சத்திரத்தின் பின்புறம் அழகான ஆராமம். ஒரு நந்தவனம் போல இருந்தது. இடையில் ஒரு நீர்க்கயம். அதனருகே ஒரு கற்பலகையில் உட்கார்ந்தார் பிரதாபர். கீழே புல் தரையில் விநயாதி சர்மன் அமர்ந்தான். மேலே பெரிய மாமரம். அடர்த்தியான இலைகளுடன், பசிய நிறத்துக் கொற்றக் குடைபோலப் பரவியிருந்தது.
“உனக்கும் உன் தந்தையைப் போலக் கணிதம் வருமா?”
“கொஞ்சம் கொஞ்சம் வரும். தந்தை சிலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆசார்யர் பொதுவகுப்பு எடுக்கும்போது, நானும் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறேன். சிலமுறைகள் தனியாகவும் அமர்த்திக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
“உன் பாட்டனார் துர்க்கசர்மருக்குத் தந்தை கணிதத்தில் ஈடுபாடு கொள்வது விருப்பமில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“ஆமாம். அப்படித்தான் தந்தை சொல்லுவார். ஊரில் இருப்பவர்களுக்கும், தந்தையின் கணித ஆர்வத்தின் மீது அச்சம். ஏதேதோ, கோடு போட்டுப் புரியாத விஷயம் எல்லாம் பேசுகிறான். இரவெல்லாம் ஆகாசத்தைப் பார்த்துக் கணக்குப் போடுகிறான். தாந்திரீகம் செய்கிறான் என்று அவரைப் பார்த்துப் பயப்படுவார்களாம். பாட்டனார் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், இவர் கேட்கவில்லை. சமணராக மாறிப் போய்விட்ட மாமனரால்தான், இப்படி இரகசியச் சுவடிகளையெல்லாம் படிப்பதில் ஆர்வம் வந்துவிட்டது, அதைத் தடுக்க என் தாயும் ஒன்றும் செய்யவில்லை என்ற நினைப்பால், அவருக்குத் தந்தை மீது தன் ஆற்றாமையால் ஏற்பட்ட கோபமெல்லாம், தாய் மீது திரும்பிவிட்டது. உறவில் ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி அதிகமாகி, ஒருநாள், தந்தைக்கு, உற்பட்டூருவை விட்டே, தாயை அழைத்துக்கொண்டு போகும் நிலைமை தோன்றிவிட்டது என்று சொல்லுவார். உங்களுக்கு என்னுடைய தாய் தந்தையரை நன்றாகத் தெரியுமா?”
“நீ பிறப்பதற்கு முன்பிருந்தே தெரியும். நீ சிறு குழந்தையாக இருந்தபோது, ஓரிரு முறைகள் உங்கள் இல்லத்தில், உணவும் அருந்தியிருக்கிறேன். நீ வளர்ந்தபிறகு, உன்னைப் பார்த்ததாக நினைவில்லை.”
இயல்பாகப் பேசுகிறார். கேட்க நினைத்தவற்றைக் கேட்டுவிடலாமா?
“நீங்கள் எப்போதும் மான்யகேடத்து வாசிதானா?
“இல்லை. நாங்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தாம். உன் தந்தையை எனக்குக் கடக்கத்தில்தான் பழக்கம். ஆனால் உன் தாயை முன்னமேயே தெரியும். உன் தாய்வழிப் பாட்டனார், என்னுடைய தந்தைக்குத் தெரிந்தவர். சில விசேஷங்களுக்கு, திரிலோசனாவையும் உன் தந்தை அழைத்து வருவார். அப்போது எங்கள் வீட்டில்தான் தங்குவார்.”
“ஆச்சரியமாக இருக்கிறது! எப்படி எதிரி நாட்டுக்கு வந்து சேர்ந்தீர்கள்?”
“சில நிர்ப்பந்தங்களினால், உன் தந்தையைப் போலவே கடக்கத்துக்குக் குடிபெயர வேண்டிவந்தது. இப்போது திரும்பி வந்துவிட்டோம். நீ மஹாவீர ஆசார்யரிடம் ஏதோ கற்றுக் கொண்டாய் என்று சொன்னாய் அல்லவா? கற்றுக்கொண்டது ஏதாவது ஒன்று சொல்லு”
பேச்சை மாற்றுகிறார்!
“அதிகமாக இல்லை. அவர் சொல்வது நிறையவே புரியாது. ஏதோ எனக்குப் புரிந்ததைச் சொல்கிறேன்.”
“சொல் சொல். தாமோதரர் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பார். மஹாவீர ஆசார்யர் அவருக்குக் கடவுள் போல, இல்லையா? சிறிய வயதுதான் அவருக்கு ஆனால் பெரிய மேதை என்பார். எனக்கும் உன் தந்தை சொல்வதெல்லாம் அந்தச் சமயம் புரிவது போல இருக்கும். பிறகு யோசித்தால், ஒன்றும் நினைவுக்கு வராது”
தன்னைப் பரீட்சித்துப் பார்க்கிறார் என்று புரிந்துகொண்டான். நியாயம்தானே. யாரோ ஒருவன் எதிரி நாட்டுக்காரன். இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறான். ஒற்றன் என்றுகூட எண்ணியிருப்பார்.
“அவர் வருக்கம் என்று ஒன்று சொல்வார். ஒரே எண்ணை அந்த எண்ணின் மடங்காக ஆக்குவது. ஒரு வீட்டுக்கு மூன்று கலம் அறுப்புக்கூலி என்றால் மூன்று வீட்டுக்கு எவ்வளவு கலம் கூலி? மூன்றின் மூன்று மடங்கு.”
“நிலத்தை இப்படித்தான் சதுரமாக அளந்து தானம் கொடுக்கிறோம்”
“அதேதான். இதற்கு அவர் ஓர் எளிய வழி சொல்கிறார். எதனுடைய வர்க்கத்தைக் கண்டு பிடிக்க வேண்டுமானாலும் ஒன்றில் இருந்து, அந்த எண் வரை, ஒற்றைப்படை எண்களைக் கூட்டினால் அதுதான் வருக்கம். மூன்று என்றால் ஒன்றில் இருந்து ஆரம்பித்து, மூன்று ஒற்றைப்படை எண்கள். ஒன்று, மூன்று, ஐந்து. மூன்றையும் கூட்ட ஒன்பது. அதுதான் வருக்கம்.”
“சுவாரசியமாக இருக்கிறதே. ஐந்துக்கு வருமா என்று பரீட்சித்துப் பார்க்கிறேன். – ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, எல்லாவற்றையும் கூட்டினால்.. ம்ம் இருபஃது ஐந்து. சரிதான்! பலே!”
‘ஏகாதி³: த்³விசயேச்சா²க³ச்ச²யுதிர்வா ப⁴வேத்³வர்க³:’ – இதுதான் அவருடைய சூத்திரம்”.
“எப்படி இதை நினைவு வைத்திருக்கிறாய்?”
“ஏதோ சிலவற்றை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். அதுமட்டுமன்று. பின்னமாய் இல்லாத எந்த ஒரு வர்க்கத்தையும், எந்த ஓர் எண்ணிலிருந்தும் துவங்கி, வர்க்கத்தின் மூலத்துக்குச் சமமான எண்ணிக்கையில், சமதூரமாக எண்களைத் தேர்ந்தெடுத்துக் கூட்டலாக அமைக்கலாம்.”
“எந்த எண்ணிலிருந்தும் துவங்கியா? அது எப்படிச் சாத்தியம்?”
“பரீட்சித்துப் பாருங்களேன்.”
“சரி, இருபஃது ஐந்தையே எடுத்துக்கொள்வோம். ஒரு பாதத்தில் இருந்து துவக்கிக் காண்பி.”
“காலில் இருந்து துவங்கி, கூட்டினால் இருபத்தைந்து வரும்படியாக ஐந்து எண்களைச் சமதூரத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும், இல்லையா? எது சம தூரமாக இருக்கவேண்டும் என்று கணக்கிட, அவர் ஒரு சூத்திரம் தந்திருக்கிறார். எத்தனை எண்கள் தேவையோ, அதிலிருந்து, துவக்க எண்ணைக் கழியுங்கள்.”
“ஐந்திலிருந்து பாதத்தைக் கழித்தால், நான்கும் மூன்று பாதங்களும்.”
“எத்தனை எண்கள் தேவையோ, அதிலிருந்து ஒன்றைக் கழித்துப் பாதியாக்குங்கள்.”
“நான்கில் பாதி இரண்டு”
“நான்கே முக்காலை, இரண்டால் பாகியுங்கள். அதுதான் சமதூரம்”
“ஓ! இரண்டும் ஒரு பாதம் மற்றும் அரைப்பாதம். இதுதான் சமதூரமா! சரிபார்த்து விடுவோமா? பாதத்தில் துவங்கினோம். இரண்டே பாதமரைப் பாதம் தூரத்தில், இரண்டே அரையரைப் பாதம், இரண்டாம் எண் ஆயிற்று. அதற்குப் பிறகு மூன்றாவது எண்ணாக ஐந்து. நான்காம் எண் ஏழுடன் பாதம் அரைப்பாதம், ஐந்தாம் எண் ஒன்பதும் முப்பாதமும். ஆயிற்று ஐந்து எண்கள்.”
“மிகச்சரி.”
“இப்போது இந்த ஐந்து எண்களையும் கூட்டினால் இருபஃத்தைந்து வந்துவிடும் என்கிறாயா?”
“ஆமாம். பாருங்களேன். முழுவெண்களை எல்லாம் கூட்ட இருபத்து மூன்று ஆகிறது. பின்னங்களைக் கூட்டினால் – பாதம், அரை அரைப்பாதம், பாதம் அரைப் பாதம், முப்பாதம் – ஐந்து பாதம், ஓர் அரை, இரண்டு அரைப்பாதம் - இரண்டு. மொத்தம் இருபத்தைந்து”
“அற்புதம்! சரியாக வந்துவிட்டதே!”
“இஷ்ட க³ச்ச²ஸ்யாதி³ உத்தர வர்க³ரூப க⁴னரூப த⁴ன ஆநயன ஸூத்ரம் - என்பார் ஆசார்யர் இதை.”
“கனரூபம் என்றால்? கனத்தையும் கொண்டு வரலாமா?”
“ஆமாம் ஐயா, கனத்துக்கு, சமதூரத்தைக் கண்டுபிடித்துவிட்டு, அதை எண்ணிக்கையால் பெருக்கிக் கொள்ளவேண்டும்.”
“அற்புதம்! இந்த சூத்திரம் நிறைய உபயோகமாகும். போட்டியில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து, பரிசுப் பணம் நூறு கழஞ்சுகளை அவர்களுக்குப் பிரித்துத் தரும்போது, அடுத்தடுத்த தரத்தில் வருபவர்களுக்கு சமமாக அதிகரித்துக்கொண்டே போகலாம். மொத்தப் பரிசும் வழங்கப்பட்டுவிடும். பரிசைக் கல நெல்லாகத் தரும்போது, கனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அமாத்தியருக்குச் சொல்கிறேன். சந்தோஷப்படுவார்.”
“உபயோகம் உண்டுதான். அதைவிட, அதில் இருக்கும் அழகு என்னை மிகவும் ஈர்க்கும் ஒன்று. குறுக்கே ஐந்து புள்ளி, நெடுக்குவாட்டில் ஐந்து புள்ளி, இப்படிச் சதுரமாக வளரும் இரு பரிமாண வருக்கத்தைத் தலையில் அழுத்தி, ஐந்து சமதூரப் புள்ளிகள் வழியே செல்லும் வெறும் நெடுக்குக் கோட்டாய் மாற்றலாம் என்பது மந்திரம் போல இருக்கிறது எனக்கு.”
“எவ்வளவு நாள் இங்கே தங்குவதாக உத்தேசம்?”
“உங்களை இன்று பார்த்ததில் இருந்து, என் மனம் அதையேதான் கேட்டுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் இங்கேயே இருந்து விடுகிறேன். சத்திரத்தில் ஆதுலர் வாசியாக இல்லாமல் ஏதாவது வேலை கிடைத்தால் இந்த இடம் ஸ்வர்க்கம்”
“உன்னைப் போன்றவர்களுக்கு இங்கே நிறைய அவசியம் இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருகிறாயா? தெலுங்கில் நன்றாகப் பேசுகிறாய். தெலுங்கு எழுத்துக்கள் எழுத வாசிக்க வருமா?”
“வரும். கொஞ்சம் திணறுவேன். கர்ணாடத்துக்கும் இதற்கும் கொஞ்சம் குழப்பம் உண்டு. கற்றுத் தெளிந்து கொள்கிறேன்”
“நல்லதாயிற்று. ஏதாவது ஏற்பாடு செய்கிறேன். இப்போதைக்கு யாரிடமும் கேடயராஜா பேச்சை எடுக்காதே. சமயம் வரட்டும். நான் சந்திக்க வைக்கிறேன்.”
பரிசாரகன் மனைவி, ஒரு நீளமான அலக்கு எடுத்துக்கொண்டு வந்து, பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்து மாங்காய்களைப் பறித்துக் கொண்டு போனாள். இன்று வெல்லம் போட்ட மாங்காய்ப் பச்சடி என்று தேவநாதய்யா சொன்னது நினைவுக்கு வந்தது.
இருவரும் நந்தவனத்து அழகை இரசித்தபடி உட்கார்ந்து இருந்தார்கள்.
“நரேந்திர ராஜா நூற்றியெட்டு சண்டைகள் செய்தார் என்று சொன்னீர்கள். அதுவும் பிரபூதவர்ஷரை எதிர்த்து. என்னால் நம்பவே முடியவில்லை.”
“ஏன் அவரைப் பார்த்தால் வீரராகத் தோன்றவில்லையோ?”
“ஐயையோ! அப்படிச் சொல்லவில்லை. பிரபூதவர்ஷரைத் தடுத்து நிறுத்தியவர்கள் எவருமே இல்லை என்பார்கள். அப்படிப்பட்ட பராக்கிரமம் பெற்றவருக்கு நூற்றியெட்டு சண்டைகள் வரை செய்யவேண்டி வந்ததா? அதுவும் வேங்கி போன்ற சிறு நாட்டுடன்? அதுதான் விசித்திரமாக இருக்கிறது”
பிரதாபர் சிரித்தார். “விவரமான கேள்விகள் கேட்கிறாய். புத்திசாலி நீ. கோவிந்தராஜாவோடு நேருக்கு நேர், நரேந்திரர் மோதியதே இல்லை. அவரோடு மோதியவர்கள், உயிரோடு உலவ முடியுமா என்ன? இவர் செய்த பெரும்பாலான சண்டைகள், இவருடைய சகோதரரை எதிர்த்து.”
“ஓ! சகோதரர்களிடையே உரிமைச் சிக்கலா? வேறு ஒருவரின் அரியணை உரிமையை இவர் பறித்துக் கொண்டாரா?”
“அன்று. இவருடைய உரிமைதான் பறிபோனது.”
“அதானே பார்த்தேன்! இவர் வலுச்சண்டைக்குப் போகும் மனிதராகத் தெரியவில்லை. இவருக்கு உரிமை வராமல் தடுத்தது பிரபூதவர்ஷ மஹாராஜாவா?”
“ஆம்”
“அவர் ஏன் குறுக்கே வந்தார்?”
“இவர் தம்பி பீமராஜர் கூப்பிட்டார். வந்தார்”
“தம்பியோடுதான் துறட்டா? உண்மையில் உரிமை யாருக்கு?”
“நரேந்திரர்தான் மூத்தவர். முதலாண் வழியைப் பின்பற்றவேண்டும் என்றால், இவருக்குத்தான் உரிமை இருந்தது. தகுதியும் உண்டு. நையோகிக வல்லபர்கள், ஸாமந்தர்கள், தளபதிகள், மாண்டலிகர்கள், விஷயாதிபதிகள் எல்லோருக்கும் இவர் அரியணை ஏறுவதில் உடன்பாடே.”
“கடவுளே! அரசியலே மிகச் சிக்கல் பிடித்த வலை. தம்பியும் தமையனாரும் சமரசமாகப் போயிருக்கலாமே”
“உனக்குத் தோன்றுகிறது. அரசர் அப்படி நினைக்கவில்லை.”
“இவர்களுடைய தந்தை, அரியணையில் இருந்தபோதே இந்த உரிமைச் சிக்கலைத் தீர்த்து வைக்கவில்லையா? துருவராஜ நிருபதுங்கர் விரோதமே வராமல் அப்படித்தான் செய்தாராம். என் தந்தை சொல்லியிருக்கிறார்.”
“பலே பலே! அரசியலைத் திட்டின நீ, கொஞ்சம் தெரிந்தும் வைத்திருக்கிறாய். தாமோதரன் சொல்லிவைத்தது சரிதான். துருவராஜா மிகத் தொலைநோக்கி. விஷ்ணுவர்த்தனராஜா அப்படிச் செய்திருக்க வேண்டும்தான். செய்யவும் முயன்றார். ஆனால், அதை, நரேந்திரர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் எவ்வளவு துன்பம்! உனக்கு சீலமஹாதேவியைத் தெரியுமா?”
“மண்ணைக் கடக்கத்து ராஜாமாதாவையா கேட்கிறீர்கள்? அவரைத் தெரியாமல் யாராவது இருப்பார்களா? கருணை வடிவானவர். மக்களுக்கு முன்னின்று நன்மைகள் செய்பவர். கோட்டைக்குப் போகும்போது, சிலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு முறை, ஔஷதாலயம் விஷயமாகத் தந்தையார் ஒரு விண்ணப்பம் செய்வதற்காக அவரைக் காண அனுமதி கேட்டார். காவலாளிகள் தடுத்தார்கள். உப்பரிகையில் நின்று கொண்டிருந்தவர், இதைப் பார்த்துவிட்டுத் தந்தையை அழைத்து என்ன விஷயம் என்று விசாரித்தார். தந்தையின் விண்ணப்பம் நிறைவேற்றத் தக்கதுதான் என்று தெரிந்துகொண்டதும், இரண்டே நாட்களில் சிக்கலைத் தீர்த்தார் அதற்குப் பிறகு, ஔஷதாலய நிர்வாகிக்கே தந்தையைக் கண்டால் கொஞ்சம் காழ்ப்பு. அச்சமும் கூட.”
“மஹாராணி பெரிய விவேகி. நிர்வாகத்தில் அரசருக்கு இணையாகத் திறன் படைத்தவர். வேங்கி நாட்டு மண்ணல்லவா?” – சிரித்தார்.
“அவர் வேங்கியைச் சேர்ந்தவரா?” – வியப்பால் விரிந்தன விநயாதி சர்மனின் விழிகள்.
“அவர் நரேந்திரராஜ விஜயாதித்தியனின் கூடப் பிறந்த தமக்கை”
இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்பதுபோல இறைஞ்சிய விநயனின் கண்களைப் பார்த்தவர், “ம் ம் ம் .. கதை கேட்க வேண்டுமா?” என்று கேட்டுப் பரிவாகச் சிரித்தார் பிரதாப வர்த்தனர். “இதெல்லாம் ராஜாங்க விஷயம். எல்லோரிடமும் போய்ச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. புரிகிறதா? விவேகமாக நடந்து கொள்ள வேண
தன்னை இப்படி நினைத்து விட்டாரே என்று சுருக்கென்றது அவனுக்கு. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “நீங்கள் என்னை நம்பலாம். அநாவசியமாக வாய் திறக்க மாட்டேன்.” என்றான் உறுதியாக.
“அது தெரிந்ததால்தான், இவ்வளவு தூரம் பேசுகிறேன். எப்படி, இரு பகை நாடுகள், மணவினையால் இணைந்தன என்று யோசிக்கிறாயா?”
“ஆமாம்! இது எப்படி சாத்தியமாயிற்று? வேங்கி நாட்டு இளவரசி, இராட்டிரக் கூடத்துக்கு எப்படி இராஜமாதாவாக ஆனார்?”
“அது இன்னொரு கதை. பிறகு பார்ப்போம். இப்போதைக்கு நரேந்திரருடைய விஷயத்தைப் பற்றிச் சொல்கிறேன். நரேந்திரருடைய தம்பி, பீமராஜா சாளுக்கி, தமையனைப் போல மனவுரம் உடையவர் அல்லர். பலகீனமானவர். வீரர்தான். ஆனாலும், அரசுப் பொறுப்பின் சுமையைத் தாங்கும் திறமை ஒன்றும் பெரிய விஷயமில்லை, தமையனாரைப் போலத் தன்னாலும் ஆளமுடியும் என்று முடிவு கட்டியிருந்தார். தந்தை விஷ்ணுவர்த்தனராஜாவிடம் விண்ணப்பத்தை வைத்தார். விஷ்ணுவர்த்தனருக்குத் தர்மசங்கடம். அவருக்கும் நரேந்திரர்தான் சரியான தேர்வு என்று தெரியும். ஆனாலும், புத்திர பாசத்தால், மத்தியஸ்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தானாகத் தரவில்லையென்றால், இளையவர் எப்போதும் அரசராக முடியாது என்று நினைத்ததால், பீமருக்கும் தேசத்தின் ஒரு பகுதியை பிரித்துக் கொடுத்துவிட நினைத்தார்.
“ஆனால், பட்டத்துக்கு முழு உரிமை உடைய நரேந்திரர் இந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. பாரம்பரியத்தின் பிரகாரம், தனக்குத்தான் மொத்தப் பிராந்தியத்துக்கும் அரசனாக அரியணையில் அமர உரிமை இருக்கிறது என்று எண்ணினார். அவருக்குத் திறமையும் இருந்தது. இராஜ தர்மத்துக்கு உட்பட்ட நியாயமான கனவுகளை அவர் தம்பிக்காக விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. நரேந்திரரைச் சம்மதிக்கவைக்க, விஷ்ணுவர்த்தனர் தன்னுடைய இறுதிக் காலம் வரை முயன்றார். சற்றுப் பலகீனமான பிள்ளைக்கு அதிக அனுசரணை காட்டுவது உறவுகளில் இயற்கையாகத் தோன்றுவதுதானே. அதுவும் பெற்றோர்களிடம் கேட்கவே வேண்டாம். இந்த அதிக அனுசரணையால் மற்ற உதர உறவுகளிடம் வெறுப்புத் தோன்றுவதும், அதைச் சமனப்படுத்துவதும் பெருஞ்சிக்கல்கள். பீமருக்கு உதவ நினைத்தவர், மாற்று உபாயமாகத் தன்னுடைய புதல்வியின் உதவியையும் நாடினார். இதற்காக, இராட்டிரக்கூட மஹாராஜாவுக்கு விண்ணப்பம் செய்து, சீல மஹாதேவியை இங்கு அனுப்பச் சொல்லி, கோவிந்தராஜாவிடம் விண்ணப்பிக்க அவரும் அனுப்பிவைத்தார்.”
“பிரபூதவர்ஷர் ராஜமாதாவையே வேற்று நாட்டுக்கு அனுப்பினாரா?” வாயைப் பிளந்தான், விநயன். “அப்படியென்றால், விஷ்ணுவர்த்தனருக்கும், கோவிந்தருக்கும் அப்போது சுமுகமான உறவிருந்ததா?”
“ஆமாம். ராஜமாதாவும் வந்தார். தம்பிகள் இருவரோடும் பேசிப்பார்த்தார். அவருக்கும் கடையவர் பீமர் மீது பாசம். நரேந்திரரை விட்டுக் கொடுக்கச் சொன்னார். நரேந்திரராஜா விடாப்பிடியாக மறுத்துவிட்டார். நரேந்திரரைச் சம்மதிக்க வைக்க முடியாததால், சிக்கல் அமைதியாக முடியப் போவதில்லை என்று, விஷ்ணுவர்த்தனருக்குப் புரிந்துவிட்டது. மகட்கொண்டோன் மகன், கோவிந்தராஜா தலையிட்டால் இந்த இக்கட்டைச் சமாளித்து விடலாம் என்றாலும், சுய கௌரவம் அவரைத் தடுத்தது. இந்தத் தயக்கத்திலேயே இறுதி நாட்களைக் கழித்த அவர், உயிர் பிரியும் சமயத்தில், தன்னைப் பார்க்க வந்திருந்த சீலமஹாதேவியின் கையைப் பிடித்துக் கொண்டு, “என்னுடைய அந்திமக் கோரிக்கை அம்மா இது. நிலைமை மிகவும் மோசமாகி விட்டால், மஹாராஜா கோவிந்தருடைய கவனத்துக்கு இதைக் கொண்டு போயாவது, இந்தச் சிக்கலைச் சுமுகமாகத் தீர்த்து வைத்துவிடு. அப்படியே இரணத்தை வளர விட்டு விடாதே”, என்று வேண்டிக்கொண்டார். அவர் இறந்து போனதும், பாரம்பரிய வழக்கப்படி நரேந்திர மிருகராஜ விஜயாதித்தியர்தான் அரசராக அரியணை ஏறினார். ஆனால், அந்தக் கணத்தில் இருந்து தொடங்கியது வேங்கிக்கு இன்னல்.
“விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்ட நரேந்திரராஜாவால், அரியணை வாய்ப்பு இழந்த பீமராஜா, கோவிந்தராஜாவைப் போய்ச் சந்தித்து உதவி கேட்டார். தானாகக் கனி வந்து மடியில் விழும்போது. யாராவது அதை உதாசீனப்படுத்திவிட்டு வாளாவிருப்பரா? கோவிந்தராஜருடைய அரசியல் சாதுரியச் சிந்தை, தனித்துவச் சுதந்திரப் போக்கு உடைய நரேந்திரராஜாவை விட இரட்டத்தை நம்பியிருக்கப் போகிற, பலகீனமான இளையவர் ஆளும் வேங்கி, அரசுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என்று கணக்குப் போட்டதால், பீமருக்கு உதவ முடிவு செய்தது. அதன்படி ஏதும் செய்வதற்கு முன்னால், கோவிந்தர், தான் பெருமதிப்பு வைத்திருந்த ராஜமாதா சீலாதேவியிடம், தான் பீமராஜருக்கு உதவ முடிவு செய்து விட்டதைச் சொல்ல, ராஜமாதா அதிர்ந்து போனார். இது நல்லதில் போய் முடியாது, என்று உணர்ந்து கொண்டு, மீண்டும் நரேந்திரராஜரை அனுசரித்துப் போகுமாறு வேண்டினார். ஆனால், அவர் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் நிராகரித்து விட்டார்.
“இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவித்த இராஜமாதா, வேறு வழியின்றி, நரேந்திரர், பீமரோடு ஆட்சிப் பகுப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கோவிந்தராஜாவுக்கு, அறிவித்துவிட்டு, மகாதேவர் திருவுள்ளப்படி ஆகட்டும் என்று பிரார்த்திக்கத் துவங்கிவிட்டார். இப்படித்தான் நடக்குமென்று எதிர்பார்த்திருந்த கோவிந்தராஜா அடுத்த நடவடிக்கையில் இறங்கி, வேமுலவாடாவின் அரசர் நரசிம்ஹராஜரை வரவழைத்தார். அசகாய சூரரான அரிகேசரியின் புதல்வர் இவர். இந்த அரிகேசரியின் படையை வைத்துத்தான், முன்னம் ஒருசமயத்தில் துருவராஜா வேங்கியை வீழ்த்தினார்.”
“துருவராஜாவும், வேங்கியோடு சண்டையிட்டாரா!!?”
“ஆம், அதைப் பின்னர்ச் சொல்கிறேன். கோவிந்தர் பீம சாளுக்கியையும் இராட்டிரக்கூடத் தளபதி மானவேந்திரனையும் அழைத்து, இருவரையும் வைத்துக் கொண்டு மந்திராலோசனை நடத்தி, ஓர் இராணுவத் திட்டத்தை வகுத்தார், ‘உன்னுடைய ஆட்சியை விரும்புகிறவர்களை வைத்து நீ முதலில் ஒரு படையைத் திரட்டு’ என்று பீமராஜனிடம் சொன்னவர், ‘முதல் பாணத்தை நான் எறிந்துவிட்டால், பிறகு, பின்வாங்க மாட்டேன், இப்போதும் நீ வேண்டாம் என்று சொன்னால், இந்த முயற்சியை இந்தக் கணத்தோடு விட்டு விடுகிறேன். நன்றாக யோசித்துக் கொள்’ என்றார். ஆனால், அரியணை ஆசை தலைக்கேறிய பீமராஜர் அடிமைச் சாஸனமே எழுதிக் கொடுக்கச் சித்தமாகி விட்டிருந்தார். ‘தான் வேங்கி நாட்டு அரியணையில் அமரவேண்டும், தமையனை எதிர்க்கத் தன்னிடம் திறமை இல்லை. வெளியுதவி பெற்றாவது அவனை வீழ்த்தவேண்டும்’ அவருடைய சிந்தையில் இருந்ததெல்லாம் இவ்வளவுதான். இதெல்லாம் நடக்கும்போது நான் மயூரகண்டியில்தான் இருந்தேன்”
“மயூரகண்டியா? மான்யகேடம் இல்லையா?”
“மான்யகேடக் கோட்டையை அப்போதுதான் கோவிந்தராஜா கட்டத் துவங்கியிருந்தார். அவருடைய இறுதிக் காலத்தில்தான், அவர் அதை இராஜ்ஜியத் தலைநகர் ஆக்கி, அங்கிருந்து நிர்வாகம் செய்தது. அதுவரை மயூரகண்டிதான் நிர்வாகத் தலைநகரம். அதுவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தலைநகரம் அன்று. துருவராஜர் அரசேற்றபோதும் இதேபோல ஒரு சகோதரச் சிக்கல். அப்போது அவர் மயூரகண்டியைத்தான் தன் படைப்பாசறையாகப் பயன்படுத்தி வந்தார், அது அப்படியே காலப்போக்கில், தலைநகரமாக மாறி, கோவிந்தர் காலம் வரை தொடர்ந்து விட்டது. ஆட்சி செய்த காலம் முழுவதும் துருவராஜருக்கு, வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும் போர் புரிய நேரம் இருந்ததே தவிர, ஒரு தலைநகரை நிர்மாணித்து, நிர்வாகம் புரிய நேரம் கிட்டியதில்லை. அதற்கு அவர் முக்கியத்துவமும் தரவில்லை.
“மயூரகண்டியில் இருந்து இரட்டப் படைகள் வேங்கியைத் தாக்கப் புறப்பட்டன. வேமுலவாடாவில், சாளுக்கிய நரசிம்ஹன் சேர்ந்து கொண்டான். வலிமையான இராட்டிரக்கூடப் படைகள், பொருது பொருது பழக்கப்பட்டவை. பெரிய பெரிய சாம்ராஜ்ஜியங்களை அடிபணியச் செய்தவை. தலைமை தாங்கி நடாத்துவதற்கு, அரசன் வரவேண்டும் என்ற அவசியம் இல்லாதவை. அவற்றிற்கு என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற திட்டம் வகுத்துக் கொடுத்துவிட்டால் போதும். திட்டம் தீட்டிக் கொடுப்பதற்குக் கோவிந்தரை விட ஒரு நிபுணர் உண்டா என்ன? திட்டமும் செயல்பாடும் இணை சேர்ந்த வலிமைக்கு முன்னால், அதிக அமர்ப் பழக்கமற்ற வேங்கி நாட்டுப் படைகள் எம்மாத்திரம்? நரேந்திரரின் வீரம் மட்டும் போதிவிடுமா என்ன? வெகு எளிதாக வீழ்த்தப்பட்டது வேங்கி. நரேந்திரராஜா நாடு இழந்தார். தம்பி பீமராஜரின் வேங்கி அரியணையில் அமரும் கனவு நனவாகியது.
“இளவரசர் கலி விஷ்ணுவர்த்தனர், அப்போது குழந்தை. அரசியையும், குழந்தையையும் பாதுகாப்பாக இரகசிய இடங்களில் பத்திரப்படுத்தி விட்டுவிட்டு, நரேந்திர மிருகராஜர், வெளிப்புலங்களில் தலைமறைவாகப் பதுங்கினார்.
“கையில் வாளுடன், மனித நடமாட்டங்கள் இல்லாத இடங்களில், கத்தியே காப்பு, கையே தலையணை, கல்லே படுக்கை என்று இரவுகளைக் கழித்தார். அவ்வப்போது படை திரட்டுவார். வேங்கி மீது தாக்குதல் நடத்துவார். தோற்கடிக்கப்பட்டுத் தப்பி ஓடுவார். சில திங்கள்களுக்குப் பிறகு, மீண்டும் மோதுவார். கோவிந்தராஜருக்கு, வேங்கித் துறட்டு என்பது இரண்டு சிறு குழந்தைகளுக்கிடையே நடக்கும் விளையாட்டுச் சண்டை. ஆனால், நரேந்திரருக்கும், பீமருக்குமோ வாழ்வுப் போராட்டம்.
“நரேந்திரருடைய நூற்றியெட்டுச் சண்டைகளில் பெரும்பாலானவை இந்தச் சமயத்தில்தான் நடந்தன. மனவுரம் மிக்க நரேந்திரருடைய தாக்குதல்களை விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும், மேலோட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை கோவிந்தராஜர். இவருடைய தாக்குதல்களைச் சமாளிப்பதற்கென்றே, பீமராஜாவின் போர்த்திறமையை நம்பாமல், எப்போதும் ஒரு திறலுடைய சேனையை வேங்கியில் வைத்திருந்தார். அந்தச் சேனையில் வேமுலவாடாவின் நரசிம்ஹனுடைய படைகளும் இருந்தன. கங்க மண்டலத்தின் படைகளையும் இந்தச் சேனையில் பங்கு கொள்ள வைத்திருந்தார். இப்படைகளை மேற்பார்வையிட்டு நடத்தும் பொறுப்பைக் கங்கமண்டல அரசர் சிவமாறரிடம் அளித்திருந்தார்.
“ஆனால், ஒரு விஷயம் மட்டும் முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை முறை மான்யகேடத்தின் படைகள், நரேந்திரராஜாவைத் தோற்கடித்தாலும், அவை அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. அவரைச் சிறைப்படுத்தவும் இல்லை. ஒவ்வொரு சண்டையில் இருந்தும் நரேந்திரர் உயிருடன் தப்பித்திருக்கிறார். அவர் தன்னுடைய உரிமைக்காகப் போரிடுகிறார் என்பதையும் சகோதரர்களுடைய சண்டையால்தான் இராட்டிரக்கூடம் களத்திற்கு இழுக்கப்பட்டது என்பதையும் கோவிந்தராஜா எப்போதும் மறந்து விடவில்லை.”
“இரு சகோதரர்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டையில் இழுக்கப்பட்ட இரட்டம், அப்படி இழுக்கப்பட்டதால் கிடைத்த வாய்ப்பைப் புறத்தொதுக்காமல், தன்னுடைய நலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது, என்கிறீர்களா? அப்படியென்றால், நரேந்திரர் சற்று விட்டுக் கொடுத்திருந்தால், கோவிந்தர் அவருக்குத்தான் துணை போயிருப்பாரா?”
“அப்படித்தான் நடந்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி மட்டும் நடந்திருந்தால் இரட்டபாடி மற்றும் வேங்கிக்கு இடையே உள்ள உறவு மிகவும் பலப்பட்டிருக்கும். கோவிந்தருக்கு நரேந்திரராஜாவின் வீரத்தின் மீது பெருமதிப்பு.”
“நரேந்திர மஹாராஜாவின் உதவிக்கு வேறு யாருமே முன்வரவில்லையா?”
“விஷ்ணுவர்த்தனராஜாவுக்கு இன்னொரு ராணி இருந்தார். ஹைஹய நாட்டு இளவரசி. அவருக்குப் பிறந்த ருத்திரராஜா, விஜயாதித்தியருக்குத் துணையாக நின்றார்.”
“தமையனார் விடாமல் போர் தொடுத்துக்கொண்டிருப்பார். நிலைமை கட்டுக்கு மீறிப்போனால், இரட்டத்தின் துணையை நாடவேண்டும். ஒரு நிம்மதியோடு அரசு புரியும் சூழ்நிலை இருந்திருக்காது அல்லவா? இளையவர் எப்படி அரசு புரிந்தார்?”
“பீமராஜாவின் ராஜாங்க வாழ்வு அப்படி ஒன்றும் இன்பகரமாக இல்லை என்றுதான் எனக்குத் தோன்றும். எதிர்ப்பை இல்லாத இருணம் உண்டோ? மற்றவருடைய பலத்தின் துணையில் நாம் நம்மை விட வலிமையுடைய விரோதியை வீழ்த்தினோமேயானால், நாம் என்றும் அந்த இரவல் பலத்திற்கு அடுத்து வாழவேண்டியதுதான். அப்புறப் பலத்தைத் எப்போதும் நமக்கு அனுகூலமாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதைத் திருப்தியாக வைத்துக் கொள்வதுதான் நம்முடைய வாழ்வு என்றாகி விடும். அந்நிலைமைதான் பீமராஜருக்கும் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஓர் தளையாள் தண்டதாசர் நிலைதான் அவருக்கு. கோவிந்தராஜர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டி வந்தது. மண்ணைக் கடக்கத்துக் கோட்டையின் கட்டுமானத்தை அப்போதுதான் துவங்கியிருந்தார் கோவிந்தர். பீமரிடம் ஒரு மதிற்சுவரைக் கட்டிக் கொடு என்பார், பீமராஜர் கட்டிக் கொடுப்பார். இந்தப் படையை அங்கே அனுப்பு என்பார். பீமர் அனுப்புவார். வேங்கியின் வரிப்பணம் மான்யகேடத்தின் கோட்டையைக் கட்டுவதில் செலவழிக்கப்பட்டது. இராட்டிரக்கூடப் புரவிகள் ஓடும் பாதையைக் கோவிந்தராஜரால் பணிய வைக்கப்பட்ட மற்ற மண்டலாதிபதிகள், கூலி பெற்றுத் தூசி போகப் பெருக்கினார்கள் என்றால், வேங்கி அதிபர், கூலியிலியாகப் பெருக்கினார் என்று இரட்ட அரசர்கள் தம் மெய்கீர்த்தியில் எழுதி வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. கோவிந்தராஜாவின் உத்தரவு தாங்கிய ஓலை வந்தால், அதை முழுவதும் படிக்குமுன்பே பீமராஜா நிறைவேற்றத் துவங்கி விடுவார் என்று அவர் கீழ்ப்படியும் விதத்தை மற்றவர்கள் வர்ணித்தார்கள்.”
பிரதாபவர்த்தனரின் குரலில் வேதனை இருந்தது. இராட்டிரக்கூடத் தலைமையை என்னதான் அவர் புகழ்ந்தாலும், தாம் பிறந்த மண்ணை ஆண்ட அரசர் ஒருவர், தன்னுடைய கனவை நிறைவேற்றுவதற்காகத் தன் சுய கௌரவத்தைக் கொதுவை வைத்தது அவசியம்தானா என்ற கேள்விக்கு அவர் இன்னும் விடை தேடிக்கொண்டிருப்பது புரிந்தது. நரேந்திரர் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்று அவர் கருதுகிறார் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது.
“கோவிந்தமஹாராஜா இழுத்த இழுப்புக்கெல்லாம் பீமராஜாவுக்கு ஆட வேண்டி வந்தாலும், அவருடைய நிர்வாகம் அப்படியொன்றும் பழுதில்லை. அவருக்கென்று சில ஆலோசகர்கள் இருந்தார்கள். பூரண ஸ்வதந்தரத்துவம் இல்லையே தவிர, இரட்டத்தின் பல நிர்வாக அம்சங்களை அவர் வேங்கியில் பின்பற்றினார். விஷயங்கள் ஏற்படுத்தப்பட்டு, விஷயாதிபதிகள் கிராமேயகர்களின் செயல்பாட்டைத் தவறாமல் கண்காணித்து வந்தனர். மான்யகேடத்தின் நிழல் வேங்கியின் மீது படிந்திருந்தாலும், அது குடிமக்களை இருளென இடைஞ்சல் செய்யவில்லை. கோவிந்தராஜாவின் இறுதிக் காலத்திலும் கூட, பீமராஜாவின் நிலை ஸ்திரமாகத்தான் இருந்தது. ஆனால், கோவிந்தராஜா இறந்ததும்தான், பீமரின் நிலை பெரிதும் ஆட்டம் கண்டது.”
“நாம் அறமென்று நினைத்து, அசையா மனத்தோடு ஆற்றிய காரியங்கள் பெரும் பின்விளைவை ஏற்படுத்தி விடுகின்றன, இல்லையா ஐயா? நரேந்திரர் மட்டுமன்று, யாரைக் கேட்டாலும் அவர் எடுத்த நிலைப்பாடுதான் சரி என்பார்கள். ஆனால், எதிர்த்தரப்பில் கோவிந்தராஜாவைப் போன்றவர் அணிசேர்ந்தது அவருடைய துர்ப்பாக்கியம்.”
“அந்தச் சமயத்திலாவது, அவர் தம்முடைய பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டிருக்கலாம் என்று பட்டாலும், அவருடைய ஆக்கிரகத்துக்கும் காரணம் இல்லாமல் இல்லை. தந்தையின் ஆட்சியில், வேங்கி இரட்டர்களுக்கு அடங்கிப் போனது, ஏற்கனவே அவரை உறுத்திக்கொண்டு இருந்தது. அப்படி அடங்கியது அவருடைய தந்தையின் ராஜாங்கச் சாதுர்யம் என்று அப்போது எல்லோருடைய புகழ்ச்சியையும் பெற்ற அச்செயல் நரேந்திரரை உறுத்தியிருக்கக் கூடாதுதான். ஆனால், நரேந்திரருக்கு நிலைமை மறுபடியும் திரும்புகிறதே என்ற எரிச்சல். எதிர்ப்பவர்கள் இரட்டர்களே ஆனாலும் என்ன? நான் எவர்க்கும் அஞ்சாதவன். எதிர்த்து நின்று வேங்கிப் பரம்பரையின் ஸாஹசத்தை வியனுலகுக்கு வெளிப்படுத்துகிறேன் என்ற வீராவேசம். இப்போது அது தவறு என்று அவருக்குத் தோன்றுகிறது. அதன் விளைவுதான் இந்தக் கோவில்கள் எல்லாம். நீ இன்று காணும் ஸ்வர்க்கபுரி, முன்னமோடிய குருதி வெள்ளம் விளைவித்த பயிர்தான்.
“கோவிந்தராஜர் இருக்கும்வரை நனவாகாத நரேந்திரரின் கனவு, அவருடைய மறைவுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒருவாறு நிறைவேறியது. பெரும் அழிவுகள், உயிர்ப்பலி, குடும்பச் சிதைவுகள் எல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தடங்கி, இறுதியில் அவர் அரியணையில் மீண்டும் அமர்ந்தார். ஆனால், காலதேவதையின் விளையாட்டை என்னவென்று சொல்வது? எதற்காகத் துடித்துக் கொண்டிருந்தாரோ அது கிடைத்ததும் அவருக்கு நிம்மதி போயிற்று.”
“ஈஸ்வரா! ஏன்?”
“கனவை நனவாக்க அவர் கொடுத்த விலைதான். அவர் கடந்துவந்த வழிதான் அவருடைய உறக்கத்தைக் கெடுக்கிறது. எத்தனை கொடுமைகள்! எவ்வளவு உயிர்ச்சேதங்கள்! அவர் பழைய நரேந்திரர் அல்லர் இன்று. போர்க்களத்தில் நடந்த துஷ்டச் செயல்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொண்டு பிராயச்சித்தத்தில் இறங்கிவிட்டார். சிவபக்தர் வேறு. பதவியின் ஸ்திரத்தன்மை மற்றும் ராஜ்யத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, அமைதியான ஆன்மீக முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவருகிறார். அதன் விளைவுதான் நாடு முழுவதும் நீ பார்க்கும் அறப்பணிகள்.
“போரிட்ட நூற்றியெட்டு இடங்களையும் நினைவு படுத்திக் கொண்டு, அங்கெல்லாம் ஒரு சிவமூர்த்தியை நரேந்திரேஸ்வரர் என்று திருநாமத்துடன் ஸ்தாபனம் செய்து, ஒரு கோயிலையும் எழுப்பிவருகிறார். நீ கேட்டாயே, சென்ற இடத்திலெல்லாம் சிவபெருமான் நரேந்திரேஸ்வரர் என்ற நாமத்தைத் தாங்கி நிற்கிறாரே என்று? அதன் காரணம் இதுதான். வெறும் கோவிலைக் கட்டுவதோடு நிற்காமல், கோவில்களோடு இணைந்து ஓர் அறச்சாலையையும், வேத பாடசாலையையும், ஆகமப் பள்ளியையும் நிறுவிவருகிறார். ஒவ்வொரு நரேந்திரேஸ்வர மஹாதேவருடைய கோவிலிலும், ஆகமங்களில் விதிக்கப்பட்டவாறு, எல்லா வழிபாடுகளும் இசை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நடக்க விதிகள் இயற்றக் கட்டளையிட்டிருக்கிறார். இந்தச் சேவைகள் நடக்க வேண்டுமானால், அவற்றில் பயிற்சிபெற்றவர்கள் கூடவே இருக்கவேண்டுமல்லவா? அதற்காக, பூஜாவிதிகளைக் கற்றவர்களும், கற்றுத் தருபவர்களும், கற்றுக் கொள்பவர்களும் எப்போதும் கோவிலை ஒட்டி வசிக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இசைக்கலைஞர்கள் இங்கே குறைவு. இறைவனுக்கு நாதசேவையும் ஒரு முக்கிய அங்கமாதலால், யாழ், குழல், முழவு போன்ற வாத்தியக் கலைஞர்களையும், பாடகர்களையும், நடனமணிகளையும் வரவழைக்க ஆயத்தங்கள் நடக்கின்றன. எதற்கும் குறைவின்றி, தங்குதடையின்றி, ஆலயங்கள் சுயத்திறனோடு தன்னிச்சையாக இயங்கவேண்டும் என்பது அவருடைய அவா.
“வழிபாடுகளை விடாமல் நடத்துவதற்காக, எல்லாக் கோவில்களுக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கோவில்களை நிர்வகிக்க அந்தணர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்துடன் வசிப்பதற்கு அக்ரஹாரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. சேவிப்பதற்காகக் கோவிலுக்குத் தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் தேசாந்திரிகளின் வசதிக்காக, கோவிலுடன் இணைக்கப்பட்ட சத்திரம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சத்திரத்தில்தான் நீ தங்கியிருக்கிறாய். கோவிலென்பது வழிபடும் தலமாக இருப்பது மட்டுமன்றி, சமுதாயத்தில் கல்வியையும், தர்மசிந்தனைகளையும், ஸந்மார்க்கத்தையும் பரப்பும் ஓர் ஒருங்கிணைந்த வளாகமாக விளங்கவேண்டும் என்பது அவருடைய குறிக்கோள்.
“விலங்குகளுக்கும், பயணிகளுக்கும் தாகம் தணிக்க நீர் விநியோகம் செய்ய குடிநீர்த் தொட்டிகளும் கொட்டகைகளும் அமைக்கப்பட்டு வருவதைப் பார்த்திருப்பாய். இளைப்பாறுவதற்காகத் தோப்புக்கள், சோலைகள், இன்பத் தோட்டங்கள், நந்தவனங்கள் மற்றும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக வடிகால், கால்வாய்கள் எல்லாம் வெட்டப்பட்டு வருகின்றன. நூற்றியெட்டு இடங்களிலும் இந்தப் பணிகள் நடந்துகொண்டு வருகின்றன.
“ஆட்கள்தாம் இல்லை. செய்யவேண்டுவன மிதமிஞ்சி இருக்கின்றன. பெரிய பெரிய கட்டிடப் பணிகள் இன்னும் நடக்கவேண்டும். கொற்றர்களும், கற்றச்சர்களும், மரத்தச்சர்களும், மண்ணீட்டாளர்களும், ஓவர்களும், ஓவியர்களும், கம்மியர்களும், கொற்றுறை வினைஞர்களும், பரிசாரகர்களும், சுயம்பாகிகளும், பண்டிதர்களும், பணியாளர்களும், நடனக் கலைஞர்களும், சாஸ்திரஞ்ஞர்களும் ஏராளமாகத் தேவைப்படுகிறார்கள். உன்னைப் போன்றவர்களின் அத்தியாவசியம் சொல்லி முடியாது”
“எப்பேர்ப்பட்ட மனது அவருக்கு! பரமேஸ்வரருடைய கிருபை என்றும் அவர் சிரத்தின் மீது கவிந்திருக்க வேணுமாய்ப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவர் செய்து வருகின்ற அறச்செய்களின் பயன் பரிணாமத்தை, என்னைப் போன்ற நாடற்றுத் திரியும் அநாதைகளால்தான் புரிந்துகொள்ள முடியும். வாழும் ஒவ்வொரு கணமும், அடுத்தவேளை உணவு எங்கிருந்து வருமோ என்று உள்ளுக்குள் பரவும் தவிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல வருடங்களுக்குப் பிறகு, இந்தச் சின்னாட்களாகத்தான் வயிற்றுப்பாட்டின் ஆகுலம் இன்றி வாழ்கிறேன்.” சொல்லும்போதே அவன் குரல் உடைந்தது.
பிரதாபர் நெகிழ்ந்து அவனைத் தழுவிக்கொண்டார். “உன்னைப் போன்ற பண்டிதனை வயிற்றுப் பசிக்காக வருத்தப்படவைக்கும் நாட்டு மக்களும், அதன் அரசனும் கடமையிலிருந்து வழுவியவர்களே. உன்னுடைய இந்த மெய்தோய்ந்த மொழிகளால், கருணாமூர்த்தி நரேந்திர மிருகராஜாவுக்கு, அவர் தேடிக்கொண்டிருந்த பிராயச்சித்தம் கிட்டிவிட்டதென்றே நம்புகிறேன். போரென்று ஏற்பட்டால்தான், மனிதர்களுக்கு சாந்தத்தின் மதிப்புப் புரியும். அந்த விதத்தில், இதுவும் காலவெள்ளத்தின் ஒரு கட்டம்தானோ என்னவோ?”
பிரதாப வர்த்தனரைக் கைகுவித்து வணங்கியபடி விநயன் சொன்னான், “கோவிலில் வந்து என்னைத் தடுத்தாட்கொண்டீர்கள், என் வாழ்வுக்குப் பொருள் தோன்றுகிறது இன்று.”
தூரத்தில் நிழலாடியது. தேவநாதய்யா இவர்கள் பேசுவது காது கேட்காத தூரத்தில் நின்றுகொண்டு, இலை போடலாமா என்று சைகையால் கேட்டார். பிரதாபவர்த்தனர் சரியென்று தலையசைத்ததும், “வாசுதேவா, இலை போட்டு ஆயத்தம் செய்” உள்ளே திரும்பி உரத்துக் குரல் கொடுத்தார். சத்திரத்தில் தங்கியிருந்த மற்றவர்களுக்கும் உணவு பரிமாறப்படப் போகிறது என்று அறிவிக்கும் விதமாக ரேழியில் கட்டியிருந்த மணியை மூன்று முறைகள் ஆட்டினார்.
ஒரு ஆள் உள்ளிருந்து ஒரு பெரிய தவலையைத் தூக்கி வந்து, கிணற்றடியில் வைத்து நீரைச் சேந்தி, நிரப்பத் தொடங்கினான். இன்னொரு ஆள், பிரதாபரிடம் வந்து, ‘வாருங்கள் ஐயா, கை கால் அலம்பிக் கொள்ளலாம்’ என்றான். பிரதாபர் எழுந்து கொள்ள, விநயாதிசர்மனும் எழுந்து அவர் பின்னால் சென்றான். அந்த ஆள், தவலையில் இருந்து ஒரு கடகத்தை மொண்டு நிரப்பி, காலிலும் கைகளிலும் ஊற்ற, இருவரும் சுத்தம் செய்துகொண்டு அன்னக் கூடத்தை நோக்கிப் போனார்கள். சாணத்தால் மெழுகிய தரையில் கோலம் போட்டு, வாழை இலைகளை இரண்டு வரிசைகளாக விரித்திருந்தார்கள். ஒரு வரிசை தெற்கு நோக்கியும் மற்றொன்று கிழக்கு நோக்கியும் இருந்தது. உட்காரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு இலைக்குப் பக்கத்திலும் ஓலைச் சடகம் வைக்கப்பட்டிருந்தது. தாய் உயிரோடு இருப்பவர்கள் கிழக்குப் பார்த்தும், தாயை இழந்தவர்கள் தெற்கு நோக்கியும் அமர்ந்தார்கள். உணவு உண்ண அமர்ந்தவர்கள் எல்லோரும் ஆண்கள். பருப்புருண்டைப் புளிக் குழம்பும், மசித்த கீரையும் வெல்லத்தில் வதக்கிய மாங்காய்ப் பச்சடியும், தயிரும் கொண்ட எளிய உணவு. ஒருவரும் பேசாமல், உணவைப் பற்றிய கருத்தெதுவும் கூறாமல் கிடுகிடுவென்று பரிமாறுபவர்கள் சக்கரமாக வேலை செய்ய, உண்டார்கள்.
சாப்பிட்டு முடித்ததும், தேவநாதய்யா வழிகாட்டப் பிரதாப வர்த்தனர், சிரம பரிகாரம் செய்து கொள்ள, தட்டத்துக்குள்ளே போனார். விநயாதிசர்மனும் பின்னாலேயே சென்றான். கூடவே ஒரு ஆள், சிவிறியோடு அவருக்கு விசிறிவிட வந்தான். ‘ஏதாவது பாடு’ என்று சொல்லிவிட்டு மஞ்சத்தில் படுத்தார்.
விசிறி விட வந்தவனிடம், விநயன் தன்னுடைய குரலுக்கேற்ப ஏற்கனவே மீட்டி வைத்திருந்த ஏகதந்தி யாழை எடுத்துவரச் சொன்னான். சுத்த ஸ்வரங்களின் கோவைக்குள் வரும் தன்னாசியை மீண்டும் பாடினான். காலையில் பாடியதில் இருந்து, அது உள்ளுக்குள் சுற்றிக் கொண்டுதான் இருந்தது. ஔடவ சம்பூர்ணம் என்று வகைப் படுத்தப் பட்ட ஜாதி. ஷட்ஜத்தில் இருந்து ஸ்ருதியை உயர்த்திக்கொண்டே செல்லும்போது ஐந்து ஸ்வரங்களைக் கொண்டதாகவும், ஸ்ருதியை இறக்கிக் கொண்டே வரும்போது ஏழு ஸ்வரங்களின் வழியாக, ஆரம்பித்த ஸ்ருதியில் வந்திறங்கும் ராகம். சுத்த ஸ்வரங்களின் பிரயோகத்தால் ஒரு தியானச் சூழ்நிலையை அவனுக்கு எப்போதும் உணர்த்தும் இசை.
ஜ்ஞாத்ரு ஜ்ஞான ஜ்ஞேய பே⁴த³: பரே நாத்மனி வித்³யதே I
சிதா³னந்தை³க ரூப த்வாத் - தீ³ப்யதே ஸ்வயமேவ ஹி ||
ஏவம் ஆத்மா அரணௌ த்⁴யான மத²னே ஸததம் க்ருதே |
உதி³த் ஆவக³தீ ஜ்வாலா ஸர்வ ஜ்ஞானேந்த⁴னம் த³ஹத் ||
ஜ்ஞாத்ரு ஜ்ஞான ஜ்ஞேய – பா ப – பா ப – பநீபா – ஒவ்வொரு முறை அவன் ஜ்ஞா – ஜ்ஞா என்று சொல்லும்போதெல்லாம் பஞ்சமக் கார்வை செவி வழியே இறங்கி, முகத்தை நனைத்துக் கண்டத்தில் பரவித் தலையெங்கும் வியாபித்தது. கைசிகி நிஷாதத்தைத் தொட்டு வருடிவிட்டு மீண்டும் பஞ்சமத்தைச் சுத்த தைவதம் வழியாகப் பிடித்து நின்றான். கரம்பு தட்டிப் போன நிலத்தில், மேகம் வர்ஷித்து, அடம் பிடித்த கல்தரையை உருக்கி, இண்டு இடுக்குக் கண்டுபிடித்து, அதன் வழியே ஊடுருவி அடித்தளத்தையே இளக்குவது போல, விறைப்பாக இருந்த மனம் இளகிற்று. எதிரே யார் வந்து எதைக் கேட்டாலும் கொடுத்துவிட ஆயத்தமான ஒரு மயக்க நிலை.
அவன் பாடிக்கொண்டே இருக்கப் பிரதாபர் கண் மூடி இரசித்தார். முகத்தில் பரவசம். அவன் கொஞ்ச நேரம் பாடிக்கொண்டே இருந்துவிட்டு, மத்யம ஸ்தாயி ஷட்ஜத்தில் வந்து நிறுத்தினான். யாழைச் சுவரோரம் சாய்த்து வைத்து விட்டு, நிமிர்ந்தான். நிலைப் படியில் நின்று கொண்டு தேவநாதய்யா பார்த்த பார்வையில், அவர் இந்த உலகத்தில் இல்லை என்று தோன்றியது. வெளியே கூடத்தில், நிறைய பேர் கேட்டுக் கொண்டிருந்தார்கள் போல இருந்தது. எங்கே விருட்டென்று எழுந்தால், காற்றில் பரவியிருந்த சுநாத அலைகள், தாறுமாறாகக் கலைந்துவிடுமோ என்று அச்சப்பட்டவர்களைப் போல, அமர்ந்திருந்தவர்கள் ஓசையெழுப்பாமல் ஒவ்வொருவராய் மெல்ல எழுந்து நகர்ந்தார்கள்.
அறை உறைந்து போய் இருந்தது. பிரதாபர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். மறைபொருளாகக் காதில் கேட்டுக்கொண்டிருந்த, ஸ்ருதி கலைந்து விடும் என்று நினைத்தாரோ என்னவோ, தயங்கித் தயங்கிக் கேட்டார்.
“என்ன பாட்டு, அப்பா! க்ஷேமமாய் இரு. இது ஷாடவ சம்பூர்ணம் இல்லையோ? ஏறுமுகத்தில் பஞ்சமத்தில் இருந்து தைவதத்தைத் தொடாமல் நிஷாதத்துக்குப் போய் விடுகிறாயே?”
“தெரியவில்லை ஐயா, எனக்குக் கற்றுக் கொடுத்த ஸாது, இப்படித்தான் பாடுவார்”
“எந்த ஸாது?”
“அவர் பெயர் தெரியவில்லை. எல்லோரும் காயக பட்டர் என்று அழைப்பார்கள். ஷ்ருங்கபர்வதத்தில், நதிக்கரையில் சங்கர ஆச்சார்யர் என்ற ஒருவர் ஸ்தாபித்த சைவ மடம் இருக்கிறதாம். அங்கிருந்து வந்தவர் என்று கேள்வி. என்னைப் போல ஒரு இரண்டு மூன்று பேர்களுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தார்.”
“எங்குப் பார்த்தாய் அவரை?”
“கடக்கத்தில் இருந்து தப்பி ஓடித் திக்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தேன் அல்லவா? வழியில் சில தேசாந்திரிகளைச் சந்தித்தேன். அவர்கள் காட்டிய வழி. பல பெளர்ணமிகள், இந்த ஸாதுவின் குடிலில் தங்கியிருந்தேன். அவர் பிறகு வாராணசிக்குப் போய்விட்டார்.”
“இந்த ஸ்லோகம் யார் எழுதியது? புரிகிறாற்போல இருக்கிறது. ஆனால், உள்ளர்த்தம் சரியாகப் புரிபடவில்லை.”
“இது அந்த சங்கர ஆசார்யர் எழுதினதாம். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் ஐந்து இந்திரியங்களோடு முழுவதுமாக ஈடுபடும்போது, அந்த முயற்சியும், நாமும் அந்த விஷயமும் பிரித்துப்பார்க்க முடியாதபடி ஒன்றாகி விடுகிறோமாம். அப்போது அந்தப் பேதம் இல்லாத நிலை அஞ்ஞானத்தைப் பொசுக்கி விடும் என்கிறார்.”
“ஆஹா! வித்தியாசமாகவும் விசேஷமாகவும் அன்றோ இருக்கிறது!”
அப்போது வெளியில் குரல் கேட்டது.
“ஐயா, தச்சன் வந்திருக்கிறான்” என்றார் தேவநாதய்யா.
“வந்து விட்டானா, சரி, நான் கிளம்புகிறேன். சிவிகையை வரச் சொல்லுங்கள்.”
“வந்துவிட்டது ஐயா. சித்தமாக இருக்கிறது”
“சிவிகை தாங்கிகள் உண்டாயிற்றா?”
“ஆயிற்று ஐயா”
பிரதாப வர்த்தனர் மலர்ந்தார். “பார்த்துப் பார்த்துப் பணி செய்கிறீர், தேவநாதரே! சௌக்கியமாக இரும். விநயா , ஏற்றந்தலையைக் கொஞ்சம் கவனிக்க வேண்டி இருக்கிறது. நான் போய்வருகிறேன். நாளை அரசரைப் பார்க்கவேண்டிய வேலை உண்டு. உன்னை நாளை மறுநாள் சந்திக்கிறேன்.”
அவர் போய்விட்டார்.
குளிர்ந்து இருந்த தரையில், மேல் துண்டை விரித்துத் தலைக்குக் கையை அண்டை கொடுத்துக்கொண்டு படுத்தான். ஆத்மா என்னும் அரணிக்கட்டையை நாம் தியானம் என்னும் மத்தினால் கடைந்தால், ஞானம் என்னும் நெருப்பு உண்டாகி, அது அஞ்ஞானத்தைப் பொசுக்கி விடுகிறது என்ற வரிகள் எண்ணம் முழுதும் பரவ, அப்படியே தூங்கிப் போனான்.
பாத்திரங்கள் உருண்ட சத்தம் கேட்டு, அவன் எழுந்திருக்கும்போது, சூரியன் மென்மை அடைந்திருந்தான். கிணற்றில் நீர் இறைத்து அவன் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, மேற்கில் கருமேகம் திரண்டு இருந்தது. மழை பெய்யலாம் என்று தோன்றியது. வாயிற்பக்கம் வந்தபோது, தேவநாதய்யாவைக் காணவில்லை. பாகசாலையில் இருந்து ஒரு சிறுவன், ‘ஏதாவது பருகுகிறீர்களா? அல்லது பழம் வெட்டித் தரட்டுமா?’ என்று கேட்டான். தான் ஒரு விசேஷ அதிதியாகி விட்டோம் என்று தோன்றியது.
‘தொண்டைக்குக் குளிர்ச்சியாக ஏதாவது இருக்கிறதா?”
“இளநீர் இருக்கிறது, ஐயா. செங்கழைச் சாறு குடிப்பீர்களா? சம்பீரம் பிழிந்து, இஞ்சித் துண்டுகள் போட்டுத் தருகிறேன்”
“செங்கழையா? எப்படிச் சாறு எடுப்பாய்?”
“பின் கட்டில், உழலை இருக்கிறதே” – மகிழ்ச்சியோடு சொன்னான்.
“ஆஹா, பின் என்ன, அதையே கொடு”
சிறுவன் உள்ளே ஓடினான். நாமே குறித்துச் சொன்ன ஒரு வஸ்து இவருக்குப் பிடித்தமாகி, அதை நாமே செய்தும் தரப்போகிறோம் என்ற பெருமை பிடிபடவில்லை அவனுக்கு. இடைகழிச் சாளரம் வழியே, சிறுவன் கரணைத் துண்டத்தை உழலையின் உருளைகள் இடையே வைத்துச் சுழற்றுவது தெரிந்தது.
வாயிலில் பெண்களின் வளையல் ஓசைகள் கேட்க, என்னவென்று பார்க்க வெளியில் வந்தான். பெரிய முற்றம். வலப்புறம் ஒரு சிறு கொட்டகை. அதில் ஒரு பெரிய கங்காளம் வைக்கப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் இரு பெண்கள் நின்றிருந்தார்கள். உடையைப் பார்த்த மாத்திரத்தில், இடையர் பெண்கள் என்று தெரிந்தது. ஒருத்தி தலையில், பளீரென்று ஓளிவீசும் மஞ்சள் உலோகப் பாண்டம். இன்னொருத்தியும் அதைபோல ஒரு பாண்டத்தில் இருந்த பாலைக் கங்காளத்தில் ஊற்றிக் கொண்டு இருந்தாள். சிரித்து ஏதோ பேசிக்கொண்டிருந்தவர்கள், இவனைப் பார்த்ததும், நிசப்தமானார்கள். அடுத்தவளும் பாலைக் கொட்டியதும், இருவரும் சர சரவென்று ஓட்ட நடை நடந்து, மறைந்து போனார்கள்.
“உபரி பால் அது. இங்கே தர்மத்துக்காகச் சேர்த்து விட்டுப் போகிறார்கள்.” –
சட்டென்று நிமிர்ந்தான். சத்திரத்தில் தங்கியிருந்த ஒருவர் அவனைப் பார்த்து வணக்கம் சொன்னார்.
“தர்மத்துக்கு என்றால், சத்திரத்தில் தங்குபவர்களுக்கா?”
“எல்லோருக்கும்தான். சில சமயம் கறவை அதிகமாகி விட்டால், வெண்ணெய், தயிர் மாற்றியது போக, உபரியை இந்தக் கங்காளத்தில் சேர்த்து விடுவார்கள். கொஞ்ச நேரத்தில், அதோ பாருங்கள், கல்லடுப்பு, அதில் வைத்துக் காய்ச்சி வைத்துவிடுவார்கள். பிறகு, இரவு முழுக்க அங்கேதான் கிடக்கும். யார் வேண்டுமானாலும் வந்து எடுத்துக் கொள்ளலாம்.”
“சில இடங்களில் கோவிலுக்குக் கொடுத்து விடுவார்கள், பார்த்திருக்கிறேன்.”
“அதுவும் உண்டு. நீங்கள் மதியம் நன்றாகப் பாடினீர்கள்”
“நன்றி”
அதற்குமேல் என்ன பேசுவது என்று அவருக்கும் தெரியவில்லை. இவனுக்கும் தோன்றவில்லை.
“சரி, சந்தி செய்ய வேண்டும். பிறகு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். அவன் உள்ளே வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்த சிறுவன், ஒரு மண் கலயத்தை நீட்டினான். அடாடா, இதை மறந்தே விட்டோமே.
ஒரே மூச்சில் உறிஞ்சினான். ‘தேவ அமிர்தமடா” சிறுவனுக்கு ஒரே குஷி.
“இன்னும் கொஞ்சம் தரட்டுமா?”
“ம் ம் .. நன்றாகச் செய்திருக்கிறாய்“
“ஈஸ்வரார்ப்பணம், ஐயா”
“நன்றாக இரு” என்று சொல்லிவிட்டுப் புழைக்கடைக்குச் சென்றான். மேகம் இன்னும் இருட்டாகத் திரண்டிருந்தது. புழுதிக் காற்று வீசியது.
“மழை வரும் போல இருக்கிறது, காயவைத்திருக்கிற துணிகளை எடுங்கள். இருட்டாகிறது. விளக்கேற்ற ஏற்பாடு செய்யுங்கள். மாதவா, இரவு அன்னத்துக்கு ஏற்பாடு நடக்கிறதா?” – தேவநாதய்யா வந்துவிட்டார்.
சந்தி முடித்துவிட்டு அவன் கூடத்துக்கு வந்தபோது, இராத்திரி ஏற்றுவதற்காக, விளக்குகளைத் துடைத்து எண்ணெய் இடும் பணி நடந்து கொண்டிருந்தது. பயன்படுத்தப்பட்ட கைப்பந்தத் தண்டுகள் நிறைய கீழே கிடந்தன. அவற்றின் தலைப்பகுதியில் சுற்றப்பட்ட கம்பிகளில் எரிந்த கருந்துகள் அப்பிக் கிடந்தது. அதை நனைத்த இலவம் பஞ்சால் சீத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு சீத்துச் சுத்தம் செய்யப்பட்ட கம்பியைத் தண்டின் கவையில் இருந்து அவிழ்த்து, அந்தக் கம்பி கட்டப்பட்டிருந்த கவைகளையும் அயிர்மண் ஒட்டிய தோலால் தேய்த்து மெருகேற்றினார்கள். பிறகு அதில் புதிதாகச் சுற்றிய சிதர்வைப் பந்துகளைச் சுருணையாகச் சுற்றி இறுக்கினார்கள். அதன்மேலே, சில சருகுகள், ஊசிஇலைகள் போன்றவற்றைப் போர்த்தி, மீண்டும் கம்பியை இறுகக் கட்டினார்கள்.
அவ்வாறு ஆயத்தமாகி இருந்த பந்தங்களை ஒருவன் வாயகன்ற மரக் குடுவையில் வைக்கப்பட்டிருந்த கந்தகமும், சுண்ணாம்பும், தேன்மெழுகும் கலந்த கரைசலில் தோய்த்து நனைத்தான். கரைசல் நன்கு வடிந்தவுடன், அப்பந்தங்களை வாயிலின் அருகிலும், புழைக்கடைக் கதவின் அருகிலும் சுவரில் அடித்து பொருத்தப் பட்டிருந்த, பந்த மாட்டிகளில் வரிசையாகக் செருகி செருகி வைத்தார்கள். இரண்டு இடத்திலும், ஓர் விளக்கையும் கூடவே ஏற்றி வைத்தார்கள். வெளியில் செல்பவர்கள், அந்த விளக்கில் பந்தத்தைப் பற்றவைத்து, வெளியே செல்லத் தோதுவாக ஏற்பாடு நடக்கும் விதத்தைப் பார்த்தபடி நின்றான் விநயாதிசர்மன்.
“வெளியே காலாரப் போய் வரலாமா?” – தேவநாதய்யா குரல் கேட்டுத் திரும்பினான்.
“தாராளமாக. கோவிலுக்கும் போகவேண்டும்”
“கோவிலுக்குப் போகாமலா? அப்படியே போய் விட்டு வந்துவிடலாம்” என்றவர் அருகிலிருந்த சிறுவனிடம், “அரை நாழிகைக்குப் பிறகு, விளக்கெடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்துவிடு” என்றார்.
இருவரும் வாயிற்படியைத் தாண்டிச் சிறுமுற்றப் பாதை வழியாக நடந்து, வெளியே வந்தார்கள். மழையைக் காணோம். மேகங்கள் மறைந்து விட்டிருந்தன. சூரியன் நாள் முழுதும் நடந்த இளைப்பில், சிவந்து கொண்டிருந்தான். வீதியின் கோடிக்குப் போய், இரத வீதியைக் குறுக்காகக் கடந்து, தரிசு நிலப் பரப்பில் இறங்கி நடந்தார்கள். தூரத்தே புழுதி தெரிந்தது. மெல்லிய இரைச்சலும் கேட்டது. அவன் பார்வை போன திக்கைப் பார்த்துவிட்டு, மேய்ச்சலுக்குப் போன மாடுகள் திரும்புகின்றன என்றார் தேவநாதய்யா. பார்த்துக் கொண்டே இருக்கும்போது, கால்நடைக் கூட்டம் கண்ணுக்குத் தெரிந்தது. பக்கத்தில், சிறிய தொழுவம். நூறு முழத்துக்கு நூறு முழம் இருக்குமா? பெரிய சதுரத்தில் அழகாக வேலியோடு அமைக்கப்பட்டிருந்தது. அருகிலேயே கிணறு. தொழுவத்தின் இடையே நடக்க மூன்று பாதைகள். ஒவ்வொரு பாதைக்கும் இடையே இருபது முழம் இடைவெளியாவது இருக்கும். அதனால் உருவான நான்கு தீர்க்க சதுரங்களில் ஒவ்வொன்றிலும் பதினைந்து மாடுகளுக்கு ஆவேலிகள். ஒவ்வொரு சிறையிலும் மேலே கூரை அமைந்திருந்தது. நான்கு மூலைகளிலும் காவற் கோபுரங்கள்.
வடக்கு மற்றும் தெற்குப் புறங்களில் இங்குளி மரங்கள், மாடுகளின் ஆரோக்கியத்துக்காக நடப்பட்டிருந்தன. ஒரு பெண், கையில் தீச்சட்டி உள்ள கூடையை வைத்துக் கொண்டு சுற்றி வந்து கொண்டிருந்தார். அந்தத் தீச்சட்டிக் கலயத்தில் இருந்து, ஆச்சியமும், இங்கும், குக்கிலும், கடுகுவிதைகளும், அரைத்துக் காயவைத்துப் பொடித்த பொடியின் தூபப்புகை மெல்ல எழுந்து பரவிக்கொண்டிருந்தது.
பசுக்களும் எருதுகளும் சேர இருந்த, அந்தக் கூட்டத்தை வழிநடத்தி வந்த ஆயர்கள், சட்சட்டென்று அந்த மாடுகளை அவையவற்றின் கொட்டிலுக்குள் அடைத்தார்கள். அப்போதுதான், கவனித்தான், தொழுவத்தைச் சுற்றிக் கையில் கத்தியுடன், வில்லும் அம்புகளும் ஏந்திக்கொண்டு ஆறேழு சேனைவீரர்கள் சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள்.
“இவர்கள் எதற்கு?”
“இவை தனித்தனி வீட்டுப் பசுக்கள். சில, எருதுகள் ஊர்ச்சொத்துப் பொலி காளைகள். இவற்றைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தத் தொழுவத்தின் தலையாரியின் பொறுப்பு. அவன் நியமித்த ஆட்கள் இவர்கள். இவர்களுக்குத் தனிப்பசுவின் உரிமையாளர்கள் பத்தில் ஒரு பங்கு பால், தலையாரியிறையாகக் கொடுத்துவிட வேண்டும். ஊர்ச்சொத்துக் காவலுக்கு, கிராமாதிபதி, பொதுத்திறையில் இருந்து வருடத்துக்குக் களச்செலவாகக் கொடுத்துவிடுவார்.”
“ஆயுதக் காவல் எதற்கு?”
“கள்ளர் பயம் உண்டு. அடிக்கடி, மாட்டை ஓட்டிக் கொண்டு சென்று விடுகிறார்கள் சில கயவர்கள்.”
பேசிக்கொண்டே இருவரும் கோவிலுக்குப் போய்த் தரிசனம் செய்து முடித்துவிட்டு வெளியே வரும்போது, இருட்டு கவ்விக் கொண்டிருந்தது. கோவில் பிராகாரத்தில், ஏற்றி வைத்த தீப்பந்தங்களின் ஒளியின் சிதறல்கள், கோபுர வாசற்படியின் இழைத்த கல்வெட்டில் மஞ்சள் நிறத்தை வெற்றிகரமாகத் தீட்டிக் கொண்டிருந்தன. இரண்டு தூக்கு விளக்குகளுடன் சிறுவன் சித்தமாக நின்றிருந்தான்.
“இரவு உணவு பாகமாகி விட்டதாடா?”
“ஆம் ஐயா, நான் வரும்போது, பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. இப்போது ஆகியிருக்கும்”
“இன்று சௌக்கியம் தாயகக் கஞ்சி” – சிரித்தார் தேவநாதய்யா விநயனைப் பார்த்து.
இவருக்கு நகைச்சுவை உணர்வும் உண்டா? மெல்லிதாக முறுவலித்தான்.
“நல்ல இரவு உணவு, சிறு பயறு. வெல்லத்தோடா?”
“அது இல்லாமலா? கன்னலமுதுதான். சில நாட்களுக்கு முன்தான் புதுக்குடம் கரும்பு தெற்றி வந்தது.”
சத்திரத்தில் நுழையும்போது, வெளியே முற்றத்தில், அடுப்பின் சிவப்பொளி அழகாகத் தெரிந்தது. மங்கலாகப் பாத்திரத்தில் பால் நுரையுடன் கொதித்துக்கொண்டிருக்க, அருகில், இரண்டு மூன்று பேர், ஓலைக் குடலையில் பால் அருந்திக் கொண்டிருந்தார்கள்.
உணவுக்குப் பின்
சீக்கிரமே படுத்துவிட்டான்.
No comments:
Post a Comment