பூசுந்தரி
அடுத்தநாள் காலையில் அவன் பிரதாபவர்த்தனருடைய இல்லத்துக்குப் போனபோது, அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் அவர். அவருக்கருகே சில சுவடிகளும், ஓலைகளும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
“இன்று கீர்த்திவர்மரும், ஸ்ரீபுருஷரும் எதிர் எதிர் அணியானதைச் சொல்கிறேன். கீர்த்திவர்மர் காஞ்சிக்குப் புறப்படுவதற்கு முன்னால், விக்கிரமாதித்தியர் காலத்திலேயே ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அவனி ஜனாஷ்ரயரையும், தந்திதுர்க்கரையும் கௌரவிப்பதற்காக வாதாபிக்கு அழைத்திருந்தார் மஹாராஜா. ஸ்ரீபுருஷரும் விருந்தினராக வந்திருந்தார். விழாவுக்கு வந்திருந்த எல்லாக் குறுநில மன்னர்களும் வீற்றிருந்த அந்தச் சபையில்தான், மஹாராஜா கீர்த்திவர்மரையும் யுவராஜாவாக நியமித்துப் பட்டாபிஷேகம் செய்தார். ராஜசிம்ஹப் பாண்டியனுடன் சமரசம் செய்து வைத்ததிலிருந்தே கங்கநாடு, முன்பிருந்தது போலச் சாளுக்கிய அரசோடு அவ்வளவு நெருக்கம் காட்டவில்லை என்பது அவருக்குத் தோன்றிக் கொண்டு இருந்ததால், மீண்டும் கங்கத்தோடு நெருக்கத்தை முன்பிருந்த நிலையளவுக்கு அதிகரிக்கும் நோக்கத்துடன், ஸ்ரீபுருஷரிடம் கங்க இளவரசி பூசுந்தரியைக் கீர்த்திவர்மருக்கு மணம் புரிந்து கொடுக்குமாறு கேட்டார். ஸ்ரீபுருஷரும் ஒப்புக்கொண்டார். பூசுந்தரிக்கு அகவை பத்துக்கும் குறைவாக இருந்ததால், இந்த ஒப்பந்தம், பேச்சளவில் மட்டுமே இருந்து, கீர்த்திவர்மருக்கும் சில நெருங்கியவர்களுக்கும் மட்டும் தெரிந்திருந்தது.
“இது நடைமுறைப் படுத்தப்படுவதற்குள், கீர்த்திவர்மரின் காஞ்சிப் படையெடுப்பு நிகழ்ந்து, அதற்குப்பிறகு, விக்கிரமாதித்தியரின் தேக அசௌக்கியமும் தொடர்ந்தது. மணநாளைக் குறிக்காமல், ஸ்ரீபுருஷர் நாட்களைக் கடத்தினார். விக்கிரமாதித்தியரின் ஹைஹய வம்சப் பட்டத்து ராணிகள் தமக்கை லோகமாதேவியும், தங்கை திரிலோகமாதேவியும் ஸ்ரீபுருஷருக்கும் அழுத்தம் கொடுத்துப் பார்த்தும், அவர் பிடி கொடுக்கவில்லை. விக்கிரமாதித்தியர் தேகாந்தம் அடைந்ததும், மணவினைக்கு வாய்ப்பு இன்னும் குன்றிப்போனது, வெளிப்படையாகத் தெரிந்தது. இளவரசராகத் தான் காஞ்சிக்குப் படையெடுத்துச் சென்றபோது, ஸ்ரீபுருஷர் துணை செய்யாமல் வாளாவிருந்ததும் கீர்த்திவர்மரை உறுத்திக் கொண்டிருந்ததால், அரசர் என்னும் அந்தஸ்தில், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கீர்த்திவர்மர் யத்தனித்தார்.
“இந்த யத்தனத்தால் வாதாபிக்கும் தலவனபுரத்துக்கும் இடையே போர் மேகங்கள் சூழலாம் என்ற நிலைமை எழ, சதுரரான ஸ்ரீபுருஷர், கீர்த்திவர்மரின் அழுத்தத்தைப் பலஹீனப்படுத்துவதற்காக அரிகேசரி மாறவர்மருடைய கேண்மைக்கு முயன்றார். ஏற்கனவே, விக்கிரமாதித்தியரின் படையெடுப்பின் போது, ஸ்ரீபுருஷர் செய்த மத்யஸ்தத்தால், பாண்டியநாடு, கங்கத்தை விரோதியாகப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டிருந்த காலம் அது. மேலும், சமரசத்தை மீறிக் கீர்த்திவர்மர், காஞ்சியின் மீது படையெடுத்ததும், ஆலவாய் அரசனுக்கு அருசியைத் தூண்டி விட்டிருந்தது. இத்தகைய தருணத்தில், கங்கக் காவிரியைக் கயலருகே கொண்டுவர அனுகூலம் செய்யும்வகையில் ஒரு சம்பவம் நடந்தது. நடத்திவைத்தவன், மழகொங்கராஜன்.
“உனக்குத் தெரிந்திருக்கும், பாண்டியரின் தலைநகரம் கூடல், காவிரிக்குத் தெற்கிலிருக்கிறது. காஞ்சிக்கும், வாதாபிக்கும், காவிரியைத் தாண்டவேண்டும். தலவனபுரத்துக்கும், மங்கலபுரத்துக்கும் காவிரியைத் தாண்டாமல் மேற்கு நோக்கிச் சென்றுவிடலாம். இரணதீரர் காலத்தில் வேணாடு பாண்டியரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று சொல்லியிருக்கிறேன் ஞாபகம் இருக்கிறதா?”
“ஆமாம். அதன்வழியாகச் சென்றுதான் இரணதீரர் மங்கலபுரத்தைக் கைக்கொண்டார் என்று சொன்னீர்கள்.”
“மங்கலபுரத்துக்கு, வாதாபியைத் தொடாமல் போகவேண்டுமானால், மழகங்கத்தைத் தாண்டித்தான் போகவேண்டும். இதை மனத்தில் கொண்டுதான், இரணதீரருடைய தந்தை வேணாட்டுக்குச் செல்லும்போது, மழவ நாட்டை அடக்கிவிட்டுப் போனார். காவிரி, அங்கே சற்று இளைத்துப் பாய்வதால், வடக்கே தாண்டுவதற்கு அனுசரணையான இடம், மழகொங்கத்தில் இருந்த பாண்டிக்கொடுமுடி. இங்கே காவிரியின் இருபக்கக் கரைகளும் மழகொங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.”
“திருப்பாண்டிக்கொடுமுடியா? கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வூரைப் பற்றிய பாடல் ஒன்றை அன்னை பாடுவார்.”
“திரமிளத்தில் எந்த ஊரைச் சொன்னாலும், அதற்கு ஒரு பாடல் தெரிந்து வைத்திருக்கிறாயே? வேங்கிக்கும், இரட்டபாடிக்கும், சாளுக்கியத்துக்கும் இப்படிக் கொடுத்து வைக்கவில்லையே” சிரித்தார் பிரதாபர். “பாடலைச் சொல்லேன், கேட்போம்”
பாடலைச் சொன்னான் விநயன். சுற்றிச் சுற்றி ஆடும் நடனமாதைப் போலப் பாடலின்
சந்தம், தனனன தன்னன தானா – தானன தானன தானா என்று சுழன்று சுழன்று ஆடியது.
புரந்தரன் றன்னொடு வானோர்
...... போற்றியென் றேத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப்
...... பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாருங்
...... காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
...... பாண்டிக்கொ டும்முடி யாரே.”
“அபாரம்! அதே பாண்டிக் கொடும் முடிதான்! அந்தக் கோவிலின் இறை பசுபதிநாதன், மாறவர்மப் பாண்டியரால், கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் கொடுக்கப்பட்டு உவந்த இறைவன். ஸ்ரீபுருஷர் கங்கத்தின் அரியணை ஏறியதும், விக்கிரமாதித்தியருக்கு அனுசரணையாக இருந்தாரல்லரா? அப்போது, மழவத்தின் முக்கியத்தை உணர்ந்து அதைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்று, ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார். கங்கர்களுக்கு என்றுமே கொங்கத்தின் மீது ஒரு பார்வை இருந்து வந்தது. கங்கத்தின் சிற்றரசாக இருந்து பழகிய மழவர்களுக்குப் பாண்டியத்துக்குக் கீழ்ப்படிந்து இருக்க விருப்பமில்லாததால், மழகொங்கத்துக்கும் கூடலுக்கும் இடையே அடிக்கடி உரசல்கள் நடப்பதும் உண்டு. இந்நிலைமையில், ஸ்ரீபுருஷருக்கும் பாண்டியருக்கும் இணக்கம் ஏற்பட்டால், அது கொங்கத்துக்கு நல்லதில்லை என்று கருதிய, மழவராசன் இந்த இணக்கத்தைத் தடுக்க விரும்பினான். காவிரி தாண்டிவந்து பாண்டிய எல்லையோடு வேண்டுமென்றே உரசினான்.
“இந்த உரசலைப் பாண்டியராஜா, கங்கத்தின் நட்பு உண்மையானதா என்று உரசிப்பார்க்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். தாம் மழவத்தைத் தாக்கினால், கங்கம் என்ன செய்கிறது என்று பார்க்க நினைத்தார். மழவநாட்டுக்கு இயற்கை அரணாக ஓடிக்கொண்டிருந்த காவிரியைப் பாண்டியப் படைகள் ஆரவாரத்துடன் தாண்டின. கங்கம் பார்த்துக் கொண்டிருக்க, மழகொங்கத்தைத் தாக்கின. ஸ்ரீபுருஷர் உதவிக்கு வரவில்லை. கங்கத்தின் உதவியில்லாமல், மழவம் மழுங்கிய நாடே. எளிதில், மழகொங்கம் பாண்டியர் வசமாயிற்று. அடிப்படுத்தப்பட்ட மழவ அரசன், சமரசம் செய்துகொண்டு, தன்மகளைத் தர, மழவ இளவரசியை மணந்துகொண்டு, பாண்டியராஜா, மழகொங்கத்தில் தங்கியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கீர்த்திவர்மர், மேற்கில் இருந்த காஞ்சியைத் தாக்க முடிவுசெய்தார். ஒரு படைப்பிரிவைக் கச்சியை நோக்கி அனுப்பினார். இன்னொரு பிரிவைத் தானே தலைமை தாங்கித் தலவனபுரத்தை நோக்கித் தாள் பதித்தார்.”
“கங்கத்தோடு போர் புரியச் சித்தமாகி விட்டாரா?”
“இல்லை இல்லை. நேரில் கொங்கணி வர்மரைச் சந்தித்துப் பூர்வராசர்கள் தமக்குள்ளே புகன்றிருந்த வாக்கு, எந்நிலைமையில் இருக்கிறது என்று சோதிக்கத்தான். ஸ்ரீபுருஷர் மகளைத் தருகிறாரா, வாதாபிக்கு நட்பில் இருக்கிறாரா என்று தெரிந்துவிட்டால், மேற்கொண்டு ஆவன செய்யலாமே”
“அட பானல நீறணிந்தோயே! என்ன விளையாட்டு விளையாடுகிறாய்! ஸ்ரீபுருஷருக்கு இக்கட்டான சூழ்நிலை அல்லவா?”
“ஆமாம். அவர் யாருடைய கேண்மையை உவக்கிறார் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாயிற்று. ஸ்ரீபுருஷர், பாண்டிய நாட்டை உகந்தார். சாளுக்கிய இணைப்பைத் துறக்க முடிவு செய்தார். இரகசியமாகப் பாண்டியரைத் தொடர்பு கொண்டு, மகளை மணம் செய்து கொள்ள, மச்சக் கொடியோனுக்கு கோரிக்கை விடுக்க, கங்க இளவரசி பூசுந்தரியை மணக்க, அரிகேசரி சம்மதித்தார். சாளுக்கிய அதிபதிக்கு மணவாட்டியாக வாக்குத் தரப்பட்ட, கங்கரின் கன்யாரத்தினம், பாண்டியரின் கரம்பிடிக்க, மழகொங்கத்துக்குப் பயணம் ஆனாள்.”
“அடேயப்பா! ஸ்ரீபுருஷரின் ராஜதந்திரம் அபாரம். சாளுக்கியத்துக்கும், பாண்டியத்துக்கும் சண்டையை மூட்டிவிட்டாரே! ஓர் இழுப்பு, இரண்டு காயம்!”
சிரித்தார் பிரதாபர். “ஸ்ரீபுருஷரைச் சந்திக்க வந்துகொண்டிருந்த சாளுக்கியராஜா செய்தியைக் கேட்டு அதிர்ந்தார். திலக்காய் திறந்தது போல, விசுவாசப் பட்சங்கள் வெளிப்படையாகி விட்டதால், பூசுந்தரி, மழகொங்கத்திற்குப் போய்ச் சேருமுன்னே, அவளுடைய பயணத்தைத் தடுக்க நினைத்தார். ஆனால், அவர் தலவனபுரத்துக்குச் சேண்மையில் இருந்ததால், அது இயலாதது என்று தெரிந்ததும், தன்னோடு கூடவந்த ஆளுவராசனின் படைகளை மட்டும் காஞ்சிக்குத் தொடரச் சொல்லிவிட்டு, மற்ற படைகளைத் தென்பக்கம் திருப்பினார். கொடுமுடி நோக்கி விரைந்த சாளுக்கியப் படைகள் மிக்க வலுவானவை. இந்தமுறை எப்படியும் காஞ்சியை வீழ்த்திவிட வேண்டும் என்ற ஆவேசத்தில் அவர் பார்த்துப் பார்த்துக் கோத்த படை. ஆளுக்கு ஆள் செய்யும் துவந்தச் சமரிலும், வாளுடன் வாள் மோதி விள்வதிலும் தேர்ந்தவர்கள் நிறைந்த அந்தப் படை, ஒரே சமயத்தில் பல வாளிகளுடன் வெருவும் ஏனப்பொறிகளையும் கொண்டிருந்தது.
“ஆனால், கீர்த்திவர்மர் பாண்டியப் படைகளின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார். மானாபரணர், ராஜசிம்ஹப் பாண்டியர், மான்றேர் மாறவர்மன் அரிகேசரி திரமிளம் முழுவதிலும் தன்னை எதிர்த்தவர்களைப் பலவிடங்களில் சமர் செய்து வீழ்த்தித் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்த சமயம் அது. தோல்வியையே அதுவரை சந்தித்திராதவர்.
“மாறவர்மர், பூசுந்தரியின் பயணத்தைக் கீர்த்திவர்மர் நிறுத்த முற்படுவார் என்பதை எதிர்பார்த்து, ஒரு வலுவான படையைத் தன் சேனாபதி மூவேந்தமங்கலப் பேரரையன் வைத்திய சிகாமணி மாறன்காரியின் தலைமையில் வழியில் நிறுத்தி வைத்திருந்தார். சாளுக்கியப் படைகள், பூசுந்தரியைத் தடுத்து நிறுத்த முயன்றன. பலத்த சண்டை. பலநாட்கள் நீடித்தது. அதற்குள் கீர்த்திவர்மரும் வந்து சேர்ந்தார். கடல் போன்ற வல்லபரின் சேனையை, அடல் ஆன்ற மாறன்காரியின் தானை எதிர்த்தது. பூர்வராசர் புகன்று எழுந்து வில்விரவிய.. ” என்று சொல்லிக்கொண்டே வந்தவர், எதிரே இருந்த ஓர் ஓலையை எடுத்துப் படித்தார்.
“கொங்கர்வன் நறுங்கண்ணி கங்கராசனது கந்யாரத்னம் கொங்கர்கோற்குக் கொணர்ந்து கொடுப்ப, ஆர்ப்பறா அடற்றானைப் பூர்வராசர் புகன்றெழுந்து வில்விரவும் கடற்றானை வல்லபனை, வெண்பைவாய், ஆளமருள் அழிந்தோட, வாளமருள் உடன் வவ்விய ஏனப்பொறி இகல, மருளிடி உருமென வலனேந்த மலைத்த தானை மதவிகலன், மன்னர் கோன் அருளிற்பெற்றும் கோல்வளைக்கும் வேல்தானைப் பல்வளை, கோன் கொணரப்பட்டுப் பொரவந்தவர் மதந்தவிர்க்கும் கரவந்தபுரத்தவர் குலத்தோன்றல்”
“அடடடா! என்ன தமிழ்! மாறன்காரியை வர்ணிக்கிறதா? ஆள் அமருள் அழிந்தோட, வாள் அமருள் உடன் வவ்விய ஏனப்பொறி இகல, மருள் இடி உரும் என வலனேந்த மலைத்த தானை மத இகலன்! அடேயப்பா! இதென்ன ஓலை? அந்தப் போரை விவரிக்கிறதா?”
“அந்த வணிகர்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர்கள் கடந்தமுறை இங்கு வந்திருந்த சமயத்தில், அவர்களுடைய கூட்டத்தில் இருந்த பெரும்பணைக்காரன் ஒருவன், பாண்டியராஜாவைப் புகழும் இந்த மெய்கீர்த்தியைச் சொன்னபோது, எனக்கு விர்ரென்று வீரம் ஏறியது. அதனால், எழுதிக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். கொஞ்சம் கடினமான தமிழ் அல்லவா? உனக்குப் புரிகிறதா? நான் பொருளும் எழுதி வைத்திருக்கிறேன்.” முறுவலித்தார் பிரதாபவர்த்தனர்.
“சற்றே கடினமான தமிழ்தான். புரிகிறது. அப்போது ஏனப்பொறி பயன்பாட்டில் இருந்ததா? அதனால்தான், கலிவல்லபரும் அந்தப் பொறியை நிர்மாணம் செய்வதைப் பற்றி அன்று பேசினாரோ?”
“ஆமாம். வாதாபித்தானை முன்னம் பயன்படுத்தி வந்தது. இப்போதில்லை. மீண்டும் பயன்படுத்தவேண்டும் என்று அரசர் நினைக்கிறார்.”
“வெண்பையில் நடந்த போரில் சாளுக்கியர்கள் மாறன்காரியால் முறியடிக்கப்பட்டார்களா? அப்படியென்றால் அவர்கள் காஞ்சிக்குச் செல்லவில்லையா”
“இல்லை. கீர்த்திவர்மரின் கீர்த்தி, வெண்பையில் நிலை குலைந்தது. பெருந்தோல்வி.”
“வேல்படைக் கண்களை உடைய பல வளைகள் அணிந்த பூசுந்தரி, வாதாபியின் செங்கோலை வளைத்தே விட்டாளா?”
“ஆமாம். பாண்டிநாட்டு மணமகளாகினாள். கங்கச் சாளுக்கியக் கேண்மை அறுபட்டது. கங்கப் பாண்டியம் கிளைத்தது. உன் பாஷையில் சொல்லப் போனால், ஒரு படையெடுப்பு, இரண்டு மனைவிகள் பாண்டியருக்கு!” சிரித்தார் பிரதாபர்.
“அதற்குப்பிறகு, பாண்டியராஜா, சித்திரமாயனை மீண்டும் சிங்கவாதனத்தில் அமர்த்தினார். பல்லவமல்லனை வறுத்தெடுத்தார். பல்லவபஞ்ஜனன் என்றே தன்னை அழைத்துக்கொண்டார். சாளுக்கியம் மற்றும் கங்கத்தின் தலையீடு காஞ்சி மீது கவிவது கழிந்த நிலை. மதுரையின் கயல், துண்டக மண்டலம் முழுதும் எதிர்ப்பின்றி உகண்டது. சோழர்கள் உறவினர்களாக இருந்துவிட, கேரளமும், கொங்கமும் வெற்றி கொள்ளப்பட்டுவிட, காஞ்சி மட்டுமே திரமிளத்தில், பாண்டியருக்குப் பகைநாடு. காஞ்சியின் எதிர்ப்பை முற்றிலும் காய்ந்து விட்டால், பிறகு திரமிளம் முழுதும் பாண்டியர் கையில். அடுத்த இலக்கு, வாதாபியும் வேங்கிபுரமும்தான்.”
“இதை முன்னமேயே யோசித்துத்தான் ஸ்ரீபுருஷர் இப்படிக் காயை நகர்த்தியிருக்கிறார் போலும். சாணக்கியர்”
“ஆமாம். வெறும் வீரமின்றி, விவேகமும், தொலைநோக்கும், திட்டமும், பொறுமையும் சேர்ந்துவிடின், செயம் சேண் செல்லுமன்றோ? இதில், தோற்பு பல்லவமல்லருக்குத்தான். சித்திரமாயன் மீண்டும் அரியணையில். சாளுக்கியம் கர்ணாடத்தில் தன்னைக் குறுக்கிக் கொண்டது. காஞ்சி கைக்கெட்டாமல் நழுவியது.” கண்ணைக் குறும்பாகச் சிமிட்டினார். “நழுவ வைக்க முடியவில்லை என்று சொல்லுங்கள்” சேர்ந்து கொண்டான் விநயன்.
“அடுத்த சில
வருடங்களில், பல்லவமல்லரின் உறைவிடங்களையும் மறைவிடங்களையும் தேடித்தேடி அழித்தார்
பாண்டியராஜா. அந்த வணிகரில் ஒருவன் மெத்தப் படித்தவன். அவன் ஒரு ஸ்லோகம் சொன்னான்
பார், இங்கே எழுதி வைத்திருக்கிறேன்.” என்று ஓர் ஓலையை எடுத்துப் படித்தார்.
நரோ நு ரக்ஷோ நு ஹரோ நு புருஷ:
பரோ நு ஶக்ரோ நு ஸரோஷமாக³த:
இதி ஸ்ம மத்வா யுதி⁴ யம் மயாதி³த
பலாயதே பல்லவமல்ல பூ⁴பதி:”
“ஆஹா! என்ன சொற்பிரயோகம்! இவன் நரனில்லை, ராக்ஷஸன் இல்லை, ஹரன் இல்லை, இந்திரன் இல்லை, இவன் எங்கிருந்து வந்தான் என்று பல்லவமல்லன் பாண்டியனின் போர்த்திறமையைக் கண்டு மயங்கினான்.”
“நீ இரசிப்பாய் என்று தெரியும். அதனால்தான் உன்னை இங்கே வரச்சொன்னேன். இகலுக்கு நடுவே, இலக்கியமும் நுழைகிறது பார். இப்படிப் பல்லவமல்லன், பாண்டியராஜாவிடம் சோபையிழந்தான். இதுதான் அடிமட்டம், இனித் தாழமுடியாது என்ற நிலைமைக்குப் போவதிலும் ஒரு நன்மை இருக்கிறது”
“இதற்குமேல் இனித்தாழ்வு கிடையாது. ஏதாவது நடக்கவேண்டுமானால், அது இதைவிட உயர்வாகத்தான் இருக்கும்” என்றான் விநயன்
“அதேதான். அப்படித்தான் நடந்தது. உயிர்ப்பிரதிக்கினை செய்துகொண்ட உதயசந்திரனும் அவனுடைய படைவீரர்களும் சீறி எழுந்தார்கள். சாவேறு அமைத்தார்கள். முதலில், வடதிசையில் பரவித் தம் வல்லமையைக் கூர் தீட்டிக்கொண்டார்கள்.”
“கீர்த்திவர்மராஜா இங்கே வெண்பையில் அடிபட்டுக் கங்கத்தின் துணையையும் இழந்து வாதாபியில் அயாவுயிர்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான், வடக்கில் தந்திதுர்க்கர், தன்னுடைய ஸாம்ராஜ்ஜியக் கனவை நனவாக்கத் தொடங்கிவிட்டிருந்தாரா?”
“ஆமாம். அறைகடல் இரண்டையும்
அடைத்து ஆண்ட, சாளுக்கியம் எப்படி அஃகத் துவங்கி விட்டது பார்! அதனுடைய அவத்தையைப்
பெரிதாக்க, உதயசந்திரன் உயர்ந்து எழுந்தான்.”
No comments:
Post a Comment