Friday, 20 September 2024

05-02. குக்கேஸ்வரர்

 அடுத்த நாள், காலையுணவாக, நெய்யில் வறுத்த அரிசியால் செய்த புற்கையை உண்டு கொண்டிருக்கும்போது, அவனைப் பார்க்கப் பாடசாலையில் இருந்து ஒருவர் வந்திருந்தார். தன்னை ஆசிரியர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். மாணாக்கர்களுக்குக் கணிதம் கற்றுக் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள் என்றும் தனக்கு அதிகம் தெரியாது என்றும் தாழ்மையுடன் சொல்லிக்கொண்டார்.

“எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன. நிவர்த்தி செய்ய யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பிரதாப வர்த்தனர், உங்களைப் பார்க்கச் சொல்லிக் கூறியிருந்தார். கணிதம் கற்றுத்தர, மலக்காபுரக் கழகத்தில் இருந்துதான் யாரையாவது வரவழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் பிழைக்கும் வழிதேடி, இப்பகுதிக்கு ஒரு வணிகச் சாத்துடன் வந்தேன். மொழி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். கச்சிக் கடிகையில் கற்றவன். நிகண்டுகளும் வியாகரணமும், சந்தமும்தான் நான் முக்கியமாகக் கற்றது. கொஞ்சம் கணிதம் கற்றிருக்கிறேன். கணிதம் கற்றுக் கொடுக்க இங்கு யாரும் இல்லை என்பதால், எனக்கு அந்தப் பணியும் அளித்திருக்கிறார்கள். அதிக வேலைக்காகக் குடிலும், தோட்டமும், வருட மானியமும் தந்திருக்கிறார்கள். தாங்கள் வந்திருப்பது, என் பாக்கியம். எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்தால், எனக்கும் பணி ஸ்திரமாய் இருக்கும். ஒரு குடும்பி நான். திருமணத்திற்குப் பெண் வேறு இருக்கிறாள். தயை கூர வேண்டும்” என்று நமஸ்கரித்தார்.

திடுக்கிட்டுப் போனான், விநயாதி சர்மன். அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.

“ஐயா, எனக்கும் அதிகமாகத் தெரியாது. பாடசாலையில் முறையாகப் படித்தவன் அல்லன் நான். ஒரு மகானிடம் பழக்கவழக்கத்தில், சில விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். பெற்றோரிடமும் சிலவற்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்ததைக் கட்டாயம் சொல்லித் தருகிறேன். சொல்லுங்கள், என்ன ஐயம்? எனக்குத் தெரிகிறதா என்று பார்க்கிறேன்”

“பாக்கியம் பெற்றேன் ஸ்வாமி! தாங்கள் என் கிருகத்திற்கு அவசியம் எழுந்தருள வேண்டும்.”

“அவசியம் வருகிறேன். சந்தேகத்தைக் கேளுங்கள்”

“இப்பொழுதேவா? உணவு அருந்திக் கொண்டிருக்கிறீர்கள் போல இருக்கிறதே”

“ஆகி விட்டது. அப்படி அமருங்கள், இதோ, கை கால் அலம்பிக் கொண்டு வந்துவிடுகிறேன்.”

திரும்பி வரும்போது, கையில், ஓலைச் சுவடியையும் எழுத்தாணியையும் வைத்துக் கொண்டு மாணாக்கன் போலத் தரையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

“அந்த இருக்கையில் அமரலாமே”

“இல்லை ஸ்வாமிந், இதுதான் வசதி”

“முதலில் என்னை ஸ்வாமி என்று கூப்பிடுவதை நிறுத்துங்கள். விநயன் என்று பெயரிட்டே கூப்பிடலாம். என்ன ஐயம்?”

இங்கே. எல்லோரும் கணிதம் கற்பதில் ஆர்வமும் காட்டுவதில்லை. எண் கணிதம் எதற்கு என்று வாளாவிருந்து விடுகிறார்கள். எண் கணிதம் வேண்டும் என்பவர்களும் கூட்டல், கழித்தலுடன் திருப்தி அடைந்துவிடுகிறார்கள். நான் ஆர்வத்தை உருவாக்காவிட்டால், குறை என்னிடம்தான் என்று சொல்வார்கள் அல்லவா?

“ஆமாம். கணிதத்தை எளிதில் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திச் சொன்னால், மாணக்கர்களுக்கு அதன் உபயோகம் புரியும். பிறகு ஆர்வம் பிறந்துவிடும். ஆரம்ப காலத்தில் நானும் சிரமப் பட்டிருக்கிறேன். கற்றுக் கொடுக்கப்பட்ட கணக்கின் அடிப்படையில் விடை கண்டுபிடிப்பேனே தவிர, புதியதாக ஒரு கணக்கைச் சொல்லிவிட்டால், அதைத் தீர்க்க வழிதெரியாமல் திணறி விடுவேன். மஹாவீர ஆசார்யர் கற்றுத் தந்தபிறகுதான் கணிதத்துக்கு என்று ஒரு மொழி, இலக்கணம், செய்யும் வழி எல்லாம் இருக்கின்றன என்றும் கணிதச் சிந்தை என்பது பயிற்சியால் வளர்க்கப்படும் ஒரு திறல் என்பதும் புரிந்தது. காஞ்சியில் தான் தமிழ் படித்தீர்ளா?”

ஆமாம். தமிழ் நன்றாகத் தெரியும். சந்தப்படிப் படிக்கவும், பாடவும் கொஞ்சம் கற்றிருக்கிறேன்.”

“ஆஹா! மிக அருமையாகப் போயிற்று. நீங்கள் எனக்குத் தமிழ்ச் சந்தம் சொல்லிக் கொடுங்கள். என் தாய் நன்றாகப் பாட்டெழுதுவாள். ஸம்ஸ்க்ருதத்துக்கும், தமிழுக்கும் இடையே இருக்கும் வித்தியாச யாப்பெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். அதிகமாகப் புரிந்ததில்லை. உங்கள் மூலமாக அவற்றையெல்லாம் மீண்டும் புரிந்துகொள்ள முயல்கிறேன்.

இருவரும் நிறைய நேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கணித ஆசிரியர், மிகப் புத்திசாலி என்று கொஞ்ச நேரத்தில் தெரிந்து விட்டது அவனுக்கு. உடனே கிரஹித்துக் கொண்டார். பொருத்தமான கேள்விகளாகக் கேட்டார். அவ்வப்போது ஓலையில் எழுதிவைத்துக் கொண்டார். இன்பமாகச் சமயம் போயிற்று இருவருக்கும்.

“குணகாரம், பாககாரத்துக்கு ஆசார்யர் ஒரு எளிமையான ஸ்லோகம் எழுதியிருக்கிறார். இதைப் பாருங்கள்” என்று விநயன் சொன்னான்.


த்ரைராஶிகேSத்ர ஸாரம் ப²லமிச்சா² ஸங்க³ணம் ப்ரமாணாப்தம்|

இச்சா² ப்ரமயோஸ்ஸாம்யே விபரீதம் க்ரியா வ்யஸ்தே ||”

 

“அபாரம். ராசிக்கு நாமகரணம் எல்லாம் சூட்டி எழுதியிருக்கிறாரே! இதுவரை இந்த வாழ்வியல் கணக்கையெல்லாம் செய்து காட்டித்தான் விளக்கி வருகிறேனே தவிர, இதற்கு எழுத்துவடிவில் சூத்திரமெல்லாம் உள்ளன என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். பெரும் தன்யன் நான். மிக்க நன்றி, விநய சர்மரே. உங்களுடைய நேரத்தை இன்று நிறைய வீணடித்து விட்டேன். மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லிப் புறப்பட்டபோது, இவர்கள் இருவரும் பேசுவதை ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருந்த.தேவநாதய்யா மெள்ள அவர்களருகே வந்தார்

“நீங்கள் இருவரும் பேசுவதைக் கேட்க ஆனந்தமாக இருந்தது. இப்படியெல்லாம் கணித விஷயங்கள் இருக்கின்றன என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லை. குக்கேஸ்வரர் வந்ததும்தான் இந்த ஊரில் கணித சாஸ்திரம் என்ற பெயரே காதில் விழக்கிடைக்கிறது. பாடசாலைப் பிள்ளைகள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். எனக்கு நீர் ஓர் உபகாரம் செய்யவேண்டும். இங்கே பணிபுரியும் மாதவனும், முத்தனும் கணிதம் கற்றவர்கள் அல்லர். அங்காடிக்குச் சென்று பண்டம் மாறும்போதும், இருப்புக் கணக்கிடும்போதும் கஷ்டப்படுகிறார்கள். எப்போது பெருக்கவேண்டும், எப்போது வகுக்கவேண்டும் என்று அவர்களுக்குப் பெருங்குழப்பம். நானும் குணகாரமும் பாகாரமும் கற்றுக் கொடுக்க முயன்றேன். எனக்குச் சரியாகப் பழக்கத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து விடுகிறது. அதை அவர்களுக்குப் புரிகிறாற்போல விளக்கத் தெரியவில்லை. நீங்கள் சொன்ன சூத்திரத்திலிருந்து நான் புரிந்துகொண்டதைச் சொல்கிறேன். நான் புரிந்து கொண்டது சரிதானா பாரும்.

“தாராளமாகச் சொல்லுங்கள்!”

இரண்டு குரோசம் போவதற்கு மூன்று நாழிகை ஆகிறது; பத்துச் சாண் நீளமான ஓர் அகிற்கட்டை, முழுவதும் எரிய ஒரு பொழுது ஆகிறது, என்பவை போல. நாம் கொடுத்த உதாரணங்களின் அடிப்படையில், கேட்ட விஷயத்தைக் கணக்கிடுவதற்கு முயல்கிறோம். தலைக்கட்டாகச் சொல்லப் போனால், நம்மிடம் மூன்று விஷயங்கள் உள்ளன. ஒரு நடப்பு, அதற்குப் பயன். ஒரு விருப்பு. இதனால்தான் மூவிராசி என்கிறார். இப்படி ஒன்று நடந்தால், இப்படி ஒன்று ஆகிறது என்று சொல்லும்போது, இரண்டு குரோசம் போவது என்பது நடப்பு, மூன்று நாழிகை என்பது பலன். ஐந்து குரோம் போக என்று நாம் எதற்கு விடை தேடுகிறோமோ அது விருப்பு. சரிதானே?

“சாது!”

விருப்புக்கு விடை காண்பதற்கு, நீங்கள் சொன்ன சூத்திரம் என்னவென்றால், இருங்கள், நீங்கள் சொல்லச் சொல்ல எழுதி வைத்திருக்கிறேன்” என்று கையோலையைப் பார்த்தார். விருப்பைப் பயனால் பெருக்கி வந்ததை, நடப்புக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். எண்களை வைத்துச் சொன்னால், ஐந்து குரோசத்தையும், மூன்று நாழிகையையும் பெருக்கி, இரண்டு குரோசத்தால் வகுக்க வேண்டும். பதினைந்தை இரண்டாகப் பிரித்தால், ஏழரை நாழிகை விடை. சரிதானா?

“மிகச் சரியாகச் சொல்லி விட்டீர்கள். ஒரு நுணுக்கம் நுவன்றேனே, அது விளங்கிற்றா?

ஆம். இந்தச் சூத்திரம் பணி செய்ய. நடப்பும், விளைவும் நேர்த்திக்கில் பிணைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சொன்னீர்கள். குரோசம் அதிகமானால், நாழிகை அதிகமாகும். குரோசம் குறைந்தால், நாழிகை குறையும். அகிற்கட்டையின் நீளம் அதிகமானால், முழுதும் எரிய அதிகப் பொழுதாகும். குறைந்தால், குறைந்த பொழுதாகும். இது நேரான திக்கு.

“இந்த நிபந்தனை பூர்த்தி ஆகாமல், பிணைப்பானது எதிர்த் திக்கில் சென்றால், உதாரணமாக, அறுபது பழங்களைப் பேழைக்குப் பத்துப் பழங்கள் வைத்தால், ஆறு பேழை வேண்டும். பேழைக்குப் பன்னிரண்டு பழங்கள் வைத்தால், ஐந்து போதும். பேழையில் வைக்கும் பழங்கள் அதிகமானால், வேண்டிய பேழைகள் குறையும். பேழையில் வைக்கும் பழங்கள் குறைந்தால், வேண்டிய பேழைகள் அதிகமாகும். இப்படி, எதிர்த்திக்கில் பிணைப்புண்ட நடப்பும், விளைவும் தந்தால், சூத்திரம் மாறும். அதன்படி, நடப்பைத்தான் பயனால் பெருக்க வேண்டும், அதை விருப்புக்குப் பகுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி, பேழைக் கணக்கில், பத்தைப் ஆறால் பெருக்கிப் பன்னிரண்டால் வகுக்க, விடை ஐந்து பேழைகள். சரியா?”

“நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள், தேவநாதையா! உடனேயே, இரண்டு சூத்திரங்களையும் சொல்லிக் கொடுக்காமல், நேர்த் திக்குப் பிணைப்புக்களை மட்டும் பல உதாரணங்களைக் காட்டித் தினமும் சொல்லி வாருங்கள். அது மனத்தில், பதியட்டும். பிறகு, எதிர்த்திக்கில் பிணைப்புண்ட விஷயங்களை எடுத்துக் கூறலாம். இரண்டு மூன்று வாரங்களில், குழப்பமே இல்லாமல், கணக்கு செய்யக் கற்றுக் கொண்டுவிடுவார்கள்.”

விடைபெற்றுக்கொள்ளும்போது ‘இதற்கு நாளை ஒரு தமிழ்ப் பாடல் எழுதிக்கொண்டு வருகிறேன்’ என்று சொல்லிச் சென்ற குக்கேஸ்வரர், சொன்னபடியே மறுநாள் பாட்டைச் சொல்லிக் காட்டிவிட்டுச் சென்றார். நேர்த்திசைப் பிணைப்பையும், எதிர்த்திசைப் பிணைப்பையும் தொடர்பு படுத்தி, ஒரு தேற்றம் போலே அகவற்பாவாக நன்றாக எழுதியிருந்தார்.

 

நடப்பும் ஆங்கதன் பயனும் நல்கி

விருப்புக் கோர்விடை விழைதி யாயின்

நடப்பும் பயனும் நேர்நேர்க் கட்டெனில்

விருப்பின் மடங்குறப் பயனைப் பகுதி,

நடப்புக் கெல்லாம்; நேர்ப்படா தெதிரின்

நடப்பின் மடங்குறப் பயனை

விருப்பின் பகுக்க விடையா கிற்றே 

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...