Sunday, 22 September 2024

21. சுரிதகம்

 

தூரத்தே கூவிக்கொண்டிருந்த மலைச்சாரிகைகளுள் ஒன்று பறக்கும்போது மட்டுமே தெரியும் இறகுகளின் அடிவெண்மையைக் காட்டிக்கொண்டு பறந்துவந்து எதிரே இருந்தே ஒரு செடிமேல் அமர்ந்துகொண்டது. மஞ்சளும் பளபளக்கும் கருமையும் சேர்ந்த உடல், கழுத்துக்குப் பின்னால் மஞ்சள் நிறத்தில் சாமரம் போல இருமடிப்புக்கள், சிவப்பும் மஞ்சளும் கலந்த ஆரத்தி நீரைப்போன்ற அலகு - இழுத்துக்கட்டிய தந்தி அறும்போது எழும் சுண்டிய மேல் ஸ்தாயிக் குரலால் கூவியது.

அதன்குரலால் ஈர்க்கப்பட்ட பிரதாபரின் மௌனம் கலைந்தது. மீண்டும் தொடர்ந்தார், “பிரபூதவர்ஷர் இயல்பு வேறுமாதிரி. இளவயது வேறு. ஆவேசம் மிக்கவர். அதிகம் பேசாதவர். துருவராஜா தவிர்க்க நினைத்த விரிசல், அவருடைய மரணத்துக்குப் பிறகு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டே விட்டது துரதிர்ஷ்டம்தான். அதைத் தீர்க்கும்வரைச் சற்று விறைப்புடன் இருந்தார். பிறகு நடந்ததெல்லாம் உனக்கு அவ்வப்போது சொல்லியிருக்கிறேன். அவர் இருந்ததால், பெரிய அதிர்ச்சி இல்லாமல் துருவராஜாவுடைய மரணத்தை எதிர்கொண்டு விட்ட இரட்டம், அவருடைய மரணத்தால் ஆட்டம் கண்டுவிட்டது. பாவம், அந்தத் துக்கத்தை அனுஷ்டிக்கக்கூட அமோகவர்ஷருக்கு நேரம் இல்லை அப்போது. காட்டாற்று வெள்ளம்போல அடுத்து அடுத்து நிகழ்வுகள் அவரைத் தள்ளிக்கொண்டே போயின”

“பிரபூதவர்ஷ மஹாராஜாவுடைய மரணத்துக்குப் பின் நிகழ்ந்ததைத் தொகுத்து மீண்டும் ஒருமுறை சொல்லுங்களேன். அவை நான் பார்க்க நடந்திருந்தாலும், விஷயம் அறியாத இளவயது எனக்கு. ராஜாங்க நிர்ப்பந்தங்கள் என்னவென்றே தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாதிருந்த வாழ்க்கை என்னுடையது. என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.”

“பெரும் ஆண்மைக்குச் சந்ததியாய்ப் பிறப்பது, பாரம். அதுவும் சிறுவயதிலேயே அந்த ஆண்மையை இழப்பது இன்னும் பெரும்பாரம். ஆனால், அவ்வளவு சுமையையும், அமோகவர்ஷர் சுமந்தார்.”

“அமோகவர்ஷரின் நிலைமையைக் கேட்கவே வேதனையாக இருக்கிறது. நானாக இருந்தால், ஓடிவிட்டிருப்பேன். நீங்கள் சொல்வது சரிதான். பிரம்மாண்ட சாதனையாளர்களுடைய சந்ததிகளாகப் பிறப்பது, சிலசமயங்களில் பெரிய பாரத்தைச் சுமத்தி விடுகிறது. உலகத்துக்கு வேண்டுமானால், ‘ஆஹா! இவருக்குப் புதல்வராக ஜனிப்பதற்கு என்ன தவம் செய்தானோ’ என்று பிரமிப்பும் மரியாதையும் தோன்றலாம். ஆனால், ஒவ்வொரு நாளும், அந்தப் பெருஞ்சான்றோன் விட்டுப்போன வெற்றிடத்தை நிரப்பவேண்டிய கட்டாயத்தையும், அப்படி நிரப்ப முயலும்போதெல்லாம், சென்றவனோடு ஓர் செலவில்லாத ஒப்பீட்டையும் அதே உலகு நம்மேல் திணித்துக் கொண்டே இருக்கும். உலகின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றவேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டு விடுவோம். அதில் சுணக்கமுற்றால், நமக்கு இதுவரை கிடைத்துவந்த பிரமிப்பும் மரியாதையும் ஒரு கணத்தில் தொலைந்துபோகும். ‘அப்படிப்பட்டவருக்கு இவன் எப்படிப் பிறந்தான்’ என்ற இகழ்ச்சிதான் மெல்ல மெல்ல நமக்கு வழங்கப்படும் அடையாளமும் பரிசாகவும் இருக்கும்.

இதையெல்லாம் மீறி நமக்கென்று ஓர் இடத்தைப் பிடிப்பது எத்துணை கடினம்! இயல்பாக எதையும் செய்ய முடியாது. ஒவ்வொரு செய்கையின் முன்னமும், இதைத் தந்தை எப்படிச் செய்திருப்பார், எதைச் செய்தால் அவருடைய தகுதிக்குத் தகுந்ததாக இருக்கும் என்றே சிந்திக்கத் தோன்றுமே தவிர, இதற்கு என்னுடைய உத்தரம் எது, எதைச் செய்தால் இந்த இடர் முற்றிலும் அகலும் என்ற சிந்தனையே தோன்றாது. ஆனால், ஒரு சிலர் தந்தைக்கு ஒரு படி மேலேயே போய்விடுகிறார்கள். கோவிந்தராஜாவே அதற்கு ஒரு சான்று அன்றோ? அப்படிப்பட்ட சான்றுகளும் அவனியில் கிட்டத்தானே செய்கின்றன? எல்லாம் அவரவர்களுடைய இயல்பைப் பொறுத்ததன்றோ? மானுடருக்கு எல்லா விரல்களும் ஒன்று போல இருந்தால், பற்றுவது எத்துணைக் கடினம். அதனால்தான் விரிஞ்சனன் வேறுவேறாக வளரச் செய்திருக்கிறான் போலிருக்கிறது!”

“வாஸ்தவம்தான். கோவிந்தராஜா செய்து காட்டியதை, அமோகவர்ஷரும் செய்து காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பிரம்மாஸ்திரத்தை வரமாகப் பெற்றது போலத்தான். சித்தத்தையும், செய்கையையும் செயலிழக்க வைத்துவிடும் வல்லமை உடையது. சிக்கல்கள் உருவாகலாம் என்று பிரபூதவர்ஷர், ஊகித்திருந்தாலும், அடுத்த இரண்டு வருடங்களில் எல்லாமே அமைதியாக நடந்தன. இனிச் சிக்கல்கள் இரா, பிரபூதவர்ஷரின் பயம், ஆதாரமற்றது என்று நினைக்கும் அளவுக்கு அமைதி நிலவியது. இப்படி ஓர் இருண்டகாலம் வரப்போகிறது என்ற எந்த ஒரு குறியும் இல்லை. சுவர்ணவர்ஷரின் மாயம், எங்கும் பரவிக் கவிந்து, நாட்டை ஸ்திரப்படுத்தி விட்டிருந்தது. சரி, இனிமேல் அமோகவர்ஷர் கவனித்துக் கொள்வார், நாம் கூடவே இருந்துகொண்டிருந்தால், அவர் வளர்வதும் கடினம் என்றெண்ணி கற்கராஜா இலாடத்துக்குச் சென்றதும்தான், மறைந்திருந்த கலிதேவன் மன்றத்துக்கு வந்தான். நீயே அனுபவித்திருக்கிறாய்.”

“ஆம். நாங்களெல்லாரும் மஹாராஜா மறைந்ததால் ஏற்பட்ட கிலேசத்தை மறக்கத் துவங்கிவிட்டிருந்தோம். வருங்காலம் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் துளிர்த்திருந்தது. கார்காலம் முடிந்து, சரத்காலம் துவங்கியதும் அந்தத் தூமகேது தோன்றியதல்லவா? அந்தச் சமயத்தில்தானே அவர் நோய்வாய்ப்பட்டார்? தலையில் இரு கொம்புகள் கொண்ட பூதத்தைப் போல வடக்கு வானில் எழுந்த அந்தத் தூமகேதுவைப் பார்த்து நாட்டில் பரவிய பீதி! அப்பப்பா! நாங்கள் எல்லாம் வெளியே வரவே பயந்தோம். அப்போது தோன்றிய பயம், படிப்படியாக அதிகரித்துக் கொண்டே அல்லவோ போனது? அரசர் மறைவின்போது நாட்டுக்கு எதிர்காலமே கிடையாது என்றுதான் நினைத்தோம்.”

“ஆமாம். அதமகேது எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலதேவனின் சமிக்ஞை அது. இதற்குமுன் அஃது ஒருமுறை கீர்த்திவர்மரின் காலத்திலும் தோன்றியதாம். அவருடைய காஞ்சிப் படையெடுப்பின்போது என்று சொல்வார்கள். விக்கிரமாதித்திய மஹாராஜா நோய்வாய்ப்பட்ட காலமும் அதுதான், சாளுக்கியத்துக்கு எதிராகக் காலடி வைக்க தந்திதுர்க்கரைத் தூண்டிவிட்ட காலமும் அதுதான் என்று ஒரு பண்டிதர் சொன்னார். தூமகேது அரியணைக்குக் கெடுதல் விளைவிக்கும் என்பது நம்மெல்லாருக்கும் தெரிந்ததுதானே? மீண்டும் எழுபஃது, எழுபஃத்தோரு வருடங்களில் அது தோன்றும் என்று அதமகேது கணக்கிட்டு, அப்படித் தோன்றும் சமயத்தில், அரியணையில் இருக்கும் அரசன் வீழ்வான் என்று எதிர்பார்த்தார். அப்படி அவன் வீழும் சமயத்தில், துருவராஜரின் சந்ததியைச் சேர்ந்த எவரும் சிம்மாசனத்தில் அமரக்கூடாது என்று திட்டமிட்டார். அந்த மனோபாவத்தையும் பரப்பி, எதிரிகள் மனத்தில் இராட்டிரக்கூடத்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் விதைத்தார். அவர் கணக்குப் பொய்க்கவில்லை.

“நீ சொன்னதுபோலத் திடீரென்று அந்தப் பைசாச தூமகேதுவைப் பார்த்து அரண்மனையே அரண்டது. அரசரின் சரீரமும் நலிந்தது. அவர் உடல் நலிய நலிய, தினமும் வானில் மின்னிக்கொண்டிருந்த அந்தத் தூமகேதுவைப் பார்க்கப் பார்க்க, எங்கள் எல்லோருடைய மனோபலமும் மிகவும் குன்றித்தான் போனது. ஏதோ பெரிய அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று மரணபயம் எல்லோருக்கும் தொற்றிக் கொண்டது. அதேபோல, அரசரும், அடுத்த வசந்தகாலத்தின் முடிவில் இறந்தார். தூமகேது தன்சக்தியைக் காட்டிவிட்டது. ஆனால், கற்கராஜா, சக்கரவாள மலையைப்போல, எங்களை அரண்போலக் காட்டிக் காத்தார். அவருக்கும் உள்ளே அச்சம்தான். ஆனால், அந்த அச்சத்தையும் மீறிய ஓர் நெஞ்சுரம் அவருக்கு இருந்தது. கலக்கத்தையே கண்ணில் காட்டாத கருங்கல் அவர் முகம். அடுத்த இரண்டு வருடங்களில், தூமகேது கிளப்பிவிட்ட துர்க்கனவுகள், தூசியைப் போலக் காற்றில் அடித்துக்கொண்டு போயின. தேறுதல் அடைந்தோம்.


“அது எவ்வளவு தவறு என்பது, அவர் இலாடத்துக்குத் திரும்பிப்போனதும்தான் தெரியவந்தது. மீண்டும் தேசத்தின் அடிவயிறு கலங்கியது. அந்தக் கலக்கத்துக்கு வலுவைச் சேர்க்கும் விதத்தில் ஒவ்வொரு செயலாக நடந்தது. அச்செயல்கள் பலவற்றை அதமகேதுதான் பின்னின்று இயக்கினார்.

“முதலில், சிவமாறரை மானியகேடத்துக்கு எதிராகக் கிளரத் தூண்டினார். கோவிந்தர் இறந்ததில் இருந்தே, சிவமாறர், வேங்கிக்கு எதிராக நின்ற தம் படைகளைச் சிறிது சிறிதாகத் தலைக்காட்டுக்கு வரவழைத்துக் கொண்டிருந்தார். அதமகேதுவிடமிருந்து தக்க நேரத்துக்கான சமிஞ்ஞைக்குக் காத்திருந்தார். கற்கர் புறப்பட்டதும், அவரில்லாத மான்யகேடம். இதுதான் சரியான சமயம் என்று அதமகேது தூண்டச் சிவமாறர் கங்கத்திலிருந்து இரட்டப்படைகளைத் துரத்தத் துவங்கினார்.

“அடடா! ஆனால், இரட்டத்தைக் காப்பேன் என்று கோவிந்தருக்கு உறுதியல்லவோ அளித்திருந்தார் சிவமாறர்? மீண்டும் உல்லங்கனம் செய்தாரா?”

“கோவிந்தர் இருந்தவரை தான் கொடுத்த வாக்கைப் பரிபாலனம் செய்தாரே? இப்போது சூழ்நிலை வேறல்லவா? வாக்குத் தரப்பட்டவரின் வாழ்க்கைதான் முடிந்துவிட்டதே!

“அதே நேரத்தில், வேங்கியைப் பீமராஜாரிடமிருந்து விடுவிக்க இதுதான் தக்க தருணம் என்று மறைமுகமாக செய்திகளைக் கசியவிட்டு, அப்படி ஓர் எண்ணத்தை நரேந்திர மிருகராஜருக்கும் ஏற்படுத்தினார். இரட்டபாடியை வீழ்த்திச் சாளுக்கியம் என்னும் இன்பப்புதா திறக்குந் தாளுடைய மூர்த்தியாக, அவரைத்தான் அதமகேது கருதியிருந்தார். பலவருடங்களாகக் காத்துக் கொண்டிருந்த விஜயாதித்தியர், சேனைகளுடன் வேங்கிபுரத்தைத் தாக்கினார்.

“அங்கே கங்கத்தில், அதமகேது எதிர்பார்த்தபடி, சிவமாறரின் படையைக் கொளனூர் ஆதோரர் எதிர்த்தார். ஏறகோரி புதல்வர் ஆதோரர் பிரபூத வர்ஷருக்கு வலக்கை போன்றவர். புதல்வருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகக் கோவிந்தராஜா இருத்திவிட்டுப் போன சேனைகளில் ஆதோரராசருடைய சேனையும் ஒன்று. ஆதோரர் படை, கங்கப்படைகளிடம் இருந்து, இரட்ட ஸாம்ராஜ்ஜியத்தின் தெற்கெல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டது. கிழக்கில், வேங்கியைக் காப்பாற்றப் பீமருக்குத் துணை செய்ய யாருமில்லை. வேமுலவாடாவிலிருந்து நரசிம்மராஜா துணைக்கு வந்தாலும், அவருடைய ஒரு படைப்பிரிவு மான்யகேடத்தைக் காப்பதில் முனைந்திருந்ததால், மொத்தப்படையின் துணையும் வேங்கிக்குக் கிட்டவில்லை. இதைவிட உகந்ததொரு வாய்ப்பு மீண்டும் தனக்குக் கிட்டப் போவதில்லை என்று உணர்ந்த நரேந்திரர் பீமரை ஆவேசமாகத் தாக்கினார். இதுவரை தேக்கி வைத்திருந்த குரோதத்தையெல்லாம் வெளிக்காட்டி அவருடைய படைகள் சண்டையிட்டன.”

“வேங்கி அரசை மீண்டும் கைப்பற்ற, நரேந்திர ராஜா எடுத்த முயற்சிகள், சிவமாறரின் கங்கப் படைகளால்தானே முட்டுக்கட்டையைச் சந்தித்து வந்தன? அந்த முட்டுக்கட்டை இல்லாத நிலையால், அடக்கி வைக்கப்பட்டிருந்த வேங்கியின் வீரர்களுக்கு ஒரு உத்வேகம் பிறந்திருக்கும்”

“ஆமாம். அதுதானே அதமகேதுவின் திட்டமும். பீமராஜாவுக்கு வெளியிலிருந்து உதவி இல்லாத நிலைதான் ஆனாலும், இருக்கும் படைகளை வைத்து வலிமையாக எதிர்த்தார். அவருக்கும் இது உயிர்ப்பா, உலைவா என்ற போராட்டம் ஆயிற்றே! இரண்டு மூன்று வருடங்கள் இந்தச் சண்டைகள் நீடித்தன. இருதரப்பிலும் பெருத்த சேதம். உயிரிழந்தவர்கள் ஒரே மண்ணின் மக்கள். இதோ இன்று ஸ்வர்க்கம் என்று நீ பாராட்டுகிறாயே இதே ஊர், ஆங்காங்கே வீரர்கள் மற்றும் விலங்குளின் உடலிலிருந்து ஓடிய குருதி, மாண்டு போனவர்களின் பிரேதங்களால் தடுக்கப்பட்டு, குளப்படிகளில் குளம் குளமாகக் கட்டிக் கொண்டிருந்த ஊர். இறந்தவர்களை வாரி எடுத்துப் படப்பெழுப்பி குவியல் குவியலாகப் பிணங்கள் எரிக்கப்பட்ட ஊர். இந்த ஊரைப்போலவே பல இடங்கள், பிணக்காடுகளாயின. இறுதியில் பீமராஜா பலஹீனமடைந்தார். தலைநகரை விட்டுத் தப்பி ஓடினார். ஓடியவர், துரத்திவந்த படைகளால் கொலையுண்டார். வேங்கி மீண்டும் இரட்டர்களின் தலையீடின்றி முழுக்க முழுக்கச் சாளுக்கியர்களின் கைவசமானது. விஜயாதித்தருடைய நெடுநாளைய கனவு பலித்தது. அவர் நடத்திய நூற்றியெட்டுச் சண்டைகளின் பயனும் கிட்டியது.

“இதுதான் அதமகேதுவின் திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பாகம். இது அவர் எதிர்பார்த்தபடித் துல்லியமாக நடந்தது. ஆனால், அடுத்த பாகம் பொய்த்தது. சிவமாறர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கணக்கிட்டிருந்தவருக்குப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தும் விஷயமாகப் முகுள வம்ச, ஈட்டிக்கொடியை உடைய ஆதோரருடைய பராக்கிரமம் இருந்தது. பலவருடங்கள் சிறைவாழ்வு சிவமாறரைக் கீணித்துவிட்டதோ என்னவோ, கங்கப் படைகள் கொளனூர்ப் படைகளால் தடுக்கப்பட்டுத் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டன. கேகிமுகையூருக்கு அருகே நடந்த சண்டையில் சல்லகேதனரின் படைகளால் சிவமாறர் கொல்லப்பட்டார். கங்கம் இனி வெல்வது கடினம் என்று உறுதியானதும், வெகுண்ட அதமகேது, தான் செறித்து வைத்திருந்த பயங்கர திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தார். அமோகவர்ஷரைக் கொல்லும் உக்திதான் அது. அமோகவர்ஷர் உயிரோடு இருக்கும்வரை இரட்டப் படைகளுக்கு உத்வேகமும் முனைப்பும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும் என்பதால்தான் இந்த உத்தியைத் தான் தோல்வியுறும் பட்சத்தில் நிறைவேற்ற எண்ணியிருந்தவருக்கு, அதை இப்போதே நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“இப்போது இருக்கிறானே ஆளுபராசன் பிருதிவிஸாகரன், இவன், இன்று ஆளுவக்கேடத்திலும், உதயாவரத்திலும் தனக்கு எதிர்ப்பில்லாமல் வளைய வருவதற்குக் காரணம் கோவிந்தராஜா இவனுக்குச் செய்த உதவிதான். இவன் இதை மறக்கவில்லை. அமோகவர்ஷனுக்கு உதவியாகத் தான் இருக்கிறான். ஆனால், இவனுடைய எதிரி, அதமகேதுவோடு சேர்ந்துகொண்டான்.

“பிருதிவிஸாகரனுடைய தந்தை ரணஸாகரனுக்கும், அவனுடைய மாமன் மகன் சித்திரவாஹனனுக்கும் இருந்த பிணக்கைப் பற்றி நினைவிருக்கும் உனக்கு. ஏற்கனவே, சொல்லியிருக்கிறேன். ஸ்தம்பராஜாவோடு சேர்ந்து கொண்டு, கோவிந்தரை எதிர்த்தவர்களில் சித்திரவாஹனனும் ஒருவன். அவரோடு மிக ஆவேசமாகச் சண்டையிட்டவன். அவனைப் பெருங்குஞ்சியில் பெருத்த தோல்வியுறச் செய்து, மொத்த இராச்சியத்தையும் பிடுங்கினார் கோவிந்தர். அவர் வென்றாலும் அந்தப் போரில், அவருக்கு மிக அணுக்கமாக இருந்த குலமுத்தர் காகராசாவைச் சித்திரவாஹனன் கொன்றதால், சித்திரவாஹனுடைய பேரைக் கேட்டாலே கோவிந்தராஜா கொந்தளிப்பார். இந்தத் தோல்விக்குப் பிறகுதான், ரணஸாகரன் கை ஓங்கத் தொடங்கியது. சித்திரவாஹனன் தன் பெருமையையும் படைகளையும் பிரதேசத்தையும் இழந்து, முடிவில், ஒன்றுமே இல்லாமல் சிதறிப்போனான். அவனுக்குப் பிறகு, அவன் புதல்வன் சுவேதவாஹனன் கொஞ்சம் எதிர்ப்பைக் காட்டினான். ரணஸாகரனைக் கொன்றதாகவும் கேள்வி. ஆனால், முடிவில் பிருதிவிஸாகாரனால் கொல்லப்பட்டான். இப்போது சித்திரவாஹனின் வமிசமே ஆளுவக்கேடத்தில் இருந்து ஒதுங்கிவிட்டது.

“அந்தச் சுவேதவாஹனனுக்கு விசுவாசமாகத் தாளகன் என்ற ஒரு தளபதி இருந்தான். அவனை அதமகேது பயன்படுத்திக் கொண்டார். கோவிந்தராஜாவின் மீது அவனுக்கு மஹாவன்மம். அவருடைய குடும்பத்தை அழிக்க உயிரையும் தரச்சித்தமாக இருந்தான். அவனுடைய தலைமையில் ஒரு சாவேறு உருவாக்கி மான்யகேடத்துக்கு வரவழைத்தார். ஸ்புரிதவர்ஷனனும் ஒரு சாவேறுப் படையை ஆயத்தம் செய்தான். கூடவே, சாகிராஜாவின் மேல் வெறுப்போடிருந்த ஸ்தம்பராஜாவின் மகன் சங்கரகணனின் உதவியும் கிட்டியது. இவர்களை வைத்துக் கொலைத் திட்டத்துக்கான ஆயத்தத்தை விரைவுபடுத்தினார் அதமகேது.

“நாளும் குறிக்கப்பட்டது. ஸ்புரிதவர்ஷனுக்கு மான்யகேடத்தின் அரண்மனைக்குள் ஸ்வதந்தரமாகச் சென்று வரும் உரிமை இருந்ததால், கொலைத்தொழிலர்களை அரண்மனைக்குள் ஊடுருவி வைத்திருந்தான். அவர்கள் அமோகவர்ஷரின் காவல் கட்டுப்பாட்டிலேயே பணியில் அமர்ந்திருந்தவர்கள். அவ்வளவு ஆழமாகச் சதி ஊடுருவியிருந்தது. அன்று கிருஷ்ணபட்சத் திரயோதசி. சதிகாரக் காவலர்கள் காவலைத் தளர்த்திவிட்டிருக்க, இன்னொரு குழு உள்ளே வந்து இருளோடு இருளாகப் பதுங்கி இருந்தது. இதற்கான இரகசியத் திட்டங்கள் நர்த்தகி பாக்ஷகாவின் இல்லத்தில்தான் தீட்டப்பட்டன. பாக்ஷகா சாதுரியமான பெண். ஸ்புரிதவர்ஷனைக் காதலித்தவள், தன்னைச் சொந்தமாக்கிக் கொண்டு, மதிப்போடு நடத்துவான் என்று இருந்தவளுக்குத் தன்னை அவன் பலர் மனைகளில் சுரதம் செய்யும் சூறையளாகத்தான் நினைத்திருக்கிறான் என்பதும், தொந்தனைத் துவட்சிக்காகவும், தொய்யல் நுகர்ச்சிக்காகவும் ஒரு வடிகால் போலத்தான் புல்கியிருக்கிறான் என்றும் தெரிந்தபோது நிலை குலைந்தாள். இராட்டிரக் கூடத்தின் அதிர்ஷ்டம், ஒருமுறை இவளாடிய ஒரு நடனத்தின்போது சீலமஹாதேவியின் கவனத்தைக் கவர்ந்ததால், பெரிய மஹாராணி இவளை நினைவில் வைத்திருக்கும் சூழ்நிலை நிகழ்ந்தது. அரசருக்கு ஆபத்து விளைவிக்கும் சதி ஏதோ தன்னுடைய வீட்டில் திட்டமிடப்படுகிறது என்று உணர்ந்தவள், சீலமஹாதேவிக்கே நேரில் விஷயங்களைத் தெரிவித்து விட்டாள். அதிர்ந்துபோன பிருஹத்ராஜமாதா, என்னிடம் சொல்ல, நானும் அத்யந்த விசுவாசிகளான கற்கராஜாவின் மெய்க்காப்பாளர்கள் சிலரும் ஸ்புரிதனுக்குத் தெரியாமல் அரண்மனையில் காத்திருந்தோம். அன்று அந்தச் சதியை முறியடிக்கவும் செய்தோம்.

“அரண்மனையைச் சுற்றிப் பதுங்கி இருந்த கொலையாளிகளைக் கண்டுபிடித்துச் சித்திரவதை செய்ததும், எல்லா உண்மைகளும் வெளிவந்தன. சதி நிரூபணம் ஆனவுடன், அப்போதே, பாக்ஷகாவின் இல்லத்துக்குப் போய், அங்கே பதுங்கியிருந்த தாளகனைக்  கண்டுபிடித்து, அவனை அப்போதே கொன்றோம். இந்தக் கையால்தான் அவன் உயிர் போயிற்று”

பழைய நினைப்பு எழ, ஒருகணம் பிரதாபரின் உடல் உறைந்தது. கண்களை மூடி, நீண்ட மூச்சு விட்டார். விநயனும் பேச்செழாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றான்.

கொலையாளிகளை விசாரணை செய்யும்போதுதான் அரசருக்கு எதிராகச் சதி நகரெங்கும் எப்படி ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதும் பல பஞ்சமஹாசப்தர்கள் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. அதிர்ந்து போனோம். தெரிந்ததே இவ்வளவு அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால், தெரியாமல் மறைந்த பகுதி எவ்வளவு பூதாகரமாக வளர்ந்து இருக்கும்! இனி கடக்கத்தில் இருப்பது ஆபத்து என்று புரிந்தது. உடனே, சில குதிரை வீரர்களை அழைத்துக் கற்கரை உடனே இலாடத்திலிருந்து படையோடு புறப்பட்டு வரச்சொல்லி செய்தி அனுப்பினோம். இம்மாதிரி அனர்த்தங்கள் நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முன்னமேயே கற்கராஜா ஏற்பாடுகள் செய்துவிட்டுப் போயிருந்தார். அதன்படி, பிருஹத் ராஜமாதா, ராஜமாதா காமுண்டப்பாயிதேவி, இளவரசிகள், குழந்தைகள் என்று அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களை எல்லாம் இரவோடு இரவாக அரண்மனையில் இருந்து வெளியேற்றினோம். எதிரிகள் அமோகரைத்தான் முதலில் குறிவைப்பார்கள் என்பதால், அவரைத் தனியாகக் காவலுடன் ஒரு வண்டியில் ஏற்றினோம். இற்செறித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய சிறுபிராய மனைவியை, அவருடைய பெற்றோர்களுடன் நானும், அமாத்தியரும் போய் அழைத்துவந்தோம். செல்வங்களை எல்லாம் அரண்மனையிலேயே விட்டுவிட்டுப் பொதுமக்கள் போல உடையணிந்து கொண்டு சென்றோம். படைவீரர்களும் வழிப்போக்கர்கள் போலத்தான் கூடவே வந்தார்கள். எல்லாம் இரவுக்குள் நடத்தி முடித்துவிட்டோம். யாரை நம்புவது, யார் எதிரிகள் என்று தெரியாததால், இந்த வெளியேற்றத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோருமே சேர்ந்தே இருந்தோம். ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்துக் கொண்டோம். என்னைப் பிரதம அமாத்தியர் நம்பவில்லை. நான் அவரை நம்பவில்லை. கற்கனுடைய தளபதி ஆம்படன் எங்கள் இருவரையுமே நம்பவில்லை. கொடுமையான பயணம் அது.” பெருமூச்செறிந்தார் பிரதாபர்.

“தேவதேவா! தலைமை என்பது போய்விட்டால், நாமெல்லாம் விலங்குகள் போலத்தான் ஆகி விடுவோமோ? சுயமாக நெல்லிக்காய்கள் ஒன்று சேர்வதில்லை. அவை கட்டுக்கோப்பாக இருக்கின்றன என்றால், அது பொதியின் வலிமையையும், அப்பொதியைக் கட்டுகயிற்றையும்தான் பொறுத்திருக்கிறது, அல்லவா? உங்கள் பெற்றோர்கள்?

“சமுதாயம் தானாக ஒன்று சேர்வது கடினம், விநயா. சில உதிரி மனிதர்கள் வேண்டுமானால் அன்பு, நெறி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உள்மனத்துக் கோடல், புகழ் இவற்றால் உந்தப்பட்டுச் சிறுசிறு குழுக்களாகச் சேரலாம். ஒரு பெரிய கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டுமானால், ஒரு வலுவான தலைமை வேண்டும். அந்தத் தலைமையும் பயம், ஆசை இவை போன்றவற்றை சமுதாயம் நம்பும் அளவுக்கு ஊட்டத் திறமை படைத்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் சொன்னபடிச் செய்யும் ஒரு செயற்குழுவை ஒருங்கிணைக்க முடியும். இல்லையென்றால் சிதறு சிவைதான். என் பெற்றோர்களைப் பற்றிக் கேட்டாய். உத்தராபத நெடும்பயணம் அவர்களைப் பலவீனமாக்கி விட்டிருந்தது. பிரபூத வர்ஷர் அரியணை ஏற்ற சில வருடங்களில் இருவரும் அடுத்து அடுத்துத் தேகாந்தம் அடைந்து விட்டார்கள். நானும் என் மனைவி கணபாம்பாவும்தான். இருவரும் சேர்ந்துதான் வெளியேறினோம்.

“அடுத்தநாள் காலையில்தான் அரண்மனையில் அரசர் இல்லை, அரசக் குடும்பத்தினர் எல்லோரும் இரவோடு இரவாக வெளியேறி விட்டார்கள் என்ற செய்தி பரவியதோ? என் தாய் பதைபதைத்து ஓடி வந்தது எனக்கு எப்போதும் மறக்காது. அன்று ஊரே உல்லோலகல்லோலப் பட்டது. மான்யகேடம் காக்கும் கரங்கள் இல்லாமல், நிர்க்கதியாக கயவர்கள் வீதியில் ஆடையிழந்து கிடந்த அபலைப் பெண்ணைப்போலத் தோன்றியது எனக்கு. அவரவர்கள் கிடைத்ததைக் கையில் எடுத்துக்கொண்டு சிதறி ஓடினார்கள்.”


“அன்று ஜனங்களுக்கு ஏற்பட்ட அவதி, இரட்ட வம்சத்தின்மீது படிந்த அழிக்க முடியாத கறை. நாங்கள் செய்ததும் சிலாக்கியமானது அன்று. எந்த அரசர் குடிகளை நிர்க்கதியாக விட்டுவிட்டு ஓடுவார்? ஆனால், வேறு வழி தெரியவில்லை எங்களுக்கு. யாரை வைத்துக்கொண்டு நகரத்தைக் காப்பது? எங்களுக்கே ஒருவர்மீது ஒருவருக்குப் பரஸ்பர நம்பிக்கை இல்லை. அமோகவர்ஷர் இப்படி ஓடுவதற்கு, ஒப்புக் கொள்ளவில்லைதான். ஆனால், அவர் சொல்வதை யார் கேட்டார்கள்? கற்கராஜா இந்த அசம்பாவிதம் ஏற்படலாம் என்று முன்னமே சிந்தித்து, எங்களிடம் கொடுத்திருந்த திட்டத்தைத்தான் நிறைவேற்றினோம். இப்படிக் கட்டாயமாகச் செய்வம் என்று அமோகர் உட்பட நாங்கள் அனைவரும் அவருக்கு, அவர் இலாடத்துக்குத் திரும்பிச் செல்லும்போது உறுதிமொழி கொடுத்திருந்தோம். ஆனால், அப்போது, இப்படியெல்லாம் நிஜமாகவே நடக்கும் என்று நாங்கள் யாரும் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் எதிர்பார்த்திருந்தார் என்று பிறகு தோன்றியது எங்களுக்கு. அதனால்தான் என்னவோ, அவர் எங்களைக் கட்டாயப்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். தீர்க்கதரிசி அவர்!

“எங்களுக்குள்ளும் நம்பிக்கைக்குப் பங்கம் வரும் என்று அவர் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். இது எல்லோருக்கும் புதிது. அரண்மனைச் சுவர்களை விட்டு ஒதுங்கியும், தூண்களை அணுகாமலும், கதவுகளை எட்ட இருந்து கம்பால் திறந்தும் பதுங்கிப் பதுங்கிச் சுற்றும் முற்றும் மறைவிடத்தில் இருந்து யாராவது தாக்குகிறார்களா, அம்புகள் வருகின்றனவா என்று பார்த்துக்கொண்டும், அடிக்கொருதடவை சுயமாகச் சுலவிச் சுலவிக் கொண்டு ஒருவரை ஒருவர் கண்காணித்தபடியே கூட்டமாக நகர்ந்தோம். அடிப்படை ஜீவ ஆதாரத்தையே ஆட்டிவைத்த தருணம் அது. யார் ஸ்புரிதவர்ஷனுக்கு ஸஹ்ருதயர்கள் என்று யாருக்குத் தெரியும்?

ஸ்புரிதவர்ஷன் கிடைக்கவில்லையா?

ற்கராஜா வந்தபிறகு, அவருடைய கைவாளினால் கொலையுண்டான். அது பின்னால் நடந்தகதை

நீங்கள் எல்லாம் எங்குத் தப்பித்துச் சென்றீர்கள்?”

காந்தாரபுரம். கற்கராஜா இலாடத்துக்குச் சென்றபோது, ஆங்காங்கே அரணும் பாதுகாப்பும் உடைய சில இடங்களை ஏற்படுத்திவைத்து அங்கே சில படைகளையும் நிறுத்தி வைத்துச் சென்றிருந்தார். காந்தாரபுரம் அவற்றில் ஒன்று. வெண்ணா இராட்டிரக்கூடன் என்பவன் அங்கே சிற்றரசன். இவன் குடும்பத்தினர் முதலில் மார்க்கண்டேய நதி தீரத்தில் காகதியில் அருகே வசித்து வந்தார்கள். காகதியில் வசித்ததால், காகதீசர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வார்கள். இவர்கள் நந்திமலைக் கங்கராஜா நிபதேஜாவின் காலத்திலிருந்தே அவர்களுக்கு அணுக்கமானவர்கள். நிபதேஜாவின் குமாரர், ஜயதேஜாதான் இந்திரராஜாவின் புதல்வி ரத்னவல்லி கட்டிய பரமேஸ்வரர் கோவிலுக்கு நிலங்கள் கொடுத்தது. சொல்லியிருக்கிறேனா?”

“அந்த ஈஸ்வரதாஸக் காளாமுகர் குருவுக்காக என்று ஒருமுறை சொன்னீர்கள்”

“அதேதான். காகராசா குலமுத்தன் பேர்க்குஞ்ஜியில் சித்திரவாஹனன் கையால் மரித்தான் என்றேன் அல்லவா? அப்போது, இராட்டிரக்கூடப் படைகள் தொய்ய, வெண்ணா நிருபன்தான் தன் படைகளோடு முன்னணிக்கு வந்து வீரமாகப் போரிட்டு, ஆளுபர்களைப் பின்னுக்குத் தள்ளினான். இவன் செய்த சண்டையைப் பார்த்து, மீண்டும் உற்சாகமடைந்த இரட்டச் சேனை, இறுதியில் வெற்றியும் பெற்றது. ஸ்தம்பருடைய கிளர்ச்சியின் போது, இவனும் இவன் தந்தையும் கோவிந்தருடைய அணியில் இருந்தார்கள். சாரு பொன்னேரனுக்கு எதிரான போரில் இவர்களுடைய படையும் ஈடுபட்டது. கோவிந்தருக்கு மிகவும் பிரியமானவன். இவனுக்காகக் காந்தாரபுரத்தில் ஒரு சிற்றரசையே ஏற்படுத்தி, அங்கே இருத்திவைத்திருந்தார் பிரபூதவர்ஷர். அதற்குப்பிறகு அவன், தன்னை வெண்ணா இராட்டிரக்கூடன் என்றே அழைத்துக்கொள்ளத் துவங்கிவிட்டான். அவனுடைய மகனுக்கும் குண்டண்ணா இராட்டிரக்கூடன் என்றே பெயர் சூட்டியிருந்தான்.

“அங்கே ஒரு சிறு கோட்டையும் நிர்மாணித்திருந்தான் இவன். அங்குத்தான் சென்று தங்கினோம். ஒரு சிறு பயம் மட்டும் இருந்தது. காந்தாரபுரம் இலாட்டலூர் விஷயத்துக்கு அடங்கியது. ஸ்புரிதன் இலாட்டலூர் விஷயாதிபதி. வெண்ணாவை நம்ப முடியுமா என்ற அச்சம்தான். எச்சரிக்கையுடன்தான் சென்றோம். ஆனால் ஸ்புரிதவர்ஷனுடைய கயமைத்தனம் எல்லாம் மண்ணைக் கடக்கத்தைச் சுற்றித்தான் இருந்தது. வெளியே யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அப்பழுக்கற்ற இராட்டிரக்கூடனாகத்தான் மக்களிடையே வளையவந்து, நிர்வாகம் செய்து கொண்டிருந்திருக்கிறான். கற்கராஜா வரும்வரை அங்கேயே பாதுகாப்பாக இருந்தோம்.”

“கற்கராஜா எப்போது வந்தார்?”

“கற்கராஜா வருவதற்குப் பல திங்கள்கள் ஆயின. அவர் தன் வரவையும் இரகசியமாகவே வைத்திருந்தார். ஒரு பெரும்படையாக வராமல், சிறுசிறு படைகளாக, யாருக்கும் தெரியாமல் மானியகேடத்துக்கு அனுப்பி ஆங்காங்கே நிற்கவைத்தார். 


"அவர் உடனேயே திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்தவர்களில் நல்லவர்களும் உண்டு, நல்லவர்கள் போர்வையில் கரந்துறைந்து கொண்டிருந்த தீயவர்களும் உண்டு. அவர் வருவது தாமதிக்கவே நல்லவர்கள் நம்பிக்கை இழந்து ஒதுங்கித் தலைமறைவானார்கள். தீயவர்கள் தைரியத்தோடு வெளியே வந்து உலவினார்கள். இனிக் கற்கன் வரமாட்டான், தங்களை எதிர்க்க யாரும் இல்லை என்ற எண்ணம் மேலிடத் தறிகெட்டார்கள். அந்தச் சமயத்தில் நடந்த அட்டூழியங்களைச் சொல்லி முடியாது. தலைநகரெங்கும் ஊடுருவியிருந்த கற்கரின் ஒற்றர்கள் எல்லா நிகழ்ச்சிகளையும், யார் யார் காரணமானவர்கள் என்று விவரமாகக் கற்கருக்குச் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இது எங்களுக்கே தெரியாது. நாங்களும் எப்போது கற்கர் வரப்போகிறாரோ என்று எதிர்நோக்கி நோக்கிக் களைத்து விட்டிருந்தோம். மான்யகேடத்து நிலைமை என்ன என்றே எங்களுக்குத் தெரியாது.”

“இந்தச் சமயத்தில்தான் நான் வனாந்தரம் வனாந்தரமாகச் சுற்றிக் கொண்டிருந்தேன் போலிருக்கிறது. இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. ஸாம்ராஜ்ஜிசியத்தின் அப்போதைய அவதி என்னவென்று இப்போதுதான் நீங்கள் சொல்லப் புரிகிறது. மானியகேடத்தில் அராஜக நிலைமை. அங்கே வேங்கி, விஜயாதித்தியர் வசம். தெற்கே கொளனூரார் மட்டும் தனிஆளாகக் கங்கம் கையை விட்டுப் போகாமல், தடுத்துப் பொருதுகொண்டு இருந்திருக்கிறார். கற்கராஜாவுக்கு ஏன் தாமதமானது என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. அவரால் மானிய கேடத்தில் யாரையுமே நம்பமுடியாது. புதிதாகப் படையை உருவாக்க வேண்டும். எதிரிகளை வீழ்த்தி மானியகேடத்தையே கைப்பற்றும் அளவுக்கு அது வலிமையுடையதாகவும் இருக்கவேண்டும். அவருக்கு ஒரே ஒரு வாய்ப்புத்தான் கிட்டும். அந்தப் போரில் அவர் தோற்றால், அவ்வளவுதான், இரட்டத்தின் கதை முடிந்தது. அல்லவா?”

“ஆமாம். அவசர கதியில் எதையும் செய்திருக்க முடியாது. எதிர்பார்ப்பில் எங்களுடைய நாட்கள் கழிந்தன. திடீரென்று ஒருநாள் எங்களை மானியகேடத்துக்கு அழைத்துச் செல்ல ஒரு படைவந்தது. அன்றுதான் எங்களுக்குக் கற்கராஜருடைய விசுவரூபம் தெரிந்தது. அவருடைய தலைமையில் ஏற்கனவே மானியகேடம் முற்றுகையிடப் பட்டிருந்தது. நாங்கள் தலைநகர் போய்ச் சேருவதற்குள், அவர் கோட்டையை உடைத்து, உள்ளே புகுந்து அரண்மனையையும் நிர்வாகத்தையும் கைப்பற்றியிருந்தார். யார் யார் அராஜகம் செய்திருந்தார்களோ அவர்கள் எல்லாம் ஒன்று சிறையில் இருந்தார்கள். அல்லது கொல்லப்பட்டிருந்தார்கள். தலைமறைவாகக் கிடந்த இராட்டிரக்கூடத்து இதத்தினர்கள் எல்லாம் வெளிப்பட்டு நகரத்தை ஒழுங்கு படுத்துவதில் ஈடுபட்டிருந்தார்கள். ஓடிப்போன குடும்பங்களும் ஒன்றொன்றாகத் திரும்பிகொண்டிருந்தன. அரியணை அமோகவர்ஷருக்காகக் காத்துக்கிடந்தது. கற்கராஜர் வருவதற்குத் தாமதமானாலும், வலிமையாகத் திரும்பிவந்தார். ஏன் தாமதம் செய்தார் என்பதற்கும் காரணம் தெரிந்தது. அவர் தாமதித்ததால்தான், கரந்துகிடந்த கயவர்களின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. அதமகேது, ஆசிரமத்தை அழித்துவிட்டு ஓடிவிட்டிருந்தார். கிட்டத்தட்ட பழைய மானியகேடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.”

“அடேயப்பா! இந்தக் கற்கர் சுவர்ணவர்ஷர், வாஸ்தவத்தில் தங்கப் பொழிவுதான்! இவருக்கு அரியணையைத் தத்தம் செய்துவிட்டு அமோகவர்ஷர் விலக நினைத்ததில் ஆச்சரியமே இல்லை. என்ன ஒரு செயல்திறன்! என்ன ஒரு பற்றற்ற மனோபாவம்! இப்படிப்பட்ட ஓர் அரசர் இவர் என்று யார் நினைத்திருப்பார்கள்!”

“ஆமாம். கூடவே இருந்த எனக்கும் இவருடைய மகிமை அப்போதுதான் தெரிந்தது. ஏன் கோவிந்தராஜாவும், இவருடைய ஆற்றல் தனக்கில்லையே என்று பொறாமைப் பட்டார் என்றும் அன்றைக்குப் புரிந்தது. இத்தனையும் அவருக்குப் பெரிய வயதில்லை. அசாதாரணமான அரசர்.”

“அடடா! இராட்டிரக்கூடம் பேறு பெற்ற சாம்ராச்சியம்! வேங்கியும் கங்கமும் என்ன ஆனது?”

இராட்டிரக்கூடப் பேரரசு வேங்கியை இழந்தது காஞ்சியின் நட்பையும் இழந்திருந்தது. பல்லவமல்லருடைய மரணத்துக்குப் பிறகே, துண்டகததுக்கும் இரட்டத்துக்கும் விரிசல் விழத் துவங்கியிருந்தது. தந்திவர்மப் பல்லவனுக்கும், பிரபூதவர்ஷருக்கும் முதலிலிருந்தே ஒத்துப் போகவில்லை. ஸ்தம்பருக்குத் துணையாக நின்றவர்களில் தந்திவர்மனும் ஒருவன் அல்லவா? ஸ்தம்பரும் கோவிந்தரும் சமரசமாகப் போனபிறகாவது காற்றடிக்கும் திசையைக் கணித்திருக்க வேண்டாமா? தந்திவர்மன் இகந்தான். இரட்டத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்தினான். அவன் வழிக்கு வருவான் என்று காத்திருந்த கோவிந்தராஜா, பொறுமையிழந்தார். காஞ்சியைத் தாக்கினார். காஞ்சிக்குப் பாணர்களின் துணையின் அவசியத்தைப் புரிந்துகொண்ட அவர், பாணர்களைத் தந்திவர்மனிடம் இருந்து பிரித்தார். அப்போதுதான், இந்திரராஜாவின் புதல்வி மாணிக்க அப்பாயியை, மகாபலி வாணராய ஜயமேருவுக்குத் திருமணம் செய்துகொடுத்து, இரட்டக்குடும்பத்தில் ஒருவனாக ஸ்வீகரித்துக் கொண்டார். காஞ்சியைப் பலமாகத் தாக்கித் தந்திவர்மனை அடக்கினார். அதற்குப்பிறகு, திறையைத் தந்திவர்மனே கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று நியமித்தார். சில சமயம் எங்காவது கிரீடைக்கோ, கேளிக்கைக்கோ சென்றிருந்தாலும் அங்கே வந்து கொடுக்கச் சொல்வார். இங்கே துங்கபத்திரைக்கருக்கே ராமேஸ்வர தீர்த்தம் இருக்கிறதல்லவா, அங்கே அவருடன் நான் ஒருமுறை சென்றிருந்தேன். தந்திவர்மன் அங்கேயே வந்து திறை கொடுத்தான். ‘அவருடையதுதான், இருந்தாலும், ஈதா, வைத்துக்கொள் என்று பல்லவனுக்குத் தூக்கிக் கொடுத்த தன் செல்வத்தை, மீண்டும் முற்றிலும் தன் பக்கமே ஈர்த்துக் கொண்டார்’ என்றல்லவா அவருடைய மெய்கீர்த்தி புகழ் பாடியது!”

“நல்ல வேடிக்கை”

“அப்படி அடங்கி இருந்தவனுக்குக் கோவிந்தராஜா இல்லாமற்போனது பெரும் நிவிர்த்தி. இரட்டத்தோடு உறவை உடனே துண்டித்துக்கொண்டான். ஆனால், பாணர்களின் விசுவாசம், பல்லவமல்லருக்குக் கிட்டியது போல இவனுக்குக் கிட்டவில்லை. இராட்டிரக்கூடம் கொந்தளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் காஞ்சியும் கொந்தளிக்கத் துவங்கியது. கொளுத்திவைத்தவன் பொத்தாப்பிச் சோழன் ஸ்ரீகண்டன். மானாபரணப் பாண்டியனின் மருகன். அதுவரை இரட்டத்தின் அனுசரணை இருப்பதால், காஞ்சிக்கு மதிப்பு கொடுத்துவந்த பாண்டியர்கள், பிரபூதராஜா சென்ற செய்தி அறிந்ததும் காஞ்சிக்கு வலை பின்னத்தொடங்கினார்கள். மானாபரணன் மாறவர்மன் பாண்டியனின் பெயரன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் அப்போதுதான் ஆட்சிக்கு வந்திருந்தான். அவன் தெற்குப் பக்கம் தாக்க, வெகு எளிதாக ஸ்ரீகண்டன் காஞ்சியைக் கைப்பற்றினான். தந்திவர்மனுக்குக் கச்சிப்பேட்டை விட்டு ஓடும்படி ஆயிற்று. இன்றுவரை அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.”

“அதைத்தான் அன்று காஞ்சியில் இருந்து வந்திருந்த வணிகர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள், இல்லையா? எவ்வளவு சிரமப்பட்டுப் பல்லவமல்லர் காஞ்சியைத் தூக்கி நிறுத்தினார். இவ்வளவு விரைவில் இப்படிக் கீணம் அடைந்து விட்டது! கங்கத்தின் நிலை என்னவாயிற்று?”

“மான்யகேடத்தைக் காப்பாற்றத் துணைவேண்டும் என்று மூலப்படைகளைத் தலைநகரத்துக்கு வரவழைத்துவிட்டார் கற்கர். அவை வடக்கு நோக்கி வந்ததும், கங்க விஜயாதித்தியனின் குமாரன் சத்யவாக்கிய ராஜமல்லன் கங்கவாடி ஆறாயிரத்தைக் கைப்பற்றி விட்டான். நொளம்பராஜன் சாருபொன்னேறனும் சத்யவாக்கியன் பக்கம் சாய்ந்துவிட்டதாகக் கேள்வி. இரட்டத்தின் வீச்சு கங்கமண்டலத்தின் மீதும், நொளம்பவாடியின் மீதும் பலவீனமாகிவிட்டதாகத்தான் தெரிகிறது. 

“சிவமாறரின் மூத்த தனயன் மாரசிம்ஹன் அவருக்கு முன்னாலேயே காலமாகிவிட்டான். சிவமாறர் கொலையுண்டதும், அவருடைய இளையமகன் பிருத்திவிபதியும் கங்கமண்டலத்தைத் தனக்குரியதாக ஆக்கிக்கொள்ள நினைத்தான். சிவமாற விஜயாதித்திய சகோதரர்களிடையே இருந்த பரஸ்பர விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, அவர்களுடைய புதல்வர்களுக்கும் இருக்கவேண்டுமா என்ன? இருவரும் முரண்டு கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். அதனால்தான், மான்யகேடமும் பிழைத்திருக்கிறது. பிருத்திவிபதி, கங்கத்தின் வெகு நாளைய எதிரிகளான பாணர்களோடு இழைகிறான். பாணர்களும் பிருத்திவிபதியும் ஓரணி. நொளம்பர்களும் ராஜமல்லனும் ஓரணி. கங்கம் இவர்களிடையே அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறது. பாணர்களும் இரட்டத்தின் சொல்லைக் கேட்பார்கள் என்று தோன்றவில்லை.” 

“எவ்வளவு குழப்பமான சூழ்நிலை! இராட்டிரக்கூட சாம்ராச்சியமே இரண்டே வருடங்களில் சிதறுண்டதோ”

“சாம்ராச்சியம் பறிபோனதைப் பற்றியெல்லாம் கற்கராஜா சிந்திக்கவே இல்லை. அவருடைய கவலையெல்லாம் அமோகரையும் ராஜகுடும்பத்தையும் காப்பதிலும், அவர்களுக்காகக் தலைநகரைக் காத்து, இரட்டபாடி அரியணையில் அமோகவர்ஷரை அமர்த்துவதிலும்தான் இருந்தது”

“ஆஹா! இந்தக் கவலைக்குக் காரணம் வேங்கியின் நரேந்திர மிருகராஜா மட்டுந்தான், இல்லையா? இப்போதைக்கு இராட்டிரக் கூடத்தின் ஒரே வலுவான எதிரி அவர்தான். மானியகேடத்தைக் கைப்பற்ற ஆயத்தங்கள் வேறு செய்து கொண்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக இராட்டிரக்கூடத்தின் மீது குறிவைப்பவர்களும் யாருமில்லை. காஞ்சி கலைந்துவிட்டது. கங்கம் கவைப்பட்டு நிற்கிறது. எப்படி நிலைமை மாறிவிட்டது!”

“ஆமாம். பைசாசத் தூமகேது தன் வேலையைக் காட்டி விட்டது என்றுதான் சொல்லவேண்டும். வேங்கி மட்டுந்தான் மானியக்கேடத்துக்கு இடர் விளைவிக்கக்கூடிய ஆற்றல் உடையதாக இருந்தது. இரட்டபாடி தன்னுடைய அஸ்திவாரத்தைச் செப்பனிட முயன்றுகொண்டிருந்த இந்த நான்கைந்து வருடங்களில், விஜயாதித்தியர் தன்னுடைய நிலைமையை நிலைநிறுத்திக் கொண்டார். வெற்றியோடு வெற்றியாக வேமுலவாடாவையும் தாக்கி அதைக் கைப்பற்றினார். நரசிம்மனைச் சிறைவைத்தார். அடுத்து மானியகேடத்துக்குக் குறிவைத்தார்.

ஆனால், படை பலத்தில் இரட்டர்களின் சேனை, வேங்கியை விட கிட்டத்தட்ட இரண்டு பங்கு பெரியது. பீமராஜருடன் நிகழ்த்திய சண்டைகளால், வேங்கிப் படை கலகலத்துப் போயிருந்த சமயம் வேறு. தலைமையை ஒப்பிட்டால், கற்கர் ஐந்தாறு வருடங்கள் இளையவர். இருவரும் நேரெதிர் பொருதால், கற்கர்தான் வெல்வார் என்பதற்கு ஐயமே இல்லை. இது கற்கருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க நினைத்தார். வருங்காலத்தில், வேங்கியோடு இணக்கமாக இருப்பதுதான் நன்மை பயக்குமென்று நம்பினார். ஒருமுறை தம்பியுடன் பேசிப்பார்க்கச் சொல்லி சீலமஹாராணியை வணங்கிக் கேட்டுக்கொண்டார்.”

“பீமராஜாவின் பிணக்குக்காக அவர் தூது சென்றபோதே, தமக்கையின் வேண்டுகோளுக்குத் தம்பி செவி சாய்க்கவில்லையே?”

“ஆமாம். ஆனால், அன்றைய நிலைமை வேறு. அவருடைய சொந்த வீட்டுச் சிக்கல் அது. தம்பிக்குத் தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இது இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள அரில் மறில் அன்றோ? என்னையும் கொளனூர் சிற்றரசரையும் மஹாராணியோடு அனுப்பினார். அப்போது வேங்கிப்படைகள், மானியகேடத்திலிருந்து ஒரு பட்சப் பயணத்தில் இருந்தன. சாந்திக்கொடி ஏந்தி, ஒரு சிறுபடையுடன் சென்றோம். முதலில் சந்திக்கவே மறுத்துவிட்டார். ராஜமாதா விடவில்லை. வலியுறுத்திச் சந்திப்புக்குச் சம்மதிக்க வைத்தார். அபாரமாகப் பேசினார். என்னோடு வளர்ந்தவர்தாம். ஆனால், பொறுப்பு என்று வந்துவிட்டால், நாம் எப்படி வளர்ந்துவிடுகிறோம் என்பதற்கு அவர் ஒரு சான்று என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யும் அளவுக்குச் சாதுரியமும், விவேகமும், சாந்தமும், உறுதியும் அவருடைய சொல்லிலும், செயலிலும் இருந்தன.

“’தம்பியின் பேரில் உள்ள கோபத்தை, இரட்டத்தின் மீது ஏன் காட்டுகிறாய், உன் தனிப்பட்ட காழ்ப்புக்காகவும், மன்மத்துக்காகவும், மக்களைப் பலி கொடுக்க நினைப்பாயோ? பீமனும் நீயும் இருவருமே எனக்குச் சகோதரர்கள். இருவரில் நான் எப்படி ஒருவருக்கு மட்டும் பாரபட்சமாக நடந்திருப்பேன்? உங்கள் இருவருக்கும் இடையே உள்ள விரோதம், இன்று பீமனின் உயிரிழப்புவரை சென்றுவிட்டது. இது உனக்குத் திருப்தி அளித்திருந்தால், அது திருப்திதான். அது சரியா தவறா என்றெல்லாம் நான் மதிப்பிட்டு என்ன ஆகப்போகிறது? துன்பப்பட்டுக் கொண்டிருந்தவன் நீ. நீ கேட்கலாம், ‘இன்று பீமனின் உயிரிழப்பைப் பேசுகிறாய். எனக்கும் அந்த ஆபத்து இருந்ததல்லவா’ என்று. நூற்றுக்கு மேல் போர்கள் செய்தும், வலிய இரட்டப்படைகள் உன்மேல் தம்முடைய மொத்த வலிமையை என்றாவது காட்டியிருக்கின்றனவா? தற்காப்புக்காக மட்டுமே உன்னை எதிர்க்கவேண்டும். உன் சரீரத்துக்கு ஒரு பங்கமும் வரக்கூடாது என்று கடுமையாகக் கட்டளை இட்டிருந்தார் பிரபூதவர்ஷர். நீயிட்ட சண்டைகளின் போது, அவருடைய சைனியங்கள் எதிர்த்தவிதத்தில் இருந்து உனக்கு இது தோன்றாமல் இருந்திருக்காது. இரட்டம் வேங்கியைத் தன் வைரியாக எப்போதும் நினைத்ததில்லை. அப்படி அது நினைத்திருந்தால், சிவமாறரையும், பிரதிஹாரர்களையும் அடக்கிய அரசு, நடந்து கொண்டிருக்கக் கூடிய முறையே வேறு. அதுவும் உனக்குத் தெரியும். இன்று நீ உன் வலிமையை நிலைநிறுத்தி விட்டாய். உனக்கு முள்ளாக இருந்த முரணை முடித்துவைத்து விட்டாய். இனிமேலும் அந்த வன்மத்தை உயிர்ப்பித்து வைத்துக்கொள்வதின் பலனென்ன? இந்தச் சமயத்தில், இரட்டத்தை நீ இகப்பது ஏன் என்று நன்றாக யோசித்துப்பார்.’ என்றார்.

“ஆற்றலிலும், அறிவிலும், அகவையிலும் பெரியவர்களாக இருந்தபோதிலும், துருவரின் குமாரர்கள் அனைவரும், தந்தையின் சிறுபிராய மனைவியான தன்னை எப்படி மதித்து, ராஜமாதாவாக ஸ்வீகரித்துக் கொண்டார்கள், தன் பெயரையே இந்திரராஜா, எப்படித் தன்னுடைய மகளுக்கு வைத்தார், என்றெல்லாம் எடுத்துக்காட்டி, வேங்கியின் மீது ஆதிக்கம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இரட்டத்துக்கு அறவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசினார்.

“இறுதியில் ஒரு பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தார். இது எங்களுக்கே அப்போதுதான் தெரியும். ‘கற்கன், வேங்கியோடு நல்ல உறவைத்தான் விரும்புகிறான். அதற்கு நிரூபணமாகத் தன்னுடைய சகோதரி, சீலாவை, உன் குமாரன் விஷ்ணுவுக்குத் திருமணம் செய்து வைக்கச் சித்தமாக இருக்கிறான். நீ விரும்பினால். நல்ல குணவதி அவள். நான் பார்த்துப் பிறந்து வளர்ந்தபெண். விஷ்ணுவுக்கு எல்லாவகையிலும் பொருத்தமானவள். நீயாக முடிவு சொல்லாதே, மஹாதேவியைக் கேட்டுக் கலந்துகொண்டு காலையில் சொல். பிறகு என்ன நடக்கவேண்டுமோ அது நடக்கட்டும்’ என்றார். விஜயாதித்தியர் சற்றுத் தடுமாறித்தான் போனார். ஆதோரரும் நானும் மட்டும் அன்று இரவு உறக்கம் வராமல், ஒருவேளை விஜயாதித்தியர் மறுத்துவிட்டால், அடுத்துச் செய்ய வண்டியது என்ன என்பதைப் பற்றி, எங்களுக்குள்ளே விவாதித்துக்கொண்டே இரவைக் கழித்தோம்.”

“என்ன சாதுரியமான பிரஸ்தாபம், கற்கருடையது. அது மட்டுமன்று, இலாடத்தின் ஸ்வதந்திரமான அரசர், அதனுடைய வளர்ச்சிக்காக மண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார் என்றால், அது இயல்புதான். எல்லா அரசர்களும் செய்வதுதான். ஆனால், பெரியப்பா மகனுக்காகத் அவனுடைய நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகத் தன்னுடைய சகோதரியையே, முக்கிய எதிரிக்கு மணம் செய்து கொடுத்துச் சமாதானம் செய்ய விரும்பினார் என்றால், இரட்டபாடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்! சுயநலம் இல்லாத எப்பேர்ப்பட்ட ஒரு ராஜா!”

“ஆமாம். நிச்சயம் ராஜமாதாவுடன் விவாதித்துத்தான் இந்த முடிவை எடுத்திருப்பார். அதில் இருந்த தீர்மானம் எங்கள் எல்லாரையுமே அசர வைத்துவிட்டது. அடுத்தநாள் காலையில், மேள தாள ஒலிகள் கேட்டன. பட்டத்து யானை முன்னால் நடக்க, விஜயாதித்தியர், பட்டத்து ராணி மற்றும் இளவரசர் சகிதமாக வந்தார். பின்னால், தாலங்களில் மணிகளும், மலர்களும், மங்கலப் பொருள்களும் ஏந்திப் பெண்கள். மஹாராணியும் ஒரு தாலத்தை ஏந்தி வந்தார். தமக்கையின் முன்னால் வந்து நின்ற நரேந்திரர், மஹாராணி ஏந்திவந்த தாலத்தை, அவரிடமிருந்து வாங்கித் தமக்கையின் கரங்களில் கொடுத்துவிட்டுக் காலில் விழுந்து நமஸ்கரித்தார். அவரோடு, ராணியும், இளவரசரோடு “ஆசி செய்யுங்கள்” என்று சீலமஹாதேவி பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தனர். குடும்பத்துடன் நமஸ்கரித்தவர், பிரஸ்தாபத்துக்குச் சம்மதத்தைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும், சீலாமாதேவி, தம்பியைக் கட்டிக்கொண்டதைப் பார்த்துக் கண்கலங்காதவர் யாருமில்லை அங்கே. வேங்கிராணி மஹாதேவிக்குப் பரம சந்தோஷம் என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.”

“அடடா! என்ன ஓர் உணர்ச்சிகரமான சந்திப்பு! நீங்கள் சொல்வதை, இன்று கேட்டு எனக்குத் தழதழக்கிறது என்றால், அங்கே இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! இரண்டு ராணிகளும் செருக்கின்றி, இயல்பாக ஒரு சம்பந்தத்தை உருவாக்கிவிட்டார்கள். பிறகு திருமணம் நடந்ததா?”

“நடக்காமல்? அது மட்டும் நடக்கவில்லை என்றால், இன்று வேங்கி சுடுகாடாகத்தான் மாறியிருக்கும். நீயும் நானும் இப்படிச் சுமுகமாக இங்கே இருந்துகொண்டு பேசிக்கொண்டிருக்க முடியாது. அடுத்த வருடமே திருமணம் நடந்தது. திருமணம் நடந்ததும், கற்கராஜாவும் பிருஹத் ராஜமாதாவும், என்னையும் கணபாம்பாவையும் புதுமணப்பெண் சீலாவுக்குத் துணையாக வேங்கிக்குச் செல்லும்படிக் கேட்டுக் கொண்டார்கள். நாங்களும் மான்யகேடத்தை விட்டுவிட்டு, இங்கே வந்து மீண்டும் வேங்கியைச் சார்பாக ஆக்கிக் கொண்டுவிட்டோம்.” புன்முறுவல் செய்தார் பிரதாபர்.

கிரீடசைலத்தில் முதன்முதலில் கலிவிஷ்ணுவர்த்தன ராஜாவோடு, அரசி சீலதேவியைப் பார்த்தபோது, வல்லபஸ்வாமியோடு அரசிக்கு இருந்த அன்னியோன்னியம் விநயனுக்கு நினைவு வந்தது. அதன் காரணமும் இப்போது விளங்கியது.

ஐயா! என்ன ஓர் ஆச்சரியமான வரலாறு உங்களுடையது! இந்த மண்ணின் இளவரசி சீலாதேவிக்குத் துணையாக, ஒரு சகோதரனாக அந்த எதிரி மண்ணுக்குச் சென்றீர்கள், அந்த மண்ணின் இளவரசி சீலாதேவிக்குத் துணையாக, ஒரு தந்தையாக இந்த எதிரி மண்ணுக்கு வந்துவிட்டீர்கள்! இப்போது புரிகிறது, பரஸ்பர வைரிகளாக இருந்தும், வேங்கியும் இரட்டமும் உங்களை ஏன் இந்த அளவுக்கு நம்பிக்கையோடும் அன்போடும் மரியாதையோடும் நடத்திவந்திருக்கிறார்கள் என்று. இது ஓர் அபூர்வமான பிணைப்பு, ஐயா! இதற்குப் பாத்திரமாக நடந்துகொள்வதும் எளிதன்று. துருவராஜா, பிரபூதவர்ஷர், நரேந்திரராஜா, ஸ்வர்ணவர்ஷர் போன்ற திக்கஜங்களோடு நாளும் நேருக்கு நேர் நின்று பேசவும் பழகவும் வேண்டிய சூழ்நிலை. நியாய அநியாயத்தின் பகுப்பு, ஸ்திரமாக உள்ளுக்குள் நிலைபெற்றிருப்பதோடு, நெஞ்சுரத்தோடும் இருந்தால்தான் இந்தக் கயிற்றின் மீது நடக்கமுடியும்! நடந்தும் காட்டியிருக்கிறீர்கள்! உங்களைப் போல நானும் விறலும் விதரணையும் பெற ஆசீர்வதியுங்கள்” என்று பிரதாபவர்த்தனரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான்.

“புத்திர பாக்கியம் இல்லாத எனக்கு, நீ ஒரு புத்திரனைப் போல விநயா! சமயோசிதமும், சாதுரியமும் உள்ள சாஸ்திரஞ்ஞன் நீ. என்னை விட அமோகமாக வாழ்வாய்! எழுந்திரு!” என்று ஆசீர்வதித்து அவனை மார்புறத் தழுவிக்கொண்டார்.

“இன்னொரு விஷயம். நீ எழுதிய மெய்கீர்த்தி அரசருக்கு மிகவும் பிடித்து விட்டது. உன்னைச் சந்திக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அனுகூலமான ஒரு நாள் பார்த்து, உன்னை அழைத்துப் போகிறேன். இனி அவர் நல்கும் கொடைகளில் நீ எழுதியதை எழுதச் சொல்லியிருக்கிறார்.”

“என் பாக்கியம். எல்லாம் உங்கள் அருளால் விளைந்த பயன்.” கை கூப்பினான் விநயன். “இப்போதைய இரட்ட நிலைமை என்ன?”

“வேங்கியோடு உறவு வலுப்பட்ட பிறகு, இரட்டபாடி எழுந்து நிற்கத் தொடங்கிவிட்டது. கங்கத்தில் கொளனூரர் காலூன்றி வருகிறார். திண்டிகா பாணப்பாடியருகே தள்ளப்பட்டு விட்டான். காஞ்சியில் இன்னும் ஸ்ரீகண்டன்தான் கோலோச்சி வருகிறான். கற்கராஜா இலாடத்துக்குச் சென்று விட்டார். அமோகவர்ஷர் மெள்ள மெள்ள நிலைபெற்று வருகிறார். நரசிம்மன் வேமுலவாடாவில் ஸ்திரம். இனி அந்தப் பரமேஸ்வரன் என்ன நினைத்திருக்கிறானோ?

“கொஞ்ச நாட்களுக்கு முன்னால், இங்கே வேங்கிக்குச் சீலதேவியைப் பார்க்க வந்திருந்த இராட்டிரக்கூடக் கவி, இந்த ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டுச் சொன்னார். அமோகவர்ஷராஜாவே இம்மாதிரி சொன்னாராம். இதையே சீக்கிரமே மெய்கீர்த்தியாகக் காணும் காலம் வந்துகொண்டிருக்கிறது என்றார்.

“‘பதினாறு சமஸ்தானங்களைக் கொண்ட அந்தப் புதிய ராஜ்ஜியத்தையும், அதை ஆள வந்த நீதியின் வல்லமை மற்றும் மேன்மையையும் கொண்ட மன்னனைக் கண்டு, வஞ்சகம் நிறைந்த கலி, தப்பி ஓடி, உள்நாட்டிற்குள் புகுந்து, நிலப்பிரபுக்களையும், மந்திரிகளையும், அவனது உறவினர்களையும் திசை திருப்பித் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது.

“‘கலியின் தாக்கத்தால், அவர்கள், பொய்யான பிரமாணங்கள் மூலம் வஞ்சகமான அறிவுரைகளை மற்றவர்களுக்கு வழங்கி, தங்கள் அரசனான அமோகவர்ஷனிடமிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக இருந்தனர். தகுதியுடைய நியமிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொன்று தங்களுக்கு வேண்டியவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ‘மற்றொருவரின் மனைவி ஒரு மகள் அல்லது சகோதரிக்குச் சமம்’. என்ற வேறுபாடு இல்லாத மிருகங்களைப் போல நடந்து கொண்டனர். கலியின் ஆட்சி இவ்வாறு அவர்களால் உயர்ந்து விளங்கியது. பாவச் செயல்களால், வாழ்வின் அடிப்படை மூலமானது நல்லவற்றை இழந்தது. வானத்திலிருந்து பிரகாசம் இழந்து, அந்தப் பெரிய சூரியன் மறைந்த பிறகுதானே, சிற்றொளியுடைய சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் ஒளி உலகுக்குக் கிட்டுகிறது? அப்போதுதானே அவை பெருமையாகவும் பேசப்படுகின்றன?

“‘ஆனால், இச்சிறுமை நிறைந்த ஒளிகளால், அப்பெருஞ்சூரியனின் இல்லாமையின் போதுமட்டுமே வாழமுடியும். உயர்ந்து நிற்கும் மலைபோன்ற ஆரியன் பாதாளமல்லன் சுவர்ணவர்ஷன் கற்கனின் மகத்துவத்தினால், இராட்டிரர்களின் சூரியன், மீண்டும், எழுந்து இந்த வன்மம் உடைய இருளில் பிரகாசித்துச் சிறுதிறலுடைய சிறுமீன்களை மங்கச் செய்து, உலகைத் தூய்மைப்படுத்தியது.


“‘அரசியல் தத்துவங்களின்படி, ஆன்மா அரசன்; மனம் அவனுடைய மந்திரி; பொறிகள் அரசனைச் சுற்றி இருக்கும் பிரமுகர்கள் கூட்டம்; மற்றும் பேச்சு முதலிய திறன்கள் சட்டங்களுக்கு ஏற்பச் செயல்படும் சேவகர்கள். உடம்பு என்னும் இடத்தை, அந்த ஆன்மா அனுபவிப்பது போலே, அரசன், தன்னுடைய இராச்சியத்தையும் உலகப் பொருட்களையும் அனுபவிக்கிறான். அந்த உடம்பானது நோயால் பீடிக்கப்படும்போது, எப்படி எல்லா இன்பங்களும் நின்று போகிறதோ, அப்படி, இராச்சியம் துன்பத்தால் பீடிக்கும்போது, எல்லாமே அழிந்துவிடுகிறது.

“‘ஒரு மருந்து நோய்களை அழிப்பது போல, காற்று மேகங்களை அழிப்பது போல, நெருப்பு உலர்ந்த எரிபொருளை அழிப்பது போல, சூரியன் இருளை அழிப்பது போல, பரம்பரையாகத் தொடர்ந்து தொடர்ந்து வந்த துரோகவாதிகளைக் அழிப்பேன். இப்பூமியைக் கலியின் ஆரம்பம் மற்றும் உச்சம் ஆகிய இரண்டின் இருளிலிருந்தும் மீட்டெடுத்து, அந்த இருட்டை அழித்து, வெண்மையான சந்திரனைப் போன்ற வெண்கொற்றக் குடையின் கீழே அமருங்காலம் அதிகச் சேய்மையில் இல்லை.

“‘எப்படித் தடியால் அடிக்கப்பட்ட மரத்தின் பழங்கள் உதிருமோ, அப்படி என்னுடைய செங்கோலால் அடிக்கப்பட்டு, என்னை எதிர்த்த குறுநில மன்னர்களின் கூட்டம், முத்துக்களாக என் அரண்மனைக்குள் உதிரும், கொட்டும் தேனீக்களால் துரத்தப்பட்ட காட்டுப் பன்றிக்கூட்டத்தைப் போல யானைகள், என்  அரண்மனைக்குள் வந்து குழுமும். என்னுடைய கோபத்தின் உக்கிரமான நெருப்பால் பகைவர்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறார்கள்; மற்றவர்கள், என் காலடியில் விழுந்து பணிவதால், தேக ஆரோக்கியத்ததுடன், செழிப்பை அடைவார்கள்.’”

“அடேயப்பா! அடங்கியிருந்தவர் ஆர்ப்பரிக்கும் ஆழியாக மாறிவிட்டாரே!”

“ஆமாம். அமோகவர்ஷர் ஓர் உறுதியுடன்தான் இருக்கிறார் அந்தக் கவி சொன்னார், ‘விரைவிலேயே அரசருடைய அரண்மனை வாயிலில், சபை கூடும் நேரம் இன்னும் வராததால், வாயிற்காவலர்களால் வெளியே காக்க வைக்கப்பட்டு, சிரமத்தோடு நின்று கொண்டிருக்கும் பகைநாடுகளின் பிரபுக்கள், அவரால் பறிக்கப்பட்ட தங்களுடைய மணி மற்றும் முத்துக்களால் வேயப்பட்ட யானைகளும், கணிகைப் பெண்களும் மீண்டும் தமக்கு ஒப்படைக்கப்பட மாட்டா என்ற உணர்வு தலை தூக்கத் தலை குனிந்து காணப்பட்டார்கள்’ என்று எழுதவேண்டிய நிலைமை வரும் என்றார்.” மகிழ்ச்சியோடு சிரித்தார் பிரதாபர்.

“அபாரம். அப்போதைக்கு இப்போதே எழுதிவைத்து விட்டாரோ, அந்தக் கவி? பிரதிஹாரர்களுடைய நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?”

“வத்ஸராஜாவின் புத்திரன் நாகவலோகன், தலையெடுத்து விட்டான். பிரதிஹாரர்கள் இன்று அவனுடைய தலைமையில் பெருத்த வலிமை பெற்றுவிட்டார்கள். அவந்தி, இரட்டர்களின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் நழுவிவிட்டது. கன்யாகுப்ஜத்தின் அரியணையிலும் அவன்தான் இப்போது. தர்மபாலன் இறந்துவிட்டார். அவருக்கு ரன்னாதேவியிடம் பிறந்த தேவபாலன்தான் இப்போது அரசன். பாலவமிசத்தின் ஆட்சி, இப்போது கௌடத்தோடு நின்றுவிட்டது. உத்தராபதத்துடன், தக்கணத்து இணைப்பு முற்றிலும் அறுந்தது என்றே வைத்துக்கொள். இனி ஒரு துருவரோ அல்லது பிரபூதரோ வரப்போவதில்லை.

இதெல்லாம் இருக்கட்டும், ஹர்ஷவல்லி ஓரிரண்டு முறை உன்னை வந்து பார்க்கச் சொல்லி ஆளனுப்பினாளாம், நீ கண்டு கொள்ளவே இல்லையாமே"

இதையெல்லாம் கூட இவருக்குச் சொல்லிக்கொண்டிருப்பாளா இவள்? நெளிந்தான். "நேரம் தோதுப்படவில்லை. போகவேண்டும் என்றுதான் இருக்கிறேன்"

"குக்கேஸ்வரன் பெண்ணுக்குக் கணித சாத்திரம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? எப்படிப் படிக்கிறாள்?"

கோத்து வாங்குகிறாரோ? நான் குக்கேஸ்வரருடைய இல்லத்துக்குப் போய்ப் பலநாட்கள் ஆயிற்று. இதெல்லாம் இவருக்கு யார் சொல்லுகிறார்கள்?

"கணித வகுப்பு அவ்வளவாக நடக்கவில்லை. அதற்கென்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கவேண்டும். யோசித்துக் கொண்டிருக்கிறேன்."

"பெண்கள் தம்முடைய ஆர்வத்தை உடனடியாக வெளிப்படுத்தி விடமாட்டார்கள். சுயமாக முன்வந்து ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால், ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றுதான் பொருள். அதை அலட்சியப்படுத்துவது ஆண்மை அன்று. அப்படி அலட்சியம் தோன்றினால், ஒன்று அது அகம்பாவத்தினால் இருக்கும் அல்லது அச்சத்தினால். சிந்தித்துப்பார். ஒதுங்குவதால் யாருக்கு என்ன பயன்? வேதனைதான் மிஞ்சும். தொங்கலில் வைக்காமல், இதுவா அதுவா என்று ஒரு முடிவு எடு. அல்லது இரண்டும் இருந்துவிட்டுப் போகட்டும். சமுதாயத்தில் இல்லாததா என்ன? ஹர்ஷவல்லியின் ஒரு சமிக்ஞைக்கு, அவள் வாயிலில் ஆயிரம் பேர் தவம் கிடப்பார்கள். எதுவாக இருந்தாலும், உன்னுடைய ஆர்வலர்களிடம் வெளிப்படையாக இரு. அதுதான் வினை விழுமம். சரியா? நல்லது நடக்கட்டும். சரி, நேரம் ஆகிறது. பிறகு பார்க்கலாம்."

என்ன சொல்கிறார் இவர்? முதலில் சற்றுக் குழம்பியவன், சட்டென்று அவர் சொல்லியதின் தாத்பரியம் புரிந்து, அதனால் உறைந்து கிடக்க, அவனுடைய உத்தரத்துக்குக் காத்திராமல் போய்விட்டார் பிரதாபர்.

சில நாட்களுக்குப் பிறகு அவனைக் கேடகராஜா பாண்டுரங்கருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

“கேடகராஜரே! உம்மிடம் கொடுக்கவேண்டும் என்று ஓர் ஓலையை வைத்துக்கொண்டு ஒரு ஞானஸ்தன் அலைந்து கொண்டிருக்கிறான் என்று சொன்னேனே, அது இவன்தான்” என்றார். விநயன் ஓலையைக் கொடுத்ததும், அதைப் படித்துப்பார்த்தவர் கேட்டார், “எப்போது எழுதினது இது?”

“தசசமவத்ஸரம் இருக்கும்”

“பத்து வருடங்களா? ஏன் இத்தனை தாமதாக வந்திருக்கிறாய்?” பிரதாபரையும் விநயனையும் மாற்றி மாற்றிப் பார்த்தார் கேடகராஜர்.

“என்னை ஏன் பார்க்கிறீர்?” சிரித்தார் பிரதாபர். “இவனுக்கு இப்போதுதான் வரவேண்டுமென்று தோன்றியிருக்கிறது”

“நிலைமை சீரடைந்தபின் போ என்று அன்னைதான் கூறியிருந்தாள்.”

“அதுவும் சரிதான். நீ உடனேயே வந்திருந்தால், இராட்டிரக்கூடத்தன் என்று தெரிந்ததும், வினவாமல் கொள்ளாமல் வகுந்திருப்பார்கள். இப்போது அன்னை எங்கிருக்கிறாள்?”

விநயன் நடந்ததெல்லாவற்றையும் சொன்னான். கேட்ட கேடகராஜரின் விறைப்பான முகம் இளகியது போலத் தெரிந்தது. அது என்ன கண்கள் கலங்குகின்றனவா இவருக்கு? அடைகல்லில் ஆபத்தின் அசும்பா? ஒரு கணம்தான். முகம் விறைப்பை மீட்டுக்கொண்டது.

“இவ்வளவு மாதங்களாக இங்கேயே இருக்கிறான், முன்னமேயே அழைத்துக் கொண்டுவந்திருக்கலாமே, பிரதாபரே” என்று கடிந்து கொண்டார்.

“அதனால் என்ன? உங்கள் இடத்தில் இருந்துகொண்டு, நான் இவனுடைய சௌகரியங்களை எல்லாம் கவனித்துக் கொண்டுதானே இருந்தேன். கலிவிட்டு மஹாராஜாவும் இவனைக் காணவேண்டும் என்றார். வரும் ஆதிவாரம் செல்லலாம் என்று இருக்கிறேன். நீர் அரண்மனையில் இருப்பீரா?”

“மஹாராஜாவா? அவருக்கு இவனை எப்படித் தெரியும்?” பாண்டுரங்கரின் புருவங்கள் உயர்ந்தன.

“ஏற்கனவே, அவரோடு போஜனமும் செய்திருக்கிறான். பாக்கியம் பெற்ற பண்டிதன்”

“என்ன???” கேடகராஜா பாண்டுரங்கரின் வியப்பு எல்லை மீறியது. “பிரதாபரே! நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள், எப்படிச் செயல் செய்கிறீர்கள் என்பது அந்த அனந்தஸயனனுக்குக் குடைவிரிக்கும் ஆயிரம் செவியான் ஆதிசேடனுக்கும் தெரியுமோ என்னவோ? எதுவாயினும் நல்லது செய்தீர். நான் அரண்மனையில்தான் இருப்பேன். சேர்ந்தே போவோம். எனக்கும் அரசரிடம் சிலவிஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.”

ஆதிவாரம் விநயன் அரசரைச் சந்தித்தான். அதற்குப் பிறகு, அரச குடும்பத்தோடு, அவனுடைய தொடர்பு நெருக்கமாக வளர்ந்தது. பாண்டுரங்கருக்குப் பிறகு, சேனாபதி பதவியில் அடுத்து அமர்ந்த அவருடைய குமாரனுடனும் கேண்மை கிளைத்தது. அதனால், அவனோடும், அரச குடும்பத்தோடும் விநயனுக்கு ஏற்பட்ட நெருக்கம், விஷ்ணுவர்த்தருக்குப் பிறகு அரியணையில் அமர்ந்த அவருடைய குமாரன் குணக விஜயாதித்தியன் காலத்தில் இன்னும் உறுதிப்பட்டது. 

தான் அரசனானதும்முதல் வருடத்திலியே சேனாபதியின் மகன் மஹாவீரன் பாண்டுரங்கனைத் தனக்குத் தளபதியாக்கிக் கொண்டான். பிறகு அவனோடு சேர்ந்து இராட்டிரக்கூடத்தை, முதலில் வலுவோடு ஆட்டி அசைத்த குணகராஜன், நாளடைவில் அமோகவர்ஷனிடம் பெருத்த தோல்வியுற்றதும், அதற்குப் பிறகு, தன்னுடைய மூதாதையர்களைப் போலவே இரட்டர்களுக்கு அடங்கிய சிற்றரசனாக ஆனதும், பிறகொருநாள், அமோகவர்ஷனுடைய கட்டளைப்படி, நொளம்பராசன் மங்கியை எதிர்த்ததும், அப்படி எதிர்த்தபோது, விநயாதிசர்மனின் ஆலோசனைப்படி செயல்பட்டு, மங்கியின் தலையை வெட்டி வீழ்த்தியதும், அதற்காக உற்புட்டூரு துர்க்கசர்மனின் பெயரனும், தாமோதரசர்மனின் புதல்வனும் ஆன விநயாதிசர்மனுக்குப் பாண்டுரங்கனின் விண்ணப்பத்தின் பேரில் ஒரு கிராமத்தையே கொடையாக அளித்ததும்,

 

ஹத்வா மங்கீ³ம் விஜித ஸகல ஆராதி பூபால வர்க³ம்

யுத்³தே யஸ்ய த்³விஜ க³ணவரஸ்ய அத்³புத ஆதே³ஶ துஷ்ட:

 

என்று அந்தணர்களிடையே சிறந்து விளங்கிய அந்த அந்தணனின் அற்புதமான சொற்படி நடந்து, பல பூபாலர்களையும் வென்ற மங்கியைக் கொய்து வெற்றியடைந்து திருப்தியடைந்தான்’ என்று கௌரவித்து சாசனத்தில் எழுதுவித்ததும் பின்னால் நடந்த பெருங்கதை.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...