ஏலபுரிக் கோட்டையினுள், ஒரு விஸ்தாரமான கட்டிடம். அதில், மாளவத்தில் இருந்து தான் கவர்ந்துகொண்டு வந்த, ஓர் அழகிய வேலைப்பாடுடைய நாற்காலிப் பீடமொன்றில் தந்திதுர்க்கன் அமர்ந்திருந்தான். வயது முப்பது கூட இருக்காது, அவனைப் பார்த்தால். ஏதோ ஓர் இளைஞன் என்று கடந்துவிடத் தோன்றும். இவனா, ஒரு பேரரசையே விழச் செய்தவன்! அதேபோல் இன்னொரு நாற்காற் பீடத்தில், அவனுக்குத் தமையன் போல, கிருஷ்ணராஜா அமர்ந்திருந்தார். தந்திதுர்க்கனை விட உயரத்தில் சற்று அதிகம். பத்துப் பன்னிரண்டு வயது மூத்தவர். ஆனால், அந்த அதிகமான அகவை, ஆகத்தில் தோன்றவில்லை, அனுபவஸ்தராக அமர்ந்த பாங்கில் வெளிப்பட்டது.
“எனக்குக் காஞ்சியைப் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது”
வசீகரமாகச் சிரித்தார் கிருஷ்ணராஜா. “உன்னையும் இடைக் கச்சை கவர்ந்து விட்டதா, தந்திதுர்க்கா?”
“ஹா ஹா ஹா. காஞ்சியை ஆளாத சாம்ராஜ்ஜியம், சாம்ராஜ்ஜியமா, சிற்றப்பா? நான் நந்திவர்மனைக் கண்டுபிடித்துவிட்டேன்.”
“என்ன!.. “ கிருஷ்ணராஜா அதிர்ந்தார்.
“ஆம். அவனோடு பேசவும் செய்தேன். அவன் சொன்னதைக் கேட்டதும், மனம் பெரிதும் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டது. சாளுக்கிய அரசு செய்வது சரியன்று என்றும் தோன்றிவிட்டது. பரம்பரைப் பகை இருப்பது சரிதான். ஆனால், அதை வளர்த்துக் கொண்டே போவதால், இராஜ்ஜியத்துக்கு என்ன விளைவு ஏற்படும், அதைச் சமாளிக்கும் திறன் நமக்கு இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவேண்டாமா?”
“அடடா! பல்லவன் மீது இவ்வளவு பாசமா? கீர்த்திவர்மன் காதில் விழுந்தால் துடித்துப் போய்விடுவானே”
“நந்தி மீது பாசத்தை விட, இந்தத் தந்திக்குக் கீர்த்தி மீது புலவல். என்ன அரசன் இவன்! தற்பெருமையே பிரதானம் என்றிருக்கிறான். விக்கிரமாதித்தியர் போன்றவருக்குக் கீழே பணி புரிந்துவிட்டு, இவனை வருங்காலத்தில் அரசன் என்று சொல்லிக் கொள்ளப்போகிறேனே என்று எண்ணவே அரோசிகமாக இருக்கிறது.”
“அரசனை வெறுத்து விட்டு என்ன செய்யப் போகிறாய்?”
“எந்த அரசனை வெறுக்க இந்த மந்திராலோசனை நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் ராஜமாதா பவகணா. தந்திதுர்க்கனும் கிருஷ்ணராஜாவும் எழுந்து வணங்கினார்கள். யாருக்கும் அஞ்சாத மனவுறுதியும், துளைக்கும் பார்வையும் கூடிய அவரைப் பார்த்தால் யாருக்குமே ஒரு தயக்கம் வரும். எதிர்நின்று பேசுபவர்களுடைய மொழியில் பொய்யையும், இரகசியத்தையும் அவர்களுக்கு அந்நியமாக்கித் துரத்தி அடித்துவிடும் பார்வை. பெண்டிரில் ராஜரிஷி அவர்.
“என்னைக் கூப்பிட்டு அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே அம்மா? எப்போது பிரதிஷ்டானத்தில் இருந்து வந்தீர்கள்?”
“நேற்று அதிகாலையில். வந்ததும் கேட்டேன், நீ காஞ்சியில் இருந்து திரும்பி வந்துவிட்டாய் என்று சொன்னார்கள். எப்படி இருந்தது காஞ்சிப் பயணம்? நந்திவர்மன் கிடைத்தானா? வாதாபிக்குப் போய் விக்கிரமாதித்திய ராஜாவைப் பார்த்துவிட்டு வருவாய் என்று நினைத்தேன். நேராக வந்துவிட்டாய் போலிருக்கிறது”
“ஆமாம் அம்மா. வாதாபிக்குப் போகவில்லை. அவரின் உடல்நிலை அவ்வளவு நலமில்லை. அடிக்கடி நினைவு தப்பிவிடுகிறதாம். கீர்த்திவர்மனை உடனேயே அரியணை ஏற்ற ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டார்கள். சில திங்களில் முடிசூட்டு விழா இருக்கும்.”
“ஓ! மறுபடியும் தெற்கு நோக்கிப் பயணமா?”
“அதைப்பற்றித்தான் சிற்றப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். நீங்கள் வந்தீர்கள்.”
“மைத்துனரே! அதனால்தான் அரசரை வெறுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டுக் கொண்டிருந்தீர்களா?”
“மகாராணி! தந்திதுர்க்கன் மனத்தில் ஏதோ இருக்கிறது. என்ன செய்யவேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கிறான் என்று தோன்றுகிறது. சரியான சமயத்தில் வந்திருக்கிறீர்கள். உங்கள் ஆலோசனை அவனுக்குச் சரியான திசையைக் காட்டட்டும்”
“உங்கள் விவேகத்துக்கும் தெளிவுக்கும் மீறியா என்னுடைய ஆலோசனை இருக்கப் போகிறது? மகாராஜாவின் இடத்தில் இருந்துகொண்டு ஒரு தந்தையாக அல்லவோ தந்திக்கு வழி காட்டி நடத்தி வருகிறீர் மைத்துனரே. நான் என்றைக்கு இந்த ராஜாங்க விஷயத்தை எல்லாம் செவிக்குள் நுழைத்துக் கொண்டிருக்கிறேன்? அதெல்லாம் தந்தியும் நீங்களும்தான் பார்த்துக்கொள்கிறீர்களே? இந்த முறை தலைநகருக்கு வந்து கொண்டிருக்கும்போது, நிறைய விஷயங்கள் பேசவேண்டும் என்று பிரயாணத்திலிருந்தே செய்தி அனுப்பி இருந்தான்.. அதனால்தான், அவன் திரும்பி வருவதற்குள் வந்துவிடவேண்டும் என்று ஆயத்தம் செய்துகொண்டு வந்துவிட்டேன்.”
“நான் நந்திவர்மனைப் தேடிப்போனது எல்லாம் எப்படித் தெரிந்தது?”
“வந்ததும், ஸந்திவிக்கிரஹியைக் கூப்பிட்டனுப்பித் தெரிந்துகொண்டேன். அவர் சமர்த்தர். எனக்கு எவ்வளவு சொல்லலாம், எவ்வளவு சொல்லக்கூடாது, என்று யோசித்து, அளந்து அளந்துதான் பேசினார்”
“ஹா ஹா. அவரைக் கேள்வி கேட்டுத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டிருப்பீர்கள்.” என்று சிரித்தான் தந்திதுர்க்கன்.
“நந்திவர்மனைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறான் உங்கள் பிள்ளை. இது கீர்த்தி வர்மனுக்குத் தெரியாது. விக்கிரமாதித்தியர் முன்னால் போய் நின்றால், இந்த விஷயத்தை மறைத்துப் பேசும் சக்தி தனக்கு இருக்காது என்பதால், அவரைச் சந்திக்காமலேயே ஸ்ரீபர்வதம் வழியாக வந்துவிட்டான். இப்போது என்ன செய்வது என்று குழப்பம். சரியா தந்திதுர்கா?”
சிரித்தான் தந்திதுர்க்கன்.
“நந்திவர்மனைக் கண்டுபிடித்து விட்டாயா? பார்த்துப் பேசினாயா? இதைக் கீர்த்திவர்மனுக்குத் தெரியாமல் மறைத்து விட்டாயா? இது என்ன விந்தையாக இருக்கிறது! இதற்காகத்தான் காஞ்சிக்குப் படையெடுத்தே போனீர்கள் என்றார் ஸந்திவிக்கிரஹி!”
“கீர்த்திவர்மன், தான் சாளுக்கிய அரியணையில் ஏறத் தகுந்தவன்தான் என்று மஹாராஜாவுக்குக் காட்டிக் கொள்ளத்தான் இந்தப் படையெடுப்பையே செய்தான். எங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு போனதும் அதற்காகத்தான். ஆனால், இது அடிபட்ட பாம்பைக் கண்டுபிடிக்கும் வேலை அன்றோ?”
“சித்திரமாயன் எதிர்க்கமாட்டானா என்ன?” சிரித்தார் கிருஷ்ணாராஜா
“ஏளனத்தை இப்படி மறைத்துப் பேசுவதில், உங்களுக்கு நிகர் யார்? ஆனால், இந்தமுறை நாங்களெல்லாரும் போயிருந்தோமே!”
“அதுசரிதான். ஆனால் ராஜஸிம்ஹன் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி கண்கொத்திப் பாம்பு போலக் கவனித்துக் கொண்டிருப்பானே. ஆனானப்பட்ட இரணரஸிகரே அவனுடைய பராக்கிரமத்துக்கு அஞ்சித்தானே சித்ரமாயனைக் காஞ்சிக்குத் தலைமையாக இருக்க ஒப்புகொண்டிருக்கிறார். அதை மீறிக் கீர்த்தி ஏதாவது செய்தானா என்ன?”
“ஆஹா! சிற்றப்பா! இங்கே ஏலபுரியில் அமர்ந்துகொண்டு, எப்படித் தூர தேச ராஜாங்க விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்! உங்களுக்குப் போய் விவரிக்க முயன்றேனே, யானைக்குக் கரும்பு உண்ணக் கற்றுக் கொடுக்கும் மூடன் நான்!” – விளையாட்டாகக் கைகூப்பினான் தந்திதுர்க்கன்.
“நான் ஒருத்தி இருக்கிறேனப்பா, எனக்காகவாவது சொல். நீங்கள் பேசுவதின் உள்ளர்த்தமும் வியங்கியமும் என் தலைக்கு மேலே போகிறது” என்றார் ராஜமாதா.
“சொல்கிறேனம்மா. அதற்காகத்தானே உங்களைக் கூப்பிட்டும் அனுப்பினேன். சித்திரமாயன் நல்ல அரசனாகத்தான் அரசாண்டு கொண்டிருந்தது போலத் தோன்றியது. பாண்டியனின் ஆலோசனைப்படி ஆள்கிறானோ என்னவோ? அறம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பாடசாலைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அங்காடிகளில் வணிகமும் பண்டங்கள் மாற்றுக்களும் சுமுகமாக நடந்து வருவதாகத்தான் பட்டது. கோவில்களில் பூஜைகள் நித்தியக்கிரமமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஆனால், இப்போது எல்லாம் தடைபட்டுப் போயிருக்கலாம். நாங்கள் புறப்பட்டபோது, சூர்யாஸ்தமனத்துக்கு முன்பே சாலைகளில் சந்தடி அடங்கிவிடத் தொடங்கிவிட்டது. சாளுக்கியக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து விட்டோம். தளபதி கம்பண்ணாவின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்திருக்கிறோம். மக்கள் முன்னே பின்னே பார்த்தபடி, அச்சத்தோடுதான் புழங்குகிறார்கள். யாரையும் யாரும் நம்புவதில்லை.”
“அப்படியென்றால், சித்திரமாயன் என்ன ஆனான்?”
“ஓடிவிட்டான். நான்தான் காஞ்சியை வீழ்த்தினேன். பெரிய எதிர்ப்பெல்லாம் இல்லை.”
“பாண்டியன் படைகள் இல்லையா?”
“இல்லை. சித்திரமாயன் தன்னுடைய பலத்திலே எங்களை எதிர்த்தான். எத்தனை காலத்திற்கு, இன்னொருவருடைய தோளிலேயே உட்கார்ந்துகொண்டு போரிடுவான்?”
“எங்கள் படை நுழைவதற்கு முன்னமே, ராஜசிம்ஹ பாண்டியனிடமிருந்து ஓர் ஒற்றன் கீர்த்திவர்மனைக் காண வந்தான். படையெடுப்பைக் கைவிடும்படி அறிவுறுத்தினான். கீர்த்திவர்மன், சரி யோசித்துப் பார்க்கிறேன், என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு, படையெடுப்பைத் தொடரச் சொல்லிவிட்டான். நாங்கள் எல்லோரும் வேறு கூடவே இருந்தோமா, அவனுக்குச் சுய கௌரவம் எடுத்த காலைப் பின்வைக்க முடியாமல் தடுத்துவிட்டது.”
“ஆச்சரியம்தான்! அப்படியென்றால் படையெடுப்பின் நோக்கம் வெற்றி என்று சொல்”
“என்ன வெற்றி? எல்லாம் வீண். பெரிய செல்வங்கள் ஒன்றும் இல்லை. மடி கறந்த பசுவிடமிருந்து எவ்வளவுதான் மீண்டும் கறப்பது? இரணதீரனிடம் பட்ட அடி, வாதாபியில் யாருக்காவது மறக்குமா? இதை மாறவர்மன் அலட்சியப் படுத்தப் போவதில்லை. வெற்று விஷயத்துக்காக நடந்த படையெடுப்பு. இதற்குக் கீர்த்திவர்மனுக்குப் பெருத்த விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது”
“அதனால் என்ன? நந்திவர்மன் கிட்டிவிட்டான் என்ற செய்தி இந்தப் படையெடுப்பைச் சாபல்யமாக ஆக்கி விடாதா?”
“நந்திவர்மனை நான்தானே பார்த்தேன்? அவனுக்கு இன்னும் தெரியாது அல்லவா? கண்டு பிடித்ததிலும் என் சாதனை ஒன்றும் இல்லை. அதிர்ஷ்டவசம் கிடைத்தான். அந்தப் பத்மநாபனே எனக்காக ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதற்குப் பயன் கீர்த்திக்கு எதற்குப் போய்ச் சேரவேண்டும்? கூடப் போனபோதுதான் தெரிந்தது, அவனுடைய திறமை இவ்வளவுதான் என்று. நான் மட்டும் கூடப் போயிருக்காவிட்டால், சித்திரமாயனிடமே தோற்றிருந்தாலும் தோற்றிருப்பான். மோசமாகத் திட்டமிடுகிறான். பழைய பல்லவனாகவோ, பிரதிஹாரனாகவோ எதிரியாக இருந்திருந்தால் அவ்வளவுதான். சாளுக்கிய அரசைத் தட்டில் ஏந்தி எதிரியிடம் கொடுத்துவிடுவான். இப்படிப் பட்டவனோடு என் வாழ்வை நான் ஏன் இணைத்துக் கொண்டு நாசமாக்கிக் கொள்ள வேண்டும்? இதுதான் என்னுடைய குழப்பம்”
“கீர்த்திக்குத் தற்பெருமை அதிகம். சிறு வயதிலேயே வாளெடுத்து விட்டேன், வில் வளைத்து விட்டேன் என்று எப்போது பார்த்தாலும் கூறிக்கொண்டு வலம் வருவான். யார்தான் சிறு வயதிலேயே வாளெடுக்கவில்லை?” என்றார் கிருஷ்ணாராஜா.
“அரசர்கள் தம்பட்டம் அடித்துத் தம் விருதுகளைப் பறைசாற்றிக்கொள்வது வழக்கம்தானே?” என்று சீண்டினார் ராஜமாதா.
“எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளட்டும், அம்மா. சிறு வயதில் வாள் தூக்கினேன் என்பதெல்லாம் ஒரு பெருமையா? சொல்லிக் கொள்ள எதுவும் இல்லாதவர்கள்தாம் இதை எல்லாம் மெய்கீர்த்தியில் எழுதிவைப்பார்கள். அன்று ஒரு கோவிலுக்கு நிலம் தந்து வாஜபேயம் செய்த ஓர் அந்தணரை அதற்குப் பொறுப்பாக்கிச் சாசனம் எழுதினான். அதில், ‘என்னுடைய நற்பண்புகளால் அரசரை மகிழ்ச்சியடையச் செய்தேன், சிறு வயதிலேயே சஸ்திர ஞானமும், அவற்றைப் பிரயோகிக்கும் திறமையையும் பயின்றவன் நான்’ என்று எழுதினான். இதைத்தவிர வேறு இல்லை அதில். இருந்தால்தானே எழுதிக்கொள்வதற்கு? அரசர் ஆனபிறகு என்ன எழுதுவான்? காஞ்சிக்குப் படையெடுத்துச் சென்று நந்திவர்மனை இண்டு இடுக்கெல்லாம் தேடினேன் என்பானா?” – கொதித்தான் தந்திதுர்க்கன்.
“சரி. அதனால் என்ன? அடுத்து அரசனாக அவன்தானே அமரப் போகிறான்?”
“அவன்தான் உரிமையுள்ளவன். அவன்தான் அமரவும் போகிறான். அமர்ந்து விட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு அவன் அரசனாக முடியாது.”
“என்ன செய்யப் போகிறாய்?” என்றார் ராஜமாதா.
“வேறென்ன செய்வான்? தனக்கென்று ஓர் அரசை உருவாக்கிக் கொள்வான்” சிரித்தார் கிருஷ்ணராஜா.
“அதேதான். முடியாதா?” – தந்திதுர்க்கனின் கேள்வியில் இருக்கும் வேகத்தைப் பார்த்து ராஜமாதாவும் கிருஷ்ணராஜாவும் திடுக்கிட்டார்கள். இது விளையாட்டுப் பேச்சன்று என்று அவர்களுக்குப் புரிந்தது. வாய்வார்த்தை பேசிப் பழக்கமில்லாதவன் கட்கவலோகன் தந்திதுர்க்கன்.
“யோசித்துத்தான் பேசுகிறாயா?” பவகணாவின் குரலில் கவலை கலந்திருந்தது.
“ஆம். வழி நெடுக யோசித்துக் கொண்டேதான் வந்தேன். கீர்த்தியை அரசனாக என்னால்
ஒரு நிமிடமும் பொறுத்துக் கொள்ள முடியாது”
சில நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவியது. தந்திதுர்க்கனின் கூற்றில் உள்ளபடி
நடக்கவேண்டுமானால், அதற்காகக் கொடுக்க வேண்டிய விலை பெரிது. அதற்கு முன்னால், இதை
முற்றிலும் செய்ய முடியுமா என்று முதலில் யோசிக்க வேண்டும். சாளுக்கியப் பேரரசு
பெரியது. வடக்கில் குர்ஜரத்தில் இருந்து, தெற்கில் காஞ்சி வரை, மேற்கில் கொங்கணத்தில்
இருந்து, கிழக்கில் வேங்கி வரை பரவியிருக்கும் பெரிய சாம்ராஜ்ஜியம். கங்கர்கள்,
திரமிள வேந்தர்கள் என்று பல சக்திசாலிகளின் நட்பில் இருக்கும் அரசு. அதை
எதிர்க்கும் படைபலம் இருக்கிறதா என்று முதலில் யோசிக்க வேண்டும். அத்யந்த
இரகசியத்துடன் காய்களை நகர்த்த வேண்டும். யார் யார் துணை வருவார்கள், யார் யார்
எதிர்ப்பார்கள் என்று சரியாகக் கணிக்க வேண்டும். தனக்கு உதவுவார்கள் என்று தவறாகக்
கணித்துவிட்டு, ஒருவரிடம் விஷயத்தைச் சொன்னபின், அவர் எதிரியாக இருக்க முடிவு
செய்யலாம். பிறகு, இரகசியம் அம்பலம்தான். அதற்குப் பிறகு, நிலைமை அபாயமாகிவிடும்.
விஷயம் கசிந்தபிறகு, காலைப் பின்வைக்க முடியாது. வெள்ளத்தில் குதிப்பதுதான் ஒரே
வழி.
“சிந்திப்போம். முதலில் நீ நந்திவர்மனைச் சந்தித்ததைப் பற்றிச் சொல்” என்று நிசப்தத்தை உடைத்தார் ராஜமாதா.
“மூன்று மாதங்கள் கடினமாகத் தேடினோம். காஞ்சிக்குள்ளும், வெளியும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் தேடினோம். அங்குத் தென்பட்டான், இங்குத் தென்பட்டான் என்பார்கள். அவ்வப்போது, சுற்று வட்டாரத்துக்கு வந்தும் போகிறான் என்று நிதர்சனமாகத் தெரிந்தது. ஆனால், கைக்கு அகப்படவில்லை. மாயாவிதான். சில சமயங்களில் ஒரே வீட்டை மறுபடி மறுபடி தேடியிருக்கிறோம். கடைகள், கைவிடப்பட்ட கட்டிடங்கள், கோவில்கள், சத்திரங்கள், சந்தைகள் – அவனுடைய ஆதரவாளர்கள் பல இரகசிய இடங்களிலும் இல்லங்களிலும், அவனுக்கு உதவுவதற்காக நிறைய செல்வங்களை மறைத்து வைத்திருந்தார்கள். அவையெல்லாம் கிடைத்தன. கவர்ந்தும் கொண்டோம். ஆனால், அவன் கிடைக்கவில்லை. இப்போதுதான் அந்தப் பக்கம் போனான் என்பார்கள். சுற்றுவட்டாரக் கிராமங்களான வெஃகா, மெய்யூர், மணப்பாக்கம், பழையூர், ஊற்றுக்காடு, புண்ணியம், கோடுகொல்லி என்று பல ஊர்களில் தேடினோம். அவன் வந்து போன அறிகுறி தென்படும். ஆள் சிக்கமாட்டான்.
“ஒரு நாள், நான் அஷ்டபுஜப் பெருமாள் என்ற மூர்த்தமிருக்கும் கோவிலுக்கு வழிபடச் சென்றேன். காஞ்சியில்தான் எத்தனை கோவில்கள்! ஒவ்வொன்றிலும் உள்ள மூர்த்திகள், பரம அழகு. எல்லாரும் வரப்பிரஸாதிகள். ஸ்ரீமந் நாராயணனுக்கும் சரி, கைலாசபதிக்கும் சரி, இருவருக்குமே நிறைய கோவில்கள். உமாபதிக்காக ராஜசிம்மேஸ்வரம் என்ற அழகிய கோயில் ஒன்றுள்ளது, அம்மா! அதைத் தரிசித்தால் உங்களுக்கு மீண்டும் ஏலபுரிக்குத் திரும்பி வரவே மனம் வராது. சிற்றப்பா! நமக்கென்று ஒரு இராஜ்ஜியத்தை ஸ்தாபனம் செய்தபிறகு, நாமும் இதேபோல ஒரு கோவில் கட்ட வேண்டும். கைலாசநாதருக்கு.
“அஷ்டபுஜப் பெருமானைச் சேவித்துவிட்டு நான் வெளியே வரும்போது ஒரு வாலிபன் கோவிலுக்குள் நுழைவதைக் கண்டேன். அவனிடம் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது. உயரமாக இருந்தான். என் வயது இருக்கும். போர்வீரனைப் போலத் தோற்றமளித்தான். ஆனால், அணிந்திருந்த ஆடை ஒரு பாகவதனைப் போல இருந்தது. நான் பாட்டுக்கு வந்திருப்பேன். ஆனால், அவனுக்குச் சற்று தூரத்தில், இரண்டு சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் அவனைப் பின்தொடர்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்களின் கண்கள் அவனை விட்டு விலகவில்லை. அவன் யாரோ. ஆனாலும் இந்தக் கெட்டவர்களால், அவனுக்கு ஏதோ தீங்கு நிகழலாம், அதைத் தடுக்க வேண்டும் என்று தோன்றியது.
“பொதுவாகக் கோவில்களுக்குச் செல்லும் போது நான் போருடை அணிவதில்லை. ஆயுதங்களையும் வெளியே குதிரையோடு கட்டி வைத்துவிட்டுத்தான் வந்திருந்தேன். என்னுடன் வந்திருந்த எரயப்பாவும், சில தளபதிகளும் கோவிலுக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தார்கள். நான் எரயப்பாவிடம், உதவ ஆயத்தமாக இருக்கும்படிச் சைகை செய்துவிட்டு அந்த இளைஞனைப் பின்தொடர்ந்து கோயிலுக்கு உள்ளே மீண்டும் சென்றேன். பட்டர் அவனுக்குத் தரிசனம் செய்துவைத்த முறையில் இருந்து, அவருக்கு அவனை நன்றாகத் தெரிந்திருந்தது என்று தோன்றியது. தரிசனம் முடிந்து கோவில் கோபுரத்தைத் தாண்டி அவன் வெளியே வந்தபோது, பின்தொடர்ந்தவர்கள் அவனைத் தாக்குபவர்களாக இருந்தால், அப்போது தாக்கியிருக்க வேண்டும். அதுதான் சரியான சமயம். ஆனால், அவர்களோ அவனைத் தாக்காமல், அவன் பின்னாலேயே சென்றார்கள். இளைஞன் தன்னுடைய குதிரையை அவிழ்க்கும்போது அவர்களும் தங்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டு, அதன் மீது ஏறிக்கொண்டர்கள். அப்போதுதான் எனக்கு, அவர்கள் அவனைத் தாக்க வரவில்லை, பாதுகாப்புக்கு வந்திருக்கிறார்கள் என்று விளங்கியது.
“யார் இவன்? இவனுக்கு ஏன் இந்தப் பாதுகாப்பு? விசித்திரமாக இருந்ததால், விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், என் குதிரையை அவிழ்த்து, அதிலேறிக் கொண்டு நானும் பின்தொடர்ந்தேன். எரயப்பாவும் மற்றவர்களும் பின்னாலேயே சற்று இடைவெளி விட்டு என்னைத் தொடர்ந்தார்கள். பிரதான வீதிகளைத் தவிர்த்து, உள்பாதைகள் வழியாகவே, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காத வண்ணம் மிதமான வேகத்தில் சென்ற இளைஞனும் அவனது இரண்டு காவலர்களும், வடுகவழி மீது ஏறியதும், வேகம் எடுத்தார்கள். வடுகவழிச் சாலையில் பல குதிரைப் பிரயாணிகள் இருந்ததால், எங்களுக்கும், அவர்களுக்குத் தெரியாமல், அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல முடிந்தது.”
"இந்த வடுகவழிதான் துண்டக விஷயத்தையும் ஆந்திரத்தையும் இணைக்கும் பெருவழி அல்லவா?" – குறுக்கிட்டார் கிருஷ்ணராஜா.
"ஆம். சிற்றப்பா. முக்கியமான வழி. பாணர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வழி."
"பாணர்கள் தொல்லை இருக்காதா?"
"பொதுவாக இருப்பதில்லை. வணிகத்துக்கான பெருவழிகளில் சிரமங்களை ஏற்படுத்த எந்த அரசும் விரும்புவதில்லை. அதுவும் உஜ்ஜைனிப் பெருவழி போல பிரதான்யமாக விளங்கும் இந்தப் பெருவழி, பல காலமாகப் பாணர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. வடுகவழி மேற்கு, வடுகவழி கிழக்கு என்று இந்த வழியை வைத்துத்தான் அவர்கள் பிராந்தியங்களையே குறிப்பிட்டுக் குறிப்பிட்டு அதுவே வழக்கத்தில் வந்தும் விட்டது. சுங்கத் தீர்வை என்னும் பொன்முட்டை இடும் வாத்து, இந்த வழி. வண்டிகளைப் பரிசோதித்து விட்டுச் சுங்கத் தீர்வை பெற்றுக்கொண்டு விட்டு விடுவார்கள்.
“நாங்கள் பின்தொடர்ந்த மூன்று பேரும், கடிகாசலம் அருகே வந்தபோது, திடீரென பிரதான சாலையை விட்டு விலகிக் கரடு முரடான நிலப்பகுதிக்குள் புகுந்தார்கள். அருகே, கொற்றலையாறு என்று ஒரு நதி ஓடுகிறது. அதைக் கடந்தால், ஆற்றின் வடகரையில் அடர்ந்த இலந்தைக் காடுகள் உண்டு. எனக்கு இக்கட்டான நிலை இப்போது. நானும் வழியை விட்டு இறங்கினால், நாங்கள் பின்தொடர்வது அவர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால் எனக்கு, வேறு வழி தெரியவில்லை. நாங்கள் பின்தொடர்வது தெரிந்துதான் திக்கை மாற்றினார்கள் என்றும் தோன்றியது. நான், எரயப்பாவுக்கு விரைவாக வரும்படிச் சமிக்ஞை செய்துவிட்டு, வேகத்தை அதிகப்படுத்தினேன். பல்லவ நலம்விரும்பிகளான பாணர்களின் வசிப்பிடங்கள் அருகேதான் இருந்தன. நாங்கள் காஞ்சியிலிருந்து வெகு தொலைவுக்கு வந்து விட்டிருந்தோம். எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தில், தனியாக மாட்டிக்கொள்வதைப் போன்ற அபாயம் வேறு இல்லை. பிடித்தால், இப்போதுதான் அவர்களைப் பிடிக்கவேண்டும். இன்னும் கொஞ்சம் தாமதப் படுத்தினால், விஷயம் கையை விட்டுப் போய்விடும் என்றதால், நாங்கள் எல்லோரும் விரைவாகக் குதிரைகளைச் செலுத்தி அவர்களைப் பின்தொடர்ந்தோம். திடீரென்று பின்னால், இன்னும் சில குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது. எங்கள் நல்ல காலம், சாளுக்கிய வீரர்கள்தான் எங்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். எங்களை வழியில் பார்த்துவிட்டு அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்திருக்க வேண்டும். எங்களுக்கு ஆசுவாசம் ஏற்பட்டாலும், எனக்கு, இவனை மூன்றாம் பேருக்குத் தெரியாமல் விசாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மண் விழுந்துவிட்டதே என்ற ஏமாற்றம்.
“இளைஞனும், அவனுடைய காவலர்களும், பின்னால் ஓடிவரும் குதிரைகளின் சத்தத்தைக் கேட்டிருக்க வேண்டும். எங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் வேகத்தைக் குறைத்தனர். நானும் எரயப்பாவும் அவர்கள் நதியில் இறங்குவதற்கு முன்பே அவர்களைச் சூழ்ந்து கொண்டோம். இளைஞனின் காவலர்கள் வாட்களை உருவினாலும், அந்த இளைஞன் அவர்களை வாளாவிருக்கச் சொல்லிச் சைகை காட்டி அமர்த்திவிட்டான். நாங்கள் சுற்றிவளைத்து நின்று கொண்டு, அவர்களைக் குதிரையில் இருந்து இறக்கித் தரையில் அமரவைத்துக் கைகளைப் பின்னால் கட்டினோம். நான் அந்த இளைஞனின் அருகில் சென்று, "நீ யார்?" என்று கேட்டேன்.
“என்னை அவன் ஏறெடுத்துப் பார்த்தான். என்ன ஓர் ஆழமான பார்வை, சிற்றப்பா! அந்தச் சிறு பொழுது நேரத்தில், அவன் கண்கள் பேசியது மிக அதிகம். என் வயதுதான் அவனுக்கு இருக்கும். ஆனால், பெருத்த அனுபவத்தைப் பறைசாற்றும் பார்வை, அவனுடையது. விவேகமும், வீரமும் சேர்ந்த கண்கள், வாழ்க்கையின் பொருளைப் புரிந்துகொண்ட கண்கள். மரணத்தைத் தைரியமாகச் சந்திப்பவன் என்று பார்த்தாலே தெரிந்தது. ஆனால், வீணாகச் சண்டையிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாதவன் என்றும் புரிந்துகொண்டேன்.
“’தனித்துப் பேசலாமா?’ என்றான்.
“நான் சரி என்று ஏற்றுக்கொண்டு, தரையில் கட்டுற்று அமர்ந்திருந்த இருவரையும் தரையை விட்டு எழாமல் கண்காணிக்கும்படி எரயப்பாவிடம் பணித்துவிட்டு, அந்த இளைஞனை மட்டும் நடத்தி அழைத்துக்கொண்டு ஒரு பாறைக்குப் பின்னே சென்றேன். அவன் எதிர்த்தால், அவனை வகிர, என் வாள் சித்தமாகவே இருந்தது. ஆனால், அதற்கு வேலை இருக்காது என்று என் உள்ளுணர்வு முன்னமேயே ஊகித்து விட்டிருந்தாலும், அவன் சொன்னது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"’நீயும் உன் அரசனும் தேடிக்கொண்டிருக்கும் நந்திவர்மன் நான்தான்’ என்றான்.
“எனக்கு ஒரு நிமிடம் பேச்சு எழவில்லை. விக்கிரமாதித்தியர் காலத்தில் இருந்து, சாளுக்கியப் பேரரசே முனைப்புடன் தேடிக்கொண்டிருக்கும் நந்திவர்மன் இவன்தானா? கீர்த்திவர்மன் நினைவிலும் கனவிலும் தோய்ந்து இருக்கும் நந்திவர்மன் என்ற பிம்பம், இதோ இரத்தமும் சதையுமாக, என் முன்னே நிராயுதபாணியாக, எங்கோ ஓர் காட்டில், சக்தி இழந்து, வலையில் அகப்பட்ட சிங்கமாக என் முன்னால் கிடந்தது. சாளுக்கிய அரச சபையில் இவனை நடத்திக் கொண்டுபோனால், இவனைப் பிடித்த எனக்கு எப்படிப்பட்ட பெருமை கிடைக்கும் என்று மனம் அந்தக் காட்சியை உருவகித்துப் புளகாங்கிதம் அடைந்தாலும், ஏதோ ஓர் உணர்வு, இதெல்லாம் ஒரு மகிழ்ச்சியா என்று இகழ்வதும் எனக்குக் கேட்டது.
“என்னுள்ளே நடந்த இந்தப் போராட்டத்தால் நான் நிலைகுலைந்து இருப்பதை அவன் கணித்து விட்டான். என்னைப் பார்த்து அழகாகச் சிரித்தான்.
"’என்ன செய்யப் போகிறாய்? என்னை அழைத்துச் சென்று உன் முட்டாள் ராஜாவிடம் காட்டி வெகுமதியைப் பெறப் போகிறாயா? நீ வெறும் போர்வீரனோ, படைத்தளபதியோ இல்லை என்று உன்னைப் பார்த்தாலே தெரிகிறது. சுயமாகச் சிந்திக்கும் திறமையும், தனித்துவமாகப் பொறுப்பை நிர்வகிக்கும் சிற்றரசன் என்று நினைக்கிறேன். சரிதானே?’ என்றான்.
"’நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை, உன்னை விடுவிக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?’ என்றேன்.
"’என் நிலைமையைப் பார்த்தால், எனக்கென்று ஒரு விருப்பம் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா, என்ன? நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பது அல்லவா முக்கியம்? என்ன வேண்டுமானாலும் செய். ஆனால், ஒரு வீணனான, வெற்று அரசனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை விடப் பரந்த நோக்குடன் சிந்தித்துச் செய்’ என்று சீண்டினான்.
"’என்னுடைய அரசனை வீணானவன் என்று சொல்ல உனக்கு என்ன தைரியம்?’ என்று கோபத்தைக் காட்டினேன்.
"’நீ நினைக்காததையா நான் சொல்லிவிட்டேன்? தந்தையிடம் நற்பெயரைப் பெற, உன் அரசன் துடிப்பதில் இருந்தே தெரியவில்லையா, அவன் எந்த அளவுக்குத் தன் மீது சுய மதிப்பு வைத்திருக்கிறான் என்று? ஏற்கனவே, வாதாபியின் கட்டுப்பாட்டிலே இருக்கும் நகரம் காஞ்சி. அரசன் கிடையாது, தலைமறைவு. நாட்டின் வளத்தை எல்லாம் திறையாகச் சுரண்டி எடுத்துக் கொள்கிறீர்கள். இப்படி இருக்கும்போது, என்னைக் கண்டு பிடிப்பதற்காக ஒரு படையெடுப்பா? இதற்கு சத்யாஸ்ரயன் அனுமதித்திருக்கிறான் என்றால், அவன் எப்படியாவது தன்னுடைய பிள்ளைக்குச் சுதந்திரமாகச் செயல்படக் கிடைத்த வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்வோம், அடுத்து அரியணையை ஆளப்போகிறவன் என்று நினைத்திருக்கிறான் என்றுதானே பொருள்? இப்படி அரியணைப் பொறுப்பை ஏற்கச் சித்தமாகாதவன் கீழே, அவனைச் சந்தோஷப் படுத்தி, வெகுமதிகள் பெற்று உன் நிலையை உயர்த்திக் கொள்ளப்போகிறாயா?’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தான்.
“எனக்கோ பரம ஆச்சரியம்! தலைமறைவாக இருந்தாலும், அரசியல் நிலைமையை எப்படித் துல்லியமாகக் கணக்கிட்டு இருக்கிறான்! அவன் பேசப் பேச, அவனைக் கீர்த்திவர்மனிடம் ஒப்படைக்கக் கூடாது என்ற எண்ணம் என்மனத்தில் வேரூன்றிக் கொண்டே வந்தது.”
“இவ்வளவு பேருக்கு முன்னால் ஒரு முக்கியமாகத் தோன்றிய எதிரியைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறாய். நீ விரட்டிக் கொண்டு போவதைப் பார்த்துவிட்டுப் படைவீரர்கள் பின்னால் வந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் கண்களில் இந்தத் துரத்தல் பட்டிருக்கிறதோ? எரயப்பனை நம்பலாம். அந்தத் தளபதிகள் யார்? பின்னால் வந்தவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும். எச்சரிக்கையோடு இருக்கவேண்டிய சூழ்நிலை ஆயிற்றே. என்ன செய்தாய்?” என்று கரிசனம் ஒலிக்கக் கேட்டார் ராஜமாதா.
“ஆமாம். அச்சம் தோன்றியது உண்மைதான். நந்திவர்மனை மேலே விசாரிப்பதற்கு முன்னால், என் ஆட்களைச் சமாளித்து, எதையாவது சொல்லி அங்கிருந்து அனுப்பி விடவேண்டும் என்று முடிவு செய்தேன். எரயப்பனை மட்டும் தனியே அழைத்து விஷயத்தைச் சொன்னதும், அவனுடைய முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே” சிரித்தான் தந்திதுர்க்கன்.
“பெரிய வீரன்தான் எரயப்பன். ஆனால், நான் நந்திவர்மனைக் கீர்த்திவர்மனிடம் ஒப்படைப்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொன்னதும் அவனுக்குக் கை உதற ஆரம்பித்து விட்டது. ராஜத்துரோகச் சிந்தனையே அவனுக்குப் புதிது. பின்னால் வந்த படைவீரர்கள் யார் என்று கேட்டு வா என்றேன். கோவிந்தராஜனின் படைவீரர்கள் என்று சொன்னதும் எனக்குப் பெருத்த நிம்மதி.”
“எந்தக் கோவிந்தராஜன்? ஆதித்தியவாடா சிவராஜன் மகனா?” என்று கேட்டார் கிருஷ்ணராஜா.
“ஆமாம். அவனேதான்.”
“அவனுடைய மனைவி, இளவரசி மகனாண்டு கொண்டிருந்தாளே, அவளை விட்டுவிட்டா காஞ்சிக்கு வந்தான்?”
“அன்னைக்கு எல்லா விஷயமும் தெரிகிறது பாருங்கள், சிற்றப்பா! உங்கள் ஒற்றர்களை விட ராஜமாதாவின் ஒற்றர்கள் கைதேர்ந்தவர்கள். பெண்டிரின் சூலும் அவர்கள் கண்ணுக்குத் தப்புவதில்லை”
“ஆமாம். ஒற்றர்கள் ஒவ்வொரு வயிறாகப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு எனக்குச் செய்தி அனுப்புகிறார்கள். இந்த ஆடவர்கள் கத்தியைச் சுழற்றுவதிலும், கள்ளருந்துவதிலும், கணிகையரை ரசிப்பதிலும் நேரத்தைச் செலவழிப்பார்களே தவிரக் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்றெல்லாம் கவனிக்க நேரமிருக்கிறதா, என்ன? சென்ற சித்திரைக்கு, புண்டரீகக் காந்தாரர் ஈட்டத்துக்கு ஷத்ருஞ்சய மலைக்குப் போய்விட்டு வரும்வழியில், சிவராஜன் மனைவியோடு வந்து சிலநாட்கள் தங்கினானே, அப்போது சொல்லவில்லை? ஏதேனும் நினைவிருந்தால்தானே?”
“ஐயோ! அம்மா! கோவித்துக்கொள்ளாதீர்கள்! நான் சொன்னது தவறுதான்” சிரித்துக்கொண்டே கையைக் கூப்பினான் தந்திதுர்க்கன். “விநயாவதி, ஏற்கனவே மூன்றாவது சீமந்தோன்னயனத்துக்கு வாதாபிக்கு வந்திருந்ததால், தானும் காஞ்சிக்கு வருகிறேன் என்று கூடவே வந்துவிட்டாள். காஞ்சியில் இருக்கும்போது குழந்தையும் பிறந்துவிட்டது. பிரஸுதியில் கிஞ்சித்துச் சிக்கல். ஆனால், தாதியரும், செவிலியரும், மருத்துவர்களும் எல்லோரும் இருந்ததால், எல்லாம் நல்லபடியாக முடிந்தது.”
“ஆணா பெண்ணா?”
“பெண்தான்.”
“அடடடா! நிமித்தங்கள்படி, பெயரன்தான் என்று நம்பிக்கையோடு இருந்தாளே, சத்யவதி?”
“கோவிந்தனுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். இரண்டு நாள் விநயாவதியைப் போய்க்கூடப் பார்க்கவில்லை அவன்”
“அவள் என்ன செய்வாள், பாவம்? அடுத்ததது ஆணாகப் பிறக்க அந்தப் பரமேஸ்வரன் அருளட்டும்.”
“ரிஷபதேவர் என்று சொல்லுங்கள்” மீண்டும் சிரித்தான் தந்திதுர்க்கன். காஞ்சியில் பிறந்ததால், குழந்தைக்குக் காஞ்சியப்பை என்று நாமகரணமாகி இருக்கிறது.”
“சரி, நீ நந்திவர்மன் கதையைச் சொல்” தூண்டினார் கிருஷ்ணராஜா.
“கோவிந்தராஜனின் வீரர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு, ஏதோ நடக்கிறது, உதவிக்குச் செல்லவேண்டும் என்று பின்னாலேயே வந்திருக்கிறார்கள். அவர்களைத் திரும்பிப் போகச் சொல்லிவிடு. நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. ஏற்கனவே வெகு தூரம் வந்து விட்டார்கள், என்று எரயப்பாவிடம் சொன்னேன். சிறை பிடித்தவனைப் பற்றி என்னவென்று சொல்வது என்று கேட்டான். நந்திவர்மனுக்கு உதவி செய்பவன் போலிருக்கிறது. இவனைப் பிடித்து விசாரித்தால் ஏதாவது தெரிய வரலாம். நீங்கள் திரும்பிப் போய்விடுங்கள் என்று சொல்லிவிடு என்றேன். அப்படியே சொல்லிவிட, அவர்களும் திரும்பிப் போய்விட்டார்கள்.”
“நந்திவர்மனிடம் போய், எங்குச் சென்று பேசுவது என்று கேட்டேன்.”
“ஆற்றைக் கடந்தால், சில காத தூரத்தில், கடிகாசலத்துக்கு வடக்கே, கார்வேட்டி நகரம் போகும் வழியில் சிறுமலைகள் இருப்பதாகவும், அவற்றின் அடிவாரத்தில் உள்ள கனகதுர்காபுரம் என்ற கிராமத்துக்குச் செல்லலாம் என்றான். அவனுடைய பாதுகாவலர்களை என்ன செய்வது என்று கேட்டேன். எரயப்பா, அவர்களைத் தளபதிகளோடு அனுப்பிவிடலாம் என்றான். எதிரிகளைப் பாசறைக்கு அனுப்பினால், சிறைப்படுத்தித்தான் அனுப்பவேண்டும். அங்கு அவர்களைச் சாளுக்கிய வீரர்கள் எப்படி நடத்துவார்கள் என்று தெரியாது. இவர்கள் சித்திரவதை தாங்காமல் உளறிவிட்டால், நிலைமை மோசமாகி விடும் என்று தோன்றியது. தளபதிகளை வைத்துக்கொண்டு நந்திவர்மனோடு பேச எனக்கு உடன்பாடில்லை. எரயப்பன் ஒருவனுக்குச் சொன்னதே அதிகம். தேவையில்லாமல், தளபதிகளையும் இந்த அபாயமான இரகசியத்தின் வீச்சுக்கு உட்படுத்த விரும்பவில்லை. பாதுகாவலர்களை விடுவிக்கச் சொல்லிவிட்டுத் தளபதிகளோடு எரயப்பனைப் பாசறைக்குத் திரும்பிவிடக் கட்டளை இட்டேன். நான் சுற்றுப்பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வருகிறேன், பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டேன்.”
“தனியாக நந்திவர்மனுடன் பயணிக்கும் அளவுக்கு, உனக்கு அவன் மேல் நம்பிக்கை வந்துவிட்டதா? எரயப்ப தனஞ்சயன் எப்படி ஒப்புக்கொண்டான்? அரசனைப் பரம்பரை எதிரியிடம் விட்டுவிட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்திருப்பானே” கிருஷ்ணராஜா சிரித்தார்.
பவகணாவும் புன்முறுவல் பூக்கத் தந்தியும் சிரித்து விட்டான்.
“அவனைச் சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. வருணார்யனும் ப்ரவரசேனனும் திரும்பிப் போகச் சித்தமாகி விட்டார்கள்.”
“அவர்களுக்கு உன் வலையில் சிக்கிய மீன், சாதாரண மீன் இல்லை திமிங்கிலகிலம் என்று தெரியாதே. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீ எப்படித் தனியாகப் போகத் துணிந்தாய்? அந்தப் பாதுகாவலர்களை வேறு விடுவித்துவிட்டாய். ஆற்றைக் கடந்தால் எதிரிகள் உலவும் பகுதி. வனாந்தரம் என்கிறாய். தனியாகச் சென்று மாட்டிக்கொள்ளும் அளவுக்கு எப்படித் துணிந்தாய்?” ஆச்சரியப்பட்டார் கிருஷ்ணராஜா.
“எனக்கே தெரியவில்லை. இப்போது மூன்றாம் மனிதனாகச் சிந்தித்துப் பார்த்தால், எவ்வளவு அபாயகரமான செயல் என்று தெரிகிறது. ஆனால், அந்தச் சமயத்தில், எனக்கு எந்த அச்சமும் தோன்றவில்லை. நந்திவர்மனின் பேச்சில் இருந்த தெளிவும், அவன் முக லக்ஷணமும், அவன் சொல்வதுதான் சரி என்று எனக்குத் தோன்றவைத்து விட்டது. அதற்குப் பிறகு நடந்தவற்றைப் பார்க்கும்போது, அப்படித் தோன்றியதுதான் சரியென்று ஆகிவிட்டதே! அவனோடு இருந்த அந்தச் சமயங்களில், ஒரு பேரரசுக்கு அடங்கிய சிற்றரசனாக இருப்பது வேறு, ஒரு சுதந்திரமான நாட்டின் அரசனாக இருப்பது வேறு என்ற ஒரு பெரிய படிப்பினையைக் கற்றுக் கொண்டேன். நமக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டும். அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி. நமக்கென்று ஒரு சேனை, நமக்கென்று ஒரு நிலம், நமக்கென்று ஒரு கோசம், நமக்கென்று ஒரு சட்ட திட்டம், நமக்கென்று ஒரு கொள்கை – இனி இன்னொரு அரசுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில்லை.” தந்தி துர்க்கனின் குரல் உயர்ந்தது. தாம் பார்த்து வளர்ந்த இளைஞனின் கண்களில் வீசிய அந்தக் கனவு ஒளி, கிருஷ்ணராஜாவும், பவகணாவும் இதுவரை பாராதது. வியப்போடு தந்தி பேசுவதை, இமைப்பதும் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர் இருவரும்.
“அவன் சொன்ன கிராமத்திற்குப் போய்ச் சேரும்வரை எந்தப் பேச்சுமில்லை. நான் விடுவித்த பாதுகாவலர்கள் சிறிது தூரம் சென்றதும், எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்கள். முன்னே அந்தக் காவலர்கள், நடுவில் நந்திவர்மன், நான் பின்னால். அவனுடைய முதுகையே கவனித்துக் கொண்டு ஏதாவது, கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டாலும், குறுவாளை வீசிவிடச் சித்தமாக இருந்தேன். சிறிய கிராமம். அவரவர்கள் தத்தம் வேலையைக் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிறு குளத்துக்கருகே சிரம பரிகாரம் செய்து கொண்டு உணவு அருந்தினோம். அரசன் என்றோ, ஒரு புதியவன் வந்திருக்கிறான் என்றோ ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. அவ்வளவு இயல்பாக இருந்தார்கள். எதனால், நந்திவர்மனை இத்தனை ஆண்டுகள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதற்குக் காரணம் அப்போதுதான் தெரிந்தது. மக்களோடு மக்களாகச் சாதாரணன் போல ஓர் அரசன் வளைய வந்தால், எங்கிருந்தோ வந்த எதிரிக்கு என்ன புரியும்?”
“ஆச்சரியமான விஷயம்தான். கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்”
“ஆம் சிற்றப்பா. என்னை மிகவும் மாற்றிய சந்திப்பு அது. அதை விட ஆச்சரியமான விஷயம், நந்திவர்மனின் கதை. அவன் பரமேஸ்வரவர்மனின் நேரடிச் சந்ததி இல்லை என்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுக்கு இருந்த மக்களின் ஆதரவும் அன்பும், நேரடியான சந்ததியில் வந்திருந்தும் அரசன் சித்திரமாயனுக்கு இல்லை.”
“இது பெருவியப்பாக இருக்கிறதே! தெரிந்த ஒருவனை விட, யாருக்குமே தெரியாத ஒருவனை அரியணைக்குப் பாத்திரராக வரிக்க எப்படி ஓர் அபிப்பிராயம் உருவாயிற்று? தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அவனை யாருக்குமே தெரியாதா?”
“வேறு கிளையில் ஜனித்தவன் என்றார்களே?”
“வேறு கிளையில் ஜனித்தவன்தான். ஆனால், அந்தக் கிளையில் வந்தவர்களைக் காஞ்சி பார்த்ததே கிடையாது. முன் காலத்திலேயே அந்தச் சந்ததியினர் காஞ்சிபுரத்தை விட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள். இப்போது மீண்டும் தேடிப் பிடித்துக் கூட்டி வந்து அரியணை ஏற்றி இருக்கிறார்கள்”
“புதியவன் அவன். ஏதோ மக்களுக்குப் பிடித்துவிட்டது. இளவரசன் சித்திரமாயன் என்ன பாவம் செய்தான்?”
“இது என்ன விந்தை! விவரமாகச் சொல்லப்பா. ஒன்றும் புரியவில்லை.” என்றார் ராஜமாதா.
“பல்லவ வமிசத்தின் ராஜா நரசிம்மவர்மனை நமக்கெல்லாம் தெரியும். புலகேசி மகாராஜாவை வஞ்சம் தீர்க்க, வாதாபியை எரியவைத்தவன். இந்த நரசிம்ஹவர்மனுக்குச் சிம்மவர்மன் என்று ஒரு முன்னோடி. அவனுக்குச் சிம்மவிஷ்ணு, பீமவர்மன் என்று இரண்டு மகன்கள். சிம்மவிஷ்ணு மூத்தவன் ஆனதால், அவன்தான் பட்டத்துக்கு வந்தான். காவேரி பாலி பாயும் பிரதேசத்தை ஆண்டான் என்கிறார்கள். பீமவர்மன், இங்கே கர்ணாடத்திலோ, ஸ்ரீபருவதம் அருகிலோ தங்கிவிட்டதாகக் கேள்வி. சிலர், கிழக்கே கடல் கடந்த தீவுக்கரசன் என்கிறார்கள். சிம்மவிஷ்ணுவுக்கு அடுத்தடுத்து அரியணை ஏறியவர்கள் சிம்மவிஷ்ணுவின் சந்ததியைச் சேர்ந்தவர்களே. நரசிம்மவர்மன் அந்தச் சந்ததியில் வந்தவன்தான். இவனுடைய பெயரன்தான் அவனி புகழும் காஞ்சி ராஜசிம்ஹேஸ்வரத்தைக் கட்டிய ராஜசிம்ஹன். இவனுடைய மகன் பரமேஸ்வரவர்மனைத்தான் நம் சாளுக்கிய அரசர், விக்கிரமாதித்தியர் இளவரசராக இருக்கும்போதே சென்று தாக்கித் திறை கொண்டுவந்தார். இந்த வெற்றிக்கு அப்போதுதான் அரசணை ஏறிய கங்க அரசர், கொங்கணிவர்மன் ஸ்ரீபுருஷர் மிகவும் துணையாக இருந்தார் அல்லவா? அவரை எதிர்க்கத் துணிந்தான் இந்தப் பரமேஸ்வரவர்மன்.
“அந்தப் போரில் இந்தப் பரமேஸ்வரன் ஸ்ரீபுருஷன் கையால் இறந்துபட்டான். அரசரே கொலையுண்டதும், காஞ்சி விக்கித்தது. ராஜமாதா பாண்டியனின் உதவியை வேண்ட, பாண்டியன் உதவிக்கு வந்தான். மூன்று திரமிள அரசர்களில் வல்லவன் பாண்டியன்தான். வில்லவன், அவனுக்கு அடங்கியவன். சோழனோ உறவினன். இப்படிப் பாண்டியன் தலைமையில், திரமிள அரசர்கள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, காஞ்சிக்கு அரசனை நியமிக்க முயன்றார்கள்.”
“இரு இரு, பல்லவ ராஜமாதா, பாண்டியனை ஏன் துணைக்குக் கூப்பிட்டாள்?” பவகணா இடைமறித்தார்.
“அவளுடைய பெண் வயிற்றுப் பேரன்தான் பாண்டியன்” என்று பதிலளித்தார் கிருஷ்ணராஜா.
“சோழன் எப்படி உறவு?”
“பாண்டியன் மானாபரணின் தமக்கையின் கணவன்.”
“பெருஞ்சிக்கலான நிலைமை. சரி, விக்கிரமாதித்தியர் இதற்கு எப்படி ஒப்புக் கொண்டார்?”
“அவருக்கும் வேறு வழி கிடையாது. உடன்பட்டுத்தான் ஆகவேண்டிய நிலைமை. பாண்டியனும், பொத்தப்பிச் சோழனும் வடக்குத் தெற்காக அணி வகுத்து நின்றால், அந்த விட்டத்தைத் ஊடுருவிப் போய், அவரால் காஞ்சியைக் கைப்பற்றிவிட முடிந்திருக்குமா என்ன? அப்படி ஒருவேளை சேதத்தைப் பொருட்படுத்தாமல், அவர் எதிர்த்து வெற்றி பெற்றிருந்தாலும், இரணரஸிகபுரத்தில் இருந்துகொண்டு, சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் காஞ்சியை நிர்வகிக்க முடிந்திருக்குமா? காஞ்சி செழிக்கக் கூடாது, அவருக்கு அதுபோதும். அதற்கான வழியில் கொஞ்சம் திறையும், சில படைபலமும் கனிந்தால் விசேஷம்தானே. மாமன் பரமேஸ்வரவர்மனின் மகன் சித்திரமாயனைத்தான் அரசுக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்று பாண்டியன் விருப்பப் பட்டுவிட்டான். பாட்டி லோகமாதேவிக்கு வேறு வாக்குக் கொடுத்திருக்கிறானே.”
“மானாபரணன் பெருவீரன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன், மாமன் மகனுக்குத் துணையாக நிற்கவேண்டும் என்று முடிவெடுத்தபின், இந்த நந்திவர்மனை யார் இடையில் நுழைத்தது?”
“அதெல்லாம் சகக்கிழத்திகள் இடையே நடந்த போராட்டம்.” சிரித்தான் தந்திதுர்க்கன். “ரங்கபதாகைதான் வென்றாள். அதற்கு அனுகூலம் மதுரையே அளித்தது. ராஜசிம்மப் பாண்டியன், அப்போதுதான் அரியணை ஏறியிருந்தான். பல்லவ வம்ச இரத்தம், மச்ச த்வஜத்தை ஏந்தக்கூடாது என்று சில எதிர்ப்புக் குரல்களால், அவனுக்கும் சில சிக்கல்கள். அவற்றையெல்லாம் சமனப் படுத்துவதற்கு இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன அவனுக்கு. நம் அரசருக்குப் போதாத காலம், அவர் சிம்மாசனத்தில் அமர்வதற்கும் அந்தக் காலம் ஆயிற்று. அரியணையில் அமர்ந்ததும் அமராததுமாகத்தான் காஞ்சியைத் தாக்கப் புறப்பட்டார். ஆனால், அதற்குள் பாண்டியன் சுதாரித்துக் கொண்டுவிட்டான்.
ஸ்ரீபுருஷன் மட்டும் இடையில் நுழைந்து சமரசம் செய்து வைத்திருக்காவிட்டால், சாளுக்கியப் பேரரசை அன்றே முடித்திருப்பான் என்று எனக்குப் படுகிறது. மஹாராஜாவின் அந்தப் படையெடுப்பின் போதே அரியணையில் அமர்த்தப்பட்டுவிட்டவன்தானே சித்திரமாயன்? பத்து வருடங்களாக அவன் அரசுதான் நடக்கிறது.
“ஆனால், காஞ்சிப் பிரமுகர்களுக்கும், வணிகர்களுக்கும், பண்டிதர்களுக்கும் மற்றக் குறுநில மன்னர்களான முத்தரையர்கள் போன்றவர்களுக்கும், மக்களுக்கும் அன்றே இதில் உடன்பாடு இருந்திருக்கவில்லை. அப்படி ஆக்கிவைத்து விட்டாள் ரங்கபதாகை.”
“ஓ! சாதுரியமானவள்தான் சகக்கிழத்தி!” கண்ணை விரித்த ராஜமாதா கேட்டார், “பரமேஸ்வரனுக்குத் தம்பிகள் தமையன்மார்கள் யாரும் இல்லையா?”
“மகேந்திரன் என்று ஒரு தமையன் இருந்தான். அவன்தான் யுவராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டிருந்தவன். இரணரஸிகபுரத்தை நிர்மாணித்த ஈரம் கூடக் கலையாத நிலையில், ஒரு பல்லவப் படையெடுப்பு நடந்ததே, நினைவிருக்கிறதா? தந்தை கூடத் தன்னுடைய படையுடன் செல்லத் தயாராக இருந்தாரே. கிட்டத்தட்ட நாம் தோற்றோம் என்று சொல்லலாம். அந்தப் படையெடுப்பை நடத்தியவன் இந்த மகேந்திரன்தான். அசகாய சூரன். ஆனால், ராஜலக்ஷ்மி வாதாபியை விட்டுப் போக விருப்பப்படவில்லை. அந்தப் போரில் மகேந்திரன் பல்லவன் காயப்பட்டான். இதனால் உத்வேகத்துடன், நாம் தாக்க, பல்லவப்படைகள் பின்வாங்கி விட்டன. பல்லவ இளவரசன் காஞ்சி போவதற்குள் இறந்துவிட்டான். தந்தை ராஜசிம்ஹனுக்கு முன்னால், பிணமாகப் போர்முனையில் இருந்து, அவனைத் துணியில் சுருட்டி எடுத்துக் கொண்டு வந்தார்கள் என்றான் நந்திவர்மன்.”
“ஹரீ!” என்றார் ராஜமாதா. “நந்திவர்மனை எப்படிக் கண்டுபிடித்தாள், ரங்கபதாகை?”
“முக்கியப் பிரகிருதிகளும், கடிகையர்களும், நிர்வாகிகளும் வம்சாவழியில் வந்தவர்களை மூன்று நான்கு தலைமுறைகளாகப் பின்னால் போய் அலசியிருக்கிறார்கள். முடிவில், ஹிரண்யவர்மர் என்று ஒருவர் அரசராக எங்கோ, வடகிழக்குப் பகுதியில் ராஜ்யபரிபாலனம் செய்துவருகிறார் என்று கண்டு பிடித்தார்கள். இந்த ஹிரண்யவர்மர், நான் முன்பு சொன்னேன் இல்லையா, பீமவர்மன் என்று, அவருடைய சந்ததியில் வந்தவராம். இப்படி அரச பரம்பரையில், வந்த ஒரு சகோதரனைத் தேடுவதற்கு, அவர்களுக்குச் சிம்ஹவர்மனின் தலைமுறை வரை போகவேண்டி இருந்தது.”
“ஒரு விஷயம் புரியவில்லை. மகேந்திரன் யுவராஜா இறந்தான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை, சரியா?”
“ஆமாம்”
“பரமேஸ்வரனுக்கு இருக்கும் ஒரே ஒரு மகன்தான் இந்தச் சித்திரமாயனா?”
“ஆமாம்”
“வம்சத்தில் வந்தவன் இருக்க, வேறு எங்கோ ஆறு தலைமுறைக்கு முன்னால் போய்த் தேடுவானேன்? பாண்டியன் வேறு உதவிசெய்யச் சித்தமாக இருக்கிறான். சிக்கலே இல்லையே? ஏன் ரங்கபதாகைக்கு இதில் விரோதம்? அவளுக்கும் புதல்வன் இல்லை என்று ஊகிக்க முடிகிறது.”
விஷயத்தை நன்கு அறிந்திருந்த கிருஷ்ணராஜா சிரித்தார்.
“என்ன சிரிக்கிறீர் மைத்துனரே?”
“ஓராண் வழிதான் என்றாலும், பெண் வழியும் முக்கியமாக அல்லவா இருக்க வேண்டியிருக்கிறது” என்றார்.
“ஓ! சித்திரமாயனின் தாய் ராஜபரம்பரையைச் சேர்ந்தவள் அல்லளா!.”
“ஆமாம். சித்திரமாயன் தாய் லோகமாதித்தியைக்கும், அவள் பேரன் பாண்டியனுக்கும் இது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், ரங்கபதாகைக்கு ஒப்புதல் இல்லை” – தந்திதுர்க்கன்.
“அவளுக்கு என்ன ஆக்ஷேபம்?”
“பெண்களின் மனத்தில் என்ன இருக்கிறது என்று யாரால் கண்டுபிடிக்க முடியும்?”
மகனை முறைத்தாள் ராஜமாதா. கையைக் குவித்து, “மன்னித்துவிடுங்கள் அம்மா, எல்லோரும் உங்களை மாதிரி இருப்பார்களா?” சிரித்தான்.
“இந்த ஆண்களுக்கு எப்போதும் புத்தி ஒரே வழியில்தான் போகும் போலிருக்கிறது. விஷயத்துக்கு வா”, பவகணாவுக்கு மகன் பேச்சு கசந்தது என்பது, குரலில் தெரிந்தது.
தந்திதுர்க்கன் விளையாட்டுப் பேச்சை மாற்றிக்கொண்டு, அடக்கி வாசித்தான். “சரியான காரணம் தெரியவில்லை. என்னவோ அவள் மனத்தில் ராஜா பரமேஸ்வரனின் மனைவி அரச வம்சத்தினள் அல்லள் என்பதால், சித்திரமாயன் வேண்டாம் என்று பட்டிருக்கிறது. எந்த ஜோதிடர் என்ன சொன்னோரோ? ரங்கபதாகை சித்திரமாயனின் தாய், லோகமாதேவி போல அல்லள். வெகு புத்திசாலி. ஆணாகப் பிறந்திருந்தால், அரியணையிலேயே அமர்ந்திருப்பாள். அவளுக்குச் சித்திரமாயன் மீது வெறுப்பு இருந்தது போலவும் இல்லை.
“இந்தச் சாளுக்கியர்களுக்கும், பல்லவர்களுக்கும் இடைய பகைமை, பிராகிருத வைரிமையாகப் பாராட்டப்படுவது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ? நல்ல வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. புதுச்சுவடி எழுதவேண்டுமென்று பார்த்திருக்கலாம். வெறும் குல பரிசுத்தரான அரசர் வேண்டாம், உபயகுலப் பரிசுத்தர் வேண்டுமென்று, தாய்வழியிலும் அரச இரத்தத்தைத் தேடினாள். ராணியின் சாதுரியம், தன்னுடைய விருப்பத்தை மக்களுடைய விருப்பமாக மாற்றிவிட்டாள். மக்களுக்குள் உடன்பாடின்மை என்ற விதையை விதைத்து, அவர்களுக்குப் பின்னால் உந்துசக்தியாக இருந்து, வமசத்தேடலைத் துவக்கிவைத்தாள். மூலப் பிரகிருதி இவள்தான். எல்லோரும் சேர்ந்து, அரியணையில் அமர்த்தத் தகுதியான யாராவது ஒருவர், உபயகுலப் பரிசுத்தராக இருக்கிறாரா என்று தேடினார்கள். ‘சுத்த மாத்ரன்வவாயோ லக்ஷண்யோ ரௌஹிணிஜ’ என்றுதான் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டான் நந்திவர்மன்.”
“எத்தனை தலைமுறை என்று சொன்னாய்?” என்று கேட்டார் பவகணா.
“ஆறு! இறந்த பரமேஸ்வரனுக்கு ஆறாவது மூதாதை சிம்ஹவர்மன். நந்திவர்மனுக்கு ஆறாவது மூதாதையும் அதே சிம்ஹவர்மன்.”
“ம்ம் .. சுவாரசியமான கதைதான். அந்த ஹிரண்யவர்மனின் ஒரே பிள்ளையா நந்திவர்மன்?”
“இல்லை. ஆனால், காஞ்சி நகரப் பிரமுகர்களுக்கு, நந்திவர்மன் இருப்பதெல்லாம் தெரியாது. அவர்கள் ஹிரண்யவர்மரைத்தான் அரசராக அழைக்கலாம் என்று தீர்மானித்து, அந்தணர்கள், ஆகாமிகர்கள், தனிகர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், நிமித்திகர்கள் எல்லோரும் இருந்த ஒரு பெரிய குழுவை அனுப்பினார்கள். நதிகள், மலைகள், வனாந்தரங்கள், நீர்நிலைகள் எல்லாம் தாண்டி எங்கேயோ இருந்த நாடாம்.”
“இவன் அங்குத்தான் வளர்ந்தவனா?”
“ஆம். இவனோடு கூடப் பிறந்தவர்கள் இன்னும் மூன்று பேர்கள். அரசர் ஹிரண்யவர்மரைச் சந்தித்த குழு, காஞ்சியின் அபாக்கிய நிலைமையை அவருக்கு எடுத்துக் கூறிவிட்டு, அவரை காஞ்சிக்கு வந்து அரசப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. தந்தையார் விருத்தர், கண்பார்வை வேறு சற்றுக் குறைவு அவரால், காஞ்சிபுரம் மாதிரி ஒரு கொதிக்கிற எண்ணெய்க் கலத்தில் குதித்துக் கரையேற இயலாது என்றான். சென்றவர்களுக்கும் அது தெரிந்து விட்டது. ஆனால், ‘எங்களை விட்டுவிட்டால், துண்டக ராஷ்ட்ரம் துண்டு துண்டாகப் போய்விடும் என்ற பயம் நன்றாக வெளிப்பட்டது’ என்றான்”
“நந்திவர்மனுக்கு அப்போது என்ன வயதாம்? உன் வயதுதான் என்றாய். அப்போது சிறுவனாகத்தான் இருந்திருப்பான், இல்லையா?”
“பன்னிரண்டு வயது. ஸ்ரீமல்லன், ரணமல்லன், சங்க்ராம மல்லன் என்ற மூன்று சகோதரர்களும் இவனுக்கு மூத்தவர்கள்.”
“பன்னிரண்டு வயதா! தமையர்களும் சிறுவர்கள்தாம் போலிருக்கிறது. மூத்தவனுக்கு என்ன வயது?”
“ஸ்ரீமல்லன்தான் மூத்தவன். வயதைக் கேட்கவில்லை. அதிகமாக இருக்காது என்றுதான் தோன்றுகிறது. பதினெட்டு இருபது இருந்திருக்கலாம்”
“சிறு பிராயம்தான்”
“ராஜமாதா! தந்தி ஏலபுரி அரியணையில் அமர்ந்தபோது, கிட்டத்தட்ட அதே வயதுதான். வேண்டுமானால், ஐந்தாறு வயது அதிகமாக இருக்கலாம். அரியணை ஏறியதுமே, விக்கிரமாதித்திய ராஜாவின் கட்டளையை ஏற்று, மிலேச்சர்களைத் தோற்கடித்து, விருதுகள் பெற்றிருக்கிறான். இதோ, தனியாகத் தலைமை தாங்கிக் காஞ்சி வரை போய்விட்டு வந்திருக்கிறான். போதாக்குறைக்கு, வரும்போது ஸ்ரீசைலத்தை அடக்கிவிட்டு வந்திருக்கிறான்”
“சரியாகச் சொன்னீர்கள் சிற்றப்பா! தீபத்தின் காலில் எப்போதும் இருட்டுத்தான்.”
“மைத்துனரே! நீர் வேறு அவனைத் தூண்டி விடாதீர்! தந்தி இத்தனை இளம்வயதிலேயே இப்படிப் பொறுப்பைச் சுமப்பது எனக்குப் பெருமையே. அதை நான் மறக்கவில்லை. ஆனால், இவனுக்குத் துணையாக நீர் இருக்கிறீர். துருவரும், நன்னரும் சிற்றப்பர்கள் இருக்கிறார்கள். ஒன்று விட்ட சகோதரர்கள் கோவிந்தன், சங்கரகணன், தந்திவர்மன் இருக்கிறார்கள். நான் இருக்கிறேன். இவனுக்கென்று ஒரு பட்ட மகிஷி லாவணிதேவி இருக்கிறாள். குழந்தை ரேவா வேறு கூட. இப்படிக் குடும்பத்தோடு இருப்பது எப்படி? எங்கேயோ கண்காணாத தேசத்துக்குச் சென்று, அங்கே சுற்றிலும் அண்டை நாடுகளின் பசி பொருந்திய நாக்கள், தேசத்தைக் கபளீகரம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் போது, அரியணையில் உட்காருவதா? ஏதாவது ஆலோசனை கேட்பதானாலும் யாரைக் கேட்பான்கள்? என்ன ஒரு வேதனையான நிலைமை! இரண்டு தேசத்திலும் என்ன மொழி பேசுகிறார்கள்? பேசுவது என்ன என்று இவர்களுக்குப் புரியுமா?”
“புரிகிறது புரிகிறது அம்மா. கோபப்படாதீர்கள். நந்திவர்மனுடைய நிலைக்கும், என்னுடைய நிலைக்கும் உள்ள வேறுபாடு வீட்டுத்தோட்டத்துக்கும் வெருட்டும் அடவிக்கும் உள்ள வியத்தியாசம் என்று நன்றாகத் தெரிகிறது. அதனால்தான், அவனுடைய தமையன்கள் எவரும் ஒப்புக்கொள்ளவில்லை.”
“அரசர் கேட்டாராமா?”
“ஆமாம். தான் அப்படிப்பட்ட ஒரு பிரயாணம் செய்யும் தகுதி உடைத்தவன் அல்லன் என்று சொல்லி மறுத்திருக்கிறார். வந்தவர்கள், உங்கள் மகன்களில் ஒருவரை அனுப்புங்கள் என்றிருக்கிறார்கள். அரசரும் ஒவ்வொருவரையாக அழைத்து நீ போகிறாயா, நீ போகிறாயா என்று கேட்டிருக்கிறார். எல்லோரும் தந்தையே! நீங்கள்தான் போகத் தகுதியானவர், நீங்களே போங்கள் என்று சொல்லி விட்டார்களாம். சொல்லிச் சிரித்தான் நந்திவர்மன்.”
“அட பிக்ஷாடணா!”
“அவர்களையும் குறை சொல்ல முடியாது. பிறந்ததில் இருந்து அவர்கள் பார்க்காத நாடு. தந்தைக்குப் பிறகு அரியணை அங்கேயே பழகிய இடத்தில் சித்தமாக இருக்கிறது. சும்மா கிடைக்கிறது என்று காட்டுக் கனிகளை யாராவது உண்பார்களா?”
“பிறகென்ன ஆயிற்று?”
“பிறகென்ன, இந்த நந்திவர்மன் தான் போகிறேன் என்று எழுந்து சபையில் சொல்லியிருக்கிறான். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய தந்தைக்குப் பெரிய அதிர்ச்சி. ஆனால், இங்கிருந்து போனவர்கள், ‘ஆஹா! நல்லது நடக்கிறது’ என்று நந்திவர்மன் சொன்னதைப் பிடித்துக்கொண்டு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், இளவரசரை அனுப்பி வையுங்கள் என்று மன்றாடி இருக்கிறார்கள். அரசர், குல மல்லர்களை எல்லாம் கூட்டி ஆலோசிக்க, எல்லோரும், ஒருமனதாக வேண்டாம் என்றிருக்கிறார்கள். முக்கியமாக நந்திவர்மனின் தாய், பட்டத்தரசி, ரோஹிணி, விடாப்பிடியாக மறுத்திருக்கிறார். இங்கிருந்து சென்றவர்களுக்கு நல்ல காலம். அரச சபையில், தரண்டி கொண்டபோசர் என்று ஒரு விருத்த ஆகமிகர் இருந்திருக்கிறார். சிறந்த நிமித்திகர் என்று சொன்னான் நந்திவர்மன். அரசருக்கு அவர் வசிஷ்டர் போன்றவராம். அவர், ‘இது இளவரசர் பல்லவமல்லரின் பூர்வஜன்மப் பயன். மஹாவிஷ்ணுவை முன்ஜன்மத்தில் பூஜித்திருக்கிறார் என்று குறிகளும் நிமித்தங்களும் கூறுகின்றன. அதனால்தான், இப்போது ஒரு புகழ் பெற்ற ஸாம்ராஜ்ஜியத்திற்கு அதிபதியாகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அனுப்பி வையுங்கள். எல்லாம் நலமாக நடக்கும்’ என்றிருக்கிறார். எல்லோருக்கும் மன நிம்மதி.”
“பல்லவமல்லன்தான் அவனுடைய இயற்பெயரா?”
“ஆம். ஹிரண்யராஜாவின் புத்திரர்கள், சந்ததியினர் எல்லோருக்கும் மல்லன் என்ற குடிப்பெயர். நந்திவர்மன், அவனுடைய பட்டாபிஷேகப் பெயர். பரமேஸ்வரவர்மன் என்பது ஜாதகப் பெயர். அரசர் ஒப்புதல் தந்ததும், இங்கிருந்து சென்றவர்கள், தாங்கள் எடுத்துக்கொண்டு வந்த மகுடத்தைப் பேழையில் வைத்துச் சமர்ப்பித்திருக்கிறார்கள்”
“மகுடத்தையே எடுத்துக்கொண்டு போய் இருக்கிறார்களா? செவ்வி செவ்வி!” சிலாகித்தார் கிருஷ்ணராஜா. “வெறுங்கையோடு திரும்புவதில்லை என்ற முடிவோடுதான் போயிருக்கிறார்கள். குடிமக்கள் என்றால் அப்படி இருக்கவேண்டும். அப்படி உருவாக்க வேண்டும்” கரக்கம்பம் செய்தார்.
“தாலத்தில் வைத்துச் சமர்ப்பித்த மகுடத்தைப் பார்த்ததும், அது ஒரு யானையின் தலை போல் இருந்தது போலும். அரசர் அதைப் பார்த்துவிட்டு இதென்ன களிற்றின் தலையை வெட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று திகைத்திருக்கிறார். தரண்டி கொண்டபோசர்தான் இது மகுடம் என்று விளக்கியிருக்கிறார். மிகுந்த நகைச்சுவையோடு சொன்னான் பரமேஸ்வரன்.”
“ஹா ஹா.” ராஜமாதாவும் கிருஷ்ணராஜரும் சேர்ந்து சிரித்தனர்.
“பல தலைமுறைகளுக்கு முன்னரே அந்தத் தேசத்துக்குச் சென்று விட்டதால், அவருக்கு இதெல்லாம் மறந்து போயிருக்கும்.”
“அவருடைய ஓர் ஓவியத்தைக் காட்டினான். ஸ்ரீமாலாவைச் சேர்ந்த வணிகர்கள் போல இருந்தது”.
“நீ நந்திவர்மனை, இல்லை இல்லை, பல்லவமல்லனைப் பற்றிப் பேசும்போது, அப்படி ஒரு கரிசனத்துடன் பேசுகிறாய். மிக்கவும் அணுக்கனாகி விட்டாயோ?” பரிகாசம் தொனிக்கக் கேட்டார் கிருஷ்ணராஜா.
“ஒரு நேசம் கிளைத்திருப்பது உண்மைதான். அவனுடைய இடத்தில், என்னை நிறுத்திப் பார்த்துக்கொண்டு, நான் இப்படி எல்லாம் செய்திருப்பேனோ என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் செய்திருக்க மாட்டேன் என்றுதான் படுகிறது. ஆனால், இனி வருகின்ற நாட்களில், ஒரு புதிய தந்திதுர்க்கனைப் பார்ப்பீர்கள். சிற்றப்பா! உங்களைத் துணையாக வைத்துக் கொண்டுதான் செய்யப்போகிறேன். கழன்று கொண்டு விடாதீர்கள்!”
“தந்திதுர்க்க மஹாராஜா! தங்கள் சித்தம் என் பாக்கியம். வழி காட்டிச் செல்லுங்கள், தொடர்கிறேன்” தலைகுனிந்து வணக்கம் செய்தார் கிருஷ்ணராஜா. மகனுக்கும் மைத்துனருக்கும் இடையே நடக்கும் இந்த நாடகத்தைப் புன்முறுவலோடு, பார்த்துக் கொண்டு பெருமித்தார் ராஜமாதா பவகணா.
“கதையைத் தொடரு”
“தந்தை, தாய், பெரியவர்கள் தரண்டி கொண்டபோசர் எல்லோருடைய காலிலும் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டு புறப்பட்டு வந்துவிட்டான்.”
“அதே நதி, காடு எல்லாவற்றையும் கடந்தா?”
“ஆம். சில திங்கள்கள் பிடித்தன என்றான். இங்குக் காலடி வைத்ததும் எதிர்ப்புக் கிளம்பியதாம். இவன் வருவதைக் கேட்டுப் படையோடு சிலர் எதிர்த்தார்கள் என்றான். ஆனால், இந்த எதிர்ப்பை எதிர்பார்த்து, முத்தரையர் மற்றும் பூச குலத்தைச் சேர்ந்த சில வீரர்கள் சண்டையிட்டு எதிர்ப்பை முறியடித்திருக்கிறார்கள்.”
“பாவம் குழந்தை!”
“சிற்றப்பா! இப்போது பாசம் அம்மாவுக்கும் பொங்க ஆரம்பித்து விட்டது!”
“எனக்கு ஒரு கேள்வி அப்பா. இந்தப் பாலகன் ஏன் இப்படிப்பட்ட ஓர் அபாயத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தான்?”
“எனக்கும் இது விசித்திரமாகத் தான் இருக்கிறது. எது தூண்டியிருந்தால் இந்த முடிவு செய்திருப்பான் இவன்? நான் கேட்டே விட்டேன். என் சகோதரர்கள் ஏன் போவதற்குத் தயங்குகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். புதிய தேசம். புதிய மொழி. புதிய பண்பாடு. புதிய மக்கள். புதிய எதிரிகள். அதனால் தயங்கினார்கள் என்றான்.”
“அது இயல்புதானே? இவனுக்கு ஏன் அந்தத் தயக்கமில்லை?” என்றார் கிருஷ்ணராஜா.
“அவன் இதற்கு அச்சம்தான் காரணம் என்று சொல்லி, ஒரு பாண்டித்தியமான பேச்சுப் பேசினான் சிற்றப்பா.”
“அவன் என்ன சொன்னான் என்று நினைவிருக்கிறதா? இருந்தால் சொல்லேன்”
“நினைவிருக்கிறதாவா? அன்றிலிருந்து அதை நூற்றுக்கணக்கான முறைகள் நினைவூட்டிப் பார்த்திருக்கிறேன். இன்றும் அதை நினைக்காத நேரம் கிடையாது. ஒவ்வொருமுறை சிந்திக்கும்போதும் ஒரு புதுத் தெளிவு கிட்டுகிறது. அச்சத்தை வகைப்படுத்தி அருமையாகப் பேசினான். தனக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் அதிகாரமும் கௌரவமும் பழகிவிட்ட வசதிகளும் இல்லாமல் போய்த் தான் தற்போது செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியாமல் போகலாம் என்ற அச்சம் முதலில் தனக்கு எழுந்தது என்றான். ‘இப்படி இழப்புக்கு நான் அஞ்சுவது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தபோது, என்னுடைய போதாமைதான் அதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தேன். மீண்டும் இந்த வசதிகளை உழைத்து அடையும் திறனும், புத்திசாலித்தனமும் எனக்கு இருக்கிறது என்று நான் நம்பினால், இழப்பின் அச்சம் மறைந்துவிடுவதையும் கண்டேன்’ என்றான்.
“அபாரம்! இழப்பின் அச்சம், போதாமையால் வரும் அச்சத்தால்தான் ஏற்படுகிறது. உண்மைதான். இந்த ஓர் அச்சம் மட்டுமா? மேலே சொல்.”
“அவன் சொன்ன இன்னோர் அச்சம் தனிமையைக் கண்டு அஞ்சுவது. நம் சுற்றத்தில், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களோ, ஆதரவளித்துத் தேறுதல் சொல்பவர்களோ, தேடிப்போய் ஆலோசனை நாடலாம் என்ற தகுதியுடையவர்களோ யாரும் இல்லை என்ற நிலைமை அவனுக்கு அச்சமளித்ததாம். தன்னுடைய தந்தையையே உதாரணமாகக் காட்டினான். அவன் போகிறேன் என்றதும், அம்ருதத்தையும் ஆலகால விஷத்தையும் ஒரு சேர அருந்தியதைப் போல உணர்கிறேனே என்று வேதனைப் பட்டாராம். அவருடைய உளத்தெளிவின் துணையை மட்டும் வைத்து, அவரால் இந்த அச்சத்தை நீர்த்துப் போகச் செய்ய இயலவில்லை. அவரைத் தேற்றுவிக்க ஒரு தரண்டி கொண்டபோசரின் துணை வேண்டியிருந்தது. கொண்டபோசர் இல்லாமல் இருந்திருந்தால்? தந்தை தனக்குத் தோன்றிய பயத்தை எதிர் கொண்டிருப்பாரா? மாட்டார். இப்படி வெளியுலகையும், அதிலுள்ள சில குறிப்பிட்ட நபர்களையும் நாம் சார்ந்திருப்பதுதான், நமக்கு அச்சத்தின் மூலகாரணம். அவர்களிடமிருந்து அகன்று சென்று, நமக்கென்று ஒரு வழியை உருவாக்குவதைத் தடுத்து நிறுத்திவிடுகிறது.
“இன்னொன்று, ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்லலாம். அப்படி ஏதாவது நடந்துவிட்டால், அதைச் சமாளிக்கும் ஆற்றல் நமக்கிருக்கிறது என்று நம்பினால், உள்ளம் ஏற்படுத்தும் இந்த அச்சம் பலஹீனமாகும்.”
“முதலாவதும் மூன்றாவதும் போதாமையால் வரும் அச்சம்தான். தனிமை ஒரு தனிப்பெரிய அச்சம். அரியணை என்பது, தனிமையே. இரண்டும் பின்னிப் பிணைந்தது.” என்றார் கிருஷ்ணராஜா.
“மரணத்திற்கோ, அங்கங்கள் இழப்பதற்கோ பயப்படுவது இன்னோர் அச்சமாயிற்றே” என்றார் ராஜமாதா.
“ஆம் அம்மா! ஆனால், வீரனுக்கு இந்த அச்சம் ஏற்படுவதில்லையே! சிறு பிராயத்தில் இருந்தே, இந்த அச்சத்தை வெற்றி கொள்ள ஒரு வீரன் பழகிக் கொள்கிறான் இல்லையா?”
“மேலே சொல்” என்றார் அகாலவர்ஷர்.
“இப்படிப்பட்ட பயம் எல்லாவற்றிற்கும், அடிப்படைக் காரணம் நமக்கு ஏதாவது தீங்கு விளைந்து விடுமோ என்ற எண்ணம்தான். இதில் நம் வசதிகளையும், உறவுகளையும், உயிரையும் இழப்பதும் அடங்கும். எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போது இந்த அச்சம் மிகவும் அதிகமாக இருப்பதை நாம் உணர்கிறோம். இதுதான் என் பயம் என்பதை நான் உணர்ந்தாலும், உணராமல் போனாலும், உணர்ந்தபின் அதைக் கடக்க முயன்றாலும், ஒடுங்கிப் போனாலும் பயம் என்னவோ மறைவதில்லை. எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொண்டாலும், அந்த அச்சம் நமக்குள்ளேயே தான் இருக்கிறது என்பதை, இந்தத் தைரியம் பலவீனம் அடைந்ததும், நாம் அழுத்தி வைத்திருந்த அதே அச்சம் மீண்டும் மேலே எழுந்து நம்மை ஒடுக்குவதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.”
“மிகச்சரி. பயம் ஒரேயடியாகப் போய்விடுவதில்லை. போகவும் கூடாது. அச்சம் என்று ஒன்று இல்லாவிட்டால், கடிவாளம் என்ற ஒன்று இல்லாமலே போய்த் தான்தோன்றித் தனமாகச் செயல்படும் முரட்டுத்தனம் வந்துவிடும். விவேகப் பயிருக்கு மூல வித்து, அச்சம்தான்.” என்றார் கிருஷ்ணராஜா. “பயமில்லாதவனிடம் எனக்கு என்றுமே பயமுண்டு. அவன் என்ன செய்வான் என்றே கணிப்பது கடினம்.”
“இன்னொன்றும் சொன்னான். தன்னுடைய மனம் எவ்வளவு மென்மையானது, எந்த அளவுக்குப் பலவீனமானது, சிறுவயதிலிருந்தே கஷ்டங்களை எதிர்கொள்ள விரும்பாமல்தான் வளர்ந்திருக்கிறதா என்று அடிக்கடி தன்னையே கேட்டுக் கொள்வானாம். காஞ்சிக்குத் தான் போனால் என்ன என்று அவன் தன்னையே கேட்டுக்கொண்டபோது, முதலில் நடுங்கினானாம். நோயும், அங்கங்கள் இழப்பும் தன் ராஜ்ஜியத்தை இழக்க வேண்டிய கட்டாயமும், எதிரிகளின் சிறைகளில் சுதந்திரத்தை இழந்து கைதியாக வாடலாம் என்ற நினைப்பும் அவனை வெருட்டியதும், தன் வீரம் இந்த அளவுக்குத்தானா? இது காஞ்சிக்குப் போனால்தான் நடக்குமா என்ன? இங்கேயும் நடக்கலாம் அல்லவா? இன்று இங்கே இருக்கும் சுகமான நிலைமை நாளையும் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற நினைப்பு அவனை உந்தியதாம்.
“ஒரு ராஜவம்சத்தில் பிறந்தவனுக்கு நாளும் சந்திக்க வேண்டிய இந்த அச்சங்களை எதிர் கொள்ள முடியாது என்று தோன்றினால், அவன் துறவியாகி விடுவதுதான் வழி. அதைத் தான் செய்யப் போவதில்லை என்ற பட்சத்தில், இங்கிருந்தால் என்ன, காஞ்சிக்குச் சென்று அங்கே இந்தத் துன்பங்களைச் சந்தித்தால் என்ன? என்று நினைத்தானாம். எப்படி யோசித்திருக்கிறான் பார்த்தீர்களா? பன்னிரண்டு வயதுடைய பாலகன் சிந்திக்கும் அளவா இது!”
“ஆச்சரியமான விஷயம்தான். வயதுக்கு மீறிய முதிர்ச்சி” பாராட்டினார் கிருஷ்ணராஜா.
“பெற்றோர்கள் யாரும் இல்லாமல், பன்னிரண்டு வயதில் தனியாகப் போய், எங்கோ ஒரு நாட்டில் அரசனாக அமர்ந்து கொண்டு.. என்னால் நம்பவே முடியவில்லை. இப்படி எப்படிச் சாத்தியம்! இவனை ஏன் எதிரியாக நினைத்துக் கொண்டு இப்படி வருத்துகிறார்கள் இந்தச் சாளுக்கியர்கள்?” பவகணா அங்கலாய்த்தார்.
“நீங்களும் என் கக்ஷிக்கு மாறிவிட்டீர்களா, அம்மா? இதே எண்ணம்தான் எனக்கும் ஏற்பட்டு, என் சாளுக்கிய விசுவாசத்தையே அசைத்துவிட்டது.”
“விக்கிரமாதித்தியருக்குக் காஞ்சி என்ற சொல்லைக் கேட்டாலே, உடலெல்லாம் அமிலத்தை ஊற்றினாற்போல் எரிகிறது. இளவரசராகப் பட்டம் சூட்டிக் கொண்டதும் அவர் செய்த முதல் பணி, காஞ்சியைத் தாக்கியதுதான். அவருக்குத் தூபம் போட எப்போதும் சித்தமாக ஸ்ரீபுருஷன் கொங்கணிவர்மன் வேறு. இப்போதுதான் அவனுக்கும் இது அதீதம் என்று தோன்றுகிறது. அவன் காஞ்சிக்கு எங்கே வந்தான் இந்த முறை? வாதாபியை எரித்ததற்கு, இன்னும் எத்தனை காலம், காஞ்சி விலை கொடுக்க வேண்டுமோ? சரி, நீ மேலே சொல்” என்று தந்தியைக் கேட்டார் கிருஷ்ணராஜர்.
“‘மனது, பலவீனமாகிவிட்டால் அது, தன்னுடைய வசதிகளை மற்றவர்கள் எப்போது தாக்கிப் பறித்துக் கொள்வாரோ என்று அஞ்சி, எல்லோரையும் சந்தேகத்துடன் பார்க்கத் தூண்டுகிறது. ஒருவனை ஆவேசமுள்ளவனாகவோ, எதுவும் வேண்டாம் என்று வாய்ப்புகளை நிராகரிப்பவனாகவோ மாற்றுகிறது. அச்சம்தான் ஆவேசத்துக்குக் காரணம்’ என்றான் பாருங்கள், அசந்துவிட்டேன். சுகத்தின் வயப்பட்டவனுக்கு மெல்ல மெல்ல அதை இழந்துவிடுவோமா என்ற அச்சம் தோன்றிப் பிறகு சுகவாழ்வின் ஆனந்தமே மறந்துபோய் வாழ்க்கை ஒரு சுமையாகவே மாறிவிடும் என்கிறான். சரியாகத்தான் தோன்றுகிறது எனக்கு. ‘என்ன மாதிரி வாழ்க்கை அது! இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்’ என்றான்.
“அப்படி என்றால் நீ பயத்தை ஒழித்து விட்டாயா என்று கேட்டேன். அதற்கு, அவன், ‘எனக்கு என்ன தோன்றியதென்றால், நான் அதிகம் பயப்படுவது எதிர்காலத்தைப் பற்றியன்று, மாறாக எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையைக் குறித்துத்தான். ஏதாவது எதிர்பாராதது நடந்துவிடுமோ என்ற அச்சம்தான் என்ன மிரள வைக்கிறது. எதிர்காலம் கணிக்கக் கூடியதாக இருந்து விட்டால் நான் பயப்படப் போவதில்லை, இல்லையா? எனவே, என்னைப் பொறுத்தவரை, இந்தப் பயம் என்பது முற்றிலும் புதியவற்றுக்கும், வாழ்க்கையின் முழு நிச்சயமற்ற தன்மைக்கும் என்னைச் சித்தம் செய்துகொள்ள ஏற்படும் பாதுகாப்பு உணர்வுதான். அது என்னை முடமாக்கக் கூடாது என்ற முயற்சியின் காரணமாகத்தான் இந்த ஏற்பாட்டுக்குச் சுயேச்சையாகச் சித்தமானேன்.’ என்றான்.”
“அற்புதம், அற்புதம்” சிரக்கம்பம் செய்து கைகொட்டினார் கிருஷ்ணராஜா. “சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். நானும் உன் தந்தையும், ஸ்வயம்வரத்தில் இருந்து உன் அன்னையைத் தூக்கிக் கொண்டுவரத் திட்டமிட்டபோது, முதலில் பயமாகத்தான் இருந்தது. விடலைப் பருவத்தின் இரத்தவேகம் செய் செய் என்று தூண்டினாலும், உள்ளுக்குள் அச்சத்தை உணர்ந்தோம். எதனால் பயப்படுகிறோம் என்று பேசிக்கொண்டு ஆய்ந்தபோது, வெட்டுப்படுவமோ, உயிரிழப்பமோ என்ற பயம் எல்லாம் இல்லை. அவமானப் பட்டுவிடுவோமோ என்ற பயம்தான் இருந்தது. அந்த அச்சம்தான் துல்லியமாகத் திட்டமிட வைத்தது. வெற்றியும் பெற்றோம்.” பவகணாவைப் பார்த்துச் சிரித்தார் கிருஷ்ணராஜா.
அந்த வயதிலேயும், கடந்த கால நினைவு எழ, முகம் சிவந்தார் ராஜமாதா.
“ஆமாம், இதெல்லாம் ஒரு வீரம், இதற்குத் திட்டம் வேறு”
அன்னையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த தந்திதுர்க்கன் வாய்விட்டுச் சிரித்தான். “உன்னைக் கடத்திய கதையை, மீண்டும் ஒருமுறை உன் வாயால் கேட்கவேண்டும் அம்மா” என்றான்.
“அதெல்லாம் இப்போது எதற்கு, நீ அந்தப் பிள்ளையைப் பற்றிச் சொல்”
“நான் அவனைக் கேட்டேன், ‘நீ சொல்வதெல்லாம் சரிதான், நாளை நிலைமை, உன் இடத்திலேயும் மாறலாம்தான் என்று வைத்துக் கொண்டாலும், மாறுவதற்கான சாத்தியக் கூறு என்று ஒன்று இருக்கிறதல்லவா? காஞ்சி ஒரு எரிமலை போலக் கனன்று கொண்டிருக்கிறது. தெற்கில் பாண்டியனும், மேற்கில் கங்கனும், வடமேற்கில் வாதாபியும், வடக்கில் சோழனும் புயல் போலச் சூழ்ந்துகொண்டு காஞ்சியைச் சுற்றுகிறார்கள். பாயும் சேனையும், பட்ட அறிவும் கொண்டவர்கள், அவர்கள். நீ வீழ்ந்துபடும் சாத்தியக் கூறு அதிகம் அல்லவா? அப்படித்தானே இன்று நடக்கிறது? பத்து வருடங்களாகப் பரதேசி போல வாழ்ந்து வருகிறாய். இதை எப்படிச் சரியான முடிவு என்கிறாய்?’ என்றேன்.
“அவன் சொன்னான், ‘பழகிய சூழ்நிலையையும் இந்த நிச்சயமற்ற எதிர்காலத்தின் வேதனையை நான் அனுபவிக்கத்தான் வேண்டுமா என்று நீ கேட்கிறாய். நல்ல கேள்விதான். நான் என்னையும் கேட்டுக் கொண்ட கேள்விதான் இது. இப்படி இடும்பையைத் தேடி அணைத்துக் கொள்வதற்கு எனக்குக் கிடைக்கும் மாறு என்ன? எனக்கென்று ஒரு ராஜ்ஜியம். இது சரிக்குச் சரியான மாறுதானா என்று என்னை நீ கேட்பதை விட, என்னை அரசனாக ஆக்க, இவ்வளவு சிரத்தையோடு உள்ள இவர்கள், எவ்வளவு தூரம் பயணித்து வந்திருந்தார்கள் என்று பார்! தெரியாத பூமி, தெரியாத மரபுகள், நாங்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்று இவர்களுக்குத் தெரியாது. முற்றிலும் அந்நியனான எனக்காக இவர்கள் பிராணத் தியாகமும் செய்யச் சித்தமாக வந்திருந்தார்கள். இவர்களுக்கும் இங்கே காஞ்சியில் குடும்பங்களும், உறவுகளும், செல்வங்களும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, இப்படி அவர்களைச் செய்யத் தூண்டவைத்த என்னுடைய தகுதிதான் என்ன? நான் ஒரு பரிசுத்த இரத்தம் ஓடும் வம்சத்தில் பிறந்தவன் என்பது ஒன்றுதான். இதில், என்னுடைய சாதனை என்ன இருக்கிறது? ஆனால், அவர்களுக்கு அது போதுமானதாக இருந்துவிட்டது. அது மட்டுமன்று, நானோ அப்போது வெறும் பாலகன். அவர்களில் எவருடைய உயிரையும் பாதுகாக்கும் உடல் திறன் இல்லாதவன், உணர்ச்சி முதிர்ச்சியோ, வாழ்க்கை அனுபவமோ இல்லாதவன். ஆனால், இவை எதுவும் அவர்களுக்கு ஒரு குறையாகத் தெரியவில்லை. இவற்றிற்காக அவர்கள் என்னை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு பக்கமாக யோசித்துப் பார்த்தால், அவர்களுடைய இந்த முடிவு முட்டாள் தனமானது என்றே விவாதிக்க இடமிருக்கிறது, இல்லையா?’ என்றான். எனக்குள்ளும் தோன்றிய கேள்விகள்தாம் இவை. அவன் இந்தச் சிறுவயதில் எப்படிப் பகுத்துப் பார்த்து முடிவெடுத்திருக்கிறான் என்று தெரிந்ததும் அசந்து போனேன்.”
“இவையெல்லாம் நிஜமாக நடந்திருக்கிறது என்று என்னால் நம்பவே முடியவில்லை. எடுத்தோம், கவிழ்த்தோம் என்றுதான் அரசர்கள் காரியம் செய்து நான் பார்த்திருக்கிறேன். ஒரு சிறுவனுக்குள் இவ்வளவு விவேகமா? இவன் சாதாரண ஆளில்லை. நசிகேதனைப் போலத் தெரிகிறான், எனக்கு” என்றார் ராஜமாதா.
“என்ன விடை சொன்னான்?” ஆர்வமாகக் கேட்டார் கிருஷ்ணராஜர்.
“அவன் சொன்னான், ‘பாலகனே ஆனாலும், அவர்கள் என்னைத் தலைவனாக ஏற்க ஆயத்தமாக இருந்தார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களின் நலனை இதயத்தில் தாங்கியிருக்கும் ஒருவன் தம் தலைவனாக வருவதுதான். காலப்போக்கில் அந்தத் தலைவன் கற்றுக் கொள்ள வேண்டியதை எல்லாம் கற்றுக் கொண்டு, அவர்களைக் காப்பான் என்று நம்பினார்கள். ஒரு பெற்றோர்களும் அதைத்தானே செய்கிறார்கள்? தம்முடைய பிற்காலத்தில், தமக்கு உறுதுணையாக இருப்பான் என்றல்லவோ சீராட்டி, உயிரைக் கொடுத்து வளர்க்கிறார்கள்? இன்னொரு வேதனைக்குரிய விஷயம், அவர்களுடைய நலனை நினைக்கும் ஓர் அரசனைக் கண்டுபிடிப்பது அவர்களுக்கு இவ்வளவு துர்லபமாக இருந்திருக்கிறது! எவ்வளவு தேடியிருக்கிறார்கள்! ஒருவருமா கிடைக்கவில்லை என்று தோன்றலாம். ஆனால், அதுதானே உண்மை? கடிகையாரும், மூலப் பிரகிருதிகளும், மாதரர்களும் சுற்றும் முற்றும் எத்தனை பேர்களின் வரலாற்றையும் வம்சத்தையும் அலசியிருப்பார்கள்! அவர்கள் கண்டதெல்லாம், எதிரிகள் என்று கருதப்படுபவர்களின் நலத்தைப் பெரிதாகக் கருதி, நாட்டின் நலனைப் பிணை வைக்கச் சித்தமாக இருப்பவர்களை மட்டும்தான். எவ்வளவு அநாதரவாக அந்த நாடு தம்மை எண்ணிக் கொண்டு இருந்திருக்கும்? இதுதான் எனக்குப் பெருத்த வேதனை அளித்தது’ என்றான். இதைக் கேட்டதும், எனக்கும் காஞ்சி மக்களின் மீது மிகப் பரிவு ஏற்பட்டு விட்டது, அம்மா. அவர்கள் பாவம், என்ன தோஷம் செய்தார்கள்? இரு நாட்டுத் தலைமைகளின் இடையே ஏற்பட்ட பாரம்பரியப் பிணக்கு, ராஜ்ஜியத்தின் அடிப்படையையே ஆட்டிவிட்டு விட்டது”
“சித்திரமாயனும் நல்லவன்தானே?”
“இதை நான் நந்திவர்மனிடம் கேட்கவில்லை. ஏனென்றால், எனக்கே சரியான உத்தரம் கிடைத்திருக்கிறது. என்னதான் நல்லவனாக இருந்தாலும், சித்திரமாயனால், பாண்டியர்களின் நிழலில் இருந்து விலகி ஓர் ஆட்சியை அமைக்க இயலாது. காஞ்சி, மதுரைக்கு அடிபணியும் ஒரு சிற்றரசாகத்தான் எப்போதும் இருக்கும். அப்படிப் பாண்டிய ஆதரவு வேண்டாம் என்று தனித்து நிற்க முயன்றால், என்னால் தோற்கடிக்கப்பட்ட கதைதான் நிகழும். என்ன சிரமம் இருந்தாலும், தனியாக நின்று கோலோச்சும் திறனுடையவன்தான் வரவேண்டும். அதற்கு நந்திவர்மன் மிகத் தகுந்தவன். அவன் சொன்ன இதைக் கேளுங்கள்.” என்று தொடர்ந்தான்.
“‘அரசன் இல்லாத நாடு, நாடன்று. அரசன் என்பவன் ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தின் துடிப்பின் உருவகம். நாடு என்னும் தேரை, நிர்வாகம் என்னும் குதிரைகளின் துணை கொண்டு ஓட்டும் சாரதி அவன். அப்படி ஒருவன் இல்லாத நிலைமையால் இந்த மண்ணின் ஜனங்கள் அறியாத நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டிய பரிதாபம் ஏற்பட்டது. அந்த அனுபவஸ்தர்களின் கண்களில், நான் கண்ட, அரசன் என்ற ஒருவனுக்கு அவர்கள் தரச் சித்தமாக இருந்த விசுவாசமும் அன்பும் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு மேலாக, நான் தலைமறைவாகத்தான் இருக்கிறேன். நாடு இன்னும் அந்நியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. என்னால், இந்த மக்களுக்கு இதுவரை ஒரு பிரயோஜனமும் ஏற்படவில்லை. ஆனாலும், என் மேல் அவர்கள் காட்டும் விசுவாசத்துக்கு ஒரு குறைவும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகத்தான் ஆகிக் கொண்டுதான் வருகிறது. ஏதோ, நாட்டுப் பிரமுகர்கள் யாரோ ஒரு சிறுவனைக் கூட்டி வந்து அரியணை ஏற்றி விட்டு விட்டார்கள் என்று மக்கள் நினைக்கவே இல்லை.
‘சித்திரமாயன், முந்தைய அரசனுக்கு நேரடிப் புதல்வனாக இருந்தாலும், அவனுக்கு இந்த அன்பு கிடைக்கவில்லை. நான் ஒருவேளை உணவு கொள்வதற்காக, இவர்கள் பலநாள் பட்டினி கிடக்கச் சித்தமாயிருக்கிறார்கள், எனக்குக் மேற்கூரை மறைப்பு வேண்டும் என்பதற்காகத் தாம் மழையில் நனைகிறார்கள். அத்தகைய விசுவாசத்தையும் அக்கறையையும் யாரிடமிருந்தும் உங்களால் பெற முடியுமா? இவர்களுக்காக இறப்பது கௌரவம் அல்லவா? தன் குடிமக்களிடம் சஞ்சலத்துக்கே இடமில்லாத விசுவாசத்தைப் பெற்ற அரசன் பாக்கியவான். இந்தக் கௌரவத்துக்காக, நான் ஓருழைப்பும் செய்யவில்லை என்பதை யோசிக்கும்போது, நான் எடுத்த முடிவு மிகச் சரி என்பது எனக்கு நிரூபணம் ஆகிவிட்டது.’ என்றான்.”
“அடடா, அதிரடியான அரசியல் சாத்திரத்தைச் சாணக்கியன் சொன்னார் என்றால், பரிவோடு கலந்த பக்குவமான நிர்வாகத்தைப் பல்லவமல்லன் கண்டுபிடித்திருக்கிறானே”
“மிகச்சரிதான் சிற்றப்பா. ‘இப்படி இருக்கும் மக்களுக்குத் தலைவனாக இருப்பதில், உன் போதாமை, உன்னை அலைக்கழிக்கவில்லையா?’ என்று கேட்டேன். அவன் சொன்னான், ‘இந்தப் போதாமையை நான் நினைத்து மருகாத நாள் இல்லை. ஆனால், இப்படி மருகுவதால் என்ன பயன்? எப்படி என்னுள் இருக்கும் அந்தப் போதாமைக் குழியை நிரப்புவது என்றுதானே நான் யோசிக்க வேண்டும்? இவர்களுக்கு நான் செய்யவேண்டிய கைம்மாறெல்லாம் இவர்களின் பாசத்திற்கும் மரியாதைக்கும் தகுதியுள்ளவனாக என்னை ஆக்கிக் கொள்வது மட்டுமே. நான் இயலாதவனோ பிணியாளனோ அல்லன். எனக்குக் கூர்மையான அறிவு இருக்கிறது. நான் இளைஞன். நிறைய கற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன். காஞ்சி ஞான க்ஷேத்ரம். இங்குக் கிடைக்காத கல்வி எங்குக் கிடைக்கப்போகிறது? துன்பத்தைச் சகித்துக் கொள்ளும் பாங்கு இருக்கிறது. பிறகென்ன? இவர்களைப் பாதுகாக்கத் தேவையான திறமைகளை நான் ஈட்டிக் கொள்ள வேண்டும். நான் செய்ய வேண்டியது அவ்வளவுதான்.’ என்று தயக்கம் இல்லாமல் சொன்னான்.
“என்ன என்ன திறமைகள் உனக்கு வேண்டுமென்று நினைக்கிறாய் என்று கேட்டதற்கு, ஒரு அழகான பட்டியல் கொடுத்தான். மனத்திண்மை, சிக்கல் இல்லாத தெளிவான சிந்தனை, நேர்மை, நியாயமான பார்வை, ஜனஹிதம், பற்றின்மை, சர்வ வல்லமையுள்ளவன் மீது நம்பிக்கை, உடல் வலிமை மற்றும் ஆயுதங்களைப் பிரயோகிக்கும் வல்லமை. இவைதானாம். நல்ல பட்டியல்தான். ‘எந்த நாட்டில் இருந்தாலும், இந்தத் திறன்களை நான் பெற்றுத்தான் ஆக வேண்டும், அல்லவா? எனக்கென்று ஏற்படுத்தி இருக்கும் என்னுடைய நிஜ ராஜ்ஜியத்தில் ஏன் இவற்றை நான், இவர்களுக்காக அடைய முயலக் கூடாது?’ என்று கேட்டான்”
“அபாரம். சர்வ வல்லமையுள்ளவன் மீது நம்பிக்கையும் வைத்திருக்கிறான். எந்தச் சமயத்தைப் பின் பற்றுகிறான்?”
“வைதிக சமயம்தான். தான் முன்பிறவியில் அந்த வைகுந்தவாசனுக்குத் தொண்டு செய்திருப்பதாகத் தரண்டி கொண்டபோசர் சொன்னது அவனுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பரம விஷ்ணு பக்தனாக இருக்கிறான். ‘வழிதெரியாமல் திகைக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு விதத்தில், அவர் வழிகாட்டி வருகிறார். அஷ்டபுயப் பெருமான் கோவிலில் உன்னைச் சந்திக்க வைத்தது கூட அவருடைய முடிவுதான்’ என்றான். துண்டக விஷயத்தைச் சுதந்திரமான நாடாக ஆக்கியபின், முதல்வேலை ஸ்ரீமந்நாராயணனுக்குக் கோவில் கட்டுவதுதானாம். வைகுந்தம் என்ற பதத்துக்கு விண் நகரம் என்று தமிழாக்கம் வேறு செய்து வைத்திருக்கிறான். அந்தக் கோவிலைப் பரமேஸ்வர விண்ணகரம் என்று அழைக்கப்போகிறானாம். கனவிலேயே கோவிலை நிர்மாணித்து வருவதைப் போலத் தோன்றுகிறது.”
“காஞ்சி ராஜஸிம்ஹன் பெரிய கைலாசநாதன் பக்தனாயிற்றே. அவருக்கு ஏதும் தளி கிடையாதா?” முறுவலித்தார் கிருஷ்ணாராஜா.
“தழலாக இருப்பனுக்குத் தளி இல்லாமலா? முக்தி ஈஸ்வரம் என்று அவருக்கும் ஒரு திட்டம் இருக்கிறது அவனிடம்”
“நன்றாக இருக்கட்டும். பிறகு நீ எப்போது காஞ்சிக்குத் திரும்பினாய்?”
“அன்று அங்கேயே தங்கிவிட்டு, அடுத்த நாள், மதிய உணவு உண்டுவிட்டுத்தான் புறப்பட்டேன். இரவு தூங்க வெகு நேரம் ஆகி விட்டது. அவனும் கொற்றலை நதியின் வடகரை வரை கூட வந்தான். கூடவே, அவனுக்கு ஒரு தளபதியும் வந்தான். முந்தைய தினம் நான் கோவிலில் பார்த்தவன் அல்லன் இவன். இவன் பெயர் உதயசந்திரன். என்ன வீரன் தெரியுமா சிற்றப்பா! வாள் அவனுடைய கையில் நூபுரம் போலச் சக்கரமாகச் சுழல்கிறது. வலிமையான புயங்கள். ஒரு குறுவாள் முழுவதையும் ஒரே குத்தில், மா மரத்தில் செருகிவிட்டான்.”
“நீ அவனோடு சமர் செய்தாயா?”
“செய்யாமல்? அயில்வாள், வளைவாள் இரண்டிலும் பொருதேன். நல்ல வீச்சு அவனுக்கு. கீழ்வீச்சு முடிவதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே நுழைந்து விடுகிறான். முதலில், மரக்கத்தியில்தான் சமர் செய்தோம். பிறகு, ஒருவரை ஒருவரை புரிந்துகொண்டுவிட்ட பிறகு, நிஜவாள் ஏந்தியும் பொருதோம். ஒருமுறை என் கத்தி, கிட்டத்தட்ட கையிலிருந்து கழன்று விட்டது. அவன் பல்லவமல்லனை அரியணையில் அமர்த்தாமல் வாளாவிருக்க மாட்டான். அவனும் அவனுடைய படை வீரர்களும் பிரதிக்ஞை செய்திருக்கிறார்களாம்”
“சாளுக்கியர்களுக்கு அவனைக் கண்டுபிடித்து விட்டேன் என்ற சேதியைச் சொல்லாமல் மறைத்துவிடப் போகிறேன் என்று நந்திவர்மனுக்குச் சொன்னாயா?”
“ஆம். வாக்குத் தந்தேன். மனிதர்களை எடை போடுவதில் நிபுணன் அவன். என்னைச் சரியாகக் கணித்து விட்டதால்தான், இந்த அளவுக்கு எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டான் என்று தோன்றுகிறது. நானும் அவனும் இரகசியச் செய்தி பரிமாற்றத்துக்கும் ஏற்பாடுகள் செய்து விட்டுத்தான் வந்தோம்.”
“இப்போது காஞ்சியில் யார் யார் இருக்கிறார்கள்?”
“விக்கிரமாதித்தியர் உடல்நிலை க்ஷீணித்தது பற்றிய செய்தி வந்ததும், கீர்த்திவர்மன் புறப்பட்டு விட்டான். அவனோடு, கோவிந்தராஜனும், வாதாபிக்குச் சென்று அரசரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்றிருக்கிறான். அடுத்த பௌர்ணமிக்கு முன் ரத்தினகிரிக்கு வந்து விடுவான். நான் உடனேயே புறப்பட்டுவிட்டேன்.”
“எரயப்பன் தனஞ்சயனைத் தனியாக விட்டுவிட்டு வந்தாயா?” நையாண்டி தொனித்தது கிருஷ்ணராஜாவின் குரலில்.
“ஹா ஹா. அவன் எங்கேயாவது உளறிவிடப் போகிறோமே என்ற பய பீதியில் இருக்கிறான். என்னைத் தனியாக விட்டு விட்டுப் போய்விடாதீர்கள் என்று காலில் விழுந்து மன்றாட ஆரம்பித்து விட்டான். அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். அங்கே நம் படைவீரர்கள் யாரும் இல்லை இப்போது.”
“இனி மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார் பவகணா.
“நீங்கள் நந்திவர்மனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“இவன் எதிரியல்லன். இவனோடு நட்பு பாராட்டுவதுதான் சரி. அந்த ஈஸ்வரர் கிருபை, காஞ்சி மக்களின் பிரதிநிதிகளுக்கு ஒரு நல்ல வழி காட்டியிருக்கிறது.” என்றார் கிருஷ்ணராஜா.
“நீங்களும் என் பட்சம் இப்போது!” என்றான் தந்திதுர்க்கன்.
“ஒரு முடிவுக்கு வந்து விட்டாய் போலிருக்கிறது. விக்கிரமாதித்தியர் மறைவு வரை பொறு. பிறகு நான் உன் பக்கம்” என்றார் கிருஷ்ணாராஜா.
“எனக்கும் அதுதான் சரி என்று படுகிறது” என்றார் ராஜமாதா.
“ஏன் இப்போதே துவங்கக் கூடாது?” என்றான் தந்திதுர்க்கன்.
“விக்கிரமாதித்திய சத்யாஸ்ரயர் நம் குலத்துக்கு இதுவரை மதிப்பும் மரியாதையும் தந்துதான் வந்திருக்கிறார். அவருக்கு முன்பு விஜயாதித்தியர் காலத்திலும் அதற்கு ஒரு குறைவில்லை. உன் தந்தைக்கும் சரி, உன் பாட்டனார் கற்கராஜாவுக்கும் சரி, நினைத்தபோது சாளுக்கிய சபைக்குச் செல்ல ஸ்வதந்திரம் இருந்தது. அரசருடைய அழைப்புக்காக, அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்ததில்லை. உன் அன்னையைத் தூக்கிக் கொண்டுவந்து, மங்களராசாவை வம்புக்கு இழுத்த உன் தந்தையைப் புரிந்துகொண்டு, அவர்கள் இருவருக்கும் சமரசம் செய்துவைத்தவர் விஜயாதித்தியர். அப்படிச் சமாதானம் செய்து வைத்திருக்கவில்லை என்றால், கதை எப்படி முடிந்திருக்குமோ, அந்தக் கைலாயபதிக்கே வெளிச்சம்! உன்னையே எடுத்துக் கொள். மிலேச்சர்களுக்கு எதிராகத் தனிக்காலில் நின்று அவர்களை முறியடித்தவன் அவனி ஜனாஷ்ரயன். அவனைக் கௌரவிக்கும்போது, உன்னையும் மறக்காமல் கௌரவித்தாரா இல்லையா? பாரபட்சம் காட்டாத அரசர். என்ன, காஞ்சி விஷயத்தில் ஓர் ஆவேசத்துடன் செயல் பட்டிருக்கிறார். அவரைக் கேட்டால், இதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதற்காக அவரை வெறுக்க முடியுமா என்ன?
“அவர் இருக்கும்போது, அவருக்கு எதிராக நீ கொடி தூக்கினால், உனக்குத் துணையாக ஒரு சிற்றரசரும் முன்வர மாட்டார்கள். அரசர் உன்னை ராஜத்துரோகி என்று பறையறிவித்து விட்டால், மொத்த சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்துக்கும் நீ தீண்டவும் தகாத எதிரி ஆகி விடுவாய். உன்னால், மொத்தச் சாளுக்கிய சேனையையும் எதிர்க்க முடியுமா? வல்லமை பொருந்திய காஞ்சியே எப்படித் திண்டாடுகிறது பார்.
“கீர்த்திவர்மன் விஷயம் வேறு. பகிரங்கமாக அவனை எதிர்க்க மாட்டார்களே தவிர, அவனுடைய கட்டளையைச் சிரத்தின் மேல் தாங்கிக் கண்மூடித்தனமாக யாரும் சண்டையிடப் போவதில்லை. அரியணை ஏறிய சில காலத்துக்கு, எல்லோருடைய கவனமும் அவன் மீதுதான் இருக்கும். தன்னுடைய செயல்களின் மூலமாக அவன் மரியாதையை ஈட்டிக் கொள்ளச் சில காலம் பிடிக்கும். அந்த சமயத்தில் நீ முரண்டு பிடித்தால், பெரிய விளைவு ஏதும் இருக்காது. அதனால் பொறு”
“சிற்றப்பா சொல்வதைக் கேள் ஸாஹஸதுங்கா. எனக்கும் அதுதான் சரி என்று படுகிறது. தனியாகச் சாம்ராஜ்ஜியத்தை நிறுவக் கனவு காண்கிறாய். அதற்கான காலமும் கனிந்து வருகிறது என்றுதான் தோன்றுகிறது. சாளுக்கியப் பேரரசு, தன்னுடைய அஸ்தமனப் பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் வாழ்நாள் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல, ஓர் அரசுக்கும் வாழ்நாள் உண்டல்லவா? அதை மீண்டும் தூக்கி நிறுத்தத் தொலைதூரம் வரை யாரும் கண்ணில் படவில்லை எனக்கு. உன்னுடைய கனவு நிறைவேற என் ஆசிகள். இந்தப் பாலகன் பல்லவமல்லன் கதையைக் கேட்டபிறகு, ஏன் நீ உனக்கென ஓர் அரசை நிறுவத் துடிக்கிறாய் என்று புரிகிறது. நல்ல விஷயம்தான். உனக்கு அதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. அவசர கதியில் செயல்படாமல், யோசித்துப் பொறுமையாகச் செய்.” என்றார் பவகணா.
“நீங்கள் இருவரும் இதை ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள் என்றுதான் நினைத்தேன். எனக்கு இப்போது மனம் நிம்மதியாயிற்று. காத்திருக்கிறேன். இருவரும் ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று இருவரின் காலிலும் ஒருசேர விழுந்து வணங்கினான் கட்கவலோக, ஸாஹஸதுங்கன் தந்திதுர்க்கன்.
‘தடார்’ எனச் சத்தம் கேட்டுப் பிரதாபவர்த்தனர் வண்டியை விட்டு வெளியே நோக்கினார். தூரத்தே நான்கைந்து பேர் கயிறுகளைச் சரம் சரமாகக் கட்டி ஒரு பெரிய மரத்தை இழுத்துக் கொண்டிருந்தார்கள். சடசட என்று அந்தப் பெரிய மரம் கீழே வீழ்ந்துபட்டதை வெறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தார் பிரதாபர். விநயனும், மனம் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த முப்பரிமாண முற்காலக் காட்சியின் கயிறு அறுபட்டவனாக, நிகழ்காலத்துக்கு வந்தான்.
“என்னவோர் அற்புதமான சந்திப்பு! நீங்கள் அதை விவரித்த அழகில், எனக்கு நேரேயே தந்திதுர்க்கரும் நந்திவர்மரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டாற்போல இருந்தது. அரசர்கள் என்றால், தம் மனம்போன போக்கில் காரியங்கள் செய்து, உடல்வலிமையே பெரிது என்று தினவெடுத்துத் தோள்வலியைக் காட்டி, அதிகார மமதையிலும் சுகத்திலும் திளைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைப்பவர்களுக்கு, இவர்களெல்லாம் ஒரு வியத்தியாசமான ரூபத்தையன்றோ நிர்மாணிக்கிறார்கள்.”
“இவர்களெல்லாம் அரியணைக்கு அழகையும் அகைப்பையும் அணிவித்து அலங்காரம் செய்தவர்கள், விநயா! தமக்கென்று ஒரு வழியைத் தாமே தேடிக் கண்டுபிடித்து, அதில் சிரத்தையோடு பயணித்தவர்கள். தான் செல்லும் பாதையில் பல வழிகள் தென்படும்போது, எந்த வழியில் செல்வது என்று எப்போது ஒருவன் சுயமாகத் தீர்மானிக்கிறானோ, அப்போதுதான் அவனுக்குள் மனவுறுதி என்பது விளைகிறது. ஆனால், இவ்வுறுதி எல்லோருக்கும் எளிதில் கைவரப் பெறுவதில்லை. நாம் தீர்மானித்தவை நடக்காமல் போனால், விரயம் ஏற்படுமே என்ற பயம், நம்மை முடிவுக்கு வரவிடாமல் தயக்குகிறது.
“இந்த விரயங்கள், இலக்கை அடைவதற்கு நாம் தரும் மாறுகள். எந்த வழியில் போனாலும் பொருள், புகழ், தேக மற்றும் கால விரயங்கள் ஏற்படுவது நிச்சயம். என்றாலும், தீர்மானித்த வழி ஒருவேளை தவறாகப் போய்விட்டால், பொருள் மற்றும் தேக விரயங்களைப் பின்னர் வேறு வழிகளில் ஈடுகட்டி விடலாம். ஆனால், கால விரயத்தை ஈடுகட்டவே முடியாது. விரயமானது விரயமானதுதான். இந்த அச்சம்தான் நம்மைத் தடுக்கிறது.”
“இந்த வழிதான் சரியான வழி என்று தீர்மானம் செய்வதற்கு, அந்தப் பாதையில் என்ன பாதைகள் ஏற்படலாம், அப்படி ஏற்பட்ட பாதைகளைச் எப்படிச் சமாளிப்பது, அதற்குத் தேவையான திறமை நமக்கு இருக்கிறதா, என்றெல்லாம் தெரியவேண்டாமா? அந்த முன்னறிவு இல்லை என்றால், எப்படித் தீர்மானம் செய்வது?”
“தெரிந்தால் நல்லதுதான். ஆனால், நீ எதிர்பார்ப்பது சாத்தியமா? வருங்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்தவர்தாம் எவர்? யாராலுமே முன்கூட்டிக் கணிக்க முடியாத வருங்காலத்தைப் பற்றித் தேற்றம் வேண்டும் என்கிறாயே! நிர்ணயம் செய்தால்தான் மேலே செல்வேன் என்று அடம்பிடித்தால் என்ன ஆகும்? நிர்ணயம் ஆகும்வரை, அந்தக் கவலை முற்றத்திலேயே தங்கி விடுவாயா? இருக்கும் அறிவை வைத்து, ஏதாவதொரு வழியைத் தேர்ந்தெடுத்துத் தானே ஆகவேண்டும்?”
“அதற்குத்தான் யாரையாவது கேட்கிறோம், இல்லையா ஐயா?”
“அங்குத்தான் இடுக்கண்ணுக்கு முதல் விதை இடப்படுகிறது. பயணம் நம்முடையதுதானே? மற்றவருடையதா? அந்தப் பயணம் சென்று வந்தவர்களைக் கேட்டால் ஒருவேளை தீர்மானிக்க உதவலாம்தான். ஆனாலும், அவர்களுடைய திறமையும், பயணம் செய்த காலமும், செய்த விதமும் செய்ய வேண்டி நேர்ந்த கட்டாயமும் அவர்களுக்கானது, இல்லையா?. மற்றவர் சென்றிருக்காத வழிகளும் நமக்கு எதிர்ப்படலாம். அப்போது யாரைப் போய்க் கேட்பது? நந்திவர்மரையே எடுத்துக்கொள். அவர் யாரைப் போய்க் கேட்பார்?”
“வாஸ்தவம்தான். நந்திரவர்மர் அளவுக்கு இல்லையென்றாலும், என் அளவில், நானும் அனுபவித்திருக்கிறேன். அந்தச் சமயத்தில், நாம் நம்முடைய இலக்கு எது, திறமை எது?, திறமையின் வீரியம் எப்படிப்பட்டது? அதைப் பயன்படுத்துவதில் நம்முடைய உறுதி எத்தன்மைத்தானது என்று மட்டும் கணிக்க முடிந்துவிட்டால், இடர் வந்தால் எப்படிச் சமாளிப்போம் என்று தெரிந்துவிடும். அதுவே ஓர் மனோபலத்தைத் தந்துவிடுகிறது.”
“சரியாகச் சொன்னாய். எவன் ஒருவனும் தன்னால் ஆகக் கூடியது இது, ஆக முடியாதது இது, இன்று கிடைக்கும் தகவல் இது, என்னுடைய நோக்கம் இது, எது வந்தாலும் அது நான் எடுத்த தீர்மானத்தின் விளைவு, அதற்கு நான்தான் பொறுப்பு என்று எண்ணிப் பாதையைத் தேர்ந்தெடுக்கின்றானோ, அவன் பாதையைக் கடக்கும் துணிவைப் பெறுகிறான். அவனுடைய நடையிலே அந்த உறுதி தெரியும். அவன் விரயத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. அதை வாழ்க்கையாகவும் அனுபவமாகவும் நினைத்து வாழ்ந்துவிடுகிறான். இந்தச் சுயத் தேற்றம் அதிமுக்கியம். இந்தத் தெளிவை எப்படிப் பெறுவது? தெளிவு குறைவென்றால் எப்படி வளர்த்துக்கொள்வது? இதைப் பற்றியெல்லாம் யாரும் சிந்திப்பதும் இல்லை, கற்றுக் கொள்ள முனைவதும் இல்லை. இந்த மனவுறுதி பல்லவர்மருக்குச் சிறு வயதிலேயே இருந்தது, கொண்டல்வண்ணன் கொடுத்த கொடைதான்.”
“நந்திவர்மரையும், தந்திதுர்க்கரையும் சந்திக்க வைத்ததும் அந்தச் சங்கு சக்கரதாரியின் கொடைதான் போல இருக்கிறது. அஷ்டபுஜப் பெருமானின் தளியில் அல்லவோ அது சாத்தியமாகி விட்டிருக்கிறது”
“அடடே! மஹாராஜாவைப் போலவே சிந்திக்கிறாயே! இது ஸாஹஸதுங்கருக்கும் தோன்றியிருக்கிறது. அதனால், அவர் காஞ்சியை விட்டு நீங்கும்போது, தன்னுடைய சம்பாத்தியத்தில் இருந்து நிறைய பொன்னைக் கட்டளையாக அஷ்டபுஜப் பெருமானுக்கு அளித்து, அதைக் கோவில் திருப்பணிக்குச் சரிவர உபயோகத்துக்குப் பயன்படுத்தும்படிக் கம்பண்ணாவுக்கு உத்தரவு கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டாராம். அவர் மட்டும் அல்லர், பல்லவமல்லரும் தான் அரியணைக்கு மீண்டதும், அதே கோவிலுக்கு நிறையச் செய்தார் என்று கேள்வி. கருமேக மேனியான், வைரமேகமாக ஒளிவீசி நின்று, வழிகாட்டினான் என்று கருதி, தந்திதுர்க்க மஹாராஜா, தனக்கு வைரமேகன் என்றே திருநாமமும் சூட்டிக்கொண்டாராம்.
“அந்தக் காஞ்சி வணிகர்களில் ஒருவர் இன்னொரு சேதியைச் சொல்லியிருந்தார். பல்லவமல்லரும் தன்னை வைரமேகர் என்று அழைத்துக்கொள்வதுண்டாம். வேறொன்றும் சொல்லியிருந்தார். எங்கோ எழுதிவைத்திருந்தேன். உனக்குச் சொல்வதற்காக நேற்றுத் தேடினேன். இதோ இருக்கிறதுபார்.” என்று ஓர் ஓலையை நீட்டினார். அதில் இரண்டு மூன்று தமிழ்ப்பாடல்கள் இருந்தன.
“இந்தப் பாடல்கள் மங்கைவேந்தன் என்ற ஒரு வைணவ அடியார் புனைந்தவையாம். முதலில் அரசனாக இருந்து, பின்னர் திருடனாக மாறி இறுதியில், திருமாலால் தடுத்தாட்கொள்ளப்பட்டு வைணவர் ஆனாராம். அவர் இங்கே பொத்தாப்பிக்குக் கூட வந்து நரசிம்ம ஸ்வாமியைப் பணிந்திருக்கிறார் என்று குக்கேஸ்வரர் சொன்னார்”
அந்த ஓலையை வாங்கியவன், ஒரு பாடலின் முதலடியைப் படித்து வாய்பிளந்து பேச்சிழந்து நின்றான். அவன் விக்கித்துப் போயிருப்பதைப் பார்த்துப் பிரதாபர் ஆச்சரியமடைந்தார்.
“என்ன ஆயிற்று, விநயா? இந்தப் பாடலில் என்ன இருக்கிறது?”
“ஐயா, என்னவென்று சொல்வேன்! இன்று காலையில்தான், சத்திரத்துப் பண்டாரத்தை நானும் குக்கேஸ்வரரும் சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது இந்தப் பாடல் கிடைத்தது. இப்பாடல், தினமும் அட்டபுயப் பெருமான் சந்நிதியில் சேவையாகிறதாம். குக்கேஸ்வரர் இதைப் பற்றிச் சொல்லும்போதே தழதழத்து விட்டார். கேட்ட நானும், அதன் பொருளில் நெகிழ்ந்து போனேன். பாடலைப் பற்றி உங்களுக்குச் சொல்லி, இதை அந்த வைணவ அடியார் யாக்க நேர்ந்த பின்னணி எதுவாக இருக்கலாம் என்று நானே உங்களைக் கேட்கவேண்டுமென்று இருந்தேன். இங்கே பாருங்கள்! அந்த அட்டபுயக் கரத்து ஆதி எப்படித் தன்னை எனக்காக வெளிப்படுத்திக் கொண்டான்! அரசுகளை இணைக்கும் ஆயுதம் தாங்கிய ஆழிவண்ண, அசாதாரணமான தெய்வம் அவன்!
“இன்று காலையிலா? அதிசயமாகத்தான் இருக்கிறது! வாழ்நாள் கழியுமுன்னே, ஒருமுறையாவது காஞ்சிக்குப் போய், அவனைத் தரிசிக்கவேண்டும்!”
“இந்தப் பாடலின் அழகைப் பாருங்கள்! எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார், வைரமேகம் என்னும் சொல்லில், தந்திதுர்க்கர் நெஞ்சைத் தொலைத்ததற்கு இங்கே சான்று கிட்டுகிறது பாருங்கள்! பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம், - கருப்புக்கடல், பூவைப் பூ, காயாம்பூ, போது அவிழ்ந்த நீலப்பூ இவற்றையெல்லாம் அணிந்து கொண்ட மேகத்தைப் போல இருக்கிறாராம் அஷ்டபுஜர்.
“மன்னவர் தொண்டையார்கோனால் வணங்கப்படுபவர் என்றும், நீளமுடியுடன், மாலை அணிந்த வைரமேகன், தன்னுடைய வலிமையையும், தன்னுடைய புகழையும் உணர்ந்துகொண்ட காஞ்சித்தலத்தின் பெருமாள் என்றும் அல்லவா வர்ணித்திருக்கிறார். தந்திதுர்க்கர், தனக்கும் ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவத் திறன் இருக்கிறது என்று சூழ்ந்த காஞ்சி அல்லவோ இது!”
“அதனால்தான் பல்லவமல்லரும் தன்னை வைரமேகர் என்று குறித்துக்கொண்டு மகிழ்ந்தார் போலிருக்கிறது!”
இருவர் மனத்திலும் அந்த அஷ்டபுரத்து ஆதி, விஸ்வரூபம் எடுத்து நின்றான். இருவருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. அமைதியாக எஞ்சிய பயணத்தைக் கழித்தார்கள். வெளியே பார்த்த இடங்களில் எல்லாம் விநயனுக்குக் காயாம்பூக்கள் செழித்துக் குலுங்கின. நிலமெல்லாம் நீலமாகத் தெரிந்தது. நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்து இளகியிருந்தது. வண்டியை விட்டு இறங்கும்போதுதான் கதையைத் தொடரவேண்டும் என்ற நினைப்பு எழ, விநயன் கேட்டான், “கீர்த்திவர்மர் வாதாபிக்குத் திரும்பிப்போனதும் என்ன நடந்தது?”
“விக்கிரமாதித்தியருக்கு முடிவு நெருங்கி விட்டிருந்தது. சீக்கிரமே கீர்த்திவர்மர் அரசராகப் பட்டாபிடேகம் சூட்டப்பட்டார். தந்திதுர்க்கர் விழாவுக்குப் போகவில்லை. இதைக் கவனித்த புதிய அரசருக்கு இதன் தாத்பரியம் என்ன என்று விளங்குவதற்குள், விக்கிரமாதித்தியர் மறைந்தார். அரியணையில் அமர்ந்த கீர்த்திவர்மருக்குக் காஞ்சியின் நினைவு போகவில்லை. யுவராஜாவாகத் தான் படையெடுத்தபோது, தனக்கு முழு ஸ்வதந்தரம் இல்லாததால்தான், தான் விரும்பிய பலன் கிட்டவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அரசராக, இராஜ்ஜியத்தின் முழுப்பலத்தோடு, மீண்டும் படையெடுக்க முடிவு செய்தார். பாண்டியரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதுவே பெரிய விளைவில் போய்முடிந்தது. சகோதரி, விநயாவதியின் கணவன், ஆதித்தியவாடாவின் அதிபன் கோவிந்தராஜனின் பக்கபலத்தோடு காஞ்சியைத் மீண்டும் தாக்கப் புறப்பட்டார்.”
“இந்த முறையும் ஸ்ரீபுருஷர் எட்டவே இருந்தாரா?”
“ஆமாம். விக்கிரமாதித்தியர் இறந்ததும், ஸ்ரீபுருஷர் இன்னும் எட்ட விலகிப் போனார். அதற்கு ஒரு பெரிய காரணம் இருந்தது. இன்று இத்தோடு நிறுத்திக் கொள்வோம். நாளை குக்கேஸ்வரர் இல்லத்தில் விருந்தோம்ப அழைத்திருக்கிறார் என்று சொன்னாய் அல்லவா? நாளை மறுநாள் சந்திப்போம். அப்போது இதைப் பற்றிச் சொல்கிறேன். நீ, தடாகத்துக்கரையில் இருக்கும் இல்லத்துக்குக் காலையிலேயே வந்துவிடு. இந்த அட்டப்புயக் கரத்தனைப் பற்றிய ஓலையைத் தேடும்போது, என்னுடைய தொகுப்பில், இன்னும் சில ஓலைகள் கிடைத்தன. அவற்றின் மூலம், இந்தச் சுவாரசியமான காரணத்தைச் சொல்கிறேன். இப்போது சாரதி, உன்னைச் சத்திரத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவான்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பிரதாபர்.
அன்று இரவு முழுவதும், விநயாதிசர்மனின் கனவிலெல்லாம் காஞ்சித் தலைவனும்,
காயாம்பூ வண்ணத்தானுமே வந்தார்கள்.
No comments:
Post a Comment