சற்று நிறுத்தினார் பிரதாபர். அப்போதுதான் சுற்றுப்புறச் சூழ்நிலை விநயனுக்கு உறைத்தது. பிரதாபரைப் பார்த்தான். அவர் அவருடைய நினைவுகளில் மூழ்கி இருந்தார். அவர் முகத்தில் ஒரு பயபக்தி. அவர் கண் முன்னால் கோவிந்தராஜர் இப்போது தோன்றி விசுவரூபம் எடுத்து நின்று கொண்டிருக்கிறாரோ என்று விநயாதிசர்மன் வியந்து, அவர் முகத்தையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன பார்க்கிறாய்?”
“வேற்று நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், உங்கள் மனத்தை, கோவிந்தராஜர் எப்படி ஆக்கிரமித்திருக்கிறார்!”
“துருவராஜா, வாழ்க்கையில் தோய்ந்திருந்துவிட்டு, அனுபவமடைந்தபின் அரியணை ஏற்றார். ஆனால், கோவிந்தராஜா, இளம் வயதிலேயே சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டார். தரையில் பிறந்து, கடல் அலையை முதன்முறை தொட்டதுமே, நிபுணனைப் போல நீந்தும் கச்சபம் போல, ராஜாங்கக் கடலில் மிக இயல்பாக நீந்தத் தொடங்கிவிட்டார். வீரமும், விவேகமும், நீண்ட காலப் பார்வையும், தன் திறமை மேல் அபார நம்பிக்கையும், அதைச் செயல்படுத்தும் வேகமும் அதே சமயத்தில், ஒன்றுமே வேண்டாம் என்று துறக்கும் மனோபாவமும் எத்தனை பேருக்குச் சித்திக்கும்?”
“ஹர்ஷவர்த்தனரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் புகழும் இப்படிப் பட்டதுதானே?”
“அவர் பேரரசர்தான். அணுவளவும் ஐயமில்லை. ஆனால், அவர் நிறுவிய சாம்ராஜ்ஜியம், வடக்கோடு நின்று விட்டது. தட்சிணத்தின் கட்டமைப்புக்கள் வியத்தியாசமானவை. தட்ப வெப்பம், மக்களின் இயல்பு, எண்ண விசாரங்கள், பேசும் மொழிகள், சமுதாயப் பிணைப்புக்கள், தொழில்கள், நிலவமைப்புக்கள் எல்லாம் விந்திய மலையைக் கடந்து, குமரியின் திக்கில் செல்லச் செல்லப் பெருத்த மாறுதலுக்குள்ளாகின்றன. விந்திய மலையோடு அவர் ஆட்சி சீமித்து விட்டது. அதை அவரால் தாண்டி வர இயலவில்லை.
“சிந்தித்துப் பார். எத்தனை அரசர்கள், தட்சிண பாரதத்தில் இருந்து, உத்தர பாரதத்துக்குப் படையெடுத்துச் சென்றிருக்கிறார்கள்? அப்படிச் சென்றவர்கள் எந்தப் பேரரசையாவது வென்றிருக்கிறார்களா? சாதவாகனர்களுக்குப் பிறகு, உத்தராபதத்தைத் துருவாராஜா வியாபித்தார் என்றால், இவர் அந்த வியாப்தியை இன்னும் வலிமையாக்கினார். விந்திய மலைகள், பாரதத்தைக் குறுக்காகப் பிரித்து விட்டனவோ என்றல்லவோ எனக்குத் தோன்றுகிறத
“இந்தக் கோணத்தில் இதுவரை நான் யோசித்துப் பார்த்ததில்லை. நீங்கள் சொல்வது சரியென்றுதான் படுகிறது. விந்திய மலைகளுக்கு இடையே விபரீதத் திக்கில் ஓடுவதால் நர்மதையும், தாபியும் இந்தப் பிரிவை மேலும் ஊர்ஜிதப் படுத்திவிட்டனவோ?”
“ஹா ஹா ஹா ஹா “ – வாய்விட்டுச் சிரித்தார் பிரதாப
வர்த்தனர்.
தூரத்தில், சில தீப்பந்தங்கள் அசைந்துகொண்டு, அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தன “தேவநாதய்யாவின் போஜனம் வந்துவிட்டது”.
இரண்டு பேர்கள் வந்து, இடத்தைச் சுத்தம் செய்து, இருவருக்கும் இலை போட்டுப் பரிமாறினார்கள். உண்ட இலைகளை எடுத்துக்கொண்டு போகப் பிரம்புக்கூடை சகிதம் வந்திருந்தார்கள். அருமையான அரிசிநொய் வல்சி. இருவருக்கும் பாலைத் தந்து, அவர்கள் அருந்தி முடிக்கும்வரை இருந்துவிட்டு, ஆற்று நீரால் உண்ட இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, அவர்கள் போனதும், பிரதாபரும், விநயனும் விசும்பில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி, அந்த அமைதியில் மனதைப் பறிதந்துவிட்டு வாய்வாளாமையோடு அமர்ந்திருந்தார்கள். வெளிச்சத்தின் இரைச்சலில் கேட்காத நீரின் சலசலப்பு, இருளின் நிசப்தத்தில், பெரிதாகக் கேட்டுகொண்டிருந்தது.
“பெரிய கோவிந்தர் தக்கண நாடுகளுக்கு உதவி கேட்டு ஓலை அனுப்பினார் என்றீர்கள். பிரபூதவர்ஷர், இவர்களையெல்லாம் வெற்றிகொண்டார். அப்படியென்றால், இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த இராஜ்ஜியங்களின் நிலை ஓங்கி இருந்ததா? துருவராஜாவின் காலத்தில், இவர்களால் இரட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையா?”
“பிரதிஹாரர்களும், கங்கர்களும் இராட்டபாடிக்குப் பெரும்முட்களாகத்தான் இருந்துவந்தனர். பிரதிஹாரர்கள் நேரடியாக இரட்டத்தைத் தாக்கியதில்லை. ஆனால், கங்கர்களோடு பல போர்கள் நடந்தன. இதுதான் வியத்தியாசம். வேங்கி சாளுக்கியரும் தொந்தரவு தந்தனர், ஆனால், கங்கர்களின் அளவுக்கு இல்லை. காஞ்சிக்கும், இரட்டத்துக்கும் இடையே இருந்த உறவு, சற்று விந்தையானது. இந்த நான்கு தேசங்களும், துருவரால்தான் முழுதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அவர் மறைவுக்குப்பிறகு, இவர்கள் கோவிந்தரின் இளம்பிராயத்தை வைத்து அவரைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டுத் திமிர முற்பட்டார்கள். திமிர்த்தவர்களின் திமிர்ப்பை அடக்கினார் கோவிந்தராஜா.
“இத்தனை நட்சத்திரங்களில், அதிக ஒளியோடு மின்னுவது எது என்றாய்ந்து பார்த்திருக்கிறாயா?” – திடீரென்று விண்ணைக் காட்டிக் கேட்டார் பிரதாபர்.
“அதோ, வெற்றிலைச்சாறுக்கு இடப்பக்கமாகக் கீழே, சுவானம்” என்று காட்டினான்.
“வெற்றிலைச்சாறா? ஆருத்திரா அல்லவோ அது?”
“என் தந்தை அப்படித்தான் வேடிக்கையாகச் சொல்லுவார். பாருங்களேன், இத்தனை வெண்மைகளுக்கிடையே, இதுமட்டும் சிவந்து மின்னுகிறதை. கண்டுபிடிக்க எளிதாக இருப்பதற்காக இம்மாதிரி ஏதாவது சொல்லிப் பேர்வைப்பார்.”
”சமயோசிதமான கல்பனை. சுவானத்தோடு போட்டிபோடும் நட்சத்திரம் ஏதாவது?”
“ஓ! அகத்தியன். அதோ! அடிவானத்துக்குச் சற்று மேல், வெற்றிலைச்சாறுக்கு நேர் கீழே. இன்று மிகவும் கீழே இருக்கிறது. சில சமயங்களில் சுவானத்தைப் போல அடிவானத்துக்கு மேலேயே தெரியும். கிட்டத்தட்ட சுவானம் போலவே ஒளிர்வதைப் பார்த்திருக்கிறேன்.”
“நிறைய தெரிந்து வைத்திருக்கிறாய். வேறென்ன தெரியும், அதைப்பற்றி?”
“அவந்திகாசாரியர் ப்ருஹத் ஸம்ஹிதையில், அகத்தியனுக்கும் ஸ்லோகம் ஒன்று எழுதியிருக்கிறார்.
“’பா⁴னோ: வர்த்மவிகா⁴த: வ்ருத்³த⁴ஶிக²ரோ விந்த்⁴யாசல: ஸ்தம்பி⁴தோ’ - என்று தொடங்கும். அதில், பீத: ச அம்பு³நிதி⁴: தபோம்பு³நிதி⁴னா யாம்யா ச தி³க்³பூ⁴ஷிதா, தஸ்யாக³ஸ்த்யமுனே: த்³யுதிக்ருதஶ்சார: ஸமாஸாத³யம்” என்று ‘தவலிமையால், கடல் தண்ணீரைக் குடித்த, யமத்திக்கின் பூஷிதனே’ என்று தட்சிணத்துக்கும் அகத்தியனுக்கும் உள்ள தொடர்பை வர்ணிப்பார்”
“விநயா! உனக்குத் தெரியாதது ஏதாவது இருக்கிறதா?” ஆச்சரியத்தில் வாய்பிளந்தார் பிரதாபர்.
“ஐயா! ஏன் இப்படி நையாண்டி செய்கிறீர்கள்?” கரம் குவித்தான்.
“இல்லையப்பா! நீ ஒரு பொக்கிஷம். உன்னால் இந்த வேங்கி மண் நிச்சயம் பெருமை அடையப்போகிறது. நான் இந்த அகத்தியனைப்பற்றிச் சொல்லப்போனால், எனக்கு நீ கற்றுத்தருகிறாய். நீயே சொல்லிவிடு” சிரித்தார்.
“மீகாமன்களுக்கும், யாத்திரிகளுக்கும் பெருத்த வழிகாட்டி. தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்ளாமல், தென் திக்கை நிலையாகக் காட்டும் தட்சிணத் துருவ நட்சத்திரம். யவனர்களுக்கும், மிலேச்சர்களுக்கும் வேண்டுமானல் துருவன் வழிகாட்டட்டும். தட்சிணத்துக்கு, அகத்தியனே துருவன். மூப்பன் என்று காரணமில்லாமலா அழைக்கிறார்கள்! ஆ! ஏன் அகத்தியன் பேச்சை எடுத்தீர்கள் என்று இந்த மரமண்டைக்கு இப்போது புரிகிறது. துருவராஜாவைப் போல என்கிறீர்கள், இல்லையா? அப்படியென்றால், சுவானம்தான் கோவிந்தராஜா! இந்த இரண்டு தாரகைகளும் தட்சிணத்தை விளக்கம் செய்யவந்த விண்மீன்கள்!”
“ஆம்! அதைத்தான் சொல்ல வந்தேன். எப்போது இந்த இரண்டு நட்சத்திரங்களைப் பார்த்தாலும் எனக்குத் துருவ கோவிந்தம்தான் நினைவுக்கு வரும். தக்கணத்தைத் தழைக்க வந்த துருவதாரை ஒன்று. அதை வழிகாட்டியாக வைத்து, ஒளிர்ந்து மற்ற விண்மீன்களை எல்லாம் மங்க அடித்த சுவானம் இன்னொன்று.”
சரக்.. வேகமாக அடித்த காற்றில், அங்கே தேவநாதய்யாவின் பணியாளர்கள் விட்டுச் சென்றிருந்த தீப்பந்தம் ஒரு கணம் அணைந்து பிறகு எரிந்தது.
“எண்ணெய் தீர்ந்துவிட்டது போலிருக்கிறது. வா, இருக்கும் நெருப்பு அணையுமுன் புறப்படுவோம். நான் இங்கிருந்தே ஆற்று வழியாகவே போய்விடுவேன். உனக்குப் புரவிக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று எழுந்தவர், படிக்கட்டில் கீழிறங்கிக் குதிரையின் அருகில் சென்றார். குதிரைக்கலனையின் பக்கவாட்டில் செருகியிருந்த ஒரு வில்லையும் அம்பையும் எடுத்தவர், கலனையின் சிறுபையிலிருந்து ஒரு சிறு துணியை எடுத்து, அம்பின் நுனியில் சுற்றினார். “இந்தத் துணியில் எண்ணையை நனைத்து, நெருப்பேற்றி வா’ என்றார். விநயன் அப்படியே செய்ததும், காற்று வீசும் திசையைக் கணித்து, அம்பை வானில் எய்தார். இருளைக் கிழித்துக்கொண்டு வாளி விசும்பில் பறந்து, தொலைவில் போய் விழுந்தது. அது விழுந்த சில கணங்களில், ஆற்றின் கரையோரம் ஒரு தீப்பந்தம் அசைந்தது.
“அதோ, சொல்லிவைத்திருந்தேன். புரவி வருகிறது பார். உன்னைச் சத்திரத்தில் விட்டுவிடுவான். இந்தப் பந்தத்தைத் திருப்பி எடுத்துக்கொண்டு போய்ச் சத்திரத்தில் கொடுத்துவிடு. அடுத்தமுறை சந்திக்கும்போது, இரட்டபாடி ஸ்தாபனத்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் புரவியேறி விரைந்தார்.
புரவிக்காகக் காத்திருந்த
விநயன் தன்னிச்சையாக யமத்திக்கில் நோக்கினான். இருள் அதிகமாக அடரத்
தொடங்கியிருந்தது, அகத்தியன் இன்னும் மேலே உயர்ந்து வந்து மிதுனத்தில் பொருந்திக்கொண்டு,
சுவானத்துக்குப் போட்டியாக ஒளிர்ந்துகொண்டிருந்தான்.
No comments:
Post a Comment