Saturday, 21 September 2024

15-01. கர்ணாடத்தின் சிற்றரசுகள்

 “என்ன கேட்டுக் கொண்டிருக்கிறாயா?” பிரதாபரின் குரல், விநயசர்மனை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்தது. “நீங்கள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு, நான் ஏலபுரிக்கே பயணம் செய்துவிட்டேன்.”

“தெரிந்தது, தெரிந்தது. அடிக்கடி ஏலபுரிக்குப் பயணித்துவிடுகிறாய். கோவிந்தரின் அந்தப்புரத்துக்குப் போய்விடவில்லையே?” அவர் கண்களில் குறும்பு மின்னியது.

சிரித்தான் விநயன். “பெரிய கோவிந்தரின் பயணம் எப்படி முடிந்தது?”

“தந்திதுர்க்கர் நினைத்த மாதிரியே முடிச்சுக்கள் அவிழ்ந்தன. பெரிய கோவிந்தர் நந்திவர்மப் பல்லவமல்லரைச் சந்தித்து இரட்டத்தின் பக்கத்தைப் பொருத்தமாக எடுத்துச் சொன்னார். ஏற்கனவே, தனக்கும் தந்திக்கும் இடையே ஏற்பட்டிருந்த புரிதலும் அணுக்கமும், தன்னை விடுவிக்கத் தந்திதுர்க்கர் செய்த ஏற்பாடுகளும் துணை புரிய, அரசியல் நிகழ்வுகளைக் கணிப்பதில் விற்பன்னரான நயதீரர் நந்திவர்மருக்குத் தந்திதுர்க்கரின் பிரஸ்தாபத்தில் பொதிந்து இருந்த நலன் வெளிப்படையாகத் தெரிந்தது. ரேவாவைக் கைப்பிடிக்க ஒப்புதல் தந்தார். காஞ்சி மெல்ல மெல்லப் புத்துயிர் பெற்றது. பொத்தப்பிச் சோழன், தனியாக எந்த எதிர்ப்பையும் காட்ட முனையவில்லை. அவனுக்கு வழிகாட்டக் கூடிய பாண்டிய அரசரும், உதயசந்திரனிடம் இருந்து பெற்ற தோல்வியில் இருந்து மீளவில்லை. இதெல்லாம், அந்த இளவயதிலேயே அரசரான, தீர்க்கதரிசி தந்திதுர்க்கராஜா கணித்தது போலவே நடந்து, இராட்டிரக் கூட வளர்ச்சிக்கு வழியை வகுத்தது.”

“தந்திதுர்க்கர் மட்டும், நந்திவர்மரைச் சிறையெடுத்துக் கீர்த்திவர்மரிடம் ஒப்படைத்திருந்தால், வரலாறே தடம் புரண்டிருக்கும் அல்லவா?”

“ஆம், காஞ்சிக்கு இப்படி நீண்ட காலம் ஆண்ட அவரைப் போல விவேகமுள்ள அரசர் கிடைத்திருக்காது.”

“நீண்ட காலமா? எவ்வளவு நாள்?”

“அறுபஃது அறுபஃத்தைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். தந்திதுர்க்கரின் காலத்திலிருந்து துவங்கிக் கிருஷ்ணராஜா மற்றும் துருவராஜா காலத்தில் ஸ்திரம் பெற்றுக் கோவிந்தராஜர் காலம் வரை அவர் ஆட்சி இணைத்தது.”

“அடேயப்பா! எவ்வளவு நீண்ட ஆட்சி! கீர்த்திவர்மரின் தோல்விதான் தந்திதுர்க்கர் சொன்ன முதல் கட்ட நடவடிக்கையா?”

“ஆமாம். நந்திவர்மருக்கு, உம் பொருட்டு இதை நான் முதலில் செய்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் செய்தார்.”

“பல்லவவர்மருக்காகத்தான் சாளுக்கியத்தை முடிக்கப் பார்க்கிறேன் என்று தந்திதுர்க்கர் கிருஷ்ணமஹாராஜாவிடம் கூறினாலும், சாளுக்கிய அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்தானே இராட்டிரக்கூடம் வளர்ந்தது?”

“அது சரிதான், ஆனால், அவருக்கு வீழ்த்த வேண்டிய அவசியம் அப்போதைக்கு இருந்திருக்கவில்லை, அல்லவா? ஆனால், அதி சமயத்தில், காஞ்சியைப் பொறுத்தவரை, வாதாபி விழுந்தால்தான், காஞ்சிக்கு நிம்மதி கிட்டும் என்ற நிலை இருந்தது. இவர் செய்யவில்லை என்றால், நந்திவர்மருக்கு அந்தப் பணியைச் செய்யவேண்டி இருந்திருக்கும். காஞ்சியை வீழ்த்தாமல் கீர்த்திவர்மருடைய மனம் அமைதியடைந்திருக்காது. காஞ்சிக்கு உயிர், பொருள் மற்றும் கால விரயங்கள் இன்றிக் கீர்த்திவர்மரின் வலிமையைக் குறைத்தார், வைரமேகர். அவருடைய எழுச்சி, காஞ்சிக்குப் பெருத்த பயன்.

“இப்படிப் பல்லவமல்லரின் தலைமையில், காஞ்சிக் குழந்தை, தளர்நடை பயிலத் தொடங்கிய அதே சமயத்தில், தந்திதுர்க்கர் வடக்கில் எப்படித் தன்னுடைய இராஜ்ஜியத்தைச் சாளுக்கியத்துக்குப் போட்டியாக நிறுவிக்கொண்டிருந்தார் என்பதை நீ அறிவாய். தான் காஞ்சியை விரோதமாகப் பார்க்கக்கூடும் என்ற எண்ணம், நந்திவர்மருக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் மணவினைக்கு ஏற்பாடு செய்தார். பெரிய ராஜதந்திரி அவர். உத்தராபதம்தான் அவருக்கு முக்கிய குறிக்கோளாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அவர் வாழ்க்கை குறைந்த வயதிலேயே முடிந்துவிட்டது.

அவர் இறந்ததும், கிருஷ்ணாராஜா எப்படி ஏலபுரி அரியணையைக் கைப்பற்றினார் என்று சொல்லியிருக்கிறேன். அவர் எதிர்பார்த்ததைப்போல, கீர்த்திவர்மர், மீண்டும் கிளர்ந்தார். இம்முறை ராஹப்பா போன்ற அவருடைய ஆலோசனையாளர்கள், தந்திதுர்க்கரிடம் இழந்த சாம்ராஜ்ஜியத்தின் வடக்குப் பகுதிகளை முதலில் கைப்பற்ற வலியுறுத்தினார்கள். இரட்டர்களை அழிக்க இதுதான் வாய்ப்பு என்று எடுத்துரைத்தார்கள். கீர்த்திவர்மரும் காஞ்சிக் கனவைப் புறந்தள்ளிவிட்டு, வடக்கு நோக்கிப் படையெடுத்தார்.

“எதிர்பாராமல் கிடைத்த ஆட்சிப் பொறுப்பு. உறவுக்குள்ளே முளைத்த, கற்கனின் கிளர்ச்சி ஆகியவற்றால் கிருஷ்ணராஜா நிலைகுலைந்திருந்த சமயம் அல்லவா இது? முதலில் நடந்த சண்டைகளில், சாளுக்கியப் படைகள் வெற்றி பெற்றன. சந்திரபாகை நதியைக் கடந்து வடக்கில் புகுந்தன. நதிக்கரையில், வெற்றியோடு முகாமிட்டார் கீர்த்திவர்மர். ஆனால், சீக்கிரமே, கோவிந்தர் சொன்னதுபோலக் கிருஷ்ணராஜனின் வீரம் என்கிற மந்தர மலை, சாளுக்கியக் கடலைக் கடைந்து வெற்றி இலக்ஷ்மியை வெளியெடுத்தது. முன்னேற்பாடுடன் செய்த திட்டங்கள், அவற்றை நிறைவேற்றிய திறம், விசுவாசமான படைகள் இவைகள் துணை புரிய, அதே பீமநதிக் கரையில், கிருஷ்ணராஜர், கீர்த்திவர்மரைச் சூழ்ந்துகொண்டு, அவரையும் அவர் புதல்வர்களையும் கொன்றார். சக்தி வாய்ந்த சாளுக்கிய சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. அடுத்ததாக அரியணை ஏறச் சந்ததி இல்லாமல், முடிவுக்கு வந்தது.

“பிறகு, தந்திதுர்க்கர் வாக்களித்திருந்தபடி, தந்தை ஸ்தானத்தில் இருந்து, இளவரசி ரேவாவை நந்திவர்மப் பல்லவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. தந்தை பெயரையே வைத்துக் குழந்தையைத் தந்திவர்மன் என்று அழைத்தாள் பல்லவ அரசி ரேவா.”

“திருமணம் எங்கு நடந்தது?”

“காஞ்சியில்தான். கிருஷ்ணராஜா ரேவாவை அழைத்துச் சென்றிருந்தார். அவர் காஞ்சிக்குப் போனதன் இன்னொரு காரணம் தந்திதுர்க்கருக்கு அவர் கொடுத்திருந்த இன்னொரு இராமவாசகம். கச்சிப் பேட்டில் அட்டப்புயத்துப் பெருமானுக்கு ஏதாவது கைங்கரியம் செய்யவேண்டும் என்ற அத்தியந்த காமம், தந்திதுர்க்கராஜாவுக்கு இருந்தது. தன் உள்ளக்கிடக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று சிற்றப்பருக்குக் கட்டளையிட்டுவிட்டுத்தான் இவ்வுலகை நீத்தாராம். ஒளிவீசும் கருமேகன், அந்த ஸ்ரீமந்நாராயணன் பேரில் வைரமேகன் என் நாமம் சூட்டிக்கொண்டவர் ஆயிற்றே. கிருஷ்ணராஜாவும் மறக்காமல் வைரமேகன் என்ற அரசருடைய திருநாமத்திலேயே அஷ்டபுயப் பெருமானுக்கு வாரிக் கொடுத்தார்.

“நந்திவர்மப் பல்லவருக்கும் இராட்டபாடி மீது பெருத்த அபிமானம் பிறந்தது. தான் உயிரோடு இருப்பதற்கும், சாளுக்கியத் தொல்லைகள் இல்லாமல் ஆட்சி புரிவதற்கும், தந்திதுர்க்கரும், கிருஷ்ணராஜரும் முக்கிய காரணங்கள் என்று கருதினார். இராட்டிரக்கூட அரசின் கோரிக்கைகளுக்கும் விண்ணப்பங்களுக்கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அப்போதைய இராட்டிரக்கூட அரசர் பெரிய கோவிந்தரின் விருப்பத்தை மீறி அவர் எதுவும் செய்ததில்லையாதலால், தன்னுடைய தம்பிக்கு எதிராகப் போர் புரிய வாரும், என்று அவர் கோரிக்கை விடுத்ததும், அதை ஏற்றுக் கொண்ட ஏகதீரர் பல்லவமல்லர், துருவராஜருக்குச் சத்துரு ஆனார்.”

“இராட்டிரக்கூடமும், துண்டகவிஷயமும், சாளுக்கியமும், பாண்டியமும் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன, ஐயா! இராட்டிரக்கூடம் சாளுக்கியத்தை வீழ்த்தி உதயமாகத் துடித்தது. சாளுக்கியம் காஞ்சியைப் பரம்பரை எதிரியாக எதிர்த்தது. காஞ்சியின் நிலைமை, சாளுக்கியத்தை எதிர்க்க, இராட்டிரக்கூடத்துக்கு மறைமுகமாகத் தூண்டுதலை ஏற்படுத்தியது. இம்முக்கோணத்திற்கு இடையே பாண்டியமும் கங்கமும்! இந்த ஐந்து நாடுகளையும் ஆண்ட அரசர்களின் இயல்புகள்தாம் எவ்வளவு வேறுபட்டு நிற்கின்றன! இவ்வியல்புகளே அல்லவா அந்நந்நாட்டு மக்களின் வாழ்விலும் ஊடுருவிப் பெரிய மாற்றங்களை நிகழ்த்தி விட்டன!”

“ஆமாம். வரலாறு வழங்கும் பாடங்கள் ஆழமானவை, விநயா! ஆனால், புதியதல்ல. முன்னம் நடந்தவையே, மீண்டும் மீண்டும் புதிய வடிவங்கள் எடுத்துப் புதுச்சேர்ப்புடன் வந்து கவிகின்றன. அவ்வளவுதான். இவற்றைப் பிரித்துப் பார்த்து, எந்த மனித உணர்வுகளின் கட்டமைப்பால் இவற்றின் அடிவாரம் கிளைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவர்கள், அமைதியான மனத்துடன், தெளிவான விடைகளோடு, இவற்றின் அறைகூவல்களைச் சந்திக்கிறார்கள்.”

சாளுக்கியப் பேரரசு இல்லாமற்போனதும், ஸ்ரீபுருஷர் என்ன செய்தார்?”

“ஏற்கனவே, சாளுக்கியம்-கங்கம் என்ற பிணைப்பு, பாண்டியம்-கங்கம் என்று மாறிப்போயிருந்தது. கீர்த்திவர்மருடன் அவருடைய புதல்வர்களும் மறைந்த பிறகு, ஸ்ரீபுருஷர், சாளுக்கியப் பேரரசு இருந்த இடத்தில், தன்னுடைய ஸ்ரீராஜ்யத்தை நிலைநிறுத்திக் கொள்ளக் கனவு கண்டார். மெத்தப் பிரயாசையும் பட்டார். தகுதிவாய்ந்தவர்தான். ஆனால், இராட்டிரக்கூடம் சாமானிய எதிரி அன்றே? கிருஷ்ணராஜாவின் வலிமையால் கர்ணாடம் முழுதும் இரட்டபாடியின் கட்டுப்பாட்டில் வந்தது. எஞ்சியிருந்த சாளுக்கிய விசுவாசிகளில் சிலர் இராட்டிரக்கூடர்களின் பக்கம் சாய்ந்தார்கள். சாயாதவர்களை ஸ்ரீபுருஷர் தம்பக்கம் இழுத்தார். தந்திதுர்க்கரின் நண்பன் கோவிந்தராஜன் அப்படி ஒருவன். இராட்டிரக்கூடனான அவன், கீர்த்திவர்மரின் பக்கமே தொடர்ந்து நின்றான். அவன் ஆண்ட ஆதித்தியவாடா, இராட்டிரக்கூட எல்லைக்குள் வந்துவிட, அவன் கங்கத்தை நோக்கிப் புலம்பெயர்ந்தான். அவனுடைய மகள், காஞ்சி அப்பாயியைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவளை, ஸ்ரீபுருஷர் தன்னுடைய மூத்தமகன் துர்க்கமாறனுக்கு மனைவியாக ஏற்றுக்கொண்டார். சிறுகச் சிறுகக் கங்கவாடியை நிலை நிறுத்தத் துவங்கினார். அதனால், கர்ணாடத்தில் கங்கத்துக்கும் இராட்டிரக்கூடத்துக்கும் உரசல்கள் துவங்கின.”

“அப்போது கர்ணாடத்தில் நிலைமை எப்படி இருந்தது? ஒரு பேரரசு முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னொன்று உதயமாகிக் கொண்டிருக்கிறது. மற்ற சிற்றரசுகள் இந்த மாற்றத்தை எப்படி நோக்கினார்கள்?”

கங்கவம்சத்தைச் சேர்ந்த மாரஸர்வன், அவனுடைய ராஜ்ஜியத்தைப் பரிபாலனம் செய்துவந்த ததிகராசர், முகுந்தத்தை ஆண்டுவந்த சாளுக்கியன் கட்டியிரதேவன், அவனுடைய வலக்கையாக இருந்த தோசி இப்படிப் பலர் கிருஷ்ணராஜாவை எதிர்க்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“மேற்குக் கடற்கரையோரம் ஆளுபத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. திருவாமூரில் ஒதுங்கியிருந்த ஆளுபராசன், தகுந்த சமயம் பார்த்துக்கொண்டு, அங்கிருந்து ரேணாடு வழியாக உதயாவரத்துக்கு வந்து சேர்ந்து விட்டிருந்தான். கிருஷ்ணராஜாவை எதிர்த்துச் சென்ற, அவனுடைய மாமனின் பெயரரான கீர்த்திவர்மரின் சேனையில் அவனுடைய சேனையும் இணைந்திருந்தது. கீர்த்திவர்மர் கொலையுண்டதும், சில ஆண்டுகளிலேயே அவன் பனவாசியைக் கிருஷ்ணராஜாவிடம் இழந்தான். ஆளுபக்கேடம் ஆறாயிரமும், பட்டியும் மட்டும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தன. பனவாசி கிருஷ்ணராஜாவின் ஆசியோடு, ஜாலபுல்லனின் கண்காணிப்பின் கீழே வந்தது. இந்தச் சமயத்தில், ஆளுபராசனின் வாழ்வும் முடிந்தது. இறப்பதற்கு முன்னால், நாட்டை இருபிரிவுகளாகப் பிரித்து, ஒன்றைத் தன் மகன் சித்ரவாஹனனுக்கும், இன்னொன்றைச் சகோதரி மகன் ரணஸாகரனுக்கும் தந்தான்.”

“சகோதரி மகனுக்கு எதற்காக?”

“தந்தைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக. ரணஸாகரன் பாண்டியனின் சந்ததி என்று கேள்விப்பட்டேன். ரணதீரருக்குத் தன் மகளைத் தரும்போது, அவனுடைய தந்தை அவருக்குத் தந்த உறுதிமொழி இது என்கிறார்கள். உதயாவரம் ரணஸாகரனின் கட்டுப்பாட்டிலும், பேர்க்குஞ்ஜியும் பொம்பூச்சபுரமும் சித்திரவாஹனின் கட்டுப்பாட்டிலும் வந்தன. ஆனால், தந்தை செய்த இந்த ஏற்பாடு சித்திரவாஹனுக்குப் பிடிக்காததால், ஆளுவராசன் மறைந்தபிறகு, இருபிரிவுகளுக்கு இடையேயும் பெருத்த சண்டைகள். கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் நீடித்தன. இவை சிறு பிராந்தியங்கள். அங்கே கர்ணாடமே தன்னுடைய தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள கங்கத்துக்கும் இரட்டத்துக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தபோது, இவர்கள் பாட்டுக்குத் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு காலம் கழித்துவந்தார்கள். இருந்தாலும், இவர்களுடைய விசுவாசம் கங்கத்திடம்தான்.

“இதேபோல, இன்னும் இரண்டு சிறிய அரசுகள் எதிர் எதிராக மல்லுக்கு நின்றன. ஒன்று நான் ஏற்கனவே குறிப்பிட்டுக் கூறியிருந்த பாணர்களின் அரசு. இன்னொன்று பல்லவர்களின் வம்சம் நாங்கள் என்று தம்மை அறிவித்துக் கொண்ட நொளம்பர்களின் அரசு.

“இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, குழம்பியிருந்த கர்ணாட மற்றும் துண்டக ராஷ்ட்ர ராஜாங்கக் குளங்களில், அவரவர் திறமைக்கேற்ப மீன் பிடித்தார்கள். அடுத்துவந்த பஃதுப் பஃதிரண்டு வருடங்களில், தத்தம் நிலைமைகளையும், உரிமைகளையும் உறுதி செய்துகொள்ள முயன்றார்கள். உதயசந்திரன் காஞ்சி அரியணையை வலுப்படுத்தி விட்டுத்தான் இறந்தான். பாண்டியப் படைகள், காவிரிக்குத் தெற்கேயே நிலைகொண்டு விட்டன. மாறவர்மர் அரிகேசரியின் ஆட்சிக்காலம் முடியும்வரை பாண்டியர்களின் தலையீடு காஞ்சிக்கு எழவில்லை. பாண்டியம் என்னும் பற்றிரும்பு மெலிந்ததும், அள் அற்றுப்போன கோடரித்தலை போலக் கங்கத்தின் தக்கணக் கனவு கழன்றது. அவ்வப்போது கங்கத்துக்கும் காஞ்சிக்கும் இடையே மட்டும் சண்டைகள் நிகழ்ந்து வந்தாலும், கங்கமண்டலத்தின் இறக்கமும் ஏற்படத் துவங்கியது. துர்க்கமாறன் ஆண்ட பிராந்தியம், துண்டகராஷ்ட்ரத்தின் எல்லைக்கருகே இருந்ததால், புதுகண்ட விஷயத்தில் கொமாரமங்கலம் போன்ற சில பல்லவப் பகுதிகள் அவனுடைய கட்டுப்பாட்டில் சேர்ந்தன. பாணர்கள் நந்திபோத்தரையருக்கு அனுசரணையாக மாறியிருந்தார்கள். கங்கத்தைப் பலவீனமாக்கியதில் இவர்களுக்குப் பெரும்பங்கு இருந்தது. அடிக்கடி, கங்கப்பகுதிகளைத் தாக்கினார்கள். சில பிராந்தியங்களையும் கைப்பற்றினார்கள்.”

“கங்கர்களின் வரலாற்றைப் பற்றிச் சொல்லும்போது பாணர்களைப் பற்றிப் பிறகு சொல்கிறேன் என்றீர்கள். பூவிக்கிரம கங்கர், ஒரு பாணர் கிளையைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டார் என்றீர்கள். நான் கங்கத்தைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கும் காலத்தில், சில வணிகர்களைச் சந்தித்து உரையாடி இருக்கிறேன். அவர்களோடு சில மாதங்கள் கழித்ததும் உண்டு. அவர்களில் சிலர் பெரும்பாணப்பாடியில் இருந்து வந்திருக்கிறோம் என்றார்கள்.”

“ஆம். இங்கே கருப்பு ஆற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா”

“அதுதான் பெயரிலிலேயே கிருஷ்ணை என்று வைத்திருக்கிறாளே”

“அவளுக்குப் போட்டியாகக் கிருஷ்ணப் பெண்ணை என்று ஒருத்தி ஓடுகிறாள். சித்திராவதி என்று பெயர். இந்த நதி, காண்டிக் கோட்டை அருகே, பெண்ணையுடன் கலக்கிறது. வரும் வழியெல்லாம் கருமணல் பூமி. கிருஷ்ணையைப் போலவே. நதியே கருப்பாக இருக்கும். இந்தப் பகுதியில்தான் பாணர்கள் இருந்தார்கள். நீ நிச்சயம் அதைத் தாண்டி வந்திருப்பாய்”

“பாணர்களுக்கு என்று நாடு இருந்ததா? அவர்கள் ஆநிரை கவரும் கள்வர்கள் கூட்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.”

“நினைத்தது தவறன்று. அவர்களுக்கு அதுதான் முக்கிய தொழிலாக இருந்தது. மேற்கில் இருந்தவர்கள், வடபுறம் சென்று, பிறகு தென்திசை நகர்ந்து, பூர்வோத்தரம் போய்...  இப்படி எல்லாப் பகுதிகளிலும் விரவி இருந்தவர்கள். சர்வநந்தி கேள்விப்பட்டிருப்பாயே? அவர் பாணராஷ்ட்ரத்தில் இருந்த பாடலிகாவில்தான் தங்கியிருந்தார் என்று சொல்வார்கள்.”

“கச்சி அருகே இருக்கும் பாடலிகாவா? அது பாணராஷ்ட்ரத்தின் பகுதியாக இருந்ததா? லோகவிபாகம் எழுதிய சர்வநந்தியைப் பற்றியா சொல்கிறீர்கள்?”

“அடடே! லோகவிபாகத்தைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறாய் போலிருக்கிறதே?”

“மஹாவீர ஆச்சாரியருக்கு அது வேதம் போல. அதைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கமாட்டார். அண்டம், கோள்கள், அவற்றைக் கணிக்கும் குறிப்புக்கள் என்று அதிலிருந்து நிறைய சொல்வார். மர்மமான சாத்திரம் என்பார்.”

“கடலை ஒட்டி இருக்கும் அந்தப் பாடலிகாவில் சமணர்களுக்கான ஓர் ஆசிரமம் இருந்ததாகச் சொல்வார்கள். பாடலிகாவே ஒருகாலத்தில் சமணர்களுக்கு முக்கியத் தலமாக இருந்திருக்கிறது. அப்போதுதான் அங்கு சர்வநந்தி தங்கியிருந்த போது அவரால் எழுதப்பட்டது. பாணர்கள் ஆட்சிதான், அங்கே, அப்போது.”

“ஆனால், நான் பார்த்தவர்கள் சொன்ன பெரும்பாணப்பாடி, கங்கத்துக்குக் கிழக்கில், குவலாலபுரம் அருகே இருப்பதாகத்தான் நான் புரிந்து கொண்டிருந்தேன்.”

“அது சரிதான். நாம் இப்போது பெரும்பாணப்பாடி என்று அழைக்கும் பகுதி அங்கேதான் இருக்கிறது. பாணர்களின் பெரிய பாடி. பிருஹத்பாண ராஷ்ட்ரம். சிறு சிறு பாடிகளும் இந்தப் பகுதியில் நிறைய உண்டு. அதனால்தான் சொன்னேன், அவர்கள் நிலையான பிராந்தியத்தை ஆண்டதில்லையாதலால், பாணர்கள் பிராந்தியம் என்று ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். அது மட்டுமன்று. அவர்களுடைய ஆட்சி, தனித்துவமான ஒரு ராஜ்ஜியமாகவும் இருந்ததில்லை. சில சமயங்களில் கதம்பர்களுக்கும், சில சமயங்களில் பல்லவர்களுக்கும். சில சமயங்களில் வாதாபி சாளுக்கியர்களுக்கும், சில சமயம் ரேணாடு சோழர்களுக்கும், ஏன் கங்கர்களுக்குமே சிற்றரசாக இருந்தார்கள்.

“கதம்பர் காலத்தில், நந்திமலையை ஆண்டு கொண்டிருந்வர்கள், மயூரசர்மனுக்கும் பல்லவர்களுக்கும் இடையே நடந்த போர்களின் விளைவாக, வடபுறம் ரேணாடு பகுதிக்கு நகர்ந்தார்கள். பிறகு, பல்லவர்களுக்கும், கதம்பர்களுக்கும் இடையே நடந்த மோதல் முற்றுப்பெற்றதும், தெற்காக நகர்ந்து பருவிவிஷயத்துக்கு வந்தார்கள். அப்போது, கதம்பர்களுக்குச் சிற்றரசாக இருந்து, பல்லவர்களுக்கு எதிரியாக இருந்தார்கள். நான் ஏற்கனவே சொன்னதுபோல, இவர்களுடைய தொல்லையைச் சமாளிக்கத்தான், காஞ்சிப் பல்லவர்கள், கங்கத்தை நிலை நிறுத்தினார்கள் என்று சொல்வதும் உண்டு.

“புண்யகுமாரன் என்று ஒருவன் இருந்தான், ரேணாட்டுச் சோழ ராஜன். இலகுலீசப் பக்தன். கிருஷ்ணப் பெண்ணை வரை அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. பாணர்கள் அவனுக்கு அடங்கி இருந்தார்கள். நந்திமலையைச் சுற்றியிருக்கும், கைவர மண்டலத்திலும் ஒரு பாணவமிசத்தினர் இன்றைக்கும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.”

“நொளம்பர்களும் தென் தக்கணத்தில் இவர்களைப்போன்ற சிற்றரசர்கள்தாம் இல்லையா?”

“ஆமாம். ஆனால், நொளம்பர்களை விட, இவர்கள் நிறைய இடங்களில் சிதறி அங்கங்குச் சிறுசிறு பிராந்தியங்களை ஆண்டவர்கள். பாணாசுரன் கதை தெரியுமா?”

“மகாபலி பிள்ளை? சோணிதபுரத்தின் அரசன். சாக்ஷாத் பரமேஸ்வரரே அவனுக்குக் காவலராக இருக்கும் கீர்த்திமை உடையவன்.”

“அவன்தான். பாணாசுரனின் பெயரும், மகாபலியின் பெயரும் இல்லாமல் பாணர்களுடைய மெய்கீர்த்தி இராது. பெயரிலேயேயும் மாவலி நாமத்தைப் பெருமையோடு தாங்குவார்கள். பரமேஸ்வரன், தம்முடைய முன்னோருக்கு வாயிற்காவலனாக இருந்ததையும் தவறாமல் சொல்லிக் கொள்வார்கள்.

இவர்கள் நந்திமலையைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் தான் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அங்கேதானே ஏகசக்ராபுரம் கூட இருக்கிறது? அப்படியென்றால், மஹாபாரதக் காலத்திலிருந்து வழிவழியாக வந்திருக்கும் வமிசமா? அடேயப்பா!”

“கைவர மண்டலத்தில், இப்போது இருப்பவர் தத்த நராதிப மல்லதேவ பாணாதிராஜன், இவர் தந்தை க்ஷத்திரிய மகாபலி விஜயாதித்திய பாணராஜர் ஸ்ரீபரமன். இந்திரராஜாவின் மாப்பிள்ளை.”

“கற்கராஜாவுடைய சகோதரியின் கணவர், அல்லரா?”.

“ஆம். முதன்முதலில் பல்லவர்களுக்குத் தொல்லையாக இருந்தவர்கள், பல்லவமன்னர், காஞ்சியில் நிலை பெற்றவுடன், பல்லவர்களோடு ஒத்துப்போய் விட்டார்கள். சாளுக்கிய அரசின் எழுச்சியால், பல்லவர்கள் நிலை தாழந்தபோது, வழியில் சிக்கிய இவர்களுடைய பிராந்தியம், அருகிலேயே இருந்த கங்கர்களுக்கு அடங்கிப் போயிற்று. கங்கத்துக்கு அடங்கியவர்கள், அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களான சாளுக்கியர்களுக்கும் அடங்கியவர்களாக ஆனார்கள். இராட்டிரக்கூடம் வலுப்பெற்றபோது, சாளுக்கியர்களிடமிருந்தும், கங்கர்களிடமிருந்தும் விலகினார்கள். எல்லாப் பாணர்களும் ஒரே வமிசக் கிளைக்குக் கீழ் வந்தவர்கள் அல்லர். நிறைய கிளைகள். ஆனால், எல்லோரும் மாவலி பாணராசர்தாம்.

பூவிக்கிரமர், குவலாலபுரத்தைச் சேர்ந்த பாணவித்யாதர பிரபுமேரு வமிசத்தில் வந்த மகாவீர பட்ட விக்கிரமாதித்யனுக்கு நிலங்களை அளித்துக் கௌரவப் படுத்தினார். குவலாலபுரம் வடுகவழி மேற்கை ஒட்டிய பகுதிதானே? இப்படிச் செய்து, இந்தப் பாண அரசனைப் பல்லவர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டார். 

“ரேணாட்டுச் சோழர்கள் என்ன செய்தார்கள்?”

“ரேணாடு போயிருக்கிறாயா?”

“ஓ! கமலாபுரம் வழியாகத்தான் இங்கே வந்து சேர்ந்தேன். சித்திராவதியும் கிருஷ்ணப் பெண்ணையும் சேரும் இடத்தில் கொஞ்ச காலம் சுற்றிக்கொண்டு இருந்தேன். அது கிருஷ்ணப் பெண்ணை என்று இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரியும். மிகவும் அச்சம் தரும் குகைகள். நிறைய காபாலிகர்களையும், காளாமுகர்களையும் காண நேர்ந்தது. இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது”

“ஐயயோ! அங்கெல்லாம் தனியாகவா சுற்றினாய்?”

“கூட ஒருத்தி இருந்தாள்” வெட்கினான் விநயாதி சர்மன்.


“என்ன? ஒருத்தியா?” ஆச்சரியத்தில் அகன்றன பிரதாபரின் கண்கள். “ஆண்மகனான, நீ சுற்றுவதே அபாயம் என்ற கோணத்தில் நான் கேள்வி கேட்டால், ஒரு பெண்ணை வேறு வைத்துக்கொண்டு சுற்றினாய் என்கிறாயே? எதுவும் ஆபத்து நேரிடவில்லையே? உன்னால் அவளுக்குத் துணையாக இருக்க முடிந்ததா? வாள் சுழற்றத் தெரியாதவன் நீ 

“ஹா ஹா ஹா.. நான் துணையாக இருப்பதா? அவள்தான் எனக்குத் துணையாக இருந்தாள். காளாமுகி அவள். அவளோடு இருப்பதே எனக்குச் சில சமயங்களில் அச்சம் தரும். சில இரவுகள், எரியும் சிதைகளோடு மயானத்திலேயே கழித்திருக்கிறேன். பயமாக இருந்தாலும், அந்தப் பயம் ஒருவித போதைதான். விடிந்ததும், உணர்வும், அறிவும் திரும்பியதும், கழித்த இரவு நிஜம்தானா இல்லை கனவா என்றே தோன்றும்.”

“அடடே! காளாமுகிதான் உன் பிரம்மசரியத்துக்குக் குந்தகம் விளைவித்தவளா? நல்லவேளை. காபாலிகையோடு சுற்றவில்லை நீ.”

“ஐயையோ! அவளுக்கே காபாலிகர்கள் என்றால் பயம். அவர்களும் மயானத்தில்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் இல்லாத சுடலைகளுக்குத்தான் போவோம். சிலசமயங்களில் லகுலீச மடங்களிலும் தங்கியிருந்திருக்கிறோம். அங்குப் பாதுகாப்பு உண்டு.”

“ஆமாம். பாசுபதர்களும், லகுலீசர்களும் காளாமுகர்களை விலக்குவதில்லை. அந்தப் பிராந்தியங்களில் அவர்கள் அதிகம். ரேணாடு அரசர்கள் புண்யகுமாரனிலிருந்து, பிருதிவல்லப விஜயாதித்தியன், பிறகு அவனுடைய குமாரன்.. அவன் பெயர் என்ன மறந்துவிட்டதே ..” யோசித்தார் பிரதாபர்.

“நான் சுற்றிக்கொண்டிருந்தபோது, சத்யாதித்திய சோழர் என்று ஒருவர் இருந்தார். இராட்டிரக்கூடம், பல்லவம், பாணராஷ்ட்ரம் எல்லாவற்றையும் வெறுத்தார். கூட அவள் இருந்ததால்தான், என்னால் உயிரோடு உலவ முடிந்தது.”

“புரிகிறது. கோவிந்த மஹாராஜாவால் அடக்கப்பட்ட அரசு அது. அதற்கு முன்னால், பல்லவமல்லருக்கு அடங்கியிருந்தது. உதயசந்திரன்தான் அதை வென்று, வாதாபியின் கட்டுப்பாட்டிலிருந்து பிரித்தகற்றிப் பல்லவ சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்தான். அவன் அப்படி இணைப்பதற்கு முன்னால், பெரும்பாணப்பாடிவரை அவர்களுடைய ஆதிக்கம்தான் இருந்தது.”

“அப்படியென்றால், பாணர்கள் அவர்களுக்கு அடங்கித்தான் இருந்தார்களா?”

“ஆமாம். நீ ரேணாட்டில் எங்கெங்கெல்லாம் சுற்றிக்கொண்டிருந்தாய்?”

“கமலாபுரத்தில்தான் பெரும்பொழுது கழிந்தது. பாம்புளிகையில் கொஞ்ச காலம் இருந்தேன். பூடிபுத்திக்கடபள்ளி என்று ஓருர். அங்கு நிறைய மடங்கள் இருந்தன. இரண்டு பெரிய பாடசாலைகளும் இருந்தன. அதில் ஒன்றில் வகுப்புக்களும் நடத்தினேன். 

“என்ன கற்றுக்கொடுத்தாய்?”

“கணிதம்தான். வேதங்கள், இதிஹாசங்கள், வியாகரணங்கள் போன்றவை போதிக்க மஹாபண்டிதர்களும் இருந்தார்கள்”

“சமய சம்பந்தமாக நிறைய சதஸ்ஸூகள் நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கமலாபுரத்தில் ஒன்றிரண்டில் நானும் பங்கேற்றிருக்கிறேன்.”

“ஆமாம் நிறைய நடக்கும் என்று சொன்னார்கள். பட்டதகல் அருகே இருக்கிறதல்லவா, கோடிய சைவ மடம்? அதைப்போலவே, இங்கும் லகுலீச பாசுபதமும், பௌத்தமும், ஜைனமும் கூடக் கற்றுக்கொடுத்தார்கள் என்றார்கள். ஆனால், நான் இருந்தபோது, பாடசாலைக்கு நிதி வரத்து இல்லை. தங்கிப் படிக்கும் வித்தியார்த்திகளுக்குத் தானியச் சேமிப்பும் கிடையாது. அன்றன்று யாசகம் எடுத்துத்தான் உண்பார்கள். நாங்கள் மயானத்தில் சுற்றிக் கொண்டிருந்ததால் அதிகம் சிரமப்படவில்லை.”

“கோவிந்தமஹாராஜாவின் மரணம் எவ்வளவு பிராந்தியங்களைப் பாதித்திருக்கிறது பார்!”

“அங்கே லகுலீசருக்குக் கோவிலும் இருந்தது. அந்தக் கோவிலில் இருந்த தட்சிணாமூர்த்தி வெகு அழகு. தத்ரூபமாக நம் எதிரே அமர்ந்து கொண்டிருப்பது போலவே இருக்கும். நிறைய இடங்களில், லகுலீசருக்குக் காப்புச் செய்யுளும் செதுக்கியிருப்பார்கள்.”

“லகுலீசருக்குக் காப்புச் செய்யுளா? கேள்விப்பட்டதே இல்லையே? நினைவிருக்கிறதா?”

 

“ஜயதி த்ருதசந்த்³ரரேக²ம்ʼ

விபுலாமததாரகாஶுபம் லோகே|

க³க³னமிவ ஸுப்ரஸன்னம்ʼ

வபுரப்ரதிமம் லகுடபாணே:||

 

சட்டென்று சொன்னான். அவன் சொல்லும் அழகையும், சொன்னதில் இருந்த அழகையும் ரசித்தார் பிரதாபர். “ஆஹா! தாரகை என்று விண்மீனையும், தாரகாசுரனையும் சிலேடையாக்கிருக்கிறார்களோ? அழகு.” என்றவர் கதையைத் தொடர்ந்தார்.

“கீர்த்திவர்மருக்கு அடங்கியவைகளாக இருந்த ரேணாடும், பாணமும் பல்லவர்களுக்கு அடங்கிய நாடுகளாக ஆன அதே சமயத்தில், நொளம்பளிகை ஸஹஸ்ரமும் நிர்க்குண்ட திரிஷதமும் கூடப் பல்லவர்களுக்குச் சிற்றரசுகளாயின. ரேணாடும், பாணப்பாடியும், சாளுக்கிய ஆட்சியின் போதே உதயசந்திரனால் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட அரசுகளாக ஆகிவிட்டன. ஆனால், நொளம்பளிகையோ கங்கநாடு கிருஷ்ணராஜாவால் தோற்கடிக்கப்பட்ட பிறகுதான், பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசாக ஆயிற்று.”

“ஆச்சர்யமாக இருக்கிறதே? தோற்கடித்தது இராட்டிரக்கூடம். விசுவாசம் காஞ்சிக்கா?”

“ராஜாங்க விஷயங்களில் வேடிக்கைக்குக் குறைவென்ன? சாளுக்கியம் வீழ்ந்ததும், சில அரசுகள், கங்கத்தின் பக்கம் சாய்ந்தன என்று சொன்னேன், அல்லவா? ஆளுபத்தைப் போல, நொளம்பவாடியும் அவற்றுள் ஒன்று. கங்கத்தைக் கிருஷ்ணராஜா எதிர்த்தபோது, பல்லவப்படைகளும் அவருக்குத் துணை நின்றன. கீழ்த்திசையிலிருந்து காஞ்சியும் பாணராஷ்ட்ரமும் அழுத்தம் கொடுக்க, வடக்கிலிருந்து கிருஷ்ணராஜா பலமாகத் தாக்கினார். அவருடைய புரவிப்படைகள் அங்கங்கே ஊடுருவிக் கங்கமண்டலத்தைச் சல்லடையாக்கின. அவற்றை முழுமூச்சுடன் எதிர்க்கமுடியாமல் ஸ்ரீபுருஷருடைய யானைப்படைகள் தத்தளித்ததற்கு முக்கிய காரணம், பல்லவ யானைப்படைகள் கொடுத்த அழுத்தம்தான். இந்தப் போரில் கங்கம் வீழ்ந்தபோதுதான், பூவிக்கிரமராஜரிடம் காஞ்சி இழந்த உக்கிரோதயத்தைப் பல்லவமல்லர் மீட்டெடுத்தார். உண்மையில் பெருமானடி தான்தான் என்று நிரூபித்தார். இப்போது கங்கஅரசன் ராஜமல்ல சத்யவாக்கியன் தன்னைப் பெருமானடி என்று கூறிக்கொள்கிறான். ஏன், சிவமாறரும் தம்மை அவ்வப்போது பெருமானடி என்று கூறிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், அது, பல்லவர்களுக்கு மரியாதையை அதிகப்படுத்துகிறதே தவிர, குறைக்கவில்லை.”

“தாம் யாருக்குச் சிற்றரசரோ, அவருடைய பெயரைத் தாங்குவது வழக்கம்தானே?”

“ஆமாம். ஆளுபமன்னன் தன்னைப் பாண்டியன் என்று அழைத்துக்கொள்வதும், ரேணாட்டுராஜா தம்மை வல்லபன், விஜயாதித்தியன் என்று கூறிக்கொள்வதும், நொளம்பர்கள் தம்மைப் பல்லவதிராயன் என்று சொல்லிக்கொள்வதும் காணக் கிடைக்கிறதே. சிம்ஹபோத்தராஜாவின் தந்தை மங்கலராஜா, பல்லவகுலான்வய என்று தம்மை அழைத்துக்கொண்ட வம்சத்தில் வந்தவர்தான். அவர்களுடைய பெயரிலே பல்லவதிஅரையன் என்ற வம்சப்பெயர், சாளுக்கியர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருக்கும்போதும் இருந்ததே.”

“நந்திவர்மப் பல்லவமல்லர் காஞ்சிக்குப் பன்னிரண்டு வயதிலே அழைத்து வரப்பட்டபோது, காஞ்சியை ஒரு பல்லவதி அரையர்தான் ஆட்சி புரிந்துவந்தார் என்று சொன்னீர்கள்.”

“ஆமாம். அந்த ஜெயபல்லவதியரையன் சிம்ஹபோத்தராஜாவின் தாயாதிதான். சாளுக்கியர்கள் மற்றும் பல்லவர்களின் இடையே ஏற்பட்ட பரம்பரைப் பகையால், பல்லவர்களிடமிருந்து தள்ளி நின்றவர்கள், கீர்த்திவர்மர் இறந்து பட்டதும் உடனேயே பல்லவர்களுக்கு அணுக்கமாக ஆக முடியவில்லை. இவ்வளவு காலம் எதிரணியில் இருந்து பல்லவர்களை வெட்டி வீழ்த்திவந்தவர்கள் அல்லவா?”

“அதனால்தான் கங்கத்துக்கு நெருக்கமாக ஆனார்கள் போலிருக்கிறது”

“ஆமாம். ஆனால் விதியின் விளையாட்டு, இராட்டிரக்கூடத்தின் ரூபத்தில் நடத்திவைக்கப்பட்டது. கங்க ஆதிக்கம் இராட்டிரக்கூடத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும், நொளம்பர்கள் என்ன செய்வது என்று குழம்பிப் போனார்கள். சமயம் பார்த்த பல்லவமல்லர், நொளம்பர்களைத் தாக்கினார்.”

“ஹேமவதியில்தான் அவர்களுடைய அரண்மனை இருந்தததல்லவா?”

“இன்றும் இருக்கிறதே? பல போர்களைக் கண்ட பிராந்தியம் அது. அலமலந்துபோன சிம்ஹபோத்தர் வேறு வழியின்றி பல்லவத்துக்குத் தலை வணங்கினார். இடையில் அறுந்து போயிருந்த பல்லவத்தொடர்பு மீண்டும் நொளம்பத்தோடு கிளைத்தது. கங்கமும் துண்டகமும் நெருங்கி வந்ததும் இதற்கு இன்னொரு காரணம். பாணர்களை எதிர்க்கத்தான் பல்லவ மன்னர்கள் கங்கத்தைத் தூக்கி நிறுத்தினார்கள் என்று சொன்னேன் அல்லவா? அப்போதிலிருந்து கங்க அரசர்கள் பட்டாபிஷேகம் செய்துகொள்ளும்போது, அவர்களுடைய மணிமகுடத்தைப் பல்லவ அரசர்கள்தாம், தம் கையால் எடுத்துச் சூட்டி விடுவது வழக்கம். சாளுக்கிய விரோதம் ஏற்பட்ட பிறகு இது நின்று போயிருந்தது. இந்தப் பழக்கம் மீண்டும் துளிர்க்கும் அளவுக்குக் கங்கமும் துண்டகமும் நெருங்கி வந்தன.

“ஸ்ரீபுருஷர் தோற்றதும், கிருஷ்ணராஜாவிடம் சரணாகதி அடைந்தார் என்றும், கங்கத்தை இணைக்காமல் தனிநாடாகவே ஸ்ரீபுருஷரை ஆளச்சொன்னார் என்று சொல்லியிருக்கிறேன். ஒரு பஃது வருடங்கள் இப்படியே கழிந்திருக்கலாம். இராட்டிரக்கூடமும் அதற்குப் பிறகு எந்தப் போரிலும் ஈடுபடவில்லை”

“ஓ! கங்கத்துக்குப் பிறகு வேங்கி. அத்தோடு போர்கள் நின்றுவிட்டனவா?”

“ஆமாம். வேங்கிப்போர் அடுத்த வருடமே நடந்துவிட்டது. பெரிய கோவிந்தர் அதைப் பார்த்துக் கொண்டுவிட்டார். பிறகு இராஜ்ஜியக் கட்டமைப்பிலும், ஏலபுரிக் கிருஷ்ணேஸ்வரத்தைக் கட்டுவதிலும்தான் கிருஷ்ணராஜா தன்னுடைய கவனத்தைச் செலவிட்டார். அவருக்கும் உடல் நலிவு ஏற்பட்டது. அடுத்த ஐந்தாறு வருடங்களில் அவர் தேஹாந்தமும் அடைந்தார்.”

“பெரிய கோவிந்தரை அவர்தான் அரசராக நியமித்தாரா?”

“ஆமாம். பல்லவமல்லரை இரட்டத்துக்கு அனுகூலமாக்கிய பாங்கிலும் கற்கனை எதிர்த்து நடந்த போரை நடத்திய விதத்திலும், பெரிய கோவிந்தர் பால் மகிழ்ந்திருந்த கிருஷ்ணராஜா, தனக்குப் பிறகு அரியணை ஏறப்போவது பெரிய கோவிந்தர்தான் என்று அப்போதே முடிவு செய்துவிட்டிருந்தார். கீர்த்திவர்மனைத் தோற்கடித்து, எஞ்சி நிற்கும் சாளுக்கியர் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களைத் தான் கைப்பற்றியதும், கோவிந்தருக்கு யுவராஜா பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டார். வேங்கிப் படையெடுப்பு நடந்தபோது, கோவிந்தர் யுவராஜா என்ற தகுதியோடுதான் படையை நடத்திச் சென்றார்.”

“அப்போது துருவராஜா என்ன செய்து கொண்டிருந்தார்?”

“பெரிய கோவிந்தர் இராணுவத்தையும், பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள, நிர்வாகம் நாட்டு நடப்பு, குடிகள் நலன், ஒற்றர்கள், பண்பாடு, வேளாண்மை, விவசாயம், வணிகம், வரிகள், நிதி போன்றவற்றை எல்லாம் துருவராஜாதான் நிர்வகித்தார். கிருஷ்ணராஜா, கிருஷ்ணேஸ்வரத்தைக் கட்டும் பணியில் முழுமூச்சாக இறங்கிவிட்டிருந்தார்”

“அப்படியென்றால், இராட்டிரக்கூடம் சுபதுங்கர் அகாலவர்ஷர் கிருஷ்ணராஜா காலத்தில், ஓர் அமைதியான நிலையை எட்டிவிட்டது அல்லவா?”

“நீ சரியாகக் கதையை உள்வாங்கியிருக்கிறாயா என்று பரீட்சித்துப் பார்க்கட்டுமா? எப்படிக் கிருஷ்ணராஜா காலத்தில், ஓர் அமைதியான நிலையை எட்டிவிட்டது என்று சொல்கிறாய்?”

“அடடா! நுணலாகி விட்டேனோ?” சிரித்தான் விநயன்.

“முயன்று பார்க்கிறேன். கிருஷ்ணராஜா அரியணை ஏறியதும் அவருக்குப் பல தொந்தரவுகள். ஒன்று வடக்கில். கற்கனும், நாகபடனும். கிழக்கில் வேங்கி. பீமநதிக்குக் கீழே கீர்த்திவர்மர். அதற்குக் கீழே கங்கவாடி. தென் கிழக்கில் காஞ்சி. ஆனால், அங்கே அலமாறு, பகையால் அன்று, தந்திதுர்கரின் வாக்கை நிறைவேற்ற வேண்டிய கடமையால். முதலில், கற்கனைச் சரிக்கட்டினார். நாகபடனை எதிர்க்க வகையில்லாததால், உஜ்ஜைனியை விட்டுக்கொடுத்தார். எழுச்சியுறத் துடித்துக் கொண்டிருந்த வாதாபியை நிர்மூலமாக்கிக் குந்தளத்தைக் கைப்பற்றினார். வேங்கியைப் பெரிய கோவிந்தர் மூலமாக அடக்கவிட்டுத் தானே முன்னின்று போரிட்டுக் கங்கத்தை ஒடுக்கினார். இதற்குப் பிறகு, அவருக்குப் பெரிய எதிரிகள் யாரும் இல்லை. இராட்டிரக்கூடத் தேருக்கு, ஒரு செல்கதி வந்துவிட்டது. சரியா?”

“மிகச்சரி. ஒரு தொந்தரவு, சாளுக்கிய தளபதி ராஹப்பாவால் கொஞ்ச காலம் இருந்தது. கீர்த்திவர்மனை விட, இவன் அதிகத் தொல்லை கொடுத்தான். அவனையும் ஒழித்தார். தந்திதுர்கன் விட்டுச் சென்றது, பிறந்த குழந்தை. கிருஷ்ணராஜா அதைப் பாதுகாத்துப் பாலூட்டிப் போஷித்து வளர்த்து, நடைப்பருவம் வரை பேணிப் பேசக் கற்றுக்கொடுத்துப் பாடசாலை செல்வதற்குச் சித்தமாக்கி விட்டுத் தேகாந்தம் அடைந்தார். இவற்றிற்கு இடையே, அந்தத் தேவலோகம் போன்ற கிருஷ்ணேஸ்வரத்தையும் கட்டி முடித்தார்.”

“பரீட்சையில் தேறிவிட்டேனா?”

“உத்தமமாக. வெறும் கதையை மட்டும் கேட்டுக்கொண்டிருக்காமல், அதை மற்ற விஷயங்களோடு தொடர்பு படுத்திப் பார்த்துக்கொண்டால்தான், நான் சொல்லாமல் விட்ட சில உள்விஷயங்களும் புரியும். அப்படிப் புரிந்தால்தான், ஓர் அரசுக்கு ஏற்பட்ட கட்டாயங்கள் என்ன, ஏன் அதனுடைய அரசர், இந்த முடிவுக்கு வந்தார், வேறு முடிவை எடுத்திருந்தால் வரலாறு மாறியிருக்குமா என்றெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடியும். சிறு பிள்ளைகளுக்குப் பொழுதுபோக்குக்காகச் சொல்லப்படும் கதை அன்றே இது? இது ஒரு சமுதாயம் எப்படி ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிப் போனது, மாற்றத்தை விளைவித்தவர்கள் யார், சந்தர்ப்பங்கள் யாவை, மாறிய விதம் எப்படி என்பதை அறிந்துகொள்ளும் ஒரு பயணம். ஒரு பாடம். பாடம் சொல்லுகிறவர்கள் எந்த எந்தத் தோஷத்தை எல்லாம் நீக்க வேண்டும் என்று ஒரு ஸ்லோகம் சொல்லுவார்கள். பொதுவாக, இதை வேதங்கள் ஓதுவதற்காகக் குறிப்பிடுவது உண்டு. நான் எல்லாப் பாடம் சொல்லுகிறவர்களுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன்.”

உடனே விநயன் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான்:

 

கீ³தீ ஶீக்ரீ ஶிரகம்பீ ததா² லிகி²தபாட²|.

அனர்த²ஜ்ஞோSல்பகண்ட²ஶ்ச ஷடே³தே பாட²காதமா ||

 

என்ற பாணினீயாசிக்ஷா ஸ்லோகத்தைத் தானே குறிப்பிடுகிறீர்கள்? எனக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம் இது.”

“அடடாடா! என்ன புத்தி மட்டு எனக்கு! ஒரு பண்டிதன், அதுவும் பாடசாலையில் படிப்பிக்கும் பண்டிதன், அவனிடமே என்னுடைய அல்ப அறிவைக் காட்டிக்கொள்ள நினைத்தேனே” சிரித்தார் பிரதாபர்.

“ஐயா! எதற்கு இந்த விளையாட்டு? தங்களுடைய ஆழந்த அனுபவ அறிவுக்கு முன்னால் என்னுடைய ஏட்டறிவு என்ன நிறை பெறும்! நான் புரிந்து அனுபவித்து நடைமுறைப் படுத்தும் ஒரு விஷயத்தைத் தங்களைப் போன்றவர்களும் அனுபவித்து ஆனந்தப்படுகிறீர்கள் என்று அறியும்போது ஏற்படும் உவகை அலாதியானது. குக்கேஸ்வரருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். இதைத் தமிழ் வெண்பாவின் கட்டுமானத்தில் அவர் அழகாக எழுதியிருக்கிறார்.

 

“சுவடியிற் கண்டதெல்லாம் சொல்லார் விரையார்

தவறாகக் கூறார் தலையாட்டார் பாடார்

அடிக்குரல் ஓதார் அலர்குழலாய்! ஆறும்

படிப்பிப்பர் பாராப் பிழை.”

 

“அபாரம்! சுவடியிற் கண்டதெல்லாம் சொல்லார் – மிகவும் அற்புதம். பிரதி எடுப்பவனின் பிழைகள், சுவடியைக் கட்டினவன் முன்பின்னே வைத்துக்கட்டுவது, காலப்போக்கில் எழுத்துரு மாற்றம், ஏன் சிலவற்றில் வேறு தலைப்பை மாற்றியும் கட்டிவிடுவார்கள் – இவையெல்லாவற்றையும் விலக்கியன்றோ பாடம் சொல்லவேண்டும். சரி, இதில் ஒரு சந்தேகம் கேட்கிறேன். பாட்டோடு பாடினால் கேட்பவர்களின் மனத்தில் இன்னும் நன்றாகத்தானே படியும்? ஏன் கீதத்தை விலக்க வேண்டும்?”

“சிறு விஷயம் மனத்தில் தங்கவேண்டும் என்றால் பாடலோடு சொல்லலாம். இப்போது தாங்கள் ஹோரைக்கணக்காக பேசி வருகிறீர்கள். இதையே நீங்கள் பாடலாகப் பாடினால் எவ்வளவு நேரமாகும்!”

“ஹா ஹா! அப்படிப் போடு!”

இருவரும் சிரித்தார்கள். “இன்னொன்று. இசையைக் கொண்டுவந்தால் அது இன்னோர் அங்கத்தை நுழைத்ததாகி விடும். கவனம் இசையைக் கவனிப்பதிலும் ஈடுபடுமாதலால், சிதறிப்போகும் வாய்ப்புண்டு. ஒலியாகவே கேட்பது, சித்திரமாகக் காண்பது - இவை இரண்டுக்கும் அவை அவற்றுக்கான இடமும் அவசியமும் உள்ளது அல்லவா?

“மிகச்சரி. பாடம் ஒருவர் சொல்லும்போது, வெறுமனே கேட்காமல், சொல்வதைக் குறிப்பெடுக்கத் தலைப்பட்டாலோ, அல்லது சொல்லப்படுவதை நாம் ஒரு சுவடி வைத்துக்கொண்டு கூடவே படித்தாலோ, கவனம் மட்டுப்படத்தான் செய்கிறது. அதனால்தான் வேதங்களை எழுதாதீர்கள், எழுத்தில் படிக்காதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள். கேட்பதில்தான் மனம் கற்பனையையும், அதிக ருசியையும், அறிவையும் பெறுகிறது. சற்று அதிகக் காலம் பிடிக்கும். அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதற்காக அதை இலகுவாக்க யத்தனிக்க முயன்றால், பெறும் அறிவின் ஆழம் குறைகிறது என்பதை நாம் நிதர்சனத்தில் காண்கிறோம். இசையைக் கேட்டுத்தானே தெரிந்துகொள்ள முடியும்? சாஸ்திரத்தைப் படிப்பதால் இசை வந்துவிடுமா என்ன? சித்திரத்தை எழுதித்தான் பார்க்கவேண்டும். அதற்கும், வரைவதற்கு முன்பாக, அக்கலையின் அங்கங்களை மனத்தில் அப்பியசித்து, உருவகித்துப் பார்த்துப் பயிற்சி செய்பவர்களே தேர்ந்த சித்திரக்காரர்களாக ஆகிறார்கள். கல் தச்சர்கள் பாறை இருக்கிறது, உளி இருக்கிறது என்று உடனே செதுக்கத் துவங்கிவிட முடியுமா? மனத்தில் வடிவத்தை உருவகித்துப் பாராதவன், வடிக்கும் வடிவம் வனப்புடையதாக இருப்பது துர்லபம்.

“சரி. கதைக்கு வருகிறேன். கிருஷ்ணராஜா இறந்ததும், ஐந்தாறு வருடங்கள் கழித்துத்தான் துருவருக்கும் பெரிய கோவிந்தருக்கும் இடையே பிரிவு வந்தது. இந்த ஐந்து வருடங்களில் இரட்டத்துக்கும், காஞ்சிக்கும் இடையே நல்ல இணக்கம் இருந்தது என்று சொன்னேன் அல்லவா? இந்த இணக்கம் கங்க அரசரின் முடிசூட்டு விஷயத்தில் இன்னும் இறுகியது. ஸ்ரீபுருஷருக்கு முதுமை வந்துவிட, அடுத்து அரியணையை யார் ஆள்வது என்ற கேள்வி எழுந்தது. ஸ்ரீபுருஷருக்கு நிறைய மனைவிகள். நிறைய குமாரர்கள். சீயகல்லன் பெரியவன். மஹாவீரன். கிருஷ்ணராஜாவோடு போர் நடந்த காலத்திலேயே, தனிப்படையுடன் சில பிராந்தியங்களை நிர்வகித்து வந்தவன். அந்தப் போரில் பெரும் வீரத்தைக் காட்டியவன். அவன் இறந்து விட்டிருந்தான். அவனுக்குச் சமானமான திறமையும், வீரமும் படைத்தவர்கள் இரண்டுபேர் – துர்க்கமாறன் மற்றும் சிவமாறர்.

“இந்தத் துர்க்கமாறனுக்குத்தான், விக்கிரமாதித்திய மஹாராஜாவுடைய புத்திரி விநயாவதி, தன்னுடைய மகளை மணம் செய்துகொடுத்து இருந்தார் அல்லரா?”

“ஆமாம். அவனையும், சிவமாறரையும் தவிர வேறு குமாரர்களும் இருந்தார்கள். ஆனால், இவர்களுக்கு இணை எவரும் இல்லை. சிவமாறருக்குத் தான்தான் அரியணை ஏறவேண்டும் என்ற ஆசை. சிவமாறருடைய ஆசையைப் பெரிய கோவிந்தர் அங்கீகரித்தார். பல்லவவர்மரும் உடன்பட்டார். இந்த உடன்பாட்டால், பல தலைமுறைகளுக்குப் பிறகு, பல்லவமும் கங்கமும் நட்பாக இருக்கும் வாய்ப்பும் கிளைத்தது. விரோதத்தைத் தூண்டிவிடச் சாளுக்கிய அரசுதான் இல்லையே? பாண்டியரும் இல்லை. புது உறவுமுறைகள் கிளைக்கும் காலம் அது. சிவமாறர், பழைய காலத்தில் இருந்த வழக்கத்தின்படி, பல்லவ அரசர் கரத்தாலே முடிசூட்டிக்கொள்ள ஒப்பினார். இராட்டிரக்கூட அரசின் மேற்பார்வையில், முடிசூட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் நடந்தன. ஸ்ரீபுருஷருக்கும் சம்மதமே. ஒருவேளை, ஸ்ரீபுருஷருக்கும் சிவமாறர்தான் அடுத்து அரசராக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கலாம்.”

“துர்க்கமாறர் ஒப்புக்கொண்டு விட்டாரா?”

“அதுதான் இல்லை. அவர் எதிர்த்தார். சகோதரர்களிடையே அரியணைப்போட்டி கங்கத்திலும் முகிழ்த்தது. ஸ்ரீபுருஷர் சமரசத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி நின்று விட்டார். பெரிய கோவிந்தர், சகோதரப் போட்டியைத் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பைச் சிவமாறரிடம் விட்டுவிட்டார். சிவமாறருக்குத் தானே தமையனாரை எதிர்க்கத் தயக்கம்.”

“துருவராஜாவுக்கு ஏற்பட்ட அதே சிக்கல், அதே தர்ம சங்கடம்.”

“ஆமாம். இதற்குப் பல்லவமல்லர் வழி செய்தார். ஒரு வீச்சில் இரு கனிகளைக் கொய்யத் திட்டமிட்டார். கங்கத்துக்கு அடிபணிந்து சிற்றரசாக இருந்து இப்போது பல்லவத் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் நொளம்பவாடியின் ராஜா என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கலி கொல்லியராசா சிம்ஹபோத்த நொளம்பாதிராஜாவுக்குத் துர்க்கமாறனின் தலையைக் கொண்டுவரவும், அவனுடைய எதிர்ப்பை நிர்மூலமாக்கவும் கட்டளையிட்டார்.”

“என்ன ராஜதந்திரம்! இரண்டு என்ன, மூன்று கனிகள்! இதன் மூலம், நொளம்பவாடி, தமக்கு விசுவாசமான அரசுதானா, என்று பரீட்சித்துப் பார்த்துவிடலாம். சிவமாறருக்கும் உதவி செய்தது போல ஆயிற்று. தமக்கு முந்தைய பல்லவ அரசுகளைப் படுத்திய கங்கத்தைப் பழிதீர்த்தது போலவும் ஆயிற்று.”

“அதேதான்!”

“ஆனால், என்னதான் ராஜதந்திரமாக இருந்தாலும், ராமரைப்போல, சகோதரர்களுக்கிடையே புகுந்து வதம் செய்யவேண்டியதாக ஆயிற்றே? வாலிவதத்துக்குக் கிடைத்த காரணங்கள் வேறு இங்கே பொருந்தா.”

“பொருந்துவதற்குத் துர்க்கமாறனே வழி கொடுத்தான். படையைத் திரட்டினான். மைத்துனன் இந்தப்பராஜனுடன் சேர்ந்து கிளர்ந்தான். தான்தான் கங்கத்தின் அடுத்த ராஜா என்று பிரகடனம் செய்தான். இது போதாதா, காரணத்துக்கு? முதல் கல்லை அவன் எறிந்ததால், உத்தரம் தரவேண்டிய கட்டாயம் எழுந்தது. தாக்க வந்த படைகளை, எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்? சிம்ஹபோத்தர் காரியத்தைச் செய்து முடித்தார். பெருமானடிகள் கட்டளை நிறைவேற்றப்பட்டுக் கங்கமண்டலத்தின் மீது, பல்லவத்தின் ஆணை நிலை நிறுத்தப்பட்டது. பல்லவர்களோடு நூறு வருடங்களுக்கும் மேலாக இருந்தவந்த விரோதம் முடிவுக்கு வந்து, நொளம்ப கங்கர்ளின் சாளுக்கிய நட்புக்கு ஒரேயடியாக முடிவு கட்டப்பட்டது.

“தந்திதுர்க்க மாகராஜாவுடைய தீர்க்கதரிசனம்தான் என்னே! ஒரு பொருளற்ற காஞ்சிப்படையெடுப்பு, தக்கணத்தின் வரலாற்றையே மாற்றிவிட்டது. துர்க்கமாறனின் எதிர்ப்பு விலகியதும், சிவமாறர் அரசராக ஆனார். நந்திவர்மப் பல்லவரும், கோவிந்தராஜரும் தம்முடைய கரத்தால், சிவமாறருக்கு மகுடத்தைச் சூட்டி ஆசீர்வதித்தார்கள்”

“காலத்தின் சக்கரம்தான் எப்படியெல்லாம் சுழல்கிறது! தனக்கு மகுடம் அளித்தவர் என்ற நன்றி, சிவமாறருக்கு இராட்டிரக்கூடத்தின் மீது இருந்திருக்கும். ‘என்னுடைய தம்பி என்னை எதிர்க்கிறான், உதவ வா’ என்று பெரிய கோவிந்தர் அழைத்ததும் சிவமாறர் துருவருக்கு எதிராக எழுந்ததில் வியப்பென்ன இருக்கிறது? நானும் அதைத்தான் செய்திருப்பேன். பல்லவமல்லர் துருவருக்கு எதிராகத் திரும்பியதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.”

அதற்குப் பிறகு, பிரதாபரும் விநயாதிசர்மனும் அன்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள், நாற்கரம், மற்றும் முக்கரம் உடைய வடிவங்களின் பரப்பைப் கண்டு பிடிப்பதைப் பற்றிச் சில கேள்விகள் கேட்ட பிரதாபருக்கு, விநயன், மகாவீர ஆச்சார்யரிடம் தான் கற்றுக் கொண்டதைச் சொன்னான். கணிதப்படித் துல்லியமாகக் கண்டுபிடிப்பது எப்படி, தினசரி வாழ்க்கைக்குப் பயன்படுவதுபோல் கணக்கிடுவது எப்படி, என்று சில சூத்திரங்களைச் சொன்னான். வட்டத்துக்கும் அதன் விட்டத்துக்கும் இடையே இருக்கும் மர்மமான தொடர்பைப் பற்றி ஏற்கனவே அவன் சொல்லியிருந்ததில், அவருக்கு ஏற்பட்டிருந்த சில ஐயங்களை விளக்கினான்.

பேசி முடித்து, பிரதாபரோடேயே உணவு உண்டு, திரும்பிவரும்போது, மிக நேரமாகி விட்டது. சத்திரத்துக்குச் சற்றுத் தொலைவிலேயே வண்டியில் இருந்து இறங்கிக் காலாற நடந்து வந்தான். நடந்து வரும்போது, துருவராஜாவுக்கு உருவான சத்துருக்களைப் பற்றி, பிரதாபர் விஸ்தாரமாகச் சொன்னவையெல்லாம், மனத்தில் ஓடிக் கொண்டிருந்தன. எதிரே சத்திரம் தெரிந்தது. .

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...