Saturday, 21 September 2024

16. சதகுடி தீபப் பிரகாசன்


உலை

சில நாள் கழித்து, ஒரு நாள் எற்பாட்டுப் பொழுதில், ஒரு சேவகன் வந்து, விநயனை, “ஐயா தங்களை நாளை, காலையில் சித்தமாக இருக்கச் சொல்லியிருக்கிறார். உலைகள் மற்றும் காளவாய்களுக்குச் செல்ல வேண்டுமாம், வண்டி வரும்”, என்று சொல்லிவிட்டுச் சென்றான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவநாதய்யா, “விநயரே! சூளைகள் மிகத் தொலைவில் இருக்கின்றன. கையில் ஏதாவது நொறுக்குத் தீனிகள் தருகிறேன் கொண்டு போங்கள். நிறைய நீர் அருந்துங்கள்.” என்று எச்சரித்தார். “வருவதற்கு மாலைப் பொழுது ஆகி விடும். அங்கேயே உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள். இரசாயனப் பகுதி. காற்றுத் தூய்மை கிடையாது. வத்திரங்கள் மாசுறும். கைக்கு இரண்டு மாற்றுத் துணிகள் எடுத்துக் கொண்டு போம்” என்று ஆலோசனை தந்தார்.


அடுத்த நாள். குளித்து விட்டு ஆயத்தமாக இருந்தான். சொன்னபடி, இரு குதிரைகள் பூட்டிய, வண்டி வந்தது. தேவநாதையா, கூடவே இருந்து இரண்டு பாண்டங்களில் நீர், பழங்கள் மற்றும் உண்பதற்குச் எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள், வெட்டிய தெங்கிளநீர் நான்கைந்து, ஒரு பனங்காய்க் குலை என்று வண்டியை நிரப்பினார். செல்லும் வழியில், பல்ல பட்டர் என்ற ஒரு பண்டிதர் கூடச் சேர்ந்து கொண்டார். பிரதாபர் அவருக்கும் சொல்லிவைத்திருந்தார் என்று அவரோடு பேசும்போது தெரிந்துகொண்டான்.

வண்டி சென்றது, சென்றது, நீள்வழியில் போய்க்கொண்டே இருந்தது. பகலவன், பரிவு என்பதை மறந்துவிட்டிருந்தான். வண்டியே தகித்தது. இடையே, ஒரு ஏற்றத்தின் அருகே சற்று இளைப்பாறிக் கொண்டு மீண்டும் பயணித்தார்கள். நெடுந்தொலைவு சென்றதும், சிறு குன்றுகளும், சவுக்கு மரங்களும், பனைகளும் நிறைந்திருந்த பொட்டல் வெளியில், நெடிய மதில் சுவர்கள் எழுப்பப் பட்டிருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். ஏதோ படைப் பாசறைக்கு வந்து சேர்ந்தாற்போலத் தோன்றியது. ஏராளமான படைவீரர்கள். பெரிய கட்டுக்காவலோடு சேனைகளோடு இருந்த பிராந்தியம். நிறைய புகை போக்கிகளில், கருமையும், வெண்ணிறமும், மஞ்சளுமாய்ப் புகை வந்து கொண்டிருந்தது. மதிலுக்கு வெளியே நிறைய வண்டிகளில், மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். வண்டியில் கட்டப் பட்டிருந்த மாடுகள், அவிழ்த்து விடப்பட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தன. அவற்றிற்குக் கொட்டகைகளும் வண்டியில் வந்தவர்களுக்கும் தங்க இடங்களும், உணவுச் சாலைகளும் இருந்தன. சுங்கச் சாவடி அளவுக்கு ஆட்கள் இல்லை. அதைப்போல வளப்பமும் இல்லை. வெகு வறண்ட பகுதி. அங்கும் இங்கும் ஆட்கள் உலவக்காணோம். இருப்பவர்கள் எல்லோரும் குழுவாக இருந்து, உண்டுகொண்டும், உறங்கிக்கொண்டும் இருந்தார்கள். அதிகப் பேச்சில்லை. எல்லாக்குழுக்களையும் புரவி வீரர்கள் சுற்றி வந்தபடியே கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

தாதுக்களில் இருந்து இரும்பு, தாமிரம், நாகம் உலோகங்களைப் பிரித்து எடுக்கவும், எடுத்த உலோகங்களை உருக்கவும், வார்ப்பு எடுக்கவும், அமிலங்கள், கந்தக உப்பு, வெண்காரம், சாம்பல் உப்பு, கார்ப்பு உப்பு போன்ற க்ஷாரங்கள், துத்தம், கண்மைகள், பாஷாணங்கள், பாதரசமேறிய கருக்குக்கள் போன்றவற்றைச் செய்யவும் ஏற்படுத்தப் பட்ட பெரிய வசதிகளோடு கூடிய வளாகம் அது.

வானுலகு அடைந்தவர்களை உம்பருலகுப் பெண்கள் வரவேற்க வரும்போது, அவர்கள் அணிந்திருந்த மாலைகள் வெளியிடும் நறுமணம்  அங்கே கமழ்ந்து கொண்டிருக்குமாம். நரகத்துக்குப் போனவர்களை எப்படி வரவேற்பார்களோ என்னவோ? ஆனால், இப்படித்தான் இருக்குமோ என்று அதற்கு ஒரு முன்மாதிரியாகச் சொல்லும்படிக்கு, அங்கே, தொண்டை கமறும்படியான இரசாயன நாற்றம் கமழ்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் வண்டி வெளியிலேயே நிறுத்தப் பட்டுவிட, பிரதாபரின் வருகைக்காக விநயனும் பட்டரும் காத்துக்கொண்டிருந்தார்கள். பிரதாபர் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார். தான் வைத்திருந்த இலச்சினையைக் காட்டினார். காவலாளி அவரை வணங்கிவிட்டு, ஒரு தளபதி போல இருந்தவனைக் கூட்டிக் கொண்டு வந்தான். அவனும் இலச்சினையைப் பரிசோதித்துவிட்டுக் குதிரை வண்டியை நோக்கிக் கைகாட்டி ஏதோ கேட்டான். பிரதாபர், தன்னிடம்இருந்த ஓர் ஓலையைக் காட்டினார். அதைப் படித்துவிட்டு, அந்தத் தளபதி, கண்காணிப்பு அறையில், ஒரு பதிவேட்டை எடுத்து, அதில் எழுதினான்.

“கட்டுப்பாடுகள் மிக அதிகம் இங்கே. யாராக இருந்தாலும், ஆலைக்குள் நுழையும் ஒவ்வொரு மனிதர் பற்றியும் இந்தப் பதிவேட்டில், குறிப்பு எழுதப்படும்” என்றான் குதிரைக்காரன். “வெளியேறும்போதும் பதிவு செய்வார்கள். தினமும் இந்தப் பதிவேட்டின் பகர்ப்பு, மஹாசாமந்தர் சேனாபதிக்கு அனுப்பப்படும்.”

வண்டியை விட்டுக் கீழே இறங்கி வரச் சைகை கிடைத்ததும், விநயனும், பட்டரும் இறங்கி நுழைவாயிலுக்கு வந்தனர். அவர்களைப் பரிசோதித்து விட்டு, அவர்கள் கையில் இருந்த பைகளை வாங்கிக்கொண்டு  அவர்களை மட்டும் உள்ளே அனுப்பினான் தளபதி.

“இங்குக் காவல் அதிகம்” என்றார் பிரதாபர். “இங்குத்தான் செப்புத் தகடுகளும், பட்டயங்களும் பொறிக்கப்படுகின்றன. அரச நாணயங்களும், இலச்சினைகளும், கோவில்கள் மற்றும் அரண்மனைகளுக்கான கலைப்பொருட்களும், இறைவன் திருமேனிகள், ஆயுதங்கள், பாத்திரங்கள் போன்றவைகளும் செய்யப்படுகின்றன.” என்றார்.

பித்தளை, வெண்கலம் போன்ற கலப்பு உலோகங்களுக்கும், தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு அதிகம் உடைய உலோகங்களுக்கும், உருக்குச் சாலைகளும், வார்ப்புக் கூடங்களும் தனிப்பகுதிகளாக இருந்தன. இரும்பு, தாமிரம், வெள்ளீயம், காரீயம் போன்றவற்றைத் தாதுக்களிலே இருந்து பிரித்தெடுக்கும் பகுதிகள் வேறு, அந்தத் தாதுக்களை அரைத்துச் சித்தமாக்கும் பகுதி வேறாக இருந்தது. அங்கங்குப் பிரம்புப் பாய்த்தடுப்புக்களால் அறைகள் தடுத்திருந்தார்கள். சிலவற்றின் வாயிலிலே காவலுக்கு ஆள் இருந்தார்கள். வெள்ளி, தங்கம் உருக்கப்படும் இடங்களில் பணிபுரிந்தவர்கள், வெறும் கோமணம் மட்டுமே அணிந்து பணி புரிந்து கொண்டிருந்தார்கள். சில பகுதிகளில், தலைக்குக் கவசமும், மார்பில் தகடும், கைகளில் உலோகப் பட்டைக் காப்புக்களும் அணிந்திருந்தார்கள்.

“வெளியில் இருந்து உணவு இங்குக் கொண்டுவரக் கூடாது. அதனால்தான், உங்கள் பைகளையும் வெளியேயே வைக்கச் சொல்லிவிட்டார்கள்” என்றார் பிரதாபர். “இங்குப் பணிபுரியும் எல்லோருக்கும், இங்கேயே உணவு சமைக்கிறார்கள். நமக்கும், இன்று உணவு இங்கேதான். சில சமயங்களில், ஓர் ஈடு அல்லது ஒரு தொகுதி உருவாக்கப்படும் வரை இங்குப் பணி புரிபவர்களால் வெளியுலகைப் பார்க்கக் கூட முடியாது.

“கோட்டையை விட அதிகப் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படும் பகுதி இது. வெளியில் இருந்து எவரும் அவ்வளவு எளிதில் உள்ளே புகுந்து விட முடியாது. பொதுமக்களுக்குத் தடைசெய்யப்பட்ட பிராந்தியம். அத்து மீறுபவர்கள் நேராகக் காராக்கிருகம் போகவேண்டியதுதான்.

“இந்த உருக்காலைக்குள் அதீத இரகசியப் பகுதிகள் உண்டு. எனக்கே சில இடங்களில் போக அனுமதி கிடையாது. ரசவாதம் நடக்கும் இடங்கள் அவை. வெளியே, பொதுவாழ்வில் நம்மால் காண முடியாத அந்தரங்கத் தாந்த்ரீகச்  சடங்குகள் செய்யும் இடங்களும் இங்கே உண்டு.” என்றார் பிரதாபர்.

“இதற்குப் பின்னால், உருக்காலையை ஒட்டி, மட்பாண்டங்கள் செய்யும் பகுதி இருக்கிறது. அங்கேதான் உள்ளீடு உள்ள படிமங்கள், உள்ளீடற்ற படிமங்கள் ஆகியவற்றை வார்ப்பதற்காகக் கூடுகள் செய்யப்படுகின்றன. தூரத்தில், அங்கே வெள்ளையாக ஒரு திட்டு தெரிகிறதல்லவா, அங்கேதான், சுண்ணாம்பு அரைக்கிறார்கள்.”

கண்ணை இடுக்கிக்கொண்டு பார்த்தான். வட்டமான, வலயங்களிடையே காடி வெட்டி, அரைவைக் கல்லை ஆரமாக’வைத்து, அதை மாடுகளும் மனிதர்களும் ஓட்டிச் சுண்ணாம்பு, தாதுக்கள் போன்றவற்றை அரைத்துக் கொண்டிருந்தார்கள்.

மொத்தப் பகுதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது. உள்ளேயும் வெளியேயும் நடமாடுவதைப் பார்க்க, பல இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் இருந்தன. வாளும் ஈட்டியும், வில்லும் அம்பும் ஏந்திய படைவீரர்கள் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆங்காங்கே உயரமான சுவர்களால் ஆன பெரிய கொட்டாரங்கள் இருந்தன. அவற்றைப் பெரிய கதவுகளால் அடைக்கப்பட்டுப் பலமான பூட்டுக்களால் பூட்டப்பட்டிருந்த ஒவ்வொரு கொட்டாரத்தின் முன்பும் படைவீரர்கள் காவலுக்கு இருந்தார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட எரிபொருள், தாதுக்கள் போன்றவற்றை இறக்குவதற்கு தனிவழி இருந்தது. ஒவ்வொரு வாகனமும் ஆய்வு செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப் படுவதைப் பார்த்தான். சுமை இறக்கியதும், கால்நடைகள் மற்றும் வண்டிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அவற்றை ஓட்டிவந்த ஆட்களை முகாம்களில் வெளியில் காத்திருக்க வைத்தனர். அங்கு அனாவசியப் பேச்சில்லை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோதிலும், ஒரு பயம் கலந்த அமைதி, நிலவியது.

இங்கிருக்கும் காற்றைச் சுவாசித்து, நமக்கு இந்த ஒரு பகலிலேயே, இப்படி மூச்சு முட்டுகிறது. இங்கேயே இருக்கும் இந்தப் பணியாளர்களின் நிலை என்னவாகும்?”

“சாபப்பட்ட வாழ்க்கை இது. இங்கே யாரும், விருப்பப்பட்டுப் பணிக்கு வருவதில்லை. குடும்பம் என்றெல்லாம் இங்கிருக்கும் நிறைய பேருக்குக் கிடையாது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையின் விளிம்பில் வாழ்பவர்கள். இந்தச் சாத்திரத்தில் ஈடுபாடும், ஆய்வு செய்யவேண்டும் என்ற வேகமும் இருக்கும் பண்டிதர்களும் உண்டு. அவர்களும் சராசரி குடும்பஸ்தர்கள் அன்று. இங்குப் பணி செய்பவர்களுக்கு ஆயுள் குறைவு.” – பிரதாப வர்த்தனர்.

“அப்படியென்றால், இங்கு வேலை செய்ய யார்தான் வருவார்கள்?”

“படையெடுப்பில் சிறைப்பட்ட எதிரி நாட்டவர்கள், அண்டைநாட்டு ஒற்றர்கள், வழிப்பறி கொள்ளை செய்து பிடிபட்டவர்கள், குற்றம் செய்து கொலைத் தண்டனை பெற்று, மன்னிக்கப்பட்டவர்கள், நோயால் பீடிக்கப்பட்டவர்கள், கேட்பாரற்ற அனாதைகள், வயிற்றுப் பசியோடு ஒப்பிடும்போது, இந்தத் துன்பம் அத்துணை பெரிதன்று என்று நினைப்பவர்கள், வாழமுடியாத அளவுக்குக் கடன்சுமை அதிகமாகி, அதைத் தீர்ப்பதற்காக இந்த வேலையை ஒப்புக்கொண்டவர்கள் இப்படி இரகம் இரகமாகப் பணியாளர்கள் முன்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

“முதலில் எல்லாம், அரசு வலுக்கட்டாயமாகக் குடிமக்களை இப்பணியில் ஈடுபடுத்தி வந்தது. விஷ்ணுவர்த்தனர் காலத்தில் இருந்துதான், இப்படிப் பட்டவர்களைப் பணியில் ஈடுபடுத்தும் கொள்கை வந்தது.”

“இந்தப் பணிகள் ராஜாங்கத்துக்கு அவசியம்தானா?”

“நீ என்ன நினைக்கிறாய்? அவசியம் இல்லை என்றா?”

“ஆம். எதற்காக இந்த உயிர்கொல்லி விவகாரங்கள்? அமிலமும், காரமும், அபாய இரசாயனமும், எதற்கு? சுற்றிப் பாருங்கள். பச்சை மரங்களைக் காணோம், பறவைகள் இல்லை. மனமகிழ்ச்சியைக் குலைக்க வைக்கும் சூழ்நிலை, மாசு படிந்த நீர்க் குட்டைகள்.. அப்பப்பா! நரகம் என்பார்களே அது இப்படித்தான் இருக்குமோ?”

“அப்படியென்றால், உன் வீட்டுக்கு வெள்ளை அடிக்க வேண்டாமா? அடுப்பில் வைத்துப் பாகம் செய்யப் பாத்திரங்கள் வேண்டாமா? அந்தக் காலத்தில் இருந்தாற்போல், மண்கலத்திலேயே சமைக்கத் தொடங்கிவிடலாமா? பஸ்பம் செய்ய வேண்டாமா? க்ஷயரோகம், ராஜபிளவை, அதீத ஜ்வரங்கள், பாம்பு விஷம், கை கால் வெட்டு, கண் பார்வைக்குறைவு இவை போன்ற பிணிகளுக்கு எல்லாம் மருந்துகள் வேண்டாமா? குழந்தை பிறக்கும்போது, வலி நிவாரணம் செய்வதற்கும், உதிரப் போக்கை நிறுத்துவதற்கும் முயற்சி செய்ய வேண்டாமா?

“பயிர்களை அழித்து, உணவை நாசமாக்கும் பூச்சிகளை அப்படியே வளர விட்டுவிடவேண்டும் என்கிறாயா? எதிரிகள் வந்து தாக்கினால், கையில் ஓர் உலோக ஆயுதம் இருக்காது. அதைவிடு, மரம் வெட்டக் கோடாரி செய்ய முடியாது. மாட்டுக்கு இலாடம் அடிக்க இரும்பு கிடைக்காது. குளிருக்குப் போர்த்திக்கொள்ள தோல் ஆடை இருக்காது. நாணயம் செய்ய முடியாது. இறைவனுக்குத் திருமேனிகள் செய்ய முடியாது. நீ மீட்டுகிறாயே யாழ், அதற்குக் கம்பிகளும் கிடைக்காது” – என்று சொல்லிச் சிரித்தார்.

“கடவுளே! ஆதி மனிதன் போலக் குகைக்குள் போய்விட வேண்டியதுதான். மனித நாகரிக வளர்ச்சிக்கு நாம் தரும் விலையா இவை?”

“உலைகள், காளவாய்கள் என்று வந்துவிட்டால், இந்தச் சூளைகளும், எரிபொருளும், உருக்குபொருளும் இன்றி முடியாது. வெறும் மண்ணை வைத்துச் செய்யலாம் என்றாலும், வெட்டும் மண்வெட்டிக்கு இரும்பு தேவை. அதனால், அதிகமாக யோசிக்கக் கூடாது. சமூக நீதி, பொதுத்துயரம், சூழ்நிலை பாதிப்பு இவையெல்லாம் பற்றி அதீதமாகப் பேசி, மனவருத்தம் அடைந்தால், வீணான விரயம்தான். இல்லை இல்லை அவை முக்கியம்தான் என்று சொன்னால், சமுதாயத்தை விட்டுவிட்டு மலைக்குத் தவம் செய்யப் போய்விட வேண்டும். இங்கேயே இருந்துகொண்டு, இவை எல்லாவற்றையும் பேசி எற்றுக்கு உளைச்சல் அடைவது?”

பிரதாபர் குரலில் சற்றுக் கடுமை தென்பட்டது. யாரையோ மனத்தில் வைத்துக் கொண்டு சொல்கிறார் போலத் தோன்றியது.

ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா”

“நீ கேட்டதில் எந்தத் தவறும் இல்லை விநயா! இவை கேட்கப்பட வேண்டிய கேள்விகள்தாம். இந்தக் கேள்விகளே எழாத இளமை, இளமை அன்று. இதற்கான விடைகளை மெய்யாகத் தேடுவதும் நல்லதே. அந்தத் தேடல்தான், நமக்கு, சமுதாய வாழ்வு என்றால் என்ன, அதனுடைய அடித்தளத்தை அமைக்கும் உயிர்ப்பு உணர்வுகள் எவை என்பதையெல்லாம் கண்டுபிடிக்கத் தூண்டுதலாக அமையும். என்னுடைய கோபமெல்லாம் சமுதாய வாழ்வுக்கு ஒவ்வாத, வெறும் மேற்பூச்சான அறிவு சார்ந்த புறப்புலக் கேள்விகள் எழுப்புபவர்கள் மீது.

“ஜீவ காருண்யம் என்று போதித்துக்கொண்டே வாளெடுத்துச் சண்டை இடுவது, தரைக்குக் கீழே காய்ப்பவனவற்றில் உயிர்கள் உண்டு, அவற்றை உண்பது மாமிசம் உண்பதற்குச் சமம் என்று சொல்வது - ஆனால் பால் அருந்துவது, பிணத்தைப் பூசிப்பது - ஆனால், ஞானம் அடைய வழி தேடுவது, வேள்விகள் செய்வது வீண் என்று விவாதிப்பது - ஆனால் வீட்டுச் சடங்குகள் செய்வது, பெண்களை மதிக்க வேண்டும் என்பது - ஆனால், ராட்சச விவாகம் செய்வது, ஆன்மா ஒன்றுதான் என்பது - ஆனால் மற்றவர்களை இழிவாக நடத்துவது, கல்வி முக்கியம் என்று சொல்வது - ஆனால், அவற்றைப் பெண்களுக்குத் தராமல் வஞ்சிப்பது, நாமே சூனியம் என்பது - குருவுக்கு ஸ்தூபியமைப்பது, பந்தங்களை விட்டுத் துறவியாவது - ஆனால், விஹாரத்தில் அன்னமிடத் தானம் கேட்பது, இறைவன் என்பவன் இருக்கலாம், அவன் இல்லாமலும் போகலாம் என்று விவாதிப்பது - ஆனால், பரலோகத்தை விரும்பி, அதற்காக ஆடை துறந்து வெட்ட வெயிலில் பாறையில் கிடந்து மரிப்பது, உலகமெலாம் பொய் என்று உபதேசிப்பது - ஆனால் புலி வந்தால் பயந்தோடுவது, தெய்வம் குணமற்ற ஜடமென்பது - ஆனால் துன்பம் வந்தால் ஆதிப் பொருளே என்று முறையிடுவது, ஏனென்று கேட்டால் வ்யவஹாரத்தில் உண்மை என்று விவாதிப்பது, இப்படிச் சமுதாய வாழ்வு வாழ்ந்துகொண்டே, சமுதாயத்தின் கட்டாயங்களை நிந்தனை செய்பவர்களைச் சொல்கிறேன்.” பொங்கினார் பிரதாப வர்த்தனர்.

அதற்குள், எதிரே இரண்டு பேர் வந்து, அவரை நோக்கி வரப் பேச்சுத் தடைப்பட்டது. அவர்கள் பிரதாபரை வணங்கி, “நலமா ஐயா? இவர்கள்தாம் நீங்கள் சொல்லியிருந்த பண்டிதர்களா? வரவேண்டும் ஐயன்மீர்! வாருங்கள் இப்படி” என்று சொல்லி, உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

அரணாக அமைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சிறு சிறு குடில்கள் இருந்தன,

“இந்தக் குடில்கள் உருக்காலையோடு ஒத்து வராமல், காட்டில் தவம் செய்பவர்கள் தங்கும் குடில்கள் போல அன்றோ இருக்கின்றன?”

சிரித்தார் பிரதாபர். “சரியாகத்தான் சொல்கிறாய். இவை அறிஞர்கள் தங்கும் இடங்கள். உன்னைப்போன்றவர்கள், சில சமயங்களில் அழைத்து வரப்பட்டால், சில காலம் தங்கச் சௌகரியங்கள் இங்கு உண்டு. இங்கே பட்டயங்களையும் சாசனங்களையும் செதுக்குபவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அவர்கள், ஸம்ஸ்க்ருதத்தைக் கண்டார்களா, திரமிளம், தெலுங்கு வட்டெழுத்துக்களைக் கண்டார்களா? அவர்களைப் பொறுத்தவரை, அவை எல்லாம் சித்திரங்கள்தாம். அதனால், செதுக்குபவர்களுக்குச் சரியானவற்றை எழுதிக் கொடுக்கவும், அபத்தங்கள் வாராமல், செதுக்கியவற்றைச் சரிபார்க்கவும், அறிஞர்கள் அழைக்கப்படுவதுண்டு. திருப்பித் திருப்பிப் பொறிக்கப்படும் மெய்கீர்த்தியின் அச்சுக்கள் செய்யவும் இவர்கள் உதவி வேண்டியிருக்கும். வார்க்கப்பட்டப் படிமங்கள் ஆகம விதிப்படித்தான் இருக்கின்றனவா என்றும் சரி பார்ப்பார்கள். சில சமயங்களில், நில உரிமைக்கு உறுதியளிக்கவும், ஒரே நிலங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தானமாக வழங்கப்படாமல் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும், மானியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நில எல்லைகளின் உண்மைத் தன்மையைச் சரிபார்ப்பதற்கும் கிராமத் தலைவர்களும் வந்து தங்குவார்கள்.

“இரகசிய ஆணைகளும் இங்கு வார்க்கப்படுவதால், அவற்றைப் பாதுகாக்கச் செப்பேடுகள் உருவாகும் வரை, வருபவர்கள் தொடர்ந்து இங்கேயே தங்கி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவது வழக்கம்” என்று விளக்கினார் பிரதாபர்.

கூட வந்தவர்கள், அவர்களை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள். வெளியே ஒருவன் அவர்களுக்குக் காலும் கையும் முகமும் சுத்தம் செய்துகொள்ள நீர் வார்த்தான். உள்ளே பெரிய பாய், சுவர்களை அடைத்து விரிக்கப் பட்டிருந்தது. சிலர், ஓலைச் சுவடிகளைப் பார்த்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கீழே போடப்பட்டிருந்த மணைகளில் எல்லோரும் அமர்ந்தனர்.

அந்தக் கண்டேறுவாடி விஷய கொடைப்பத்திர விஷயத்தை அச்சாக்கி ஆயிற்றா?”

“போலமகாரு ஆக்கினாபதி விஷயத்தையா சொல்கிறீர்?”

“ஆம் அதேதான், மர அச்சு சித்தமாகி விட்டால், அதைத் துணியில் அச்சடித்து எடுத்துவாரும். பிழை திருத்திவிடலாம்”

“அதன் பட்டயமே சித்தமாகி விட்டதே, பெருமானே! டேய்! அந்த மினமனி கிராம அந்தணர், பல்ல பட்டர் பட்டயத்தை எடுத்துவா!”

“பட்டயமே வார்த்தாயிற்றா? அதனுடைய ஆக்ஞாபதி ஸ்லோகம் எழுதவில்லையே. அதை எழுதத்தான் இன்று பண்டிதர்களோடு  வந்திருக்கிறேன். இவர்தான் விநயாதி சர்மன். ஸம்ஸ்க்ருத பண்டிதர். இவர்தான் பல்ல பட்டாரகர். கொடை இவருக்காகத்தான். இவரைத் தெரியும் இல்லையா உங்களுக்கு”

“ஓ! ரொம்ப நன்றாயிற்று! வணக்கம். பட்டரைத் தெரியுமே. என் மைத்துனி மகன் இவரிடம்தான் படிக்கிறான்” என்று கை கூப்பினார் அந்த அதிகாரி. அதற்குள், பட்டயத்தைத் தூக்கிக்கொண்டு வந்தான் ஒருவன். மொத்தம் ஐந்து தகடுகள். பெரிய கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் உருக்கப்பட்டு, திடமாக்க வைக்கப்பட்ட தாமிரம். தங்கமாகச் சொலித்தது. ஐந்து தகட்டுகளை வளையம் போட்டுக் கட்டியிருந்தார்கள். தககுகளின் விளிம்புகளைத் தட்டி எழுப்பி மேடாக்கி இருந்தார்கள். வளையத்தோடு நீள் வட்டமான ஓர் இலச்சினை பொறிக்கப்பட்டு இருந்தது. அதன் மேல், ஸ்ரீ திரிபுவனாங்குச என்று நரேந்திர ராஜாவின் விருதுப் பெயரை மத்தியில் பொறித்திருந்தார்கள். அதற்கு மேலே ஒரு பிறைச் சந்திரனும், அதன் மத்தியில் சூரியனும். கீழே தாமரை மலர்.

எடுத்துக் கொண்டு வந்தவன் ஜாக்கிரதையாகப் பிரதாபர் முன்னிருந்த ஒரு பலகை மீது தகடுகளை வைத்தான். அவர் தலை அசைத்ததும், ஒவ்வொரு தகடாகத் திருப்பிக் காண்பித்தான். நல்ல கனமான தகடு. உளியை வைத்து எல்லா எழுத்துக்களையும் எழுதி இருந்தார்கள்.

“உருக்கி வார்க்கவில்லையா?”

“இல்லை ஐயா, தகடு செய்து, அதில் செதுக்கி விட்டோம். அச்சுக் கோக்க ஆளில்லை”

மொத்தம் எட்டுப் பக்கங்கள் செதுக்கப் பட்டிருந்தன. முதல் பக்கத்திலும், இறுதிப் பக்கத்திலும் ஒரு பக்கம்தான் செதுக்கி இருந்தார்கள். மற்ற மூன்று தகடுகளிலும் இரண்டு பக்கமும். தகட்டின் கனத்தால், ஆழமாகச் செதுக்கியிருந்தாலும், எழுத்துக்கள், அடுத்தபக்கம் எழும்பாமல் இருந்தன.

விநய சர்மனும், பல்ல பட்டரும் எட்டிப் பார்த்தார்கள். ஸம்ஸ்க்ருதம் என்று புரிந்தது விநயனுக்கு. ஆனால், எழுத்துக்கள் தேவநாகரியில் இல்லாமல், அங்கு வட்டார வழக்கின் வட்டெழுத்துக்களில் இருந்தன.

“இறுதியில் உள்ள கொடை ஸ்லோகம் யார் எழுதினார்கள்?”

“அக்ஷர லேகாதித்தியர் வந்திருந்தார். அவர்தான் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்”

“அவரே வந்தாரா? ஓ! அடுத்த வெண்பட்சம் திருதியைக்குத்தானே விஜயவாடாவில் இருந்து வருவதாக இருந்தார்? அதனால்தான், நான் விநயரைக் கூட்டி வந்தேன்”

“அவருடைய பாரியாளுக்குத் திடீரென்று உடம்பு சுகவீனம். அதற்காகப் பாஷாணம் வாங்க வந்திருந்தார். வந்த கையோடு, ஸ்லோகத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.”

“அந்த இருபத்து நான்கு அந்தணர்களுக்குக் கொற்றபாறு கொடை?”

“அதையும் பிழை திருத்திவிட்டார்”

“நல்லது, நல்லது” என்றார் பிரதாபர்.

“இந்தப் பட்டயங்கள் செய்வதற்கு யார் கட்டளை இடுவார்கள்? இந்த போலமர் யார்? இறுதியில், அவருடைய பெயர்தான் அநுஷ்டுப் சந்த ஸ்லோகத்தில் ஆக்ஞாபதிரஸ்ய தர்மஸ்ய நிர்மல தர்ம ஸக்³ராமே  போலம நாமகே என்று இருக்கிறது” – விநயன் கேட்டான்.

“போலமகாரு, என்னிடம் அத்யயனம் செய்தவர். அவருடைய தகப்பனாரும் என்னிடம் கற்றவர்தான். நான் ஒரு சிறு பாடசாலை நடத்தி வருகிறேன். வியாகரணம், காவியம் போன்றவை கற்பிக்க அல்ல. சிறு சிறு பணிகள் செய்யக் கற்றுக் கொடுக்கிறேன். வினைஞர்கள் சிலரும் வந்து கற்றுக் கொடுக்கிறார்கள். குலத்தொழில் மற்றுமன்றி, மற்ற தொழில்களைப் பற்றியும் என்னவென்று தெரிந்து கொள்ளவைக்கிறோம். கற்றுக் கொள்ள வருபவர்களில்  பலர் ஏழை மற்றும் அநாதைக் குழந்தைகள். அவர்களுக்கு உணவு அளிப்பதற்காக வரகு பயிரிட இந்த நிலத்தை மஹாராஜாவிடம் விண்ணப்பித்து எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார், போலமகாரு. அதனால்தான், அவர் ஆக்ஞாபதி. இங்கே பக்கத்தில் மினமனிதான் என் சொந்தக் கிராமம். போன சூரியக் கிரகணத்தின் போதுதான் ராஜா இதைத் தானமாகக் கொடுத்தார். அதிலேயே எழுதியிருக்கிறது பாருங்கள்” என்றார் பல்ல பட்டர்.

“எல்லோருக்கும் அறிவிப்பது என்னவென்றால், மினாமினியில் வசிக்கும் பிராமணன் பல்ல-பட்டாரகனுக்குக் கண்டேறுவாடி மண்டலத்தில் கீழுள்ள, வந்துருபிடவு என்னும் இந்தக் கிராமத்தில், பன்னிரண்டு கண்டிகை அளவுக்கு வரகு, வரி இல்லாமல் அறுவடை செய்துகொள்ளலாம் என்று உத்தரவாகி உள்ளது. அவருக்கு இருப்பதற்கு ஒரு வாசஸ்தலமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, விஷ்ணுவர்த்தனரின் மகனும், விக்கிரமராமரின் பேரனும் ஆன மஹாராஜாதிராஜா, பரமேஸ்வர, பட்டாரக விஜயாதித்திய மகாராஜாவால் சூரிய கிரகணத்தின் போது வழங்கப்பட்டுள்ளது.“  - என்று படித்தான் விநயன்.

“மிக நல்ல காரியம். நீங்கள் பாக்கியம் செய்தவர்” என்று பல்ல பட்டரை வணங்கினான் விநயன். “ஐயா, ஒரு சந்தேகம். கண்டிகை என்றால் எவ்வளவு? இந்த அளவை, முன்னம் கேட்டதில்லை.”

“நாற்பது சீர் ஒரு மணு தெரியும் அல்லவா? சில இடங்களில், எண்ணூறு சீர் ஒரு கண்டிகை என்பார்கள். இந்தப் பிராந்தியத்தில் எல்லாம் ஓராயிரம் சீர், ஒரு கண்டிகை. பன்னிரண்டு கண்டிகை என்றால், பன்னிரண்டு ஆயிரம் சீர். முந்நூறு மணு. நாற்பஃது ஐம்பஃது குழந்தைகள் ஒரு வருடம் தாராளமாக உண்ணலாம்.”

“இதை எல்லாம் கேட்கும்போது மனம் நெகிழ்கிறது. இவையெல்லாம் சமுதாயமாக வாழ்வதின் பயன் அன்றோ? நிலத்தை யார் பயிர் செய்வார்கள்?”

“சில மாணாக்கர்களின் பெற்றோர்கள், உணவுக்குக் கூட வழியில்லாதவர்கள். அவர்கள் வயிற்றுக்குக் கிடைத்தால் போதும், சரீரப் பணி செய்ய அஞ்சமாட்டார்கள். அவர்கள், அங்கேயே, ஒரு குடிசை அமைத்துக் கொண்டு, விவசாயத்தைப் பார்த்துக் கொள்வார்கள். தானியங்களைச் சேமிக்க, ஒரு குதிரும் கட்ட ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது, போலமகாரு உபயத்தால்.”

பிரதாபர், அந்த அதிகாரியைப் பார்த்துச் சொன்னார், இன்னும் ஒரு வேலை இருக்கிறது. இந்தச் சாசனங்களில் மெய்கீர்த்தியைச் சற்றுச் சரிசெய்ய வேண்டும். சில அரசர்களின் பெயர்கள் விட்டுப் போய் இருக்கின்றன. சிலருடைய காலங்களைத் திருத்தவேண்டும். மெதுவாகச் செய்வோம். கலி விஷ்ணுவர்த்தனரைப் பற்றி ஒரு ஸ்லோகமும் எழுதவேண்டும். நான் சித்தமாக்கி விட்டுச் சொல்கிறேன்.” அதிகாரியும் தலை அசைத்தார். “விநயா, நல்ல யாப்புடன் ஒரு ஸ்லோகம் எழுது. நான் என்ன எழுதவேண்டும் என்று சொல்கிறேன். உரைநடையைக் குறைத்துச் செய்யுள்களை மெய்கீர்த்தியில் அதிகப்படுத்த வேண்டும்.”

சற்று நேரம் பேசி இருந்துவிட்டு, எல்லோரும் உணவு உண்ணச் சென்றார்கள். உருக்காலையிலேயே சமைத்த உணவு, எளிமையாகத்தான் இருந்தது. உணவிற்கு என்று தனித்துவ வாசம் எதையும் நாசிகள் உணரவில்லை. உணவுக்குப் பிறகு, சில பகுதிகளைச் சுற்றிப் பார்வையிட்டு விட்டு, அங்கேயே ஒரு முறை குளித்துவிட்டு விநயன் புறப்பட்டபோது, ஏறக்குறைய் அத்தமனம் ஆகிவிட்டது. சத்திரத்துக்கு வந்ததும் மீண்டும் ஒருமுறை குளித்தான். மூக்கில் இரசாயன மணம் கமழ்ந்து கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...