Saturday, 21 September 2024

14-01. உதயசந்திரன்

“உதயசந்திரனால், வேங்கியும் தன்னுடைய பகுதிகளை இழந்தது. இவனால்தான் என்று சொல்வதைவிட, வேங்கி யாரிடம் அந்தப் பகுதிகளை இழந்ததோ, அவனை இவன் வெற்றிபெற்று, அந்தப் பகுதிகளைப் பல்லவ சாம்ராஜ்ஜியத்துடன் சேர்த்து விட்டான். சைலோத்பவ வமிசத்தைச் சேர்ந்த அரசன் நடத்தும் அஸ்வமேத யாகத்துக்காக, யாகக் குதிரையோடு திக்விஜயம் செய்த பிருத்திவி வியாக்கிரன்தான் அவன். கிழக்கில் கடலோடு ஒட்டிய சில பிராந்தியங்களை வேங்கியிடமிருந்து கைப்பற்றி இருந்தான். நரேந்திர மிருகராஜாவின் கொள்ளுப்பாட்டனார், விஷ்ணுவர்த்தனர்தான் அப்போது வேங்கிக்கு அரசர். இங்கிருந்து தெற்கில், காஞ்சிக்கு வடக்கே ஒரு மாதப்பயணத்தில் உள்ள கரடு முரடான, மலை சார்ந்த இந்தப் பகுதிகள், எளிதில் படைகள் செல்லக் கூடாதவை. வணிகச் சாத்துக்கள் கூட இப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பர். நரமாமிசம் தின்பவர்களும், விலங்குகளும், நிஷாதர்களும், கடுஞ்சுரமும், காடுகளும் எனப் பல்வகைப்பட்ட அபாயங்கள் நிறைந்தவை. சாதாரணர்கள் என்ன, படைவீரர்களே செல்லத் தயங்கும் பிராந்தியங்கள்.

“இப்பகுதிகளுக்குச் சற்று தெற்கேதான் போயர்களின் கோட்டமும் இருந்தது. உதயசந்திரன், போயர்களையும் வென்று, அவர்களுடைய ஆளுமைக்குக் கீழே இருந்த பிராந்தியங்களையும் கைப்பற்றினான். பாண்டியர்கள் வாராத பகுதிகள் ஆதலால், சுய பலத்தை, இவர்களின் மீது செலுத்திப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டான். போயர்கள் அதுவரை சாளுக்கிய அரசுக்குக் கப்பம் கட்டிவந்தவர்கள். கொடுநாக்கெறிந்து உலவிய சாளுக்கியம்தான், அப்போது, புண்ணுற்ற புலியாகக் கர்ணாடத்தில், காயங்களை நாவால் பரிசித்துக் கொண்டு  பொறிகலங்கிப் படுத்ததுக் கொண்டிருந்ததே. உலாவுதல் ஒடுங்கிய உழுவையால் ஏற்பட்ட வெற்றிடத்தில் ஊடுருவி நுழைந்தான் உதயசந்திரன்.

“வேங்கிக்கு அவனை எதிர்க்கும் சக்தியோ, படைபலமோ கிடையாது. முரட்டு வீரன் அவன். அவனால், பல்லவ ராஜ்ஜியத்தின் குறுநில அரசர்களாக மாறிப் போன போயர்கள், இன்றைக்கும் வேங்கிக்கு இன்னல் கொடுத்து வருகிறார்கள். நம்முடைய வணிகச் சாத்துக்களைக் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களை முதலில் அடக்கவேண்டும். போயர் கோட்டங்களுக்கு மேலே, இரண்டு மூன்று மலைப்பகுதிகள் இருக்கின்றன அவற்றுள் ஒன்றுதான் காளி கோட்டை. கைப்பற்ற முடியாத கடுவழிகள் உள்ள கோட்டை. அதையும் கைப்பற்றினான் உதயசந்திரன். கோட்டையோடு, அந்த நிஷாத மன்னனிடமிருந்து அரிய பளபளப்பு வீசும் மறுவற்ற முத்து மாலைகளையும், அளவிட முடியாத தங்கக் குவியல்களையும், யானைகளையும் கவர்ந்தான்; கோட்டை இன்றைக்கும் காஞ்சியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.”

“காஞ்சிக்குப் போய், அங்கே கீர்த்திவர்மருக்காகக் காத்திருந்த ஆளுவராசர் என்ன ஆனார்? அவர் யார்? சித்திரவாஹனரா?”

“ஹா ஹா. அவன் பாவம் என்ன செய்வான்? ஆடிக்காற்றில் அரைகல்லும், குழவியுமே பறக்கும்போது, அருகம்புல் கட்டு என்ன செய்யும்? சித்திரவாஹனனுடைய புதல்வன் இவன். காஞ்சிக்குச் சித்திரமாயன் திரும்பியதும், இவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வடக்கே வந்து இங்கே திருவாமூர் அருகே ஒதுங்கிக் கொண்டான். வேங்கி நட்புநாடு அன்றோ? மேலும் முன்னமிருந்தே கும்ட்டூரு பிராந்தியத்தில் ஆளுவர்கள் உண்டு.”

“நான் இங்கே வருவதற்கு முன்னே கும்ட்டூரு விஷயத்தில் கொஞ்ச காலம் திரிந்து கொண்டிருந்தேன், ஐயா. அங்கே ஒரு அழகான சுப்ரமண்ய ஸ்வாமி கோவிலுக்கு அருகே உள்ள மடத்தில் தங்கியிருந்தபோது, துளுவம் பேசுகிறவர்களை நிறைய பார்த்தேன். இவர்கள் எங்கே இங்கே வந்தார்கள் என்று எனக்கு வியப்பாக இருந்தது.”

“நாங்கள் எல்லோரும் எப்படிப் புலிகேசி மஹாராஜா காலத்தில், வாதாபியில் இருந்து புறப்பட்டு வேங்கிபுரத்துக்குக் குடி பெயர்ந்தோமோ  அம்மாதிரியே ஆளுவர்களும் அரசரின் கட்டளையின் பேரில் கும்ட்டூரு விஷயத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள். திருவாமூர், கல்லூர், மருட்டூர் இங்கெல்லாம் நிறைய துளுவக் குடும்பங்கள் இருக்கின்றன. இப்போது ஆள்கின்ற சிற்றரசனும், ஆளுவ ராஜவம்சத்தைச் சேர்ந்தவன்தான். புலிகேசி மஹாராஜா பிஷ்டாபுரத்தைக் கைப்பற்றியதும், அங்குத்தான் இந்தச் சாம்ராஜ்ஜியத்தை முதலில் தாபித்தார். பிஷ்டாபுரம்தான் தலைநகரும். பிறகுதான், விஷ்ணுவர்த்தன மஹாராஜாவால் வேங்கிபுரம் நிர்மாணம் ஆயிற்று. தம்பி மூலமாக வடக்குக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்தியது போலத் தெற்குக்கும் ஒரு நம்பிக்கையானவரை நிலைநிறுத்த நினைத்து, ஆளுவராசனை வரவழைத்தார். கல்லூருவில்தான் அப்போது மஹாராஜா படைகளோடு இளைப்பாறிக் கொண்டிருந்தார். அவர் சொல்லியனுப்பியதும், ஆளுவ மஹாராஜன் அடித்துப் புரண்டு வந்தான். அத்துவானச் சுரவழியில், அன்னம் நீர் இல்லாமல், வழிதரும் அபாயங்களைப் புறந்தள்ளிச் சிரமங்களைப் பொருட்படுத்தாது நீளச் செலவு செய்து வந்த ஆளுவராசனின் நீண்ட ஆயுளுக்காகப் பெரும்தானம் செய்து கொண்டாடினார் மஹாராஜா.

“அன்றிலிருந்துதான் இங்கே ஆளுவர்கள் நடமாட்டம். அவர்களுக்காகத்தான் சுப்ரமண்யர் கோவிலும் எழும்பியது. இந்தப் பிராந்தியத்தைத்தான் உதயசந்திரன் ஆக்கிரமித்து, விஷ்ணுவர்த்தனரிடமிருந்து பல்லவத்துக்காகத் திறைகவர்ந்தான். இந்த ஆக்கிரமிப்பால் கோவிலுக்குப் பங்கம் வரக்கூடாது என்று சாளுக்கிய அரசர் விண்ணப்பித்துக்கொள்ள, திறைப்பணத்திலிருந்து, பொன்கொடுத்துக் கட்டளையும் ஏற்படுத்தினான். அந்தக் கோவிலிலேயே இதற்குச் சாசனமும் இருக்கிறது என்று ஞாபகம்.”

“அப்படியென்றால், காஞ்சி முழுக்கப் பல்லவபஞ்ஜனரின் கட்டுப்பாட்டில். கங்கம் பாண்டியரோடு. கீர்த்திவர்மர் வெறும் குந்தளத்தில். தந்திதுர்க்கருக்குத் தம் கனவை நிறைவேற்ற நல்ல வாய்ப்பு:”

“ஆமாம்.” என்றவர் கதையைத் தொடர்ந்தார்.

 

*****************************************************************

 

“வாதாபி செய்தி வந்ததா?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் கிருஷ்ணராஜா.

“வந்து கொண்டுதான் இருக்கிறது. இறுதிச் செய்தியின்படி, நானும் நீங்களும், நம் குடும்பத்தாரும் சாளுக்கிய ராஜத்துரோகிகள் என்று சின்னமூதிகள் சாற்றி வருகிறார்களாம். என்னோடு தொடர்பு உடையவர்கள் எல்லோரும் பொது மன்றத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டு, அவர்களுடைய குடும்பங்கள் நாடு கடத்தப்படுமாம்.” இதழோரம் மெலிதாக முறுவலித்தான்.

“எதிர்பார்த்ததுதானே. நீ அப்படி ஒரு காரியம் செய்தபிறகு, வாளாவிருப்பார்களா? உனக்குச் செய்தி கொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் கவனமாக இருக்கச்சொல். உன்னை இன்னமும், சாளுக்கிய நாட்டைச் சார்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா, ராஜத்துரோகி என்று சொல்ல? வேடிக்கைதான். காஞ்சி நிலவரம் என்ன?”

சித்திரமாயனைக் கொன்றுவிட்டான் உதயசந்திரன். பாண்டியனுக்குப் பெருத்த கோபம். இந்நேரம் பாண்டியன் தலைமையில் மூவேந்தர் படைகளும் காஞ்சியை முற்றுகையிட்டிருக்கும். நகரமே கிட்டத்தட்ட கோட்டையைப் போலப் பாதுகாக்கப்படுகிறதாம். போக்கும் வரத்தும் கடுமையாகப் பரிசோதனைக்கு உள்ளாகின்றன. வெளியாட்கள் நீண்டநேரம் காத்திருக்க வைக்கப்பட்டு, தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகிறார்களாம். வெளியேறும் ஒவ்வொருவரும் யார் எவர் என்று விசாரிக்கப்படுகிறார்கள். வாணிகமே கிட்டத்தட்ட நின்றுவிட்டது. நந்திவர்மன் மீண்டும் தலைமறைவாகி விட்டான்.”

“இப்படிப் புளிப்பும் இனிப்பும் கலந்த செய்தியாக இருக்கிறதே. சித்திரமாயன் கொல்லப்பட்டானா? இந்த உதயசந்திரன், பல்லவமல்லனுக்குக் கிடைத்த வரப்பிரஸாதம்தான். நினைக்கக் கூட முடியாததை எப்படியோ செயலிலேயே சாதித்து விடுகிறான், இந்தப் பூச்ச வம்ச வீரன். எப்படிக் கொன்றான்?”

“அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. சாவேறு ஒன்றை அமைத்து, அதற்குத் தானே தலைமை தாங்கிச் சென்றிருக்கிறான். சித்திரமாயன் எங்கோ சென்றுகொண்டிருந்தபோது, வழியை மறித்து, இப்படை தாக்கியிருக்கிறது. அவனுடைய ஆட்களிலும் பலர் தலத்திலேயே உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். இருந்தாலும், பின்வாங்காமல், உதயசந்திரனும், அவனுடைய வீரன் ஒருவனும், முன்னேறிச் சித்திரமாயனைப் பிடித்திருக்கிறார்கள். வீரன் சித்திரமாயனின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, உதயசந்திரன் அயில்வாளால், விலாஎலும்புகளின் இடையே ஒரே செருகில், சித்திரமாயனைக் கொன்றிருக்கிறான். காஞ்சி அரியணையில் வீற்றிருக்கும் அரசனை, அவன் இப்படிக் கொன்ற விதத்தைப் பார்த்துப் பீதியில் எல்லோரும் சிதறி ஓடி இருக்கிறார்கள். ஒரே நாளில், நிலைமையை மாற்றிவிட்டான். நந்திவர்மனைச் சிம்மாசனத்தில் ஏற்றியும் விட்டான். ஆவேசமான வீரன். யுத்தமல்லன் ஞாபகம் வருகிறதா உங்களுக்கு?”

“ஆமாமாம். என்ன ஒரு வெறித்தனமான போர்முறை! ஸ்ரீபுருஷனைப் போலவே. பல்லவமல்லன் மீது, பாண்டியனின் அதிகார அழுத்தம் எல்லை மீறிப் போய்விட்டது. துருத்தியை யானைக்கால் கீழே வைத்து மிதிக்கச் செய்தால், துருத்தி வெடிக்கத்தானே செய்யும்? தடியை ஓங்கிக்கொண்டு ஓடஓடக் காளையை விரட்டலாம். ஆனால், அதற்கு ஓடுவதற்கு இடங்கொடுத்து விரட்டவேண்டும். முட்டுச்சந்துக்குள் விரட்டினால், அதனால் வேறெங்கும் ஓடமுடியாமல், திரும்பித்தாக்கும். பிறகு நாம் ஓடவேண்டியதுதான். அந்நிலைமை வரை அழுத்தக் கொடுக்கக் கூடாது. ஸ்கந்தசிஷ்யனுக்கு விதித்தது அவ்வளவுதான் போலிருக்கிறது.”

“இனியும் பல்லவமல்லன் பிழைப்பான் என்று எதிர்பார்க்கிறாயா? காஞ்சி, இனிப் பாண்டியர்கள் கையில்தான். சிங்கத்தின் மீது கல்லெறிந்தாயிற்று. தலைமறைவு ஆகிவிடுவதுதான் விவேகம்.”

“எனக்கென்னவோ பல்லவமல்லன் திரும்புவான் என்று தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவன் பிழைத்திருக்கவில்லையா?”

“அன்றைய நிலைமை வேறு. அப்போது பாண்டியன் அவனை ஒருபொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறுவன் என்று விட்டுவிட்டான். இன்று பரமேஸ்வரன் வளர்ந்த இளைஞன். அரியணையில் இருக்கும் அரசனையே கொல்லும் அளவுக்கு, அவனுடைய சாவேறுகள் இருக்கின்றனவென்றால், யார் அப்படிப்பட்ட எதிர்ப்புச் சக்தியை வளரவிட்டு வாளாவிருக்க முடியும்? சாவேறுகளால் ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றிப் பாண்டியர்களைவிட அதிகம் அறிந்தவர்கள் யார்? அவற்றைப் படைப்பிரிவின் ஓரங்கமாகவே பயன்படுத்துபவர்கள் ஆயிற்றே. இதைவிட முக்கியமான விஷயம், சாளுக்கிய அரசின் பலவீனம். கங்கத்தின் துணையில், இன்று பாண்டியன் தக்கணத்தை ஆளக் கனவு காண்கிறான். துண்டகராஷ்ட்ரம் கிட்டத்தட்ட அவன் கையில் இருப்பதால், திரமிளம் முழுதும் அவன் கையில்தானே? அடுத்த குறி வாதாபிதான். கீர்த்திவர்மனால் அரிகேசரியை எதிர்க்க முடியும் என்று நினைக்கிறாயா?. ம்ஹூம். ஏற்கனவே, அவனுடைய தளபதி கரத்தால் பட்ட அடியிலேயே வாதாபி சுருண்டுவிட்டது ” உதட்டைப் பிதுக்கிக் கொண்டு குறுக்குவாட்டில் தலையசைத்தார் கிருஷ்ணராஜா.

சற்று நேரம் மௌனமாக இருந்தான் தந்திதுர்க்கன்.

“நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், பல்லவமல்லன் உயிரோடு இருக்கும்வரை, பாண்டியனின் கனவு நிறைவேறாது. எனக்குப் பட்டவரை பல்லவமல்லனிடம் ஒரே ஒரு மர்மஸ்தானத்தைத்தான் நான் பார்த்தேன். ஆவேசமின்மை. அவன் புத்திசாலி. விசாரிதன். அதீத விசாரியும் கூட. யுத்தத்துக்கு அதீத விசாரம் பெருஞ்சுமையன்றோ, சிற்றப்பா? சில நேரங்களில் சிந்தையைக் கழற்றிவிட்டுவிட்டுத் தோள்வலியையும், ஆயுத பலத்தையும் மட்டும் நம்பிக் களத்தில் இறங்கவேண்டும். மாறன்காரி செய்தான் பாருங்கள். ஏன் உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். நீங்களும் தந்தையும் அன்னையின் ஸ்வயம்வரத்துக்குப் போனீர்களே, அதுபோல, இரத்தம் தலைக்குப் பாய, கொண்ட குறியே பெரிதென்று குதிக்கவேண்டும். பல்லவமல்லனிடம் அந்தக் கிறுக்குத்தனம் கிடையாது. ஆனால், இந்த உதயசந்திரனிடம் அது இருக்கிறது. எல்லாக் குணங்களும் ஒரு ராஜாவிடம் இருக்க வேண்டியதில்லையே? நம்பிக்கையான சுற்றத்தில் அவை இருந்தால் போதுமன்றோ? உங்களிடமிருக்கும் நிதானம் எனக்குக் கிடையாது. அதனால் என்ன? நீங்கள் இருக்கிறீர்களே, அது போதாதா? எனக்குப் பரமேஸ்வரனின் மீது நம்பிக்கை இருக்கிறது. உதயசந்திரன் உதவியால், அவன் நிச்சயம் காஞ்சியைப் பிடிப்பான் பாருங்கள்.

“இப்போதைக்கு பொறுமை காக்க முடிவு செய்திருக்கிறேன் சிற்றப்பா. பிறகு செய்யவேண்டிய அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கலாம். அதுவரை, இங்கே துண்டாகத் தொங்கிக் கொண்டிருக்கும் விஷயங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவோம். கோவில் கட்டுமானம் வேறு இருக்கிறது. சில நிர்வாக மாற்றங்கள் செய்ய வேண்டும். உஜ்ஜைனி நிலவரம் என்ன? ஏதாவது செய்தி வந்ததா?”

பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு சேவகன் வந்து வணங்கினான், “வாழி! ஸாஹஸதுங்கர்! வாழி கட்கவலோக மஹாராஜா! ஸந்திவிக்கிரஹி வந்திருக்கிறார்”

“வரச்சொல்”

அயனாட்டு விவகாரங்களைக் கவனித்து வந்த அமைச்சர் உள்ளே வந்து இருவரையும் வணங்கினார்.

“வாரும் ஆமாத்தியரே. என்ன செய்தி?”

“காஞ்சிராஜர் சிறை பிடிக்கப் பட்டார். காஞ்சி முழுக்கப் பாண்டியரின் கட்டுப்பாட்டில். இல்லத்துக்கு இல்லம் போராளிகளைப் புகுந்து தேடுகிறார்களாம். நிலைமை அடங்கும்வரை இனிச்செய்தி அனுப்புவதே கடினம் என்று கூறுகிறார்கள்.”

“எதிர்பார்த்ததுதான். நம் ஒற்றர்கள் எல்லோரும் நலமா?”

“ஆம். இராட்டிரக்கூடத்து ஒற்றர்களுக்குப் பொதுவாக அதிக இன்னல்கள் இல்லை. காஞ்சிநகரத்து வாசிகளாக இருக்கும் நம் ஒற்றர்களுக்குத்தான் அதிக இடர்கள். பாண்டிய சேனை, உள்ளூர் வாசிகள் யாரையுமே நம்பச் சித்தமாக இல்லை. யாரைக் கண்டாலும் எல்லோருமே பல்லவமன்னரின் ஆட்கள் என்று முதலில் முடிவுகட்டி விசாரணையில் இறங்கிவிடுகிறார்களாம். அவரவர்கள் பிறகு தாம் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறதாம். நகரமே அல்லோலகல்லோலப் படுகிறது என்கிறார்கள்.”

“அரியணையில் இருக்கும் அரசனைக் கொல்வது என்பது சாதாரண விஷயமா?” பெருமூச்செறிந்தார் கிருஷ்ணராஜா. “இதை எப்படி நந்திவர்மன் அனுமதித்தான்?” தனக்குத்தானே கேட்டுக்கொண்டார் கிருஷ்ணராஜா.


Pallava Sculptures - Vaikuntha Perumal Temple - Minakshi C.


“நந்திவர்மனை எப்படிச் சிறையெடுத்தார்கள்?” என்றான் தந்திதுர்க்கன்.

“ஸ்கந்தசிஷ்யரைக் கொன்றதில் பல்லவமல்லருக்கு விருப்பம் இல்லையாம். அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்று தோன்றுகிறது”

“சாவேறு அமைத்தார்கள் என்றால் பின்னர் என்ன? ஊடறுத்துக் கொல்வதுதானே நோக்கம்? புரியாதவனாக இருக்கிறானே” – கிருஷ்ணராஜாவுக்குப் பல்லவமல்லன் மீது மதிப்புக் குறைந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

“அரசரைக் கொன்ற செய்தி கிடைத்ததும், பல்லவமல்லர் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டாராம். உதயசந்திரனைக் கடிந்துகொள்ளவும் முடியவில்லை. அரசுரிமைக்காகப் போர்புரிபவன் என்ற பெயர் போய், உபசாபமும் வேதகமும் உடைய வேந்தன் என்ற பெயர் வந்துவிடுமே என்று கவலைப்பட்டாராம். இப்படி மறைந்து வாழ்ந்துகொண்டு, சதிசெய்து, தனிப்பட்டவரைக் கொல்வதைவிடப் பகிரங்கமாகப் போர்புரிந்து இறப்பது மேல் என்று முடிவெடுத்துவிட்டார் என்று கேள்வி. அதனால்தான், இருக்கும் படைகளைத் திரட்டிக்கொண்டு, பாண்டியர்களின் படைகளைத் தாக்கியிருக்கிறார். குழும்பூர் என்ற இடத்தில் பெரிய சண்டை என்று ஒற்றன் சொல்கிறான். அங்கேதான், அவருடைய படைகள் சிதறடிக்கப்பட்டன. அவரும் கைப்பற்றப்பட்டார்.”

“நந்திவர்மன் நலத்துடன் இருக்கிறானா? காயப்பட்டிருக்கிறானா?”

“கிடைத்த செய்திகளின்படி, அவர் நலமாகத்தான் இருக்கிறார் என்று தோன்றுகிறது. அவரைத் தஞ்சாவூர்ப் பக்கம், நந்திக்கிராமச் சிறையில் அடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.”

தந்திதுர்க்கனின் முகத்தில் கவலைக் கோடுகள் படர்ந்தான. “உதயசந்திரன்?”

“அவரைக் காணவில்லை. பல்லவமல்லரைவிட, அவர் பேரில்தான் எல்லோருடைய தெறுவும் திருட்டியும் திரும்பியிருக்கிறது. வெகுஜனத் தீர்ப்பின் தெறுதலினால் ஞொள்கியிருக்கிறார் என்று சொன்னான் ஒற்றன்.”

“உதயசந்திரனைத் தொடர்பு கொள்ளமுடியுமா உம்மால்?”

“முடியும். தாங்கள் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் தொடர்பு வழிகள் இன்னும் அடைபடவில்லை. அவற்றின் மூலமாகத் தொடர்பு கொள்ளமுடியும். பாண்டியர்கள் காஞ்சிக்குள்தான் வலைவீசுகிறார்கள். அவர்களுக்கு உள்நாட்டில் எந்த எதிர்ப்புக் குழியும் ஆளை விழுங்கிவிடக் கூடாது என்றுதான் கவலை.”

“நல்லதாகப் போயிற்று. அவனைத் தொடர்பு கொள்ள ஆவன செய்து, உதயசந்திரன் செய்த செயல், எமக்குத் திருப்தி தந்தது என்று தெரிவியும். போர் என்று வந்துவிட்டால், இதைப் போன்றவை நடந்தே தீரும். ஸ்ரீபுருஷன் துணை சேர்ந்தபிறகு, நாளுக்குநாள் பாண்டியனும் வலுவாகிக் கொண்டே போகிறான். பாண்டியன் வலுவாக வலுவாகச் சித்திரமாயனின் திரமும் திண்மையாகிக் கொண்டு வந்தது. படைகளைச் சேர்த்துச் சித்திரமாயனோடு பொருது, பிறகு பாண்டியனைத் தோற்கடித்து .. ம்ம்.. என்றைக்குப் பரமேஸ்வரவர்மன் அரியணையில் அமர்வது?

“பொதுஜன அபிப்பிராயம் இந்தக் கொலையால் சற்றுச் சித்திரமாயன் பக்கம் அனுதாபமாகத் திரும்பியிருக்கும். எந்த மக்களும், தம் அரசன் சதிசெய்து நாட்டை அபகரிப்பதை விரும்பமாட்டார்கள். அதுவும், ஆட்சியில் இருக்கும் அரசன் கொடுங்கோலனாக இல்லாமல் இருக்கும்போது, இம்மாதிரிச் செயல்கள் தலைவன் மீது அவமதிப்பைத்தான் ஏற்படுத்தும். இதை உணர்ந்ததால்தான், பல்லவமல்லன், தோற்போம் என்று உறுதியாகத் தெரிந்தும், வெளியே தலைகாட்டிப் போரிட்டுச் சிறை சென்றிருக்கிறான். மக்களின் அபிப்பிராய பேதத்தைப் போக்கும் செவ்விய செயல் இது. தான் மதியூகி என்று நிரூபித்திருக்கிறான். இப்போது பாண்டியர்கள் உள்ளூர் வாசிகளையே நம்பாமல் இருப்பது, மக்களைப் பாண்டியரிடமிருந்து ஒதுக்கிவிடும். இந்த அனுகூலமான சமயத்தில் வாளாவிருக்கக் கூடாது. எப்படியாவது, பல்லவமல்லனை விடுவிக்கவேண்டும் என்று உதயசந்திரனுக்குச் செய்தி அனுப்பிவிடும். கருவூலத்தில் இருந்து வேண்டிய பொருள் வாங்கிக்கொண்டு, உதயசந்திரனுக்குச் சேரப்பிக்க ஏற்பாடு செய்யும். நாம் தருகிறோம் என்பது, அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டாம். தெரிந்தால் தலைபோய்விடும் என்று கவனத்தில் கொள்ளும். எல்லோரிடமும் சொல்லிவையும்.

“இன்னும் சில சாவேறுகளை, உதயசந்திரன் ஏற்பாடு செய்து கொள்ளட்டும். பல்லவமல்லனுக்கு இது விருப்பமில்லையே என்று நினைத்துக் குழம்பவேண்டாம் என்று உதயசந்திரனுக்கு உறுதியாகத் தெரிவிக்கவேண்டும். புரிகிறதா? நேர்வினைக்கான நேரமன்று இது. உதயசந்திரன் தயங்கினால், விடிவே புலராது. சிறை மீட்பு உடனே நடக்கவேண்டும். திட்டமிடுவதற்கே சில திங்கள்கள் பிடிக்கும் ஆதலால், உடனே காரியத்தில் இறங்கச் சொல்லும். இதையெல்லாம் யார் மூலம் சொல்லியனுப்பப் போகிறீர்கள்?”

“இவற்றையெல்லாம் யாரிடமும் ஒப்படைக்க முடியாது. நானே போவதுதான் சிலாக்கியம் என்று தோன்றுகிறது”

தந்திதுர்க்கருக்கும் அது சரியென்று படவே கிருஷ்ணராஜாவைப் பார்த்தார். அவரும் சரிதான் என்று தலையசைத்தார்.

“சரி, நீரே போய்வாரும். அவனைப் பார்த்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ஆயத்தங்கள் செய்து கொடுத்துவிட்டுத் திரும்பி வந்துவிடும். அங்கேயே இருக்கவேண்டாம். அவன் திறமைசாலி. பார்த்துக்கொள்வான். இன்னொரு விஷயம், நந்திக்கிராமச் சிறை என்பது உறுதியான செய்திதானா?”

“ஆமாம். கிட்டத்தட்ட உறுதிதான். பின்னாலேயே சில ஒற்றர்கள் போயிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் செய்தி வந்துவிடும்.”

“பெரும்பாலும் நந்திக்கிராமமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்தான். போவதற்குமுன் எதற்கும் உறுதி செய்துகொள்ளும். என்னிடம் சொல்லிவிட்டுப்போம். நந்திக்கிராமம் செல்ல நான் வழி சொல்கிறேன்.”

சில நாட்களிலேயே ஆமாத்தியர் வந்து செய்தியை உறுதிப்படுத்தினார். கிருஷ்ணராஜாவும் உடனிருந்தார். தந்திதுர்க்கன் சொன்னான்:

“நல்லதாயிற்று ஆமாத்தியரே! பிரயாண ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும். பண்டராதித்தியனிடம் இருந்து க்ஷேத்ரசஞ்சிகை ஒரு பிரதி எடுக்கச்சொல்லி அதைக் கொண்டுபோய் உதயசந்திரனிடம் கொடும். புனல்நாட்டு வழிகளைப் பற்றி அவனுக்கு அதிகப் பரிச்சயம் இருக்காது. ஆனால், கடற்பயணத்தில் நிபுணன் அவன். தீவாந்தரத்தில் இருந்து வந்தவன்தானே? காளிதுர்க்கத்தில் இருந்து ஒற்றைக் கூம்பு உள்ள படகுகளில் மீன்பிடி பரதவர்களைப் போல கடல் மார்க்கமாக, உரகபுரிக்குப் பயணம் செய்யட்டும். அங்கிருந்து நிலவழியாக நந்திக்கிராமம் செல்ல இந்த க்ஷேத்ரசஞ்சிகை பயன்படும்.

“பாண்டியர்களின் கவனம் பவ்வப்பகுதிகளின் மீது படாது. பரதவர்களோடு பரதவர்களாகச் சென்று, இரவிலே தரையில் இறங்கிக் குழுக்களாக, யார் கண்ணிலும் படாமல் சென்றுவிடலாம். பரதவர்களால் பாண்டியன் தனக்குக் கேடு வரும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டான். அதனால், காவல் குறைவாகவே இருக்கும். உதயசந்திரன் அச்சம் கொள்ளத் தேவையிருக்காது. நரமாமிசம் தின்பவர்கள் வாழும் காட்டுப்பகுதிகள் உதயசந்திரனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால், செல்வத்தைக் கொடுத்துத் தக்க ஆட்படைகளையும் ஆயுதங்களையும் உருவாக்கிக் கொள்ளச் சொல்லும். திசையறி நீகான்களுக்கும் உதயசந்திரனிடம் குறைவிருக்காது. அவனறியாத கடலா? ஒரு திங்கள் நீர் செல்ல, ஓரிரு திங்கள் அவனுக்கு ஆயத்தம் செய்ய, ஒரு திங்கள் பணியை முடிக்க – மூன்று நான்கு திங்களில் பல்லவவர்மன் சிறையிலிருந்து விடுபடவேண்டும். பிறகு, காஞ்சி மீது படையெடுப்புத்தான். அதற்குப் படைகளையும், படைக்கலன்களையும் இப்போதிலிருந்தே உருவாக்கச் சொல்லிவிடும். சில நாட்கள் அங்கிருந்து ஆயத்தம் செய்துவிட்டு வாரும். சென்று வாரும். வெற்றி உமதே”

ஆமாத்தியர் விடைபெற்றுப் போனார்.


என் திட்டம் சரிதானே சிற்றப்பா?”

அவன் உத்தரவுகள் பிறப்பிப்பதையே பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணராஜா கரக்கம்பம் செய்தார்.

“குழப்பமில்லாத கோமான் நீ. உன்பேச்சிலும், உன் எண்ணத்திலும் மிகத் தெளிவு. இம்மாதிரித் தெளிவுடன் ஆணைகள் வந்தால், காரியகர்த்தர்களுக்குத் தம்மிடம் ராஜா என்ன எதிர்பார்க்கிறார், அதன் அடிப்படை என்ன என்று நன்கு விளங்கிவிடும். தெளிந்த காரியரதர்கள்தாம் திட்ட நிறைவேற்றலுக்குத் தேவையான அஸ்திவாரம்.”

தந்திதுர்க்கனின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. “என்னை மகிழ்விக்கக் கூறவில்லையே?”

“அப்படி என்றாவது செய்திருக்கிறேனா?” சிரித்தார் கிருஷ்ணராஜா.

“ஏலபுரிக் கோவில் பணிகள் எப்படி நடந்து வருகின்றன?”

“உன் அன்னை முழுமூச்சுடன் இறங்கிவிட்டார். நன்றாக வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு விழுமிய தந்திதுர்க்கத் திட்டம். மேலிருக்கும் பாறையைப் பல்லவன் குடைந்தான் என்றான், நீ கீழே குடைகிறாய்.”

“ஒருமுறை சென்று பார்க்கவேண்டும்.”

 

*****************************************************************

 

“இப்படியே சில மாதங்கள் உருண்டன” பிரதாபர் பேசிக்கொண்டிருந்தார். “புதிதாகத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் இராஜ்ஜிய நிர்வாகத்தில் முழு மூச்சுடன் இறங்கிவிட்டார் தந்திதுர்க்கர்.”

“நந்திவர்மர் என்ன ஆனார், ஐயா?”

“தந்திதுர்க்கர் கொடுத்த திட்டத்தை வெகுசாமர்த்தியமாக நிறைவேற்றினான் உதயசந்திரன். காட்டுவாசிகளில் மரமேறிகளையும், மரத்துக்கு மரம் தாவுபவர்களையும் உடற்கட்டு உடையவர்களையும் தெரிந்தெடுத்துப் பயிற்சி தந்து, ஆழிவழி அழைத்துச் சென்றான். இரண்டு மூன்று படகுகளில், இரவில் கரையிறங்கி இருளோடு இருளோடு கரையிறங்கினான். சிறை இருந்தது ஒரு காட்டுப்பகுதியில். அன்று ஏதோ ஊர்த்திருவிழா போலிருக்கிறது. காவல் குறைவு. மாறுவேடத்தில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்துகொண்டு, மரங்களில் ஒரு படையாக ஏறிச் சிறையில் குதித்திருக்கிறார்கள். தரையிலும் ஒரு படை போய்த் தாக்கியிருக்கிறது. என்ன நடக்கிறது என்று சிறைக் காவலர்கள் உணர்வதற்குள், நந்திவர்மனை விடுவித்துத் தூக்கி வந்துவிட்டார்கள்.”

“ஊனமர் வெண்டலை கரத்தீசா! நந்திவர்மர் கொடுத்துவைத்தவர்தான். தந்திதுர்க்கர் சரியாகத்தான் கணித்திருக்கிறார். நந்திவர்மரிடம் இருக்கும் குறையை, இவன் சாலப்பொருத்தமாக நிறைவு செய்திருக்கிறான். மாறவர்மர் என்ன செய்தார்?”

“வேறு என்ன செய்வார்? அவருக்குச் செய்தி போய், அவர் சுதாரித்துக் கொள்வதற்குள் நந்திவர்மர் காட்டுக்குள் பத்திரமாக வந்துவிட்டார். சித்திரமாயன் கொலையுண்டதால், அரசனில்லாத காஞ்சி வேறு. இனிப் படையைத் திரட்டிக்கொண்டு நாள் பார்த்துத் தாக்கவேண்டியதுதான் எஞ்சிய வினை. அதற்கான ஏற்பாடுகளும் அதிவிரைவில் நடந்தன.”

“காஞ்சியில் யார் நிர்வாகம் செய்தார்கள் அப்போது?”

“பாண்டியப் படைத்தளபதிகள்தாம். மாறன்காரியும், அவன் தம்பி மாறன் எயினனும். தந்திதுர்க்கர் ஆயத்தங்கள் செய்துவைத்திருந்தபடி, உதயசந்திரன் தலைமையில் பெரும்படை திரட்டப்பட்டது. பாண்டியர் படைகளுக்குச் சமமானதில்லை அது. ஆயினும் ஆவேசம் நிரம்பிய படை. காட்டுத்தனமாகப் போர்புரிபவர்கள் கொண்ட படை. போயர்களும் சேர்ந்துகொண்டார்கள். பாணர்களும், நந்தி போத்தரையருக்குத் துணையாகக் களத்தில் இறங்கினார்கள். ஏராளமான இடங்களில் சண்டைகள் நடந்தன. சிலவற்றுக்கு நந்திவர்மரே தலைமை தாங்கினார். சில தோல்விகளும் கிடைத்தன. அரசன் என்று ஒருவர் இல்லாமல் போனது, பாண்டியப்படைகளுக்கு ஒரு பின்னடைவுதான். அந்தப் பணியைச் சித்திரமாயன் செவ்வனே செய்து கொண்டிருந்தான். ரங்கபதாகை மறைந்துவிட்டிருந்தாலும், அவர் ஏற்றி வைத்த விசுவாச தீபம், நகரமக்கள் எல்லோருடைய இதயங்களிலும் பல்லவமல்லருக்காகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவர் சிறை பிடிக்கப்பட்டபோது, நிராதரவைக் கச்சிப்பேட்டின் குடிகள், உணர்ந்திருந்ததால், நாட்டின் பேரில் ஒரு புதிய பிணைப்பு ஏற்பட்டிருந்தது. நந்திவர்மர் மீண்டும் வந்துவிட்டார் என்ற செய்தி, ஓர் ஆவேசத்தையும், அவசரத்தையும், ஆற்றலையும் மக்களுக்கு ஊட்டிவிட்டது. குடிமக்கள் ஒவ்வொருவரும் ஆத்மத்தியாகத்தை அலட்சியம் செய்து, அரசனுக்காக அமரில் இறங்கினார்கள். பாண்டியப்படைகள் புறங்கண்டன.

“பல்லவமல்லர் அரியணை ஏறினார். நகரத்தைவிட்டுப் பாண்டியப் படைகள் முற்றிலும் வெளியேற்றப் பட்டன. நிலைமை தனக்குப் பாதகமாகத் திரும்புவதைக் கண்டு, ஸ்ரீபுருஷரும் மௌனம் சாதித்தார். துண்டகராஷ்ட்ரக் கடிவாளத்தைப் பிடித்துவிட்ட நந்திவர்மர், காஞ்சிக் குதிரையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். நிர்வாகத்தை சீர்செய்வதில் அவர் ஈடுபட, தளபதி உதயசந்திரன், கொஞ்சநஞ்சமிருந்த பாண்டியரின் முதுகெலும்பை உடைக்கும் பணியில் இறங்கினான். காஞ்சியில் நிலையான அரசு. அவனுக்குச் சுதந்திரமான போக்கு. சொன்னபடி கேட்கும் படைகள். கேட்கவேண்டுமா? பாண்டியரின் கட்டுக் கோப்பு, பலவிடங்களில் பக்குண்டு பாழ்பட்டது.

உதயசந்திரன் பலவிடங்களில் போரிட்டான். எல்லாமே வெற்றிகள்தான். மண்ணை, நிம்பவனம், சுதவனம், சங்காரகிராமம், நெல்லூர், நெல்வேலி, சுரவருந்தூர் போன்ற இடங்களில் நடந்த போர்களில் எதிர்த்த பகைப்படைகளைத் தோற்கடித்து, பல்லவ அரசைப் பலப்படுத்தினான். சாதாரண மனிதர்களால் நுழைய முடியாத ஆபத்தான இடத்தில் நடந்த நெல்வேலிப் போரில், யானையின் மீது ஏறி வந்த சபரர்களின் தலைவன் உதயணனை எதிர்கொண்டு, அவனைப் பிளந்தான்.


“மங்கைவேந்த வைணவ அடியார், நீங்கள் சொன்ன தலங்களில் சிலவற்றை பாடல் பாடலாகச் சொல்லி, தென்னவனை இந்தப் போர்களில் எல்லாம் வென்ற பல்லவமல்லர் பணிகின்ற பரமேஸ்வர விஷ்ணுகிருஹம் என்று பாடியிருக்கிறார். அன்று குக்கேஸ்வரர் இல்லத்துக்குச் சென்றிருந்த போது எல்லாப் பாடல்களையும் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது.”

“ஓ! பாடல்கள் நினைவிருக்கிறதா?”

“இதோ, என் கூடவே வைத்திருக்கிறேன். ஓர் ஓலையில் எழுதிக்கொண்டு வந்தேன்” என்று ஒவ்வொன்றாகப் படித்தான்.

“அபாரம்!”

“இந்த வெற்றிகள் எல்லாம் உதயசந்திரனுடைய துணையால்தான் கிடைத்தன அல்லவா? அவரை நந்திவர்மர் தலைமேல் வைத்துக் கொண்டாடியிருப்பாரே?”

“கொண்டாடாமல்? வேறு அரசர்களாக இருந்தால், இந்த வெற்றிகள் எல்லாவற்றையும் தம்முடைய மெய்கீர்த்தியில், தாம் செய்துகொண்டதாகப் பொறித்துக் கொண்டிருப்பார்கள். நந்திவர்மர் எல்லாவற்றையும் உதயேந்திரன் பேரிலேயே சாஸனப்படுத்தினார். சிலபோர்களில், தானும் தலைமைதாங்கி ஈடுபட்டு வெற்றி பெற்றிருந்தாலும், தளபதியின் சாகசத்தைத் தலையில் தாங்கினார். உதயேந்திரனுக்காக, உதயசதுர்வேதி மங்கலம் என்ற பகுதியை க்ஷீரநதிக்கரையில் உருவாக்கி, அவனுடைய கோரிக்கைப்படி, நூற்றியெட்டு அந்தணர்களுக்குத் தத்தம் செய்தார். அதில், அவன் செய்த சேவைகளை எல்லாம் பட்டியல் இட்டது மட்டுமன்றித் தன்னுடைய வாள்முனையால், மொத்தப் பல்லவ ராஜ்யத்தையும் பன்முறைகள் காப்பாற்றி நிலைநிறுத்திய, அந்தப் புகழ் பெற்ற, பூச்ச வம்சத்தைச் சேர்ந்த உதயசந்திரன் என்றே கௌரவப்படுத்தி ஆவணம் செய்திருக்கிறார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.”

“ஓர் அரசின் வெற்றிக்குப் பின்னால், இப்படிப்பட்டப் போர்வீரர்களின் பணிகள் இருப்பது, வரலாற்றில் பெரும்பாலான சமயங்களில் இடம் பெறாமலே போய்விடுகின்றன. எல்லாமே, அரசரின் பெயருக்கே அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றன.”

“உலகத்தின் இயல்பு இது. எவ்வளவு காலம் ஆனாலும் மாறாது. இப்படியாகக் காஞ்சியில் நிலைமை சீரடையத் துவங்கியது. அங்கே இரட்டத்தில், தந்திதுர்க்கர் தன்னுடைய திட்டத்தின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்த ஆயத்தங்களைச் செய்யத் துவங்கினார்” 

No comments:

Post a Comment

உபோற்காதம்

இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட புதினம் அன்று. சரித்திர ஆவணங்களைத் தொகுத்து எழுதிய கட்டுரையும் அன்று. இரண்டுக்கும் இடைப்பட்ட கற்ப...