ஊருக்குத் திரும்பி வந்ததும் அவனுக்கு ஒழிவில்லாமல் வேலை இருந்தது. புதிய பணியைச் சீர் செய்துகொள்வதில் அதிக நேரம் செலவழிந்தது அவனுக்கு. ஊரில், இசைக்கலை, பாடசாலை அளவில் பெரிதாக வேரூன்றி இருக்கவில்லை. கோவிலுக்காக, இசை நிவேதனம் செய்யும் பாடகர்களும், இசைக்கருவிகள் வாசிப்பவர்களும் அப்போதுதான் ஒவ்வொருவராகக் குடியேறிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே வேங்கிபுரியில் அரண்மனை இருந்ததால், நிறைய கலைஞர்கள் அங்குத்தான் வசித்து வந்தார்கள். அரசகுடும்பப் போஷிப்பில் இருந்து அகன்று வந்து இந்தச் சிறிய ஊரில் குடியேற அவர்களுக்கு விருப்பமில்லை என்று கேள்விப்பட்டான். அத்தியக்கர் போன்ற ஒரு சிலருக்கு மட்டும்தான் இசையில் அறிவும், ஈடுபாடும் இருந்தது. ‘ஆநந்தமாகப் பாடிக்கொண்டிரு. கோவிலில் நரேந்திரேஸ்வரப் பெருமான் முன் பாடு. எல்லோரும் கேட்கட்டும். அதுவே இசையில் ஆர்வத்தை வளர்க்கும். உன்னைப் போன்ற இசைவாணர்கள் ஊரிலே இருக்கிறார்கள் என்று தெரிந்தால், மெல்ல மெல்ல இசைஞர்கள் வந்து சேர்வார்கள்.’ என்றார் அத்தியக்கர். ஒழிந்த நேரத்தில் நிறையச் சாதகம் செய்தான். கோவிலில் பூசைக் காலத்தில் பாடினான். பாடசாலைக்காக இரண்டு மூன்று ஏக மற்றும் திரிதந்தி வீணைகளுக்கு அத்தியக்கர் ஏற்பாடு செய்யும் வரை, அவருடையதைப் பயன் பயன்படுத்திக் கொண்டான். வகுப்புக்காக ஆயத்தம் ஆகவேண்டிய அளவுக்குப் பெரிய பளுவு இல்லாததால், ஒழிந்த நேரத்தில், பாடசாலைச் சுவடிப் பண்டாரத்தைச் செப்பனிடுவதில் முனைந்தான். ‘என்ன சுவடி வேண்டுமானாலும், எங்குக் கிடைக்கிறது என்று சொன்னால், வரவழைத்துத் தருகிறேன்’ என்று பிரதாபவர்த்தனர் உறுதி தந்திருந்தார்.
ஒரு நாள் காலையில் கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது, கோவில் வாசலில் தேவநாதய்யாவைப் பார்த்தான். மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார்.
“நமஸ்காரம், தேவநாதய்யா. கோவிலுக்கு வந்தீரா?”
“நமஸ்காரம் விநயசர்மரே. உமக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். வாரும், வயற்காட்டு வரை போய் வரலாம்.”
“வயற்காட்டுக்கா? பாடசாலைக்குப் போகவேண்டுமே?”
“அத்தியக்கரிடம் விண்ணப்பித்துக் கொண்டு உத்தரவு வாங்கி விட்டேன். வாருங்கள். இப்போது போனால், உச்சிவேளைக்குத் திரும்பி வந்துவிடலாம்.”
“இங்கிருந்தேவா? எவ்வளவு தூரம்?”
“ஒன்று ஒன்றரை குரோசம்தான். விறுவிறுவென்று போனால், போக ஒரு ஹோரை, வர ஒரு ஹோரை.”
“காலில் பாதரட்சை இல்லையே? போகும்போது கஷ்டம் இருக்காது. வரும்போது, இந்தப் பொடிமண்ணில் கால் வைக்க முடியாதே?”
தேவநாதய்யா ஒரு கணம் யோசித்தார். “கவலையை விடுங்கள். வரும்போது, வாய்க்கால் கரையோரமாகவே வந்துவிடலாம். புல்தரைதான். வாருங்கள்”
அவர் குரலில் ஓர் இறைஞ்சல் கேட்டது. சரி என்று அவரோடு நடந்தான். கொஞ்ச தூரம் போனவுடனேயே, வீடுகள் மறைந்து, வயல் வெளி பரந்துகிடந்தது. நிறைய வயல்களில் பயிர்கள் விளைந்திருந்தாலும், நிறைய தரிசாகவும் கிடந்தன. தூரத்தில், மேடு பள்ளமாக இருந்த ஒரு நிலப்பரப்பின் பக்கத்திலே, இவர்கள் வரும் திக்கிலே பார்த்துக் கொண்டு ஒரு பத்துப் பதினைந்து பேர் நின்றிருந்தார்கள். இவர்கள் அருகே சென்றதும், ஒருவன் ஓடி வந்தான். கை கூப்பினான்.
“என்னடா, நன்றாகத் தேடிப் பார்த்தாயா?”
“நன்றாகப் பார்த்துவிட்டேன் கிருகபதி. எங்கோ தொலைந்து போய்விட்டது” கையைப் பிசைந்தான். அழுதுவிடுவான் போலிருந்தது.
“இப்போது என்ன செய்வது? தச்சர் வர நான்கைந்து நாளாகும். இன்றே எல்லாம் ஆயத்தம் செய்து வைத்தால்தான், நாளை மறுநாள் வெண்பட்சத்தில், வேலை துவங்கமுடியும். இந்த பட்சத்தில், வேலை முடியாவிட்டால், பிறகு சிரமம். அடுத்த வளர்பிறையில் இருந்து பண்டிகைக் காலம். ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். விநயரே, உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்க்கத்தான் இப்படி அவசரம் அவசரமாக அழைத்துவந்தேன். நான் வழியில் சொன்னது போலக் கிணறு வெட்டச் தச்சன் கொடுத்த கணக்கு ஓலையைத் தொலைத்துவிட்டு நிற்கிறான்.”
“எவ்வளவு விட்டம் கிணற்றுக்கு?”
“பதினைந்து தண்டம், விநயரே. அரசர், அதற்குமேல் ஒரு முழம் எடுத்தாலும், தண்டித்துவிடுவார்.”
“பதினைந்து தண்டமா? அப்பாடி! பெரிய கிணறுதான்”
“மொத்தச் சத்திரத்துக்கும், தினப்படி செலவு, வயலுக்கு நீர்ப்பாய்ச்சல் – வேண்டி இருக்கும். வழியில் பார்த்தீர்களே, தரிசு வயல்கள். இந்தப் பழைய கிணறு இடிந்து போனதில் இருந்து குறைந்துபோன நீர் வரத்தால்தான், அதெல்லாம் தரிசாகக் கிடக்கிறது.”
“அந்த எல்லா நிலமும் சத்திரத்தைச் சேர்ந்ததுதானா?”
“கோவில் பெயரில்தான் இருக்கிறது. அதில், வருடப் பாத்தியதையைச் சத்திரத்துக்கு இவ்வளவு என்று அளந்து விடுவார்கள். பிரதாபர்தான் அரசரிடம் பிரத்தியேகமாக விண்ணப்பித்து இந்த அனுமதியைப் பெற்றுத்தந்தார். இந்தத் திங்களில், வெட்டி விடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். திடீரென்று தச்சன் ஊருக்குப் போய்விட்டான். இவனிடம் எல்லாம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறேன், இவன் பார்த்துக் கொள்வான் என்றான். இவனோ, அந்தக் கணக்கு ஓலையைத் தவறவிட்டு நிற்கிறான். பூமி மேற்பரப்பில் எதுவரை வெட்டுவது என்று தெரியவில்லை. வட்டம் போட்டுக் கொடுத்தால், தோண்டிவிடுவேன் என்கிறான். பதினைந்து தண்ட விட்டத்துக்கு எப்படி வட்டம் போடுவது? தரையைப் பார்த்தீர்களா? ஏற்கனவே கிணறு இருந்து சரிந்த இடம். பாதாளம் போலப் பெரிய பள்ளம் விழுந்து கிடக்கிறது. நீங்கள் அருகே போகாதீர்கள்! விழுந்து விடப்போகிறீர்கள். இப்படி ஒதுங்கியே நில்லுங்கள். எப்படிக் குறுக்காகப் போய், அந்தப் பக்க எல்லையைக் குறிப்பது? இதுதான் குழப்பம்.”
“முன்னே இருந்த கிணறு எவ்வளவு பெரியது?”
“அது தெரியாது. சிறிய கிணறாகத்தான் மேல்வாய் இருந்தது. சரிந்தபோதுதான் உள்ளே அகலம் என்று தெரிந்தது.”
விநயன் அபாயமாக இடிந்து கிடந்த கிணற்றைப் பார்த்தான். புழங்காத இடம். ஓர் சிறிய விளிம்பு மட்டும்தான், கட்டுமானமாக இருந்தது. மற்றெல்லாக் கரையும் தாறுமாறாக இடிந்து ஒரு வடிவத்திலேயே இல்லை. எஞ்சிக் கிடக்கும் இந்தத் துண்டத்தை வைத்துக்கொண்டு பதினைந்து தண்டம் விட்டமுள்ள ஒரு பெரிய வட்டம் வரைய வேண்டும். சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு பெரிய தென்னை மரம் மொட்டையாக நின்று கொண்டிருந்தது கண்ணில் பட்டது. ஒரு முடிவுக்கு வந்தான்.
அந்தத் தச்சனின் உதவியாளனை அருகே அழைத்து, “இங்கே வா அப்பா. உனக்கு இப்போது வேண்டியது, புதிய கிணற்றின் விளிம்பு எங்கெங்கெல்லாம் வரும் என்று குறிப்பதுதானே? அதைக் குறித்துக் கொடுத்தால், நீ தோண்டி விடுவாயா?”
“ஆம் ஐயா. மொத்த விளிம்பும் வேண்டாம். எதிர் எதிராக எட்டுப் புள்ளிகள் கிடைத்தால் போதும். அதை வைத்துக் கொண்டு பதினாறு புள்ளிகளாக்கி வட்டத்தின் பரிதியை அமைத்துக் கொண்டு விடுவேன். சமதரையாக இருந்தால், ஏதோ ஒரு வழியில் தோண்டி விடுவேன். இந்தப் பள்ளங்கள் உள்ள தரையைக் கடந்து எதிர்ப்பக்கம் இருக்கும் நேர் செங்குத்து விட்டங்களைக் கண்டு பிடிக்கத் தெரியவில்லை.”
“சரி. முயன்று பார்க்கிறேன். அளக்கிற கோல் இருக்கிறதா?”
“முழம் இருக்கிறது.”
“நல்லது. அதை நான்கால் பெருக்கிக் கொள்ளலாம். நீளமான கயிறு?”
“இருக்கிறது ஐயா. எழுபது எண்பது தண்டம் நீளம் இருக்கும்.”
“சரி. சுண்ணாம்பு?”
“எந்த மாதிரி சுண்ணாம்பு? தாம்பூலச் சுண்ணாம்பா? வெள்ளையா?”
“வெள்ளை”
“அது எப்போதும் இருக்கும். இதோ, வாளியில் இருக்கிறது பாருங்கள்”
“மரமேறி யாராவது இருக்கிறார்களா?”
அவன் காவிப் பல் தெரியச் சிரித்தான். “கிணறு வெட்டும் ஆட்களுக்கு மரம் ஏறத் தெரியாதா ஐயா?”
“நல்லதாயிற்று. அதோ, நிற்கும் மொட்டைத் தென்னையை வெட்டிக் கீழே கிடத்தி முனை அடியைச் சீவி எவ்வளவு நீளம் என்று சொல்லுங்கள்” என்றான். “மரத்தை வெட்டலாம் இல்லையா?” என்று தேவநாதய்யாவிடம் கேட்டான்.
“தாராளமாக. அதை எப்படியும் வெட்டித்தான் ஆகவேண்டும். தழைக்காது அது.”
மடமடவென்று ஒருவன் மரத்தின் மீது ஏறினான். உச்சியில் கயிற்றைக் கட்டினான். அவன் கீழே தொங்கவிட்டக் கயிற்றை அக்கம்பக்கத்தில் இருந்த மரங்கள், பாறைகள் போன்ற அசையா வஸ்துக்களோடு பிணைத்து, மரத்தை ஸ்திரப்படுத்தினர். மேலிருந்தவன் இறங்கிவந்ததும், ஒருவன் அடிமரத்தை வெட்டினான். கொஞ்ச நேரத்தில், மரத்தைச் சேதமில்லாமல் கட்டப்பட்ட கயிறுகளின் உதவியோடு, கீழிறக்கி நெடுங்கிடையாகப் படுக்க வைத்தனர். நீளத்தை அளந்தான் ஒருவன்.
“முப்பத்து நான்கு முழம் இருக்கிறது ஐயா.”
“அடியில், ஒரு முழத்தைச் சீவி விடுங்கள். முப்பத்து மூன்று முழம் இருக்கட்டும். அதற்குப் பிறகு, அதன் சரியான மத்தியில், ஒரு முளை அடியுங்கள்.”
பதினாறரை முழத்தில் ஒரு முளை அடித்துத் தந்தார்கள்.
பெரிய கயிற்றில் இருந்து, ஒரு துண்டை மட்டும் வெட்டி, ஒரு முனையை முளையில் கட்டினான். இன்னொரு முனையைக் கையில் வைத்துக்கொண்டு இறுக்கிப் பிடித்துக்கொண்டான். முளையிலிருந்து கைவரைச் சரியாக ஐந்து முழம் இருக்கிறாப்போல அளக்கச் சொன்னான். மீதித் தொங்கியிருந்த துண்டை வெட்டச் சொல்லிவிட்டான். பிறகு, பெரிய கயிற்றை முளையில் கட்டினான். “முளையில் கட்டிய இடத்தில் இருந்து ஐம்பத்தைந்து முழ நீளத்துக்கு வெள்ளை அடியுங்கள்.” என்றான். அடித்தார்கள்.
“இப்போது, அந்த மரத்தை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து, இந்தக் கிணற்றின் எஞ்சியிருக்கும் விளிம்பில் குறுக்காகக் கவனமாக வையுங்கள். கீழே பாதாளத்தில் விழுந்து விடப் போகிறது” என்றான்.
கிணற்றின் இடியாத விளிம்பு, ஒரு வில்லைப் போலிருக்க, தென்னை மரம், ஒரு நாணைப்போல, கிணற்றின் கரையில் இரு இடங்களைத் தொட்டுக் கொண்டு ஒரு பாலமாகக் கிடந்தது. வளைந்த விளிம்புக் கரையின் மத்தியில் விநயன் நின்று கொண்டு ஐந்து முழக் கயிற்றுத் துண்டை, மரத்துக்குச் செங்குத்தாகப் பிடித்து பிடித்து இறுக்க, அது வில்லில் மையத்தில் தொடுக்கப்பட்ட அம்பைப் போல விறைத்திருந்தது.
“முளையில் கட்டியிருக்கும் அந்த வெள்ளையடித்த நீளமான கயிற்றை யாராவது ஒருவர் நுனியில் பிடித்துக்கொண்டு, சுற்றிப் போய், எதிர்ப்பக்கம் நில்லுங்கள்.”
ஒருவன் சுற்றிய கயிற்றை அவிழ்த்த படியே, கீழே பள்ளத்தில் விழாமல் சுற்றிக்கொண்டு போய், எதிரே நின்றான்.
விநயன் இங்கிருந்து கத்தினான். “கயிற்றைக் கம்பு போல இறுக்கிப் பிடி. உன் கை, வெள்ளை எங்கு முடிகிறதோ, அங்குச் சரியாகக் கயிற்றைப் பற்றி இருக்கவேண்டும். உன் கைக் கயிறும், என் கைக்கயிறும் ஒரே கோடாக இருக்கவேண்டும்.”
எதிர்ப்பக்கத்தில் அவன் இழுத்துப் பிடிக்க, கயிறு, கிணறு இருக்க வேண்டிய நிலத்தின் குறுக்கே, அறுபது முழ நீள விட்டமாக, ஒரு வெள்ளைக் கம்பைத் தரைமீது வைத்ததைப் போல கிடந்தது.
“இதுதான் எதிர்ப்பக்கம். ஒரு கல்லை வை அங்கு.” என்று கத்தினான்.
அருகில் இருந்தவர்களிடம், “இப்போது, இந்த மரத்தைக் கொஞ்சம் நகர்த்தி, இந்த விளிம்புக்கு நாணாக வையுங்கள்” என்றான். புது நாண். அதே ஐந்து முழத் தூரத்தில் மரம், கரையிலிருந்து.
எதிர்ப்பக்கம் நின்றவனை மீண்டும் வெள்ளையாடித்த கயிற்றைத் தன்னுடைய கயிற்றுக்கு நேர்கோட்டில் பிடித்துக்கொள்ளச் சொல்லி வெள்ளை முடியும் இடத்தில் கல் வைக்கச் சொன்னான். உதவியாளனுக்கு வாயெல்லாம் பல்.
“ஐயா! மிக்க நன்றி. எனக்குப் புரிந்து விட்டது. இனி நான் இதேபோல, மற்ற எதிர்ப்புறக் கல்களை வைத்துக் கொள்வேன். என் தலையைத் தப்ப வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்” என்று காலில் விழுந்தான்.
திரும்பி வரும்போது சூரியன் மேலே ஏறி விட்டிருந்தான்.
“என்ன வெய்யில்! வைகாசி போல இருக்கிறது” என்று துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்ட தேவநாதய்யா, “என்ன வித்தை செய்தீர்? ஒன்றுமே புரியவில்லை விநயரே. எல்லாம் மந்திர வித்தையாய் அன்றோ இருக்கிறது” என்றார்.
“ஒரு மந்திரமும் இல்லை, தேவநாதய்யா.
‘ஜ்யா ஸங்க்²யாம் ச பா³ண ஸங்க்²யாம் ச ஜ்ஞாத்வா ஸமவ்ருத்த க்ஷேத்ரஸ்ய மத்⁴ய வ்யாஸ ஸங்க்²யாநயன ஸூத்ரம்’
– என்றொரு சூத்திரம். மஹாவீராசார்யருடைய அந்தச் சூத்திரத்தின்படி, ஒரு வட்டத்தில் அமைந்த நாணின் உயரம், வட்டத்தின் விட்டம், அந்த நாணின் நீளம் – இவை தமக்குள் இணைந்தவை.
“நாண் நீளத்தின் வர்க்கத்தை, நான்கு மடங்கு நாணின் உயரத்தால் வகுத்து, வந்த ஈவோடு நாணின் உயரத்தைச் சேர்த்தால், விட்டம் கிடைக்கும். அதைத்தான் செய்தேன். அந்த மரம் கிணற்றுக்கு நாண். நான் பிடித்திருந்த கயிறு, நாணின் உயரம். வெள்ளை அடித்த பகுதி, முளையில் இருந்து என் கை வரை உள்ள நாணின் உயரத்தை விட்டத்தில் இருந்து கழித்தால் மீதி இருக்கும் பகுதி. அவ்வளவுதான்”
“அடடாடா! இருங்கள் நான் புரிந்து கொண்டது சரிதானா என்று பார்க்கிறேன். பதினைந்து தண்டம் என்றால் அறுபது முழம். உங்கள் கையில் ஐந்து முழம். வெள்ளை அடித்தது ஐம்பத்தைந்து. மரத்தின் நீளம் முப்பத்து மூன்று. முப்பத்து மூன்றின் வர்க்கத்தை, இருபதால் வகுத்து, வரும் ஈவுடன் ஐந்தைக் கூட்ட வேண்டும். அதுசரி, மிகவும் அவசரப்பட்டு விட்டேன். முப்பத்து மூன்றின் வர்க்கம் என்ன?” என்றார் வருத்தமாக.
“ஆயிரத்துடன் எண்பத்து ஒன்பது” என்றான் விநயன்.
“ஆ! ஆயிரத்துடன் எண்பத்து ஒன்பதை இருபதால் வகுக்க – ம் ம் ஆயிரத்தை வகுத்தால், ஐம்பது, எண்பதுக்கு நான்கு, ஒன்பதுக்கு அரை – ஐம்பத்து நான்கும் அரையும். அதனோடு ஐந்து, ஐம்பத்து ஒன்பதும் அரையும். அதாவது அறுபது முழத்துக்கு அரை முழம் குறைவு. பதினைந்து தண்டம் ஆயிற்று! அடடா! இம்மி குறைத்துச் சரியாகக் கணித்திருக்கிறீர்கள்! பண்டிதர்தான் ஐயா நீர்!” தேவநாதய்யா விழி விரியச் சொன்னார்.
“ஏதோ, நீர் போடும் இலவச உணவுக்கு என்னால் ஆன பிரதியுபகாரம்”
“அபசாரம் ஐயா, அபசாரம்! நானா போடுகிறேன்? அரசருடைய ஆக்கினை இது. அதுவும் போடுகிறேன் என்று சொல்லாதீர்கள். அளிப்பவன் போடும் பிட்சை அன்று இது. அளிப்பவனுக்கு அளித்ததை ஏற்றுக்கொள்பவன் போடும் பிட்சை.” என்றார்.
“பொருளின் பொருளேத்தி, பெற்றவர் தாழாது
ஒருவரறி யாதீவர் உத்தமர்; மாறார்
தருபயனில்; தாரா தவர்.
என்று
சொல்கிறீர்களோ? என்னவோர் உத்தமமான பேச்சு” கை கூப்பினான் விநயன். புற்றரை வழியாகச் சுற்று வழியில் வந்தும்,
இருவரும் வேகமாக நடந்ததால், உச்சிவேளைக்கு முன்பே சத்திரத்துக்கு
வந்துவிட்டார்கள். மதிய உணவுக்குப் பிறகு, என்ன செய்வது என்று தோன்றாததால்,
பாடசாலைக்கே சென்றுவிட்டான், விநயன்.
No comments:
Post a Comment