“சிற்றப்பா, நான் கீர்த்திவர்மனைத் தாக்கப் போகிறேன்.”
கிருஷ்ணராஜா இதை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தார் என்பது அவருடைய முகத்தில் தெரிந்தது. “எப்படிச் செய்யப்போகிறாய்?”
தந்திதுர்க்கனின் குரல் தாழ்ந்தது. மொத்தத் திட்டத்தையும் விளக்கியபின், கிருஷ்ணராஜாவை, என்ன சொல்கிறீர்கள் என்பதுபோலப் பார்த்தான்.
“அப்பழுக்கில்லாத தந்திதுர்க்கத் திட்டம். உன்னால்தான் இப்படிச் சிந்திக்க முடியும். நான் செய்யவேண்டிய திட்டமாக மட்டும் இது இருந்திருந்தால், முடியவே முடியாது என்று மறுத்திருப்பேன். என்னால் இயலாதுதான். ஆனால், நீ, நான் அல்லையே! நடத்து நடத்து.”
“சிற்றப்பா, சுற்றி வளைத்துப் பேசாதீர்கள், நடக்கக் கூடிய திட்டமா இல்லையா?”
“நிச்சயம் நடக்கும். நீ நடத்தி வைப்பாய். நிறைவேற்றுபவன் நீயாக இருக்கும்பட்சத்தில், ஒரு குறைவும் இல்லாத திட்டம் என்றேன். சிவராஜன் மகன் கோவிந்தராஜன் நிச்சயம் எதிர்ப்பான். அதில் சந்தேகமே இல்லை. அதற்குச் சித்தமாக இரு.”
“மைத்துனனுக்காக உதவிக்கு வாராமல் இருப்பானா? அவன் வந்து சேர்வதற்குள் எல்லாம் முடிந்துவிடும். என்ன, இதற்குப்பிறகு, இத்தனைநாள் எங்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு இறக்கும். என்ன செய்வது, எதிர் எதிர் அணியாகப் போய்விட்டோம்.”
“ராஜாங்கத்தில் இவையெல்லாம் இயல்புதானே? அந்தக் கைலாசநாதன் நிச்சயம் கூட இருப்பான். கைலாசநாதன் என்றதும் காஞ்சி நினைவு வருகிறது. காஞ்சி நிலவரம் என்ன? நந்திவர்மன்?”
“பரமேஸ்வரனின் வானில் உதயமான சந்திரன், பல்லவபஞ்ஜனன் என்று பெருமையோடு உலாவி வந்த ராஜசிம்ஹப் பாண்டியன் என்னும் இருளைத் துரத்தி அடித்துவிட்டது. இனிச் சிலகாலத்துக்குப் பாண்டியன் தொந்தரவு பல்லவமல்லனுக்கு இருக்காது என்கிறான் ஒற்றன். மறுபடியும் நந்திவர்மன் காஞ்சி அரியணையில் ஸ்திரம்!”
“எத்தனை முறை, இந்த உதயசந்திரன், நந்திவர்மனை அரச சிம்மாசனத்தில் அமர்த்தி இருக்கிறான்! இப்படி ஒரு வீரன் கிடைப்பது அபூர்வம். காஞ்சிக்கு நந்திவர்மனை அனுப்பிய கையோடு, ஒரு விஷ்வக்ஸேனரையும் அனுப்பி வைத்திருக்கிறார் வைகுண்டநாதர் என்றுதான் சொல்ல வேண்டும். இனி உன் அடுத்த நடவடிக்கை என்ன?”
“காஞ்சியைப் பீடித்திருந்த ஒரு பெரிய அபாயம் நீங்கி விட்டது. அரியணைக்கு உரிமை கோருபவர்கள் யாருமில்லை. அடுத்த அபாயமான வாதாபியின் இடைஞ்சலை நாம்தான் தீர்க்கவேண்டும்.”
“காஞ்சியின் அபாயத்தை, நீ ஏன் தீர்த்துவைக்க நினைக்கிறாய்? இதைக் காஞ்சிக்காக செய்கிறாயா, உனக்காகச் செய்து கொள்கிறாயா?”
“நல்ல கேள்வி. என்னையே பலமுறை இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நாகசாரிகாவும், வடசாளுக்கியமும்தாம் இப்போது நம்முடைய தேசம். நான்கு லக்ஷம் கிராமங்கள், கோசத்தை நிறைக்கின்றன. உஜ்ஜைனியும், மத்தியத் தேசமும் கட்டுக்குள். ஆட்சி அவர்கட்கு, திறை நமக்கு. நம் சாம்ராஜ்ஜியத்தைச் செழிக்கவைக்க இவை பூரைபூரை என்னலாம். வேண்டிய சேனைகளைச் சித்தமாக்கலாம். அரண்கள் அமைக்கலாம். குடிகளுக்கு நல்லது செய்யலாம். ஆனாலும், கீர்த்திவர்மன் இருக்கும்வரை, இது நிரந்தரமன்று. சந்திரபாகைக்கு வடக்கே, வாதாபியின் வாசனை கிஞ்சித்தும் வாழக் கூடாது. கீர்த்தியைப் பீமநதிக்குத் தென்புறம் எற்றிவிட வேண்டும். இது முதல்கட்டம். இதைத்தான் நான் இப்போது செய்யப்போகிறேன். இதற்குப் பிறகு, நம்முடைய வாறும் பெறுதியும் குர்ஜரம்தான்.
“இன்று கீர்த்தியால் இரட்டபாடிக்கு ஏதாவது அபாயம் இருக்கிறது என்று நினைக்கிறாயா?”
“இல்லைதான். ஆனால், வாதாபியின் தாக்கம் வடகுந்தளத்தில் இருக்கும்வரை நான் நர்மதையைத் தாண்டி வடக்கில் செல்ல முடியாது. காஞ்சியைப் பொறுத்தவரை, வலுவான வாதாபி, காஞ்சியின் எதிர்காலத்துக்கு இடைஞ்சல். இரட்டபாடியின் எதிர்காலத்துக்குக் காஞ்சி வலுவாக இருக்கவேண்டியது அவசியம். வலுவான காஞ்சி, இராட்டிரக்கூடத்துக்குத் தக்ஷிண திசையில் இருக்கும் ஓர் அரண். ஏகப்பட்ட அரசுகளைச் சூழ வைத்துக்கொண்டால், நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் இராஜ்ஜியம் நிம்மதியாக இருக்கமுடியுமா? தக்கணத்தில் நாம். திரமிளத்தில் காஞ்சி. அவ்வளவுதான் இருக்கவேண்டும். மற்ற அரசர்களை விடப் பரமேஸ்வரன் நம்பத்தகுந்தவன். அவனை விடுவித்ததால், எனக்குக் கடன்பட்டவன். அவன் துணையிருந்தால், உத்தராபதம், இரட்டமரத்தில் கனியாகப் பழுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
“வேங்கி, கங்கம், சாளுக்கியம், பனவாசி, கொங்கணம், இலாடம், குர்ஜரம், அவந்தி, மத்தியதேசத்துடன் மருவும், மாளவமும், கன்யாகுப்ஜமும், கௌடமும் இரட்டபாடிக்குக் கீழே வரவேண்டும். கொங்கு, சேர, சோழ பாண்டியர் காஞ்சியின் கீழே. காஞ்சி, நமக்கு நண்பன்.”
“இன்று பாண்டியனின் நிலை பலஹீனமாகி விட்டதால் மட்டும், நாம் நிம்மதியடைய முடியாது. கங்கம் என்ன செய்யுமென்று தெரியாது. ஆனால், சார்பு நாடாகவே சண்டையிட்டுப் பழகிப்போன கங்கம், தனியாகத் தாக்கும் அளவுக்கு வலிமை கொண்டதில்லை. ஆனால், பலவீனமான பாண்டியமும், கங்கமும் சேர்ந்துகொண்டால், காஞ்சி நசுங்க வாய்ப்புண்டு. வாதாபியும் கங்கத்தின் பிடியில் வரலாம். அப்படி நடந்துவிட்டால், இரட்டத்துக்கு ஒரு வெருட்டும் வெங்கண், தக்கணத்தில் உருவாகிவிடும். வாதாபியோடு சேர்ந்துகொண்டாலும், இரட்டத்துக்கு இடைஞ்சல்தான்.
“அதனால், பாண்டியம் பலவீனமாக இருக்கும் இந்தச் சமயத்தில், கங்கம் சுதாரித்துக்கொள்ளும் முன்பே, வாதாபி இன்னும் பலவீனமாக வேண்டும். அதைப் பலவீனப்படுத்தக் கூடிய ஒரே நாடு, நம்முடையதுதான். அதனால், நான் சாளுக்கியர்களுக்கு எதிராக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், காஞ்சியின் இதத்துக்கே. காஞ்சி வலுவுடன் இருந்தால்தான், கங்கம் அடங்கியிருக்கும். இதைப் பரமேஸ்வரனுக்கு நாம்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். நம்முடனான நட்பு, நந்திவர்மனுக்குக் காஞ்சியை வலுவாக்கும் அஸ்திரம்.”
“இப்போதைக்குப் பாண்டியனால், காஞ்சிக்கு அபாயம் இல்லை என்பது சரிதான். பொத்தப்பி சோழன் வஜ்ரகண்டன்? ரேணாடு?”
“இரண்டு சோழர்களுக்கும் தனிப்பட்ட நிலை கிடையாதே, சிற்றப்பா? அந்நிலையை அவர்கள் வகிக்கவும் நாம் விடப்போவதில்லை. இன்றைய தினத்தில், பாண்டியன் பாதையில்தான் பொத்தப்பி போகும். ஸ்ரீசைலத்தை நான் அசைத்த விதத்தைப் பார்த்தபிறகுமா ரேணாடு எதிர்க்கும்? மேலும், உதயசந்திரனின் வடதிசை வலிமைக்கு முன், வஜ்ரகண்ட திவாகரன் எம்மாத்திரம்?”
தந்திதுர்க்கன் பேசியதை வெகுவாக இரசித்தார் கிருஷ்ணராஜர். “யாரைக் காஞ்சிக்குத் தூதாக அனுப்பப் போகிறாய்? நீ உதவியதை உதயசந்திரனும் நந்திவர்மனுக்குச் சொல்லியிருப்பான்”
“கோவிந்தனை அனுப்ப வேண்டியதுதான்.”
“கோவிந்தனா? செய்வான் என்கிறாய்? கொஞ்ச நாட்களாகவே அவனுடைய கவனமெல்லாம் களிப்பதிலேதான் இருக்கிறது”
“இளம் வயதுதானே! நாம் விளையாடாததா?.” தந்திதுர்க்கன் சிரித்தான்.
“இந்த வயதிற்குள்ளே நீ சாதித்ததை எவராலேயாவது செய்ய முடியுமா? நீயும் இளவயதினனாகவே இருந்தாலும் களியாட்டத்தின் வரம்பு அறிந்தவன் நீ. நானாவது வயதானவன்.”
“உங்கள் வயதைப் பற்றிச் சந்திரபாலாவிடம்தான் கேட்கவேண்டும்.” மீண்டும் சிரித்தான். கிருஷ்ணராஜாவும் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.
“இம்மாதிரிப் பணிகளை செய்து முடிக்கும் திறமை அவனுக்கு இருக்கிறது. தர்ம நியாய விஷயம், வருமான நிர்வாகம், கோவில் பணி இதெல்லாம்தான் அவனுடைய சுவடிகளில் கிடையா.”
“சரி. தந்தையான என்னைவிட, அவனை அதிகம் அறிந்தவன் நீ. தனியாக அனுப்பாமல், வணிகச் சாத்துடன் அனுப்பு. அடுத்த சாத்து, எப்போது, கிழக்குத் திக்கு செல்கிறது என்று பார்”
“பார்த்துவிட்டேன். இன்னும் பத்து நாட்களில், கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் முடித்துவிட்டுத் துவாதசி பாரணத்துக்குப் பிறகு கிளம்புகிறது. கோவிந்தனிடம் சொல்லி விடுகிறீர்களா?”
“இப்போதே வேண்டாம். ஏகாதசி அன்று சொல்லிக் கொள்வோம். நீயே சொல். அதற்கு அதிகக் கனம் உண்டு. எங்களுக்கு அரசன் அல்லவோ நீ?”
“சிற்றப்பா! உங்கள் வியங்கியம் உங்களை விட்டுப் போகாதே” என்று சொல்லிக் கொண்டே இருக்கும்போது, திரை விலக்கிச் சேவகன் உள்ளே நுழைய உத்தரவு கேட்டான்
“என்ன விஷயம்?”
“மஹாராணியார் அனுமதி கேட்கிறார்.”
“வரச்சொல்” கிருஷ்ணராஜர் எழுந்தார். “நீங்களும் இருங்கள் சிற்றப்பா, முக்கியமான விஷயமாக இல்லாவிட்டால், இப்படி, ராஜாங்கக் காரியம் நடுவே லாஹினிதேவி வர அனுமதி கேட்க மாட்டாள்” பேசிக்கொண்டு இருக்கும்போதே, செவிலியர் சூழ ராணி உள்ளே நுழைந்தாள். இளம் வயது. இரண்டு மூன்று வயது, தந்திதுர்க்கனை விடக் குறைவாக இருக்கலாம். உள்ளே நுழைந்ததும், கணவன் காலில் விழுந்து எழுந்தவள், கிருஷ்ணராஜா காலிலும் விழுந்து எழுந்தாள். ஏதோ சொல்ல வாயெடுத்தவள், கிருஷ்ணராஜர் பக்கம் பார்த்துத் தயங்கினாள். தந்திதுர்க்கன் சொல் எனக் கை காட்ட,
“பிராணநாதருக்கு மங்களம் உண்டாகட்டும். ரேவா ருது அடைந்திருக்கிறாள்” என்றாள் மெல்லிய குரலில்.
“நல்ல செய்தி! பத்மநாபனும், பிறை சூடியும் காக்கட்டும். கரஹாடக நாராயண பட்டரை வரச்சொல். ருது ஜாதகம் கணிக்கட்டும்.”
“அவரும் வந்திருக்கிறார், வெளியே நிற்கிறார்”
“அடடா! வேதமும், வேதாங்கங்களும் அறிந்த, அந்த மஹானுபாவர் வெளியே நிற்கிறாரா, யாரங்கே, பட்டர் பெருமானை உள்ளே அழைத்து வாருங்கள்.”
மெலிதான தேகமும், தீட்சண்யமான பார்வையோடு ஒரு அந்தணர், கையில், ஓர் ஓலையோடு வந்தார். நாற்காலியில் இருந்து எழுந்த தந்திதுர்க்கனைப் பார்த்து கை கூப்பினார். கிருஷ்ணராஜரும் எழுந்து நின்றார். அவருக்கும், வணக்கம் சொன்னவர்,
“அரசருக்கு மங்களம் உண்டாகட்டும். வசிஷ்ட கோத்திரத்தில் வந்த திருவிக்கிரம பட்டருக்குப் பேரனும், கிருஷ்ணபட்டருக்குப் புதல்வனும் ஆன, பூமிசித்திர நியாயப்படி, அரசரால், வேள்விச்சரு வினைக்கு நிலம் அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்ட இந்த நாராயணபட்டன், அரச குமரி ரேவாதேவியின் ருது பாக்கியத்தின் விஷயத்தில் எழுதினது இது. விரிவான ஜாதகம் கணித்துப் பின்னர் சமர்ப்பிக்கிறேன்.
“ஸோமவாரம், தசமி திதி. புணர்தம் நட்சத்திரம். பெற்ற தாய் பார்க்க நடந்த விஷயம். சில துளிகளே விளைந்தன. வார பலன் அமோகமாக இருப்பார். திதி பலன், சந்தோஷம் நிலைக்கும். தலைமை தாங்குவார். நட்சத்திர பலன் பெரியவர்களிடத்தில் பணிவும் அடக்கமும் கொண்டு, நிறைய பேர் சேவகம் செய்ய, நிறை காப்பவராகவும், தான தருமங்கள் செய்பவராகவும், இனிய சுபாவமுடையவராகவும் சிறப்பாக விளங்குவார். அழகான கணவரைப் பெறுவார். தாய் பார்த்த பலன், மிக விசேஷம். அளவு பலன் கோடி நன்மை உண்டாகும். இலக்கினத்தில் குரு, நல்ல விஷயம். ..” என்றவர் தயங்குவது தெரிந்தது.
“எதுவானாலும் சொல்லுங்கள், பட்டரே, நடந்தது உங்கள் கையிலா இருக்கிறது?”
“ஏழாம் இடத்தில், சந்திரனும் சுக்கிரனும் வலுவாக இருக்கிறார்கள்.”
“அதனால் என்ன?”
“வரும் கணவருக்கு வயது அதிகமாக இருக்கும் என்று சாத்திரம் கூறுகிறது.” குரல் கம்மியது பட்டருக்கு. மென்று விழுங்கினார்.
“ஆஹா! கைலாசநாதன் காட்டிவிட்டான் வழியை. மிக நல்ல வார்த்தை சொன்னீர் பட்டரே. சடங்குகள் விமரிசையாக நடக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் அவளைப் பார்க்கலாம் என்ற நாள் வந்ததும் சொல்லி அனுப்புங்கள். இராட்டிரக் கூடத்தின் சிறப்பைத் தீர்மானிக்கப் போகிறாள் என் மகள்.”
கழுத்தில் இருந்த ஒரு சிறிய மாலையைக் கழற்றி அவருக்குத் தந்தான். “வேறு ஏதாவது கிரகங்கள் பலவீனமாக இருந்தால், என்ன பரிகாரம் செய்யவேண்டுமோ அதைச் செய்துவிடுங்கள்.”
சினப்படுவான் என்று பயந்தவருக்கு நிம்மதி. கவலைப் படுவான் என்று நினைத்தவளுக்குக் குழப்பம்.
லாஹினியைப் பார்த்து, “லாஹினி, எல்லாம் நல்லதுக்கே. நீ வருத்தப் படவேண்டியதில்லை. இது இறைவனே, அவள் மூலமாகத் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறான். எனக்கு இருந்த பெரிய குழப்பம், ரேவாவால் தீர்ந்தது. பரம்பரையை நிலை நாட்ட ஆண் குழந்தை இல்லையே என்று கிலேசமடைந்திருந்த எனக்கு, ஆண் குழந்தை பெற்ற மகிழ்ச்சி கிட்டியது இன்றைக்கு. இரவு அந்தப்புரத்தில் விளக்குகிறேன். மங்களம் உண்டாகட்டும். போய் வா” என்றான் தந்திதுர்க்கன்.
அவர்கள் போகும் வரை காத்திருந்த கிருஷ்ணராஜா, “முடிவு கட்டிவிட்டாயா?” என்றார்.
“வேறென்ன சிற்றப்பா? பாருங்கள், எப்படி முடிச்சு அவிழ்கிறது என்று! அந்தக் கைலாசநாதன் சமிக்கை கொடுக்கிறான் என்று உங்களுக்குத் தோன்றவில்லை? என்ன தருணத்தில், எப்படிப்பட்ட செய்தி வந்திருக்கிறது!”
“நீ சொல்வது சரிதான். நந்திவர்மன் ஒப்புக் கொள்ளவேண்டுமே”
“ஒப்புக்கொள்ளாமல் என்ன? அவனை நான் அறிவேன். என் மகள், காஞ்சி இராணியாகப் போகிறாள். இராட்டிரக்கூட வமிசம், திரமிளத்தில் காலூன்றப் போகிறது. சாளுக்கிய வமிசம் சண்டை போட்டும் சாதிக்காமல் போனதைத் தந்தி துர்க்கன், சங்கமத்தால் சாதிக்கப் போகிறான். அவனுக்கு வழிகாட்டிய கைலாசபதிக்குக் காஞ்சியின் ராஜசிம்ஹேஸ்வரத்தை நாணச் செய்யும் அளவுக்கு, நம்முடைய கோவில் அமையவேண்டும். அந்த மஹேந்திர பல்லவன் என்ன சொல்லி, அந்தக் கவேரத் தீவுக் கோயிலை எழுப்பினான் என்று சொன்னீர்கள்?”
“ஶைலீம் ஹரஸ்ய தனும் அப்ரதிமாம் அனேன |
க்ருத்வா ஶிவம் ஶிரஸி தா⁴ரதாத்மம் ஸம்ஸ்த²ம் உச்சை: ஶிரஸ்தவம் அசலஸ்ய க்ருதம் க்ருதார்த²ம் ||”
“அதேதான்! நீங்கள் சொல்வதுபோலே, ராஜசிம்ஹன் மேலே உயர்த்தினான், நான் வராஹமாகப் பூமியைக் குடைந்து செய்கிறேன், செய்வோம். காஞ்சியின் அஷ்டபுயப் பெருமானுக்கும் நன்பொன்னும், பன்மணிக்குவையும், நித்திய கட்டளைகளுக்கு அமுதுபடியும், விசேஷ பூஜைக்கு வரிசைகளும், வேண்டியதெல்லாம் வழங்க உத்தரவு பிறப்பியுங்கள். கோவிந்தனிடமும் தனங்கள் கொடுத்தனுப்புவோம்.”
“அப்படியே ஆகட்டும்”
-----------------------
சில நாட்கள் ஆயின. ஏகாதசியும் வந்தது. கோவிந்தனின் அறைக்கதவு தட்டப்பட்டது. “இளவரசே! அரசர் ஆக்கினை வந்திருக்கிறது”
மஞ்சத்தில் இருந்து சட்டென்று எழப்போனவனை, எழுந்திருக்காமல் இரண்டு மூன்று மிருதுவான கரங்கள் தடுத்தன. காலுக்கு இரண்டாகப் பின்னிப் பிணைந்திருந்த வழுவழுப்பான தொடைகள், அவனுடைய தொடையை இறுக்கின. “என்ன அவசரம், மெதுவாகப் போகலாம்.”
சிரித்துக் கொண்டே கைகளால், இரண்டு காலையும் சுற்றியிருந்த தொடைகளை விரித்துப் பிரித்துவிட்டான். “அரசர் உத்தரவு. சேவகன் சொன்னது காதில் விழவில்லையா. என்ன என்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கினான். “இளவரசே! அவசரத்தில், ஆடை இல்லாமல் போய்விடப் போகிறீர்கள்” என்று சிரித்த ஒரு பெண், மஞ்சத்தில், கிடந்த தன்னுடைய துகிலை எறிந்தாள். “இதையா கட்டிக் கொண்டு கடைதிறக்கச் சொல்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே, அதையே மேலே சார்த்திக் கொண்டு, கடவைக்கு அருகில் போய், ஊடெழுபோக்கியை எம்பித் திறந்தான்.
“என்ன விஷயம்” உறுமினான். இவனிருந்த கோலத்தைப் பார்த்து வெலவெலத்து நின்ற சேவகன், “அரசர் .. உத்தரவு.. இரண்டு நாழிகையில். சூழ்ச்சியறை .. “ என்று உளறினான். “சரி போ, வருகிறேன்” என்றவன், திரும்பி மஞ்சத்தை நோக்கி வந்தான். “அரசர் அழைக்கிறார். இப்போதே போக வேண்டும். வந்து தொடருவோம்”
“நீராடாமலா போகிறீர்கள்?” என்றாள் ஒருத்தி நகைத்துக் கொண்டே. “வாருங்கள், நீராட்டி விடுகிறேன்” என்று இன்னொருத்தி எழ, “நீராட்டைப் பற்றிப் பாக்தாத்தியப் பாலைவனப் பைங்கிளி பேசுவதா” என்று இன்னொருத்தி வம்புக்கு இழுத்தாள். “பாலைவனத்தில் இருந்தால்? சுல்தான்கள் குளிக்க மாட்டார்களா என்ன?” என்று கேட்டுக்கொண்டே, கோவிந்தனை அணைத்துக்கொண்டு, தன் துகிலைக் களைந்து தரையில் எறிந்து கொண்டே நீராடும் அறை நோக்கிப் போனாள் அந்தப் பெண்.
சரியாக, இரண்டு நாழிகைக்குள் சூழ்ச்சியறைக்கு வந்தான் கோவிந்தன். கதவருகே நின்றிருந்த சேவகர்கள், “வாழி இளவரசர்! நீங்கள் வந்தால், உடனே உள்ளே அனுப்பச் சொல்லி உத்தரவு.” என்று வணங்கினார்கள்.
உள்ளே நுழைந்ததும், “வா வா
கோவிந்தா! பணிகளுக்கு இடையில், உன்னைத் தொந்தரவு செய்து விட்டேன்.” என்று கண்ணைச்
சிமிட்டினான் தந்திதுர்க்கன். தந்தையும் இருப்பதைப் பார்த்து, இருவரையும் வணங்கிய
கோவிந்தன், தந்திதுர்க்கன் சொன்னதைக் கேட்டு முகம் சிவந்தான்.
“உட்கார். நாளை நீ காஞ்சிக்குப் போகிறாய். ஒன்றரை மாதப் பயணம். மான்யகேடம், வேமுலவாடா, ஸ்ரீசைலம் வழியாக கிருஷ்ணவர்ணா, துங்கபத்திரா சங்கமத்தைத் தாண்ட வேண்டி இருக்கும். இளவரசன் என்பதைக் காட்டிக் கொள்ளாதே. வணிகச் சாத்து ஒன்று நாளை கிளம்புகிறது. அதற்குக் காவல்படையோடு படையாகப் போ”
“ஒன்றரை மாதப் பயணமா?”
“ஆம். முன்னே பின்னே ஆகலாம். அங்கே, சிவரதன் ஏற்கனவே இருக்கிறான். வெங்கடகிரிச் சரிவில், திருவிப்பிரமேடு என்ற கிராமம் இருக்கிறது. அங்குத்தான் தங்கி இருக்கிறான். அக்கம்பக்கத்தில், நீ வந்தாலே, அவன் இனம் கண்டுகொள்வான். இரகசியமாக முடிக்க வேண்டிய காரியம். வணிகச் சாத்துக் காவலனாகவே நடந்துகொள். மற்ற வணிகர்களுக்கு எதுவும் தெரியாது. தலை வாணிகனுக்கு மட்டும்தான், நீ யாரென்று தெரியும். அவனுடைய படைவீரர்கள், இங்கிருப்பவர்கள் அல்லர். உன்னைத் தெரியாது அவர்களுக்கு.”
“சரி. நான் என்ன காரியம் செய்யவேண்டும்?”
“அங்கே நந்திவர்மப் பல்லவமல்லனைச் சந்திக்கப்போகிறாய். சிவரதன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வான். காஞ்சி வேந்தனுக்கும் எனக்கும் உள்ள நட்பை நீ அறிவாய். தனியாகச் சந்தித்து, அவனுடைய இயற்கைப் பகைவர்களான சாளுக்கிய அரசர்களிடம் அவன் இனி அஞ்சவேண்டியதில்லை என்று சொல். கீர்த்திவர்மன், கூடிய சீக்கிரமே, எம்மால் வலுக்குறைந்த மன்னனாக ஆகி விடுவான். அதற்குப் பிறகு, காஞ்சி மீது, படையெடுக்கக் கனவிலும் நினையான். அப்படி ஓர் எண்ணத்தோடு அவன் சேனை, வாதாபியை விட்டு வெளிச் சென்றால், இரட்டர் சேனை, வாதாபியை நிர்மூலமாக்கி விடும். இதைக் கீர்த்திவர்மன், கூடிய சீக்கிரம் நான் செய்யப் போகும் காரியத்திலிருந்து தெரிந்துகொள்வான். வெகு விரைவில், சாளுக்கிய அரசு, தன்னுடைய முடிவைச் சந்திக்கும் என்றும் சொல். அதற்குப் பிறகு, கங்கத்தையும் கவனிப்போம். அதுவரை இராட்டிரக் கூடம் நந்திவர்மனுக்குக் காப்பு. கங்கத்தோடு மட்டும் கவனமாக இருந்துகொள் என்று எச்சரி.
“இந்த நல்லெண்ணம் மெய்யானது என்று நிரூபிப்பதற்காக, அரசிளங்குமரி ரேவாதேவியை அவனுக்கு மணம் புரிவிக்க முடிவு எடுத்திருக்கிறோம் என்று தெரிவி. அதற்கான ஓலை, நான் கையொப்பமிட்டது, இதோ இருக்கிறது. காலை புறப்படுவதற்கு முன் இங்கே வந்து, இதில் கையொப்பம் இட்டுவிட்டு வாங்கிக்கொள். இந்த ஓலையில், எமக்குச் சிவபெருமான் சித்தத்தில், ஆண் சந்ததி இலபிக்காத பட்சத்தில், எமக்கு ஏதாவது ஆகி விட்டதென்றால், அடுத்துப் பொறுப்பை வகிக்கப் போகும் சிறிய தந்தை கிருஷ்ணராஜரும், அவருடைய ஓராண்வழி அடுத்தவழித் தோன்றல், கோவிந்தனும் இதற்கு உடன்பட்டுக் கைச்சாத்து இட்டிருக்கிறார்கள் என்று காண்பி.
“இதை நிறைவேற்றும் பெரிய பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். யோசனையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு, விவேகத்தோடு நிறைவேற்றுவாய் என்ற நம்புகிறேன். சென்று வா”
திடுதிடுவென்று இப்படி ஒரு திட்டத்தைக் கேட்டதும், எந்த விடையையும் கூறத் தோன்றாமல், கோவிந்தன் தலையை ஆட்டினான். “அப்படியே செய்கிறேன் அரசே!” என்று மட்டும் சொல்ல முடிந்தது அவனால். தந்திதுர்க்கனையும் தந்தையையும் வணங்கிவிட்டு அகன்றான்.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணராஜா, “செய்வான் என்று தோன்றுகிறதா?” என்றார்.
“செய்வான் சிற்றப்பா. செய்ய இயலவில்லை என்றால்,
அதற்கும் சித்தமாக இருப்போம். இரண்டொரு திங்கள்களில் விஷயம் தெரிந்துவிடும்.”
No comments:
Post a Comment