக் கொடுத்த வண்ணத்தில், காமுண்டப்பாயி மஹாராணியால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தரப்பட்ட, அனஹிலாபுரப் பட்டணத்தில் இருந்து கற்கராஜா வரவழைத்துத் தந்த, தங்கமும் வெள்ளி இழைகளும் வைத்துப் பின்னிய பருத்தி ஆடையையும், பட்டிலான மேலாடையையும் தங்கத் தட்டில் வைத்து இரண்டு பணிப்பெண்கள் தாங்கி வந்தார்கள்.

அவர்கள் ஆடையை அணிவித்து விட்டுப் போனதும், கருவூலத்தில் இருந்து ஆபரண நாயகர், அன்று கோவிந்தர் அணிய வேண்டிய ஆபரணங்களை எடுத்துக்கொண்டு இரண்டு பணிப்பெண்கள் தொடர உள்ளே வந்தார். துருவராஜா அளித்த காந்திகை மார்புப் பதக்கத்தை முதலில் அணிவித்துவிட்டுப் பிறகு மற்ற அணிகலன்களை அவரும் அவருடைய பணிப்பெண்ணும் அணிவித்தார்கள். அன்று அரண்மனை நந்தவனத்தில் பறிக்கப்பட்டுத் தொடுத்து வைத்திருந்த கேதகி, முல்லை, சம்பகம் போன்ற நறுமண மலர் மாலைகளை எடுத்து அவருக்குச் சூட்டிவிட்டுத் தலையில் கிரீடத்தையும் தரிப்பித்தார்கள்.

இந்த அலங்காரம் முடிவதற்காகக் காத்திருந்த கோவாதித்திய பட்டர், உள்ளே நுழைந்து, கோவிந்தரை போஜன அறைக்கு அழைத்துச் சென்று, அன்றைக்கான உணவை அருந்துவித்தார். சற்று நாட்களாகவே, கோவிந்தருக்குப் பத்திய உணவுதான். அவர் அருந்தும் தண்ணீரில் இருந்து, எல்லாமே பட்டரின் கண்காணிப்பில்தான் நடந்துவந்தது.

பிறகு, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க, முன்னம் ஒரு காளை, பிறகு புரவி மற்றும் யானை நடக்க, அவற்றின் பின்னே படைவீரர்களும், பதாகை தாங்கிகளும் வர, சில பெண்கள் மலர்தூவ, கட்டியங்காரன் மெய்கீர்த்தி கூவ, பிரபூத வர்ஷர் கோவிந்தராஜர் மெல்ல உப்பரிகைக்கு வந்தார். பேரிகையும் எக்காளமும் முழங்கின். கீழே ராஜ தரிசனத்துக்காகக் காத்திருந்தவர்கள், கூக்குரல் எழுப்பி வாழி உரைத்தார்கள். நடுவில் இருந்த பெரிய முற்றத்தில், சேனைத் தளபதி வழிநடத்தப் பாலித்துவச அணிவகுப்பு நடந்தது. கிருஷ்ணராஜா, கீர்த்திவர்மரை வீழ்த்திப் பாலித்துவசத்தைக் கைப்பற்றியதிலிருந்தே தினமும் அதன் அணிவகுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். அது கோவிந்தராஜா காலத்திலும் தொடர்ந்தது.

பத்து வரிசைகளில் படைவீரர்கள் பத்து விதமான பெரிய பெரிய கொடிகளை ஏந்திக்கொண்டு வந்தார்கள். மாலைகள், துணிகள், மயில்கள், தாமரைகள், அன்னங்கள், கருடன்கள், சிங்கங்கள், யானைகள், எருதுகள், சக்கரங்கள் என்ற உருவங்கள் பொறித்த பத்துவிதக் கொடிகள். ஒரு விதத்துக்கு ஒரு வரிசை. ஒரு வரிசையில் நூற்றியெட்டு வீரர்கள், நூற்றியெட்டு கொடிகள். இப்படி 1080 கொடிகளோடு, கிழக்குப்பக்கம் பார்த்தபடி நின்றிருந்த அரசரை நோக்கி அசைத்தார்கள். இதேபோல, இன்னொரு 1080 கொடிகள் கொண்ட அணி, வடத்திக்கை நோக்கியபடி நின்றுகொண்டது. தெற்கிலும், கிழக்கிலும் இன்னுமிரு அணிகள். இப்படி நான்கு திக்கிலும், நான்காயிரத்து முன்னூற்றிருபது விதவிதமான கொடிகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டு, பஞ்சமகா சப்தங்களுடன் இலயத்துக்கேற்ப அசைக்கப்பட்டன. காலை இளஞ்சூரியனின் கதிர்கள் அவற்றின் மீது பிரதிபலிக்கப்பட்டு வண்ண வண்ணமாகச் சிதற, கொடிகளில் பொறிக்கப்பட்ட உருவங்கள் உயிர் பெற்று, அலை அலையாகக் காற்றில் மிதந்தன. கண்டவர் குதூகலிக்கும் கண்கொள்ளாக் காட்சி அது!.

அணிவகுப்பு நடந்ததும், மெல்ல நடந்து அவைக்கு வந்தார் மஹாராஜா. வழக்கமாக அமரும் அரியாசனத்தில் இப்போதெல்லாம் அவர் அமர்வதில்லை. சாய்ந்து காலை நீட்டிக்கொள்ள சௌகரியமாக மஜ்ஜனாசனம் போடப்பட்டிருந்ததது. அவரைப் பார்த்துப் பேசத் தோதுவாக சபையோர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர் வருவதற்கு முன்பே, அழைப்பு அனுப்பப்பட்டவர்களும், இருக்கவேண்டியவர்களும் இருக்கைகளில் வந்து அமர்ந்திருக்க, சபை நிரம்பியிருந்தது.

அரசகுமாரர் அமோகவர்ஷர் வலப்பக்கம் அமர்ந்திருந்தார். அவர் அருகே, வெள்ளை வஸ்திரம் அணிந்து அரண்மனைப் புரோகிதர் ஸ்வாமிபட்டர். அவர் அருகே தலைமை அமாத்தியர், சமயமந்திரி, அயல்நாட்டு மந்திரி, கோச மந்திரி, விவசாய சசிவர், போன்றவர்கள் இருந்தார்கள். பிறகு வைத்தியர்கள் புடைசூழ கோவாதித்தியர் அமர்ந்து இருந்தார். இடப்பக்கம் கற்கராஜர், அவருக்குப் பிறகு மஹாஸாமந்தர்கள், மண்டலாதிபதிகள், விஷயாதிபதிகள் அமர்ந்திருக்க நியாயாதிபதிகளும் ராஜாங்க நிர்வாகிகளான நாணயசாலை அதிகாரி, கர்மாதிகாரி, வித்யாதிகாரி, சாத்திராதிகாரி, மிருகாதிகாரி போன்றவர்களும் அவர்களுக்கு அடுத்து இருக்கையேற்றிருந்தார்கள். அவர்களுக்கு அடுத்துப் பிரதாபவர்த்தனர் இருந்தார். நிர்வாக அதிகாரிகள் இரண்டாம் சுற்றில் கையேடு மற்றும் சுவடிகள் சகிதம் அமர்ந்து இருந்தார்கள். பிறகு மெய்க்காப்பாளர்கள், சில சிறப்பு ஆசிரியர்கள், கவிகள், இசை வல்லுநர்கள் இருந்தார்கள்.

கோவிந்தர் அன்று நிறைய பேசினார்.

 

“கட்க அவலோகர் தந்திதுர்க்கருடைய மறைவு திடீரென்று ஏற்பட்டு விட்டதும், அவருக்குப் பிறகு, அரியணையில் ஏற ஆதிக்கர்கள் எவரும் இல்லை. முதலாண் வழி அரசுரிமைப் பேறு எல்லா அரசுகளுக்குமா வாய்க்கிறது? இராட்டிரக்கூட வம்சத்தின் முதல் அரசு மாற்றமே, புத்திர, பௌத்திரப் பாரம்பரியமாக இல்லாமல் போயிற்று. அதனால்தான் என்னவோ, அடுத்த மாற்றமும், ஏற்பட்ட சில காலத்திலேயே சிக்கலுக்குள்ளாகிற்று. அப்படியே விட்டிருந்தால், தோன்றிய வேகத்தில், இரட்டபாடி நலிந்திருக்கும். சாளுக்கியப் பிரபாவம் முற்றிலும் மறையாத நேரம் அது. கீர்த்திவர்மன் இன்னும் எஞ்சி இருந்தான். அதனால், பிதாமகர் சுபதுங்கர் கிருஷ்ணராஜாவுக்கு அரியணை ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலி சூழ்ந்த காலத்தில், கடலில் சிக்கிய பூமி மகளை மீட்ட வாசுதேவன் போல வந்த பிரளய மஹா வராஹர் அவர். அதைத்தானே அவருடைய மெய்கீர்த்தியும் சொல்கிறது!

“அவர் அரியணை ஏறியதும், நாட்டுக்கு எதிர்ப்பு வெளியில் இருந்து வராமல் சொந்தத்திலேயே கிளைத்தது. சுவர்ணவர்ஷா! அந்த ஸ்ரீவலபி, சதுர்வேதி பிராமணர் ஸோமாதித்திய பட்டருடைய மகன், பானு பட்டருக்கு நீ கிராமக் கொடை அளித்த சாஸனத்தில் இந்த எதிர்ப்பைக் குறிப்பாகக் காட்டியிருந்தாய். சந்தோஷித்தேன். இவற்றையெல்லாம் வரலாற்றில் ஏற்ற வேண்டும்.

“கௌடதேசத்தையும் வங்கத்தையும் வென்று விட்டதால், திமிர் மீறிப்போனக் குர்ஜரனை அவந்தியின் பக்கம் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் சாம்ராஜ்ஜிய வாயிற்கதவின் தாழ்க்கோல் உன் கை என்று வேறு எழுதியிருந்தாய். அந்த ஸ்லோகமும் அழகானது. நான் மிகவும் இரசித்தேன். சத்தியமான வார்த்தையைப் பேசியிருக்கிறாய். குர்ஜரப் பிரதிஹாரன் அசாத்திய வலிமையும் போர்ச் சாதுரியமும் கொண்டவன். சாளுக்கிய அரசு, எத்தனை முறை முயன்றிருக்கும் அவந்தியை வீழ்த்த! அவனி ஜனாஷ்ரயன் போன்றவர்களால் முடியாததை, இராஜ்ஜியத்தை ஸ்தாபித்த கையோடு தந்திதுர்க்க ராஜா செய்து முடித்தார் என்றால், அது அவருடைய சாமர்த்தியத்துக்கும் அகாலவர்ஷரின் திட்டத்துக்கும் கிடைத்த வெற்றிதானே?

“துரதிர்ஷ்டவசமாகத் திடீரென்று ஏற்பட்ட தந்திதுர்க்கருடைய மறைவால், உஜ்ஜைனி வந்த வேகத்தில் கை நழுவிப்போய்விட்டது. பெரிய பாட்டனாரின் பேரன், நாந்திபுர ராஜா, கற்கனின் ரூபத்தில் வந்த சிக்கல்தான் இதற்குக் காரணம். உறவில் கிளைக்கும் சிக்கல், ஊர்ச்சிக்கலை விடப் பெரிதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று. கிருஷ்ணராஜாவுக்கு எதிராகக் கொடி உயர்த்தித் தனக்குத்தான் அரியணை வேண்டும் என்று விரும்பினான்.

“கிருஷ்ணராஜாவுக்கு ஏற்பட்டது போல, என்னுடைய அரியணை ஏற்றத்திலும் இன்னல்கள். யுவராஜா ஸர்வன் விஷயத்திலாவது இந்தச் சிக்கல்கள் நிற்க வேண்டும் என்று முன்னோர்களையும், பத்மநாபனையும், பிறைசூடியையும் வேண்டிக் கொள்கிறேன். ஸர்வன் திறமைசாலி. ஆனால், அனுபவம் குறைந்தவன். அடுத்த சிசிரத்தின்போது, நான் இருப்பேனோ என்னவோ? எனக்குப் பிறகு, ஆட்சி மாற்றத்தை ஊறும் உபாதியும் இல்லாமல் நடைமுறைப் படுத்த, நீங்கள் எல்லோரும் சுவர்ணவர்ஷனுடைய கரத்தைப் பலப்படுத்துங்கள். அவன் அத்யந்த சதுரன். மஹாவீரன். தனி ஆளாகவே நின்று இதை முடிக்கக் கூடியவன். இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பின் சுமை உங்கள் எல்லோருக்கும்கூட இருக்கிறது அல்லவா? அவனோடு சேர்ந்து, குடிமக்களுக்கு இன்னல் வராமல், இதைச் செயற்படுத்துங்கள்.

“தந்தைக்கும், மகனுக்கும் இசைவு கெட்டாலோ, இரு சகோதரர்கள், தாயாதிகள், இரு தாரங்கள் வழிப் பிறந்தவர்கள் இவர்களுக்கிடையே உரிமைக்குப் போட்டி தோன்றினாலோ, முதலாண்வழியில் ஏற்படும் அரசு மாற்றங்கள் அமைதியில் முடிவதில்லை.

“இதையெல்லாம் தெரிந்த விவேகி என் தந்தை தாரவர்ஷ துருவராஜர். பெரியப்பா கோவிந்தராஜரின் தலைமையைப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டவர். அவர் சொல்லைத் தட்டும் இயல்பு இல்லாதவர். அப்படியிருந்தும் இவர்களுக்குக்கிடையேயும், சிக்கல் ஏற்பட்டது என்றால், அது கலியின் கொடுமையேயன்றி வேறென்ன?

“பாட்டனார் ஆண்டபோது, தந்தையும் அவரும் சேர்ந்தே நிர்வாகத்தில் அவருக்குத் துணையாக நின்றனர். தனக்குப் பிறகும் அதேபோலவே இருக்கவேண்டும் என்று பெரியப்பாவிடமும் உறுதி வாங்கியிருந்தார், பாட்டனார். அந்த உறுதியை நிறைவேற்ற, அவருடைய மறைவுக்குப் பிறகு ஒருநாள், கோவிந்தராஜா, தந்தையை அழைத்துப் பாட்டானாரின் அந்திம விருப்பத்தைக் கூறி, ராஜ்ஜியத்தின் மொத்த நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தந்தைக்குக் கட்டளை இட்டார். சேனைகளை நடாத்துவதுடன், சிக்கல்களைத் தீர்ப்பதும், இறை இறுத்துவதும், இறுத்த இறையைப் பெறுவதும், பெறவேண்டிய இறையை இழித்துவதும், கொடை அளிப்பதும், கோட்டையைக் காப்பதும், குடிகளுக்கு வசதிகள் செய்து வருவதும் போன்ற எல்லா நிர்வாகப் பொறுப்புக்களையும் தந்தையிடமே ஒப்படைத்தார்.

“நிர்வாகம், குடிப்பொறுப்பு இவற்றில் எல்லாம் கோவிந்தராஜாவுக்குப் பெருத்த ஈடுபாடு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கிருஷ்ணராஜா இருந்தவரை, அவரிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி வினையாற்றிப் பழக்கப்பட்டவருக்கு, எல்லா விஷயங்களுக்கும் தான்தான் முடிவு தர வேண்டும் என்ற நிலை கொஞ்சமும் ருசிக்கவில்லை. இன்பக் களியாட்டங்களிலும், தோள் தினவைத் தீர்க்கும் வீர தீரக் கேளிக்கை விளையாட்டுக்களிலும்தான் அவர் மனம் சென்றதால், இந்த நடைமுறை அவருக்கு அனுகூலமாகவும் ஆகிவிட்டது. தம்பியின் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையும் இருந்ததால், ஆட்சிப் பொறுப்பைத் தந்தையிடம் முழுவதுமாகக் கொடுத்து விட்டு, ராஜபோகங்களில் மூழ்கிப் போனார்.

“துருவராஜா நேரத்தை வீணாக்காமல், காரியத்தில் இறங்கிவிட்டார். என் பூர்வசன் பிரதாபசைலன் பஞ்சமஹாஸப்தன் கற்கராஜனை நிர்வாகத்திற்குப் பழக்குவதற்காகச் சிந்துநகரத்தின் அரசனாக ஆக்கினார். அவனுக்கும், எங்கள் எல்லோருக்கும் பிரபூதவர்ஷ விக்ரமவலோகக் கோவிந்தராஜாதான் பேரரசர். சில திங்கள்கள், எல்லாம் நன்றாகவே நடந்தன. நல்ல விஷயங்களைக் கலி பொறுப்பானா? விரைவிலேயே எல்லாம் தலைகீழாக மாறியது. பொறுப்புத் துறந்து புலன்களின் வசப்பட்ட அரசனுடைய புத்தி, நல்லது கெட்டது என்று பிரித்துப் பார்க்கும் திறமையை இழந்துவிடுகிறது. இரட்டநாட்டின் இறையாண்மையைக் கருத்தில் கொள்ளாத சிலர், கோவிந்தராஜாவின் சிந்தனையை மாற்றத் தொடங்கினார்கள். இதில் முக்கியப்பங்கு பிரதிஹாரன் தேவசக்தி, அவன் குமாரன் வத்ஸராஜா இவர்களுடையது. ஏற்கனவே போக மனப்பான்மை உள்ளவர். அரசராக ஆகி விட்டபிறகு அவரை இடித்துரைப்பது யார்? ஆணவமும் இப்போது சேர்ந்து கொண்டது. முழுவதுமாகச் சிற்றின்பத்தில் அமிழத் தொடங்கினார். நாட்டு நலனில் அக்கறை அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி, ஆக்ஞைகள் பொதுநலக் கண்ணோட்டத்தில் இல்லாமல் போயின. மக்கள் சிரமம் அடைந்தார்கள். மஹாஸாமந்தர்கள் அரசரின் பேரில் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்கள்.

அவர் மஹாவீரர். அவருடைய வீரத்தை நேரில் கண்டவன் நான். மின்னல் வேகத்தில் வாள் வீசும் திறமையுடையவர். புரவி செலுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. வாளேந்திக் கரம்பேறிய அவருடைய கரங்கள், புரவியின் கடிவாளத்தைக் கையில் ஏந்தியதும், காரிகையின் கரங்கள் போல மெல்லியல் கொண்டுவிடும். அவர் கரங்கள் நளினத்தோடு அசைந்தால், அதற்கேற்றாற்போல, அவருடைய புரவி, அவர் மனத்தின் குறிப்பறிந்து நடனமாடும். எதிரே மலை போல யானைகளின் படைகள் அச்சுறுத்தி வந்தாலும், அவற்றிற்கு இடையே, வாள் வீசி, அவர் புகுந்து புறப்படுவதைப் பார்த்த எதிரிகள், அந்தக் கணமே தம் வெற்றி நம்பிக்கையைத் தொலைப்பார்கள். வீராவேசம் கொண்ட அவருக்கு எதிரே நிற்கும் தைரியமும், இடித்துரைத்துப் பேசும் நாவும் யாருக்கு இருக்கும்?

“தந்தைக்கும் நிலைமை புரிந்தது. எல்லோரும் வேறு வந்து அவரிடம். “நீங்கள் ஏதாவது செய்யுங்கள், இல்லாவிட்டால் உருவானது போலவே, இரட்டபாடி விரைவிலே அழிந்து போகும்” என்று முறையிட்டார்கள்.

“தந்தையார் கோவிந்தராஜரிடம் நேரில் போய் நிறைய பேசினார். வழியை மாற்றிக்கொள்ளச் சொல்லி மன்றாடினார். சுகங்களின் மிதமிஞ்சிய மயக்கத்திலும், தவறான போதனையின் பிடியிலும் இருந்தவருக்கு, ராஜகீய ஆலோசனைகள் வேம்பாகக் கசந்தன. தன்னுடைய வழியிலேதான் பயணிப்பேன் என்ற தீர்மானத்தோடு இருந்தார். பலமுறை விண்ணப்பித்தும், அவரை மாற்றமுடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி வந்துகொண்டிருந்த துருவராஜருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் மனம் ஒப்பாத அரசக் கட்டளைகளை அலட்சியப்படுத்தத் தொடங்கினார். தான் சரி என்ற நினைத்த நடவடிக்கைகளை மட்டும் செய்தார். அரசப் பிரதிநிதியாக இல்லாமல், அரசருடைய ஆணைகளுக்காகக் காத்திராமல், சுயமாகச் செயல் படத் துவங்கினார்.

“இது கோவிந்தராஜரை வசப்படுத்தி வைத்திருந்த அந்நிய சக்திகளுக்கு வெறுப்பைத் தந்தது. அவர்களுடைய ஆதிக்கம் இதனால் மட்டுப்படுவதை உணர்ந்த அவர்கள், கோவிந்தராஜரிடம், துருவராஜர் அரியணைக்கு மதிப்புக் குறையும் வகையில் அரச விரோதமாகச் செயல்படுகிறார் என்று பழி சுமத்தினர். கோபமடைந்த கோவிந்தர், என் தந்தையை எல்லாப் பொறுப்புக்களிலும் இருந்து விலக்கி வைத்தார். இந்த விலக்கலால், தந்தை எதிர்பார்த்த மாற்றத்துக்கு நேர்மாறான விளைவு ஏற்பட்டது. இலகுவான வழிகளில் போய்ப் பழகி உருசி கண்ட, அரசருடைய மனம், சுவையில்லாத ராஜாங்க விஷயங்களில் ஈடுபட மறுத்ததால், நிர்வாகத்தை இராட்டிரக் கூடத்துக்கு அந்நியமானவர்களின் பொறுப்பிலேயே விட்டு விட்டார் அந்நியச் சக்திகளுக்கு இது இன்னும் வசதியாகப் போயிற்று. துருவராஜரால் கொஞ்சமாவது கண்காணிக்கப்பட்டுவந்த நிலைமை இன்னும் அதிகமாக வகை தப்பியது.

“மறுபடியும் பல மஹாஸாமந்தர்கள், அமைச்சர்கள், ஆலோசனைக் குழு அவையர்கள், பண்டிதர்கள், தர்ம சிரேட்டர்கள் போன்றவர்கள் தந்தையிடம் அரியணைப் பொறுப்பை எடுத்துக் கொள்ள மன்றாடினார்கள். அதிர்ச்சி அடைந்த அவர், இது இராஜத் துரோகம் என்று வன்மையாக மறுத்தார். தமையனுக்கு எதிராக வாள் தூக்குவதா? இது எதில் போய் முடியும்? கோவிந்தராஜர் அசாதாரண அரசர். குருக்ஷேத்ரப் போர் போல அன்றோ ஆகிவிடும்? இப்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறீர்களே, அவரை எதிர்த்து நான் ஒருவேளை தோல்வி அடைந்தால், அதன் விளைவு உங்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் அறிவீர்களா? என்னுடைய குடும்பத்தின் நிலை என்னவாகும்? இனி இந்த விஷயத்தை என் முன்னால் கொண்டு வராதீர்கள் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

“இப்படி நாட்கள் கழிந்தன. நாளுக்கு நாள் நிலைமை உடன்று கொண்டே வந்தது. ஆனால், இராட்டிரக் கூடத்தின் நல்ல காலம், தந்தையுடைய தீர்மானமான மனத்தை மாற்றும் ஒரு நிகழ்வு நடந்தது. துருவராஜர் உயிரோடு இருப்பது, என்றைக்கும் தங்களுக்கு அபாயம்தான் என்று உணர்ந்த இரட்ட விரோத சக்திகள், துருவராஜர் உங்களை எதிர்க்கப் படை திரட்டுகிறார் என்று கோவிந்தரைத் தூண்டின. கோவிந்தராஜர் பெரிய வீரர்தான். ஆனாலும், இன்ப சுகத்தின் அதீதத்தில், மனோவலிமையும், உடல் வலிமையும் குன்றிய நிலையில் இருந்ததால், தான் மட்டுமே தம்பியை எதிர்த்தால், வெற்றி கொள்வது கடினம் என்று நினைத்தார், அவரைச் சூழ்ந்திருந்தவர்களும் இந்த எண்ணத்தை வளர்த்து விட்டனர். அண்டை நாடுகளின் துணையை நாடலாமே என்று ஆலோசனை சொன்னனர்.

“இப்போதாவது, கோவிந்தராஜருடைய அறவுணர்வு விழித்துக் கொள்ளக் கூடாதா? சகோதரனை எதிரியாக நினைத்து, அவனை ஒடுக்கச் சத்துருக்களின் உதவியை நாடுவதா? என்ன முட்டாள்தனமான முடிவு இது? சற்றும் யோசிக்காமல், கங்கம், வேங்கி, காஞ்சி நாடுகளுக்கு இரகசிய ஓலை அனுப்பினார். மாளவம் உதவ எப்போதும் சித்தம்தான்.

“துருவருக்கு விஷயம் கசிந்தது. நோய் மிகத் தீவிரமாகப் பரவி விட்ட நிலை. பெருத்த தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார். அவருடைய இரவுகளெல்லாம் உறக்கம் தொலைத்து அடலைக் கடலில் அலைக்கழிந்தன. எப்போதும் மிக்க சிந்தனையில் இருந்தார். என்னவென்று புரியாமல், நாங்கள் நான்கு சகோதரர்களும் விழித்தோம்.

“சிறிய பாட்டனார் நன்னராஜாவின் மகன் சங்கரகணன், தந்தை துருவருக்கு ஆப்தர். அவர் தேவகிரியில் இருந்து புறப்பட்டு வந்து தந்தையோடு பேசினார். தந்தை அவரைக் கலந்தாலோசித்தபின், எங்களையும் அழைத்து நிலைமையை விவரித்தார். அப்போதுதான் எங்களுக்கு விஷயத்தின் தீவிரமே தெரியவந்தது. எங்களுடைய கருத்தையும் கேட்டார். நாங்களோ இளவயதினர். கற்கராஜன் மட்டுமே பெரியவன், நிர்வாகப் பொறுப்பை ஏற்றுப் பழக்கப்பட்டவன். எனக்குக் கையில் வாள் ஏறிவிட்டால், எத்தனை பேர் என் எதிரில் வந்தாலும், நான் ஒருவன்தான், இவர்கள் இத்தனை பேர்கள் என்றெல்லாம் என் மனம் யோசிக்காது. கொஞ்சமும் தயங்காமல், தாமதம் செய்யாமல் புகுந்து புறப்பட்டு விடுவேன். ஆனால், ஸ்தம்பனும், இந்திரனும் அப்படி அல்லரே” - குழந்தையைப் போலச் சிரித்தார் கோவிந்தராஜர்.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...