பிரதிஷ்டானத்தில், கோதாவரிக் கரையில், சிதை வீசி எரிந்து கொண்டிருந்தது.
சிதையின் செம்மை, சரீரத்தைத் தானே எரிக்கும்?
புகழை நான் எரித்துவிடுகிறேன் பார் என்று காலதேவன் வரிந்து கட்டிக்கொண்டு,
சிதைக்குப் போட்டியாக மேற்குத்திசை வானத்தைச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தான். அந்த
வெம்மையைத் தாளாமல், சூரியன் நீராடுவதற்காகக் கடலுக்குள் குதித்துவிட,
தூற்றெங்கும் ஒரு குளிர்மை சட்டென்று பரவியது. காலடிகள் ஏற்படுத்திய அழுத்தம்
போனதும், நீர் வடிந்த துளைகளில் இருந்து எட்டிப்பார்க்கும் அலவன்கள் போல, இதுவரை
பதுங்கியிருந்த காற்று, பகலவன் இனி வாரான் என்று தைரியமாக வெளியே வந்து சன்னமாக
வீசியது.
“வா சர்வா, போகலாம். நிறைய பணிகள் இருக்கின்றன” என்று தோளைத்தொட்ட கற்கன் மேல் பொறாமை வந்தது. இவன் எப்படி இவ்வளவு உறுதியாகவும், நிச்சலனாகவும் இருக்கிறான்! பத்துப் பன்னிரண்டு வயது பெரியவன்தான் என்றாலும், இவனுக்கும் என்னைப் போன்ற இழப்புத்தானே. சொல்லப்போனால் இன்னும் பெரிய இழப்பு. அரியணைக்கு அடுத்த பாத்தியனாகவே வளர்க்கப்பட்டும், நான் பிறந்ததால் அந்த உரிமையை இழந்தவன். அவனுடைய பாத்தியதையைப் பறித்த நான், அதைக் காத்துக்கொள்ளத் திராணியில்லாமல் நிற்கும் இந்தவேளையில், அதைத் தன்னுயிரைக் கொடுத்தாவது எனக்கு ஸ்திரப்படுத்திக் கொடுப்பேன் என்று பிரதிக்ஞை செய்து, பீஷ்மனைப்போல மலையாக நிற்கிறான். நான்கு வருடங்களுக்கு முன் இதேபோலத் தன்னுடைய தந்தையையும் இழந்தவன் அல்லனோ? அன்றும் இதேபோலத்தான் நர்மதை நதிக்கரையில் தந்தையோடு நின்றுகொண்டிருந்தேன். சிற்றப்பாவைத் தகனம் செய்த கையோடு, ராஜாங்கத்தில் இறங்கிவிட்டான். இந்த நான்கு வருடத்தில்தான் எவ்வளவு சாதித்துவிட்டான்!
நினைக்கவே மலைப்பாக இருந்தது அமோகவர்ஷனுக்கு. இவனைப்போல நான் எப்போதாவது ஆவேனா? பெரும்சாதனை புரிந்தவருக்குப் புதல்வனாகப் பிறப்பது பெரிய தண்டனை. இதைப் பெருமை என்று பீற்றிக் கொள்ளும் வெற்று மனிதர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால், நானோ அந்த வலிமையின் தாக்கத்தை வலியாகத்தான் தினமும் அனுபவித்து வருகிறேன். இவன் விஷயம் வேறு. சிற்றப்பா இந்திரராஜா சாதாரணமான அரசரா என்ன? அப்படிப்பட்டவருக்குப் பிறந்து, அவரை மிஞ்சும் அளவுக்குத் தன்னைச் சித்தமாக்கிக் கொண்டுவிட்டான். அத்தோடு நின்றானா? அந்த இந்திரரே தொழ, இமயம் போல எழுந்து நின்ற, என் தந்தையும் மெச்சிப் பாராட்டி இப்படி இராஜ்ஜியப் பொறுப்பையே அவனிடம் ஒப்படைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறானே! இவன் மட்டும் இல்லையென்றால், என் நிலைமை எப்படியாகிவிட்டிருக்கும்!
“கலங்காதே! பெரியதந்தையைப் போன்றவர்களின்
அடிதொடர்வது நம்மைப் போன்றவர்களுக்கு எளிதன்று. முடிந்தவரை செய்வோம்.
பாட்டானாரும், நம் தந்தைகளும் உருவாக்கிக் கொடுத்ததை மேலும் உரமூட்டி வளர்க்கிறோமோ
இல்லையோ சிதையாமல் கட்டிக் காப்போம். இயன்றவரை செய்வோம். நான் இருக்கும்வரை,
அதற்குப் பங்கம் வராது.”
சரி என்று ஆமோதிக்கும் விதமாகத் தலையாட்டிய அமோகவர்ஷனின் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்தவன், அமோகனைத் தழுவிக்கொண்டான். “எதைக் கண்டு அஞ்சுகிறாய் நீ? சொல்.”
மேலும் கீழும் மூச்சு வாங்கியது. சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “ஒன்றுமே தெரியாத என்னால் இவ்வளவு பெரிய அரசை நிர்வகிக்க முடியாதே என்ற பயம்தான். இது சாதாரண அரசா?” என்றான்.
“பல்லவமல்லன் கதையைப் பாட்டனார் எத்தனைமுறை சொல்லியிருப்பார்? அவனுடைய நிலைமையை விடவா உன்னுடையது சிரமமானது? உனக்கு நாங்களெல்லாம் இருக்கிறோம். நேற்று மஹாராஜா முன்னால், ஒவ்வொரு அரசராக வந்து உறுதி செய்ததை நினைவு படுத்திக்கொள்.”
முந்தைய நாள், பட்டாபிஷேகம் முடிந்ததும், கோவிந்தராஜா மந்திராலோசனை அறையில் கூட்டமொன்றைக் கூட்டியிருந்தார். அனைத்துச் சிற்றரசர்களும் வந்திருந்தனர். கேட்டவர்களின் இதயத்தைச் சில்லிடவைக்கும் கோவிந்தராஜரின் குரல் நேற்று எழும்பவேயில்லை. பேசத் துவங்கியதும் கான்றல். அடிவயிற்றில் இருந்து உதராந்திரத்தை உருவி வெளியே எடுத்துக் கொண்டு வந்துவிடுமோ என்று அச்சமெழுப்பும் அளவுக்குக் கான்றல். மிகவும் முடியாமல் போக, சுவர்ணவர்ஷன்தான் பேசினான்.
“மஹாராஜாதி ராஜ, கீர்த்திநாராயண, விமலாதித்திய, அதிசய தவள, திரிபுவன தவள, பிருதிவிவல்லப, ஜனவல்லப, ஜகத்துங்க ஸ்ரீஸ்ரீ பிரபூதவர்ஷர் முன்னிலையில், அன்னாரின் இளையவர், ஸ்வர்கீய, இலாடேஸ்வரர் இந்திரராஜனின் புதல்வனாகிய நான், இராட்டிரக்கூடத்துக்கும், இன்று சிம்மாஸன ஸ்திதராக இருக்கும் மஹாராஜ ஸர்வர், மஹாராஜ ஷந்தர், நிருபதுங்க பரமபட்டாரிக அமோகவர்ஷருக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.” என்று வாளை உயர்த்தினான்.
அடுத்து, வேமுலவாடாவின் அரசன் நரசிம்ம யுத்தமல்லன் எழுந்துநின்று தன் விசுவாசத்தை உறுதிசெய்தான். பிறகு, கங்கமண்டல அரசன் சிவமாறன், விளந்தை பலவர்மன், சிவமாறனின் தம்பி விஜயாதித்தியனின் மகன் ராஜமல்ல சத்யவாக்கியன், வேங்கியின் பீமசாளுக்கி, ரேணாட்டுச்சோழன், பெரும்பாணப்பாடி மாவலி பாணராச வித்தியாதரன், பாட்டனார் கதம்பநாட்டு அரசனுடன் துண்டகராஷ்ட்ரத்தின் பிரதிநிதியாகத் தந்திவர்மப் பல்லவனின் புதல்வன் பட்டத்திளவரசன் சிறுவன் நந்திவர்மன், திரமிளத்திலிருந்து ஜடில பாண்டிய மாறவர்மனின் பிரதிநிதி, அந்தப் பாண்டியராஜாவுடைய அத்தான்சேய் பொத்தாப்பிச் சோழ அரசன் ஸ்ரீகண்டன், பூவிக்கிரம கங்கனின் சந்ததியில் வந்த நந்திமலை அரசன் ஜெயதேஜா, தக்ஷிண கோசலத்தின் சந்திரகுப்தன், விதர்ப்பத்தின் அரசன், கன்யாகுப்ஜத்தின் சக்ராயுதன் மற்றும் கௌடதேச அரசன் தேவபாலனின் பிரதிநிதிகள், மாளவ ராஜன், விந்தியாதிபதி மாரஸர்வன், விதிஷாவின் ஜெஜ்ஜா, நாகசாரிகாவின் தந்திவர்மன், முகுள குடும்பத்தைச் சேர்ந்த ஏறகோரியின் மகன் ஆதோரன், இலாட்டலூரா ராஷ்ட்ரபதி ஸ்புரிதவர்ஷன், திரிபுரியின் காலச்சூரி அரசன், நொளம்பலிகையின் சாருபொன்னேரன், வடகொங்கணத்தை ஆண்டுவந்த ஷைலஹாரன் கபர்த்தி, தென்கொங்கணத்தின் தீயப்பராஜன், கங்கவாடியின் பிரமுக்கியன் சாகிராஜா, தமையன் ஸ்வர்கீய ஸ்தம்பனுடைய மகன் ராமாடு விஷயாதிபதி சங்கரகணன், ஆளுபராஜன் சித்திரவாஹனன் என்று அரசர்களும், அவர்கள் பிரத்தியேகமாக அனுப்பிய பிரதிநிதிகளும், மஹாமண்டலேஸ்வரர்களும் ஒவ்வொருவராக எழுந்து அமோகவர்ஷனுக்குத் தத்தம் விசுவாசத்தைப் பிரகடனப் படுத்தினார்கள். அதற்கான ஓலைகளும் அரசர்களால் கையெழுத்திடப்பட்டு, இலச்சினை சரிபார்க்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டன.
மனத்தில் அவையெல்லாம் ஓட, அமோகவர்ஷன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கற்கனை நோக்கித் தீனமாகப் புன்னகை செய்தான்.
“என்ன, யார் யாரெல்லாம் இராட்டிரக்கூடத்துக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு விட்டாயா?”
வெற்றாகச் சிரித்தான் அமோகவர்ஷன்.
“இந்த உறுதிமொழியை எல்லாம் இவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நீ நம்புகிறாயா, கற்கா?”
சிலகணங்கள் மௌனனமாக இருந்த கற்கன், “யாரெல்லாம் காப்பாற்ற மாட்டார்கள் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டான்.
“சிவமாறன் நிச்சயம். பீமசாளுக்கி காப்பாற்றினாலும், அவனுக்குத் திறமை போதாது. ஆதோரனும், நரசிம்ம யுத்தமல்லனும் உயிரையும் கொடுப்பார்கள். மற்ற அரசர்களால் பெரியதாக எந்தப் பாதிப்பையும் செய்ய முடியாது என்றாலும், அவர்களால் துணையும் செய்ய முடியாது. காஞ்சி தொலைதூரத்தில் இருக்கிறது. தந்திவர்மப் பல்லவன் மதில் மேல் பூனை. ஏற்கனவே தந்தையிடமே முரண்டு செய்து, அவரால் பாடம் கற்பிக்கப் பட்டவன். கௌடத்தையும், கன்யாகுப்ஜத்தையும் நம்மால் கட்டுக்குள் வைக்க முடியாது. அவை இழந்த தேசங்கள்தாம். பாணன், காஞ்சி சொல்லுக்குத்தான் கட்டுப்படுவான். திரமிள அரசுகள் தனிவழி. தந்தையிடம் இருந்த பயத்தால், ஆதரிப்போம் என்றார்கள். இன்று அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டால், அவர்கள் உத்தரமே வேறாக இருக்கும். பெரியப்பா மகன் சங்கரகணன்? சாகிராஜாவைக் கங்கத்துக்கு மஹாமண்டலேஸ்வரராக நியமித்ததை அவனால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? ஆனால், அவனால் ஒன்றும் பெரியதாகச் செய்ய முடியாது. சிவமாறர் பிறழ்ந்தாலும், அவர் இவனுக்கெப்படிக் கங்கத்தை விட்டுக் கொடுப்பார். அவனைப் பரித்துவிடலாம்.”
“இலாட்டலூர் ஸ்புரிதவர்ஷன்?”
“நானும் அவனை முதலில் சந்தேகித்தேன். ஆனால், அவன் நடந்துகொள்வதை எல்லாம் பார்க்கும்போது, நம்பிக்கை வருகிறது”
“ஆமாம். மஹாராஜாவும் முதலில் சற்று ஜாக்கிரதையோடுதான் இருந்தார். ஒற்றர்கள் அவனை மிகவும் கண்காணித்து வந்து, விவரங்கள் தந்து கொண்டிருந்தார்கள். ஐயத்திற்கு இடம் வைத்ததில்லை அவன். என்ன, தன்னுடைய தந்தையைப் போலவே, சிருங்கார பத்தன். கொடுத்து வைத்தவன். பெரிய பொறுப்பொன்றும் கிடையாது. அவனைப் பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கும் எனக்கு.” சிரித்த கற்கன், மேலும் தொடர்ந்தான். “மற்றவர்களைப் பற்றிய உன் கணிப்பிலும் ஒரு குறைவில்லை. சரியாகத்தான் எடை போட்டிருக்கிறாய். என்னைப் பற்றிக் கணிப்புச் சொல்லவில்லையே?” என்று மீண்டும் உரக்கச் சிரித்தான் கற்கன்.
“விளையாடாதே. உனக்கு இராஜ்ஜியம் வேண்டுமானால் சொல், இப்போதே தந்து விடுகிறேன். எனக்கும் நிம்மதியாக இருக்கும்.” ஸர்வன் குரலில் உண்மை வெளிப்பட்டது.
அமோகவர்ஷனின் மனப்போராட்டம் கற்கனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. போராட்டத்துக்குக் காரணமும் நிஜமானதுதான். கோவிந்தராஜா என்ற ஒரு பெரிய அணை இதுவரை பிரம்மாண்டமான வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வந்தது. அந்த அணை உருவாக்கிய வெள்ளந்தான் அது என்றாலும் இன்று அந்த அணையின் கதவுகள் வலிமையிழந்து போயிருக்கின்றன. ஒரு கதவு உடைந்தாலும் போதும், இதுவரை கட்டுப்படுத்தப்பட்டுத் தக்க சமயத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வெள்ளம் சீறிப்பாய்ந்து வழியில் எதிர்ப்பட்டவற்றை எல்லாம் நாசமாக்கிவிடும். வெறும் ஆயுதபலத்தால் நிறுத்தக்கூடிய வெள்ளமா அது? இந்த நிதர்சனம்தானே அமோகனின் அச்சத்துக்கும் காரணம்! தன்னாலும் இந்த வெள்ளத்துக்கு அணை போடமுடியுமா என்ற ஐயம் தனக்குள்ளும் இருக்கிறதே! கோவிந்தரிடமும் இதைப் பற்றி எத்தனை முறை பிரஸ்தாபித்திருக்கிறான்? ஆனால், அவர் அதையெல்லாம் கலங்கவைக்கும் விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கு அவன் மீது இருந்த நம்பிக்கை, அவனுக்கே இல்லை என்று நினைத்ததும் சுர்ரென்றது அவனுக்கு.
“உன்னைச் சுற்றியிருக்கும் அபாயங்களைச் சரியாகக் கணித்திருப்பதே, அவற்றை நீ வெற்றியும் கொண்டுவிடுவாய் என்று காட்டுகிறது. தைரியமாக இரு, சர்வா!” இப்போது இவன் நம்பிக்கையைத்தான் தூக்கி நிறுத்த வேண்டும்!
“கணித்தது இன்பத்தைத் தரக்கூடியதாக இருந்தால் ஒருவேளை இந்த இன்பம் நடக்கப் போகிறது நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்துக் குதூகலித்துக் கொள்ளலாம். நடக்கப்போக்கும் அபாயத்தைச் சரியாகக் கணித்துவிடுவதால் என்ன பயன்? இது நடக்கத்தான் போகிறது என்ற பயம் அல்லவா உருவாகி ஒருவேளை நடக்காமலும் போகலாம் என்ற நம்பிக்கையையே தகர்த்து விடுகிறது?”
“அபாயத்தைக் கணித்தால், அதற்கு ஆயத்தமாகிக் கொள்ளலாம் அல்லவா? எதிரி படையெடுத்து வருகிறான் என்று தெரிந்துவிட்டால், நம்மை முன்னேற்பாட்டுடன் சித்தமாக்கிக் கொள்வது எத்துணை உபயோகமானது?”
“அது நமக்கு எதிரியை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தால்தானே உபயோகமாக இருக்கும்? மரணத்தை எடுத்துக் கொள். எப்போது மரிக்கிறோம் என்று தெரியாமல் இருப்பதால்தான் வருங்கால மகிழ்ச்சியின் கனவில் திளைத்து, இன்று வினை புரிகிறோம்? மரிப்பது இன்னுமொரு திங்கள் என்று சொல்லிவிட்டால், நம் முயற்சியெல்லாம் இதனால் என்ன பயன் என்ற கேள்வியிலேயே நசித்துப் போய்விடாதா?”
“மஹாராஜாவுக்குத் தான் இறப்பது முன்னமே தெரிந்திருக்கவில்லையா? அவர் எப்போதாவது அதற்காகத் தயங்கிக் காரியம் செய்வதை நிறுத்தியிருக்கிறாரா?”
“அவர் தனக்கென்று எந்தக் காரியமும் செய்துகொள்ளவில்லையே? நான் கஷ்டப்படக்கூடாது என்ற குறிக்கோள் இருந்ததால், சரீர சிரமத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் காரியத்தில் கண்ணாக இருந்தார். நான் ஒருவேளை பெரும்பிணியுற்று இன்றோ நாளையோ என்றிருந்தால், இத்துணை ஆர்வம் அவருக்கு இருந்திருக்குமா? உன்னிடம் ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கிவிட்டிருப்பார். எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு ஒரு பெருஞ்சுமை கற்கா. அதைச் சரியாகக் கணிக்கும் திறன் இருந்துவிட்டால், அது சுமையாகத்தான் ஆகிவிடும்.”
“பாட்டனாரின் கணிப்பாற்றல் பாரறிந்தவொன்று. அது இல்லாத நமக்கெல்லாம் அவர் அனாயாசமாக எடுத்த பல முடிவுகளை இன்று எடுக்கக் கூடுமா?”
“நான் கணிப்புத் திறனைக் குறைத்து மதிப்பிடவில்லை. அது என்னைச் செயலிழக்க வைக்கிறது என்றுதான் சொல்கிறேன்.”
“அபாயத்தைக் கண்டு அஞ்சுபவன் அல்லன் நீ. பொறுப்பைத் தட்டிக் கழிக்காத இயல்பு, உனக்கு இயற்கையிலே உண்டு. சிறுவனாக இருக்கும்போதே, வயதில் பெரிய பிஜ்ஜலனுக்கும், கோகிலவாணிக்கும், ஆபத்துவராமல் நீ முன்வந்து தடுக்கவில்லையா? பட்டரி ஜெஜ்ஜராஜாவின் புதல்வன், அந்தக் குட்டிக் கற்கன்? ஞாபகம் இருக்கிறதா? என்னால்தான் அன்று உருக்காலைக்குள்ளே பாதுகாவலர்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு விளையாட்டாக நுழைந்தோம். அவன் இருந்த இடத்தில் உருகிய உருக்குத் தெறிக்கவும், நீ சமய உசிதமாக ஓடிப்போய், உருக்குக்கு முதுகைக் காட்டி நின்றுகொண்டு, அவன் மேல் தெறிக்காமல் காத்தாய். அந்தக் காயம் ஆற எத்தனை நாள் ஆயிற்று! பெரியவர்கள் கேள்விகேட்டபோது, எங்களைக் காட்டிக் கொடுக்காமல், பழியை உன்மேல் போட்டுக் கொண்டாயே”
“ஏதோ தோன்றியது, செய்தேன். இப்போது இருக்கும் நிலைமையும் அப்படி ஏதாவது செய்தால், ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றால் சொல், நான் செய்யச் சித்தமாக இருக்கிறேன்.” வெறுமையாகச் சிரித்தான்.
“அன்று நீ செய்தது போலக் களத்துக்குள் ஓடிவரும் இயல்பு எல்லோருக்கும் இருக்காது, சர்வா! அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, அந்த இயல்பு இருப்பது இன்னும் மிக அபூர்வம். திறமையாகக் காரியம் ஆற்றுபவர்களில் இரண்டு விதமான அதிகாரிகள் உண்டு. ஒருவகை, எப்போதும் அதிகார உச்சியில் இருந்துகொண்டு, கீழிருப்பவர்களைச் சரியான முறையில் ஏவி, அவர்களைக் கண்காணித்துக் காரியத்தைச் செய்விப்பவர்கள். இன்னொருவகை செய்விக்கப்படும் காரியம் தொய்வடைகிறது என்று தோன்றினால், களத்தில் குதித்து அதைச் செய்து காட்டுபவர்கள். நான், கோவிந்த மஹாராஜா எல்லாம் முதல்வகை. என் தந்தை, நீ போன்றவர்கள் எல்லாம் இரண்டாம்வகை. அர்ஜுனன் பீஷ்மனை அடிக்கத் தயங்குகிறான் என்று தோன்றியதும், இவனால் வேலை ஆகாது என்று, தேரை விட்டு இறங்கிக் களத்தில் குதித்தானே, அவனுடைய சாரதி, அதைப்போலப் பொறுமையிழந்து களத்தில் குதிக்கத் துடிப்பவன் நீ. அதனால்தான் உனக்கு இப்படி விரக்தி ஏற்படுகிறதோ? இல்லை, வேறு ஏதோ ஓர் சிந்தனை, அந்தப் பார்த்தனைச் சஞ்சலப் படுத்தியது போல ஆட்டி வைக்கிறதா? என்னவென்று கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார். இந்த மயக்கத்தை நீ தூர எறியவேண்டும். இல்லையென்றால் இது உன்னைச் செயலிழக்கவைத்து விடும்”
“நிறைய யோசித்துப் பார்த்து விட்டேன் கற்கா. இனம் காண முடியவில்லை. ஓர் எண்ணத்தைப் பிடித்து, அதனுடைய மூலத்தைக் காண மிகுந்த பிரயாசைப் படுகிறேன். ஓரிரண்டு அடுக்கு வரை போக முடிகிறது. அதற்குப் பிறகு, ஒரு பயம் தோன்றி, மேலே தோண்ட முடியாமல் தடுத்துவிடுகிறது. அரசுரிமையெல்லாம் ஓர் உபயோகமற்ற செயல்பாடு என்று தோன்றிவிடுகிறது.”
“நீ சந்திரசேனனோடு சமண பசதிக்கு அடிக்கடி போய் வருவதால் வந்த நிலைமை இது” சிரித்தான் கற்கன். “இப்படியெல்லாம் உபயோகமற்றது என்று யோசித்திருந்தால், தந்திதுர்க்க மஹாராஜாவால் இப்படி ஒரு சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபனம் செய்திருக்க முடியுமா?”
“இதற்கு முன்னால் இல்லாமல் இருந்ததை உருவாக்குவதற்கும், உருவாகிப் புகழ்பெற்று நிற்கும் ஒன்றைக் காட்டிக் காப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?”
“நிச்சயமாக இருக்கிறது. முந்தையது கடினம்.”
“எப்படிச் சொல்கிறாய்? யாருமே கவனிக்காத ஒருவன், தன்னுடைய கனவு ஒன்றை நிறைவேற்றுவதற்கும், எல்லோருடைய கவனமும் எதிர்ப்பும் தன்மேல் விழுந்துகொண்டிருக்கும் நிலையில் இருக்கும் ஒருவன், காரியம் ஆற்றுவதற்கும்தான் எத்தனை வேறுபாடு? விக்கிரமாதித்தியரும் சரி, கீர்த்திவர்மரும் சரி, மொத்தச் சாளுக்கிய நாடும் பல்லவம் காஞ்சி என்றே பஜித்துக் கொண்டிருந்த வேளை அது. வடக்குப்புறம் மிலேச்சர்கள் கதவைத் தட்டிக்கொண்டிருக்கும்போதும், அவர்களை எதிர்கொள்ளும் சுமையை அவனி ஜனாஷ்ரயனுக்குத் தள்ளிவிட்டுவிட்டுக் காஞ்சியை எப்படித் தலை குனிய வைக்கலாம் என்றே யோசித்துக்கொண்டிருந்த ஒரு சாம்ராஜ்ஜியம். உலகம் அப்போது தந்திதுர்க்கராஜாவை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
“அவரும் மொத்த சாம்ராஜ்ஜியத்தோடேயா மோதினார்? கொஞ்சம் கொஞ்சமாகக் கவனமும் எதிர்ப்பும் இல்லாத இடங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தந்திதுர்க்கருக்குக் கனவு பிறக்க வழி கொடுத்த உலகம், அதை நனவாக்க அவர் முயன்றபோது, கண்டுகொள்ளாமலும் இருந்தது. அவருடைய சாதனையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர் செய்தது வேறு என்கிறேன்”
“நீ சொல்ல வருவது புரிகிறது. கிருஷ்ணராஜா செய்தது?”
“கிருஷ்ணராஜாவும் அந்தக் கனவின் தொடர்ச்சியைத்தானே செய்தார், கற்கா? நாகசாரிகா எதிர்ப்பை அடக்கியதை வேண்டுமானால் கட்டிக் காப்பது என்று வைத்துக் கொள்ளலாம். அதை அடக்கியது பெரிய விஷயம்தான் என்றாலும், அவர் அனுபவசாலி. சாம்ராஜ்ஜிய நிர்மாணத்தின் அடிப்படைக் கட்டுமானத்தில் நேரடியாகப் பங்கு கொண்டவர். அதனால், அவருக்கு அது ஒரு தொடர்ச்சியாக ஆகிவிட்டிருந்தது.”
“கீர்த்திவர்மனை அவர் ஒழிக்கவில்லையென்றால், இராட்டிரக் கூடமே நின்றிருக்காதே?”
“ஆனால், உலகத்துக்கு அவர் அப்போதும் ஒரு பொருட்டாக இருந்ததில்லையே? நாகசாரிகாவின் அரசன் கற்கனும், வாதாபி கீர்த்திவர்மனும் அப்படித்தானே நினைத்தார்கள்? கிருஷ்ணராஜாவா, யார் அது? என்ற நிலைமைதானே உத்தரதேசத்திலும், தக்கணத்திலும்? ஏன் வேங்கி கூட, அவரை ஓர் வளரும் அபாயமாக நினைக்கவில்லை. கீர்த்திவர்மன் முதிர்ச்சியில்லாதவன். அவன் மட்டும் தந்திதுர்க்கர், பல்லவமல்லர் போல இராணுவப் பட்டறிவு கொண்டிருந்தவனாக இருந்திருந்தால், கற்கனைத் தாக்க அவர் குர்ஜரத்துக்குப் போன அதே சமயத்தில், வேங்கியுடன் சேர்ந்து இராட்டிரக் கூடத்தைத் தாக்கி அழித்திருக்கலாம். இந்த மெத்தனம் அவனுக்கு ஏன் வந்தது? கிருஷ்ணராஜாவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாததால்தான். புறவுலகு தன்மேல் கவனம் செலுத்தாத அந்த வேளையில், அவர் முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அவருக்கு அவகாசம் கிடைத்தது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டார். கீர்த்திவர்மனை நீக்கியதும், அவர் அடுத்துக் குறிவைத்த கங்கத்தின் கதையும் அப்படித்தானே? எத்தனை வருடங்கள் சண்டையிட்டுக் கங்கத்தை வீழ்த்தினார்! கங்கம் அவரை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாததால்தான் அவருக்கு அவகாசமும் கிடைத்தது. கிடைத்த அவகாசத்தில், நன்கு முன்னேற்பாடு செய்துகொண்டு கங்கத்தைத் தாக்கினார். முதல் கல் அவரெறிந்ததுதான். கூடவே, இலகுவான வேங்கி நாட்டையும் வீழ்த்தினார், அதற்குப் பெரிய பாட்டனார் கோவிந்தர் இருந்தார். யோசித்துப்பார், கற்கா.”
“கிருஷ்ணமஹாராஜாவை ஒரு சக்தியாக ஸ்ரீபுருஷன் நினைப்பதற்குமுன் அவர் முதலடி எடுத்துவிட்டார் என்கிறாயா, சர்வா?”
“ஆம். அப்படி அவர் எடுத்த அடியில், அவர் தோல்வியுற்றுக் கீழே விழுந்திருந்தாலும், அது ஒரு பெரிய விஷயமாகவே இருந்திருக்காது, அன்று. ஒரு தனிமனிதனின் கனவு அழிந்தது. ஸ்ரீபுருஷனின் வீரத்தை வழக்கம்போல உலகம் கொண்டாடியிருக்கும். அவ்வளவுதான். உலகக் கவனத்தின் வெளிச்சம் அவர் மீது எங்கே பட்டது அப்போது? அவர் தெரிந்தெடுத்த வழியையும் பார். வடக்கிலும் தெற்கிலும் ஒரு சேர, அவரால் இராஜ்ஜியத்தை விரிக்கமுடிந்ததா? இல்லை. தன்னுடைய இயலாமையை அவரும் புரிந்துகொண்டுவிட்டிருந்தார், தக்கணத்தில்தானே கவனம் செலுத்தினார்? தந்திதுர்க்கர் யாத்த வடதேசத்தை விட்டுக் கொடுத்தார். உஜ்ஜைனி அவருக்கு முக்கியமாகப்படவில்லை. இந்த உத்தியோடு செயல்பட்டதால், யாரும் தன்னை ஒரு பெரிய சக்தியாகக் கவனிக்கும் முன்னமே, தக்கணத்தில் காலூன்றி விட்டார். அவருடைய ஆட்சியின் முடிவில்தான், நிலைமை மாறி உலகம் அவரைக் கவனிக்கத் தொடங்கியது.”
“நீ சொல்வதின் அடிப்படையில் பார்த்தால், பாட்டனார் துருவராஜாவின் ஆட்சி, இந்தச் சாம்ராஜ்ஜியத்தை ஒருங்கிணைத்த போதிலும், அவர் அரியணையில் அமர்ந்தது ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இல்லை என்கிறாயா?“
"ஆமாம். தமையனையா வீழ்த்த வேண்டும் என்ற தார்மீக சங்கடம்தானே அவருடைய முக்கியக் கேள்வியாக இருந்தது? கிருஷ்ணராஜா ஆட்சியில் இருந்தவரை, பெரிய பாட்டனார் படையெடுப்புக்களிலும், இவர் நிர்வாகத்திலும்தானே முனைப்பாக இருந்தார்கள். இவரை உலகம் எங்கே கவனித்தது? கிருஷ்ணமஹாராஜா இறந்ததும், பெரிய கோவிந்தரைத்தான் உலகம் பொருட்டாக மதித்தது இல்லையா? காஞ்சிப் பல்லவமல்லர், பாட்டனார் பெரும் படையோடு போனபோதும், அலட்சியமாகத்தான் எடுத்துக் கொண்டார். சிவமாறன், வேங்கி விஷ்ணுவர்த்தனர் யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். இவருடைய பராக்கிரமத்தைக் குறைத்துத்தான் மதிப்பிட்டார்கள். அதுதான் இவருக்குப் பலம் கொடுத்தது."
"ம் ம் ம் ..".
"தன் வலிமையை மற்ற நாடுகள், பொருட்படுத்தத் துவங்குவதற்கு முன்பே, எல்லா எதிரிகளும் ஒன்று சேர்வதற்கு முன்பாகவே, அவர் ஒவ்வொரு நாடாகத் தேர்ந்தெடுத்து அடிபணிய வைத்தார். இலகுவான வேங்கிக்குத் தன்னுடைய தளபதியே போதும் என்று காட்டினார். சிவமாறரின் காலில் சங்கிலி கட்டியிழுத்துக் கொண்டுவந்ததும்தான், உலகம் பாட்டனாரை அச்சத்தோடு பார்க்க ஆரம்பித்தது”
“அதற்குப் பிறகுதான், அவருடைய அனுபவம் கைகொடுக்க, நம் தந்தைகளின் உதவியுடன் அவர் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக் காத்தார் என்று சொல்கிறாயா?”
“ஆமாம். நினைத்துப்பார், கற்கா!. இப்போது, இந்த சாம்ராஜ்ஜியம், வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் வியாபித்து, மலையையும் கடல்களையும் தொட்டுக்கொண்டு, பெருநாகப் பாம்பு போலப் படுத்துக்கிடக்கிறது. எல்லா நாட்டு அரசர்களும் அதனுடைய விஷத்தையும் வீரியத்தையும் அனுபவித்திருக்கிறார்கள். தத்தம் செல்வத்தையும், பெருமையையும், ஏன் உயிரையும் அதனோடு சண்டையிட்டு இழந்திருக்கிறார்கள். பாம்பு இப்போது தளர்ந்திருப்பது எல்லோருக்கும் தெரிகிறது. எல்லோருடைய கவனமும் அந்தப் பாம்புமேல்தான். இன்றிலிருந்து அதை உயிர்க்க வைக்கும் பொறுப்பு, என் மேல். இந்தப் பாம்பைக் கட்டிக் காக்க வேண்டுமானால், எந்தப் பகுதியைக் காக்க வேண்டும்? தலையையா, வாலையா? சுற்றிலும் கீரிப்பிள்ளைகள் பதுங்கியிருக்கின்றன. இந்தப் பன்னிரண்டு வயது சிறுவனால் இது முடியுமா? பன்னிரண்டு வயதில், உன் தந்தையும், என் தந்தையும் என்னைப் போலவா இருந்தார்கள்? நான் சுயக்கழிவிரக்கத்தில் இப்படிப் பேசவில்லை நிதர்சனத்தை நேர்மையாகச் சந்தித்தபடி, இதைப் பேசுகிறேன். என் நிலைமை இப்படி இருக்கும்போது, இது எப்படி ஓர் ஆட்சியின் தொடக்கமாக இருக்கமுடியும்? பல்லவமல்லரை உதாரணம் காட்டினாய். அவர் ஆட்சியைத் தொடங்கியவுடனேயே, உயிருக்குப் பயந்து, ஓடித் தலைமறைவாகவில்லை? எத்தனை வருடங்கள், காஞ்சி நிராதரவாகப் பகைவர்களின் பிடியில் இருந்தது? இராட்டிரக்கூடம் எப்படிப் பிழைக்கும்? நாளை வரலாறு எழுதப்படும்போது, அமோகவர்ஷன் என்னும் சிறுவன் ஆட்சியில் அமர்ந்தான். நாட்டைக் காக்கத் திறலற்ற அவனுடைய காலத்தில், அவனியையே அச்சுறுத்திய இரட்டபாடி அழிந்து சிதறியது என்ற அபகீர்த்தி அன்றோ எழுதப்படும்? இந்தச் சுமையை நான் எப்படிச் சுமக்க முடியும்? தந்தை இன்னும் ஒரு பத்துவருட காலம் இருந்திருக்கக் கூடாதா? இல்லை நான்தான் பத்துவருடம் முன்பு பிறந்திருக்கக் கூடாதா?” கண் கலங்கியது அமோகவர்ஷனுக்கு.
அப்படியே அருகில் இருந்த ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான் ஸர்வன். தான் சொன்னதில் இருந்த உண்மை உறைக்க, தன்னைத் தேற்றும் வழிதெரியாமல் திகைத்துப்போயிருந்த கற்கனைப் பார்த்துச் சொன்னான்:
“கற்கா! எனக்கென்னவோ, உன்னைத்தான் அரியணையில் அமர்த்தியிருக்கவேண்டும். தந்தை முதலாண்வழிக்கு முக்கியப் பிரதானம் கொடுத்துவிட்டார். நான் உயிர்ப்பயத்தால் இப்படிப் பேசவில்லை. நீ வில்லை வளைத்தாயானால், எதிரிகள் நூற்றுக்கணக்கில் மடிவார்கள். குர்ஜரேஸ்வரனை நீயும் உன் தந்தையும் எதிர்த்தபோது, நீ வில்லை ஏந்திக் குர்ஜர சேனையைத் துவம்சம் செய்ததைப் பாடாத நாவில்லை. எங்களுக்குத் தனுர்வேதத்தைக் கற்றுக்கொடுத்த வாதபுரத்துப் பானுபட்டர், அந்தப் போரில், நீ எப்படிச் சாபத்தைப் பிடித்தாய், எப்படித் தூணியிலிருந்து சரத்தை உருவினாய், எப்படி இழுத்தாய் என்று உன்னை உதாரணமாக ஆக்கித்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். உன்னுடைய தோளின் வலி, என்னுடைய இந்தச் சிறிய தோள்களுக்கு உண்டோ? இப்போதும் சொல்கிறேன், நீ பொறுப்பை ஏற்றுக்கொள். நீ சொல்கிறபடி நான் உனக்குத் துணையாகக் காரியம் செய்கிறேன்.” ஸர்வனின் குரல் உடைந்தது.
“உளறாதே! நீ அரியணையில் அமர்ந்தால் என்ன, நான் அமர்ந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான். நானே இருப்பதாக நினைத்துக்கொள். இருவரும் சேர்ந்தே காரியம் செய்வோம்.”
“நீ எதற்காக இந்தச் சேற்றில் விழுந்து பழி கிடக்கிறாய்? உனக்கென்று ஒரு இராஜ்ஜியம் இருக்கிறது. இராமராஜ்யம் போல, அதை நிர்வகித்து வருகிறாய். ஒரு களவு இல்லை, ஒரு கொலை இல்லை. அரசை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இல்லை. வரிகளை நியாயமாக விதித்து, வருவாயை லோகஹிதத்துக்காகவும், மக்களின் பாதுகாப்புக்குமே செலவழிக்கிறாய். ஓர் ஆடம்பரமில்லை, ஆணவமில்லை உனக்கு. ஜனங்கள் உன்னைப் பிரீதியோடு நோக்குகிறார்கள். எதிரிகள் உன்னைக்கண்டு அஞ்சுகிறார்கள். பிரதிஹாரன் உன்னால்தான் வாலைச் சுருட்டிக்கொண்டு தன்மையாக உட்கார்ந்திருக்கிறான். தந்தை உன் வீரத்தையும் விவேகத்தையும், தர்மத்தையும் நீதி பரிபாலனத்தையும் புகழாத நாள் கிடையாது. சிலசமயம் உன்னைப் பற்றிப் பேசும்போது அவர் உணர்ச்சி வசப்படுவதைப் பார்த்திருக்கிறேன். தன்னையே உன்னோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தான் உன்னைப்போல இல்லையே என்று அவர் மருகுகிறாரோ என்றுகூடத் தோன்றும் எனக்கு.
“இராட்டிரக்கூடத்துக்கு நீதான் பொருத்தமான அரசன், கற்கா! நீ நினைத்தால், ஒரு வாரத்துக்குள் இந்த அரசைக் கைப்பற்றி விடமுடியும். நீ என்னடாவென்றால், என்னைப் போன்ற ஒரு பராக்கிரமுமில்லாத சிறுவனை அரியணையில் ஏற்றியே ஆவேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு, அதற்காக உன் உயிரையும் கொடுப்பேன் என்கிறாய். உன்னால் இதெல்லாம் எப்படி முடிகிறது?”
அமோகன் பேசுவதைக் கேட்டுக் கண்கலங்கினான் கற்கன். அமோகவர்ஷனை அப்படியே ஆரத்தழுவிக்கொண்டான்.
“பன்னிரண்டு வயது சிறுவனைப் போலவா பேசுகிறாய் அமோகவர்ஷா? நீ நல்ல அரசனாக ஆவாய் என்பதில் எனக்கு தினையளவும் ஐயமில்லை. இந்த மாதிரிச் சிந்தனைகள் உனக்கு எழுவதே அதற்கு அறிகுறி. எனக்கு இந்தப் பொறுப்புப் பிடித்திருக்கிறது. அதனால், விரும்பிச் செய்கிறேன். இதில் தியாகம் ஒன்றுமில்லை. இராட்டிரக்கூடம், உன்னுடைய தலைமையில் ஒரு புதுப்பாதையில் செல்லப் போகிறது. தன்னுடைய ஆணவத்துக்காகக் காரியம் செய்யாமல், குடிகளுக்காகவும், தான் ஆள்கின்ற தேசத்துக்காகவும் வினையாற்றும் ஓர் அரசனாக இருப்பாய் நீ. மிகவும் யோசிக்காதே. ஒரு பொதுவான குறிக்கோளுடன், இந்த வாரத்தில் செய்யவேண்டுவனவற்றைப் பற்றி மட்டும் யோசனை செய்துகொள். எல்லாம் நன்றாகவே நடக்கும். நடக்க வைப்போம். மனத்தை எண்ணங்களற்ற நிர்மலமான விசும்பாக வைத்துக்கொள்.” என்று கற்கன் தேற்றத் தேற்ற, அமோகவர்ஷனுக்கு, மனத்தின் இறுக்கம் சற்றுக் குறைந்து, இலகுவானது.
மெல்ல நடந்து, தனக்காகக் காத்துக்கொண்டிருந்த தேரில் ஏறினான். இரண்டு சாரதிகளில் ஒருவன் காதில், கற்கன் தேரை அழைத்துச் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னதும், அவன் தலையாட்டிவிட்டுத் தன் கையில் இருந்த கசையைச் சொடுக்கத் தேர் விரைந்தது. தேர் புறப்பட்டதும், ஆயத்தமாகக் முன்னால் காத்துக் கொண்டிருந்த ஒரு புரவிப்படை வழிநடத்த, தேரின் பின்னாலேயே இன்னொரு ஆயுதம் தாங்கிய புரவிப்படை, பின்தொடர்ந்தது.
அரசன் சென்றதும், அங்கே ஈமக் கிரியைக்கு வந்து கூட்டம் கூட்டமாகக் காத்துக் கொண்டிருந்த பிரமுகர்களும், தளபதிகளும், வேற்று நாட்டு அரசர்களும், மஹாஸாமந்தர்களும், அமைச்சர்களும், நிர்வாகிகளும் மெல்லக் கலைந்தனர்.
கற்கன் மட்டும், தன்னுடைய இல்லத்துக்குச்
செல்லாமல், தான் தற்காலிகமாக அமைத்திருந்த பாசறையை நோக்கிச் சென்றான். தலைக்குமேலே
ராஜாங்கப் பணி இருந்தது அவனுக்கு.
சுடுகாட்டில் சிதை எரிந்துமுடிந்து தணத்துக் கொண்டிருந்தது. கவிந்த இருளில், சிதையின் கட்டைகளுக்கு இடையேச் சிவந்த பகுதிகள், கொள்ளிவாய்ப் பேய்களின் கண்களைப் போலக் கனன்றுகொண்டிருந்தன.
காலதேவன், மிகச் சிரத்தையோடு அங்கே ஒரு
சகாப்தத்தை முடித்துவைத்துக் கொண்டிருந்தான். இனிப் புதியது ஏதாவது முளைக்குமா
என்று கேட்டால், அதற்கு அந்த நிலத்தைப் பற்றியும், அங்கே இதுவரை என்ன
முளைத்திருந்தது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாயிற்றே?
No comments:
Post a Comment